— ஹமீத் தபஷி

காஸா மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் கோடூரமான நடவடிக்கையானது உலகம் முழுவதும் இருந்த அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் காட்டுமிராண்டித்தனமான காலனியத்தின் ஒரு பிரதிபலிப்பாகும்.

பல வருடங்களுக்கு முன்பு டெலவயார் மாநிலத்தின் இளைய செனட்டராக ஜோ பைடன் பணியாற்றும் போது அவர் பின்வருவமாறு கூறினார்: “இது தான் நம்மால் செய்ய முடியுமான சிறந்த 3 பில்லியன் டாலர் முதலீடாகும். இஸ்ரேல் என்ற ஒன்று இருந்திருக்காவிட்டால், அந்த பிராந்தியத்தில் தன்னுடைய நலன்களை காப்பதற்காக வேண்டி அமெரிக்கா இஸ்ரேலை உருவாக்க வேண்டி இருந்திருக்கும்.”

இப்போது ஜனாதிபதியாக பணியாற்றிக்கொண்டிருக்கும் நிலையில், சாமர்த்தியமானது என அவர் நம்பும் அந்த கிண்டலான வார்த்தைகளை பைடன் சமீபத்தில் மீண்டும் உச்சரித்தார். உண்மையில் அவருக்கும் பொதுவாக அமெரிக்காவை பொருத்தவரையிலும் இஸ்ரேல் என்பது ஒரு பெரும் விலைமதிப்புள்ள ஒரு சொத்தாகவே இருக்கின்றது. இராணுவ தளமும் நிலையான போர் விமான தாங்கியும் மற்றும் அவற்றை போன்றவைகள் அனைத்தும் பிராந்தியத்தை மற்றும் உலகை ஆளவேண்டும் என்ற வாஷிங்டனின் மாயத்திட்டத்தின் ஒரு பெரும் “முதிலீடாகவே” இருக்கின்றது.

நிச்சயமாக பைடனின் வார்த்தைகள் விவாதத்துக்குரியவை தான். அவர் அதை கூறும் போது இஸ்ரேல் ஏலவே உருவாக்கப்பட்டு தான் இருந்தது. பைடன் உரைநடை பாணியை சேர்ந்த ஒருவரும் அல்ல. ஆனால் இந்த குடியேற்ற காலனியான இஸ்ரேல் உண்மையிலேயே உருவாக்கப்பட்ட ஒன்று என்ற வரலாற்று உண்மையை  தான் இஸ்ரேலை உருவாக்கியிருக்க வேண்டும் எனும் அவரது இந்த விருப்பம் நமக்கு குறித்துக்காட்டுகிறது.

கடந்த இரு வாரங்களாக கொடூரமானதொரு இராணுவ படையாக இஸ்ரேல் செயல்படுவதை அமெரிக்கா சாத்தியப்படுத்தி பலப்படுத்தியதன் மூலம் இஸ்ரேலை இன்னும் கொடுமையானதும் வன்முறையானதுமான ஒன்றாக அது மீளுருவாக்கம் செய்தது.

பாலஸ்தீன போராளிகள் அக்டோபர் 7ஆம் திகதியன்று காஸாவின் வேலிகளை மீறிச்சென்று இஸ்ரேலை தாக்கி நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்களை கொன்றதோடு சிறையும் பிடித்தனர். விரைவாக சமமற்ற பதிலடியை நடாத்திய இஸ்ரேலானது கிட்டத்தட்ட 5 மடங்கிலான பாலஸ்தீனர்களை இரண்டு வாரங்களுக்குள் தனது சற்றும் தளராத விமானவழி தொடர் தாக்குதலின் மூலம் கொன்று குவித்தது.

அமெரிக்காவும் ஐரோப்பிய அரசாங்கங்களும் இணைந்து ஒரு “புதிய மேம்படுத்தப்பட்ட” இஸ்ரேலையே மீளுருவாக்கம் செய்கின்றனர். உலகம் முழுவதும் நடாத்தப்பட்டு இப்போதும் தக்கவைக்கப்பட்டிருக்கும் தமது காலனிய மற்றும் ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தன வரலாற்றின் ஒரு அற்புதமான பிரதிபலிப்பாகவே அது இருக்கின்றது. உலகை சுற்றி வரலாறு முழுவதும் பிரெஞ்சுக்காரர்கள், பிரித்தானியர்கள், போர்த்துகேயர்கள், ஜெர்மானியர்கள், ஸ்பானியர்கள், அமெரிக்கர்கள் மற்றும் ஏனையோர் செய்தவற்றையே காஸா மீதான இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகள் எதிரொலிக்கின்றன.

ஐரோப்பியர்களினதும் அமெரிக்கர்களினதும் கீழ் நிகழ்ந்த உலகளாவிய துன்பங்களின் ஒரு ஒட்டுமொத்த தொகுப்பாகவே காஸாவில் வாழும் பாலஸ்தீனர்களின் நிலை இன்று இருக்கின்றது. 

பல தலைமுறைகளாக தொடரும் துன்பங்கள்

அக்டோபர் 7ம் திகதியன்று பாலஸ்தீன போராளிகளால் நடாத்தப்பட்ட தாக்குதலானது உயிரழப்பும் பெரும் கலவரமும் கொண்ட ஒரு நிகழ்வாக இருந்தது. பாலஸ்தீன துயரத்தை தலைமுறை தலைமுறையாக பொருட்கொள்ளாமல் இருந்த மேற்கத்திய ஊடகங்கள் இஸ்ரேலின் கொடிய பழிவாங்குதலுக்கு தேவையான மக்கள் ஏற்பை பெற்று தருவதன் பொருட்டு உடனே இந்த தாக்குதலோடு தொடர்புடைய புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளை அணிவகுத்து வெளியிட்டன.

இஸ்ரேல் என்ற ஒரு ஐரோப்பிய குடியேற்ற காலனியம் இருந்திருக்காவிட்டால் பைடன் அதனை உருவாக்கியிருப்பார். ஆனால் இன்றைய கடும் முயற்சியானது இஸ்ரேலை நீதியினதும் நியாயமான பழிவாங்குதலினதும் சிறந்ததோர் எடுத்துக்காட்டாக மீளுருவாக்கம் செய்வதாகவே இருக்கிறது. இம்முயற்சிகள் அனைத்தும் பாலஸ்தீன போராட்டத்தை குற்றப்படுத்தும் ஒரு நாட்டினது ஆதரவிலும் தூண்டுதலிலும் கீழ் தான் நடைபெறுகின்றன.

இஸ்ரேலின் இம்மீளுருவாக்கத்தில் பாலஸ்தீனத்தை ஹமாஸுடன் சமப்படுத்துவதும் ஹமாஸை இஸ்லாமிய அரசுடன் சமப்படுத்துவதுமானது தற்போது அரங்கேறிக்கொண்டிருக்கும் காஸா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைக்கான ஒரு அடிப்படையான நியாயப்பாடாக சிறப்பாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. பாலஸ்தீன போராட்டத்தினை கட்டமைப்புரீதியாக அரசியல் நீக்கம் செய்வதற்கு இது ஒரு அறிமுக வாயிலாக இருப்பதோடு அதனை தேசிய விடுதலை இயக்கம் எனும் நிலையில் இருந்து மனிதநேய நெருக்கடிநிலை எனும் நிலைக்கு மாற்றவும் செய்கிறது.

எப்படியாயினும் பாலஸ்தீன போராட்டமானது கொடூரமான ஓர் ஐரோப்பிய காலனிய செயற்திட்டத்திற்கெதிராக நிலையாக தொடரும் ஒரு தேசிய விடுதலை பயணமாகும். ஹமாஸ் என்பது அதன் பெருந்தொகையான படைகளில் ஒரு பகுதி மாத்திரமேயாகும். அத்தோடு அது ஏனையவை அனைத்தையும் வரையறுக்கும் ஒரு பகுதியுமல்ல.

வன்முறையற்ற பாலஸ்தீன எதிர்ப்பு போராட்டத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உள்ளது. உலகம் முழுவதும் பிரசித்தி பெற்று இன்று பரவலாக விளங்கும் boycott, divestment and sactions (BDS) முனைப்பியக்கத்தினுள் இது சிறப்பாக வெளிப்படுத்தப்படுகின்றது.

மாறாக இஸ்ரேலிய அரசியலினுள் ஆழமான, வெறுப்பை அடிப்படையாக கொண்ட ஒரு தேசியவாதமே இன்று ஆதிக்கம் செலுத்துகின்றது. ஆனால் பைடனின் இஸ்ரேலை “மீளுருவாக்கல்” எனும் கூற்றினுள் உள்ளார்ந்து காணப்படும் கொடூரமான ஏகாதிபத்தியமானது ஒரு அர்ப்பணிப்புள்ள ஸியோனிசவாதியின் கவனத்தில் இருந்து தப்பமுடியாத ஒன்றாகும். இந்த மீளுருவாக்கம் வரையறுக்கப்பதானது பெரும் யூத இன அழிப்பு வரை கொண்டு சேர்த்த ஐரோப்பிய கொடூரத்தின் நெடிய வரலாற்றிலிருந்து ஒரு பாதுகாப்பான யூத அடைக்களத்தை அல்ல. மாறாக தற்போது செயலிழந்து கிடக்கும் ஒரு பேரரசின் சிறப்பான நலன்களினை பாதுகாக்கும் பொருட்டு ஒரு இராணுவ தளமொன்றை அமைப்பதையே அது குறித்து நிற்கிறது.

இஸ்ரேலை மீளுருவாக்கம் செய்வதென்பது வெகு தொலைவில் இருக்கும் ஒரு கடந்த காலத்திலிருந்து குறிப்பான சில துண்டுகளை மாத்திரம் தேர்வு செய்தெடுக்கும் ஒரு வினோதமான வரலாற்று பிரக்ஞையின் அடிப்படையில் கட்டமைந்திருக்கும் ஒரு தொடர்ச்சியான ஸியோனிச ஈடுபாடாகும். ஆனால் இந்த பிரக்ஞையானது பாலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் குற்றவியல் அட்டூழியங்கள் சார்ந்த உடனடி வரலாற்றை பற்றி எந்த ஒரு நினைவையும் கண்டுகொள்ளாமல் அவற்றை தவிர்கக்கவும் மறைக்கவும் செய்கிறது. இன்று இஸ்ரேலின் நவீன வரலாறானது இஸ்ரேலின் 9/11 என்று பெயரிடப்பட்டிருக்கும் அக்டோபர் 7ம் திகதி தாக்குதலில் இருந்து தொடங்குவதோடு தற்போது முழு உலகத்தின் முன்னிலையிலும் ஒரு இரண்டாம் நக்பாவை நோக்கி அது செயற்பட்டு கொண்டிருக்கிறது.

ஆனால் எந்த இஸ்ரேலிய மீளுருவாக்கமும் பாலஸ்தீனர்களின் இரும்பு போன்ற உறுதியினை கடந்து நீடிக்க முடியாது. இன்று உலகம் முழுவதும் இஸ்ரேலை அதன் அசல் தன்மையில் காண்கிறது. என்றுமே விட்டுக்கொடுக்காமல் போராடிக்கொண்டிருக்கும் ஒரு வீழ்த்த முடியாத தேசத்திற்கு முகங்கொடுத்து கொண்டிருக்கும் இஸ்ரேலானது உயிர்களை கொள்ளும் ஒரு கொடிய இயந்திரம் என்பது தான் அதுவாகும்.

ஹமீத் தபஷிஇரானிய கற்கைநெறி மற்றும் ஒப்பீட்டு இலக்கிய பேராசிரியராக கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவர் Can Non-Europeans Think?, Islamic Liberation Theology: Resisting the Empire, Brown Skin White Masks,Iran, the Green Movement and the USA: The Fox and the Paradox, உள்ளடங்களாக 20க்கு மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி