– ஹாத்திம் பஸியன்
இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்திக் கொள்ளும் நோக்கில் தீவிரமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் முஸ்லிம்கள் சிலரின் தற்போதைய நிலைப்பாட்டை விவரிப்பதற்கு ‘முஸ்லிம் சியோனிசம்’ என்ற சொல்தான் பொருத்தமானது; அந்த வார்த்தையாடலை பொதுத் தளத்தில் அறிமுகப்படுத்த வேண்டியுள்ளது. ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்பதைப் பயன்படுத்துவதற்கு நான் தயங்கினேன்; நன்கு யோசித்த பின்னர் அதற்கு பதிலாக ‘முஸ்லிம் சியோனிசம்’ எனும் பதப் பிரயோகத்தை தேர்ந்தெடுத்தேன். குடியேற்றக் காலனித்துவ சக்தியொன்றை அதன் பண்புகளோடு ஆரத்தழுவிக் கொள்வதற்குத் துணிந்திருக்கும் ஒரு பகுதி முஸ்லிம்களின் முயற்சிகள் வெறுமனே உலகாயுத இலாபங்களை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டவை; அவற்றில் அறிவுசார் நியாயத்தன்மை அறவே இல்லை என்பதை அம்பலப்படுத்துவதோடு, யாரும் – எங்கும் தமது காரியங்களின் அடித்தளமாக இவற்றை கைக்கொள்ளக்கூடாது என்பதை இடித்துரைப்பதற்காகவே இந்த ஆக்கம் எழுதப்படுகிறது.
கிறிஸ்தவ சியோனிசத்துடனான இணைப்புகள் ஏற்கனவே இருப்பவைதான். அந்த வகையில் ‘இஸ்லாமிய சியோனிசம்’ என்ற பிரயோகம் எதிர்ப்பைக் கிளர்த்தும். எனவே, முஸ்லிம் சியோனிசம் என்பது ‘இஸ்லாமிய’ என்ற சொற் பயன்பாட்டை விட மிகத் துல்லியமானது.
நிச்சயமாக, இந்த விஷயத்தில் மாற்றுக் கருத்துகளுக்கான வாசல்களை நான் திறந்து வைத்திருக்கிறேன். இருந்தபோதிலும், இது விடயமாக; இறையியல், அறிவாதார முறையியல் மற்றும் அதன் சட்டரீதியான வழிகாட்டல்களின் பிரகாரம் இஸ்லாத்தின் நிலைப்பாடு என்ன என்பதற்கும்; தனிநபர்களாக, முஸ்லிம் தலைவர்கள் என்ற வகையில், அல்லது ஒரு குழுவாக முஸ்லிம்கள் என்ன செய்கிறார்கள் என்பதற்கும் இடையில் பாரியதோர் வேறுபாட்டை நான் காண்கிறேன். சில சமயங்களில் தனிநபர்கள், இந்தத் தொடர்பை, தங்கள் செயல்களை நியாயப்படுத்துவதற்கு அல்லது ஏனையோரது உணர்வை மழுங்கடிப்பதற்குமான ஒரு வழியாக பாவித்த போதிலும் ஒரு முஸ்லிம் செய்யும் அனைத்தும் ‘இஸ்லாமாக’வோ அல்லது இஸ்லாம் அல்ல என்றோ கருதப்படுவதில்லை.
இங்கே, சியோனிச குடியேற்ற காலனித்துவத்தை ஏற்றுக்கொள்ளும் முஸ்லிம்களின் தற்போதைய தலைமுறையினர், இஸ்லாமிய அறிவாதார முறையியலில் இருந்தும் அதன் நீதி நெறி சார்ந்த தூதின் சாராம்சத்தில் இருந்தும் முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் உறுதியாகக் கூறலாம். சமீபத்தில் ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தில்’ சேர்ந்துகொள்வதற்கு அரபு மற்றும் முஸ்லிம் அரசுகள் முண்டியடித்துக்கொண்டு ஒன்று திரண்டதும், அதை நபி இப்ராஹிம் (அலை) அவர்களது பெயரைப் பாவித்து வடிவமைத்ததும், முஸ்லிம் சியோனிசத்தின் நகர்வை துல்லியமாக சுட்டிக்காட்டுகிறது. இந்த ஒப்பந்தம் பற்றி பலவாறான பரப்புரைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் அது பலஸ்தீனத்தை விழுங்கி ஏப்பமிட்டிருக்கும் குடியேற்றக் காலனித்துவத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ‘சமாதான ஒப்பந்தம்’ அல்ல. அதற்கு இஸ்லாத்தோடு அல்லது இஸ்லாமிய விழுமியங்களோடு எந்தத் தொடர்பும் இல்லை என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியும். ‘ஆபிரகாம் ஒப்பந்தத்தின்’ மூலநோக்கம், பலஸ்தீனர்களின் நிலத்தின் மீதான இறையாண்மை உரிமைகளையும், அவர்கள் தமது பூர்வீக நிலத்துக்கு திரும்பி வரும் உரிமையையும் முற்றுமுழுதாகப் புறக்கணிப்பதாகும். அதுமாத்திரமன்றி, இறைதூதர் இப்ராஹிம் (அலை) அவர்களது பெயரைப் பயன்படுத்தி, இஸ்ரேல் எனும் சட்டவிரோத இனஒதுக்கல் காலனித்துவ நாடு, பலஸ்தீனர்களது நிலத்தை சூறையாடுவதற்கான ஒப்புதலை அரேபியர்கள் மற்றும் முஸ்லிம் நாடுகளிடமிருந்து பெற்று, அவர்களோடு பொருளாதார, அரசியல் மற்றும் சமூக உறவுகளை வளர்த்துக் கொள்ள அனுமதிக்கும் ஒரு கள்ளத்தனமானதோர் முயற்சியாகும்.
முஸ்லிம் சியோனிசம் என்றால் என்ன? முஸ்லிம் சியோனிசம் என்பது இஸ்லாமிய இறையியல், அறிவாதார முறையியல் மற்றும் அதன் சட்டரீதியான வழிகாட்டல்களை மிக நுணுக்கமாக துஷ்பிரயோகம் செய்து, அந்தப் பெயர்களைத் தாங்கிய போர்வைகளோடு, சியோனிச குடியேற்ற காலனித்துவ திட்டத்துடன் செயற்படும் இஸ்ரேலுடன், பலஸ்தீனத்திலோ அல்லது வெளி நாடுகளிலோ உறவு கொண்டாடுதலைக் குறிக்கும். தனி நபர்கள் மற்றும் அரசுகள், பலஸ்தீனத்தை காவுகொடுத்துவிட்டு அதற்கான விலையாக சியோனிஸம் வழங்கும் ‘இயல்பாக்கம்’ அல்லது ‘இப்ராஹீமிய சகோதரர்களுனான சகவாழ்வு’ போன்ற போலியான கோஷங்களை தமது உலகாயுத நலன்களுக்காக, பின் தொடர்தலே அதன் உள்ளடக்கம் எனலாம். சியோனிச குடியேற்ற காலனித்துவத்தையும் அதன் அட்டூழியங்களையும் ‘இயல்பாக்கம்’ செய்து அங்கீகரிப்பதை இலக்காகக் கொண்டு திருக்குர்ஆனின் தேர்ந்தெடுக்கப்பட்ட பல வசனங்களைக் கொண்டு பரப்புரை மேற்கொள்வதற்காகவே, இவர்களில் ஒரு பெருங் கூட்டம் தயார் நிலையில் உள்ளது. (அவை அனைத்துமே நடப்பில் உள்ள சூழலுக்கு புறம்பாக மேற்கோள் காட்டப்பட்டு, அவர்களது சாயம் வெளுத்திருக்கின்றது; இருந்போதிலும் அவர்களது பரப்புரைகள் ஓயவில்லை என்பது தனிக்கதை)
முஸ்லிம் சியோனிஸ்டுகள், இஸ்ரேல் மற்றும் சியோனிசத்துடன் தாங்கள் கொண்டிருக்கும் உறவுகளை பாதுகாப்பதை முதன்மை இலக்காக கொண்டு, பலஸ்தீனத்தில் உருவாகி இருக்கும் நிலைமைகளுக்கு பாலஸ்தீனர்களையே குற்றம்சாட்டுதல் (victim blaming), அவர்களைப் புறக்கணித்தல், மௌனமாக்குதல் மற்றும் அவர்களின் நடவடிக்கைகளை பேய்த்தனமாக சித்தரித்தல் (demonization) ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடுவர். சியோனிசத்துடன் உறவுகளை வளர்ப்பதில், குடியேற்ற காலனித்துவத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் பலஸ்தீனர்களைக் குறை கூறுவது, முஸ்லிம் சியோனிஸ்டுகளது ‘மதிநுட்பம்’ மற்றும் ‘புத்திசாலித்தனத்திற்கு’ சான்றாகக் காட்டப்படுகிறது. முஸ்லிம் சியோனிசம், மேற்கு மற்றும் யூத சியோனிசத்துடனான செல்வாக்கு வட்டங்களில் தனது ஈடுபாடு மற்றும் அணுக்கம் ஆகியவை சவாலுக்கு உட்படும்போது, தமது தரப்பு நியாயமாக ‘இஸ்ரேலின் கருத்து’ என்ற சப்பைக்கட்டை உபயோகிப்பதை ஒருபோதும் தவறவிடுவதே இல்லை. இதுவே அவர்களது சீரழிந்த தரகு – போலி முஸ்லிம் நிலைப்பாடாகிறது. சிலர் என்ன நடக்கிறது என்றே தெரியாத ஒரு முகமூடியின் பின்னால் ஒளிந்து கொள்கிறார்கள். மேலும், எது நடந்தபோதிலும் – யார் இருந்தாலும், உணர்வில்லாத பொம்மைகள் போன்று, சகிப்புத்தன்மையையும் இஸ்லாத்தின் நேர்மறையான பிம்பத்தையும் வெறுமனே ஒப்புவிப்பதில் மாத்திரமே கவனம் செலுத்துகிறார்கள்.
பலஸ்தீனத்தின் எதிர்ப்பு தோல்வியடைந்துவிட்டதாக முஸ்லிம் சியோனிசம் கூறுகிறது. மேலும் இந்த முஸ்லிம் – சியோனிஸ்டுகள், வி.ஐ.பி. கட்டுமானத் திட்டங்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் ஏனைய கூட்டு முதலீடுகளில் இஸ்ரேல் மற்றும் சியோனிசத்துடன் கைகோர்த்து நிற்பதன் மூலம், “உண்மையாகவே பாலஸ்தீனியர்களுக்கு நாம் உதவுகிறோம்” என்கிறார்கள். சிரிக்க வேண்டாம்! ஆனால், அவர்களது இந்த கடைந்தெடுத்த சுயநலத்தை நம்புவோர் உலகில் இன்னும் சிலர் உள்ளனர். இந்த முஸ்லிம் சியோனிஸ்டுகளில் சிலர், தங்களது நடவடிக்கைகள் அனைத்தும் பலஸ்தீனத்தின் சுதந்திரத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படுவதாகக் கூறும் அளவுக்குச் செல்கிறார்கள். ஆனால், எந்த ஒரு விடயத்திலும் பலஸ்தீனர்களின் அபிப்பிராயம் என்ன என்பதை கேட்பதில்லை. எப்போதும் ‘தற்கொலை குண்டுத் தாக்குதல்’ என்ற சியோனிசத்தின் தொடர்ச்சியான ஆலாபனையையே தமது முதன்மைப் பிரச்சினையாக மீட்டி மீட்டிக் கூறுவார்கள். அதே வேளை, இஸ்ரேலின் பக்கபலத்தோடு அவர்களின் ‘அமைதி வகையறா இஸ்லாத்தை’ வலியுறுத்துவதற்கு இடமளிக்கப்பட வேண்டும் என்ற உள்ளார்ந்த எதிர்பார்ப்பே அதில் உள்ளது. முஸ்லிம் சியோனிசம் ‘நல்ல’ இஸ்லாத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதே நேரத்தில் ‘கெட்ட’ இஸ்லாம் பாலஸ்தீனத்தில் வாழ்கிறது. முஸ்லிம் சியோனிசம் ‘இஸ்லாத்தைப் பாதுகாக்கும்’ வேடத்தில் நேர்த்தியாக உடையணிந்து, இஸ்ரேலின் ‘ஹஸ்பரா’ எனப்படும் சியோனிச நியாயங்களை பரப்புரை செய்கிறது.
இயல்பாக்கத்தை நோக்கமாகக் கொண்டு அரச மட்டங்களில் இடம்பெற்று வரும் ‘சரசமாடல்’ முயற்சிகள் ஒன்றும் புதியவை அல்ல; மேலும் சியோனிசம் இப்பிராந்தியத்தில் கால்பதித்ததில் இருந்து அவை ரகசியமாக நடந்துகொண்டு தான் இருக்கின்றன. ஆனால், அவற்றை இஸ்லாமிய போர்வை மற்றும் இஸ்லாமிய சாயத்தோடு ஒப்பனை செய்து அலங்கரித்துக் காட்டும் முயற்சி ஒப்பீட்டளவில் சமீபத்தில் துவங்கியது எனலாம். முன்பொருமுறை, இஸ்ரேலுடனான இதைப் போன்ற சாயலில் அமைந்த இயல்பாக்கத்தின் நகர்வு ஒன்று அன்வர் சதாத்தின் கேம்ப் டேவிட் ஒப்பந்தத்துடன் தொடங்கியது. ஆவணங்கள் மற்றும் வெளியீடுகளில் குர்ஆன் வசனங்களைப் பயன்படுத்துவதும், சியோனிசத்தைத் கட்டித் தழுவிக் கொள்வதற்கான மதரீதியான ‘இஸ்லாமிய’ ஜிகினாப் போர்வையாக அமையும் விதத்தில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டதோர் ஃபத்வாவும் இவற்றில் அடங்கும். கேம்ப் டேவிட் ஒப்பந்தம் என்பது அன்வர் சதாத்தின் எகிப்தை மேற்குலகத்தை நோக்கி மீளவும் திசைமுகப்படுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும். பனிப்போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலப்பகுதியின் உச்சத்தில் இது, சதாத்தின் ஒரு மூலோபாய நடவடிக்கையாக இருந்தது. மேலும், அரசியல் அதிகாரப் பின்புலத்தில் குர்ஆனும் – இஸ்லாமும், அன்வர் சாதாத்தின் அந்த நிலைமாறுகட்ட நடவடிக்கைகளுக்கு மதரீதியான நியாயப்பாட்டை வழங்குவதற்கான வினைமுறை அணிகலன்களாக மற்றும் அனுகூலக் கருவிகளாகவே பயன்படுத்தப்பட்டன.
ஃபத்வாக்களை வெளியிட்ட, அல்லது ஏதேனும் ஒரு மட்டத்தில் இந்த செயற்பாடுகளில் பங்கேற்ற மத அறிஞர்கள் அரச ஊழியர்களாகச் செயல்பட்டனர். மேலும் அவர்களின் நிலைப்பாடுகள் இஸ்லாமிய பாரம்பரியத்தின் அடித்தளமாக இருப்பதற்குப் பதிலாக அரசாங்கத்தின் முன்னுரிமைகளைப் பிரதிபலித்தன. கேம்ப் டேவிட் ஒப்பந்தம் கையெழுத்தான உடனேயே, இஸ்ரேல் லெபனான் மீதான தனது போரைத் தொடங்கியது; இது பெய்ரூத் முற்றுகையின் போது இஸ்ரேலினால் நடாத்தப்பட்ட சப்ரா மற்றும் ஷதில்லா இனசுத்தீகரிப்புக்கும், ஆயிரக்கணக்கானோர் கூட்டாகப் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாக அமைந்தது. (லெபனானில் தஞ்சமடைந்திருந்த அகதிகள் வாழும் இரண்டு முகாம்களைக் குறிவைத்து, இஸ்ரேலிய இராணுவத்தினால் திட்டமிட்ட அடிப்படையில் ஒரு சில நாட்களுக்குள் நடாத்தப்பட்ட இந்த இன அழிப்பு படுகொலைகளில் உயிரிழந்தோர் சுமார் 3500 என மதிப்பிடப்பட்டது. இவை முறையாக ஆவணப்படுத்தப்பட்ட இஸ்ரேலின் சீரியல் ‘இனப்படுகொலைகளது’ தொடர்ச்சியில் ஒன்றாகும்)
முஸ்லிம் சியோனிசத்தை இயல்பாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள், மதங்களுக்கு இடையேயான உரையாடலாகவும், யூத மதத்தின் வரலாற்றைப் புரிந்துகொள்ளும் முயற்சியாகவும் சித்தரிக்கப்படுகின்றன. இருந்தபோதிலும், இஸ்ரேலிய குடியேற்றக் காலனித்துவத்தை ஆரத் தழுவுவது, பலஸ்தீனர்களை அரக்கர்களாக சித்தரிப்பது மற்றும் *BDS இயக்கத்துக்கு எதிரான கடும்போக்கு நிலைப்பாட்டை எடுப்பது ஆகியன, ஒருவர் சாதாரணமாக யூத மதத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சிக்கு தேவையற்றவை. (*BDS – Boycott, Divestment, and Sanctions என்பது இஸ்ரேலுக்கு எதிரான புறக்கணிப்புகள், விலக்குகள் மற்றும் பொருளாதாரத் தடைகளை ஊக்குவிக்கும் ஒரு வன்முறையற்ற பலஸ்தீனர்கள் தலைமை தாங்கும் இயக்கமாகும்)
மதக் கதையாடலை, (எல்லைதாண்டாது) மருந்தைப் போலப் பயன்படுத்தி, பாலஸ்தீனத்தில் இஸ்ரேலின் குடியேற்றக் காலனித்துவ நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதற்கும், அவற்றை எளிதாக்குவதற்கும், அரபு மற்றும் முஸ்லிம் விவகாரங்களில் மேற்கத்திய மற்றும் இஸ்ரேலிய தலையீட்டை, தற்போது இருப்பதைவிட மேலும் அதிகப்படுத்துவதற்கும் ஏதுவான திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான செயற்பாடுகளிலும் முஸ்லிம் சியோனிசம் ஈடுபட்டுள்ளது.
இறுதியாக, அரபு மற்றும் முஸ்லிம் உலகின் பிரதான ஊடகங்களில் முஸ்லிம் சியோனிசத்திற்கு தேவைக்கு அதிக அளவிலான ஆக்ஸிஜன் வழங்கப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் சமூக ஊடகங்களில் செல்வாக்கு செலுத்துபவர்களின் விசுவாசத்தைப் பயன்படுத்தி அல்லது அவர்களை விலைக்கு வாங்கி, சந்தேகம் ஏற்படாத வகையில், ஒரு பாரிய அரபு மற்றும் முஸ்லிம் மக்கள் தொகையின் மூளைகளுக்குள் இந்த ‘இயல்பாக்கத்தின் கதையைத்’ திணிக்கும் கைங்கரியத்தை அது நிறைவேற்றிய வண்ணம் இருக்கிறது.
ஹாத்திம் பஸியன் (Hatem Bazian), இஸ்லாமோபோபியா கற்கைகளுக்கான நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்; ஸைத்தூனா கல்லூரி பேராசிரியர்; கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு மொழிகள் கலாச்சாரங்கள் மற்றும் ஆசிய – அமெரிக்க கற்கைகளுக்கான விரிவுரையாளர்; இஸ்லாமோபோபியா பருவ இதழின் ஆசிரியர்; [IISRA – International Islamophobia Studies Research Association] சர்வதேச இஸ்லாமோபோபியா கற்கைகள் மற்றும் ஆய்வுகளுக்கான சங்கத்தின் தலைவர்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி