ருவைதா அமர்

நாம் இங்கு காஸாவில் அனுபவிப்பது ஒரு யுத்தமல்ல மாறாக இது ஒரு இனப்படுகொலை.

தங்களது வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டிய பொதுமக்கள் மீது கடுமையான வெடிகுண்டுகளும் ஏவுகணைகளும் விழுகின்றன. குடும்பங்களை ஒட்டுமொத்தமாக கொன்றுகுவிப்பதுதான் அதன் ஒரே இலக்காகும். 

அந்த வீடுகளில் ஒரு சிறுவன் தனது தந்தையின் கையில் சாய்ந்து கொண்டு எதிர்காலத்திற்கான தன்னுடைய கனவை சொல்லிக் கொண்டிருக்கிறான். ஆனால் அந்த குண்டுகளின் சத்தம் அவனை வருந்தச் செய்கிறது. ஏனென்றால் இரவு முழுவதும் நீடிக்கும் இந்த ஏவுகணை தாக்குதல்களானது அவனையும் கொன்றுவிட்டு அவனது கனவுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்பது அவனுக்கு நன்றாக தெரியும்.

இராணுவப்படைகள், ஆயுதங்கள் மற்றும் விமானப்படைகள் இருக்கும் நாடுகளுக்கிடையே மட்டும் தான் யுத்தங்கள் நடாத்தப்படும். 360 சதுர கி.மீ நிலப்பரப்பில் 17 வருடங்களுக்குமேலாக முற்றுகையிடப்பட்ட ஒரு வாழ்க்கையை வாழும் 2.3 மில்லியன் பொதுமக்களின் மீது யுத்தம் நடாத்தப்படுவதில்லை.

காஸாவில் வாழும் 2.3 மில்லியன் பலஸ்தீனர்களாகிய நாங்கள், முற்றுகை மற்றும் எல்லாவகையான பற்றாக்குறைகளையும் தாண்டி எம்மால் முடிந்தளவு வாழ முயற்சி செய்து கொண்டிருக்கிறோம். 

காஸாவினுள் ஒரு நாளானது மிகவும் மெதுவாகவே நகர்ந்து செல்லும். அதில் பயமும் பதற்றமும் நிரம்பியிருக்கும். எமக்கு செய்யவேண்டி இருப்பது எல்லாம் ஒன்றுதான். ஏதாவதொரு பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு செய்திகளைப் பின் தொடரவேண்டும். இறப்பு மற்றும் அழிவு காட்சிகள் மீதான கண்ணீர், தாய் தந்தையரின் அலறல்கள் மீதான கண்ணீர் என்று எமது கண்ணீர் முடிவில்லாமல் பெருகும். நாம் செய்திகளை தொடரும் போது அடுத்த செய்திப் பொருளாக நாம் ஆகிவிடுவோமோ என்ற பயம் எமக்குள் எழும்பிக்கொண்டே இருக்கும்.

காஸாவில் யாருமே பாதுகாப்பாக இருப்பதில்லை.

நாள் மிகவும் சோர்வாக இருப்பதுவும், யாருக்கும் எதுவும் செய்ய ஆசை இல்லாமல் இருப்பதுவும் உண்மையாயினும் நடப்பதற்காக வேண்டியும், எமக்கு என்ன நடக்கிறது என்பதைபற்றி சிந்திப்பதற்கான வலிமையைப் பெருவதற்காக வேண்டியும் நாங்கள் சாப்பிடுகிறோம். போருக்கு முன்பு நாம் நாளொன்றுக்கு மூன்று வேலை உணவு உண்டோம். ஆனால் இப்போது ஒரு நாளைக்கு ஒரு வேலை உணவு மாத்திரமே சாப்பிடுகிறோம்.

காஸாவிற்கான உணவுப்பொருள் விநியோகத்தை இஸ்ரேல் நிறுத்தி வைத்திருக்கிறது.

வானத்திலிருந்தோ அல்லது நிலத்திலிருந்தோ ஏவப்படும் ஏவுகணைகளும் பீரங்கியிலிருந்து சுடப்படும் குண்டுகளும், அவை எதிலிருந்து புறப்படுகின்றன என்ற பண்புக்கேற்ப, பகல் நேரத்தில் எமக்கு பல விதமான வெடிச் சத்தங்களை செவியுறச் செய்யும். இது என்ன வகையான சத்தம்? இது போர் விமானமா அல்லது பீரங்கிப்படை வண்டியா? என்று நாங்கள் வியப்படைவோம். உண்மையில் அவற்றிக்கிடையில் எந்த அடிப்படையான வித்தியாசமும் இல்லை. ஏனென்றால் இரண்டினதும் ஒரே இலக்கு எம்மை கொன்றழிப்பதுதான். இருந்தாலும், நாம் கொல்லப்பட்டால், எதன் மூலம் கொல்லபட்டோம் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்தானே.

இரவும் பகலும்

தெருவில் இருக்கும் குழந்தைகள் வழக்கமாக குழந்தைகள் தெருவில் விளையாடும் போது இடும் சத்தங்களையே இடுகிறார்கள். ஒரு மில்லியன் மக்கள் தங்களது சொந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டதன் விளைவாக தற்போது பெருமளவில் நிரம்பியிருக்கும் வீடுகளில் அந்த குழந்தைகள் சிக்குண்டு மூச்சுத் திணறிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரும்புவதோ அவர்கள் மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி அனுபவிப்பதைத்தான். வெடிச்சத்தங்கள் மீளக்கேட்கும் போது அவர்கள் அலறிக் கொண்டு தங்களது குடும்பங்களை தேடுவார்கள். குண்டு வெடிகளின் சத்தம் நின்றவுடன் அவர்கள் மீண்டும் வெளியே சென்று விளையாடுவார்கள்.

பகலில் தான் நாங்கள் எங்களது தேவைகளை பூர்த்தி செய்ய முயற்சி செய்வோம். தண்ணீர் கொள்கலன்களை நிரப்பிவிட்டு சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்வோம். ரொட்டி வாங்குவது சுலபான ஒரு விடயமல்ல. அடுமனைக் கடைகளின் வரிசைகள் மிக நீளமாக இருப்பதால் ஏழு அல்லது எட்டு மணித்தியாளங்கள் வரை காத்திருந்துதான் வாங்க வேண்டி இருக்கும்.

சில வேலைகளில் நாங்கள் அடுமனைக் கடைகளில் ரொட்டி வாங்குவதில்லை. அம்மா வீட்டிலேயே ரொட்டி சமைப்பதற்கு முயற்சி செய்வார். ஆனால் சமைப்பதற்கு எங்களிடம் எரிவாயு இருக்காது. அவற்றை எங்கும் பெறவும் முடியாது.

காஸாவிற்கான எரிபொருள் விநியோகத்தை இஸ்ரேல் தடுத்து வைத்திருக்கிறது.

காஸாவிற்கான மின்சார விநியோகத்தையும் கூட இஸ்ரேல் நிறுத்தியிருக்கிறது.

நான் எனது தொலைபேசியையும் மடிக்கணினியையும் தினமும் மின்னேற்றம் செய்ய வேண்டும். நான் எனது நண்பர்களுடனும் குடும்பத்துடனும் தொடர்பில் இருக்க வேண்டும். நான் எனது பணியையும் ஆற்ற வேண்டும்.

வீட்டில் மின்சாரமோ அல்லது மின் சக்திக்கான மாற்று வழிகளோ இல்லை. ஆனால் நான் ஐரோப்பிய மருத்துவமனை பக்கத்தில்தான் வசிக்கிறேன். தினந்தோறும் அப்பா எனது தொழில்நுட்ப சாதனங்களுக்கு மின்னேற்றம் செய்ய அங்கு செல்வார். இது இப்போதெல்லாம் ஒரு வழமையாகிவிட்டது. மருத்துவமனை ஜெனரேட்டரை ஆற்றல் படுத்தும் எரிபொருள் தீர்ந்துவிட்டால், எங்களால் மின்னேற்றம் செய்ய முடியாது. அப்போது நாங்கள் எம்மைச்சுற்றி ஏவுகனைகள் விழும் சத்தத்தை மட்டும் கேட்டுக் கொண்டு இருப்போம். அவை எங்கு விழுகிறது என்றும் எங்களுக்கு தெரியாது, எங்களை சுற்றி என்ன நடக்கிறது என்றும் எங்களுக்கு தெரியாமல் இருக்கும். அப்போது நான் இந்த இனப்படுகொலையை பற்றி அறிவிப்பதை நிறுத்தவேண்டி இருக்கும்.

அந்தி மயங்கிவரும் போதுதான் இன்னும் பதற்றம் ஆட்கொள்ள ஆரம்பிக்கும். விமானப்படை மூலமாகவோ அல்லது பீரங்கிப் படைவண்டிகள் மூலமாகவோ நடத்தப்படும் குண்டுவெடிப்புகள் அதிகரிக்கும். பாதுகாப்பாக உணர்வதற்காக வேண்டி எனது குடும்பம் ஒரு அறையில்தான் தூங்கும். ஆனால் தூக்கம் இருக்காது. வெடிச்சத்தம் கேட்பது நிற்கவே மாட்டாது. அது வீட்டை பயங்கரமாக அசைத்துவிடும். நாங்கள் சற்று நிமிடங்களுக்கு தூங்கினாலும் கூட யுத்தம் பற்றிய கொடுங் கனவுகள்தான் எமக்கு வரும். அக்கனவை உயிர் தியாகிகளும் துண்டாக்கப்பட்ட குழந்தைகளும் வெள்ளைத் துணியால் போர்த்தப்பட்ட உடல்களும் அலங்கரிப்பார்கள். 

குடும்பத்தவர்கள் நன்றாக இருக்கிறார்களா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற பயத்துடன்தான் நாம் தூக்கத்தில் இருந்து கண் விழிப்போம்.

காஸாவில் நீண்டுகொண்டே செல்லும் வேளையானது இரவுதான். போருக்கு முன்பு, பகலிலிருந்து ஓய்வு பெறுவதற்காக நாங்கள் நெடிய இரவுகளுக்கு ஆசைப்பட்டோம். ஆனால் இப்போதோ நாங்கள் குறுகிய இரவுகளையே எதிர்பார்க்கிறோம். இரவு கடந்து காலை வந்துவிட்டதா என்பதை அறிந்து கொள்ள நாம் அடிக்கடி கடிகாரத்தை பார்த்த வண்ணம் இருப்போம். ஆனால் துரதிஷ்டவசமாக பொழுது புலர்ந்திருக்காது.

நேரம் மெதுவாகவே கழியும். எந்த நேரத்திலும் வெடிகுண்டுகள் எம்மை தாக்கிட முடியும் என்ற பயத்துடனேயே நாங்கள் இருப்போம். செய்திகள் எப்போதும் போல மோசமானதாகவே இருந்தாலும் கூட நாங்கள் இரவு முழுவதும் எங்களது தொலைபேசிகளில் செய்திகளை பார்த்துக் கொண்டே தான் இருப்போம். தொலைபேசியை ஒரு நொடிப் பொழுதேனும் விட்டு செல்ல நேர்ந்தால் நாங்கள் கவலைப்படுவோம்.

காஸாவில் நடக்கும் இனப்படுகொலையின் கதையானது அதனது நீண்ட இரவுகள் தான். ஆயிரக்கணக்கானோர் உயிர்த்தியாகம் செய்யப்பட்டதோடு இன்னும் பல்லாயிரக்கணக்கானவர்கள் காயப்பட்டிருக்கிறார்கள். இரவில் தான் நாங்கள் நிறைய பேர்களை இடிபாடுகளின் கீழ் தொலைத்தோம். அவர்கள் இன்னும் அங்கு தான் இருக்கிறார்கள். அவர்களை வெளியே எடுப்பதற்கான எந்த கருவியும் காஸாவில் இல்லை. 

காஸாவிற்கான அனைத்து வகையான விநியோகங்களையும் இஸ்ரேல் நிறுத்தி வைத்திருக்கிறது.

நாங்கள் இரவில் சாவை காண்கிறோம். உலகின் ஏனைய பகுதிகளோ இனப்படுகொலையை பகலில் காண்கிறது. அதை நிறுத்த அது எதுவும் செய்வதில்லை.

நான் எனது வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும். ஒரு முழு இரவு நான் உறங்க வேண்டும்.

ருவைதா அமர் காஸாவை சேர்ந்த ஒரு ஊடகவியலாளராவார்.

மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி