பரவி வரும் இனப்படுகொலை மறுப்பு மற்றும் ஹோலோகாஸ்ட் திருத்தல்வாதம் ஆகியவை இனப்படுகொலை வன்முறை ஐரோப்பா முழுவதும் உக்கிரமாக இயல்பாக்கம் அடைந்துகொண்டிருப்பற்கான குறிகாட்டிகளாக உள்ளன

-இஸாத் செர்பெகோவிச்-

ஏப்ரல் 15 ஆம் தேதி, ஆஸ்திரியாவின் நோபல் பரிசு பெற்ற பீட்டர் ஹேண்ட்கே தனது புதிய ஆக்கங்களைப் பற்றி உரையாடுவதற்கு ஆஸ்திரியாவின் தேசிய தொலைக்காட்சியான ORF முன் தோன்றினார். அங்கு அவர் ஸ்ரெப்ரெனிக்காவில் நடைபெற்ற இனப்படுகொலையை மீண்டும் ஒருமுறை மறுத்தார்; அதனை விவிலியத்தின் மொழியில் Brudermord (ப்ரூடர்மோர்ட்) ‘சகோதரப் படுகொலை’ என்று குறிப்பிட்டார்; மேலும் தனது உரையாடலில் ஸ்ரெப்ரெனிக்கா இனவழிப்பை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றமாக அன்றி ஒரு ஆன்மீகத் துன்பியலாக சித்தரித்தார்.

விமர்சனங்களை எதிர்கொண்டபோது, ​​ஹேண்ட்கேவை நேர்காணல் செய்யும் முடிவில் ORF உறுதியாக இருந்தது. நேர்காணல் செய்பவரின் ஒரு கேள்வியின் வழியாக இனப்படுகொலையை ஒப்புக்கொண்டதிலிருந்து, அதில் எந்தத் தவறும் இல்லை என்று ORF தொலைக்காட்சி தெரிவித்தது. காஸாவில் கொலைக்களமொன்று அரங்கேறும் இந்த நேரத்தில் ஒரு ஐரோப்பிய ஒளிபரப்பாளர் இனப்படுகொலை மறுப்பை தனது நிகழ்ச்சி நிரலின் உள்ளீடாகத் தேர்ந்தெடுப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

ஐரோப்பா கூட்டுநினைவாற்றல் நெருக்கடியை மாத்திரமன்றி அபாயகரமானதோர் இனவழிப்பு தொடர்ச்சியின் நெருக்கடியையும் எதிர்கொள்கிறது. ஹோலோகாஸ்ட் மற்றும் ஸ்ரெப்ரெனிக்கா தொடக்கம் இன்றைய காசா வரை, விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக்களுக்கு எதிரான அரசு வன்முறையை மறுப்பதன் ஊடாக கடந்தகால அட்டூழியங்களின் தடங்களை துடைத்தழிக்கவும், நிகழ்காலத்தில் அதனை இயல்பாக்கம் செய்யவும், எதிர்காலத்தில் அதைப் போன்ற ஒன்றுக்கு வழிவகுக்கவும் அது முயல்கிறது.

மிக மோசமான குற்றமாக ‘சகோதரப் படுகொலை’

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட முதலாவது இனவழிப்பு தொடர் நிகழ்வு பொஸ்னிய இனப்படுகொலையாகும். 1995 ஆம் ஆண்டில், ஸ்ரெப்ரெனிகாவின் துயரம் தோய்ந்த காட்சிகள் தொலைக்காட்சி ஊடாக உலகெங்கிலும் உள்ள ஓய்வு அறைகளை நிரப்பி, சர்வதேச பாதுகாப்பின் யோக்கியதையையும் அதன் மோசமான தோல்வியையும் அம்பலப்படுத்தின. முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் போர்க்குற்றங்களை விசாரிக்கும் நீண்ட செயன்முறை மற்றும் அங்கு நடைபெற்ற கூட்டுப் படுகொலைகளில் ஐரோப்பிய அமைதி காக்கும் படையினரின் உடந்தை குறித்தான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தபோதிலும், பொஸ்னிய இனப்படுகொலையை மறுப்பது என்பது ஐரோப்பாவில் தொடர்ந்தும் சகிப்புடன் கடந்து செல்லப்படும் ஒன்றாகவே இருக்கிறது.

இந்தப் பரப்புரையில் ஈடுபடும் ஒரே முக்கிய நபர் ஹேண்ட்கே மட்டுமல்ல என்றாலும்; அவரது சொல்லாட்சி, எவ்வாறு ஹோலோகாஸ்ட் பெருங்களப்பலியில் ஜெர்மன் மற்றும் ஆஸ்திரியாவின் வகிபாகத்தைக் குறைப்பதற்கான ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டுவருகிறது என்பதை தெளிவுபடுத்துகிறது. பொஸ்னியாவில் நடைபெற்ற இனப்படுகொலையை ‘சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்றதோர் சோகமான உள்நாட்டுப் போராக’ ஹேண்ட்கே சித்தரிக்கிறார்; அவர் போர் குற்றவாளிகளை பாதிக்கப்பட்டவர்கள் என விதந்தோதுகிறார்; மற்றும் இன வன்முறை மீளுருவாக்கப் பரப்புரைகளில் பாஸிசத்தின் இனப்படுகொலை மறுப்பை உட்பொதிக்கிறார். அவரைப் பொறுத்தவரை ‘சகோதரப் படுகொலைகள்’ இனப்படுகொலையை விட ‘மிகவும் மோசமானது’; தங்கள் ‘சகோதரர்களை’ கொன்றவர்கள், ‘மற்றவர்களைக்’ கொன்ற நாஜிகளை விட மோசமான குற்றவாளிகளாகக் கருதப்பட வேண்டும் என்பதே அதன் விளக்கமாகும். அட்டூழியங்களுக்கு ஒட்டுவேலை பார்த்து வடிவமைக்கப்பட்ட சட்டகங்களுக்குள் அவற்றைப் பொருத்துவதன் மூலம், ஜேர்மனியர்கள் மற்றும் ஆஸ்திரியர்களின் ஹொலோகாஸ்டுக்கான வகைகூறல் பொறுப்பை ஹேண்ட்கே கெட்டித் தனமாகக் குறைக்கின்றார்.

திரிபுபடுத்தப்பட்ட இந்த விவரணையின் வழியாக, நாஜிக்களின் சந்ததியினர் தார்மீக மேன்மையைக் கோரமுடியும்; அவர்கள் ‘ப்ரூடர்மார்ட்’ எனப்படும் ‘அனைத்திலும் மோசமான குற்றத்தை’ செய்யவில்லை என்று விதந்துரைக்கிறார் அவர். இதில் சில்லிட்டு நடுங்க வைக்கும் உட்கிடை என்னவென்றால், யூதர்கள் ஹேண்ட்கே போன்ற ஐரோப்பியர்களுக்கு ஒருபோதும் உண்மையிலேயே ‘சகோதரர்கள்’ அல்ல என்பதுதான்.

பொஸ்னிய இனப்படுகொலையை மறுப்பதில் செர்பிய தேசியவாதிகள் ஹேண்ட்கேவை ஒரு கூட்டாளியாகக் காணலாம்; ஆனால் அவர் அவர்களைப் பாதுகாக்கவில்லை – அவர் அவர்களைப் பயன்படுத்துகிறார். அவர்கள் மூலம், வெள்ளை ஐரோப்பா ஆஷ்விட்ஸ் தொடக்கம் அல்ஜீரியா வரை, கொங்கோ தொடக்கம் ருவாண்டா வரை அதன் காலனித்துவ வழிவாறு மூலம் நடாத்திய மனிதகுல விரோத இரத்தக்களரிகளில் இருந்து, – தனது கறை படிந்த கரங்களை சுத்தம் செய்கிறது. ஹேண்ட்கே பயன்படுத்தும் விவிலிய இறையியல் மொழி ஐரோப்பிய கூட்டு மனசாட்சியின் ரசவாதம் ஆகும்! அந்தக் குற்ற உணர்வை முஸ்லிம்கள், யூதர்கள் மற்றும் ‘பால்கன் காட்டுமிராண்டிகள்’ மீது மடைமாற்றும் பணியை கச்சிதமாய் அது நிறைவேற்றுகிறது.

யூத வெறுப்பை ‘பெயர்த்து நடுதல்’

யூத எதிர்ப்புக்கான பழியை – ஏன் ஹோலோகாஸ்டையும் கூட – அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீது சுமத்துவதற்கான பரந்த பிரச்சாரத்திற்கு ஹேண்ட்கேவின் தர்க்கம் வலுவூட்டுகிறது. ஜெர்மனியில், இந்தப் போக்கை அரசு மற்றும் பல்வேறு பொது நிறுவனங்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளன. அனைத்து உண்மைகள் மற்றும் வலுவான எல்லா ஆதாரங்களுக்கும் எதிராக – புலம் பெயர்ந்து வந்து நாட்டில் குடியேறிய முஸ்லிம் சமூகமே அதிகரித்து வரும் யூதஎதிர்ப்புக்கு காரணம் என்று கூறத் தொடங்கியுள்ளன. 2024ல் ஜெர்மன் பாராளுமன்றம், ‘அச்சம் தரும் அளவிலான யூத-விரோதத்தின் அதிகரிப்புக்கு’ வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் குடியேற்றவாசிகளே காரணம் என்று தெரிவிக்கும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.

‘முஸ்லிம் நாஸி கடந்த காலத்தை’ ஜெர்மன் ஊடகங்கள் தொடர்ந்தும் கட்டமைக்கின்றன. ‘ஜெர்மனியைப் போலல்லாமல், மத்திய கிழக்கு அதன் நாஸி கடந்த காலத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை’ என்கிறது ஒரு கட்டுரை. இதற்கிடையில், அரசு நிதியளிக்கும் அரசுசாரா நிறுவனங்கள் பாலஸ்தீன கெஃபியேவை ஒரு நாஸி சின்னமாக முத்திரை குத்தியதோடு, பாலஸ்தீனத்தின் கிராண்ட் முஃப்தி ‘இறுதித் தீர்வை’ ஊக்கப்படுத்தினார் என்ற இழிவான இஸ்ரேலியப் பல்லவியைப் பாடுகின்றன. 

ஜெர்மனியின் அரசியல் நிறுவனம் இப்போது ஒரு திருத்தல்வாத சான்றாதாரத்தை உருவாக்கி வருகிறது: அதில் நாஸீக்கள் தயக்கமுள்ள, வருத்தம் தெரிவிக்கும் குற்றவாளிகளாக மறுகற்பனை செய்யப்படுகிறார்கள்; மறுதலையாக பாலஸ்தீனர்களும் அவர்களது முஸ்லிம் மற்றும் அரபு நட்பு சக்திகளும் நாஸீக்களை விட தீயவர்களாக இழிவுபடுத்தப் படுகிறார்கள். பல ஆண்டுகளாக, இது ‘ஜெர்மனிக்கான மாற்று’ (AFD) போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விளிம்புநிலை கருத்தாக இருந்தது. ஆனால் இப்போது, ​​ஜெர்மனியின் நாஸி கடந்தகாலம் மட்டுமல்ல, குடியேற்றம் மற்றும் இஸ்லாம் பற்றிய AFDயின் முக்கிய கருத்துக்கள் அரசியல் மையத்தினால் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த நகர்வு ஐரோப்பிய பொதுப் புத்தியிலிருந்து குற்ற உணர்வை அகற்றுவதற்கான நீண்டகால உத்தியை பிரதிபலிக்கிறது. 2000ம் ஆண்டில் பழமைவாத கொன்ராட் ஆதுனோவா அறக்கட்டளையினால் ஒரு பெரிய விருதைப் பெற்ற வரலாற்றாசிரியர் எர்ன்ஸ்ட் நோல்ட், ஹோலோகாஸ்ட் என்பது சோவியத் ‘காட்டுமிராண்டித்தனத்திற்கான’ எதிர்வினை என்று வாதிட்டதோடு, *Auschwitz ‘ஆஷ்விட்ஸை’ Gulag ‘குலாக்குகளோடு’ சமன் செய்வதன் மூலம் நாஜி குற்றங்களை சார்புவாத ஒப்பீடு செய்தார்.  

யூதர்களை குறிவைப்பதற்கு ஹிட்லருக்கு ‘பகுத்தறிவு’ காரணங்கள் இருப்பதாக நோல்ட் வாதிட்டதோடு, 1945 முதல் ஜெர்மனிக்கெதிராகக் கூறப்படும் ‘கூட்டுக் குற்றப் பழி’யை நிராகரிக்கிறார். இன்று, AFD தலைவர் அலிஸ் வெய்டல் இந்த நிலைப்பாட்டை எதிரொலிக்கிறார். ஜெர்மனியின் நினைவூட்டல் கலாச்சாரத்தை ‘குற்றப்பழி வழிபாட்டு முறை’ என அவர் நிராகரிக்கிறார்.

நோல்ட் சோவியத்துகளைக் குறை கூறிய இடத்தில், இன்றைய அரசியல் நிறுவனம் முஸ்லிம்களை வைத்துப் பொருத்துகிறது. இதன் குறிக்கோள் ஒன்றே தான்: ஜெர்மனிக்கு இருக்கும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை வரலாற்றிலிருந்து இல்லாதொழிப்பது!

மறுப்பு முதல் செயலாக்கம் வரை

இனப்படுகொலை மறுப்பு என்பது எதிரிடையான மறதியின் செயல் அல்ல; மாறாக வன்முறையை நிலைநிறுத்தும் ஒரு இயக்கத்தில், நிலைபேறாகத் தீங்கு விளைவிக்கும் ஒரு செயல்முறை. இனப்படுகொலை பற்றி ஆராயும் அறிஞர் கிரிகோரி ஸ்டாண்டன், இனப்படுகொலையின் இறுதிக் கட்டமொன்றாக மறுப்பை இனங்காண்கிறார். அது, இதனை அடுத்து என்ன வரப்போகிறது என்பதை அறிவதற்கான ஒரு முக்கியமான அறிகுறியாகும்.

இனப்படுகொலை மறுப்பு என்பது, உயிர் பிழைத்தவர்கள் மற்றும் அவர்களின் சந்ததியினரின் துன்பத்தை செல்லுபடியற்றதாக ஆக்குவதன் மூலமும், உண்மையை சிதைப்பதன் மூலமும், பாதிக்கப்பட்டவர்களின் கண்ணியம், நினைவாற்றல் மற்றும் நீதியைப் பறிப்பதன் மூலமும் அவர்களின் அதிர்ச்சியை ஆழப்படுத்துகிறது. இந்த மனக் காயங்கள் தனிநபர்களையும் தாண்டி நீண்டுசென்று, தலைமுறை தலைமுறையாக எல்லா சமூகங்களையும் பாதிக்கின்றன.

இதற்கிடையில், இனப்படுகொலை மறுப்பு குற்றவாளிகளைக் காப்பாற்றுகிறது, இழப்பீடுகளைத் தாமதப்படுத்துகிறது மற்றும் நல்லிணக்கத்தைத் தடுக்கிறது, சமூகப் பிளவுகளை மேலும் ஆழப்படுத்துகிறது. இது சர்வதேச சட்டம் மற்றும் மனித உரிமைகள் கட்டமைப்புகளையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தி வலுவிழக்கச் செய்கிறது. மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கூட காலப்போக்கில் புறக்கணிக்கப்படலாம் என்ற சமிக்ஞையை வழங்குகிறது.

ஒரு இனப்படுகொலை மறுப்பு, அடுத்த இனப்படுகொலை நடைபெறுவதற்கும், அது ஏற்றுக்கொள்ளப்படுவதற்குமான நேரடியாக அடித்தளத்தை தயார் செய்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் மற்றும் இனப்படுகொலை அறிஞர்கள் பலமுறை அறிவுறுத்திய போதிலும், காசாவில் நடந்துவரும் இனப்படுகொலைக்கு ஐரோப்பியர்கள் எவ்வாறு எதிர்வினையாற்றுகிறார்கள் என்ற விடயத்தில் இதை நாம் தெளிவாகக் காண்கிறோம். மேலும், அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்பதை மறுத்து, இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் இராஜதந்திர பாதுகாப்பை தொடர்ந்தும் வழங்குகிறார்கள்.

பொஸ்னியாவில் உருவாக்கப்பட்ட படுகொலை வழிகாட்டல் கைந்நூல் இப்போது காசாவுக்குப் பயன்படுத்தப்படுகிறது. இது வழக்கமானதொரு முறையைப் பின்பற்றுகிறது: ‘இரு தரப்பினரையும் குறை கூறுதல்’; பாதிக்கப்பட்டவர்களை ஆக்கிரமிப்பாளர்களாக சித்தரித்தல் மற்றும் ஒரு சில தனிநபர்களை இதற்கான பொறுப்புதாரிகளாக அறிவித்தல்; இவற்றின் வழியாக திட்டத்தின்படி நடைபெற்ற பாரிய ஒழுங்குபடுத்தப்பட்ட இன சம்ஹாரத்தை மறைத்தல். காசாவில் நடக்கும் ‘வன்முறைக்கு’ பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது இரண்டு தீவிர வலதுசாரி அமைச்சர்களும் மாத்திரமே பொறுப்பு என்ற கூற்றில் இந்த வரைபடம் மிகத் துலாம்பரமாகத் தெரிகிறது. இப்படியான பரப்புரைகளின் வழியாக இனப்படுகொலைக்கான கொள்கையை அதன் கட்டமைப்பில் இருந்து பிரித்தெடுத்து, பொறுப்புக் கூறலை நீர்த்துப் போகச்செய்கின்றனர்.

பொஸ்னிய இனப்படுகொலையை மறுக்கும் விவரணையில், அதன் பொறுப்பு செர்பிய அரச எந்திரத்திற்குள் உள்ள ஒரு சில ‘கெட்ட அதிகாரிகள்’ என அது குறைக்கப்படுகிறது. ஒரு இனப்படுகொலை என்பது ஒரு குறிப்பான நோக்கத்தின் பாற்பட்ட, கவனமாக திட்டமிடப்பட்ட, பரந்துபட்ட ஒருங்கிணைப்புடன் கூடிய, அரசு இயந்திரத்தின் முழு வலிமையுடன் செயல்படுத்தப்பட்ட ஒரு பாரிய குற்றமாகும். அது தன்னியல்பானதோர் பிறள்வு நடவடிக்கை என இங்கே வகைப்படுத்தப்படுகிறது.

எதிர்கால இனப்படுகொலைக்குத் ஐரோப்பா தயாராகிறது

வலதுசாரி தேசியவாதம் அதிகரித்து வருதல், வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார இடர்கள், நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில் நடுத்தர வர்க்கப் போராட்டங்கள் மறைந்து வருவது போன்ற பல காரணிகளால் ஐரோப்பா  ஒரு ஆழமான நெருக்கடியை இன்று எதிர்கொள்கிறது.

பல மேற்கத்திய நாடுகளில், நடுத்தர வர்க்கம் சுருங்கி வருகிறது, அதே நேரத்தில் வலதுசாரிகளால் ‘உபரி மக்கள் தொகை’ என்று அழைக்கப்படுவது – விகிதாசாரத்தில் கூடிய முஸ்லிம்களால் ஆனது. பெருகிய நிலையில் உள்ள அந்த ‘உபரி’ விளிம்புக்குத் தள்ளப்படுவதோடு பலியாடாகவும் மாற்றப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஒரு காலகட்டத்தில், கடந்த காலத்தில் இடம்பெற்ற இனப்படுகொலையை, ‘மற்றோராக்கப்பட்ட’ ஒரு மக்கள்தொகைக்கு எதிரான உள்நோக்கத்தோடு மறுவடிவமைப்பது, நடக்கவிருக்கும் மற்றொரு இனப்படுகொலைக்கான சூழலை உருவாக்குவதற்குப் பங்களிக்கிறது. மேலும், அரசியல் வர்க்கத்தின் சில பிரிவுகள் பல்வேறு போர்வைகளில் இருந்துகொண்டு இந்த ‘உபரி மக்கள்தொகையை’ அகற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதற்கான தெளிவான அறிகுறிகள் ஏற்கனவே தென்பட ஆரம்பித்துள்ளன.

“உம்சீட்லுங் நாச் ஓஸ்டன்” (கிழக்கில் மீள்குடியேற்றம்) என்ற நாஸிகளின் இடக்கரடக்கல் யூதர்களை விஷவாயுக் கூடங்களுக்கு கொண்டு செல்வதற்கானதொரு கோரமான சாக்குப்போக்காக அன்று இருந்தது. இன்று, ஆஸ்திரிய தீவிர வலதுசாரி ஆர்வலர் மார்ட்டின் செல்னர் போன்ற ஐரோப்பிய முக்கியஸ்தர்கள் வெளிப்படையாக ‘மீள் இடப்பெயர்வு’ என்று வாதிடுகின்றனர். இது முஸ்லிம் சமூகங்களை ஐரோப்பாவிலிருந்து வேரோடு பிடுங்கி எறிவதை நோக்கமாகக் கொண்ட அந்த கொடுமையான முன்னைய தர்க்கத்தின் ஒரு மோசமான எதிரொலியாகும்.

ஐரோப்பிய அரசியல் உயரடுக்குகள் இன்னும் இந்த வார்த்தையை ஏற்றுக்கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் இவ்விடயத்தில் ஐரோப்பாவில் முஸ்லிம் இருப்பைக் கட்டுப்படுத்துதல் அல்லது குறைத்தல் என்ற இறுதி இலக்கைக் கொண்ட பல்வேறு கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் மும்முரமாக உள்ளனர். 2024 ஐரோப்பிய ஒன்றிய இடம்பெயர்வு ஒப்பந்தத்தின் மூலம் விலக்குக்கான சட்ட ஆட்சியை அவர்கள் உருவாக்கி வருகின்றனர், புகலிடம் கோருபவர்களை அல்பேனியா அல்லது பிற நாடுகளுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லை பராமரிப்பு நிறுவனமான ஃfப்ரொன்டெக்ஸில் பெரிய அளவில் பணத்தை முதலிட்டுள்ளனர். இந் நிறுவனம் மீது தஞ்சம் கோருவோர் தொடர்பிலான பாரபட்சம் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் பற்றிய குற்றச்சாட்டுகள் உள்ளன.

இவை நடுநிலையான நடவடிக்கைகள் அல்ல; மாறாக தாராளவாத சொல்லாட்சிகளால் போர்த்தப்பட்ட இனரீதியான வன்பெயர்வுக்கான கருத்தியல் கருவிகள். மேலும் அவை காலப்போக்கில் அதிகரித்த வன்முறையாக மாறும்.

இது வீண்பீதியை ஏற்படுத்தும் கருத்து அல்ல. இது ஒரு முறைமை. கறையான் புத்தகத்தை அரிப்பது போன்று மக்களது உரிமைகளின் ‘அரிப்பு’ எப்போதும் ‘மற்றவர்கள்’ என்று கருதப்படுபவர்களிடமிருந்துதான் தொடங்குகிறது.

இந்த இனப்படுகொலை மறுப்பு அவசரமாக கவனத்தில் எடுக்கப்படாவிட்டால், காசாவில் இடம்பெற்று வருவது ஒரு இனப்படுகொலை என  அங்கீகரிக்கப் படாவிட்டால்; மற்றும் அதைத் தடுக்க உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால்… ஐரோப்பா முழுமையானதோர் இனப்படுகொலையை நோக்கிச் செல்வதற்கான அபாயம் காத்திருக்கிறது.  இனப்படுகொலை மறுப்பு மேலும் விரிவடைந்து, ஹோலோகாஸ்டுக்கான பொறுப்பை கைவிட வேண்டும் என்ற தூண்டுதல் அதிகரித்து வருவதன் காரணமாக, இந்த கொடூரமான அட்டூழியங்கள் மீண்டும் நிகழ்வதற்கான சூழமைவு தயாராகி வருகிறது.

குறிப்புகள்

நாஸிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட போலந்தில் அமைந்துள்ள மிகப்பெரிய நாஸி வதை மற்றும் இனவழிப்பு முகாம் ஆஷ்விட்ஸ் ஆகும். இது 40 க்கும் மேற்பட்ட முகாம்களது தொகுதிகளைக் கொண்டிருந்தது. பிரதான முகாம் மற்றும் அவற்றின் கொலை மையம் மிகவும் மோசமான கொலைகளுக்குப் பேர்போனது. ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1.1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு அழிந்தனர். இந்த முகாம் அமைப்பின் வரலாறு இரண்டாம் உலகப் போரின்போது செய்யப்பட்ட அட்டூழியங்களின் நினைவில் நிலைக்கும் ஒன்றாகும்.

சோவியத் யூனியனில் கட்டாய உழைப்பு முகாம்களின் அமைப்பாக குலாக் இருந்தது. குலாக் என்ற சொல் முதலில் கட்டாய உழைப்பு முகாம்களை நடத்துவதற்குப் பொறுப்பான சோவியத் ரகசிய காவல்துறையின் பிரிவை மட்டுமே குறிக்கிறது.

இசாத் செர்பெகோவிச் (Esad Širbegović) சூரிச், சுவிட்சர்லாந்தில் வசிக்கும் பொஸ்னிய எழுத்தாளர். பெஞ்சா லூகா, பொஸ்னியாவில் பிறந்த அவர் 1992ல் அங்கு இடம்பெற்ற இனப்படுகொலைகளைத் தொடர்ந்து இடம்பெயர்ந்தார். அமெரிக்கா, அவுஸ்திரியா ஆகிய நாடுகளில் வாழ்ந்து இறுதியாக சூரிச்சில் வசிக்கிறார். கணினி அறிவியல் பயின்ற அவர், பூகோள அரசியல், இஸ்லாமோபோபியா மற்றும் இனப்படுகொலை ஆகிய விடயங்களை பகுப்பாய்வு செய்வதில் தேர்ந்தவர். பொஸ்னியக் கற்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி

இந்த ஆக்கம் Al Jazeera, Opinion பகுதியில் In Europe, the ground is being prepared for another genocide என்ற தலைப்பில் ஜூன் 14, 2025 வெளியானது.