-திவ்யா துவேதி, ஷாஜ் மோகன் மற்றும் ஜே ரெகு

இந்தியாவின் சுதந்திரம் என்பது ஒடுக்கப்பட்ட சாதியினரின் கண்ணோட்டத்தில் காலனித்துவத்திலிருந்து உயர்சாதி வர்க்கத்திற்கு அதிகாரத்தை மாற்றுவதாகும். இதில் ‘இந்து’ பிரிவின் உருவாக்கம் மிகவும் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தது.

காங்கிரஸின் உயர்சாதி குணத்தை இன்றும்; கூட மறைக்க இயலாது. அரசியல் நிர்ணய சபையின் ஒரு பட்டியல் உறுப்பினரான எஸ். நாகப்பா, ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் 35 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்றுள்ள தேர்தல் வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்று முன்மொழிந்த போது, சர்தார் படேல் ஒட்டுமொத்த தலித் சமூகத்தினருடன் சேர்ந்து அவரைத் திட்டினார்.

‘டாக்டர் அம்பேத்கர் அல்லது அவரது குழுவினர் செய்ததை மறந்து விடுவோம். நீங்கள் செய்ததை மறந்து விடுவோம். உங்கள் வழியில் மீண்டும் இந்த நாட்டின் பிரிவினையிலிருந்து நீங்கள் கிட்டத்தட்ட தப்பித்துவிட்டீர்கள். பம்பாயில் உள்ள தனித் தொகுதிகளின் முடிவை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்கள் சமூகத்தின் மிகப் பெரும் பயனாளி (காந்தி) பம்பாயிற்கு வந்த போது அவரது குடியிருப்பில் கல்லெறிய முயன்றது உங்கள் மக்கள்தான். அது என்ன? இது மீண்டும் இந்த விஷத்தின் விளைவாகும். எனவே பெரும்பான்மையான மக்கள் உங்கள் நலனை விரும்புகிறார்கள் என்று நான் உணர்ந்ததால் மட்டுமே இதை எதிர்க்கிறேன். அவர்கள் இல்லாமல் நீங்கள் எங்கே இருப்பீர்கள்?’.

காங்கிரஸ் இறுதியில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு அரச வேலைகள் மற்றும் கல்வியில் ஒதுக்கீடு என்ற வகையில் குறைந்தபட்ச சலுகைகளை வழங்கியது. ஆனால் ஒவ்வொரு துறையிலும் உயர்சாதியினரின் ஆதிக்கம் தடையின்றி தொடர்ந்தது.

இடஒதுக்கீடு என்ற முறையில் வழங்கப்பட்ட சொற்ப தொகை கூட சுயமாக ஒப்புக்கொண்ட இந்துக்களுக்கு ஒரு சர்ச்சையாக அமைந்தது. பல ஆண்டுகளாக இட ஒதுக்கீடு பற்றிய பெரும்பாலான அறிவிப்புகள், குழப்பங்கள் மற்றும் சில நேரங்களில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக உயர்சாதியினரால் நடத்தப்பட்ட பல மாத வன்முறைகளாக தொடர்ந்து வருகின்றன. பீகாரில் 1978 மற்றும் 1980 ஆம் ஆண்டுகளில் அரசு வேலைகளில் இடஒதுக்கீடுக்கான முங்கேரிலால் கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டபோது ஒடுக்கப்ப்பட்ட சாதியினருக்கு எதிராக வன்முறைகள் நடந்தன. வரலாற்றாசிரியர் ஆர்னிட் ஷானியின் படி, ‘102 நாட்களாக குறிப்பாக தலித்துகளுக்கு எதிராக பெரிய அளவிலான அட்டூழியங்கள் தொடரந்தன.” இருப்பினும் ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினரை தாக்குவதால் ஏற்படும் பின்விளைவுகளை தலைவர்கள் புரிந்து கொண்டதால் வன்முறை பெரும்பாலும் ‘இந்து அல்லாத’ மதக் குழுக்களான முஸ்லிம்கள் மட்டுமன்றி சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பௌத்தர்கள் மீது திருப்பிவிடப்படுகிறது.

‘பெரும்பாலும் இந்து-முஸ்லிம் கலவரங்கள் இரு மதங்களுக்கிடையேயான முரண்பாடுகளாலன்றி உட்புற போட்டிகளால் தூண்டப்பட்ட ஒரு சமூகத்தை சுற்றியுள்ள எல்லைகளை விரிவுபடுத்தியதால் ஏற்பட்டது.” என்று 1980 கட்டுரையில் சாண்ட்ரியா பி ப்ரீடாக் எழுதினார்.

சுதந்திர இந்தியாவில் பல ‘இந்து-முஸ்லிம்’ கலவரங்களின் தொடக்கத்தில் குறிப்பாக 1970கள் மற்றும் 1980களில் சாதி மோதல்கள் திசைதிருப்பப்பட்டது தெளிவான விடயம். இந்த மோதல்கள் ஒடுக்கப்பட்டோருக்கான இடஒதுக்கீடுக்கு எதிராக உயர்சாதியினரின் போராட்டங்களாகவே ஆரம்பித்தன. ‘எப்போதெல்லாம் இனக்கலவரங்கள் அதிகரிக்கிறதோ அங்கு இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டத்தால் நடக்கும் குற்றச் சம்பவங்கள் குறையும்’ என்று 1985 குஜராத் கலவரம் தொடர்பான வி.எஸ் டேவ் கமிஷன் குறிப்பிட்டது.

1969இல் இடஒதுக்கீட்டுக் கொள்கை மேலும் பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்பட்ட போது இந்தியாவின் பல பகுதிகளில் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன என்று ஷானி தனது புத்தகமான ‘வகுப்புவாதம், சாதி மற்றும் இந்து தேசியவாதம்: குஜராத்தில் வன்முறை’யில் குறிப்பிட்டார். “கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு வேலைகளில் ஒடுக்கப்பட்ட இந்துக்களின் நலனுக்கான முற்போக்கான அரசின் தலையீடுகள், இந்து தார்மீக ஒழுங்கிற்குள் வளர்ந்து வரும் நிச்சயமற்ற தன்மைகளை உருவாக்கியது.” என்று அவர் எழுதினார். ‘இந்த சாதிய மோதல்களால்தான் அகமதாபாத்திலும் இந்தியாவின் பிற நகரங்களிலும் வகுப்புவாத எழுச்சி தூண்டப்பட்டது.’ என்றும் எழுதினார். அந்த ஆண்டின் பிற்பகுதியில் குஜராத்தில் பிரிவினைக்கு பின் நடந்த மிகக் கொடிய கலவரங்களை இந்து தேசியவாதிகள் திட்டமிட்டனர்.

1970களின் இறுதியில் குஜராத் மற்றும் இந்தியாவின் பிற இடங்களில், ஒடுக்கப்பட்ட சாதியினருக்கான இடஒதுக்கீடு மோதல்களின் ஒரு முக்கிய காரணியாக மாறியது. 1980இல் குஜராத் அரச மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைக் கற்கைகளில் ஒடுக்கப்பட்டசாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்தபோது ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு எதிராக உயர்சாதியினர் ஆக்ரோஷமாக அணிதிரண்டனர். தெருவில் இறங்கி, ‘இடஒதுக்கீடு மணமகள்’ மற்றும் ‘அரசு மாப்பிள்ளை’ ஆகியோரின் போலி திருமணங்களை நடத்தினார்கள். அவர்கள் ஒரு தலித் மாணவரின் களியாலான மாதிரியில், ‘அவரது மண்டையில் மரத்தூளை தவிர வேறெதுவும் இல்லை என்பதைக் காட்டுவதற்காக’ ஒரு போலி ஆபரேஷன் செய்தார்கள்.

1985ஆம் ஆண்டில் ஷத்ரியர்கள், ஹரிஜனங்கள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்களின் கூட்டணியானியின் மூலம் காங்கிரஸ் குஜராத் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றது. அரசு தொழில்கள் மற்றும் கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்டவர்களுக்கான இடஒதுக்கீட்டை அரசு பத்து சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக மாற்றிய போது உயர்சாதியினர் மீண்டும் தெருவில் இறங்கினர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் பிரிவான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் தலைமையில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றன.

டேவ் கமிஷன் குறிப்பிடுவது போல, “இடஒதுக்கீட்டு எதிர்ப்பு இயக்கம் திடீரென வகுப்புவாத திருப்பத்தை எடுத்தது.” கும்பல்கள் முஸ்லிம்களை தாக்க ஆரம்பித்தன. ஏ.பி.வி.பி, பா.ஜ.க மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உறுப்பினர்கள் வன்முறைக்கு உடந்தையாக இருந்ததாக ஆணைக்குழு கண்டறிந்தது.

மதச்சிறுபான்மையினரைப் பலிகடா ஆக்கி சமூகத்தில் பொய்யான ‘இந்து பெரும்பான்மை’ எவ்வாறு தன்னை வரையறுத்துக் கொள்கிறது என்பதை வகுப்புவாத கலவரங்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்துகிறது. உயர்சாதி மேலாதிக்கத்தினால் ஒடுக்கப்பட்ட சாதியினர் சந்திக்கும் இடைவிடாத சவால்களில் இருந்து அரசியல் மற்றும் ஊடக கவனத்தை திசைதிருப்ப வகுப்புவாத கலவரங்கள் பெரும்பாலும் திட்டமிடப்படுகின்றன. இந்தியாவில் ‘இந்து-முஸ்லிம் நட்புறவு’ என்று விளக்கப்படுகின்ற மதச்சார்பின்மை, பெரும்பாலும் பொய்யான ‘இந்து’ பெரும்பான்மையை சட்டபூர்வமாக்கிறது. எனவே இந்தியச் சூழலில் உண்மையான மதச்சார்பின்மை என்பது சாதியை அழிப்பதாகும்.

நாட்டிலும் புலம்பெயர் தேசத்திலும் உள்ள இந்திய அறிவுஜீவிகள் துரதிஷ்டவசமாக இந்து மதத்தை சுற்றியிருக்கும் தவறான புரிதல்களை எதிர்த்து சவால் விடவில்லை. ஆதிக்க சாதி தலைவர்களால் முன்வைக்கப்பட்ட மதத்தை ஏற்றுக்கொண்டதன் மூலம் அதை சட்டபூர்வமாக்க உதவியுள்ளனர். பெரும்பாலும் உயர்சாதியினரான இந்த அறிவுஜீவிகள் இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கல்வி நிறுவனங்களில் அதிகாரப் பதவிகளைப் பெற்றுள்ளனர். பின்காலனித்துவ ஆய்வுகள் மற்றும் சபால்டர்ன் ஆய்வுகள் போன்றவை துணைக்கண்டத்தின் அனைத்;து பிரச்சனைகளுக்கும் குற்றம் சாட்டப்படும் வெள்ளை காலனித்துவவாதிகள் மீது கவனம் செலுத்துகின்றன. அதே நேரத்தில் உயர்சாதி கல்வியலாளர்கள் தங்களை ஒடுக்கப்பட்ட குரல்களாக காட்டிக்கொள்கிறார்கள்.

பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியானது துணைக்கண்டத்தின் அரசியலின் எந்த முந்தைய அனுபவத்திலிருந்தும் வேறுபட்டது. தர்மத்தின் பெருமை அல்லது அவர்களின் சவால் செய்யப்பட்டாத சாதி மேலாதிக்கம் உயர்சாதியினரிடமிருந்து பறிக்கப்பட்டது அவர்களுக்கு பெருத்த அவமானமாக அமைந்தது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு மதத்தை உயர்சாதியினர் கட்டமைக்க ஆரம்பித்த போது அவர்கள் முக்கியமாக வெள்ளையர்களின் முன் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் திட்டத்தையும் மேற்கொண்டனர். பிந்தைய காலனித்துவ ஆய்வுகளில் இருந்தான கல்விசார் வெளியீடுகள் அந்த திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அந்த முயற்சியை முன்னெடுத்த முதல் நபர் விவேகானந்தார் என்று பிரபலமாக அழைக்கப்பட்ட நரேந்திரநாத் தத்தா ஆவார். இவர் இடதுசாரி மற்றும் இந்து வலதுசாரி மக்களால் சமமாக போற்றப்படுகிறார்கள். விவேகானந்தார் பிராமண நூல்களை மேற்கத்திய பார்வையாளர்களை மனதில் வைத்து அவற்றை தேர்ந்தெடுத்து திரிவுபடுத்தப்பட்ட வாசிப்புகளை வழங்கினார். 1980களில் மேற்கத்திய நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்களில் அவர் நிகழ்த்திய நிகழ்ச்சிகள் அவருக்கு புகழைப் பெற்றுத் தந்தன. மேலும் அவர் ‘இந்து மதத்தின் சிறந்த ஆதரவாளர்’ என்று அறியப்பட்டார்.

காந்தியின் இனவெறி மற்றும் சாதிவெறிக் கருத்துகள் வெளிப்படுத்தப்பட்டதன் விளைவாக உலகின் பல பாகங்களிலும் காந்தியின் சிலைகள் கீழே இறக்கப்பட்டும், அவற்றின் இருப்பு சவாலுக்கு உட்படுத்தப்பட்டும் இருந்தாலும் சாதிவெறிக்கு ஒத்த விவேகானந்தரின் இனவெறிக்கு அவ்வளவு கவனம் செலுத்தப்படவில்லை. டோரதி எம் பிகுவேராவின் கருத்துப்படி குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் காந்தி எழுதியதைப் போலவே விவேகானந்தரும் இரட்டைப் பேச்சு பேசினார். மேலும் தனது வெளிநாட்டு பயணங்களின் போது ‘தேசியவாதச் சொல்லாடல்களால் கட்டுப்படுத்தப்படாதபோது’ இந்தியாவைப் பற்றி இனவெறி வாரத்தைகளில் பேசினார்.

விவேகானந்தரைப் பொறுத்தவரை நாகரீகம் ‘ஆரிய’ இனத்துடன் இனரீதியாக பிணைக்கப்பட்டுள்ளது. மற்றும் ஆரியரல்லாத இனங்களுக்கு அதன் பரிமாற்றம் ‘ஆரிய இரத்தம்’ இல்லாமல் சாத்தியமற்றது. ‘ஆரியர் தமது இரத்தத்தை ஒரு இனத்திற்கு கொடுக்கிறார். பின்னர் அது நாகரீகமாகிறது. கற்பித்தலால் மட்டும் இது பலிக்காது.’ என்று 1900 ஆம் ஆண்டு அமெரிக்காவில் ஆற்றிய உரையில் அவர் கூறினார். இந்தியத் துணைக்கண்டத்தில் ஆரியருக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் இடையே முதன்மையான இன வேறுபாட்டைக் கண்டார். ‘வடஇந்திய மக்கள் உயர்ந்த ஆரிய இனத்தை சேர்ந்தவர்கள். பைரனீஸ் மற்றும் பின்ஸில் உள்ள பாஸ்குகள் தவிர ஐரோப்பாவின் அனைத்து மக்களும் இதனில் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். தென்னிந்திய மக்கள் பண்டைய எகிப்தியர்க்ள மற்றும் செமிட்டியர்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள்’ என்றும் கூறினார்.

மதவெறி என்ற இனவாதக் கருத்தைப் போலவே விவேகானந்தர் சாதிக் கலப்பை ‘ஆரியர்களாக இருக்கும் உயர்சாதியினருக்கு ஒரு ஆபத்தாக கண்டார். ‘சாதி என்பது ரத்தத்தை குறிக்கும் போது அதில் ஏதோ ஒன்று இருக்கிறது. பரம்பரை என்னும் ஒன்று இதில் கட்டாயமாக உள்ளது.’ என்று அவர் கூறினார். ‘இப்போது புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். அமெரிக்க இந்தியர்களே, கறுப்பினத்தவர்களுடன் உங்கள் ரத்தத்தை ஏன் நீங்கள் கலக்கக்கூடாது? இயற்கை உங்களை அனுமதிக்காது. உங்கள் ரத்தத்தை அவர்களுடன் கலக்க இயற்கை அனுமதிப்பதில்லை. இனத்தைக் காப்பாற்றும் தன்னுர்வற்ற ஒரு பணி இருக்கிறது. அது ஆரியர்களின் சாதி.’ என்றார். அவரது சாதிவெறி அவரது இனவெறியை வெளிப்படுத்திய ஒரே வித்தியாசத்துடன் அவரது எழுத்துக்கள் அக்காலத்திலிருந்த மற்றைய இனவாதிகளைப் போலவே வெறுக்கத்தக்கவை.

காந்தியும் விவேகானந்தரின் அபிமானி. காந்தி மற்றும் விவேகானந்தர் இருவரும் 1980களில் தொடங்கிய காலனித்துவக் கோட்பாட்டில் பெரும் புகழுக்கு உட்பட்டவர்கள். அறிஞர் எட்வர்ட் சைட் மற்றும் அவரை பின்பற்றியவர்கள், மைக்கேல் பூக்கோ மற்றும் ஜாக் டெரிடா ஆகிய படைப்புகளில் காலனித்துவ ஆட்சியை விமர்சிக்க மேற்கத்திய சுயவிமர்சனத்தின் தத்துவார்த்த கருவிகளைப் பயன்படுத்த தொடங்கிய போது இந்த ஒழுக்கம் உருவானது.

இந்தக் கருவிகளை தங்களுக்கு எதிராகவன்றி பிற மேற்கத்தேயரை எதிர்த்து பயன்படுத்துவதன் மூலம், இந்திய பின்காலனித்துவ விமர்சகர்கள் பூர்வீக பெருமை மற்றும் மதிப்புகளை வலியுறுத்;தத் தொடங்கினர். அவை காலனித்துவ ஆட்சியால் தகர்க்கப்பட்டு மறைக்கப்பட்டன. ஆஷிஸ் நந்தியின் படைப்பின் தலைப்பு ‘அந்தரங்க எதிரி: காலனித்துவத்தின் கீழ் சுய இழப்பு மற்றும்; மீட்பு’, அதன் குறிக்கோளாக இருந்த இந்த திட்டத்தின் கருத்தை சரியாக வெளிப்படுத்துகிறது. 1987இல் உடன்கட்டை ஏற்றுவதன் மூலம் ரூப் கன்வார் கொல்லப்பட்ட போது, இந்திய பெண்ணியவாதிகள் போராட்டங்களை நடத்தினர். நந்தி அவர்கள், இந்தியாவின் மதிப்பு அமைப்பு முறைமைகளை புரிந்து கொள்ள முடியாமல் மேற்குலகால் கவரப்பட்டதாக கூறி அவர்களை கண்டித்தும் கேலி செய்தும் ஒரு கட்டுரை எழுதினார்.

ஹோமி பாபா மற்றும் காயத்ரி சக்கரவர்த்தி ஸ்பிவக் போன்ற பின்காலனித்துவக் கோட்பாட்டின் முன்னணி ஆதரவாளர்கள் துணைக்கண்டத்தின் வரலாற்றைப் பற்றி ஒரு பிரசங்கத்தை நடத்தினர். அதில் நாடக உறுப்பினர்கள் ‘எஜமானர்கள்’-வெள்ளைக் குடியேற்றக்காரர்கள் மற்றும் ‘பூர்வீகவாசிகள்’ மட்டுமே. ‘நேடிவ்’ அல்லது பூர்வீகவாசிகள் என்பது பிரித்தறிய முடியாத பழுப்பு நிற எதிர்ப்பு, கபடம் மற்றும் ‘அபோரியாஸ்’ ஆகியவற்றின் வகையாக பயன்படுத்தப்பட்டது. சாதிப்பிரிவுகளும் ஒடுக்குமுறைகளும் பின்காலனித்துவ சாயத்திற்குள் அதன் தார்மீக மேன்மையுடன் பூர்வீகம் என்ற வகைக்குள் மறைந்தன. பின்காலனித்துவ கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களில் காலனித்துவ அவமானத்தைப் பற்றிய உயர்சாதியினரின் முறையீடுகள் மட்டும் சர்வதேச பார்வையாளர்களின் முன் தோன்றி, ஒடுக்கப்பட்டசாதி மக்களின் வரலாற்றுத் தலையீடுகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளுக்கான விவாதங்களுக்கான இடத்தை அழித்துவிடுகின்றன. கல்வித்துறையில் இவ்விரு துறைகளின் ஆதிக்கம் இந்தியாவில் இந்து தேசியவாத அரசியலின் எழுச்சியுடன் ஒத்துப்போகிறது.

பழங்கால நூல்களில் எதிர்பார்க்கப்பட்ட கண்டுபிடிப்புகள் மற்றும் நவீன அறிவியலின் கண்டுபிடிப்புகளை ‘மீட்பதற்கான’ ஆர்வம் பல கல்வியலாளர்களின் குறிப்பாக திபேஷ் சக்ரபர்த்தியின் பணிகளில் காணக்கிடைக்கிறது. இயற்கை என்பது இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளுடனான ஒரு ‘இடைநிலை’ என்று சக்ரபாணி கூறினார். இந்து மதம் என எளிதில் அடையாளம் காணக்கூடிய ‘பல தெய்வ வழிபாட்டிற்கு’ ஒரு விசித்திரமான மேன்மையைக் கோர அவர் அனைத்து ஏகத்துவங்களையும் நிராகரிக்கிறார். ‘நான் கடவுள்களையும் ஆவிகளையும் மனிதனாக இருப்பதன் இணையாக கருதுகிறேன்.’ என்று அவர் தனது ‘ஐரோப்பாவை மாகாணமாக்குதல்’ என்ற நூலில் எழுதுகிறார். பல்வேறு கலாச்சாரங்களும் இடங்களும் அவற்றின் சொந்த சிந்தனை வடிவங்களை தீர்மானிக்கின்றன. மேலும் அத்தகைய வடிவங்களை மற்றைய தரங்களை நிர்ணயிக்க பயன்படுத்த முடியாது என சக்ரபார்த்தி கூறுகிறார். இந்த நிலைப்பாட்டின் ஒரு வெளிப்படையான உட்குறிப்பு என்னவென்றால் நியூட்டனின் இயக்க விதிகள் ஐக்கிய இராச்சியத்தில் மட்டுமே இருக்கும் மற்றும் துகள்கள் அமெரிக்காவில் மட்டுமே ‘துகள் இயற்பியலின் மாதிரிக்கு’ இணங்கும். பஞ்சாயத்துகள் மூலம் உயர்சாதி ஆட்சியைக் குறிப்பிடுவதன் மூலம் இந்தியா காலனித்துவத்திற்கு முன்பே குடியரசாக இருந்ததாக வாதிடுகிறார். நந்தி 1979ஆம் ஆண்டு ஒரு கட்டுரையில் நவீன தொழில்நுட்பத்திற்கு மாற்றாக பாரம்பரிய கலாச்சார நடைமுறைகளை கருத்தில் கொள்ளும் அளவிற்கு சென்றார்.

இந்த நூல்களில் உயர்சாதியினரின் சுயஉறுதிப்பாடும் அவர்களின் தொடர் சமூக ஆதிக்கத்திற்கான நியாயமும் பெரும்பாலும் சொற்பொருள் சிதைவுகள் மற்றும் கோட்பாட்டு மொழியின் மூலமும் நடைபெறுகிறது. அரசியல் விஞ்ஞானி ராஜீவ் பார்கவா ஜாதி ஒழுங்கைக் குறிக்க ‘செங்குத்து பன்முகத்தன்மை’ என்ற சொல்லை பயன்படுத்துகிறார். பன்முகத்தன்மையின் நேர்மறையான அர்த்தத்தை வழங்குவதன் மூலம் அதன் சுரண்டல் தன்மையை மறைக்கிறார். அவர் இந்த பன்முகத்தன்மையை ‘கிடைமட்ட பன்முகத்தன்மையுடன்’ வேறுபடுத்துகிறார். இதன் மூலம் அவர் துணைக்கண்டத்தில் இருக்கும் பல மதங்களை குறிப்பிடுகிறார். இந்த ‘செங்குத்து பன்முகத்தன்மை’ மூலம் நடத்தப்படும் ஒடுக்குமுறைக்கு சவால் விடுவதற்கு பதிலாக பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து காணப்பட் ஒரு உயர்சாதிக் கனவான இரண்டு வகையான பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதும் வளர்ப்பதும்தான் இத்தகைய வாய்மொழி விளையாட்டில் உள்ள மறைமுகமான உத்தரவு.

இந்தக் கோட்பாடுகள் உருவாக்கிய சர்ச்சையான பொதுப் பிரசங்கம் எப்போதும் வலதுசாரிகளுக்கு உதவும் நிலையாக இருந்து வருகிறது. சமூகவியலாளரான சதீஷ் தேஷ்பாண்டே, ‘தன் சொந்த சாதியமின்மையை நம்பத் தொடங்கும் ஒரு குரல் மற்றும் உணர்வின் தோற்றம்’ என்று அழைப்பதும் அவர்களுக்கு உதவுகிறது.

உயர்சாதிக் கல்வியலாளர்கள் தங்களை வாயில் காவலர்களாக நிறுவிக்கொண்டு தலித் குரல்கள் கேட்கப்படுவதைத் தடுக்கிறார்கள். 2001ஆம் ஆண்டில் இந்தியாவின் முன்னணி சமூக விஞ்ஞானிகள் ஆண்ட்ரே பெட்டெய்ல், டி.எல்.ஷேத் மற்றும் திபாங்கர் குப்தா போன்ற உயர்சாதி வகுப்பைச் சேர்ந்த அனைவரும் தலித் அமைப்புகளை மட்டுமன்றி டர்பனில் இனவெறி, இனப்பாகுபாடு, இனவெறி தொடர்புடைய சகிப்புத்தன்மைக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் உலக மகாநாட்டில் ஆர்வலர்களான பால் திவாகர் மற்றும் மார்டின் மக்வான் ஆகியோரின் சாதி ஒடுக்குமுறை பற்றி பேசிய உரையையும் எதிர்த்தனர். சாதியின் மீதான விமர்சனங்களை கட்டுப்படுத்தவும் தணிக்கை செய்யவும் வேண்டிய உயர்சாதியினரின் பீதி நிலை ஒரு நூற்றாண்டிற்கு மேலாக உள்ளது. மேலும் சாதியால் பாதிக்கப்பட்டவர்களை பொதுப் பார்வையில் இருந்து மறைத்து, ‘இந்து’, ‘பூர்வீகம்’, ‘சுதேசி’ அல்லது ‘கீழ்நிலையில்’ இருந்தாலும் அவர்களை ஒரே குடும்பத்தின் கீழ் சித்தரிப்பதற்கும் இது உயர்சாதியின் நலன்களுக்கு உதவுகிறது.

கல்வி நிறுவனங்களில் இந்த ஒழுங்குமுறை முன்னுதாரங்களின் ஆதிக்கம் கீழ் சாதியினரின் அனுபவங்கள் மற்றும் வரலாற்றுக் கண்ணோட்டங்கள் பற்றிய ஆராய்ச்சியின் சாத்தியத்தை தடுக்கிறது. இந்த ஒழுங்குமுறைகள் ஒடுக்கப்பட்டசாதியினரின் விடுதலை உபயங்கள் மீது அறிவியல் ரீதியிலான தடையை நிறுவியுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் பின்காலனித்துவ கோட்பாட்டால் பாதிக்கப்பட்ட கல்வியலாளர்கள் தாங்கள் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்களாகவும் மேற்கத்திய கல்வியில் சிறந்ததை பெற்றவர்களாக இருந்த போதிலும் அவர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் படிக்கிறார்கள் என்ற உண்மை இருந்தபோதிலும் உள்ளர் மொழிகளில் கல்வியை வழங்குவதற்காக வாதிட்டனர். இவ்வாறாக வட்டார மொழிகளில் கல்வி கற்பது ஒடுக்கப்பட்ட சாதியினருக்கும் அவர்களின் அறிவுசார் பங்களிப்புகளுக்கும் ஒரு தடை உத்தியாக பரிந்துரைக்கப்படுகிறது.

அதனால் வடமேற்கு இந்தியாவின் உயர்சாதியினரின் வெற்றிக் கதைகளாக பாலிவுட் திரைப்படங்களை பார்க்கும்போது ஒடுக்கப்பட்ட பெரும்பான்மையினர் அரசியலையும் வரலாற்றையும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேல்சாதி ஹீரோக்கள் ஒடுக்கப்பட்ட சாதி குண்டர்களுடன் மோதி சண்டையிடுவதை பார்க்கவும், சாதிக் கடமைகளை கடைபிடிக்கும் உயர்சாதி கதாநாயகிகளை பார்த்து ரசிப்பதற்கும், ராபர்ட் போன்ற கிறிஸ்தவ பெயர்களை கொண்ட வில்லன்களால் உயர்சாதி தாய்மார்கள் அவமானப்படுவதை பாரத்;து கண்ணீர் சிந்தவும் ஒடுக்கப்பட்ட சாதியினர் ஆளாக்கப்பட்டார்கள். கல்வித்துறை உட்பட பிற துறைகளைப் போலவே இந்திய சினிமாவின் நீண்ட வரலாற்றில் ஒடுக்கப்பட்ட சாதியினருக்கு குறைந்த பிரதிநிதித்துவமே இருந்தது.

நீண்ட காலமாக தீண்டாமை நடைமுறை சாதி பற்றிய எந்த சபையிலும் விவாதிக்கப்பட்ட போதும் இறுதியில் கல்வி நிறுவனங்கள் சாதி என்பது ஒரு பிரிட்டிஷ் கண்டுபிடிப்பு என்ற அபத்தமான கருத்தை கற்பித்து உயர்சாதியினரை இந்த குற்றச்சாட்டிலிருந்து விடுவித்தன. பிந்தைய காலனித்துவ கூட்டங்களிலோ இந்து தேசியவாதிகளிலோ இந்த சிந்தனையின் பெரும்பாலான ஆதரவாளர்களை காண்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

பூலேய்ட்டுக்கள் மற்றும் திலகிய அரசியல் திட்டங்களிற்கு இடையிலான போர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இருந்து பல வடிவங்களில் வெளிப்பட்டு வருகின்றன. இருபதாம் நூற்றாண்டில் அது அம்பேத்கர் எதிர் காந்தி வடிவத்தை எடுத்தது. பூலைட் திட்டம் என்பது சாதியை அழிப்பதன் மூலம் நவீன ஜனநாயக மரபுகளின் கீழ் சம உரிமைக்கான போராட்டமாக இருந்தாலும் மற்ற திட்டத்;தின் நோக்கம் நவீன காலத்திற்கு முந்தைய சாதிய படிநிலைகளை சித்தாந்தங்கள் மூலம் தக்கவைத்துக் கொள்வதாகும். வரலாற்றாசிரியர்கள், புத்திஜீவிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் ‘இந்து’ மற்றும் ‘இந்து பெரும்பான்மைவாதம்’ என்ற வார்த்தைகளை சந்தேகத்திற்கு இடமின்றி பயன்படுத்தும்போது அவர்கள் திலக் திட்டத்துடன் ஒன்றித்து பூலேயின் திட்டத்தை எதிர்க்கின்றனர். ஈற்றில் ‘இந்து’ என்ற சொல்லால் கபடமற்ற எந்த பயனும் இல்லை.

நடை சுற்றறிக்கையின் மூலம் சாதிகளை வரையறுத்துவிடலாம் என்ற அச்சுறுத்தலானது உயர்சாதியினரின் எதிர்ப்பை முஸ்லிம்கள் பக்கம் திருப்பியதால் எவ்வாறு ஆர்எஸ்எஸ் பிறப்பதற்கு வழிவகுக்கப்பட்டதோ அதே வகையில் மண்டல் கமிஷனின் பதிலடியும் ஜாதி குழப்பங்களுக்கு வழிவகுத்து இஸ்லாமிய-வெறுப்பை கக்கும் இந்து தேசியவாத அமைப்புகளை தூண்டிவிட்டது.

ராஜீவ் காந்தி 1989ஆம் ஆண்டு அயோத்தியில் தனது தேர்தல் பிரச்சாரத்தை துவக்கினார். ராம ராஜ்ஜியம் அல்லது ராமரின் படி ஆட்சி செய்ய வேண்டும் என மோகன்தாஸ் காந்தியைப் போலவே தனது அரசியல் இலக்காக அறிவித்தார். அவர் மண்டல் கமிஷன் அறிக்கையை ‘முற்றிலும் கடுமையாக’ எதிர்த்து பாராளுமன்றத்திலும் அதைக் கண்டித்தார். இந்த விடயத்தில் அரசியல் கட்சிகளுக்கும் ஆர்எஸ்எஸ் இற்கும் உள்ள குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால் ‘சாதிப் போர்’ மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் புரட்சியின் அச்சுறுத்தலைப் பற்றி ஆர்எஸ்எஸ் வெளிப்படையாக பேசினர். ‘எதிர்பார்க்கப்பட்ட சூத்திரர்களின் புரட்சியில் இருந்து எந்த வீழ்ச்சியையும் எதிர் கொள்வதற்கு தார்மீக மற்றும் ஆன்மீக சக்திகளை கட்டியெழுப்ப வேண்டிய அவசர தேவை இன்று உள்ளது’ என்று பத்திரிகையாளர் எம்.வி. காமத் ஆர்எஸ்எஸ் இன் வார இதழான ‘ஆர்கனைசரில்’ எழுதினார்.

1990ஆம் ஆண்டு பாபர் மசூதியை நோக்கிய மோட்டார் வண்டி ஊர்வலத்தின் நோக்கம் தெளிவாக இருந்தது. ‘ராமரின் ஒளியின் காரணமாக இடஒதுக்கீடு என்ற அரக்கன் ஓடிவிட்டான்’ என்று பத்திரிகை ஆஜ் வர்ணித்தது. உயர்சாதி ஆரிய மன்னன் ராமன், ஒடுக்கப்பட்டசாதி ‘அரக்கர்களை’ மீண்டும் மீண்டும் தோற்கடித்தான் என்ற ராமர் கதையின் சாதிய விளக்கம் இங்கே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வளர்ச்சிகளுக்கு நடுவில் செய்யப்பட்ட மற்றொரு சமகால அவதானிப்பு அக்டோபர் 10 1990 அன்று தற்போது பதிப்பில் இல்லாத சமூக விஞ்ஞானி இதழில் வெளியிடப்பட்டது. இது மண்டல் போராட்டங்களுக்கும் ராமர் கோவில் இயக்கத்திற்கும் இடையிலான தொடர்பை சுட்டிக்காட்டியது. பத்திரிகையாளர் சுகுமார் முரளிதரன் இவ்வாறு எழுதினார்.

‘மண்டல் கமிஷன் தேசத்தின் உறுதியான மற்றும் அபிவிருத்தியடையும் பிரிவினருக்கு உரிய அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியின் பிரதிபலிப்பாகும். ‘மந்திர்’, மதவழிமுறைகளில் சடங்குளை ஒருங்கிணைத்தும் சிறுபான்மை சமூகத்தை நிரந்தரமாக கீழ்ப்படுத்துவதன் மூலமும் சமூக படிநிலையில் முன்னுரிமைகள் வழங்குவதின் வழக்கமான ஒழுங்கை பராமரிக்க முயல்கிறது.’

சாதிய ஒடுக்குமுறையின் சமகால யதார்த்தத்தை பார்க்கும்போது இந்த கவனச்சிதறல் முறைமைகள் நீண்டகாலத்திற்கு வேலை செய்ய முடியும்;. 1931ஆம் ஆண்டு முதல் உயர்சாதியினரின் எண்ணிக்கை ‘ஆபத்தான’ அளவின்றி குறைவாக இருக்கும் உண்மை அம்பலப்படும் என்ற அச்சத்தின் காரணமாக இந்திய அரசு மக்கள் தொகையை சாதி அடிப்படையில் கணக்கிடுவதை தவிர்த்துவருகிறது. 1990களின் பிற்பகுதியில் தலித் அல்லாத ஒடுக்கப்பட்ட சாதியினர் மட்டும் மக்கள் தொகையில் 52 சதவீதம் என்று ஒரு மாதிரி கணக்கெடுப்பு வெளிப்படுத்தியது. இது உயர்சாதியினர் கடுமையாக எதிர்க்கும் இட ஒதுக்கீடு கொள்கைக்கு வழிவகுத்தது. முன்னதாக தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மக்கள் தொகையில் 22 சதவீதமாக இருந்தனர். கடந்த இரண்டு தசாப்தகாலமாக அரசாங்க கொள்கை இந்த எண்கள் மூலம் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் 2011இல் கீழ்சாதி அரசியல் தலைவர்களின் அழுத்தம் காரணமாக நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின் கீழ் தலித் மற்றும் ஆதிவாசி மக்கள் தொகை 30 சதவீதமாக இருந்தது. தற்போதைய அரசாங்கம் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு அறிக்கையையும் வெளியிட மறுத்துவிட்டது. ஒடுக்கப்பட்ட சாதியினரின் உண்மையான எண்ணிக்கை கற்பனை செய்ததை விட அதிகமாக இருக்கும் என்ற அச்சத்தில் இருக்கலாம். பத்திரிகையாளர் ராஜேஷ் ராமச்சந்திரன் அரசாங்க தரவுகளின் அடிப்படையில் எகனாமிக் டைம்ஸ் இல் எழுதியது போல் ‘ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஓபிசி எண்கள் 60 சதவீதமாகவும் எஸ்.சி.எஸ்டியினர் 30 சதவீதமாகவும் இருந்ததால் உயர்சாதியினர் மக்கள் தொகையில் 10 சதவீதம் மட்டுமே இருக்க முடியும்.’

இதற்கிடையில் தீண்டாமை மற்றும் தலித்துக்களுக்கு எதிரான வன்கொடுமைகள் இந்தியா முழுவதும் தொடர்கின்றன. இந்தியாவின் அனைத்து குற்றங்களிலும் 65 சதவீதம் தலித்துகளுக்கு எதிராக இழைக்கப்படுகின்றன. தலித் விவசாயிகளில் 71 சதவீதமானவர்கள் நிலமற்றவர்கள். தேசிய ஊடகங்களில் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவானவர்களே தாழ்த்தப்பட்ட சாதிகளை சேர்ந்தவர்கள். தலித்துகள் மற்றும் ஆதிவாசிகள் மதிப்புமிக்க இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் மற்றும் இந்திய மேலாண்மை நிறுவனங்களில் ஒன்பது சதவீதத்திற்கும் குறைவானவர்களே கற்கின்றனர். மத்திய அரசில் தாழ்த்தப்பட்ட சாதியினர் வெகு அரிது. மாகாண அரசில் தலித்துகள் வெகு அரிது. உயர்சாதி சிறுபான்மையினர் இன்னும் ஒடுக்கப்பட்டசாதி பெரும்பான்மையினரை நீதிமன்றங்கள், காவல்துறை மற்றும் பிற அரசு இயந்திரங்களை கருவியாக பயன்டுத்தி ஆட்சி செய்து வருகின்றனர்.

அன்று ஊடகங்களால் கொண்டாடப்பட்ட ‘இந்து அரசு’ எனபது முற்றிலும் நிறுவப்பட முடியாமல் போனதற்கு காரணமாக .புலேயின் அரசியல் ஒழுங்கமைப்பு இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து இரண்டு திட்டங்களுக்கிடையேயான முறுகல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 1952ஆம் ஆண்டில் பூனே முனிசிபல் கார்ப்பரேஷனின் உறுப்பினரான கேசாவராவ் ஜெட்டே பூலேயின் சிலையை நிறுவ முன்மொழிந்தார். முனிசிபாலிட்டியின் பிராமண உறுப்பினர்களுக்கு ஒடுக்கப்பட்ட சாதியான பூலேயின் உருவம் ‘தங்கள் நகரத்தில்; ஒரு நிலைப்பாட்டை எடுக்கக்கூடும்’ என்ற கருத்து செயலற்ற வடிவத்தில் கூட ஒரு தீண்டத்தகாத சிந்தனையாக இருந்தது. எதிர்ப்புகள் மற்றும் செல்வாக்கின் மூலம் உயர்சாதி உறுப்பினர்களால் ஜெட்டேவின் முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டது. அந்த மோதலைத் தொடர்ந்து தினகர்ராவ்; ஜவல்கர் ஒரு புத்தக்கத்தை வெளியிட்டார். ‘தேசச்சே துஷ்மன்’ அல்லது ‘தேசத்தின் எதிரிகள்’ திலகர் மற்றும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கு எதிராக வாதிடுகிறார். ‘தேஷ்’ அல்லது ‘தேசம்’ என்ற கருத்தின் ஒடுக்கப்பட்ட சாதியினர் மற்றும் உயர் சாதியினரின் மாறுபட்ட கண்ணோட்டங்களை தலைப்பு வெளிப்படுத்துகிறது. சாதி ஒழிப்பை எதிர்த்ததற்காக 1920களில் பூலைட் ஜாவல்கர் உயர்சாதி தலைவர்களை தேச விரோதிகள் என்று அழைத்திருந்தால் இன்று சுதந்திர, சமத்துவ, சாதி எதிர்ப்பு அரசியலுக்காக நின்று உழைக்கும் அனைவரும் ‘தேச விரோதிகள்’, ‘நகர்ப்புற நக்சல்கள்’, ‘நகர்ப்புற மாவோயிஸ்ட்’ மற்றும் பிற அடைமொழிகளால் அழைக்கப்படுவார்கள். கடந்த இரண்டு தசாப்த காலமாக காங்கிரஸும் பிஜேபியும் சாதி எதிர்ப்பு அரசியலை பின்பற்றுபவர்களை அரசியல் அனுமதியுடன் குண்டர்களை வைத்தும் அரசின் ஆயுதங்கள் மூலமும் தாக்கியுள்ளனர்.

ஆகஸ்ட் 5 நிகழ்வுகள், துணைக்கண்டத்தில் சமத்துவ அரசியலின் பிறப்பிற்கான மற்றொரு பெயரான உண்மையான பெரும்பானமையரின் நீண்டகால புரட்சியிலிருந்து திசைதிருப்புவதற்கும் ஒத்திவைப்பதற்குமான மற்றொரு வழியாகும்.

திவ்யா துவேதி – இந்தியாவை தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு தத்துவ எழுத்தாளர், இவர் ஷாஜ் மோகன்னுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஷாஜ் மோகன் – தத்துவம்,மீமெய்யியல், தொழிநுற்பம் மற்றும் அரசியல் ஆகிய பரப்புகளில் தனது ஆய்வுகளை மேற்கொள்ளுகிறார். இவர் திவ்யா தவிவெடியுடன் இணைந்து Gandhi and Philosophy: On Theological Anti-politics, Indian Philosophy, Indian Revolution :On Caste and Politics என்ற இரண்டு புத்தகத்தை எழுதி இருக்கிறார்.

ஜே ரெகு – கேரளாவைச் சேர்ந்த அரசியல் கோட்பாட்டாளர். இவருடைய ஆய்வுப் புலமாக சாதி, அரசியல் கட்டமைப்புகளின் உருவாக்கம் இருக்கிறது. இவர் ஆரம்பகால இந்திய பெண்ணிய எழுத்துக்களை மலையாளத்துக்கு மொழிபெயர்த்து இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – நாஸிரா நஸ்ருதீன்

நாஸிரா நஸ்ருதீன் – ஒரு தொழில்முறை மென்பொருள் பொறியியலாளர். முராகாமி முதல் சில்வியா பிளாத் வரை இலக்கியத்தில் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர். இவரது சில மொழிபெயர்ப்புகள் சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன.