இஸ்லாமும் ‘பாலஸ்தீனத்தைப் புதைத்துப் பாலூற்றி’ அதனை இயல்பாக்கம் செய்தலும்

ஆக்கம்: Sermons of the Court

The Axis of the compliance (1) (கீழ்ப்படிதலின் சுழல் அச்சு) என்ற இதற்கு முந்திய எனது பதிவில், வெவ்வேறு முஸ்லிம் குழுக்களிடையே பிரிவினையை விதைப்பதற்கு காலனித்துவ அறிஞர்களும் அதிகாரிகளும் இஸ்லாமிய இறையியல் விதர்க்கத்தை எவ்வாறு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை ஆராய்ந்தேன். அவர்களுக்கு ‘இணங்கிக் கீழ்ப்படிந்த நல்ல’ இஸ்லாத்துக்கு நேர்க்குறியான பரப்புரைகளை வழங்குவதோடு, ‘தீய’ இஸ்லாத்தை அதற்கு எதிர் நிலையில் நிறுத்துதல் என்பதே அதன் பொருளாகும். (அதாவது காலனித்துவம் அல்லது காலனித்துவத்தின் விளைவாகப் பிறந்த அமைப்பு ரீதியான அநீதியை சொல்லால் மற்றும் செயலால் எதிர்க்கும் இஸ்லாத்தின் எந்தப் பிரிவும் இவற்றில் அடங்கும்)

இந்த இயக்கவியல் 9/11 சகாப்தத்திற்குப் பிந்திய காலத்தில் எழுதப்படாத விதியாயிருந்தது. மேற்குலகின் இந்த ‘நாகரீகப்படுத்தும் பணி’ இம்முறை ‘சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்கு’ எனப்படும் கடைந்தெடுத்த பாசாங்கோடு நடைபெறும் ஒன்றாக மாறியது. காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையைத் தடுக்கும் விடயத்தில் அரசுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் அவற்றின் தார்மீகத் தோல்வியின் காரணமாக முற்றிலும் வீழ்ச்சியடைந்து விட்டதை சமீபத்தில் நாம் கண்டோம். இது என்னுடைய தனிப்பட்ட மிகைப்படுத்தல் அல்ல; சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் Gaza and the End of the Rule Based Order (2) (காஸாவும் சட்டத்தின் அடிப்படையிலான ஒழுங்கு என்பதன் முடிவும்) என்ற தலைப்பில் வந்திருக்கும் அவரது ஆக்கத்தில் இதனைத் தோலுரித்திருக்கிறார்.

‘தீவிரவாத இஸ்லாத்தின்’ அச்சுறுத்தலில் இருந்து உலகைக் காப்பதற்கு தாராளமாக நிதியளிக்கப்பட்டு போஷித்து வளர்க்கப்பட்டிருக்கும் ‘இஸ்லாமோபோபோபியா’ (3) எனப்படும் உலகளாவிய இஸ்லாமிய வெறுப்புத் தொழிற்துறையின் கைங்கரியத்தால், மேற்கத்திய அரசாங்கங்கள், துறைசார் மதியுரைஞர்கள் மற்றும் பண்டிதர்கள் பயங்கரவாத எதிர்ப்புத் திட்டங்களில் பெருந்தொகைப் பணத்தையும் ஏனைய வளங்களையும்  முதலீடு செய்து, தமது உள்ளூர் அரச முஸ்லிம் பெயர்தாங்கி கைத்தடிகளின் துணையோடு ஆவணங்கள், புத்தகங்கள், மாநாடுகள் என பல்வேறு வெளியீடுகளை மேற்கொள்கின்றனர். உலகை ஆட்டிப்படைக்கும் ‘முஸ்லிம் வெறித்தனம்’ என்ற ஒற்றைப் புற்று நோயிலிருந்து மனித குலத்தை மீட்பதற்காகவே ‘முஸ்லிம் சமூகத்தில் சமாதானத்தை மேம்படுத்துதல்’ ‘தீவிரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்’ போன்ற தலைப்புகளில் வாஷிங்டனிலாகட்டும் அபுதாபியிலாகட்டும் எண்ணற்ற ஒன்றுகூடல்களும், கருத்தரங்குகளும், மாநாடுகளும் நாளும் பொழுதும் நடைபெற்றவாறே இருக்கின்றன.

இன்று, அந்த சொல்லாட்சி மிகவும் குறைந்துவிட்டதாகத் தெரிகிறது. அல்லது நான் காண்பிப்பது போல, புற்றுநோய் போன்ற ஒன்றாக அது உருமாற்றம் பெற்றிருப்பது மாத்திரமன்றி அது பூமிக்கடியில் சென்றுவிட்டது. ஜோர்ஜ்டவுன் இஸ்லாமிய கற்கைகளுக்கான பேராசிரியர் ஜொனாதன் ப்ரவுன் சமீபத்தில் தனது ட்விட்டர் தளத்தில் இவ்வாறு பதிவிட்டிருந்தார்: “வெறுமனே நான் மாத்திரமா இதைக் கேட்கிறேன்?” 2000 மற்றும் 2010களில் தொடராக சலசலத்து ஓடிக்கொண்டிருந்த முஸ்லிம் மார்ட்டின் லூத்தர்களின் ‘புனரமைப்புவாத ஓடை’ உண்மையில் வரண்டு போய் விட்டதா? இது ஒரு முக்கியமான அவதானம் ஆகும்: இஸ்லாத்தைப் ‘புனரமைப்பதற்குக்’ கிளம்பியவர்கள் எங்கே போய் விட்டனர்? 2000களின் நடுப்பகுதியில் ஒரு கட்டத்தில், ஜார்ஜ்டவுனில் நான் இளங்கலை பட்டதாரியாக இருந்தபோது, ​​‘என்ன தவறு நடந்தது’ என்று கண்டறிய அபரிமிதமாக முயற்சித்த பலரது கோரிக்கைகள் என் நினைவுக்கு வருகின்றன. கொலம்பியா மாநிலத்தைச் சேர்ந்த பேச்சாளர்களின் சுற்றுவட்டத்தில் இது ஒரு இலாபகரமான வணிகமாக அப்போது இருந்தது. குறிப்பாக தாராளவாத முஸ்லிம்கள் மற்றும் பாரம்பரியவாத உலமாக்கள் ‘இஸ்லாத்தின் சபையை’ சுத்தம் செய்வதற்கான வெவ்வேறு திட்டங்களில் போட்டியிட்டபடி இருந்தனர்.

அவரது வினாவுக்கான எனது எளிமையான பதிலை பேராசிரியர் ப்ரவுனுக்கு பிரத்தியேக இடுகைச் செய்தியாக பின்வருமாறு அனுப்பி வைத்தேன்: மேற்குலகம் முஸ்லிம் மார்ட்டின் லூத்தர்களாக சவூதியில் முஹம்மத் பின் சல்மானையும் (MBS) அமீரகத்தில் முஹம்மத் பின் செய்யத் அல் நஹ்யானையும் (MBZ) கண்டறிந்துள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இஸ்லாத்தை அறிவுஜீவிகள் மட்டத்தில் சீர்திருத்துவதற்குப் பதிலாக, அதிகார பலத்தை தம்வசம் வைத்துக்கொண்டு முடியரசுகளை கட்டியாளுவோரது அடக்குமுறையின் துணையோடு அந்தத் திட்டத்தை மாநில அளவில் செயல்படுத்துகின்றது. ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ பற்றிய புலமைசார் மற்றும் கலாச்சார தர்க்கங்களை நிலை நாட்டுவதற்கு இனி கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டிய அவசியம் இன்று இல்லை. ஏனெனில் ‘இஸ்லாத்தை சீர்திருத்துவதற்கான’ திட்டமானது தனக்கான அமைவிடத்தை செல்வத்தில் புரளும் வளைகுடா ஷெய்க்குகளின் முடியாட்சிகளின் இரும்புக் கரங்களில்  உறுதியாகக் கண்டறிந்துள்ளது. ஆனால்…

இந்த திட்டத்துக்கான விலை? பாலஸ்தீனம்!

இதை எடுத்துக்காட்டுவதற்கான முன்நிகழ்வாக, லூத்தரன் சீர்திருத்தத்தின் மூலம் மதசீர்திருத்த கதையாடல்கள் அரச அதிகாரத்தால் உறுதிப்படுத்தப்பட்டு சட்டவாக்க அந்தஸ்தைப் பெற்றன; நவீன அரசை உருவாக்குவதற்கான அடித்தளம் அங்கே தான் போடப்பட்டது என்பதை முதலில் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ‘சாம்ராஜ்யம் யாருடையதோ-மதம் அவருடையது’ (cuius regio, eius religio) என்ற 16ம் நூற்றாண்டின் கருத்தின் ஊடாக ஆள்பவர்கள் தமது ஆளுகைப் பரப்பில் வாழ்வோரின் மதவாழ்வு தொடர்பாக அளவற்ற அதிகாரங்களைக் கோரி நின்றனர். அதன் மூலம் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுக்கு மதத்தின் ‘வகைகளை’ வடிவமைக்கவும், அவற்றை வற்புறுத்தவும் மற்றும் தமது அதிகாரம் சார்ந்து நிலைநிறுத்தவும் தடையற்ற அதிகாரம் கிடைத்தது. எனவே, நவீன மக்கள் தங்கள் அரசியல் நிறுவனத்தை மாத்திரமன்றி தமது ஆன்மீக வாழ்க்கையையும் சேர்த்தே அரசிடம் ஒப்படைத்தனர். தேவாலயத்தின் பிடியில் இருந்து மதச்சார்பற்ற ஆட்சியாளர்களைச் சென்றடைந்த இந்த இறுதி அதிகார மாற்றம், நவீன அரசுகளை உருவாக்குவதில் இடம்பெற்றதொரு முக்கியமான நிலைமாறுகட்ட நிகழ்வாகும். தனிநபர்கள்/குழுக்கள் என்ற வேறுபாடுகள் இன்றி ஒவ்வொரு மதத்தினதும் செயற்பாடுகள் அரசின் ஆதிக்கத்தின் கீழ் வரவேண்டும் என்ற கருத்தை இது உறுதிப்படுத்தியது.

அமைப்பு ரீதியாகப் பார்த்தால், சமகால வளைகுடா முடியாட்சிகள் இஸ்லாத்தை அரசு மற்றும் பேரரசின் நலன்களுக்கு முற்றிலும் இணக்கமாக மாற்றும் திட்டத்தைச் செயல்படுத்துவதற்குப் பொருத்தமான நிலப்பரப்புகளாகும். ஒப்பனை அடிப்படையில் ‘பழமைவாத’ சமூகங்கள் என்ற அடையாளத்தோடு, ஆடையிலும் வழக்காறுகளிலும் ‘முஸ்லிம்’ என்ற பலமான மேற்பூச்சுடன் அம்மக்களது வாழ்வியல் இருக்கும் நிலைமையில், ஆட்சியாளர்கள் கீழ்த்தரமான, அதிர்ச்சியளிக்கும் ‘சீர்திருத்தக்’ கொள்கைகளை அவர்கள் மீது திணிக்க முடிவு செய்தால், அவர்களில் யாரும் புத்திசாலியாக இருக்கப் போவதில்லை. இரண்டாவதாக, விஷேடமாக சவூதி – MBS விடயத்தில், அவர் ‘இரு புனித தலங்களினதும் பாதுகாவலராக’ (பொய்யான ஒன்றாக இருந்தபோதிலும்) சுயமாக நியமிக்கப்பட்டதன் மூலம் ‘சட்டபூர்வமான’ மற்றும் ‘இஸ்லாமிய’ போன்ற தவிர்க்க முடியாத ‘மேலதிக உரிமைகள்’ அவர்களுக்கான கூடுதல் அதிகாரத்தை வழங்குகின்றன. இறுதியாக, இத்தகைய நாடுகளின் குடிமக்களது வாழ்வியல் நீண்ட காலமாக கட்டில்லாத நுகர்வுவாதம் மூலம் மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரத்துக்கான ‘இருத்தலியல் இணக்கத்தை’ இதன் விலையாக அம்மக்கள் ஏற்று வழங்கி இருக்கின்றனர். அந்த அதிகாரத்தின் உள்ளடக்கம் இஸ்லாம் என்ற பெயரில் இருந்தாலும் – இல்லாவிட்டாலும், அது எந்த வடிவத்தில் வெளிப்பட்டாலும் சரியே! ‘தேசிய அடையாளம்’, ‘அமைதி’, ‘ஸ்திரத்தன்மை’ மற்றும் ‘முன்னேற்றம்’ (அதாவது அரசின் ஊடு பரவலான கடும் கட்டுப்பாடு) ஆகியவற்றை என்ன விலை கொடுத்தாவது பாதுகாப்பது மட்டுமே இங்கு முக்கியம். இந்த நச்சு மதுக் கலவைக்கு ஒப்பான கட்டில்லா நுகர்வுக் கலாச்சாரம் மற்றும் மேற்கின் ‘முன்னேற்றத்தை’ மாத்திரம் நோக்கிய தீவிர தாழ்வு மனப்பான்மையில் அம்மக்கள் இருத்தி வைக்கப்பட்டு, ஆரமைதி வாய்ந்த, அரசுக்கு கீழ்ப்படிந்த அலாதியானதோர் ‘இஸ்லாம்’ அங்கு நீடித்து வருகிறது.

இந்த வகை ‘மயக்கமடைந்த இஸ்லாத்தின்’ உச்சம் என்னவென்பது ‘ஆபிரகாம் உடன்படிக்கைகள்’ எனப்படும் மோசமான – தீங்கு பயக்கும் ஓர் ஒப்பந்தத்தின் பின்னர் தெரியவந்தது. ‘தூதுத்துவ மொழி’யைப் பயன்படுத்துவதன் வழியாக மேற்கொள்ளப்படும் ‘சட்டப்பூர்வமான இயல்பாக்கம்’ தெளிவான மத நோக்கங்களைக் கொண்டிருந்தது. இன்றைய ‘நவீன’ ‘கீழ்ப்படிவான’, ‘நல்ல’ இஸ்லாத்திற்கான இறுதி (litmus test) பாசிச் சாயத்தாள் சோதனையானது; புற்று நோயை போன்று ஊடுபாவி வியாபித்திருக்கும் இஸ்ரேலினது இருப்பை அங்கீகரிப்பதையும் அதன் வழியாக பாலஸ்தீனியப் போராட்டத்தை நல்லடக்கம் செய்வதையும் முன்னறிவிப்பு செய்கின்றது. (என்னை நம்பவில்லையா? (4) இஸ்லாத்தில் அமீரக ஆதரவு சமூக ஊடக குறிகாரர், முன்னாள் குற்றவாளி ஷாஹித் போல்சன் ‘இயல்பாக்கலை’ தீவிரமாக ஊக்குவிக்கிறார்.)

உண்மையில், காசாவில் உள்ள பாலஸ்தீனியர்கள் இப்போது இடிபாடுகளுக்கிடையில் உள்ளனர். ஏனெனில், இந்த திட்டத்தின் சூத்திரதாரிகள் பாலஸ்தீனத்தின் கண்ணியத்தைப் பாதுகாப்பது; இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வருவது; ஆகிய இலட்சியங்களை புல்டோசர்கள் கொண்டு தகர்த்து, அவர்களது வாய்வியலை மேலும் ஊனமாக்கி, வாழ்தலுக்கான குறைந்தபட்ச நம்பிக்கையையும் வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டே ‘இயல்புநிலை’க்கான இந்த பாதையை வடிவமைத்து காரியமாற்றினர். இம்முறை, இஸ்ரேல் அத்தகையதோர் மிருகத்தனத்துடன் செயல்படுகிறது. ஏனெனில் அது சக்திவாய்ந்த இஸ்லாமிய, இறையியல் நியாயவாதத்தின் வழியாக ‘தண்டனை விலக்கை’ அனுபவிக்கிறது. அரபு நாடுகள் மற்றும் அவற்றின் அறிஞர்களின் ஆசீர்வாதத்தோடு, இஸ்ரேல் தொடராக செய்து வரும் இனப்படுகொலை குற்றச்சாட்டில் இருந்தும் கூட தப்பிக்க முடியும். ஏன்? ஏனெனில் முதன்முறையாக, இஸ்ரேலுடனான சகஜநிலைக்கு நன்கு பிரபலம் வாய்ந்த முஸ்லிம் அறிஞர்களின் ரப்பர் முத்திரை இறுதியாகக் கிடைக்கப் பெற்றுள்ளது. ஐக்கிய அரபு அமீரக ஃபத்வா கவுன்சிலின் தலைவரான அப்துல்லா பின் பைய்யாவின் இந்த அறிக்கைகளைப் படியுங்கள்; (5) 2020 இல் ஆபிரகாம் ஒப்பந்தங்கள் குறித்த அவரது அறிக்கை இவ்வாறு தெரிவிக்கிறது:

“பாலஸ்தீனத்தின் ஆட்சிப் பரப்புக்கு உரித்தான பகுதிகள் மீது தனது இறையாண்மையை அறிவிப்பதை இஸ்ரேல் இடைநிறுத்தியமையை ஐக்கிய அரபு எமிரேட் தலைமையால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த முன்னெடுப்புகளின் விளைவு எனவும் அவை ‘சரியானதும் மற்றும் பொருத்தமானவை’ என எமிரேட்ஸ் ஃபத்வா கவுன்சில் பாராட்டியுள்ளது.

மிக உயர்ந்த அக்கறை என்பது இறையாண்மை கொண்ட ஆட்சியாளரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை நிர்ணயிப்பதாகும். அவர் நாடுகளுக்கிடையேயான உறவுகள், போர் மற்றும் அமைதி தொடர்பாக நாட்டின் உயர்ந்த நலன்களையும் பொறுப்புகளையும் தீர்மானிக்கக்கூடிய ஒரே ஒருவராக இருக்கிறார். எமிரேட்ஸ் ஃபத்வா கவுன்சில் தேசத்தினதும் அதன் மக்களினதும் நலனுக்காக அறிவார்ந்த இந்தத் தலைமைத்துவத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை ஆசீர்வதிக்கிறது.” என அவ்வறிக்கை தெரிவிக்கிறது.

வரலாற்று நிகழ்வான இதனைப் பற்றி கருத்து தெரிவிக்கும்போது, ஐக்கிய அரபு அமீரகத்தின் பத்வா கவுன்சிலின் தலைவர் ஷெய்க் அப்துல்லா பின் பைய்யாஹ்: இந்த முயற்சி இறையாண்மைகொண்ட ஒரு ஆட்சியாளரின் சரியான நடவடிக்கைகளில் ஒன்றாகும். இஸ்லாமிய ஷரீஆ  பொது நன்மை கருதிய மற்றும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இதுபோன்ற நல்லிணக்கத்தை ஏற்படுத்துதல் மற்றும் சமாதானத்தை உருவாக்குதல் ஆகியவற்றின் பால் பல்வேறு   எடுத்துக்காட்டுகளால் நிறைந்துள்ளது” என்கிறார்.

இந்த திட்டத்தின் உள்ளார்ந்த ஆபத்து என்னவெனில், பாலஸ்தீனியர்கள் தங்கள் தலைவிதியைப் பற்றி விவாதிப்பதற்கான பேச்சுவார்த்தை மேசையில் அவர்களுக்கான இடத்தை ஆணவத்தோடு எதேச்சையாக செயற்பட்டு குறைத்தது மாத்திரமல்ல. இன – மதவாத அடித்தளம் கொண்ட, ஸியோனிஸ, மேலாதிக்க இஸ்ரேலை முறையான ஒரு சட்டபூர்வமான ‘தேசத்தின்’ அந்தஸ்தில் வைத்து இந்த ஒப்பந்தம் நோக்குகிறது. அதுமட்டுமல்லாது, இனிமேலும் இஸ்ரேல் ஒரு ஆக்கிரமிப்பு சக்தி அல்ல – ஆனால் அது மற்ற இறையாண்மை கொண்ட நாடுகளுடன் ஒப்பந்தங்களில் நுழையக்கூடிய ஒரு ‘இறையாண்மை நிறுவனம்’ என்ற அங்கீகாரத்தையும் இது வழங்குகிறது. ‘இஸ்லாமிய’ எனும் சட்டபூர்வ மான அந்தஸ்தை இஸ்ரேலுக்கும் அதன் (அமெரிக்க மற்றும் நேட்டோ படைகள் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் கிறிஸ்தவ – ஸியோனிஸ) நேச நாடுகளுக்கும் நீட்டிப்பு மூலம் வழங்குவதனால், இந்த நாடுகளுக்கு மற்றும் அதன் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் எந்தவொரு நிறுவனத்திற்கும் எதிராக கட்டுப்பாடற்ற அரசு வன்முறையைப் பயன்படுத்துவதற்கான ஒரு ‘ஒப்பமிடப்பட்ட வெற்றுக் காசோலைக்கு ஒப்பான’ உரிமையை இவ்வொப்பந்தம் வழங்குகிறது. அதாவது பலஸ்தீனர்களே அக்டோபர் 7ம் திகதி நிகழ்ந்தவற்றின் வழியாக ‘அமைதி’ என்ற இந்த மேற்பூச்சை உடைக்க வேண்டுமா?

ஒப்பந்தம் என்ற பெயரிலுள்ள இந்த சொல்லணிப் பசப்புரைத் தொகுப்பு, தனிப்பட்ட முஸ்லிம்களை இஸ்ரேலின் கொடுங்கோன்மைக்கு எதிராக எந்தவொரு எதிர்ப்பையும் செயல்படுத்துவதற்கான ஏற்பாட்டை இல்லாமலாக்குகிறது. ஏனென்றால் இது அரச அடிப்படைவாதிகளின் பார்வையில் ஒரு குற்றச் செயலாகும். இத்தகைய சொல்லணியின் இறுதி ஆட்டம் என்னவென்றால், தங்கள் அடக்குமுறையாளர்களை எதிர்ப்பதற்கான பாலஸ்தீனிய உரிமையை நம்பும் ஒரு முஸ்லீம் ‘தீவிர முஸ்லீம்’ என்ற ‘வெறித்தனம் கொண்ட வகைப்பாட்டின் கீழ்’ வருவதோடு, அத்தகைய ‘தீவிரவாதம்’ அரச சட்டங்களின் படி ‘மறுவாய்ப்புகள் அற்றதோர் பாவம்’ ஆகும். நெத்தன்யாஹுவின் இஸ்ரேலுக்கான நெடுங்கால பகையை அடித்தளமாகக் கொண்ட செயல் நோக்கம் = தீவிரவாத இஸ்லாம் = உயிர்வாழத் தகுதியற்றது / விரைவான அழிவுக்குத் தகுதியானது என்பது இன்று உறுதியாக உணரப்படுகிறது; அது அரபு நாடுகளால் இயற்றப்பட்டு நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதுவே கொடுங்கோன்மையின் ஏட்டு வரையறை. (அப்படி ஒன்று இருந்தால்) ஒவ்வொரு சியோனிஸ்டினதும் குற்றச்சாட்டுகள், யதார்த்தத்தில், அவை ஒப்புதல் வாக்குமூலங்களாகும். எனவேதான் ‘ஆபிரஹாம் ஒப்பந்தத்தின் இஸ்லாம்’ என்பது அரச ஆதரவு அடிப்படைவாதத்தின் ஒரு வடிவமே தவிர வேறில்லை. ‘நல்ல இஸ்லாம்’ என்ற ஆடையை அணிந்துகொள்வதென்பது, அது இஸ்லாமிய சட்ட நெறியாக ஆட்சியாளருக்குக் கீழ்ப்படிதல் என்ற பெயரில் இறை தூதுத்துவம் வலியுறுத்தி நின்ற ஆட்சிக் கொள்கைகளிலிருந்து விலகுவதைக் குறிக்கிறது. இது ‘கீழ்ப்படிதலின் சுழல் அச்சு’க்கு சரணாகதி அடைவதின் உச்சம் ஆகும். ஏனெறால், இனிமேலும் அவர்கள் எல்லாம்வல்ல இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கும் அவனது தூதராகிய முஹம்மத் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கும் ‘மாறாத நடுவர்கள்’ என்பதற்கு உரித்தான பாத்தியதையை வழங்கப்போவதில்லை. அந்த இடத்தை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருப்பவர் பெற்றுக்கொண்டு விட்டார்.

இது எதிர்வரவிருக்கும் கொந்தளிப்பான ஆண்டுகளுக்கான மிகவும் ஆபத்தான முன்னுதாரணத்தைக் கட்டமைக்கிறது. இவர்கள் உருவாக்க எத்தனிக்கும் ஏவுகல வீச்சு மண்டலத்தில், காசாவுக்காக அணிதிரட்டப்படாத; நன்கு போஷிக்கப்பட்ட நிலையில் இருக்கும் இந்த அரபுப் படைகள் அனைத்தும் இறுதியில் ஒரு நாள் விரைவில் தங்கள் சொந்த மக்களுக்கு எதிராக அணி திரட்டப்படும். இனியாவது முஸ்லிம் பொதுமக்கள் விழித்துக்கொண்டு, இவ்வகைப்பட்ட அரச அடிப்படைவாதத்தை நிராகரிக்கத் தொடங்காத வரையில், பாலஸ்தீனியர்களை ஓநாய்கள் வதைப்பதைப் பார்த்துக்கொண்டு செயலற்று இருத்தி வைக்கப்பட்டிருப்பவர்கள், அடுத்த பலியாடுகளாக நிச்சயம் மாறுவார்கள். அதனை காலம்தான் தீர்மானிக்கும்.

அரச ஆதரவு பெற்ற அடிப்படைவாத கொடுங்கோன்மை உருவாக்கிய துரோகத்தனமான நிலத்தடி சுரங்கப்பாதைகளின் கேடுகெட்ட தன்மையை அம்பலப்படுத்திய மிக சக்திவாய்ந்த காட்சி வெளிப்பாட்டு நிலையம் பாலஸ்தீனம் – காசாவாக இருப்பதில் கவித்துவமான நியாயம் உள்ளது. (நான் அங்கு என்ன செய்தேன் என்று பாருங்கள்) ‘பயங்கரவாதம்’ என்ற சொல்லாட்சியை தலைகீழாக மாற்றுவதற்காக, சுரங்கங்கள் மற்றும் பயங்கரத்தை வேண்டுமென்றே குறிப்பிட்டு எழுதுகிறேன். ஏனெனில், நெத்தன்யாகு மற்றும் சியோனிஸ்ட்களது செயல் திட்டம்; அது தொடங்கப்பட்டதில் இருந்தே, ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ பற்றிய இந்தக் கதையாடலைத் ஆரம்பிப்பதற்குத் தூண்டியது மற்றும் அவற்றை நிலைநிறுத்தியது யார்? நாம் பார்த்தபடி, வரலாற்று ரீதியாக, இந்த மதப் பரப்புரைகள் எப்போதுமே தனிநபர் —> சிந்தனைக் குழு – சிவில் சமூக நிலை —> என உருவாகி வந்து இறுதியாக அவை அரச ஆதரவு பெற்ற கொள்கை வரை செல்ல முனைகின்றன.

2004 ஆம் ஆண்டின் முற்பகுதியில், கெவின் டூலிஸ், தி நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் எழுதுகையில், கசாப்புக் கடைக்காரர் நெதன்யாகு ‘பயங்கரவாதத்திற்கு எதிரான’ துறையின் வளர்ச்சியில் ஒரு மைய நபராக இருந்தவர் என்கிறார். டூலிஸ் இந்த வார்த்தையை ‘எதேச்சாதிகாரம், இராணுவ அடக்குமுறை மற்றும் neo conservative நவ பழமைவாத இஸ்லாமோஃபோபியாவைத் தோற்றுவிப்பதற்கான போலியான அறிவுசார் நியாயப்படுத்துதல்’ என்று கருதுகிறார். மேலும், லிசா ஸ்டாம்ப்னிட்ஸ்கி தனது 2013 ஆம் ஆண்டு வெளிவந்த ‘ஒழுங்குபடுத்தும் பயங்கரவாதம்’ என்னும் புத்தகத்தில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக்கு எதிரான அனைத்து பாலஸ்தீனிய எதிர்ப்பையும் இழிவுபடுத்துவதற்குப் பயன்பட்ட ‘இஸ்லாமிய பயங்கரவாதி’ என்ற பதவரிசையின் பயன்பாட்டை அறிமுகப்படுத்தியது எப்படி என்று விவாதிக்கிறார். 1979ல், ஜெருசலேமில் நடந்த ஜொனாதன் இன்ஸ்டிட்யூட் மாநாடு, மற்றும் அதன் தொடர்ச்சியாக 1984ல் வாஷிங்டனில் நடந்த ‘சர்வதேச பயங்கரவாதம்’ பற்றியதொரு மாநாடு; இவை இரண்டையும் பின்னணியிலிருந்து இயக்கியவர் கசாப்புக் கடைக்காரன் நெதன்யாகுவைத் தவிர வேறு யாருமில்லை. அவர்தான் ‘இஸ்லாமிய தீவிரவாதம்’ என்ற அச்சுறுத்தலை உருவாக்கி, இவ்வாறெல்லாம் அதற்கு தூபமிட்டு உலகளாவிய அளவில் ஒரு பெருந்தொற்றுக்கு நிகராக கொண்டு சென்றவர். கீழே தரப்படுபவை 70 – 80 களில் உலகளாவிய ரீதியில் வழங்கப்பட்ட பரப்புரைகளின் ஊற்றுக் கண்கள் ஆகும்:

“இந்த நிறுவனம் பயங்கரவாதத்தை – குறிப்பாக அரபு பயங்கரவாதத்தை, அதாவது – முழுமையான கேடு என்று நிர்ணயித்துள்ளது; மற்றும் அதை சோவியத் யூனியன் அச்சுறுத்தலுடன் ஒன்றிணைத்தது. எனவே இந்த தீமைகலுக்கெதிராக பெஞ்சமின் நெதன்யாகு ‘அனைத்து மேற்கத்திய ஜனநாயகங்களினதும் பயங்கரவாத எதிர்ப்பு கூட்டணியை’ முன்மொழிந்தார்.”

“சோவியத் ஒன்றியம் எனப்படும் ‘தீய சாம்ராஜ்யத்திற்கு’ எதிராக ‘புதிய பனிப்போர்’ என்ற பெயரில் 1981 முதல் 1989 வரை ரொனால்ட் ரீகன் மற்றும் அவரது நிர்வாகத்தால் ஆய்வறிக்கைகள் பெறப்பட்டன. யாசர் அராபத்தின் பாலஸ்தீன விடுதலை அமைப்பும் (PLO) இந்த ‘இருமை எதிர் துருவ’ binary opposite உலகக் கண்ணோட்டத்தில் இணைந்திருந்தது.”

‘பெஞ்சமின் நெதன்யாகு எப்படி ‘நாகரிக உலகின்’ சுயமாக பறைசாற்றப்பட்ட தலைவராக ஆனார்? என்னும் ஜீன் பிர்ரே பிலியுவின் இன்னொரு கட்டுரை விளக்குகிறது. நெத்தன்யாகு 1996ல் ‘பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுதல்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதினார். அவரது சொந்தத் தயாரிப்பான, தி ஜொனதன் இன்ஸ்டிட்யூட் பாலஸ்தீனம் மற்றும் இஸ்லாம் மீதான ஜென்ம வெறுப்பை உற்பத்தி செய்யும் இஸ்ரேலிய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமற்ற சிந்தனைக் களஞ்சியமாக இருந்து வருகிறது. கோல்டா மெயர், மெனாச்செம் பெகின், யிட்சாக் ரபின், எசார் வெயிஸ்மன், மோஷே தயான் மற்றும் ஷிமொன் பெரஸ் போன்ற முக்கியமான தலைகள் அதன் நிர்வாகக் கமிட்டியில் இருந்து செயற்பட்டுள்ளனர். அரசு தலைமையிலான வன்முறைக்கு எதிர்வினையாக எழுச்சி பெறும் எந்தவொரு எதிர்ப்பையும் ‘பயங்கரவாதம்’ என்று இழிவுபடுத்துவதன் மூலமும், சட்டத்திற்கு வெளியே வன்முறையை இயல்பாகவே சட்டவிரோதமானது என்று விவரிப்பதன் மூலமும், இஸ்ரேல் முன்னெடுத்துச் சென்ற ‘பயங்கரவாத எதிர்ப்பு’ பிரச்சாரம் முஸ்லீம் உலகில் இடம்பெறும் அரசு தலைமையிலான வன்முறைகளுக்கு பொருத்தமானதோர் கோவணமாக மாறி நின்றது. (‘carte blanche’ என அதனை விவரிப்பதற்குக் காரணம், முஸ்லிம் உலகில் சியோனிசத்தை தாஜா பண்ணுவதற்காக நடாத்தப்படும் வகைதொகையற்ற வன்முறைகளை தட்டிக் கேட்பதற்கு யாருமே இருக்கவில்லை)

9/11க்கு பின்னர் ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் இப்போது காசா, யேமன், சிரியா மற்றும் தெற்கு லெபனான் ஆகிய நாடுகளில் தொடுக்கப்பட்டு வரும் ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற பெயரிலான இரத்தக்களரிகளுக்கு முஸ்லீம் அரசாங்கங்கள் காட்டிவரும் அடிபணிதலும் இணக்கமும் சட்டபூர்வமான ஆதரவை வழங்கின. சியோனிசத்தின் இயல்பான முஸ்லீம் எதிர்ப்பை மூலதனமாகக் கொண்டு தவறாக வழிநடத்தப்பட்ட பல சக்திகளுக்கு, பயங்கரவாதத்தின் மீதான போர் மூலமாக அளவை மிஞ்சிய, விகிதாசாரமற்ற இந்த கண்மூடித்தனமான ஆதரவு முஸ்லிம் உலகத்தில் கிடைத்தது.

அதிர்ஷ்டவசமாக, இவ்விடயத்தில் மேலதிக தெளிவை வழங்கும் நோக்கில்  இப்போதெல்லாம் அறிஞர்கள்  பழமையான இந்த மூலோபாய பிரச்சாரத்தின் வழியாக உலகம் கடந்து வந்திருக்கும் புள்ளிகளை இணைக்கின்றனர். சட்டம் மற்றும் அரசியலமைப்பு உரிமைகளுக்கான பாலஸ்தீன மையம் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் வெள்ளை அறிக்கையில் ‘பாலஸ்தீன எதிர்ப்பின்’ வேர்கள் என அடையாளப்படுத்தப்படும் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அமெரிக்க பயங்கரவாத தடை சட்டங்களின் தோற்றுவாய் மற்றும் வளர்ந்து வரும் அதன் அபாயங்கள் பற்றிய எச்சரிக்கையை டெர்யில் லீ சுட்டிக் காட்டியபடி இருந்தார். ஆரம்பத்திலிருந்தே அந்த சட்டத்தின் பிரதான அம்சங்கள் பாலஸ்தீனத்தை முடக்குவதற்கான நிகழ்ச்சி நிரலுக்கு எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்தன என்ற அவரது அவதானம் முக்கியத்துவம் பெறுகிறது. இதன் பின்விளைவுகளை குறைத்து மதிப்பிட முடியாது. பாலஸ்தீனத்தில் இடம்பெறும் அராஜகங்களுக்கு நீதி கேட்டு வளர்ந்து வரும் இயக்கத்தை குற்றத் தன்மை கொண்டதாக காட்டுவதற்கும், தேசத்தின் கண்ணியம் மற்றும் அரசியல் உறுதிப்பாட்டில் இருந்து பாலஸ்தீனியர்களை மேலும் தூரமாக்குவதற்கும், அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்கு இஸ்ரேலுடன் இணைந்திருக்கும் குழுக்கள் இன்று கூடுதல் நேரம் வேலை செய்கின்றன.

பாலஸ்தீன் எல்லையை திறக்குமாறு, இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிக்குமாறு கோரி எழும் அரபு நாடுகளின் பொதுமக்களின் குரல்கள் மிகக் கடுமையான விதத்தில் அடக்கப்படுகின்றன. கடுமையான கண்காணிப்பு மற்றும் கண்டிப்போடு ஆயுதமேந்திய காவலர்களால் நடைமுறைப்படுத்தப்படும் இந்த சட்டங்களின் வரம்புகளை மீறுவோர் மிக மோசமான பின்விளைவுகளை எதிர்நோக்குகின்றனர். முஸ்லிம் எதிர்ப்பின் உள்ளடக்கத்தோடு சியோனிசம் உருவாக்கிய  இந்த நாசகாரத் திட்டத்தின் விளைவாக, அரபு நாடுகளில் தமது சொந்த மக்கள் மீது பாய்ந்து பிராண்டிக் கொல்லும் சட்டம், நீண்ட காலமாக செயற்பட்டு, இறுதியில் அவர்களது பொதுக் கொள்கையாக மாறியுள்ளது என்பதே உண்மையான சோகமாகும். அடையாள எதிர்ப்புகள் கொதி நிலையில் உள்ள நீராவியை வெளியேற்றுவது போல மக்களின் கோபத்துக்கு வடிகாலாகின்றன. சரி, ஆனால் அதற்கு மேல் எதுவும் நடைபெறாது. ஐக்கிய அரபு அமீரகம், சவூதி, ஜோர்டான், மொராக்கோ, பஹ்ரைன் அல்லது எகிப்து போன்ற அரபு ஆட்சிகள் ‘பயங்கரவாதத்தின் மீதான போர்’ என்ற இஸ்ரேலிய கதையாடலின் சட்டகத்தை மொத்தமாக ஏற்றுக்கொண்டதுடன், ஒரு அரசாக பாலஸ்தீனத்தின் சொந்த உரிமைக்கு காயடிக்கும் விதத்தில் செயற்படுகின்றன. இந்தக் கொடுங்கோலர்கள், ஆக்கிரமிப்பை எதிர்க்கும் பாலஸ்தீனத்தின் உரிமையை தம்முள் புதைத்து வைக்கும் வகையில் இஸ்லாத்தை கடைப்பிடிக்கும் ஒருவருடன் இணக்கமான முஸ்லிம் குடிமகன் என்ற அவர்களின் கருத்தை இணைத்துள்ளனர்.

ராய்ட்டர் செய்தித் துணுக்கின் வழியாக தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத ஐக்கிய அரபு அமீரக அதிகாரி ஒருவர், “எப்படியிருந்தாலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இஸ்ரேலை தொடர்ந்தும் ஆதரிக்கிறது; ஏனெனில் ஹமாஸ் அவர்களுக்கு விருப்பமான அமைப்பு அல்ல” என்று தெரிவிக்கிறார். “அவர்களும் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிலுள்ளவர்கள்தான்”. முஸ்லிம்களது அரசியலைத் தீர்மானிக்கும் எந்தவொரு அழைப்பையும், அரபு நாடுகள் ‘முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின்’ தலையில் சுமத்தி சமன் செய்வதன் விளைவாக, அவர்கள் தீமையின் உச்சமெனக் கருதப்படும் ‘மோசமான முஸ்லிம்கள்’; ஒன்றில் அவர்கள் கொல்லப்பட, சிறையில் அடைக்கப்பட அல்லது இனவழிப்புக்கு உட்படுத்தப்படல் வேண்டும் என்ற தர்க்கம் நிலை நாட்டப்படுகிறது. ஆனால், பின்னர் என்ன நடந்தது என்று பாருங்கள்! ஜெர்மனியில் நீங்கள் வைத்திருந்தது ‘நாஸி நீக்கம்’; மற்றும் டக்ளஸ் மேக்ஆர்தரின் கீழ் நீங்கள் ஜப்பானில் வைத்திருந்தது ஒரு ‘கலாச்சார சீர்திருத்தம்’. இன்று நீங்கள் பார்வையிடும் ஜப்பான் 1930களின் ஜப்பானில் இருந்து மிகவும் வித்தியாசமானது. இன்று நீங்கள் செல்லும் ஜெர்மனி 1930களின் ஜெர்மனியில் இருந்து மிகவும் வித்தியாசமானது.

அரபு நாடுகளில் இது சாத்தியமா? நான் திட்டவட்டமாகச் சொல்கிறேன், நிச்சயமாக, அதுதான், ஏனென்றால் நாம் ஏற்கனவே இரண்டு இடங்களில் பார்த்திருக்கிறோம். “வளைகுடா நாடுகளில் பார்த்திருக்கிறோம். நீங்கள் துபாய்க்கு செல்லும்போதும், அபுதாபிக்கு செல்லும்போதும் அல்லது பஹ்ரைனுக்குச் செல்லும்போதும் முற்றிலும் வித்தியாசமான ஒன்றைக் காண்பீர்கள். உண்மையில், அங்கு ஒரு கலாச்சார மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. சவூதி அரேபியாவில் கணிசமான அளவில் இதேதான் நடக்கிறது என்று நான் சொல்கிறேன்.” என்கிறார் நேதன்யாஹு (நவம்பர்27, 2023ல் எலான் மஸ்க் உடனான X Space உரையாடலின் போது கூறியது)

இவ்வாறு, முஸ்லிம்களும் அரேபியர்களும் இரட்டையர்களை (இஸ்ரேல் மற்றும் அரபு அரசு அடிப்படைவாதிகள்) ஒன்றாகப் பார்க்கத் தொடங்கும் போதுதான் சுதந்திர பாலஸ்தீனத்திற்கான சாலை வரைபடம் கைக்கெட்டும் தூரத்தில் தென்படும். அல்லது அவை இன்னும் மோசமாக இருக்கலாம். 2018ல் தி அட்லாண்டிக்கின் தலைமை ஆசிரியர் ஜெஃப்ரி கோல்ட்பர்க் (அவர் முன்னாள் இஸ்ரேலியப் படையின் ஜெயிலர்) ஆஸ்பென் நிறுவனம் ஏற்பாடு செய்த அமர்வொன்றின்போது இவ்வாறு தெரிவித்தார் “நான் நேதன்யாஹுவையும் M.B.Sஐயும் நேர்காணல் செய்திருக்கிறேன். அந்த வகையில் இருவருக்கும் இடையில் நான் கண்ட ஒரே உண்மையான வித்தியாசம்” ‘M.B.S உண்மையாகவே பாலஸ்தீனியர்களை வெறுப்பது தான் அது’ என்ற முடிவுக்கு தான் வந்ததாகக் கூறினார். 2023 அக்டோபர் 7க்கு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்கு முன்பு M.B.S. பெருமையுடன் இவ்வாறு அறிவித்தது தற்செயல் நிகழ்வு ஒன்றல்ல: “இஸ்ரேலுடனான உறவுகளை இயல்பாக்குவதற்கான தருணத்துக்கு நாங்கள் மிக நெருக்கமாக இருக்கிறோம்.”

காசாவில் இனப்படுகொலை ஆரம்பித்து அதன் மக்கள் முற்றாகக் கைவிடப்பட்ட நிலையில் கடக்கும் ஐந்தாவது மாதம் இது. பாலஸ்தீனியர்கள் நித்தமும் மூழ்கி எழும் இரத்தக் கடல்கள் ஒருபோதும் அமைதிக்கான ஒப்பந்தத்தை முறிப்பதாக இல்லை என்பது இதில் தெளிவாகிறது.

அப்படியாயின், நெதன்யாகுவுக்கும் அரபுலக ஆட்சியாளர்களுக்கும் இடையிலான ஒரே வித்தியாசம் தான் என்ன? இந்த ‘உம்மத்தில்’ இன்னமும் மனசாட்சியுடன் இருப்பவர்களின் துருவும் கண்களிலிருந்து தப்பிச் செல்லும் நோக்கத்தோடு பிந்தியவர்கள் தங்கள் ‘இயல்பாக்க இஸ்லாத்தை’ பூமிக்கடியில், இருண்ட, வெட்கக்கேடான துரோகங்களை சுமந்து நிற்கும் சுரங்கங்களுக்குள் வைத்துக் காப்பாற்ற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். சுவாரஸ்யமான வகையில் நயவஞ்சகன் என பொருள்படும் ‘முனாfபிக்’ என்ற அரபுப் பதம் நிலைகொண்டுள்ள ‘நூன்’, ‘fபா’ ‘கா’ என்னும் மூன்று எழுத்துக்களும் மற்றொரு வேர்ச் சொல்லுக்கும் பொருந்துகின்றன. ‘சுரங்கம்’ என்ற சொல்தான் அது. ஒரு நயவஞ்சகன், இவ்வாறு சுரங்கப்பாதையின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்கிறான், அவனுக்கு எது பொருத்தமானது என்பதைப் பொறுத்து. இன்று ஒரு முனையிலும் நாளை மற்றொரு முனையிலும் அவனைக் காணலாம்.

அரபு மற்றும் முஸ்லீம் சர்வாதிகார ஆட்சிகளைப் பொறுத்தவரை, பாலஸ்தீனியர்களை நசுக்கும் விடயம் சாமர்த்தியமாகவும், அமைதியாகவும், உள்ரங்கமாகவும் நடைபெற்று வருகிறது. ஒருபுறம், அவர்கள் தமது எண்ணங்கள் மற்றும் பிரார்த்தனைகளுடன் இனப்படுகொலையை ‘கண்டனம்’ செய்யலாம்; அல்லது இஸ்ரேலிய அல்லது அமெரிக்க தூதரை ஒரு பரபரப்பான ஸ்டண்ட் என்று ஏமாற்றலாம்; ஆனால், யதார்த்தத்தில் காசா மக்கள் பட்டினி கிடந்து சாகும்போது, உள்ரங்கமாக அவர்கள் இஸ்ரேலுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்கள்; அது மாத்திரமன்றி இஸ்ரேலுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்கிறார்கள். கடந்த வாரம் டிவியில், தனது ஐஸ்கிரீம் கூம்பை வெறித்தனமாக நக்கியபின், ஒரு யுத்த நிறுத்தத்தைப் பற்றி அப்பட்டமாக பொய் சொல்லும்போது, அரபு நாடுகள் “இயல்பாக்கலை மீண்டும் தொடங்க ஆர்வமாக உள்ளார்கள்” என்று ​​இனப்படுகொலை ‘ஜோ’ கூறினார். காசா இனப்படுகொலை அவர்களுக்கு ஒருபோதும் சிவப்புக் கோடாக இருக்காது என்ற தெளிவான உண்மையை இது அப்பட்டமாகக் காட்டுகிறது. உண்மையில், மத்திய கிழக்கில் ‘முன்னேற்றம்’ மற்றும் ‘ஸ்திரத்தன்மை’ என்ற நிலையை மீண்டும் தொடங்க பாலஸ்தீனத்தில் எஞ்சியிருக்கும் சிறியவற்றை துடைத்து அழிப்பதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் எப்போதும் இது இருந்துவருகிறது.

இவைதான் துரோகத்தில் தோய்ந்த, அரபு அரச அடிப்படைவாத சுரங்கங்களிலில் இருந்து உருவான ‘அப்ரஹாம் ஒப்பந்தங்களின் இஸ்லாம்’ உருவாக்கிய விளைவுகள். பெயரளவில், ஆடைகளில், பிம்பங்களில் மாத்திரம் உயிர்வாழும் ஒரு இஸ்லாம்… நிஜத்தில் அதன் உள்ளடக்கம் தான் என்ன? கட்டில்லாத உலகாயுத நுகர்வுத் தேட்டம், அதிகாரத்துக்கான அதீத பசி. என்ன விலை கொடுத்தாவது அவற்றை அடைவதற்கான வெறி! குழந்தைகள், வயோதிபர்கள் உட்பட முப்பதினாயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் காவு கொள்ளப்பட்ட போதிலும், உணவின்றி எலும்பும் தோலுமாக மக்கள் பட்டினிச்சாவு அடைந்த போதிலும், பசியின் கொடுமையால் விலங்கு உணவுகளை காஸா மக்கள் தின்ற போதிலும். இதுதான் அவர்களது இஸ்லாம்… இனப்படுகொலை ஆரம்பமாகி 150வது நாளில், வானத்திலிருந்து கடலுக்குள் உணவுப் பொட்டலங்களை போடுவது தான் அந்த இஸ்லாத்தின் யோக்யதை. ஏனென்றால், காலனித்துவம் அவர்களை பிரித்தாள்வதற்காக வரைந்த தேசஎல்லைகளைத் தாண்டுவது தான் அவர்களைப் பொறுத்த வரை ‘பெரும்பாவம்’. அதில் தவறு நேர்வதற்கு இடமளிக்கமாட்டார்கள்.

இனப்படுகொலை ஒன்றிலிருந்து தப்பித்து வெளியேறுவதற்காக அடுத்து இருக்கும் ஒரு ‘முஸ்லிம் தேசத்துக்குள்’ பிரவேசிக்கும் ஏதிலிகளிடம் 5000 தொடக்கம் 7000 டாலர்கள் வரை கூச்ச நாச்சமின்றி கட்டணமாகப் பெறுவதை அங்கீகரிக்கும் இஸ்லாம்தான் அது. யஸான் கஃபர்னேயும் மற்றும் 12 குழந்தைகளும் (அதன் தொகை இன்னும் அதிகம்) பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும்போது, செங்கடலைக் கடந்து சென்று பழங்கள் மற்றும் காய்கறிகளை இஸ்ரேலுக்கு வழங்குவதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரே இஸ்லாம் இதுதான். இதிலெல்லாம் ‘ஷரீஆவை மீறவில்லை’ என்றால், உண்மையான அந்த இஸ்லாத்தில் என்னதான் எஞ்சியிருக்கிறது?     

காஸா வாசிகள் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களைப் பார்த்து, “நாங்கள் சுதந்திரமானவர்கள், சுதந்திரம் எப்படி இருக்கும் என்று கூட தெரியாதவர்கள் தான் நீங்கள்” என்று கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை!

2024 மார்ச் மாதம் 6ம் திகதி பிரசுரமான இக்கட்டுரை https://sermonsatcourt.substack.com/p/abraham-accords-islam-and-the-tunnels?r=ar67h&utm_campaign=post&utm_medium=web&triedRedirect=true&fbclid=IwY2xjawJzI4JleHRuA2FlbQIxMQABHmr86ai6sCSE552JXx3SdNnImxQDnHZrn4bCTNz7GdoChCrkifw-fqy1vvSO_aem_4a04h1qJsY242vRBrAsa6w என்ற தொடுப்பில் உள்ளது.

உசாத்துணைகள்

  1. The Axis of Compliance – https://sermonsatcourt.substack.com/p/the-axis-of-compliance
  2. Gaza and the End of the Rule Based Order – https://www.foreignaffairs.com/israel/gaza-and-end-rules-based-order
  3. Islamophobia Industry – https://islamophobianetwork.com/
  4. The Abraham Accords: Unlocking Sustainable and Inclusive Growth Across the Middle East – https://www.uae-embassy.org/abraham-accords-sustainable-inclusive-growth
  5. அப்துல்லா பின் பைய்யாவின் இந்த அறிக்கை – https://www.wam.ae/en/details/1395302862343

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி