-ரவான் அப்துல் பாக்கி மற்றும் ராணா சுகாரியேஹ்-
2025 மார்ச் 9 அன்று மஹ்மூத் கலீல், அமெரிக்க குடிவருகை மற்றும் சுங்க அதிகாரப் பிரிவின் ((ICE) முகவர்களால் கடத்தப்பட்டு தெரியாத ஓரிடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, இறுதியாக லூசியானாவில் உள்ள ஒரு தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டார். பாலஸ்தீன ஒத்துழைப்புக்கான குரல்களை அச்சுறுத்தி, அவற்றை மௌனமாக்கவும், நசுக்கவும் அமெரிக்க அரசாங்கமும் ஹிட்லரின் நாஸி அமைப்பை ஒத்த அதன் ‘கெஸ்டபோ’ எனப்படும் இரகசிய கொலைப் படைகளும் தொடர்ந்து மேற்கொண்ட பல முயற்சிகளில் அவரது நேர்வு முதலாவதாகும். இதை ‘பாலஸ்தீனப் பூச்சாண்டி’ என சிலர் அழைத்தனர். வெள்ளை மேலாதிக்கம் மற்றும் பரந்த சியோனிச நிகழ்ச்சி நிரலின்கீழ் விமர்சகர்களை அச்சுறுத்தி நாடு கடத்தச் செய்வது. சுருக்கமாகச் சொன்னால் தேச எல்லை தொடர்பான அமுலாக்கத்தின்போது, ‘அரசியல் நோக்கங்களுக்காக இனவெறியைக் கருவியாகப் பயன்படுத்துவது’ எனலாம். அதிகரித்து வரும் இவ்வாறான நிகழ்வுகள் விதிவிலக்கானவை அல்ல; என்றாலும் கொடூரமானவை. அவை ‘லொஸ் ஏஞ்சல்ஸில் எட்டு நபர்கள் முகம்கொடுத்த’ இதைப்போன்றதோர் நிகழ்வோடு குறிப்பிடத்தக்க ஒற்றுமையைக் கொண்டுள்ளன. அவர்கள் 1987ல் கைது செய்யப்பட்டு, பாலஸ்தீன ஆதரவு செயல்பாட்டில் அமைதியான முறையில் ஈடுபட்டதற்காக ‘நாடுகடத்தலை’ எதிர்கொண்டனர். ஐமே செசயரின் சூத்திரத்தை முன்னிறுத்தி, நூரா எரகட் சுட்டிக்காட்டுவது போல, இந்த நிகழ்வுகளை ‘பூமராங் விளைவுகள்’ என்று புரிந்து கொள்ளலாம். தமது காலனிகளில் ‘அனுமதிக்கப்பட்ட’ உள்ளார்ந்த வன்முறை மற்றும் அடக்குமுறை என்பன, அவரவர் தாயகத்தில் வெளிப்பட்டதன் விளைவாக, அது சர்வாதிகார அரச அமைப்புகளுக்கு புத்துயிரளித்து, பொலிஸ்கார ரெளடித்தனம் மற்றும் இராணுவமயமாக்கல் தொடக்கம் எல்லைப் பாதுகாப்பு வரை, படுகொலையை நோக்காகக் கொண்ட நிறுவனங்களது செயற்பாடுகளை தீவிரப்படுத்துகிறது. தற்போதைய சூழ்நிலையில், கீழே நாம் காண்பிப்பது போல, ‘இஸ்ரேலின் பாதுகாப்பு’ என்ற பெயரில் காசாவில் நடத்தப்பட்டுவரும் வெளிப்படையான இனப்படுகொலை நடவடிக்கைகளின் மைய இழையாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய காலனித்துவ ‘பூமராங் உந்துதலை’க் காண்கிறோம். அவர்களின் இனவெறி நாடுகடத்தல் பொறி கருவிகள் பெரும்பாலும் இஸ்ரேலின் முதன்மை ஏற்றுமதியாகிய இனஒதுக்கல் மற்றும் கண்காணிப்புக்கான தொழில்நுட்பங்களால் இயக்கப்படுகின்றன.
எமது இந்த ஆக்கத்தில், இஸ்ரேலின் கொள்கைகளும் அதன் தொடரான இனசுத்திகரிப்பு மற்றும் இனப்படுகொலை செயற்பாடுகளும் உலகெங்கும் அவற்றுக்கான எதிர் முழக்கங்களை ஏற்படுத்தி இருக்கின்றன என்று நாங்கள் வாதிடுகிறோம். ‘எல்லைகள்’ பற்றிய சியோனிச தர்க்கங்களும் நடைமுறைகளும் விரிவாக்கவாதத்தையும் அடக்குமுறையையும் ஒருங்கே கொண்டுள்ளன. மத்திய கிழக்கில், வரலாற்று பாலஸ்தீனத்திற்கு அப்பால் ‘எகிப்தின் ஓடையிலிருந்து யூப்ரடீஸ் நதி வரை’ இருக்கும் ‘இறையாண்மையின் தேசிய இடைவெளிகளில்’, இன்றைய இஸ்ரேலின் தற்காலிக எல்லைகளைக் கடந்து, சியோனிச திட்டத்தின் விரிவாக்க அபிலாஷைகள் விரிவடைந்தபடி இருக்கின்றன. அதே நேரத்தில், இந்த விரிவாக்க குணம் கொண்ட இனத்துவ அரசு, பிராந்தியத்தின் பூர்வீகக் குடிமக்களுக்குரிய பிரதேசங்களை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. அவர்களை முற்றுகையிடப்பட்ட புவியியல் எல்லைகளுக்குள் அடைத்துவைத்து, அவர்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், அவர்களின் மீது திணிக்கப்படும் விலக்கு மற்றும் வன்கொடுமை என்பன அழிவின் சாத்தியங்களை மென்மேலும் தீவிரமாக்குகின்றன. உலக அளவில், சியோனிச ஏற்புவாதங்கள், பரப்புரை நடவடிக்கைகள், இராஜதந்திர உறவுகள் மற்றும் வர்த்தக உறவுகள் ஆகியவை, அவற்றை ஒத்த ஏனைய இனஒதுக்கல் – இனவெறி ஆட்சிகளுடன் இணைந்து செயல்படுவதோடு அவை ஒன்றை மற்றொன்று வலுப்படுத்துகின்றன. இஸ்ரேலின் குடியேற்ற காலனித்துவ திட்டத்தின் உள்ளகம் முதலாளித்துவ மயமானதும், மூலதனக் குவிப்புக்கான உலகளாவிய ஏற்பாட்டில் ஆழப்பதிந்த ஒன்றாகவும் உள்ளது. புலம்பெயர்ந்தோரின் இயக்கத்தை கட்டுப்படுத்தவும், அதனை குற்றத்தன்மை கொண்டதாக பரப்புரை செய்து நிறுவுவதற்கும் ஏதுவாக உலகெங்கிலும் உள்ள நாடுகளுக்கு கண்காணிப்பு, ஒடுக்குமுறை மற்றும் சிறைவாசம் ஆகியவற்றுக்கான தொழில்நுட்பங்களை இஸ்ரேல் ‘ஏற்றுமதி’ செய்கிறது.
மத்திய கிழக்கில் எல்லைகளை வகுக்கும் சியோனிசம்
சியோனிசத்தின் அடித்தளங்கள் மற்றும் சியோனிச அமைப்பின் அரசு நடைமுறைகளுடன் ஒருங்கிணைந்த சியோனிசத் திட்டம், லெபனான், ஜோர்டான், சிரியா மற்றும் இன்றைய ஈராக், சவுதி அரேபியா மற்றும் எகிப்தின் சில பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பாலஸ்தீனப் பிரதேசங்களையும் இணைப்பதன் மூலம் ‘மாபெரும் இஸ்ரேலை’ நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இவ்விடயம் இஸ்ரேலின் ‘அடிப்படைச் சட்டங்களில்’ உட்பொதிந்துள்ளதோடு அதன் பகுதியளவான அல்லது ‘குவாஸி’ அரசியலமைப்பு கட்டமைப்பாகவும் செயற்பட்டு வருகிறது. இஸ்ரேல் அதன் அரசியல் சொல்லாடல்களிலோ அல்லது இராணுவத் திட்டங்களிலோ தனது தேசத்துக்கான திட்டவட்டமானதொரு எல்லையை இன்றுவரை அங்கீகரிக்கவில்லை. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவை வேறொரு எல்லைக்கோட்டை உருவாக்குவதையே வெளிப்படுத்தி நிற்கின்றன. நாம் இதை எழுதும் வேளையில், இஸ்ரேலியப் படைகள் இறையாண்மை கொண்ட லெபனான் நிலங்களில் தங்கியுள்ளன. மேற்குக் கரையில் உள்ள நிலங்களை ஆக்கிரமித்து நாற்பதாயிரம் பாலஸ்தீனியர்களை மொத்தமாக இடம்பெயர்த்துள்ளன. மேலும் சிரியப் பிரதேசங்களுக்குள் ஆழமாக ஊடுருவியபடி உள்ளன.
மேற்குக் கரை உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களில், இஸ்ரேலிய இனவெறிக் கொள்கைகள் பாலஸ்தீனியர்களின் இயக்கத்தையும் வாழ்க்கையையும் தொடர்ந்து கட்டுப்படுத்தி வருகின்றன. ‘பாதுகாப்புச் சுவர்’ எனும் பெயரிலான இனஒதுக்கல் சுவரின் கட்டுமானம், மேற்குக் கரையிலும் கிழக்கு ஜெருசலேமிலும் மேலதிகமான பலஸ்தீன நிலங்களை ஒருங்கிணைத்து, பாலஸ்தீன கிராமங்களை மென்மேலும் ஆக்கிரமிப்பின்கீழ் வைத்திருப்பதையே இலக்காகக் கொண்டுள்ளது. இஸ்ரேலிய அரசு அமுலாக்கும் வீடுகளை இடித்தழித்தல் மற்றும் சொத்துக்களைப் பறிமுதல் செய்தல் போன்ற தீவிரமான நடவடிக்கைகளால் இந்தக் கட்டுப்பாடுகள் மேலும் அதிகரிக்கின்றன. யூதக் குடியேற்றவாசிகள் இஸ்ரேலின் காவல்துறை மற்றும் இராணுவத்தால் பாதுகாக்கப்படுகிறார்கள். இதன் விளைவாக பாலஸ்தீன் பூர்வீகர்களுக்கு எந்த வகையான சட்டப்பூர்வ உதவிகளோ அல்லது பாதுகாப்புகளோ இல்லாது போய்விடுகிறது. இஸ்ரேல் அதன் விரிவாக்கத் திட்டத்தை முன்னெடுப்பதற்காக, எண்ணற்ற நகர்திறன் கொண்ட கருவிகள் மூலம் பல்வேறு நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் பாலஸ்தீனர்கள் மீது பயன்படுத்துகிறது. அனுமதிச் சீட்டுகள், பறக்கும் மற்றும் நிரந்தர சோதனைச் சாவடிகள், புறவழிச் சாலைகள், வேலிகள், மின்னணு உலோக வாயிற் கடவைகள் மற்றும் பாதுகாப்பு மண்டல ஏற்பாடுகள் ஆகியன இவற்றில் அடங்கும். பாலஸ்தீனர்கள் பாடசாலை, தொழில் அல்லது மருத்துவமனைக்குச் செல்வது போன்ற தமது அன்றாட வாழ்க்கையை நடாத்துவதற்கு பயண அனுமதி பெறல் வேண்டும். அவர்களின் பெரும்பாலான நேரம் இராணுவமயமாக்கப்பட்ட, வாயில்கள் வழியாகச் செல்வோரின் உயிருக்கு உத்தரவாதமில்லாத இடங்களில் அனுமதிகளைப் பெறுவதற்காகக் காத்திருப்பதிலேயே கழிகிறது. 2023ல் தொடர்ச்சியான இனப்படுகொலை தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே, 2007 தொடக்கம், காசாவின் முழு நிலமும், கடல் மற்றும் வான் முற்றுகைக்கு உட்பட்டுள்ளது. பல மனித உரிமை அமைப்புகள் சொல்வதுபோல காசாவை இந்த முற்றுகை ஒரு திறந்தவெளி சிறைச்சாலையாக மாற்றியுள்ளது. இஸ்ரேல், அடிப்படைத் தேவைகளுக்கான மக்கள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தி, கலோரி பற்றக்குறையை ஏற்படுத்தி, அதனூடாக அம்மக்களை ‘மந்த கதியிலான மரணத்தை’ நோக்கித் தள்ளுவதை உன்னிப்பாகக் கண்காணித்து செயற்படுத்துகிறது. 1948ல் இஸ்ரேல் நிறுவப்பட்ட காலத்திலும் அதற்குப் பின்னரும் பாலஸ்தீனர்களின் பெருமளவிலான இடம்பெயர்வு மற்றும் பலவந்த வெளியேற்றம் போன்ற குடியேறிகளது இந்த நடைமுறைகள் – ஆக்கிரமிப்பு, துண்டு துண்டாகப் பிரித்தல், இனஒதுக்கல் மற்றும் இனப்படுகொலை என்பன நக்பா அவலத்தின் தொடர்ந்தேர்ச்சையான குணாம்சங்களை உள்ளடக்கியவை என எழுதுகிறார் ரபியா எக்பரியா.
இஸ்ரேலின் இந்தக் குடியேற்ற-காலனித்துவ விரிவாக்கம் தற்செயலானது அல்ல; மாறாக, பிராந்தியத்தை வெற்றிகொள்ளல் மற்றும் அதன் மானிட வளத்தின் மீதான அழுங்குப்பிடியை தம்வசம் வைத்திருக்கும் பொறிமுறையை அடிப்படையாகக் கொண்டதொரு குடியேற்றவாதத் தர்க்கத்தின் அடித்தளமாக அது உள்ளது. ‘இஸ்ரேலின் வெடிக்கும் மக்கள்தொகைக்கு Lebensraum தேவை’ என்ற தலைப்பில் டைம்ஸ் ஒப் இஸ்ரேலில் வெளியிடப்பட்ட ஒரு வெளிப்படையான (இப்போது நீக்கப்பட்டிருக்கும்) வலைப்பதிவு இடுகையில், வேகமாக வளர்ந்து வரும் (சட்டவிரோத) குடியேற்றக்காரர்களுக்கு இடமளிக்க மேற்குக் கரையை ஒருங்கிணைத்து அவர்களை அங்கு குடியேற்றுவது “காலத்தின் தேவை” என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுகிறது. ஜெர்மன் மொழியில் வாழும் இடம் என்று பொருள்படும் லெபன்ஸ்ராம், இன ஆதிக்கத்துடன் இணைந்து பிராந்திய கையகப்படுத்துதலை விரிவுபடுத்துவதற்கான அதிகாரப்பூர்வ ஹிட்லரிய்ய நாஜி கொள்கையாகும். இந்த அறைகூவல்கள் ஒரு செய்தித்தாளின் கருத்தை மட்டுமன்றி சியோனிசத்தின் சித்தாந்தத்தையே பிரதிபலிக்கின்றன.
இஸ்ரேலின் ஆரம்ப உருவாக்கத்திலிருந்தே பாலஸ்தீனத்தின் பூர்வீக மக்களுடன் சகவாழ்வுக்கான சாத்தியத்தை அது பொய்யாக்கியது; ஏனெனில், அது ஒரு ‘யூத அரசை’யே நிறுவ முயன்றது. ஐமே செசயர் பிரபலமாக வாதிட்டது போல, பாசிசம் என்பது ஏகாதிபத்திய வன்முறை அதன் தாயகத்துக்கு திரும்புவது! ஐரோப்பாவையே திருப்பித் தாக்கும் காலனித்துவத்தின் “பூமராங்” இதுவாகும். “தன்னளவில் அது குற்றமே அல்ல… அதை வெள்ளையருக்கு எதிராகப் பயன்படுத்தியதால் தான் வந்தது வினை! அதனை ஹிட்லர் ஐரோப்பிய காலனித்துவ நடைமுறைகளுக்குப் பயன்படுத்தினார் என்பதுதான் உண்மை. அதுவரை அல்ஜீரியாவின் அரேபியர்கள், இந்தியாவின் ‘கூலிகள்’ மற்றும் ஆப்பிரிக்காவின் நீக்ரோக்கள் ஆகியோருக்கென மாத்திரமே அது ஒதுக்கப்பட்டிருந்தது.” என காலனித்துவம் பற்றிய உரையாடலில் “ஐரோப்பா ஏன் ஹிட்லரை மன்னிக்கவே முடியாது?” என்ற தலைப்பில் செசெயர் எழுதுகிறார். இந்தக் கட்டமைப்பில், ஹோலோகாஸ்ட் (பெருங்களப்பலி) என்பது காலனித்துவ நவீனத்துவத்திலிருந்து வெளிப்பட்டதொரு முறிவு அல்ல; மாறாக, உள்நோக்கித் திரும்பிய காலனித்துவ வன்முறை வடிவத்தின் ஓர் உச்சக்கட்ட நிகழ்வாகும்.
இந்தச் சூழலைப் பயன்படுத்தி சியோனிசம் செல்வாக்குப் பெற்றது; ஐரோப்பிய யூதர்களின் பேரழிவைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்திற்கு தார்மீக மற்றும் அரசியல் உரிமையைக் கோரியது. ஆனால் மீண்டும் பூமராங் போல புறப்பட்ட இடத்துக்கு வருவதற்கு பதிலாக, இந்த வன்முறை வெளிப்புறமாகத் தீவிரமடைந்து, பாலஸ்தீனத்தில் சியோனிச திட்டத்தின் ரூபத்தில் அது வெளிப்பட்டது. அதாவது, சியோனிசம் காலனித்துவத்தின் வெற்றியை வரலாற்று நிவாரணத்தின் வேறொரு வடிவமாக மாற்றியது. நவோமி க்ளென் இந்த இயக்கவியலை Doppelganger: A Trip into the Mirror Worldல் தனது கூர்மையான விமர்சனத்தில் தீர்க்கமாக வெளிப்படுத்துகிறார்:
‘ஐரோப்பியர்களாகிய எங்களுக்கென கடவுள் வழங்கியது’ என்ற உரிமைகோரலின் வழியாக உருவான அவர்களது மேட்டிமைத்தனம் மற்றும் வலிமையைப் பயன்படுத்தி பாலஸ்தீனை அவர்கள் காலனித்துவத்தின் பிடியில் கொண்டுவந்தனர். மறுதலையாக, ஹோலோகாஸ்டுக்குப் பிந்திய சியோனிசத்தின் பாலஸ்தீனத்துக்கான உரிமைகோரல், அவர்கள் மீது இடம்பெற்ற பழிவாங்கல், அதன் விளைவாக அவர்கள் அடைந்த பாதிப்பு என்பதை மையப்படுத்தியே இருந்தது! அந்த சந்தர்ப்பத்தில் சியோனிஸ்டுகள் பலர் ‘யூதர்களுக்கு காலனித்துவக் கூட்டணியிலிருந்து விலக்கைப் பெறும் உரிமை உள்ளது. ஏனெனில், சமீபத்தில் அவர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட அழிவின் பாதிப்பு பாரியது. அந்த வகையிலேயே அவர்கள் அந்த விதிவிலக்கை கோருகின்றனர்’ என குறிப்பாக வாதிட்டனர். சியோனிசத்தின் ‘நீதி’ மேலைத்தேய ஏகாதிபத்திய சக்திகளிடம் இவ்வாறு கூறியது: இனசுத்திகரிப்பு, கூட்டுப் படுகொலைகள் மற்றும் நிலத் திருட்டு மூலம் உங்கள் பேரரசுகளையும் உங்கள் குடியேற்றக் காலனித்துவ நாடுகளையும் உங்களால் நிறுவ முடிந்தது. எங்களுக்கு மாத்திரம் அது முடியாது என நீங்கள் வாதிடுவதைத்தான் ‘பக்கச்சார்பு அல்லது பாகுபாடு’ என்கிறோம்! நீங்கள் ஆக்கிரமித்த நிலத்தில் இருந்த பூர்வீக மக்களை நீங்கள் வெளியேற்றினாலோ அல்லது உங்கள் காலனிகளில் அவ்வாறு செய்திருந்தாலோ, எங்களுக்கு மாத்திரம் அவ்வாறு செய்ய முடியாது என்று சொல்வது யூத-விரோதமாகும். சமத்துவத்திற்கான தேடல் என்பது பாகுபாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமை மாத்திரம் அல்ல, மாறாக ‘பாகுபாடு காட்டுவதற்கான உரிமை’யாகவும் சியோனிஸ்டுகளால் மறுவடிவமைக்கப்பட்டது போல் இருந்தது. “இது இனவழிப்புக்கான இழப்பீடாக காலனித்துவம் வடிவமைத்தது”.
(சாராம்சத்தில், இது ஒரு குழு அனுபவித்த இனப்படுகொலையின் மறுக்க முடியாத பயங்கரத்தை ஒரு தார்மீக கேடயமாகவும், காலனித்துவ வன்முறையைச் செய்வதற்கும், மற்றொரு, முற்றிலும் தனித்துவமான குழுவிற்கு எதிராக இனப்படுகொலையை மேற்கொள்வதற்கும் அதனை நியாயப்படுத்துவதற்கும் பயன்படுத்தும் ஒரு ஆழமான நெறிமுறையற்ற வாதத்தை அம்பலப்படுத்துகிறது. இது ஆக்கிரமிப்பையும் வன்கொடுமையையும் நியாயப்படுத்துவதற்கான கருத்தியல் கையாளுகை ஆகும். – மொழிபெயர்ப்பாளர்)
‘அஷ்கெனாசி இனப்படுகொலை அனுபவங்களில்’ இருந்து தொகுக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்களின் விதிவிலக்கான இந்தக் கதையாடல்கள், ஐரோப்பியரல்லாத யூதர்களின் வரலாறுகளை நீண்ட காலமாக மறைத்து வருகின்றன. குடியேற்ற அரசாங்கத்தை விரிவுபடுத்துவதற்கு மக்கள்தொகை அடிப்படையில் யூதர்களது மக்கள்தொகை இருப்பை நம்பியிருந்த அதே வேளை, சியோனிசம் அவர்களை முறைசார்ந்த இனரீதியான படிநிலைகளுக்கும் உட்படுத்தியது. சியோனிசம், இவ்வழியிலேயே காலனித்துவ வன்முறையை மீளுருவாக்கம் செய்து பாலஸ்தீனியர்கள் மீது அதனை வெளியிலிருந்து திணித்தது. அதேவேளை அந்நடைமுறையை, உள் அடுக்குகளை உருவாக்குதல், இனமயமாக்கப்பட்ட வர்க்க உருவாக்கம் மற்றும் பரவலான சுரண்டல் ஆகிய அம்சங்களை கொண்டு அமைந்த தனது அரசு வழியாக யூதர்கள் மீது திணிக்கிறது. கால வழு மற்றும் காலப் பொருத்தமற்ற பண்புகளைக் கொண்ட, இடைவிடாத இந்த ‘பொதுமக்கள் பலியாதற் களங்கள்’ குறித்து, உசாமா மக்திசி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “….ஆகையால், உச்சக்கட்டத்தை அடைந்த மேற்கத்திய யூத எதிர்ப்பின் விளைவாக, யூதர்கள் ஐரோப்பாவில் நடந்தேறிய ஹொலோகாஸ்டில் பலியாடுகளாக ஆனார்கள்; இஸ்ரேலிய யூத சியோனிஸ்டுகள், அவர்களது நட்புகள், கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் உட்பட மேற்கில் அவர்களின் ஆதரவாளர்கள், மற்றும் அவர்களது பலிக்களங்களை இயல்விப்போர் ஆகியோரின் பலியாடுகளாகவே பாலஸ்தீனியர்கள் இன்றுவரை இருக்கின்றனர்”. இந்த உள்ளமைவில், ஐரோப்பாவின் தொடர்ச்சியான குற்றங்களுக்கான பரிகாரமாக, ‘யூத எதிர்ப்பு’ என்ற தோரணையில் வெளிவரும் அவர்களின் இனஒதுக்கல் நடைமுறைகள், தேச எல்லை தொடர்பான சட்ட அமுலாக்கத்தின்போது ஏதிலிகளுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுகின்றன. இந்த செயல்பாட்டில், தேச எல்லைகளில் இடம்பெறும் இனஒதுக்கல் சொல்லாடல்கள் புதியதொரு ‘நாகரிகங்களின் மோதலை’ மீண்டும் உருவாக்குகின்றன. இதில் ஐரோப்பாவின் கூட்டுத் தேசிய குற்ற உணர்ச்சி அரபு – முஸ்லீம் – இனமயமாக்கப்பட்ட புலம்பெயர்ந்தோரின் மீது உத்தேசமாகப் பாய்கிறது. ‘பேயோட்டுதல்’ போன்ற அதன் கூட்டு வெளிப்பாடு ‘வெளிநாட்டு அச்சுறுத்தலை வெளியேற்றுவதன்’ மூலம் செயற்படுத்தப்படுகிறது.
சியோனிச எல்லை உருவாக்கத்தின் ‘ஏற்றுமதி’
இப்போது, மத்திய கிழக்கிற்கு அப்பால், ‘எல்லை’ தொடர்பான சியோனிசத் தர்க்கங்கள் ‘வெள்ளையின மேலாதிக்க’ ஆட்சிகளுடன் தடையின்றி ஒருங்கிணைக்கப்படுவதோடு அவற்றில் இனஒதுக்கல் சொல்லாடல்கள் மற்றும் நடைமுறைகள் உள்ளன. ஏற்கனவே இஸ்ரேலில் அமுலில் இருக்கும் வன்முறையான எல்லை நடைமுறைகள், ஏனைய நாடுகளில் அமுலில் உள்ள இனஒதுக்கல் மற்றும் இனரீதியான கண்காணிப்பு ஆகியவற்றின் இயக்கவியல் ஒத்திசைவுகள் மற்றும் குறிப்பான ஒற்றுமைகளை பரந்த அளவிலான விரிவான ஆய்வுகள் உறுதியாக அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. உண்மையில், அமெரிக்காவில் 9/11 தாக்குதலுக்குப் பிந்தைய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு உள்கட்டமைப்புகள், பல வழிகளில் இஸ்ரேலிய சோதனைச் சாவடிகள் மற்றும் பரந்த எல்லைப் பாதுகாப்பு உத்திகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டன. “இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கு வெளியே எதிரொலிக்கும் விதத்தில், ‘நாகரிகங்களின் மோதல்’ மற்றும் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ ஆகிய இரண்டுக்கும் ஒரு குறியீடாக, இன்றைய பாலஸ்தீனப் போராட்டம் மாறியுள்ளது” என அபு-லபான் மற்றும் பக்கான் ஆகியோர் காரசாரமாக வாதிடுகின்றனர். 1948-க்குப் பிந்தைய இஸ்ரேல் ‘பாதுகாப்புக்’ கதையாடலினது மையப் பொருளாக இருந்த ‘பாலஸ்தீன பயங்கரவாதி’யின் இனவெறி கொண்ட உருவம், 9/11 ‘பயங்கரவாதத்துக்கெதிரான போர்’ எனும் கதையாடலுக்கான உலகளாவிய நனவிலி மனப்பதிவுக்கான ‘முன்மாதிரியாக’ மாற்றப்பட்டிருக்கிறது. 9/11 க்குப் பின்னர், இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய தாராளவாத ஜனநாயகங்கள், இந்த ‘முஸ்லிம் – அரபு பயங்கரவாதி’யை, பரந்த அளவில் அமைந்த மறுகட்டமைப்பின் வழியாக, தமது ‘பகிரப்பட்ட எதிரியாக’ உள்வாங்கிக் கொண்டனர். கண்காணிப்பு ஆட்சிகள், எல்லைக் கட்டுப்பாடுகள், இன விவரக்குறிப்பு மற்றும் விதிவிலக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளின் விரிவாக்கத்தை நியாயப்படுத்தும் விதமாக இவை மேற்கொள்ளப்பட்டன. இஸ்ரேல் தான் ஒரு ‘நிரந்தரப் பலிக்கடா’ என உருவாக்கி வைத்திருந்த சுயபிம்பம் அமெரிக்கா மற்றும் மேற்குலகின் மீது முன்னிறுத்தப்பட்டு, அது இஸ்லாமிய வெறுப்பு சித்தாந்தங்களை வலுப்படுத்தி, உரிய நடைமுறை, சட்டரீதியான நடுநிலைமை மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்பன காலப்போக்கில் செல்லரிக்கப்பட்டு, படிப்படியாய் செயலிழந்து போவதை நியாயப்படுத்துகின்றன.
இந்தச் சூழலில், பயங்கரவாத எதிர்ப்புக்கான உலகளாவிய அதிகாரமாக, இஸ்ரேல் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது; அதன் பாதுகாப்பு நடைமுறைகளை வெளிநாடுகளுக்கு தீவிரமாக ‘ஏற்றுமதி’ செய்கிறது – இது ‘உலகளாவிய கண்காணிப்பின் இஸ்ரேலியமயமாக்கல்’ என்று விவரிக்கப்படும் ஒரு செயன்முறையாகும். வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா முழுவதும் உள்ள எல்லைகளை படைத்துறை மயமாக்கல் முயற்சிகள், பெருமளவில் இஸ்ரேலிய பயிற்சித் திட்டங்களை நோக்கித் திரும்பியுள்ளன. இஸ்ரேலின் பொருள் மற்றும் பொருள் சாராத ஆதரவு, குடிவரவு சுங்க அமுலாக்கம் (ICE), சுங்கம் மற்றும் எல்லை ரோந்து (CBP) ஆகியவற்றுக்கு அவர்கள் வழங்கும் பயிற்சிகள் மூலம் எல்லைகளை இராணுவமயப்படுத்தல் என்ற விடயம் எளிதாக்கப்பட்டுள்ளது. மேலதிகமாக, பல தசாப்தங்களாக பாலஸ்தீனியர்கள் மீது சுமத்தப்பட்டு சோதிக்கப்பட்ட எல்லைக் கட்டுப்பாடு மற்றும் இன விவரக் குறிப்பு ஆகியவற்றின் அதே சித்தாந்தங்களைப் பயன்படுத்தி இவை மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் ஏற்படும் விளைவுகள் கடுமையானவை. இஸ்ரேலிய பாதுகாப்புக் கோட்பாட்டின் இந்த உலகளாவிய பரவல், இன ஒப்பந்தத்தின் “பாலஸ்தீனமயமாக்கலை” பிரதிபலிப்பதோடு, இதன் விளைவாக இனஒதுக்கலுக்கு ஆட்படும் தனிநபர்கள் – குடிமக்கள் மற்றும் குடிமக்கள் அல்லாதவர்கள் – பயங்கரவாத எதிர்ப்பு என்ற போர்வையில் ‘உள்ளார்ந்த அச்சுறுத்தல்களாக’க் கருதப்படுகிறார்கள். இவ்வாறு, நாடுகளுக்கு இடையிலான ஒத்த தன்மைகளுக்கு அப்பால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தல், மக்களைக் கண்காணித்தல் மற்றும் வெளியேற்றல் ஆகிய அம்சங்களில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு, அவரவர் சூழல்களில் ‘வெளித்தள்ளும் தேசியவாதத்தை’ பரஸ்பரம் வலுப்படுத்துகிறது. வெறுமனே ஒன்றையொன்று ஒத்திருப்பதற்குப் பதிலாக, இந்த ‘தேசிய நேர்வு வகைகள்’ காலனித்துவ – இனமைய்ய – முதலாளித்துவ உறவுகளின் சிக்கலான வலையமைப்பின் மூலம் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து கொள்கின்றன.
ஆம்ஸ்டர்டாமில், நவம்பர் 6, 2024 அன்று நடைபெற்ற UEFA யூரோப்பா லீக்கின் நிகழ்வுகளின் போது, இடம்பெற்ற இஸ்ரேலிய மக்காபி ரசிகர்களின் இனவெறி ஆத்திரமூட்டல் நடவடிக்கைகள், ‘ நடக்காத படுகொலைகள்’ பற்றிய பொய்களை உருவாக்கின; இருப்பினும், ஏற்கனவே இருந்த இனஒதுக்கல் குடியேற்ற எதிர்ப்பு உணர்வுகளை அதிகரிக்க அவை வழிவகுத்தன. ஜெர்மனியில், சியோனிச எதிர்ப்பையும் யூத எதிர்ப்பையும் ஒருங்கிணைப்பது, யூதர்களை இஸ்ரேலால் உருவகப்படுத்தப்பட்ட ஒரு ஒற்றைக் குழுவாக தவறாக சித்தரிப்பது மாத்திரமன்றி, பாலஸ்தீன சார்பு செயல்பாடுகளையும் காயடிப்பதற்கு பயன்படுகிறது. அதேவேளை, புலம்பெயர்ந்தோர் எதிர்ப்பு, முஸ்லிம் எதிர்ப்பு மற்றும் உள்ள வெள்ளையின தேசியவாத நிகழ்ச்சிநிரல்களை முன்னெடுப்பதற்கான ஒரு கருவியாகவும் அது பயன்படுகிறது. கனடாவில், அரசாங்கத்தின் தற்காலிக குடியிருப்பாளர் வீசா (TRV)யில் உட்பொதிக்கப்பட்ட முறையான கட்டுப்பாடுகள் மற்றும் பாலஸ்தீனிய எதிர்ப்பு இனஒதுக்கல் அம்சங்கள் ஏற்கனவே இருந்தபோதிலும், இஸ்ரேல் மற்றும் யூத விவகாரங்களுக்கான மையம் (CIJA), அங்கிருக்கும் பலஸ்தீனர்களது காசா உறவினர்களுக்கான ஏற்கனவே கஞ்சத்தனமான முறையில் இடம்பெறும் ஒதுக்கீட்டைக் கட்டுப்படுத்தக் கோரி கனேடிய அரசாங்கத்திடம் வற்புறுத்தி வருகிறது. எந்த ஒரு பாலஸ்தீனரும் அங்கு இடம்பெறும் இனப்படுகொலையிலிருந்து தப்பித்து கனடாவிற்குள் உட்பிரவேசிக்கக் கூடாது என்பதை உறுதி செய்வதே அதன் நோக்கமாகும். அவர்களின் கடிதத்தில், ‘எல்லைப் பாதுகாப்பு’ தொடர்பான அவர்களின் ‘அக்கறைகளை’ ஐ.எஸ்.ஐ.எஸ் உடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்ட தலைப்பினை அடுத்து குறிப்பிட்டுள்ளது. இவை ஒரு சில உதாரணங்கள் மாத்திரம்தான்; இவற்றில் ‘யூதஎதிர்ப்பு’ (இஸ்ரேலின் அட்டூழியங்கள் அல்லது அதன் குடியேற்ற காலனித்துவத்தின் விமர்சனமாக செயல்படுத்தப்படுகிறது) என்று கருதப்படும் ஒன்றுடன் இணைந்து கடுமையான பாலஸ்தீன எதிர்ப்பு இனவெறி மற்றும் இஸ்லாமிய வெறுப்பை அது தூண்டுகிறது.
இந்த முயற்சிகள் தனித்த மற்றும் எழுந்தமானவை அல்ல. பல குடியேற்ற நாடுகள் மற்றும் இனத்துவ-தேசியவாத ஆட்சிகளில், பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் அடக்கியாள்வதை நியாயப்படுத்தவும், இஸ்ரேல் பரப்புரை செய்திருக்கும் ‘இனவிலக்கு மற்றும் இன ஒதுக்கல் தர்க்கங்களை அடிப்படையாகக் கொண்ட நாடுகடந்த கூட்டணிகளை’ உருவாக்கவும் சியோனிச அமைப்புகளும் அதிகாரிகளும் அவ்வப் பிரதேசங்களுக்கே உரித்தான உள் நாட்டு இன வன்முறை கட்டமைப்புகளைப் பயன்படுத்துகின்றனர். (Dogging) அல்லது Doxxing என்பது ஒரு தனி நபரின் அல்லது ஓர் இனக்குழுவின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்துவைத்து, அவற்றை திட்டமிட்டு பரப்புவதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துதல், சங்கடப்படுத்துதல், அம்பலப்படுத்துதல் அல்லது மிரட்டுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட திட்டமிட்ட செயன்முறையாகும். இந்தத் தகவல்கள் தனிப்பட்ட மூலங்களிலிருந்து வரலாம், ஆனால், பெரும்பாலும் பொது இணையப் பதிவுகளிலிருந்து அவை பெறப்படுகின்றன) மாணவர்களை நாடுகடத்துவதை இலக்காகக் கொண்டு செயற்படும் ICE இன் மூத்த அதிகாரி ஒருவர், அவ்விடயத்தில் தான், பாலஸ்தீன எதிர்ப்பு Doxxing தளமான (இஸ்ரேலிய உளவுத்துறை அமைப்புகளால் அதற்கு பகுதியளவு நிதியளிக்கப்படும்)’கேனரி மிஷனை’ நம்பியிருப்பதாக சமீபத்தில் வெளிப்படுத்தினார். டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம் முன்னெடுத்துவரும் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான சிலுவைப் போருக்கு “நாடுகடத்தல் பட்டியலை” தொகுத்து வழங்கியதாக தீவிரவாத வலதுசாரிக் குழுவான ‘பீட்டார் யுஎஸ்’ வெளிப்படையாகப் பெருமை பீற்றிக்கொண்டது. அதில் நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர் பெயர்கள் அடங்குகின்றன. இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள வலுவான தர்க்கம், அவர்களின் வன்முறைக்கான பிற சொல்லாட்சிகளில் மற்றும் நியாயப்படுத்தல்களிலும் எதிரொலிக்கிறது.
(2018 முதல் 2019 வரை காசாவில் நடத்தப்பட்ட தொடர்ச்சியான போராட்டங்களின் ஒரு பகுதி ‘தி கிரேட் மார்ச் ஒஃப் ரிட்டர்ன்’ எனப்படுகிறது. காசா-இஸ்ரேல் எல்லைக்கு அருகில் இலட்சக்கணக்கானோரினால் இவை முன்னெடுக்கப்பட்டன. இஸ்ரேலிய முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருவதும், பாலஸ்தீனர்கள் தங்களிடமிருந்து இஸ்ரேலினால் கொள்ளையிடப்பட்ட பூர்வீக வீடுகளுக்குத் திரும்புவதற்கான உரிமையை உறுதிப்படுத்துவதும் போராட்டக்காரர்களின் முதன்மைக் கோரிக்கைகளாகும்)
2018ம் ஆண்டின் கிரேட் மார்ச் ஒஃப் ரிட்டர்ன் குறித்து கருத்து தெரிவித்த, அவதூறு எதிர்ப்பு லீக்கின் தேசிய இயக்குநர் எமரிட்டஸ் பின்வருமாறு கூறுகிறார்:
“உங்களை நீங்களே கேள்வி கேட்டுக்கொள்ளுங்கள், 20,000 மெக்சிகன்கள், 1 மில்லியன் மெக்சிகன்கள் அமெரிக்க எல்லையில் நின்று அணிவகுத்துச் சென்றால்… அமெரிக்கா என்ன செய்யும்?’ உங்களுக்கே தெரியும், முதலில், அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளை வீச முயற்சிப்பார்கள், [….] இறுதியில் அது துப்பாக்கிச்சூட்டில் வந்து முடியும்”. உண்மையில், இது இஸ்ரேலிய போர்க்குற்றங்களை நியாயப்படுத்துவதற்கு, அமெரிக்க வெள்ளை இன மேலாதிக்கத்தை மொழிபெயர்த்து முறையீடு பண்ணும் ஒரு செயன்முறையாகும். இந்தியாவில், அதன் இந்துத்துவ சித்தாந்தமும் மோடி அரசாங்கத்துடனான நெதன்யாகுவின் வளர்ந்து வரும் உறவும் முக்கியமானவை. 2023ம் ஆண்டில் இருதரப்பு நகர்திறன் ஒப்பந்தத்தில் அவை கையெழுத்திட்டன; அதில் இஸ்ரேலில் பணிபுரிவதற்கான தொழிலாளர் ஆட்சேர்ப்பின் போது ‘பாலஸ்தீன ஆதரவு ஒற்றுமை’ குறித்த அச்சத்தின் காரணமாக முஸ்லிம்களைத் தவிர்த்து, இந்துக்களை சேர்த்துக்கொள்வதை இந்தயா வெளிப்படையாக ஆதரிக்கிறது. இந்திய அரசின் இன-மத சார்பு பற்றிய அதிகாரப்பூர்வ கண்டனங்கள் வலுவாக இருந்தபோதிலும், இஸ்ரேலுக்கும் இந்தியாவிற்கும் இடையே இருக்கும் ‘இனத்துவ அரசுகளாக ஒருங்கே வளர்ந்து வரும்’ சீரமைப்பை இருதரப்புகளினதும் பொதுவான விருப்பங்கள் பிரதிபலிக்கின்றன.
இஸ்ரேல் பாலஸ்தீன பிரதேசங்களை நீண்டகாலமாக ஆக்கிரமித்து வைத்துள்ளமை, அந்நாட்டை இராணுவ மற்றும் கண்காணிப்பு தொழில்நுட்பத்தில் உலகளாவிய தலைமையாக மாற்றியுள்ளது. ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பிரதேசங்களை ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளுக்கான சோதனைக் களமாகவும், இராணுவமயமாக்கப்பட்டிருக்கும் அது உலகளாவிய ஆயுத சந்தையை கவர்வதற்கான ஏவுதளமாகவும் இஸ்ரேல் பயன்படுத்துகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் ஜூன் 30, 2025 அன்று வெளியிட்ட அறிக்கை ‘இனவழிப்பு பொருளாதாரம்’ பற்றிய மற்றொரு பேருண்மையைப் போட்டு உடைத்திருக்கிறது. இஸ்ரேலியர்கள் ஏற்படுத்திய வலுக்கட்டாய வெளியேற்றம், பாலஸ்தீனர்களின் இடம்பெயர்வு, வெகுஜன கூட்டுப் படுகொலைகள் மற்றும் உள்கட்டமைப்பு அழிப்பு ஆகியவற்றிற்கு உடந்தையாக இருந்து லாபம் ஈட்டும் சுமார் ஆயிரம் பன்னாட்டு பகாசுர பெரு நிறுவனங்கள் பற்றிய தரவுத்தளம் வழியாக பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்திருக்கின்றன. அல்பானீஸ் அம்மையாரின் அறிக்கை இந்த தோற்றப்பாட்டை ‘குடியேற்ற காலனித்துவ ஆக்கிரமிப்புப் பொருளாதாரத்திலிருந்து ‘இனப்படுகொலைப் பொருளாதாரத்திற்கு மாறுவது’ என வர்ணித்துள்ளது. “இது தெளிவானதோர் இனப்படுகொலை சார்ந்த பொருளாதார ஏற்பாடு. இதில் தங்கள் செயல்பாடுகளை ஒரு வெகுஜன மரண இயந்திரத்தின் கூறுகளாக கோர்பரேட் நிறுவனங்கள் மாற்றியமைத்துள்ளன. இது ஒரு பிறழ்வு அல்ல; மாறாக இனவெறி வன்முறை, உடமைகளைப் பறித்தெடுத்தல், மக்களை அடைத்துவைத்து கொடுமைபுரிதல், மற்றும் பலவந்தமாக வெளியேற்றுதல் மூலம் செயல்படுத்தப்படும் உலகளாவிய முதலாளித்துவத்தின் ஒரு அம்சம் ஆகிவிட்டது. இது பேரழிவை செல்வக் குவிப்பாக மாற்றுகிறது” என அல்பானீஸ் விளக்குகிறார்.
அக்டோபர் 2023க்குப் பிறகு, பாலஸ்தீனியர்களது வெளியேற்றத்தை விரைவுபடுத்தப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் இராணுவ தொழில்நுட்பங்கள் மக்கள் திரள் கொலை மற்றும் பேரழிவுக்கான கருவிகளாக மாறிவிட்டன; இதனால் காசா மற்றும் மேற்குக் கரையின் சில பகுதிகள் வசிக்க முடியாததாக மாறிவிட்டன. பொதுவாகப் பிரிவினை/இனஒதுக்கலை அமுல்படுத்தப் பயன்படுத்தப்படும் கண்காணிப்பு மற்றும் சிறைவாசத்துக்கான தொழில்நுட்பங்கள், பாலஸ்தீன மக்களை கண்மூடித்தனமாக குறிவைத்து அழிப்பதற்கான கருவிகளாக உருமாறியுள்ளன. மேற்குக் கரையில் வீடுகளை இடிப்பது, உள்கட்டமைப்பு வசதிகளை அழிப்பது மற்றும் வளங்களை பறிமுதல் செய்வதற்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கனரக இயந்திரங்கள், காசாவின் நகர்ப்புற நிலப்பரப்பை அழிக்கவும், இடம்பெயர்ந்த மக்கள் திரும்பி வந்து ஒரு சமூகமாக மீண்டும் உருவாவதைத் தடுக்கவும் தொடராக மீளப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
அல்பானீஸின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அதே பன்னாட்டு நிறுவனங்களில் பல – அமேசான், மைக்ரோசொப்ட், பலந்திர் மற்றும் கூகிள் – அமெரிக்க குடியேற்ற அமுலாக்கம், ‘கார்செரல்’ எனப்படும் தண்டனை மற்றும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், அவற்றுக்கான கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் வலையமைப்பு, சிறைச்சாலைகளுக்கு அப்பால் பரந்த சமூக உளவு கட்டமைப்புகள் மற்றும் முன்கணிப்பு காவல் பணிகளுக்கான முக்கிய ஒப்பந்ததாரர்களாகவும் உள்ளன. இந்த தொழில்நுட்ப ஜாம்பவான்கள் வெறுமனே இணையாக செயல்படுவதில்லை: அவை ICE தடுப்பு மையங்கள் முதல் முற்றுகையிடப்பட்ட காசா வரை நீண்டு செல்லும் அடக்குமுறையின் உள்கட்டமைப்புகளை ஒருங்கிணைக்க உதவுகின்றன. ICE மற்றும் இஸ்ரேலிய இராணுவம் ஆகிய இரண்டிற்கும் முன்னறிவிப்பு காவல் மென்பொருள், cloud சேவைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) கருவிகளை வழங்குவதன் மூலம், அவை அமெரிக்க குடியேற்றக் கட்டுப்பாட்டின் ‘கார்சரல்’ தர்க்கங்களை பாலஸ்தீனத்தில் ‘அழிக்கும் இயந்திரங்களுடன்’ இணைக்கும் இனவெறி வன்முறையின் ஒரு நாடுகடந்த சுற்றுக்கு உதவுகின்றன. இது ஒரு வழி ஏற்றுமதி அல்ல; மாறாக, பாலஸ்தீனத்தில் உருவாக்கப்பட்ட அடக்குமுறைகள் பலதடவைகள் சரிபார்க்கப்பட்டு, துல்லிய மதிப்பீடுகள் செய்யப்பட்டு, மீண்டும் பயன்படுத்தப்பட்டு, உலகளவில் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைகளில் மீண்டும் இறக்குமதி செய்யப்படும் ஒரு ‘பயன் நுகர் தகவல் கண்ணியை’ இது உருவாக்குகிறது.
‘இடைத்தடுப்பு வலயங்கள்’ (வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பலஸ்தீனம் மற்றும் வேறு எல்லையில் உள்ள பிரதேசங்களை ஆக்கிரமித்தல்) என்ற பெயரில் அண்டை நாடுகளின் நிலங்களை இஸ்ரேல் ஆக்கிரமிப்பது போல, அமெரிக்கா அரிசோனாவில் உள்ள டோஹோனோ ஓ’ ஓதம் என்ற பிரதேசத்தில் பூர்வீக அமெரிக்க நிலத்துக்கும் மெக்சிக்கோவின் மாநிலமான சோனோராவிற்கும் இடையில் எல்லைக் கடவைகளைக் கண்காணிக்க ஒரு இடைத்தடுப்பு வலயத்தின் ‘அமெரிக்கப் பதிப்பை’ நிறுவி இருக்கிறது. உயர் தொழில்நுட்ப எல்லைச் சுவராகச் செயல்படும் இஸ்ரேலிய ‘எல்பிட் சிஸ்டம்ஸ்’ உட்கட்டமைப்பை நிறுவுவதன் வழியாக, பூர்வீக அமெரிக்க நிலங்களை தொந்தரவுக்கு ஆளாக்கி, அவர்களது மூதாதையர் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கும் மயானங்களுக்குரிய அந்தஸ்தை துவம்சம் செய்து, அவர்களின் சமூக உறுப்பினர்களை பலத்த கெடுபிடிகளின் கீழ் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகள் கொண்ட இராணுவமயமாக்கப்பட்ட மண்டலத்தின் கீழ் வாழ வேண்டிய கட்டாயத்தில் வீழ்த்தி உள்ளது. மத்திய கிழக்கையும் வட ஆபிரிக்காவையும் உள்ளடக்கிய (MENA) எனப்படும் பிராந்தியம் தொடக்கம் இந்தியா விலிருந்து எல் சால்வடோர் வரை இருக்கும் ‘குடியேற்றக்காரர்கள் உருவாக்கிய காலனித்துவ முகாம்’ முழுவதும், மேலே விவரித்த இஸ்ரேலின் ‘எல்லை தொழில்துறை வளாகங்கள்’ மற்றும் ‘எல்லைக் காவல், இராணுவமயமாக்கல் மற்றும் அவற்றுக்கான பகாசுரப் பெருநிறுவன முதலீடுகளின் சங்கமத்தை’ பரவலாகக் காணமுடிகிறது.
சியோனிசம், ‘எல்லைகள் அற்ற’ – ‘எல்லைகள் கொண்ட’ நிறுவனமயப்பட்ட இனவெறி அமைப்பாக தனது செயற்பாட்டை விரிவாக்கம் செய்திருக்கிறது. இனவெறியை அடிப்படையாக கொண்ட ஓர் அரசை நிர்மாணித்ததன் மூலம் கடுமையான இனரீதியான ‘எல்லை’களை அது அமுல்படுத்துகிறது. பிராந்திய விரிவாக்கம் என்ற பெயரில் ‘இடப்பெயர்ச்சியை’ மேற்கொள்ளவும், இயல்பான மானிட ஊடாடல்களை ‘விலக்கவும்’ முடியுமான அதிகாரம் கைவரப் பெற்றதோர் பகாசுர கொலை இயந்திரமாக விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. அது உருவாக்கும் இன வன்முறையின் தர்க்கங்களும், அவற்றை சாத்தியப்படுத்துவதற்கான துல்லியமான தொழில்நுட்பங்களும் இஸ்ரேலிய அரசின் தற்காலிக எல்லைகளுக்குள் மாத்திரம் நின்றுவிடவில்லை என்பது ஒரு கசப்பான யதார்த்தமாகும். இராணுவ ஏற்றுமதிகள், இராஜதந்திர கூட்டணிகள் மற்றும் சித்தாந்த உறவுகள் மூலம், சியோனிச நடைமுறைகள் உலகளாவிய பாதுகாப்பு உட்கட்டமைப்புகள் வழியாகச் சென்று, வெள்ளை மேலாதிக்கம் மற்றும் இஸ்லாமிய வெறுப்பின் தற்போதைய தொகுப்புகளில் இயல்பாகத் தங்களை இணைத்துக் கொள்கின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், சியோனிசம் ஏனைய பிரதேசங்களில் இனஒதுக்கல் ஆட்சிகளை விரிவுபடுத்தி அவற்றை தீவிரப்படுத்துகிறது. ஏற்கனவே இனரீதியாகப் பிளவுண்டிருக்கும் நாடுகளில் விளிம்பு நிலை இனக்குழுக்களை வெளித்தள்ளுவதற்கான நுட்பங்கள், கண்காணிப்பு, வேவுபார்த்தல், குறிப்பாக தேசம் கடந்த ‘அச்சுறுதல்கள்’ என சந்தேகிக்கப்படும் இனக்குழுக்கள் மீதான நடவடிக்கைகளில் இஸ்ரேலியர்களின் ஆதிக்கம் தீவிரமானது. பாலஸ்தீனத்தை கவ்வியுள்ள இஸ்ரேலின் குடியேற்ற காலனித்துவமும், அதனை சாத்தியப்படுத்தும் ஆக்கிரமிப்பு, இனஒதுக்கல் மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றின் அரசியல் பொருளாதாரமும் உலகளாவிய இனமைய்ய முதலாளித்துவத்திற்கு இணையாக செயல்படவில்லை: அது உலகாயுத ரீதியாக முதலாளித்துவத்தின் அடிமடியில் உட்பொதிந்துள்ளது. தேச எல்லைகளுக்கு அப்பால் அதன் வன்முறைத் தர்க்கங்களை வலுவாக நிலைநிறுத்தி அவற்றை தொடராக மீளுருவாக்கும் இயலுமையையும் கொண்டிருக்கிறது. எனவே, சியோனிசம் என்பது எல்லைகளற்ற இனத்துவ நடவடிக்கைகளுக்கான ஒரு திட்டமாகவும், ஒரு வாகனமாகவும் உள்ளது.
நாடுகடந்த சியோனிச எதிர்ப்பு அரசியல் கூட்டு ஒருமைப்பாட்டுக்காக
நாம் வாதிட்டது போல, சியோனிசத்தின் நாடுகடந்த அரசு அபிலாஷைகள் ஏககாலத்தில் விரிவாக்கம் மற்றும் நெரித்தல் வழியாக கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. அதன் இனமேலாண்மை குடியேற்றத் திட்டம் மத்திய கிழக்கிற்குள் அழித்தொழிப்புவாத எல்லை நடைமுறைகள் மூலம் இஸ்ரேலிய குடியேறிகளுக்கான ‘தேசிய இடத் தளத்தை’ விரிவுபடுத்திக் கொண்டே இருக்கிறது. சியோனிசத்தின் எல்லை குறித்தான தர்க்கங்கள் மற்றும் அதன் கொலைத் தொழில்நுட்பங்களின் ஏற்றுமதி, தற்போதுள்ள இனவெறி, கீழைத்தேயவாத மற்றும் இஸ்லாமிய வெறுப்பை அடித்தளமாகக் கொண்ட ‘அசைக்கமுடியாத’ ஆட்சிகளை, இஸ்ரேல் தவிர்ந்த வேறு இடங்களில் வளர்த்துவிட்டு அவற்றை தீவிரப்படுத்துகிறது. சியோனிச சித்தாந்தமும் யதார்த்தத்தில் நடைமுறையில் உள்ள அதன் செயற்பாடுகளும் வரலாற்று ரீதியான பாலஸ்தீனத்தில் மாத்திரமன்றி தேசங்கள் கடந்தும், அருகிலும் – தொலைவிலும் இனவெறி ஆதனக் கொள்ளையையும், அதனடியான வெளியேற்றம் மற்றும் இடப்பெயர்ச்சியையும் உருவாக்கியவண்ணமே இருக்கின்றன. இனவெறி எதிர்ப்பு, முதலாளித்துவ எதிர்ப்பு மற்றும் புலம்பெயர்வோருக்கான நீதி அரசியலில் வேரூன்றிய, தேசங்கள் கடந்ததோர் அரசியல் ஒருமைப்பாட்டினையும் பரஸ்பர ஒத்துழைப்பையும் வளர்ப்பதற்கு சியோனிசம் என்ற விஷச்செடி மீதான உலகளாவிய ‘நிராகரிப்பு’ இன்றியமையாதது.
எல்லை எதிர்ப்பு மற்றும் சியோனிச எதிர்ப்பு இயக்கங்களுக்கு இடையில் அர்த்தமுள்ள ஒருங்கிணைப்பைக் கட்டியெழுப்புவதில், குறியீட்டுத் தன்மைகொண்ட ஒருமைப்பாட்டில் இருந்து நிலையான, கூட்டு நடவடிக்கையை நோக்கிய சீரமைப்பை உருவாக்கும் இலக்கை நோக்கி நகர வேண்டும். இதற்காக, நமது போராட்டங்களைப் பிரிக்கும் எல்லைகளைத் தகர்த்து, இனமைய்ய முதலாளித்துவம், குடியேற்ற காலனித்துவம் மற்றும் எல்லை ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட அமைப்புகளுக்கு எதிராக ஒரு ஒருங்கிணைந்த முன்னணியை உருவாக்க வேண்டும். இது வெறுமனே ஒரு தத்துவார்த்த இலட்சியம் அல்ல, மாறாக காலப் பொருத்தம் மிக்கதோர் அரசியல் தேவை: இடம்பெயரும் சுதந்திரம், தங்கும் சுதந்திரம் மற்றும் மீளத் திரும்பும் சுதந்திரம் ஆகியவை மானிட இயல்பிலிருந்து பிரிக்க முடியாதவை; மேலும், ஆழமான நாடுகடந்த ஒற்றுமையின் மூலம் மாத்திரமே மனித குலத்திடமிருந்து பறிபோயிருக்கும் இந்த சுதந்திரங்களை மீட்டெடுக்க முடியும். இனரீதியாக நிலம் கையகப்படுத்துதல், ‘சோஷியல் எஞ்சினியரிங்’ எனப்படும் சூட்சுமமான மக்கள்தொகைக் கட்டுப்பாட்டுப் பொறியமைப்புகள், மற்றும் இயல்பான மானிட நடமாட்டத்தை குற்றமாக்குதல் ஆகியவற்றில் வேரூன்றித் திளைத்து நிற்கும் மானிடகுல விரோத சியோனிசத்தின் ‘எல்லைத் தர்க்கம்’ கனடா மற்றும் அமெரிக்கா போன்ற குடியேறிய நாடுகளின் ‘தடுப்புக் கட்டமைப்பு’களில் எதிரொலிக்கிறது. இஸ்ரேலிய எல்லைசார் தொழில்நுட்பங்கள், கூட்டக் கட்டுப்பாட்டு ஆயுதங்கள், கண்காணிப்பு மென்பொருள் மற்றும் காவல் தந்திரோபாயங்கள் உலகெங்கிலும் உள்ள இனவெறி – இனஒதுக்கல் அராஜக ஆட்சிகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு அவை அந்நாடுகளின் பூர்வீக மக்கள் மீது தீவிரமாகப் பயன்படுத்தப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்படுகின்றன. இதையொட்டி, நாடுகடத்தல் ஆட்சிகள், அகதிகளை தடைசெய்தல், மற்றும் பெருந்திரள் மக்கள்மீது கட்டவிழ்க்கப்படும் சிறைவாசம் ஆகியவற்றால் ஆள்வோர் மீதான அச்சம் உருவாக்கப்படுகிறது. பாலஸ்தீனத்தில் இடம்பெறும் அரசு வன்முறையை புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற தேசங்களில் இருக்கும் பூர்வ குடியினரின் போராட்டங்களுடன் ஒருங்கிணைக்கும் உலகமயமாக்கப்பட்ட பாதுகாப்பு தர்க்கத்தால் அவை இலாவகமாக வடிவமைக்கப்படுகின்றன.
இந்த ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை தெளிவாகவும், செயல்படுத்தக் கூடியதாகவும், நிறுவனரீதியாக அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு உறுதிமிக்க அரசியல் பணிகள் மேற்கொள்ளப்படுதல் அவசியம். இஸ்ரேல் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான சட்ட அமுலாக்கம் மற்றும் இராணுவ பரிமாற்ற திட்டங்களுக்கு சவாலாக அமையும் வகையிலான கூட்டுப் பிரச்சார நடவடிக்கைகளை திட்டமிடலும் செயற்படுத்தலும். கண்காணிப்பு உள்கட்டமைப்பை உருவாக்குவதில் சியோனிச இராணுவ-தொழில்துறை நிறுவனங்களின் நிர்ணயகரமான பங்கை எடுத்துக்காட்டும் நாடுகடத்தல்கள் மற்றும் தடுப்புக்காவல்கள் ஆகியவற்றுக்கு ஒருங்கிணைந்த முறையில் எடுக்கப்படும் பதில் நடவடிக்கைகள். மற்றும் புலம்பெயர்ந்தோர் மற்றும் தேச எல்லை விவகாரங்களில் நீதிக்காகப் போராடும் ஆர்வலர்களை அடக்குவது மட்டுமல்லாது பாலஸ்தீனத்துக்கான ஆதரவு நடவடிக்கைகளை குற்றமாக ஆக்குவதை கண்டித்து எதிர்ப்பதற்கான நடவடிக்கைகள்; ஆகிய மேலே விவரித்த ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அனைத்தும் இவற்றில் அடங்கும். ஐ.சீ.ஈ. தடுப்புக்காவலுக்குப் பிறகு மஹ்மூத் கலீல் கேட்டது போல், “எனது தடுப்புக்காவல், அமெரிக்காவின் இன்றைய நிலைபற்றி பற்றி என்ன சொல்கிறது?”. அவர் இப்போது தடுப்புக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டபோதிலும், பேரரசுக்கு எதிராகப் பேசத் துணிபவர்களை குறிவைக்கும் பரந்த அளவிலான அரசு அடக்குமுறையின் ஒரு பகுதியாக அவரது நாடுகடத்தல் வழக்கு இன்னும் தொடர்கிறது. அவருக்கு நேர்ந்தது போன்றே ருமெய்சா ஓஸ்துர்க், பதர் கான் சூரி மற்றும் அவரவர் குடியேறிய மாநிலங்களில் ‘குற்றவாளிகள் ஆக்கப்பட்ட’ ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரது நேர்வுகள், மாநில ஆட்சிகள் எவ்வாறு ஆட்களைத் தனிமைப்படுத்தவும், ஒடுக்குமுறைக்குள்ளாக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. இந்த தந்திரோபாயங்கள் ஒன்றும் புதியவை அல்ல: பாலஸ்தீனத்துடனான ஒருமைப்பாடு, ஏகதிபத்தியவாதிகளால் கண்காணிப்பு, அடக்குமுறை மற்றும் குற்றத்தன்மைகளொண்டதான பரப்புரைக்கு உள்ளாக்கப்படும் நீண்டகால நடைமுறையை அவை எதிரொலிக்கின்றன; அன்று தொடக்கம் இன்று வரை காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரல்களுக்கு எதிரான முயற்சிகளை வேரறுப்பதற்கு அவை மேற்கொண்ட நடவடிக்கைகளின் வீச்சு காலம் – இடம் ஆகிய இரண்டிலும் விரவிப் பரந்திருக்கின்றன.
உண்மையில், பாலஸ்தீனத்துடனான ஒத்துழைப்பு இயக்கங்கள் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன. குறிப்பாக மூன்றாம் உலக விடுதலை இயக்கங்களின் சகாப்தத்தில், பாலஸ்தீனம் உலகளாவிய எதிர்ப்பின் மையக் கருவியாக உருவெடுத்தபோது, அவை சமீபத்திய நிகழ்வாக இருப்பதற்குப் பதிலாக, சர்வதேசப் போராட்டங்களில் வேரூன்றியுள்ளன. 1960களில் இருந்து, பாலஸ்தீன விடுதலை என்பது ஒரு தனிமையான அல்லது தனிமைப்படுத்தப்பட்ட நோக்கமாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. மாறாக ஆப்பிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட குடியேற்ற காலனித்துவத்தின் பிடியில் சிக்கி தமது மரபார்ந்த முதுசங்களை இழந்து அதன் கீழ்வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட பலகோடி மக்களின் விடுதலைக்கான காலனித்துவ எதிர்ப்பு மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு அடிவானத்தில் தோன்றியதோர் விடிவெள்ளி எனப் புரிந்து கொள்ளப்பட்டது. அந்த மரபு இன்று ‘ப்ளெக் லைவ்ஸ் மெட்டர்’, ‘ஐடில் நோ மோர்’ மற்றும் ‘ஸ்டேன்டிங் ரொக்’இல் இருக்கும் நீர்ப் பாதுகாவலர்கள் போன்ற இயக்கங்களால் முன்னெடுக்கப்படுகிறது. இவை கருப்பு இனவெறி எதிர்ப்பு, பூர்வீக மக்களிடமிருந்து குடியேற்றவாசிகள் மேற்கொள்ளும் நிலப்பறிப்புக்கான எதிர்ப்பு, மற்றும் சுற்றுச்சூழல் அழிவு ஆகியவை சியோனிச குடியேற்ற காலனித்துவத்தை செயல்படுத்தும் அதே உலகளாவிய அமைப்புகளுடன் எவ்வாறு இறுகப் பிணைக்கப்பட்டுள்ளன என்பதை உலகெங்கும் அம்பலப்படுத்தியுள்ளன. உள்ளூர் எதிர்ப்பு என்பது எப்போதும் அதிகாரம் மற்றும் சாத்தியக்கூறுகளின் நாடுகடந்த சுற்றுகளில் சிக்கியுள்ளது என்பதை இந்த இயக்கங்கள் நமக்கு நினைவூட்டியபடி உள்ளன.
தொழிலாளர் இயக்கம் நமக்கு நினைவூட்டுவது போல, முதலாளிதான் பெரும்பாலும் ‘சிறந்த அமைப்பாளர்’. இந்த விஷயத்திலும் அவ்வாறே: அரசின் வன்முறை, இனரீதியான அசைவின்மை மற்றும் காலனித்துவ ஆதிக்கத்தின் பகிரப்பட்ட தர்க்கங்களை அம்பலப்படுத்தி நிற்கிறது. மேலும் அவ்வாறு செய்வதன் மூலம், கவனக்குறைவாக புதிய ஒத்துழைப்புகளை ஊக்குவிக்கிறது. இஸ்ரேலிய இனஒதுக்கல் மற்றும் இனப்படுகொலையுடன் தொடர்புடைய சரக்குகளை ஏற்றவோ அல்லது இறக்கவோ மறுத்துவிட்ட துறைமுகத் தொழிலாளர்கள் மற்றும் தளவாடத் தொழிலாளர்கள் தொழிலாளர் இயக்கத்தின் நடவடிக்கைகளில் இது குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. இந்த மறுப்பு நடவடிக்கைகள் வெறும் எதிர்ப்புச் செயல்கள் மட்டுமல்ல; அவை அநியாயமொன்றுக்கு உடந்தையாக இருப்பதற்கு எதிரான மானசீக மற்றும் பொருள் ரீதியான மறுப்புகளும், தம்மிடமிருந்து சுரண்டப்பட்ட உழைப்பு, தம்மை கட்டுப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் இராணுவமயமாக்கப்பட்ட எல்லைகள் மற்றும் காலனித்துவ ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளைப் புரிந்துகொள்ளும் – அவற்றுக்கான ஏதிர்வினைக்கு ஆயத்தமாகும் ‘வளர்ந்து வரும் பிரக்ஞையின்’ வெளிப்பாடும் ஆகும். அந்த ஒருங்கிணைப்பில், நிகழ்காலத்தின் ‘எல்லை’களுக்கு சவால் விடுக்கும் அளவுக்கு சக்திவாய்ந்த, ஒழிப்புவாத மற்றும் காலனித்துவ எதிர்ப்புக்கான நாடுகடந்ததொரு ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறு உள்ளது. உலகெங்கிலும் உள்ள அமைப்பாளர்களும் சமூகங்களும் திரண்டெழுந்து, சமீபத்திய மாதங்களில் கோஷமிட்டபடி, “பாலஸ்தீனம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் வரை நம்போன்ற எவருக்கும் சுதந்திரம் இல்லை!”
ராவன் அப்துல்பாக்கி ஒரு கல்வியாளர், ஆராய்ச்சியாளர் மற்றும் தொழிலாளர் ஆர்வ செயற்பாட்டாளர். அவர் தற்போது யோர்க் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் முனைவர் பட்டம் பெற்று வருகிறார்.
ராணா சுகாரியேஹ் அமெரிக்க பெய்ரூட் பல்கலைக்கழகத்தில் சமூகவியலில் உதவிப் பேராசிரியராக உள்ளார். கனடாவில் உள்ள பாலஸ்தீனியர்களுடனான ஒத்துழைப்பு, உறவுகள் மற்றும் அரபு உலகில் ஒத்துழைப்பு பொருளாதாரம் குறித்து அவரது ஆய்வு கவனம் செலுத்துகிறது.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
Zionism, or Racism with(out) Borders என்ற தலைப்பில் ‘Spectre’ இணைய இதழில் ஜூலை 25, 2025ல் வெளிவந்த ஆக்கம் இது.