‘பூமியில் சபிக்கப்பட்டவர்களின்’ பார்வையில் அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவின் அர்த்தம் என்ன?
– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ்
பெப்ரவரி 2025ல், டொனால்ட் ட்ரம்பின் நிர்வாக உத்தரவுகளின் பிரகாரம் அமெரிக்காவின் பன்முகத்தன்மை, சமத்துவம் மற்றும் சேர்த்துக் கொள்ளல் ஆகியவற்றின் முன்முயற்சிகளுக்கான ஆதரவைத் தடைசெய்த பிறகு, மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அமெரிக்க வளைகுடாவென மாற்றி, ‘அமெரிக்காவின் 250வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கான’ நிர்வாக உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கலை அறக்கட்டளை (NEA), வறுமையில் இருக்கும் சமூகங்களைச் சென்றடையும் திட்டங்களுக்கு ஆதரவளிக்கும் ஒரு மானியத் திட்டத்தை நீக்கியது. மேலும், வரவிருக்கும் அமெரிக்க சுதந்திரத்தின் 250வது ஆண்டு நிறைவை மையமாகக் கொண்ட பணிகளை ஆதரிப்பதற்கான அதன் முன்னுரிமையையும் மாற்றியது.
250வது ஆண்டு நிறைவைத் திட்டமிடுவதில் 2019 ஆம் ஆண்டு தொடக்கம் NEA மற்றும் மனிதநேயங்களுக்கான தேசிய அறக்கட்டளை இரண்டும் ஏற்கனவே செயல்பட்டு வந்தன. டிரம்பின் பதவியேற்புக்குப் பிறகு, சுதந்திரத்தின் 250ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுவதற்கும், அமெரிக்காவில் உரிமையற்ற சமூகங்கள் எதிர்கொள்ளும் சவால்களை நிவர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட முயற்சிகளில் இருக்கும் முதலீடுகளை திரும்பப் பெறுவதற்கும் இடையே நேரடி தொடர்பு உள்ளது என்ற விடயம் புதிதாகத் தோன்றினாலும் இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. மனிதநேயம் மற்றும் கலைகளில் கவனம் செலுத்தும் அரசு நிறுவனங்கள் பெரும்பாலும் புதிய உத்தரவுகளுக்கு ஏற்ப மாறிவிட்டன என்ற விடயம்தான் இந்த சூழலில் முக்கியமானது.
எனவே, இந்தக் கேள்வியைக் கேட்பதற்குப் பொருத்தமான தருணம் இதுவாகும்: அமெரிக்கப் பேரரசின் நிலங்களிலும், ஆட்சிப் பரப்புகளிலும், பூர்வீக இடஒதுக்கீடுகளிலும், இணைக்கப்படாத பிரதேசங்கள் மற்றும் காலனிகளிலும் வசிக்கும் (ஃபிரான்ஸ் ஃபனானின் வார்த்தைகளில் கூறுவதானால்…) ‘பூமியின் கண்டனத்திற்கு உள்ளான ஏதிலிகளுக்கு’ அமெரிக்காவின் 250வது ஆண்டு நிறைவு என்பதன் அர்த்தம் என்ன? ஐக்கிய அமெரிக்க குடியரசுகள் எனப்படும் USA தனக்கான அளவை மிஞ்சி ‘அமெரிக்கா’ எனப் பிரதிநிதித்துவம் செய்ததன் விளைவாக, அந்தப் பெயரில் ஞானஸ்நானம் பெற்ற நாடுகளில் வாழும் ஐரோப்பியர்கள் போன்ற ஏனைய அனைவருக்கும் அதற்கான திறந்த அழைப்பு உள்ளது. மேலும், அமெரிக்காவின் எல்லைகள்; அதன் உத்தியோகபூர்வ எல்லையை மீறி அமைந்திருக்கும் அதன் இராணுவ தளங்கள், மற்றும் அதன் இராணுவத் தலையீடுகள் உள்ள நிலப்பரப்புகள், உலகம் முழுவதும் அதன் செல்வாக்கின் அளவைக் கருத்தில் கொண்டு – இந்த அழைப்பு இந்த கிரகத்தில் உள்ள அனைவருக்கும் திறந்ததாக இருக்கும். குறிப்பாக, அமெரிக்க நிதி மற்றும் ஆயுதங்கள் வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத தீங்குகளை ஏற்படுத்திய அல்லது நேரடியாக ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடங்களில் வாழ்வோர். வெள்ளை மாளிகை, NEA மற்றும் NEH ஆகியவற்றின் உத்தரவுகளுக்கு எதிராக, கருத்தில் கொள்ள வேண்டிய கேள்விஇதுதான்: இவற்றுக்கெல்லாம் கீழே இருந்து ஆராயும்போது அமெரிக்க சுதந்திரத்தின் 250 வது பிறந்தநாளின் முக்கியத்துவம்தான் என்ன?
தீவிர இனக் கோட்பாட்டின் வழியான; ஒடுக்குதல், பாலினம் மற்றும் பாலியல் கோட்பாடுகள், பாலின பாத்திரங்கள் மற்றும் பாலியல் நடைமுறைகளின் இயல்பாக்கத்தை கேள்விக்குள்ளாக்குவதன் மூலம், வந்தேறுகுடி காலனித்துவம் மற்றும் உலகளாவிய காலனித்துவத்தை எதிர்க்கும் அறிவியல் வடிவங்கள் மற்றும் கருத்தாடல்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த கேள்விக்கான பதில்களை ஆராயும்போது இந்த பகுப்பாய்வு வடிவங்களை ஏன் நாங்கள் கருதுகிறோம் என்பதை உறுதிப்படுத்துவது மிகவும் முக்கியமானது.
அதே வேளை, இந்தப் பங்களிப்புகள் மனிதநேயம் மற்றும் அவற்றைத் தாங்கி நிற்கும் தாராளவாத நம்பிக்கையின் எல்லைகளுக்குள் இருக்கக்கூடாது என்பது முக்கியம். அதற்கு பதிலாக, நீண்ட வரலாறு மற்றும் சமகால வெளிப்பாடுகளுடன் கூடிய நிறுவனங்கள், சமூகங்கள் மற்றும் இயக்கங்களை இணைப்பதற்கு முயற்சி செய்தல் வேண்டும். அவை இருத்தலியல் சவால்களை எதிர்கொண்டு தாக்குப் பிடிக்கக் கூடியவையாகவும், சிந்தனையாற்றல் கொண்டவையாகவும், நவீன மற்றும் காலனித்துவ எதிர்பார்ப்புகளை வேதக் கட்டளைகள் போன்று நிறைவேற்றாத சுதந்திரத் தேட்டம் கொண்டவையாக இருப்பது அவசியம். இப்போது கையில் இருக்கும் பணி, விரிவாற்றலில் இருந்து வேறுபட்ட, எதிர்ப்பை விட பரந்த, போர்க் குணம் மிக்க ‘காலனீய நீக்கத்தை’ அவாவி நிற்றலாக இருக்கலாம்.
காலனித்துவ நீக்க சிந்தனையில் ஒரு பயிற்சியாக, மேற்கத்திய நவீனத்துவத்தைப் பற்றிய சரியான புரிதலுக்கு, ஐக்கிய அமெரிக்காவின்(USA) 250வது ஆண்டு நிறைவின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொள்வதும், அதை அமெரிக்காவைக் ‘கண்டுபிடித்த’ 500வது ஆண்டு நிறைவோடு தொடர்புபடுத்தி நோக்கும் அணுகுமுறையொன்றும் அவசியம் என நான் பரிந்துரைசெய்கிறேன்.
அமெரிக்கா ‘கண்டுபிடிக்கப்பட்டதன்’ 500வது ஆண்டுவிழா, இன்றைய நிலவரத்தில் மிகவும் சூழ்நிலைப் பொருத்தமானதாக உள்ளது என்பது, ஒன்றிணைந்த பூர்வீக மற்றும் கறுப்பின அமைப்புகளின் தொடர்ச்சியான பணிகளில் தெளிவாக உள்ளது. இந்த அமைப்புகளின் போராட்ட குணம் கொண்ட காலனித்துவ ஒழிப்பு சிந்தனை, அதன் அடியாக உருவான காலனித்துவ ஒழிப்புக் கோட்பாடு என்பவை பல்வேறு வகையான பகுப்பாய்வுகளை உருவாக்குதல், செம்மைப்படுத்துதல் மற்றும்/அல்லது அவற்றைப் பரப்புவதில் முக்கிய பங்கு வகித்தது என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். அமெரிக்காவின் படையெடுப்புகள் மற்றும் கண்டுபிடிப்புகளின் வரலாறுகளையும், ஐக்கிய அமெரிக்கா என்னும் தேசத்தின் அடித்தளம் மற்றும் அதன் பரவல் ஆகியவை ஒரு புறம் ஐரோப்பாவுடனான அதன் நெருக்கத்தையும், ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அவற்றின் கொள்கைகளின் இருப்பையும் வெளிப்படுத்துகிறது. அது போலவே அதன் மறுபக்கத்தில், பாலஸ்தீனத்தை காலனித்துவப் படுத்தி நசுக்கும் நவீன சியோனிசத் திட்டத்துக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான நெருக்கத்தையும் இருப்பையும் அவை வெளிப்படுத்தி நிற்கின்றன. காலனித்துவக் கொள்கை, அமெரிக்கக் கொள்கை மற்றும் நவீன காலனித்துவ சியோனிசக் கொள்கை ஆகிய இம்மூன்று கொள்கைகளையும் சுருக்கமாக நான் விளக்குகிறேன்.
