– அம்பலவாணர் சிவானந்தன்
இக்கட்டுரையானது 2009ஆம் ஆண்டு The Institute of Race Relations இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
எனது நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை பற்றி உணர்ச்சிவயப்படாமல் கதைப்பது மிகவும் சிரமமான ஒரு விடயமாகும். ஏலவே தாக்கப்பட்டு, இருப்புகள் நிலைகுழைந்த நிலையில் இருக்கும் ஒரு தமிழ் மக்கள் கூட்டத்தை இப்போது வதை முகாம்களுக்குள் அடைத்து உணவும் மருந்தும் இன்றி பட்டினி போட்டு இந்த அரசாங்கம் செய்யும் கொடூரங்களை பார்க்கும் போது 1958இல் நடந்த திட்டமிடப்பட்ட படுகொலைகள் தான் என்னை ஆட்கொள்கிறது. அந்த காலத்தில் சிங்கள குண்டர்களால் எனது பெற்றோரின் வீடுகள் தாக்கப்பட்டது, எனது மருமகன் பெற்றொல் ஊற்றி எரிக்கப்பட்டான் மற்றும் எனது நண்பர்களும் உறவினர்களும் வதை முகாம்களுக்குள் தொலைந்து போனனர். அப்போது நான் ஒரு சிங்கள பெண்ணை திருமணமுடித்து எனக்கு மூன்று பிள்ளைகள் இருந்தனர். அவர்களுக்கு முன்னால் ஒரு வெறுப்பினாலான ஒரு எதிர்காலத்தை மாத்திரம் தான் என்னால் கற்பனை செய்ய முடியுமாக இருந்தது. அதனால் நான் எனது குடும்பத்துடன் நாட்டை விட்டு இங்கிலாந்திற்கு வந்தேன்.
வகுப்புவாத போரைப்போன்று, இனங்களுக்கு இடையிலான போரைப்போன்று கொடூரமான ஒரு விடயம் எதுவுமில்லை. ஒரே இரவில் நண்பன் எதிரியாக மாறுவதும், உங்களது அண்டை வீட்டுக்காரரின் ஒவ்வொரு பார்வையும் அச்சுறுத்தலை கொண்டதாக இருப்பதும், வழிப்போக்கர் ஒவ்வொருவரும் தகவல் தெரிவிப்பவராகவும் இருக்கும் நிலை தோன்றும். எமக்கு பின்னால் என்ன நடக்கிறது என்ற அச்சத்துடன் தெருக்களில் கால் விரல் நுனியில் நீங்கள் நடக்க வேண்டி இருக்கும். நீங்கள் ஒரு எல்லையில் ஒரு நெருக்கடியில் மாட்டிக்கொண்டிருப்பீர்கள். வானம் உங்களை நோக்கி ஒரு அச்சுறுத்தலுடன் கீழிறங்கும் நிலையாக தான் அது இருக்கும்.
அரசாங்கங்கள் அதிகாரத்தை தன்வயப்படுத்திக்கொள்ளும் பொருட்டு சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகளை பயன்படுத்திக்கொள்வதும் இனம் மற்றும் மதம் சார்ந்த அச்சங்களை தூண்டிவிடுவதும் தான் மிகவும் மோசமான விடயமாகும். அந்த வழியில் செல்லும் போது தணிக்கைகளும் தவறான செய்திகளும் கொண்ட, வெளிப்படையாக பேசும் பத்திரிகையாளர்களை கொலை செய்கிற மற்றும் பொலிஸ், இராணுவத்தினரால் சட்டக்கு புறம்பான கொலைகள் செய்யப்படுகிற, அரசாங்கத்திற்கு எந்த எதிர்ப்புமற்ற ஒரு அரசியல் கலாச்சாரத்தை அது உருவாக்கிவிடும். இந்த கலாச்சாரமானது சர்வாதிகாரத்தினுள் சென்ற முடியாமல் இருக்க நாம் உடனே அதனை களைத்து விடவேண்டும்.
இதனை மனதில் இருத்திக்கொண்டு தான் சுமார் 150 வருடகால பிரித்தானிய ஆட்சியையும், 60 வருடகால சுதந்திரத்தையும், 50 வருடகால இனச்சுத்திகரிப்பையும் மற்றும் இப்போது நாம் இருக்கும் இந்த நிலைமைக்கு எம்மை கொண்டு வந்து விட்டிருக்கும் அதனுள் நிகழ்ந்த 25 வருட கால உள்நாட்டு யுத்தத்தை பற்றியும் சுருக்கமாக ஆராய நினைக்கிறேன்.
போர்த்துகேயர்களும் ஒல்லாந்தர்களும் கடல்சார் மாகாணங்களை 16-18ஆம் நூற்றாண்டுகளில் தமது வாசனைத்திரவ பொருட்களின் வணிக தேவையின் பொருட்டும் மூலோபாய கடல் மார்க்கங்களின் தேவையின் பொருட்டும் ஆக்கிரமித்துக்கொண்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தான் நாடு முழுவதையும் 1815ஆம் ஆண்டு தொடக்கம் தமது ஆக்கிரமிப்பிற்குள் கொண்டுவந்தனர். அவர்கள் வயல் வெளிகளை தேயிலை தோட்டங்களாக மாற்றி விவசாயிகளை அங்கிருந்து வெளியேற்றி ஒப்பந்தம் செய்யப்பட்ட உழைப்பாளிகளை தென்னிந்தியாவில் இருந்து தோட்டங்களில் வேலை செய்வதற்காக வரவழைத்தனர். ஆங்கிலம் உத்தியோகப்பூர்வ மொழியாக ஆக்கப்பட்டதுடன் கிறிஸ்தவம் விஷேட கவணிப்பு வழங்கப்பட்ட மதமாக ஆக்கப்பட்டது. ஆக்கிரமிப்பிற்குற்பட்ட மக்களை வெகுவாக பரப்பிய இந்த பிரித்தானிய கலாச்சாரத்தின் மூலம் வென்றதானது அவர்களது ஆக்கிரமிப்பையும் இலகுபடுத்தக்கூடியதாக இருந்தது. இதற்கடுத்து, பிரித்தானியர்களால் சிலோனிற்கு கொண்டுவரப்பட்ட தமிழர்களையும் பலங்காலம் தொட்டு இலங்ககையில் வாழ்ந்து வரும் சுதேச தமிழர்களையும் நாம் பிரித்து நோக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
இந்திய தேசியவாத போராட்டத்தின் ஒரு விளைவாக சிலோன் 1948இல் தனது சுதந்திரத்தை பெற்றுக்கொண்டது. ஆகையால் தேசியவாத போராட்டத்தினுள்ளடங்கும் தேசிய அரசை கட்டமைத்தல் எனும் செயன்முறையினூடாக அது செல்லவில்லை. ஆங்கிலம் கற்ற ஒரு உயர்வர்க்கம், சர்வசன வாக்குரிமை, மற்றும் வாக்குகள் மூலம் தேர்வுசெய்யப்பட்ட ஒரு பாராளுமன்றம் போன்ற காரணங்களினால் இலங்கையானது சுயாட்சிக்கு தகுதியானதும், சிறப்பானதொரு காலனிக்கு எடுத்துக்காட்டாகவும் பார்க்கப்பட்டது.
எப்படியாயினும் இவையனைத்தும் நிலப்பிரபுத்துவ கட்டுமானத்தின் மீது வழுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட முதலாளித்துவ ஜனநாயகத்தின் புறக்கவர்ச்சியாகவே இருந்தது. நிலப்பிரபுத்துவ நிலத்தின் மேல் உரமிடப்பட்ட ஜனநாயகமாகவே அது இருந்தது. இருப்பினும் காலனிய முதலாளித்துவமானது கலப்புத் தன்மைகளை உள்ளடக்கியதும் மாற்றம் பெறும் தன்மையை கொண்டதுமாகும். அது நாட்டின் சில பகுதிகளை வளர்ச்சி குன்றச்செய்வதோடு அது வளர்ச்சியடைய செய்யும் பகுதிகளோ நாட்டின் தேவையுடனும் வளர்ச்சியுடனும் இணங்கி செல்லாததாகவும் இருக்கும். ஜனநாயகத்தை நிலைநிருத்தும் நிறுவனங்களையோ கட்டமைப்புகளையோ அது வளரவிடுவதும் இல்லை. மையத்தில் இருக்கும் நாடுகளை போலல்லாமல் விளிம்பிலுள்ள நாடுகளில் முதலாளித்துவமானது அரசியலுக்கும் பொருளாதாரத்திற்கும் கலாச்சார நிகழ்வமைவுகளுக்கும் இடையில் ஒத்திசைவானதொரு உறவை கட்டமைப்பதில்லை. ஒத்திசைவற்ற வளர்ச்சியையும் சிதைவடைந்த ஒரு ஜனநாயகத்தையுமே இந்த பொருத்தமற்ற முதலாளித்துவம் உற்பத்தி செய்கிறது.
அதிகாரம் என்பது அப்போது இருந்த நிலப்பிரபுத்துவ உயர்வர்க்கத்தினரான நிலங்களை உரிமை வைத்திருந்த பிரபுக்களிடமே இருந்தது. தமது மூன்றாம் மற்றும் நான்காம் தலைமுறைகளில் வாழ்ந்து கொண்டிருந்த “தோட்டத்தொழிலாள தமிழர்களை” உரிமையற்றோராக ஆக்குவதையே தமது முதற் பணியாக டீ. எஸ். சேனாநாயக்காவின் கீழ் அமைந்த சுதந்திர அரசாங்கம் செய்தது. இதன் மூலம் மலையகத்தில் சிங்கள வாக்காளர்களின் பெரும்பான்மையை அதனால் நிறுவ முடிந்தது. தமிழ் மொழி பேசும் மக்கள் செறிந்து வாழும் வடகிழக்கில் சிங்கள விவசாயிகளை குடியேற்றுதல் போன்ற காலனிய முறைமைகளால் இந்நிலைமை பின்தொடரப்பட்டது. இதன் மூலம் அப்பிரதேசத்தின் இனவாரி மக்கள் தொகை மாற்றம் செய்யப்பட்டது. தேர்தல்கள் கட்சிகளை அடிப்படையாக வைத்து நடாத்தப்பட்டாலும் கட்சிகளானது தன்னளவில் நிலப்பிரபுத்துவ வர்க்கத்தின் மீதான விசுவாசத்தின் அடிப்படையிலேயே இயங்கின. லங்கா சமசமாஜ கட்சி (LSSP), ட்ரொஸ்கிய வாதிகள் மற்றும் கம்யூனிச கட்சி போன்றவையே இதற்கு விதிவிலக்காக இருந்தன. விளைவாக, அரசாங்கமானது வாரிசுவத்தின் அடிப்படையில் அமைந்த அரசாங்கமகவே இருந்தது. முதல் பிரதமரை தொடர்ந்து அவரது மகன் டட்லி சேனாநாயக்காவும், அதன் பின்பு அவரது மருமகன் சார் ஜான் கொத்தலாவெல என்று ஆட்சி தொடர்ந்தது. இதன் காரணமான ஆளும் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியானது (U.N.P) மாமா-மருகனின் கட்சி என்று பொருத்தமாக அறியப்பெற்றது.
இதன் முக்கியமான திருப்புமுனையானது ஆக்ஸ்ஃபார்டில் பயின்ற சாலமன் வெஸ்ட் ரிஜ்ஜுவே டயாஸ் பண்டாரநாயக்கவின் மூலம் 1956ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. தற்போது தொடர்ந்து கொண்டிருக்கும் வம்சாவழி ஆட்சியினுள் தொலைதூர உறவாகிய தானும் இடம் பெற வேண்டுமெனின் தேர்தல் பெரும்பான்மையை உத்தரவாதப்படுத்தும் வகையில் தயார் நிலையிலுள்ள மதம் மற்றும் மொழியின் அடிப்படையில் அமைந்த இன மைய அரசியலை முன்னெடுப்பது தான் அதற்கான ஒரே வழி என்ற முடிவுக்கு வந்தார். சிங்கள மொழி பேசும் மக்கள் தொகையானது சுமார் 70 சதவீதம், இவர்கள் பெரும்பாலும் பௌத்தர்களாகவும் இருந்தார்கள். (தமிழ் மொழி பேசும் மக்கள் கிட்டத்தட்ட 20 சதவீதம்). ஒரு தேசியவாதியாகவும் ஒரு தேசப்பற்றாளராகவும் அவர் செய்தவை யாவும் அதிகாரத்தை மக்களிடம் மீள ஒப்படைத்து, அவர்களது பண்டைக்கால உரிமைகளை மீளப்பெறச்செய்தார். இதன் விளைவாக சிங்களத்தை உத்தியோகபூர்வ மொழியாக மாற்றுதல் மற்றும் பௌத்தத்தை அரச மதமாக ஆக்குதல் ஆகிய இரண்டு அடிப்படைகளினை கொண்டு அவர் ஆட்சிக்கு வந்தார். மொழி பற்றிய இக்கொள்கையானது அவர் பதவியேற்ற 24 மணிநேரத்துக்குள்ளேயே அமுல்படுத்தப்பட இருந்தது. அனைத்து அரச உத்தியோகத்தர்களும் தங்களது உத்தியோகத்தை தக்கவைத்து கொள்ள வேண்டுமெனின் வரையறுக்கப்பட்ட ஒரு காலப்பகுதியினுள் தங்களது அரச அலுவலக வேலைகளை நிறைவேற்றும் அளவுக்கு தேவைபடும் சிங்கள மொழி அறிவை பெற்றிருக்க வேண்டிய கட்டாயமும் இருந்தது. அத்தோடு பாடசாலைகளிலும் அறிவுறுத்தல்களுக்கான மொழியாக சிங்கள மொழியே பிரகடனப்படுத்தப்பட்டது.
தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தினதும் அடைவுகளினதும் மையத்தின் மீதே பண்டாரநாயக்க குறிவைத்தார். பிள்ளைகளை தவிர வேறெதுவும் வளராத வடக்கின் வறண்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்களின் முதன்மை துறையாக இருந்தது அரசாங்க உத்தியோகமும் கல்வியும் தான். ஆங்கில கல்வியானது அவர்களது கடவுச்சீட்டாக இருந்து வந்தது. அத்தோடு பிரத்தானியாவின் பிரித்தாளும் கொள்கைகளானது தமிழ் அதிகார வர்க்கமொன்றின் தோற்றத்தை ஊக்குவித்து வலுவூட்டவும் செய்தது. இதன் காரணமாக சுதந்திரத்தின் போது நிர்வாக சேவைகள் மற்றும் தொழில்களில் தமிழர்களின் பிரசன்னமானது சாதாரண அளவுக்கும் அதிகமாக இருந்தது.
பண்டாரநாயக்காவின் கொள்கைகள் அவற்றிற்கு ஒரு முற்றுப்புள்ளியிடும் நோக்கிலே முன்மொழியப்பட்டது. ஆனால் அதன் அமுலாக்க செயல்பாட்டில் தமிழை ஒரு பழமை வாய்ந்ததென கருதும் (அது உண்மையில் பழமை வாய்ந்தது தான்) மற்றும் கணிசமான தொகையில் அமைந்த அதன் இலக்கியங்களை தங்களது வளமான ஒரு பாரம்பரியமாக கருதும் ஒரு மக்கள் குழுமத்தின் தாய் மொழியை அது தரம் தாழ்த்தவே செய்தது. அதனை கண்டிக்கும் விதமாக தமிழ் தலைவர்கள் பாராளுமன்ற சபைகளுக்கு முன் அமர்ந்து அஹிம்சை வழியில் ஒரு மாபெரும் எதிர்ப்பு போராட்டம் நிகழ்த்திய போது அரசாங்கம் அவர்களது இந்த கீழ்ப்படியாமை செயலின் காரணமாக அவர்கள் மீது குண்டர்களை ஏவிவிட்டு தாக்கியது. இதன் பின்பே ‘அமர்ந்திருக்கும் வாத்துக்கள்’ என்ற சொற்றொடருக்கான அர்த்தம் உருப்பெற்றது.
அதில் இருந்து இனச்சுத்திகரிப்புக்கான இரண்டு வழிவகைகள் துவங்கின: “சட்டப்பூர்வமான” மற்றும் சட்டப்பூர்வமற்ற, குடிமக்கள் சார்ந்த மற்றும் இராணுவம் சார்ந்த, பாராளுமன்றத்திற்கு உற்பட்ட மற்றும் பாராளுமன்றத்திற்கு அப்பாற்பட்ட என்கிற ரீதியில் அவை அமைந்திருந்ததோடு அவை ஒன்றோடு ஒன்று இணங்கியும் வலுவூட்டிக்கொண்டும் இருந்தன. இனச்சுத்திகரிப்பானது வேறுபட்ட தனியான ஒரு செயன்முறையல்ல. இனப்படுகொலையானது அதன் தர்க்கபூர்வமான முடிவன்றி வேறில்லை.
தனது ஆக்ஸ்ஃபார்ட் கால்சட்டையை தேசிய ஆடையிற்காகவும், கிறிஸ்தவத்தை பௌத்தத்திற்காகவும், ஆங்கிலத்தை சிங்களத்திற்காகவும் விலக்கி வைத்த பிரதமர், தற்போது தனது சோஷலிச ஜனநாயக கொள்கைகளுக்கும் தேசியவாத நடைமுறைகளுக்கும் இடையில் சிக்கிக்கொண்டருந்தார். அவர் தமிழை ஒரு பிராந்திய மொழியாக அடையாளப்படுத்துவது குறித்த முன்மொழிவுகளை வழங்கினார். ஆனால் மந்திரிமார்களும் எதிர்க்கட்சிகளும் இனவாதத்தை தூக்கிப்பிடித்தனர். தேர்தல் பிரச்சார மேடைகளுக்கு மடாலயங்களில் இருந்த பௌத்த பிக்குகளை வெளியே கொண்டுவருவதில் முக்கிய புள்ளியாக பண்டாரநாயக்க இருந்தார். அம்மேடைகளில் தீர்மானகரமானதொரு அதிகாரத்தை கொண்டிருந்த அப்பிக்குகள் பண்டாரநாயக்கவை அவரது ஆரம்ப பணிக்கு திரும்புமாறு வலியுறுத்தினர். அமைதியான முறையில் நிகழ்த்தப்பட்ட தமிழ் ஆர்ப்பாட்டங்கள் போலீஸ் வன்முறையை சந்தித்தன. 1958ஆம் ஆண்டின் மே மாதத்தில் வடக்கில் தமிழ் ஒன்றுகூடல் ஒன்றுக்கு சென்று கொண்டிருந்தவர்களை சிங்கள அரசியல்வாதிகளினால் ஏற்பாடு செய்யப்பட்ட குண்டர்கள் ரயில்கள் , கார்கள் மற்றும் பஸ்களிலிருந்து வெளியேற்றி அவர்களை தாக்கினர். அதனை தொடர்ந்து நாடளவில் தமிழ் மக்கள் அவர்களது வீட்டிலும் தெருக்களிலும் அவர்களது வேலைத்தளங்களிலும் தாக்கப்பட்டனர். பண்டாரநாயக்க முடிவெடுக்காமல் இருக்கும் நிலையில் அவரை ஒரு பிக்கு சுட்டுக்கொன்றார். அவரது செயலினால் துவங்கப்பட்ட ஒரு விடயம், இறுதியில் அவரையே பலிகொண்டது.
அந்த புள்ளியில் இருந்து தமிழர்களை கட்டமைப்பு ரீதியாக ஒடுக்கும் முறையானது துவங்கிவைக்கப்பட்டது: இனவாத சட்டவாக்கமும் அதனை தொடர்ந்து தமிழர் தரப்பு எதிர்ப்பும், அதன் பிறகு அரசாங்கத்தின் பக்கத்தில் இருந்து சமரச பாவனைகளும், அம்முயற்சிகளை எதிர்க்கட்சிகள் மறுப்பதும் அதன் பிறகு பௌத்த பிக்குகள் மற்றும் அரசியல்வாதிகளால் தமிழர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டதும் இவையனைத்தினதும் விளைவாக தமிழர்களின் எதிர்ப்பானது மேலும் தீவிரமடைவதும் எனும் ரீதியில் தான் நிகழ்வுகள் அரங்கேறின. இனச்சுத்திகரிப்பினை கட்டம் கட்டமாக திடமாக செயற்படுத்துகையில் அதற்கேற்ப எதிர்ப்பின் வடிவமும் வீரியமும் மாறிக்கொண்டே சென்றன. இறுதியில் அது ஆயுதமேந்திய போராட்டத்திற்கும், உள்நாட்டு யுத்தத்திற்கும் இட்டுச் சென்றது.
அந்த தொடர் நிகழ்வுகளின் விபரங்களுக்குள் இப்போது நான் செல்ல விரும்பவில்லை (இந்த விபரங்களை விரிவாக பார்க்க ஆர்வமுள்ளவர்கள் 1984இல் IRR இணையதளத்தில் நான் எழுதிய கட்டுரையை வாசிக்கலாம் https://irr.org.uk/pdf2/Sivanandan,SriLanka1984.pdf). ஒடுக்குமுறை மற்றும் எதிர்ப்பின் ஒரு முடிவற்ற சுழற்சிக்கு வழிவகுத்த, அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த சிங்கள-ஆதிக்க அரசாங்கங்களின் முக்கிய நடவடிக்கைகளினை சுட்டிக் காட்டுவதே போதுமானது. பண்டாரநாயக்க தமிழர்களின் தாய் மொழியை தடைசெய்தார் என்றால், அவரது மனைவி சிறிமாவோ பண்டாரநாயக்க தமிழர்களை முழுமையாக மண்டியிட்டு பணியும் நிலைக்கு கொண்டுவந்தார்.
மொழி சார்ந்த விதிகளினை பயன்படுத்தி தமிழ் மக்களை பொதுவாக பொலிஸ், இராணுவம், நீதிமன்றங்கள் மற்றும் அரசாங்க சேவை என்று அனைத்து பகுதிகளில் இருந்தும் விலக்கி வெளியேற்றினார். மேலும் காலங்காலமாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த வடகிழக்கு பிரதேசங்களில் தெற்கிலுள்ள சிங்களவர்களை குடியேற்றி அப்பிரதேசத்தை காலனியப்படுத்தியதோடு, ஏலவே வாக்குரிமை/குடியுரிமை பறிக்கப்பட்டோராக இருந்த மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர்களை மீள திருப்பி அனுப்பவும் செய்தார். இன்னும் முக்கியமாக தமிழ் மாணவர்கள் பல்கலைகழகத்தினுள் அனுமதிக்கப்பட வேண்டுமென்றால் அவர்கள் தங்களைப்போன்ற சிங்கள மாணவர்களை விடவும் அதிகப்புள்ளிகள் பெற வேண்டிய நிலையையும் அவர் கொண்டுவந்தார். தமிழர்கள் தொடர்ந்தும் மேற்படிப்பிலும் தொழில்களிலும் அதிக எண்ணிக்கையானோரை கொண்டிருப்பதை தொடர விட முடியாது என்றே இதற்கான நியாயமாக சொல்லப்பபட்டது.
தமிழ் இளைஞர்கள் காலூன்றிக் கொண்டிருந்த தரையினை தனது ஒரே தாக்குதலின் மூலம் சிறிமாவோ பண்டாரநாயக்க துண்டித்துவிட்டார். அந்த ஒரே தாக்குதலின் மூலம் அவர்களின் எதிர்காலத்தை சிதைந்து செல்ல வைத்தார். ஒரு மக்கள் குழுமத்தின் மொழியும், அவர்களது அடையாளமும் அபகரிக்கப்பட்டது. அவர்களது நிலம் மற்றும் அவர்களது வாழ்வாதாரமும் அவர்களிடம் இருந்து பறிக்கப்படுகிறது. அவர்களது கல்வியை பறித்ததோடு அவர்களது நம்பிக்கை மற்றும் கனவுகளும் பறிபோகிறது. அவர்களது பெற்றோர்கள் பகுத்தறிவபூர்வமான மற்றும் சமரச வழிமுறைகளை முயற்சி செய்து தோல்வியுற்றதையும் அவர்கள் கண்டிருக்கிறார்கள். மேலும் அவர்கள் அஹிம்சை வழியில் போராட முயற்சித்ததையும், வன்முறையால் மட்டுமே எதிர்கொள்ளப்பட்டதையும் அவர்கள் பார்த்திருக்கிறார்கள். சமஷ்டிக் கட்சியிலுள்ள தமது பிரதிநிதிகள் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் தங்கள் தேர்தல் பிச்சைப் பாத்திரத்துடன் ஓடுவதை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். ஒரு காலத்தில் இனவாத சட்டங்களுக்கு எதிராகவும் மொழி சமத்துவத்திற்கு ஆதரவாகவும் இருந்த ட்ரொஸ்கிய மற்றும் கம்யூனிச கட்சி இடதுசாரிகள், இறுதியில் சமத்துவத்திற்கான தங்கள் அழைப்பைக் கைவிட்டு, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் தேசியமயமாக்கல் பற்றிய போலித்தனங்களுக்கு அடிபணிந்து, அவரது ஐக்கிய முன்னணி அரசாங்கத்தில் இணைவதையும் அவர்கள் கண்டிருந்தார்கள்.
இந்த காலப்பகுதி வரையில் இலங்கையிலுள்ள இடதுசாரிகளுக்கு, அதிலும் குறிப்பாக ட்ரொஸ்கிய LSSPக்கு உன்னதமான ஒரு வரலாறு இருந்தது. 1930களில் மலேரியா தொற்றுநோய் பரவிக்கொண்டிருந்த காலப்பகுதியில் தோன்றிய இக்கட்சியை வைத்தியர்கள் தான் முன்னெடுத்தனர். நோய்வாய்ப்பட்டு வரும் மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்குவதற்காக அவர்கள் கிராமங்களில் மக்களுக்கான மருத்துவமனைகளை அமைத்தனர். அவர்களும் கம்யூனிச கட்சியும் தான் நகர்புற உழைக்கும் வர்க்கத்தை அரசியல்மயப்படுத்தியதோடு செழிப்பானதொரு தொழிற்சங்க இயக்கமொன்றையும் உருவாக்கினர். 1953இல் உணவு பண்டங்களின் விலைகள் அதிகரித்துக்கொண்டிருக்கும் சூழ்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கம் அதுவரை காலமும் மக்களுக்கு மானியத்தின் மூலம் வழங்கிக்கொண்டிருந்த ரேஷன் அரிசியை வழங்குவதிலிருந்து பின்வாங்கியபோது இவர்கள் நாட்டை ஒரு ஹர்த்தாலில் (அனைத்து தொழில்களையும் இடைநிறுத்தல்) ஒன்று கூட்டி பொதுவெளிக்கு கொண்டு வந்தனர். சுற்றிவலைக்கப்பட்டிருந்த மந்திரிகளை துறைமுகத்திலிருந்த ஒரு கப்பலில் அடைக்களம் தேடி ஓடவும் வைத்தனர். ஆனால் 1953ம் ஆண்டானது இடதுசாரியத்தின் தோல்வியையும் கோடிட்டு காட்டக்கூடியதாக இருந்தது. கைவசம் இருக்கும் நன்மையான அடைவுகளை சரியாக பயன்படுத்துவதை விடுத்து அதனுள் இருந்த மத்திய தர வர்க்க தலைமைத்துவம் ஒன்று தமது இந்த பெரும் வெற்றி கண்டு ஓர் திடீர் அச்சத்தை உணர ஆரம்பித்தது. இதன் விளைவாக அவர்கள் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டு, ஹர்தாலை கைவிடவும் செய்தனர். புரட்சியின் தருணம் முடிவடைந்ததோடு, பாராளுமன்றமானது இடதுசாரிகளின் களமாக மாறத்தொடங்கியது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று அவர்கள் சிரிமாவோ பண்டாரநாயக்கவின் இனவாத அரசாங்கத்துடன் இணைந்தனர். இதற்கு பிறகு தான் இறுதியான இடதுசாரி அமைப்புகள் கீழ்ப்படிய ஆரம்பித்தது. ஒரு புதிய அரசியலமைப்பை தயாரிக்குமாறு கேற்கப்பட்டிருந்த LSSP கட்சியின் வரலாற்றாசிரியர் டாக்டர் கொல்வின் ஆர். டி. சில்வா, ஏலவே வாக்குரிமை / குடியுரிமை பறிக்கப்பட்டு காணப்பட்ட தமிழ் தோட்டத்தொழிலாளர்களை அவர்களது நாட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற அரசியலமைப்பு ஏற்பாட்டை தற்போது உருவாக்கினார்.
சுயமான ஒரு பாணியில் அமைந்த மார்க்சிய சிங்கள இளைஞர் இயக்கமான ஜே.வி.பி , மக்கள் விடுதலை முன்னணி, உடன் பண்டாரநாயக்க அரசாங்கம் போராட வேண்டிய தேவை இன்னும் இருந்துகொண்டே இருந்தது. ஆனால் அவர்களது 1971ஆம் ஆண்டு கிளர்ச்சியானது இராணுவத்தாலும் பொலிஸினாலும் கொடூரமான முறையில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு அவர்களின் முக்கிய உறுப்பினர்கள் கொல்லவும் பட்டனர். அவர்களது அரசியல் கொள்கையானது மார்க்சியத்தை சார்ந்தது என்று அவர்கள் சொல்லிக்கொண்டாலும் “இந்திய விஸ்தரிப்புவாதம்” சார்ந்த அச்சங்களை காரணம் காட்டி இனப்பகைமையை தூண்டிவிடவும் செய்தனர். தமிழர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை உள்ளடக்கியிருந்த அவர்களது மீள் எழுச்சியானது 1987-1989களில் இடம்பெற்ற போது அது ஜயவர்தன அரசாங்கத்தினால் முன்பை விடவும் மிகக்கொடூரமான முறையில் வீழ்த்தப்பட்டது. இன்று இராஜபக்ஷா கூட்டணி அரசாங்கத்தில் பௌத்த பிக்குகளால் ஆரம்பிக்கப்பட்ட தேசிய பாரம்பரியக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவின் ஆரியவாதிகளுக்கு அடுத்தபடியாக இருக்கும் மிகத் தீவிர இனவாதிகள் இவர்கள் தான்.
இடதுசாரியத்தின் வீழ்ச்சியானது தற்போது ஒரு ஜனரஞ்சக சீர்த்திருத்தவாத அரசியலை முன்னெடுக்கும் புத்திஜீவிகளின் வீழ்ச்சியையே தோற்றுவித்தது. தமிழ் இளைஞர்கள் தெற்கை நோக்குகையில் தமக்கான எந்தவொரு ஆதரவு முகாமும் அவர்களுக்கு தென்படவில்லை. அவர்களுக்காக வேண்டி யாரும் போராடவில்லை. அவர்களுக்கு சார்பாகவும் எதுவும் இருக்கவில்லை. தம்மை தாமே சார்ந்திருக்கும் நிலைமை மாத்திரமே அவர்களிடத்தில் இருந்தது. ஆயுதங்கள் ஏந்துவதை தவிர்த்து அவர்களிடத்தில் வேறு எந்த தெரிவும் இருக்கவில்லை. (வன்முறைக்கு உட்பட்டவர்களின் வன்முறையானது ஒருபோதும் தெரிவு சார்ந்ததொரு விடயமாக இருப்பதில்லை. மாறாக அது தெரிவற்றிருக்கும் நிலைமையின் அறிகுறியே. பெரும்பாலான நேரங்களில் இந்த வன்முறையானது தன்னளவினாலான ஒன்றாக உருப்பெறுவதோடு காலப்போக்கில் அது வழி பிறழ்ந்து தன்னை தானே தோல்வியுறவும் செய்யும்).
இளைஞர்கள் ஓரிரண்டு வங்கிகளில் கொள்ளையடிப்பதில், காவல் நிலையங்களில் இருந்து ஆயுதங்களை திருடுவதில் இருந்து தொடங்கினர். மற்றும் சைக்கில்களின் மூலம் பாதுகாப்பாக தப்பித்தும் சென்றனர். வடக்கானது, அதிலும் குறிப்பாக யாழ்ப்பாணமானது, மறைந்திருப்பதற்கு வசதியான மலைகள் மற்றும் காடுகளை கொண்ட ஒரு பாரம்பரிய கெரில்லா போராட்டத்திற்கான நிலப்பரப்பு அல்ல. குறுகிய வலைவுகளை கொண்ட சிக்கலான வழிகளினாலும் பெரிய அடர்த்தியான பனைமர இலை வேலிகளால் மறைக்கப்பட்டு கிடக்கும் சிறிய பாதைகளினாலும் அமைந்த அதன் கிராமங்கள் சைக்கில்களுக்கான நிலப்பரப்பே அன்றி மோட்டார் வாகனங்களுக்கானது அல்ல. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவருக்கு நகரங்களிலும் கூட சைக்கில் தான் பிரதான போக்குவரத்து சாதனங்களாக இருந்தது. அத்தோடு ‘தப்பித்து செல்வோருக்கும்’ கூட தமது சைக்கல்களின் மூலம் மக்களோடு மக்களாக கலந்து தம்மை மறைத்துக் கொள்ள முடியுமாக இருந்தது. பொலிஸாரின் விரக்திகள் அதிகரிக்க, அதன் விளைவாக நிகழ்ந்த விசாரணைக்கான தடுத்து வைப்புகள் பற்றிய கதைகள் பெரும் புராணமானது. இதன் காரணமாக பொற்றோர்களும் வயதானவர்களும் தங்களது இளைஞர்களுக்கு பின்னால் அணி திரள ஆரம்பித்தனர். இவர்களது தலைமுறையானது பலவீனமானதும் கோழையானதும் என்ற பொதுக்கருத்தொன்று உற்பத்தி செய்யப்பட்டதுடன், அவர்களை ஒவ்வோர் சிங்கள அரசாங்கமும் மண்டியிட வைக்கவும் செய்தது. இவர்களது இளம் தலைமுறை இவர்களை தங்களது பாதங்களில் தன்னம்பிக்கையுடன் எழுந்து நிற்கச்செய்தது. அந்த இளைஞர்கள் “இவர்களது சிறுவர்களாக இருந்தார்கள்”, இவர்களது தம்பியாகவும் தலைவர்களாகவும் இருந்தனர். அவர்கள் மீது இவர்கள் தம் நம்பிக்கையை வைத்திருந்தனர். அவர்களுக்கு அடைக்கலம் வழங்கினர். இவர்களுக்குள் நுழைந்து தப்பித்து செல்வதற்கும் இவர்கள் விட்டனர். அவர்களது மீன்களுக்கான தண்ணீராக இவர்கள் ஆனார்கள்.
ஆனால் இந்த சாகசங்கள் நிறைந்த ராபின் ஹுட் காலப்பகுதியானது 1970களில் ஜயவர்தனா அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் கசப்பானதும் கொடூரமானதுமான ஒரு காலமாக மாறத் துவங்கியது. அமைதியாக போராட்டங்கள் செய்வோரின் மீது பொலிஸாரை ஏவிவிட்டு அவர்களை களையச்செய்வதும், தமிழ் இளைஞர்களை சிறைவைத்து துன்புறுத்துவதும், யாழ்ப்பாண பஸாரில் இலவச உணவுப்பொருட்கள் மறுக்கப்படும் போது அதை எறித்துவிட்டு அதன் மூலம் தமிழ் மக்களின் மீது ஆதிக்கம் செலுத்துவது என்கிற ரீதியில் ஜயவர்தனா அரசாங்கம் தொழிற்பட்டது. இதன் விளைவாக இளைஞர்கள் பழிவாங்கும் பொருட்டு பொலிஸாரை கொலை செய்தனர். 1979ஆம் ஆண்டு அரசாங்கம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) செயற்படுத்தி “ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும்” என்ற உத்தரவுடன் இராணுவத்தை யாழ்ப்பானத்திற்கு அனுப்பி வைத்தது. PTAவினை தொடர்ந்து அப்பாவி தமிழர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதானது பொது மக்களை வளர்ந்து வரும் வன்முறை சார் போராட்ட குழுக்களுடன் இன்னும் அதிக எண்ணிக்கையில் இணைய வைத்தது. அப்போராட்ட குழுக்கள் அனைத்தும் தனியானதொரு தமிழீழ அரசை கோரினர். அவற்றில் மிகவும் தீவிரமான போராட்ட குழுவாக இருந்தது LTTE ( தமிழீழ விடுதலைப் புலிகள்).
தமிழ் கற்கைகளினதும் கலாச்சாரத்தினதும் மையமாக இருந்த ‘ஓலை’ கைழயெழுத்து பிரதிகள் மற்றும் அரிய இலக்கியங்களை கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகத்தை 1981இல் அரசாங்கத்தின் பாதுகாப்பு படை தீயிட்டு தரைமட்டமாக்கியது. அகதிகளை இயல்பு வாழ்க்கைக்கு மீட்டெடுப்பதற்காக ஒரு தமிழ் மருத்துவரால் அமைக்கப்பட்ட ‘காந்தியம்’ என்ற அகதி முகாம், அதே வருடத்தில் பொலிஸாரால் ஆக்கிரமிக்கப்பட்டு பண்ணையாக மாறியது; அதன் ஒருங்கிணைப்பாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அல்லது கைது செய்யப்பட்டார்கள். 1983இல் விடுதலை புலிகள் 13 இராணுவத்தினரைக் யாழ்ப்பாணத்தில் கொன்றது.
அந்த சடலங்களை அரசாங்கம் கொழும்பிற்கு கொண்டு வந்து கோபத்தில் இருந்த சிங்கள மக்களுக்கு முன்னால் காட்சிப்படுத்தி கலவரங்களை (உண்மையில் அவை திட்டமிடப்பட்ட படுகொலைகள்) தூண்டிவிட்டது. இதனை தொடர்ந்து வெலிகடை சிறைச்சாலையில் PTA சட்டத்தின் கீழ் கைதாகி வழக்கு விசாரணைக்காக காத்துக்கொண்டிருந்த தமிழ் கைதிகள் சிறைகாவலாளிகளால் பூட்டு இடுவதற்கு மறந்து போன சிறை அறைகளில் இருந்த சிங்கள கைதிகளால் கொலை செய்யப்பட்டனர்!
அப்போது தான் சிவில் யுத்தம் அதன் தீவிர தன்மையில் துவங்கியது. அரசாங்கம் மற்றும் கெரில்லா போராளிகள் என்று இரு பக்கத்திலும் வன்முறைகளின் வீதம் அதிகரித்தது. இடைக்கிடையில் ‘பேச்சுவார்த்தைக்கு’ அல்லது சமாதான மத்தியஸ்தத்திற்காக இடை நிறுத்தங்கள் இடம்பெற்றாலும் அவை கடைசியில் இரண்டு பக்கமும் தம் படைகளை இன்னும் அதிகம் தயார் செய்து அதிக தீவிரமாக தாக்குவதற்காக எடுத்து கொண்ட நேரமாக மாத்திரமே அவை இருந்திருக்கின்றன. இந்த காலப்பகுதியில் அரசாங்கமானது தனது சொந்த இராணுவத்திற்கு தமிழர்களை அச்சுறுத்தவும் அவர்களை வீடுகளை விட்டு வெளியேற்றவும் இடம் வழங்கியதன் மூலம் தமது சிவில் இனச்சுத்திகரிப்பிற்கு ஒரு உத்தியோகப்பூர்வ இராணுவ பரிமாணத்தையும் இணைத்துக்கொண்டது. அகதி முகாம்கள் தாக்கப்பட்டு, அதனுள் இருந்தவர்கள் தாக்கப்படவும் அல்லது வெளியேற்றப்படவும் செய்தனர். தொழில்துறை அமைச்சரினால் காசு வழங்கப்பட்ட குண்டர்கள் தமிழ் தோட்ட தொழிலாளர்களை வழுக்கட்டாயமாக அவர்களது வீடுகளை விட்டு வெளியேற்றி அவரால் வழங்கப்பட்ட லாரிகளின் மூலம் நூற்றுக்கணக்கான மைல்களுக்கு அப்பால் கொண்டு சென்று போட்டுவிட்டு வந்தார்கள். (அரசு அதனது தமிழ் குடிமக்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தது.)
அதே போன்று விடுதலை புலிகளின் கெரில்லா போராட்டமானது தற்கொலை தாக்குதல் மற்றும் சதிக்கொலைகளினால் ஒரு தற்காலிக இராணுவவாதத்தை நோக்கி வீழ்ச்சியடைந்தது. அதன் அரசியலானது அதன் பின்பு மறைந்து போன ஒன்றாக ஆகிவிட்டது. உடலின் தலைப் பகுதியான அரசியலினை, அதன் வால் பகுதியான இராணுவம் ஆட்டத் துவங்கியது (அதிக முக்கியத்துவம் வாய்ந்த அடிப்படை அம்சமான அதன் அரசியலினை, இராணுவவாதம் தீர்மானிக்கவும் கட்டுப்படுத்தவும் துவங்கியது). தமது கொள்கை இலக்குக்காக வேண்டி சிங்கள மக்களையோ அல்லது தமது சொந்த மக்களையோ வென்றெடுப்பதையோ விடுத்து தமக்கு எதிராக நிற்கும் அனைவரையும் ஒழித்துவிடுவதில் மட்டும் தான் விடுதலைப் புலிகள் அதிக ஆர்வம் கொண்டனர். அது அவர்களின் கூட்டத்தில் முரண்படக்கூடிய ஒருவராக இருந்தாலும் சரி அல்லது இந்தியாவின் பிரதமராக இருந்தாலும் சரி இவர்கள் அவர்களை ஒழித்துவிடுவதையே கையாண்டனர். இந்திய தமிழர்களை அந்நியபடுத்திய இச்செயலானது தம்மை தாமே சுயதோல்வி அடைய செய்யும் ஒரு செயலாகவே இருந்தது. இரண்டு வருடங்களுக்கு பிறகு 1993இல் புலிகள் இலங்கையின் ஜனாதிபதி ஆர். ப்ரேமதாஸவை படுகொலை செய்தனர். இவர்களது இறுதி தோல்வியானது 2004ஆம் ஆண்டு இவர்களது இராணுவத்தின் மூலோபாயவாதி மற்றும் இரண்டாம் நிலை தளபதியான முரளிதரன் இராஜபக்ஷா அரசாங்கத்தின் பக்கத்தை நோக்கி தாவிச்சென்றதன் விளைவாக நிகழ்ந்தது. முரளிதரன் மற்றும் அவரது ஆட்கள் புலிகளின் கெரில்லா நிலைப்படுத்தல்கள் மற்றும் உத்திகள் பற்றிய உள்ளக தகவல்களை வழங்கியதானது இறுதியில் புலிகளை மொத்தமாக வெற்றிக்கொள்வதில் பெரிதும் உதவியது. அவர் இன்று கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக இருப்பதோடு இராஜபக்ஷா அரசாங்கத்தின் ஒரு அங்கத்தவராகவும் இருக்கிறார். தமிழர்கள் மீதான அரசாங்கத்தின் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும், அவர்களுக்கு ஏதோ ஒரு அளவில் பிராந்திய சுயாட்சி ஒன்றை வழங்குவதற்கான நோக்கத்தின் அறிகுறியாகவும் இது உயர்த்திப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், புலிகள் தோற்கடிக்கப்பட்டதின் பின்பான ஜனாதிபதியின் சொந்த நடவடிக்கைகள், அதிலும் மிக முக்கியமாக முந்தைய அனைத்து அரசாங்கங்களையும் விட அவரது அரசாங்கம் உருவாக்கிய அரசியல் கலாச்சாரம், அத்தகைய எந்தவொரு ஜனநாயக விளைவையும் சாத்தியமற்றதாக்குகிறது. ஏனென்றால் அறுபது ஆண்டுகால சுதந்திரத்தில் ஒரு இன மைய) சிங்கள-பௌத்த அரசாட்சி முறைமையே வளர்ச்சியடைந்திருப்பதோடு, நிலப்பிரபுத்துவ வழக்காறுகள் மற்றும் கட்டுக்கதைகளால் கட்டிக்காக்கப்படும் ஒரு பொய்யான வரலாற்றுவாதத்தால் அது போஷிக்கப்படவும் செய்கிறது. இனப் பெரும்பான்மையை என்றும் அதிகாரத்தில் வைத்திருக்கும் ஒரு தேர்தல் முறைமையுடன், அதன் கட்சி அமைப்பானது பிக்குகளாலும் குடிப்படைகளாலும் பலப்படுத்தப்பட்ட ஆட்சிக்காக போட்டியிடும் அரசியல் வம்சங்களுக்கு இடையிலான சண்டையாக மாத்திரமே இருந்தது.
அந்த அரசாட்சி முறைமைக்குள் இராஜபக்ஷா அரசாங்கமானது, அல்லது (அமைச்சரவையில் மூன்று சகோதரர்களைக் கொண்ட) கூட்டுக்குழுவானது முழுமையான தணிக்கையை கொண்ட ஒரு ஆட்சியை ஆரம்பித்து, அதன் போர்வையின் கீழ் கருணையற்ற ஒரு யுத்தத்தை சமமான கருணையற்ற தன்மையை கொண்ட புலிகளுக்கு எதிராக மட்டுமல்லாமல் அப்பாவி தமிழ் பொதுமக்களின் மீதும் நடாத்தியது. யாரோ ஒருவர் அதை “சாட்சிகள் அற்ற போர்” என்று அழைத்தார். இவை நடந்து கொண்டிருக்கையில் சிங்கள பொது மக்களுக்கு அரசாங்கத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட உண்மைகளை அரசாங்கம் ஊட்டிவிட்டதோடு, அரசாங்கத்தை விமர்சனம் செய்யத்துணிந்த ஊடகவியலாளர்களை அது தீர்த்துக்கட்டவும் செய்தது. ( துணிச்சலான ஊடகவியலாளர்களை கொலை செய்து வருவதை விமர்சித்து தனது நண்பராகிய ஜனாதிபதி இராஜபக்ஷவிற்கு கடிதம் எழுதிய Sunday Leader பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் பிரபலபான சம்பவம் உங்கள் அனைவருக்கும் ஞாபகமிருக்கும். அவர் அக்கடிதத்தில் தானும் குண்டர்களால் இவ்வாறானதொரு நிலைமைக்கு ஆட்படுவது பற்றிய கணிப்பையும் குறிப்பிட்டிருந்தார். அது போலவே அந்த சம்பவம் நிகழ்ந்தது.)
சுருக்கமாக சொல்வதென்றால் இன்று எமது நாட்டில் நாம் முகங்கொடுத்து கொண்டிருப்பது என்னவென்றால் பொய்களாலும் கட்டுக்கதைகளாலும் மூளைச்சலவை செய்யப்பட்டிருக்கும் ஒரு மக்கள் குழுவையாகும். அவர்களது புத்திஜீவிகளுக்கு எதைப்பற்றி சிந்திக்க வேண்டும் என்று சொல்லிக்கொடுக்கப்பட்டிருப்பதோடு அவர்களின் ஊடகவியலாளர்கள் மரண அச்சத்தின் மூலம் உண்மையை பேசுவதில் இருந்து தடுக்கப்பட்டும் இருக்கிறார்கள். சிவில் சமூகம் இராணுவ மயப்படுத்தப்பட்டிருப்பதோடு அனைத்து வகையான எதிர்ப்புகளும் மௌனமாக்கப்பட்டு கட்டுப்பாட்டிற்குள் வைக்கப்பட்டிருக்கிறது. மொழி, இனம் மற்றும் மதம் ஆகிய பலவீனமான இணைப்புகளின் மூலம் ஒன்று திரட்டப்பட்டிருக்கும் இந்த தேசமானது தற்போது பாராளுமன்ற சர்வாதிகாரம் மற்றும் பாசிசத்திற்கு இடையேயான ஒரு குறுக்குச்சாலையில் வந்து நின்றிருக்கிறது.
இப்போது நான் பயப்படுவது சிங்கள மக்களுக்காகத்தான்; அவர்கள் காலையில் எனக்காக வந்தால், அதே இரவு அவர்கள் உங்களுக்காக வருவார்கள்.
அம்பலவாணர் சிவானந்தன் (A. Sivanandan) இலங்கையை பிறப்பிடமாக கொண்டு 1958ஆம் ஆண்டு இலங்கை அரச ஆதரவு சிங்கள பேரினவாத வன்முறையைத் தொடர்ந்து பிரித்தானியாவுக்கு புலம் பெயர்ந்தார். அவர் Race & Class என்ற journalலின் எடிட்டராக செயற்பட்டார். இது கறுப்பின, மூன்றாம் உலக விடுதலையை பேசக் கூடிய மிக முக்கியமான ஒரு ஆங்கில இதழாக திகழ்ந்தது. அவர் When Memory Dies என்ற நாவலையும், Where the Dance Is என்ற சிறுகதைத் தொகுதியையும், Catching History on the Wing Race, Culture and Globalisation, A Different Hunger Writings on Black Resistance போன்ற அரசியல் விமர்சன புத்தகங்களையும் எழுதி உள்ளார். அத்துடன் Race & Class, new left review போன்ற இதழ்களிலும் தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.
மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி