ஜேக்கோபினுடனான ஒரு நேர்காணலில், திரைப்படத் தயாரிப்பாளரும் கல்வியியலாளருமான அரியெல்லா ஆயிஷா அசூலி, மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் சியோனிசச் சித்தாந்தத்தினைப் பயன்படுத்தி பாலஸ்தீனத்தின் இன அழிப்பையும் மத்திய கிழக்கு முழுவதும் பரவி வாழ்ந்த யூத சமூகங்களின் அழிவையும் எவ்வாறு சாத்தியப்படுத்தின என்பது தொடர்பான விரிவான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறார்.
இஸ்ரேலைத் தனது பிறப்பிடமாகக் கொண்ட ஆயிஷா அசூலி, தனது ‘இஸ்ரேலியர்’ என்ற அடையாளத்தைத் தொடர்ச்சியாக நிராகரித்து வருபவர். தனது பத்தொன்பதாவது வயதில் இஸ்ரேலியராக மாறுவதற்கு முன்பு ஆயிஷா அசூலியின் தாயார் ஒரு பாலஸ்தீனிய யூதராக மட்டுமே இருந்தார். சொல்லப்போனால் வரலாற்றின் பெரும்பகுதியில் பாலஸ்தீன யூதர் என்ற கலவையான அடையாளம் மிகச் சாதாரணமான ஒன்றாகவே இருந்து வந்தது. பாலஸ்தீனத்தில் சிறுபான்மையினராக இருந்த யூதர்கள், பல நூற்றாண்டுகளாக முஸ்லிம் பெரும்பான்மையினருடன் அமைதியாக வாழ்ந்து வாழ்ந்தனர்.
எனினும் சியோனிசத்தின் எழுச்சியும் இஸ்ரேலின் உருவாக்கமும் இந்நிலமையை தலைகீழாக்கியது. ஐரோப்பாவில் ஏற்கனவே இன அழிப்புக்கு ஆளாகியிருந்த யூதர்கள், பாலஸ்தீனத்தில் ஐரோப்பிய சியோனிஸ்டுகளின் கனவாக இருந்த இஸ்ரேலின் உருவாக்கத்தை ஆதரிக்கத் துவங்கினர். விளைவாக முஸ்லிம்கள் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது மட்டுமல்லாமல் யூதர்கள் அநேகருக்கு, மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறி இஸ்ரேலில் குடியேறும் நிலையும் ஏற்பட்டது. இவ்வாறு 1948 அரபு-இஸ்ரேலியப் போருக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஒரு மில்லியன் யூதர்கள் மத்திய கிழக்கு நாடுகளை விட்டு வெளியேறி இஸ்ரேலில் குடியமர்ந்தனர்.
இவ்வாறு பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் தொடர்ச்சியான சியோனிச ஆக்கிரமிப்பை அமெரிக்க மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய வரலாற்றின் ஒரு பகுதியாக ஆயிஷா அசூலி ஜெக்கோபினுடனான இந்நேர்காணலில் கவனப்படுத்துகிறார். ஆயிஷா அசூலி Potential History: Unlearning Imperialism (Verso, 2019) என்ற நூலின் ஆசிரியர் என்பதுடன் ஒப்பீட்டு இல்க்கியத்துறை (comparative literature) பேராசிரியராகவும் கடமையாற்றி வருபவராவார்.
லிண்டா ஷெஷா கேள்வி : தொடர்ச்சியாக நீங்கள் உங்களை பாலஸ்தீன யூதராக முன்னிறுத்தி வருவது தொடர்பாக விளக்க முடியுமா? சமகாலத்தில் அவை இரண்டு சொல்லாட்சிகளும் ஒன்றையொன்று நேரெதிரான சொல்லாடல்களாக உள்ள நிலையில் நீங்கள் எவ்வாறு உங்களை ஒரு பாலஸ்தீன யூதராக அடையாளம் காண்கிறீர்கள்?
அரியெல்லா ஆயிஷா அசூலி பதில் : நீங்கள் குறிப்பிடுவது போல இன்றைய சூழமைவில் ஒரு யூதருக்கு தன்னை ஒரு பாலஸ்தீன யூதராக அடையாளம் காண்பதென்பது ஒன்றையொன்று முரண்பட்டுக் கொள்ளும் காரியம் தான். உண்மையில் ஒரு யூதர் தன்னை பாலஸ்தீன யூதராக முன்னிறுத்துவதை பெரும் குற்றமாக கருதும் நிலையை கடந்த இரு நூற்றாண்டு காலங்களாக இடம்பெற்று வரும் வன்முறைகள் தான் உருவாக்கின. உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த யூத சமூகங்கள், ஒரு சில தலைமுறைகளுக்குள்ளேயே தங்கள் நிலங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் மற்றும் மற்றவர்களுடன் இணைந்து வாழும் வாழ்வியல் முறைகள் ஆகியவற்றுடன் தமக்கிருந்த ஆழமான பிணைப்புக்களை இழந்துவிட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் பல்வேறு பிரதேசங்களில் பரந்து வாழ்ந்த யூதர்கள், மிகக் குறுகிய காலத்தில் தமது அசலான பண்பாடுகள் மற்றும் மரபுகளிலிருந்து அந்நியமாகிவிட்டனர்.
எனவே அந்தவகையில் உண்மையில் பாலஸ்தீன யூதர் என்ற அடையாளத்தின் உள்முரண்கள் குறித்துப் பேசுவதை விடவும் 1948 களின் பின்னர் உருவான இஸ்ரேலியர் என்ற அடையாளம் தொடர்பாகவும் அது இன்றுவரை பெற்றிருக்கும் உலகளாவிய அங்கீகாரம் தொடர்பிலுமே நாம் அதிகம் பேச வேண்டியுள்ளதாகக் கருதுகிறேன். ஏனெனில் ‘இஸ்ரேலியர்’ என்ற அடையாளம் உலகளாவிய ரீதியில் வாழ்ந்து வந்த பல்வேறு யூத சமூகங்களின் தனித்துவமான பண்பாட்டுக் கலாச்சார மற்றும் மரபுகளை அழித்தது மட்டுமன்றி குறித்த இஸ்ரேலியர் என்ற அடையாளத்தினை உருவாக்குவதற்காக வேண்டி ஐரோப்பா உள்ளிட்ட ஆபிரிக்கா, ஆசியா போன்ற நிலங்களில் வாழ்ந்த யூதர்கள் மீது ஐரோப்பியக் காலனிய, ஏகாதிபத்திய அதிகாரம் கட்டவிழ்த்து விட்ட வன்முறைகளைக் கவனமாக வரலாற்றின் பக்கங்களில் இருந்து அழித்து விடவும் முயல்கிறது.
1979 ஆம் ஆண்டு ஜேம்ஸ் போல்ட்வின் தனது “Open Letter to the Born Again” என்ற நூலில் குறிப்பிடுவது போல “இஸ்ரேல், யூதர்களின் நலன்களுக்காகவன்றி மேற்கத்திய நலன்களுக்காகவே உருவாக்கப்பட்டது”. ஜேம்ஸ் போல்ட்வின் மேலும் சுட்டிக்காட்டுவது போல இஸ்ரேல், குறித்த ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களைப் பூர்த்தி செய்வதிலேயே அதிக ஆர்வம் கொண்டுள்ளது. மட்டுமன்றி ஜேம்ஸ் போல்ட்வின், யூதர்களின் நலன் என்ற போர்வையில் நிகழ்த்திய இஸ்ரேலிய உருவாக்கத்தை, கறுப்பின அமெரிக்கர்களை அமெரிக்க வெள்ளையினம் லைபீரியாவிற்கு அனுப்பிய வரலாற்றுடன் ஒப்பீடு செய்கிறார். உண்மையில் கறுப்பின அமெரிக்கர்களின் இந்த வெளியேற்றம் அவர்களது விடுதலைக்கானது என்ற கோஷத்துடனேயே இடம்பெற்றிருந்தது. ஆனால் குறித்த வெளியேற்றத்தின் உண்மையான நோக்கமாக கறுப்பின அமெரிக்கர்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றி விடுவதாகவே அமைந்திருந்தது.
இஸ்ரேலிய அரசு உருவாக்கப்பட்டு அதனை ஏகாதிபத்திய சக்திகள் துரிதமாக அங்கீகரிக்கும் முன்னரேயே ‘பாலஸ்தீன யூதர்’ என்ற அடையாளம், பாலஸ்தீனத்தில் காணப்பட்ட பல்வேறு அடையாளங்களில் ஒரு அடையாளமாக இருந்தது. சொல்லப்போனால் பாலஸ்தீனர் என்ற அடையாளம் எந்தவிதமான இன ரீதியான வகைப்பாடுகளையும் பெற்றிருக்கவில்லை. பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்பெயினிலிருந்து வெளியேற்றப்பட்ட எனது தாய்வழி மூதாதையர்கள் பாலஸ்தீனத்தில் குடியேறினார்கள். சியோனிச இயக்கம் பாலஸ்தீனத்தில் தனது ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு மிக நீண்ட காலத்திற்கு முன்பே இது நடந்தது. காலப்போக்கில், சியோனிச இயக்கமானது, ஐரோப்பாவில் யூத வெறுப்பை எதிர்கொண்ட யூதர்களுக்கு உதவுதல் மற்றும் யூதர்களின் நலன் கருதி பாலஸ்தீனத்தில் ஒரு ஐரோப்பிய பாணியிலான காலனித்துவத் திட்டத்தை செயல்படுத்தல் ஆகிய இரண்டு வெவ்வேறு கருத்துக்களை தனது உள்ளீடுகளாகக் கொள்ளத் தொடங்கியது. இந்தக் குடியேற்றக் காலனித்துவத் திட்டம் யூத விடுதலைக்கான இயக்கமாக முன்வைக்கப்பட்ட போதிலும் அரேபியர்கள் மீதான வலிமையான காலனித்துவ அணுகுமுறையையே தனது பிரதான தர்க்க அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்தவகையில், காலனியநீக்கம் (Decolonization) என்பது பாலஸ்தீனத்திலும் ஒட்டோமன் பேரரசின் பிற பகுதிகளிலும் நிலவிய பல்வேறுபட்ட அடையாளங்களைக் கட்டமைத்து அவற்றை அங்கீகரிப்பதாகவே அமைய முடியும். அதிலும் குறிப்பாக யூதர்களும் முஸ்லிம்களும் தாம் வாழ்ந்த நிலங்களில் அருகருகே கூட்டுறவுடன் வாழ்ந்த அடையாளங்கள் என்பதை வலியுறுத்துவதாகவே அமையும்.
லிண்டா ஷெஷா கேள்வி : யூதர்களும் முஸ்லிம்களும் ஒன்றாக இணைந்து வாழ்ந்த யூத முஸ்லிம் உலகின் சிதைவு தொடர்பாக நீங்கள் அண்மையில் தயாரித்து வெளியிட்ட திரைப்படமான ‘The World Like a Jewel in the Hand’ என்ற திரைப்படம் பேசுகிறது. மட்டுமன்றி 1940களின் பிற்பகுதியில் ஐரோப்பிய சியோனிச பிரச்சாரத்தை எதிர்த்த சில யூதர்கள், பாலஸ்தீனத்தின் அழிவை எதிர்ப்பதற்காகவும் ஏனைய பிராந்தியங்களில் வாழும் யூதர்களை ஊக்குவித்ததையும் குறித்த திரைப்படத்தில் நீங்கள் பேசியிருக்கிறீர்கள். ஆனாலும் அண்மைக்காலமாக காஸாவில் நிகழ்த்தப்பட்டு வரும் இத்தனை வன்முறைகளுக்குப் பிறகும், யூதர்களும் முஸ்லிம்களும் மீண்டும் ஒன்றாக இணைந்து வாழக்கூடிய ஒரு சூழலை மீண்டும் கட்டியெழுப்பவும் மீட்டெடுக்கவும் முடியுமாக இருக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?
அரியெல்லா ஆயிஷா அசூலி பதில் : உண்மையில் சியோனிசத்தை பெரும் முனைப்புடன் எதிர்த்த யூதர்களின் வரலாற்று அனுபவங்களை சியோனிஸ்டுகள் வரலாற்றில் இருந்து அழித்துவிடவே முனைகிறார்கள். யூத-முஸ்லிம் உலகின் அங்கத்தினர்களாக இருந்த குறித்த யூத சியோனிஸ எதிர்ப்பாளர்கள், சியோனிசத்தின் ஆபத்தான கருத்தியல் உள்ளீடுகள் தொடர்பில் ஆழமான பிரக்ஞைகளைக் கொண்டிருந்தனர். சியோனிசம் பாலஸ்தீனியர்களுக்கு மட்டுமன்றி, பாலஸ்தீனம் உள்ளிட்ட வட ஆபிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு முழுவதும் வாழும் தங்களைப் போன்ற யூதர்களுக்கும் பெரும் ஆபத்தை உருவாக்கும் என்று அவர்கள் தொடர்ச்சியாக எச்சரித்து வந்தனர்.
இரண்டாம் உலகப் போரின் இறுதிக்கட்டம் வரையில் சியோனிசம் உலகெங்கிலும் உள்ள யூத சமூகங்களிடையே செல்வாக்கு எதுவும் இல்லாத இயக்கமாகவே இருந்தது. அதனால் முந்தைய தலைமுறையினர் சியோனிசத்தை மிகத் தீவிரமாக எதிர்க்க வேண்டிய நிர்பந்தம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. என்றாலும்கூட சியோனிசத்தின் கருத்தியல் ஆபத்துக்கள் கருதி அதனைப் புறக்கணித்து வந்தார்கள். ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இந்நிலைமை மாறியது. ஐரோப்பாவில் தப்பிப்பிழைத்த பல யூதர்கள் (அவர்களில் பெரும்பாலோர் இரண்டாம் உலகப் போருக்கு முன்பு சியோனிஸ்டுகளாக இல்லாதவர்கள்) ஐரோப்பாவில் மிகக் குறைவாகவே வாழவும், தங்கவும் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள்.
ஐரோப்பாவில் நிலவிய இந்த யூத வெறுப்பைப் பயன்படுத்திக்கொண்ட யூரோ-அமெரிக்க ஏகாதிபத்திய சக்திகள் சியோனிசத் திட்டத்தை ஆதரிக்கத் துவங்கின. அதிக எண்ணிக்கையிலான யூதர்கள் ஐரோப்பாவில் தங்கவோ அல்லது அமெரிக்காவிற்கு குடிபெயரவோ அனுமதிப்பதற்குப் பதிலாக பாலஸ்தீனத்தில் ஒரு நிரந்தரமான குடியேற்றக் காலனியை நிர்மாணிப்பது ஒரு நடைமுறைத் தீர்வாகத் தெரிந்தது. இந்தத் திட்டத்தை நிறுவுவதை விரைவுபடுத்த அவர்கள் சர்வதேச நிறுவனங்கள் பலவற்றையும் பயன்படுத்தினர்.
இந்நடவடிக்கைகளின் ஊடாக சியோனிசத் திட்டமானது யூதர்களின் விடுதலைக்கும் சுபீட்சத்திற்கும் உரியது என்ற தவறான கருத்தை ஏகாதிபத்திய சக்திகள் பரப்பின. ஆனால் உண்மையில், இந்த திட்டம் ஐரோப்பாவில் மட்டுமன்றி உலகின் பிற பகுதிகளிலும் வாழ்ந்துவந்த பல யூத சமூகங்களின் அழிவுக்கு வழிவகுத்ததுடன் “யூத விடுதலை” என்ற கருத்தாக்கமானது பாலஸ்தீனத்தை அழிப்பதற்கான ஒரு நியாயமாகவும் பயன்படுத்தப்பட்டது. ஐரோப்பிய ஏகாதிபத்திய நலன்களுக்குப் பணியாற்றும் வகையில் யூதக் குழுக்களை மூளைச்சலவை செய்வதன் ஊடாகவே சியோனிஸ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தன. ஐரோப்பாவில் நிலவிய யூத வெறுப்பு மற்றும் அதன் விளைவாக நிகழ்ந்த இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்த யூதர்கள், சியோனிச இடப்பெயர்வுக்கு முன்னரே பாலஸ்தீனில் வாழ்ந்து வாழ்ந்த யூதர்கள் மற்றும் பாலஸ்தீனம் தவிர்த்து அரபுலகம் அடங்கலாக ஏனைய நாடுகளில் வாழ்ந்து வந்து அந்நாடுகளில் இருந்து வலுக்கட்டாயமாக இஸ்ரேலுக்கு குடிபெயருமாறு வலியுறுத்தப்பட்ட யூதர்கள் என சகல தரப்பினரும் ஏகாதிபத்திய நலன்களுக்குப் பணியாற்றும் வகையில் இவ்வாறு மூளைச்சலவை செய்யப்பட்டனர். ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களும் அதற்குச் சேவை செய்த சியோனிச யூதர்களும் முஸ்லிம்களையும் அரபுலகத்தினையும் தமது நிரந்தர எதிரிகளாகக் கருத யூதர்களை வற்புறுத்தி வந்ததன் விளைவாக முஸ்லிம் வெறுப்பு மற்றும் அரபு எதிர்ப்பு அரசாக பாலஸ்தீன நிலத்தில் இஸ்ரேலின் உருவாக்கம் இடம்பெற்றது.
முஸ்லிம்களும் அரேபியர்களும் யூதர்களின் எதிரிகளாக ஒருபோதும் இருந்ததில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டியிருக்கிறது. வரலாற்றில் பெரும்பான்மை முஸ்லிம் நிலங்களில் வாழும் பல யூதர்கள் அரேபியர்களாகவே இருந்தனர். இஸ்ரேலிய அரசு உருவாக்கப்பட்ட பிறகுதான் “யூதர்கள்” மற்றும் “அரேபியர்கள்” தங்களை முற்றிலும் தனித்தனியானதும் எதிரெதிர் அடையாளங்களைக் கொண்டவர்களாகவும் கருதத் துவங்கினர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகான காலப்பகுதியில் நிகழ்ந்த யூத-முஸ்லீம் அடையாளத்தின் அழிவானது மறுபுறம் ‘யூத-கிறிஸ்தவ அடையாளம்’ என்ற அடையாள உருவாக்கத்தை சாத்தியமாக்கியதோடு பெரும்பாலான யூதர்கள் இப்போது மேற்கத்திய கிறிஸ்தவ உலகினுள் சங்கமித்தவர்களாகத் தங்களைக் கருதத் துவங்கினர். அத்தோடு இஸ்ரேலிய அரசின் நிலைத்திருப்பிற்கென தேவைப்பட்ட அதிக எண்ணிக்கையிலான யூதக்குடியேறிகளை, யூத- முஸ்லிம் உலகினுள் வாழ்ந்து வந்த யூதர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றச் செய்வதனூடாக இஸ்ரேலிய அரசு சாத்தியப்படுத்தியது. தங்களுக்கே உரித்தான வளமானதும் தன்னிறைவானதுமான கலாச்சார மரபுகளில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட யூதர்கள், மத்திய கிழக்குப் பகுதியில் ஏகாதிபத்திய சக்திகளின் நலன்களைப் பாதுகாக்கவும் அதற்குச் சேவகம் செய்வதற்குமென பயன்படுத்தப்படத் துவங்கினர்.
இந்த வரலாற்றைப் புரிந்துகொள்வது, பல ஆண்டுகளாக பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டுவரும் குற்றங்களுக்கான பொறுப்புக்கூறலை விட்டும் சியோனிசத்தினை நீக்கிவிடப் போவதில்லை. மாறாக இத்தகைய வரலாற்றினைப் புரிந்து கொள்வதன் வழியே பல்வேறு சூழமைவுகளில் (ஐரோப்பாவிலும் ஐரோப்பாவிற்கு வெளியேயும்) தனித்துவமாக வாழ்ந்து வந்த யூத சமூகங்களின் அழிவிலும், இனப்படுகொலையில் இருந்து தப்பிப் பிழைத்தவர்கள் என்ற அனுதாப அலையைப் பயன்படுத்தி மத்தியகிழக்கில் குடியேற்றக் காலனியத்தின் முகவர்களாகச் செயற்பட்டு பாலஸ்தீனத்தினதும் பாரம்பரியமாக நிலவிய யூத-முஸ்லிம் உறவின் அழிவிலும் ஐரோப்பிய அதிகார சக்திகளின் பங்கேற்பைப் புரிந்து கொள்ள முடியும்.
இன்றைய நிலையில் யூதர்களும் அரபுகளும் (இவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்) ஒரே நிலத்தினைப் பகிர்ந்து கொள்ளும் பகுதியாக பாலஸ்தீனின் நதிக்கரை மற்றும் கரையோரத்திற்கு இடையில் அமைந்துள்ள பகுதியைக் குறிப்பிட முடியும். ஆனால் 1948 முதல் அப்பகுதியில் அதிகளவிலான இனவன்முறைகள் இடம்பெற்று வருகின்றன. அந்தவகையில் ஆயத உள்நுழைவைக் கட்டுப்படுத்தி இடம்பெற்று வரும் இனவழிப்பை எவ்வாறு இல்லாமல் செய்வது என்பது தான் இன்றுள்ள கேள்வி.
ஐரோப்பாவில் நிகழ்ந்த யூத இனப்படுகொலையின் காரணமாக அதிலிருந்து தப்பிப் பிழைத்து இடம்பெயர்ந்தோர் முகாம்களில் வசித்த யூதர்களின் கலவையான உணர்வுகளை ‘Eichmann in Jerusalem’ என்ற புத்தகத்தில் ஹன்னா அரெண்ட் விவரிக்கும் போது “ஒருபுறம், தங்களுக்கு தீங்கு விளைவித்தவர்களுடன் மீண்டும் கலந்து வாழ்வதை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை என்ற நிலையில் மறுபுறம் அவர்கள் தங்கள் சொந்த வீடுகளுக்கும் இடங்களுக்கும் திரும்புவதின் பக்கம் விருப்பமும் ஆதரவும் வைத்திருந்தார்கள்” என்று விவரித்துச் செல்கிறார். அதுபோலவே காசாவில் இத்தனை அழிவுகளுக்குப் பிறகும், பல பாலஸ்தீனியர்கள் அந்த வன்முறைக்குக் காரணமானவர்கள் என்று கருதுபவர்களுடன் தமது வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்வது கற்பனை செய்வது கடினமான காரியமாகவே அமையும்.
லிண்டா ஷெஷா கேள்வி : போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கும் மக்களில் பலர் யூதர்களாகவே இருக்கிறார்கள். ஆனாலும் இந்த யூதக் குரல்கள் கூட அடக்கப்படுகின்றன. உதாரணமாக, ஜெர்மனியில், நன்கு அறியப்பட்ட யூதக் கலைஞர்களின் படைப்புகள் பல ரத்துச் செய்யப்பட்டுள்ளன. இது மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மேற்கத்திய சக்திகளும் இஸ்ரேல் அரசும் 1948 முதல் நிலவும் ஹோலகோஸ்ட் ஆதிக்கக் கதையாடல்களைப் பாதுகாக்கவும், அதே நேரத்தில் அதன் பெயரில் நடத்தப்படும் வன்முறைக்கு எதிராகப் பேசும் யூதக் குரல்களை அடக்கவும் முயற்சி செய்கிறனவா?
அரியெல்லா ஆயிஷா அசூலி பதில் : நிச்சயமாக இன்று யூதக் குரல்கள் அடக்கப்படுவது உண்மைதான். ஆனால் இது புதிதல்ல. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு யூதர்கள் பலர் வேறு வழியில்லாமல் தங்கள் வீடுகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள முகாம்களில் பல ஆண்டுகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டனர். அந்த நேரத்தில், அவர்களின் ஏராளமான சொத்துக்கள் பல, ஜெருசலேமில் உள்ள தேசிய நூலகம் மற்றும் வொஷிங்டனில் உள்ள காங்கிரஸ் நூலகம் போன்ற நிறுவனங்களுக்கு இடையே உலகக் கிண்ண வெற்றிக் கோப்பைகளைப் போல பகிர்ந்து கொள்ளப்பட்டன. அதுபோலவே ஹோலோகாஸ்ட்டின் கொடூரங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்களினதும் அவர்களின் சந்ததியினரினதும் உணர்வுகள் புறக்கணிக்கப்பட்டது மட்டுமல்லாமல் “விடுதலை” என்ற போலியான கதையாடல்களினால் அவர்கள் திட்டமிட்டு அமைதியாக்கப்பட்டனர். யூத விடுதலை தொடர்பான சியோனிசக் கதையாடல்கள் யூதர்களை விடுவிப்பதாகக் கூறிய போதிலும், அது பாலஸ்தீனத்தை காலனித்துவப்படுத்துவதன் வழியே யூரோ-அமெரிக்க சக்திகளின் ஏகாதிபத்திய நலன்களையே பூர்த்தி செய்தது.
யூதர்களின் துயரங்களும் அவர்கள் படும் கொடுமைகளும் உலகின் ஏனைய மக்களின் கதைகளிலிருந்து “விதிவிலக்கானது” என்ற கருத்தாக்கமானது மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது. நாஜி வன்முறையை தனித்துவமான ஒரு தீமையாக சித்தரிக்கும் ஒரு பரந்த மேற்கத்திய கதையாடலின் ஒரு பகுதியாகவே இது அமைந்திருந்தது. மட்டுமன்றி மேற்கத்திய ஏகாதிபத்தியம் நாஜிக்களை தோற்கடித்ததாகக் கட்டமைக்கப்பட்ட கதையாடல்களின் வழியே இஸ்ரேலானது மேற்கத்திய சக்தியின் தவிர்க்க முடியாத அடையாளமாக மாற்றப்பட்டது. அத்தோடு யூதர்கள் ஹோலோகாஸ்டினால் பாதிக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து இருந்து இஸ்ரேலிய உருவாக்கத்தையும் மத்திய கிழக்கில் அதன் இருப்பையும் ஆதரிப்பதற்காக வேண்டிய கடுமையாக அழுத்தங்களுக்கும் ஆட்பட்டனர். இதற்காகவேண்டி உலகின் பல்வேறு பாகங்களில் இருந்தும் யூதர்கள் இஸ்ரேலிய அரசு நிர்மாணத்திற்காக வேண்டி வலுக்கட்டாயமாக பாலஸ்தீனத்தை நோக்கி வரவழைக்கப்பட்டனர். காலப் போக்கில் ஆக்கிரமிப்பு பாலஸ்தீனத்தில் பிறந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது தலைமுறையினர், தங்கள் மூதாதையர்கள் கொண்டிருந்த சியோனிச எதிர்ப்புக் கருத்தாக்கங்கள் குறித்த எந்தவித அறிவும் இல்லாமல் வளர்ந்ததுடன் பாலஸ்தீனத்தின் தொன்மையான வரலாறு மற்றும் அது எவ்வாறு அழிக்கப்பட்டது என்பது தொடர்பிலும் போதியளவு புரிதல்கள் எதுவுமின்றியே வளர்ந்தனர். இதனாலேயே சியோனிஸ்டுகள் மற்றும் மேற்கத்திய சக்திகளால் பாலஸ்தீனத்தில் நிர்மாணிக்கப்பட்ட தேசிய அரசை “யூத விடுதலையின்” மகத்தான சாதனையாக ஏற்றுக்கொள்ள அவர்களால் முடிகிறது.
இந்தக் கண்ணோட்டத்தில் நோக்குவோமாயின் ‘நக்பா’ என்பது பாலஸ்தீனியர்கள் மீதான இனப்படுகொலைத் மட்டுமன்றி ரோப்பாவால் ஹோலோகாஸ்டுக்குப் பிறகு நிரந்தரமான “தீர்வை” நோக்கித் தள்ளப்பட்ட யூதர்களையும் வெகுவாகப் பாதித்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும். சக்திவாய்ந்த ஏகாதிபத்திய நாடுகளின் நிதி மற்றும் ஆயுத உதவிகள் இல்லாமல் இருந்திருந்தால் காசாவில் நடந்த படுகொலைகள் எப்போதோ நின்றிருக்கும் என்பதோடு தங்களது செயல்களின் கொடூரம் குறித்த பொறுப்புக்கூறலுக்கும் இஸ்ரேலியர்களை அது ஆளாக்கியிருக்கும். ஒக்டோபர் 7 நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு நதிக்கரைக்கும் கரையோரத்திற்கும் இடையில் வாழும் அனைவருக்குமான, நிலையானதும் சமாதானமானமான வாழ்வை எவ்வாறு உருவாக்குவது என்பது தொடர்பான சிந்திப்புக்கும் சில வேளைகளில் அது இட்டுச் சென்றிருக்கும்.
ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற நாடுகளில், சியோனிச அரசையும் மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை ஆதரிக்கும் அதன் வன்முறை மிக்க போக்கையும் எதிர்த்துக் குரல் எழுப்பும் யூத சமூகங்களின் குரல்கள் பெரும்பாலும் கடுமையான நடவடிக்கைகளினூடாக அடக்கப்பட்டு வருகின்றன. ஆன போதிலும் இஸ்ரேலிய ஆட்சியின் வன்முறைகள், அது ஈவிரக்கமின்றி நிகழ்த்தி வரும் இனப்படுகொலைகள் போன்றன இப்போது அம்பலமாகி வருவதால் இனி அதனை முன்பு போல மூடி மறைத்துவிட முடியாது.
லிண்டா ஷெஷா கேள்வி : பாலஸ்தீன மக்களுக்கும் எங்களைப் போன்று நீதி, சமாதானம் போன்றவற்றால் சூழப்பட்ட அனைவருக்குமான உலகம் குறித்த பிரக்ஞை உள்ளவர்களுக்கும் இந்த விவகாரத்தில் நம்பிக்கை தரும் ஏதும் அம்சங்கள் உள்ளனவா?
அரியெல்லா ஆயிஷா அசூலி பதில் : உண்மையில் இதற்கான பதிலை அளிக்க பாலஸ்தீனர்களே தகுதியானவர்கள் என்று நினைக்கிறேன். அனைவருக்குமான உலகம் குறித்து எவ்விதமான நம்பிக்கையும் அவர்களிடம் இல்லாத பட்சத்தில் நாமும் அது தொடர்பாக நம்பிக்கையைக் கொண்டிருப்பதில் எவ்வித அர்த்தமும் கிடையாது. பாலஸ்தீன மக்களின் போராட்டங்கள், எல்லைகள் கடந்து சர்வதேச நாடுகளின் மனசாட்சியை உலுக்கி வருகின்றன. இதற்கு சர்வதேச ரீதியில் பாலஸ்தீனர்களுக்காக எழுந்து வரும் குரல்களே சாட்சி.
அரியெல்லா ஆயிஷா அஸுலே (Ariella Aïsha Azoulay) பிரவுன் பல்கலைக்கழகத்தின் நவீன கலாச்சாரம் மற்றும் ஊடகவியல் துறை மற்றும் ஒப்பிலக்கியத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அவரது முக்கிய நூல்களில் Potential History: Unlearning Imperialism, Civil Imagination: The Political Ontology of Photography, The Civil Contract of Photography, Aïm Deüelle Lüski and Horizontal Photography, மற்றும் From Palestine to Israel: A Photographic Record of Destruction and State Formation, 1947–1950 ஆகியவை குறிப்பிடத்தக்கவையாகும்.
Adi Ophir அவர்களுடன் இணைந்து எழுதிய The One State Condition: Occupation and Democracy between the Sea and the River என்ற நூல், இஸ்ரேலிய அரசியல் அமைப்பின் உட்கட்டமைப்பை மறுபரிசீலனை செய்யும் நோக்கில், ‘இருநாட்டு தீர்வு’ எனப் பரவலாக முன்வைக்கப்படும் அரசியல் வடிவமைப்பை விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்கிறது. குறிப்பாக, ஆக்கிரமிப்பு மற்றும் ஜனநாயகம் ஆகியவை பரஸ்பரம் முரண்பாடானவை என்ற நிலைப்பாட்டை சவாலுக்குட்படுத்தி, அவை ஒரே அரசியல் நிலைமையின் உட்புறச் செயல்முறைகளாக எவ்வாறு இயங்குகின்றன என்பதை இந்நூல் ஆராய்கிறது. அண்மையில் வெளியான The Jewelers of the Ummah: A Potential History of the Jewish Muslim World என்ற அவரது படைப்பு, யூத–முஸ்லிம் உலகத்தின் வரலாற்றை சியோனிசம் உருவாக்கிய தேசியவாத சிந்தனைக்கட்டமைப்பின் எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தாமல், அதனை விமர்சனப் பார்வைக்கு உட்படுத்துகிறது. மேலும், யூத–முஸ்லிம் சமூகங்களின் பகிர்ந்த நிலப்பரப்பு, பொருளாதார உறவுகள் மற்றும் கலாச்சார உருவாக்கங்கள் ஆகியவற்றை மையப்படுத்தி, மாற்று வரலாற்றுக் கட்டமைப்பை முன்வைக்கும் முயற்சியாக இந்நூல் விளங்குகிறது.
லிண்டா ஷெஷா Linda Xheza அவர்கள் Amsterdam School for Cultural Analysis, University of Amsterdam இல் புகைப்படக் கலை மற்றும் குடியேற்றம் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறார்
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இந்த நேர்காணல் Jacobin இணையதளத்தில் Zionism Killed the Jewish-Muslim World என்ற தலைப்பில் வெளியானது.