கரகாஸ்ஸின் லா வேகா மாவட்டத்தை சேர்ந்த ஒரு அமைப்பாளரும் புத்திஜீவியுமான ஒருவர் ஹியுகோ சாவேஸ் அவர்களுக்கும் பிரபல மக்கள் இயக்கத்துக்கும் இடையிலான இயங்கியல் உறவைப் பற்றி பேசுகிறார்.

கோர்டோ எட்கர் என்று பிரபலமாக அறியப்பட்டிருக்கும் எட்கர் பெரேஸ் சமீபத்திய வெனிசுவேலா வரலாற்றின் மிக முக்கிய வரலாற்றுத் தருணங்களில் பங்கு வகித்திருக்கிறார். கரகாஸோ (caracazo) முதல் 4F கிர்ச்சி மற்றும் 2002இல் சாவேஸை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வந்த ‘அரசியல் சதிக்கு எதிரான அணிதிரட்டல்’ என அந்த முக்கிய நிகழ்வுகள் நீளுகின்றன. பிரபல மக்கள் இயக்கத்தில் நன்கு அறியப்பட்ட ஒரு ஆளுமையான இவர் கரகாஸ்ஸின் (Caracas) 23 டி எனரோ (23 de Enero) மாவட்டத்தில் வளர்ந்தார். ஆனால் அவரது பெரும்பாலான சமூக செயற்பாடுகள் 23 டி எனரோ போன்ற ஒரு வறுமை நிரம்பிய மாவட்டமாகிய லா வேகாவில் (La Vega) தான் இடம்பெற்றிருக்கின்றன. எதிர்ப்புக் கிளர்ச்சிகள் மற்றும் அடிமட்ட மக்கள் அமைப்பாக்க செயற்பாடுகள் போன்றவற்றிற்காக பெருமிதம் கொள்ளத்தக்க ஒரு வரலாறை கொண்டது தான் லா வேகா மாவட்டமாகும். 60கள் மற்றும் 70களில் எட்கர் வாழ்ந்த மாவட்டமான லா வேகாவில் அவரை நாம் பேட்டி கண்ட போது அம்மாவட்டத்தை அவர் “புரட்சிகளுக்கான ஒரு பள்ளிக்கூடம்” என்று அழைத்தார். பிரபல மக்கள் இயக்கத்தின் பல்வகைப்பட்ட மாற்றங்களை பற்றி நினைவுகூறும் இந்த கலந்துரையாடலில் “கோர்டோ எட்கர்” வெனிசுவேலா புரட்சியின் போதான ஹியுகோ சாவேஸின் பாத்திரத்தையும் இதில் பகுப்பாய்வு செய்கிறார்.

கேள்வி : சில மையநீரோட்ட கதையாடல்களை பார்க்கும் போது சாவேஸின் எழுச்சிற்கு முன்பு எவ்வித போராட்டமும் இருக்கவில்லை என்ற பிம்பம் நமக்கு தோன்றலாம். ஆனால் உங்களை பொருத்தவரையில் சமூக செயற்பாடுகளில் உங்களுக்கு ஒரு பரந்துபட்ட அனுபவம் இருக்கிறது. நகர்ப்புற எதிர்ப்பு போராட்டங்களில் பங்குபெற்றுதல், கிளர்ச்சி இயக்கங்களுடன் இணைந்து பணி புரிதல், மேலாதிக்கத்திற்கு எதிரான கலாச்சார உற்பத்தியில் ஈடுபடுதல், மேலும் 1989 கரகாஸோ (Caracazo) எழுச்சி மற்றும் 1992 4F எழுச்சி என்று ஏராளமான போராட்டங்களில் உங்களுக்கு பங்குபற்றி போராடிய அனுபவம் இருக்கிறது. சாவேஸிற்கு முன்னரான பிரபல மக்கள் இயக்கம் பற்றி எமக்கு நீங்கள் ஏதாவது கூற முடியுமா?

பதில் : சமூகம் உச்சத்தில் கொதித்துக்கொண்டிருக்கும் தருணங்களில் பிரபல மக்கள் இயக்கமானது போராட்டத்தின் மூலம் பல வெற்றிகரமான கட்டங்களை கண்டிருக்கிறது என்பதை முதலில் நான் இங்கு கூறிக்கொள்ள வேண்டும். அத்தோடு ஓரளவு பின்னடைவுகளையும் சந்தித்துள்ளோம்.

இங்கு எமது வரலாற்றை நாம் சற்று நோக்குவோம். 60 மற்றும் 70 காலப்பகுகளில் நிகழ்ந்த கெரில்லா கிளர்ச்சியின் போது கரகாஸ் நகர் பிரபல மக்கள் இயக்கத்தின் தளமானது. குறிப்பாக லா வேகா பகுதியில் தொடர்ச்சியாக செயலாற்றி வந்தது. இங்கு லா வேகாவில் பன்டேரா ரோஜா (Bandera Roja) (அக்காலத்தில் இருந்த ஒரு புரட்சிகர கட்சி) CLP (பிரபல போராட்ட குழுக்கள்) எனும் சட்டரீதியான ஒரு முன்னணியை உருவாக்கிக்கொண்டது. அத்தோடு PRV (வெனிசுலா புரட்சிக்கான கட்சி) ரப்சுரா (Raptura) எனும் பெருந்திரளை உள்ளடக்கிய ஒரு முன்னணியையும் அது இங்கு கொண்டிருந்தது. அத்தோடு இறுதியாக OR (புரட்சிகர அமைப்பு கட்சி) என்ற அமைப்பும் அங்கிருந்ததோடு Socialist League என்பது அதன் சட்டம் சார்ந்த முன்னணியாகவும் இருந்தது. 1970களின் போது லா வேகா மாவட்டத்தில் காணப்பட்ட இவ்வியக்கங்கள் மற்றும் பரவலாக காணப்பட்ட அதிகார எதிர்ப்பு சூழலுக்கு மேலதிகமாக இங்கு சமூக அடித்தளத்தில் கிறிஸ்தவ இயக்கங்களும் அவற்றின் தீவிர தன்மையோடும் பிரபலமாகவும் இயங்கி வந்தன. அவை கிறிஸ்தவ விடுதலை இறையியல் கோட்பாட்டின் அடிப்படையில் நின்று சமூகத்தில் தமது பணிகளை மேற்கொண்டன.

இங்கு இருந்த முக்கியமான ஒருவர் தான் 1965இல் வந்த பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பாதிரியார் ஃபிரான்சிஸ்கோ வுய்டெக் (Francisco Wuytack). ரஃபாயல் கல்தேராவின் (Rafael Caldera) முதலாவது ஆட்சியின் போது [1969-1974] நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர் மீண்டும் ரகசியமாக நாடு திரும்பினார். அதற்கு சில ஆண்டுகளுக்கு பின்பு Carlos Andres Perezஇன் ஜனாதிபதி காலத்தின் போது [1974-1979] மீண்டும் ஒருமுறை நாடு கடத்தப்பட்டார். போராட்டக்களத்தில் இதற்கு முன்னர் பெருமளவு ஆர்வம் காட்டப்படாத விடயங்கள் பலவற்றை அவர் நடைமுறைக்கு கொண்டுவந்தார். மக்களின் சமய நம்பிக்கைகளை நடைமுறைப் போராட்டத்துடன் இணைப்பதை போராட்ட சமூகத்திற்கு அவர் அறிமுகப்படுத்தினார். இதன் மூலம் சமூகத்தில் உண்மையாகவே ஒரு அதிர்வை ஏற்படுத்தினார்.

ஒருங்கிணைப்புகள் மற்றும் செயற்பாடுகளின் விளைவாக 60கள் மற்றும் 70கள் மிகுந்த ஈர்ப்பை கொண்ட போராட்ட தசாப்தங்களாக இருந்தன. அக்காலப்பகுதியில் இம்மாவட்டம் உணர்வுபூர்வமான கொதி நிலையில் இருந்ததோடு பிரபல மக்கள் இயக்கமானது மக்களின் அன்றாட வாழ்க்கையின் அதிர்ச்சி மையமாய் விளங்கியது. உண்மையிலேயே அது அதிகார எதிர்ப்பை நோக்கிய ஒரு தீவிர மக்கள் இயக்கமாகத் தான் இருந்தது. 

பிறகு 1980களின் வருகையின் போது இயக்கத்தை விட்டு மக்கள் விலகி செல்லும் நிலையொன்று தோன்றியது. 1980களானது 1970களை போன்று உயிரோட்டமில்லாத ஒரு காலகட்டமாக இருந்த போதிலும் 1989ம் ஆண்டு பெப்ரவரியில் நடந்த “கரகாஸோ (Caracazo)” என்று பிரபலமாக அறியப்படும் நிகழ்வுகளானது பிரபல மக்கள் இயக்கத்தின் பொதுவான அந்த உறக்க நிலையை கலைத்துப் போட்டது. குவாரெனாஸ் (Guarenas) பகுதியில் இந்த பிரபல அதிகார எதிர்ப்பு கிளர்ச்சியை முதிலில் துவங்கி வைத்த அப்பிரதேசத்து மக்களுக்கு நீதி செலுத்தும் விதமாக இப்போராட்டமானது “கரகாஸோ” என்றல்லாமல் “குவாரெனாஸோ (Guarenazo)” என்று அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆகையால் கரகாஸோவானது உறக்க நிலையிலிருந்த தசாப்தத்திலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டது. பெப்ரவரி 27ம் திகதியன்று கார்லோஸ் அண்ட்ரேஸ் பேரேஸ் தனது இரண்டாவது ஜனாதிபதி பதிவியை [1989-1993] ஏற்றுக் கொண்ட போதே இக்கிளர்ச்சி வெடித்தது. அப்போது இருந்த பொருளாதார நிலை மக்கள் மீது பெரும் சுமைகளை சுமத்தியதோடு அது தீவிரமாகிக்கொண்டிருந்தது.

1970களின் நிகழ்ந்த உச்சகட்ட பொருளாதார வளர்ச்சியினை தமது நினைவில் கொண்டிருந்த பெரும்பான்மையான ஒரு மக்கள் தொகையின் மூலம் கார்லோஸ் அண்ட்ரேஸ் பேரேஸ் மீண்டும் ஜனாதிபதியாக தேர்வுசெய்யப்பட்டார். அதற்கு முன்பிருந்த செழிப்பான சூழல் தான் அவரது வெற்றிக்கு காரணமாக அமைந்தது. அவர் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே நவதாராளவாத கொள்கை சீரமைப்புக்களை செயல்படுத்தியதனால் இது ஒரு போலியான வாக்குறுதியாகவே எஞ்சியது. இந்த நிலைமையுடன் நாட்டில் ஏற்கனவே இருந்த பொருளாதார சீரழிவும் இணைந்ததன் விளைவாகவே குவாரெனாஸில் தொடங்கிய பிரபல மக்கள் எழுச்சியானது கரகாஸோவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கும் நிலை வரை சென்றது.

அந்த நாட்களில் பணிவான நடத்தை கொண்ட பொதுமக்கள் தான் தெருக்களை கைப்பற்றினர். அவற்றை நாம் நம்முடையதாக மாற்றிக்கொண்டோம். அபகரிப்பாளர்களிடம் இருந்து அபகரிக்கும் ஒரு முறையின் மூலம் நாம் எமது இருப்பை உறுதிப்படுத்திக்கொண்டோம். அது முழுவதும் தன்னிச்சையாக நடந்த ஒரு எழுச்சியாகும். எந்தக்கட்சியோ குழுவோ அதன் முன்னணியில் நின்று வழிநடத்தவில்லை. மக்களே அதன் முன்னணியில் இருந்தனர். மாவட்டங்களில் இருந்த எம் போன்ற மக்கள் தான் தமக்கு கிடைக்க வேண்டியதை மீளப் பெற்றுக்கொள்வதன் மூலம் நீதி செய்துகொண்டிருந்தார்கள். இடதுசாரியத்துடன் தம்மை அடையாளம் கண்டுகொண்ட பழைய கட்சி அமைப்புகள் இந்நிகழ்வுகளின் வேகத்திற்கு முன்னால் இயக்கமற்றுப் போயின. 

மக்கள் மையப்புள்ளியாக மாறி அரசியல் வர்க்கத்தினரையும் பணக்காரர்களையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த இரண்டு மூன்று நாட்களை பற்றியே நாம் இங்கு பேசிக்கொண்டிருக்கிறோம். அந்நாட்களை அரசின் கொடூரமான ஒடுக்குமுறைகள் தொடர்ந்ததோடு சுமார் நான்காயிரம் தொடக்கம் ஐந்தாயிரம் வரையான மக்கள் கொல்லப்பட்டதானது எம்மை பெரும் கோபத்தில் வெகுண்டெழ வைத்தது. ஆனால் அவை யாவும் எம்மை செயலிழந்து ஒதுங்கச் செய்யவில்லை. மாறாக அது பணக்கார அதிகார வர்க்கத்தினரை அச்சத்தில் ஆழ்த்தி நடுங்க வைத்தது. 

புரட்சிகரமான அந்த கொந்தளிப்பை பற்றி இருபது வருடங்கள் கடந்து சிந்தித்து பார்க்கும் போது இன்று அவ்வாறானதொரு எழுச்சிக்கான நிலைமைகள் இருக்கின்றனவா என்பதை நம்மிடம் நாமே கேட்டுக்கொள்கிறோம்.

பல்வேறு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு காரணங்கள் மற்றும் கொள்கைகளின் விளைவாக  எமது பொருள்சார் சூழ்நிலையானது 1989இல் இருந்ததை விட மோசமாகி இருக்கிறது என்பதே இன்றைய யதார்த்த நிலையாகும். ஆனால் உண்மை என்னவென்றால் இன்று முகங்கொடுத்து கொண்டிருக்கும் அனைத்து வேதனைகளுக்கும் முரண்பாடுகளுக்கும் மத்தியில் நாம் எமது விடுதலைக்கான எதிர்பார்ப்பை இன்னும் இழக்கவில்லை. மேலிருந்து கீழ் நோக்கி அமுலாக்கப்படும் கொள்கைகளை பொறுத்தவரையில் எம்முடைய கூட்டு செயற்திட்டமானது போதாமைகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் எம்மிடத்தில் எமது விடுதலைக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்கக்கூடிய செயற்திட்டமொன்று நிச்சயம் இருக்கிறது.

பெப்ரவரி 29, 1987 அன்றும் அதை தொடர்ந்த நாட்களும் மக்களாகிய நாம் வீதிகளில் அலைமோதியதானது நவதாராளவாத கொள்கைகளை நாம் நிராகரிப்பதனை வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் அன்றாட பயன்பாட்டு சாதனங்கள் மற்றும் வணிகப்பொருட்களை கொண்டமைந்த வாக்குறுதியளிக்கப்பட்ட நிலங்கள் என கூறப்படும் விடயங்களை நாம் அணுகிப்பார்க்க முடியுமாகவும் இருந்தது. நல்லவை என்றும் விரும்பத்தக்கவை என்றும் மேலாதிக்கம் செலுத்தும் சமூகம் தமது பிடியில் வைத்திருந்தவற்றை அணுகிப் பார்க்கும் ஒரு முயற்சியாகவே அது இருந்தது. நாம் பசியோடு இருந்ததால் முதலில் உணவு பண்டங்களை நோக்கிச் சென்றோம். பாதணிகள், குளிர்சாதன பெட்டிகள் மற்றும் தொலைக்காட்சிகள் என்பன பிறகு வந்தவை. கடுமையான சூழ்நிலைகள் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் விதிக்கப்பட்டிருக்கும் இன்றைய சூழ்நிலையில் நம்மில் பலர் இன்னும் பெரியதொரு செயற்திட்டத்தை பற்றிப்பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

சாவேஸ்… சாவேஸ் பற்றிய நினைவுகள் மாத்திரம் தான் வெள்ளத்தில் கரைந்தழிந்து போகாமல் ஒரு அணைக்கட்டைப் போல இவற்றை வைத்துக் கொண்டிருக்கிறது. அவரை ஒரு கடவுளாக மாற்றி விடக் கூடாது என்ற எச்சரிக்கையை மனதில் வைத்துக் கொண்டு தான் நான் இதனை சொல்கிறேன். தேர்தலில் வெற்றி பெறக்கூடிய ஒரே இறந்த மனிதர் அவர் தான். அதனை விடவும் முக்கியமாக நம் அனைவருக்கும் ஒற்றுமையையும் விடுதலைக்கான எதிர்பார்ப்பையும் உத்தரவாதப்படுத்தும் ஒரே இறந்த மனிதரும் அவர்தான். கம்யூன் அமைப்புகள் (the commune) மூலம் விடுதலைக்கான வழி இருப்பதாக அவர் நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார். சாவேஸ் உடல் ரீதியாக நம்மிடமிருந்து ஒழிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் அவரது சிந்தனைகள் யாவும் இன்று நம்முடையதே. அவர் எப்போதும் மக்களின் பக்கமே இருந்ததன் விளைவாக இன்று மக்களினால் அவர் உள்வாங்கப்படிருக்கிறார். அவர் நிச்சயமாக நம்மில் ஒருவராகவே இருந்தார்.

கேள்வி : 1990களில் கரகாஸின் (Caracas) மாவட்டங்களில் என்ன நடந்தது?

பதில் : 1990களில் மாவட்டத்திலிருந்த ஒன்றுகூடுமிடங்கள் (Asambleas de Barrio) மக்கள் ஒருங்கிணைவதற்கான தளங்களாக மாவட்ட அளவில் வளர்ச்சியடைய ஆரம்பித்தன. ‘லிபர்டேரியன்’ (ஸ்பானிய மொழியில் Libertarian என்பது Anarchism – அரசின்மையையே குறிக்கும்) ஆவதற்கான இலட்சியங்கள் அவற்றினுள் ஊடுபரவி இருந்ததுடன் மக்களுக்கிடையிலான அதன்பாற்பட்ட புதிய தொடர்புகளும் அங்கு தோன்ற ஆரம்பித்தன.

இந்த மாவட்ட ஒன்றுகூடல் தளங்களில் (Asambleas de Barrio) விவாதங்கள் அனைத்தும் கீழ் மட்டத்திலிருந்துதான் இயங்கின. மக்கள் தமது பிரச்சினைகள் பற்றி அங்கு சரி நிகர் சமானமாக தம்மோடிருக்கும்   ஏனைய மனிதர்களுடன் கலந்துரையாடினார்கள். நாம் அங்கு பிரச்சினைகளுக்கான கூட்டுத் தீர்வுகளைத் தேடினோம். அங்கு மையப்புள்ளியை ஆட்கொண்டிருந்தது மாவட்டங்களில் வசித்த மக்களே அன்றி பழைய அரசியல் கட்சிகளல்ல. அரசியல் கட்சிகளினால் மக்கள் மீது திணிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் அனைத்தும் புதியதோர் நடைமுறையின் மூலம் உடைத்தெறியப்பட்டு மக்கள் அனைவருக்கும் சமமாகப் பங்குபற்றுவதற்கான வாய்ப்பு உருவானதன் விளைவாக இந்த இயக்கம் தீவிரமாக வளர்ச்சியடைந்தது. CTUக்கள் (மாவட்டத்தின் குடியிருப்பாளர்களுக்கு நில உரிமைகள் வழங்கும் உள்ளூர் குழு) மற்றும் Mesas Técnicas de Agua (நீர் பெற்றுக்கொள்ளும்  ஏற்பாடுகளுக்கான உள்ளூர் குழு) போன்ற புரட்சியின் ஆரம்ப நாட்களில் தோன்றிய குழுக்களுடனான அனுபவம் மிக முக்கியமானதொன்றாக இருந்தது.

அதே காலகட்டத்தில் இராணுவ முகாம்களில் அரசாங்கத்திற்கு எதிரான ஒரு கிளர்ச்சி அமைப்பொன்று வளர்ந்து வருவது பற்றிய செய்திகளையும் நாம் கேள்விப்பட ஆரம்பித்தோம். 1970களின் மத்தியில் இருந்தே முகாம்களுக்குள் புரட்சிகர செயற்பாடுகள் நடைபெறுவது பற்றிய செய்திகள் கிடைத்துக்கொண்டிருந்ததன் விளைவாக இது எமக்கு பெரும் வியப்பூட்டக்கூடிய ஒன்றாக இருக்கவில்லை என்பதோடு கிட்டிய நிகழ்காலத்தில் பிரபலமானதொரு இராணுவ எழுச்சியை நாம் எதிர்பார்த்தவாறே இருந்தோம்.

1960கள் முதல் 70களின் பின்னரும் இயங்கி வந்த FALN எனும் வெனிசுவேலாவின் ஒரு கெரில்லா அமைப்பின் தளபதியான டக்ளஸ் ப்ராவோ இந்த சாத்தியப்பாட்டைப் பற்றி பேசியிருக்கிறார். 1960களின் கிளர்ச்சியில் பங்குபற்றிய அரசியல்வாதி மற்றும் கோட்பாட்டாளரான அல்ஃபிரடோ மனையிரோவும் (Alfredo Maneiro) இதைப்பற்றி பேசியிருப்பதோடு இராணுவத்தினுள் PRVயின் ஊடுருவலை ஏற்பாடு செய்த ஒரு பல்கலைகழக பேராசிரியர்) க்லெபர் ரெமிரெஸ்ஸும் (Kleber Ramirez) இதை எதிர்வுகூறி இருந்தார். பிற்காலத்தில் சாவேஸ் தலைமை வகித்த பொலிவாரியன் அமைப்பின் நிறுவனர் க்லெபர் தான். க்லெபரும் அவரது மக்களும் இராணுவ முகாம்களுக்குள் ஊடுருவினார்கள். நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் இவ்வமைப்பானது வெறுமனே சாவேஸினால் மாத்திரம் உருவாக்கப்பட்டதொன்றல்ல. மாறாக ஏற்கனவே அங்கு உருவாகி இருந்த ஒரு அமைப்புடன் தான் சாவேஸ் செயற்பட்டார்.

மாவட்ட ஒன்றுகூடல் அமைப்புகள் அதன் உச்சகட்ட செயற்திறனோடு களத்தில் செயற்பட்டு, பிரபல மக்கள் இயக்கமானது மீண்டும் ஒருமுறை எழுச்சியை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த 1992ம் ஆண்டில் தான் சாவேஸின் ஆடுகளப் பிரவேசம் நிகழ்கிறது. உண்மை என்னவென்றால் கிளர்ச்சி ஆரம்பித்த போது எம்மில் சிலர் பொதுமக்களாக அதில் பங்கெடுத்திருந்தாலும் 1989 (கரகாஸோ) படுகொலையை முன்னெடுத்தது இராணுவப்படையினர் தான் என்ற காரணத்தினால் சமூகத்தின் பெரும்பகுதியான மக்கள் அதனை சந்தேகத்துடனேயே பார்த்தனர்.

எவ்வாறாயினும், சாவேஸும் அவரோடு நின்ற மக்களும் தோற்கடிக்கப்பட்டு அவர்கள் சரணடைவதற்கு 2 நிமிடங்கள் தொலைக்காட்சியில் நேரம் வழங்கப்பட்ட போது அவ்விடத்தில் மக்கள் கண்டது எம்மைப் போன்று “மக்களில் ஒருவராக” இருந்த ஒரு மனிதரைத்தான். அவரது “பொர் அஹோரா (por ahora)” – “இப்போதைக்கு” என்பது (கிளர்ச்சிக்கு பின்பு சாவேஸ் தொலைக்காட்சியில் இரண்டு நிமிடங்கள் வந்து தனது தோல்வியை ஏற்றுக் கொண்டதோடு போராட்டம் தொடரும் என்பதை சுட்டிக்காட்டிய நிகழ்வை குறிக்கும்) அது எம்மை உருக்கியது. எம்மை அதிர்ச்சியடைய வைத்தது. மக்கள் தம்மை அவருடன் இணங்கண்டு கொள்வதற்கென ஒரு செயல்முறை இருந்தது. சாவேஸுடைய புரட்சிகர கருத்துக்கள் அவர் சிறையினுள் இருந்த சந்தர்ப்பத்தில் மக்களிடையே பிரபலமானது. இரண்டு வருடங்கள் கழித்து சாவேஸ் சிறையிலிருந்து வெளியே வந்த போது புதியதொரு மாற்றத்தை நோக்கி பயணிப்பதற்கான சூழல் அங்கு உருவாகியிருந்தது.

நீங்கள் ஏற்கனவே அறிந்தது போல நான் ஒரு அனார்கிஸவாதி தான். அதுவும் நான் கரீப் (Caribe) [ஸ்பானிய காலனித்துவவாதிகளின் வருகையின் போது பெரும்பாலான வெனிசுலா எல்லையினுள் குடியேறி இருந்த புரட்சிகர பழங்குடி] அனார்கிஸவாதி என்பதால் வரலாற்றின் ஓட்டத்தை யாரும் தனியாளாக திசைமாற்றம் செய்ய முடியும் என்பதை நான் நம்புவதில்லை. எப்படியாயினும் மக்களுக்கான பல்வேறு பிரபல முன்னெடுப்புகளும் திட்டங்களும் முன்வருவதற்கான ஊக்க சக்தியாக அவர் இருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. பிரபல மக்கள் இயக்கமானது வேகமாக சில வருடங்களுக்கு பின்பு சாவேஸ் தேர்தல் பாதையையும் மிராஃப்லோர்ஸ் Miraflores [ஜனாதிபதி மாளிகை] “கோட்டையை கைப்பற்றும்” சாத்தியப்பாடுகளையும் தெரிவு செய்தபோது மக்கள் இயக்கம் முன்பிருந்ததை விடவும் அதிகமான ஆதரவை அவருக்கு வழங்கியது. இதனடிப்படையில் நான் கூற நினைக்கும் விடயமொன்று இருக்கிறது. சாவேஸ் மக்களை புரிந்து கொண்டார் என்று கூறுவது பிழையென்று நான் நினைக்கிறேன். சாவேஸ் வெறுமனே மக்களையும் அவர்களது செயற்பாட்டு திட்டங்களையும் மாத்திரம் புரிந்துகொள்ளவில்லை. அதற்கு மாறாக சாவேஸ் தன்னளவில் மக்களாகவே இருந்தார். அவரினூடாக மக்கள் ஒரு கண்ணாடியில் தம்மைக் கண்டு கொண்டனர்.

கேள்வி : வெனிசுவாலாவை மாற்றுவதற்கு அழைப்பு விடுத்து புரட்சியை உருவாக்கிய ஒரு மீட்பராகவே சாவேஸ் பொதுவாக நோக்கப்படுகிறார். அப்படியான புரிதல் மக்களின் கூட்டு முயற்சியை நிச்சயமாக அழித்துவிடுகிறது. உண்மையில் சாவேஸுக்கும் மக்களுக்கும் இடையில் நெருக்கமானதும் நெகிழ்வானதுமான ஒளிவுமறைவில்லாத ஒரு உறவே இருந்தது. மக்கள் அவரது நடவடிக்கைகளில் இடையீடு செய்து விளக்கங்கள் கோரினர்; அவர் விடும் பிழைகளை திருத்தியதோடு 2002ஆம் ஆண்டு அவரை வீழ்த்த மேற்கொள்ளப்பட்ட சதிப் புரட்சியின்போது அவரைப் பாதுகாத்தனர். மக்களுக்கும் சாவேஸுக்கும் இடையிலான உறவை நீங்கள் எப்படி புரிந்து கொள்கிறீர்கள்?

பதில் : நீங்கள் சொல்வது உண்மை தான். சாவேஸ் ஜனாதிபதியாக பதவிக்கு வந்த போது ப்வேபிலோ பழங்குடி மக்கள் பிரதானமான பங்கை வகித்தனர். அவர்களுக்கு முன்னணி பாத்திரம் வழங்கப்பட்டது. ஆனால் நாம் சற்று பின்னோக்கி சென்று பார்க்கலாம். 1990களில் “வரலாற்றின் முடிவு” பற்றிய உரையாடலானது அரசியலிலும், பல்கலைகழக ஆய்வுகள் மற்றும் ஊடகங்களிலும் பெருமளவில் பரவியிருந்தது. பான்ஸே யுனிக்கின் (pensee unique) [ நவதாராளவாதத்தை ஒரே தீர்வாக முன்வைத்தலை குறிக்கும் சொல் ] மேலாதிக்கம் பரவியிருந்த காலகட்டமும் அதுதான். 

தரைக்கு கீழே கொதித்துக்கொண்டிருந்த அப்படியானதொரு தெளிவான பாலைவன சூழலில் தான் சாவேஸ் தோன்றி பொலிவாரியன் கொள்கையை உயர்த்திப் பிடித்தார். அப்படி செய்வதனூடாக “வரலாற்றின் முடிவு” போன்ற கருதுகோள்களை ஓரம்கட்டிவிட்டு வரலாற்றை நிகழ்காலத்தின் ஒரு அங்கமாக மாற்றினார். யதார்த்தத்தில் சாவேஸ் இப்பிராந்தியத்தில் பிரதான பாத்திரமொன்று வகித்ததைத்தான் நாம் காண்கிறோம். அதே நேரத்தில் மக்களும் புலப்படக்கூடிய அரசியல் தன்னிலைகளாகவும் அரசியல் பாத்திரங்களை வகிக்கக்கூடியவர்களாவும் ஆனதை காணமுடியுமாக இருந்தது. நிச்சயமாக அங்கு முரண்கள் காணப்பட்டன தான். மக்கள் சாவேஸை இடையீடு செய்து அவரிடம் விளக்கங்கள் கோரினர். அவர் பிழை விட்ட நேரங்களில் அவரை அவர்கள் திருத்தினர். மக்களுக்கும் மிராஃப்லோர்ஸில் (அரச மாளிகை) இருப்பவருக்கும் இடையில் ஒரு பொதுவான இலக்கு பகிரப்பட்டிருக்கும் செயற்பாட்டில் இவை அனைத்தும் எதிர்பார்க்கப் படக்கூடியவை தான்.

உங்களுக்கு ஒரு உதாரணம் தருகிறேன். கம்யூன் அமைப்பு பற்றிய சிந்தனையை சாவேஸ் எமது செயல்திட்டத்தின் உள்ளீடாக வைத்தார். கம்யூன் அமைப்பு என்பது அனார்கிஸ உலகப்பார்வையில் இருந்து வருவதோடு காலனித்துவத்திற்கு முந்திய எமது வரலாற்றில் அதற்கென்று ஒரு அடிப்படையும் உள்ளது.அது மேலிருந்து கீழ் நோக்கி வரும் படிநிலையை கொண்ட அமைப்பல்ல. மாறாக கீழிருந்து, அடிமட்ட மக்களிடமிருந்து தோற்றம்பெற்ற அவர்களது முன்மொழிவாகும். தொடர்பாடல் திறன் மிக்க ஒருவரான சாவேஸ் சிறப்புரிமைகளும் செல்வாக்கும் மிக்கதோர் பீடத்தில் இருந்து கொண்டு, மக்கள் சுயமாக தமது விடுதலையை சாத்தியப்படுத்தும் பொருட்டு அதற்கான கம்யூன்களை அமைக்கும் செயன்முறையை நோக்கி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதனைத் தொடர்ந்து கம்யூன் அமைப்பு பற்றிய எதிர்பார்ப்பு மக்களின் பொதுக் கற்பனையில் வளர ஆரம்பித்தது. உண்மையான கம்யூன் சார்ந்த அனுபவங்களும் யதார்த்தமாய் அவற்றைத் தொடர்ந்தன. எவ்வாறாயினும், இதற்கு முரணாக சாவேஸ் நிறுவன ரீதியான கட்டமைப்பை பலப்படுத்தினார். கம்யூன் அமைப்புகளுக்கு எதிர் நிலையில் அது இருந்தது. அது ஒரு முரண்பாடாகவும் இருந்தது.

சோவியத் யூனியனில் 1920ம் ஆண்டு க்ரொபொட்கின் லெனினுக்கு எழுதிய கடிதம் மிகவும் பிரபலம் வாய்ந்தது. (சாவேஸ் அந்த கடிதத்தை ஒரு பொதுக்கூட்டத்தின் போது மேற்கோள் காட்டினார்) செயல்திட்டமானது மக்களது கைகளில், பொதுச்சபைகளில் அல்லது சோவியத் சபைகளின் கைகளிலோதான் இருத்தல் வேண்டும்.  இல்லாவிட்டால் புரட்சி என்பது தோல்வியடைந்த ஒன்றாகவே இருக்கும் என்று அவர் அதில் குறிப்பிடுகிறார். சாவேஸும் தனது வாழ்நாளில் கம்யூன்களுக்கும் அரசியலமைப்பு அதிகாரத்திற்கும் இடையிலான தெளிவான முரணை புரிந்து கொண்டார். அவர் ஒன்றிலிருந்து மற்றொன்றிற்கு ஊசலாடிய படி இருந்தார். எப்படியோ இறுதியில் அவர் கம்யூனினதும் மக்களினதும் தரப்பிலேயே நின்றார் என்று தான் நான் கூறுவேன்.

இருந்தபோதிலும், மக்களுக்கான ஒருவராக இருந்த சாவேஸிடம் இம்முரண்பாடு இருந்த அதே சந்தர்ப்பத்தில் மக்களும் அதிகாரம் பற்றிய இந்த மேலாதிக்க கருத்துக்கு  இரையாகியதை நீங்கள் கவனித்தல் வேண்டும். அதிகாரம் என்பது ஆட்சி பீடங்களில் இருக்கும் ஒரு விடயம் என்பதே அவர்களது புரிதலாகும்.

மாரக்சிய-லெனினிய அடிப்படை கோட்பாடும் கூட ஜனாதிபதி மாளிகையை (அரசை அல்லது அதிகார பீடத்தை) கைப்பற்றி அதனைக் கட்டுப்படுத்துவது தான் அடிப்படையான பிரச்சினை என்று அனுமானித்துக் கொள்கிறது. இந்த வகையில் மக்கள் அரசு இயந்திரத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை என்பது தெளிவான ஒன்றாகும். ஒருவேளை, அவர்கள் அவ்வகைப்பட்ட நடவடிக்கைகளில்  ஆர்வமில்லாமல் இருந்திருக்கலாம்.  ஏனெனில், அரசியல் அதிகாரத்தை ஒரு கட்டிடத்திற்குள் அடங்கியிருக்கும் ஒன்றாக மக்கள் புரிந்து கொள்ளாமல் இருந்திருக்கக் கூடும்.

அதனால் எமது கூட்டு திட்டத்தின் சாரம்சமானது “கம்யூன் அல்லது ஒன்றுமில்லை” என்ற பரீட்சார்த்த நடைமுறை, அனுபவம் சார் செயற்பாட்டினுள்ளும் மற்றும் அடிமட்டத்திலிருந்து ஆரம்பித்தல் எனும் அம்சத்திலும் தான் தங்கியிருந்தது. சில போது எமக்கு அனுகூலமாகவும் சிலபோது பிரதிகூலமாகவும் மாறும் ஒரு மக்கள் அதிகாரத்தின் நியதிகளை நம்பித்தான் நாம் இயங்க முடியும். மிக முக்கியமாக நாம் முதலாளித்துவம் மற்றும் அரசு சார் மேலாதிக்க அதிகார உறவுகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் கம்யூன் பற்றிய எமது முன்மொழிவினில் உறுதியாக இருந்தோம். புரட்சியை பிரதிபலிப்பவர்களாக நாம் இருத்தல் வேண்டும் என்ற விடயத்தை நாம் விளங்கிகொள்ள வேண்டும். சமூகத்திற்கான பொது சபைகளையோ கம்யூன்களையோ கட்டளை மற்றும் தீர்ப்பாணைகள் மூலம் திணிக்க முடியாது என்பதை பரவலான எமது அனுபவங்களின் அடிப்படையில் அறிந்துகொண்டோம். எமது வேலைத் திட்டமானது சுய விடுதலைக்கானதாகும். நாம் என்ன செய்ய வேண்டும், எப்படி எம்மை ஒழுங்கமைத்துக் கொள்ள வேண்டும் என எமக்கு யாரும் கட்டளைகள் இட முடியாது.

இது ஒரு சுய விடுதலைக்கான திட்டம் என்ற அடிப்படையில் நாம் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். ஏனென்றால் புரட்சியானது தனக்குள்ளே பாரிய பிரச்சினைகளை உள்ளடக்கியிருந்தது. முதலாவதும் முக்கியமானதுமாக கலாச்சார பிரச்சினை தான் இருந்தது. சில வரட்டுத்தனமான கோட்பாட்டாளர்கள் கூறுவது போல அது அடிப்படையில் ஒரு பொருளாராதார பிரச்சினையல்ல. தற்போதைய பொருளாதார உறவுகள் முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டுமென்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் புரட்சியென்பது ஒரு கலாச்சார பிரச்சினையாகவே இருக்கிறது. மக்கள் முகவர்களாகும் போதும் அவர்களது வாழ்க்கையின் மையமாக அவர்களே மாறும் போது மாத்திரம் தான் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அடைய முடியும்.

கேள்வி : நீங்கள் வெனிசுவேலாவின் வரலாற்றை வைத்து விளக்கிக்காட்டியதை போன்று மக்கள் இயக்கத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க முடியும் என்பது தெளிவு. இந்த நாட்டில் இப்போது இடதுசாரிகள் மற்றும் மக்கள் இயக்கம் ஆகியன என்ன நிலைமையில் இருக்கின்றன என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில் : முதலில் ஒரு முக்கியமான உண்மையை நாம் இங்கு ஏற்றுக்கொள்ள வேண்டும். செழிப்பானதொரு பொருளாதார நிலை இருந்தபோது தான் இந்த புரட்சி உருப்பெற்றது என்பதுதான் அந்த உண்மை. இயற்கை வளங்கள் நீக்கமற நிறைந்த ஒரு நாடு தான் வெனிசுவேலா என்பதை நினைவில் கொள்ளுங்கள். எண்ணை வளத்தின்  உடைமையும் நிர்வாக உரிமையும் அரசிடமே இருப்பதன் விளைவாக அது இங்கிருக்கும் அரசியலில் ஆழமான  பாதிப்பு செலுத்துகிறது. வெனிசுவேலாவில் ஆரம்பத்திலிருந்தே ‘சார்ந்திருக்கும் பண்பு கொண்ட’ (client) ஒரு அரசியல் நடைமுறை காணப்பட்டது. 1998இல் சாவேஸ் தெரிவாகி வருவதற்கு முன்பிருந்த அடேகோ (Adeco) கட்சியின் [Accion Democratica] அரசாங்கங்களில் இந்த மக்கள்விரோத நடைமுறைக்கு ஒரு முக்கியமான பங்கு இருந்தது.

பொலிவாரியன் புரட்சியானது மக்களை ஆரம்ப காலகட்டத்திலேயே அதிகார மயப்படுத்தியது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் சமகாலத்தில் பழைய ‘சார்ந்திருக்கும் வாடிக்கை’ அரசியல் நடைமுறைகளை அது இன்னும் ஸ்தீரமடைய செய்ததன் விளைவாக அவை பிரபல மக்கள் இயக்கத்தினுள்ளும் ஊடுருவும் நிலை தோன்றியது. இதன் விளைவாக மக்கள் இயக்கமானது இன்னொன்றை சார்ந்திருக்கும் நிலை அதிகரித்து அதன் சுயாதீன இயக்கம் குறைவடைந்தது.

உண்மையில், ஓரளவு பண செழிப்பு இருந்த காலப்பகுதியில் நடாத்தப்பட்ட ஒரே புரட்சி இது என்பதால் அது சார்ந்த விடயங்கள் அனைத்தும் இன்னும் கடினமானதாக மாறுகின்றன. இறுதியில் மக்கள் தமது தேவைகளுக்கான வளங்களை அரசிடமிருந்தே எதிர்பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது மக்களின் ஆக்கத்திறனையும் செயலூக்கத்தையும் மட்டுப்படுத்துவதோடு மக்கள் இயக்கத்தை உள்ளிருந்தே பலவீனமடையச்செய்யும் நிலையையும் உருவாக்கும். அரசிடம் தங்கி வாழ்தல் சுதந்திரமான அமைப்பாக்கத்துக்கு தடையாகவே இருந்தது. மேற்சொன்ன எல்லாவற்றுக்குமான விலையைத் தான் நாம் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறோம்.

 இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. ஆனால் அது வெனிசுலாவிற்கு மட்டுமே உரிய பிரச்சினை ஒன்றல்ல. அதுதான் நிறுவனங்கள் பற்றிய பிரச்சினை. கட்சிகள், அரச அலுவலகங்கள் மற்றும் அமைச்சகங்கள் இவற்றையே நான் நிறுவனங்கள் என்று அழைக்கிறேன்.  நிறுவனங்கள் அனைத்தும் அடிப்படையில் தமது பாதுகாப்பை உறுதிசெய்வதும் மக்களது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருப்பதுமான ஒரு தர்க்கத்தின் கீழ் தான் இயங்கி வருகின்றன.

அடிப்படையில், நிறுவனங்களில் மேலோங்கி இருக்கும் இயல்பு புரட்சிகரமானதல்ல. மாறாக அது சீர்திருத்தவாதமாகும். மறுதலையாக நிறுவனங்களையே தமது மீட்சிக்கான அமைப்பாக மக்கள் நோக்குகின்றனர். அதன் விளைவாக நிறுவனங்கள் புரட்சியை வழி நடத்தும் என்ற அவர்களது நம்பிக்கை பொய்யாகும்போது அவர்கள் ஈடுபாடற்றவர்களாக மாறுகின்றனர். மக்களை இன்னும் அதிகமாக அரசை சார்ந்திருக்கவேண்டிய சூழலை உருவாக்குவதுடன் இதன் விளைவாக அவர்களின் ஆக்கத்திறனுக்கு இடையூறாகவும் இயக்கத்தின் ஒருங்கிசைவான வளர்ச்சிக்கு பாதிப்பாகவும் அமைந்துவிடுகிறது. வெனிசுவேலாவில் இதுதான் நடைபெற்றுள்ளது. இதனை தடுத்து நிறுத்த நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

புரட்சியை இன்னும் தீவிரமானதாக மாற்ற வேண்டும் என்பது அத்தியாவசியமானது. இதற்கான அர்ப்பணிப்பு நிறுவனங்களில் இருக்கும் அனேகமானோருக்கு இல்லை என்பதே யதார்த்தமாகும். அவர்கள் வெறுமனே ஒரு சீர்த்திருத்தை நோக்கி செயற்படுவதிலேயே ஈடுபாடு காட்டினார்கள். ஆனால் நம்முடைய நாட்டின் சூழலை பொறுத்தவரையில் அது முற்றிலும் அபத்தமான ஒன்றாகும். சீர்த்திருத்தவாத மாற்றம் என்பது இங்கு சாத்தியமில்லாதது. அவர்கள் தமது பதவிகளை தக்கவைத்துக் கொள்வதில் ஆர்வமாக இருப்பதோடு நடப்பில் இருக்கும் அநீதியான யதார்த்த நிலையுடன் தங்களை பிணைத்து கொண்டும் இருக்கின்றனர். அந்த நிறுவனங்களில் மேலதிகமாக என்ன இருக்கிறதென்று பார்க்கும் போது நாம் அதில் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய சாவிஸ்டா எனும் ஒரு வலதுசாரியத்தையே காண்கிறோம். இதன் விளைவாக இடதுசாரியமும் மக்கள் இயக்கங்களும் அந்த அதிகாரப் பரப்புகளில் பிரச்சினைக்குரியவர்களாகவே பொருள் கொள்ளப்படுகின்றனர்.

நிறுவனங்களின் பிரச்சினையானது இன்றும் யதார்த்தத்தில் தொழிற்பட்டு கொண்டிருக்கும் காலனித்துவத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டதாகும். காலனீய நீக்கம் என்பது முக்கியமான ஒன்று என்ற கருத்தை என்ரிக் டஸ்ஸலுடன் (Enrique Dussel) பகிர்ந்துகொள்பவர்களில் நானும் ஒருவன். இடதுசாரியம் மீண்டும் மீண்டும் என்ன செய்கிறதென்றால் எமக்கு எவ்வித தேவையும் இல்லாத அமைப்பு மாதிரிகளையே முன்வைக்கிறது.

இருந்தபோதிலும், கம்யூன் என்பது இவற்றிலிருந்து வித்தியாசமான ஒன்றாகும். கம்யூன் என்பது எமது திட்டமாகும், அது “காலனித்துவத்திற்குற்பட்ட” ஒரு முன்மொழிவு கிடையாது. ஏனென்றால் அது பாரிஸ் கம்யூன் (Paris Commune) போன்ற வரலாற்றுப் பரிசோதனை முயற்சிகளிலிருந்து வருவதோடு அதனை விடவும் முக்கியமாக ஸ்பானியர்கள் வருகை தருவதற்கு முன்பு இங்கு காணப்பட்ட சமூகங்களாக ஒன்று கூடும் முறைமைகளிலும் அதற்குரிய ஆழமான வேர்கள் உள்ளன. எமக்கு ப்லெக் க்யூம்ப்ஸ் (black cumbes) [வெனிசுவேலாவில் காணப்பட்ட கருப்பின மக்களின் குடியேற்றங்கள்] அமைப்பு முறைகளுடனும் ஒற்றுமைகளை காண முடியும். நாம் எப்போதுமே எமது எல்லைகளுக்கு வெளியே உள்ளவைகளைத் தான் தேடிக்கொண்டிருக்கிறோம்.

கேள்வி : தற்போது இருக்கும் நெருக்கடியிய்லிருந்து வெளியேறுவதற்கு காலனிய நீக்க செயல்முறையொன்று அவசியம் என்று நீங்கள் கூறுகிறீர்களா?

பதில் : ஆம் அதுதான் வெளியேறும் வாசலுக்கான திறவுகோல். நாம் எம்மைக் கண்டு உணர்தல் வேண்டும். நாம் எம்மை மேற்குலகின் கண்ணாடியினுள் பார்ப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கண்டுபிடிப்பே அல்லாதவை பற்றியும் கண்டுபிடிக்கும் வரை இன்னும் காத்திருப்பவை பற்றியும் கலியோனோ பேசி இருக்கிறார். எமது நினைவுகள் அழிக்கப்பட்டிருக்கின்றன. சிமரோனெஸ்களின் (cimarrones) [தப்பித்து வந்த அடிமைகள்] வரலாறு பற்றியோ பழங்குடி மக்களை பற்றியோ அல்லது அவர்கள் எமது கலாச்சாரத்திற்கு வழங்கியவை பற்றியோ மக்களுக்கு எதுவும் தெரியாமல் இருப்பதற்கு அதுவே அடிப்படையான காரணம். இறுதியில் நாம் எமது கலாச்சாரத்தை பற்றியும் எமது வேர்களை பற்றியும் அறிந்துகொள்ளும் போது அது புதியதொரு விடயத்தை வெளிக்கொண்டு வரும்.

நாம் கடந்த 500 வருடங்களாக தூண்டப்பட்டதோர் ஞாபக மறதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறோம். அது மாத்திரமன்றி எமது அரசியல் செயற்பரப்பை மேற்கின் அரசியல் வடிவங்கள் தான் தீர்மானித்துக் கொண்டிருக்கின்றன.

“எமக்கான உலகத்தை பற்றிய ஒரு புதிய கற்பனாவாதத்தையும் புதிய நிறுவனங்களையும் நாம்தான் இந்தக் கண்டத்தில் உருவாக்கிட வேண்டும். பழைய கண்டத்தின் நிறுவனங்களை ஏற்றுக்கொள்வதன் மூலம் குறை முதிர்ச்சி நிலையில் வளர்ந்து செல்ல நாம் எம்மை அனுமதிக்ககூடாது. ஐரோப்பா தேய்ந்து பயனற்று போயிருக்கிறது. அமெரிக்காவின் இன்றைய அவல நிலையைத்தான் நாளாந்தம் பார்த்துக் கொண்டிருக்கிறோமே”

வெனிசுவேலாவை சேர்ந்த தத்துவஞானியும் சைமன் பொலிவரின் ஆசிரியருமான சைமன் ரொட்ரிகஸ் அவர்களின் நிதரிசனமான வார்த்தைகள் தான் அவை.

சைமன் ரொட்ரிகஸ் டோபர்குவா (toparquia) [உள்ளூர் மட்டத்தில் இருந்து ஒழுங்குபடுத்தப்படும் அதிகார முறைமைகள்] பற்றியும் பேசுவார். உள்ளூர் சமூகங்களின் மட்டத்தில் நடைமுறையாகும் அதிகாரத்தையே அவர் அர்த்தப்படுத்தினார். அது சுயமாக உருவாகிச் செல்லும் ஆட்சிமுறையாகும்.

அரசு என்பது மேலிருந்து கீழ் நோக்கிய ஊடுருவல் பண்பையும் நோக்கத்தையும் கொண்டதாகும். நான் ஏற்கனவே கூறியதை போன்று அதனை வலதுசாரிகள் முழுமையாக ஆட்கொண்டு இருக்கிறார்கள். இருந்தபோதிலும், ஏகாதிபத்திய வல்லாதிக்க தாக்குதல் ஒன்றுக்கு நாம் முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் நாம் இங்கிருக்கும் அரசை பாதுகாப்போம். எவ்வாறாயினும், இம்மாதிரியான ஆதரவுகளை கடந்த எமது முக்கியமான இலக்கு எமக்கே உரித்தான அமைப்பையும் முறைமையையும் நாமே கண்டடைந்து கொள்வதாகும். 500 வருட கால காலனித்துவத்தை விஞ்சி நாம் மேலெழ வேண்டி இருக்கிறது. அது இலகுவான விடயமல்ல என்றாலும் இப்போது அதுவே எமது உடனடிப் பணியாக இருக்கிறது.

மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி