-தாரிக் பெகோனி
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதலானது 176 நாட்களுக்கு பிறகும் தொடர்ந்து கொண்டிருப்பதோடு மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிவித்திருப்பதை போன்று அது தற்போது பட்டினி போடும் கொள்கையை ஒரு யுத்த ஆயுதமாக பயன்படுத்தும் நிலைக்கும் விரிவடைந்து உள்ளது. 32,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் சர்வதேச சமூகமானது பாலஸ்தீனர்களும் இஸ்ரேலியர்களும் சமாதானத்துடனும் பாதுகாப்புடனும் இணைந்து வாழ முடியும் என நம்பும் பரவலான இரு-நாட்டு தீர்வு அழைப்பை நோக்கி மீண்டும் கீழிறங்கியுள்ளது. “இரு-நாட்டு தீர்வே ஒரே உண்மையான தீர்வு” என்று ஜனாதிபதி பைடன் தனது கடந்த மாத வருடாந்த பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
ஆனால் இது ஒரு வெற்று அழைப்பு மாத்திரமே. இரு-நாட்டு தீர்வை சுற்றியிருக்கும் மொழியானது தற்போது அதன் அனைத்து அர்த்தங்களையும் இழந்த நிலையில் உள்ளது. தமது அரசியல்வாதிகள் அலுப்பூட்டும் அளவிற்கு இரு-நாட்டு தீர்வை மீண்டும் மீண்டும் உச்சரிக்கும் நிலையிலும் பெரும்பாலான இராஜதந்திரிகள் அதன் மீது ஒரு நம்பிக்கையின்மையை தான் தங்களது உடல் மொழியில் வெளிப்படுத்துகிறார்கள். ஏனென்றால் இஸ்ரேல் அதை உறுதியாக எதிர்க்கிறது, மேற்குலகும் இஸ்ரேல் தனது செயல்பாடுகளை மாற்றிக்கொள்ளுமாறு அதன் மீது எந்த அழுத்தமும் வழங்காது இருப்பதோடு பாலஸ்தீன அரசியலும் பிடித்த பிடியாக உறுதியாக இருக்கிறது. இது ஒரு இனப்படுகொலையாக இருக்கலாம் என்று நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் கூறியிருக்கும் நிலையில் இம்முறை இரு-நாட்டு தீர்வானது தற்போதைய நிலைமையின் கனம் காரணமாக முன்பு போலல்லாது வித்தியாசமாக இருக்கும் என்று வலியுறுத்துகிறார்கள்.
ஆனால் அது அப்படி இருக்காது. இரு-நாட்டு தீர்வு முழக்கத்தை தொடராக மீள உச்சரிப்பதானது இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பிரிவினையின் சாத்தியமின்மை மற்றும் பாலஸ்தீனர்கள் மீது அவர்களது சம்மதமில்லாமல் 1947இல் திணிக்கப்பட்ட சட்டபூர்வமற்ற ஏற்பாடு போன்றவற்றின் யதார்த்தத்தை கொள்கை வகுப்பாளர்கள் எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு தான் அது அனுமதித்திருக்கிறது. இரு-நாட்டு தீர்வு கருத்தானது தற்போது அடிப்படையில் பாலஸ்தீனர்களுக்கான அடிபணிதலையும் இஸ்ரேலியர்களுக்கான தண்டனை விலக்கு உரிமையையும் (impunity) குறிக்கும் ஒரு அடிப்படை தூணாக வளர்ச்சியடைந்திருக்கிறது. இரு நாடுகள் எனும் கருத்தை நீதிக்கான ஒரு பாதையாக முன்வைப்பதானது பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேலிய இன ஒதுக்கல் அரசினால் முன்னெடுக்கப்படும் அன்றாட வன்முறையை தன்னளவில் இயல்பாக்கம் செய்வதாக அமைந்திருக்கிறது.
பொது சமுதாய நடைமுறை எவ்வளவு கொடியதாக இருந்தது என்பதை 2023 அக்டோபர் 7ம் திகதிக்கு முன்னர் பாலஸ்தீனர்களை நோக்கியிருந்த சூழ்நிலைகளில் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. 2022இல் மேற்குக்கரையில் இஸ்ரேலிய வன்முறையானது குறைந்தது 34 பாலஸ்தீன குழந்தைகளை கொன்றது. கடந்த 15 வருடங்களில் இதுவே மிக அதிகமான எண்ணிக்கையாக இருப்பதோடு 2023இன் இடைப்பகுதியில் இந்த விகிதம் முன்னைய அளவுகளை கடக்கும் நிலையை நோக்கி சென்றுகொண்டும் இருந்தது. இப்படியான நிலைமைகள் இருந்தும் பைடனின் நிர்வாகமானது இஸ்ரேலை மேலும் சட்டரீதியாக அங்கீகரிக்கப்படுவதற்கு பொருத்தமானதாக அடையாளப்படுத்தி அந்த பிராந்தியத்தில் தனது இராஜதந்திர உறவுகளை விரிவாக்கியதோடு அமெரிக்காவுக்கான நுழைவுச்சான்று கட்டாயத்தையும் நீக்கி சலுகை வழங்கியது. அக்டோபர் 7 அன்று இஸ்ரேலிய யூதர்கள் கொல்லப்படும் வரை சர்வதேசிய நிகழ்ச்சி நிரலில் பாலஸ்தீனானது பெருமளவில் இல்லாமலேயே இருந்தது. இஸ்ரேலும் அதன் நேச நாடுகளும் இஸ்ரேலிய ஆட்சிக்கு எதிரான எவ்வித சவால்களுக்கும் தயாரற்ற நிலையில் இருந்ததில் இருந்தே பாலஸ்தீனர்கள் எந்தளவிற்கு புலனாகாமல் இருந்தார்கள் என்பதும் அவர்கள் மீதான ஒடுக்குதலானது எவ்வளவு நிலையானதாக உலக அரங்கில் கருதப்பட்டது என்பதையும் அது கோடிட்டு காட்டுகிறது.
வரலாற்று முறிவு ஏற்பட்டிருக்கும் இக்கணமானது கொள்கைகள் தோல்வியுற்றிருப்பதற்கான இரத்தம் தோய்ந்த ஒரு ஆதாரமாகும். இருந்தும் நாடுகள் அனைத்தும் அதே கொள்கைகளை மீண்டும் மீளெழுப்ப முயற்சிக்கின்றன. குடியேற்றங்கள் கட்டுவதை தடுத்தல் மற்றும் காஸா மீதான முற்றுகையை நீக்குதல் அல்லது அமெரிக்காவின் விரிவான இராணுவ ஆதரவிற்கு எதிராக இருத்தல் போன்றவற்றிற்கு அர்த்தமுள்ள முறையில் அழுத்தம் கொடுப்பதன் மூலம் சமாதானத்தை உருவாக்குவதற்கான உன்னதமான அடிகளை எடுப்பதை விடுத்து வாஷிங்டன் அதற்கு நேர் எதிரானவற்றையே செய்துவருகிறது. ஐ.நா பாதுகாப்பு சபையில் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை மிகவும் ஆக்ரோஷமான முறையில் பயன்படுத்தியுள்ளது. அக்டோபர் 7க்கு பிறகு முதன் முதலாக ஒரு போர் நிறுத்த முடிவிற்கு இட்டுச்சென்ற ஒரு சமீபத்திய வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்காமல் தவிர்ந்திருக்க முடிவு செய்த போதிலும் அத்தகைய ஒரு தீர்மாணம் கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றல்ல என்று அது கூறியது. இஸ்ரேலின் இராணுவத்திற்கு நிதி உதவி வழங்கும் அமெரிக்கா பாலஸ்தீனர்களுக்கு இன்றியமையாத ஒன்றான ஐ.நா வின் நிவாரண மற்றும் வேலைகள் நிறுவனத்திற்கு வழங்கப்படும் நிதிகளை நிறுத்தி வைத்திருக்கிறது.மேலும் தற்போது பல பாலஸ்தீனர்களால் அவர்கள் மீதான ஆக்கிரமிப்புக்கான ஒரு துணை ஒப்பந்ததாரர் என கருதப்படும் பிரபலமற்ற, சட்டபூர்வமில்லாத பாலஸ்தீன தேசிய ஆணையத்தை வழுவூட்டுவதோடு இஸ்ரேல் பொருப்புகூற வேண்டிய சூழல்களை சுருக்குவதன் மூலம் அமெரிக்காவானது சர்வதேச சட்டத்தின் அதிகாரத்தை நீக்கவும் செய்கிறது. இந்நடவடிக்கைளின் விளைவாக இஸ்ரேலின் தண்டனை விலக்கு உரிமை மேலும் உறுதியாக பாதுகாக்கப்படுகிறது.
இரு-நாட்டு தீர்வு முழக்க மந்திரத்தின் போலித்தன்மையானது கொள்கை வகுப்பாளர்கள் பாலஸ்தீன எல்லையை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதை தடுப்பது பற்றி எதுவும் பேசாமல் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதை நோக்கி மட்டும் அடிக்கடி பேசுவதில் இருந்து தெளிவாக விளங்குகிறது. நடைமுறையில் அதற்கு முற்றிலும் மாற்றமாக அமெரிக்காவானது பாலஸ்தீன அரசு அங்கீகரிப்பிற்கான வழிவகைகளை தேடும் அதே நேரத்தில் நீதிக்கான சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு “நிஜமான பாதுகாப்பு தேவைகள் உள்ளது” என்ற காரணத்தினால் தான் பாலஸ்தீன எல்லைகள் மீதான அதன் தொடர்ச்சியான கட்டுப்பாடு நியாயமாக நிலைநாட்டப்பட்டிருக்கிறது போன்ற வாதங்கள் மூலம் இஸ்ரேலின் நீடித்துக்கொண்டிருக்கும் ஆக்கிரமிப்பை பாதுகாக்கவும் செய்கிறது.
இந்த முரண்பாட்டை வேறு எப்படிப் புரிந்துகொள்வது?
பிரிவினை கோட்பாடானது காலனிய சக்திகளால் நெடுங்காலமாக தமது காலனிகளின் விவகாரங்களை நிர்வகிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட ஒரு மழுங்கிய கொள்கை உத்தியாகும். அதனுள் பாலஸ்தீன் ஒரு விதிவலக்கல்ல. சியோனிச இயக்கமானது ஐரோப்பிய காலனித்துவ காலப்பிரிவினுள் உருவானதோடு அதற்கான சிறப்பான அதிகாரபூர்வ அங்கீகாரமும் பிரித்தானிய பேரரசின் மூலம் தான் வழங்கப்பட்டது. 1917இல் பிரித்தானியர்களால் வழங்கப்பட்ட பால்ஃபோர் பிரகடனமானது பாலஸ்தீனத்தில் “யூத மக்களுக்கான ஒரு தேசிய நிலத்திற்கு” அழைப்பு விடுக்கப்பட்டது. அப்பிரதேசத்தில் ஒரு அகல் விரிவான பெரும்பான்மையாக இருந்த பாலஸ்தீனர்களின் நிலை பற்றி போதுமான அளவு கணக்கில் எடுக்கப்படாமல் விடப்பட்டதோடு மட்டுமல்லாமல் பால்ஃபோர் பிரபு அவர்களை வெறும் “யூதரல்லாத சமூகங்கங்கள்” என்று வரையறுத்தார். 1922 ஆகும் போது பிரித்தானியாவின் காலனித்துவத்திற்குற்பட்ட பாலஸ்தீனர்கள் மீது இப்பிரகடனம் திணிக்கப்பட்டதோடு அவர்களிடம் அவர்களது தாய்நாடை பிரிவினைவக்குற்படுத்துவது தொடர்பாக எவ்வித சம்மதமும் கேட்கப்படவில்லை. அதற்கு மூன்று தசாப்தங்களுக்கு பிறகு ஐ.நா சபை தனது 1947 திட்டத்தின் வழி பிரிவினையை நிறுவனமயப்படுத்தி பாலஸ்தீனத்தை இரு சுயாதீன அரசுகளாக பிரிக்குமாறு கூறியது. ஒன்று பாலஸ்தீன அராபிய அரசு மற்றையது யூத அரசு.
தமது காலனிய ஆட்சியாளர்களிடமிருந்து விடுதலை பெற்ற மத்திய கிழக்கிலும் வட ஆப்பிரிக்காவிலும் இருக்கும் பாலஸ்தீனத்தின் அயல் நாடுகள் அனைத்தும் ஐ.நா சபையில் அங்கத்துவம் பெற்று 1947 திட்டத்திற்கு எதிராக வாக்களித்தன. பலராலும் சட்டபூர்வமற்றது என கருதப்பட்ட இவ்வாக்கெடுப்பில் பாலஸ்தீனர்கள் ஒரு சம்பிரதாயத்துக்காகவாவது கணக்கில் எடுக்கப்படாமல் இருந்ததோடு அவர்கள் ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்த சியோனிச குடிபெயர்விற்கு இடமளிப்பதற்காக அவர்களது தாய்நாடு பிரிக்கப்பட்டது. அதற்கு ஒரு தசாப்தத்திற்கும் பிறகு நிறுவப்பட்ட பாலஸ்தீன விடுதலை இயக்கமானது (PLO) இந்த எதிர்ப்பை முறைப்படுத்தியதோடு பிரித்தானிய ஆட்சி கால எல்லைகளுக்குள் பாலஸ்தீனானது “ஒரு பிரிக்க முடியாத பிரதேசமாக” தான் அதன் எல்லைகளுக்குள் வரையறுக்கப்பட்டிருந்தது என்பதனையும் அது வலியுறுத்தியது. அது பாலஸ்தீன் இரு நாடுகளாக்கப்படுவதை பலமாக எதிர்த்ததுடன் 1970களின் பிற்பகுதிகளில் ஒரு மதச்சார்பற்ற ஜனநாயக அரசை உருவாக்க போராடிக்கொண்டும் இருந்தது. எனினும் 1980களில் PLOவின் தலைவர் யாசிர் அரஃபாத் தனது அமைப்பின் ஏனைய பெரும்பாலான தலைமைகளுடன் சேர்ந்து பிரிவினையை நடைமுறை சாத்தியமான ஒரு தேர்வாக ஏற்றுக்கொள்ளும் நிலைமைக்கு வந்து சேர்ந்தார்கள். தொடரும் ஆக்கிரமிப்புக்கெதிராகப் போராடிக் களைத்து போன பல பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய குடியேற்றவாதிகளிடமிருந்து தனியான ஒரு இருப்பை அடைவதற்காகவும் தமக்கான ஒரு அரசை உருவாக்கிக்கொள்ளவும் பிரிவினையை ஏற்றுக்கொண்டார்கள்.
தாம் எதிர்பார்த்த அந்த தனியலகு என்றுமே சாத்தியப்படாது என்பதனையும் இரு நாட்டு கொள்கையின் இலக்கானது காலவரையறையில்லாத தொலைவான ஒரு எதிர்காலத்தில் தனியான நிர்வாக அலகொன்றை அடைய முடியும் என்ற ஒரு வெற்று மாயையை தக்கவைப்பது தான் என்பதனையும் புரிந்து கொள்ள பாலஸ்தீனர்களுக்கு மூன்று தசாப்தங்களுக்கு மேல் தேவைப்பட்டது. ஜோர்டான் நதி தொடக்கம் மத்திய தரைக்கடல் வரையிலான பகுதியை தமது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இஸ்ரேலிய தலைவர்கள் பிடிவாதமாக இருந்த காரணத்தினால் அந்த தெளிவற்ற காலப்பகுதியில் இஸ்ரேலின் விரிவாக்கல் வன்முறை அதிகரித்ததோடு அது இன்னும் நேரடியான தன்மைக்கும் மாறியது. தமது கட்டுப்பாட்டை தக்கவைத்துக்கொள்ள பாலஸ்தீனர்களிடம் மதிப்பிழந்த பாலஸ்தீன தலைவர்களையும் அது சார்ந்து இருந்தது. பாலஸ்தீன தேசிய ஆணையத்தை வழிநடத்துபவர்களையும் இஸ்ரேலிய திட்டங்களுடன் ஒத்துழைத்து அதன் விரிவான ஆதிக்கத்திற்கு எந்த சவாலும் முன்வைக்காத இறையாண்மையற்ற தொலைவுகளாலான பன்டுஸ்டான்களை கொண்டு போதுமாக்கிக்கொள்பவர்களையும் அது முக்கியமாக சார்ந்திருந்தது. தாம் தேவையற்றவர்கள் என கருதும் மக்கள் தொகையை சுவர்களுக்கு பின்னால் தனிமைப்படுத்தும் புவியியல் சார் அந்நியப்படுத்தலை கொண்ட இவ்வகையான மக்கள்தொகை கட்டமைத்தலானது இன ஒதுக்கல் அரசுகளுக்குரிய ஒரு அடிப்படையான தன்மையாகும். இரு நாடுகளுக்கான விருப்பத்தை மீண்டும் மீண்டும் தெரிவிப்பதும் பிரிவினை என்பது சாத்தியபடுத்தக்கூடிய ஒன்று என்று வாதிடுவதும் இஸ்ரேலை அதன் ஆக்கிரமிப்பு யதார்த்தத்தில் இருந்து வேறுபடுத்தி அதை ஒரு யூத ஜனநாயக அரசாக முன்வைக்கும் வேலையை தான் செய்கிறது. இது இஸ்ரேலின் உண்மை நிலையை மறைப்பதற்கு அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் ஒரு போர்வையை அளிப்பதோடு அது யூதர்களை விட யூதரல்லாத பெரும் தொகையானயானவர்களை ஆளுகிறது எனும் யதார்த்தத்தை மழுங்கடிக்கவும் செய்கிறது.
இந்த ஒளியில் நின்று பார்க்கும் போது தோழ்வியுற்ற இரு-நாட்டு தீர்வுக்கான முயற்சிகள் அனைத்தும் உண்மையில் இஸ்ரேலுக்கு ஒரு தோல்வியல்ல. மாறாக அவை ஒரு பெரும் வெற்றியாகும். சமாதான பேச்சுவார்த்தைகள் ஒரு முடிவுக்கு வராமல் ஏறியும் இறங்கியும் நீண்டுக்கொண்டிருக்கும் சமயத்தில் இப்பிரதேசம் மீதான தனது கட்டுப்பாட்டை இஸ்ரேல் மேலும் பலப்படுத்தியது. இஸ்ரேல் இன ஒதுக்கலை மேற்கொள்ளும் ஒரு குற்றவாளி என்று பாலஸ்தீனர்கள் நீண்ட காலமாக வாதித்து வரும் விடயத்தை சமீப சில ஆண்டுகளில் சர்வதேச மற்றும் இஸ்ரேலிய மனித உரிமை அமைப்புகள் ஒப்புக்கொண்டுள்ளன. இஸ்ரேலின் முன்னணி மனித உரிமை அமைப்பான B’Tselem இஸ்ரேல் என்பது நதி தொடக்கம் கடல் வரையில் யூத மேலாண்மையின் அடிப்படையில் அமைந்த ஒரு ஒற்றையான ஆட்சி என்ற முடிவுக்கு அது வந்துள்ளது.
சர்வதேச கவனம் மீண்டும் ஒருமுறை இப்பிரதேசத்தின் மீது குவிந்திருக்கும் நேரத்தில் பிரிவினையை நடைமுறைக்கேற்ற ஒரு தீர்வு எனும் வகையிலாவது முன்வைத்து உரையாடுவதன் அபாயங்களை பல பாலஸ்தீனர்கள் இப்போது புரிந்திருக்கிறார்கள். பலனளிக்க முடியாத இம்மாதிரியான கொள்கை சார்ந்த பேச்சுக்களை மீள உயிர்ப்பிப்பதற்கு பலர் மறுக்கிறார்கள். பாலஸ்தீனத்தில் வாழுபவர்களையும் புலம்பெயர்ந்தோரையும் உள்ளடக்கிய பாலஸ்தீனர்கள் குழுவொன்று சமீபத்தில் வெளியிட்ட பெயரிடப்படாத ஒரு தகவலில் பின்வருமாறு எழுதியிருந்தனர்: பாலஸ்தீனத்தை பிரிப்பதானது சியோனிசத்தை சட்டபூர்வமாக அங்கீரிப்பதல்லாமல் வேறில்லை. அது எம்மக்களுக்கான ஒரு துரோகமாக இருப்பதோடு “நக்பாவை” ஒரு இறுதி முடிவுக்கு கொண்டு வருவதுமாகும். பேரழிவு என பொருள்படும் “நக்பாவானது” இஸ்ரேலின் கண்டுபிடிப்போடு சுமார் 750,000 பாலஸ்தீனர்கள் வேளியேற்றப்பட்டதும் தப்பித்தோடியதுமான நிகழ்வை குறிக்கும் சொல்லாகும். ”எமது விடுதலையை மக்களினதும் நிலத்தினதும் ஒன்றிணைதலின் அடிப்படையில் அமைந்த ஒரு ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலமே நாம் சாதிக்க முடியும்.”
அவர்களை பொருத்தவரையில் அவர்களது தகுதியற்ற தலைவர்கள் வலியுறுத்தும் பாலஸ்தீன அரசானது சாத்தியமானது என்றாலும் கூட, தற்போது இஸ்ரேலில் இருக்கும் தமது சொந்த வீடுகளுக்கு பாலஸ்தீன அகதிகள் மீளத்திரும்ப முடியாது என்கிற உண்மையை அது மாற்றாது. அத்தோடு இஸ்ரேலில் வாழும் பாலஸ்தீன குடிமக்கள் யூத அரசு என அடையாளப்படுத்தப்படும் பிரதேசத்தினுள் தொடர்ந்தும் இரண்டாம் தர குடிமக்களாக தான் வசிக்க வேண்டி இருக்கும். உலகலாவிய அதிகார சக்திகள் இவற்றை இணங்கண்டுகொண்டாலும் இவை நடைமுறை சாத்தியமற்ற உணர்வு என்று புறக்கணித்துவிடும். இஸ்ரேலிய தலைவர்கள் மறைமுகமாக அல்லாமல் வெளிப்படையாகவே பாலஸ்தீன அரசு உருவாக்கத்திற்கான எல்லா வகைகளையும் எதிர்த்து கொண்டிருக்கும் நிலையில் அந்த அதிகார சக்திகள் இஸ்ரேலின் இந்த இரு-நாட்டு தீர்வு மறுப்பை கண்டுகொள்ளாமல் இருப்பதற்கும் முடிவெடுக்க கூடும். சமீபத்தில் ஜனவரியில் பிரதமர் பென்ஜெமின் நேதன்யாஹு கூறினார் இஸ்ரேலுக்கு “ஜோர்டான் நதியின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள முழுப்பிரதேசம் மீதான பாதுகாப்பு சார்ந்த கட்டுப்படுத்தும் அதிகாரம் அவசியம் வேண்டும்.” மேலும் “அது இறையாண்மை பற்றிய கருத்துடன் முரண்படும். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்?” என்றும் கூறினார்.
இப்படி இருந்தபோதிலும் இரு-நாட்டு தீர்வானது கொள்கை வகுப்பாளர்களுக்கு தொடர்ந்தும் முன்னணி தேர்வாகவே இருக்கிறது. அதனூடாக அவர்கள் விரிவாக்கல் ஆட்சியின் யதார்த்தத்தை நிலைத்திருக்க கூடிய ஒரு கொள்கை வழிகாட்டலுக்குள் சுருக்கும் நிலைமைக்கு மீளத்திரும்பியிருக்கிறார்கள். பாலஸ்தீன அரசு இராணுவ நீக்கம் செய்யப்படவேண்டுமென்றும் பாதுகாப்பு சார்ந்த மேற்பார்வையை இஸ்ரேல் தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கும் போன்ற மீண்டும் மீண்டும் முன்வைக்கப்படும் விதிகளுக்குள் அவர்கள் செல்வதோடு உலகில் எல்லா அரசுகளும் ஒரே அளவிலான இறையாண்மையை கொண்டவை அல்ல என்பதையும் வலியுறுத்துவார்கள். சமாதான செயல்முறையின் விளைவாக பெரும் அழிவில் சென்று முடிந்த ஒரு நூற்றாண்டின் தோல்வியானது கடந்த ஐந்து மாதங்களாக மீண்டும் இடம்பெறுவதை போல் இருக்கிறது.
பாலஸ்தீனர்களின் எதிர்காலத்தினை கருத்தில் கொண்டமைந்த அவர்களின் கோரிக்கைகளை கணக்கில் கொள்ளாமல் விடப்படுவதானது முதல் முறையாக நடைபெறும் ஒரு விடயமல்ல. ஆனால் அனைத்து கொள்கை வகுப்பாளர்களும் அக்டோபர் 7ம் திகதி நமக்கு கற்றுத்தரும் பாடத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். ஏனென்றால் பாலஸ்தீனர்கள் சுவர்களுக்கு பின்னாலும் இஸ்ரேலின் ஆதிக்கத்திற்கு கீழும் கட்டுப்படுதப்பட்டிருக்கும் காலமெல்லாம் சமாதானமோ நீதியோ எங்கும் இருக்காது.
நதி முதல் கடல் வரையிலான ஒரு அரசு என்பது யதார்த்தமற்றதாகவோ கற்பனாவாதமாகவோ அல்லது இரத்தம் சிந்துவதற்கான ஒரு குறிப்பாக கூட தெரியலாம். ஆனால் கொள்கை வகுப்பாளர்களின் கற்பனைகளுக்கு அப்பாலுள்ள யதார்த்த உலகில் அந்த ஒரு அரசு மட்டுமே உள்ளது. ஆகையால் இங்கே இருக்கும் கேள்வி என்னவென்றால்: அதை எவ்வாறு நீதியான ஒன்றாக மாற்றுவது?
தாரிக் பெகோனி Al-Shabaka மையத்தின் தலைவராக பணியாற்றினார். Hamas Contained: The Rise and Pacification of Palestinian Resistance என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். பலஸ்தீன் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு சார்ந்து தொடர்ந்து பலவேறு பலஸ்தீன இதழ்களிலும் London Review of Books, The New York Times, New York Review of Books, Washington Post போன்ற இணையதளங்களிலும் எழுதி வருகிறார்.
மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி