– என்ட்லோவ் கட்ஷேனி

ஆய்வுச் சுருக்கம்

உலகமயமாக்கல் மூலமான எல்லைகள் கடந்த நிலை, பகிர்ந்து கொள்ளப்பட்ட நலன்கள், தேசியம் கடந்த‌ யதார்த்தம், பன்மைத்துவம் மற்றும் அகிலத்துவம் போன்ற சொல்லாடல்களால் நவீன உலக ஒழுங்கு புரிந்து கொள்ளப்பட்டாலும் மனித உருவாக்கமான நவீன தேசிய அரசுக் கட்டமைப்பும் அதன் தர்க்கங்களுமே அதன் போக்கை நிர்ணயித்து வருகின்றன. ஐரோப்பியமையவாத பின்புலத்துடன் உருவான நவீனத்துவத்தின் அறிவாய்வியல் விளைபொருளாகவுள்ள தேசிய அரசுக் கட்டமைப்புக்கள், சமூகத்தினை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான தனது பிரதான கருத்தியல் அடிப்படையாக தேசியவாதத்தினைக் கொண்டிருப்பதோடு காலனித்துவம், அரசு உருவாக்கம், காலனிய நீக்கம் ஆகிய ஒன்றுடன் ஒன்று சிக்கலான தொடர்புகளைக் கொண்ட மூன்று பிரதான கருத்தியல் உள்ளீடுகளையும் தனக்குள் உட்பொதிந்து இருக்கிறது. ஐரோப்பாவைப் போலவே, ஆப்பிரிக்கக் காலனிகளில் வாழ்ந்த கவிஞர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்கள் தேசியவாதத்தினை உட்செறித்துக் கொண்டு நிலையானதும் உறுதியானதுமான அரசு நிர்மாணத்திற்காகச் செயற்பட்ட அதேநேரத்தில் அவர்கள் மீதான காலனியாதிக்கச் செயற்பாடுகளை காலனிய நீக்கம், சுதந்திரம் பற்றிய தரிசனங்கள் மற்றும் விமர்சனங்களின் ஊடாக எதிர்த்தும் வந்தனர். அவ்வகையில் இக்கட்டுரை அரசியல் நவீனத்துவம் கட்டமைத்திருக்கும் சர்வதேச மற்றும் தேசிய ரீதியிலான கற்பனாவாதங்களின் சிக்கல்களை ஆராய்வதோடு அரசியல் சமூகங்களை காலனிய நீக்கம் செய்வதற்கான முயற்சிகள் தொடர்பிலும் ஆராய்கிறது.

அறிமுகம்

21 ஆம் நூற்றாண்டின் மாபெரும் முரண் யாதெனில், உலகெங்கிலும் உள்ள மக்கள் உலகமயமாக்கல் போன்றவற்றால் முன்னெப்போதையும் விட நெருக்கமாக இணைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், நடைமுறையில் உண்மையான உலகளாவிய ஒற்றுமைக்கு அல்லது அகிலத்துவ வாதத்திற்கு வழிவகுக்கவில்லை என்பது தான். உலகமயமானது எழுச்சி பெற்று வரும் குறுகலான மனப்பான்மை கொண்ட தேசியவாதம், இனவாதம் மற்றும் அந்நியர்கள் மீதான பயம் ஆகியன குறித்து எவ்விதமான பயனுள்ள முன்னெடுப்புக்களையும் செய்யவில்லை என்பதையே இதனூடாகப் புரிந்து கொள்ள முடியுமாகவுள்ளது. அந்நியப்படுத்தலின் அடிப்படையில் செயற்படும் அரசுகளின் இச் செயற்பாடுகளைக் கண்டு மெய்யியலாளரான வென்டி ப்ரௌன் (2010) இத்தகைய அரசுகளை ‘சுவர் அரசுகள் (Walled states)’ என்று அழைக்கிறார். இவ்வாறு மற்றவர்களை தங்களை விட்டும் வெளியே உள்ளவர்களாகக் கருதும் இந்தப் போக்கினை கொரொனா தொற்றின் போது வைரஸை தேச எல்லைகளுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட தேசிய மட்டங்களிலான பொதுமுடக்கங்களினூடாக (lockdown) கொவிட் 19 தொற்றுச் செயற்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தின எனலாம்.

‘உலகமயம்’ என்ற கருத்தாக்கத்தின் உள்ளீடுகள் எவ்வளவு பலவீனம் பெற்றவை என்பதை உலக நாடுகள் பலவும் கொவிட் 19 தொற்றுக்களின் போது தமது தேச எல்லைகளுக்குள் நின்று மாத்திரம் தீர்வுகளைத் தேட முயற்சித்ததனைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும். இதனையே ஐசக் கமோலா (2019)  “பூகோளப் புனைவுகள்” என்றழைக்கிறார். உலகமயம் என்ற கருத்தாக்கத்தை தேசியம் மேலுள்ள வலுவான நம்பிக்கைகள் பலவீனப்படுத்தி விடுகின்றன எனக் கூற முடியும். விண்டி ப்ரௌன்(2010) முன்வைத்த “உலகமயமாக்கல் செயற்பாடுகளால் நாடுகளின் இறைமை மீறப்படுகின்றன (waning sovereignty)” போன்ற கருத்துக்கள் உண்மையில் அர்த்தமற்றவையாகவே மாறியிருக்கின்றன. இவ்வாறு தொடர்ச்சியாக பலமடைந்து வருகின்ற தேசியவாதம் குறித்து விளக்கும் போது “தேசியவாதமானது குழப்பமானதும் பல்பரிமாணம் கொண்டதுமான வரலாற்றைத் தன்னகப்படுத்தி, அதனைக் கட்டுப்படுத்த முயற்சிப்பதோடு அதனை வியாக்கியானம் செய்வதன் வழியாகவே தேசமும் அதன் மக்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றிய கருத்தையும் கட்டமைத்து வருகிறது என்று ஹர்ஷன ரம்புக்வெல்ல (2018) கூறுகிறார். ஹர்ஷன ரம்புக்வெல்ல இதனை மேலும் விளக்கிச் செல்லும் போது “பொதுவாக தேசியம் என்பது வரலாற்றுடன் இரு வகையான உத்திகளை ஒரேநேரத்தில் கடைப்பிடித்து வருகின்றது: ஒன்று காலப்போக்கில் தேசத்தின் வரலாறு எவ்வாறு உருவாகின்றது என்று விளக்கும் அதேவேளை அதே வரலாறு, காலவோட்டத்தில் என்றுமே மாறாத நிலையான இயல்புகளையும் கொண்டுள்ளதுடன் அதனை கேள்விக்குட்படுத்துவதைத் தடுத்தும் வருகிறது. எனவே தேசியவாதம் மீதான விமர்சனம் என்பது அது முன்வைக்கும் நிலையான தன்மை குறித்ததும் அதன் இயல்புநிலை குறித்ததுமான கேள்விகளில் இருந்தே உருவாக வேண்டும்” என்று அவர் எழுதிச் செல்கிறார்.

நவீன மனிதனின் மொழியையும் அவனது ஆழ்மனதையும் கட்டுப்படுத்தி, மானுட வரலாறு, அரசியல் மற்றும் சமூகம் என்று சமகால உலகைப் புரிந்துகொள்வதற்கான ஒரு அறிவார்ந்த சட்டகத்தை நவீன தேசிய அரசுகளும் அதன் தேசியம் என்ற கருத்தாக்கங்களுமே வடிவமைத்து வருகின்றன. இவ்வாறு தேசிய அரசுகளையும் அதன் தேசியம் மற்றும் தேசிய அடையாளங்களை நவீன உலகைப் புரிந்து கொள்வதற்காக பயன்படுத்தும் இந்தப் போக்கினை ரம்புக்வெல (2018:10), “முறையியல்சார் தேசியவாதம்” என்று அழைக்கிறார். அதாவது தேசிய அரசு மற்றும் தேசிய அடையாளங்கள் என்பவற்றை சமகால உலகின் சமூக, அரசியல் உள்ளிட்ட ஏனைய எல்லா விவகாரங்களையும் மதிப்பீடு செய்வதற்கான அளவீடாகக் கொள்வதையே அவர் இதனூடாக விளக்க நாடுகிறார். இதனால் எம்முன்னால் உள்ள பெரும் சவால் யாதெனில் வரலாற்றையும் அது  எவ்வாறு, யாரால், எதற்காக எழுதப்படுகின்றது என்பதையும் கேள்விக்குட்படுத்துவதுதான். ஏனெனில் ரம்புக்வெல குறித்துக் காட்டுவது போல் ” தேசிய அரசுகள்-அவற்றின் துவக்கத்தில் இருந்தே அவை, வரலாற்று பூர்வமாக தன்னை நிரூபிப்பதிலும், உலகளாவிய ரீதியில் மக்களைப் பாதுகாத்து வழிநடாத்தும் முதிர்ச்சியைப் பெற்ற ஒரேயொரு நடுநிலை மாதிரியுமாகவே தன்னை முன்னிறுத்தி வந்திருக்கின்றது.

அந்தவகையில் இந்தப் பகுப்பாய்வானது, ஐரோப்பிய அரசியல் நவீனத்துவ மாதிரியானது இத்தகைய சிக்கல் மிகுந்த தேசியக் கட்டுமானம் குறித்த பார்வைகளை எவ்வாறு பிரசவித்துக் கொண்டது என்பது தொடர்பிலான விசாரணைகளையே மேற்கொள்ள முனைகிறது. ஐரோப்பிய நவீனத்துவத்தின் ஏனைய கண்டுபிடிப்புக்களைப் போலவே நவீன தேசிய அரசுகளும் தங்களை இயற்கையானவையாகவும் நடுநிலைத் தன்மை கொண்டவையாகவும் முன்னிறுத்துவதன் பின்னணி குறித்தும் அதன் பிரச்சினைகள் குறித்தும் ஆராய்வதால் இந்த ஆய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

ஐரோப்பிய நவீனத்துவமும் தேசியம் குறித்த அதன் போலிக் கட்டுமானங்களும்.

தேசிய அரசுக் கட்டமைப்பின் தோற்றம் தொடர்பிலும் வரலாற்றில் அதன் இயங்குதளங்கள் தொடர்பிலுமான நியமமான வரலாறு ஒன்று எழுதப்பட வேண்டும் என்ற கருத்தில் சமகாலத்தில் பெரும்பாலானோர் உள்ளனர் (Mamdani 2020: 1). இதன் அடிப்படையிலேயே முன்னணி ஆபிரிக்கப் புத்திஜீவியான பேராசிரியர் மஹ்மூத் மம்தானி,  1648 இல் இடம்பெற்ற வெஸ்ட்பாலியா உடன்படிக்கைக்கு பின்னரே தேசிய அரசுகள் நிறுவப்பட்டன என்ற பொதுக் கருத்தாக்கத்தை வெற்றிகரமாக சவாலுக்குட்படுத்தி இருந்தார். மட்டுமன்றி வெஸ்ட்பாலியாவுக்கு முன்னரேயே மிக நீண்ட வரலாற்று அனுபவம் தேசிய அரசுகளுக்கு உள்ளது என்பதை நிறுவியும் இருந்தார். இது தொடர்பாக மம்தானி (Mamdani 2020: 1) நவீன தேசிய அரசுகளின் வரலாறு, 1492 இன் கஸ்ட்டிலியன் முடியாட்சியானது கிறிஸ்தவ ஸ்பானியர்களுக்கான ஒருபடித்தான (Homogenous) நிலம் மற்றும் கலாச்சாரத்தை கற்பனை செய்ததிலிருந்தே துவங்குகிறது எனவும் குறித்த தாயக உருவாக்கமானது அங்கிருந்த யூதர்களையும், முஸ்லிம்களையும் ஒன்றில் வெளியேற்றி அல்லது கிறிஸ்தவத்திற்கு மதம் மாற்றுவதன் வழியே குறித்த இரு சாராரையும் அந்நிலங்களுக்கு அந்நியர்களாக கட்டமைத்ததன் ஊடாகவே இடம்பெற்றது எனவும் விளக்குகிறார்.

ஆனால் நவீன அரசுக் கட்டமைப்புக்கள் குறித்த ஐரோப்பிய அனுபவங்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில், 1492 களுக்கு முன்பிருந்தே பிரத்தியேகமான ஆப்பிரிக்கச் சமூக வாழ்க்கை முறைகளிலிருந்து விருத்தியுற்ற பல ஆப்பிரிக்க அரசுகள் மற்றும் பேரரசுகளின் வரலாற்றை நாம் கண்டுகொள்ள முடியும் (Diop 1974; Diop 1987). எகிப்து, சொங்காய், மாலி, கானா மற்றும் கொங்கோ போன்றன வலுவானதும் நீடித்ததுமான ‘நவீன அரசுகளாக’ ஆபிரிக்க வரலாற்றில் நிலவி வந்திருக்கின்றன. ‘நவீன அரசுகள்’ என்ற வகை மாதிரியிலிருந்து இவற்றினைப் புறக்கணித்தால் மட்டுமே மம்தானியின் தேசிய அரசுகளின் தோற்றம் குறித்த வாதங்களை எம்மால் இங்கு கருத்தில் கொள்ள முடியும்.  ஆபிரிக்க நிலங்களில் காலனித்துவத்திற்கு முன்பு  நிலவிய சமூக மாதிரிகள் தொடர்பில் ஆராயும் செய்க் அன்தா டியோப் (Cheikh Anta Diop) (1989) மற்றும் நைஜீரிய பெண்ணியலாளரும் மானுடவியலாளருமான அய்பீ எமாடியூம் (Amadiume 1997) போன்றோர் “ஐரோப்பிய நவீனத்துவ மாதிரிகளிலிருந்தும் அதன் நிறுவன அமைப்புகளிலிருந்தும் வேறுபட்ட விதத்திலான ‘தாய்வழி’ மரபுகளின் மீதமைந்த  சமூக ஒழுங்கமைப்பினை ஆபிரிக்கா கொண்டிருந்தது” எனக் குறிப்பிடுகின்றனர். டியோப் மற்றும் எமாடியூமின் இந்த அவதானங்கள் ஆபிரிக்க சமூகங்கள் பலவும், நவீன மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வேறுபட்ட கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருந்தன என்பதை தெளிவாகக் எடுத்துக் காட்டுவதோடு இந்தக் கருத்துக்கள் மற்றும் மதிப்பீடுகளின் அடியாக குறித்த சமூகங்கள் தமக்கான அரசுகள் மற்றும் பேரரசுகளைக் கூட உருவாக்கிக் கொண்டன என்பதையும் விளக்குகின்றன. மட்டுமன்றி இத்தகைய அரசுகள் நவீன ஐரோப்பிய மாதிரயிலமைந்த அரசுகள் போன்று ஆணாதிக்கத் தன்மை கொண்டதாகவோ அல்லது மெக்ஸ் வெபர் (2015) கூறுவது போன்று வன்முறைகளை அரசுடமையாகக் கருதிக் கொண்டவையாகவே அமைந்திருக்கவில்லை எனவும் அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர். எமாடியூம்(1997: 40) இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில்:

“பெண்களை அடிப்படையாகக் கொண்ட தாய்வழிச் சமூக அமைப்புக்கள் அன்றாட சமூக வாழ்க்கைக்குத் தேவைப்படும் வித்தியாசமான பெறுமானங்களையும் விழுமியங்களையும் உற்பத்தி செய்து கொள்கின்றன. இத்தகைய தாய்வழிக் குடியமைப்புகள் தமது அங்கத்தினர்களுக்குத் தேவையான அன்பு, பாதுகாப்பு மற்றும் கூட்டுணர்வுகளையும் கூட தமக்குள் செறிவாகவே உற்பத்தி செய்து கொள்கின்றன. இதனூடாக ஆபிரிக்கச் சமூக அமைப்புக்களை பாலியல் பிறழ்வு கொண்ட சமூகங்களாக வகைப்படுத்திக் கொள்வது அவ்வளவு ஆரோக்கியமான மதிப்பீடாக அமையாது. உண்மையில் அங்கு நிலவிய தாய்வழி மரபுகள் அச்சமூக அமைப்பில் நிலவிய ஆணாதிக்கத்தினை அதிகாரச் சக்தியாக மாறுவதிலிருந்தும், முழுச் சமூகத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக மாறுவதலிருந்தும் கட்டுப்படுத்தி வைத்திருந்தது.” (Amadiume 1997: 40).

இதனூடாக எமாடியூம் மற்றும் டியோப் போன்றவர்கள் ஆபிரிக்க சமூக அமைப்புக்களை மிகச் சிறந்தவை என்றோ அல்லது அவை ஆணாதிக்கம் மற்றும் ஏனைய வன்முறைகளில் இருந்து முற்றிலும் விடுபட்டவை என்றோ குறிப்பிட முயலவில்லை. அவர்களது கருத்தாக அமைவதெல்லாம் ஆபிரிக்கச் சமூக அமைப்புகள் ஐரோப்பிய சமூக மாதிரிகளிலிருந்தும் வேறுபட்ட மதிப்பீடுகள் மற்றும் கட்டமைப்புகளைக் தமக்குள் கொண்டிருந்தன என்றே அவர்கள் விளக்குகிறார்கள். இங்கு அவர்களது பிரதான வாதப்பொருளாக ‘ஆபிரிக்க சமூக அமைப்புகள் தாய்வழி மரபுகளைச் சுமந்திருந்தமையினால் ஆணாதிக்க – வன்முறை அமைப்புகளை அவற்றினால் வெகுவாகக் கட்டுப்படுத்திக் கொள்ள முடிந்தது’ என்பதாகவே அமைகிறது. தொடர்ந்தும் எமாடியூம் (1997: 37) குறிப்பிடும் போது “இத்தகைய தாய்வழி மரபுகள் குறித்த அவதானங்களை மறுதலிக்கும் போது குறித்த ஆபிரிக்க சமூகங்கள் தொடர்பான அசலான சமூக யதார்த்தங்களையும்  அங்கு  நிலவிய சமூக – அதிகார வரம்புகள் மற்றும் சமநிலைப்படுத்தல்கள் ஆகியவற்றைக் கண்டறிய முடியாமல் போய்விடும்” எனவும் குறிப்பிடுகிறார். டியோப் மற்றும் எமாடியூம் ஆகியோரினது படைப்புகளைப் பற்றிய மற்றொரு முக்கியமான  அவதானம் யாதெனில், ஐரோப்பிய மாதிரிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு நிற்கும் வகையில், சமூக அமைப்புக்களைப் புரிந்துகொள்வதற்கான வெவ்வேறு கண்ணோட்டங்களையும் அடிப்படை  வழிமுறைகளையும் ஐரோப்பிய வரலாற்றனுபவங்களிலிருந்து அல்லாது ஆப்பிரிக்க வரலாற்று அனுபவங்களிலிருந்து அவர்கள் வழங்க முயற்சித்து இருக்கிறார்கள்.  அந்த வகையில் அவர்கள் மம்தானியின் வழிமுறையில் இருந்தும்  வேறுபடுகிறார்கள் என்பதுதான். அது மட்டுமன்றி நவீன ஐரோப்பிய உலகக் கண்ணோட்டங்களின் அடியாக உருவான மதிப்பீடுகளில் தங்கியிருக்காமல் சமூகத்தையும் அரசியலையும் புரிந்து கொள்வதற்கான மாற்று வழிமுறைகள் தொடர்பான மீள்பரிசீலனைகளுக்கும் அவர்களின் படைப்புகள் கதவுகளைத் திறந்து விடுகின்றன. அத்தோடு வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளுடன் கூடிய ஆணாதிக்க  மதிப்பீடுகள், மானுட வரலாற்றில் இயல்பானதும் பொதுவானதுமான அனுபவம் என்ற கருத்தாக்கத்தை அவர்கள் வெற்றிகரமாக  எதிர்கொள்கிறார்கள் (Amadiume 1997: 69).

மீளவும் மம்தானி, நவீன அரசுகளின் உருவாக்கம் என்பதை அமெரிக்காவின் கண்டுபிடிப்பு மற்றும், அங்கிருந்த பழங்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளின் வழியே இடம்பெற்ற காலனியமயமாக்கல் செயற்பாடுகளுடனும் இணைத்து முன்வைக்கிறார்.

“காலனித்துவப்படுத்தல் மற்றும் நவீன அரசு மாதிரிகளின் தோற்றம் ஆகியன தேசிய அரசுகளின் பிறப்புடனே நிகழ்கின்றன. அதுபோலவே தேசியவாதமும் காலனித்துவத்துடனேயே தனது பிறப்பை நிகழ்த்துகிறது. மட்டுமன்றி இன அழிப்பு மற்றும் ஏகாதிபத்தியம் ஆகியவற்றினூடாகவே தேசிய அரசுகள் வரலாற்றில் நிலை கொள்கின்றன.  இவ்வாறு தேசிய அரசுகளின் பிறப்பால் உருவான இரத்தக்களறியை மறைப்பதற்கான ஒரு பிந்திய கண்டுபிடிப்பாகவே சகிப்புத்தன்மை (Tolerance) பற்றிய கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன. இது அரசியல் நவீனத்துவம் தொடர்பான வித்தியாசமான ஒரு பாடமாக அமைந்துவிடுகிறது.” (Mamdani 2020: 2).

ஐரோப்பிய அரசியல் நவீனத்துவத்தினதும், தேசியம் குறித்ததுமான வரலாற்றை எழுதும்போது, வெஸ்ட்பாலியா ஒப்பந்தத்தின் ஊடாக ஐரோப்பாவினுள் ஒருபுறம் சகிப்புத்தன்மைக்கும் (Tolerance) மறுபுறம் தாராளவாதத்திற்குமான அடிப்படைகள் இடப்பட்டன என்பதையும் ஐரோப்பாவிற்கு வெளியே அடிமைத்துவம், இனமயமாக்கல், போர்கள், வன்முறைகள், இனவழிப்புக்கள் மற்றும் சுரண்டல்கள் ஆகியவற்றின் ஊடாகவே நவீனத்துவம் பிறந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது (Ndlovu Gatsheni 2013a; Ndlovu Gatsheni 2013b; Mamdani 2020). இதனாலேயே ‘There was no tolerance  (சகிப்புத்தன்மை என்பதே இனி கிடையாது)’ என்ற தலைப்பிலான சிந்தனை ஒருசில முன்னணி லத்தீன் அமெரிக்கச் சிந்தனையாளர்களால் முன்வைக்கப்பட்டதோடு இச்சிந்தனையின் ஊடாக காலனியமயமாக்கல், காலனிய நீக்கம் பற்றிய புதிய கருத்தாடல்களையும் அவர்கள் முன்னெடுத்து வந்தனர். அது மட்டுமன்றி இனமயமாக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்ட மற்றும் காலனித்துவப்படுத்தப்பட்ட மக்களின் கண்ணோட்டங்களில் நின்று ஐரோப்பிய நவீனத்துவத்தின் வரலாற்றை மீண்டும் எழுத முயற்சித்தும் வருகின்றனர்‌ (Quijano and Wallerstein 1992; Dussel 1995; Mignolo 2007).

சூனியத்தில் ஈடுபடுபவர் என்ற குற்றச்சாட்டில் ஒரு இந்தோ-ஐரோப்பிய பெண் ஒருவரை உயிரோடு எரித்தமை, தெற்கு ஐரோப்பாவில் இஸ்லாமிய கிலாபாவின் முக்கிய நகரமாக இருந்த கிரனாடா மீதான படையெடுப்பு, அமெரிக்காவில் வாழ்ந்து வந்த பழங்குடிகள் மீது நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள், ஆபிரிக்காவில் வாழ்ந்து வந்த மக்களை அடிமைப்படுத்தி ஐரோப்பிய நாடுகளின் சுரங்கங்களிலும் பெருந்தோட்டங்களிலும் வைத்து அவர்களின் உடலுழைப்பைச் சுரண்டியமை ஆகிய 16ம் நூற்றாண்டில் இடம்பெற்ற நான்கு மாபெரும் இனப்படுகொலைகள்/அறிவாதாரப்படுகொலைகளே பிற்காலங்களில் ஐரோப்பிய நவீனத்துவத்திற்கான அடிப்படைகளை இட்டதாக விளக்கும் றொமான் கிறாஸ்போகுல் (2013), அவ்வாறு உருவாக்கப்பட்ட உலகினை ஜேம்ஸ் ப்லௌட் (1993) குறிப்பிடுவது போல ‘காலனியாதிக்கவாதிகளின் உலகம்’ எனவும் அழைக்கிறார். காலனியாதிக்க வாதிகளின் இந்தப் புதிய உலகின் பிரதான பண்புகளாக அகில் எம்பெம்பே (2021), முழு உலகையும் வெற்றி கொள்வதற்கான உபாயங்களாக ஐரோப்பாவின் ஏகாதிபத்திய வெறியையும் அதனைச் சாத்தியப்படுத்திக் கொள்வதற்காக அவர்கள் கடைப்பிடித்து வருகின்ற தாம் அல்லாத மற்றவர்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றி விடும் அணுகுமுறையையும் சுட்டிக்காட்டுகிறார்.

தேசம் குறித்த ஐரோப்பாவின் நவீனத்துவ கருத்தாக்கமாக நாகரீகமானவர்களால்/முன்னேறியவர்களால் (Civilized) மட்டுமே தேசம் என்ற கட்டுமானத்தை உருவாக்க முடியும் என்பதும் ஏனையவர்கள், குறித்த தேசக் கட்டுமானத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டியவர்கள் என்பதுவாகவுமே அமைகிறது. இதனையே குமிந்தர் கே. பாம்ப்ரா (2007: 1) போன்றோர் நவீன தேசக் கட்டுமானங்களை பிரிவினைகளினதும், வேறுபாடுகளினதும் ஊற்றுக்கண்ணாக விளக்குகிறார்கள். குமிந்தர் கே. பாம்ப்ரா (2007: 1) இதனை மேலும் விளக்கும் போது ஐரோப்பா, உலகை  நாகரீகமானது மற்றும் நாகரீகமற்றது அல்லது முன்னேற்றகரமானது மற்றும் பிற்போக்குத்தனமானது என்ற இருமைகளைக் கட்டமைத்து இதில் நாகரீகமானவர்களாகவும் முன்னேற்றமானவர்களாகவும் ஐரோப்பியர்களை முன்னிறுத்தி ஏனையவர்களை பிற்போக்குத்தனமானவர்களாகக் கட்டமைத்து விடுகிறது என விளக்குகிறார். இந்த இருமைகளே கெரிட்.W. வொங்க் (1984) குறிப்பிடுவது போல சர்வதேச சமூகங்கள் தொடர்பான பிரதான நியமங்களாக சமகாலத்தில் தொழிற்படுகின்றன. நாகரீகங்கள் தொடர்பான இத்தகைய அநீதியான நியமங்கள், சில்வியா வின்டர் (2003) மற்றும் நெல்சன் மொல்டொனேடோ-டோரஸ் (2007) ஆகியோர் விளக்குவது போல மக்களை இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தி யார் “உயர்ந்தவர்”, யார் “தாழ்ந்தவர்” என்பதை தீர்மானிக்கும் சிக்கலான காலனியத் தர்க்கங்களினடியாகவே தொடர்ந்தும் நிலைபெற்று வருகின்றன. இதனை மம்தானி பின்வருமாறு விளக்குகிறார்.

“அரசியல் நவீனத்துவத்தை தழுவிக்கொள்வது என்பது “நாகரிகம்” தொடர்பான ஐரோப்பிய அறிவாதார அடிப்படை நியமங்களையும் அது தொடர்பான அவர்களது சிந்திப்பு முறைமையையும் ஏற்றுக் கொள்வதாகவே அமைகிறது. இந்த சிந்தனையினூடாகவே ஐரோப்பியர்களால், “நாகரிகம் இல்லாதவர்கள்” என்று அவர்கள் அழைத்துக்கொண்டவர்களை அழித்தொழித்து விட்டு தங்கள் நிலங்களை விரிவுபடுத்திக் கொள்ள முடிந்தது. மட்டுமன்றி இச்சிந்திப்பு முறைமை, மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி தங்களை எவ்வாறு அவர்கள் தமது நிலப் பிரதேசத்தினுள் உணர்கிறார்கள் என்பதை இலகுவாக வடிவமைத்து விடுகின்றது. தேசத்தின் ஒரு பகுதியாக ஒருவர் அவரை உணரும் போது அதே தேசத்தின் அரசியல் சமூகத்தினைச் சேர்ந்தவராகவும் அவர் உணர ஆரம்பித்து விடுகிறார். ஆனால் காலனியமாக்கலுக்கு உட்பட்ட மக்களுக்கு இச் சிந்திப்பு முறைமை அவர்களிடம் இயல்பாகவே எழுவதில்லை. தேசிய அரசுகளின் துவக்கக் காலப்பகுதியில் ஐரோப்பியர் சிந்தித்தது போலவே காலனியமயமாக்கலுக்கு உட்பட்ட நிலங்களில் வசிக்கும் மக்களும் சிந்திப்பதற்காக திணிக்கப்படுகின்றனர் (Mamdani 2020: 3).

மம்தானியின் இந்த விரிவான பார்வை, ஆபிரிக்காவினுள் நவீனத்துவத்தின் உள்நுழைவு பற்றியும், அங்கிருந்த மரபுகள், பண்பாட்டு அம்சங்களின் அழித்தொழிப்பு பற்றியதுமான புரிதலைப் பெற்றுக்கொள்ள உதவுவதுடன் தேசம் என்ற கட்டுமானத்தில் இருந்து வெளியேற்றி விதக்கூடிய வகையிலமைந்த முற்றிலும் புதிய ஆபிரிக்கச் சுயங்களை உற்பத்தி செய்ததன் வரலாற்றுப் பின்னணியையும் புரிந்து கொள்ளக் கூடியதாக உள்ளது.

ஆபிரிக்கக் காலனிய வரலாறும் அதன் கட்டுமானங்களும்

1884-1885களில் இடம்பெற்ற பெர்லின் மாநாட்டினைத் தொடர்ந்து ஆபிரிக்காவை தங்களுக்குள் பிரித்துக் கொண்ட ஐரோப்பா, தமக்கேயுரிய வழிமுறைகளில் ஒழுங்கமைந்திருந்த ஆபிரிக்க சமூகக் கட்டமைப்புக்களை காலனியாதிக்கத்தின் ஊடாக மறு கட்டமைப்புச் செய்ததோடு ஐரோப்பிய நவீனத்துவ சிந்தனைகளை அச்சமூகங்களின் மீது திணிக்கவும் செய்தது. இதில் நகைமுரணாக தாங்கள் காலனியாதிக்கப்படுத்திக் கொண்ட நிலங்களில் வாழ்ந்த மக்களை அந்நிலங்களுக்குச் சொந்தமான பூர்வக் குடிகளாகக் கருதாமல் அவர்களை அந்நியர்களாகவும் காலனியாதிக்கவாதிகள் கட்டமைத்தார்கள். இதனையே மம்தானி நிலத்தின் சொந்தக்காரர்கள் யார் என்பதனை வரையறை செய்வதற்கான புதிய அளவீடுகளை ஐரோப்பா தனது காலனியாதிக்க நாடுகளில் பிரயோகம் செய்ததாக விளக்குகிறார்.

“பூர்வீகம் பற்றிய நவீன கருத்தாக்கத்தை காலனித்துவ தர்க்கங்களே கட்டமைத்திருக்கின்றன. பூர்வீகம் என்ற சொல்லாட்சியைப் பாவித்து காலனிய அரசுகள் நிலத்தில் வாழுகின்ற அசலான குடிகளை நாகரீகமற்றவர்களாகக் கட்டமைத்து, கட்டுப்படுத்தி, ஒழுங்குபடுத்துவதோடு குறிப்பிட்ட சில பண்பாட்டு அம்சங்களோடு அவர்களை வரையறுத்து விடுவதோடு அவற்றையே குறித்த மக்களின் சாராம்ச இயல்பாகவும் முன்னிறுத்தி விடுகின்றன (Mamdani2013: 2–3)”

காலனிய ஆட்சி ஒழுங்குகளின் பிரதான அம்சமாக பூர்வீகம் பற்றிய கருத்தாக்கம் அமைந்திருந்தது. ஒவ்வொரு காலனிய அரசும் எதிர்கொண்ட பூர்வீகம் பற்றிய கேள்விகளைத் தீர்ப்பதில் பெருமளவிலான நேரத்தை அவர்களுக்குச் செலவழிக்க வேண்டியிருந்தது (Mamdani 1996: 3). ஒரு சிறுதொகை வெள்ளையினத்தவர்களால் இவ்வளவு தொகை கறுப்பினத்தவர்களை அவர்களது கிளர்ச்சிகளுக்கும் குழப்பங்களுக்கும் நடுவே எவ்வாறு ஆட்சி புரிய முடியும்? அவ்வாறு முடிந்தாலும் அதன் ஸ்திரத்தன்மையை தொடர்ந்தும் எப்படி பேணுவது ? என்ற கேள்விகளுக்கு வெள்ளையின காலனியாதிக்க வாதிகள் விடைகளைத் தேட வேண்டியிருந்தது. Citizen and Subject:  Contemporary Africa and the Legacy of Late Colonialism (1996) என்ற‌ நூலில் மம்தானி, காலனித்துவ ஆட்சியாளர்கள் எதிர்கொண்ட இச்சிக்கல்களை இந்தியாவில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் அனுபவங்களைக் கொண்டு விளக்குகிறார். ஆரம்பத்தில் நேரடி ஆட்சியாக (Direct Rule) விளங்கிய பிரிட்டிஷ் காலனிய ஆட்சி, இந்திய மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் மறைமுக ஆட்சி (Indirect Rule) என்ற ரீதியில் பிற்காலங்களில் தொடர்ந்தது என் விளக்கிச் செல்கிறார். இது தொடர்பாக மேலும் விளக்கும் மம்தானி,

“காலனிகளை ஆட்சி செய்வதற்கான ஐரோப்பியர்களின் முதலாவது தேர்வாக நேரடி ஆட்சி முறையே (Direct Rule) அமைந்திருந்தது. உள்ளூர்களில் இருந்த பாரம்பரிய ஆட்சிமுறைகள் மற்றும் சட்டவாக்க, நீதிப் பொறிமுறைகளை காலனியாதிக்கவாதிகள் பிற்போக்கானவை என்றும் காட்டுமிராண்டித்தனமானவை எனவும் வகைப்படுத்தியதோடு ஏகபோகமான ஆட்சி, நீதியியல் மற்றும் சட்ட மாதிரியாக ஐரோப்பிய முறையே நடைமுறைப்படுத்தப்பட்டது. மட்டுமன்றி குறித்த ஆட்சி செயற்பாடுகளிலும் நீதி மற்றும் சட்டப் பொறிமுறைகளில் ஈடுபடும் அல்லது அவற்றால் பயன் பெறும் உரிமைகளையும் காலனியாதிக்க வாதிகளின் ‘நாகரீக’ அளவீடுகளுக்குள் பொருந்தக்கூடியவர்களால் மட்டுமே அனுபவிக்க முடிந்தது. சுருக்கமாக காலனிகளில் விருத்தி பெற்ற சிவில் சமூகம் என்பதனை உள்ளூர் வாசிகளின் அங்கத்துவம் துண்டிக்கப்பெற்ற நாகரீகமடைந்தவர்களையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. உள்ளூர்ப் பாராம்பரிய மக்களுக்கு சிவில் சமூக அங்கீகாரம் மறுக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

நேரடியான அல்லது ஐரோப்பாவின் புதிய ஆட்சியியல் மாதிரிகளைக் கண்டு எழுச்சி பெற்ற மக்கள் எதிர்ப்பைக் கருத்தில் கொண்ட காலனியாதிக்க நாடுகள், மறைமுக ஆட்சியை தமது ஆட்சி உத்தியாக தேர்வு செய்தன. ஆபிரிக்கக் காலனிகளில் வாழ்ந்த ஒரு சில தலைவர்களின் பின்னால் இருந்து கொண்டு காலனிகளில் வாழ்ந்த மக்கள் காலங்காலமாக கண்ணுற்ற அதே உள்ளூர் மரபுகளை அனுசரிக்கும் வகையிலான ஆட்சியை தாம் கொண்டு செல்வதாக காலனியாதிக்க நாடுகள் மக்களை நம்ப வைத்தன. ஆனால் குறித்த மரபுகள் அனைத்துமே காலனிகளின் ஆட்சியியல் நலன்களுக்காகவே பயன்பட்டது. இதனையே ஹொப்ஸ்போம் மற்றும் ரேஞ்சர் (1983) ஆகியோர் ‘மரபுகளின் மீளுருவாக்கம்’ (Invention of tradition) என்பதாக அழைக்கின்றனர். காலனியில் இடம்பெற்ற ஆட்சி நடவடிக்கைகள் தொடர்பில் மேலும் ஆராய்கின்ற மம்தானி (1996:36), “ஆபிரிக்கக் காலனிகள், ஒரே சமயத்தில் நேரடி மற்றும் மறைமுக ஆட்சி நடவடிக்கைகளால் ஆளப்பட்டன. தலைநகரத்தை அண்டிய மக்கள் வெள்ளையின நேரடி ஆட்சியையும் தலைநகர்களை விட்டும் தூரத்தில் வாழ்ந்த மக்கள், அந்தந்த ஊர்களில் வாழ்ந்த பலம் வாய்ந்தவர்களை அதிகாரம் மிக்கவர்களாக மாற்றியதன் வழியே மறைமுக ஆட்சியும் நடாத்தப்பட்டது” எனக் குறிப்பிடுவதுடன், இதனை ‘ஒரே நிலப்பரப்பிற்குள் நடாத்தப்பட்ட இரு வேறுபட்ட ஆட்சியியல் மாதிரிகள் (bifurcated state)’ என்று விளக்கும் மம்தானி, உள்ளூர் தலைவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு மக்களை மறைமுகமாக தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முறையை பரவலாக்கம் பெற்ற சர்வாதிகாரம் (Decentralised despotism) எனவும் அழைக்கிறார். ஏனெனில் உள்ளூர் தலைவர்கள் காலனியாதிக்க வாதிகளைப் போலவே தாம் எதிர்கொண்ட மக்களோடு நடந்து கொண்டனர் எனவும் மம்தானி (1996:36), விளக்குகிறார்.

பீட்டர் எகாஹ் (1975:91) போன்றோர் ஆபிரிக்கக் காலனிகளில் இடம்பெற்ற நிர்வாக ஒழுங்கு மாதிரிகளை விளக்குகையில் அதனை ‘இருவகைப்பட்ட மக்கள் குழுக்களுக்கான ஆட்சி (Two Publics)’ என்ற வகையில் விளக்கிச் செல்கிறார். ஒருபுறம் குல அமைப்பு உள்ளிட்ட பாராம்பரிய சமூக ஒழுங்குகளைக் கொண்டிருந்த சமூகத்திற்கென ஒரு நிர்வாக முறைமையும், மறுபுறம் காலனிய அமைப்புக்களினால் உருவாக்கப்பட்ட நவீன சிவில் சமூகத்திற்கான பிரத்தியேகமான ஒரு நிர்வாக முறைமையையும் காலனியாதிக்க நாடுகள் நடைமுறைப்படுத்தின. ஆபிரிக்கச் சமூகங்களினுள் இடம்பெற்ற இத்தகைய காலனிய இடையீடுகள் அரசு மற்றும் சமூகம் ஆகியவற்றுக்கு இடையிலான உறவுகளை அதுவரைகால ஆபிரிக்க சமூகங்களின் அனுபவத்தை தலைகீழாக்கின என்று பீட்டர் எகாஹ் (1975:91) மேலும் விளக்குகிறார். சுருக்கமாகச் சொன்னால் நீண்ட கால ஆபிரிக்க வரலாற்றையும் அதன் சமூகங்களின் பண்பாட்டு சமூக அரசியல் மாதிரிகளையும் ஐரோப்பிய ஏகாதிபத்திய மற்றும் காலனியாதிக்க நடவடிக்கைகள் தமக்கேற்ற வகையில் அழித்தும்,மாற்றியமைத்தும் கொண்டன. ஆபிரிக்கச் சமூகங்களை பிளவுபடுத்தியது மட்டுமன்றி ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கப்படும் ஒரு மக்கள் என்பதையும் ஐரோப்பிய காலனிகள் மறுத்து வந்தன.

காலனித்துவம், ஆபிரிக்க மக்களின் அடையாளங்களையும் அவர்களது கலாச்சாரப் பண்பாட்டு சமூக அமைப்புக்களையும் எவ்வாறு தனக்கேற்றவாறு வடிவமைத்துக் கொண்டது என்பதில் கவனம் செலுத்துவது போலவே, ஆபிரிக்க மக்கள் காலனிய அமைப்புக்கு வெளியே முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்படவுமில்லை என்பதையும் புரிந்து கொள்வது முக்கியமானதாகும். அதாவது காலனிய அதிகார அமைப்புகளுக்குள் வலுக்கட்டாயமாக அவர்கள் உள்ளீர்க்கப்பட்டு அதனூடாகக் கட்டுப்படுத்தப்பட்டனர் என்று இது தொடர்பாக மம்தானி (1996: 15) விளக்குகிறார். அதாவது ஆபிரிக்க மக்கள் “காலனிய அதிகார அமைப்பில் உள்வாங்கப்பட்ட நிலையிலேயே ஆபிரிக்க மக்களை அவர்களால் கட்டுப்படுத்த முடிந்தது” என்பதே அவரது வாதமாக அமைகிறது. சட்டம், நீதி உள்ளிட்ட ஏனைய நவீன அரசுக் கட்டமைப்பின் சலுகைகளை அனுபவிக்கும் தரப்பினராக இன அடிப்படையில் படிநிலைப்படுத்தப்பட்ட ஆபிரிக்க உயர்குடிகள் காணப்பட்டதுடன் எஞ்சிய இந்திய வம்சாவளி மற்றும் ஏனைய உள்ளூர் சுதேசிகள் அனைவரும் பிற்போக்குத்தனங்கள் நிறைந்த மரபுகள் மற்றும் பண்பாட்டு அம்சங்களின் அடிப்படையில் தாழ்த்தப்பட்ட தரப்பினராக வகைப்படுத்தப்பட்டு  அரசுக் கட்டமைப்பிலிருந்து விலக்கியும் நிறுத்தப்பட்டனர் (Mamdani 1996; Ndlovu-Gatsheni 2003; Mamdani 2013).

பழங்குடிகள் (Natives) என்று வகைப்படுத்தப்பட்ட மக்களை காலனிய அரசுகள் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு அரசியல் சமூகமாக அங்கீகரிக்கவில்லை என்பதுடன் அவர்களை ஐரோப்பிய அரசு மாதிரிகளுக்குள் பொருந்தாத தரப்பினராகவுமே பார்த்தது. மட்டுமன்றி நாகரீகப்படுத்தப்பட்டு முன்னேற்றப்பட வேண்டியவர்களாக ஆபிரிக்க வாழ் உள்ளூர் மக்களை காலனியம் கருதியதுடன் நவீனத்துவத்திற்கு முந்தைய அல்லது நவீனத்துவத்திற்கு பொருந்திவராத பிற்போக்குத் தனங்கள் நிறைந்தவர்களாகவும் கருதியது. இறுதியில் ஆபிரிக்க நிலங்களின் உடமையாளர்களாக ஐரோப்பிய வெள்ளையினம் மாறியதோடு அங்கு நீண்டகாலமாகவே வாழ்ந்த உண்மையான நிலச் சொந்தக்காரர்கள் அந்நியர்களாகவும், பழங்குடிகளாகவும் மாறினர் (Neocosmos 2010). ஆபிரிக்க அரசியல் மற்றும் சமூக ஒழுங்கமைப்பில் காலனித்துவம் திணித்த இந்த மாற்றங்கள் அனைத்தும் ஆபிரிக்கத் தேசியவாதத்தின் எழுச்சியில் பெருமளவிலான செல்வாக்கைச் செலுத்தின. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஆபிரிக்கத் தேசியவாதம் ஒரேநேரத்தில் காலனித்துவத்தாலும் காலனித்துவத்திற்கு எதிராகவுமே வளர்ச்சி பெற்றது.

ஆபிரிக்கத் தேசியக் கட்டுமானமும் வரலாறும்

அதனளவிலேயே முரண்களையும் வெவ்வேறான கருத்தாக்கங்களையும் தனக்குள் உட்பொதிந்துள்ள காலனித்துவம், ஆபிரிக்கப் பிராந்தியத்தில் காலனிய எதிர்ப்பு, கறுப்பினக் கூட்டுணர்வு மற்றும் அகன்ற ஆபிரிக்கத் தேசியவாதம் உள்ளிட்ட மாறுபட்ட கருத்தாக்கங்கள் உருவாக வழிசமைத்தது (Bhabha 1994; Mazrui 2005). இதனையே ஜூலியஸ் நியராரே விளக்கும் போது “ஆபிரிக்கக் கூட்டுணர்வை (African sentiments) உருவாக்கியதில் காலனியம் உற்பத்தி செய்த இனவாதமும் அதன் வழியே இடம்பெற்ற சுரண்டல்களும்தான் பெரும் பங்கு வகித்தன” என்று விளக்குகிறார். இதன் நீட்சியாகவே ஆபிரிக்க விடுதைலைப் போராட்டங்கள் மற்றும் தேசிய உணர்வுகள் ஆகியன கருக்கொண்டன எனவும் விளக்க முடியும். இக்கூட்டுணர்வை ஏற்படுத்துவது தொடர்பாக காலனிய சக்திகள் ஆபிரிக்காவையும் அதன் மக்களையும் ஆக்கிரமித்திருக்கும் விதம் மற்றும் அரசக் கட்டமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு விளிம்புநிலையில் வைக்கப்பட்ட இரு நிலைகளும் உந்துசக்தியாகச் செயல்பட்டன (Mazrui 1963). நியராரே இதனை மேலும் விளக்கும் வகையில் “பல்வேறு பிரதேசங்களிலும் வாழ்ந்த ஆபிரிக்கர்களும் காலனித்துவம் தொடர்பான ஒரேமாதிரியான அனுபவத்தையே கொண்டிருந்தனர்” என்று விளக்குகிறார்.

காலனிய அரசுகள், ஆபிரிக்க அரசியல் தொடர்பாகக் கையாண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் ஆபிரிக்க பண்பாட்டு சமூக அமைப்புக்களை மீள வடிவமைக்கும் பொறிமுறைகள் தொடர்பான விளக்கங்களை வெலன்டைன் Y. முடிம்பேயினால் எழுதப்பட்ட The  Invention of Africa: Gnosis, Philosophy, and the Order of Knowledge (1988) என்ற நூலும் The  Idea of Africa (1994) என்ற நூலும் விரிவான உரையாடல்களை நிகழ்த்துகின்றன.  அதாவது ஆபிரிக்க புத்திஜீவிகளும் ஆபிரிக்கத் தேசியவாதிகளும் ஆபிரிக்கா குறித்த சுதேச கட்டுமானங்களை மீட்டுருவாக்கம் செய்வதில் கரிசனையுடன் செயற்படத் துவங்கினார்கள். ஆபிரிக்காவை ஆபிரிக்கர்களின் எழுத்துக்களின் வழியே புரிந்து கொள்வதற்கான வாயில்களை திறந்துவிடும் முயற்சிகளாக அவை அமைந்திருந்தன. குவாமே நெக்ரூமா இதனையே “நான் ஆபிரிக்காவில் பிறக்கவில்லை; நானே ஆபிரிக்காவை பிரசவிக்கிறேன்” என்று விளக்கியிருந்தார் (Mazrui 1963). இவ்வாறு ‘ஆபிரிக்காவை ஆபிரிக்கர்களின் வழியே புரிந்து கொள்ளல்’ பற்றிய முன்னெடுப்புக்கள் பெரும்பாலும் ஆபிரிக்கா தொடர்பாக காலனியம் கையாண்ட பிழையான சித்தரிப்புக்களுக்கு எதிராகவே அமைந்திருந்ததுடன் இத்தகைய முன்னெடுப்புக்களின் பிரதான இலக்காக ஆபிரிக்காவின் தன்னிறைவு பெற்றிருந்த சமூகப் பொருளாதார மற்றும் அரசியல் மதிப்பீடுகளை மீண்டும் மையத்திற்கு கொண்டுவருவதுமாகவே அமைந்திருந்தது. அதுமட்டுமன்றி இம்முன்னெடுப்புக்களின் பிரதான பணியாக ‘ஆபிரிக்காவின் தனித்தன்மை’ பற்றிய அனுபவங்களை மீள உயிர்ப்பிப்பதாகவும் அமைந்திருந்தது. இதன் பொருள், ஐரோப்பியக் காலனித்துவம் பல நூற்றாண்டுகளாகச் சுரண்டி, சீரழித்த ஆப்பிரிக்காவை மீண்டும் அதன் வரலாறு, கலாச்சாரம் மற்றும் செழுமைகளோடு இணைத்துவிடுவதாக இருந்தது. கூகி வா தியாங்கோ (2009) கூறுவது போல, இந்த முயற்சிகள் நீண்ட காலமாக வரலாற்றில் இருந்து ‘மறக்கடிக்கப்பட்டிருந்த’ ஆபிரிக்காவை மீண்டும் கண்டடைவது பற்றியதாகவே அமைந்திருந்தது.

ஆபிரிக்க வரலாற்றியல் மற்றும் அங்கு தோற்றம் பெற்ற ஆபிரிக்கத் தேசியவாதம் ஆகியன ஆபிரிக்கா என்பதை காலனியாதிக்கத்திடம் இருந்தும் ஏகாதிபத்தியத்திடம் இருந்தும் விடுதலை பெற வேண்டிய ஒரு கருத்துருவாக்கமாகவும், நிலப்பரப்பாகவும் நோக்கின. இதனால் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு ஆபிரிக்கா மீதான கரிசனைகள், உணர்ச்சிபூர்வமாகவும் அறிவார்ந்த ரீதியாகவும் நிலைபெற்றன. அச்சீல் ம்பாம்பே (2002; 2017) இதனை ‘வரலாற்று எழுத்தியலின் ஆபிரிக்க மாதிரிகள்’ என்று அழைக்கிறார். இது தொடர்பாக எழுதும் பெரும்பாலான ஆபிரிக்க புலமைவாதிகளின் பிரகாரம் இந்த முயற்சிகள் அனைத்துமே எத்தியோப்பியவாதம், காவேயிஸம், நீக்ரோ தன்னார்வ வாதம், ஆபிரிக்கத் தன்னிறைவு வாதம், ஆபிரிக்கச் சோஷலிஸ்ட், ஆபிரிக்க மனிதாயவாதம், ஆபிரிக்கத் தேசியவாதம், கறுப்பினக் கரிசனைகளைக் கொண்ட இயக்கங்கள் மற்றும் ஆபிரிக்க மீளெழுச்சி வாதங்கள் ஆகியவற்றையே மையக் கருவாகக் கொண்டிருந்தன (Falola  2001; Ndlovu-Gatsheni 2018; Ndlovu-Gatsheni 2020; Ndlovu-Gatsheni 2021b). இவற்றில் குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் ஆபிரிக்கக் கறுப்பினத்தின் மீதான கரிசனைகளில் அதிகமானவை புலம்பெயர் மக்களிடமிருந்தும் ஆபிரிக்க வரலாற்றியல் பற்றிய கரிசனைகள் உள்ளூர் புலமைத்துவ மரபுகளிலிருந்தும் தோற்றம் பெற்றன. டொயின் பலோலா (2001: 224) கூறுவது போல “ஆபிரிக்கத் தேசிய வரலாற்று எழுத்தியல், ஐரோப்பாவின் ஆபிரிக்கா குறித்த கதையாடல்களுக்கான எதிர் உரையாடல்களை மிக வலுவாக முன்னகர்த்திச் சென்றது”. ஆபிரிக்கர்களைக் கொண்டு அரச நிர்வாகம் நடாத்திச் செல்ல முடியாது, அவர்களால் ஒரு அரசியல் சமூகமாக அணிதிரள முடியாது போன்ற ஐரோப்பிய இனவாதக் கருத்துக்களை வெற்றி கொள்வதில் இக்கருத்தாடல்கள் பங்களித்தன.

குறிப்பாக ஆபிரிக்க வரலாற்று எழுத்தியலில் இருவகைப் போக்குகள் உள்ளன. அதில் முதலாவது நைஜீரியாவின் இபாதன் தேசிய அமைப்பை பிரதிநிதித்துவம் செய்த ஜேக்கொப் அடெ அஜய்யுடன் தொடர்புடைய ‘எபிசோடிக் பள்ளி (episodic school)’ எனப்படுகிறது. இது நீண்ட கால ஆபிரிக்க வரலாற்றின் ஒரு சிறிய அத்தியாயமே ஐரோப்பிய காலனியம் எனவும் வெள்ளையர்கள் இங்கு வருவதற்கு முன்பிருந்தே ஆபிரிக்கர்களுக்கு செழுமையான கலாச்சாரப் பண்பாட்டு சமூக அரசியல் மதிப்பீடுகள் நிலவியதாக குறிப்பிடுகிறார் (Falola 2001, Mazrui 1986). இவ்வணுகுமுறை காலனித்துவத்தை வரலாற்றில் இடம்பெற்ற சாதாரண நிகழ்வாக மதிப்பீடு செய்யும் அதேவேளை காலனியாதிக்கத்தின் கட்டமைப்பியல் சார்ந்த சிக்கல்களை அது கடந்து விடுகிறது (Ndlovu-Gatsheni 2018). மற்றைய போக்காக எபிக் பள்ளி (Epic school)யினைக் குறிப்பிட முடியும். இப்பள்ளியைச் சார்ந்த குறிப்பிடத்தக்க புலமை வாதிகளான பீட்டர் எகாஹ் (1975; 1983), பிரான்ஸ் ஃபனான் (1968), அலி மஷ்ரூஃ (1986) ஆகியோர் காலனித்துவத்தினையும், பின் காலனிய அரசியலையும் எதிர்கால ஆபிரிக்காவினை சீரழிக்கும் ஒரு அதிகாரக் கட்டமைப்பாக புரிந்து கொண்டிருந்தனர். எபிக் பள்ளி (Epic school) தரப்பினர் காலனித்துவம் தொடர்பில் முன்வைக்கும் இரு பிரதான கேள்விகளாக ஐரோப்பாவின் கடந்தகாலம் எவ்வாறு எமது நிகழ்காலமானது? மற்றும் காலனியாதிக்கவாதிகளாலேயே கைவிடப்பட்ட நாகரீகப்படுத்தும் திட்டங்களை உள்ளூர் தேசியவாதிகள் ஏன் இன்னமும் சுமந்து கொண்டு இருக்கிறார்கள்? என்பவற்றை மம்தானி (2020: 15) மேற்கோள் காட்டுகிறார். இது தொடர்பாக மேலும் விளக்கும் மம்தானி (2020: 4),

“நவீனத்துவத்தினை தழுவியதாகக் கூறிக்கொண்ட அரசுகளில் இடம்பெற்ற பின்காலனிய  வன்முறைகள் அனைத்துமே ஐரோப்பிய நவீனத்துவத்தினதும் நேரடிக் காலனிய ஆட்சியினதும் வன்முறைகளையே பிரதிபலிக்கின்றன. இவ்வன்முறைகளில் பிரதான வன்முறையாக இனச் சுத்திகரிப்பு அமைகிறது. ஏனெனில் தேசிய அரசுகள் பன்மைத்துவத்திற்கான எந்தவொரு முயற்சிகளையும் தனது இருப்புக்கான அச்சுறுத்தலாகக் கருதுவதுடன் ஒற்றைமயமான பண்பாட்டுக் கலாச்சார ஒழுங்கமைப்பையே அவை உருவாக்க முனைகின்றன. அந்தவகையில் இனச்சுத்திகரிப்பு என்பது நடைமுறையில் பல்வேறு வடிவங்களை எடுக்க முடியும். இனப்படுகொலைகள், சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மையிடம் இருந்து விலக்கி வைக்கப்படும் வகையில் குறிப்பிட்ட நிலப்பரப்பில் சிறுபான்மையை அடைத்து விடுவது அல்லது சிறுபான்மையை அவர்களது நிலங்களில் இருந்து வெளியேற்றி விடுவது போன்றன இதற்கான சமகால உதாரணங்கள்” என எழுதிச் செல்கிறார்.

மேலே குறிப்பிட்ட விடயங்களை தொகுத்து நோக்கும் பட்சத்தில், தேசியவாதக் கருத்தியல் என்பது ஒரு சுதேசத் தன்மையைக் கொண்டிராத ஒரு கருத்தியல் என்ற வகையில் கோட்பாட்டு மற்றும் நடைமுறைசார் சிக்கல்கள் பலவற்றைக். கொண்டதாகவே புலப்படுகிறது. பிரிவினைகளையும் பிளவுகளையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஐரோப்பிய அரசியல் நவீனத்துவத்தின் கடந்த காலத் துயரங்களை எவ்விதக் குறைகளுமின்றி எமது நிகழ்காலத்திற்கு அது கடத்தி விடுகிறது (பார்க்க Chatterjee 1993). ஆபிரிக்கத் தேசியவாதக் கொள்கைகளை வடிவமைப்பதிலும், இன்னும் பல செயற்பாடுகளிலும் ஆபிரிக்கத் தேசியவாதிகளின் பங்களிப்புகள் மறுக்க முடியாதவையாக இருந்தாலும் எதற்கு எதிராக அவர்கள் உண்மையில் போராட முனைகிறார்களோ அதே கட்டமைப்பினுள்ளே நின்றுதான் அவர்கள் பிரச்சினைகளுக்கான தீர்வுகளையும் தேட முனைகிறார்கள் என்பதே இங்குள்ள பெரும் பிரச்சினையாகும். அவர்களைப் பொறுத்தவரை தேசிய அரசுக் கட்டமைப்பினுள் பூரணமாகவே தங்களை அர்ப்பணித்து அதன் பிரஜைகளாகி விட வேண்டும் என்பதே காலனிய நீக்கச் சிந்தனையாக அமைகிறது. ஆனால் இச்சிந்தனை கூட ஐரோப்பிய அரசியல் நவீனத்துவத்தின் நீட்சியாக உருவானது என்பதை அவர்கள் புரிந்து கொள்ளத் தவறி விடுகிறார்கள். இதனையே நந்திதா ஷர்மா (2020) விளக்கும்போது “பின் காலனிய புதிய உலக ஒழுங்கானது காலனியாதிக்க நாடுகள் கையாண்ட அதே முறைமைகளை எவ்வித மாற்றங்களும் இன்றி உட்செறித்துக் கொண்டுள்ளன” என்று விளக்குகிறார்.

பேரரசுக் கட்டமைப்பிலிருந்து தேசியத்தை நோக்கி: பின்காலனிய உலக ஒழுங்கு பற்றியதொரு விமர்சனம்.

ஐரோப்பிய அரசியல் நவீனத்துவத்தின் குழப்பங்கள் நிறைந்த கொடையான தேசியவாதம் நந்திதா ஷர்மா (2020) குறிப்பிடுவது போல ” புதிய சமயமாக உருவெடுத்துள்ள தேசியவாதத்தின் பிரதான தர்க்கமான தேசியம் என்பது பாதுகாப்பளிக்கப்பட்டு வணங்கத் தகுதியான கடவுளாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது”. அன்றாடம் இசைக்கப்படும் தேசிய கீதங்கள், தேசியக்கொடிகள் ஆகியன தேசியவாதம் பற்றிய கருத்தாக்கத்திற்கு திட்டவட்டமான ஒரு வடிவத்தை வழங்கிவருகின்றன. இரண்டாம் உலகப்போரினைத் தொடர்ந்து காலனித்துவ ஆட்சியின் கீழ் எல்லாவிதமான உரிமைகளும் பறிக்கப்பட்ட நிலையில் வாழ்ந்த மக்களும் அவர்களது நிலங்களும் மிக விரைவில் சுதந்திரமடையத் துவங்கின(Sharma (2020: 3). 1492 இல் துவங்கிய ஐரோப்பிய காலனித்துவப் பரவல் கிட்டத்தட்ட முழு உலகையும் உள்ளடக்கிய அளவுக்கு பிரம்மாண்டமாக வளர்ந்ததுடன் அதுதான் அனைத்து மனித குலத்திற்குமான நிச்சயிக்கப்பட்ட எதிர்காலம் எனவும் கட்டமைத்தது. மட்டுமன்றி உள்ளூர்களில் உருவான சுதந்திர இயக்கங்களின் தோற்றத்திற்குப் பிறகு, ‘தேசியக் குடிமக்கள்’ (ஒரு தேசிய அரசின் பிரஜை என்கிற அங்கத்துவம்) என்று அரசினால் அங்கீகரிக்கப்படுவது பெருமைக்குரிய ஒன்றாகவும் மாறியது. காலனித்துவத்திற்குப் பிறகு தோன்றிய புதிய உலக ஒழுங்கின் ஒரு பகுதியாக மக்களை உணரச் செய்வதில் இது பெரும் பங்காற்றியது (Jabri 2013; Sharma 2020).

அந்தவகையில் காலனிய அரசுக் கட்டமைப்புக்களில் இருந்து தேசியத்தை அடிப்படையாகக் கொண்ட தேசிய அரசுக் கட்டமைப்புக்களை நோக்கி நவீன உலக ஒழுங்கை நகர்த்துவதில் மூன்று பெரும் விசைகள் அல்லது காரணிகள் செல்வாக்குச் செலுத்தின எனக் குறிப்பிடலாம். அதில் முதலாவது நீண்டதும் சிக்கலானதுமான வரலாற்றைக் கொண்டிருந்த ஐரோப்பிய தாராளவாதத்தின் (Liberalism) வளர்ச்சியைச் சுட்டிக்காட்டலாம். லிஸா லோவே அவரது The Intimacies of the Four Continents (2015) என்ற நூலில் குறிப்பிடுவது போல தேசிய அரசுகளையும் அதன் பிரதான தர்க்க அடிப்படையாகவுள்ள ‘சகிப்புத்தன்மை (Tolerance)’ போன்ற மதிப்பீடுகளையும் உருவாக்குவதில் தாராளவாதம் பெரும் பங்காற்றிய அதேநேரம் சுதந்திரம், சமத்துவம், மனித உரிமைகள் உள்ளிட்ட ஏனைய அற விழுமியங்களை அது நலினப்படுத்தி அடிமைத்தனம், காலனிய ஆட்சி மாதிரி, தேசப்பற்று, முதலாளித்துவம் போன்றவற்றை பலப்படுத்தும் ஒரு கட்டமைப்பாகவும் இருந்தது. தேசிய அரசுகளை நோக்கிய நகர்த்தலில் அல்லது அவற்றை மேலும் பலப்படுத்துவதில் செல்வாக்குச் செலுத்திய இரண்டாவது காரணி 1945 களுக்கு பின்னர் அமெரிக்கா, சோவியத் யூனியன் ஆகிய வல்லரசுகளின் எழுச்சியாகும். காலனியத்தின் தொடர்ச்சியை இவை அப்படியே ஆபிரிக்கா உள்ளிட்ட ஏனைய நிலப்பரப்புக்களின் மீது எவ்வித மாறுதல்களுமின்றி பேணிச் சென்றன. இது தொடர்பாக நந்திதா ஷர்மா (2020) பின்வருமாறு விளக்குகிறார்.

“ஐரோப்பியப் பேரரசுகள் காலனிகளைக் கட்டுப்படுத்தியபோது, அமெரிக்க வணிகங்கள் அந்தப் பகுதிகளுக்குள் நுழைந்து அவர்களின் வளங்களையும் உழைப்பையும் பயன்படுத்துவதைத் தடுத்ததாக அமெரிக்கா கண்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அமெரிக்கா உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஒரு வல்லரசு நாடாக மாறுவதை ஐரோப்பிய காலனித்துவ ஆட்சி தடுத்து வந்ததாக அமெரிக்கா கருதியது. இதனாலேயே காலனிகளில் எழுச்சிபெற்ற தேசியவாதம் குறித்த முன்னெடுப்புக்களை அமெரிக்கா முழுமூச்சுடன் ஆதரவளித்து வந்தது. காலனிகள் சுய நிர்ணயம் தொடர்பான உரிமைகளைப் பெறும்போது ஐரோப்பிய காலனிய அரசுகள் தூக்கி வீசப்பட்டு அங்கே தனக்கான மாபெரும் சந்தையொன்றை உருவாக்கி கொள்வது தொடர்பில் அமெரிக்கா தொடர்ந்தும் கவனம் செலுத்தி வந்தது. ஏகாதிபத்திய சக்திகளையும் அவற்றின் காலனிகளையும் தனித்தனியான தேசிய அரசுகளாக மாற்றுவதன் மூலம், ஒவ்வொரு நாடும் அமெரிக்க அதிகாரத்திற்கு பயனளிக்கும் வகையிலான அல்லது அதற்குச் சேவகம் செய்யும் வகையிலான ஒரு புதிய உலக ஒழுங்கொன்றை உருவாக்க அமெரிக்கா உழைத்தது”

இதனாலேயே 1919களில் முதலாம் உலகப் போரின் பிறகு ஒவ்வொரு நாட்டுக்கும் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தி அமெரிக்கா 14 சரத்துக்களை அவசர அவசரமாகக் கொண்டுவந்தது. இதே போன்றே 1941களில் இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா அட்லாண்டிக் சாசனத்தில் கைச்சாத்திடதும், ஐக்கிய நாடுகள் சபை பிரகடனத்தில் இணைந்து கொண்டதும் நாடுகளுக்கான சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் நோக்கத்திற்காகவே அமைந்திருந்தது.

மூன்றாவது பெரும் விசையாக காலனித்துவ ஆட்சிக்கு எதிராக உருவான நீண்டதும், தொடர்ச்சியானதுமான போராட்டங்களைக் குறிப்பிட முடியும். காலனித்துவ எதிர்ப்பு மற்றும் காலனிய நீக்கப் போராட்டங்கள் காலனித்துவ சக்திகளின் வருகையோடு துவங்கின. அடம் கெட்சோவ் தனது Worldmaking after Empire: The Rise and Fall of Self-Determination (2019), என்ற நூலில் ஆபிரிக்க காலனிய எதிர்ப்புத் தேசியவாதிகளை புதிய உலகைப் படைப்பவர்களாகவும், தேச நிர்மாணிகளாகவும் குறிப்பிடுவது அவர்களை வெறுமனே சுதந்திரப் போராட்ட வீரர்களாகக் கருதியதால் மாத்திரமல்ல. அவர்களது போராட்டங்கள் எதிர்கால உலகம் குறித்த புதிய கருத்தாக்கங்களை வலியுறுத்தி உருவானவை என்பதோடு குறித்த போராட்டங்கள் மக்களுக்கான சுய நிர்ணய உரிமையை ஒரு அடிப்படை மனித உரிமையாக ஏற்றுக் கொள்ளவும் வலியுறுத்தின என்பதனாலேயே ஆகும். மட்டுமன்றி கெட்சோவ் (2019), குறிப்பிடும் தரப்பினர் ஒரு புதிய சர்வதேச பொருளாதார ஒழுங்கை உருவாக்க கடுமையாக உழைத்ததுடன் தாம் வென்ற சுதந்திரத்தைப் பாதுகாக்க உதவும் வலுவான தொழிற்சங்கங்களை ஆபிரிக்கா முழுவதிலும் உருவாக்கி அவற்றின் இருப்பை தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வந்தனர். ஆனாலும் பிரச்சனை என்னவென்றால், பலர் தேசிய இறையாண்மையையும் அங்கீகரிக்கப்பட்ட “தேசமாக” மாறுவதையும் காலனிய நீக்கத்தின் இறுதி இலக்காகக் கருதியமைதான். ஏனெனில் உண்மையான காலனிய நீக்கம் ஒரு தேசிய அரசாக ஒழுங்கமைவதை விடவும் ஆழமான கரிசனைகளை வேண்டி நிற்பதால் இத்தகைய முயற்சிகளும், செயல்திட்டங்களும் குறைபாடுடையவையாகவே இருந்தன. இதனாலேயே நந்திதா ஷர்மா (2020: 3) பின்காலனிய உலக ஒழுங்கு தொடர்பிலான அவநம்பிக்கையை அவரது எழுத்துக்களில் தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருவதை அவதானிக்க முடியும். தேசிய அரசுக் கட்டமைப்புக்கள் கையாண்ட நிலத்திற்குச் சொந்தமானவர்கள் Vs நிலத்திற்கு அந்நியமானவர்கள் என்ற பிரிப்பு முறையை தமது நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட அதிகார நலன்களைக் கருத்தில்கொண்டு இயல்பான பிரிப்பு முறைகளாக கட்டமைத்ததுடன் இனவாதத்தை மையமாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இந்தப் பிரிவினைகளின் ஊடாகவே இறையாண்மை கொண்ட தேசிய அரசுக் கட்டமைப்பின் நீண்ட கால இருப்பு தங்கியுள்ளது என்றும் வியாக்கியானம் செய்யப்பட்டது(Sharma 2020: 4).

நந்திதா ஷர்மா போலவே ஹமீதபாஷியும் பின் காலனிய உலக ஒழுங்கின் வன்முறைகள் தொடர்பில் ஆராய்கிறார். இது தொடர்பாக ஹமீதபாஷி (2020: 9) விளக்கும் போது நம்மிடையே தற்போது நடைமுறையில் உள்ள உலக ஒழுங்கானது காலனியாதிக்கத்தின் தொடர்ச்சியே என்பதுடன் அது பின்காலனிய உலகின் மாபெரும் தொன்மமாகவும் உள்ளது  அதுபோலவே ஐரோப்பா தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் இந்த நடைமுறையினால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுச் செல்கிறார்.

முடிவுரை: காலனிய நீக்கம் செய்யப்பட்ட அரசியல் சமூகத்தினை நோக்கி…

காலனிய நீக்கம் பெற்ற அரசியல் சமூகமொன்றை கற்பனை செய்வது முற்றிலும் புதிய சிந்தனையமைப்புக்களில் இருந்தே தோற்றம் பெற வேண்டும் என்பதோடு அத்தகைய சிந்தனைகள் சூனியத்தில் இருந்து ஒருபோதும் உருவாகப் போவதுமில்லை. அதற்கு வலுவான அடிப்படைகளும் ஆரம்பமும் தேவைப்படுகிறது. சந்தேகத்திற்கிடமின்றி அந்த ஆரம்ப அடிப்படையாக, நவீன அரசியல் வரலாற்றினாலும் அது சுமந்திருக்கும் கருத்தியல்கள் மற்றும் அமைப்புக்கள் ஆகியவற்றாலும் பாதிக்கப்பட்ட மக்களிக்களின் கோணத்தில் நின்று வரலாற்றை மீள எழுதுவதாகவே அமைய முடியும். ஐரோப்பிய அரசியல் நவீனத்துவத்தின் விளைவாக இனமயமாக்கப்பட்ட, சிறுபான்மையாக்கப்பட்ட, காலனியமயப்படுத்தப்பட்ட, அடிமைகளாக்கப்பட்ட மக்களின் வரலாற்றில் இருந்து தான் காலனிய நீக்கம் பெற்ற புதிய அரசியல் சமூகமொன்றைக் கற்பனை செய்ய முடியும். இதனையே மம்தானி (2020: 20) வரலாற்றின் மீதான மீள் வாசிப்பு இன்றி அரசியல் விடுதலை குறித்து சிந்திக்க முடியாது என்கிறார்.

அதுபோலவே வரலாற்றை மீள் வாசிப்பு செய்ய வேண்டுமாயின் எமது சிந்திப்பு முறைமைகளை ஆக்கிரமித்துள்ள காலனிய அறிவாய்வியல் நடைமுறைகளில் இருந்து விடுபட வேண்டியுமுள்ளது. காலனியத் தர்க்கங்களின் நீட்சியாக உருவான அறிவுற்பத்திச் செயற்பாடுகளில் இருந்து பெறுகின்ற விடுதலையே வரலாற்றின் மீதான புதிய ஒளியைப் பாய்ச்சுவதற்கான அடிப்படையாக அமையும் (Ndlovu-Gatsheni 2018). குறிப்பாக பல ஆபிரிக்கச் சிந்தனையாளர்களால் ஐரோப்பிய அறிவுருவாக்கச் செல்நெறிகளுக்கு அப்பால் இயங்க முடிவதில்லை. தேசியவாதம் தொடர்பில் ப்ளெக் டேவின்ஸன் போன்றோர் The Black  Man’s Burden: Africa and the Case of the Nation-State (1992) ஐரோப்பிய, அமெரிக்க சிந்தனைகளில் நின்றுகொண்டு வெஸ்ட்பாலியன் மாதிரியைத் தழுவிய அரசமைப்பை வலியுறுத்தும் அளவிற்கு காலனியக் கட்டுமானங்களில் எழுந்து நிற்கும் அவர்களது இயங்குவெளியைக் காண முடிகிறது.

எனவேதான் வரலாற்றை மீள எழுதுதல் என்பது அரசியல் சமூகங்களின் இயல்பு, அவற்றின் ஒழுங்கமைவுகள், அரசியல் அடையாளங்களின் உருவாக்கம் போன்றன தொடர்பான நமது சிந்திப்பு முறைமையில் ஏற்பட வேண்டிய மாற்றம் என்பது இங்கே மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. மம்தானி (2020), ஹமீதபாஷி (2020) போன்றோர் காலனிய நீக்கத்தின் சாத்தியப்பாடு குறித்து எழுதும் போது அது அரச கட்டமைப்பில் இருந்து தேசியத்தை நீக்கி விடுவதால் மாத்திரமே சாத்தியம் என்று குறிப்பிடுகிறார்கள். ஹமீதபாஷியின் வார்த்தைகளில் (2020:17) இதை “‘தேசியம்’என்ற கருத்தாக்கத்தை ‘அரசு’ என்ற‌ கட்டமைப்பிலிருந்து நாம் முழுமையாகப் பிரிக்க வேண்டியுள்ளதோடு பிறழ்வான வழியில் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ள இந்த இணைப்பைத் துண்டித்து விடுவதே அனைவருக்கும் நல்லது” என்று கூற முடியும்.

என்றபோதிலும் பல சந்தர்ப்பங்களில் தேசியவாதிகள் தங்களது கடந்த காலங்களின் புனிதத்தன்மை மிக்க (அமெரிக்காவை மீண்டும் வல்லமை மிக்கதாக மாற்றுவோம் என்பன போன்ற) கதையாடல்களை தொடர்ந்தும் அரசியல் சமூகத்தினிடையே அவிழ்த்து விடுவது காலனிய நீக்கச் செயற்பாடுகளுக்கு பெரும் தடையாக அமைந்து விடுகிறது. பொதுவாக நோக்கின் உலகம் முழுவதும், பின் காலனிய உலக ஒழுங்கின் சிக்கல்கள் மற்றும் வன்முறைகள் குறித்து மக்கள் இன்னும் போதியளவு பிரக்ஞையை பெறவில்லை. பெருமளவிலான முதலாளிகளுக்கு நன்மை பயக்கும் முறைமையாக இருப்பதாலும் காலனிய மற்றும் தேசியவாத சிந்தனை முறைமைகளின் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களாலும் புதியதோர் உலகை ஒழுங்கைக் கற்பனை செய்வது தடைகளை எதிர்கொண்டு வருகிறது. அதனால்தான் அரசியல் சமூகங்களின் நிரந்தர விடுதலை என்பது இயல்பிலேயே அறிவுருவாக்கங்களின் விடுதலையாக அமைந்து விடுகிறது.

உசாத்துணைகள்

Amadiume, I. 1987a. Afrikan Matriarchal Foundations: The Igbo Case. London:
Karnak House.

Amadiume, I. 1987b. Male Daughters, Female Husbands: Gender and Sex in An
African Society. London and New Jersey: Zed Books Ltd.

Amadiume, I. 1997. Re-Inventing Africa: Matriarchy, Religion and Culture. London
and New York: Zed Books Ltd.

Bhabha, H. 1994. The Location of Culture. London and New York: Routledge.

Bhambra, G. K. 2007. Rethinking Modernity: Postcolonialism and the Sociological
Imagination. Basingstoke: Palgrave Macmillan.

Blaut, J. M. 1993. The Colonizer’s Model of the World: Geographical Diffusionism and Eurocentric History. New York: The Guildford Press.

Brown, W. 2010. Walled States, Waning Sovereignty. New York: Zone Books.

Chatterjee, P. 1993. Nationalist Thought and the Colonial World: A Derivative
Discourse. Minneapolis: University of Minnesota.

Dabashi, H. 2020. The Emperor is Naked: On the Inevitable Demise of the Nation-
State. London: Zed Books.

Davidson, B. 1992. The Black Man’s Burden: Africa and the Curse of the Nation-State.Oxford: James Currey.

Diop, C. A. 1974. The Origins of Civilization: Myth or Reality. Westport: Lawrence
Hill & Co.

Diop, C. A. 1987. Precolonial Africa: A Comparative Study of the Political and Social
Systems of Europe and Black Africa, from Antiquity to the Formation of Modern
States. Westport: Lawrence Hill & Co.

Diop, C. A. 1989. The Cultural Unity of Black Africa: The Domains of Matriarchy and
of Patriarchy in Classical Antiquity. London: Karnak House.

Dussel, E. 1995. The Invention of the Americas: Eclipse of “the Other” and the Myth of Modernity. New York: Continuum.

Ekeh, P. P. 1975. “Colonialism and the Two Publics in Africa: A Theoretical Statement.” Comparative Studies in Society and History, 17(1), pp. 91–112.

Ekeh, P. P. 1983. Colonialism and Social Structure: An Inaugural Lecture. Ibadan:
Ibadan University Press.

Falola, T. 2001. Nationalism and African Intellectuals. New York: University of
Rochester Press.

Fanon, F. 1968. The Wretched of the Earth. New York: Grove Press.

Getachew, A. 2019. Worldmaking after Empire: The Rise and Fall of Self-Determination. Princeton: Princeton University Press.

Gong, G. W. 1984. The Standard of “Civilization” in International Society. Oxford:
Clarendon Press.

Grosfoguel, R. 2013. “The Structure of Knowledge in Westernized Universities:
Epistemic Racism/Sexism and the Four Genocides/Epistemicides of the Long 16th
Century.” Human Architecture: Journal of the Sociology of Self-Knowledge, xi(1),
Fall, pp. 73–90.

Hobsbawm, E. and Ranger, T. 1983. Eds. The Invention of Tradition. Cambridge:
Cambridge University Press.

Jabri, V. 2013. The Postcolonial Subject: Claiming Politics/Governing Others in Late
Modernity. London and New York: Routledge.

Kamola, I. A. 2019. Making the World Global: U. S. Universities and the Production of
the Global Imaginary. Durham and London: Duke University Press.

Lowe, L. 2015. The Intimacies of Four Continents. Durham and London: Duke
University Press.

Maldonado-Torres, N. 2007. “On Coloniality of Being: Contributions to the
Development of a Concept.” Cultural Studies, 21(2-3), (March/May), pp. 240–270.

Mamdani, M. 1996. Citizen and Subject: Contemporary Africa and the Legacy of Late
Colonialism. Princeton: Princeton University Press.

Mamdani, M. 2013. Define and Rule: Native as Political Identity. Johannesburg: Wits
University Press.

Mamdani, M. 2020. Neither Settler nor Native: The Making and Unmaking of
Permanent Minorities. Cambridge: The Belknap Press of Harvard University Press.

Mazrui, A. A. 1963. “On the Concept of “we Are All Africans.” American Political
Science Review, 57(1), pp. 24–97.

Mazrui, A. A. 1986. The Africans: A Triple Heritage. London: BBC Publications.

Mazrui, A. A. 2005. “The Re-invention of Africa: Edward Said, V. Y. Mudimbe, and
Beyond.” Research in African Literatures, 36(3), Fall, pp. 68–82.

Mbembe, A. 2002. “African Modes of Self-Writing.” Public Culture, 14(1), pp. 239–
273.

Mbembe, A. 2017. Critique of Black Reason. Durham and London: Duke University
Press.

Mbembe, A. 2021. Out of the Dark Night: Essays on Decolonization. New York:
Columbia University Press.

Mignolo, W. D. 2007. “Delinking: The Rhetoric of Modernity, the Logic of Coloniality
and the Grammar of De-Coloniality.” Cultural Studies, 21(2–3), pp. 449–514.

Mudimbe, V. Y. 1988. The Invention of Africa: Gnosis, Philosophy, and the Order of
Knowledge. Bloomington and Indianapolis: Indiana University Press.

Mudimbe, V. Y. 1994. The Idea of Africa. Bloomington and Indianapolis: Indiana
University Press.

Ndlovu-Gatsheni, S. J. 2003. “Imperial Hypocrisy, Settler Colonial Double Standards
and the Denial of Human Rights to Africans in Colonial Zimbabwe.” In N. Bhebe
and T. Ranger (eds.), The Historical Dimensions of Democracy and Human Rights
in Zimbabwe: Volume 1: Pre-Colonial and Colonial Legacies. Harare: University of
Zimbabwe Publications, pp. 53–83

Ndlovu-Gatsheni, S. J. 2013a. Coloniality of Power in Postcolonial Africa: Myths of
Decolonization. Dakar: CODESRIA Books.

Ndlovu-Gatsheni, S. J. 2013b. Empire, Global Coloniality and African Subjectivity.
London and New York: Berghahn Books.

Ndlovu-Gatsheni, S. J. 2018. Epistemic Freedom in Africa: Deprovincialization and
Decolonization. London and New York: Routledge.

Ndlovu-Gatsheni, S. J. 2020. Decolonization, Development and Knowledge in Africa:
Turning Over a New Leaf. London and New York: Routledge.

Ndlovu-Gatsheni, S. J. 2021a. “The Cognitive Empire, Politics of Knowledge and
African Intellectual Productions: Reflections on Struggles for Epistemic Freedom
and Resurgence of Decolonization in the Twenty-First Century.” Third World
Quarterly, 42(5), pp. 882–901.

Ndlovu-Gatsheni, S. J. 2021b. “Beyond Coloniality of Internationalism.’’
E-International Relations in https://www.e-ir.info/2021/06/24/beyond-coloniality-
of-internationalism/ (accessed 26/07/2021).

Neocosmos, M. 2010. From “Foreign Natives” to “Native Foreigners”: Explaining
Xenophobia in Post-Apartheid South Africa: Citizenship and Nationalism, Identity
and Politics. Dakar: CODESRIA Books.

Ngugi wa Thiong’o. 2009. Re-membering Africa. Nairobi: East African Educational
Publishers.

Quijano, A and Wallerstein, I. 1992. “Americanity as a Concept, or the Americas in
Modern World-System.” International Journal of Social Sciences, 134, pp. 549–557.

Rambukwella, H. 2018. The Politics and Poetics of Authenticity: A Cultural Genealogy of Sinhala Nationalism. London: University College London Press.

Sharma, N. 2020. Home Rule: National Sovereignty and the Separation of Natives and Migrants. Durham and London: Duke University Press.

Weber, M. 2015. Weber’s Rationalism and Modern Society. New York: Palgrave
Macmillan.

Wynter, S. 2003. “Unsettling the Coloniality of Being/Power/Truth/Freedom:
Towards the Human, After Man, Its Overrepresentation—An Argument.’’ CR: The
New Centennial Review, 3(3), pp. 275–337.

என்ட்லோவ்-கட்ஷேனி (Sabelo J. Ndlovu-Gatsheni) ஜேர்மனியின் பெய்ரொய்ட் பல்கலைக்கழக ஆபிரிக்க மற்றும் தெற்குலக அறிவாராய்ச்சியியல் துறைப் பேராசிரியர் ஆவார். தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தின் பால்நிலை மற்றும் ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான துறைத்தலைவராகவும் ஜொஹன்னஸ்பேர்க் ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளராகவும் கடமை புரிந்த இவர் காலனித்துவ/பின்காலனித்துவ கோட்பாடு, ஏகாதிபத்திய காலனித்துவம், அறிவாராய்ச்சியியல் காலனிய நீக்கம், மார்க்சியம், ஆப்பிரிக்க வரலாறு, ஆப்பிரிக்க அரசியல் பொருளாதாரம் ஆகியனவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்‌ பேராசிரியர் என்ட்லோவ்-கட்ஷேனி தனது பெயரில் 20 புத்தகங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு வெளியீடுகளையும்  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்