— ஸ்டீவன் கெம்பர்

சுதந்திரம் பெற்று சில வருடங்களின் பின்னர் ஒன்றிணைந்த‌ சில பௌத்த மதகுருக்களையும் பொதுமக்களையும் கொண்ட கமிட்டியொன்று 400 ஆண்டுகளாக காலனித்துவத்தின் கீழ் பௌத்த மதத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை கலந்துரையாடுவதற்கு குழுமியது. இந்த கமிட்டி தாம் கலந்துரையாடிய கூட்டத்தின் முடிவில் ‘பௌத்த மதத்துக்கு இழைக்கப்பட்ட துரோகம்’ என்ற தலைப்பில் இரு தொகுதிகளாக ஒரு அறிக்கையையும் அதற்கான ஒரு சுருக்கத்தையும் வெளியிட்டது. இந்தச் சுருக்கமே இலங்கையர்களின் வாழ்க்கைமுறையில் பௌத்த மதத்தை நெறிமுறையாகவும் அரசியல்ரீதியிலும் செல்வாக்கு செலுத்தவைக்க பாடுபடும் தேசியவாதிகளுக்கு பாலபாடமாக மாறியது. தம்பையா அவர்களின் ‘பௌத்தம் வஞ்சிக்கப்பட்டதா’ என்ற நூல் இவ்வெற்றிக்கான‌ மனிதவிலை குறித்தான ஒரு அரசியல் பகுப்பாய்வாக எழுதப்பட்டிருக்கின்றது.

முரண்நகை என்னவென்றால் இந்த பௌத்த கமிட்டியின் அறிக்கை பௌத்த மதம் வஞ்சிக்கப்பட்டமைக்கான காரணம் அது அரசின் செயற்பாடுகளிலிருந்து அகற்றப்பட்டதாகும் என்ற முடிவுக்கு வரும் வேளையில் தம்பையாவின் கருத்து, அதற்கு மாறாக, பௌத்த மதம் வஞ்சிக்கப்பட்டதே அது அரச விவகாரத்தின் பகுதியாக மாறியமையாலாகும் என வெளிப்படுகின்றது. பௌத்த மதம் வஞ்சிக்கப்பட்டமை இரு கூறுகளாக வெளிப்படுகின்றது‍- முதலாவது, தமிழர்கள் மற்றும் சிங்களவர்களுக்கிடையிலான இனக்கலவரம் மற்றும் வன்முறையாகவும் இரன்டாவதாக, தம்பையா கூறுவது போல ‘கொள்கைவாத பௌத்ததில் காணப்படும் மதம் சார்ந்த மையக்கூறு மற்றும் அகவெழுச்சியானது தன்னை பெரும்பான்மையாகவும் ஒருபடித்தானதாகவும் கருதும் ஒரு அரசியல் வலியுறுத்தலின் பேரில் காணப்படும் ஒரு உட்பொருளால் தனியார்மயப்பட்டோ அல்லது உறிஞ்சப்பட்டோ போனதாகும்’ (பக்கம் 58-9)

இந்த அருமையான வாதத்தை முன்வைக்கும் தம்பையா அவர்கள் முதலாவது வஞ்சகமாக பார்க்கப்படும் தேசம், மதம் அல்லது ‘இனம்’ என்ற பேரில் இலங்கையின் அன்றாட அரசியல் வாழ்க்கையிலும் இனரீதியான வன்முறையிலும் பிக்குகள் கலந்து கொண்டமையைப் பற்றி எழுதுகின்றார். தம்பையாவின் கூற்றுப்படி 1958ல் நடைபெற்ற கலவரங்களுட‌னேயே பௌத்த மதமானது கிராமப்புறங்களில் பிக்குகளாலும் சாதாரண பொதுமக்களாலும் தானங்களை வழங்கியும் பெற்றும் பின்பற்றப்படும் மதத்திலிருந்து இராணுவமயப்பட்ட, ஜனரஞ்சக, போலியான பௌத்தமாக மாறிவிட்டது. இவர் ‘ஜனரஞ்சகமான’ என்ற பதத்தை பயன்படுத்துவதற்கான காரணம், நவீன ஊடகங்கள் மற்றும் புதிய கல்வி நிலையங்களை பயன்படுத்திய வசீகரமான பேச்சாளர்களாக இருந்த வல்பொல ராஹுல மற்றும் பன்னசார போன்ற தேரர்கள் பௌத்தமதத்தை விழுமியரீதியான பிரச்சாரத்தை விட அதிகமாக கலாசார உடைமையாகக் கொண்டு ஜனரஞ்சகப்படுத்தினர். அதனால் பௌத்தமதம் மேலும் போலியானதாக்கப்பட்டது. 70களிலும் 80களிலும் ராஹுல மற்றும் பன்னசார ஆகியோரிடம் பயின்ற பிக்குகளும் பொதுமக்களுமே நாட்டில் தேசிய மொழிகள், கல்வி, மக்கள் குடியேற்றம், தொழில்வாய்ப்பு மற்றும் அதிகாரப்பகிர்வு போன்ற சிறுபான்மை தமிழர்களை மேலும் ஒதுக்கிய கொள்கைகளை வகுப்பவர்களாக மாறினர். இக்காலகட்டத்தில் பௌத்த மதத்தை மேலாதிக்க, பேரினவாத எல்லைகளுக்கு கொண்டுசென்ற ‘மௌபிம சுரகிமே வ்யாபாரய’ போன்ற சீர்திருத்தவாத அமைப்புகளும் அதன் செயற்பாட்டாளர்கள் பிக்குகளுமான முருத்தெட்டுவே ஆனந்த மற்றும் மடிஹே பன்னசீஹ போன்றோர் பற்றிய புதிய பார்வையை இவர் தருகின்றார். இதன்மூலம் பௌத்த மதமானது தனது பண்பாட்டுநெறி, முக்திநெறியியல் மற்றும் தரநெறிசார் வழிமுறைகளிலிருந்து ஒரு தனிப்பட்ட சிக்கலாக மாற்றப்பட்டதோடு ஒரு தேசம் எவ்வாறு அபிவிருத்தி அடைய வேண்டும் மற்றும் சிங்களவர்களும் தமிழர்களும் தமக்கிடையே கடமைப்பாட்டுடன் நடக்க வேண்டும் போன்ற குறைந்தபட்ச பொதுமக்கள் கலந்துரையாடல்களிலிருந்தும் விடுபட்டிருக்கின்றது.

பௌத்த மதத்தின் இவ்விரு பகுதிகளையும் தொடர்புபடுத்தும் தம்பையாவின் முயற்சி கூர்மையானதாக இருப்பதோடு இது 40 வருடங்களாக கொள்கைவாத பௌத்தமும் அரசியல் பௌத்தமும் தம்மை எவ்வாறு தகவமைத்துக்கொண்டன என்பதை சிந்திக்கத்தூண்டுவதாக இருக்கின்றது. தற்காலத்தின் முக்கியமான சிக்கலொன்றை பேசத்தலைப்பட்டதற்காக தம்பையா அவர்கள் இலங்கையர்களுக்காகவும் தென்னாசியாவில் பௌத்தமதம் தொடர்பான தனது ஆய்வை போல சிறந்தவகையில் இவ்விடயத்தை கருத்தாக்கம் செய்ததற்காக மானிடவியலாளர்களுக்கும் அரும்சேவையொன்றை ஆற்றியிருக்கின்றார். சாதாரண வாசகர்களுக்காக எழுதப்பட்டுள்ள‌ இந்நூல் மிகப்பரந்த விடயமொன்றை பற்றி பேசாவிடினும் துறவிகளுக்கான புதிய பாணியிலான பணிகளை பின்வந்த தலைமுறைகளுக்கு கற்பித்ததில் முக்கிய பங்காற்றிய முன்னைய பௌத்த பல்கலைக்கழகங்கள் மற்றும் பிக்குகளை (இதனை எடுத்துரைக்க ராஹுல போன்றோரை பற்றிய போதுமான தகவல்களையும்) பற்றியும் பேசுகின்றார். ராஹுலவை பொறுத்தவரை அவரது செயற்பாட்டாளர் பணியானது வரலாற்றுரீதியாக அவர் மக்கள் தலைவராக இருந்த காரணத்தினாலாக இருந்தாலும் அது துறவியாக ஒருவரின் வாழ்க்கையில் எவ்வாறு இணைந்தது என்பது குறித்த பார்வை அவசியமாகின்றது. எவ்வாறு பொதுவாகவே பௌத்தர்கள் ‘போலியாக்கப்பட்ட’ பௌத்தத்தை கற்றார்கள்? எவ்வாறு இதில் ஊடகங்களும் கல்வி அமைப்பும் தாக்கம் செலுத்தின?

இந்நூல் அதிகமாக வரலாற்று ஆய்வில் கவனம் செலுத்தினாலும் தம்பையாவின் சிங்கள தேசியவாதம் மீதான பார்வை கோட்பாடு சார்ந்த அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது முக்கியமான அம்சமாகும். நூலின் அதிக பகுதியை கொண்டுள்ள முடிவுரையில் தம்பையா அவர்கள் அதிகாரத்தை வெறுமனே ஒற்றைக்கூறான விடயமாகவோ அதன் கட்டமைப்பை தீர்மானிக்கும் வகையிலோ அன்றி அதனை இறந்த காலத்திலிருந்து பொருத்திப் பார்க்கும்படி எழுதுகின்றார். இலங்கையின் வரலாறு மற்றும் தேரவாத சமூகங்களின் வரலாறு குறித்தான அறிகையின் பின்னணியில் கெப்(p)பெ(f)ரரின் கருத்தான இலங்கையின் இனமுரண்பாட்டுக்கான காரணம் ‘ஆழமாக ஊடுருவியுள்ள இருப்பியல்சார்ந்த தேசியவாத‌ சிங்கள பௌத்த கட்டமைப்பாகும்’ என்ற வாதத்தை எதிர்க்கிறார் தம்பையா (பக்கம் 171). அதற்கு பதிலாக இலங்கையின் அரசியல் உருவாக்கம் ‘நெகிழ்வுத்தன்மையான, இணக்கமான மற்றும் உள்ளீர்க்கக்கூடியதாகவும் இருப்பதோடு மட்டுமல்லாமல் போட்டித்தன்மையானதாகவும், குறுங்குழுவாத மற்றும் பிரிவினைவாதமும் கொண்டதாக இருப்பதாகவும் கூறுகின்றார் (பக்கம் 174). இலங்கையர்களுக்கு பல்தன்மையான‌ கடந்தகால வரலாற்றில் இதையும் ஒரு இலகுவான வாதமாக எடுக்கலாம் என்பதே தம்பையாவின் கருத்தாகும். இதை காண்பதற்கான உத்தி எவ்வாறு இக்கடந்த காலங்கள் வெவ்வேறு சூழ்நிலைகளில் கையிலெடுக்கப்பட்டன என்பதை தீர்மானிப்பதாகும்‍- இது தம்பையா கவனத்திலெடுக்க வேண்டிய விடயமாகும்.

ஸ்டீவன் கெம்பர்- பேட்ஸ் கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றுகிறார். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், பாகிஸ்தான், நேபாளம், பர்மா போன்ற நாடுகளில் மதம், தேசியம், நவீனத்துவத்தின் உருவாக்கம், அதன் தொழிற்பாடுகள் பற்றிய ஆய்வுகளை செய்து வருகிறார். இவர் The Presence of the Past, Rescued from the Nation: Anagarika Dharmapala and the Buddhist World (Buddhism and Modernity), போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு – ரஸ்மா ரஸ்மி