– ஜோசப் மசாத்
யூத மேலாதிக்க ஆட்சியை நிலைநிறுத்துவதற்காக முனைந்து நிற்கும் பினாமி தலைவர்களுக்கு அதிகாரபூர்வ அந்தஸ்தை வழங்கும் உள்நோக்கத்தில், நூறாண்டுகள் பழமை வாய்ந்த உளுத்துப்போன அதே உத்தியைக் கைக்கொண்டு, (கற்பனையான) ‘பலஸ்தீன அரசுக்கான அங்கீகாரம்’ என்ற பெயரில் பிரிட்டன் நடத்தும் நாடகம் இன்றும் தொடர்கிறது.
இந்த வாரத்தின் தொடக்கத்தில், ‘கூர்ந்து நோக்கும் விதத்தில் அமெரிக்காவைத் தவிர்த்து’ பிரிட்டன் மற்றும் அதன் குடியேற்ற காலனிகளான கனடா மற்றும் ஆஸ்திரேலியா உட்பட பல ஐரோப்பிய நாடுகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத, இந்த நாடுகளது தலையாட்டி பொம்மையாக செயற்படக்கூடிய, பலஸ்தீன ஆணையம் Palestinian Authority (PA) மற்றும் அதன் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் ‘ஐந்தாம் படை’ பலஸ்தீன அரசுக்கு தமது அங்கீகாரத்தை வழங்கின.
இஸ்ரேலிய ஒத்தோடிகளை, பலஸ்தீன் மக்கள் சார்பாகப் பேசுவதற்கு பிரிட்டன் அங்கீகரிப்பது இது முதல் முறை அல்ல. 1917ம் ஆண்டின் இறுதியில் பலஸ்தீனத்தைக் கைப்பற்றி, காலனித்துவப்படுத்திய உடனேயே அந்த நடைமுறை தொடங்கிவிட்டது. 1917 நவம்பரில் (Balfour Declaration) பல்ஃபோர் பிரகடனம் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, அதே வருடம் டிசம்பரில் பலஸ்தீனத்தை பிரிட்டிஷ் இராணுவம் கைப்பற்றியது. (செப்டம்பர் 1918க்குள் அந்தப் பிரதேசம் முழுவதையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது). பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி மற்றும் சியோனிச குடியேற்ற காலனித்துவத்தை எதிர்ப்பதற்காக 1918க்கும் 1920க்கும் இடையில் சுமார் 40க்கும் அதிகமான பலஸ்தீன அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
அவர்கள் சுதந்திரத்தைக் கோரினர்; தேசிய மாநாடுகளைக் கூட்டினர்; மற்றும் பலஸ்தீனத்தின் ‘அரபு இயல்பை’ உறுதிப்படுத்தும் தீர்மானங்களை நிறைவேற்றினர்; ஒரு ‘அகன்ற சிரியா’வை நோக்கிய விடுதலை மற்றும் அதன் ஒற்றுமைக்கான அழைப்பை விடுத்தனர்.
இருந்தபோதிலும், பலஸ்தீனத்தின் சட்டபூர்வ அங்கீகாரத்திற்கான முயற்சிகளை தொடர்ந்து தடுத்தபடியே இருந்தது பிரிட்டன்! சியோனிச திட்டத்தை ஏற்றுக்கொள்ளச் செய்து அவர்களை அடிபணிய வைப்பதே அதன் நோக்கமாகும். உலகின் பெரும்பகுதியை தமது காலனித்துவத்தின் பிடியின்கீழ் கொண்டுவந்து, அவற்றின் மண்ணின் மைந்தர்களான சொந்தப் பிரதிநிதிகளை மறுத்து புறந்தள்ளி, அங்கெல்லாம் தமக்கு சார்பான ஒத்தோடிகளை வளைத்துப் போட்டு வளர்த்தெடுத்து, தமது சொந்த மக்களைக் காட்டிக் கொடுக்கத் தயாராக இருப்பவர்களையே தலைவர்களாக நிறுவும் மையநிலைப்பட்டதோர் காலனித்துவ உத்தியை இத்தகைய தந்திரோபாயங்கள் பிரதிபலிக்கின்றன. இதற்கு பலஸ்தீனர்களும் விதிவிலக்கல்ல. பிரிட்டிஷ் ஆட்சி அல்லது சியோனிஸ்டுகளின் ஆட்சி; எதுவாக இருப்பினும் அவற்றின் கீழ், இந்த காலனித்துவ வழிமுறையின் ஒரு பிரதான எடுத்துக்காட்டாக பலஸ்தீனர்கள் திகழ்கின்றனர்.
இந்த நூற்றாண்டு முழுவதும், பலஸ்தீன மக்களுக்காகப் பேசிய ஒவ்வொரு சட்டபூர்வமான அமைப்பினதும் அங்கீகாரம் அவர்களால் மறுக்கப்பட்டது. அதேவேளை சியோனிசத்தின் ஒத்தோடிகள் சட்டபூர்வமானவர்களாய் ஆக்கப்பட்டனர். 1993 ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது, பலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO) அதன் பிரதிநிதித்துவப் பொறுப்பைக் கைகழுவி விட்டு, பலஸ்தீனத்தைக் ‘காலனித்துவப்படுத்துவதற்கான இஸ்ரேலின் உரிமையை’ அங்கீகரித்த போதுதான், PLO பலஸ்தீன மக்களின் அதிகாரபூர்வ குரலாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஒரு கற்பனையான அரசின் தலைமையாக தற்போது அங்கீகரிக்கப்பட்டிருக்கும் (PA) பலஸ்தீன அதிகார சபை, பாலஸ்தீனர்களுக்கான சொந்த தலைமையையும் அதன் நிறுவனத்தையும் மறுத்து ஒதுக்கி, அதற்குப் பகரமாக ஒரு ஒத்தோடி ஆட்சியை தூக்கிப் பிடிப்பதற்கான, நூறு ஆண்டுகளுக்கு அதிகமாக பயன்படுத்தப்பட்டுவரும் காலனித்துவ மூலோபாயத்தின் சமீபத்திய வெளிப்பாடாகும்.
ஆரம்பகால எதிர்ப்பு
பலஸ்தீனத்தை பிரிட்டிஷ் கைப்பற்றிய பிறகு தோன்றிய அமைப்புகளில் மிகவும் முனைப்பானது பாலஸ்தீன முஸ்லிம்-கிறிஸ்தவ சங்கம் (MCA) ஆகும். இதன் முதல் கிளை 1918ல் ஜஃபாவில் நிறுவப்பட்டது. பிரிட்டிஷ் காலனித்துவம் மற்றும் யூத சியோனிசத்தின் ஆக்கிரமிப்பு ஆகியவற்றுக்கெதிரான போராட்டத்தில் அவர்கள், தமது மத வரையறைகளுக்கு அப்பாற்பட்ட ஒற்றுமையோடு களத்தில் செயற்பட்டனர். அதே ஆண்டு நவம்பரில், இராணுவ நிர்வாகத்தின் தலைமை அரசியல் அதிகாரியும் கொள்கை வகுப்பாளருமான ஜெனரல் கில்பர்ட் கிளேட்டனுக்கு ஜஃபா முஸ்லிம் கிறிஸ்தவ சங்கம் ஒரு குறிப்பாணையை சமர்ப்பித்தது. அதில், பலஸ்தீனத்தின் அரபு இயல்பை ‘பலஸ்தீனம் – எங்கள் அரபுத் தாயகம்” என்று உறுதிப்படுத்தியதோடு, யூதர்களுக்கான தேசிய தாயகத்தை உருவாக்கும் பிரிட்டனின் கொள்கையையும் சங்கம் நிராகரித்தது.
முதலாவது பலஸ்தீன தேசிய மாநாட்டை 1919 ஜனவரி 27 தொடக்கம் பெப்ரவரி 9 வரை முஸ்லிம் கிறிஸ்தவ சங்கம் ஜெரூசலத்தில் நடாத்தியது. அதில் பங்குபற்றிய பேராளர்கள் பலஸ்தீனம் மற்றும் லெபனான் உள்ளிட்ட அகன்ற சிரியாவினது விடுதலைக்கு அழைப்பு விடுத்தனர். மேலும் ஒரு சுதந்திரமான மற்றும் ஒருங்கிணைந்த ‘கிரேட்டர் சிரியா’வை தமது கோரிக்கையாக முன்வைத்தனர். இந்தத் தீர்மானங்களை பாரிஸ் சமாதான மாநாட்டுக்கு கொண்டு செல்வதற்கென ஒரு குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆனால், அவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதை ஆங்கிலேயர்கள் தடுத்தனர். அப்படியிருந்தும், அத்தீர்மானங்கள் பாரிஸ் நகரை வந்தடைந்தன.
இதற்கிடையில், அந்த மாநாட்டில், சியோனிஸ்ட் அமைப்பின் (Zionist Organization) ZO தலைவரான சாய்ம் வைஸ்மன், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ரொபர்ட் லான்சிங்கை சந்தித்தார். ‘ஆங்கிலேயர்களுக்கான இங்கிலாந்தைப் போல பலஸ்தீனம் யூத மயமாகுவதே’ சியோனிஸ்டுகளின் குறிக்கோள் என அங்கு வைத்து லான்சிங்கிடம் கூறியதை வைஸ்மன் நினைவு கூர்ந்தார். “அந்த நேரத்தில் பிரெஞ்சுக்காரர்கள் துனிசியாவில் பெற்ற சிறந்த வெற்றியை லான்சிங் [தனது] முன்மாதிரியாக எடுத்துக் கொண்டார்” என அவர் மேலும் தெரிவித்தார்.
அந்த நேரத்தில் பிரான்சின் குடியேற்ற காலனியாக இருந்த துனிசியா இதற்கானதோர் முன்மாதிரியாகக் குறிப்பிடப்பட்டது: ‘துனிசியாவில் பிரெஞ்சுக்காரர்கள் எதைத்தான் செய்யமுடியாது’ என்பதைப் போலவே, “யூத விருப்பம், யூதர்களின் செல்வம், யூத சக்தி மற்றும் யூத உற்சாகம் இருந்தால்… யூதர்கள் நினைத்தால் பலஸ்தீனத்தில் செய்ய முடியாதது என்று எதுவுமில்லை” என்றே வைஸ்மன் வாதாடினார்.
மறுக்கப்பட்ட அங்கீகாரம்
ஜூன் 1919ல், ஜனாதிபதி உட்ரோ வில்சனால் அனுப்பப்பட்ட அமெரிக்க கிங்-கிரேன் ஆணையம் King-Crane Commission, அனடோலியா, சிரியா, லெபனான் மற்றும் பலஸ்தீன மக்களின் விருப்பங்களை ஆராய்வதற்கு பலஸ்தீனத்திற்கு வந்தது. இது அமெரிக்க செல்வாக்கு மண்டலங்கள் மீதான பிரிட்டிஷ்-பிரெஞ்சு போட்டியைத் தணிப்பதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும். அந்த ஆணையம் முஸ்லிம் கிறிஸ்தவ சங்கம் மற்றும் பிற அமைப்புகளைச் சேர்ந்த டசின் கணக்கான பலஸ்தீனர்களை நேர்காணல் செய்தது. அவர்கள் அனைவரும் சுதந்திரத்தையே கோரிநின்றனர். இளைய சந்ததியினர் சிரியாவுடன் ஒன்றிணைவதற்கு அழைப்பு விடுத்தனர். ஒட்டுமொத்தமாக எல்லா பலஸ்தீனர்களும் சியோனிச குடியேற்ற காலனித்துவத்தை கடுமையாக எதிர்த்தனர்.
ஆணையம் தனது அறிக்கையை 1919 ஆகஸ்ட் பாரிஸ் சமாதான மாநாட்டில் சமர்ப்பித்தது. அது, ‘பலஸ்தீன மக்கள் இன்னும் சுதந்திரத்திற்கு தயாராகவில்லை’ என்று கூறியபோதிலும், அவர்களது சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவித்தது. இரண்டாவது தேர்வாக, பிரிட்டிஷ் அல்லது பிரெஞ்சு கட்டுப்பாட்டிற்குப் பதிலாக – ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்துடன் கூடிய அமெரிக்க ஆணையை (American Mandate) ஆணைக்குழு பரிந்துரைத்தது. இப்படியான சூழ்னிலையில், லண்டன் மற்றும் பாரிஸ் ஆகியன இதுவிடயத்தில் தமது சொந்தப் புரிதலின் வழியாக ஆணைக்குழுவின் கண்டறிதல்கள் மற்றும் பரிந்துரைகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தன. பல்ஃபோர் பிரகடனத்தை அமெரிக்க காங்கிரஸ் அங்கீகரித்ததன் பிறகு, அதாவது 1922 வரை அந்த அறிக்கை வெளியிடப்படவே இல்லை.
பிரான்ஸ் சிரியாவைக் கைப்பற்றிய 1920 ஜூலை (அதே) மாதத்தில், பலஸ்தீனத்தில் பிரிட்டன் அதன் இராணுவ ஆக்கிரமிப்பை ஒரு ‘சிவில் நிர்வாகத்தின் பெயரைக் கொண்டு’ மாற்றியமைத்ததோடு, யூத சியோனிச அரசியல்வாதியான ஹெர்பர்ட் சாமுவேலை அதன் புதிய முதல் உயர் ஆணையாளராகவும் நியமித்தது.1920 மே மாதம் ஜெருசலேமில் நடைபெறவிருந்த இரண்டாவது பாலஸ்தீன தேசிய மாநாடு அதிகாரிகளால் திட்டமிட்டு தடை செய்யப்பட்டது. இதன் விளைவாக, அந்த டிசம்பரில் மக்கள் பரவலாகக் கலந்து கொண்ட மூன்றாவது தேசிய மாநாட்டை முஸ்லிம் கிறிஸ்தவ சங்கம் ஜஃபாவில் கூட்டியது. இதில் அனைத்து பலஸ்தீன சங்கங்கள், அமைப்புகள் மற்றும் அவற்றின் பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாடு பலஸ்தீனத்தின் சுதந்திரத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கும் சர்வதேச மன்றங்களுக்கும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக பலஸ்தீன அரபு நிர்வாகக் குழு (AE) என்ற ஒரு குழுவைத் தேர்ந்தெடுத்தது. சாமுவேல் அந்தக் கோரிக்கையை முற்றிலுமாக நிராகரித்து, பலஸ்தீன மக்களின் பிரதிநிதியாக அந்தக் குழுவை அங்கீகரிப்பதற்கு மறுத்துவிட்டார்.
மார்ச் 1921ல் பாலஸ்தீனர்கள் கெய்ரோவுக்கு ஒரு குழுவை அனுப்பினர். ஒரு சியோனிஸ்ட் மற்றும் மோசமான யூத ஆதரவாளரான காலனித்துவ செயலாளர் வின்ஸ்டன் சர்ச்சிலோடு குறுகிய சந்திப்பொன்றை அவர்கள் மேற்கொண்டனர். சில நாட்களுக்குப் பிறகு சர்ச்சிலின் பலஸ்தீன விஜயத்தின் போது இன்னும் விரிவான சந்திப்புகள் இடம்பெற்றன. பிரிட்டன் பால்ஃபோர் பிரகடனத்தை ரத்து செய்ய வேண்டும், யூத காலனித்துவத்தை தடை செய்ய வேண்டும் மற்றும் பலஸ்தீனுக்கு சுதந்திரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, அரபு எதிர்ப்பு இனவெறி கொண்ட சர்ச்சில், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் ஆட்சி உரிமை அதன் இராணுவ வெற்றியிலேயே தங்கியிருப்பதாக அறிவித்தார்.
காலனித்துவ நிர்வாகம் “பல ஆண்டுகளுக்குத் தொடரும், படிப்படியாக அது முழுவதுமான சுயராஜ்யத்திற்கு வழிவகுக்கும் பிரதிநிதித்துவ நிறுவனங்களை உருவாக்கும்” என்று அவர் மேலும் தெரிவித்தார். “நாம் இறந்துபோவோம். நமது சந்ததிகள் – அவர்களது சந்ததிகள்… அவர்களும் ‘அது முழுமையடைவதற்கு முன்னர்’ இறந்துபோவர்” என சர்ச்சில் தீர்க்கத்தோடு முழங்கினார். அந்த ஆகஸ்டில் பாலஸ்தீன அங்கிலிக்கன்களின் குழுவொன்று அவரிடம் ஒரு மகஜரை கையளித்தபோது, சர்ச்சில் அதனை அங்கேயே நிராகரித்தார். பாலஸ்தீன அங்கிலிக்கன்கள் செமித்திய வழிவந்தவர்கள் என்பதனால் அவர்களுக்கும் ஆங்கில அங்கிலிக்கன்களுக்கும் இடையில் இருக்கும் இனரீதியான பிளவு பாரியது. அதுதான் அவர்களைப் பிரித்துவைக்கிறது என்பதை அவர்களுக்கு கடுந்தொனியில் நினைவூட்டினார்.
அங்கீகாரத்துக்கான நிபந்தனைகள்
1921ம் ஆண்டில், முஸ்லிம் கிறிஸ்தவ சங்கம் லண்டனுக்கு செல்வதற்கு ஒரு குழுவை நியமித்தது. அந்த ஜூலை மாதம், பிரிட்டிஷ் காலனித்துவ செயலாளர், உயர் ஆணையாளர் சாமுவேலுக்கு எழுதிய கடிதத்தில்: “எந்தவொரு நிர்வாக சீர்திருத்தமும் யூதர்களுக்கான தேசிய புகலிடத்தை உருவாக்கும் கொள்கையை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் மட்டுமே தொடர முடியும். இது பிரிட்டிஷ் அரசாங்கக் கொள்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே உள்ளது. பிரிட்டிஷ் அரசு ஒரு தேசிய புகலிடத்துக்கான கொள்கையை செயற்படுத்தும்போது, அந்தக் கொள்கையில் தலையிடும் வகையில், அல்லது அதற்கு சவால்விடும் விதத்தில் அமைந்த எந்த ஒரு நடவடிக்கையையும் (அதாவது, குடியேற்றம் போன்றவை) மேற்கொள்வதற்கு எந்தவொரு பிரதிநிதி அமைப்புகளுக்கும் அனுமதி வழங்கப்பட மாட்டாது” என்று தெளிவுபடுத்தினார்.
பிரிட்டன், சியோனிசம் வேரூன்றுவதை முதன்மை இலக்காக வைத்துக்க் கொண்டு, பூர்வீக பலஸ்தீனப் பிரதிநிதித்துவத்தை அங்கீகரிப்பதற்கு தயார் என (உதட்டளவில்) கூறி, காலத்துக்கு காலம் அதற்கு தோதான சூழமைவுகளை உருவாக்கி, விதித்து வந்த, மற்றும் காத்து வந்த ‘அசைக்க முடியாத’ நிபந்தனைகள் இவைதாம். அல்லல் பட்டு ஆற்றாது பலஸ்தீனர்கள் காலம் முழுவதும் நிராகரித்து வந்ததும் இவற்றைத்தான். இதே காரணங்களை முன்வைத்து, (ஐ.நாவுக்கு முந்திய) League of the Nations பலஸ்தீனத்துக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை மறுத்தது.
1922ம் ஆண்டு பலஸ்தீனத்திற்கென ஒரு சட்டமன்ற சபையை நிறுவுவதற்கு பிரிட்டிஷ் முன்வந்த போது, அதன் முன் நிபந்தனையாக, இந்த நடைமுறையில் பங்கேற்கும் எல்லாக் கட்சிகளும் எல்லா வேட்பாளர்களும், பிரித்தானிய ஆணையின் சட்டபூர்வமான தன்மையையும் அது மேற்கொண்டுவரும் சியோனிச குடியேற்ற-காலனித்துவ திட்டத்தையும் அங்கீகரிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அந்த ஆண்டு கூட்டப்பட்ட ஐந்தாவது பலஸ்தீன காங்கிரஸ், தேர்தல்களைப் புறக்கணிக்குமாறு கோரி வலுவானதோர் பிரச்சாரத்தைத் தொடங்கியது. மேலும் இந்த தேர்தல் ஏற்பாடுகள் யூத குடியேற்ற காலனித்துவத்தை நியாயப்படுத்தும் ஒரு சூழ்ச்சி என்று கண்டித்ததோடு, பலஸ்தீனத்துக்கான சுதந்திரக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியது.
காலனித்துவத்துக்கு எதிர் நிலையில் பலஸ்தீனில் இடம்பெற்ற சம்பவங்களது உடன் நிகழ்வாக, இதே வருடம், பிரெஞ்சு காலனித்துவவாதிகளுடனான சம உரிமைகளையும் பாராளுமன்றத்தில் அவர்களுக்கான விகிதாசார பிரதிநிதித்துவத்தையும் தூனிசியா கோரி நின்றது. லீக் ஆஃப் நேஷன்ஸ் பிரிட்டனுக்கு முறையாக ஆணையை வழங்கிய பிறகு, ஜூன் 1923ல் கூட்டப்பட்ட ஆறாவது பலஸ்தீன காங்கிரஸ், வரி செலுத்த மறுப்பது உட்பட அதிகாரிகளுடன் ஒத்துழையாமை குறித்தும் வலியுறுத்தியது.
சியோனிஸ்டுகளுடன் ஒத்துழைக்காமல் பிரிட்டிஷாருடன் மாத்திரம் ஒத்துழைத்த ஜெருசலேமை தளமாகக் கொண்ட, குறிப்பிடத்தக்க பெரிய குடும்பங்களை, இருவருடனும் ஒத்துழைத்த மூத்தவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு எதிராக மூட்டி விடுவதில் பிரிட்டிஷ் பிரித்தாளும் தந்திரோபாயம் வெற்றி பெற்றது. அதன் விளைவாக, தேசிய இயக்கம் பிளவுபட்டு, ஏழாவது மாநாட்டைக் கூட்டுவது 1928 ஜூலை வரை தாமதமாகியது.
காலனித்துவ ஒத்துழைப்பாளர்கள்
யூத ஏஜென்சியின் மூத்த சியோனிச அதிகாரியும், சியோனிச நிர்வாக ‘அரபுத் துறையின்’ தலைவருமான சாய்ம் கல்வாரிஸ்கி, அவர்களுக்கு தலையிடியாக அமைந்த முஸ்லிம் கிறிஸ்தவ சங்கத்துக்கு மாற்றாக குறுங்குழுவாத ‘தேசிய முஸ்லிம் சங்கத்தை’ (NMS) நிறுவுவதற்கு நிதியளித்தார். பலஸ்தீனில் காலனித்துவத்துக்கு சவாலாக அமைந்த முஸ்லிம் – கிறிஸ்தவ ஒற்றுமையின் இயங்குதளமான முஸ்லிம் கிறிஸ்தவ சங்கத்தை தாக்குமாறு அவர் பிரிவினைவாத முஸ்லிம்களை ஊக்குவித்தார். தேசிய பலஸ்தீன அமைப்புகளை வழிநடத்தியவர்களுக்கு போட்டியாளர்களாக மாறி சவால் விடும் வகையில் அமைந்த ‘அல்-ஹிஸ்ப் அல்-ஸிரா’ எனப்படும் விவசாயக் கட்சியின் உருவாக்கத்துக்கு, அங்குள்ள உயரடுக்கு குடும்ப உறுப்பினர்களுக்கும் அவர் நிதியளித்தார். சியோனிச நிதியுதவியை ஏற்றுக்கொண்டது மற்றும் யூத காலனித்துவத்தை அனுமதித்தது ஆகிய காரணங்களை முன்வைத்து தேசிய முஸ்லிம் சங்கம் (NMS) மற்றும் விவசாயக் கட்சி ஆகிய இரண்டையும் பலஸ்தீன விடுதலைக்கு எதிரான துரோகிகளாகவே கருதினர்.
1936 தொடக்கம் 1939 வரை இடம்பெற்ற பெரும் பலஸ்தீனக் கிளர்ச்சியின் போது, காலனித்துவத்தின் ஐந்தாம் படையாக விளங்கிய விவசாயக் கட்சி, தனது எஜமான விசுவாசத்தை காண்பிப்பதில் ஒரு ‘முன்மாதிரி’ப் பாத்திரத்தை வகித்தது. பிரிட்டிஷ் மற்றும் சியோனிஸ்டுகள் பலஸ்தீன புரட்சியாளர்களைக் கொல்வதில், அப்போது அவர்களுக்கு உதவுவதற்கென உருவாக்கப்பட்ட ‘அமைதிக் குழுக்களை’ ஆதரித்தனர். அவ்வகைப்பட்ட ‘அமைதிக் குழுக்களே’ பலஸ்தீன பாதுகாப்புப் படைகளுக்கு முன்மாதிரியாக மாறி, 1994 தொடக்கம் இஸ்ரேலின் சார்பாக பலஸ்தீனர்களது எதிர்ப்பை அடக்கி வருகின்றனர்.
மேற்கு நாடுகள், 1948 தொடக்கம் 1953 வரை பலஸ்தீனத்தை பிரதிநிதித்துவப் படுத்தாதவர்களை அங்கீகரித்து, முழுமையான பலஸ்தீன அரசாங்கத்தின் (APG) இறையாண்மையை அங்கீகரிப்பதற்கு மறுத்து நின்றது, பலஸ்தீனர்களை அவர்களின் சட்டபூர்வத் தன்மையை மறுத்தமைக்கான மற்றொரு மைல்கல் நிகழ்வாகும்.
APGயை அங்கீகரிப்பதற்குப் பதிலாக மேற்கு நாடுகள், 1948க்குப் பின்னர் இஸ்ரேல் கைப்பற்றியது போக பலஸ்தீனத்தில் எஞ்சியிருந்த பகுதியின் சட்டபூர்வமான ஆட்சியாளராக ஜோர்டானின் மன்னர் முதலாம் அப்துல்லாவை நிலைனிறுத்தின. 1964ல் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் (PLO) எழுச்சிக்குப் பிறகு, குறிப்பாக 1969ல் பிரபலமான பலஸ்தீன கெரில்லாக்கள் தலைமைப் பொறுப்பேற்ற பிறகும் இந்த இயக்க நிலை தொடர்ந்தது.
இதற்கு முன்னர் காலனித்துவத்தின் பிடியில் அகப்பட்டிருந்த உலகின் பெரும்பகுதி 1974ல் PLOவை அங்கீகரித்தது. குறிப்பாக PLO தலைவர் யாசர் அரபாத் 1974ல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையையும், அதைத் தொடர்ந்து ஐ. நா PLOவை ‘பலஸ்தீன மக்களின் சட்டபூர்வமான மற்றும் ஒரே பிரதிநிதி’ என அங்கீகரித்ததையும் தொடர்ந்து இது இடம்பெற்றது. இருப்பினும், அமெரிக்காவும் அதன் மேற்கு ஐரோப்பிய நட்பு நாடுகளும் அந்த அமைப்புக்கு பிரதிநிதித்துவ சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்க மறுத்துவிட்டன.
1973 போரைத் தொடர்ந்து, எகிப்திய ஜனாதிபதி அன்வர் சதாத், அந்த ஆண்டு டிசம்பரில் ஐ.நா.வின் மேற்பார்வையில் ஜெனீவாவில் ஒரு அமைதி மாநாட்டை முன்மொழிந்தார். அதில் எகிப்து, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் ஆகியவை கலந்து கொண்டன. ஆனால் பலஸ்தீன விடுதலை இயக்கம் அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படாததால் சிரியா அதில் பங்கேற்க மறுத்துவிட்டது. உண்மையில், அக்டோபர் மாத இறுதியில் சதாத், PLOவுக்கு ஒரு முறைசாரா அழைப்பை விடுத்திருந்தார். இது அமைப்புக்குள் கலந்துகொள்வது குறித்த பெரும் உள்விவாதத்தைத் கிளறியது. உணர்ச்சிவசப்பட்ட அரபாத், தான் பங்கேற்கத் தயாராக இருப்பதாக ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு கூட குறிப்பாக அறிவித்திருந்தார்.
இறுதியில், அதிகாரபூர்வ அழைப்பு எதுவும் வராததால், PLO பங்கேற்காமல் இருக்க முடிவு செய்தது, குறிப்பாக இம்மாநாடு ஐ.நா. தீர்மானங்கள் 242 மற்றும் 338 ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது; 1967ல் இஸ்ரேல் ‘ஆக்கிரமித்த பிராந்தியங்களிலிருந்து’ வெளியேறுவதற்கு ஈடாக ‘இஸ்ரேலை அங்கீகரிக்க வேண்டும்’ என்று அது கோரியது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஜோர்டான் ஆகிய அனைத்தும், இம்மாநாட்டில் PLOவின் பங்கேற்பை எதிர்த்தன.
கீழ்ப்படிவை அங்கீகரித்தல்
1988ம் ஆண்டு உண்மையில், அல்ஜியர்ஸில் வைத்து, வரலாற்று சிறப்புமிக்க பலஸ்தீனத்தின் 22% சதவீதத்தை சுதந்திரமானதாக அறிவித்த பிறகு, பலஸ்தீனத்தின் பல்வேறு உரிமைகளை விட்டுக்கொடுத்து PLO சமரசம் செய்துகொண்ட போதிலும், மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் அந்த அமைப்பின் சட்டபூர்வத் தன்மையை அங்கீகரிப்பதற்கு பிடிவாதமாக மறுத்துவிட்டன.
1991ம் ஆண்டு மட்ரிட்டில் நடைபெற்ற சர்வதேச மத்திய கிழக்கு அமைதி மாநாட்டில், அமெரிக்காவும் இஸ்ரேலும் PLO பங்கேற்பதைத் தடுத்தன; அதற்கு பதிலாக மேற்குக் கரை மற்றும் காசாவைச் சேர்ந்த பலஸ்தீனக் குழுக்கள் ஜோர்டானியக் குழுவில் சேர்ந்து, ஒருங்கே அவை பங்குபற்ற வேண்டும் என்றும், சுயாதீனமாக பங்கேற்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டன. அப்போதும் கூட, அமெரிக்கர்களும் இஸ்ரேலியர்களும் பங்கேற்பாளர்களை சரிபார்த்து, ‘கடும்போக்குவாதிகள்’ என்று கருதப்படுபவர்களையோ அல்லது அவர்கள் கிழக்கு ஜெருசலேமைச் சேர்ந்தவர்கள் என்பதற்காகவோ நிராகரித்து, ஏனையோரை அங்கீகரித்தனர்.
1993ம் ஆண்டு வரை இவ்வாறு நடைபெற்று வந்தது. அது எதுவரையெனில், PLO பலஸ்தீன மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்திவிட்டு, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேலின் காலனித்துவ ஆதிக்கத்தை உறுதிப்படுத்தும் இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க கோரிக்கைகளுக்கு என்று அடிபணிந்ததோ, அன்று தொடக்கம் அது பாலஸ்தீனர்களின் ‘சட்டபூர்வமான’ பிரதிநிதியாக அங்கீகரிக்கப்பட்டது.
இது பதின்ம வயதின் பிற்பகுதியில் இருந்தே பிரிட்டிஷ் காலனித்துவ நிலைமைகளுக்கு ஏற்ப தகவமைந்து இருந்தது. அதாவது ஐரோப்பிய யூதர்கள் தங்கள் நாட்டில் குடியேறுவதற்கும் அதன் வளங்களை வகை தொகையின்றித் திருடுவதற்கும் உள்ள உரிமையை அங்கீகரிக்கும் பலஸ்தீனர்கள் மாத்திரமே, அம்மக்களின் சட்டபூர்வ பிரதிநிதிகளாக அங்கீகரிக்கப்படுவார்கள்.
1920களில் பலஸ்தீனுக்காக செயற்பட்ட MCA போன்ற அதன் செயற்பாட்டுத் தரத்தில் இருந்து பிறழ்ந்து போன PLO, MCAவின் எதிரியான ‘விவசாயக் கட்சியின்’ ஒத்தோடிப் பாத்திரத்தை ஏற்று சீரழிந்த ‘நிலைமாற்றத்தை’ உலகம் அவதானித்தபடி உள்ளது.
2006ம் ஆண்டு இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ஆணையின் பிரகாரம் பலஸ்தீன அதிகார சபையினால் நடத்தப்பட்ட ஒஸ்லோவிற்குப் பின்னைய சட்டமன்றத் தேர்தல்களில் ஹமாஸ் இயக்கம் போட்டியிட்டதைத் தொடர்ந்து, மக்கள் வழங்கிய அமோக ஆதரவின் காரணமாக அதற்கு மகத்தான வெற்றி கிடைத்தது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் மேற்கு ஐரோப்பா உள்ளிட்ட மேற்குலகம், எதிர்ப்புக் குழுவான ஹாமாஸை, மேற்குக் கரையிலும் காசாவிலும் உள்ள மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டபூர்வ அரசாங்கமாக அங்கீகரிக்க மறுத்துவிட்டது.
2007ம் ஆண்டு ஹமாஸை அதிகாரத்திலிருந்து அகற்றுவதற்கு அவர்கள் ஒரு ஆட்சிக் கவிழ்ப்பை அரங்கேற்றினர். அது மேற்குக் கரையில் வெற்றி பெற்றபோதிலும் காசாவில் தோல்வியடைந்தது.
அந்தத் தேர்தல்களில் கிடைத்த அனுபவத்தின் வாயிலாக பலஸ்தீன அதிகாரசபையின் (PA) ஆளுகையின் கீழ் இனிமேல் எந்த ஒரு தேர்தலையும் நடாத்துவதற்கு முடியாது என்ற முடிவுக்கு இஸ்ரேலும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளும் வந்து சேர்ந்தன. ஒன்றில் தேர்தலின் முடிவு முன்கூட்டியே உறுதி செய்யப்படாவிட்டால்; மற்றும் எதிர்னோக்கும் எந்தவொரு சவாலும் PA வின் ஒத்தோடிப் பாத்திரத்தை அச்சுறுத்த முடியாது என்பதை உறுதி செய்தால் மாத்திரமே இனிமேல் பலஸ்தீனத்தில் தேர்தல் ஒன்றை நடத்தலாம் என்ற தீர்க்கமான முடிவை அவை அன்று எட்டின.
1994 தொடக்கம், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை அமுல் நடாத்துவதில் பலஸ்தீன அதிகார சபை மகிழ்ச்சியுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கடந்த இரண்டு ஆண்டுகளில் பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் இனப்படுகொலையின்போது அவர்களிடமிருந்து வரும் எல்லா எதிர்ப்பு நடவடிக்கைகளையும் அடக்குவதற்கு உதவுகிறது. கடந்த வாரம் தான், மேற்குக் கரையில் இஸ்ரேலுக்கு எதிராக திட்டமிடப்பட்டிருந்த ஓர் எதிர்ப்பு நடவடிக்கையை காட்டிக்கொடுத்து தனது ‘Kapo* கபோ’ தன்மையை நிலை நிறுத்திக்கொண்டது மஹ்மூத் அப்பாஸ் உடைய பலஸ்தீன அதிகார சபை. (*நாஸி இன அழிப்பு வதை முகாம்களில் உள்ள கூலிப் படையினர் Kapo என அழைக்கப்படுவர். அவர்களது செயற்பாடுகள் தன்னார்வமானதாகவோ அல்லது கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ இருந்தாலும், நிர்வாகப் பணிகளைச் செய்வதற்கு அல்லது கைதிகளின் கட்டாய உழைப்பை மேற்பார்வையிடுவதற்கு பணிபுரிந்த ஒத்தோடிகளாக இருந்தபடியால் இந்த அவலப் புகழ் கொண்ட பெயரால் அழைக்கப்பட்டனர்)
எரிகாயத்திற்கு மேலே உப்பைத் தூவியதுபோல, அவமானத்துக்கு மேல் அவமானமாக, சமீபத்தில் பலஸ்தீன அதிகார சபையின் அதிகாரிகளிடையே ஏற்பட்ட உட்பூசல், பிரிகேடியர் ஜெனரல் ரியாத் ஃபராஜை இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அமைப்பு கைது செய்வதற்கு வழிவகுத்தது. ஜெரிக்கோவில் உள்ள டெய்ர் குவால்’ஆ மடாலயத்திற்குச் சொந்தமான நிலத்தை இஸ்ரேலிய குடியேறிகளுக்கு விற்றது மற்றும் தொல்பொருட்களைக் கடத்தி விற்றது ஆகிய குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. அவர் பலஸ்தீன அதிகார சபையின் புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் மஜீத் ஃபராஜின் சகோதரர் ஆவார். மஹ்மூத் அப்பாஸுக்குப் பதிலாக வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட இருந்தவர் அவர் என்பது கூடுதல் குறிப்பு!
பிரிட்டனும் அதன் குடியேற்ற-காலனிகளும் பலஸ்தீனத்தை ஒரு கற்பனையான அரசாக இந்த வாரம் அங்கீகரித்திருப்பது இஸ்ரேலியர்கள் கூறுவது போல் ஹமாஸுக்குக் கிடைத்த வெற்றியல்ல. மாறாக பலஸ்தீன மக்களின் குடியேற்ற காலனித்துவ எதிரியான இஸ்ரேலுக்கு அப்பாஸின் பலஸ்தீன அதிகாரசபை உண்மையாக செய்து வரும் ஐந்தாம்படை சேவைக்கும், அந்த அமைப்பு வெளிநாட்டில் வசிக்கும் யூதர்கள் பலஸ்தீனத்தைக் காலனித்துவப் படுத்துவதற்கான ‘உரிமையை’ அங்கீகரிப்பது மற்றும் அதற்கான வலியுறுத்தலை மேற்கொள்வதற்குக் கிடைத்த வெகுமதியாகும்.
யூத மேலாதிக்கத்தை சட்டபூவமாக்குதல்
பலஸ்தீன மக்களின் வரலாற்று எதிரிகள், அந்த நாட்டுக்கான அற்புதமானதோர் அரசுக்கு அங்கீகாரம் வழங்கும் விடயத்தில், ஆக்கிரமிப்பின் கீழ் வாழும் பெரும்பான்மையான பலஸ்தீனர்களால், கடைசியாக ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சியான ஹமாஸ் இயக்கத்தை, பலஸ்தீனத்தின் எதிர்காலத்திற்கான எந்தவொரு அரசியல் சமன்பாட்டிலிருந்தும் நீக்குமாறு வலியுறுத்துகின்றனர்.
பிரிட்டிஷ் பிரதமர், “அங்கீகாரம் என்பது ஹமாஸுக்கு ஒரு வெகுமதியல்ல” என்று அழுத்தம் திருத்தமாக தெரிவித்ததோடு, “இங்கிலாந்து எதிர்வரவிருக்கும் வாரங்களில் ஹமாஸ் தலைமையின் மூத்த நபர்களுக்கெதிராக தடைவிதிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்” எனவும் உறுதியளித்தார். கனடாவின் அங்கீகாரம், ‘ஹமாஸ் இயக்கத்தின் அஸ்தமனத்தையும் அமைதியான சகவாழ்வையும் விரும்புவோருக்கு அதிகாரம் அளித்தலாகும்’ என்றார் கனேடியப் பிரதமர்.
இவர்கள் அனைவரிலும் ‘பலஸ்தீனை ஆள்வதற்கான சூத்திரத்தை’ ஆஸ்திரேலிய பிரதமர்தான் மிகத் தெளிவாக வெளியிட்டவர்! “பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் இஸ்ரேலின் இருப்புக்கான உரிமையை அங்கீகரிப்பதாக மீண்டும் கூறியுள்ளார். மேலும், ஜனநாயக ரீதியாக தேர்தல்களை நடத்துவதற்கும் நிதி, நிர்வாகம் மற்றும் கல்வியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதற்குமான உறுதிமொழிகள் உட்பட ஆஸ்திரேலியாவிற்கு நேரடியான பல உறுதிமொழிகளை அவர் வழங்கியுள்ளார்… பயங்கரவாத அமைப்பான ஹமாஸுக்கு பலஸ்தீனத்தில் எந்தப் பங்கும் இருக்கக்கூடாது.”
காசாவில் இடம்பெற்றுவரும் இஸ்ரேலின் இனப்படுகொலை நடவடிக்கைகள் தடையின்றித் தொடரும் நிலையில், இந்த வாரம் இடம்பெற்ற ‘அரசு அந்தஸ்து நாடகங்கள்’ எல்லாமே, இஸ்ரேல் ஒரு யூத மேலாதிக்க நாடாக நீடிப்பதற்கான அதன் ‘உரிமையை’ அங்கீகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த ‘ஒழுங்கை’ நிலைநிறுத்துவதில் தங்கள் பங்கிற்கு, பலஸ்தீன மக்களின் ‘அதிகாரபூர்வ பிரதிநிதிகளாக’ அப்பாஸின் பலஸ்தீன அதிகாரசபை ஒத்தோடிகள் அர்ப்பணிப்போடு இருக்கின்றனர்.
1920களில் ஆங்கிலேயர்கள் தொடங்கி வைத்த ஒரு பேரவலம் ஒரு நூற்றாண்டையும் கடந்து, அதற்கே உரித்தான மாற்றங்களோடு 2020களிலும் நீடித்தவாறே உள்ளது.
ஜோசப் மசாத், (Joseph Massad) நியூயோர்க் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் நவீன அரபு அரசியல் மற்றும் அறிவுசார் வரலாற்றுப் பேராசிரியராக பணிபுரிகிறார். கல்வியாளரான அவர், அவர் பல புத்தகங்கள் மற்றும் அறிவியல் மற்றும் பத்திரிகைக் கட்டுரைகளை எழுதியுள்ளார். அவரது புத்தகங்களில், Colonial Effects: The Making of National Identity in Jordan; Desiring Arabs; The Persistence of the Palestinian Question: Essays on Zionism and the Palestinians மற்றும் சமீபத்தில் வெளிவந்த Islam in Liberalism ஆகியன குறிப்பிடத்தக்கவை. அவரது ஆக்கங்கள் டசின் கணக்கான மொழிகளில் பிரசுரம் ஆகின்றன.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் Middle East Eye இணையதளத்தில் Why recognising ‘Palestine’ rewards Israel’s PA collaborators, not the Palestinian people என்ற தலைப்பில் , செப்டெம்பர் 25, 2025 வெளியானது.