– என்ட்லோவ் கட்ஷேனி

தற்போது உலகளாவிய ரீதியில் நடைமுறையில் இருக்கும் காலனித்துவத்திற்கு அப்பால் சிந்திப்பது என்பது எமது வழமையான சிந்தனை முறைகளுக்கு அந்நியமான ஒன்றாக இருக்கிறது. நம்பிக்கை மிக்க புதியதோர் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அறிவார்ந்த புரட்சியாக அதனைக் கருத முடியும்.

ஐரோப்பாவும் ஏனைய நாடுகளும் ‘ஒன்றையொன்று அழித்துக் கொண்டு  சின்னா பின்னமாகி இருக்கும்’ இச்சூழ்நிலையில் போர்கள் அற்ற அமைதி நிறைந்த உலகொன்றுக்கான புதியதோர் கற்பனை தான் அவசரமாக தேவைப்படுகிறது. இதனை வேறுவகையில் சொல்வதென்றால் “தற்போதுள்ள இழிவடைந்த நிலையில் இருந்து கண்ணியம் மிகுந்த ஒரு உலகைப் படைப்பது பற்றி பரிசீலனை செய்வது தான் நமது பணி” என்கிறார் ஹமீத் அபாஷி (2019:183). எப்படிச் இதனை சாத்தியப்படுத்துவது? என்ற கேள்விக்கு ஹமீத் அபாஷி தரும் பதில் ‘கருத்தியல்களுக்கும் மதங்களுக்கும் அப்பால் சென்று மக்கள் தொடர்பில் சிந்திப்பது’ என்பதாகும். யுத்தங்களை விட மக்களுக்கும், கற்பனைகளை விட யதார்த்தங்களுக்கும், மதங்களை விட அவற்றைப் பின்பற்றுவோருக்கும் முக்கியத்துவம் அளிப்பது தான் போர்களற்ற எதிர்காலம் குறித்தான முன்னெடுப்புக்களின் ஆரம்பமாக அமையும் என்கிறார் அவர். ஏனெனில் யதார்த்தம் என்பது கோட்பாட்டுச் சிறைகளில் இருந்து எப்போதோ விடுதலை பெற்று விட்டது. இன்றைக்காக நேற்று உருவாக்கப்பட்ட உலகத்துக்கும் நாம் உருவாக்க முனையும் உலகத்துக்கும் இடையில் இனியும் எம்மால் ஊசலாடிக் கொண்டிருக்க முடியாது. வல்லரசு ஒழுங்கு முறையியலைத் தாண்டிய பார்வை ஒன்றை நாம் முனைந்து பெற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது. அது விட்டுச் சென்ற தடங்களில் மறுபடியும் தொடராமல் முற்றிலும் புதிய பார்வையைக் கொண்டு உலகை நோக்க முற்படுவது தான் சீர்திருத்தமாக அமைய முடியும்.

சர்வதேசத்துவம் என்ற போலிப் பரப்புரையின் பின்னே சர்வதேச அளவில் காலனித்துவம் எவ்வாறு மறைந்திருக்கிறது என்பதை ரொமான் கிராஸ்போகல் (2007) குறிப்பிடும் போது, இதுவரை காலமும் ஸ்தூலமாய் செயற்பட்டு வந்த சாம்ராஜ்ய கொடுங்கோன்மை ஒழுங்கு மறைந்து, கண்ணுக்கு புலப்படாத வகையிலான பேரரசு மாதிரி ஒன்று வட அமெரிக்க- ஐரோப்பிய நாடுகளை மையமாகக் கொண்டு நவீன தொழில்நுட்பக் கட்டமைப்புகளின் ஊடாக முழு உலகினதும், மானிட வாழ்வின் எல்லா அம்சங்களையும் ஆக்கிரமித்து எவ்வாறு வெற்றிகரமாகச் செயற்பட்டு வருகிறது என்று விளக்கம் அளிக்கிறார்.

உலகெங்கும் ஊடுபரவியுள்ள இந்த செயற்பாட்டு இயக்கத்துக்கு எதிர் நிலை கொண்ட, காலனீய நீக்கத்தை அவாவி நிற்கும், மாற்று உலகம் ஒன்றை உருவாக்க வேண்டி உழைக்கும் சக்திகளின் தோல்வியை இது ஒருவகையில் எடுத்துக் காட்டுகிறது. இதுவரை காலனிய நீக்கத்தை குறிக்கோளாகக் கொண்டு பாடுபட்ட சக்திகள் கூட ஏகாதிபத்தியம், காலனித்துவம், இனத்துவம், அதிகாரப் படிநிலையாக்கம், ஆணாதிக்கவாதம், முதலாளித்துவம் ஆகியவற்றில் இருந்து விடுதலை பெற்ற உலகை உருவாக்குவதில் அவ்வளவு தூரம் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. இதன் நீட்சியாக மனிதனாக இருப்பதென்பது உண்மையில் சமூக ரீதியாக பாலின மற்றும் இன அடிப்படைகளை கொண்ட ஏதேனும் ஒரு வர்க்கத்துக்கு, அதிகாரத்துக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவே அமைந்துள்ளது. (வின்டர் 2003; மல்டொனாடொ – டொரஸ் 2007).

வகை தொகையற்ற முதலாளித்துவ சுரண்டலுக்கான கருவியாக பூவுலகின் இயற்கை வளங்கள் சுருக்கப்பட்டுள்ளன. ஏகாதிபத்திய சார்பு நிலையுடன் இயங்கும் அறிவுச் செயன்முறையானது, தரவுச் செயலாக்கம், (சாராம்ச அகழ்வு, பிழிந்தெடுத்தல்) அல்லது முறைவழியாக்கச் செயன்முறை, உபகரண மயமாக்கம் போன்ற வழிமுறைகளின் ஊடாக விற்பனை செய்யப்படும் ஒரு பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் பூகோள முதலாளித்துவத்தின் நிலைபேறான வல்லமைக்கு சேவையாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டே நிகழ்ந்திருக்கின்றன. இன முதலாளித்துவம் ஆரம்பித்து வைத்த பல்வேறு நவீன அடிமை ஒப்பந்த வடிவங்கள், அவற்றின் வல்லாதிக்கத்தின் விளைவாக புவிப்பந்தின் மனித உழைப்பானது தொடர்ச்சியான சுரண்டலுக்கு உட்பட்டவண்ணம் இருக்கிறது.  (ரொபின்சன் 1983; ஹார்ட்மன் 1997) ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன், இத்தாலியன், ஸ்பானிஷ் மற்றும் போர்த்துகீசியம் ஆகிய ஆறு மேலாதிக்க மொழிகள் உலகின் சுதந்திரமான மனிதத் தொடர்பாடலை சுற்றி வளைத்து கட்டிப் போட்டுள்ளன. இருப்பினும், ஏனைய எல்லா மேலாதிக்க அமைப்புகளைப் போலவே, உலகளாவிய காலனித்துவமும் எப்போதும் சவாலுக்கு உட்படுத்தப்பட்டும், எதிர்க்கப்பட்டும் வந்துள்ளது. அவ்வப்போது பின்வாங்குவதற்கும் அதன் தொழில் நுட்ப செயலாக்கத்தை மறுபரிசீலனை செய்வதற்கும் நிர்ப்பந்திக்கப்பட்டு வந்துள்ளது. அமைப்பின் உட்கூறாய் அமைந்த சலுகைகள் மற்றும் சீர்திருத்தங்கள் காரணமாக இன் நிலை ஏற்பட்டது. ஹோமி பாபா (1994) குறிப்பிட்டுள்ளபடி, காலனித்துவ அமைப்பு, அதன் காலனித்துவ தர்க்கங்களின் வழியே, மனித வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் அதன் அதிகாரத்திற்கு உட்படுத்தும் மேலாதிக்க நோக்கத்தை கொண்டிருந்தபோதிலும், ஒருபோதும் அதன் அகவியல்பு ஒத்திசைவானதாகவும் முழுமையானதாகவும் இருக்கவில்லை என்ற உண்மையின் காரணத்தல் அது சமரசம் செய்து கொள்ள வேண்டிய பலவீன நிலைக்கு ஆட்பட்டது. எப்போதும் முழுமையற்ற, தெளிவற்ற மற்றும் உள் முரண்பட்ட அதன் சாரம்சம் காரணமாக போட்டிகள், சீர்குலைவு மற்றும் எதிர்ப்பு ஆகியவற்றுக்கு அனேகமான சந்தர்ப்பங்களில் அது தன்னைத்தானே திறந்து கொடுத்தது.

எவ்வாறாயினும், இந்த யதார்த்தம், சர்வதேச கற்கைநெறிகளில் பரப்புரை செய்யப்படும், உலகின் பிற பகுதிகளைச் சேர்ந்த உயரடுக்கினரின் உடந்தையுடன் காலனித்துவ ரீதியாக கட்டமைக்கப்பட்ட ‘சர்வதேசத்துவம்’ என்ற பதத்தின் வழியாக தாம் கற்றதை சரியாகப் பெயரிடுவதற்கான பேரழைப்பின் அவசியத்தைக் குறைக்காது. அதனால்தான், இனப் பெருமிதம், காலனித்துவம், முதலாளித்துவம் மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றை முதன்மைக் கூறுகளாய்க் கொண்டமைந்த சிக்கல் மிகுந்த ‘சர்வதேசத்துவத்தை’ மீளக் கட்டியெழுப்புவதை நோக்கமாய்க் கொண்ட எந்தவொரு முயற்சிக்கும் இடைவிடாத எதிர்ப்பு உள்ளது. “பேரரசுக்” கட்டமைப்பில் இருந்து “தேச-அரசுக்” கட்டமைப்பு நோக்கி வருவதாக கொண்டாடப்பட்ட மாற்றங்களும் கூட அமெரிக்க மேலாதிக்கத்தையும் அதன் உலகளாவிய காலனித்துவத்தையும் தக்கவைப்பதற்கும் ஆனது. பழைய சீட்டுகளை கலைத்து அடுக்கும் வழமையான சூதாட்ட ஒழுங்குக்கு ஒப்பானது.

தேசிய அரசுகளின் வழியான பின் காலனீயத்தின் புதிய உலக ஒழுங்கும் உலகளாவிய காலனித்துவத்தின் நீடிப்பும்

சர்வதேச ஆய்வுகள் பெரும்பாலும் கவனிக்கத் தவறுகின்ற உண்மை என்னவென்றால், ஒன்றையொன்று தாங்கி நிற்கும் அதே சமகால நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் ‘சர்வதேசத்துவம்’ என்று மாறுவேடமிடும் கட்டமைப்புகள் உண்மையில் பலவீனமான அடித்தளத்தோடு அவற்றின் யோக்யதையை வெளிப்படுத்தியபடி நிற்கின்றன என்பதாகும்.  காலனித்துவத்திற்குப் பிந்தைய புதிய உலக ஒழுங்கானது பழைமையாய் எது இருந்ததோ அதுவே புதியதாய் மாறியது; அதாவது இடைநிறுத்தங்களோடு தொடர்ச்சியைப் பேணுவது அதன் சிறப்பியல்பாகும். இவ்வாறு பல விடயங்கள் மாற்றமுறுவது போல் தோன்றினாலும் அடிப்படையில் அவை அப்படியே இருக்கின்றன என்ற பார்வை மஹ்மூத் மம்தானி (2020:15) இரு முக்கியமான ஆன்மதேட்டம் கொண்ட கேள்விகளை கேட்பதற்கு காரணமாய் அமைந்தது. “ஐரோப்பாவின் கடந்த காலம் ஏன் நமது நிகழ்காலமாக மாறியது? காலனித்துவம் எப்போதோ கைவிட்ட மற்றவர்களை நாகரீகப்படுத்தும் திட்டத்தை நமது தேசியவாதத் தலைவர்கள் ‘பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்’ என்ற பெயரில் எதற்காக மீள் உருவாக்கம் செய்ய வேண்டும்? என்பதே அவை.

காலனீய நீக்கத்துக்கான போராட்டங்களும் புதிய உலக அமைப்பு பற்றிய அவர்களின் நோக்குகளும் நவீன உலகை அமைப்பதற்கான சேவையில் பணிபுரியும் சக்திகளால் வழிப்பறி செய்யப்பட்டதாக ஒருவர் தெளிவாக வாதிடலாம். உட்ரோ வில்சனின் முதலாம் உலகப் போருக்குப் பின்னரான 1919ம் ஆண்டின் புகழ்பெற்ற பதினான்கு வாசகங்கள், 1941ம் ஆண்டின் அத்திலாந்திக் சாசனம் மற்றும் 1945ம் ஆண்டின் ஐக்கிய நாடுகளின் சாசனம் ஆகியவற்றின் ஊடாக வளர்ந்து வரும் ஒரு வல்லரசாக ஐக்கிய அமெரிக்கா, தனது தேசிய சுயநிர்ணய நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் சென்றது. முற்போக்கானதொரு காலனீய நீக்க முயற்சியாக அன்றி இது அமெரிக்க மூலதனத்தின் கட்டற்ற உலகளாவிய பாய்ச்சலுக்கு தடையாக அமைந்த சாம்ராஜ்யங்களை நிர்மூலமாக்கும் ஒரு வேலைத்திட்டமொன்றாகவே அமைந்திருந்தது. (சர்மா 2020) காலனீய நீக்க விடுதலை என்ற கருதுகோளின் அகல்விரிவான பரப்பெல்லையை தேசிய அரசுகளை உருவாக்குவதற்காக மாத்திரம் என வரையறுத்தது, பெரு நகர நடுத்தர வர்க்க முதலாளிகள், உள்ளூர் சிறு முதலாளிகள், தரகு முதலாளிகள் ஆகியோரது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் காலனீய நீக்கத்தை மண்டியிட வைத்தது. பாட்டளி வர்க்கத்தைச் சேர்ந்த விவசாயிகள், கூலித் தொழிலாளிகள் கொண்ட அன்றாடங்காய்ச்சிகளின் வியர்வையும் இரத்தமுமே இதற்கான உள்ளீடு ஆயின. இது உண்மையாகவே மாற்றத்தை எதிர்பார்த்து இருந்து ஏழை விவசாயிகளுக்கும், தொழிலாளிகளுக்கும் பெருத்த ஏமாற்றத்தையே பரிசாக அளித்தது.

ஆகவே, காலனித்துவத்திற்குப் பின் அமைந்த புதிய உலக ஒழுங்கை செயல்படுத்துவதில் தேச எல்லைகள் பிரதான பங்கை வகித்ததில் ஆச்சரியம் ஏதுமில்லை. நந்திதா சர்மா(2020) கூறுவது போல  நமது சமகால உலகத்தை எல்லைகளால் வரையறுத்து மக்களை குறிப்பிட்ட இடத்துக்கு உரியவர்களாய் மாற்றி, அவர்களை ‘பூர்வீகவாசிகள்’ என்றும், ‘இடத்திற்கு வெளியே உள்ள மக்கள்’ ‘புலம்பெயர்ந்தோர்’ எனவும் வழங்கப்படுவதற்கான பெரும் பிரச்சினையும் அச்சுறுத்தலும் அங்கேயே உருவாக்கப்பட்டது. காலனித்துவத்திற்குப் பிந்திய புதிய உலக ஒழுங்கு இனவாதத்தை மறுஉற்பத்தி செய்வது மாத்திரமன்றி அதனை இயல்பாக்கமும் செய்வதன் வழியாக தேசிய இறையாண்மையின் இடஞ்சார் இயற்கை ஒழுங்காக அதனை மாற்றி வைத்துள்ளதாக ஷர்மா கடும் விமர்சனம் ஒன்றை வைக்கிறார் (ஷர்மா 2020:4) உலக காலனித்துவத்தின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்படும் பின்காலனித்துவ புதிய உலக ஒழுங்கில் ‘தேசியவாதம்’ ‘அரசாங்கத்தன்மை’ கொண்டதாகவும், ‘தேசிய’ குடிகளில் இருந்து ‘புலம் பெயர்ந்தோரைப்’  பிரித்து வைப்பது இறையாண்மைக்கான (biopolitics) உடல் அரசியலில் இன்றியமையாத கூறாய் இருப்பதாகவும் விபரிக்கிறார். அவரைப் பொறுத்தவரை ‘தேசியவாதம்’ இந்தப் புதிதாக உருவானதாய் கருதப்படும் பின் காலனிய உலகில் அரசாங்கமாக தொழிற்படுவதோடு அதன் கொள்கைகளையும் நடைமுறைகளையும் சுதேசிகளுக்கும் அந்நியர்களுக்கும் இடையிலான உறவுகளே தீர்மானிக்கின்றன என்றும் அதன் மையக் கூறாக ‘இறைமை’ என்ற கருத்தாக்கம் செயற்படுகிறது என்றும் பின் காலனிய உலகின் போலித் தன்மை குறித்து மேலும் எழுதிச் செல்கிறார்.

சாதகமான அம்சங்களை வைத்து சர்வதேசம் (International) என்பதை மீள் பரிசீலனை செய்தல்

உண்மை என்னவென்றால் ‘சர்வதேசத்துவம்’ என்பதை அதன் தனித்தன்மைகள் மற்றும் பன்முகத்தன்மையுயோடு மனிதகுலத்தை அரவணைக்கும் ஒன்றாக எடுத்துகொள்ளக் கூடாது. தற்போதுள்ள அதன் நடைமுறையை, நவீன உலக ஒழுங்கின் கட்டமைப்பை, அரசியலமைப்பை ஆழமான பகுப்பாய்வு செய்வதன் மூலம் கண்டறிய வேண்டும். நவீன உலக ஒழுங்கு எவ்வாறான வழிமுறைகள் மூலம் கட்டமைக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது என்ற ஆழமான நோக்கினை இது தொடர்பாக கொண்டிருப்பது சர்வதேசத்துவம் பற்றிய விரிவான பார்வையைச் செலுத்த உதவும். அதேபோல் இருபதாம் நூற்றாண்டில் இடம்பெற்ற பின் காலனியப் போராட்டங்கள் தொடர்பிலும் விடுதலை எனும் பெயரில் அவை பெற்றுத் தந்த சுதந்திரம் என்பது தொடர்பாகவும் ஆழமான பார்வையை கொண்டிருப்பது அவசியமாகிறது. இத்தகைய புரிதலை ஒருவர் கொண்டிருக்கும் போது தான் காலனியக் கட்டுமானங்கள் பற்றியும் சர்வதேசத்துவம் எனும் கருத்தாக்கம் தொடர்பிலும் போதிய விளக்கங்களை பெற முடியுமாய் இருக்கிறது. உலகளாவிய ரீதியில் நடைபெறும் வேகமான தொடர்பாடலும், குடிசன இடப்பெயர்வுகளும் இது பற்றிய சிந்தனையின் அவசியத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. அகில் எம்பெம்பே (2019:13) கூறுவது போல பூகோள மற்றும் நவீன தொடர்பாடல் வடிவமைப்புக்களின் வழியே ஒன்றுடனொன்று இணைக்கப்பட்ட உலகில், அவை மனிதன் என்பதன் அர்த்தத்தை என்னவாக வரையறை செய்கின்றன என்பதில் இருந்து தான் நவீன உலகம் புரிந்து கொள்ளப்பட முடியும். எனவே, இவ்வாறு ஆழமாக விரிவடைந்து இருக்கும் மனிதத் தொடர்புகளின் யதார்த்தமானது, ‘சர்வதேசத்துவம்’ பற்றிய ஆய்வுகளில் பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகளின் சிக்கல்களையும் உள்ளடக்குவதனை இன்றியமையாததாக மாற்றி விடுகிறது. இதன் விளைவாக எழுவது ஆளுகை பற்றிய உலகளாவிய பிரச்சினை மாத்திரமன்றி நவீன உலகில் இடைநிலையான ஒரு சவாலாகவும் இது உருவெடுக்கிறது. தேசிய அரசுகளின் ‘தேசியம்’ என்ற காலவதியாய்ப் போன கொள்கலனில் இருக்கும் குடியுரிமை மற்றும் உடைமை பற்றிய வரம்புக்குட்பட்ட கருத்துக்களின் வழியாக இவை இடைவிடாது தொடர்கின்றன. 

‘சர்வதேசத்துவத்தை’ ஒரு அபிலாஷையாகக் கொண்டிருக்கும் இந்த ஆய்வறிக்கையில், நான் தனியாளாக இல்லை. வித்தியாசங்களோடு இணக்கமாக வாழ இயலுமான, பயம், தவிப்பு, வன்முறைகளற்ற ‘காலனீய நீக்கம் செய்யப்பட்ட சர்வதேசத்துவத்தை’ நோக்கிய எமது முயற்சியில் என்னோடு இணைந்து பல அறிஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் துணிச்சலாக முன்வந்திருக்கின்றனர். இந்த விரிவான பார்வை உண்மையில் பாரம்பரிய காலனித்துவ கதையாடல்களை சவாலுக்கு உட்படுத்து -வதோடு எல்லோருக்கும் உரிய சமமான உலகளாவிய சமூகத்தை உருவாக்க முயல்கிறது.

‘பின்காலனீய உளச்சோர்வு’ (2005) எனும் ஆக்கத்தில், போல் கில்ரோய் ‘பல்கலாச்சார சமூகம்’ ஒன்றில் தாராளவாத நோக்கில் ‘வித்தியாசங்களோடு இணக்கமாக வாழுதல்’ பற்றிய விவாதங்களின்போது, ‘பயங்கரவாதத்தின் மீதான போர் பற்றிய மனக் கிலேசங்களின் பெருக்கம்’ காரணமாக மேற்படி சமூகத்தை, ‘அதன் பிறப்பின் போதே கைவிடப்பட்டது’ என வர்ணிக்கிறார். உண்மையில் பல்கலாச்சார மாதிரி என்பது எப்போதும் law of division என்று எட்வர்ட் செய்யிதினால்(1978) அழைக்கப்பட காலனித்துவத் தர்க்கமான மக்களை இன‌,மொழி, சமய‌ மற்றும்  பண்பாட்டு அடிப்படையில் பாகுபடுத்தும் விதிமுறைகளுக்கு எதிரான முறிமருந்தாக இருப்பதில் தொடர்ந்தும் சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறது. இதனை வேறுபாடுகளின் சட்டகம் (paradigm of differences) என்று அழைத்தார் Y. முதிம்பே(1994)

சுலைமான் பச்சியர் டைக்னே (2015) எனும் தத்துவவியலாளர் தொடர்ந்தும் வலியுறுத்தி வருவது போல சர்வதேசத் தன்மை (universal) என்ற ஒன்று உண்மையில் உலகில் இல்லை. எல்லோருக்கும் பொதுவான நடைமுறையோ கோட்பாடோ இருப்பதாகக் கூறுவதில் எவ்வித உண்மையுமில்லை. அந்த சர்வதேசத்துவம் இதற்கு முன்னர் இருக்கவுமில்லை. ஆனால், அது எம் முன்னால் இருக்கிறது. எனவே, நாம் போராட்ட குணத்தோடு அதை நோக்கிச் சென்று அதனைக் கண்டடையலாம். ஐரோப்பாவும் அதன் கண்டுபிடிப்பான ஐரோப்பிய மையவாதம் செயற்கரிய விதிகளாய் வகுத்தளித்து இருப்பவை அனைத்தையும் கடந்து போய் அர்ப்பணிப்போடு பாடுபட்டால் அதனை அடைந்து கொள்ளலாம். அதனை விடுத்து, எமக்கு முன்னால் முன்னேற்றங்களின் தொகுப்பாகக் காட்சியளிக்கும் சர்வதேசத்தை வியந்து பார்த்துக் கொண்டிருப்பதால் அல்ல. டயக்னே இம்மானுவேல் வாலர்ஸ்டீனின் (2006: xii) Universal universalism என்ற கருத்தாக்கத்தினை ஏற்றுக்கொள்வதோடு “ஐரோப்பிய உலகளாவிய வாதத்திற்கும் Universal universalism க்கும் இடையிலான கருத்தியல் போராட்டம் சமகால உலகின் முக்கியத்துவம் மிக்க கருத்தியல் போராட்டமாகும். தொடர்ந்து நாம் வாழவிருக்கும்  இருபத்தைந்து முதல் ஐம்பது ஆண்டுகள் வரையான உலக ஒழுங்கை நிர்ணயிப்பதில் மிக முக்கியமான கருத்தாக்கமாக அது அமையும்”என்கிறார். தற்போது நடைமுறையில் உள்ள உலகளாவிய அமைப்புக்கு மாற்றாக வேறோரு அமைப்பை  உருவாக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதுடன் குறித்த மாற்று அமைப்பானது அனைவரையும் உள்ளடக்கிய, அனைவரினதும் ஏற்பைப் பெறும் வகையில் தெளிவான தீர்க்கமானதாக அமைதல் வேண்டும் எனவும், முக்கியமாக அவ்வமைப்பு நிறுவனமயப் படுத்தப்படுதல் வேண்டும் எனவும் இம்மானுவேல் வாலர்ஸ்டீன் மேலும் குறிப்பிடுகிறார். இது தானாக நடைபெறும் என வாளாவிருக்க முடியாது.

நிச்சயமாக, universalism எனும் ‘உலகளாவியம்’ என்பதற்கும் internationalism எனும் ‘சர்வதேசத்துவம்’ என்பதற்கும் இடையேயான உறவுகள் அல்லது வேறுபாடுகள் பற்றியோ அல்லது இரண்டினையும் சமரசப்படுத்தும் முயற்சியின் சாத்தியத்தன்மை குறித்தோ என்னிடம் கேள்விகளையெழுப்ப முடியும். அடிப்படையில் அவை இரண்டும் ஒன்றையொன்று சார்ந்துள்ள அபிலாஷைகள் ஆகும். சர்வதேசத்துவம் என்பது உலகளாவியத்தின் சிற்றுரு; உலகளாவியம் என்பது சர்வதேசத்துவத்தின் பேருரு என இதனை விளக்கலாம். இதில் உலகளாவியத்தின் ஒரு பகுதியாகவே சர்வதேசத்துவம் உள்ளது. வாலர்ஸ்டீனின் கருத்தாக்கமான Universal universalism என்பதன் அடிப்படையாக அமைவது Internationalism தான். அவரது கருத்தினூடாக அவர் நாடியதெல்லாம் ஒன்றுடனொன்று தொடர்புள்ள மரபுகளையும் அங்கீகரித்து விளிம்பு நிலையில் உள்ளவற்றை மையத்திற்கு எடுத்து வருவதனைத்தான்.

உலகின் ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேலான ஆதிக்கத்தை கொண்டுள்ள ஐரோப்பாவும், வட அமெரிக்காவும் இந்த “Universal universalism” என்பதை வழங்கத் தவறிவிட்டன என்பதே உண்மை. அதற்கு பதிலாக அவை உலகிற்கு கொடையாக வழங்கியது எல்லாம் காலனித்துவத்தைத் தான். ஐரோப்பாவின் இத்தகைய மேலாதிக்கம் நிறைந்த நுட்பங்களை கடுமையாக விமர்சனம் செய்த பிரான்ஸ் ஃபனான் (1968:254), உலகளாவிய ரீதியில் கடுமையான வன்முறைகளை நிகழ்த்தியும் அதன் வழியே மனிதர்களுக்கு உரித்தான கண்ணியத்தையும் அவர்களது சுயத்தையும் அழித்துமே ஐரோப்பா தன்னை உலகில் நிலை நிறுத்திக்கொண்டது என்கிறார். மனிதகுல நலனுக்காக அனைத்து மனிதர்களையும் அணிதிரட்டி பொதுவான நோக்கங்களுக்காக ஒருங்கிணைப்பதை, ஐரோப்பா தனது காலனீயத்தின் வழியாக மேற்கொண்ட  இப்படியான மனிதாய நீக்கம் செய்யப்பட்ட நடவடிக்கைகள் மூலம் சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது என்ற பனானின் கருத்து இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. பனானின் ‘தீவிர மனித நலனுக்கான தீவிர அழைப்பை’ (1968:254) யார்தான் நிராகரிப்பர்? “ஐரோப்பாவைத் தொடர்வதை கைவிடுவோம்; நமது அறிவையும் பலத்தையும் ஒரு புதிய திசையில் ஒருங்கிணைப்பதன் வழியாக, ஐரோப்பா உருவாக்கத் தவறிய, ஆன்ம பலங்கொண்ட மனித விழுமியங்களின் முழுமை மனிதனின் வெற்றிகரமான உருவாக்கத்துக்கு  முயற்சிப்போம்” என தனது நுகத்தடியால் நூற்றாண்டுகளாய் மனித குலத்தை இறுகப் பிணைத்திருகும் காலனீயத்தை விட்டொழிக்குமாறு  அறைகூவல் விடுக்கிறார் ப்ரான்ட்ஸ் ஃபனான் (1925 – 1961)

தீவிரமானதோர் சிந்தனை முறைக்கான ஃபனானின் இந்த அழைப்போடு ஒத்த கருத்தை (அதாவது காலனிய நீக்கம் செய்யப்பட்ட சர்வதேசம்) தொடர்பான அதே கருத்தை 1956களில் ஐமி சிசேரும் கொண்டிருந்தார். கம்யூனிஸ்ட் கட்சிக்கு அவர்‌ அளித்திருந்த இராஜினாமா கடிதத்தில் “எல்லா வகையான குறிப்பான அம்சங்களையும் தழுவியதும் உள்ளடக்கியதுமான ஒரு காலனிய நீக்கம் செய்யப்பட்ட சர்வதேசத்தையே நான் இலட்சியமாக கொள்வதாகவும், தனித்துவங்கள் என்ற பெயரில்  அனைத்தையும் அழித்து விட்டு அவற்றின் மீது தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் ஒரு முறைமையை இதன் வழியாக நான் கருதவில்லை” என்றும் அவர் அந்தக் கடிதத்தில் குறிப்பிடுகிறார். A. சிவானந்தன் (2018:7) புதியதோர் உலகளாவியம் தொடர்பில் குறிப்பிடும் போது “எல்லா வகைகளிலும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள், தங்களது நலன்களுக்காகவும், அவர்களுக்குள் ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகிய அனைத்து தரப்பினரின் விடுதலைக்காகவும் ஒருங்கிணைந்த மக்களின் போராட்டங்களே இதனைச் சாத்தியமாக்கும்” என்கிறார். அந்த போராட்டங்கள் நீதியையும் அதன் வழியான நிலையான சமாதானத்தையும் சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் வழங்குவதை இலக்காகக் கொண்ட சோஷலிசக் கட்டுமானங்களின் அடிப்படை -யில் அமைந்திருக்கும் எனவும் அவர் குறிப்பிடுகிறார். சிவானந்தன் குறிப்பிடும் சோஷலிச கட்டுமானத்தைக் கொண்ட சமூகம் என்பதில் சிலர் முரண்பட்டாலும் எல்லோருக்கும் பொதுவான உலகைப் படைப்பதில் தெளிவான இலக்குகளைக் கொண்ட புரட்சி ஒன்று அவசியம் என்பதில் அவர் உடன்பட்டுச் செல்வதை இங்கு அவதானிக்க முடியும்.

2012 இல் கூகி வா தியாங்கோ எனும் ஆபிரிக்க காலனிய நீக்கச் சிந்தனையாளர் விவரித்ததன் படி, இது போன்ற கருத்தாடல்களைக் கொண்டு ‘காலனிய நீக்கம் செய்யப்பட்ட சர்வதேசத்திற்காக’ தொடர்ந்து உழைப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும். Globalactics (உலகின் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் சகல அம்சங்களையும் இணைத்துக் கொண்ட அகிலத்துவப் பொதுவான முறைமை) என இந்தச் செயன்முறையைக் குறிப்பிடும் தியாங்கோ, அதிகாரம் மைய நிலையில் இருந்து கலைக்கப்பட்ட, எல்லா அதிகாரப் படிநிலைகளும் உடைத்தெறியப்பட்டு உரையாடல்களுக்காக திறந்து விடப்பட்ட, எல்லோரையும் எல்லோருடனும் இணைக்கும் ஒரு மகத்தான இலக்கினை அது தொடர்பாக முன்வைக்கிறார். குறிப்பிடத்தக்க ஒருசில காலனித்துவ நீக்க சிந்தனையாளர்கள் இந்த முறைமையை “எல்லா உலகையும் ஒருங்கே கொண்ட உலகு” என்ற கருத்தில் அமையும் “Pluriversality” என அழைக்கின்றனர் (Escobar 2017; Reiter 2018). இங்கு கீழைத்தேயம், மேலைத்தேயம் என்ற பிரிப்புகள் ஒழிக்கப்பட்டு அதனுள் இயங்கும் அதிகார அமைப்புக்கள் எல்லாம் தகர்க்கப்பட்ட ஒரு புதிய விடுதலை உலகையே அவர்கள் இதனூடாக நாடுகிறார்கள். சொல்லப்போனால் துயர் நிறைந்த கொவிட் 19 காலப்பகுதி சகலருக்கும் பொதுவான நிம்மதியான உலகை கட்டியெழுப்புவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தியபடி இருக்கிறது எனலாம்.

விளிம்பு நிலை மக்களும் அவர்களது கருத்தியல் சேர்க்கையும்

கொவிட் 19 காலப்பகுதி, இதுவரையான உலகின் கட்டுமானங்கள் தொடர்பில் தீவிரமான மீள்பரிசீலனை குறித்து மனிதர்களின் கவனத்தை திருப்பியிருக்கிறது எனலாம். மரணத்தின் திடீர்த் தன்மை பற்றிய அச்சத்தில் அது மனிதர்களை ஆழ்த்தியிருக்கிறது. உயிர்காக்கும் தடுப்பூசிகளுக்காக காத்திருப்பது வரண்ட பூமியை மீள உயிர்ப்பிக்கும் மழைக்காக காத்திருப்பது போன்று ஆகியிருக்கிறது. இந்த அவசர நிலையை ஏற்படுத்தியதில் கொவிட் 19 போல, பூகோள வெப்பநிலையாக்கம், சூழல் மாசடைவு போன்றனவற்றுக்கும் பங்கிருக்கின்றன (பார்க்கவும் சக்கரவர்த்தி 2021). தீபேஷ் சக்கரவர்த்தி இது தொடர்பாக முன்வைக்கும் அவதானம் கவனத்திற்குரியது. தற்போது அதிகரித்து வரும் சூழலியல் பிரச்சினைகளுக்கும் கொவிட் 19 பிரச்சினைகளுக்கும் இடையே ஒரு உடன் நிகழ் தொடர்பு இருப்பதாகக் கூறும் சக்கரவர்த்தி, சூழல் மீதான மனிதனின் ஆதிக்க மனப்பான்மையானது இயற்கைச் சூழலுக்கும் மனித வரலாற்றுக்கும் இடையிலான இறுக்கமான தொடர்பை மங்கச் செய்திருப்பதாக குறிப்பிடுகிறார். இதனூடாக அபாயமான வைரஸ்கள் மனித உடல்களை வேற்றுக் கிரக உடல்களாக மாற்ற நினைத்து அதன் மீது ஆதிக்கம் செலுத்த முனைகின்றன என்று விளக்குகிறார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இயற்கையை சுரண்டும் மனிதர்களுக்குப் பகரமாக புதிய மனிதர்களை அவை தேட முனைகின்றன என்று அவர் விளக்குகிறார்.

மறுபுறம் கொவிட்-19 காரணமாக ஏற்பட்ட குழப்பங்களும் சவால்களும் அரசை, அதன் பிராந்திய தேசியவாத அதிகாரக் கூறுகளோடு மீண்டும் மையநிலைக்கு கொண்டு வந்தன.  தொற்றுநோயைக் கையாள்வதிலும், உயிர்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதிலும் வழிகாட்டுவதற்காக மக்கள் அரசை நம்பியிருக்கத் தலைப்பட்டனர். இது பெருமை மிக்க தேசிய அடையாள உணர்வை மீண்டும் உயிர்ப்பித்தது. தேசிய அளவிலான lockdown முடக்குதல் ஷர்மா குறிப்பிடுவது போல People of the place என்பதை நினைவு படுத்துகின்றன. விதிக்கப்பட்ட பயணத் தடைகள் காரணமாக ‘தேசியம்’ நம் மனங்களை கைப்பற்றியதால், ‘சர்வதேசம்’ பற்றிய குறை பிரக்ஞையை அடைந்தோம். பெருந் தொற்றுநோய்களில் இருந்து தமது சொந்த மக்களை காப்பாற்றுவதற்கான ‘இயலுமையை நிரூபிப்பதில்’ அரசுகள் பதற்றத்தை கொண்டிருந்தன. இந்த பெருந்தொற்று களேபரங்களுக்கு இடையிலும் இனவாத முதலாளித்துவத்தின் கோரமான பக்கங்களை ஆராய்வதில் அறிஞர்கள் பலர் ஆர்வம் காட்டினர். பொதுவில் எல்லா வர்க்கங்களையும் சேர்ந்த மக்கள் இந்தப் பெருந்தொற்றில் சமமான பாதிப்பை ஏன் அடையவில்லை என்ற கேள்வி மையநிலையை அடைந்தது. நோய் நிலைமை, நோய்த் தடுப்பு மற்றும் பாதிப்பின் அளவுகள்  ஆகிய அம்சங்களில், வர்க்கம் போன்றே பாலினம், இனம் மற்றும் புவியியல் ரீதியான வேறுபாடுகள் அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்ட அறிவார்ந்த விவாதங்கள் முன்னெடுக்கப்பட்டதன் விளைவாக உலகளாவிய முதலாளித்துவத்தின் முகத்திரை கிழிந்தது.

‘தேசியம்’ மற்றும் ‘சர்வதேசம்’ என எந்த எல்லைகளையும் மதிக்காது அடர்ந்தேறி வந்த கொரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான ஆற்றல் கொண்ட பாதுகாப்புத் திட்டங்களில் இருந்த ‘முரண்’ தான் என்ன ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ‘சர்வதேச’ முன்முயற்சிகளைக் காட்டிலும் ‘தேசிய’ தீர்வுகள் மூலம் ஒரு பெருந்தொற்று நோய் நிலைமையை செயலார்ந்த வகையில் எவ்வாறு எதிர்கொள்வது? ‘ சர்வதேசத்துவம்’ என்பது ஒரு வெற்றுவாதம். அது இன்னும் பிறக்காத குழந்தைதான் என்ற முன்மொழிவை இன்னிகழ்வுகள் நம்பத்தகுந்ததாக ஆக்கவில்லையா? அதை விட பொருளுண்மை வாய்ந்த விடயம் என்னவென்றால் திட்டமிட்ட, நிறுவன ரீதியான, கட்டமைப்பு ரீதியான மற்றும் இருத்தலியல் ரீதியான  சவால்களால் வேட்டையாடப்படுகின்ற ஒரு நவீன உலகில் நாம் வாழ்கிறோம் என்பதை கொவிட்-19 பெருந்தொற்று துலாம்பரமாக பாரபட்சங்கள் இன்றி வெளிப்படுத்தியது. எனது நோக்கில் இது, எமது அடிப்படையான அறிவுசார் தத்துவம் மற்றும் இருத்தலியல் விசாரங்களையும், ‘சர்வதேசத்துவம்’ மற்றும் ‘கொவிட் பெருந்தொற்றுக்குப் பின்னரான உலகு’ குறித்து நாம் வளர்த்து வைத்திருந்த கற்பனைகளையும் தனது கொடுங் கரங்களால் வன்மையாகக் கலைத்து விட்டது. உண்மையில் கொவிட் தொற்றில் இருந்து பிழைத்தவர்களும் தப்பித்தவர்களும் ‘அதிகாரத்திற்கான நாட்டம்’ என்ற நவீன தர்க்கத்திற்குள் இருந்து விடுதலை பெற்று ‘வாழ்வதற்கான நாட்டம்’ என்ற பொதுவான அறத்தின் அடிப்படையில் அமைந்த புதியதோர் எதிர்கால உலகுக்காக உழைக்க முன்வருவது முக்கியமானதாக அமைகிறது. அதேபோன்று ‘இயன்றளவு இலாபமீட்டும் பொருளாதார முறைமை’ என்ற வன்முறையில் இருந்து விடுபட்டு ‘வாழ்வதற்கான பொருளாதார அமைப்பு’ என்ற மாற்றத்தை நோக்கியும் திரும்ப வேண்டும். இதற்கு தேவைப்படுவதெல்லாம் மாபெரும் அறிவுப் போராட்டம் தான்.

ஏகாதிபத்திய அறிவியலுக்கு அப்பால்: ‘சர்வதேசத்துவத்தை’ மறுபரிசீலனை செய்வதில் அறிவுப் புரட்சியை நோக்கி

இவ்வளவு நெருக்கடிகளும் சிக்கல்களும் நிறைந்த வாழ்வமைப்பை வடிவமைத்து முன்னிறுத்தி இருக்கும் அதே அறிவு மரபினாலும் முன்னேற்றத்தினாலும், இத்தகைய இழிநிலை உலகில் இருந்து விடுதலை பெறுவதற்கும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளை முன்வைக்கவும் ஒருபோதும் முடியாது என்ற விடயத்திலான கருத்தொருமைப்பாடு அதிகரித்து வருகிறது. அதனால் தான் ஒட்டோரா ஹொப்பர்ஸ் மற்றும் ஹோவார்ட் ரிச்சர்ட்ஸ் (2012) கூறுவது போல நமது வழமையான சிந்தனை முறைமையில் மாற்றம் தேவையாக இருக்கிறது. இம்மானுவேல் வாலர்ஸ்டீன் (1999) இதனை “சிந்திக்காத சிந்தனை”  (Unthinking Thinking) என்கிறார். சமகால உள்ளூர் சுதேச இயக்கங்களும் சில பெண்ணிய அமைப்புக்களும் முன்னெடுத்துச் செல்லும் learning to unlearn in order to relearn எனும் ‘மீளக் கற்பதற்காய் கல்லாமையைக் கற்றல்’ எனும் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது போல முற்றிலும் புதிய அறிவாராய்ச்சியியல் அடிப்படைகள் இதற்கு தேவைப்படுகின்றன. “எப்படியான அறிவுச் செயன்முறை தற்போதைய வன்முறை மிக்க  ‘சர்வதேசத்துவத்தின்’ நடைமுறை அரசியலமைப்பு, கட்டமைப்பு மற்றும் உள்ளமைவு பற்றிய பொதுவான புரிதலை வடிவமைக்கிறது?” என்ற இன்றியமையாத கேள்வியில் இருந்து இது தொடர்பான செயன்முறைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். இதில் கவனம் செலுத்த வேண்டிய விடயம் என்னவென்றால், நாம் அறிவையும், அறிவுற்பத்தி மூலங்களையும் புரிந்துகொள்ளும் விதம் தான், யதார்த்தத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்கிறோம் என்பதையும் அதனை எவ்வாறு வடிவமைத்துக் கொள்கிறோம் என்பதையும் நிர்ணயிக்கிறது. (மிங்கலோ மற்றும் வால்ஷ், 2018). ‘சர்வதேசத்துவம்’ தொடர்பாக இன்று எழுந்துள்ள அனைத்து பிரச்சினைகளும் ஏகாதிபத்தியத்தில் தான் வேர் கொண்டுள்ளன. இந்த ஏகாதிபத்திய பார்வை பூமியில் வெற்றிடமாக இருக்கும் அனைத்து இடங்களையும் ஆதிக்கத்திற்கு உட்படுத் தக் கூடியதாகவும் கைப்பற்றக் கூடியதாகவும் கருதியது. ஜேம்ஸ் ப்ளொட் (1999) கூறுவது போல ஏகாதிபத்தியம் இந்த காலியான நிலங்களை ‘காலனிகள்’ ஆகவே நோக்கியது. பின் காலனிய உலகை வகை தொகையின்றி சுரண்டி வேட்டையாடுவதில் ஏகாதிபத்தியத்துக்கு இந்த மனோபாவமே மதியுரைஞராய் அமைந்திருந்தது. இதனால் தான் எம்முன்னே சிக்கலான அமைப்பு கொண்ட சர்வதேசத்துவம் ஒன்று இருக்கிறது என வலியுறுத்துகிறோம். அங்கு அமெரிக்காவும் ஐரோப்பாவும்  இடைவிடாத அதிகார வேட்கையின் காரணமாக தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்தி வருவதோடு அவற்றின் கொள்கைகள் மற்றும் விதிமுறைகளை இப்பூவுலகின் ஏனையோர் பின்பற்றி நடக்கவும் வற்புறுத்தப்படுகின்றனர்.

உண்மையில் முதலாளித்துவத்தை தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனையாகக் கருதும் மார்க்சியக் கண்ணோட்டம் போன்ற பிற உலகக் கண்ணோட்டங்களால் ஏகாதிபத்தியம் எப்போதுமே சவாலுக்குட்படுத்தப்பட்டு வருகிறது. மார்க்சியத்தின் பிரகாரம், முதலாளிகளின் நலன்களுக்காக உலகின் அனைத்து தரப்பினரின் நலன்களையும் சுரண்டி வயிறு வளர்க்கும் முதலாளித்துவம், அதன் ஆதார அடிப்படைகளில் நின்று புரிந்து கொள்ளப்பட வேண்டியதும் எதிர்க்கப்பட வேண்டியதும் முற்றிலுமாக உலகில் இருந்து தூக்கியெறியப்பட வேண்டியதுமான கருத்தியலாக அமைகிறது. பாட்டாளி வர்க்கத்தின் புரட்சியின் பின்னணியில் இருந்த சர்வதேசம் குறித்த கருத்தாக்கம் “சுரண்டல் அற்ற எல்லோருக்கும் சமமான செல்வப் பகிர்வை அளிக்கும் சமத்துவமான உலகு ” என்பதாகவே அமைந்திருந்தது. 1989 இல் சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்கு பிறகு, இந்த மாற்றுச் சிந்தனை ஒரு பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் கருத்தியல் அடிப்படையில் முற்றிலுமாக இல்லாமல் போகவில்லை. கடந்த கால ஸ்டாலினிய தலைமைத்துவ மாதிரிகளையும் ஏனைய சிக்கலான அமைப்புகள் குறித்ததுமான கடுமையான சுயவிமர்சனங்களுடன் 21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் அது ‘ஜனநாயக மார்க்சியம்’ என்று  தன்னை உயிர்ப்பித்து இருக்கிறது. இந்தப் புதிய எழுச்சி சுற்றுச்சூழல், பழங்குடியினர், பெண்ணியம் மற்றும் காலனிய நீக்கம் தொடர்பாக அக்கறை உள்ள அனைத்து இயக்கங்கள் மற்றும் அமைப்புகளுடன் தொடர்ந்தும் பணியாற்ற ஆர்வமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் (வில்லியம்ஸ் மற்றும் சத்கர் 2013; என்ட்லோவு-கட்ஷேனி மற்றும் என்ட்லோவு 2021).

21 ஆம் நூற்றாண்டின் ஜனநாயக மார்க்சியம் நிகழ்கால உலகின் முக்கியத்துவம் வாய்ந்த சிக்கல்கள் குறித்து கேள்விகளை எழுப்பி வரும் காலனிய நீக்கத்திற்காக பாடுபடும் இயக்கங்களுடன் கைகோர்த்து செயற்படுகிறது. அறிவாற்றல், கருத்தியல், நெறிமுறை, மனிதநேயம் மற்றும் அரசியல் வடிவங்கள் உள்ளடங்கலாக நிரந்தரமான விடுதலையையும், மனித குலத்தின் மீட்சியையும் இலக்காகக் கொண்டு ஒன்றுடனொன்று தொடர்புள்ள சமகால பிரச்சினைகளான இனவாதம், ஏகாதிபத்திய வாதம், காலனித்துவம், முதலாளித்துவம், ஆணாதிக்கம் போன்ற பன்முக பிரச்சினைகளை நீக்குவதனை தனது உள்ளீடுகளாக கொண்ட மதிப்பீடுகளையும் இயக்கங்களையும் இந்த அமைப்பு உள்ளீர்த்தவாறு செயற்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் மைய நிலையில் பழங்குடி மக்கள், பெண்கள் மற்றும் நவீன வாழ்வமைப்பால் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் பிற குழுக்களின் தொடர்ச்சியான கோரிக்கைகளும், தொடர்ச்சியான போராட்டங்களுமே உள்ளன.  புதியதொரு பொருளாதார அமைப்பு, அணிசேராமை, விரிந்த ஆப்பிரிக்கவாதம், கண்டங்களுக்கு இடையேயான பரஸ்பர ஒற்றுமை மற்றும் கறுப்பின விடுதலை மற்றும் Rhodes Must Fall எனும் விடுதலை போராட்டம் போன்ற சகல இயக்கங்களினதும் நீண்டகால கோரிக்கைகளை ஏற்ற பன்மை அடையாளங்களை சுமந்த இயக்கமாக இது செயலாற்றுகிறது. குறித்த காலனிய நீக்க  இயக்கம் போவன்டுரா டி சொய்ஸா சான்டோஸ் (2014; 2018) ‘தெற்கின் அறிவாதாரவியல்’ என்று அழைக்கும் இனவாதம், அடிமைத்தனம், காலனித்துவம், ஏகாதிபத்தியம், முதலாளித்துவம் மற்றும் ஆணாதிக்கம் ஆகியவற்றை எதிர்த்துச் செயலாற்றும் பண்புகளை தாராளமாக வெளிப்படுத்தி செயல்படுகிறது. அவை மட்டுமன்றி சர்வதேசம், நவ காலனித்துவத்தால் மீள வடிவமைக்கப்பட்டிருக்கின்ற விதம் பற்றிய பலத்த விமர்சனக் கண்ணோட்டங்களையும் இது தன்னகத்தே கொண்டுள்ளது.

முடிவுரை: சர்வதேசத்துவத்தை காலனிய நீக்கம் செய்தலை நோக்கி

நாம் தற்போது ஒரே நேரத்தில் அறிவாதார அடிப்படையில் காலனித்துவத்திற்கு உட்பட்ட உலகில் மட்டுமன்றி, சக்திவாய்ந்த முதலாளிகளுக்கு ஆதரவாக ஒழுங்கமைக்கப்பட்ட ‘காலனித்துவ உலகிலும்’ வாழ்கிறோம் என்பதற்கு தெளிவான சான்றுகள் இருந்தாலும், இந்த உலக ஒழுங்கு அதற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் மற்றும் மாற்றத்திற்கான போராட்டங்களால் தொடந்தும் உயிரூட்டப்படுக் கொண்டுள்ளது. நமது உலகில் நடைமுறையில் உள்ள அறிவுற்பத்தி மற்றும் அதன் நடைமுறைகள் தொடர்பில் எண்ணற்ற அவதானங்கள் தற்போது செலுத்தப்பட்டு வருகின்றன. இதனாலேயே உலகம் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்கள் போராட்ட களங்களாக மாறிவிட்டதால் அறிவு உலகம் கொந்தளிப்பில் உள்ளது. நாம் எதிர்பார்த்திருக்கும் அனைவருக்குமான உலகை நிர்மாணிப்பதில் அவை நம்பிக்கையூட்டும் அம்சங்களாக உள்ளன. இது போன்றதொரு தருணத்தில் நமது இளைய சந்ததிகள் கொண்டுள்ள ஆர்வத்தை அதிகரிக்க வேண்டியுள்ளது. ஒரு புதிய சர்வதேசத்துவத்துகான அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முன்நிபந்தனையாக அறிவாற்றல் புரட்சிக்கான சாத்தியக்கூறுகள் அடிவானத்தில் தென்படுகின்றன. அனைவரினதும் உடனடிக் கவனத்தை வேண்டி நிற்கும் இந்த அடிப்படைத் தேவையை உணர்ந்து பணியாற்ற நமது பரம்பரை எழுந்து நிற்றல் வேண்டும்.

அந்த வகையில் சர்வதேசத்துவத்தை காலனிய நீக்கம் செய்யும் இந்த முயற்சி தேசிய அரசுகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் என்பவற்றுக்கும் அப்பால் அறிவுற்பத்தி மற்றும் அதன் நடைமுறைகள் பற்றிய மாபெரும் அறிவுப் புரட்சியொன்றுக்கு நிச்சயம் இட்டுச் செல்லும். உலகைப் பீடித்திருக்கும் ஆணாதிக்கம், இனவாதம், ஏகாதிபத்தியம், வர்க்க வேறுபாடு என்ற அனைத்தையும் இல்லாதொழித்து புதிய உலகை உருவாக்கும் சிக்கலான முயற்சி அது. சிக்கலானது போல மிக அவசரமான தேவையாகவும் அது இருக்கிறது. 21 ம் நூற்றாண்டில் காலனிய நீக்கச் சிந்தனைகளை வெளிப்படுத்திய போராட்டங்களான Black lives matter, Rhodes must fall போன்றன நம்பிக்கை மிக்க எதிர்காலம் ஒன்றுக்கான பாதையை உச்ச வீச்சில் விரிவுபடுத்தி இருக்கிறது. இன, பால்நிலை, வர்க்க வேறுபாடுகள் அற்ற சமத்துவம் மிக்க உலகுக்கான அழைப்பை இந்த இயக்கங்கள் வெளிப்படுத்தி இருப்பது மகிழ்ச்சிக்குரியது. சர்வதேசத்துவம் என்ற அமைப்பை காலனிய நீக்கம் செய்வதற்கு வித்தியாசமான அணுகுமுறைகளையும் ஊடகங்களையும் பயன்படுத்தும் அறிவாற்றல் புதிய தலைமுறைக்கு நிறையவே இருக்கிறது. எட்வர்ட் செய்த் ( 1978) கூறும் எண்ணக்கருவான contrapuntal perspective எனும் ஒரு படித்தான பார்வையில் சகலவற்றையும் அளவிடாது வித்தியாசமான பரிமாணங்களில் ஒவ்வொன்றையும் அதற்கேயுரிய பரிமாணங்களில் வைத்து மதிப்பீடு செய்யும் பணியில் இன்றைய இளைய தலைமுறை ஈடுபடுவது நம்பிக்கையளிக்கிறது. எட்வர்ட் செய்த் உலகில் உள்ள கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் தமக்கிடையே ஏதுமொரு வகையில் குறிப்பிடத்தக்க தொடர்புகளை கொண்டுள்ளன என்று கருதுகிறார். அத்தோடு அவை ஒன்றையொன்று தங்கியிருக்கும் பண்பையும் கொண்டுள்ளன. அந்தந்த பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் ஒரே மாதிரியான அமைப்பில் அளவீடு செய்வதை எட்வர்ட் செய்த் கடுமையாக விமர்சனம் செய்வார். மற்றொரு சிந்தனையாளரான கூகி வா தியாங்கோ(1986) காலனிய நீக்கம் என்பது எம்மையும் எம்மைச் சுற்றியுள்ள ஏனைய மக்கள் மற்றும் அவர்ளது அடையாளங்களையும் அதற்கேயுரிய பெறுமானத்தில் நின்று மதிப்பீடு செய்வதற்குமான விரிவான கண்ணோட்டம் என்று விளக்குகிறார்.

உசாத்துணைகள்

Bhabha, H. 1994. The Location of Culture. London and New York: Routledge.

Blaut, J. 1993. The Colonizer’s Model of the World. New York: The Gilford Press.

Chakrabarty, D. 2021. The Climate of History in A Planetary Age. Chicago and London: The University of Chicago Press.

Dabashi, H. 2019. Europe and Its Shadows: Coloniality After Empire. London: Pluto Press.

Diagne, S. B. 2015. “On the Postcolonial and the Universal.’’ In E. Sall (ed.).Africa and the Challenges of the TwentyFirst Century: Keynote Lectures Delivered at the 13th General Assembly of CODESRIA. Dakar: CODESRIA Books, pp. 67-77

Escobar, A. 2017. Designs for the Pluriverse: Radical Interdependence, Autonomy, and the Making of Worlds . Durham and London: Duke University Press.

Fanon, F. 1968. The Wretched of the Earth. New York: Grove Press.

Gilroy, P. 2005. Postcolonial Melancholia. New York: Columbia University.

Grosfoguel, R. 2007. “The Epistemic Decolonial Turn: Beyond Political-Economy Paradigms.’’ Cultural Studies, 21 (2-3), (March/May), pp. 211-223.

Grosfoguel, R. 2011. “Decolonizing Post-Colonial Studies and Paradigms of Political Economy: Transmodernity, Decolonial Thinking, and Global Coloniality.”Transmodernity: Journal of Peripheral Production of the Luso-Hispanic World, 1(1), pp. 1-19.

Hartman, S. V. 1997. Scenes of Subjection: Terror, Slavery, and Self-Making in Nineteenth Century America . New York and Oxford: Oxford University Press.

Hoppers, C. O. and Richards, H. 2012. Rethinking Thinking: Modernity’s “Other” and the Transformation of the University. Pretoria: UNISA Press.

Maldonado-Torres, N. 2007. “On Coloniality of Being: Contributions to the Development of a Concept.”Cultural Studies, 21(2-3), (March/May), pp. 240-270.

Mamdani, M. 2020. Neither Settler Nor Native: The Making and Unmaking of Permanent Minorities . London: The Belknap Press of Harvard University Press.

Mbembe, A. 2019. Necropolitics: Translated by Steven Corcoran. Durham and London: Duke University Press.

Mignolo, W. D. and Walsh, C. E. 2018. On Coloniality: Concepts, Analytics. Praxis. Durham and London: Duke University Press.

Mudimbe, V. Y. 1994. The Idea of Africa. Bloomington: Indiana University Press.

Ndhlovu, F, and Makalela. 2021. Decolonizing Multilingualism in Africa: Recentering Silenced Voices from the Global South. Bristol: Multilingual Matters.

Ndlovu-Gatsheni, S. and Ndlovu (eds.). 2021. Marxism and Decolonization in the 21st Century: True Ideas and Living Theories. London and New York: Routledge.

Ndlovu-Gatsheni, S. J. 2011b. “The Afterlives of Racial Slavery in Global Coloniality.” Unpublished Seminar Paper Presented at The Cambridge Legacies of Enslavement Inquiry and the Centre for African Studies, University of Cambridge, United Kingdom, 17 May.

Ndlovu-Gatsheni, S. J. 2021a. “The Cognitive Empire, Politics of and African Intellectual Productions: Reflections on Struggles for Epistemic Freedom and Resurgence of Decolonization in the Twenty-First Century.”Third World Quarterly, 42(5), pp. 882-901

Ngugi wa Thiong’o. 1986. Decolonizing the Mind: The Politics of Language in African Literature . Oxford: James Currey.

Ngugi wa Thiong’o. 2012. Globalectics: Theory and the Politics of Knowing. New York: Columbia University Press.

Reiter, B (ed.). Constructing the Pluriverse. The Geopolitics of Knowledge. Durham and London: Duke University Press.

Robinson, C. 1983. Black Marxism: The Making of the Black Radical Tradition. London: Zed Books.

Said, E. 1978. Orientalism. New York: Vintage Press.

Santos, B. de S. 2014. Epistemologies of the South: Justice Against Epistemicide. Boulder and London: Paradigm Publishers.

Santos, B. de S. 2018. The End of the Cognitive Empire: The Coming of Age of Epistemologies of the South . Durham and London: Duke University Press.

Sharma, N. 2020. Home Rule: National Sovereignty and the Separation of Natives and Migrants. Durham and London: Duke University Press.

Sivanandan, A. 2018. ‘‘The Heart Is Where the Battle Is: An Interview with A. Sivanandan.’ Race and Class, 59(4), pp. 3-14.

Wallerstein, I. 1999. “Introduction: Why Unthink?” In I. Wallerstein (ed.).Unthinking Social Science: The Limits of Nineteenth Century Paradigms. Cambridge: Polity Press, pp. 1-26.

Wallerstein, I. 2006. European Universalism: The Rhetoric of Power. New York and London: The New Press.

Williams, M. and Satgar (eds.). 2013. Marxisms in the 21st Century: Crisis, Critique and Struggle. Johannesburg: Wits University Press.

Wynter, S. 2003. “Unsettling the Coloniality of Being/Power/Truth/Freedom: Towards the Human, After Man, Its Overrepresentation—An Argument.’’ CR: The New Centennial Review, 3(3), pp. 257-3337.

என்ட்லோவ்-கட்ஷேனி (Sabelo J. Ndlovu-Gatsheni) ஜேர்மனியின் பெய்ரொய்ட் பல்கலைக்கழக ஆபிரிக்க மற்றும் தெற்குலக அறிவாராய்ச்சியியல் துறைப் பேராசிரியர் ஆவார். தென்னாப்பிரிக்கா பல்கலைக்கழகத்தின் பால்நிலை மற்றும் ஆபிரிக்க கற்கை நெறிகளுக்கான துறைத்தலைவராகவும் ஜொஹன்னஸ்பேர்க் ஆய்வு மையத்தின் சிரேஷ்ட ஆய்வாளராகவும் கடமை புரிந்த இவர் காலனித்துவ/பின்காலனித்துவ கோட்பாடு, ஏகாதிபத்திய காலனித்துவம், அறிவாராய்ச்சியியல் காலனிய நீக்கம், மார்க்சியம், ஆப்பிரிக்க வரலாறு, ஆப்பிரிக்க அரசியல் பொருளாதாரம் ஆகியனவற்றில் அதிக ஈடுபாடு உடையவர்‌ பேராசிரியர் என்ட்லோவ்-கட்ஷேனி தனது பெயரில் 20 புத்தகங்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு வெளியீடுகளையும்  கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்