மாபெரும் பேரிடரும் காலனித்துவக் கோட்பாட்டின் உருவாக்கமும்
அமெரிக்காவின் 500 வது ஆண்டுவிழாக் கொண்டாட்டங்களுக்கு தமது எதிர்ப்பை பதிவு செய்த பழங்குடி மற்றும் கறுப்பின அமைப்புகள், ‘அமெரிக்கவைக் கண்டுபிடித்தல்’ என்பதே, பெரியதோர் பேரழிவை விட எந்த வகையிலும் குறைவான ஒன்றல்ல; இன்று வரை அதன் பாதிப்பு உணரப்படுகின்றது என தெளிவுபடுத்துகின்றன.
‘கண்டுபிடிப்பு’ என்ற பெயரில் இடம்பெற்ற இந்தப் பெரும் பேரழிவிலும், மத்தியப் பாதையின் தொடக்கத்திலும் முக்கியமானது, சுய புரிதல், சமூக வகைப்பாடு மற்றும் இந்தக் கிரகத்தின் அமைப்பில் ஏற்படுத்தப்பட்ட புதிய காலனித்துவக் கொள்கையின் உருவாக்கம் ஆகும். இது வெற்றியாளர்களுக்கும் காலனித்துவப்படுத்தப்பட்ட மற்றும் அடிமைப்படுத்தப்பட்டவர் -களுக்கும் இடையிலான ‘தத்துவார்த்த வேறுபாட்டை’ அடிப்படையாகக் கொண்ட கடுமையான சுரண்டல் முறையை திணிப்பதற்கு, ‘இருப்பின் சங்கிலி’ (Great Chain of Being) என வழங்கப்படும் ஆதிக்க கிறிஸ்தவ உருவகத்தை, மனிதகுல நாசத்தை அடித்தளமாகக் கொண்ட கருத்தியல் தளத்தில் தொடர்வதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. ‘கண்டுபிடிப்பு’ என்ற பெரும் பேரழிவின் பின்னணியில், தோட்ட அமைப்பு மற்றும் மத்திய பாதை, ‘இருப்பின் சங்கிலி’ எனப்படும் மந்திரித்து விடப்பட்டதோர் உலகம், ஒரு புதிய கொள்கையால் இயக்கப்படும் ஒரு வகையான எரி நரகத்திற்கு வழிவகுத்தது: அந்த நரகம் தான் காலனித்துவக் கொள்கை.
மானிட சமூக வாழ்வின் அனைத்துப் பகுதிகளிலும் இன மற்றும் காலனித்துவ வேறுபாடுகளைத் திணிப்பதன் மூலம், காலனித்துவக் கொள்கையானது அதன் உள்ளாந்த இயல்பான மனிதகுலத்துக்கு நாசம் விளைவிப்பதை மறுபீடிப்பு முறையில் உருவாக்கியபடி உள்ளது. நில ஒதுக்கீட்டில் பாகுபாடு, தொழிலாளர் சுரண்டல், சனத்தொகைக் கட்டுப்பாட்டின் ஒரு மார்க்கமாக இன சுத்திகரிப்பில் ஈடுபடுதல் மற்றும் இனப்படுகொலைகள், வந்தேறுகுடி காலனித்துவத்தின் நூதனமான ஒடுக்குமுறை ஒழுங்குகள், பிரித்தெடுத்தல், பாலினத்தை திணித்தல் மற்றும் பாலினத்தை இழத்தல், அரசியலமைப்பில் ஒரு அடிப்படை அங்கமாக சித்திரவதை காணப்படுதல் ஆகியவை உள்ளிட்ட பல தீங்குகள் நுட்பமாக இவற்றில் உள்ளடங்கி இருப்பதோடு இவை தேசிய அரசுகளுக்குள்ளும், நாடுகளுக்கிடையிலும் நடைபெற்ற வண்ணம் இருக்கின்றன.
காலனித்துவ கொள்கை ஆதிக்க கலாச்சாரத்திலும் மேலாதிக்க நிறுவனங்களிலும் இலாவகமான முறையில் உட்பொதிந்திருக்கிறது. காலனித்துவத்தின் கீழ் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டவர்களின் மனதை இனரீதியாகத் தூண்டும்போது அதன் வெளிப்பாடும் மிகவும் திகிலூட்டும் விதத்தில் அமைந்திருக்கும். ஸ்டீவ் பிகோ இதனை இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அடக்குமுறைக்கு ஆளானவனின் மனம் தான் அடக்குமுறையாளனின் கையில் இருக்கும் வலிமையான ஆயுதம்”
கரீபியன் மற்றும் பிரான்சில் ஒரு கறுப்பினத்தைச்சேர்ந்த காலனித்துவத்தின் குடிமகான வாழ்ந்த ஃபிராண்ட்ஸ் ஃபனான் தனது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு இது குறித்து ‘கருப்பு தோல், வெள்ளை முகமூடிகள்’ என்ற விரிவானதொரு நூலை எழுதினார். Les damnés de la terre (The Wretched of the Earth) ‘பூமியில் சபிக்கப்பட்டோர்’ என்ற புத்தகத்தில் புதிய நாடுகளை தோற்றுவிக்கும் விடயத்தில் மனிதகுல விரோத காலனித்துவக் கோட்பாட்டுக்கு மீண்டும் உருகொடுத்து அதனை நிலைநிறுத்தும் ஆபத்து பற்றி நமக்கு எச்சரிக்கை விடுத்தார். துரதிர்ஷ்டவசமாக, தங்கள் சுதந்திரத்திற்காகப் போராடி தேசிய அரசுகளாக மாறியவை பெருமளவில், காலனித்துவக் கோட்பாட்டை எதிர்த்து நிற்பதற்குப் பதிலாக அதன் வழியிலேயே தமது ஆட்சியைத் தொடர்ந்தன. இவற்றில், குறிப்பாக ஐக்கிய அமெரிக்கா தனது காலனித்துவக் கோட்பாட்டைப் புதுப்பித்து, நவீன தேசிய அரசுகளை உருவாக்குவதில் அக்கோட்பாட்டை மையமானதாக மாற்றியமைத்த விடயத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது.
ஐக்கிய அமெரிக்காவின் காலனித்துவ கோட்பாடு
அமெரிக்காவின் ‘கண்டுபிடிப்பு’ மற்றும் அமெரிக்காவின் உருவாக்கம் ஆகியவற்றுக்கு இடையேயான தத்துவார்த்த மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து ஏதேனும் கேள்விகள் இருந்தால், 1823 ஆம் ஆண்டின் ஜான்சன் Vs மெகின்டோஷ் என்ற உச்சநீதிமன்ற வழக்கை ஆராய்வது போதுமானது. இதுவே ‘கண்டுபிடிப்பு கோட்பாட்டின்’ முதலாவது சட்ட முன்வரைவாக மாற்றம்பெற்றது. இந்த வழக்கின் பின்னணியில் வனைந்து புனையப்பட்ட ‘கண்டுபிடிப்பு கோட்பாடு’, அமெரிக்காவில் ‘கண்டுபிடிக்கப்பட்டதாக’ கருதப்படும் பழங்குடி மக்களின் நிலங்களின் மீது உரிமை கோருவதற்கான துணிகரமான ‘கிறிஸ்தவ நியாயங்களை’ப் பற்றிய போதுமான புரிதலை வழங்குகிறது.
பெரும்பான்மையானோரின் கருத்தில், தலைமை நீதிபதி ஜோன் மார்ஷல், “உரித்து அல்லது பாத்தியதை வென்றெடுக்கப்பட்டு, அது பலப்பிரயோகத்தின் வழியாக பராமரிக்கப்படுகிறது. வெற்றியாளர் அதன் வரம்புகளை நிர்ணயிக்கிறார்” என்று கூறினார். “ஒரு மக்கள்திரள் வசிக்கும் நாட்டைக் ‘கண்டுபிடித்ததை’ வெற்றியாக மாற்றுவது என்னும் பாசாங்கு, எவ்வளவு வரம்பு கடந்த ஒன்றாகத் தோற்றமளித்தாலும்; அந்தக் கொள்கை முதலில் வலியுறுத்தப்பட்டு, பின்னர் நிலைநிறுத்தப்பட்டு விட்டால்; ஒரு நாடு கைப்பற்றப்பட்டு கைப்பற்றியவரின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டால்; சமூகத்தில் பெரும் திரளானோரின் சொத்துக்கள் அதில் தோற்றம் பெற்றால், அதுவே அன் நாட்டின் சட்டமாகிறது, அதனை கேள்விக்குட்படுத்த முடியாது.”
இவ்வாறே, காலனித்துவக் கொள்கை என்பது ஐக்கிய அமெரிக்க இறையாண்மை வடிவத்தின் இதயம் எனலாம். ஐரோப்பிய பேரரசுகளின் வீழ்ச்சியைத் தடுத்து தக்கவைத்துக்கொள்வது மட்டுமல்லாமல், ஐரோப்பா உட்பட ஏனைய எல்லா இடங்களிலும் தேசிய அரசுகளை உருவாக்குவதற்கான மையமாக மாறும் காலனித்துவக் கொள்கையை ஒரு தேசிய அமைப்பின் கொள்கையாக வரித்துக்கொண்டு, மாற்றத்தை ஏற்படுத்துவதற்கானதோர் முன்மாதிரியாக அமெரிக்கா விரைவாக மாறியது. இந்த செயல்முறை அமெரிக்காவில் தொடங்கவில்லை. ஆனால், 1776 இல் ஐரோப்பிய முடியாட்சி ஒழுங்கிலிருந்து தீர்க்கமான விதத்தில் தன்னை விடுவித்துக் கொண்டது; மற்றும் காலனித்துவத்தின் பிடியில் இருந்த பிரதேசங்களிலேயே காலனித்துவ அமைப்பின் நுட்பமான ஆதிக்கக் கூறுகளை உள்ளடக்கிய ஒரு தேசிய அரசாக பரிணமித்தது என்பவற்றின் முக்கியத்தும் பாரியது. ஐக்கிய அமெரிக்காவின் விரைவான இந்த உருமாற்றத்தை அதன் சுதந்திரப் பிரகடனத்திற்கு 250 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கொள்கையின் வலுவான மறுசீரமைத்தல் மற்றும் அவற்றின் உறுதிப்பாடுகளைக் கருத்திற் கொண்டு, குறைத்து மதிப்பிடக்கூடாது.
அமெரிக்க காலனித்துவக் கொள்கை அல்லது அலாதியான அந்த ‘அமெரிக்கக் கொள்கையின்’ இருப்பு, ‘அமெரிக்கா’ எனும் அந்த பூலோக சுவனத்தை உருவாக்க ஒருங்கிணைந்த நிலங்களிலும், குறிப்பாக அமெரிக்காவில் உள்ள பூர்வீகர்களுக்கான இடஒதுக்கீடு போன்ற புவிசார் அரசியல் பிரதேசங்களிலும், குவாம், புவேர்ட்டோ ரிக்கோ, அமெரிக்கன் சமோவா மற்றும் அமெரிக்க வேர்ஜின் தீவுகளின் இணைக்கப்படாத பிரதேசங்கள், மற்றுமுள்ள அமெரிக்க காலனிகளிலும் தெளிவாகத் தெரிகிறது. பாலஸ்தீனத்தில் உள்ள காசா போன்ற இடங்களிலும் இவ்விடயம் வலுவாக உணரப்படுகிறது. தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி காஸாவை அமெரிக்காவின் ஒரு சொத்தாகவும், (துணை வெப்பமண்டல காலநிலை மற்றும் தாவரங்கள் கொண்ட இதமான கடலோரப் பகுதி) ‘மத்திய கிழக்கின் பாரியதோர் உல்லாசபுரி’ யாகவும் கற்பனை செய்து வைத்திருக்கிறார்.
வெள்ளை மாளிகையில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அடுத்ததாக டிரம்ப் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதும், சொல்லிவைத்தாற்போல், நெதன்யாகு நேர்மறையான முறையில் அதற்கு பதிலளித்ததும், இரு நாடுகளையும் இயக்கும் கொள்கைகளுக்கும் அவற்றின் தற்போதைய தலைமைக்கும் இடையிலான நெருக்கத்தின் அளவைக் குறிக்கின்றன.
நவீன மேற்கத்திய ‘நாகரிகத்தின் தொடர்ச்சியையும்’ அதன் காலனித்துவக் கொள்கையையும் முழுமையானதோர் பரிசீலனைக்கு உட்படுத்தும் போது; அதன் பல்வகையான ‘முன்னரங்கங்களை’ பகுப்பாய்வு செய்தல் வேண்டும். குறிப்பாக வலுவான பாதுகாப்பு மற்றும் எல்லைப் படைகள், பஞ்சமா பாதகங்களையும் கொண்டமைந்த பொம்மை ஆட்சிகள் மற்றும்/அல்லது பெரிய சிறைச்சாலைகள், யுத்த தொழில்துறை வளாகங்கள், ஆக்கிரமிப்பு இராணுவங்கள் மற்றும் அணு ஆயுதங்களைக் கொண்ட அரசு எந்திரங்களின் வலிமையோடு நிலைநிறுத்தப்படும் வந்தேறுகுடி காலனித்துவ செயற்பாட்டு மையங்கள்தான் அவை. இந்தப் பகுப்பாய்வுகளில் அமெரிக்கக் கொள்கைக்கும் நவீன/காலனித்துவ சியோனிசக் கொள்கைக்கும் இடையிலான உறவுகளைக் கருத்தில் கொள்வது முக்கியத்துவம் பெறுகிறது.
நவீன / காலனித்துவ சியோனிசக் கொள்கை
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வழிநடத்திய ஏகாதிபத்திய உருவாக்கக் கொள்கைகள் மற்றும் அமெரிக்க காலனித்துவக் கொள்கை உட்பட, காலனித்துவக் கொள்கையிலிருந்து வெளிப்படும் சமூக மற்றும் அரசியல் அமைப்பின் நடவடிக்கைகள் காரணமாக பாலஸ்தீனத்தின் இருப்பு கடுமையான கீழறுப்புக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. காலனித்துவக் கொள்கை மற்றும் அமெரிக்கக் கொள்கையின் விளைவுகளைப் புரிந்துகொள்வதற்கு பாலஸ்தீன விவகாரத்தை, ஒரு நிகழ்வினம் என்ற வகையில் மிகவும் பொருத்தமானதாக மாற்றுவது என்னவென்றால், பாலஸ்தீனியர்கள் அதற்கென வார்க்கப்பட்டு கிளைத்து வளர்ந்த தனித்துவமானதோர் காலனித்துவக் கொள்கை மற்றும் அமெரிக்கக் கொள்கையால்; அதாவது ‘நவீன/காலனித்துவ சியோனிசக் கொள்கை’யால் இயக்கப்படும் ஒரு அரசு எந்திரத்தின் நேரடிக் கட்டுப்பாடு மற்றும் ஆக்கிரமிப்பின் கீழ் வாழ்கின்றனர் என்பதாகும்.
நவீன/காலனித்துவ அரசியல் சியோனிசம், சியோனின் கருத்தை மேற்கத்திய நவீனத்துவம் மற்றும் நவீன தேசிய அரசின் உறுதிப்பாட்டுடன் இணைத்தது. இந்தச் செயல்பாட்டில், அது காலனித்துவக் கோட்பாட்டின் மையத்தில் அடிப்படை உலகப் படத்தை ஒருங்கிணைத்து, இந்தக் கொள்கையின் சொந்த முரண்பாட்டை உருவாக்கியது. நவீன அரசியல் சியோனிச திட்டத்தின் காலனித்துவ அடிப்படை தொடக்கத்திலிருந்தே தெளிவாக இருந்துவந்துள்ளது. அரசியல் சியோனிசத்தின் தந்தையான தியோடர் ஹெர்சலின் கருத்துக்களின் வழியாக இது நிரூபணமாகிறது. அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி செசில் ஜான் ரோட்ஸுக்கு எழுதிய கடிதத்தில் பாலஸ்தீனத்தில் குடியேறுவதற்கான தனது திட்டங்களை ‘காலனித்துவமான ஒன்று’ என்று குறிப்பிட்டார்.
1921 இல் ஜீவ் ஜபோடின்ஸ்கி தொடக்கம் 2004 இல் பென்னி மோரிஸ் வரை பல நவீன அரசியல் சியோனிஸ்டுகள், பாலஸ்தீனம் மற்றும் அமெரிக்கா ஆகியவை காலனித்துவத்துவப் படுத்தப்பட்டதை, இவ்விரண்டு காலனித்துவங்களுக்கும் இடையிலான தொடர்புகளை தெளிவு படுத்தியுள்ளனர். “வெள்ளையர் காலனித்துவம் சிவப்பு இந்தியர்களின் சம்மதத்தின் அடிப்படையில் நிபந்தனைக்குட்பட்டிருந்தால் அமெரிக்கா இன்றும் ஒரு வனாந்தரமாகவே இருந்திருக்கும்” என்றும் “பூர்வீக இந்தியர்கள் பூண்டோடு அழிக்கப்படாமல் ‘மாபெரும் அமெரிக்க ஜனநாயகம்’ உருவாக்கப்பட்டிருக்க முடியாது” என்றும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதன் விளைவுகள் இதைவிட இன்னும் தெளிவாக இருக்க முடியாது: காலனித்துவம் என்பது நாகரிகத்திற்கு சமம்; மேலும் நாகரிகம் பேரழிவை (இன அழிப்பு மற்றும் இனப்படுகொலை) மற்றும் சொத்துக்களை சூறையாடுவதை நியாயப்படுத்துகிறது. மேற்கத்திய நாகரிகத்தின் ‘முன்னரங்க எல்லையில்’ இருப்போர் என தம்மைக் கருதுவோரினால் உருவாக்கப்பட்ட அரசு கட்டுமானத் திட்டங்களில் குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த நவீன தேசிய அரசுகளின் உருவாக்கத்தில் பங்காற்றிய ஒரு அடிப்படை தர்க்கத்தை இங்கே காண்கிறோம்.
ஐரோப்பிய காலனிகளை உருவாக்கிய காலனித்துவக் கொள்கைக்கும், தனது முன்னாள் காலனியை நவீன/காலனித்துவ மற்றும் வந்தேறுகுடி காலனீயமாக மாற்றுவதில் இடையறாது செயல்படும் அமெரிக்கக் கொள்கைக்கும் இடையிலான பாலமாக நவீன தேசிய அரசு பற்றிய கருத்துருவம் உள்ளது. காலனித்துவக் கொள்கை மற்றும் அமெரிக்கக் கொள்கை ஆகிய இரண்டு கொள்கைகளாலும் போஷிக்கப்பட்டு, ஊட்டம் பெற்று வளர்ந்ததே நவீன அரசியல் சியோனிசம்; இது காலனித்துவத்திற்கும் இனப்படுகொலைக்கும் இடையிலான தொடர்புகளின் மறுஉருவாக்கத்திற்கு வழிவகுக்கிறது. அந்த வகையில், இஸ்ரேலில் உள்ள அரசியல் சியோனிசத் தலைமைக்கும் அமெரிக்காவில் உள்ள வெள்ளை மேலாதிக்க மற்றும் இனவெறி அரசாங்கத்திற்கும் இடையே ஒரு தீர்மானகரமான கூட்டணியை நாம் காண்பதில் ஆச்சரியமொன்றுமில்லை.
கடந்த 250 ஆண்டுகளில் நிறைய நடந்திருந்தாலும், நவீனத்துவம்/காலனித்துவம் மற்றும் அதன் அடிப்படை சட்டகத்தை தாங்கி நிற்கும் அம்சங்கள் அமெரிக்காவின் கொள்கைகளையும் அரசியலையும் தொடர்ந்து வடிவமைத்து செதுக்கியபடியே இருக்கின்றன. இன்றைய அமெரிக்கா நேற்றையதைப் போலவே, நிச்சயமாக நாளையும் தவிர்க்கவியலாததாக மாறியுள்ளது. நவீனத்துவம்/காலனித்துவத்தின் விளைபொருளான பேரழிவை (நக்பா) அதன் கொள்கைகளின் இனப்படுகொலை பரிமாணத்தை அம்பலப்படுத்துவதன் மூலமும், எல்லா இடங்களிலும் காலனித்துவ நீக்கத்திற்கான போராட்டங்களுக்கு பங்களிப்பதன் மூலமும் எதிர்கொள்வதுதான் நம் முன் இருக்கும் ஒரே தெரிவாகும்.
குறிப்புகள்
Isa Farfan, “NEA Throws Grant Program for Underserved Communities,” Hyperallergic. February 6, 2025. URL: https://hyperallergic.com/988542/nea-throws-out-grant-program-for-underserved-communities/
I do not have space here to develop a decolonial critique of the humanities, but part of it can be found in Nelson Maldonado-Torres, “Combative Decoloniality and the Abolition of the Humanities,” in The Routledge Companion to Postcolonial and Decolonial Literature, ed. by Laura Rebecca Brueck and Praseeda Gopinath (New York: Routledge, 2025): 33-52. Given the limited extension of this reflection, I include various references to other publications where I develop some of the ideas that are found here.
The notion of combative decoloniality is rooted in Fanon’s view of decolonization and it echoes the insurgent spirit of the “combative summer” of 2019 in the U.S. colony of Puerto Rico. See Fondation Frantz Fanon, “L’appel de la Fondation Frantz Fanon,” Le Centenaire Frantz Fanon, URL: https://centenaire.fondation-frantzfanon.com/le-centenaire-appel-a-projets/; Mireille Fanon Mendès France and Nelson Maldonado-Torres, “For a Combative Decoloniality Sixty Years after Fanon’s Death: An Invitation from the Frantz Fanon,” Fondation Frantz Fanon, November 30, 2021, URL: https://fondation-frantzfanon.com/for-a-combative-decoloniality-sixty-years-after-fanons-death-an-invitation-from-the-frantz-fanon-foundation/; Nelson Maldonado-Torres, “Liberation Philosophy and the Search for Combative Decoloniality: A Fanonian Approach,” in Struggles for Liberation in Abya Yala, ed. by Luis Rubén Díaz Cepeda and Ernesto Rosen Velásquez (Hoboken: Wiley-Blackwell, 2024): 11-28, URL:https://media.wiley.com/product_data/excerpt/3X/13941812/139418123X-36.pdf; Nelson Maldonado-Torres, “Palestine, the War Against Decolonization, and Combative Decoloniality,” in The SAGE Handbook of Decolonial Theory, ed. Jairo Fúnez-Flores, et. al. (London: SAGE publications, forthcoming); Zandi Radebe, and Nelson Maldonado-Torres, “Combative Decoloniality and the BlackHouse Paradigm of Knowledge, Creation and Action,” in Knowing-Unknowing: African Studies at the Crossroads, edited by Katharina Schramm and Sabelo Ndlovu-Gatsheni, 281-305 (Leiden: Brill, 2024): 281-305, URL: https://brill.com/display/book/9789004701441/BP000023.xml For analysis of the “verano combativo” (combative summer) in Puerto Rico see Joaquín Villanueva and Marisol LeBrón, “The Decolonial Geographies of Puerto Rico’s 2019 Summer Protests: A Forum,” Society and Space 41.4 (2020), URL: https://www.societyandspace.org/forums/the-decolonial-geographies-of-puerto-ricos-2019-summer-protests-a-forum
Osvaldo León, “La campana 500 Años de Resistencia: 30 años de una iniciativa pionera,” Pressenza. 2022. URL: https://www.pressenza.com/es/2022/10/la-campana-500-anos-de-resistencia-30-anos-de-una-iniciativa-pionera/
For an elaboration of this point see Nelson Maldonado-Torres, “Aníbal Quijano and the Decolonial Turn, “ Theory, Culture, and Society. Online First. 2025. 1-9.
See Nelson Maldonado-Torres, “Religion, Conquest, and Race in the Foundations of the Modern/Colonial World,” Journal of the American Academy of Religion 82.3: 636-665.
For an expanded account see Nelson Maldonado-Torres, “Outline of Ten Theses on Coloniality and Decoloniality,” Frantz Fanon Foundation. October 23, 2016. URL: https://fondation-frantzfanon.com/outline-of-ten-theses-on-coloniality-and-decoloniality/ For a comprehensive analysis of the coloniality of gender see María Lugones, “Heterosexualism and the Colonial/Modern Gender System,” Hypatia (2007) 22.1: 186-209; María Lugones, “Toward a Decolonial Feminism,” Hypatia 25.4 (2010): 742-759. See also Paula Gunn Allen, The Sacred Hoop: Recovering the Feminine in American Indian Traditions (Boston: Beacon Press: 1986);Hortense Spillers, Black, White, and in Color: Essays on American Literature and Culture (Chicago: University of Chicago Press, 2003); Oyèrónké Oyěwùmí, The Invention of Women: Making an African Sense of Western Gender Discourses (Minneapolis: University of Minnesota Press); Catherine Walsh, Rising Up, Living On: Re-Existences, Sowings, and Decolonial Cracks (Durham: Duke University Press, 2023); and Yuderkys Espinosa-Miñoso, María Lugones, and Nelson Maldonado-Torres, eds. Decolonial Feminism in Abya Yala: Caribbean, Meso, and South American Contributions and Challenges (Lanham: Rowman & Littlefield, 2022).
Steve Biko, I Write What I Like (Johannnesburg: Picador Africa, 2004): 74.
Frantz Fanon, Black Skin, White Masks, trans. Richard Philcox (New York: Grove Press, 2008); Frantz Fanon, The Wretched of the Earth, trans. Richard Philcox (New York: Grove Press, 2004.
See Betty Lyons and Adam D.J. Brett, “However, Extravagant the Pretensions of Johnson v. M’Intosch,” Canopy Forum, March 23, 2023. URL: https://canopyforum.org/2023/03/23/however-extravagant-the-pretensions-of-johnson-v-mintosh/ See also the website for the “Doctrine of Discovery Project” on “The Religious Origins of White Supremacy: Johnson v. M’Intosh and the Doctrine of Christian Discovery” (https://doctrineofdiscovery.org).
The Palestinian scholar Hatem Bazian wrote a book in conversation with Herzl’s expression. See Hatem Bazian, Palestine, “…it is something colonial” (The Hague: Amrit Publishers, 2016).
Robert Weltsch, “A Tragedy of Leadership (Chaim Weizmann and the Zionist Movement),” Jewish Social Studies 13.3 (1951): 220; Ari Shavit, “An Interview with Benny Morris,” Counterpunch, Jan. 16, 2004, URL: https://www.counterpunch.org/2004/01/16/an-interview-with-benny-morris/; see also Bazian’s comments on the quote from Morris in Bazian, Palestine, 210.
நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் (Nelson Maldonado-Torres) University of Connecticutடீல் தத்துவ பேராசிரியராக இருக்கிறார். இவருடைய ஆய்வுப் பரப்பாக இருப்பது நவீனத்துவம்/காலனித்துவம் மற்றும் காலனித்துவ நீக்கம், ஆப்பிரிக்கானா தத்துவம், கரீபியன், லத்தீன் அமெரிக்க தத்துவம், மேலும் தத்துவரீதியாக இனம், மதம் சார்ந்த கருத்தியல்களையும் ஆய்வுக்கு உற்படுத்தி வருவதுடன் விடுதலை நெறிகள் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் Against War: Views from the Underside of Modernity என்ற புத்தகத்தையும் பலவேறு ஆய்வு கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி