— நிக்கி கத்தூரா, ஜோ மஹர்

ஹமாஸை கண்டிக்குமாறு (condemn) பாலஸ்தீனர்களை கேட்க வேண்டாம். அவர்கள் ஏற்கனவே உலகில் ஒரு நரகத்தில் வாழ சபிக்கப்பட்டிருக்கிறார்கள் (condemned).

“நீங்கள் ஹமாஸை கண்டிக்கிறீர்களா?” கடிகாரத்தின் சுழற்சி போல இந்த கேள்வி வந்து கொண்டே இருக்கும்.

தெருவிலோ பல்கலைகழத்திலோ, அல்லது பாலஸ்தீனர்களையும் பாலஸ்தீன விடுதலை ஆதரவாளர்களையும் மைய நீரோட்ட ஊடகங்கள் அரிதாக நேர்காணலுக்கு அழைக்கும் பொழுதோ இந்த கேள்வியானது தவிர்க்க முடியாமல் இடம்பெறுகிறது. ஒரு அளவில் இது ஏன் இவ்வாறு இருக்கிறது என்று நமக்கு தெரியும். ஹமாஸுக்கு பாலஸ்தீனர்கள் அனைவரையும் பொறுப்பு கூறுபவர்கள் ஆக்குவதன் மூலம் பாலஸ்தீன எதிர்ப்பை ஒட்டுமொத்தமாக மதிப்பிழக்கச் செய்வது என்பதே அது.

பாலஸ்தீனத்தின் மீதான வன்முறைக்கு நேரடி முகவர்களாக இருக்கும் இஸ்ரேலிய இராணுவத்தினரோ அரசியல் அதிகாரிகளோ CNN இல் அணிவகுக்கச் செய்யப்படும்போது அவர்களுடன் ஒரு உரையாடலை ஆரம்பிப்பதற்கு முன்நிபந்தனையாக இஸ்ரேலின் கார்பெட் குண்டுவீச்சையோ கூட்டு தண்டிப்பு நடவடிக்கைகளையோ அல்லது சிவிலியன்களைக் கொல்வதையோ கண்டிக்குமாறு அவர்கள் கேட்கப்படுவதே இல்லை. 

ஆனால் நேர்காணப்படும் பாலஸ்தீனர்களோ வேறுபட்டதொரு எதார்த்தத்தை எதிர்கொள்கின்றனர். சரியாக தங்களது கவனத்தை கொடுமையான இராணுவ ஆக்கிரமிப்பை கண்டனம் செய்வதை நோக்கி திருப்பும் போது உடனே அவர்கள் இடைநிறுத்தப்பட்டு, முதல் முக்கிய பணியான கண்டித்தலை பற்றி  மீளச்சிந்திக்குமாறு வற்புறுத்தப் படுகின்றனர்.

“நீங்கள்” எனும் இந்த இலக்கண கட்டமைப்பானது 75 ஆண்டுகால குடியேற்ற காலணியத்தை வெறும் ஆம் அல்லது இல்லை என்ற எளிய பதிலை வழங்க முடிகின்ற ஒன்றாக தட்டையாக்கிவிடுவதோடு மட்டுமல்லாது தனிப்பட்ட உணர்வுகளை மையப்படுத்துவதன் மூலம் இதைத் தனிப்பட்டவர்களின் ஒரு விடயமாகவும் மாற்றிவிடுகிறது: ஏற்கனவே 10,000க்கும் மேற்பட்டவர்களை சென்ற மாதத்தில் கொன்றொழித்த இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலைப் பற்றி ஒருவர் பேசுவதற்கு முன்பு நிச்சயமாக பாலஸ்தீனர்களை அவர் கண்டித்தே ஆக வேண்டும்.

பாலஸ்தீனர்களை கண்டிப்பதற்கான ( இந்த அழைப்பானது ஒரு பொறி என்பதைவிட அது ஏலவே சபிக்கப்பட்டவர்களை அகப்படச்செய்ய வடிவமைக்கப்பட்ட ஒன்று என்பதிலும் நாம் மிகத் தெளிவாக இருக்க வேண்டும்.

ஏலவே சபிக்கப்பட்டவர்கள்

முன்னுதாரணமற்ற நிகழ்வுகள் அக்டோபர் 7ம் திகதி அன்று நிகழ்ந்ததைத் தொடர்ந்து, வழிகாட்டுதல்களுக்கும் ஊக்குவிப்புகளுக்காகவும் வேண்டி பலர் காலனிய எதிர்ப்பாளரான ஃப்ரான்ஸ் ஃபனானை நோக்கித் திரும்பியிருக்கிறார்கள். அவை மிகவும் சரியான காரணங்களே. அல்ஜீரிய காலனிய எதிர்ப்புப் போராட்டத்தின் தீவிர நிலையின் போது எழுதப்பட்ட Wretched of the Earth (ஒடுக்கப்பட்டவர்கள்) எனும் தனது நூலில், நல்லது தீயது எனும் மெனிகியன் இருமையினால் இரண்டாக பிரிக்கப்பட்ட ஒரு உலகாக காலனியப்படுத்தப்பட்ட உலகம் இருப்பதை ஃபனான் பிரபலமாக வர்ணித்தார். அதன் புவிப்பகுப்புகள் பெரும்பாலும் கடும் வன்முறையினால் நிறுவப்பட்டு தாங்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கினார்.

அவரது விவரிப்புகள் இன்றைய பாலஸ்தீனுக்கும், அதிலும் குறிப்பாக காஸாவின் திறந்தவெளி சிறை முகாமுக்கு மிகவும் பொருத்தமானதாகும். அவரது அதிகம் மேற்கோள்காட்டப்பட்ட வலியுறுத்தலான காலனியநீக்கம் என்பது தவிர்க்க முடியாத ஒரு வன்முறை விவகாரம் என்பதும் தற்போதைய நிலைக்கு மிகவும் பொருத்தமாகவே ஒலிக்கிறது. காலனிய வன்முறையானது பல வருடகாலமாக இரக்கமின்றி காஸாவினுள் உட் செலுத்தப்பட்டிருப்பதனால் ஏதோ ஒரு புள்ளியில் ஒரு பலூனை போல அது வெடித்துச் சிதற மட்டுமே முடியும்.

ஆயினும், ஃபனான் கண்டிப்பு பற்றிய கேள்வியையும் மேற்கண்ட விடயங்களுக்கு ஈடாகவே அணுகினார். உண்மையில் அவரது பிரபலமான “Wretched” எனும் சொல்லானது தண்டிக்கப்பட்ட அல்லது சபிக்கப்பட்ட என்பதனை குறிக்கும் “Damńes” எனும் பிரெஞ்சு சொல்லின் பொருள் மயக்கம் தரக்கூடிய கெடுபுகழ் பெறத்தக்க மொழிபெயர்ப்பாக அமைந்தது என்றால் அது மிகையில்லை. அதற்கு மாறாக, “Damńes” என்ற சொல்லின் சரியான பொருள் சபிக்கப்பட்டவர்கள் (damned) அல்லது கண்டனத்துக்குள்ளானவர்கள் (condemned) என்பதுதான்.

காலனிய ஆதிக்கமானது தனது பேராசையை நியாயப்படுத்திக் கொள்வதற்காக காலனியப் படுத்தப்பட்டவர்களை மனிதத்தில் இருந்து வெளியேற்றி, அவர்களை இனவயப்படுத்தியும் (racialize) அதீதமாக சுரண்டப்பட்டு மூழ்கடிக்கப்பட்ட அப்பொதுமக்களை “நிலத்தின் ஒரு பகுதி”யாக சுருக்கியும் விட்டது. அவர்கள் ஒரு நிலத்தடியில் வாழ்வது போன்ற நிலைமையில் சிக்கிக் கொண்டிருப்பதாகத் தங்களைக் காண்கிறார்கள். ஃபனான்இந்நிலைமையை “இருப்பின்மையின் ஒரு மண்டலம்…. தெள்ளத் தெளிவானதொரு நரகம்” என்று விவரித்தார். அக்டோபர் 7 நடந்தவுடனேயே சிவில் உரிமை வழக்கறிஞரும் எழுத்தாளருமான டைலான் சபா பதிவிட்டதை போன்று கேட்கவேண்டுமானால் “நரகத்தில் இருந்து வெளியேறுவதற்கான அறம்சார் வழி தான் என்ன?”

இந்த கண்டனத்தைத் தாங்கி நிற்கும் மதம் சார்ந்த தீவிர உணர்வுகள் தற்செயலான ஒன்றல்ல. காலனிய உலகம் நல்லது தீயது எனும் பிரிப்புக்குள் அடங்கியிருப்பதாக ஃபனான் அடையாளப்படுத்தினார் என்றால், இஸ்ரேலிய பிரதமர் பென்ஜமின் நெதன்யாஹு மெனிகியன் சொல்லடல்களுக்குள் நின்று இது “ஒளியின் குழுந்தைகளுக்கும் இருளின் குழந்தைகளுக்கும்” இடையில் நடக்கும் ஊழிக்கால யுத்தம் ( apocalyptic battle ) என்று பேசியுள்ளார். அது மட்டுமன்று, காஸா மீதான தனது அழித்தொழிக்கும் படையெடுப்பை பைபிலில் வரும் “Amalek” எனும் சொல்லாடலை பயன்படுத்தி நியாயப்படுத்தியும் இருக்கிறார். நாகரீகம் x காட்டுமிராண்டித்தனம் எனும் காலனியத்தின் அடிப்படை இருமையானது இன்றும் வியப்பூட்டுமளவில் ஏற்பைப் பெற்றிருக்கிறது.

தி அட்லான்டிக்கில் எழுதும் எலியட் கோஹனைப் பொருத்தவரை, ஹமாஸுக்கு எதிரான யுத்தமானது நறுக்குத் தெரித்தாற் போல் விவரிப்பதென்றால் “காட்டுமிராண்டித்தனத்தைப் பற்றிய ஒன்றாகும்”. அதை மேலதிகமாக விளக்கும் போது “காட்டுமிராண்டிகள் சண்டையிடுவதற்கு காரணம் அவர்களுக்கு வன்முறை இன்ப மூட்டுவதாக இருக்கிறது” என்றும் “வலியை ஏற்படுத்துவதற்கும், வேதனையை வழங்கவும், பாலியல் வன்கொடுமை செய்வதற்காகவும், எல்லாவற்றிற்கும் மேலாக அவமானப்படுத்துவதற்காகவும் அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள்” என்றும் கூறுகிறார். ஜியோனிச வாரிசான சிமோன் செபாக் மொண்ட்பியோரோ, பாலஸ்தீன போராட்டம் ஒரு காலனிய எதிர்ப்பு போராட்டம் அல்ல என்று எப்பாடுபட்டாவது நிறுவிவிட வேண்டும் என்ற எத்தனிப்பில் பச்சையான காலனியத்துவ மொழியைப் பாவிப்பதானது அவர் நிறுவ நினைக்கும் கருத்துக்கு முரணானதையே நிரூபிக்கிறது. அவர் “ஹமாஸின் தாக்குதலாதனது மத்தியகாலத்தில் கொல்வதற்காகவும் மனிதர்களைப் பரிசுப் பொருட்களாக கொள்வதற்காக வேண்டியும் மங்கோலியர்கள் நடத்திய திடீர் படையெடுப்புகளை ஒத்ததாக இருக்கிறது” என்று எழுதுகிறார்.

ஃபனானின் சிறந்த ஆசிரியரான அமெ சிஸேயர் உறுதியாக வாதிட்டதைப் போன்று காலனியமும் நாகரீகமும் ஒன்றுக்கொன்று பொருத்தமற்றதாகும். அது மட்டுமல்லாமல் மிருகத்தன்மையையும் மனிதாபிமானமற்ற தன்மையையும் நியாயப்படுத்துவதன் மூலம் காலனியவாதிகள் தம்மை மனிதாபிமானமற்றவர்கள் ஆக்கிக்கொள்வதோடு அந்தப் பயணத்தில் தாமே காட்டுமிராண்டிகளாகின்றனர்.

இஸ்ரேலிய படையினரால் பதிவு செய்யப்பட்ட பாலஸ்தீன பணயக்கைதிகளை இழிவுபடுத்தும் பெருமளவிலான காணொளிகள், அதிலும் ஹாரெட்ஸ் போன்ற ஊடகங்கள் வெளியிட்ட கைதிகளை நிர்வாணப்படுத்தி, அவர்களின் மேல் சிறுநீர் கழித்து மற்றும் அவர்களை சிகரெட்டுகளை பயன்படுத்தி சூடு வைக்கும் காட்சிகள் போன்றவற்றை சமீபவாரங்களாக காணக்கிடைத்ததானது ஆச்சரியமளிக்கக் கூடியவிதமாக இருக்கவில்லை. “எவரும் அப்பாவித்தனமாக காலனியப்படுத்துவதில்லை” என்று சிஸேயர் எழுதினார். ஒவ்வோர் வன்முறையையும் இஸ்ரேல் நிகழ்த்தும்போதும் அதனுள் ஒரு ”அழுகற்புண் வளர்ச்சிபெறும்”. அதன்விளைவாக, காட்டுமிராண்டித்தனத்திற்கு நெருக்கமான இன்னுமொரு அடியினை இஸ்ரேல் எடுத்து வைக்கும். அவர்களது கண் முன்னில் நடந்தும் கவனிக்கத் தவறிய கொடுமைப்படுத்துதல்களையும் வன்கொடுமைகளையும் மற்றும் அவமானப்படுத்துதல்களையும் கொஹெனுக்கும் மொன்ட்ஃபியருக்கும் யாராவது தெரியப் படுத்தவேண்டும் என்று நினைக்கிறேன்.

சுருக்கமாக சொல்வதானால் பாலஸ்தீனர்கள் ஏற்கனவே சபிக்கப்பட்டு தான் இருக்கிறார்கள். இந்த குறியீட்டு ரீதியான  வெளித்தள்ளலானது மிகவும் பருண்மையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலாண்டின் வார்த்தைகளில் கூறுவதானால் மனித இருப்பின் எல்லைக்கு தள்ளப்பட்ட இந்த “மனித மிருகங்கள்” மீது செலுத்தப்படும் எந்த வகையான வன்முறையும் அதீதமானதல்ல.

பூமியில் அமைந்துள்ள நரகம்

எதுவும் நடக்க வாய்ப்புள்ள இடத்தில் எல்லாம் நடக்கும் என்னும் நிலை இனப்படுகொலைக்கான நிமித்தமாகும்.

260க்கு மேற்பட்ட பாலஸ்தீனர்களைக் கொலை செய்த 2021இல் நடந்த இஸ்ரேலின் முன்னைய தாக்குதலின் போது ஐ.நா வின் பொதுச் செயலாளர் அன்தோனியோ குட்டேரஸ் காஸாவை “பூமியிலிருக்கும் நரகம்” என விவரித்தார். அந்த யதாரத்தமானது இன்னும் மோசமாகி இருப்பதை கடந்த மாத நிகழ்வுகளான 1.4 மில்லியன் மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்க்கப்பட்டமை, அரைவாசிக்கும் மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டமை, வைத்தியசாலைக்கு தேவையான மின்சாரம் மற்றும் எரிபொருள் இல்லாமை, காயப்பட்டவர்களின் உறுப்புகள் துண்டிக்கப்பட்டமை, மற்றும் சிசேரியன் பகுதிகளில் மயக்க மருந்து இல்லாமல் கர்ப்பிணிப் பெண்கள் இருந்தமை போன்றவற்றின் மூலம் நாம் அறிந்து கொள்ளமுடியும்.

ஆனால் பாலஸ்தீனர்கள் மனித இருப்பின் எல்லைகளுக்குத் தள்ளப்பட்டிருப்பதும் அவர்கள் பூமியில் ஒரு நரகத்தில் வாழ சபிக்கப்பட்டிருப்பதும் மட்டும் இங்கு போதுமானதாக இல்லைபோலும்.பொது மனிதத்தில் இருந்து தங்களை அப்புறப்படுத்தும் சுவர்களை எதிர்த்து போராடி வீழ்த்த நினைத்ததற்காக தம்மைத் தாமே கண்டித்துக் கொள்ளவேண்டும் என்றும் அவர்கள் எதிர்ப்பார்க்கப்படுகிறார்கள்.

இந்த எதிர்ப்பார்ப்பின் வக்கிரதன்மை திகைப்பூட்டும் படியானதாக இருப்பதோடு பலர் சுட்டிக் காட்டியது போல அதன் தர்க்கம் கொடுமையானதாக இருக்கிறது. இன்று “ஹமாஸை” கண்டிக்குமாறு பாலஸ்தீனர்களிடம் கேட்பதானது அவர்களின் மீதான ஒடுக்குமுறையை ஏற்றுகொள்ளுமாறு அவர்களைக் கோருவதாகும். மட்டுமல்லாமல் அந்த கோரிக்கையானது அவர்களை அகப்படச் செய்ய வைத்திருக்கும் ஒரு வலையாகும். ஏனென்றால் எவ்வளவுதான் அவர்கள் எதிர்ப்பார்த்த பதில்களை சொன்னாலும் அது ஒருபோதும் போதுமானதாக இருக்கப் போவதில்லை ( வெள்ளை மாளிகையின் சட்டவாக்க உறுப்பினரான ராஷிதா தாலிப் கண்டிக்கப்பட்டதிலிருந்து இது இன்னும் தெளிவாகிறது.)

எப்படியாயினும் கண்டனம் என்பது ஒரு பொறி என்பதை விடவும் கூடுதலான ஒரு விடயமாகும். அது நடைமுறையிலிருந்து நம்மை விலக்கக்கூடிய தடுப்புச்சுவராக உயர்ந்து நிற்கிறது. அத்துடன் நிலத்தை மீட்பதையும் விடுதலையையும் உள்ளடக்கிய காலனிய நீக்கத்தின் தூலமான எதார்த்தத்திலிருந்து தூரமாக்கி, சொல்லாடல் வனாந்திரங்களில் நம்மைத் தட்டுத்தடுமாறி அலைய விட்டு விடுகிறது.

இறந்து போன இஸ்ரேலியர்களை மீண்டும் உயிர் பெறச் செய்யவோ அல்லது இதுவரையில் முற்றுகையிடப் பட்ட காஸா துண்டின் மீது இஸ்ரேலினால் வீசப்பட்ட 30,000 டன்களுக்கும் மேற்பட்ட குண்டுகளை மறுபக்கம் திருப்பி வரவைக்கவோ முடியாது எனும் போது இம்மாதிரியான அர்த்தமற்ற சொற்றொடர்களை உச்சரிப்பதானது இப்போது தூலமான எதார்த்தமாக நிலவிக்கொண்டிருக்கும் கொண்டிருக்கும் பாலஸ்தீன இனப்படுகொலையை விட்டும் நம்மை திசைதிருப்புவதாகவே அமைகிறது. இஸ்ரேலினால் வீசப்பட்ட குண்டுகளானது ஹிரோஷிமா, நாகசாகி மீது போடப்பட்ட அணுகுண்டுகளின் ஒட்டுமொத்த அளவை விட அதிகமானதாக இருப்பதோடு அந்த இரண்டு நகரங்களை விட அதிக மக்கள் தொகையை கொண்ட பலமடங்கு சிறிய நிலப்பரப்பை உடைய ஒரு பகுதியில் அது வீசப்பட்டிருக்கிறது என்பதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

சர்வதேச சட்டங்களை நிலைநிறுத்த வேண்டும் எனும் இலக்கினை அடிப்படையாக வைத்து தொழிற்படும் ஒரு சர்வதேச அமைப்பை பொதுச் செயலாளராக மேற்பார்வையிடும் குட்டேரஸ்ஸினால் பல்லாண்டு காலமான ஆக்கிரமிப்பினை பற்றியும் ஒரே மாதத்தில் பலடஜன் கணக்கான யுத்த குற்றங்களை செய்துள்ள காலனிய அரசினைப் பற்றியும் அரிதாகவே, அதுவும் பலவீனமாகவே கண்டனங்களை வெளியிட முடிந்திருக்கிறது.

இந்த நரகத்தில் இருந்து எப்படி வெளியேறுவது? ஃபனானை பொருத்தவரையில் காலனிய நீக்கமானது வன்முறையானதாக மட்டும் இருப்பது ஏனெனில் சபிக்கப்பட்டவர்கள் எத்தகைய உத்திகளை பயன்படுத்தினாலும் அவர்கள் வன்முறையானவர்களாகவே வரையறுக்கப்படுவார்கள் என்பதும், அவர்களுக்கான எதிர்வினையாக சமச்சீரற்ற கொடூரத்தை அவர்கள் நேரிட வேண்டி நேரும் என்பதும் தான். 2018 இல் நடைபெற்ற மீளத்திரும்புவதற்கான பெரும் அணிவகுப்பின் போது சமாதானமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 223க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களை இஸ்ரேலிய வீரர்கள் மறைந்திருந்து சுட்டுகொன்ற சம்பவத்தையும், மற்றும் இஸ்ரேலுடன் ஒத்துழைக்கும் நிறுவனங்களை பகிஷ்கரிப்பு செய்வதற்கான அழைப்புகள் பரவலாக குற்றமாக்கப்பட்டதையும் நோக்கும் போது, வன்முறையென்பது ஏன் இன்றியமையாததாக விளங்குகிறது என தெளிவாக விளங்கும்.

இல்லை, இந்த சாபத்திலிருந்து தப்பித்தல் என்பது ஒரு வெடிப்பின் மூலமாகவே தொடங்க முடியும். அது எந்தளவு குறியீட்டுப்பண்பு கொண்டதோ அந்தளவு பருண்மையானதும், எந்தளவு உடைத்து வெளியேறுவதோ அந்தளவு உடைத்து உள்நுழைவதுமாகும். அதாவது, அது கட்புலனாதலுக்கும் இருத்தலுக்கும் உயிர்ப்புக்குமான பரப்புக்கு உள்ளே நுழைவது ஆகும்.

இது பார்வைக்கு அகப்படாத மண்ணடியிலிருந்து வெளிவந்து பார்வைக்கு அகப்படும்படி தோற்றம் பெறுவது. இந்த உருவகங்கள் காஸாவினடியில் முன்னூறு மைல் தூரத்திற்கு விரிந்திருக்கக்கூடிய சுரங்கப்பாதை வலையமைப்புகளின் எதார்த்தத்தோடு ஊடுபாவுகின்றவையாக இருக்கின்றன.

சியோனிச அரசானது வீழ்த்துவதற்கு கடினமான ஒன்றல்ல என்று தமக்கும் பிறகு உலகுக்கும் நிகழ்த்திக்காட்டி நிரூபிப்பதோடு இது தொடங்குகிறது. அத்துடன் பலர்  நினைப்தையும்விட பாலஸ்தீனர்கள் அதிக பலம் கொண்டவர்கள் என்று காட்டுவதிலிருந்தும் இந்த வெளியேற்றம் துவங்குகிறது. இருப்பிற்காக சிறையில் இருந்து தப்பிப்பதானது ஏற்கனவே தொடங்கியிருக்கும் நிலையில் அதன் பிந்தைய கட்டங்கள் தவிர்க்க முடியாதவைகளாகவே இருக்கின்றன.

குடியேற்ற காலனியத்தின் மெதுவான மரணிப்பினுள் வாழ சபிக்கப்பட்டிருப்பவர்களுக்கும், வெளியற்றப்பட்டிருப்பவர்களுக்கும், அகப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கும், சிக்கியிருப்பவர்களுக்கும் நாம் எத்தனை ஆறுதல் வார்த்தைகள் சொன்னாலும் அவை ஒருபோதும் போதுமானதாக இருக்காது. ஒடுக்குபவர்களுக்கு அவர்களது வழிகளின் தவறுகளை சுட்டிக்காட்டி ஏற்றுக்கொள்ள செய்யும் முன்பு நாம் ஒரு பெரும் விரக்தியடைந்த நிலைக்கு தான் தள்ளப்படுவோம்.

முழு உலகும் தொடர்ச்சியாக எமது கண்டனங்களைக் கோரிக் கொண்டிருக்கும் நிலையில், இராணுவமோ கடற்படையோ இல்லாமல் முற்றுகையிடப்பட்ட சிறையினுள் வசிக்கும் ஒரு அரசற்ற மக்களுக்கு எதிராக  தற்போது நடந்துகொண்டிருக்கும் தமது தரைவழி தாக்குதலுக்காக வேண்டி இஸ்ரேலும் அமெரிக்காவும் ஆயிரக்கணக்கான படைகளை அணிதிரட்டியிருக்கின்றன. இதற்காக தனது ஏவுகணை நீர்ழூழ்கி கப்பலுடன் சேர்த்து “சிறப்பு நடவடிக்கைப் படை” ஒன்றையும் அருகிலுள்ள கடல் பகுதிக்கு அமெரிக்கா அனுப்பி வைத்திருக்கிறது.

இன்று இந்த தீவிர தாக்குதலினை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்கள் யாரும் கண்டித்தல் எனும் மொழிசார்ந்த பொறிவலைக்குள் சிக்கிக் கொள்ளவில்லை என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும். காஸாவிலோ அல்லது அதற்கு வெளியிலோ இருக்கும் பாலஸ்தீனர்களைப் பொருத்தவரையிலும், நமது பூமியைப் பகிர்ந்துகொண்டிருக்கும் சபிக்கப்பட்டவர்களைப் பொருத்தவரையிலும், ஃபனானைப் பொருத்தவரையிலும், “எதிர்த்துச் சண்டையிடுவது ஒன்றுதான் ஒரே தீர்வு”.

நிக்க கத்தூரா – ஒரு பாலஸ்தீன எழுத்தாளரும்பதிப்பாசிரியருமாவார். அவரது எழுத்துக்கள் Mondoweiss மற்றும் Palestine Studies தளங்களில் வெளியாகியிருக்கின்றன

ஜோ மஹர் – ஃபிலடெல்ஃபியாவில் இருக்கும் W.E.B. Du Bois Movement School for Abolition & Reconstruction நிறுவனத்தில் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார். Building the Commune: Radical Democracy in Venezuela, We Created Chávez: A People’s History of the Venezuelan Revolution, Anticolonial Eruptions: Racial Hubris and the Cunning of Resistance, Decolonizing Dialectics, A World Without Police: How Strong Communities Make Cops Obsolete போன்ற நூற்களை அவர் எழுதியிருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – ஹதிகா கியானி