-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு

பிரித்தானியர்கள் அரசாங்கத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப்பிரதிநிதிகளின் இருப்புக்களை பரம்பலடையத் தொடங்கினர். மக்கள்தொகையானது அரசாங்கம் மற்றும் கல்வி போன்ற பிற சலுகை வளங்களின் பங்குகளை பாதிக்கக்கூடும் என்பதால் எண்ணிக்கை மிகமுக்கியமானது. காலனி முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட் உள்ளுர் நிர்வாக கட்டமைப்பானது, அணிதிரண்டுவரும் பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் முதன்முறையாக துணைக்கண்டத்தின் ஆட்சியில் குறைந்தபட்சம் சரிசமனான தகுதி வழங்கப்படவேண்டும் என்பதை குறிக்கிறது. இந்த புள்ளிவிபரங்களிலிருந்து ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினர் திசைதிருப்பப்பட்டால், உயர்சாதியினரைப் போலவே காலனித்துவ சட்டத்தின் நிர்வாக விதிகளுக்குள் தக்கவைக்கப்பட்டு அதிகாரச்சமநிலை தலைகீழாக மாற்றப்பட்டு அவர்களுக்கு அடிபணிய வைக்கப் படலாம்.

1901 மக்கள் தொகை கணக்கெடுப்பினை அடுத்து சில முஸ்லிம் அமைப்புகள் முஸ்லிம்களுக்கு தனி தேர்தல்களை கோரின. 1906ஆம் ஆண்டில் மற்றொரு முஸ்லிம் பிரதிநிதி அரசாங்க வேலை வாய்ப்பின் விகிதாசார பங்கு, நகராட்சி வாரியங்களில் பிரதிநிதித்துவம், நீதித்துறை பதவிகள் மற்றும் பல்கலைக்கழக செனட் மற்றும் சிண்டிகேட்களில் (Syndicates) இடங்கள் என, சுருக்கமாக அரசாங்க ஆதரவுள்ள முழு அமைப்பு வேண்டி அழுத்தம் கொடுத்தார்கள்.’ 1909இன் மின்டோ-மோர்லி சீர்திருத்தங்கள் (Minto-Morley Reforms) முஸ்லிம்களுக்கு தனித் தொகுதிகளை வழங்கியது. ‘முஸ்லிம்களுக்கு தமக்குள் மட்டுமே வாக்களிக்கும் ஒரு வாக்காளர் தொகுதியதை வழங்கியதன் மூலம், ஆதிக்க சாதி இந்து சமூகத்தால் நடத்தப்படும் அரசாங்கத்தில் ஆளப்படுவோம் என்று அஞ்சும் அனைத்து சமூகங்களின் மனங்களிலும் சிறுபான்மையினருக்கான வகுப்புவாத தேர்தல் தொகுதிகள் என்ற சிந்தனையை முன்கொண்டுவந்தது’ என்று எலினோர் ஜெலியட ‘டாக்டர் அம்பேத்கர் மற்றும் மஹர் இயக்கம்;’ என்ற கட்டுரையில் கூறினார்.

1911 மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு முன்னதாக காலனித்துவ அரசாங்கத்தின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் எட்வர்ட் ஆல்பர்ட் கெய்ட் ‘இந்து’ என்பதன் சரியான அடையாளங்களை நிர்ணயிக்கும் பிரச்சினையை தீர்க்க முடிவு செய்தார். பல்வேறு மாகாணங்களின் கண்காணிப்பாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டார்.

இந்த ஆவணம் ‘ஒருவர் உண்மையான இந்துவா இல்லையா என்பதை தீர்மானிக்க எடுக்கப்படும் அளவுகோல்களை’ வகுக்கும் ஒரு முயற்சியாகும். பிராமணர்களின் வேதங்களை மறுப்பவர்கள், வேதங்களின் அதிகாரத்தை மறுப்பவர்கள், இந்துக்கடவுள்களை வணங்காதவர்கள், பிராமணர்களை அர்ச்சகர்களாக அணுகாதவர்கள், உயர்சாதியினரால் தூய்மையற்றவர்களாக கருதப்பட்டவர்கள், கோவில்களில் அனுமதிக்கப்படாதவர்கள், இறந்தவர்களை அடக்கம் செய்பவர்கள், மாட்டிறைச்சி உண்பவர்கள் மற்றும் பசுக்களை வணங்காதவர்கள் போன்றவர்களை கொண்ட சாதிகளை கணக்கிடுமாறு கண்கானிப்பாளர்களை கேட்டுக்கொண்டது. 1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் வெளியிடப்பட்ட முடிவுகளின் படி, ஆதிக்க சாதிகள் குறிப்பாக பிராமணர்கள், பரவலாக பின்பற்றப்பட்ட சடங்குகளை பகிர்ந்து கொண்டாலும் ‘இந்து’ என அடையாளப்படுத்தப்பட்ட பெரும் மக்கள் தொகையுடன் ஒற்றுமைகள் குறைவாகவே இருந்தன என்பது தெளிவாகியது.

“மத்திய மாகாணங்களிலும் பெராரிலும் இந்துக்கள் என வகைப்படுத்தப்பட்டவர்களில் கால் பகுதியினர் பிராமணர்களின் மேலாதிக்கத்தையும் வேதங்களின் அதிகாரத்தையும் மறுக்கின்றனர்” என 1911 மக்கள் தொகை கணக்கெடுப்பு குறிப்பிடுகிறது. “நான்கில் ஒரு பகுதியினர் பெரிய இந்துக்கடவுள்களை வணங்குவதில்லை மற்றும் அவர்களுக்கு சிறந்த பிராமண பூசாரிகளின் சேவை வழங்கப்படுவதில்லை. மூன்றில் ஒரு பகுதியினர் கோவில்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறார்கள். நான்கில் ஒரு பகுதியினர் தீண்டத்தகாதவர்கள். ஏழில் ஒருவர் எப்போதும் அடக்கம் செய்பவர்கள். பாதிப்பேர் தகனம் செய்வதை கடமையாக கருதுவதில்லை. ஐந்தில் இரண்டு பங்கினர் மாட்டிறைச்சி உண்பவர்கள்” என்றும் குறிப்பிட்டது.

இந்த கண்டுபிடிப்புகள் காங்கிரஸ் முதல் ஆர்ய சமாஜ் வரை சனாதன தர்ம சபை வரை பல்வேறு ஆதிக்க-சாதி தலைவர்கள் மற்றும் குழுக்களை எதிர்ப்பின் மூலம் ஒன்றிணைத்தது.

1911ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆதிக்கசாதியினர் மீது ஏற்படுத்திய தாக்கத்தை அக்காலத்தைய குறிப்புகள் வர்ணித்தன. ‘தற்போது இந்து மதத்தை கிளர்த்தெழும் ஒரு கேள்வி இந்த தீண்டத்தகாத வகுப்பினர் இந்துக்களாக கருதகப்பட வேண்டுமா இல்லையா என்பதுதான்” என்று பிரிட்டிஷ் அரச ஊழியர் தாமஸ் ஹோல்டர்னஸ் 1912ஆம் ஆண்டு தனது நூலான ‘இந்திய மக்கள் மற்றும் அவர்களது பிரச்சினைகள்’ என்ற புத்தகத்தில் எழுதினார். மேலும் ‘பத்தாண்டுகளுக்கு முன்னர் பதில் மிகவும் எதிர்மறையாக இருந்திருக்கும். இப்போதும் நாட்டின் பழமைவாத உணர்வு அவர்களை ஒதுக்கிவைப்பதுதான்’ என எழுதினார்.

ஆர்ய சமாஜ் தலைவர் லாலா லாஜ்பட் ராய் 1915இல் சுற்றிக்கையின் விளைவுகளைப் பற்றி எழுதினார். உண்மையான ‘இந்துக்கள்’ உயர்சாதியினர் என்றும்; ‘இந்து’ அல்லாதவர்கள் உயர்சாதியினர் சொந்தம் கொண்டாடாதவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்களாக கருதப்படுபவர்கள் என்று லஜபதி ராய் வெளிப்படையாக கூறினார். “இந்துக்களால் அன்னியப்படுத்தப்பட்டு தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்டதுடன் அரசாங்கமும் அதன் ஆலோசகர்களும் இந்துக்கள் அல்ல என்று சொல்லப்பட்ட ஆறு கோடி மக்களின் விசுவாசத்தை இழக்கும் நிலையை ஒரு விடியலில் காசியின் கற்றறிந்த பண்டிதர்கள் உணர்ந்து கொண்டனர்.”

பெரும் எண்ணிக்கையிலான ஒடுக்கப்பட்ட மக்களின் விசுவாசத்தை இழப்பதில் லாஜ்பட் ராயின் கரிசனை, உயர்சாதியினர் ஒடுக்கப்பட்ட சாதியினருடன் பேணி வந்த இடைவெளியையும் அவர்களிடம் எதிர்பார்த்த நிபந்தனைகளுக்கு உட்பட்ட ‘விசுவாசம்’ போன்றவற்றை மூடிமறைக்கும் ‘இந்து’ என்ற திட்டத்தை வெளிக்கொண்டுவந்தது. எல்லாவற்றிலும் மேலாக இந்த விசுவாசம் வெறும் பொய்களால் கோரப்படுகிறது.

ஆதிக்கசாதியினரின் வெறித்தனமான போராட்டங்களால் நடை சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டது. லாஜ்பட் ராய் இதனை ‘மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையால் ஒடுக்கப்பட்ட மக்களை இந்து மதத்திலிருந்து அகற்றிவிடும் ஆபத்து நீக்கப்பட்டது’ என விபரித்தார். மார்டன் ரிவியூ இதழில் வெளியான கட்டுரை போன்ற சுற்றறிக்கைக்கான பதில்கள் ‘இந்து’ மதத்தின் புதிய அர்த்தத்தை வரையறுக்கின்றன. இந்த புதிய மதத்திற்கான அளவுகோல்களை இந்துக்கள் மட்டுமே வரையறுக்கலாம் என்று கட்டுரை ஆசிரியர் வலியுறுத்தினார். இது தெளிவாக உயர்சாதியினரை குறிக்கிறது. “பிராமணர்களும் மற்ற உயர்சாதி இந்துக்களும் ‘தீண்டத்தகாத’ சாதிகளுக்கு இந்து என்ற பட்டத்தை ஒருபோதும் மறுக்கவில்லை” என்று கூறி பிராமணக்கண்ணோட்டத்தில் இந்த அளவுகோல்களை பின்வருமாறு விளக்கினார்:

‘தற்போதுள்ள இந்து சமூகக் கட்டமைப்பில் சில உறுப்பினர்கள் உயர்ந்தவர்களாகவும் சிலர் தாழ்ந்தவர்களாகவும் சிலர் தீண்டத்தகாதவர்களாகவும் கருதப்படுவது இன்றியமையாதது என்பதை இந்து அல்லாதவர்கள் மறந்துவிடக் கூடாது. இருமுறை பிறக்காதவர்கள் அல்லது த்விஜஸ் (dvijas) அனைவரும் பிரம்மாவின் பாதங்களிலிருந்து தோன்றியவர்கள் என்று மரபுவழி பௌராணிக இந்துக்கள் நினைக்கின்றனர். மனித உடலில் பாதங்கள் மிகவும் பயனுள்ளவை ஆனால் வாழ்க்கைக்கு கட்டாயமற்றவை. ஒரு மனிதன் தனது கால்கள் அல்லது பாதங்கள் துண்டிக்கப்பட்ட பிறகும் வாழ்கிறான். ஆனால் ஒரு முட்டாள் தவிர வேறு யாரும் கால்கள் மனித உடலின் ஒரு பகுதியல்ல என்று சொல்லமாட்டார்கள். த்விஜஸ் (dvijas) அல்லாதவர்கள் இவ்வாறே இந்துக்களால் கணிக்கப்படுகிறார்கள்.

அதாவது உயர்சாதியினர் ‘இந்து’ சமூக அமைப்பின் அத்தியாவசியக் கூறுகளை உருவாக்குகிறார்கள். மேலும் மதத்தின் உரிமையாளர்களாக, ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆர்வம் காட்டாவிடினும் அவர்களுக்கு புதிய மதத்தை ‘வழங்கி’ ஒடுக்கப்பட்ட சாதியினரை தங்களுக்கு உரிமையாக்கிக் கொண்டுள்ளனர்.

நடை சுற்றறிக்கையை தொடர்ந்து ஆர்ய சமாஜ், ஒடுக்கப்பட்ட சாதியினர், தலித்துகள், முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களை தங்களது நவீன வைதீக மதத்திற்கு மாற்றுவதற்கு ‘ஷூத்தி’ என்ற இயக்கத்தின் மூலம் முயன்றது. இது உயர்சாதி மதத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதிகளின் நிலையை மீண்டும் நிலைநாட்டுகிறது. மேலும் அவர்களை சமத்துவமற்ற இணை-மதத்தவர்களாக கருதுவதற்கு முன் அவர்களை ‘தூய்மைப்படுத்த’ வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்துகிறது.

இரண்டு தசாப்தங்களாக பிரிட்டிஷ் நிர்வாகத்தை குழப்பிய கேள்விகள் சரியாக பதிலளிக்கப்படாமலேயே ஒதுக்கிவைக்கப்பட்டன. மேலும் உயர்சாதியினரின் நடை சுற்றறிக்கையை அடக்கிவைத்ததன் மூலம் ‘இந்து’ என்ற சொல் திறம்பட நிறுவப்பட்டு இறுதியில் பெறும்பான்மை மக்களை விளக்க பயன்படுத்தப்பட்டது. 1912ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையாளர் ஜே.டி மார்டன், “மத வகைப்படுத்தலில் இந்து என்பது தெளிவற்ற ஒரு வகையாகும். ஆனால் அது நிலைத்து இருக்கும். முதலில் இந்து என்பது என்பது ஒரு மதம் மட்டுமல்ல. இச்சொல் நாடு, இனம் மற்றும் ஒர் சமூக அமைப்பையும் குறிக்கிறது.” என்று வருத்தப்பட்டார். பின்னைய கருத்தின்படியான ‘இந்து’வின் தெளிவற்ற வெற்று எதிர்மறைக்கருத்து பெயரளவில் ஒற்றுமையை பிரதிநிதித்துவப்படுத்த அரசியல் காரணங்களுக்கு பயன்பட்டது. ஆனால் அதே சமயம் உண்மையில் சாதி அடிப்படையிலான பிரிவினை மட்டுமன்றி தீவிர சாதியப் போட்டியும் இருந்தது. இது, கறுப்பர்களை அன்றாட வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் வெள்ளையர்களுடன் சமூக ரீதியாக பிணைக்க வைப்பதால் அமெரிக்க அடிமைத்தனம் கறுப்பர்களின் மதம் என்று கூறுவது போலாகும்.

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிக்கான ஆயத்தங்கள் பல்வேறு வழிகளில் மக்களை ‘இந்து’ என அடையாளப்படுத்திக்கொள்ள வைத்தன. கென்னத் ஜோன்ஸ் என்ற அறிஞரின் கூற்றுப்படி 1931 மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது, “இந்து சபையின் பிரச்சாரம் பல மடங்கு விளைவுகளை ஏற்படுத்தியது. சில கச்சாரிகள் விருப்பத்துடன் இந்துக்களாக திரும்பினர். மற்றும் சிலர் அந்த வகையை ஏற்றுக்கொள்வதற்கு கணக்கீட்டாளர்களால் சம்மதிக்க வைக்கப்பட்டனர். மேலும் சில சமயங்களில் கணக்காளர்கள் அவர்களது அறியாமையை பயன்படுத்தி இந்துக்களாக பதிவு செய்ய வைத்தனர். 1941 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி ‘இந்துக்களின்’ எண்ணிக்கை பற்றிய கரிசனை அதிகரிக்கவே செய்தது. இந்து மகாசபாவின் அதிகாரபூர்வ இதழ் வாசகர்களுக்கு இவ்வாறு கூறியது, “ஒட்டுமொத்தமாக இந்து மதத்தின் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க நமது அரசியல் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் நம் அனைவரின் பரஸ்பர நலனுக்காகவும், கணக்கெடுப்பின் சமூக கண்ணோட்டத்தைப் பொறுத்தவரை நம்மை இந்துக்களாக பதிவு செய்துகொள்ள வேண்டும்.”

ஆக்டவியோ பாஸ், “ஒரு மகத்தான மனோதத்துவ சர்ப்பம் ஒன்றைப் போல இந்து மதம் மெதுவாக இடைவிடாமல் அந்நிய கலாச்சாரங்கள், கடவுள்கள், மொழிகள் மற்றும் நம்பிக்கைகளை ஜீரணிக்கிறது” என குறிப்பிட்டார். மக்கள் தொகை கணக்கெடுப்பை சுற்றியிருக்கும் உயர்சாதியினரின் திட்டமிட்ட சூழ்ச்சிகள், ‘இந்து மதம்’ என்பது ‘நிர்வாகம்’ மூலம் மக்களை இந்துக்களாக மாற்றக்கூடிய ஒரு அரசியல் சர்ப்பம் என்றும் இதன்மூலம் அது ஒரு மதமாற்ற மதம் இல்லை என்று தொடர்ந்து பாசாங்கு செய்வதைக் காட்டுகிறது.

காங்கிரஸின் கீழ் உயர்சாதியினர் அதிகாரத்தை தங்களுக்கு மாற்றிக்கொள்ள முயன்றனர். அரசியல், பொருளாதார மற்றும் சமூக சமத்துவக் கொள்கைளை அடிப்படையாகக் கொண்ட அரசியலமைப்பு ஜனநாயகத்தில் சாதி ஒழுங்கின் சமூகப்படிநிலை நிலைத்திருக்காது என்று அவர்கள் எதிர்வுகூறினார்கள். எனவே காலனித்துவ நிர்வாகத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் உயர்சாதியினரால் கடுமையான கண்டனத்தை சந்தித்தன. காங்கிரஸ் கூட்டணியின் கீழ் உயர்சாதி தலைவர்கள் காலனித்துவ சீர்திருத்தங்களுக்கு எதிராக போராட்டங்களை நடத்தினர். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களின் பெருகிவரும் கிளர்ச்சிகளையும் அவர்கள் எதிர்கொண்டனர்.

மதஆய்வு அறிஞர் ஜான் ஜாவோஸின் கூற்றுப்படி, “மேற்கிந்தியாவில் பிராமணர் மற்றும் பிராமணர் அல்லாத ஆதிக்க அமைப்புகளுக்கு இடையேயான சர்ச்சையின் மையமாக ‘பிரதிநிதித்துவம்’ வெளிப்படுகிறது. இந்த கட்டமைப்பிற்குள் ஒடுக்கப்பட்ட சாதி அணிதிரட்டல்கள் ஒரு இந்து மத அமைப்பை நோக்கிய கருத்தியல் முன்னேற்றங்களின் நியாயங்களை மறைமுகமாக சவால் செய்தது.”

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மேற்கிந்தியாவில் ஜாதி எதிர்ப்பு இயக்கம், பூலேவின் அறிவுசார் தலைமையின் கீழும், கோலாப்பூரின் மகாராஜாவான ஷாஹ{வின் ஆதரவோடும் பல ஒடுக்கப்பட்ட சாதி அமைப்புகளுடன் வலுப்பெற்று வந்தது. இந்த வளர்ந்து வரும் இயக்கம் ஒரு வலுவான ஜாதி எதிர்ப்பு சொற்பொழிவை நிறுவியதால் சமூக மற்றும் அரசியல் செல்வாக்கை பெற முயன்ற பிராமண அமைப்புகளிடமிருந்து ஆக்கிரமிப்பு எதிர்வினைகளை ஈர்த்தது. ‘இந்துத்துவா’ என்ற வார்த்தையை பயன்படுத்திய முதல் நபர்களில் ஒருவரான திலக் மற்றும் அவரை பின்பற்றுபவர்களுடன் கடுமையான மோதல்கள் எழுந்தன.

1920இகளில் பிராமணரல்லாத இயக்கமும் தேர்தல் வெற்றியைக் காணத் தொடங்கியது. எண்ணற்ற கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றும் வெளியீடுகள் ஒடுக்கப்பட்ட சாதியினரின் பெரும் அணிதிரட்டலுக்கு வழிவகுத்தன. முக்கியமான கல்வி மற்றும் சமூக நிவாரண நிறுவனங்களை நடத்தியது மட்டுமன்றி திலக்கினால் விளம்பரப்படுத்தப்பட்ட கணபதி விழாவை தங்களின் சொந்த சத்ரபதி திருவிழாவினால் முறியடித்தனர். பூனே நகராட்சியில் உள்ள பிராமண அமைப்புகள் மட்டுமன்றி நீதிமன்றங்களிலும் தெருவிலும் கூட பகிரங்கமாக மோதி வெற்றிகரமாக சவால் செய்தனர். சமூகவியலாளர் கெயில் ஓம்வெட் கருத்துப்படி இந்த மோதல்களின் விளைவாக ‘பிராமணரல்லாதவர்கள்’ மற்றும் ‘தேசியவாதிகள்’ இடையே கலவரங்கள் ஏற்பட்டதற்கான பதிவுகள் உள்ளன.

அம்பேத்கர் பூலேயை முன்னோடி வடிவமாக பார்த்தார். அவரை ‘நவீன இந்தியாவின் மிகச்சிறந்த சூத்திரன்: தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கு உயர்வகுப்பினருக்கு அடிமைப்பட்டுள்ள உண்மையை உணரவைத்து, அந்நிய ஆட்சியிலிருந்து விடுதலை பெறுவதை விட இந்தியாவிற்கு சமூக ஜனநாயகம் முக்கியமானது என்று உபதேசித்தவர்” என விபரித்தார். 1920 இல் ஷாஹ{வின் உதவியுடன் 29 வயதில் அவர் ‘மூக்நாயக்’ என்ற வார இதழை தொடங்கினார். அவர் இயக்கத்தில் இடையிடையே ஈடுபட்டாலும்; கூட 1920களில் சட்ட நிபுணராக தொடர்ந்தும் பணியாற்றினார். 1926இல், திலக்கின் மகன் உட்பட கேசரியில் திலக பிராமணர்களால் அவதூறு வழக்கு தொடரப்பட்டு பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்ட மூன்று பிராமணரல்லாத தலைவர்களை அவர் நீதிமன்றத்தில் ஆதரித்தார்.

ஒடுக்கப்பட்ட இயக்கங்களின் இந்த எழுச்சிக்கு மேல்சாதி குழுக்களின் ஆக்ரோஷமான எதிர்ப்பு, சாதி-கலப்பு மற்றும்; சமூகத்தின் மீதான அவர்களது பாரம்பரியமான ஆதிக்கத்தை இழக்கும் பீதியால் உந்தப்பட்டது. ‘ஒடுக்கப்பட்ட சாதி அணிதிரட்டல் இந்து அமைப்பின் சித்தாந்தத்தை அச்சுறுத்தும் ‘எதிரி’ போலானது’ என ஜாவோஸ் எழுதுகிறார். இந்துத்துவா இயக்கம் அரசியல் சூழ்ச்சிகள் மற்றும் சீர்திருத்தங்களின் மூலம் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஒரு வழியாகும். சமூகக் கோட்பாட்டாளர் ஐஜாஸ் அஹமத் எழுதுவது போல, “மஹாராஷ்டிராவில் பூலே அல்லது அம்பேத்கரின் கீழ் பிராமண எதிர்ப்பு இயக்கங்கள் தோன்றியதனால் பிராந்திய உயர்சாதினர் வெளிக்காட்டிய தீவிரமான எதிர்வினையே ஆர.எஸ்.எஸ் இனை முதலில் பிறப்பித்தது.” அவர்களின் சமூக மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல் அதிகரித்து வரும் காலகட்டத்தில்தான் உயர்சாதியினர் இந்து அடையாளத்தை நிலைநிறுத்துவதற்காக முஸ்லிம்களை எதிரியாக காட்டத் தொடங்கினர். இது நாட்டில் பிரிவினையை தவிர்க்க முடியாததாக மாற்றியது.

1930களில் மோகன்தாஸ் காந்தியின் புகழ் மற்றும் காலனித்துவ எதிர்ப்பு இயக்கம் பிராமணரல்லாத இயக்கத்திற்குள் ஒரு பிரிவினையை வழிவகுத்தது. சில பிரிவுகள் காங்கிரஸடன் இணைந்தன. இந்த இணைப்பு இல்லாமல் மும்பை மாகாண வெகுஜன அரசியலுக்கான ஈர்ப்பு காங்கிரஸக்கு கிடைத்திருக்காது.

குறிப்பாக ஒடுக்கப்பட்ட சாதிகளின் கிளர்ச்சிகளைக் கையாள்வதில் காந்தி தன் திறமையை நிரூபித்தார். ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் வேத கிரியைகளை நடத்தும் வகுப்பினருக்கும் இடையில் மத்தியஸ்தம் வகிப்பதன் மூலம் அவரால் சாதி எதிர்ப்பு இயக்கங்களை ‘சீர்படுத்த’ முடிந்தது. இனம் மற்றும் சாதி பற்றிய அவரது மேலாதிக்க கருத்துகள் மற்றும் ஒடுக்குமுறை சாதிய அமைப்புக்கான அவரது தெளிவான ஆதரவு போன்றவற்றை அவரது சர்வதேச புகழ் மறைக்க உதவியது. அந்த காலகட்டத்தில் காந்தியின் ஒரே சவாலாக அம்பேத்கர் வெளிப்பட்டார்.

1924ஆம் ஆண்டு கேரளாவில் ஒடுக்கப்பட்ட சாதியினர், கோவில்களின் கருவறையில் நுழைவது உட்பட அனைத்து பொது சாலைகளிலும் நடமாடும் உரிமை கோரி போராட்டத்தை தொடங்கினர்;. ஒடுக்கப்பட்ட சாதியினரின் இருப்பு மாசு’ எனக் கருதிய ஹிந்து புதுசாரிகள், ஈழவர்கள், தலித்துகள் மற்றும் பிற தாழ்த்தப்பட்ட சாதியினர் வைக்கம் நகரில் உள்ள ஒரு சிவன் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளை பயன்படுத்துவதை தடை செய்தனர். அந்த நேரத்தில் பிராமண எதிர்ப்பு இயக்கம் துணைக்கண்டத்தின் தெற்கில் வலுவாக இருந்தது. வைக்கம் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தபோது அயல் நாடான சென்னை மாகாணம் நீதிக்கட்சியின் கைகளில் இருநதது. காங்கிரஸக்கு அதன் சட்டபூர்வ தன்மையை தக்கவைத்துக் கொள்ள இயக்கத்தில் பங்கேற்பதை தவிர வேறு வழியில்லை.

காந்தி தன்னை இயக்கத்தின் தலைவராக நியமித்து உள்ளுர் உயர்சாதியினருடன் பேச்சுவார்த்தை நடத்தத் தொடங்கினார். ‘இந்துக்கள் அல்லாதவர்கள்’ இயக்கத்தின் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது என்று வலியுறுத்தி ஜார்ஜ் ஜோசப் போன்ற தலைவர்களை அதிலிருந்து விலகுமாறு கேட்டுக் கொண்டார். இதனால் இயக்கத்தின் பல மதக்கூட்டணியை முறியடித்தார்.

1927ஆம் ஆண்டில், மகாராஷ்டிராவில் மஹத் என்ற இடத்தில் உள்ள பொதுத் தொட்டியில் தண்ணீர் குடிக்க, ஆயிரக்கணக்கான தலித் மக்களுடன் அம்பேத்கர் ஒரு போராட்டத்தை நடத்தினார். இந்த நிகழ்வின் பின் கலவரங்கள் வெடித்து சீற்றம் கொண்ட உயர்சாதியினரின் கும்பல் வன்முறையில் ஈடுபட்டது. பிராமணர்கள் தொட்டியை ‘சுத்தப்படுத்த’ மந்திரங்கள், மாட்டு சாணம் மற்றும் மாட்டு சிறுநீரைப் பயன்படுத்தினர். இதற்கிடையில் அதே ஆண்டு காந்தி தனது ‘யங் இந்தியா’ இதழில் “வர்ணாஷ்ரம சட்டத்தின் கண்டுபிடிப்பு, உண்மையை தெரிந்து கொள்ள முடிவடையாத தேடலின் அற்புதமான முடிவு” என வர்ணித்தார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் அம்பேத்கர் இந்த இடத்தை மீண்டும் பார்வையிட முடிவு செய்தபோது உயர்சாதியினர் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல ஆண்டுகளின் பின்னர், மும்பை உயர் நீதிமன்றம் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு ஆதரவாக, பொதுத்தொட்டியில் தண்ணீர் குடிக்க அனுமதிக்காதது சட்ட விரோதமானது என தீர்ப்பளித்தது.

1930 மற்றும் 1932க்கு இடையில் காந்திக்கும் அம்பேத்கருக்கும் இடையிலான மோதலின் உச்சகட்டம் அடைந்த காலகட்டத்தில் இந்தியாவில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கான மூன்று வட்ட மேசை மகாநாடுகளை பிரிட்டிஷ் அரசாங்கம் நடத்தியது. அம்பேத்கர் முதல் மாநாட்டிலே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனித்தொகுதிகள் வழங்கப்படவேண்டும் என்று கோரினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளிநடப்பு செய்தது. ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான தனி வாக்காளர்கள் துணைக்கண்டத்தின் வரலாற்றில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கும். ஒடுக்கப்பட்ட சாதியினருக்குத் தனித் தேர்தல்கள் வேண்டும் என்றும் அவர்கள் மட்டுமே தங்கள் தலைவர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் அர்த்தப்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் காந்தி பிடிவாதமாக அந்தக் கோரிக்கையை எதிர்த்தார். 1932ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பிரதம மந்திரி ராம்சே மெக்டொனல்டுக்கு எழுதிய கடிதத்தில், “இந்து மதத்தை அழிக்க திட்டமிட்டு விஷ ஊசி போடப்பட்டதை நான் உணர்கிறேன்” என்று எழுதினார். ‘இந்து மதம்’ என்பதன் மூலம் காந்தி நிச்சயமாக ஒடுக்கப்பட்ட சாதியினரின் மீது உயர்சாதியினரின் ஆதிக்கத்தை, உண்மையில் சனாதன தர்மத்தை குறிப்பிட்டார். இது துணைக்கண்டத்தின் மக்களின் நித்தியமான பிரிவினையைக் குறிக்கிறது.

அதே ஆண்டு பத்திரிகைகளுக்கு அளித்த அறிக்கையில் தீண்டத்தகாதவர்கள் இந்து மதத்தில் இருக்க வேண்டிய மத அளவுகோல்கள் தனக்கு தெரியாது என்று காந்தி ஒப்புக்கொண்டார். ‘இந்து மதத்தில் நுட்பமான ஒன்று உள்ளது. முற்றிலும் வரையறுக்க முடியாதது. அது அவர்களை மீறியும் அதில் ஈர்க்கப்பட்டு இருத்திவைக்கிறது.’ இருப்பினும் ஆகஸ்ட் 1932இல் வல்லபாய் படேலுடனான உரையாடலில் காந்தி தனித்தேர்தல் தொகுதிகள் குறித்த தனது உண்மையான கருத்துகளை வெளிப்படுத்தினார். இந்த கோரிக்கை ;இரத்தம் சிந்துவதற்கு வழிவகுக்கும்’ என்று காந்தி கூறினார். “தீண்டத்தகாத குண்டர்கள் முஸ்லிம் போக்கிரிகளுடன் சேர்ந்து பொதுவான குறிக்கோள் ஒன்றை உருவாக்கி சாதி இந்துக்களை கொல்வார்கள்” என்றார்.

ஆங்கிலேயர்கள் தலித்துகளுக்கு தனித்தொகுதிகளை வழங்கிய பிறகு, காந்தி சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டல் விடுத்தார். அத்தகைய நிகழ்வின் பின்விளைவுகளை அஞ்சி அம்பேத்கர் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதன் விளைவாக காந்தி, மற்றும் ஒடுக்கப்பட்ட சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி அம்பேத்கர், மற்றும் உயர் சாதியினரைப் பிரதிநிதித்துவப்படுத்தி மதன் மோகன மாளவியா ஆகியவர்களுக்கு இடையே பூனா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. பூனா ஒப்பந்தம் பட்டியல் சாதி வேட்பாளர்களுக்கு தனித்தொகுதிகளுக்கு பதிலாக கூட்டுத்தொகுதியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை வழங்கியது. இதன் மூலம் முக்கிய அரசியல் கட்சிகள் இந்த ஆசனங்களில் தங்கள் கைக்கூலிகளை களமிறக்குவதன் மூலமும் உயர்சாதி வாக்குகளை கட்டுப்படுத்துவதன் மூலமும் வெற்றி பெறும் தொடர் நிகழ்வுகளை இந்திய தேர்தல் அரசியலில் ஆரம்பித்து வைத்தன.

காந்தியின் ஜாதி மேலான இரட்டைப் போக்கு தந்திரமானது. காந்தி ஆங்கில பத்திரிகைகளில் சாதி அமைப்புக்கு எதிராகவும், அவர் வெளியிட்ட குஜராத்தி பத்திரிகைகளில் சாதி அமைப்புக்கு ஆதரவாகவும் எழுதுவதாக அம்பேத்கர் 1955ஆம் ஆண்டு ஒரு நேர்காணலில் காந்தியை குற்றம்சாட்டினார். 1936ஆம் ஆண்டில். பூனா ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒடுக்கப்பட்ட மக்களின் துன்பங்களை போக்குவதற்கான தனது ஆதரவை ‘“The Ideal Bhangi’ என்ற கட்டுரையின் மூலம் வெளிப்படுத்தினார். அதில் தமது பரம்பரை பரம்பரையாக சாதித் தொழிலாக கருதப்படும் கூலித் தொழிலைக் கண்டிக்கும் மக்கள் அதைத் தங்களின் மிக உன்னதமான கடமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

‘எனது ஆதர்ச பாங்கிக்கு (Bhangi) மலம் மற்றும் சிறுநீரின் தரம் தெரியும். அவர் இவற்றை உன்னிப்பாக கண்காணித்து சம்பத்தப்பட்ட நபருக்கு தக்க சமயத்தில் எச்சரிப்பார். இதனால் அவர் தனது ஆய்வின் முடிவுகளை உரிய நேரத்தில் அறிவிப்பார். இது தொழில் முனைகள் பற்றிய அவரது அறிவியல் தெளிவை காட்டுகிறது. சிறிய கிராமங்கள் மற்றும் பெரிய நகரங்களில் மலத்தை அகற்றும் விடயங்களில் அவர் ஒரு அதிகாரியாக இருப்பார். மேலும் இந்ந விடயங்களில் அவரது ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் சமூகத்துக்கு இலவசமாக வழங்கப்படும். இங்குள்ள தரத்தை அடைவதற்கு தேவையான பொதுவான கல்வியை அவர் பெற்றிருப்பார் என்பதை குறிப்பிட்டு சொல்ல தேவையில்லை. அத்தகைய சிறந்த பாங்கி (Bhangi) தனது தொழிலில் இருந்து வாழ்வாதாரத்தை பெறும் போது அதை ஒரு புனிதமான கடமையாக மட்டுமே அணுகுவார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் அதில் இருந்து செல்வத்தை குவிப்பதை கனவு காண மாட்டார்.’

உ யர் சாதியினரின் கழிவுகளை சுத்தம் செய்வதில் எப்படி சிறந்து விளங்குவது என்றும் அதனால் மலம் அள்ளும் ‘விஞ்ஞானிகளாக’ மாறுவது என்றும் ‘பாங்கி’ (Bhangi) சாதி மக்களுக்கு அறிவித்துவதற்கு சமீபத்திய கல்வி முறையை பயன்படுத்துமாறு உயர்சாதியினரையும் காந்தி அறிவுத்தினார். காந்தியின் பார்வையில், பாங்கி (Bhangi) மக்கள் சாதி ஆக்கிரமிப்பிற்குள் மட்டுமே பூரணமடைவார்கள்.

1940களில் உயர்சாதியினரின் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்து மதம், அரசாங்க நடைமுறைகள் மூலம் ஒடுக்கப்பட்ட சாதி மக்களை அதன் கீழ் அடக்கிவைப்பதில் வெற்றி கண்டது. பெரும்பான்மையான ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் புதிய மதத்தின் நிலை மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி அறிந்திருக்கவில்லை. உயர்சாதியினர் முன்னிலைப்படுத்த விரும்பிய ஒரே பிரிவினை இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையேயான பிரிவினை ஆகும். இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவில் தங்கள் உரிமைகளை பாதுகாக்க முடியாது என்று முஸ்லிம்கள் வாதிட்டனர். பின்னணியில் பாகிஸ்தான் உருவாகிக் கொண்டிருந்தது.

திவ்யா துவேதி – இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தத்துவ எழுத்தாளர், இவர் ஷாஜ் மோகன்னுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஷாஜ் மோகன் – தத்துவம்,மீமெய்யியல், தொழிநுற்பம் மற்றும் அரசியல் ஆகிய பரப்புகளில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார். இவர் திவ்யா தவிவெடியுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஜே ரெகு – கேரளாவைச் சேர்ந்த அரசியல் கோட்பாட்டாளர். இவருடைய ஆய்வுப் புலமாக சாதி, அரசியல் கட்டமைப்புகளின் உருவாக்கம் இருக்கிறது. இவர் ஆரம்பகால இந்திய பெண்ணிய எழுத்துக்களை மலையாளத்துக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – நாஸிரா நஸ்ருதீன்

நாஸிரா நஸ்ருதீன் – ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளர். முராகாமி முதல் சில்வியா பிளாத் வரை இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இவரது சில மொழிபெயர்ப்புகள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.