பாலஸ்தீன விவகாரத்தை உலகின் கவனத்தை பெறச் செய்வதற்காக பெற்றோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான ஒபெக் (OPEC) அமைப்பின் அமைச்சர்களை பணயக் கைதிகளாக பிடிக்கும் நோக்குடன் ஒரு கமெண்டோ கிளர்ச்சிப் படையை தலைமையேற்று வழிநடாத்தியதற்காக உலகறியப்பட்டவர் தான் இலிச் ராமிரெஸ் சான்சஸ். இத்தகைய போராட்ட வழிமுறைகள் காரணமாக பிரெஞ்சு பாதுகாப்புத் துறை மற்றும் மொஸாட் படைகளால் அதிகம் தேடப்படுபவர்களின் பட்டியலிலும் இடம்பெற்றார். சூடானில் வைத்து கைதுசெய்யப்பட்டு மூன்று ஆயுள் தண்டனைகளுடன் பிரான்ஸிய சிறைகளில் தனது வாழ்வை கழித்து வருகிறார். பாலஸ்தீன விடுதலைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவரை பற்றி தெரிந்து கொள்ள அவரது சகோதரரான விளாடிமிர் ரமிரெஸ் சான்சஸை எமது Venezuel analysis நேர் கண்டது.

கேள்வி : ஒருபுறம் வெனிசுவேலிய புரட்சிகர இயக்கத்தின் முக்கியஸ்தரும் அந்நாட்டின் இடதுசாரிகளால் பெரிதும் மதிக்கப்படும் ஒருவருமாக இலிச் ராமிரெஸ் அமைகிறார். மறுபுறம் அமெரிக்க ஊடகங்கள் மற்றும் ஹாலிவுட் திரையுலகம் ஆகியன சான்சஸின் கலகத் தன்மையை மதிப்பிழக்கச் செய்து வருகின்றன. இந்த நிலையில் உங்கள் சகோதரரின் வாழ்வை பற்றிய உண்மைகளை உங்களால் குறிப்பிட முடியுமா?

பதில் : இலிச் ரமிரெஸ் சான்சஸ் 1949 அக்டோபர் 12 இல் வெனிசுவேலாவின் கராகஸ் நகரில் தான் பிறந்தார். எமது தந்தை ஒரு வழக்கறிஞராக இருந்தார். அவர் தன்னை ஒரு மார்கஸிய- லெனினியவாதியாகவே அடையாளப்படுத்திக் கொண்டார்; என்றாலும்கூட அவர் ஒரு போதும் ஆயுதம் ஏந்தியதில்லை. எமது தந்தையைப் பற்றி சிலர் அவரை பெரும் செல்வந்தராக குறிப்பிடுவதுண்டு. ஆனால் உண்மையில் அவ்வாறில்லை. அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அளவிற்கு நாங்கள் ஒரு சாதாரண மத்திய தர வர்க்க வாழ்க்கையைத் தான் வாழ்ந்தோம்.

எமது தாய் பல்கலைக்கழக உயர்கல்வியை பெறாத ஒரு உழைக்கும் வர்க்கத்தினைச் சேர்ந்தவர்; அவர் மிகவும் ஏழ்மையான கிறிஸ்தவக் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதோடு இயேசுவின் மீது அதிக ஈர்ப்பும் நாட்டமும் கொண்டவராக இருந்தார். எமது தாயின் இத்தகைய உணர்வும் தந்தையின் சமூக நலவாத கருத்தியல்களுமே எங்களையும் எங்களது சிந்தனைகளையும் வடிவமைத்தது எனலாம். சொல்லப்போனால் எமது பெயர்களைக் கூட அவர்கள் இவ்வாறு தான் வடிவமைத்து இருந்தார்கள். பெயரில் மூத்த புதல்வரின் பெயரான இலிச் என்பது லெனினுடன் நெருக்கமான தொடர்புடையது. இரண்டாவது மகனின் பெயர் லெனின் எனச் சூட்டப்பட்டது; எனக்கு விளாடிமிர் என்று பெயரிட்டார்கள். 

இலிச் மற்றும் லெனின் ஆகியோர் தமது சிறுவயதில் மார்க்ஸிய – லெனினிய கருத்தியல் சார்பு கொண்ட உள்ளூர் ஆசிரியர்களிடம் பயின்றார்கள். 1950, 60 காலப்பகுதியில் வெனிசுவேலிய அரசாங்கங்கள் கம்யூனிஸ எதிர்ப்பு கொள்கையை கடைப்பிடித்து வந்ததால் இவர்களது ஆசிரியப் பணி முடக்கப்பட்டது. பிறகு எமது தந்தை குறித்த ஆசிரியர்களை எமது வீட்டிற்கு அழைத்து சகோதரர்களை படிப்பித்தார்.

1961 இல் உயர் கல்வியை தொடர அக்காலத்தில் பெரும் புரட்சிகர கல்வி மையமாக இருந்த Fermin Toro high பாடசாலையில் லெனின் மற்றும் இலிச் ஆகியோர் இணைத்து விடப்பட்டார்கள். அங்கேயே தான் இவர்கள் இருவரும் வெனிசுவேலா மீது அமெரிக்க அரசு கொண்டிருந்த ஏகாதிபத்தியம் பற்றியும், உள்ளூர் பூர்ஷ்வாக்களின் வர்க்க நலன்கள் பற்றியும் அறிந்து கொள்கிறார்கள். முதன்முதலில் கொரில்லா தாக்குதல் முறைமை பற்றிய அறிவையும் அங்கேதான் அவர்கள் பெற்றார்கள். அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக நிகழும் மக்கள் புரட்சிகள் மனிதப் படுகொலைகளாக மாறிக் கொண்டிருந்த காலப்பகுதி அது.

தனது 13வது வயதில் இலிச்,  கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவில் இணைந்து கொண்டு தன்னை தீவிரமாக அதில் ஈடுபடுத்திக் கொண்டார். சேகுவாராவின் கொள்கைகளால் பெரிதும் பாதிக்கப்பட்ட அவர் தென் அமெரிக்க, ஆபிரிக்க மற்றும் வியட்நாமிய போர்கள் பற்றிய பார்வையொன்றையும் அவர் கொண்டிருந்தார்.

1966 இல் இலிச் மற்றும் லெனின் ஆகியோர் உயர் கல்வியை நிறைவு செய்த போது நாட்டின் நிலைமை பதற்றமான சூழ்நிலையாக இருந்தது. நாட்டில் இடம்பெற்றுக் கொண்டிருந்த புரட்சியில் அவரது மகன்களும் ஆயுதமேந்திப் பங்கேற்பதால் இடம்பெறக்கூடிய விளைவுகளை  நன்கறிந்திருந்த எமது தந்தை எங்கள் மூவரையும், தாயையும் வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தார்.  குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இலிச் மீது எமது தந்தை விசேட அக்கறையை செலுத்தினார். இலிச் கொண்டிருந்த தலைமைத்துவ ஆற்றல்களையும் கலகத் தன்மையையும் அனுமானித்துக் கொண்ட தந்தை, அவர் இனிமேலும் வெனிசுவேலாவில் தங்கியிருந்தால் கொரில்லா படைகளுடன் தன்னை இணைத்துக் கொண்டு விடுவார் என்றும் புரிந்து கொண்டார்.

அதனால் எமது தந்தை எங்களை லண்டனுக்கு அனுப்பி வைத்தார். தனியாக வெனிசுவேலாவில் இருந்து எங்களுக்காக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒரு முறை எம்மைப் பார்க்க லண்டன் வந்து செல்வார். லண்டனில் நாங்கள் ஓரளவு நல்ல வாழ்க்கையைத் தான் கொண்டு சென்றோம்.

1968 களில் வெனிசுவேலாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் புலமைப் பரிசில் ஒன்றை எனது சகோதரர்கள் இருவரும் பெற்றுக் கொண்டார்கள். மொஸ்கோவின் Patrice Lumumba பல்கலைக்கழகத்தில் கற்கைகளை தொடர்வது பற்றிய புலமைப் பரிசில் அது. நானும் எமது தாயும் இங்கிலாந்திலேயே தங்கிக் கொண்டு எமது சகோதரர்களான இலிச் மற்றும் லெனின் ஆகியோரை சோவியத் யூனியனுக்கு அனுப்பி வைத்தோம். அங்கே இலிச் இரசாயனவியலையும் லெனின் பௌதீகவியலையும் தமது கற்கை நெறிகளாக தெரிவு  செய்தார்கள். மொஸ்கோவில் வைத்து தான் இலிச் உலகளாவிய ரீதியில் பல்வேறு நபர்களுடன் நட்பு கொண்டார். அங்கிருந்த ஆபிரிக்க, லத்தின் அமெரிக்க, ஐரோப்பிய, ஆசிய நாட்டவர்களுடன் தொடர்புகளை பேணி வந்தார். அங்கே வைத்து தான் பாலஸ்தீன விடுதலைப் போராட்டம் பற்றியும் அவர் அறிந்து கொண்டார்.

1970 இல் வெனிசுவேலிய கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதமேந்திய போராட்டக் கொள்கைகளில் மாறுதல்கள் ஏற்படத் துவங்கின. ஆயுதமேந்திய போராட்டங்களில் நம்பிக்கை வைத்திருந்தவர்கள் கட்சியினால் கைவிடப்பட்டார்கள். விளைவாக புலமைப் பரிசில் பெற்று மொஸ்கோ சென்றிருந்த இலிச் மற்றும் லெனின் ஆகியோருடன் மேலும் 18 மாணவர்கள் தங்களது புலமைப் பரிசிலை இழக்க நேரிட்டது.

லுமும்பா பல்கலைக்கழக வாழ்வு அரைகுறையாக முடிந்தாலும் லெனினும், இலிச்சும் தங்களது கொள்கை மற்றும் கருத்தியல்களில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தார்கள். குறிப்பாக இலிச்சின் வாழ்வையே அது புரட்டிப் போட்டது. கம்யூனிஸ்ட்டாக மாத்திரம் தன்னை போராட்டங்களில் இணைத்துக் கொண்ட அவர் பிற்பட்ட காலத்தில் ஒரு சர்வதேச வாதியாக முன்வைக்கத் துவங்கினார். சியோனிச அரசை தகர்த்து  பாலஸ்தீனியர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். அதேநேரம் இஸ்ரேலின் வீழ்ச்சி அமெரிக்க மற்றும் அமெரிக்க சார்பு நாடுகளில் ஏற்படுத்தப் போகும் மாற்றங்கள் பற்றியும் அவர் நன்கறிந்திருந்தார் என்று கூற முடியும்.

பின்னர் சேகுவேராவை ஆதர்ஷமாக கொண்டு இலிச் பாலஸ்தீன விடுதலைக்காக உழைக்கத் துவங்கினார். 1970 இல் ஜோர்டான் சென்ற அவர், அங்கே இடம்பெற்ற ஜோர்டானிய அரச எதிர்ப்பு போராட்டமான Black September இல் தன்னை இணைத்துக் கொண்டதோடு பாலஸ்தீன விடுதலைக்காக உழைத்துக் கொண்டிருந்த, மார்க்ஸிய -லெனினிச இயக்கமான பாலஸ்தீன விடுதலைக்கான மக்கள் முன்னணியிலும் (PFLP) அங்கத்துவம் பெற்றார். இலிச்சை தவிர்க்க முடியாத ஆளுமையாக கண்ட இந்த இயக்கம் ஐரோப்பாவை மையமாகக் கொண்ட பல்வேறு திட்டங்களை அவரிடம் ஒப்படைத்தது. இந்த இயக்கத்துடனான தனது தொடர்புகள் பற்றிய எந்தவித தகவலையும் அவர் எங்களைச் சந்திக்க மீண்டும் லண்டன் வந்த போது தெரிவிக்கவில்லை. சிலவேளைகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக அதனை அவர் தவிர்த்திருக்கலாம்.

இலிச் அந்த நேரங்களில் PLFP இயக்கத்தின் புலனாய்வுத் தகவல் பிரிவில் மும்முரமாக பணியாற்றினார். அவரது பணி லண்டனை பிரதானமாக கொண்டிருந்தது. லண்டனில் தனது வாழ்வாதாரத்திற்கான பணத்தை ஸ்பானிய மற்றும் பிரெஞ்சு மொழிகளை கற்பிப்பதன் ஊடாக பெற்றுக் கொண்டார். 1975 இல் நான் எனது சகோதரர் லெனின் மற்றும் தாய் ஆகியோர் மீண்டும் வெனிசுவேலா வந்து சேர்ந்தோம். அது தான் இலிச்சை நாங்கள் கடைசியாக பார்த்தது.

1970களில் பிரான்ஸில் வாழும் பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிரான இரகசிய இராணுவ நடவடிக்கைகளில் இஸ்ரேலிய மொஸாட் உளவுத்துறை ஈடுபட்டது. மோட்டார் வாகனங்கள் மற்றும் தொலைபேசிகளில் குண்டுகள் பொருத்தப்பட்டு பாலஸ்தீன ஆதரவாளர்கள் கொலை செய்யப்பட்டார்கள். இலிச் அங்கத்துவம் வகித்த PFLP இயக்கத்தின் தலைவரும் குண்டுத்தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து லெபனானைச் சேர்ந்த மைக்கேல் முக்காபெல் என்பவர் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர் லெபனானுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது லெபனானிய பொலிஸ் அதிகாரிகளாலும் மொஸாட் உளவுத்துறையினாலும் லெபனான் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டார். நீண்ட சிறைவாசம் மற்றும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு பயந்து, அவர்களோடு இணைந்து வேலை செய்வதாக வாக்களித்தார்.  பிரான்ஸ் திரும்பிய முக்காபெல் தனக்கு கீழாக வேலை செய்த இயக்க உறுப்பினர்களை மொஸாட் உளவுத்துறைக்கு காட்டிக் கொடுத்தார்.

1975 ஜூன் மாதம் PFLP க்காக பிரான்ஸில் பாரிஸ் நகரில் பணியாற்றிக் கொண்டிருந்த இலிச், தனக்கு அறிமுகமான வெனிசுவேலியப் பெண்ணின் பார்ட்டி ஒன்றுக்கு சென்றிருந்தார். முக்காபெல் மூன்று பிரான்ஸிய உளவுத்துறை அதிகாரிகளை அழைத்துக் கொண்டு குறித்த பார்ட்டிக்கு இலிச்சை கைது செய்யும் நோக்கில் சென்றிருந்தார். முக்காபெல் தனக்கு துரோகம் இழைத்திருப்பதை அறிந்த இலிச் சுதாரித்துக் கொண்டு முக்காபெல் மற்றும் இரண்டு உளவு அதிகாரிகளை கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

அன்றிலிருந்து பிரான்ஸிய அரசு தீவிரமாக இலிச்சை தேடத் துவங்கியது. ஆரம்பக்கட்ட விசாரணைகளில் அவரது உண்மையான பெயரைக் கூட அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. லண்டனில் ஸ்பானிய மொழி ஆசிரியராக இருந்த இலிச்சிற்கு ஒரு பெண் தோழி இருந்தார். அவளது காதலன் இலிச் மற்றும் அந்த பெண் ஆகியோருக்கு இடையில் இருந்த நட்பு பற்றிய பொறாமையோடு இருந்ததால், பத்திரிகைகளில் வெளியான இலிச்சின் புகைப்படங்களை வைத்து தனது காதலியோடு இலிச் தங்கியிருந்த விடுதியறையில் தப்பித்துச் சென்றவன் ஒரு சூட்கேஸை வைத்து சென்றிருப்பதாகக் கூறி ஸ்கொட்லாந்து பொலிஸில் புகார் ஒன்றை அளித்தான்.

தகவலைப் பெற்ற பொலிஸ் குறித்த லண்டன் பேய்ஸ்வாட்டர் பகுதியில் இருந்த குறித்த விடுதிக்கு சென்று சூட்கேஸை தேட ஆரம்பித்தார்கள். பொலிஸாருடன் தி கார்டியன் பத்திரிகையாளர் ஒருவரும் சென்றிருந்தார். அவர் தான் இலிச்சை முதன் முதலில் ஜெக்கல் என்று அழைத்தார். ஃபிரடெரிக் ஃபோர்சித் எழுதிய “The day of the jackal”  என்ற நூலை இலிச்சின் புத்தக அடுக்கில் இருந்து கண்டதை வைத்துத்தான் அவர் இலிச்சை ஜெக்கல் என்று அழைத்தார். பொலிஸார் தேடி வந்த சூட்கேஸூம் அந்த அலுமாரியில்தான் இருந்தது. சூட்கேஸை திறந்து பார்த்த போதுதான் PLFP உடன் இலிச் கொண்டிருந்த தொடர்புகள் பற்றிய ஆவணங்களை பொலிஸார் கண்டுபிடித்தனர்.

கேள்வி : பிரெஞ்சு பொலிஸாரிடம் இருந்து தப்பித்து இலிச் மத்திய கிழக்கு நாடுகள் பக்கம் சென்றது இவ்வாறு தானா?

பதில் : ஆமாம். இலிச் ரமிரெஸை தேடும் பணி சர்வதேச அளவில் இடம் பெற்றது அதற்கு பிறகு தான். என்றாலும் அவர்களால் அவரை பிடிக்க முடியவில்லை.  மத்திய கிழக்கிற்கு சென்ற அவர் மீண்டும் 1975 இல் ஐரோப்பாவிற்கு அதாவது வியன்னாவிற்கு வந்தார். ஒபெக் நாடுகளின் அமைப்பின் உச்சி மாநாடு அங்கே நடைபெற்றதை அறிந்து அங்கு வந்திருந்த அங்கத்துவ நாடுகளின் பிரதிநிதிகள் மீது திடீர் தாக்குதலை நடாத்தும் திட்டம் அவரிடம் இருந்தது. இத்தாக்குதலுக்கு சர்வதேச ரீதியில் ஆட்களை உள்வாங்கி இருந்தார் இலிச். பாலஸ்தீன அரபு விடுதலைப் போராளிகள், ஐரோப்பாவைச் சேர்ந்தவர் மற்றும் லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என தன்னையும் அவர்களில் ஒருவராக இணைத்துக் கொண்டார். குறித்த தாக்குதலுக்கு முஅம்மர் கடாஃபியின் நிதிப் பின்புலம் உதவியாக அமைந்தது. அமெரிக்காவிற்கு சார்பாக சவூதி மற்றும் ஈரானின் தலைமையில் வழிநடத்தப்பட்ட ஒபெக் அமைப்பு, மிகக் குறைந்த விலையில் வர்த்தகத்தை கட்டுப்படுத்தியமை தான் லிபியா இத்தாக்குதலுக்கு உதவ முன்வந்தது என்று இலிச் கருதினார்.

உண்மையில் இத்தாக்குதலுக்கு இரு நியாயங்களை அவர்கள் கொண்டிருந்தார்கள். ஒன்று பாலஸ்தீனத்தை சுதந்திர அரசாக ஏற்றுக் கொள்ளச் செய்வதும் அது பற்றிய உரையாடல்களை சர்வதேசத் தன்மை மிக்கதாக மாற்றுவதும்; மற்றையது அமெரிக்கா மற்றும் நேட்டோவிற்கு அடிமைகளாக இருக்கும் ஒபெக் நாடுகளுக்கு சொந்த மக்களின் நலன்களையும் மூன்றாம் உலக நாடுகளின் நலன்களையும் கவனத்தில் கொள்ள வலியுறுத்தக் கோருவதும் என்ற இரு நோக்கங்கள் அடிப்படையில் தான் அவர்களது இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்டது.

குறித்த தாக்குதல் மூலம் ஒபெக் நாடுகளின் ஒன்றியத்தின் தலைமை அலுவலகம் இவர்களது கட்டுப்பாட்டில் வந்ததுடன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டனர்.  ஆஸ்திரிய நாட்டின் அதிகாரிகளின் உதவியுடன் விமானம் ஒன்றைப் பெற்று அல்ஜியர்ஸூக்கு சென்றார்கள். சர்வதேச தொடர்புகளை கொண்டிருந்த சவூதி அரேபியாவைச் சேர்ந்த ஸகி யமெனி மற்றும் ஈரானிய அமைச்சரையும் தவிர மற்ற எல்லோரையும் அவர்கள் அங்கு வைத்து விடுதலை செய்தார்கள்.

அங்கிருந்து ஈராக் செல்லும் வழியில் லிபியாவில் வைத்து எரிபொருள் நிரப்புவதற்கு முயற்சித்த போது லிபியாவின் முஅம்மர் கடாஃபி அதனை மறுத்து விட்டார். நிலைமை மோசமடைந்ததை கண்டதும் தாங்கள் பணயக் கைதிகளாக வைத்திருந்த இரு அமைச்சர்களின் விடுதலை தொடர்பாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடத் தொடங்கினார்கள். இதன் பிரதிபலனாக பாலஸ்தீன மக்களின் நலன்களுக்காக தலைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற ஒப்பந்தப்படி இருவரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.

கேள்வி : ஒபெக் நாடுகளின் ஒன்றியத்தின் மீதான இலிச்சின் இந்த நடவடிக்கை அவரை மேற்கத்திய நாடுகளால் தேடப்பட்டு வரும் நபர்களில் மிக முக்கியமான ஒருவராக மாற்றியதில் பெரும் பங்காற்றியிருக்கிறது போலிருக்கிறது. ஆனாலும் அவரது நடவடிக்கைகளை அவதானிக்கும் போது இவையெல்லாம் அவரது பணிகளை இடைநிறுத்தியதாக தெரியவில்லை‌ அல்லவா!

பதில் : உண்மைதான். இத்தாக்குதலுக்கு பிறகு இலிச் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும் சியோனிசத்தினதும் இரையாக சர்வதேச ரீதியில் தேடப்பட்டார். ஆனாலும் அவர் தனது இலக்கில் இருந்து விலகியிருக்கவில்லை. பாலஸ்தீன விடுதலை விவகாரத்தில் தன்னை தொடர்ந்தும் ஈடுபடுத்திக் கொண்டார். சமகாலத்தில் சியோனிச ஏகாதிபத்தியத்திற்கு எதிராக சர்வதேச இராணுவக் கூட்டமைப்பை உருவாக்கிக் கொண்டிருந்த ஜப்பானிய, இத்தாலிய மற்றும் ஜேர்மானிய செம்படைகள் (Red army), அயர்லாந்தின் IRA, ஸ்பானிய சுயாதீன நிலப்பகுதியான பாஸ்க் நாட்டின் ETA ஆகியவற்றுடன் இலிச் தொடர்ந்தும் தொடர்புகளை பேண முயற்சித்தார்.

1991 களில் இடம்பெற்ற சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சி இத்தகைய இராணுவ அணி திரட்டல்களை பெரியளவில் பாதித்தது. இலிச் தனது மனைவியான RAF உறுப்பினர் மக்தலேனா க்ரொப்( Magdalena Kropp) உடன் சிரியாவில் வசித்து வந்தார். இலிச் சிரியாவில் இருப்பதை அறிந்து கொண்ட அமெரிக்கா, சிரியாவை பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைத்தது. இதனால் இலிச் அங்கிருந்து வெளியேறும் நிலை உருவானது. அங்கிருந்து லிபியா செல்ல முயற்சித்த போது அது பலனளிக்காமல் போனது. இதற்கிடையில் சூடானின் உமர் அல் பஷீர் இலிச்சிற்கு ஆதரவு அளிக்க முன்வந்தார். பின்னர் இலிச் தனது மனைவி மற்றும் மகளை வெனிசுவேலாவிற்கு எங்களிடம் அனுப்பி வைத்துவிட்டு அவர் சூடானில் தஞ்சம் அடைந்தார்.

ஏற்கனவே CIA மற்றும் மொஸாட் படைகளால் உமர் அல் பஷீர் ஐம்பது மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கப்பட்டிருந்த செய்தியை இலிச் அறிந்திருக்கவில்லை.

1994 ஆகஸ்ட் 14 இல் இலிச் சிறிய அறுவை சிகிச்சை ஒன்றை செய்ய வேண்டியிருந்தது. வழமைபோல சூடான் இராணுவ அதிகாரிகளின் உதவியுடன் அது நடந்தது. ஆபரேஷன் முடிவடைந்ததும் இலிச்சின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை முன்னிறுத்தி அன்று இரவு அவருடன் தங்குவதாக அவர்கள் இலிச்சிற்கு அறிவித்தார்கள். ஆனால் அன்றிரவு முடிவதற்குள் சூடான் அரச படைகளால் அவர் முதுகில் குத்தப்பட்டார். நீண்ட நேர தூக்கத்தை வரவழைக்கும் மருந்து ஒன்றை அவரது உடலில் அவர்கள் உட்செலுத்தி விட்டார்கள்.

அதே நிலையிலேயே அவர் சூடானின் கார்டூம் விமானநிலையம் கொண்டு செல்லப்பட்டு இரு பிரெஞ்சு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். தனியார் விமானமொன்றில் பிரான்ஸ் அழைத்துச் செல்லப்பட்ட அவர் சுய நிலைக்கு திரும்பியதும் நடந்தது பற்றி அறிந்து கொண்டார். பிரெஞ்சு பொலிஸ் அதிகாரி ஒருவர் நீங்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளீர்கள் என்று கைது செய்யுமாறு பணிக்கப்பட்ட ஆணை உத்தரவை (Arrest warrant) காண்பித்தார்.

அதிலிருந்து எல்லாமே தலைகீழானது. தான் சூடானுக்கு திட்டமிடப்பட்ட வகையில் கடத்தப்பட்டதாக உணர்ந்து கொண்டார். 29 வருடங்களை சிறையில் சித்திரவதைகளுடன் கழித்து வருகிறார். முதல் பத்து வருடங்களுக்கு அவரை தனிமைப்படுத்தப்பட்ட சிறையில் அடைத்தனர். அவரது உடல் நலனை பரிசோதிப்பதாகக் கூறி ஒவ்வொரு மணிநேரத்திற்கு ஒரு தடவை அவரது அறைக்குள் மின்விளக்குகளை  எரிய விட்டு அவரை தூங்க விடாமல் செய்தார்கள்.

1997 இல் இலிச் இரு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் ஒரு லெபனானியரை 1977 இல் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட சாட்சிகள் எவரையும் வாக்குமூலம் அளிப்பதற்காக பிரெஞ்சு பொலிஸ் அதிகாரிகள் அழைத்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவ்வாறு அழைக்கப்பட்டிருந்தால் இலிச் தனது சுய பாதுகாப்பிற்காகத்தான் அவ்வாறு செய்ய நேரிட்டது என்பது வெளிச்சமாகியிருக்கும். மேன்முறையீட்டு வாய்ப்புகள் இருந்தும் அவை நிராகரிக்கப்பட்டது. அதேபோல் 2011 இல் மற்றுமொரு விசாரணையும் நடந்தது. 1982,83 களில் ரேடியோ ஸ்டேஷன் ஒன்றின் மீதும் ரயில் ஒன்றின் மீதும் நிகழ்த்திய குண்டுத்தாக்குதல் பற்றிய விசாரணை அது. சுருக்கமாக சொன்னால் இருந்து வருடங்களுக்கு முன்னர் நடந்தவை பற்றி இலிச் விசாரணை செய்யப்பட்டார்

நீதிபதிகளும் ஜூரிகளும் முறையான விசாரணைகள் இன்றி அவரை தண்டனைகளுக்காக தீர்ப்பளித்தார்கள்.  அவர் சார்பாக வாதிடுவதற்கு எந்த வாய்ப்பும் அவருக்கு வழங்கப்படாமலேயே இருந்தது. சாட்சிகளும் ஆதாரங்களும் தொலைந்து போனது பற்றியோ அல்லது அவை மறைக்கப்பட்டமை பற்றியோ எந்தக் கரிசனையும் அவர்களுக்கு இருந்ததாக தெரியவில்லை. விளைவாக இரண்டாவது தடவையாகவும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டார். இந்த வழக்கில் மேன்முறையீடு அனுமதிக்கப்பட்டாலும்  2013 இல் அந்த மேன்முறையீட்டு விசாரணைகளும் வழங்கப்பட்ட தண்டனைகளில் எந்த மாற்றங்களையும் வழங்கவில்லை.

இறுதியாக 2017 இல் ஒரு விசாரணை நடைபெற்றது. 1974 இல் Le drugstore விடுதியில் இலிச்சினால் மேற்கொள்ளப்பட்ட கிரனேட் தாக்குதல் பற்றிய விசாரணை அது. மீண்டும் மூன்றாவது முறையாக ஆயுள் தண்டனை அதில் வழங்கப்பட்டது.

இலிச் அவரது கைரேகைகள் மற்றும் கையொப்பங்கள் இருந்த அவரால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்தார். குறித்த கடிதத்தின் உண்மைத் தன்மையை பரிசோதனை செய்ய அது தொடர்பான தடயவியல் நிபுணரிடம் குறித்த கடிதம் ஒப்படைக்கப்பட்டது. அது தொடர்பான விளக்கங்கள் தடயவியல் நிபுணரிடம் கோரப்பட்ட போது கடிதத்தின் உண்மைத் தன்மையை பரிசோதனை செய்வதற்கான எந்த விதமான நேர அவகாசமோ அல்லது அது பற்றிய பூரணமான ஆவணங்களோ எனக்கு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

உண்மையில் இலிச் விசாரணைகளுக்கு அழைக்கப்படும் முதல் தடவையில் இருந்தே அவர் பயங்கரவாதியாக அடையாளம் காணப்பட்டாரே தவிர ஒரு பாலஸ்தீன விடுதலைப் போராளியாக பார்க்கப்படவே இல்லை. 

கேள்வி : இலிச் சுமார் முப்பது ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். எழுபத்து நான்கு வயதாகிறது என்று நினைக்கிறேன். அவரது தற்போதைய நிலைமைகள் பற்றிய தகவல்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

பதில் : இலிச் பிரெஞ்சு அரசாங்கத்தினால் கடத்தப்பட்டு சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே அவரது விடுதலைக்காக உழைத்த போதிலும் வெனிசுவேலிய அரசிடம் இருந்தோ அல்லது பிரெஞ்சு அரசிடம் இருந்தோ எந்த சாதகமான பதிலையும் பெற முடியவில்லை. அதனால் இப்போது அவரை குறைந்தது வெனிசுவேலா சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்து வருகிறோம்.

வெனிசுவேலா மற்றும் பிரான்ஸ் ஆகியன Strasbourg ஒப்பந்தப்படி பங்காளிகள். குறித்த ஒப்பந்தம், சொந்த நாடு அல்லாத வேறோரு நாட்டில் குற்றம் சாட்டப்பட்டு அங்கே சிறையில் அடைக்கப்பட்ட கைதிகளை சொந்த நாட்டிற்கு இடம் மாற்றி அங்கே அவர்களது எஞ்சியிருக்கும் தண்டனைக் காலத்தை பூர்த்தி செய்ய அனுமதிக்கும் ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. குறித்த ஒப்பந்தத்தின் பிரகாரம் இலிச்சை வெனிசுவேலாவிற்கு மாற்றி எடுக்கும் நடவடிக்கைகளை சட்ட ரீதியாக மேற்கொண்டு வருகிறோம். அதற்கு கைதியும் சம்பந்தப்பட்ட இரு நாடுகளின் ஒப்புதல்களும் அவசியம் என்பதால் இலிச்சிடம் அதற்குரிய ஒப்புதலை வாங்கி வெனிசுவேலிய நீதி அமைச்சரிடம் 2021 இல் ஒப்படைத்து இருந்ததோம். ஆனால் இது வரை எந்த பதிலையும் அவரிடம் இருந்து பெற முடியவில்லை.

நீதி அமைச்சர் ரெமிஜோ செலாபஸ் இது தொடர்பாக அவசரமாக பதிலளிக்க வேண்டும். எழுபத்து நான்கு வயதாகியும் 29 வருடங்களுக்கு மேலாக பிரான்ஸில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். பத்து வருடங்களுக்கு மேலாக அவர் எதிர்கொண்டு வரும் தூக்கப் பிரச்சினைகள் காரணமாக நினைவாற்றலில் சில இடர்பாடுகளை எதிர் கொள்கிறார். அவர் அவரது குடும்பத்தினரோடு இல்லாவிட்டாலும் அவர்களை அண்மித்தாவது இருக்க வேண்டும் என்பது தான் எதிர்பார்ப்பு. வெனிசுவேலா அரசு ஒப்புதல் அளித்தால் தான் எங்களால் முடிவு செய்ய முடியும் என்று பிரான்ஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாவேஸ் இலிச்சை வெனிசுவேலிய புரட்சியாளராகவும் சர்வதேச வாதியாகவும்  குறிப்பிட்டிருந்தார். பாலஸ்தீன விவகாரத்தில் அதன் விடுதலைக்காக போராடிய இலிச் நிச்சயம் விடுதலை செய்யப்பட வேண்டும்.

கேள்வி : நீங்கள் உங்கள் சகோதரருடன் தொடர்ச்சியாக தினமும் தடங்கல்கள் இன்றி உரையாடல்களை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றீரா? அவ்வாறெனில் இப்போது இடம்பெறும் பாலஸ்தீன இனப் படுகொலை பற்றிய அவரது அபிப்பிராயம் என்ன?

பதில் : இல்லை. நான் வாரத்தில் ஒரு முறை தான் அவரோடு பேச அனுமதிக்கப்படுகிறேன். அத்தோடு அவர் இப்போது நடைபெறும் பாலஸ்தீன இனப்படுகொலை தொடர்பில் மிகுந்த கவலையுடன் தான் இருக்கிறார். சியோனிச அரசை எதிர்த்து, பாலஸ்தீன மக்களின் உரிமைகளை கோரி வருகின்ற சகல போராளிகளுடனும் அவரது குரலும் இணைந்திருக்கும். இவ்வாறு இனப்படுகொலையை நிகழ்த்தி வரும்‌ சியோனிச அரசுக்கு வழங்கும் பொருளாதார அரசியல் மற்றும் இராணுவ உதவிகளை மேற்கு உடனடியாக நிறுத்த வேண்டும். இஸ்ரேலியர்களை பாதிக்கப்பட்ட தரப்பாகவும் பாலஸ்தீனியர்களை தீவிரவாதிகளாகவும் முன்னிறுத்துவது மிகப் பெரும் பொய் மாத்திரம் இன்றி அது கண் முன்னே நிகழும் பாலஸ்தீன இனப் படுகொலையை சரி காணும் ஒரு போக்கும் கூட.

பாலஸ்தீன விடுதலைக்காக உழைத்து தனது வாழ்வை அர்ப்பணித்த Ilich Ramírez Sánchezனுடைய சகோதரர் Vladimir Ramírez Sánchez உடனான ஒரு நேர்காணல். இந்த நேர்காணலை Cira Pascual Marquina அவர்கள் venezuelanalysis இணையதளத்திற்கு நவம்பர் 03, 2023 எடுத்திருந்தார்.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்