சித்தார்த் ஷங்கர்

பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நிகழ்ந்த கொடூரமான தாக்குதலின் பின்னர், காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலாத்துறையை மீட்டெடுப்பதற்கும் பாதுகாப்பதற்குமான கோரிக்கை ஒருமனதாக எழுந்துள்ளது. பிரபல பாலிவுட் மற்றும் மராத்தி நடிகரான அதுல் குல்கர்னி, பஹல்காமிற்கு விஜயம் செய்து, சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட்டு, செய்தி நேர்காணல்களை பதிவு செய்து, சுற்றுலாப் பயணிகள் அச்சுறுத்தலுக்கு அடிபணிய வேண்டாம் எனவும், தொடர்ந்தும் விடுமுறைக்காக காஷ்மீருக்கு வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரது அழைப்பில் காஷ்மீர் ஹமாரா ஹே “காஷ்மீர் எங்களுடையது” என்ற பிரகடனம் பலமாக ஒலித்தது. அதில்தான் பிரச்சினை இருக்கிறது! நீண்ட காலமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் சுற்றுலா என்பது அமைதி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான ஒரு வழியாக கூறி  விற்கப்பட்டுவருகிறது. இருப்பினும், இவ்விடயம் பார்வைகளை எட்டுவதை விடவும் அதிகமானவற்றை தன்னகத்தே கொண்டுள்ளது.

காஷ்மீரில் சுற்றுலா என்பது ஆழமான அரசியல் சார்ந்தது. இது அமைதியை அளவிடுவதற்கான காற்றழுத்தமானி அல்ல; இது போருக்கானதோர் பரப்புரைக் கருவி. நீண்ட காலமாக இராணுவம், ஊடகங்கள் மற்றும் சட்டமியற்றும் வழிவகைகளின் கட்டுப்பாட்டில் இருந்த காஷ்மீர், ஒரு பயண இலக்குக்கான இடமாக விற்கப்பட்டிருக்கிறது; உண்மையில் – அங்கு வசிக்கும் மக்கள் காஷ்மீர் அல்லாதவர்களின் சாவகாசமான இன்பங்களுக்காக செயல்திறனோடு ஒரு நிகழ்ச்சியை நடாத்திக் காட்டி அதன் முடிவில் மறைந்து போக வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

சுற்றுலா என்பது பார்வைகள், அனுமதிகள் மற்றும் மௌனங்களின் ஒரு இறுகிய அமைப்பாகும் – மேலும் காலனித்துவப்படுத்தப்பட்ட அல்லது அரசியல் ரீதியாகக் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில், அது ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாக மாறுகிறது. இது புதியதல்ல. காலனித்துவ ஆட்சிகள் பல நூற்றாண்டுகளாக சுற்றுலாவை பொதுமக்களின் கருத்தை சாந்தப்படுத்தவும், தாம் கையகப்படுத்தி இருப்பவற்றை உறுதிப்படுத்தவும், நிலத்தையும் கலாச்சாரத்தையும் பண்டங்களாக மாற்றுவதற்கும் பயன்படுத்துகின்றன. பிரெஞ்சு அல்ஜீரியாவில், காலனித்துவ அதிகாரிகள் சுற்றுலாப் பயணிகளுக்காக பாலைவன பயணத்தடங்களை உருவாக்கி, காலனித்துவ எதிர்ப்புப் போராட்டத்திலிருந்து ‘சுத்திகரிக்கப்பட்ட’ நிலப்பரப்புகளை அவர்களுக்காக வழங்கினர். ஐக்கிய அமெரிக்காவில், பூர்வீக அமெரிக்க நிலங்கள் ‘தீண்டப்படாத விழுத்தூய்மை கொண்ட’ வனப்பகுதிகளாக மாற்றப்பட்டன. தேசிய பூங்காக்களை உருவாக்குவதற்காக பூர்வீக சமூகங்களை அங்கிருந்து வெளியேற்றினர். பாலஸ்தீனத்தில், பாலஸ்தீனர்களின் இருப்பைத் தவிர்க்கும் அல்லது அழிக்கும் சுற்றுலாத் தலங்களை இஸ்ரேல் உருவாக்கியுள்ளது; டெல் அவிவ் கடற்கரைகள், மேற்குக் கரையில் உள்ள சாக்கடல் ஓய்விடங்கள், மற்றும் அவற்றுக்கான பிரசுரங்களில் இந்த ஆக்கிரமிப்பை மறைப்பதற்காக ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட புவியியல் அங்கு கட்டமைக்கப்பட்டிருக்கிறது.

ஏகாதிபத்தியத்தை சுத்தப்படுத்தி வெள்ளையடிப்பதற்கு சுற்றுலா நீண்ட காலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த செயன்முறையில் பின் காலனித்துவ நாடுகள் காலனித்துவ படிநிலைகளைப் பிரதிபலிக்கும் உலகளாவிய சுற்றுலாப் பொருளாதாரங்களைச் சார்ந்து இருக்கின்றன. அதேவேளை, உள்ளூர் மக்களை செல்வந்தர்களான வெளியாட்களின் உல்லாச ஓய்வுக்காக செயலற்ற விருந்தினர்களாக மாற்றும் கைங்கரியமும் இடம்பெறுகிறது. இந்தச் சார்பு நிலைதான் பெரும்பாலும் உண்மையான விடுதலையைத் தடுக்கிறது. சுற்றுலாவானது மக்களின் சமத்துவத்திற்காகக் கட்டமைக்கப்படவில்லை; அது நுகர்வுக்காகக் கட்டமைக்கப்படுகிறது. அங்கு நுகரப்படுவது வெறும் இடம் மாத்திரமல்ல, அமைதி! அதுவே நுகர்வுப் பண்டம் ஆகிறது.

இந்த முறைமை நீண்ட காலமாக காஷ்மீரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலேயே, ஆங்கிலேயர்கள் காஷ்மீரை ஒரு பின்னடைவுப் பிரதேசமாக அடையாளப்படுத்தினர். டோக்ரா ஆட்சியின் கீழ் பிரிட்டிஷ் அதிகாரிகள் நிலத்தை சொந்தமாக வைத்திருப்பதற்கு சட்டபூர்வமாக தடை விதித்ததன் காரணமாக, அதே சட்டத்தின் ஓட்டை களினூடு புகுந்து அவர்கள் படகு வீடுகளைக் கண்டுபிடித்தனர். மிதக்கும் சொத்தை சட்டத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, இது வெறும் சுற்றுலாவுக்கான கண்டுபிடிப்பு மாத்திரமல்ல! அது இடஞ்சார்ந்த காலனித்துவம். காஷ்மீர் ஏகாதிபத்தியத்தின் ஓய்வெடுக்கும் உல்லாச தளமாகவே பரிசீலனைக்கு உட்பட்டதோடு அது காலனித்துவத்தின் கீழிருக்கும் சனங்களால் அணுகக்கூடியது. ஆனால், காஷ்மீரின் சொந்த மக்களுக்கு அந்நியமானது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய, இந்திய அரசு இதனை தனக்கான மரபுரிமையாக கட்டமைத்து அதனைத் தீவிரப்படுத்தியது. 60கள் மற்றும் 70களில் வெளிவந்த காஷ்மீர் கி காலி, ஜுங்கிலீ மற்றும் ஜப் ஜப் பூல் கில் போன்ற பாலிவுட் திரைப்படங்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கை, யதார்த்தத்தில் ஒரு சிக்கலான வாழ்வியலைக் கொண்ட பிரதேசமாக அன்றி, பாலினங்களது காதல் சொர்க்கபுரியாக மற்றும் கற்பனைத் தேசபக்தியின் உறைவிடமாக சராசரி இந்தியர்களின் மனதில் பதியவைத்தன. காஷ்மீரிகள் அதில் காட்டப்பட்டால், கவர்ச்சியான வழிகாட்டிகளாக அல்லது கவனமாகக் கடந்து செல்லத்தக்க அச்சுறுத்தல்களாகவே நடித்தனர். அந்தப் பிராந்தியத்தின் சுயாட்சிக்கான அரசியல் கோரிக்கைகள், காஷ்மீரின் சுயநிர்ணயத்திற்கான நியாயங்கள் ஆகியவை அந்த சினிமாவின் சட்டகத்திற்கு வெளியே துடைத்தெறியப்பட்டன. இந்த வகைப்பட்ட ‘தடமழிப்பு சினிமா’ ஒரு அரசியல் நோக்கத்திற்கு நன்றாகவே உதவியது: அதுதான் ‘பியூட்டிபுல் காஷ்மீர்’! அதுவே இந்தியா.

‘காஷ்மீரை காலனித்துவப் படுத்துதல்: இந்திய ஆக்கிரமிப்பின் கீழ் அரச நிர்மாணம்’ என்ற நூலின் ஆசிரியரான ஹப்fசா கஞ்வால் ‘ஜூயிஷ் கரன்ட்’ சஞ்சிகைக்கு வழங்கிய பேட்டியில் “50 மற்றும் 60களில் இந்தியாவின் மிகவும் விரும்பத்தக்க சுற்றுலாத் தலமாக காஷ்மீர் நிலைநிறுத்தப்பட்டது” என்கிறார். காலனித்துவத்துக்கு ஆட்பட்டிருக்கும் ஒரு பிரதேசம் சுற்றுலாவுக்கான ஈர்ப்புத் தலமாக இருப்பதன் அர்த்தம் என்ன? இதன் பொருள் காலனித்துவ சக்தி அந்த இடத்தின் மீதும் அதன் மக்கள் மீதும் ஒரு விருப்பத்தை உருவாக்குகிறது; அதே நேரத்தில் அந்த இடத்தை அதன் சொந்த விதிமுறைகளின்படி வரையறை செய்கிறது. இந்திய சுற்றுலா கையேடுகள் முதல் பாலிவுட் சினிமா வரையிலான வெளியீடுகள் அனைத்திலும், டெல்லி அல்லது பம்பாயில் உள்ள நெருக்கடியான பெருநகர வாழ்க்கையிலிருந்து வெளியேறி, அமைதி மற்றும் உல்லாசத்தை அனுபவிப்பதற்கு உகந்த மலைகள், ஏரிகள், படகுவீடுகள் போன்றவற்றின் பூமியாக காஷ்மீர் காட்டப்பட்டது. இந்திய சினிமாவில் நாயகனும் நாயகியும் காதல்வயப்படுவது காஷ்மீரில் தான். இதுபோன்ற சித்தரிப்புகள் தொடராக மீட்டுருவாக்கம் செய்யப்பட்டதன் விளைவாக காஷ்மீரை இந்தியர்கள் வலுவாக அடையாளம் காண முற்பட்டு, இறுதியில் அதனை உரிமை கோரவும் உதவியது. அறிஞர் அனன்யா ஜஹானாரா கபீர் ‘ஆசையின் பிரதேசம்’ என்று அழைக்கும் விதமாக காஷ்மீர் மாறியதற்கான காரணங்களில் இதுவும் ஒன்றாகும்.

சமகாலத்தில் காஷ்மீர் ‘சுற்றுலாத்துறையின் மறுஉற்பத்தி’ மிகவும் நூதனமான விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசாங்கம் 2019ம் ஆண்டில் அரசியலமைப்பின் 370 வது பிரிவை ரத்து செய்ததைத் தொடர்ந்து, அதன் அரை தன்னாட்சி அந்தஸ்தையும் பிராந்தியத்திலிருந்து பறித்தது. தகவல்தொடர்பு இருட்டடிப்பை விதித்து, அரசியல் தலைவர்களை சிறையில் அடைத்ததோடு பள்ளத்தாக்கை கூடுதல் இராணுவப் படைகளின் வெள்ளத்தில் மூழ்கடித்தது. இந்த அடக்குமுறையை உலகம் கேள்வி கேட்கத் தொடங்கியபோது, ​​அரசாங்கம் ஒரு புதிய பிரச்சாரத்தைத் தொடங்கியது: சரிந்துபோன அரசாங்கத்தின் இமேஜை தூக்கி நிறுத்துவதற்காக… சுற்றுலா! துலிப் திருவிழா போன்ற அரசு ஆதரவு நிகழ்வுகள் ஸ்ரீநகரில் இராணுவ துல்லியத்துடன் ஊதிப்பெருப்பிக்கப்பட்டன. ட்ரோன் ஷாட்கள் மற்றும் தேசியவாத ஒலிப்பதிவுகளோடு பாலிவுட் திரும்பிவந்தது. செல்வாக்கு மிக்கவர்கள் விமானத்தில் வந்தனர். G20 கூட்டங்கள் அரங்கேற்றப்பட்டன. ஏப்ரல் 2023ல், பாப் ஐகான் தில்ஜித் டோசன்ஜ், அழகுபடுத்தப்பட்ட தோட்டங்களுக்கு முன்னால், பாரம்பரிய உடையில் சிரித்தபடி காஷ்மீரிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ரீல்களை வெளியிட்டார். மேற்படி ரீல்களில் இடம் பெறாதவை: சமூக ஊடக இடுகைகளுக்காக சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தி(UAPA)ன் கீழ் தடுத்து வைக்கப்பட்ட பொதுமக்கள், அல்லது ஸ்ரீநகரின் நகர மையத்தில் தினசரி இடம்பெற்று வரும் ஒடுக்குமுறை, அல்லது காஷ்மீரின் ஊடகங்கள் மீதான ஒடுக்குமுறை. இது தீங்கற்ற ஒன்றல்ல. இது பரப்புரைக்கான போர்.

சுற்றுலா ‘இயல்புநிலை’யை உற்பத்தி செய்வதற்கான ஒரு வழிமுறையாக மாறுகிறது. இது தேசிய நேயர்களிடமும் – சர்வதேச நோக்குனர்களிடமும் ‘எல்லாம் சுபம்’ அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்று கூறுகிறது. எந்த மோதலும் இல்லை, கலாச்சாரம் மட்டுமே. முற்றுகை இல்லை, குங்குமப்பூ மட்டுமே. எந்தவொரு உரிமையற்ற குடிமக்களும் இல்லை, நன்றியுள்ள புரவலர்கள் மாத்திரமே என்கிறது! கல்விமான் ரபீக் அஹமது தனது ‘பஹல்காம் சுற்றுலாவின் இனவியல் ஆய்வு’ (2022) எனும் ஆய்வு ஆக்கத்தில், “காஷ்மீரிகள் பொருளாதார ரீதியாக மட்டும் ஓரங்கட்டப்படவில்லை. ஆனால், கட்டமைப்பு ரீதியாகவும் வாயடக்கப்பட்டு உள்ளனர்” என குறிப்பிடுவதோடு இந்நிலைமையை ‘குறியீட்டு வன்முறைக்கான களம்’ என்கிறார். சுற்றுலா ஏற்பாட்டாளர்கள், ஹோட்டல் உரிமங்கள் மற்றும் ஒழுங்குமுறை அனுமதிகள் ஆகியவை வெளியாட்களுக்கு ஏறுமாறான வாய்ப்புகளை வழங்கிப் பயனளிக்கின்றன. அதே வேளை உள்ளூர்வாசிகள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் பெறும் தொழிலாளர் பணிகளுக்கென மட்டுப்படுத்தப்படுகின்றனர். காஷ்மீரில் சுற்றுலா சமத்துவத்தை உருவாக்கவில்லை. அது அதிகாரப் படிநிலையை மீள் உற்பத்தி செய்கிறது.

ரபீக் அகமது கண்டறிந்தவை வெறும் துணுக்குக் கதைகள் அல்ல. 2019க்குப் பின்னரான காஷ்மீரின் பெரியதோர் பொருளாதார யதார்த்தத்தை அவை பிரதிபலிக்கின்றன. 2022 இல் 2 மில்லியனுக்கும் அதிகமான வருகையாளர்களோடு, சுற்றுலாவுக்காக வந்தோர் எண்ணிக்கை சாதனை அளவை எட்டியிருந்த போதிலும், வேலையின்மை இந்தப் பிரதேசத்தில் இந்தியாவிலேயே மிக உயர்ந்த அளவில் உள்ளது. இந்திய பொருளாதாரக் கண்காணிப்பு மையம் (CMIE) வெளியிட்ட அறிக்கை ஜம்மு மற்றும் காஷ்மீரில் வேலையற்றோர் விகிதாசாரம் மார்ச் 2023ல் 23.1% எனத் தெரிவிக்கிறது; தேசிய சராசரியில் இது மும்மடங்கு ஆகிறது. 370வது பிரிவை ரத்து செய்ததன் பிற்பாடு, வெளியூர் முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு மற்றும் அவர்களுக்கு முன்னுரிமை அளிப்பதற்கென, பெரும்பாலும் உள்ளூர் மக்களது நில உரிமையில் கைவைப்பதன் ஊடாக, பெரிய அளவிலான நில மறு ஒதுக்கீடுகள் மற்றும் அதற்கான முதலீட்டு கொள்கை மாற்றம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இது காஷ்மீர் மற்றும் காஷ்மீரிகளின் நலனுக்காகவே அரசியலமைப்பின் 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது என்ற முற்றுமுழுதான போலித்தனத்தையும் அம்பலப்படுத்தி நிற்கிறது.

மேலும், சுற்றுலா மீதான அரசின் தீவிர நிலைப்பாடு காஷ்மீரின் ஆழமான கட்டமைப்புத் தேவைகளை மறைத்து விடுகிறது. ஹோட்டல் உள்கட்டமைப்பு வசதிகள் செழித்து வளரும் அதே வேளையில், அடிப்படை சிவில் உரிமைகள் முற்றுகையிடப்பட்ட நிலயில் உள்ளன. சிவில் சமூகம் ஒடுக்கப்படுகிறது. பத்திரிகையாளர்கள் கைது செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இணைய முடக்கம் ஒரு நிர்வாகக் கருவியாகத் தொடர்ந்தும் பயன்படுத்தப்படுகிறது. இந்தச் சூழலில், பரபரப்பான ஷிகாரா சவாரியின் பிம்பம் முன்னேற்றம் அல்ல – அது கவனச்சிதறல். கலை நயங்கொண்ட அழகுபடுத்தல் இங்கே அரசியல் தீர்மானத்துக்கான மாற்றீடு ஆகிறது.

காஷ்மீரில் சுற்றுலாத்துறையை குறிப்பான ஆழ்ந்த நோக்குடனான சதிகாரத் தன்மை கொண்டதாக ஆக்குவது என்னவென்றால், அது இயல்பான எதிர்ப்பின் இருப்பையே அழித்தொழிக்கிறது என்ற அம்சம்தான். சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்துபோகும் பகுதிகளான நிஷாத் பாக், குல்மார்க், சோனாமார்க் போன்ற இடங்களில் சுவர்களில் அரசியல் கிறுக்கல் வாசகங்கள், எதிர்ப்பை வெளிப்பாடுத்தும் கலைகள் அல்லது விமர்சன உரையாடல்களைக் கூட நீங்கள் அரிதாகவே சந்திக்கிறீர்கள். இந்த இடங்கள் வலுக்கட்டாயமாகவோ அல்லது பயத்தினாலோ கவனமாக ‘சுத்தமாக்கப்’படுகின்றன. குடியிருப்பாளர்கள் கூட ‘மகிழ்ச்சியான விடயங்களை’   செயற்படுத்திக் காட்டுவதற்கு கற்றுக் கொள்கிறார்கள். இது ஒரு உயிர்வாழும் உத்தி. சந்தேகம், துன்புறுத்தல் அல்லது பொருளாதார இழப்பைத் தவிர்க்க, உள்ளூர்வாசிகள் தமது உணர்வுகளை உள்ளூரப் புதைத்தபடி ‘நல்ல வரவேற்பாளர் என்ற பாத்திரத்தை திறம்பட நிறைவேற்றுவதற்கு’ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். வேலையின்மை, இளைஞர்களை சுற்றுலா தொடர்பான வேலைகளில் மீளவும் வீழ்ந்து உழல்வதற்கு கட்டாயப்படுத்துகிறது. இதனால் அவர்கள் தங்கள் நிலத்திற்கான அரசியல் அபிலாஷைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, வெளியாட்களை மகிழ்விக்கும் முயற்சிகளில் சிக்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், சுற்றுலாப் பயணிகளின் பார்வை என்பது எதிர்பார்ப்பு மற்றும் ஒரு ‘மென்மையான கண்காணிப்பின்’ மற்றொரு வடிவமாகும்.

குடியேற்ற ஆட்சிகளின் கீழ் இயங்கும் உள்ளூர் சுற்றுலாத்துறை, பெரும்பாலும் பூர்வீக மக்களது அடையாளங்களை நுகர்வுப் பண்டமாக்குவதன் வழியாகவும், அதேவேளை நிலத்துக்கான வெளியாரினது   உரிமைகோரல்களை உறுதிப்படுத்திக் கொடுப்பதன் மூலமாக சுதேச மக்களை அழிப்பதற்கு எவ்வாறெல்லாம் உதவுகிறது என்பதை உலகெங்கிலும் காணலாம். இது ‘இணைவாக்கத்துடன் கூடிய’ சுற்றுலா அல்ல; இந்த சுற்றுலா ஆக்கிரமிப்போடு கூடியது என குறியிடத்தக்கது. அரசியல் ரீதியாக அமைதியாகவும், அதன் மக்கள் கலாச்சார ரீதியாக அலங்காரமாகவும் மாற்றப்பட்டால் மாத்திரமே அந்தப் பகுதி லாபகரமானதாக மாறும். இவ்விடயத்தில் காஷ்மீர் ஒரு பாடநூலுக்கான உதாரணம்.

அப்படியானால், காஷ்மீரில் சுற்றுலாவின் செயல்பாடுதான் என்ன? இது பொருளாதார மறுமலர்ச்சி அல்ல; தரவுகள் அதை நிரூபிக்கின்றன. இது கலாச்சார பரிமாற்றம் அல்ல – அடக்குமுறையின் அரசியல் அதை சாத்தியமற்றதாக்கிவிட்டது. இது சமாதானத்தை உருவாக்குவது அல்ல – உண்மையான சமாதானத்திற்கு நீதி தேவை; வெறும் ஹேஷ்டேக்குகள் அல்ல. சுற்றுலா என்பது இந்திய அரசின் மென்மையானதோர் ஆயுதமாகத் தொழிற்படுகிறது. இது ஒரு காட்சி சார் பரப்புரை; ஓர் இராஜதந்திர சூட்சுமப் போர்வை; இந்திய இறையாண்மையின் மற்றுமொரு செயற்பாட்டு நாடகம்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சுற்றுலா வலயங்களுக்கு வெளியே – ஸ்ரீநகர், அனந்த்நாக் அல்லது சோபோர் நகர மையத்திற்குள் சென்று பாருங்கள். இந்த மாயை சரிந்துவிடும். அங்கு, மோதலின் சாராம்சம் என்னவென்பதை கண்டுகொள்வீர்கள். இராணுவ சோதனைச் சாவடிகள், அங்கு நிலவும் மயான அமைதி, அருகி ஈற்றில் இல்லாமலே போன பொருளாதார வாய்ப்புகள் ஆகியவற்றில் இதனைக் கண்டுகொள்ளலாம். சுற்றுலாப் பயணிகள் அரிதாகவே அங்கெல்லாம் செல்வார்கள். அரசு அப்படித்தான் விரும்புகிறது.

காஷ்மீரில் சுற்றுலாவை இந்தியா வலியுறுத்துவது வாய்ப்புகளுக்காக அல்ல. அது காட்சியியலுக்கானது. இது சர்வதேசக் கண்ணோட்டம், உள்ளூர் பிரச்சாரம் மற்றும் பிராந்தியக் கட்டுப்பாடு பற்றியது. துலிப் பூக்கள் அழகாகப் பூத்துள்ளன. தாக்கம் விளைவிப்பவர்கள் திரும்பி வந்துள்ளனர். இராணுவமும் அவ்வகைப்பட்டதே. அங்கு கவிந்திருக்கும் கனத்துப் போன மௌனங்களும் அப்படித்தான். காஷ்மீர் என்றால் என்ன, அது யாருக்குச் சொந்தமானது என்பது பற்றிய பதிலளிக்கப்படாத கேள்வியும் அப்படித்தான்!

சித்தார்த் ஷங்கர் (Sidharth Shankar) ஒரு ஃப்ரீலான்ஸ் எழுத்தாளர் மற்றும் கலைஞர். அவர் Youth Ki Awaaz என்ற இணையதளத்தின் எடிட்டராகவும் இருந்தார்.

Counter Currents.org

06.05.2025

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி