– நிக் எஸ்டெஸ்
காசாவில் நடந்துவரும் படுகொலைகளுக்கு முடிவே தெரியவில்லை. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சில், ‘அல் அக்ஸா வெள்ளம்’ தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இறுதியாக, காசாவில் இனப்படுகொலைக்கான போரொன்றை இஸ்ரேல் நடாத்தி வருவதாக பிரகடனம் செய்துள்ளது.
ஏராளமான அட்டூழியத்தின் கதைகளுடன், நூற்றுக்கணக்கான அடிக்குறிப்புகளுடன், எழுபத்திரண்டு பக்கங்கள் அந்த மனித பேரழிவை பட்டியலிடுகின்றன. அவற்றின் விவரங்கள் கொடூரமானவை. அழித்தொழிப்பு, சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் மற்றும் பட்டினி போட்டுக் கொல்லுதல் ஆகியன புறம்பானவை அல்ல; மாறாக நேரடியான இனப்படுகொலை ஒன்றுக்கான முறையான கருவிகள் அவை.
இணையதளம் உள்ள ஒவ்வொருவருக்கும் வீடியோக்கள், நேரலை ஒளிபரப்புகள், புகைப்படங்கள் மற்றும் நேரடி சாட்சியங்களாக நம் உள்ளங்கைகளுக்கு வந்துசேர்கின்றன. இஸ்ரேல் நடாத்தும் கொலைக்ககொலைக் களத்தின் ஆதாரங்கள் உலகெங்கும் விரவிக் கிடக்கின்றன. மனசாட்சி உள்ள ஒவ்வொருவருக்கும் இந்த சாட்சி போதுமானது.
அப்படியானால், ஏன் இந்த ஐ. நா நிறுவனம் வெளிப்படையாக இனப்படுகொலை பற்றிப் பேச இவ்வளவு காலம் பிடித்தது? பல மாதங்களாகத் தொடரும் படுகொலைகள் மற்றும் தினசரி பேரழிவின் காட்சிகளை பலர் பார்த்து இது இனப்படுகொலைதான் என்று வரையறை செய்த பிறகு, இந்த சர்வதேச அமைப்பு ஏன் இப்போது உத்தியோகபூர்வமாகப் பெயரிட்டது?
இதுவரை, ஐக்கிய நாடுகள் சபை இனப்படுகொலையைத் தடுக்க விரும்பவில்லை; மற்றும் அதனால் முடியவில்லை. உறுப்பு நாடுகளும் கூட நாம் கண்ட அனைத்தையும் கண்டிருக்கின்றன. ஈரான் மற்றும் எமன் உள்ளிட்ட பலஸ்தீனத்துக்கு ஆதரவான இஸ்ரேல் எதிர்ப்பு நடவடிக்கைகள் இருந்தபோதிலும், இந்தப் பேரவலத்தை தடுப்பதற்கான நேரடி இராணுவத் தலையீடுகள் எதுவும் இடம்பெறவில்லை.
அரசியல் ரீதியாக, ராஜதந்திர சொல்லாட்சி ரீதியாக மற்றும் பொருள்பலம் கொண்டு இஸ்ரேலின் வன்முறையை இயல்பாக்குவதற்கும், அவற்றை இலாவகமாய் மறைப்பதற்கும் அமெரிக்கா ஒரு தொடர் இயக்கத்தை வழிநடத்திய படி இருக்கின்றது. அதே வேளை ஏனைய நாடுகள் செயல்ரீதியான தலையீடு – அமைதியாயிருத்தல் அல்லது சில சமயங்களில் முனைப்பான முழக்கங்களை வெளிப்படுத்தல் – சரணாகதியடைதல் ஆகிய நிலைப்பாடுகளுக்கிடையில் தள்ளாடிய வண்ணம் இருக்கின்றனர். உலகம் தெளிவான இரண்டு முகாம்களாகப் பிரிந்துள்ளது: இனப்படுகொலையைத் தடுக்க முயற்சிப்பவர்கள் மற்றும் அதைத் தொடர அனுமதித்து அதற்காக தங்களால் முடிந்த அனைத்தையும் செய்பவர்கள். இரண்டாவது குழுவில் உள்ளவர்கள், எதையும் செய்யாமல் இருப்பது தொடக்கம் இனப்படுகொலையை தீவிரமாக ஊக்குவிப்பது மற்றும் அதில் பங்கேற்பது அல்லது அதை எதிர்ப்பவர்கள் மீதான தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களைக் கொல்வது வரை பரந்த அளவிலான செயல்பாடுகளை இவை உள்ளடக்கி இருக்கின்றன.
“காலனித்துவ உலகத்தின் கட்டமைப்பு (binary oppositions) ‘இருமை எதிர்த் தரப்புகளால்’ ஆனது” என்று ஃபிரான்ஸ் ஃபனான் எழுதினார். இப்போது பலஸ்தீனில் அதனை நிதரிசனமாகக் காண்கிறோம். கொலை பாதகத்தின் களமாக மாறி இருக்கும் அந்தப் பிராந்தியம், அப்பட்டமான இருமை உலகங்களாகப் பிரிக்கப்பட்டு, அதன் வழியாக அதன் வழியாக பலப் பிரயோகத்தால் நுட்பமாக அவர்கள் அகற்றப்படுகிறார்கள். அங்கு இடம்பெறும் நிகழ்வுகள் பலஸ்தீன பூர்வீகவாசிகள் சொந்தமாக உருவாக்கிக் கொண்டவை அல்ல; மாறாக அவர்கள் மீது குடியேற்றக் காலனீயத்தால் கொடூரமாக உந்தித் திணிக்கப்பட்ட நிலைமைகள்தான் அவை. நுட்பத்தை போர் முடிவுக்குக் கொண்டுவருகிறது. மருத்துவமனையின் மீது வீசப்பட்டும் குண்டுகள், குழந்தைகளைத் துண்டு துண்டாகக் கிழித்து எறிவது ஒழுங்கமைக்கப்பட்ட பாலியல் வன்முறைகள் மற்றும் சித்திரவதைகள் என்ற அனைத்தும் அவர்களை நுட்பமாக மனிதநேயமற்ற உலகத்தினுள் கொண்டு செல்லுகிறது. ஆக மொத்தம் திட்டமிட்டதோர் இனப்படுகொலை, மானிட வாழ்வின் இருத்தலுக்கு இன்றியமையாத மனிதநேய பிணைப்பை முடிவுக்குக் கொண்டுவருகிறது.
அதனால்தான் காசாவின் நிகழ்வுகளை முழுமையான ஒரு போரை விடவும், இனப்படுகொலையை விடவும் மேலானதாக நான் பார்க்க ஆரம்பித்தேன். இப்போது வெளிப்படுவது சடங்கு வினைத் தன்மை கொண்ட வன்முறை: கூட்டாக, ஒரு சமய ஆசாரமாக, ஒரு கொடூரம் வாய்ந்த புனிதச் சடங்கு போன்ற கண்டிப்புடன் அது நிறைவேற்றப்படுகிறது. சடங்குரீதியாக மனித உயிர்களைப் பலியிடுதல் என்பது வழக்கொழிந்துபோன ஒன்றாகவோ அல்லது பரபரப்பூட்டும் விடயமாகவோ தோன்றலாம். பொதுவான அந்த சடங்கை முறைப்படுத்தப்பட்ட, மற்றும் அர்த்தமுள்ள வன்முறை என்று நாம் புரிந்து கொண்டால் மாத்திரமே, அர்த்தமற்றதாகத் தோற்றமளிப்பவை உங்கள் முள்ளந்தண்டைச் சில்லிட வைக்கும் யதார்த்தத்தின் குரூரத்தை உணர்வீர்கள். அரசியல் அதிகாரத்தின் துணையோடு பயமுறுத்துவதற்கும், வகை தொகையின்றி உயிர்களை காவுகொள்வதற்கும் அது பயன்படுகிறது.
சீனப் பேராசிரியர் ஜியாங் சூச்சின், சமீபத்திய யூடியூப் விரிவுரையொன்றில் பலஸ்தீன இனப்படுகொலைகளை என்பது சடங்கு ரீதியான மனித உயிர்ப்பலிகள் என்று விவரித்தார். அவரது வரையறைகளுடன் நான் உடன்பட்டபோதிலும், அஸ்டெக்குகள் செய்த மனித உயிர்ப்பலிகளைப் பற்றிய அவரது வரலாற்று உதாரணம், காசாவில் நடைபெற்றுவரும் காலனித்துவ வன்முறையை விளக்கி வெளிக்கொண்டு வருவதை விட அதிகமாக அவற்றை மறைக்கிறது.
காலனித்துவவாதிகள் தாங்கள் கைப்பற்றும் மக்களின் குழுவிற்குள் வன்முறையை ஊதிப் பெருக்கி, அதன் வழியாக தங்கள் சொந்தக் குற்றங்களை மறைக்கிறார்கள். பெரும்பாலும் பூர்வீக மக்களின் மீது இட்டுக்கட்டி, அட்டூழியங்களை முழுவதுமாக அவர்கள்மீது சுமத்தி விடுகிறார்கள். மறுபுறம், மெசோ-அமெரிக்க மக்களின் மீதான ஸ்பானியர்களது இனப்படுகொலை முழுமையான அளவில் இடம்பெற்ற ஒன்றாகும். அது மில்லியன் கணக்கானவர்களைக் கொன்றொழித்தது. மேலும் சில நிபுணர்களின் கூற்றுப்படி, சிறிய பனியுகம் என்று அழைக்கப்படும் உலகளாவிய காலநிலை மாற்றத்திற்கும் அது பங்களித்தது. ஐரோப்பியர் தொடுத்த போர் மற்றும் நோய்கள் Aztecs உட்பட பல பழங்குடி மக்களில் 90 வீதமானோர் வரை கொல்லப்படுவதற்கு காரணமாய் அமைந்தது.
பைபிளின் அதிகாரத்தின் கீழ்,கிறிஸ்தவ சிலுவைக் கொடியின் கீழ், மேலே குறிப்பிட்ட சடங்கு வினைத் தன்மை கொண்ட மிருகத்தனத்தோடு பழங்குடி மக்கள் பெருமளவில் கொல்லப்பட்டனர். ஒப்பீட்டளவில் அவை Aztecs அட்டூழியங்களை விடக் குறைவானவையாகும். இந்த கூட்டுவன்முறைத் தாக்கத்திலிருந்து அமெரிக்காவின் பூர்வீக மக்கள் ஒருபோதும் மீளவில்லை. இங்கு முன்னுதாரணமாகக் குறிப்பிடப்பட வேண்டியது ‘காட்டுமிராண்டித்தனமான’ பூர்வீக மிருகத்தனத்தை அல்ல, மாறாக ‘நாகரிகமடைந்த’ ஐரோப்பிய சடங்குவினைத்தன்மை கொண்ட கூட்டுமனிதப் பலியைத்தான் முதன்மைப்படுத்த வேண்டியுள்ளது. அடிப்படையில், அதுதான் பிரதேசத்தின் காலநிலையையே மாற்றியது.
இருபத்தியோராம் நூற்றாண்டில் இடம்பெற்று வரும் இனப்படுகொலைகளில் கால முரண்பாடுகள் அல்லது காலத்துக்கு ஒவ்வாத தன்மைகள் ஏதுமில்லை. காலனித்துவமும் ஏகாதிபத்தியமும் நினைவுச்சின்னங்கள் அல்ல; அவை மிகத் தெளிவாக அடையாளம் காணக்கூடிய, பல நூற்றாண்டுகளாக நீடித்துவரும் ஒடுக்குமுறையின் வடிவங்களாகவே இன்றும் இருக்கின்றன. பலஸ்தீனர்களின் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் சியோனிச இனப்படுகொலை, மேற்கை இதற்கு முன்னைய ‘வெற்றிகளை’ நோக்கி உந்தித் தள்ளிய அதே ‘பைபிள் விதந்தோதும் நியாயங்களை’ அடிப்படையாகக் கொண்டது.
ஜஸ்டின் போடூரும் (Justin Podur) நானும் ‘இனப்படுகொலைகளின் கைநூலில்’ விவாதித்திருப்பது போல, நீண்ட காலமாக இனப்படுகொலைகளுக்கான பைபிள் ‘மரபுரை மூலமாக’ இந்த செயல்பாடு இடம்பெற்று வந்திருக்கிறது.
நவம்பர் 2023ல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இஸ்ரேலிய படைவீரர்கள் மற்றும் தளபதிகளிடையே உரையாற்றும் போது “அமலேக் (Amalek) உங்களுக்கு என்ன செய்தான் என்பதை நினைவில் கொள்” என நினைவூட்டி அவர்களது வெறித்தனத்தைக் கிளறிவிட்டார். “இது ஒளியின் மகன்களுக்கும் இருளின் மகன்களுக்கும் இடையிலான போர்” என்றார் அவர்!. ஹீப்ரூ பைபிளிலிருந்து வந்த இந்தக் கதை, ஒருவேளை வலிந்து உருவாக்கப்பட்டதாக இருக்கக் கூடும். அதில், அமலேக்கியர்களை அழித்தொழிக்குமாறு கடவுள் யூதர்களுக்குக் கட்டளையிடுகிறார்: “அவர்களிடம் உள்ள அனைத்தையும் முற்றிலுமாக அழித்து விடுங்கள்; அவர்களில் ஒருவரையும் விட்டுவிடாதீர்கள்; ஆண், பெண், குழந்தை, கைக்குழந்தை, மாடு மற்றும் ஆடு, ஒட்டகம் மற்றும் கழுதை ஆகிய அனைத்தையும் கொன்றொழித்து விடுங்கள்.”
இனப்படுகொலைக்கான இத்தகைய பைபிள் ‘தூண்டுகை ஏவல்களுக்கு’ ஐ.நா அறிக்கைகள் கூட விதிவிலக்கானவை அல்ல! ‘மாற்றமுடியாத தலைவிதி’க் கோட்பாடு எப்படியான உள்ளடக்கம் கொண்ட கட்டுக்கதையோ, அதைப் போன்றே சியோனிசத்தின் அடிப்படை பற்றிய கட்டுக்கதைகளும் இருக்கின்றன.
(19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு நம்பவைக்கப்பட்ட Menifesto Destiny எனப்படும் ‘மாற்றமுடியாத தலைவிதி’க் கோட்பாடு, ஆங்கிலேய ஐரோப்பியர், அமெரிக்கக் கண்டங்களை ஏகபோகமாக சூறையாடிக் கொள்வதற்கான நியாயத்தை வழங்கியது)
ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற ஆங்கிலோ குடியேற்றக் காலனியங்கள் சியோனிசத்தினை ஒத்த ‘உள்ளுணர்வோடு’ தம்மைத் தாமே அங்கீகரித்துக்கொள்கின்றன. “நாங்கள் அதை நிறைவேற்றினோம்; எனவே, அது சரியாகத்தான் இருக்க வேண்டும்.” நாகரிகம், மதம் அல்லது இனம் எதுவாக இருந்தபோதிலும், ‘அழித்தொழிப்பு’ என்பது மேன்மையின் சான்றாகும் என்ற மனநிலையுடனேயே குடியேற்றக் காலனீய சமூகங்கள் வாழ்கின்றன.
ஐக்கிய அமெரிக்கா ‘சடங்குவினைத் தன்மை’ கொண்ட தனது சொந்த மனிதப் பலிகொள்ளல் வரலாற்றை உலகின் கண்களுக்கு மறைத்து அழிப்பதில் குறிப்பான வெற்றியை அடைந்திருக்கிறது. அதை வெளிப்படையாக மறைத்து, பின்னர் அதை இயல்பாக்கி, அதன் பின்னர் அதை ஒரு நினைவகப் பாதாளத்துக்கு அனுப்புவதே அந்த வழிமுறையின் தொடராகும்.
எனவே இன்று இடம்பெற்றுக்கொண்டிருக்கும் சடங்கு வினைத்தன்மை கொண்ட மனித உயிர்ப்பலிகளின் விளைவுதான் என்ன? உலகளாவிய கண்டனங்களுக்கு மத்தியிலும், தனது நடவடிக்கைகள் பற்றிய தன்னளவிலான மதிப்பீடுகளோடு, இஸ்ரேல் அதன் இனவழிப்புக் கொடூரங்களை இயல்பாக்கியுள்ளது. இஸ்ரேலின் கொலை பாதக திட்டத்துக்குப் பலியிடப்பட்டிருக்கும் பாலஸ்தீன குழந்தைகளின் விகிதாசார எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு, நாம் இன்னும் ஒரு படி மேலே செல்லலாம்: சியோனிச வன்முறை சடங்குவினை குழந்தைகளைப் பலிகொள்வதற்கான வடிவத்தை எடுத்திருக்கிறது.
பலம் வாய்ந்த ஒருங்கிணைந்த தலையீடு – அதன் விளைவாக உருவாகும் போர் நிறுத்தம் ஆகியவற்றைத் தவிர, இஸ்ரேல் தேர்ந்தெடுத்திருக்கும் பாதையிலிருந்து, இந்த இனப்படுகொலை நிறுத்தப்படும் வரை தொடர்வதைத் தவிர அது வெளியேறுவதற்கு வேறு வழிகள் ஏதும் இல்லை.
நிக் எஸ்டெஸ் (Nick Estes) லோவர் ப்ரூல் சிக்ஸஸ் பழங்குடியைச் சேர்ந்தவர். ஊடகவியலாளர், வரலாற்றாசிரியர் மற்றும் ரெட் நேஷன் பொட்காஸ்ட் ஊடகத்தின் புரவலர். Our History is the Future: Standing Rock Versus the Dakota Access Pipeline, and the Long Tradition of Indigenous Resistance (Verso, 2019) என்ற நூலின் ஆசிரியர்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் counterpunch இணையதளத்தில் How the West Normalizes the Crimes of Zionism என்ற தலைப்பில் செப்டெம்பர் 23, 2025 வெளியானது.