ரசான் ஷாவம்ரே-  

அறிமுகம்

இஸ்ரேலின் காசா மீதான இனப்படுகொலை தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளின் பின்னர், இஸ்ரேலின் அதிகாரபூர்வ ஹோலோகாஸ்ட் நினைவு தின விழாவில் பங்கேற்றதை விவரிக்கும்போது, அக்டோபர் 7 தாக்குதல்களை ‘உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு சோகம்’ என்று இஸ்ரேலுக்கான சீனத் தூதர் சியாவோ ஜுன்ஷெங் மொன்னையாகக் கண்டித்தார். இந்த விவகாரத்தை, ஆக்கிரமிப்பு மற்றும் இனஒதுக்கல் ஆகியவற்றை முற்படுத்தி உரையாடுவதற்குப் பதிலாக, யூதர்களது வரலாற்றுத் துயரத்தின் நினைவுக் கதையாடலாக மடைமாற்றினார். அவ்வாறு செய்வதன் வழியாக, அக்டோபர் 7ல் தொடங்கிய தாக்குதல்கள் யூத விரோதத்தில் வேரூன்றியதாக சித்தரிக்கும் இஸ்ரேலியக் கதைகளை தூதுவர் சியாவோ வலுப்படுத்தியது மாத்திரமன்றி, இஸ்ரேலுக்கு இனப்படுகொலை குற்றத்திலிருந்து தண்டனை விலக்கு அளிப்பதை ஆழமாக நியாயப்படுத்தி, தொடரும் இனப்படுகொலையை மேலும் சாத்தியமாக்கினார். நவம்பர் 2024ல், இனப்படுகொலை தன்பாட்டில் நடைபெற்றுக் கொண்டு இருந்த போதிலும், இஸ்ரேலிய அரசுடனான பெய்ஜிங்கின் மூலோபாய நலன்கள் குறையேதுமின்றி அப்படியே இருப்பதாக சியாவோ சமிக்ஞை செய்தார். இது சீனாவின் ஐ.நா. சொல்லாட்சி சாதுரியத்துக்கும் அதன் நடவடிக்கைகளுக்கும் இடையிலான முரண்பாட்டை கோடிட்டுக் காட்டுகிறது.

இஸ்ரேலிய இனஒதுக்கல் ஆட்சிக்கு சலுகை வழங்கும் சீனாவின் ‘பக்கசார்பின்மை’, காசாவில் நடந்துவரும் இனப்படுகொலையிலிருந்து போதுமான தூரத்தில் நின்றுகொண்டு, அதன் மூலோபாய நோக்கத்தை எவ்வாறு இயக்குகிறது என்பதை இந்தக் கொள்கைக் குறிப்பு காட்டுகிறது. இந்த நிலைப்பாடு இஸ்ரேல் தொடர்பான விவகாரங்களில் அமெரிக்க ஆதிக்கத்தின் விளைவு மாத்திரமன்றி, சீனாவின் நீண்டகால நலன்களைப் பாதுகாப்பதற்காக கணிக்கப்பட்டு திட்டமிட்ட முடிவாகும். இஸ்ரேலிய அரசாங்கம் மீது அழுத்தம் கொடுக்காமல் பாலஸ்தீன ஒற்றுமைக்கு அழைப்பு விடுப்பதன் மூலம் பெய்ஜிங், தன்னடக்கம் என்ற போர்வையில் சியோனிச அரசுடன் அதன் உறவுகளை பாதுகாக்கிறது. அதுமாத்திரமன்றி, இனப்படுகொலையைத் தடுப்பதற்கான பொறுப்பை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) மீது மடைமாற்றி, நேரடிப் பொறுப்புக்கூறலில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக போர்நிறுத்தம், மனிதாபிமான அணுகுமுறை மற்றும் கைதிகளை விடுவித்தல் ஆகியவற்றை ஏனையோருக்கான கடமைகளாகக் காட்டுகிறது.

இனப்படுகொலையில் சீனாவின் நிலை

உலக உருண்டையின் தென் அரைக் கோளத்துக்கான (Global South) முதன்மைப் பிரதிநிதியாக சீனா தன்னைக் காட்டிக் கொண்ட போதும், காசாவில் இஸ்ரேலிய போர்க் குற்றங்களை எதிர்கொண்டு தீர்ப்பதற்கான முன்னணிப் பாத்திரத்தை பொறுப்பேற்பதைத் தவிர்த்து வருகிறது. இஸ்ரேல் மீது சர்வதேச சட்டத்தைப் பிரயோகிப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் Global South கூட்டணி, ‘ஹேக் குழு’வின் அபிலாஷைகளுக்கு மாறாக பெய்ஜிங் செயற்படுகிறது. கடப்பாடுமிக்க ஏனைய தேசங்களைப் போல இஸ்ரேலுக்கான தனது தூதரை திரும்பப் பெறுதல், இராஜதந்திர உறவுகளை தரமிறக்குதல், தடைகளை விதித்தல் அல்லது ஒப்பந்தங்களை இடைநிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுப்பதையும் சீனா தவிர்த்து வருகிறது.

காசா நெருக்கடியை ஒரு இனப்படுகொலையாக அங்கீகரிக்க மறுப்பதில், சீனாவின் கொள்கை மிகவும் தெளிவாக வெளிப்படுகிறது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான பேரளவான வன்முறையைத் தடுப்பதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளைவிடவும், தனது உள்நாட்டு மற்றும் புவிசார் அரசியல் நலன்களுக்கு சீனா முன்னுரிமை அளிப்பதை இவை கோடிட்டுக் காட்டுகின்றன. உறுதியான அரசியல் நிலைப்பாட்டை எடுப்பதற்கான செல்வாக்கையும் அதற்கான உலகளாவிய ஆற்றலையும் தன்னகத்தே கொண்டிருந்த போதிலும், பாலஸ்தீனியர்கள் ஆயுதமேந்திய எதிர்ப்பிற்கான பராதீனப்படுத்த முடியாத உரிமையைக் கொண்டுள்ளனர் என்பதை சர்வதேச நீதிமன்றத்தின் (ICJ) முன் உறுதிப்படுத்துவது போன்ற செயல்திறன் மிக்க சைகைகளுடன், பெய்ஜிங் தன்னை மட்டுப்படுத்திக் கொள்கிறது. இத்தகைய தனது சொல்லாட்சிக் கூற்றுக்களை உறுதியும் பருண்மையும் கொண்ட சட்டம் அல்லது அரசியல் நடவடிக்கைகளின் வழியாக அது பூர்த்தி செய்யவில்லை.

இதற்கிடையில், இனப்படுகொலையில் சீனாவின் பொருள் சார்ந்த இழைச்சிக்கல் இருப்பதற்கான சான்றுகள், பலஸ்தீன் மீதான அதன் நிலைப்பாட்டில் இருக்கும் முரண்பாடுகளை அம்பலப்படுத்துவதோடு அதன் உடந்தையையும் சுட்டிக்காட்டுகின்றன. காசாவில் கண்காணிப்பு மற்றும் குண்டுவீச்சுக்காக சீனாவில் தயாரிக்கப்பட்ட DJI ட்ரோன்களை இஸ்ரேலியப் படைகள் மாற்றியமைத்து பயன்படுத்தியதாக தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. தனியார் வசம் உள்ள சீன ட்ரோன் உற்பத்தியாளரான DJI, அரசு சார்ந்த முதலீட்டாளர்களிடமிருந்து நிதியுதவியைப் பெறுவதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனம் தான் சுயாதீனமாக இயங்குவதாக சாதித்த போதிலும், இந்த தொடர்புகள், தொடர்ச்சியான இஸ்ரேலின் பேரளவு வன்முறைகளுக்கு இடையில், பெய்ஜிங்கின் நடுநிலைமை மற்றும் அதன் வெளியுறவுக் கொள்கையின் ஒத்திசைவு குறித்த கேள்விகளைத் தூண்டி இருக்கின்றன.

சீனாவின் மூலோபாய அரசியலை இயக்கும் ஐந்து காரணிகள்

சொல்லாட்சிகளால் நிறுவப்படும் நடுநிலைமை எனும் முகப்புக்குப் பின்னால், பெய்ஜிங் இஸ்ரேலிய ஆட்சியை எதிர்ப்பதற்குப் பதிலாக தூரத்தில் நின்றுகொள்வதை தேர்ந்தெடுத்தது ஏன் என்பதை விளக்கும் ஒன்றோடொன்று இணைந்த ஐந்து காரணிகள் இருக்கின்றன. முதலாவதாக, பெய்ஜிங் காசாவை ஒரு இடரார்ந்த புவிசார் அரசியல் போர்க்களமாகப் பார்க்கவில்லை. உண்மையில் பெய்ஜிங்கைப் பொறுத்தவரை, காசாவில் நடக்கும் போர், பெரும் வல்லரசுப் போட்டியின் உலகளாவிய சதுரங்கப் பலகையில் பொருந்தாதது. உக்ரைன், லிபியா அல்லது சிரியா பற்றிய விவாதங்களில் மேற்கத்திய தலையீட்டைக் கண்டிக்கும்போது சீனா வழக்கமான ‘பனிப்போர் சொல்லாட்சியை’ பயன்படுத்தி வந்தபோதிலும், பாலஸ்தீனத்திற்கும் அதே சட்டகத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து வருகிறது. இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தெளிவான ஆதரவை வழங்கியுள்ள நிலையில், சீனாவின் இந்த ‘விடுபடல்’ குறிப்பிட்டு சொல்லக்கூடியது. இது பனிப்போர் பாணியில் அமைந்த அணிசேர்ப்பின் ஒரு செவ்வியல் உதாரணம் ஆகிறது.

இரண்டாவதாக, பாலஸ்தீனம் முறையாக Belt & Road Initiative (BRI) எனப்படும் ‘புதிய பட்டுப்பாதை’ முன்முனைப்பில் இணைந்திருந்த போதிலும், திட்டத்தை இயக்கும் முக்கிய புவியியல் வழிச்சாலை மற்றும் பொருளாதார மையங்களுக்கு வெளியே அது உள்ளது. இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மற்றும் முற்றுகையின் கீழ் இருக்கும் பாலஸ்தீனத்தில் BRI திட்டங்களிலிருந்து பயனடையப் போதுமான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சொந்த இறையாண்மை ஆகியன இல்லை. எனவே, அதை சேர்த்துக்கொள்வது என்பது பெரும்பாலும் ஓர் அடையாளமாகவே உள்ளது. அது பாலஸ்தீனத்தின் அபிவிருத்திக்குப் பதிலாக சீனாவின் இராஜதந்திர பிம்பத்திற்கே சேவை செய்யக்கூடும்.

மூன்றாவதாக, இஸ்ரேலுக்கு 2023 அக்டோபர் 7 தொடக்கம் சாதனை அளவிலான இராணுவ உதவியை அங்கீகரித்துள்ள அமெரிக்காவைப் போல் அல்லாது, இதுபோன்ற நேரடி இழைச் சிக்கல்களை இலாவகமாய்த் தவிர்க்கும் சீனா, அதன் நீண்டகால மூலோபாய அபிலாஷைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளது. பெய்ஜிங், BRI மூலம் தனது அதிகாரத்தை வெளிப்படுத்துவதிலும், அதன் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் 7.2% வீதத்தால் அதிகரித்துள்ளதோடு அதன் பெறுமதி 229 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது உலகளாவிய இராணுவ செலவினத்தில் சுமார் 13% ஆகும்.

நான்காவதாக, இஸ்ரேலுடன் செய்து கொண்ட இயல்பாக்க ஒப்பந்தங்களின் விளைவாக அரபு உலகம் பாலஸ்தீன விவகாரத்தை ‘முன்னுரிமையற்ற ஒன்றாக’ மாற்றி இருக்கும் பிராந்திய அரசியல் சூழலின் மூலம் சீனா பயனடைகிறது. இந்த மீள் கூட்டமைவு பெய்ஜிங்கிற்கு இராஜதந்திர மறைப்பை வழங்குகிறது: விளைவாக, பாலஸ்தீனத்தில் சீனாவின் வரையறுக்கப்பட்ட ஈடுபாடு, வளைகுடா நாடுகளுடனோ அல்லது பரந்த அரபு உலகத்துடனோ உள்ள உறவுகளைப் பாதிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. அரபு ஆட்சிகள் இஸ்ரேலுடன் உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதால், பலஸ்தீனில் இடம்பெற்று வரும் இனப்படுகொலையில் இன்னும் உறுதியான நிலைப்பாட்டை எடுப்பதன் மூலம் சீனா தனது அரசியலை இடரில் ஆழ்த்துவதற்கான எந்த தேவையும் இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இறுதியாக, பலஸ்தீனில் நிகழ்ந்துவரும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கு உலக அளவில் அர்த்தமுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படாததன் விளைவாக சீனாவின் உலகளாவிய பிம்பம் அதில் பயனடைகிறது. அட்டூழியங்கள் தொடர்ந்து வருவதால், மேற்கத்திய நாடுகளின் தார்மீக நம்பகத்தன்மை சிதைவடைந்து வரும் நிலையில், இந்த சூழமைவு ஒப்பீட்டளவில் பெய்ஜிங் தன்னை ஒரு கொள்கை ரீதியான பாத்திரமாக வெளிப்படுத்திக்கொள்ள உதவுகிறது. 2023 டிசம்பரில் கொண்டுவரப்பட்ட ஐ. நா. பாதுகாப்பு சபை போர்நிறுத்த தீர்மானத்தை எதிர்த்து அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதைத் தொடர்ந்து, சீனத் தூதர் ஜாங் ஜுன் ஒரு மறைமுகமான கண்டனத்தை வெளியிட்டார். புவிசார் அரசியல் சுயநலத்தை விடவும் நாடுகள் தமது தார்மீகப் பொறுப்பை முன்னுரிமைப்படுத்த வேண்டிய அவர், இரட்டை நிலைப்பாடுகளை நிராகரிக்குமாறும் வலியுறுத்தினார். இத்தகைய அறிக்கைகள் அரசியல் இடர்பாடு அல்லது உறுதியான பொறுப்பேற்பு ஏதும் இன்றி சீனா தனது குறியீட்டு மூலதனத்தைக் குவிக்கவும் அதன் ‘மிருது அதிகாரத்தை’ விரிவாக்கம் செய்யவும் உதவுகின்றன.

பரிந்துரைகள்

காசாவில் இடம்பெறும் பெருமளவிலான அட்டூழியங்களை அறிந்திருக்கும் பெய்ஜிங், அதனை கையாள்வதற்கான தலைமைத்துவத்தையோ அல்லது மாற்றத்திற்கான இராஜதந்திரத்தையோ வழங்கவில்லை. அதன் தார்மீக மற்றும் சட்டபூர்வ கடமைகளை நிறைவேற்றுவதற்குப் பதிலாக, சீனா மூலோபாய ரீதியில் தூரத்தில் நிற்பதைத் தேர்ந்தெடுத்துள்ளது. இனப்படுகொலையைத் தடுப்பதற்கு தவறி இருக்கும் மேலைத்தேயத்தின் தோல்வியால் சீனாவின் இந்த நிலைப்பாடு வலுப்படுத்தப்பட்டது. அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் சர்வதேச சட்டத்தின் கீழ் தங்கள் உறுதிமொழிகளை நிலைநிறுத்த மறுத்தபோது, ​​பெய்ஜிங் மீதான அழுத்தத்தை அவர்கள் தளர்த்தினர். வாஷிங்டனின் இஸ்ரேலுக்கான நிபந்தனையற்ற ஆதரவு, அதன் வன்முறையைத் தொடர்வதற்கு உதவியுள்ளது. இது, சீனா எந்த அர்த்தமுள்ள நடவடிக்கையும் எடுக்காமல் ஒரு கொள்கை ரீதியான சக்தியாகத் தன்னைக் காட்டிக் கொள்வதற்கு இவை இடமளிக்கின்றன.  

பாலஸ்தீனர்கள், உத்தியோகபூர்வ மற்றும் கீழ் மட்டங்களில், சீனாவுடனான தங்கள் ஈடுபாட்டை அவசரமாக மறுபரிசீலனை செய்தல் வேண்டும்.மேற்கு நாடுகளுக்கு எதிராக பெய்ஜிங், ஒரு ‘சமனாக்கு – எதிர் எடையாக’ செயல்பட முடியும் என்ற அனுமானம் அளவை மிஞ்சிய நன்னம்பிக்கை மற்றும் முன்னாள் பாலஸ்தீனத் தலைவர்கள் அமெரிக்க மத்தியஸ்தத்தில் வைத்திருந்த அதீத நம்பிக்கை, போன்ற அதன் முன்னைய தவறான கணக்கீடுகளை நினைவூட்டுகின்றன. இதிலே, வெறும் காதல்வய உணர்வுமயமாக்கம் அன்றி கறாறான பொறுப்புக்கூறலைத்தான் இந்த வரலாற்றுத் தருணம் அனைவரையும் கோரி நிற்கிறது!

  1. சீனாவின் பொருளாதார உடந்தையை அம்பலப்படுத்தி சவால் விடுதல்: சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றவாதிகளோடு தொடர்புடைய சீனா உள்ளிட்ட அனைத்து பகாசுர பெருநிறுவனங்களின் நடவடிக்கைகள் மற்றும் முதலீடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான உலகளாவிய கோரிக்கைகளுக்கு பாலஸ்தீன சிவில் சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். குடியேற்ற காலனித்துவத்தின் உள்கட்டமைப்பில் தொடர்ந்து ஈடுபடுவதன் மூலம், பெய்ஜிங் சர்வதேச சட்டத்திற்கான அதன் விதந்துரைக்கப்பட்ட உறுதிப்பாட்டைக் குறைத்து, மேலைத்தேய சக்திகளுக்கான உலகளாவிய தெற்கின் போட்டியாளராக, அதன் நம்பகத்தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.
  2. சீனா தனது இராஜதந்திர மொழியைத் திருத்திக் கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும்: இஸ்ரேலை ‘யூத நாடு’ என்று பெய்ஜிங் குறிப்பிடுவது பாலஸ்தீனத்தின் உரிமைகள் மற்றும் அதன் வரலாற்று உரிமைகோரல்களை அழித்தொழிக்கும் சியோனிசக் கருத்தியல் சட்டகத்தை எதிரொலிக்கிறது. இஸ்ரேலிய குடியேற்ற காலனித்துவம் மற்றும் இனஒதுக்கலின் அதன் யதார்த்த முகத்தைப் பிரதிபலிக்கும் சர்வதேச சட்ட மொழியை ஏற்றுக்கொள்வதற்கு பாலஸ்தீன அதிகாரிகளும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் சீனாவை வலியுறுத்த வேண்டும். இஸ்ரேலின் கட்டமைப்பு ரீதியான வன்முறையை மறைக்கும் சியோனிச கதையாடல்களை சீனா எதிரொலிக்கக்கூடாது. அதே வேளை, சர்வதேச நீதிமன்றத்திலும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலும் சட்ட நடவடிக்கைகளில் பயன்படுத்தப்படும் ‘இனப்படுகொலை’ என்ற சொல்லை அங்கீகரிக்கவும் சுவீகரிக்கவும் சீனாவை சர்வதேச சமூகம் வலியுறுத்த வேண்டும். இவை இரண்டும் தற்போதைய யதார்த்தங்களை பூடகமின்றி விவரிக்கவும் பொறுப்புக்கூறல் மற்றும் நீதிக்கான அழைப்பை விடுக்கவும் இன்றியமையாதவை.
  3. சீனா குறித்த விமர்சன ஆய்வு நிகழ்ச்சி நிரலை உருவாக்குதல்: சுய பாணியிலான தார்மீக மேன்மையை மீண்டும் உருவாக்கும் சீனாவின் போக்கை பாலஸ்தீன அறிஞர்கள் எதிர்த்து, அதற்கு பதிலாக பெய்ஜிங்கின் வெளியுறவுக் கொள்கை, மூலோபாய நலன்கள் மற்றும் இஸ்ரேலின் இனப்படுகொலை மற்றும் பலஸ்தீனத்தை ஆக்கிரமிப்பதில் சீனா உடந்தையாக இருப்பதை உசாவும் ஆய்வு நிகழ்ச்சி நிரல்களை உருவாக்க வேண்டும். சீனா ஒரு உலகளாவிய சக்தியாக தொடர்ந்து உயர்ந்து வருவதால், இவ்வகைத் தலையீடு மிகவும் அவசரமானது.
  4. சீன அறிஞர்களுடன் மூலோபாய உரையாடலைத் தொடங்குதல்: கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைந்தவர்கள் உட்பட பாலஸ்தீனிய கல்வி நிறுவனங்கள், சீன அறிஞர்களை தீவிரமாக இதில் ஈடுபடுத்த வேண்டும். இந்தப் பரிமாற்றங்கள் குறியீட்டு அல்லது செயல்திறன் மிக்க இராஜதந்திரத்திற்கு அப்பால் நகர்ந்து, சீனக் கொள்கை வகுப்பளர் வட்டங்களுக்குள் மாறு நிலைக்கான பாலஸ்தீனியக் கண்ணோட்டங்களைக் கொண்டுவர வேண்டும்.

ரசான் ஷாவம்ரே, PhD, சீன ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச உறவுகள் கற்கை அறிஞர், மத்திய கிழக்கில் சீனாவின் வெளியுறவுக் கொள்கையில் குறிப்பான கவனம் செலுத்துகிறார்.

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி

இந்த ஆக்கம் https://al-shabaka.org/ இணையதளத்தில் China and the Gaza Genocide: A Strategic Distance என்ற தலைப்பில் செப்டம்பர் 16, 2025 வெளியானது.