-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு

மதச்சார்பற்ற அரசியல் அமைப்பைக் கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர், ராமர் கோவில் கட்டுமானப்பணியை தொடங்கிவைக்கும் ஒரு மத சடங்கின் போது புரோகிதர் ஒருவரை போல மத சடங்குகளில் ஈடுபட்டார்.

{ஒன்று}

இன்று இந்தியாவில் பெரும்பாலான ஊடகங்கள் இந்து தேசியவாதத்துக்கு ஒத்துழைக்க நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளன. இது அரசியலில் அனுமதிக்கப்பட்ட ஒரே முன்னோக்காக தோன்றுகிறது. இந்த கண்ணோட்டத்தின்படி ‘இந்து’ என்பது பண்டைய மதம் மற்றும் அதனுடன் புராதன ரீதியாக பிறந்த ஒரு இனக்குழு ஆகும். இது இந்துக்களை இந்தியாவின் நித்திய பூர்வீக குடிகளாக ஆக்குகிறது. இந்த அரசியல் திட்டம், பண்டைய கிரேக்கர்கள் முதல் ஐரோப்பிய காலணித்துவ சக்திகள் வரை, ‘வெளிப்புற “மிலேச்சா” அல்லது தூய்மையற்ற கலவைகள் இல்லாத இந்துக்கள்’ என்று இந்துக்கள் அடையாளப்படுத்தப்பட்ட ஒரு கடந்த காலத்திற்கு இந்தியாவை மீட்டிச்செல்ல முயல்கிறது.


2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு மதவிழாவுடன் ராமர் கோவில் கட்டும் பணி தொடங்கப்பட்டதில் இருந்து இந்து அரசு நடைமுறையில் உள்ளது என்று பல அரசியல் பார்வையாளர்கள் கூறுகினறனர். முன்னைய காலத்தில் பைசாபாத் என்று அழைக்கப்பட்ட அயோத்தியில், பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி இருந்த நிலத்தில் இந்த கோயில் கட்டப்பட்டு வருகிறது. நிகழ்கால ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து அமைப்புகளின் தலைவர்கள் திரண்ட கும்பலால் 1992ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்டது. முக்கிய தொலைக்காட்சி சேவைகள் ஒவ்வொன்றிலும் ஒலிபரப்பப்பட்ட இவ்விழாவில், மதச்சார்பற்ற அரசியல் அமைப்பை கொண்ட ஒரு நாட்டின் அரசாங்கத்திற்கு தலைமை தாங்கும் பிரதமர், ராமர் கோவில் கட்டுமானப்பணியை தொடங்கிவைக்கும் ஒரு மத சடங்கின் போது புரோகிதர் ஒருவரை போல மதச்சடங்குகளில் ஈடுபட்டார். அரசியலமைப்பு மற்றும் தேவராஜ்யம் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இவ் நிகழ்வு – ஒரு குறிக்கோளுடனே குறிப்பிட்ட நாளில் நடத்தப்பட்டது

சரியாக ஒரு வருடத்திற்கு முன்பாக, ஆகஸ்ட் 5 2019 அன்று, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான சுயாட்சியை வழங்கிய அரசியலமைப்பின் 370வது பிரிவை பா.ஜ.க அரசாங்கம் ரத்து செய்தது. அரசாங்கம் பிராந்தியத்தில் துருப்புகளின் நிலைநிறுத்தத்தை அதிகரித்து சிவில் உரிமைகளை இடைநிறுத்தியது. தகவல் தொடர்பு அமைப்புகளை கடுமையாக கட்டுப்படுத்தி, ஈற்றில் முழு எதிர்ப்பு முயற்சிகளையும் நசுக்கியது. 2019ஆம் ஆண்டு குடியுரிமை(திருத்தம்) சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அரசாங்கம் போராட்டங்களை ஒடுக்கத் தொடங்கியதிலிருந்து இதே போன்ற அடக்குமுறை நடவடிக்கைகள் இப்போது இந்தியாவின் பிற பகுதிகளிலும் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கம் மத மற்றும் சாதிய சார்புகளின் பல பொது ஆர்ப்பாட்டங்களின் போதும், தற்போதைய நிகழும் சடங்குகள், பூசாரியை இணைத்து அரசியலமைப்பின் அடிப்படை கொள்கைகளை நிராகரித்துள்ளது. அரசியலமைப்பு என்பது ஒரு ஒப்பந்தம், இந்தியர்களாகும் அனைவரும் கோட்பாட்டு ரீதியாக ஒருவருக்கு ஒருவர் அளித்த ஜனநாயக வாக்குறுதி. இந்த வாக்குறுதியின் வெளிப்படையான சரணாகதியை தற்போது காண்கிறோம். ஹிந்த்துத்துவம் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்தினாலும், இந்து மத அடையாளத்தை மக்கள், நாடு மற்றும் மாநிலத்தின் மீது திணிக்கும் திட்டம் நீடிக்க முடியாதது. இது ஆதியிலிருந்தே பல சவால்களை சந்தித்துள்ளது.

துணைக்கண்டத்தின் நவீன அரசியல் அமைப்பின் ஆரம்ப நாட்களில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், நேருவால் ஆதரவளிக்கப்பட்ட குறிக்கோளை விட இரண்டு தனித்துவமான அரசியல் நோக்கங்கள் வெளிவந்தன. இந்த இரண்டு அரசியல் திட்டங்களும் ஆரம்பத்திலிருந்தே ஒன்றுக்கொன்று மாறுபாடாக இருந்தமையால் வெவ்வேறான அரசியல் கொள்கைகளாக வெளிப்பட்டிருக்கலாம். ஒரு திட்டம் உயர் சாதியினரின் மேலாதிக்கத்தின் ஒடுக்கப்பட்ட சாதி அடிப்படையிலான அமைப்பை தொடர மற்றைய திட்டம் சாதி மற்றும் பாலின பாகுபாடு இல்லாத சமத்துவ சமூகத்தின் வடிவில் மெய்யான சுதந்திரத்தை கற்பனை செய்தது. இந்து தேசியவாதத்தை ஊக்குவிப்பதன் மூலம் இப்போது வெளிப்படையான வளர்ச்சியை அடைந்துள்ள சாதி அடிப்படையிலான அமைப்பை முன்னாள் அரசியல்வாதியான பாலகங்காதர திலக் மூலம் அடையாளப்படுத்தலாம். அரசியல் சிந்தனையின் ஒப்பற்ற மேதை மற்றும் சளைக்க முடியாத ஆர்வலர் ஜோதிராவ் பூலே பிரதிநிதித்துவப்படுத்தும் சமத்துவ சமூக கனவுகளை காங்கிரஸ் உட்பட அனைத்து உயர்சாதி தளங்களும் அடக்க முயன்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கான முதல் நவீன விடுதலை திட்டத்தை பூலே வழிநடத்தினார். அவர் அவர்களின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை பகுப்பாய்வு செய்து கல்வி, சமூகப் பணி மற்றும் நிவாரணத்திற்கான நிறுவனங்களின் வளர்ந்து வரும் ஒரு வலையமைப்பை நிறுவினார். 1873ஆம் ஆண்டில் அவர் சத்யஷோதக் சமாஜ் அல்லது உண்மையைத் தேடுபவர்களின் சமூகத்தை நிறுவினார். இது சாதி ஒழுங்கை கண்டித்தது மட்டுமன்றி பூசாரிகள், உருவ வழிபாடு மற்றும் சிக்கலான சடங்குகளின் தேவையை நிராகரித்தது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் மஹாராஷ்ட்ராவில் பூலைட்கள் ஒரு முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுத்தனர். அங்கு அவர்கள் பெண்கள் விடுதலை எதிர்ப்பு மற்றும் சாதி சார் பிராமண மரபுவழி ஆகியவற்றை சவால் செய்து, தேர்ந்தெடுத்த முறையில் அகற்றுவதன் மூலம் அதன் அரசியல் அபிலாஷைகளை குறிப்பிடத்தக்க காலத்திற்கு தடுத்தும் வைத்தனர்.

திலக் மற்றும் அவரை பின்பற்றுபவர்கள் ஆதிதோற்றத்தில் இருந்தே இந்து அரசியல் திட்டத்தை ஆதரவளித்தனர். இது பிராமண உலக கண்ணோட்டத்தை வரையறுக்க தேவைப்படும் ஒரு காரணி. தாழ்த்தப்பட்ட சாதியினர் மற்றும் பெண்களை சாதி அமைப்பில் இருந்து விடுவிப்பதை திலகைட்கள் கடுமையாக எதிர்த்தனர். இந்திய துணைக் கண்டத்தில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் உட்பட ‘அந்நியர்’ என்று கருதப்பட்ட அனைவரையும் நிராகரித்தனர். திலகட் திட்டம் நவீன ஜனநாயக நெறிமுறைகள் மற்றும் சட்ட அமைப்புகளை பயன்படுத்தியது மட்டுமன்றி அவற்றை துஷ்பிரயோகம் செய்தது. இது பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியுடன் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போதைய ஆட்சியின் கீழ் திடீர் வளர்ச்சியை அடைந்துள்ளது.

இந்த இரண்டு கருத்தியல் நோக்கங்களும் 1980கள் மற்றும் 1990களின் அரசியல் அரங்கில் செல்வாக்கு செலுத்த ஆரம்பித்தன. தாழ்த்தப்பட்ட சாதியினரின் எண்ணிக்கையை நிர்ணயித்து அவர்களுக்கான இடஒதுக்கீட்டுக் கொள்கைகளை பரிந்துரைக்கும் மண்டல் கமிஷன் 1980இல் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அவ் அறிக்கையின் பரிந்துரைகளை அமுல்படுத்துவதை அக்கால காங்கிரஸ் அரசுகள் அவசியமாக கருதவில்லை. முரணாக 1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பிரதமராக பதவியேற்ற ராஜீவ் காந்தி, பாபர் மசூதியின் வாயில்களை இந்து தேசியவாதிகள் வழிபடுவதற்காக திறந்து வைத்தார்.

ஆகஸ்ட் 1990இல் வி.பி சிங் தலைமையிலான கூட்டணி அரசாங்கம் மண்டல் கமிஷனின் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான செயல்முறையை தொடங்கியது. இந்த முடிவை காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பெரும்பாலான முக்கிய அரசியல் அமைப்புகள் எதிர்த்தன. விரைவில் 1990 செப்டம்பரில் பா.ஜ.க மற்றும் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கத்தின் பிற துணை அமைப்புக்கள் எல்.கே அத்வானியை முன்னில் வைத்து சோம்நாத் கோயிலில் இருந்து பாபர் மசூதி வரை மசூதிக்கு பதிலாக கோயில் எழுப்பக்கோரி மோட்டார் வண்டி ஊர்வலத்தை தொடங்கினர். 16 நவம்பர் 1992 அன்று வி.பி சிங் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை உச்ச நீதிமன்ற இருக்கை உறுதி செய்த பிறகு மண்டல் அறிக்கை நடைமுறையில் வர ஆரம்பித்தது. மூன்று வாரங்களுக்குள் டிசம்பர் 6ஆம் திகதி மோட்டார் வண்டி ஊர்வலத்தில் இருந்த ஒரு கும்பலால் பாபர் மசூதி இடிக்கப்பட்டது. இவ்வேளையில் காங்கிரஸ் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தது. செப்டம்பர் 2020இல் அத்வானி மற்றும் பிற தலைவர்கள் உட்பட மசூதி இடிப்பில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட 32 நபர்களை ஒரு விசாரணை நீதிமன்றம் குற்றவாளிகள் அல்ல என்று அறிவித்து விடுவித்துவிட்டது.

காங்கிரஸ{ம் பிஜேபியும் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவின் தேசிய அரசியலில் ஆதிக்கம் செலுத்திய திலக் திட்டத்தின் ஒரு பகுதியாகும். மண்டல் கமிஷன் அறிக்கையை நடைமுறைப்படுத்துவதுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கான காரணங்களை புரிந்து கொள்வதற்கு நவீன இந்தியாவின் இரண்டு கருத்தியல் நோக்கங்களுக்கு இடையிலான மோதலைப் புரிந்து கொள்வது அவசியம். பாபர் நிலம்-தகராறு தீர்ப்பு மற்றும் நேரலையில் ஒளிபரப்பப்பட்ட சடங்குகள் உட்பட இடிப்புக்கு பிறகு கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை ஏற்றுக்கொண்டதை ஒப்புக்கொள்ள ‘இந்து’ என்ற வார்த்தையால் மறைக்கப்பட்டதை வெளிக்கொணர வேண்டியது அவசியம்.

கடந்த மூன்று தசாப்தங்களில் ஏறக்குறைய அனைத்து அரசியல் கட்சிகளும் இந்து மதத்தை இந்துத்துவத்தில் இருந்து வேறுபடுத்துவதாகக் கூறி இந்து பெரும்பான்மைவாதத்தில் இருந்து மத சிறுபான்மையினரைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை பரிந்துரைத்தன. இந்து என்பதன் அர்த்தத்தை மறைக்க முயன்ற காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் நலன்களுக்கும் இது துணைபுரிந்தது.

இந்து தேசியவாதிகள் இந்தியாவின் மதச் சிறுபான்மையினரை குறிப்பாக முஸ்லிம்களை எதிரிகளாக கருதுவது குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டாலும், இந்து மதத்தின் புரளி பற்றி குறைவாகவே எழுதப்பட்டுள்ளது. ‘இந்து’ என்பதன் வரையறை புறநிலை யதார்த்தத்தை கொண்டிருக்கவில்லை. மற்றும் பல்வேறான துறைகளில் அண்மைக் காலங்களில் கூறப்படும் விளக்கங்களுக்கு முரணாக இயங்குகிறது. கடந்த நூற்றாண்டில் இந்து மதப்பிரிவுகளுக்குள் மெதுவாக இழுத்துக் கொள்ளப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளின் அரசியல் அபிலாஷைகளை அடக்கவும் கட்டுப்படுத்தவும் மதம் பயன்படுத்தப்பட்டது. சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மதப்பிரிவை பெரும்பான்மையினரின் அடையாளமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் பிராமண ஆர்எஸ்எஸ் தலைமையிலான இந்து தேசியவாதிகள் தாங்கள் பெரும்பான்மையினரை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்கின்றனர். இதன் மூலம் உயர்சாதியினரால், நவீன அரசியலமைப்பு ஜனநாயகத்தில் அரசியல் அதிகாரத்தை பிரயோகிக்க முடிகிறது. மற்றும் துணைக்கண்டத்தில் சாதிய ஒடுக்குமுறையின் வரலாற்றையும் நடப்பு நிகழ்வுகளையும் திரித்துக் கூறவும் முடிகிறது. கடந்த நூற்றாண்டில் சில வரலாற்றாசிரியர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகங்களினால் இந்து என்ற வார்த்தை கூடக்குறைவாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் விளைவாக இந்து மதம் பற்றிய பிரபலமான புரிதல் மற்றும் துணைக்கண்டத்தில் உள்ள பெரும்பாலான தாழ்த்தப்பட்ட மக்களின் சுயகருத்துகள் வெகுவாக மாற்றம் பெற்றுள்ளன.

இது ஒரு பண்டைய மதம் என்று கூறப்பட்டாலும் இந்து மதம் மிகவும் சமீபத்திய கண்டுபிடிப்பு என்று ஒருமித்த கருத்தும் உள்ளது. ஒரு நம்பிக்கை அமைப்பு முறைக்கு ஒரு மதத்தின் பதவி நிர்ணயிக்கப்படுவதற்கு அது மாநிலத்தாலும் அதனை பின்பற்றுபவர்களாலும் தனித்து அடையாளப்படுத்தப்பட வேண்டும். இந்து மதத்தைப் பொறுத்த வரை, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் பிரிட்டிஷ் அரசாங்கம் யாரை இந்துவாக கருதலாம் என்பதற்கான அளவுகோலை கண்டறிய முயன்றது. அதுவரை கிறிஸ்துவ மிஷனரிகளிடமிருந்து கிறிஸ்தவர்கள், யூதர்கள் அல்லது முஸ்லிம்கள் அல்லாதவர்களை அடையாளம் காண எதிர்மறையாக பயன்படுத்திய வார்த்தையை மறுவி பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்து மதத்தை ஒரு எளிய வார்த்தையாக பயன்படுத்தினர்.

1881 சென்னை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கையில் பிரிட்டிஷ் சிவில் ஊழியரான லூயிஸ் மெக்ஐவர் எழுதியது போல்: “மதம் அல்லது இனத்தின் வரையறையாக கருதப்பட்டாலும் அது குறிப்பிட்டு கூறப்படுவதை விட மிக தாராளமயமானது. இனத்தின் பார்வையில் இந்து மதம் என்ற சொல்லாடல் உண்மையான ஆரிய பிராமணர்கள் மற்றும் நம்மிடம் உள்ள சில க்ஷத்திரியர்கள், தெற்கின் வெள்ளாளர்கள் மற்றும் கள்ளர்கள், மேற்கின் நாயர்கள் மற்றும் தெற்கு மலை ஓரங்களின் பழங்குடியினர் போன்ற பரந்த அளவிலான வேறுபட்ட மக்களை ஒன்றாக கொண்டுள்ளது. ஒரு மதப்பிரிவாக தின்னவேலி மற்றும் தென் கனாராவின் பேய் வழிபாட்டாளர்களுடன் எஞ்சியிருக்கும் வேத நம்பிக்கையின் தூய்மையான வடிவங்களை இது ஒன்று சேர்க்கிறது.”

1921 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் அறிக்கை “எந்த ஒரு இந்தியனும் தனது மதத்திற்கு பயன்படுத்தும் ‘இந்து’ என்ற சொல்லை அறிந்திருக்கவில்லை” என்று கூறுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதி வரை ஆங்கிலத்தில் படித்த உயர்சாதி இந்தியர்கள் சிலர் மட்டுமே தங்களை இந்து மதத்தின் ஒரு பகுதியாக அடையாளப்படுத்திக் கொண்டனர். ‘இந்து’ என்பது கடந்த நூற்றாண்டில் தான் மாநிலம் மற்றும் பெரும்பான்மை மீது குறிப்பாக பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சாதியினர் மீது சுமத்தப்பட்ட ஒரு சொல்லாக இருந்தது. இதனால் இந்து மதத்தை இருபதாம் நூற்றாண்டின் ஒரு கண்டுபிடிப்பாக நிரூபிக்க முடியும். துணைக் கண்டத்தின் வரலாற்றில் பெரும்பகுதியில் மேலாதிக்க உயர்சாதி சமூகங்கள் தம்மையும் மற்றவர்களையும் ஒருவருடைய மதத்தால் அடையாளப்படுத்தாமல் தனிப்பட்ட சாதிகளால் அடையாளப்படுத்தின. இன்று அதிகரித்து வரும் சாதியக்கொடுமைகள் இந்த உண்மை மாறவில்லை என்பதைக் காட்டுகிறது. தொடக்கத்தில், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் தீண்டத்தகாதவர்கள் என்று அவர்களால் கருதப்படும் கீழ்சாதி மக்களுடன் ஒரே வகையாக கூட்டுசேர்வதை அவர்கள் எதிர்த்தனர்.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில்தான் இந்தியாவின் முதன்மையான மேல்சாதி தேசியவாதத் தலைவர்கள் இந்து மதத்தை ஒரு அரசியல் திட்டமாக வெளிப்படையாகவும் திட்டமிட்ட முறையிலும் ஏற்றுக்கொண்டனர். மோகன்தாஸ் காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு ஆகியோரின் காங்கிரஸானது

பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட சாதியினருடன் அரசியல் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ளவேண்டிய நிலை வரும் என்பதனால் ஒருமித்த அமைப்பு முறைமையை ஆலோசிக்கவில்லை. இந்து என்ற வகையில் அவர்களை உள்ளீர்த்து மேல்சாதியினர் அவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை அனுமதித்தது. 1940களின் பிற்பகுதியில் ஆங்கிலேயர்களிடமிருந்து அதிகார பரிமாற்றம் இந்த ஆதிக்க-சாதி உயரடுக்கின் கைகளில் அதிகாரத்தை குவித்தது.

மற்றைய உயர்சாதித் தலைவர்கள் இந்து திட்டத்தை எந்தவித தயவுமின்றி ஏற்றுக்கொண்டனர். ஆர்ய சமாஜ் இன் பனியா தலைவர் லாலா லஜ்பட் ராய் மற்றும் சனாதன இயக்கத்தின் பிராமண தலைவர் மதன் மோகன் மல்வியா ஆகியோர் இணைந்து 1915 ஆம் ஆண்டு இந்து மகாசபை என்ற இந்து தேசியவாத அரசியல் கட்சியை உருவாக்கினர். இக்கட்சியே பாரதிய ஜன சங்கம் மற்றும் பிஜேபிக்கு முன்னோடியாக இருந்தது. 1925ஆம் ஆண்டில் மகா சபையின் உறுப்பினரான கேசவ் பலிராம் ஹெக்டேவோர் இந்து அடையாளத்தை பரப்புவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவினார்.

இருபதாம் நூற்றாண்டு முழுவதும் மேல்சாதித் தலைவர்கள் தாழ்த்தப்பட்;ட மக்களை ஒருங்கிணைத்து ஒதுக்குவதன் மூலம் ஒரு இந்து தொகுதியை உருவாக்க முயன்றனர். ஆதிக்க சாதியினரால் வழிபடப்படும் கடவுள்களை ஊக்குவிப்பதன் மூலமும் தாழ்த்தப்பட்ட சாதியினரின் மரபுகளை அழிப்பதன் மூலமும் மத நம்பிக்கைகளில் ஒருமைப்பாட்டை உருவாக்க முயன்றனர். ஜெர்மன் இந்தியவியலாளர் ஹென்ரிச்வோன் ஸ்டிடென்க்ரொன் வடமேற்கு மாகாணங்களைச் சேர்ந்த உயர்சாதியினரின் தெய்வங்களினால் விளைவான ‘இந்தியாவின் காலனித்துவம்’ பற்றி பேசுகிறார். மேலும் ‘உள்ளுர் தெய்வங்களை இந்து மயமாக்கும் தொடர்ச்சியான செயல்முறை இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மேற்கோள் காட்டப்படலாம்’ என்று குறிப்பிடுகிறார்.

இந்த திட்டத்தை மத சீர்திருத்தம் என்ற பெயரில் கட்டவிழ்க்கப்பட்ட இனஅழிப்பு என்றும் கூறலாம். பழங்குடியினர் மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் கலாச்சார நடைமுறைகள் அடியோடு மாறிவிட்டன. உதாரணமாக ஒடிசா, கேரளா மற்றும் தமிழ் நாட்டில் மாரி அம்மன், புவாசுனி, தம்புரான் போன்ற பண்டைய தெய்வங்கள் சிவன் மற்றும் துர்கா போன்ற ‘பெரும் இந்துக் கடவுள்களால்’ இடம்பெயர்க்கப்பட்டுள்ளன. கோயில் நுழைவு திட்டங்கள் மூலம் இந்தியாவின் பல பகுதிகளில் கோயில் வருவாய் அதிகரித்துள்ளன.

சாதிகளுக்கு இடையிலான பதட்டங்கள் உயர்சாதியினரின் நலன்களுக்கு தீங்கு விளைவிக்கும்போதெல்லாம் இந்த மோதல்கள் மதக்கலவரங்களை உருவாக்குமாறு திசை திருப்பப்பட்டன. சாதிக்கலவரங்கள் பெரும்பாலும் இந்து-முஸ்லிம் வன்முறையில் முடிவடைந்துள்ளன. ஆதிக்க சாதியினரிடமிருந்து சமூக நீதியை கோருவதில் இருந்து தாழ்த்தப்பட்ட மக்களை திசை திருப்பும் பொது எதிரியாக முஸ்லிம்கள் கட்டமைக்கப்பட்டுள்ளனர். ஒரு போலியான ‘இந்து’ மதத்தின் உருவாக்கமானது போலியான இந்து பெரும்பான்மையை உருவாக்கியது. கீழ்சாதி மக்கள் அரசியல் அபிலாஷைகளுடனான உண்மையான பெரும்பான்மை என்பதை இது வலிந்து மறைத்துள்ளது. முடிவில் முஸ்லிம்களும் பிறமத சிறுபான்மையினரும் இந்து புரளியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மதத்தை பயன்படுத்தி, சீர்திருத்தம் என்ற போர்வையின் கீழ் உயர்சாதியினர் பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட சாதி மக்கள் மீது தங்கள் அதிகாரத்தை செலுத்துகிறார்கள். இன்றும் கூட தலித்துகள் கோயில்களுக்குள் நுழைந்ததற்காகவோ, தங்கள் சாதிக்கு வெளியே திருமணம் செய்ததற்காகவோ அல்லது தண்ணீரை பயன்படுத்தினால் நீரை ‘மாசுபடுத்தியதாக’ கருத்தப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். தண்டனையாக அவர்களுக்கு சொந்தமான கிணறுகளில் விஷம் கலக்கப்படுகிறது. உயர்சாதியினரின் அதிகார பலத்தை நினைவுபடுத்தும் வகையில் தலித் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உற்படுத்தப் படுகிறார்கள். இந்தியாவின் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு அரசியல், வணிகம், ஊடகம், நீதித்துறை போன்ற அனைத்து வகையான பொது சேவைகளிலும் பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டுள்ளது. ஒடுக்கப்பட்ட சாதித் தலைவர்கள் சீர்திருத்தம், பிரதிநிதித்துவம் மற்றும் வேறுபாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பல அரசியல் இயக்கங்களை வழிநடத்தியுள்ளனர்.

இவ்விரு அரசியல் நோக்கங்களுக்கு இடையிலான போராட்டம், இந்து ஒற்றுமை என்ற சொல்லாடல்கள் மற்றும் சாதிய அமைப்பில் இருந்து விடுபடுவதற்கான ஒடுக்கப்பட்ட சாதிகளின் போராட்டம் மூலம் சமூகத்தில் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமையான மேலாதிக்கததை நிலைநிறுத்த ஆதிக்க சாதிகளின் முயற்சி போன்றவற்றினால் இந்தியாவின் நவீன வரலாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

திவ்யா துவேதி – இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தத்துவ எழுத்தாளர், இவர் ஷாஜ் மோகன்னுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஷாஜ் மோகன் – தத்துவம்,மீமெய்யியல், தொழிநுற்பம் மற்றும் அரசியல் ஆகிய பரப்புகளில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார். இவர் திவ்யா தவிவெடியுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஜே ரெகு – கேரளாவைச் சேர்ந்த அரசியல் கோட்பாட்டாளர். இவருடைய ஆய்வுப் புலமாக சாதி, அரசியல் கட்டமைப்புகளின் உருவாக்கம் இருக்கிறது. இவர் ஆரம்பகால இந்திய பெண்ணிய எழுத்துக்களை மலையாளத்துக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – நாஸிரா நஸ்ருதீன்

நாஸிரா நஸ்ருதீன் – ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளர். முராகாமி முதல் சில்வியா பிளாத் வரை இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இவரது சில மொழிபெயர்ப்புகள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.