-திசரனீ குணசேகர-
இஸ்ரேலுக்கு உடல் உழைப்பை வழங்கும் ஒரு அழுகுணி மற்றும் (சாத்தியமான போர்க் குற்றவாளிகள் உட்பட) கட்டுக்கடங்காத சுற்றுலாப் பயணிகளை விருப்பத்தோடு வைத்துப் போஷிப்பவர் ஆகிய பாத்திரங்களில் இஸ்ரேல், இலங்கையை மட்டுப்படுத்தி வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது.
சிங்கள-பௌத்த அரசை எவ்வாறு உருவாக்குவது என்பதை இஸ்ரேலிடமிருந்து கற்றுக்கொள்வோம்” சிங்கள ராவய தேசிய அமைப்பாளர். (https://www.youtube.com/watch?v=yb3x0M7AgKw)
அங்குனுகல்லே ஸ்ரீ ஜினானந்த தேரர், கலகொட-அத்தே ஞானசார தேரர் அல்லது அக்மீமன தயாரதனே தேரர் ஆகியோர் பெற்ற அளவு அவலப் புகழை இன்னும் பெறவில்லை. அவர் அதற்குத் தகுதியானவர். தனிநபர் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு சட்டத்திலிருந்து சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையை (ICCPR) துன்புறுத்தலுக்கான ஒரு கருவியாக மாற்றிய பெருமை அவரையே சாரும்.
பெப்ரவரி 2019ல், இந்தத் துறவி பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதுகிறார். அதில் இலங்கையைச் சேர்ந்த (சிங்கள-பௌத்த) இளம் எழுத்தாளர் ஷக்திக சத்குமாரவை ‘பௌத்தத்தை அவமதிக்கும்’ சிறுகதையொன்றை எழுதியதற்காக ஐ.சி.சி.பி.ஆர். சட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் அடைக்குமாறு வலியுறுத்துகிறார். அதே துறவி இதற்கு முன்னர், இயக்குனர் மாலக தேவப்ரியவின் வானொலி நாடகத் தொடரான ’கனட்ட பஹரக்’ (கன்னத்தில் அறை) மீது முறைப்பாடு செய்து, அதில் தோல்வியடைந்திருந்தார். ஆனால் இம்முறை பொலிஸ் மாஅதிபர் அதனை கவனத்திற் கொண்டார். எழுத்தாளர் ஷக்திக சத்குமார ஏப்ரல் 1, 2019 அன்று பொல்கஹவல பொலிஸ் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டு, கைதாகி, 130 நாட்கள் கேகாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர்மீது எந்த முதற்கட்ட விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை; மேலும் ‘பி’ அறிக்கையில் துறவியின் புகார் மாத்திரமே இருந்தது என எழுத்தாளர் சத்குமார கூறினார்.
அதைத் தொடர்ந்து ICCPRன் கீழ் ஏனைய கைதுகள் இடம்பெற்றன. அவற்றில் மிகவும் பிரபலமானது நகைச்சுவை நடிகர் நதாஷா எதிரிசூரியவை இளவரசர் சித்தார்த்தரின் தந்தையான மன்னர் சுத்தோதனர் குறித்த ‘ராஜ துரோக’ கருத்துக்களுக்காக சிறையில் அடைத்ததாகும். சிங்கள ராவய அமைப்பின் அக்மீமன தயாரதன தேரர் மற்றும் நதாஷா எதிரிசூரியவுக்கு எதிராக முறைப்பாடு செய்த ஏனைய துறவிகள், அவரது ‘மத நிந்தனை’ நகைச்சுவைகளைப் பார்த்து சிரித்த பார்வையாளர்களையும் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கைவிடும் அளவுக்குச் சென்றனர்.
எதிரிசூரிய வழக்கில் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்தி அவர்கள் வழங்கிய வரலாற்று சிறப்புமிக்க பிணை உத்தரவின் மூலம் அவ்வாறு தொகையாக இடம்பெற்று வந்த கலைஞர்கள் வேட்டை முடிவுக்கு வந்தது. ஒரு இன அல்லது மதக் குழுவைப் புண்படுத்தும் வகையில் அறிக்கைகளை வெளியிடுவதற்காக தனிநபர்களுக்கு எதிராக ICCPR சட்டத்தின் பிரிவு 3ஐப் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பதை அதில் அவர் சுட்டிக்காட்டினார். “குறிப்பாக, ஒரு பெளத்த துறவி அல்லது மற்றொரு மதத் தலைவர் அல்லது சமூகத்தில் செல்வாக்கு மிக்கதோர் நபர் முறைப்பாடு செய்தால், அதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு ஒருவரைக் கைது செய்வது புலனாய்வாளரின் பணி அல்ல” என்று அவர் வலியுறுத்தினார்.
ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தை மதநிந்தனை எதிர்ப்புச் சட்டமாக தவறாகப் பயன்படுத்துவதற்கு முன்னோடியாக இருந்த துறவி இப்போது ஒரு புதிய இலக்கில் பயணிக்கிறார்; – அதுதான் இலங்கையில் இஸ்ரேலின் நலன்களை மேம்படுத்துதல்.
2010 களின் நடுப்பகுதியில், பெஞ்சமின் நெதன்யாகு ‘ஆசியாவை நோக்கிய இஸ்ரேலின் இயக்க மையம்’ என்ற கொள்கையை வெளியிட்டார். 2018 ஆம் ஆண்டில், சபாத்-லுபாவிச் இயக்கத்தைச் சேர்ந்த ரப்பி ரோனி ஆராட், அறுகம்பை விரிகுடா மற்றும் ஹிக்கடுவையில் ஒரு ‘ஷிலாச்’ஆக (முகவர்/தூதர்) கடவுளால் வழங்கப்பட்ட பணி நிமித்தம் இலங்கைக்கு வந்தார். அன்று தொடக்கம், சபாத் ஹவுஸ் மற்றும் இஸ்ரேல் ஆதரவு அமைப்புகள் காளான்களாக முளைத்துள்ளன. இஸ்ரேல்-இலங்கை ஒருமைப்பாட்டு இயக்கம் அத்தகையதோர் அமைப்பாகும். இலங்கை-இஸ்ரேல் உறவுகள் 3,700 ஆண்டுகள் பழமையானவை (!) என்றும், இலங்கையை ‘சர்வதேச மன்றங்களில் இஸ்ரேலின் விசுவாசமான ஆதரவாளராக’ மாற்றுவதற்கு விரும்புவதாகவும் அவ்வியக்கம் கூறுகிறது. மேலும், இந்த நிகழ்ச்சிநிரலை ஊக்குவிக்கும் நோக்கில் அங்குணுகல்லே ஸ்ரீ ஞானானந்த தேரோ போன்ற தீவிரவாத பௌத்த துறவிகளை வளர்த்து, அவர்களை நிலைநிறுத்தி வருகிறது.
2024 அக்டோபரில் இஸ்ரேல்-இலங்கை ஒருமைப்பாட்டு இயக்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டத்தில் உரையாற்றிய தேரர், ‘இலங்கை-இஸ்ரேலிய இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளின் 4000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைப் போற்றினார். மேலும், இஸ்ரேலும் இலங்கையும் ‘ஆத்ம-துணைவர்கள் (ஏகாத்மிகா) என்றும் அறிவித்தார். “இலங்கையில் இஸ்ரேலுக்கான கதவுகளை உடனடியாகத் திறந்து, அந்தப் பண்டைய உறவுகளைப் புதுப்பிக்க வேண்டும்” என்று அவர் அனுர குமார திசாநாயக்கவின் புதிய அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். (https://www.youtube.com/watch?v=1or-lSbIzsU)
வடக்கு மற்றும் கிழக்கு சிங்கள அமைப்பை நிறுவிய அதன் தலைவரான சேனாபதியே ஆனந்த தேரர், இஸ்ரேலிய நலன்களுடன் இணைந்த மற்றொரு தீவிரவாத துறவி ஆவார். தமிழர் எதிர்ப்பு மற்றும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரங்களில் அனுபவம் வாய்ந்த அவர், 2024ல் ‘கிழக்கின் பௌத்த பாரம்பரியத்தைப் பாதுகாப்போம்; இனவெறி வேண்டாம்; இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளைப் பாதுகாப்போம்’ என்ற சுய விளக்கப் பதாகைகளோடு ஒரு ஊடக மாநாட்டை நடத்தினார். (https://www.youtube.com/watch?v=kYFUPxHXzzA)
இந்த இஸ்ரேல் சார்பு காட்சித் தொடரில் மூன்றாவது மற்றும் கூடிய பின்விளைவுகளைக் கொண்டதாக அமைந்தது சிங்கள ராவய எனும் இயக்கத்தின் பிரவேசம். இது தமிழர்கள் தொடங்கி கிறிஸ்தவர்கள் வழியாக முஸ்லிம்கள் வரை, இலங்கையின் சிறுபான்மையினர் மீது தொடுக்கப்பட்ட போர்களின் முன்னணி வழிகாட்டியாக இருந்த அமைப்பாகும்.
தீவிரவாதங்களின் இணைப்பு
ஆகஸ்ட் 30, 2025 அன்று, இஸ்ரேல்-இலங்கை நட்புறவு மேம்பாட்டு அமைப்பு என்று அழைக்கப்படும் ஒரு அமைப்பு கொழும்பில் உள்ள ஐ.நா. வளாகத்திற்கு வெளியே இஸ்ரேலுக்கு ஆதரவான ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த நிகழ்வின் முக்கிய ஊக்குவிப்பாளர் சிங்கள ராவயவின் தேசிய அமைப்பாளர் மதுபாஷண பிரபாத் ரணஹன்சா தலைமையிலான இலங்கை இஸ்ரேல் நட்புறவுக் கூட்டு ஆகும்.
2024 ஆம் ஆண்டு வெளியான ஒரு காணொளியில், சிங்கள-பௌத்த மேலாதிக்கவாதிகளுக்கு இஸ்ரேலை அவர் ஒரு முன்மாதிரியாகக் காட்டினார்: “இஸ்ரேலலைப் போன்று ஒரு சிங்கள பௌத்த அரசை உருவாக்க நாம் ஒன்றுபட வேண்டும்… நூறு சதவீத யூத நாடான இஸ்ரேலைப் போல ஒரு பிரத்தியேக சிங்கள-பௌத்த அரசை நாம் உருவாக்க முடியும்; அது யூத மக்களுக்கான அரசு – அங்கு மற்ற மதத்தினரும் சுதந்திரமாக வாழ்கிறார்கள்” (https://www.youtube.com/watch?v=0hYSXTeFgW8)
1935 ஆம் ஆண்டு ரீச் குடியுரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக அடோல்ப் ஹிட்லர் கலப்புத் திருமணங்களைத் தடை செய்தார். இஸ்ரேலில் கலப்புத் திருமணங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன. 2022 ஆம் ஆண்டில் இஸ்ரேலிய மனித உரிமைகள் அமைப்பான பி’செலெம் சுட்டிக்காட்டியது போல், இஸ்ரேல் ஒரு இனஒதுக்கலை நடைமுறைப்படுத்தும் நாடாகும்.
“இஸ்ரேலிய அரசு, கிழக்கு ஜெரூசலம், மேற்குக் கரை மற்றும் காசா உள்ளிட்ட இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லாப் பிரதேசங்களிலும் ஒரு இனஒதுக்கல் ஆட்சியை நடைமுறைப்படுத்தி வருகிறது. பல்வேறு வகைப்பட்ட இஸ்ரேலிய சட்டங்களின் அடிப்படையில் இன ஒதுக்கலை ஒழுங்கமைக்கும் வலுவானதொரு கொள்கை செயற்பாட்டில் உள்ளது: ஒரு குழு – யூதர்கள் – மற்றொரு குழு – பாலஸ்தீனியர்களின் மீதான மேலாதிக்கத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் நிலைநிறுத்துவது என்பதே அதுவாகும்…” (https://www.btselem.org/topic/apartheid)
2022 ஆம் ஆண்டில் Amnesti International எனப்படும் சர்வதேச மன்னிப்பு சபை இதே போன்றதொரு முடிவுக்கு வந்தது. அதாவது, இஸ்ரேல், சர்வதேச இனஒதுக்கல் மாநாடு மற்றும் இனப்படுகொலை – மனித குலத்துக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் ரோம் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட நடைமுறைகளை தொடராக செயற்படுத்துவதோடு, பாலஸ்தீனியர்களை ‘ஒரு மக்கள்தொகை சார்ந்த அச்சுறுத்தலாக’ கருதுகிறது என்பதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டியது: “இஸ்ரேல், அதன் எல்லாப் பகுதிகளிலும் பாலஸ்தீனியர்களை நடத்துவது ஒரே நோக்கத்தின் பாற்பட்டதாகவே உள்ளது: நிலம் மற்றும் வளங்களை விநியோகிப்பதில் யூத இஸ்ரேலியர்களுக்கு சலுகை வழங்குவது, மற்றும் பாலஸ்தீனியர்களின் இருப்பு மற்றும் அவர்களது நிலத்துக்கான அணுகலைக் குறைப்பது… இஸ்ரேல் அதிகாரிகள் பாலஸ்தீனியர்களை ஒரு தாழ்ந்த இனக் குழுவாகவே நடத்துகிறார்கள்…” (https://www.amnesty.org/en/latest/news/2022/02/israels-apartheid-against-palestinians-a-cruel-system-of-domination-and-a-crime-against-humanity/)
இன மற்றும் மத அடிப்படையில் அமைந்த ஓர் அரசை கட்டியெழுப்புவதில் இஸ்ரேல் மிகவும் வெற்றிகரமான உதாரணமாக இருக்கலாம். இது பன்மைத்துவம் மற்றும் சகிப்புத்தன்மைக்கு எதிரானது. சிங்கள ராவய போன்ற அமைப்புக்கள், இஸ்ரேலை – குறிப்பாக அது பாலஸ்தீனர்களை வகைதொகையின்றி கொன்றொழிக்கும் இனப்படுகொலையின் உச்சம் தொட்டிருக்கும் ஒரு வரலாற்றுத் தறுவாயில், இஸ்ரேலை ஒரு கலங்கரை விளக்கமாக கருதுவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
2011 ஆம் ஆண்டு, சிங்கள ராவய அமைப்பினர் யாழ்ப்பாணம் நாவற்குழியில் பல சிங்கள-பௌத்த குடும்பங்களைக் குடியேற்றினர். இராணுவத்தினரின் உழைப்பைப் பயன்படுத்தி இந்தக் குடும்பங்களுக்கென கோவிலொன்றும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்தக் கோயிலுக்கு வைத்த பெயரே அதன் இயற்பண்பை சொல்லிற்று. – சிஹலராமய (சிங்களவர்களின் கோயில்). 2010களில் இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்புப் பிரச்சாரத்தின்போது சிங்கள ராவயதான் உண்மையில் முதலாவது வேட்டைத் தீர்த்து அதனை ஆரம்பித்து வைத்தது. 2011 ஆம் ஆண்டில், ராஜபக்சக்கள் ‘முஸ்லிம் எதிரியை’ நோக்கி தமது பார்வையைத் திருப்புவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, சிங்கள ராவய அனுராதபுரத்தில் தட்சிண சேயாவிற்கு அருகிலுள்ள ஒரு மசூதியை இடித்து மன்னர் துட்டகைமுனுவின் அஸ்தியை வைத்தது…” (ஸ்ரீலங்கா மிரர் – 13.9.2011). ஜூன் 2013ல், சிங்கள ராவய கிறிஸ்தவ மிஷனரிகள் குழுவொன்றைத் தாக்கி, அவர்களைக் ‘கைது’ செய்ததோடு தங்காலையில் ஒரு இறைச்சிக் கடைக்கும் தீ வைத்தது. கால்நடைகளை அறுப்பதற்கு எதிராகக் கதிர்காமத்திலிருந்து கொழும்புக்கு ஒரு பேரணியைத் தொடங்கியது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வெறும் வாய்மொழி வன்முறைகள் மட்டுமன்றி, உடல் ரீதியான வன்முறைகளில் ஈடுபடுவதில் நீண்ட வரலாற்றைக் கொண்ட ஓர் அமைப்பு தான் சிங்கள ராவய.
இந்த வரலாற்றைக் கருத்தில் கொள்ளும்போது, இஸ்ரேலிய நலன்களுடன் அந்த அமைப்பு வைத்திருக்கும் கூட்டணி கவலையளிக்கிறது. சமீபத்தில் வெளிவந்த ஒரு வீடியோவில், காசாவில் கொல்லப்பட்ட அனைத்து சிறுவர்களும் இஸ்ரேலைத் தாக்குவதற்கு பயிற்சி பெற்ற சிறுவர் இராணுவ வீரர்கள் எனவும், இலங்கையில் முஸ்லிம் தீவிரவாதிகள் சிறார்களுக்கு யுத்தப்பயிற்சி அளிக்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் சிங்கள ராவய தேசிய அமைப்பாளர் கூறுகிறார். இத்தகைய அபத்தமான கூற்றுக்கள் எதிர்காலத்தில் முஸ்லிம் எதிர்ப்பு வன்முறைகளுக்கான நியாயங்களை உருவாக்கலாம்; குறிப்பாக தேர்தல் காலங்களில்!
குறிப்பாக 2019ம் ஆண்டில், இந்த ‘முஸ்லிம்’ பகடை ஆட்டம், சரியாக – முறையாக தொகுக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தால், அது மாபெரும் வாக்கு அறுவடைக்கான தேர்தல்கால அட்சயபாத்திரமாக உருமாறி இருக்கும்.
இஸ்ரேல்-இலங்கை ஒத்துழைப்பு இயக்கம் அதன் அதிகாரப்பூர்வ காணொளிகளில் ஒன்றில், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களை அனுமதிக்க வேண்டாம் என்று இலங்கை அரசாங்கத்திடம் கூறுகிறது; அவ்வாறு செய்வது இஸ்ரேல் இலங்கைக்கு வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் அதன் சுற்றுலா சந்தைகளுக்கான வாய்ப்பை ஆபத்தில் ஆழ்த்தக்கூடும் என்று அது மேலும் எச்சரிக்கிறது. (உண்மை என்னவென்றால், இஸ்ரேல் உடல் உழைப்பால் மாத்திரம் சாத்தியப்படும் துறைகளில் ‘தொழிலாளர் பற்றாக்குறை’ கொண்ட தனது பொருளாதாரத்துக்கு ‘பாதுகாப்பான’ தொழிலாளர்களையும், பிரபலமற்ற – ஏனைய பல தேசங்களில் வேண்டா விருந்தாளிகள் எனக் கருதப்படும் தனது சுற்றுலாப் பயணிகளுக்கு ‘பாதுகாப்பான’ விடுமுறை இடங்களையும் கண்டுபிடிப்பதில் உலக அளவில் சிரமப்படுகிறது).
ஒரு திருப்பமாக, சிங்கள ராவயவின் தேசிய அமைப்பாளர் தனது சொந்த வீடியோவில் தொடராக அதே பயத்தை ஏற்படுத்தும் வாசகத்தை கிளிப்பிள்ளை போலக் கூறுகிறார். சிங்களவர்களுக்கு மட்டுமே 100,000 வேலைகளை வழங்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக அவர் கூறுகிறார். இது ‘சிங்கள பொருளாதாரத்தை’ வலுப்படுத்தும்; மற்றும் ‘முஸ்லிம் வர்த்தக ஆதிக்கத்தை’ பலவீனப்படுத்தும் என்று அவர் வாதிடுகிறார். அவரது கருத்துப்படி, இலங்கை மற்றும் பாலஸ்தீனத்துக்கிடையிலான ஒத்துழைப்பு என்பது சிங்கள-பௌத்த அரசை அழிக்கும் ஒரு சதி, ஏனெனில் அத்தகைய ஒருமைப்பாடு இலங்கை பெறவிருக்கும் இஸ்ரேலிய வேலைவாய்ப்புகள் மற்றும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை இழக்கச் செய்யும். “அப்படி நடந்தால், இந்த நாட்டின் சிங்கள-பௌத்த மக்கள் அரசாங்கத்திற்கும் முஸ்லிம் தீவிரவாதிகளுக்கும் ஒரு வலுவான பதிலைக் கொடுக்கத் தொடங்குவார்கள். இந்த நாட்டில் உள்ள சிங்கள-பௌத்தர்களை அந்த வலுவான பதிலைக் கொடுக்கும் நிலைக்குத் தள்ளாதீர்கள்… அப்படி நடந்தால், நாங்களும் பதில்களைக் கொடுப்போம். 30 வருடங்கள் பொறுமையாக இருந்த பிறகு கொடுக்கப்பட்ட பதிலை விட அந்த பதில் மிகவும் தீவிரமானதாக இருக்கலாம்”. (https://www.youtube.com/watch?v=7gHaiYXCtbk)
இந்த வார்த்தைகள் இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகவும், ஒருவேளை NPP/JVP அரசாங்கத்திற்கு எதிராகவும் கூட மறைமுகமான வன்முறை அச்சுறுத்தலை விடுக்கின்றன. சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையைத் தூண்டுவதில் சிங்கள ராவயவின் பின்னணியைக் கருத்தில் கொண்டு, இது தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட வேண்டிய அச்சுறுத்தலாகும்.
வலுவிழக்கச் செய்தல்?
ஆகஸ்ட் 29, 2025 அன்று, இரண்டு இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் அறுகம்பையில் ஒரு பிரபல இலங்கை ஹோட்டல் முதலாளியையும் அவரது தோழியையும் தாக்கினர். நேரில் கண்ட பல சாட்சிகளின் கூற்றுப்படி, இந்தத் தாக்குதல் தூண்டுதல்கள் அற்றது. இஸ்ரேல் தரப்பில் மன்னிப்புக் கோரியவர்களின் கூற்றுகளுக்கு மாறாக, ஹோட்டல் உரிமையாளர் ஒரு முஸ்லிம் அல்ல; அவர் ஒரு சிங்களவர். சனிக்கிழமை இரண்டு இஸ்ரேலியர்களும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்த வாரம் அவர்கள் விசாரணைக்காக மாஜிஸ்திரேட் முன் ஆஜராக உள்ளனர். சட்டம் அதன் கடமையைச் செய்வதற்கு அரசாங்கம் அனுமதிக்குமா அல்லது இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து செல்வதற்கு தலையிடுமா என்பது இன்னும் தெரியவில்லை.
காசாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை தொடங்குவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் முரட்டுத்தனத்தால் உலகளாவியரீதியில் அவப்பெயரைப் பெற்றனர். 2022 ஆம் ஆண்டின், ‘உலக அளவில் மோசமான சுற்றுலாப் பயணிகள்’ என்ற மகுடத்தில் அவர்கள் 5வது இடத்தைப் பிடித்திருந்தனர். ‘அசிங்கமான இஸ்ரேலியர்: இஸ்ரேலின் சுற்றுலாப் பயணிகள் உலகில் மோசமானவர்களா’ என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், இஸ்ரேலிய இணையப் பத்திரிகையான Y-Net, “சில ஹோட்டல்கள் இளம் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கும் அதிகாரப்பூர்வமற்ற கொள்கையைக் கொண்டுள்ளன” (9.11.22) என்று எழுதியது. இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் “காட்டுக்குத் தீ வைப்பது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் முகாமிடுவது, புனிதத் தலங்களில் நிர்வாணமாகப் புகைப்படம் எடுப்பது மற்றும் தொல்பொருள் பூங்காவில் ஒரு களியாட்டத்தை நடத்துவது” ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்று செப்டம்பர் 2022 இன் ‘தி ஜூயிஷ் இன்டிபென்டன்ட்’ பத்திரிகை தெரிவித்துள்ளது. (இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு முடிவு செய்தபோது, இலங்கை அரசாங்கம் இந்த மோசமான வரலாற்றை அறிந்திருந்ததா?)
பலஸ்தீனத்தில் நடந்து கொண்டிருக்கும் இனப்படுகொலை நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. “இனப்படுகொலையின் மிகவும் வெறுக்கத்தக்க இன்பம் அதன் இரத்த தாகம் கொண்ட மரண தண்டனையில் உள்ளது என்பது தெளிவாகிறது” என்று இலங்கை கல்வியாளர் பிரபாத் சிறிசேன தனது சமீபத்திய FT விருந்தினர் பத்தியில் (‘இனப்படுகொலையின் வக்கிரமான இன்பங்கள்’ என்ற தலைப்பில் அமைந்த அவரது கட்டுரையில் – 28.8.2025) எழுதுகிறார். இத்தகைய கூட்டு மரணதண்டனை வழங்கும் ‘பணியை’ நிறைவேற்றுபவர்கள் இலங்கைக்குள் நுழையும் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளில் ஒரு பெரிய குழுவாகவே இருக்கிறார்கள். ஒருவேளை அவற்றில் பெரும்பான்மையானவர்கள் இலங்கைக்கே வருகிறார்களோ யாரறிவார்? காசாவில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலையின் இனரீதியான சாயல்களைக் கருத்தில் கொண்டு, இந்த இஸ்ரேலிய வீரர்கள் பழுப்பு நிற தோலைக் கொண்ட ‘விசுவாசமற்ற’ பூர்வீக மக்களை (அவர்கள் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பௌத்தர் அல்லது கிறிஸ்தவர்களாக இருந்தாலும் சரியே) தம்மை விட தரம் தாழ்ந்த மனிதர்களாகவே மதித்து ஊடாடுவதை நியாயம் என கருதுவார்கள். ஏனெனில் அவர்களது இயல்பான சியோனிச இனமேலாதிக்க மனோபாவம் அவ்வாறுதான் அவர்களை வழி நடாத்தும். காசா இனப்படுகொலைக் களம் அவர்களை கொடூரமான கொலைக்கும் முழுமையாக தண்டனையிலிருந்து விலக்களிப்பதற்கும் பழக்கப்படுத்தியுள்ளது. பூர்வீகவாசிகளான இலங்கையர்கள் ஒழுங்கு மரியாதையோடு அவர்களுக்கு ‘அடிபணிந்து நடக்கத் தவறும் பட்சத்தில்’ அதன் பின்விளைவுகள் இங்கேயும் பிரதிபலிக்கலாம்.
அண்மையில் அறுகம்பையில் நடந்த சம்பவம் பிரபலமானது. மேலும், அதில் பாதிக்கப்பட்டவர் நன்கு அறியப்பட்ட உள்ளூர்வாசியாக மற்றும் அனேகமாக சிங்களவராக இருந்ததால் மட்டுமே தாக்குதல் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர். பொருளாதாரத்தில் பிந்தங்கிய ஏழை முஸ்லிம்கள், தங்கள் சொந்த அரசாங்கத்தினால் பயங்கரவாதியாக முத்திரை குத்தப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடும் என்ற பயத்தில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் கைகளில் அவமானத்தையும் வன்முறையையும் சகித்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.
கொந்தளிப்பான இந்த சூழ்நிலையில்தான் சிங்கள ராவய தலைமையிலான சிங்கள-பௌத்த தீவிரவாதக் கூறுகள் இஸ்ரேலிய நலன்களின் பாதுகாவலர்களாக மற்றும் ஊக்குவிப்பவர்களாக இந்த கோதாவில் நுழைந்துள்ளன. இதில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் தண்டனையின்றி சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறும் உரிமையும் அடங்கும்.
இஸ்ரேல்-இலங்கை ஒத்துழைப்பு இயக்கம் போன்ற அமைப்புகள் இஸ்ரேலை ஒரு அபிவிருத்தியின் அதிசயமாக சித்தரித்து, அதனோடு இணைந்து செயல்படுவதன் காரணமாக, இலங்கை குறுகிய காலத்தில் செழிப்பை அடையலாம் என்று வாதிடுகின்றன. நிச்சயமாக, இஸ்ரேல், ஆண்டுக்கு 3 பில்லியன் டாலர்களுக்கு மேல் இராணுவ உதவி மட்டும் கொண்ட மிகப்பெரிய அமெரிக்க வெளிநாட்டு உதவியைப் பெறும் நாடாகும். மேலும் இந்த அமெரிக்க உதவி நிறுத்தப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ அது மெதுவாகச் சரிவைச் சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் இப்படியான அடிப்படைத் தரவுகள் கூட இஸ்ரேலின் இலங்கை ரசிகர் மன்றத்திற்குத் தெரியாது! (அவர்களில் சிலர், தொழில்நுட்ப ரீதியாக இஸ்ரேல் அமெரிக்காவை முந்துவதைத் தடுக்கும் நோக்கத்தில் அக்டோபர் 7 தாக்குதலை நடத்துவதற்கு ஹமாஸ் இயக்கத்தை அமெரிக்கா தூண்டியது என்று கூட நம்புகிறார்கள்!)
சில சிங்கள-பௌத்த தீவிரவாதிகள் உண்மையான போலிகளாக இருக்கக் கூடும்; இஸ்ரேல் மாத்திரமே இலங்கையின் எல்லாப் பிரச்சினைகளுக்கும் ஒரு சர்வரோக நிவாரணி என்று அவர்கள் அப்பாவிகளாக நம்பியிருக்கலாம். சிங்கள ராவய போன்ற ஏனையவர்கள் இஸ்ரேலுடனான எந்தவொரு கூட்டணியையும் சந்தர்ப்பவாதக் கண்ணோட்டத்திலேயே பார்ப்பார்கள். அவர்கள் அரசியல் ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் மோசமான காலங்களைக் கடந்து செல்கின்றனர். பெரிய பணப்பையை வைத்திருக்கும், ஈர்க்கக்கூடிய தொடர்புகள் மற்றும் முழுமையான ஒழுக்கக்கேடு கொண்ட ஒரு புரவலர்தான் அவர்களது காரியங்களை நடாத்தி வைப்பதற்கு அவர்களுக்குத் தேவை.
இஸ்ரேல், இலங்கையை, வெறும் உடல் உழைப்பை வழங்கும் ஒரு முறையிட்டுப் புலம்பும் நாடாகவும், (சாத்தியமான போர்க் குற்றவாளிகள் உட்பட) கட்டுக்கடங்காத அவர்களது சுற்றுலாப் பயணிகளை முணுமுணுக்காமல் வரவேற்று உபசரிக்கும் பாத்திரத்தை தந்து வைத்திருக்க விரும்புவதாகத் தெரிகிறது. தற்போதைய அரசாங்கத்தை மென்மேலும் தாங்கள் விரும்பியவாறு செல்வதற்கு கட்டாயப்படுத்தவோ அல்லது மிகவும் நட்புரீதியான ஆட்சிமாற்றம் ஒன்றின் வழியாக அதனை உறுதிசெய்யவோ இங்குள்ள இஸ்ரேலின் அரசியல்/மத முகவர்கள் சிங்கள-பௌத்த தீவிரவாதிகளை வளர்க்கின்றனர்.
சிங்கள-பௌத்த தீவிரவாதிகள், தற்போதைய அரசாங்கத்தை பன்மைத்துவம் அற்ற, பெரும்பான்மைவாதம் கொண்டதோர் அரசாங்கத்தினைக் கொண்டு மாற்றீடு செய்ய நினைக்கின்றனர். அது அச்சு அசலாக ‘அலிசப்ரி இல்லாத கோத்தபாய அரசாங்கம்’ போன்றது.
தங்கள் பொதுவான மற்றும் வேறுபட்ட நோக்கங்களை அடைய, இஸ்ரேலும் சிங்கள-பௌத்த தீவிரவாதிகளும் முஸ்லிம் எதிரியை உருவாக்கியே ஆக வேண்டும். அவ்வாறானதோர் செயன்முறை முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கும் தீவிரவாதிகளை வலுப்படுத்தும். அரசியல் ஸ்திரமின்மையைத் தொடர்ந்து வன்முறை ஏற்படும். 2019ம் ஆண்டுக்கு முன்னதாக இது நடந்தது. அரசாங்கம் இவ்விடயத்தில் கவனமெடுக்கவில்லை என்றால், 2029ல் இந்த வரலாறு மீட்டப்படலாம்.
இலங்கை அரசியல் ஊடகத் துறையில் திசாரணி குணசேகர (Tisaranee Gunasekara) பிரபலமான ஒருவர். ஹிரு தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளராகவும், லங்காதீப பத்திரிகையின் கட்டுரையாளராகவும், அரசாங்கங்களின் ஊழல், எதேச்சாதிகாரம் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூர்மையான, கொள்கை ரீதியான மற்றும் விமர்சனங்களை செய்து வருகிறார்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் (https://www.ft.lk/) இணையதளத்தில் Israel and the undermining of pluralist Sri Lanka என்ற தலைப்பில் செப்டெம்பர் 3, 2025 வெளியானது.