(காஸாவின் வைத்தியசாலைகளில் பணி புரியும் மூன்று வைத்தியர்களின் அங்குள்ள நிலைமை தொடர்பான விவரணை.)
அக்டோபர் 30ம் திகதி மாலை வேளையில் இஸ்ரேலிய வான்படை நிகழ்த்திய தாக்குதலில் துருக்கிய பாலஸ்தீன நட்புறவு வைத்தியசாலை மிக மோசமாக சேதமடைந்துள்ளதாக பாலஸ்தீன சுகாதார அமைச்சு அறிவித்திருந்தது. இஸ்ரேலிய வான்படை நடாத்திய இந்த தாக்குதலில் வைத்திய சாலையின் மின்சார உட்கட்டமைப்புக்கள் உள்ளிட்ட ஒக்ஸிஜன் மற்றும் தண்ணீர் விநியோக நடவடிக்கைகளும் தடைப்பட்டன. இதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான் ஆயிரக் கணக்கான நோயாளர்களினதும் இடம்பெயர்ந்தோரினதும் தங்குமிடங்களாக இருந்த காஸாவின் சிபா வைத்தியசாலை, அல் குத்ஸ், இந்தோனேசிய வைத்தியசாலை முதலான இடங்கள் மீது இஸ்ரேல் வான் தாக்குதல் நிகழ்த்தி இருந்தது.
இத்தகைய தாக்குதல்களுக்கு மத்தியிலும் வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்கொண்டு செல்வது பெரும் பிரச்சனையாக சுகாதார ஊழியர்களுக்கு அமைந்தது. ஒக்டோபர் ஏழாம் திகதி பாலஸ்தீனத்துக்கான உணவு நீர் மின்சார மற்றும் மருத்துவ விநியோகத்தை முடக்கியதை தொடர்ந்து அங்கே காணக்கிடைத்த நிகழ்வுகள் துயரமானவை. அறுவை சிகிச்சைகள் அனஸ்தீசியா எனும் மயக்க மருந்து இல்லாமல் நடைபெற்றன; ஐஸ்க்ரீம் வண்டிகள் இறந்த உடல்களை சுமக்கும் வண்டிகளாக மாறின. குழந்தைகளை வைத்து கண்காணிக்கும் இன்குபேட்டர்கள் செயலிழக்க துவங்கின. பாலஸ்தீன சுகாதார அமைச்சின் தரவுகளின் பிரகாரம், அங்கே நிகழ்த்தப்பட்ட குண்டு வீச்சுக்களில் காஸாவின் மொத்த மருத்துவமனைகளில் மூன்றில் இரண்டு மருத்துவமனைகளும் அதன் சுகாதார நலன்புரி மத்திய நிலையங்களில் மூன்றில் இரண்டு மத்திய நிலையங்களும் அழிக்கப்பட்டு மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றன. இதைனையே அங்கே கடமையாற்றும் வைத்தியர் ஒருவர் காஸாவின் மருத்துவ மற்றும் சுகாதார கட்டமைப்புகள் அதன் இறுதித் தருவாயில் இருக்கின்றன என்றும் மின்சார துண்டிப்பும் இடம்பெற்றால் மொத்த வைத்தியசாலைகளும் மனிதப் புதைகுழிகளாக மாறிவிடும் என்றும் விளக்கினார்.
இத்தகைய இருள் படர்ந்த சூழ்நிலையிலும் பாலஸ்தீன வைத்தியசாலை ஊழியர்கள் உயிர் காக்கும் தமது பணிகளை மேற்கொள்ள முன்வந்தனர். இதுவரையில் சுமார் 21 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் காஸாவில் படுகாயம் அடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் வளப்பற்றாற்குறைகளுக்கு மத்தியில் படுகாயம் அடைந்தவர்களை பராமரிப்பதில் வைத்திய ஊழியர்கள் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். ஐரோப்பிய காஸா வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் யூசுப் அக்காத் இது பற்றி கூறுகையில் “வைத்தியசாலையில் ஒவ்வொரு படுக்கையிலும் உள்ள நோயாளிகளிலும் யாரை முன்னிலைப்படுத்துவது என்பது தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் நாங்கள் உள்ளோம்” என்கிறார். காஸாவின் சிபா மற்றும் அக்ஸா வைத்தியசாலைகளின் நிலைமைகளை விபரிக்கும் மற்றொரு வைத்தியர் டாக்டர் ஹம்மாம் அல்லோவாஹ் கூறுகையில் ” அங்கே கடமை புரியும் வைத்தியசாலை ஊழியர்கள், வைத்தியம் பார்ப்பதற்கான முன்னுரிமையை வயதானவர்களை விட இளையோருக்கு அளிக்கும் மிகவும் கடினமான ஒரு நிலைக்கு தள்ளப்பட்டனர் என்று கவலையோடு விளக்கமளித்தார்.
உண்மையில் காஸா மீதான 16 ஆண்டு கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பானது காஸாவின் வைத்தியசாலைகளையும் சுகாதார கட்டமைப்புகளையும் அவசியமான வளங்கள் எதுவுமின்றி தொடர்ந்தும் இக்கட்டான நிலையில் இயங்குவதற்கே பணித்து வந்திருக்கிறது. நாங்கள் இது வரை ஏழு போர்களை கடந்து வந்திருக்கின்றோம்; அந்த அனைத்து போர்களின் போதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களால் மிகவும் தரம் தாழ்ந்த இரண்டாம் நிலையில் உள்ள மருத்துவ உதவிகளையே செய்வதற்கு கிடைத்தது. இது மிக துர்பாக்கியமானதொரு நிலைமை என்று கூறிச் செல்கிறார் காஸாவின் அந் நஸார் வைத்தியசாலையில் கடமை புரியும் டாக்டர் ரிழா அபூ அஸி. காஸாவின் தற்போதைய சுகாதார நெருக்கடியின் ஒட்டுமொத்த தன்மையைக் கருத்தில் கொண்டு, அப்பகுதியில் முழுமையான சேவைகளை வழங்குவதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைப்பது மட்டுமல்லாமல், பாலஸ்தீனிய மக்கள் தமது சுதந்திரத்தை அடைவதும் தான் நிபந்தனைகள் என்று மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். வைத்தியர் அல்-அக்காத்தின் வார்த்தைகளில் கூறுவதென்றால் , “இங்கே அமைதியாக வாழ்க்கையை கொண்டு செல்ல சுதந்திர பாலஸ்தீனம் தேவை என்று நான் நினைக்கிறேன்.”
“காஸாவில் உள்ள மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்கும் நோக்குடன் நான் மருத்துவரானேன். சிறுநீரக மருத்துவராக ஆவதற்குத் தேவையான பட்டங்களையும் சான்றிதழையும் பெற நான் 14 வருடங்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டியிருந்தது. நான் திரும்பி வந்தபோது, எனது நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருத்துவ வளங்கள் இல்லாததால் நான் அதிர்ச்சியடைந்தேன். முக்கிய மருந்துகள், அத்தியாவசிய மருத்துவ ஆய்வகங்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் நாங்கள் தொடர்ந்து அவதிப்பட்டோம். எனது இந்த சிறுநீரகம் தொடர்பான துறையில், நோயாளிகளுக்கு டயலைசிஸ் எனும் சிகிச்சை முறையை செய்து கொள்வதில் எங்களுக்கு மிகுந்த சிக்கல் இருந்தது; எங்களால் அடிக்கடி நோயெதிர்ப்பு மருந்துகள், பங்கசு கொல்லிகள், எலும்பு நோய், இரத்த சோகை மற்றும் ஏனைய சிறுநீரக நோய்களுக்கு என்று சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் மருந்துகள் எதனையும் பெற முடியவில்லை.
டயலைசிஸ் செய்யும் நோயாளிகள் சிவப்பு இரத்த அணுக்களை உற்பத்தி செய்வதற்காக பொதுவாக மருத்துவ ஊசிகளைப் பெறுவார்கள். ஆனால் அந்த மருந்தை எங்களால் பல நேரங்களில் பெற முடியாமல் போனது. அச் சந்தர்ப்பங்களில் அதற்குப் பதிலாக இரத்தம் ஏற்றும் செயன்முறையை வழங்க வேண்டியிருந்தது.
போருக்கு பிறகு நிலைமை மிக மோசமாக மாறியது. காஸாவின் மத்திய மற்றும் வடக்கு பிரதேசங்களில் இருந்து அதிகமான எண்ணிக்கையில் மக்கள் வரத் துவங்கினார்கள். அவர்களில் அதிகமானோர் தொடர் குண்டு வெடிப்புகளால் தங்களது சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டவர்கள். இதனால் நோயாளிகளுக்கான டயலைசிஸ் நேரத்தை பாதியாக குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அநேகமான மருந்துகள் எங்களிடம் தீர்ந்து விட்டன. எம்மிடையே மருத்துவ ஆய்வகங்கள் இல்லாததால் அனுமானங்களை அடிப்படையாக கொண்டுதான் வைத்திய முடிவுகளுக்கு வர நேரிடுகிறது. நேற்று, டயலைசிஸ் பிரிவில் மாரடைப்புக்கு ஆளான ஒரு நோயாளியை காப்பாற்ற சற்று நேரம் யோசிக்க வேண்டியிருந்தது, ஏனென்றால் அவரை காப்பாற்றினால் அவருக்கு வழங்க வேண்டிய வென்டிலேட்டர் வசதிகள் எங்களிடம் இருக்கவில்லை. வயதில் குறைந்த, ஓரளவு ஆரோக்கிய நிலையில் உள்ள நோயாளிகளை சிகிச்சைகளுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு கையறு நிலையில் உள்ளோம்.
உண்மையில் நான் எனது மக்களுக்கு வழங்க வேண்டும் என்று எதிர்பார்த்த மருத்துவ சேவை இதுவல்ல. எனது துறையில் மேலும் முன்னேற நினைத்த எனக்கு காஸா பகுதியில் அதனைச் செய்து கொள்ள முடியவில்லை. என் குழந்தைகளை போர்கள், ஏவுகணைகள், ராக்கெட்டுகள் பற்றி சிந்திக்க விடாமல் வளர்க்க விரும்புகிறேன். ஒவ்வொரு நாளும் அவர்களது கண்களில் பயத்தை காண்கிறேன். உங்களுக்கு குழந்தைகள் இருப்பின் இத்தகைய போர் நிறைந்த ஒரு சூழலில் அவர்களை எந்த வழியிலும் அமைதிப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையை யோசித்து பாருங்கள். நாளைய நாளை எதிர்பார்த்து இருக்க முடியாமல் சுற்றியும் அவநம்பிக்கை நிறைந்த ஒரு சூழலில் அவர்களை எப்படி நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றுவது. இது மிகவும் வலி நிறைந்த ஒரு உணர்வு. நாங்கள் மற்றவர்களை போல் சுதந்திரமாக வாழ விரும்புகிறோம். குண்டு வெடிப்புச் சத்தங்கள் இல்லாத மரங்கள் நிறைந்த வீதிகளில் சுற்றித் திரியும் வாழ்க்கையை நாங்களும் விரும்புகிறோம். அவர்களைப் போல் அறிவியல், பொருளாதாரம் என்று முன்னேற வேண்டும் என்று நினைக்கிறோம். சாதாரண மனிதர்களைப் போல் கற்கவும், சிந்திக்கவும், வளரவும், பயணிக்கவும், கனவு காணவும் விரும்புகிறோம். எமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வது பற்றி மட்டும் சிந்திக்கும் வாழ்க்கையை தான் நாம் வாழ்ந்து வருகிறோம். இப்போதாவது இந்த உலகம் இது பற்றி அறிய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். நாம் இங்கே மொத்தமாக அழிக்கப்படுகிறோம். வாழ்க்கை இவ்வளவு மோசமாக இருக்கக்கூடாது.”
டாக்டர் ஹம்மாம் அல்லோவாஹ்
அக்ஸா மற்றும் ஷிஃபா வைத்தியசாலைகளில் கடமை புரியும் சிறுநீரக நோயியல் வைத்திய நிபுணர், ஒக்டோபர் 26
(குறிப்பு: நவம்பர் 11 அன்று இஸ்ரேலிய வான்படை தாக்குதலில் டாக்டர் ஹம்மாம் அல்லோவாஹ் கொல்லப்பட்டார்).
“காஸா பகுதி கடந்த 2007ம் ஆண்டு முதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது. அதாவது கடந்த 16 ஆண்டுகளாக, மருத்துவர்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கு இங்கே பற்றாக்குறை நிலவுகிறது. MRI இயந்திரங்கள் மற்றும் CT ஸ்கேனர்கள் போன்ற நவீன கதிரியக்க வைத்திய உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதில் எங்களுக்கு நிறைய சிக்கல்கள் இருக்கின்றன. இங்கே கையிருப்பில் உள்ள இயந்திரங்கள் செயலிழந்தால், சில நேரங்களில் வேறொன்றிற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருக்கிறது. நான் காஸா பகுதியில் அமைந்துள்ள ஐரோப்பிய மருத்துவமனையின் இயக்குனர், இது காசா பகுதியில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனைகளில் ஒன்றாகும். ஒரு கட்டத்தில், எட்டு மாதங்களுக்கும் மேலாக எங்களிடம் CT ஸ்கேனர் வசதிகள் இருக்கவில்லை, ஏனெனில் எங்களிடம் அதற்கு பொறுத்த வேண்டிய ஒரு உதிரிப்பாகம் ஒன்றை பெற முடியாமல் போய்விட்டது.
உண்மையில் இந்த தாமதங்கள் வேண்டும் என்றே தான் ஏற்படுத்தப்படுகின்றன. இந்த மருத்துவ உபகரணங்களை ஐரோப்பாவிலிருந்து ஜோர்டானுக்கு 48 மணி நேரத்திற்குள் கொண்டு வருவது எளிது. ஜோர்டானிலிருந்து மேற்குக் கரைக்கு அவற்றைப் பெற இன்னும் சில நாட்கள் ஆகும். ஆனால் அவற்றை மேற்குக் கரையில் இருந்து காஸாவிற்குள் கொண்டு வருவதற்கு பல மாதங்கள் ஆகும், ஏனெனில் இஸ்ரேலிய அதிகாரிகள் அத்தகைய மருத்துவ உதிரிப்பாகங்கள் மற்றும் உபகரணங்களை அவ்வளவு எளிதாக காஸாவினுள் அனுமதிப்பதில்லை. அதனால் எங்களிடம் எவ்வளவுதான் பணம் இருந்தாலும், புதிய கதிரியக்க கருவிகளைப் பெறுவதற்கு ஓரிரு வருடங்களை கடத்த வேண்டி இருக்கிறது. ஜெனரேட்டர்களிலும் எங்களுக்கு அதே பிரச்சனை தான். காஸாவில் போதிய மின்சாரம் இல்லாத போதெல்லாம், ஜெனரேட்டரில் எமது மருத்துவமனையை இயக்குகிறோம், ஆனால் ஒரு ஜெனரேட்டர் பழுதடைந்தால், அதற்குரிய மாற்று உதிரிப்பாகங்களைப் பெற நாங்கள் தொடர்ந்தும் போராடுகிறோம். இந்த போருக்கு முன்பிருந்தே இங்கே எரிபொருள் விலை ஏற்றம் கண்டிருந்தது. அதனால் எங்களது ஜெனரேட்டர்களை இயக்கிக் கொள்வதற்கான எரிபொருளைப் பெற்றுக் கொள்வது கஷ்டமாக இருந்தது. காஸா மக்களுக்கு பூரணமான மற்றும் பாதுகாப்பான மருத்துவச் சேவைகளை வழங்குவதற்கு இவற்றோடு நாங்கள் தொடர்ந்தும் போராடி வருகிறோம்.
அக்டோபர் 7ம் திகதி காஸாவினுள் மின்சாரம் மற்றும் தண்ணீர் விநியோகம் இடைநிறுத்தப்பட்ட பிறகு இந்தப் பிரச்சினைகள் பல மடங்கு அதிகரித்தன. இதுபோன்ற சூழ்நிலைகளில், நாங்கள் மருத்துவமனையை தொடர்ந்தும் கொண்டு நடாத்துவது மிகவும் கடினமானது. பாதுகாப்பற்ற உள்ளூர் கிணறு ஒன்றில் இருந்து தண்ணீரைப் பயன்படுத்த வேண்டிய நிலைக்கு இது எங்களை தள்ளியுள்ளது.
கடந்த வாரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார்கள். இறந்த உடல்கள் முழுமையாகவும் உடல் பாகங்களாகவும் எங்களிடம் வந்து சேர்ந்தன. சில சமயங்களில் காயமடைந்தவர்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு நிபுணர்கள் சிகிச்சை அளிப்பதற்காக தேவைப்படுவார்கள். உதாரணத்திற்கு, ஒரு நோயாளி தலையிலும், மார்பிலும் எலும்புகளிலும் காயங்களுடன் வந்தால் அவருக்கு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர், பொது அறுவை சிகிச்சை நிபுணர், வாஸ்குலர் அறுவை சிகிச்சை நிபுணர் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் என அனைவரும் ஒரே நேரத்தில் வேலை செய்வார்கள். எனவே ஒவ்வொரு நோயாளிக்கும் அதிக சிகிச்சை நேரங்களும் வளங்களும் தேவைப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக அவற்றை எங்களால் வழங்க முடியாமல் போயுள்ளது. எங்களுக்கு எரிபொருள், தண்ணீர், மின்சாரம் மற்றும் அறுவை சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும் உபகரணங்களும் தேவைப்படுகின்றன. என்பு மற்றும் நரம்பியல் சத்திர சிகிச்சையை பெறுவதற்காக நூற்றுக்கணக்கான மக்கள் காத்திருக்கிறார்கள். இவர்களை எகிப்துக்கோ அல்லது வேறு எங்குமோ கொண்டு சென்றால் காப்பாற்றி விட முடியும். இந்த அதிகாரிகள் அதற்கும் கூட அனுமதி தருவதில்லை.
யுத்தம் தொடங்கியதில் இருந்து நாம் பெற்ற ஆயிரக்கணக்கான நோயாளர்களில் பெரும்பான்மையானோர், மருத்துவமனைகளை பாதுகாப்பான இடங்களாக கருதி தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியவர்கள் தான் . நாங்கள் எதிர்கொள்ளும் மற்றுமொரு முக்கியமான பற்றாக்குறை ICU படுக்கைகள் தொடர்பானது. இவை விலையிலும் தரத்திலும் உயர்ந்தவை என்பதால் அதிக உதிரிபாகங்களும் இவற்றை பராமரிக்க அவசியம். யுத்தத்திற்கு முன்னர் ஐரோப்பிய காஸா வைத்தியசாலையில் சுமார் 12 ICU படுக்கைகள் தான் இருந்தன. தொடர்ந்தும் அதிகரித்துச் சென்ற காயமடைந்தவர்களின் எண்ணிக்கை, ICU படுக்கைகளின் தேவையை மேலும் அதிகரித்தது. மூன்று, நான்கு, ஐந்து என்று ICU படுக்கை அறைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு ICU படுக்கைகளிலும் மூன்று நான்கு பேர் என இருக்கிறார்கள். உண்மையில் மிகுந்த சங்கடமான நிலை இது. ICU படுக்கைகளில் உள்ள நோயாளிகளில் சிகிச்சையால் குணமடையும் வாய்ப்பு உள்ளவர்களுக்கே இங்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வயோதிபர்கள் மற்றும் குணமடையும் வாய்ப்பு குறைவானவர்களை அப்படியே இறக்க விட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். வலி மிகுந்த நிலை இது.
75 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் உள்ள நாம் விரும்புவது சுதந்திரத்தை மட்டுமே. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான நேரம் இது. எல்லோரும் இரு தேசிய அரசுகள் கொண்டு அருகருகே அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்வதைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அதைக் கூட செய்வதற்கு யாரும் அழுத்தம் கொடுப்பதாக தெரியவில்லை. நாங்கள் நிம்மதியாக வாழ விரும்புகிறோம், எங்களது குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலம் வேண்டும். நாம் நிம்மதியாக வாழ சுதந்திர பாலஸ்தீனம் வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.
டாக்டர் யூசுப் அல் அக்காத்
ஐரோப்பிய காஸா மருத்துவமனை பணிப்பாளர்
ஒக்டோபர் 27.
“நாங்கள் இது வரை ஏழு போர்களை கண்டு இருக்கிறோம். ஒவ்வொரு போரின் போதும், எங்களோடு தோள் சேர்த்து நின்ற சக ஊழியர்களை நாம் இழந்திருக்கின்றோம். அதேபோல ஒவ்வொரு போரின் போதும் எம்மால் நோயாளிகளுக்கு வழங்கக்கூடிய மருத்துவ சேவைகளின் தரம் படிப்படியாக குறைவடைந்து கொண்டு வருகின்றது.
இந்தப் போர், பிரச்சினைகளை மேலும் மோசமாக்கி இருக்கிறது. கிழக்கு காஸாவில் உள்ள அல் டோரா மருத்துவமனை தாக்கப்பட்ட போது, குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள நோயாளிகள் உட்பட அனைவரும் எங்களது மருத்துவமனைக்கு அவசரமாக மாற்றப்பட்டனர். அதிக நோயாளிகள் என்பதால் மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன. சில சமயங்களில் வழங்க வேண்டிய மருந்து அளவை விட குறைவான அளவு மருந்துகளையே நோயாளர்களுக்கு வழங்கி வருகிறோம். பல உயிர்காக்கும் மருந்துகள் தீர்ந்துவிட்டன; நாங்கள் வெளிநாட்டில் இருந்து வரும் மருத்துவ உதவியில் தான் வாழ்கிறோம், அது தீர்ந்துவிட்டால், எங்களால் எதையுமே வழங்க முடியாது. எங்களது மருத்துவ ஊழியர்கள் பலர் தங்கள் குடும்பங்களுக்கு பாதுகாப்பு கிடைக்க வேண்டும் என்ற நம்பிக்கையில் தெற்கே சென்றுவிட்டனர். இதனால் எங்களிடம் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையும் நிலவுகிறது. எங்களிடம் போதிய மின்சாரம் இல்லை, ஜெனரேட்டர்களுக்கான எரிபொருள் கூட விரைவில் போய்விடும் நிலையில் உள்ளது. இங்கே இருக்கும் நோயாளர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மின்சாரம் தேவைப்படும் மருத்துவ சாதனங்களுடன் தான் இணைக்கப்பட்டுள்ளனர்.
நான் தற்போது Beit Lahia எனும் காசாவின் வடக்கு பகுதியை சேர்ந்த இரண்டே மாதங்களான குழந்தைக்கு சிகிச்சை அளித்து வருகிறேன். குழந்தையின் குடும்பத்தினர் அனைவரும் யுத்தத்தில் மரணம் அடைந்து விட்டதால் அதனை வைத்தியசாலையில் இருந்து வெளியேற்ற முடியாது.
மருத்துவத் தொழிலைத் தேர்ந்தெடுப்பது என் நாட்டின் மீதான எனது அன்பின் வெளிப்பாடு. நாங்கள் எமது நாட்டு மக்களுக்கு வெவ்வேறு வழிகளில் சேவை செய்கிறோம், ஆனால் சாதாரண வாழ்க்கையின் அனைத்து இன்பங்களையும் இழந்த எங்கள் குழந்தைகளுக்கு சேவை செய்வது மிகவும் அவசியமானது. எங்களது குழந்தைகளுக்கும் ஆரோக்கியமாக வாழவதற்கான உரிமை உள்ளது.
இப்போதைக்கு, நாங்கள் மிகவும் கஷ்டப்படுகிறோம்;போராடுகிறோம். ஆனால் எவ்வளவு காலம் எங்களால் இப்படியே வாழ. முடியும் என்று எங்களுக்குத் தெரியவில்லை.”
வைத்தியர் ரிழா அபூ அஸி
அந் நாஸர் மருத்துவ மனையின் குழந்தை நல மருத்துவர்.
ஒக்டோபர் 29
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்