– இலான் பப்பே
“முற்றுகையிடப்பட்ட காஸாவில் அப்டோபர் 7 அன்று இஸ்ரேல் போருக்கான அறிவிப்பை வெளியிட்ட உடன் மேற்குலகத் தலைவர்கள் தங்களுடைய விருப்பமான மத்திய கிழக்கு அரசான இஸ்ரேலையே ஆதரித்தனர். குறிப்பாக பிரிட்டன் மிகுந்த ஆர்வமாக ஆதரவளித்தது. மற்ற ஐரோப்பிய நாடுகள் இஸ்ரேலுக்கு உடனடியாக அனுதாபத்தோடு ஆதரவளித்தன என்றாலும் பிரிட்டனின் ஆதரவு இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலானது பிரிட்டனின் நேச சக்தி மட்டுமின்றி அது பிரிட்டனின் உருவாக்கமும் கூட. ஜயோனிசமானது ஐரோப்பிய யூத செயல்முறை மட்டுமேயல்ல. மாறாக, அது ஒரு கிருத்தவ வரலாற்று செயலாக்கத்தின் விளைவு என்றும் இலான் பப்பே இந்த கட்டுரையில் வாதிடுகிறார்.”
பொதுவாகவே மேற்குலகில், குறிப்பாக ஜெர்மனியில், தங்களுடைய சமூகத்தில் நிலவிய யூத வெறுப்பை களையெடுக்கும்விதமாக நிறைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இனவாதத்தின் கோரமான பக்கங்களுக்கு முகங்கொடுக்காமல் இஸ்ரேலுக்கும் அதனுடைய கொள்கைகளுக்குமான கண்மூடித்தனமான ஆதவரவாகவே அந்நடவடிக்கைகள் அமையும்.
ஜயோனிச செயற்திட்டத்தை கூர்தீட்டிய இஸ்லாமோஃபோபியாவிற்கான பொறுப்பை தட்டிக்கழிப்பதையே பிரிட்டனும் அமெரிக்காவும் வழக்கமாக கொண்டுள்ளது. பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினரும் – ஆங்கிலோ-யூத உயர் வகுப்பினருள் ஒரு பகுதியினர் உட்பட – என்றைக்குமே பாலஸ்தீன ஆக்கிரமிப்பிற்கான காரணிகளாக விளங்கிய தங்களுடைய உலகப்பார்வையின் அடிநாதங்களான ஏகாதிபத்தியத்தையும் யூத வெறுப்பையும் சாடியதில்லை.
குடியேற்ற காலனியம் எனும் கோட்பாட்டை பாலஸ்தீனத்தில் பொறுத்திப்பார்த்து அங்குள்ள நிலமைகளை புரிந்துகொள்ளமுயலும்போது அதில் ஏகாதியத்தியம் புறந்தள்ளப்படுகிறது.
ஏகாதிபத்தியத்தின் துணையில்லாமல் குடியேற்ற காலனியர்களால் பாலஸ்தீனத்திற்குள் நுழைந்து அங்குள்ள மக்களை அகற்றமுடியாது.
பாட்ரிக் வுல்ஃப் சொல்வதுபோது குடியேற்ற காலனியம்தான் பாலஸ்தீனியர்களை அவர்களுடைய நிலத்திலிருந்து அகற்றியது ஆனால் இவாஞ்சலிக் கிருத்துவமும், பிரிட்டிஷ் மேட்டிக்குடி வகுப்பினரும் இணைந்தே பாலஸ்தீனத்தில் குடியேற்ற காலனியத்திற்கான நியாயப்பாட்டை உருவாக்கினர்.
ஜயோனிசத்தின் குடியேற்ற காலனிய செயற்திட்டம் 1948 ஆம் ஆண்டு நக்பாவிற்கு வித்திட்டது. இன்றுவரை மேற்குலகின் துணைகொண்டு உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளைக்கொண்டு இனச்சுத்திகரிப்பு நடந்துகொண்டிருக்கிறது.
பாலஸ்தீனத்தில் குடியேற்ற காலனியத்தை செயல்படுத்தற்கான பொறுப்பை மேற்குலகும் குறிப்பாக எவாஞ்சலிக்க கிருத்தவர்களும் ஏற்க வேண்டும். அது காலனிய நீக்கத்தினதும் பாலஸ்தீன விடுதலையினதும் முக்கியமான பகுதியாக இருக்கும்.
ஜயோனிசமானது அதன் ஆரம்பகட்டத்தில் ஒரு கிருத்துவ இவாஞலிக்க செயற்திட்டம் என்பது பலராலும் பேசப்படுவதில்லை. ஜயோனிசத்தின் இந்த அடிப்படை கவனத்திற்கொள்ளப்படுவதில்லை. ஆனால் அதை கவனிக்காமல் ஜயோனிசத்துக்கான பிரிட்டனுடைய ஆதரவையும் பாலஸ்தீனத்தில் யூத அரசை உருவாக்கவும் ஆதரவளிப்பதன் பின்னணியையும் புரிந்துகொள்ள முடியாது.
1917 இல் இருந்து ஜயோனிசம் வெற்றிக்கரமாக இயங்குவதற்கான வரலாற்று காரணியை புரிந்துகொள்ளவும் இது உதவும். காலனியாதிக்கம் சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது எனக் கருதப்பட்ட காலங்களில்கூட பாலஸ்தீன அக்கிரமிப்பை அறச்செயலாகவோ அரசியல் தேவையாகவோ இஸ்ரேல் நியாயப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலைமை நிலவவில்லை.
ஜயோனிசத்தின் வெற்றிக்கு பல்வகைப்பட்ட காரணிகள் துணைபுரிந்தன. சர்வதேச அளவிலும் ஜயோனிச அரசுக்கு ஆதரவு வலிமையாக இருந்தது. ஹோலோகாஸ்ட், மேற்குலக நாடுகளின் குற்ற உணர்ச்சி, இஸ்லாமோஃபோபியா, முதலாளித்துவ நோக்கங்கள், அமெரிக்க ஆதரவு என ஒவ்வொன்றும் பலவகைகளில் இஸ்ரேலின் உருவாக்கத்திற்கு உதவின. இந்த காரணிகள் அனைத்தும் ஜயோனிச செயற்திட்டத்தின் உறுதிபாட்டையும் பாதுகாப்பையும் நிலைநாட்டின.
பாலஸ்தீனத்தின் ஜயோனிசத்தை நிலைநாட்டுவதற்கான ஆரம்பகால தோழமை சக்திகளாக இவாஞ்சலிக்க கிருத்தவர்களும், பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தினரும் விளங்கின.
இன்றும் இந்த தோழமை சக்திகள் இஸ்ரேலுக்கு எதிராக முன்வைக்கப்படும் அற நிந்தனைகளுக்கு எதிரான பாதுகாப்புச் சுவராக செயற்பட்டு வருகின்றன. பாலஸ்தீனர்களுக்கு எதிரான இனச்சுத்திகரிப்பை கண்டிக்கும் குரல்களுக்கு எதிராகவும் இஸ்ரேலை தற்காத்து வருகின்றன.
இக்கூட்டணியானது 1850 தொடங்கி 1918 வரை வளர்நிலையடைந்து பிரிட்டிஷ் பாலஸ்தீனம் நோக்கிய கனவை பிரிட்டிஷ் அரசிடம் வலியுறுத்தியது. அது மட்டுமின்றி யூத பாலஸ்தீனம் பற்றிய சாத்தியப்பாட்டையும் விதைத்தது.
யூத வெறுப்பு மற்றும் யூதர்கள் மீதான பச்சாதாபம் ஆகிய இரண்டின் கலவையாக இவாஞ்சலிக்க கிருத்தவர்களின் செயற்பாடுகள் வெளிப்பட்டன. அவர்களுடைய நோக்கம் இறையியல் சார்ந்த்தாகவும் இருந்தது. இறையியலின் அடிப்படையில் வருங்காலத்திற்கான கடவுளின் செயற்திட்டத்தில் யூதர்களை பங்கை அங்கீகரித்தனர். மறுபுறம், யூதர்களே யேசுவின் இறப்பிற்கு காரணமென்று குற்றஞ்சாட்டி யூத மதத்தை வெறுக்கவும் செய்தனர். இறையியல் ரீதியாக, எதிர்காலத்திற்கான கடவுளுடைய செயற்திட்டத்தில் யூதர்களின் பங்கை உயர்வானதாகக் கருதினர். அதேசமயம், யூதர்களை நாத்திகர்கள் என்று கூறி அவர்களை வெறுக்கவும் செய்தனர். இந்த இரண்டு கண்ணோடங்களுக்கும் இடையே ஒரு சமரசத்திற்கு வந்து சேர தெய்வீக ஏற்பாடான மெசியாவின் மீள் வருகையை சாத்தியப்படுத்தும் செயற்திட்டத்தை யூதர்கள் முன்னெடுக்க வேண்டும் என்கிற ஏற்பாட்டிற்கு வந்தடைந்தனர்.
யூத வெறுப்பிற்கும் யூதர்கள் மீதான பச்சாதாப பார்வைக்கு இடையேயான சமரசத்தை எட்ட யூத மதத்தை மதமாக அல்லாமல் இனமாகவும், தேசியமாகவும், மக்கட்குழுவாகவும் பார்ப்பதன் வழியாகவும் அவ்விரு கண்ணோடங்களுக்கு(யூத வெறுப்பு, யூதர்கள் மீதான பச்சாதாபம்) இடையேயான பாலம் அமைக்கப்பட்டது.. குறிப்பாக பிரிட்டனில் உள்ள இவாஞ்சலிக்க கிருத்தவர்கள் அவ்வாறு செய்தனர். யூத மதத்தை பிலோசெமிட்டிக் கண்ணோடத்திலிருந்து பார்ப்பது இரு முரண்பாடான விளைவுகளுக்கு வித்திட்டது. ஒன்று: பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய பகுதியில் ஐரோப்பாவில் யூத அறிவுஜீவிகளின் மத்தியில் யூதர்கள் மீதான பச்சாதாப பார்வைகளை பெரிய அளவில் வளர்த்தது. இரண்டாவது: இரண்டாம் உலகப்போரின் போது நாஜிக்களால் மேற்கொள்ளப்பட்ட ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலைக்கான நியாயப்பாட்டை கருத்தியல் ரீதியாக வழங்கியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில், ஒட்டோமான் வீழ்ச்சிக்கு பிறகு தங்களுடைய அரசு உருவாக்கம் பாலஸ்தீனத்தில் முக்கியமானதென்று இவாஞ்சலிக்க கிருத்தவர்கள் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் முன்வைத்தனர். மெசியாவின் வருகையை துரிதப்படுத்துவதற்காகவும் ஐரோப்பாவிலிருந்து யூதர்களை நீக்குவதற்காகவும் பாலஸ்தீனமானது யூதர்களுக்களினுடையதாக இருக்க வேண்டும் என்பதே அவர்களுடைய கண்ணோட்டமாக இருந்தது.
இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் மேற்சொன்ன சிந்தனைகளானது தியோடர் ஹெர்சலால் 1897-ஆம் ஆண்டில் முன்னெடுக்கப்பட்டு வளர்ந்து வந்த அரசியல் இயக்கமாக ஜயோனிசத்தின் இணைவாக புரிந்துகொள்ளப்பட்டது.பாலஸ்தீனத்திற்கு யூதர்கள் ‘திரும்புதல்’ என்பது கிழக்கு ஐரோப்பிய யூதர்களுக்கு மட்டுமே பொருந்தும் கருதுகோளாக ஹெர்சலும் ஆங்கிலோ-யூத மேட்டுக்குடியினரும் கூறினர். யூதவெறுப்பின் விளைவாக கிழக்கிலிருந்து பிரிட்டனுக்கு புலம்பெயர்ந்த யூதர்களை ஆங்கிலோ-யூத மேட்டுக்குடியினர் வரவேற்கவில்லை.
இந்த மனக்கசப்பு மேட்டுகுடி யூதர்களை ஆர்தர் பால்ஃபோர் போன்ற அரசியல் தலைவர்களோடு உறவு பாராட்ட வைத்தது. 1905 ஆம் ஆண்டிலிருந்து பால்ஃபோர் யூதர்களின் புலப்பெயர்வுக்கு எதிராக கடுமையான அரசியல் செய்து வந்தார். அவர் யூதர்களுக்கான அரசு ஒன்றை உருவாக்க ஒட்டோமான் பேரரசு பாலஸ்தீனத்தை வழங்க பிரிட்டிஷ் அரசாங்கம் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று மேட்டுக்குடி ஆங்கிலோ யூதர்களான ஹெர்பர்ட் சாமுவல் போன்றோரோடு பால்ஃபோர் இணைந்து செயல்பட்டார்.
பிரான்சுக்கு முன்னரே நாம் புனித நிலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று கூறிய பிரதமரான டேவிட் லாயிட் ஜார்ஜோடும் பணியாற்றினர். அவர் இஸ்லாமோஃபோபிக் மற்றும் பிரான்கோஃபோபிக் என்பதும் குறிப்பிடத்தக்கது. மர்ஜ் இப்னு ஆமிர் பள்ளத்தாக்கில் உள்ள மலூல் எனும் கிராமத்தை சூறையாடி அமைக்கப்பட்ட யூத குடியேற்றப் பகுதிக்கு அவருடைய பெயர்(டேவிட்) சூட்டப்பட்டது.
1917 ஆம் ஆண்டு பால்ஃபோர் பிரகடனத்தின் மூலம் வெளிச்சத்திற்கு வருவதற்கு முன்பே அதாவது 1915-இலேயே பாலஸ்தீனத்தை ஆங்கிலோ-யூத அரசாக மாற்ற வேண்டுமென்பது அதிகாரப்பூர்வ பிரிட்டிஷ் கொள்கையாக இருந்தது.
எழுபது ஆண்டுகள் பிரிட்டனில் லாபி பண்ணியதின் விளைவாக ஜயோனிச கனவானது வலுப்பெற்றது. தடகள வீரரின் சிறு கம்பு போல ஜயோனிச கனவை மெய்பிப்பதற்கான லாபி கைமாறிபடி இருந்தது. பாலஸ்தீனத்தில் குடியேற்ற காலனியம் செயற்திட்டத்தை முதன்மையாக பேசிவந்த எவாஞ்சலிக்க கிருத்தவர்கள் அதனை ஆங்கிலோ-யூத மேட்டுக்குடியினரிடம் கையளித்தனர். முதன்மையான பிரிட்டிஷ் அரசியல் தலைவர்களை கொண்டிருந்த இந்த குழுக்கள் செயல்திறன்மிக்க ஜயௌனிச லாபி இயந்திரத்தை உருவாக்கினர். அந்த இயந்திரமானது பாலஸ்தீனத்தில் யூத அரசு எனும் ஜயோனிசக் கனவை மெய்ப்பிக்கும்படியான கொள்கைகளை பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்பதற்கு வழியேற்படுத்திக்கொடுத்தது.
1915-ஆம் ஆண்டு வாக்கிலேயே உதியடையத்தொடங்கிய அவர்களுடைய வெற்றி பாலஸ்தீன மக்களுக்கு அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தியது. பாலஸ்தீனத்தை ஆக்கிரமிக்க வேண்டும் எனும் பிரிட்டிஷ் கொள்கை முடிவு மட்டுமே 1948 ஆம் ஆண்டு நக்பாவிற்கு வழியமைக்கவில்லை. பாலஸ்தீனத்தை ஜயோனிச அரசாக மாற்ற வேண்டும் என்கிற கொள்கையினதும் விளைவே பாலஸ்தீன மக்களின் யூத வெறுப்பிற்காக மன்னிப்பு கோருவது அதனை திருத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்வதெல்லாம் மேற்குலகைப் பொருத்தமட்டில் அறமும் அவசியமும் ஆகும். ஆனால், பாலஸ்தீனத்தையும் அங்குள்ள மக்களையும் அழித்ததில் யூத-கிருத்தவர்களின் பங்கை கணக்கில் கொள்வது சமகாலத்தின் தேவையாகும்.
இலான் பப்பே, எக்ஸிடர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் The Ethnic Cleansing of Palestine, The Modern Middle East, A History of Modern Palestine: One Land, Two Peoples, and Ten Myths about Israel உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.
மொழிபெயர்ப்பு – நிஷாந்த் VKS