ஜோஸஃப் மஸ்ஸாத்

மோட்டார் பொருத்தப்பட்ட பாராகிளைடர்கள், உலகின் வலிமையான ஒரு இராணுவத்துக்கு எதிரிலிருந்து என்னதான் செய்திட முடியும்?

சனிக்கிழமை காலையன்று ஆகாயம், நிலம் மற்றும் கடல்மூலமாக இஸ்ரேலின் மீது ஒரு வியப்பூட்டக்கூடிய தாக்குதலை நடாத்திய புதுமையான ஒரு பாலஸ்தீன எதிர்ப்பின் கைகளால் ஏராளமாகவே செய்ய முடியும் . அற்புதமன காணொளிகள் எமக்கு காட்டுவதுபோன்று இந்த பாராகிளைடர்கள் பாலஸ்தீன எதிர்ப்பின் விமானப்படையாகிவிட்டார்கள்.

ஹமாஸினால் அக்டோபர் 7ம் திகதியன்று முன்னெடுக்கப்பட்ட பெரிய தாக்குதலான அல்-அக்ஸா வெள்ளம் எனும் நடவடிக்கையானது யாராலும் எதிர் பார்க்கப்படாத ஒன்றாகும்.

மேற்குக்கரை நகரமான ஹவ்வாரா மற்றும் ஜெரூஸலத்தில் தற்போது தொடர்ந்து கொண்டருக்கும் இஸ்ரேலிய படுகொலைகளுக்கான ஒரு பதிலடியாக இந்த தாக்குதல் அமைந்தது. முக்கியமாக குடியேற்றவாதிகள் கடந்த மாதம் யூத மதத்தின் பெரும் புனித தினங்களின் போது அல்-அக்ஸா முஸ்லிம் பள்ளிவாசலுக்குள்  கூட்டங்கூட்டமாக அத்து மீறிய நுழைய முற்பட்டது இதில் முக்கிய பங்குவகித்தது. இப்போது ஒன்றரை தசாப்தங்களுக்கும் மேலாகதொடரும் காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகையினது விளைவும் தான் இது என்பதை மேலதிகமாக விளக்க வேண்டியதில்லை.

அரேபிய ஊடக விரிவுரையாளர்களின் பொது ஏற்பின் படி இந்த எதிர்த்தாக்குதலானது இஸ்ரேலிய இராணுவப்படையின் பலம் பற்றிய கட்டுக்கதையையும் அதனது உளவுத்துறையின் மீதுள்ள தகுதியற்ற பொது மதிப்பையும் திறம்பட அழித்தவிட்டது. பாலஸ்தீன தாக்குதலின் வெற்றியின் அடிப்படையில் ஏற்பட்டஅதிர்ச்சியை அளவுகோலாக வைத்து பார்க்கும் போது இவையாவும் திகைக்க வைக்கும் தோல்விகளாகவே தெரிகிறது.

பாலஸ்தீன தாக்குதலின் போது காஸா எல்லைக்கு அருகில் இருக்கும்
ஏராளமான இஸ்ரேலிய குடியேற்ற காலானியங்கள் கைப்பற்றப்பட்டது எவ்வகையிலும் குறைவான வியப்பைத்  தருபவை அல்ல. அது மட்டுமல்லாமல் ஒஃபெகிமை பொருத்தவரையில் காஸா எல்லையில் இருந்து 22 கி.மீ தூரம்வரை அவர்கள் கைப்பற்றியிருப்பது தெரியவருகிறது.

குடியேற்ற காலனியங்களை தற்காலிகமாக கைப்பற்றிய இந்த எதிர்ப்பின் முக்கிய சாதனையாக ஏதாவது இருக்குமென்றால் அது இஸ்ரேலிய காலனியவாதிகள் தங்களது இராணுவத்தின் மீதும் மக்களைக் காக்கும் அதன் ஆற்றல் மீதும் வைத்திருந்த எல்லா வகையான நம்பிக்கைகளுக்கும் அது ஒரு மரண அடியைக் கொடுத்திருக்கிறது என்பதே.

ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ராக்கெட்டுகளிலிருந்தும் துப்பாக்கிச்சூடுகளிலிருந்தும் தம்மை பாதுகாத்து கொள்ளும்பொருட்டு பாலைவனத்தினூடாக கால்நடையாகவே தப்பித்துஓடியது குறித்த அறிவிப்புகள் உடனடியாக வெளிவந்தன. எதிர்ப்புதாக்குதல் நடந்து 24 மணிநேரம் கடந்த நிலையில் இன்னும் பல இஸ்ரேலியர்கள் குடியேற்றங்களினுள் ஒளிந்து கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.

அப்படி இன்னும் தப்பியோடாதவர்களை காஸாவிற்கு அருகில் உள்ள 24க்கும் மேற்பட்ட காலனிகளிலிருந்து இராணுவம் மீட்டெடுத்தது.

தங்களுடைய வாழ்க்கைகளையும் தங்களது பிள்ளைகளுடைய எதிர்காலங்களையும் பாதுகாக்கும் பொருட்டு காலனியவாதிகளின் இந்த தப்பிப்பானது ஒரு நிரந்தர வெளியேற்றமாக அமையக்கூடும். இன்னொரு மக்களிடமிருந்து திருடப்பட்ட நிலத்தில் வாழ்வது எந்த வகையிலும் பாதுகாப்பானதாக அமையாது என்பதனை கடைசியாக அவர்கள் உணர்ந்திருக்கக்கூடும்.

பாலஸ்தீன போராளிகளுக்கும் இஸ்ரேலிய காலனிய படைகளுக்கும் இடையிலான இராணுவ நேரிடலானது பாரிய அளவினாலான ஒன்றாகும். அது இரண்டு டஜனுக்கு மேற்பட்ட யுத்த களங்களை உள்ளடக்கியிருப்பதோடு ஹமாஸும் தனது தாக்குதல்களுக்கான இலக்காக 50 இஸ்ரேலிய இராணுவ இலக்குகளை அறிவித்திருக்கிறது.

மகிழ்ச்சியும் பிரமிப்பும்

பாலஸ்தீன எதிர்ப்பு போராளிகள் காஸாவை இஸ்ரேலிலிலிருந்து பிரிக்கும் வகையில் இஸ்ரேலிய சோதனைப் புள்ளிகளைத்தாக்கும் காட்சியானது இஸ்ரேலியர்களுக்கு மட்டுமல்லாமல் முக்கியமாக பாலஸ்தீனர்களுக்கும், மேலும் கொடூரமான காலனியவாதிகளுக்கு எதிரான பாலஸ்தீனர்களின் போரட்டத்துக்கு ஆதரவு வழங்க வந்த பிராந்தியம் முழுவதிலுமுள்ள அரேபிய மக்களுக்கும் அது ஒரு அதிர்ச்சியூட்டக்கூடிய விடயமாகவே இருந்தது.

இஸ்ரேலிய எல்லைகளை நோக்கி அணிவகுத்துச்சென்ற ஜோர்டானியர்கள் அவர்களது பயணம் முன்னேறுவதை தடை செய்யும் விதமாக ஜோர்டான் அரசு கைது செய்தது.

பாலஸ்தீன போராளிகள் காஸாவில் இருந்து இஸ்ரேலிய சிறைவேலிகளை உடைத்துக்கொண்டு நுழையும் காட்சிகள் அல்லது அதன் மீது காற்றின் வழியாக பறந்து உள் நுழையும் காட்சிகளை செய்திகளின் மூலம் பார்த்து கொண்டு தங்களது நாளை கழித்த மில்லியன் கணக்கான மகிழ்ச்சியான அரேபியர்களுக்கு இது எந்த வகையிலும் அற்புதத்துக்கு குறைவான ஒரு விடையமாக விளங்கவில்லை. இராணுவ தளங்கள் மற்றும் சோதனைப்புள்ளிகளை குறிப்பிடத்தக்க வகையில் கைப்பற்றிய இந்த எதிர்ப்பாளர்கள் அங்கு வரிசையாக கைவிடப்பட்டிருந்த இஸ்ரேலிய பீரங்கி படைவண்டிகளையும் கவசவண்டிகளையும் பார்த்து வியந்து அவற்றின் மீது தங்களின் கொடிகளை ஏற்றினார்கள். இந்நிகழ்வானது இஸ்ரேலிய சமூகத்தை ஆட்டம் காண வைத்ததோடு பாலஸ்தீனர்கள் மற்றும் அரேபியர்களுக்கு நம்பமுடியாத அளவு வியப்பை ஏற்படுத்தியது.

தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரேலின் காலனிய படைவீரர்களை உள்ளாடையுடன் சிறைபிடித்ததானது முழுதும் மேற்கண்டதற்கு எந்தவிதத்திலும் குறைவில்லாத ஆச்சரியமான விஷயமாகவே ஆகி இருக்கிறது. இஸ்ரேலிய இராணுவ வீரர்களால் 1967ம் ஆண்டு யுத்தத்தின் போது உள்ளாடையுடன் யுத்த கைதிகளாக பிடிக்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட எகிப்தியர்களினதும், அதிலும்முக்கியமாக உள்ளாடையுடன் யுத்த கைதிகளாக பிடிக்கப்பட்ட பாலஸ்தீனர்களினதும் காட்சிகள் தான் அரபு கூட்டு நினைவில் மறுகூறப்பட்டிருக்கிறது.

கைப்பற்றப்பட்ட உயர் பதவி யுத்த கைதிகளில் இஸ்ரேலிய படைத்தலைவர் நிம்ரோத் அலோனியும் இருப்பதாக ஹமாஸ் குறிப்பிட்டிருக்கிறது.

இஸ்ரரேலுக்கு எதிரான இந்த திடீர் தரைவழி படையெடுப்பு மற்றும் அதனோடினைந்த ஏவுகணை தாக்குதல்கள் போன்றவற்றின் வெற்றியானது இஸ்ரேலுக்கான விமான வழி வணிக போக்குவரத்தை கடுமையாக குறைவடையசெய்துள்ளது. அதன் பாடசாலைகள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதோடு அதன் பொருளாதாரமும் பெருமளவில் முடக்கபட்டிருக்கின்றது.

பயங்கரமான மனித இழப்பு

டஜன் கணக்கான குடியிருப்புக்குரிய அடுக்குமாடிகளை உள்ளடக்கிய காஸாவின் உயர் கட்டிடமான பாலஸ்தீன கோபுரத்தை இஸ்ரேலிய குண்டுகள் அழித்ததனை தொடர்ந்து, அதற்கு பதிலடியாக பாலஸ்தீன எதிர்ப்பு குழுக்கள் டெல்அவிவின் மீது பெருந்தொகையான ஏவுகணைகளை ஏவியது.

எந்தவித எச்சரிக்கையுமின்றி குறிவைக்கப்பட்ட பொதுமக்களின் வீடுகளையும் உள்ளடக்கியதான காஸாமீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித்தனமான குண்டுவீச்சானது சுகாதார அமைச்சக தகவலின் அடிப்படையில் ஞாயிறு இரவாகும் போது 400க்கும் மேற்பட்ட மக்களை – அதில் 78 குழந்தைகள் உள்ளடக்கம் – கொன்றொழித்திருக்கிறது.

இஸ்ரேலிய தாக்குதலில் 2,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயப்பட்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில் பாலஸ்தீன தாக்குதலானது இஸ்ரேலில் 700க்கும் மேற்பட்டவர்களை கொன்றிருப்பதோடு அவர்களில் 2,200க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். நிறைவாக எல்லா பக்கத்திலிருந்தும் பயங்கரமான ஒரு மனித உயிரிழப்பாக இது அமைந்துள்ளது.

எதிர்பார்த்ததை போன்று பாலஸ்தீன மக்களின் சர்வதேச எதிரிகள் இஸ்ரேலின் இனவொதுக்கள் அமைப்புக்கும் குடியேற்ற காலனித்துவத்துக்கும் தங்களது ஆதரவை பிரகடனப் படுத்துவதற்கும் பாலஸ்தீன எதிர்ப்பினை கண்டிப்பதற்கும் விரைந்தார்கள்.

இதில் பாலஸ்தீனர்களின் முதன்மை எதிரிகளான அமெரிக்காவும் பிரிட்டனும் ஐரோப்பிய ஒன்றியமும் உள்ளடங்கியிருக்கின்றன.

ரஷ்யாவிற்கு எதிராக மேற்குடனான தனது கூட்டணியின் மூலம் உலகை ஒரு அணு ஆயத யுத்த விளிம்பிற்கு தள்ளிக் கொண்டிருக்கின்ற உக்ரேனிய ஜனாதிபதி Volodymyr Zelenskyஉம் தனது மேற்கத்திய ஆதரவாளர்களுடன் இணைந்து கொண்டு பாலஸ்தீன எதிர்ப்பை “தீவிரவாதம்” என்று கண்டித்ததுடன் “இஸ்ரேலின் தற்காப்புக்கான உரிமைஎன்பது சந்தேகத்திற்கிடமில்லாத ஒன்று” என்று வலியுறுத்தவும் செய்தார்.

இதற்கிடையில் பாலஸ்தீன மக்களின் மீது எவ்வித அன்பும் காட்டியதாக அறியப் பெறாத ஐ.நா வின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்ஸோ “கடத்தப்பட்ட” இஸ்ரேலிய பொதுமக்களைத் திருப்பி ஒப்படைக்குமாறு அழைப்பு விடுக்கப் படவேண்டும் என்பதை மட்டுமே தனது மனதின் குரலாக கண்டடைந்திருக்கிறார்.

“சர்வதேச மனிதாபிமான சட்டங்களின் அடிப்படையில் பொதுமக்கள் எல்லா நேரங்களிலும் மதிக்கப்படவும் பாதுகாக்கப்படவும் வேண்டும்” என்று கூறிய குட்டேரஸ்“கடத்தப்பட்ட அனைவரும் உடனடியாக விடுவிக்கபட வேண்டும்” என்று அழைப்பு விடுத்தார்.

ஆனால் இஸ்ரேலிய கிடங்குகளில் இருக்கும் 5,000க்கும் மேற்பட்ட யுத்த கைதிகள் மற்றும் கடத்தப்பட்டவர்கள் – இஸ்ரேலினால் கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்ட பாலஸ்தீனர்களை குறிப்பதற்காக அவர் ஒருபோதும் இச்சொல்லை பாவிப்பதில்லை – பற்றி ஒரு வார்த்தையேனும் குட்டேரஸ்ஸிடமிருந்து வரவில்லை. மேலும் சர்வதேசச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீனர்களுக்கு இருக்கும் ஆக்கிரமிப்பை எதிர்க்கும் உரிமையைப் பற்றியும் எந்த கருத்தையும் அவர் வெளியிடவில்லை.

லிபரல் கண்டனங்கள்

இஸ்ரேலுடன் கூட்டணியில் இருக்கும் அரேபிய அரசாங்கங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஹமாஸிடம் கோரிக்கொண்டிருக்கும் அதேவேளை கடந்த சில வாரங்களாக தொடரும் இஸ்ரேலிய படுகொலைகள் பற்றி அவை மௌனமாகவும் செயலற்றும் இருக்கின்றன.

இஸ்ரேலிய காலனித்துவத்துக்கு எதிராக பாலஸ்தீன மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு பாலஸ்தீன எதிர்ப்பானது ஈரானிய அரசாங்கத்திடமிருந்து இராணுவ மற்றும் நிதி உதவிகளை அங்கீகரித்ததை மேற்கத்திய மற்றும் அரேபிய அரசாங்கங்கள் மற்றும் தாராளவாதிகள் அடிக்கடி கண்டித்து வருகின்றனர். ஏதோ ஏனைய நாடுகளில் இருந்து வழங்கப்பட்ட ஆதரவுகளை எல்லாம் மறுத்துவிட்டு பாலஸ்தீனர்கள் ஈரானிடம் சென்று உதவிகளை பெற்றது போலத்தான் இத்தகைய கண்டனங்கள் இருக்கின்றன.

அப்படி கண்டிப்பதானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் நாஜி ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஐரோப்பியர்களிடம் சென்று வெள்ளை மேலதிக்கவாதமும் இன ஒதுக்கலும் மலிந்த அமெரிக்காவிடமிருந்து (இதில் பிரெஞ்சு மற்றும் பிரிட்டனின் இனவாத காலனித்துவ அரசுகளைத் தனியாகக் குறிப்பிட வேண்டியதில்லை) இராணுவ உதவிகளையும் நிதி உதவிகளையும் பெறுவதனை மறுக்கமாறு கோருவது போன்றதுதான்.

இன்னும் மேலே குறிப்பிடப்பட்ட நாடுகளை போன்று ஈரான் ஒன்றும் உலகளவில் மில்லியன்கணக்கான மக்களின் கொலைக்கோ அல்லது உலகம் முழுவதும் பிற மக்களின் நிலங்களை ஆக்கிரமித்து காலனியப்படுத்தியதற்கோ காரணமாக இருக்கவில்லை.

இஸ்ரேலியர்களும் பாலஸ்தீன அதிகாரமும் (PA) மேற்குக்கரையின் பாலஸ்தீன எதிர்ப்பின் பின்னணியில் ஈரான் அதற்கு ஆதரவாக இருப்பதாக குற்றஞ்சாட்டி அதனை அச்சுறுத்தியிருக்கின்றனர்.

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக் இந்த சமீபத்திய தாக்குதலுக்கு ஈரானை குற்றம் சாட்டியதோடு ஈரானிய அச்சுறுத்தலை முடிவுக்கு கொண்டு வருவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

முன்னால் என்ன இருக்கிறது?

போர் மேகம் மெதுவாக கலையும் போது, அக்டோபர் 7ம் திகதி நிகழ்வுகளின் அரசியல் விளைவுகள் என்ன என்பது போன்ற கேள்விகள் பார்வையாளர்களின் மனதில் கனமாக தொடரும். இந்த யுத்தமானது நேதன்யாஹு அரசாங்கத்தை எவ்வாறு பாதிக்கப்போகிறது ?

ஹமாஸின் இந்த எதிர் தாக்குதலானது இஸ்ரேலின் தீவிர இடதுசாரிகளை கூட நெதன்யாகுவிற்கு எதிரான தங்களது ஊர்வலங்களை நிறுத்த அழைப்பு விடுக்க வைத்ததோடு மட்டுமல்லாது பாலஸ்தீன மக்களுக்கு எதிரான போரில் இஸ்ரேலுடன் இணைந்து காஸா முழுவதையும் அழிக்க வேண்டும் என்று அவர்களை கோர வைத்ததாக சில இஸ்ரேலியர்கள் குறிப்பிடுகின்றனர்.

அப்படியென்றால் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீவிர இஸ்ரேலிய நாட்டுப்பற்றானது பிரதமர் நெதன்யாகுவை ஒன்று பலப்படுத்தும் அல்லது பலவீனமாக்கும் என்பது இதன் அர்த்தமா ?

சென்ற இஸ்ரேலிய தேர்தல் முடிவுகளையும் யூத காலனியவாதிகளுக்கு மத்தியில் உச்சமாக அதிகரித்திருக்கும் யூத அடிப்படைவாத்தையும் வைத்து பார்க்கும் போது நெதன்யாகுவின் ஒவ்வொரு இழப்பும் அநேகமாக இட்டமார் பென் குவிர், பெஸலேல் ஸ்மோட்ரிச் போன்றவர்களை உள்ளடக்கிய அவரது தீவிர வலதுசாரி கூட்டணிகளுக்கு ஆதரவானதாக மாறுமே தவிர “ஜனநாயகத்துக்கு ஆதரவாக” ஊர்வலங்களை நடத்திக்கொண்டு தம்மை “இடதுசாரிகள்” என்று கற்பனை செய்துகொண்டிருக்கும் நெதன்யாஹுவின் சற்று தீவிரம் குறைந்த வலதுசாரி எதிரிகளுக்கு அது பயனுள்ளதாக அமையாது.

இஸ்ரேலின் “கருப்பு நாள்” என்று பாலஸ்தீன தாக்குதல் நடந்தமுதல் நாளை விவரித்த நெதன்யாகு அந்நாளின் முடிவில்அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸை உள்ளடக்கிய இஸ்ரேலின் ஆதரவாளர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்தார்.

எப்படியாயினும், இஸ்ரேலில் யார் அதிகாரத்துக்கு வந்தாலும், பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் குடியேற்ற காலனிய தன்மையையும் அதன் இனவாத இயல்பையும் எதுவும் மாற்றமடைய செய்யாது.

துரோகக் கூட்டாளியான பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் எதிர்காலம்

இந்த எதிர்ப்பின் வெற்றிகளானது (இஸ்ரேலுடன்) இசைந்து செல்லும் பாலஸ்தீன தேசிய ஆணையத்தின் மீது எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தியது என்று பார்த்தால், ஃபதாஹ்வினால் ஆளப்படும் அரசாங்கமானது இத்தாக்குதல்களை தொடர்ந்து உடனடியாக ஆக்கிரமிப்பு குற்றங்களுக்கு எதிராக பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவும் “சர்வதேச பாதுகாப்பும்” வழங்கப் படவேண்டும் என கோரிக்கை விடுத்ததைச் சொல்லலாம். ஆனாலும் கூட எதிர்ப்புப் போராட்டத்தை  ஆதரிக்கும் படியான எந்தவொரு சொல்லையும் இவர்கள் உதிர்க்கவில்லை எவ்வித நடவடிக்கையையும் அவர்கள் செய்துவிடவில்லை என்பதையும் இங்கு நாம் நினைவுகூர வேண்டும்.

ஆயினும் கூட, மேற்குக்கரையில் பாலஸ்தீன எதிர்ப்பை தன்னூக்கமாக ஒடுக்கியதும், இத்தகைய செயல்பாட்டுக்காக வேண்டி சில வாரங்களுக்கு முன்பு அமெரிக்க ஆயுதங்களை விநியோகித்ததும் குடியேற்ற காலனியத்துக்கு எதிரான பாலஸ்தீன போராட்டத்தை தான் ஆதரிப்பதாகக் கூறிய PA வின் அறிவிப்பு வெறும் பொய்ப்பிரச்சாரமே என்பதை வெட்ட வெளிச்சாமாக்கியிருக்கிறது. 

இந்த யுத்தத்தில் எதிர்ப்பியக்கத்திற்கு ஒரு தீர்மானகரமான வெற்றி அமைந்தால் அது PA துரோகக் கூட்டணியினருக்கு (collaborators) ஒரு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அப்படியொரு வெற்றி அமையாவிட்டாலும் கூட PA அதிகாரிகளின் இதயங்களில் ஒரு பயத்தை ஏற்படுத்த முதல்நாள் வெற்றியே போதுமான ஒன்று தான்.

அல்-அக்ஸா வெள்ளத்தாக்குதலின் ஆரம்பத்திலிருந்தே ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரையில் இஸ்ரேலிய இராணுவப்படையானது அங்கிருக்கும் பாலஸ்தீனர்களையும் குழந்தைகளையும் கொலை செய்வதை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

வரும் நாட்களில் மேற்குக்கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் எதிர்ப்பு இயக்கங்கள் எந்த மாதிரியான பங்கை வகிக்கப் போகின்றன (அத்தகைய பங்கு இருக்கும் பட்சத்தில்) என்பது தெளிவில்லாமல் இருப்பதோடு அவர்கள் மீது துரோகக் கூட்டணியினரான PAவும் இஸ்ரேலியர்களும் எந்த அளவிற்கு அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிடப் போகிறார்கள் என்பதும் இன்னும் தெளிவில்லாமல் இருக்கிறது.

அரபு இயல்பாக்கம்

எந்த வகையான முடிவை இந்த யுத்தம் கொண்டுவந்தாலும் முதல் நாள் மோதலின் போது இஸ்ரேலிய இராணுவத்தின் மீதான பாலஸ்தீன எதிர்ப்பின் அதிர்ச்சி தரும் வெற்றியானது நெதன்யாஹு ஏற்றுக்கொண்டதைப் போன்று இஸ்ரேலியர்களுக்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக இருக்கிறது. பாலஸ்தீனர்களுக்கும் அவ்வாறே இருக்கின்றது.

ஆனால் எதிர்ப்பு இயக்கத்தின் இந்த வெற்றியானது தங்குதடையின்றி முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் சவுதி-இஸ்ரேல் இயல்பாக்கத்தையோ அல்லது இஸ்ரேலுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கும், பஹ்ரைனுக்கும் மற்றும் மொரோகோவிற்கும் இடையில் இருக்கும் சுமூகமான உறவுகளையோ எவ்வகையிலேனும் பாதிக்குமா ?

எதேச்சதிகார அரேபிய அரசாங்கங்களுக்கும் குடியேற்றகாலனிய இஸ்ரேலின் தலைவர்களுக்கும் இடையிலான காமுறுதலுக்குத் தடையாக எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.

இருப்பினும் எதிர்ப்பியக்கத்தின் இராணுவ பலமும் இஸ்ரேலிய இராணுவத்தின் தயார் இல்லாத பலவீன நிலையும் உலகம் முழுவதும் தொலைக் காட்சிகளில் ஆர்வத்துடன் பார்க்கப் பட்டுவரும் நிலையில் அரேபிய அரசாங்கங்கள் தமக்கு முன்னிருக்கும் பாதையை மறுமதிப்பீடு செய்து பார்ப்பதற்கான சாத்தியப்பாடுகள் பெருமளவில் காணப்படுகிறது.

சவுதி இயல்பாக்கமானது இஸ்ரேல் “பாலஸ்தீனர்களின் வாழ்க்கையை இலகுவாக்குகிறதா இல்லையா” என்பதில்தான் தங்கியிருப்பதாக உறுதியாக கூறிய சவுதியின் பட்டத்து இளவரசர் முஹம்மத் பின் சல்மானின் கூற்றானது இந்த யுத்தத்தின் சோதனையில் வீழாது நிலைநிற்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

ஹமாஸினால் முன்னெடுக்கப்பட்ட இந்த எதிர்ப்புத் தாக்குதல் கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு முன்பு இதேநாளன்று நடைபெற்ற அக்டோபர் 1973ம் ஆண்டு யுத்தத்தின்போது எகிப்திய மற்றும் சிரிய படைகள் திடுக்கிடச்செய்யும்விதமாக எகிப்தின் சினாய் தீபகற்பத்திலும் சிரியாவின்கொலான் குன்றுகளிலும் இருந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புபடைகளை தாக்கியபோது ஏற்பட்ட அதிர்ச்சியை விடவும் அதிகமாக திகைக்க வைக்கக்கூடிய ஒன்றாக இருப்பதாக இஸ்ரேலியர்கள் அறிவித்துள்ளனர்.

மேலும் பாலஸ்தீனர்களுக்கு இது 1968இல் ஜோர்டானில்நடந்த அல்-கராமா யுத்தத்தில் PLO கெரில்லாக்களின் செயல்திறனை நினைவூட்டுவதாக இருந்தது. 1948இல் அதனதுஉருவாக்கத்தின் பின் முதன் முதலாக இஸ்ரேலை பயந்துபின்வாங்க வைத்ததோடு இன்னும் ஆயிரத்துக்கும்மேற்பட்டவர்களை கெரில்லாவில் சேர்வதற்காக அணிதிரட்டுவதற்கும் அந்த யுத்தமே காரணமாக இருந்தது. 

மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு முன்னுதாரணங்களும்இஸ்ரேலிய எல்லைகளுக்கு வெளியே நிகழ்ந்தயுத்ததங்களாகும். ஆனால் பாலஸ்தீனர்களோ அல்லது எந்தஒரு அரேபிய படையோ 1948 இஸ்ரேலிய எல்லைகளுக்குள் ஒரு முழு போரை நடத்தியதானது இதுவே முதல் தடவையாகும்.

ஆனால் இஸ்ரேலிய காலனிய படைக்கும் பூர்வீக பாலஸ்தீன எதிர்ப்புக்கும் இடையில் நடந்திருக்கும் இந்த போரானது இப்போது தான் தொடங்கியிருக்கிறது. இது விடுதலைக்கான பாலஸ்தீன போரா அல்லது காலனியவாதிகளுக்கும் காலனியத்திற்கு உட்பட்டவர்களுக்கும் இடையிலான முடிவில்லா போராட்டத்தில் உள்ளடங்கும் மற்றுமொரு யுத்தமா என்பதை தீர்மானிப்பதற்கு வரப்போகும் நாட்கள் நமக்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

ஜோஸஃப் மஸ்ஸாத் கொலம்பியா பல்கலைகழகத்தில் அரேபிய அரசியல் மற்றும் அறிவுசார் வரலாற்றினை கற்பிக்கும் ஒரு பேராசிரியராவார். அவர் பல புத்தகங்கள் மற்றும் கல்விசார் மற்றும் ஊடகசார் கட்டுரைகளை எழுதியவர். Colonial Effects: The Making of National Identity in Jordan, Desiring Arabs, The Persistence of the Palestinian Question: Essays on Zionism and the Palestinians ஆகியவை அவரது புத்தகங்களாகும். இதுதவிர்த்து சமீபத்தில் வெளிவந்த இவரது புதிய புத்தகம் Islam in Liberalism ஆகும்.

மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி