-திசரனீ குணசேகர-
“சர்வதேச அவைகளில் இலங்கையை இஸ்ரேலின் விசுவாசம் மிக்க ஆதரவுத் தளமாக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்கிறோம். இஸ்ரேல் மற்றும் யூத மக்களின் பிரிக்க முடியாத உரிமை, மற்றும் வேறு பிரிக்க முடியாத அதன் பண்டைய தலைநகர்களான ஜெருசலம், யூதேயா மற்றும் சமாரியா ஆகியவற்றுக்கான அங்கீகாரத்தையும் அதற்கான வழிமுறைகளையும் தீவிரமாக ஆதரிக்கிறோம்.”
(இஸ்ரேல் – இலங்கை ஒத்துழைப்பு இயக்கம்)
இடம்: எகிப்து. 1954ம் ஆண்டின் கோடை காலம். இலக்குகள்: பிரித்தானிய மற்றும் அமெரிக்க சிவிலியன்கள், அவர்தம் உடைமைகள். பலியாடுகள்: இஸ்லாமியவாதிகள், கம்யூனிஸ்டுகள் அல்லது தேசியவாதிகள்.
ஜூலை 2 ஆம் தேதி, நடவடிக்கைகள் தொடங்குகின்றன. அடுத்த சில நாட்களில், கெய்ரோ மற்றும் அலெக்ஸாண்ட்ரியாவில் உள்ள இலக்குகள் குண்டுத் தாக்குதலுக்கு உட்பட்டன; அவற்றில் அமெரிக்க தகவல் மையத்தின் நூலகங்கள் மற்றும் பிரிட்டனுக்கு சொந்தமான ஒரு தியேட்டர் ஆகியவை அடங்கும். இஸ்லாமியவாதிகளோ, கம்யூனிஸ்டுகளோ அல்லது தேசியவாதிகளோ இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் சம்பந்தப்படவில்லை. இஸ்ரேலிய உளவுத்துறை முகவர்கள் மற்றும் ஒரு சில எகிப்திய யூதர்களுமே அதன் சூத்திரதாரிகள் ஆவர். இந்தத் திட்டம், அமான் எனப்படும் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு இயங்கு தளத்தினால் அடைகாக்கப்பட்டு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் பின்ஹாஸ் லாவோனின் ஆசீர்வாதத்துடன் செயற்படுத்தப்பட்டது. ‘ஒபெரேஷன் சுசன்னா’ என்ற பழைய ஏற்பாட்டில் உள்ளதொரு காவியப் பெயரை இஸ்ரேல் தரப்பு இதற்கு சூட்டிய போதிலும், வரலாற்றில் ‘லாவோன் விவகாரம்’ என்றே இந்த தொடர் குண்டுத் தாக்குதல் அழைக்கப்பட்டு வருகிறது. அதன் நோக்கம், எகிப்து சூயஸ் கால்வாயின் கட்டுப்பாட்டைப் தன்வசம் வைத்திருப்பதைத் தடுப்பதாகும். ஆங்கிலேயர்கள் அதன் கட்டுப்பாட்டை விட்டுக்கொடுக்கத் தேவையில்லை எனவும், அமெரிக்கர்கள் பிரிட்டனின் தொடர்ச்சியான காலனித்துவத்தை ஆதரிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தும் நோக்கிலேயே இத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. ‘எகிப்தின் புதிய ஆட்சியாளர்கள் முட்டாள்தனமான தீவிரவாதிகள், நம்பகத்தன்மையற்றவர்கள் மற்றும் சூயஸ் கால்வாய் போன்ற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்ததொரு பகுதியை பொறுப்பேற்று நடாத்த தகுதியற்றவர்கள் என்பதை முழு உலகமும் அறிந்து கொள்வதற்காகவே’ இந்த குண்டுவெடிப்பு திட்டமிட்டு நடாத்தப்பட்டது என்று பரவலாக கருதப்பட்டது.
உண்மையான குற்றவாளிகள் பிடிபட்டு, முழு விவகாரமும் வெளிவந்து சந்தி சிரித்தபோது, ஒரு நாட்டின் சட்டங்களையும் விதிமுறைகளையும் மீறி செயற்பட்டு இஸ்ரேல் உளவுத்துறை அவ்வப்போது கையும் மெய்யுமாக பிடிபட்ட போதெல்லாம் என்ன செய்ததோ அதைப்போலவே இந்த தொடர் தாக்குதலுக்கான தனது சம்பந்தத்தை மறுத்தது (இந்த வாரம் காசாவில் உள்ள கடைசி கத்தோலிக்க தேவாலயத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் குண்டுத் தாக்குதல் நடாத்தியதை மறுத்தததுபோல).
இம்முறை அது பலனளிக்கவில்லை. அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் தரப்புகளின் கோபத்தைத் தணிப்பதற்கு, பாதுகாப்பு அமைச்சர் லாவோன், தனது நண்பர்களால் முட்டாளாக்கப்பட்டதன் விளைவு இது என சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இஸ்ரேலுக்கு ஏற்பட்டது. 2005 ஆம் ஆண்டு, ‘லாவோன் விவகாரத்தில்’ உயிர் பிழைத்த முகவர்களைப் பாராட்டும் விதமாக இஸ்ரேலின் ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கியபோதுதான் இந்த உண்மை அம்பலத்துக்கு வந்து இஸ்ரேலும் வெட்கமின்றி அதனை ஏற்றுக்கொண்டது.
இஸ்ரேலின் இப்படியான துரோக நடவடிக்கைகள் சாதாரணமானவை அல்ல. அமெரிக்கா உள்ளிட்ட தமது நட்புகள் மற்றும் அவர்களைப் போஷிப்பவர்களையே காட்டிக் கொடுத்து இரண்டகம் பன்ணுவதில் இஸ்ரேலியர்கள் கில்லாடிகள். கபட நாடக சூத்திரத்தில் அலாதியானதோர் வகுப்பைச் சேர்ந்தவர்கள். உதாரணமாக, 2007 மற்றும் 2008ம் ஆண்டுகளில், மொசாட் உளவாளிகள், அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களைப் பயன்படுத்தி சி.ஐ.ஏ. அதிகாரிகள் போல் நடித்து, அமெரிக்காவின் பயங்கரவாத பட்டியலில் உள்ள பலுச்சிஸ்தானை தளமாகக் கொண்ட ஜுந்தல்லா எனப்படும் ஈரானிய எதிர்ப்பு கடும்போக்கு சுன்னி-சலபி ஆயுதக் குழுவின் உறுப்பினர்களைச் சந்தித்தனர். ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்த ஜுந்தல்லா உறுப்பினர்களை நியமிப்பதே அதன் நோக்கமாக இருந்தது. அமெரிக்க அதிகாரிகள் ‘மொசாட்டின் நடவடிக்கைகளில் அதன் துணிச்சலைக் கண்டு திகைத்துப் போனார்கள்’ என Foreign Policy இதழ் அம்பலப்படுத்தியது. இதுவிடயமாக பேட்டியளித்த ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி “இஸ்ரேலியர்கள் இதில் தப்பிக்க முடியும் என்று நினைத்தது எமக்கு ஆச்சரியமாக இருக்கிறது… அவர்களின் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் கிட்டத்தட்ட வெளிப்படையாக இருந்தன. எங்கள் அக்கறையை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது” என்கிறார்.
எல்லோரும் திகைப்போடு நோக்கும் விதத்தில் இஸ்ரேலின் பாதச்சுவடுகள் இலங்கையில் இவ்வளவு வேகமாகப் பதிந்திருக்காவிட்டால், கற்றறிந்த புலமை மட்டங்களில் இருப்போரைத் தவிர, இலங்கையர்களான எமக்கு இவற்றிலெல்லாம் வழமைபோல எந்த ஆர்வமும் இருந்திருக்கப் போவதில்லை.
காசாவில் நடைபெற்றுவரும் இனப்படுகொலைகள் காரணமாக இஸ்ரேல் இராணுவத்தில் இருந்து சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரில் வரும் இஸ்ரேலியர்கள் வெளிநாடுகளில் போர்க்குற்றங்களுக்காக கைது செய்யப்படும் அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றனர். காஸாவில் கொல்லப்பட்ட குழந்தைகளைப் பார்த்து திகைத்துப் போகும் மக்களால் வரவேற்கப்படாத விருந்தாளிகாளாக அவர்கள் மாறுகின்றனர். சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் திமிர்பிடித்த நடத்தை, தாய்லாந்து போன்ற பிரபலமான சகிப்புத்தன்மை கொண்ட நாடுகளில் கூட இஸ்ரேலுக்கு அரசியல் சாராத பின்னடைவை உருவாக்கியுள்ளது.
இஸ்ரேலிய தயாரிப்பான ‘தி வேவ்’ திரைப்படம் அதன் அறிமுகத்தில் ஒப்புக்கொள்வது போல, பல இஸ்ரேல் கொலை இராணுவ ‘சுற்றுலாப் பயணிகள்’ இலங்கையிலும் அதே உரிமை உணர்வோடு நடந்து கொள்கிறார்கள்: ‘இலங்கையின் அறுகம்பை விரிகுடாவில். Surf எனப்படும் கடலலை விளையாடிகளான ஒவ்வொரு இஸ்ரேலியனும்… தம்மை நோக்கி வரும் ஒவ்வொரு அலைக்கும் தாமே உரிமையுடையவர்கள் என உணர்கிறார்கள்’ என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. “அவர்கள் பதினெட்டு வயதுடையவர்களாக இருந்தால் இராணுவ சேவையின்போது பெரும்பாலும் கொல்லப்படுபவர்களாகவும்; இருபத்தி இரண்டு வயதுடையவர்களாக இருக்கும் பட்சத்தில் அதிலிருந்து தப்பிப்பிழைத்தவர்களாகவும் இருக்கக்கூடும்” ஆயினும்கூட, விடுமுறையில் இருக்கும் இஸ்ரேலிய வீரர்களுக்கு இலங்கை ஒரு பாதுகாப்பான ‘ஓய்வு மற்றும் மீள் வலுப்பெறலுக்கான’ (R&R) தலமாக உள்ளது.
இஸ்ரேலின் விவசாயம் மற்றும் பராமரிப்பு துறைகளில், இஸ்ரேலியர்களால் மிகவும் தாழ்வானதாகவும் குறைந்த ஊதியம் கொண்டதாகவும் கருதப்படும் வேலைகளில், இலங்கை மிக மலிவான மற்றும் பாதுகாப்பான உழைப்பை வழங்கும் ஒரு முக்கியமான வழங்குனராகவும் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து, பெருமளவில் இஸ்ரேலிய விரோதப் போக்கை நோக்கி உலகம் செல்லும்போது, சூயஸ் கால்வாயை காலனித்துவத்தின் பிடியில் வைத்திருப்பதற்குத் தேவையான அனைத்து முஸ்தீபுகளையும் செய்ததைப் போலவே, சர்வதேசத்தில் குறைந்து வரும் தனக்கான பாதுகாப்பான ஒதுங்குமிடங்களின் எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கு இஸ்ரேல் தேவையான ‘அனைத்தையும்’ செய்வதற்கு இலங்கையில் வாய்ப்புள்ளது. ஒரு அமைப்பு, குழு அல்லது பொது சமூகத்தில் இருக்கும் பிளவுகள், பதட்டங்கள் அல்லது பாதிப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது அல்லது அதிகப்படுத்துவது; பெரும்பாலும் ஒரு குறிப்பிட்ட இலக்கை அடைய ஏற்கனவே இருக்கும் பலவீனங்கள் அல்லது மோதல்களைப் பயன்படுத்திக் கொள்வதைக் குறிக்கலாம். அதாவது ஒவ்வொரு தமிழர், கிறிஸ்தவர் அல்லது முஸ்லிம் ஆகியோரிடமும் ஒரு எதிரியைக் காணும் சிங்கள-பௌத்த மேலாதிக்கப் போக்கு போன்ற ஒன்றின் எதிர்விளைவாக இது உருவாகலாம்.
பிரித்தல் மற்றும் விரிவாக்குதல்?
சார்ல்ஸ் சர்வன் இலங்கைக் குடிமகனாகப் பிறந்து ஜெர்மனியின் குடிமகனாகவே இறந்தார். அவர் இனத்தால் தமிழர் என்ற ஒரு காரணமே இந்த மாற்றத்துக்கான உந்துசக்தியாக அமைந்தது. சிங்கள மொழி பேசுபவராகவும், இனம் அல்லது மதத்தை விட வர்க்க அடிப்படையில் சிந்தித்த ஒரு சோசலிஸ்டாகவும் வாழ்ந்தவர். பாடசாலை மற்றும் பல்கலைக்கழகத்தில் பெரும்பான்மையான சிங்கள சமூகத்துடன் இயல்பாகவே பொருந்திப் போன ஒருவர். வேறு சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களுடன் மதம் அல்லது அரசியல் பற்றி விவாதிக்க வேண்டாம் என்று அவரது தாயார் எச்சரித்திருந்த விடயத்தை அவர் ஒருமுறை எழுதியிருந்தார். இருப்பினும், 1958 கலவரத்தின் போது ஒரு பெளத்த துறவி தலைமைதாங்கிய கும்பலால் அவர் கடுமையாக அச்சுறுத்தப்படும் வரை, அவரது ‘தமிழ்த்தன்மை’ என்னவென்று அவருக்குப் புரிந்திருக்கவே இல்லை.
அதிர்ச்சி, பயம், ஏமாற்றம் மற்றும் அந்நியப்படுதல் போன்ற அவரது அனுபவம் பெரும்பாலான இலங்கை சிறுபான்மையினருக்கு பொதுவான ஒன்றாக இருந்தது, இன்னும் இருக்கிறது. எந்த நேரத்திலும் எதுவும் உங்களை ஓர் ‘எதிரியாக’ மாற்றக்கூடும்.
முஸ்லிம்களின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கங்கொடவில சோம தேரர், (துறைசார் நிபுணர்கள் உட்பட்ட) சிங்கள-பௌத்த சமூகத்தின் நடுத்தர மற்றும் உயர் மட்டத்தினரை ‘முஸ்லிம்கள் விடுதலைப் புலிகளை விட சிங்களவர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்’ என்று எவ்வளவு எளிதாக நம்ப வைத்தார் என்பதை நினைத்துப் பாருங்கள். 1990களின் பிற்பகுதியில் இரண்டாம் ஈழப் போர் நடந்து கொண்டிருந்தபோது இது நடந்தது. கிழக்கு மாகாணத்தில் நசிரிஸ்தான் என்ற தனி நாட்டை உருவாக்க முஸ்லிம்கள் முயற்சிப்பதாகக் கூறி சம்பிக ரணவக்க முஸ்லிம் எதிர்ப்புக் கூட்டணியில் இணைந்தார். அச்சத்தை உருவாக்கும் இந்தப் பிரச்சாரம், சுதந்திரத்திற்குப் பிறகு இடம்பெற்ற முஸ்லிம் எதிர்ப்பு வன்முறையின் முதல் வெடிப்பான 2001ம் ஆண்டு மாவனெல்லைக் கலவரங்களுக்கு வழிவகுத்தது.
பிரபலமான தொலைக்காட்சி விவாதமொன்றில் சோம தேரர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பிடம் தோல்வியடைந்தபோது, அவர் கட்டிக்காத்த பாரிய முஸ்லிம் எதிர்ப்பு மறைந்து அன்றைய இனவாத ஆடுகளம் வெறிச்சோடியது. பின்னர் அங்கிருந்து சோம தேரர் கிறிஸ்தவர்களுக்கெதிரான வெறுப்பு – அச்சத்துக்குத் தாவியபோது நடப்பில் இருந்த ‘முஸ்லிம் எதிரி’ மறக்கடிக்கப்பட்டார். 2011ல் அனுராதபுரத்தில் ஒரு சிறிய பள்ளிவாசலை கும்பல் ஒன்று இடித்தபோது முஸ்லிம் எதிரியின் மீள்வருகைக்கான முதல் அறிகுறி தென்பட்டது. தமிழ் எதிரி மற்றும் கிறிஸ்தவ எதிரி என்று மாறி மாறிப் பேசி வந்த ராஜபக்ச நிர்வாகம், அந்தத் தாக்குதலைக் கண்டித்தது. 2012 ஆம் ஆண்டு பொதுபலசேனா தனது முதல் பொது மாநாட்டை நடத்தியபோது, அதன் ஐந்து கோரிக்கைகளில் எதுவும் முஸ்லிம்களை மட்டுமே குறிவைத்து முன்வைக்கப்படவில்லை.
பிப்ரவரி 2013 ஆரம்பத்தில், நிலைமை மாறியது. எச்சரிக்கைகள் இன்றி, தூண்டுதல் சம்பவங்கள் அல்லது காரணங்கள் ஏதுமில்லாமல், ‘முஸ்லிம் எதிரி’ ராஜபக்ச ஆட்சிக்கும் பொதுபலசேனாவுக்கும் பிரச்சினையாக மாறினார்.
இலங்கையில் பரவலாக வளர்ந்து வரும் இஸ்ரேலின் தடம் மற்றும் இலங்கையின் மீது அதிகரித்து வரும் சபாத் – லுபாவிச் இயக்கத்தின் ஆர்வத்தைக் கருத்தில் கொள்ளும்போது, மேலே நினைவூட்டப்பட்ட வரலாற்றை கருத்தில் கொள்ளவேண்டும் என்பது இன்றியமையாத ஒன்றாகிறது.
2024ம் ஆண்டு, பாராளுமன்றத் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு, அறுகம்பை குடாவில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை குறிவைக்கும் பயங்கரவாத சதித்திட்டம் ஒன்று குறித்து அமெரிக்கர்கள் எச்சரிக்கை செய்தனர். சமூக விஞ்ஞானிகள் சங்கத்தின் அதிகாரபூர்வ வெளியீடான ‘பொலிட்டி'(Polity)யில் சமீபத்தில் வெளியான கட்டுரையொன்றில், “சில மணி நேரங்களுக்குள், சாத்தியமான தாக்குதல் பற்றிய தெளிவற்ற முன்னறிவிப்புகள், ‘இஸ்ரேலியர்களது சுற்றுலாவை தொடக்க நிலைப் பயங்கரவாதத்தின் எல்லையிலிருந்து பாதுகாப்பது’ பற்றியதொரு பலமான ஆய்திறன் கொண்ட உரையாடலாக மாற்றப்பட்டன” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில், ஏதோ ஒரு தந்திரமான கைவினை அல்லது தர்க்கத்தின் மூலம், இந்த பயங்கரவாதிகள் முஸ்லிம்களாக இருப்பார்கள் என்பது எவ்வாறு மறைமுகமாகத் தெரிவிக்கப்படுகிறது என்பதை கூர்மதிகொண்ட ஒரு நோக்குனர் கவனிப்பார். அனுர குமார திசாநாயக்கவின் நிர்வாகம் மேலே குறிப்பிட்ட அந்த ‘முஸ்லிம் துருப்புச்சீட்டை’ வைத்து விளையாடாமல் இருந்ததுநல்லது; தற்செயலாக…, ராஜபக்ச நிர்வாகமாக இருந்திருந்தால் அதனை செய்திருக்கக் கூடும்.
அந்த மர்மமான சம்பவத்தின் மூலம், ‘இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளை முஸ்லிம் பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு கருணையுள்ள அரசு’ என்ற புதிய கதை உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தக் கதை, இதற்கு முன்னர் யாரும் நினைத்துப் பார்க்காத (மற்றும் கவலைதரும் விதத்தில் ஜனநாயக விரோதமான) விளைவுகளுக்கு வழிவகுக்கும். இஸ்ரேலை விமர்சித்ததற்காக ‘பயங்கரவாதக் குற்றத்துக்காக’ இரண்டு இலங்கை முஸ்லிம் குடிமக்கள் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இந்தக் கதையின் மற்றொரு விளைவு, காளான்கள் போல பெருகிவரும் சபாத் வீடுகள் மற்றும் சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளின் போதைப்பொருள் வியாபாரத்தைக் கூட அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பதுதான். ஜூலை 3, 2025ல் பத்திரிகையாளர் கெலும் பண்டார, ‘சில இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் கிழக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அவர்களின் அங்கீகரிக்கப்படாத வணிக மையங்களில் பல்வேறு வகையான போதைப்பொருட்களை விற்பனை செய்வதில் ஈடுபட்டுள்ளனர்; இது சுற்றுலா அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்ட அறிக்கைகளின்படி பொது பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது’ என எழுதினார்.
சைப்ரஸில் நடந்து வரும் சம்பவங்கள் நமக்கு ஒரு எச்சரிக்கையை தருகின்றன. ‘சைப்ரஸில் இஸ்ரேலியர்களின் ‘குடியேற்றத்துக்கான வருகை’ அதிகரித்து வருவது குறித்து கவலைகள் அதிகரித்துள்ளன. நில – மனை வணிகம் (ரியல் எஸ்டேட்) என்ற பெயரில் இடம்பெறும் வழமைக்கு மாறான பெருவெள்ளம் போன்ற குடியேற்றம் உலகெங்கும் புருவங்களை உயர்த்துகிறது. அவர்கள் குறிப்பாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நிலம் – மனைகளை வாங்கி குடியேறுகிறார்கள். சைப்ரஸ் போன்ற ஒரு ‘தீவுத் தேசத்தில்’ இடம்பெறும் தொடரான இந்த நடவடிக்கைகள் அதன் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக மாறலாம் என சைப்ரஸ் ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். “சைப்ரஸ் ‘இரண்டாவது இஸ்ரேல்’ ஆகிறதா? இஸ்ரேலியர்கள் கண்ணில் பட்ட எதையும் வாங்குவதற்காக சைப்ரஸுக்குள் வெள்ளம்போலப் பாய்ந்து செல்கிறார்கள்” என்று 2023ல் இஸ்ரேலிய செய்தித்தாள் ஹாரெட்ஸ் காசா இனப்படுகொலை தொடங்குவதற்கு முன்பு எழுதியது. தொடர்ந்து நடைபெற்று வரும் போர் அந்த நிலைமையை மேலும் மோசமாக்கியது. சைப்பிரஸின் பிரதான எதிர்க்கட்சியான இடதுசாரி AKALஇன் பொதுச் செயலாளர் ‘சியோனிச பாடசாலைகள் கட்டப்பட்டு வருகின்றன’ என எச்சரிக்கிறார். “சினகோக்குகளின் கட்டுமானப் பணிகள் ஜோராக இடம்பெற்று வருகின்றன… நீங்கள் லர்னாக்கா அல்லது லிமாசோலுக்குச் சென்றால், அங்குள்ள மக்கள் இவை நடந்தேறும் பிரதேசங்களை உங்களுக்குக் காட்டுவார்கள். ஆனால், அதிகாரிகள் அதைப் புறக்கணிக்கிறார்கள்” (சைப்ரஸ் மெயில் – 24.6.2025)
இலங்கை ஏற்கனவே சுமந்திருக்கும் இன-மதப் பிளவுகள் காரணமாக, நிலைமை சைப்ரஸை விடவும் ஆபத்தானது. முன்னரே, உதய கம்மன்பில போன்றவர்கள் இங்கே இஸ்ரேலின் நோக்கத்தை ஆதரித்து வருகின்றனர். இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் காசா பிரதேசங்களை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்வதற்கான அதன் ‘உரிமை’க்கு இலங்கை ஆதரவளிக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேல்-இலங்கை ஒத்துழைப்பு இயக்கமும் இங்கே உள்ளது. “இஸ்ரேலின் நலனை நோக்கமாகக் கொண்டு வலுவானதொரு ஆதரவு பிரச்சாரம் மற்றும் ஆக்க வளங்கொண்ட ஈடுபாட்டுக்காக நாம் படிப்படியாக உருவாக்கி வரும் அழுத்தம்; பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், பொது மற்றும் தனியார் துறைகள், சிவில் சமூக நிறுவனங்கள், பெளத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், இந்து கோவில்கள், கல்வியாளர்கள், சிந்தனை உருவாக்கத் தலைமைகள், மற்றும் ஊடக வலையமைப்புகள் மூலம் பரவி வருகிறது”. இந்தப் பட்டியலில் இல்லாத மத நிறுவனமான முஸ்லிம்களது பள்ளிவாசலைக் கவனியுங்கள்; இஸ்ரேலின் கைக்கூலியாக இலங்கை மாற்றப்படுவதற்கான அவர்களது வழிமுறைகள் தெளிவாகத்தான் இருக்கின்றன.
பீரங்கிக்கு இரையாகும் குரங்குகள்
விக்டர் ஒஸ்ட்ரொவ்ஸ்கியை நினைவிருக்கிறதா? அவருக்கோ அல்லது (By Way of Deception: The Making and Unmaking of a Mossad Officer) ‘வஞ்சகத்தின் ஊற்றுக்கண் – ஒரு மொசாட் அதிகாரியை உருவாக்குதல் மற்றும் நீக்குதல்’ என்ற அவரது முதலாவது நூலுக்கோ இலங்கையில் சிறப்பு அறிமுகங்கள் தேவையில்லை. இஸ்ரேலியர்கள் இலங்கை இராணுவ வீரர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஒரே நேரத்தில் எவ்வாறு பயிற்சி அளித்தனர் என்பது பற்றி விரிவாக அதில் கூறப்பட்டுள்ளது; கஃபர் சிர்கின் பயிற்சித் தளத்தில், ‘இஸ்ரேலியர்கள் தமிழர்களுக்குக் கற்றுக் கொடுத்த அதே நுட்பங்களை எவ்வாறு கையாள்வது என்று சிங்களவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது’.
மொசாட் உளவுப்படையினரின் இனவெறி, இயல்பான அவர்களது மேட்டிமை உணர்வின் வழியாக உருவாகும் ‘நாகரிகமற்றவர்கள்’ என்று கருதும் மக்கள்திரள் மீதான அவர்களின் இகழ்ச்சி ஆகியவை இன்றைய சூழலில் மிகவும் காலப் பொருத்தம் கொண்டவை.
“நான் அவரை சந்தித்தபோது, மொசாட் செயல்பாட்டாளரான அமி லண்டனில் இலங்கை செல்லும் விமானத்திற்காகக் காத்திருந்தார்.” பின்வருவது இலங்கையர்களைப் பற்றிய அவரது வர்ணனை: அவர் கூறினார், “அவர்கள் வரும்போது,’ ‘முகம் காட்டாதே, வேறெதுவும் செய்யாதே… அவர்கள் குரங்குகளைப் போன்றவர்கள். அவர்கள் வளர்ச்சியடையாத இடத்திலிருந்து வருகிறார்கள். அவர்கள் மரங்களிலிருந்து கீழிறங்கி நீண்ட காலம் வெளியே வரவில்லை. எனவே அவர்களிடம் அதிகம் எதிர்பார்க்க வேண்டாம்.”
திரு. ஒஸ்ட்ரோவ்ஸ்கியின் முதல் பணி, ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் மருமகள் பென்னி ஜெயவர்தனவை அழைத்துச் செல்வதாகும். பின்னர், அவர் பல உயர்மட்ட இலங்கை இராணுவ அதிகாரிகளை அழைத்துக்கொண்டு ரேடார் உபகரண உற்பத்தியாளரான ஆல்டாவிற்குச் சென்றார். ஆனால் அவற்றின் விவரக்குறிப்புகளைப் பார்த்தபோது, ஆல்டாவின் பிரதிநிதி, “அவற்றின் ‘அசைவுகளை மாத்திரமே’ அவர்கள் பார்க்கின்றனர். அவர்களிடம் வேறெதையும் எதிர்பார்க்க முடியாது.” அவர்கள் நமது ரேடாரை வாங்கப் போவதில்லை… இந்த விவரக்குறிப்புகள் டெகா என்ற பிரிட்டிஷ் ரேடார் உற்பத்தியாளரால் தயாரிக்கப்பட்டவை. அதனால் அவர்களுக்கு எதை வாங்கப் போகிறோம் என்பது ஏற்கனவே தெரியும். அவர்களுக்கு ஆளுக்கு ஒரு வாழைப்பழத்தைக் கொடுத்து வீட்டுக்கு அனுப்பி வையும்”
இனவெறியை, “சில மக்கள்/குழுக்கள் மற்றவர்களை விட குறைவான கண்ணியத்தையும் மதிப்பையும் கொண்டுள்ளனர் என்ற நம்பிக்கை…” என பெத்லஹேமில் உள்ள லூத்தரன் தேவாலயத்தின் போதகர் ரெவ் முன்தர் ஐசக் வரையறுக்கிறார். (இது இஸ்ரேலிய பிரச்சாரத்திற்கு மாறானது; அனைத்து பாலஸ்தீனியர்களும் முஸ்லிம்கள் அல்லர். சிலர் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர்கள், புராட்டஸ்டன்ட்டுகள், பழமைவாத கிறிஸ்தவர்கள்)
சமீபத்தில், ரஷ்யா-உக்ரைன் போரில் ‘பீரங்கித் தீவனமாக மாறுவதற்காக’ கொழுத்த சம்பளம் தருவதாக வாக்குறுதி அளித்து சிங்களவர்களை கவர்ந்திழுத்து, இறுதியில் அவர்கள் போரில் கொல்லப்பட்டு, ரஷ்யாவில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கல்லறைகளைக் காட்டி பி.பி.சி செய்தி வெளியிட்டது.
தற்போது, இஸ்ரேல் இராணுவம் கடுமையான மனிதவள நெருக்கடியை எதிர்கொள்கிறது. 100,000 க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய ரிசர்வ் வீரர்கள் IDFல் தொடர்ந்து பணியாற்ற மறுத்துவிட்டனர். சிலர் காசாவில் நடந்த இனப்படுகொலையில் பங்கேற்க மறுத்ததால் சிறைக்குச் சென்றனர். ரிசர்வ் படையினரின் வருகை சுமார் 50% ஆகக் குறைந்துள்ளது; 1982 ஆம் ஆண்டு லெபனான் போருக்குப் பிறகு ஏற்பட்ட மிகப்பெரிய மறுப்பு அலை இது என்று ‘There is a limit’ மறுப்பு இயக்கத்தின் தலைவரான இஷாய் மெனுசின் கூறுகிறார். ஜூலை 15ல் வெளிவந்த டைம் ஒஃப் இஸ்ரேல் அறிக்கையின்படி, போர் சோர்வு காரணமாக ஐ.டி.எஃப் தளபதிகள் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி வீரர்களைச் சேர்க்கின்றனர். அதிக PTSD (மனஉளைச்சலுக்குப் பிந்தைய மன அழுத்தக் கோளாறு) அளவுகள் வீரர்களிடையே முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தற்கொலைகளுக்கு வழிவகுத்துள்ளன. சில நேரங்களில், பசியால் வாடும் குழந்தைகள் கொல்லப்படுவது உளரீதியாக உங்களை மோசமாகத் தாக்கக்கூடும்.
இஸ்ரேலுக்கு மலிவு விலையில் கூலிப்படையினர் தேவைப்பட்டால், எங்கு தேடுவது என்பது அவர்களுக்குத் தெரியும்.
இலங்கைக்கு ஏற்கனவே போதுமான புவிசார் அரசியல் தலைவலிகள் உள்ளன; இந்தியாவும் சீனாவும் நாம் தப்பிக்கவே முடியாத தலையெழுத்துக்கள். இஸ்ரேல் என்பது ஒரு தேவையற்ற சிக்கல், நாமே உருவாக்கிக்கொண்ட, தவிர்க்க முடியுமான ஒரு பிரச்சினை. இஸ்ரேலின் நச்சு வலையிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ள இன்னும் நேரம் இருக்கிறது. நாம் தோல்வியுற்றால், ஒரு புதிய சுற்று இன-மத மோதல் நமது தவிர்க்க முடியாத எதிர்காலமாக இருக்கலாம். மேலும், ராஜபக்சக்களுக்கு, ‘முஸ்லிம் எதிரி’யின் மீள் எழுச்சி என்பது ஒரு கலப்பற்ற ஆசீர்வாதமாகவும், அதிகாரத்தை பெற்றுக்கொள்வதற்கு நேரானதோர் பாதையாகவும் இருக்கும்.
இலங்கை அரசியல் ஊடகத் துறையில் திசாரணி குணசேகர (Tisaranee Gunasekara) பிரபலமான ஒருவர். ஹிரு தொலைக்காட்சியின் மூத்த பத்திரிகையாளராகவும், லங்காதீப பத்திரிகையின் கட்டுரையாளராகவும், அரசாங்கங்களின் ஊழல், எதேச்சாதிகாரம் மற்றும் நிர்வாகத் தோல்விகள் குறித்து கூர்மையான, கொள்கை ரீதியான மற்றும் விமர்சனங்களை செய்து வருகிறார்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் Colombo Telegraph இணையதளத்தில் Understand The Beginning; Consider The End என்ற தலைப்பில் ஜூலை 20, 2025 வெளியானது.