கிறிஸ் கனீன்

ஆய்வுச் சுருக்கம்

காலனித்துவத் தர்க்கங்கள் மற்றும் அதன் அதிகார அமைப்புகளின் வழியே நவீன குற்றவியல் நீதியமைப்புக்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட்டுள்ளன என்பதையும்  குற்றவியல் நீதியமைப்புப் பகுதிகளைக் காலனிய நீக்கம் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பாகவுமே இவ்வாய்வு கவனப்படுத்த முனைகிறது. மூன்று மிக முக்கியமான பகுதிகளின் வழியே இவ்வாய்வின் பிரதான கருப்பொருள் உரையாடலுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது. முதலாவது பகுதி, காலனித்துவம் மற்றும் காலனிய அதிகார வலைப்பின்னல்களை புரிந்து கொள்வதன் முக்கியத்துவம் தொடர்பாக ஆராய்கிறது. நவீன அரசுகள் அனைத்தும் காலனிய அரசுகளாகவே அடையாளம் காணப்படுகின்றன. வால்டர் மிங்கலோவின் வார்த்தைகளில் நவீனத்துவத்தின் விளைபொருளாகக் காலனித்துவத்தை புரிந்து கொள்ள முடியும். ஆய்வின் இரண்டாவது பகுதி நவீன உலகைப் புரிந்து கொள்வதிலும் பிரதிநிதித்துவம் செய்வதிலும் அறிவாராய்ச்சியியல், அறிவுருவாக்க நடைமுறைகள், முறைமைகள், குற்றவியல் நீதி மற்றும் நடைமுறைகள் ஆகியவற்றினால் ஏகாதிபத்திய மற்றும் காலனிய அமைப்புக்களின் அதிகார வரம்புகளுக்கு அப்பால் ஏன் செயற்பட முடியாமல் போயுள்ளது என்பது தொடர்பாக ஆராய்கிறது. மூன்றாவதும் இறுதியானதுமான பகுதி, காலனிய நீக்கச் செயற்பாடுகளில் குற்றவியல் நீதி அமைப்புக்கள் வகிக்கக்கூடிய பங்கு என்ன என்பதைப் பரிசீலிக்கிறது. அதனோடு இணைந்த வகையில் சமகாலத்தில் காவல் மற்றும் தண்டனை முறைமைகளில் காலனிய நீக்க அணுகுமுறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் இந்த அத்தியாயம் விளக்குவதுடன் குற்றவியல் மற்றும் நியாயவியல் பகுதிகள் ஏற்கனவே அதிகார அமைப்புக்களின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதினால் குறித்த காலனிய நீக்க அணுகுமுறைகளைப் பிரயோகிப்பதில் உள்ள சவால்கள் தொடர்பிலும் இவ்வாய்வு கவனத்தில் கொள்கிறது.

ஆய்வு அறிமுகம்.

குற்றவியல் நீதி அமைப்பின் சட்டங்கள், கருத்தாக்கங்கள் மற்றும் நடைமுறைகள் மூலம் காலனிய அதிகாரங்கள் இன்றும் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் குறித்த அமைப்புகள் காலனியாதிக்கத்தினையும் அசமத்துவம் நிறைந்த நடைமுறைகளையும் கட்டிக் காப்பதில் எவ்வாறு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன என்பதையும் இந்த அத்தியாயம் விரிவாக ஆராய்கிறது. அத்தோடு காலனியாதிக்கத்தின் செல்வாக்கிற்கு உட்பட்ட மேற்குறித்த அமைப்புகள் தொடர்பான நமது சிந்திப்பு முறைகளையும் நமது அணுகுமுறைகளையும் பரிசீலிப்பதன் ஊடாக நமது சிந்திப்பது முறைமைகள் மற்றும் அணுகுமுறைகள் ஆகியவற்றை கேள்விக்குள்ளாக்குகிறது. அதுபோலவே நடைமுறையிலுள்ள குற்றவியல் சார்ந்த பகுதிகளால் காலனிய அதிகார வலைப்பின்னலைத் தகர்த்து விட முடியுமா? அல்லது காலனிய அதிகார வர்க்கங்கள் மற்றும் சக்திகளுக்கு அறிவார்ந்த ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பணிவிடை செய்யும் வகையில் தனது செயற்பரப்பை இன்றைய குற்றவியல் சார் பகுதிகள் உள்ளடக்கி இருக்கின்றனவா? போன்ற மிக முக்கியமான கேள்விகளையும் இப்பகுதி உரையாடலுக்கு எடுத்துக் கொள்கிறது.

குறிப்பாக 2020 காலப்பகுதியில் உலகளாவிய ரீதியில் இனவாதம், பொலிஸ் வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிராக இடம்பெற்ற போராட்டச் சூழல்களைப் பின்னணியாகக் கொண்டு அரச வன்முறைகளின் இறுதிப் புகலிடமாக உள்ள சிறைச்சாலைகள், பொலிஸ் அமைப்புக்கள் மற்றும் அதனை ஒத்த ஏனைய நிறுவன ஒழுங்குகளை கலைத்து அடுக்குவதற்கான பிரக்ஞையை ஏற்படுத்தும் வகையிலேயே இவ்வாய்வு அமைகிறது. ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இது போன்ற அமைப்பு ரீதியான வன்முறைகளுக்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. Black lives matter என்ற கோஷத்துடன் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெற்ற போராட்டங்கள் இதற்கான எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன (Kaba, 2021; Davis et al., 2022). அந்தவகையில் இந்த ஆய்வானது சிறைச்சாலைகள், பொலிஸ் அமைப்புக்கள் உள்ளிட்ட வன்முறை அமைப்புக்களை நீக்குதல் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒழிப்புவாதக் கருத்தியல் (Abolitionism) மற்றும் அதிகார அமைப்புக்களைக் கேள்விக்குள்ளாக்குதல் என்ற அடிப்படையில் அமைந்த காலனிய நீக்கச் சிந்தனை (Decoloniality) ஆகிய எண்ணக்கருக்களின் ஊடாக குறித்த ஆய்வுப் பிரச்சினையை ஆராய முனைவதோடு மேற்சொன்ன இரு கருத்தாக்கங்களும் முறையே அடிமைத்துவம், காலனியாதிக்கம் ஆகியவற்றுக்குச் சவால் விடுக்கும் வகையிலமைந்த ஒரேமாதிரியான வரலாற்றுப் பின்புலத்தில் தோன்றி வளர்ச்சியுற்றவை என்பதை இவ்வாய்வு மேலும் வலியுறுத்துகிறது. இதனூடாக இன்றுள்ள தண்டனைக் கோவைகள் மற்றும் விதிகள் போன்றன காலனியாதிக்க தர்க்கங்களான காலனியாதிக்கவாதிகள் எதிர் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டவர் என்ற இருமைகளின் நீட்சியாகவே தொழிற்பட்டு வருகின்றன. வால்டர் மிங்கலோ (2011, p. 16) கூறுவது போல காலனித்துவம் என்பது வெறுமனே கடந்த காலத்தின் நினைவுச் சேகரங்களாக மாத்திரம் இருப்பதில்லை; மாறாக அது இன்றைக்குள்ள ஒட்டுமொத்த மேற்கத்திய நாகரிகத்தினை வடிவமைத்துள்ள அடிப்படைத் தர்க்கமாக உள்ளதுடன், காலனித்துவத்திற்கு ஆட்பட்ட சமூகங்களை உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் ஏகாதிபத்திய சக்திகளின் நிழலில் மீள் வடிவமைப்பதிலும் காலனித்தும் வெற்றி கண்டுள்ளது.  அதாவது இன்றுள்ள தண்டனைக் கோவைகள் மற்றும் விதிகளின் வரலாற்று அனுபவமானது, காலனித்துவக் காலப்பகுதியில் சமத்துவமின்மையை இயல்பாக்கம் செய்வதற்கும் அதனை நியாயப்படுத்தவும் கண்டுபிடிக்கப்பட்ட ‘இனம் (Race)’ என்ற காலனியக் கட்டுமானத்துடன் நெருக்கமான தொடர்புடையது (Quijano, 2000, p. 533). இதற்கப்பால் இனம் என்ற காலனியக் கட்டுமானமானது தொழிலாளர்களின் உழைப்பினைச் சுரண்டி பெரும் உலகளாவியப் பொருளாதார அமைப்பினை நிறுவிக் கொள்வதற்கான ஒரு அளவீடாகவும் காலனியம் இனங்கண்டு கொண்டது (Quijano, 2000, pp. 535–536). அடிமைத்தனமும் கட்டாய உழைப்பும் பெருமளவு மூலதனத்தைத் திரட்டிக் கொண்டமைந்த குறித்த உலகப் பொருளாதார வலைப்பின்னலுக்கான ஆதார அடிப்படைகளாக அமைந்ததுடன் காலனிகளில் வாழ்ந்த உள்ளூர் சுதேச மக்களுக்கு தங்கள் நிலத்தை இழப்பதென்பதை அவர்களது தலைவிதியாகவும் குடியேற்றக் காலனியம் நிர்ணயித்தது (Wolfe, 2006, p. 388).

மேற்குறித்த விடயதானங்களை ஆராயும் வகையில் மூன்று விரிவான கருத்தாக்கங்களின் பின்னணியில் இவ்வாய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதில் முதலாவது கருத்தாக்கமாக காலனித்துவம் மற்றும் காலனியாதிக்க நடைமுறைக்ள் தொடர்பானதாக அமைகிறது. பெரும்பாலும் நவீன தேசிய அரசுகள் காலனிய அரசுகளாகவே அடையாளப்படுத்தப்படுகின்றன. வால்டர் மிங்கலோவின் வார்த்தைகளில் (2011;  2017) நவீனத்துவத்தின் பிரதான விளைபொருளாக காலனியமும் அதன் விளைவான தேசிய அரசுக் கட்டமைப்புக்களுமே அமைகிறது. இதன் பொருள் காலனித்துவமானது காலனிகளில் வாழ்ந்த சுதேச மக்களை இன ரீதியாக பாகுபடுத்தி, அவர்கள் மத்தியில் தாழ்வுச் சிக்கலை ஏற்படுத்தும் வன்முறைகள் நிறைந்த தனது சட்ட அமைப்புக்கள் மற்றும் குற்றவியல் நீதிப்பரிபாலன அமைப்புகளின் மூலமாகவே காலனிகளில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது. காலனித்துவ ஆட்சி முடிந்த பிறகும் இதே வன்முறைகள் நிறைந்த அமைப்புகளை பின்வந்த அதிகார வர்க்கங்கள் தொடர்ந்தும் பாதுகாத்து வருகின்றதன் அடிப்படையிலேயே குற்றவியல் நீதியமைப்புக்கள் அனைத்தும் தமது காலனியத் தொடர்ச்சியினை தொடர்ந்தும் பேணி வருகின்றன. அந்தவகையில் ஆய்வின் இப்பகுதி காலனிய நீக்கம் மற்றும் பொலிஸ், சிறைச்சாலைகள் போன்ற வன்முறைகள் நிறைந்த அமைப்புகளை கலைத்துப் போடுவதில் குற்றவியல்சார் பகுதிகள் எந்தவகையான பங்களிப்பை நல்க முடியும் என்பதை சுருக்கமான பதில்களை வழங்குவதோடு நிறுத்தி விடாமல் குறித்த பகுதியை ஒரு திறந்த உரையாடலுக்கான பகுதியாக முன்வைத்து கருத்துக்கள் மற்றும் எண்ணக்கருக்களை பகுப்பாய்வதன் ஊடாக ஆராய முனைகிறது. பொலிஸ் அமைப்புகள், குற்றவியல் மற்றும் நீதிசார் அமைப்புகள் போன்ற நிறுவன ஒழுங்குகளை கட்டவிழ்க்கும் வகையில் இயங்கி வரும் காலனிய நீக்கம், பின் காலனியம், ஒழிப்புவாதக் கருத்தாக்கம் போன்ற சமகாலத்தில் எழுச்சி பெற்று பெரும் கருத்தாக்கங்கள் போன்றே ஏராளமான அறிஞர்களும், புலமைவாதிகளும் இது தொடர்பாக தமது அணுகுமுறைகளைக் கொண்டுள்ளனர். ஏஞ்சலா டேவிஸ் (Davis et al., 2022, pp. xiii–xiv) கூறுவது போல காலனிய நீக்கச் செயன்முறை அல்லது பின் காலனிய முன்னெடுப்புகள் யாவுமே ஒரே வகையான மாதிரிகளைக் கொண்டிருக்க முடியாது என்ற நடைமுறை யதார்த்தத்தை இந்தப் பகுதி வலியுறுத்த முனைவதோடு ஆதிக்கக் கருத்தியல்களை கேள்விக்குட்படுத்தும் நடைமுறையை வெகுமக்கள் தளத்தை நோக்கி நகர்த்துவது தொடர்பாகவும் இந்தப்பகுதி உரையாட முனைகிறது. காலனிய எதிர்ப்புப் போராட்டங்களின் பன்முகத்தன்மை மற்றும் ஆதிக்கக் கருத்தியல்களை சவால் செய்யும் நடைமுறைகள் தொடர்பாக க்ளென் சீன் கோல்தார்ட் விளக்கும் போது “உள்ளூர் சுதேச சமூகங்களின் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் நிலத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்த போதிலும் நிலம் என்பது அச்சமூகங்களினைப் பொறுத்தவரை வெறுமனே ஒரு பௌதீக வாழ்விடம் என்ற அமைப்பினையும் தாண்டி அவர்களது சமூக உறவுகள், சமூகப் பிரக்ஞைகள் மற்றும் ஊடாட்டங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய ஒருவர் மற்றொருவர் மீது ஆதிக்கம் செலுத்தாமல் வாழ்வதற்குமான ஒரு வெளியாகவே அவர்கள் புரிந்து கொண்டிருந்தார்கள். எனவே நிலத்திற்கான போராட்டம் என்பது வெறும் பௌதீக தரைத்தோற்றம் பற்றியதாக மட்டுமாக அமையாமல் ஒட்டுமொத்த வாழ்வியலுக்குமான போராட்டமாகவே காலனிய எதிர்பு்பு போராட்டங்களில் பெரும்பாலானவை அமைகின்றன என்று விளக்குகிறார் (Coulthard, 2014, p. 13). விரிவான அர்த்தத்தில் இதனை, காலனியாதிக்கத்திற்கு ஆட்பட்ட உள்ளூர் சுதேச மக்கள், தங்கள் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கப் போராடும்போது, அவர்கள் பெரும்பாலும் காவல்துறை மற்றும் தண்டனை அமைப்புகளிடமிருந்து வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியும். எனவே இயல்பாகவே நிலங்களுக்கான அவர்களது போராட்டங்கள் அத்தகைய பொலிஸ் மற்றும் தண்டனை அதிகார அமைப்புகளுக்கு எதிரான போராட்டங்களாகவும் மாறி விடுகின்றன. வட அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல பகுதிகளின் பொதுவான அனுபவமாக இது இருந்தது (Kakati, 2021).

மற்றுமொரு அர்த்தத்தில் காலனிய அமைப்புக்களில் நிலங்கள், வன்முறைகள் மற்றும் நிறுவன அமைப்புகள் போன்ற பௌதீக ரீதியான அம்சங்களை அறிவுருவாக்கம், நம்பிக்கைகள் மற்றும் கருத்துருவாக்கங்கள் போன்ற அறிவுத்தோற்றவியல் அம்சங்களில் இருந்து தனியே வேறு பிரிக்க முடியாதவை எனவும் புரிந்து கொள்ள முடியும். அதனாலேயே ஒரே சமயத்தில் காலனிய எதிர்ப்புப் போராட்டங்களை மேற்குறித்த பௌதீக அம்சங்களை பாதுகாத்துக் கொள்வதற்கான போராட்டங்களாகவும் அறிவுருவாக்கம், நம்பிக்கைகள், சிந்தனைகள் மற்றும் கருத்தாக்கங்களை பாதுகாப்பதற்கான போராட்டங்களாகவும் உருப்பெருகின்றன. அதாவது காலனிய அமைப்புகள் வெறுமனே நிலங்களை ஆக்கிரமிப்பதன் மூலம் அந்நிலங்களில் வாழும் மக்களை பௌதீக ரீதியாக மாத்திரமே கட்டுப்புடுத்த முனைவதில்லை. மாறாக அவை குறித்த மக்களின் ஒட்டுமொத்த சிந்தனை அமைப்புக்கள் மற்றும் கருத்தாக்க மாதிரிகளின் மீதும் தமது ஆதிக்கத்தைச் செலுத்துவதோடு இனம் போன்ற புதிய கட்டுமானங்களை நிறுவுவதன் வழியே தமது காலனியாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்தவும் முனைகின்றன. இன்றும் கூட இதன் நீட்சியாக பல்வேறு சமூக அமைப்புக்களை இனம் போன்ற கட்டுமானங்களினை அடிப்படையாகக் கொண்டு அச்சுறுத்தல்கள் மிகக் சமூகங்களாக முத்திரை குத்தி விளிம்புநிலைக்குத் தள்ளப்படுவதை அவதானிக்க முடியும்.

அவ்வாறே காலனிய நீக்கச் சிந்தனை என்பதும் வெறுமனே மேற்குறிப்பிட்ட பௌதீக ரீதியான ஆதிக்கத்திற்கு எதிரானதாக மாத்திரமல்லாமல் அறிவுத்தோற்றவியல், சிந்தனையமைப்புக்கள் போன்றவற்றின் மீதான ஆதிக்கத்திற்கு எதிரானதாகவும் அமைய வேண்டும். அத்தோடு சிறைச்சாலைகள், பொலிஸ் அமைப்புகள், தண்டனை ஒழுங்குகள் போன்ற நிறுவனங்களுக்கு எதிரானதாக மாத்திரம் காலனிய எதிர்ப்புப் போராட்டங்கள் அமைந்து விடாமல் கட்டுப்படுத்தல் என்ற அதிகார தொனியையும் தாண்டிய வகையில் குறித்த அமைப்புகளை எவ்வாறு மீள்கட்டமைக்க முடியும் என்பதாகவும் அமைய வேண்டியுள்ளது.

அரச வன்முறைகளும் அதன் மறைக்கப்பட்ட பக்கங்களும்.

நாட்டாரியல் (indigenous) குறித்த ஆராய்ச்சியாளரும் புலமையாளருமான எலீன் ரொபீன்ஸன் (2015, p. xi), தமது சட்ட ஏற்பாடுகள், கொள்கைகள் மற்றும் நிறுவன ஒழுங்குகளுக்கூடாக வெள்ளையின மேலாதிக்கம் நிறைந்த உலகு பற்றிய கற்பனைகளுடனேயே அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் பல இருந்து வருவதோடு இனம் போன்ற கட்டுமானங்களினடியாக உலகளாவிய ரீதியில் வாழும் பல்வேறு சமூகங்களை அவை ஒடுக்கி வருகின்றன என்றும் குறிப்பிடுவார். இதனாலேயே சர்வதேசளவில் இடம்பெறும் போராட்டங்கள் அனைத்தையும் வழிநடாத்திச் செல்லும் பிரதான அம்சமாக அரச வன்முறைகளுக்கு எதிரான கருத்தாக்கங்கள் அமைகின்ற அதேவேளை, பொலிஸ் உள்ளிட்ட சிறைச்சாலை அமைப்புகள் இனமயமாக்கப்பட்டு விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் குரலற்ற மக்களின் மீது அத்துமீறிய வன்முறைகளை நிகழ்த்துவது அதற்கான பிரதான காரணமாகவும் அமைந்து விடுகிறது. அவ்வாறே அரச வன்முறைகளுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் சர்வதேச அளவில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற போதிலும் குறித்த ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்கும் பொதுமக்களை கொலை செய்வதிலும் அவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதிலும் பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகள் ஈடுபடுகின்றன. மட்டுமன்றி குறித்த வன்முறைகள் அனைத்தும் நாட்டின் சட்ட மற்றும் நீதி அமைப்புக்களின் வழியே நியாயப்படுத்தப்படவும் செய்கின்றன.

இதனடிப்படையிலேயே காலனிய நீக்கச் சிந்தனைகளின் பிரதான கருத்தியல் உள்ளீடுகளாக அரச வன்முறைகளுக்கு எதிரான கருத்தாக்கங்கள் அமைகின்றன. பனான் குறிப்பிடுவது போல நவீன உலகினை காலனித்துவ சக்திகள் வன்முறைகளாலேயே வடிவமைத்து இருக்கின்றன.  பொலிஸ் பாதுகாப்பு அரண்கள் குற்றவாளிகளையும் குற்றமற்றவர்களையும் இனங்காட்டும் சின்னங்களாக மாறி இருக்கின்றன. காலனியச் சமூகங்களினைக் கட்டுப்படுத்துவதிலும் அவர்களை ஒழுங்குபடுத்துவதிலும் காலனியாதிக்க சக்திகள் கொண்டிருந்த அதே அதிகாரங்களையே இராணுவமும் பொலிஸ் அமைப்புகளும் தற்போது கொண்டுள்ளன (1967, p. 29).  மட்டுமன்றி ஏகாதிபத்திய நாடுகளின் பெருநகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு இத்தகைய அமைப்புகள் குறித்தோ அவற்றினால் நிகழ்த்தப்படும் வன்முறைகள் குறித்த போதுமானளவு பிரக்ஞைகளும் இருப்பதில்லை (Memmi, 1965,  p. 130; Cesaire, 1972). இதனாலேயே சமகாலத்தில் நடைமுறையாகும் தண்டனைச் சட்டங்கள் மற்றும் கோவைகளை காலனியத்தின் நீட்சியை உள்ளடக்கிய தண்டனைக் கோவைகள் எனக் கருத முடிகிறது.

இன்றைக்கு உலகளாவிய ரீதியில் கருப்பினத்தவர்கள், சுதேச மக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் LGBTQI குழுக்கள் என பல குழுக்கள் அரச வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து வருகின்றனர். ஜோர்ஜ் ப்ளொய்டிற்கு ஆதரவாகவும் அமெரிக்க பொலிஸ் வன்முறைக்கு எதிராகவும் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் இதில் சுட்டிக்காட்டத்தக்கவை. அதுபோலவே ஆபிரிக்கா, ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியப் பிராந்தியங்களில் சிறைச்சாலைகளில் பொலிஸாரினால் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிராகவும் ஏனைய இராணுவ மற்றும் அரச வன்முறைகளுக்கு எதிராகவும் அபிவிருத்தியடைந்த, அபிவிருத்தி அடையாத நாடுகள் என்ற பாகுபாடுகளுக்கும் அப்பால் போராடி வருகின்றனர். அவ்வாறு பல்வேறு பிரேதேசங்களில் இடம்பெறும் போராட்டங்களை அவதானிக்கும் போது பல்வேறு ஒத்த அம்சங்களை எம்மால் புரிந்து கொள்ள முடியும்.

1) பொலிஸ் காவலில் தடுத்து வைத்துக் கொலை செய்ததும், துன்புறுத்தல் நடவடிக்கைகளும் அன்றாடம் இடம்பெறும் நடவடிக்கைகளாக இயல்பாக்கமடைந்துள்ளன.

2) பொறுப்புக்கூறல் என்ற விழுமியம் தொடர்பான அரசமைப்புக்களின் நடத்தை வீழ்ச்சி

3) காலனித்துவம், அடிமைத்துவம், இனவாதம் ஆகியவற்றின் தோற்றம் குறித்த வரலாற்றுணர்வு காவல்துறை மற்றும் அதன் வன்முறைகள் குறித்த பிரக்ஞைகளுக்கான முன் நிபந்தனையாகளாகும்.

4) பெரும்பாலும் 1945களுக்கு பிறகு காலனித்துவத்திடம் இருந்து சுதந்திரத்தை அடைந்து கொண்டதாகக் கூறிக் கொள்ளும் ஆசிய, ஆபிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகள், தொடர்ந்தும் காலனிய நாடுகளால் வகுக்கப்பட்ட தண்டனைக்கோவைகள், குற்றவியல் சார் பகுதிகளையே கொண்டுள்ளன. அந்தவகையில் காலனிய நீக்கம் என்பதில் இந்நாடுகள் போதியளவு அக்கறையைக் கொண்டிருக்கவில்லை.

5) காவல்துறை மற்றும் நாடுகளில் தற்போது நடைமுறையில் உள்ள தண்டனை முறைமைகள், சமூக ஏற்றத்தாழ்வுகளை மேலும் கூர்மைப்படுத்தி விடுகின்றன. (COVID-19 தொற்றுக் காலப்பகுதியில் நைஜீரியாவில் அமுலான ஊரடங்கின் ஆரம்ப மாதங்களில் COVID-19 ஆல் கொல்லப்பட்டதை விடவும் அதிகமான மக்கள் காவல்துறையினரால் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.)

6) பல்வேறு நாடுகளும் ஜோர்ஜ் ப்ளொய்டின் கொலையை விமர்சித்த போதிலும் தமது சொந்தக் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் தங்களது நாடுகளுக்குள்ளேயே நிகழ்த்தப்படும் இதேபோன்ற கொலைகள் மற்றும் மரணங்கள் தொடர்பில் அமைதியாகவே இருக்கின்றன.

பல்வேறு நாடுகளினதும் பொதுவான அனுபவமாகவுள்ள பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகள் கொண்டுள்ள இத்தகைய பண்புகள்,  காவல் துறை குறித்த மீள் வாசிப்பை கட்டாயமான ஒன்றாக மாற்றி இருக்கிறது எனலாம். பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் பிரகாரம் காலனிய ஆட்சியானது இனவாதம் மற்றும் கடுமையான பொருளாதாரச் சுரண்டல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதென்பதால் பொறுப்புக்கூறல், அறத் தன்மை மற்றும் பொதுமக்களின் ஒப்புதல் போன்ற விழுமியங்கள் தொடர்பாக பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகளுக்கு எவ்விதமான கரிசனைகளும் இருந்ததில்லை என விளக்குகிறார்கள் (e.g. Tankebe, 2008; Killingray, 1991). இதனையே குற்றவியல்சார் பகுதி அறிஞரான தங்கபே விளக்கும் போது அரசுக் கட்டமைப்புக்களுக்காக வேலை செய்யும் பொலிஸ் உள்ளிட்ட இராணுவ அமைப்புகளை நடுநிலையான அமைப்புக்கள் என்று அழைப்பது சிக்கலானதும் மிகை எளிமையுமான புரிதல் என்று குறிப்பிடுகிறார் (2008, p. 74).

இவ்வாறு முற்றிலும் மனிதாய நீக்கமடைந்துள்ள காவல்துறையின் உருவாக்கமானது காலனியாதிக்கச் செயன்முறையின் ஒரு பகுதியாக அமைவதால் அதனை முழுமையாகக் காலனிய நீக்கம் செய்ய முடியுமா என்ற கேள்வியை பல்வேறு அறிஞர்கள் எழுப்பி வருவதோடு அவர்களில் பலர் காவல்துறை மீதான சீர்திருத்தங்கள் தொடர்பான அவநம்பிக்கையையும் கொண்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ஒழிப்புவாதக் கருத்தாக்கம் (Abolitionism) மற்றும் காலனிய நீக்கச் சிந்தனை (Decolonisation) ஆகியவற்றின் பிரயோகம் என்பது அந்தந்தச் சூழமைவுகளுக்கும் வரலாற்றுப் பின்புலங்களுக்குள்ளுமே வளர்ச்சி கண்டுள்ளன. உதாரணத்திற்கு தென்னாபிரிக்காவைப் பொறுத்தவரை ஒழிப்புவாதக் கருத்தாக்கமானது பொலிஸ் உள்ளிட்ட இராணுவ அமைப்புகளை பயன்படுத்தி இனவாதச் செயல்முறையை திணிக்கும் வகையில் தோன்றியிருந்த இன ஒதுக்கல் அரசுக்கு (apartheid) எதிரான ஒன்றாகவே பரிணமத்திருந்தது. இன்று வரையிலும் அங்குள்ள பொலிஸ் அமைப்புகளும் இராணுவ அதிகார வலைப்பின்னல்களும் வெள்ளையின மேலாதிக்கத்தைக் கொண்டு சமூக அசமத்துவத்தை பாதுகாப்பதிலும் மக்களைக் அதிகாரத்தின் பிடியில் கட்டுப்படுத்துவதிலுமே கவனம் செலுத்தி வருகின்றன. அந்தவகையில் ஆபிரிக்காவின் பெரும்பாலான ‘சுதந்திர’ நாடுகளில் உள்ள மேற்குறித்த அமைப்புகள் யாவும் காலனிய உள்ளீடுகளையே தமது பிரதான தர்க்க அடிப்படைகளாக இன்றுவரை கொண்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும் (CopsAreFlops, n.d.; McMichael, 2016). அதேநேரம் அவுஸ்திரேலியாவின் அனுபவத்தைப் பொறுத்தவரை குடியேற்றக் காலனிய எதிர்ப்பு மற்றும் ஒழிப்புவாதச் சிந்தனை ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் அமைந்திருந்ததனைக் காண முடியும். குற்றவியல், சட்ட அமைப்பு, காவல் மற்றும் தண்டனை ஒழுங்குகள் பற்றிய காலனித்துவ கருத்தாக்கங்களை அவுஸ்திரேலிய வாழ் மக்கள் சவாலுக்குட்படுத்தியதுடன் நவீன அவுஸ்திரேலிய அரசானது இனப்படுகொலை, நில அபகரிப்பு உள்ளிட்ட சட்டவிரோத அடித்தளங்களின் மீதே கட்டியெழுப்பப்பட்டுள்ளது எனவும் அவர்கள் தமது போராட்டங்களை முன்னெடுத்தனர் (Porter, 2019). அவ்வாறே  அமெரிக்காவில் அடிமைத்துவ முறைமையின் வீழ்ச்சி மற்றும் W.E.B. டூ போயிஸின் ஒழிப்புவாத ஜனநாயகக் (abolition democracy) கருத்தியல் தொடர்பான எழுத்துக்களின் ஊடாகவே ஒழிப்புவாதக் கருத்தாக்கங்கள் வேர்கொள்ளத் துவங்கின. ஒழிப்புவாத ஜனநாயகம் (abolition democracy) என்பது வெறுமனே அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டுவருவதை மட்டுமன்றி அடிமைத்தனத்தை சாத்தியமாக்கிய அமைப்புகளை அகற்றுவதன் மூலம் ஒரு நீதியான சமூகத்தை உருவாக்குவது பற்றியதாகவுமே அமைந்திருந்தது (Davis, 2005). சொல்லப்போனால் அமெரிக்காவில் ஒழிப்புவாதக் கருத்தாக்கமானது,  W.E.B. டூ போயிஸ் முதல் ப்ளெக் பென்தர் (Black Panther) கட்சி ஈறாக தற்போதைய அமைப்புக்கள் வரை காலனிய எதிர்ப்பு கருத்துக்களை தொடர்ந்தும் உள்ளடக்கியே வருகின்றன (Davis  et al., 2022).

குற்றவியல் பகுதியின் (Criminology) துறைசார் வல்லுநர்களைப் பொறுத்தவரை அவர்கள் பெரும்பாலும் நியாயமற்ற குற்றவியல் நீதி அமைப்புகளை, அதிலும் குறிப்பாக காவல் துறையை பராமரித்து அதன் வன்முறை மிக்க முகத்தை நியாயப்படுத்தவும் பெருமளவில் உதவியுள்ளனர். குற்றவியல் வல்லுநர்கள் (Criminogists) பெரும்பாலும் கவனம் செலுத்தும் கேள்விகள் சில உள்ளன. காவல்துறையை எவ்வாறு திறம்பட உருவாக்குவது, எத்தனை பொலிஸ் அல்லது இராணுவ அதிகாரிகள் தேவைப்படுகின்றனர், காவல்துறையின் செயற்றிறனை எவ்வாறு மேம்படுத்துவது, பொதுமக்கள் காவல்துறையுடன் நட்புறவு பாராட்டும் வகையில் எவ்வாறு அதனை வடிவமைப்பது போன்ற கேள்விகள் அவற்றுள் முக்கியமானவை. ஆனால் இந்த கேள்விகள் அனைத்துமே காவல்துறையின் அதிகாரம் என்பது பொதுச் சமூகத்தின் இயல்பான நிலைத்திருப்புக்கு அவசியமான அம்சம்  என்பதையே மீள வலியுறுத்துகின்றன (Anti-Security Collective, 2021, p. 2).

இவ்வாறு காவல்துறை மற்றும் சிறைச்சாலை ஒழுங்கமைப்புகளை ஆதரித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாகக் காலனிய நீக்கக் குற்றவியல் சிந்தனைகள், குறித்த ஒழுங்கமைப்புகளுக்குச் சவால் விடுத்து அவை தொடர்பான கட்டமைப்புசார் மாற்றங்களை வலியுறுத்துவதனையே தமது நோக்கமாகக் கொண்டுள்ளன.

குற்றவியலும் அதன் வெகுளித்தன்மையும்

நடைமுறையில் காலனியாதிக்கத்தின் அமைப்பு ரீதியான உள்ளீடுகள் குறித்தோ அல்லது அதன் வன்முறைகள் குறித்தோ போதியளவு புரிதல் உண்மையில் இருப்பதில்லை. விளைவாக காலனிய அமைப்பாக்கத்தின் நீட்சியாக தற்போது நடைமுறையில் உள்ள பொலிஸ் அமைப்புகள், அரசியல் ஒழுங்குகள், அறிவாய்வியல் புலங்கள் மற்றும் நீதி முறைமைகளின் அசலான பண்புகளை இனங்காண்பது கடினமாகி உள்ளது.  இதனையே அமென்டா போர்ட்டர் (2019), “பல வருடங்களுக்கும் மேலான காலனித்துவ மற்றும் ஏகாதிபத்தியத்திய அனுபவங்களுக்குப் பிறகும், சமத்துவமின்மை, இனவாதம், அடக்குமுறைகள், சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைப்புகளில் நிகழும் அநீதிகள், காவல்நிலையப் படுகொலைகள் போன்ற பாரதூரமான பிரச்சினைகள் இருந்தபோதிலும் அவை குறித்த பல ஆய்வுகள் இன்னமும் காலனித்துவத்தின் தாக்கத்தையும் அதன் நீடித்த விளைவுகளையும் விட்டு வெளியேற முயற்சிக்கவில்லை” என விளக்குகிறார்.

அத்தோடு காலனிய நீக்கம் தொடர்பான ஆய்வுகள் பெரும்பாலும் அதன் வரைவிலக்கணம் மற்றும் அதன் விளைவுகளை ஆராய்வதோடு முடிவடைந்து விடுகின்றன. இந்தப் போக்கானது காலனியம் தொடர்பான ஒரு கட்டமைப்பு சார்ந்த புரிதலை விட்டும் தூரப்படுத்தி விடுவதோடு காலனியாதிக்கத்தினை மிகை எளிமைப்படுத்தல்களுடன் புரிந்து கொள்ளும் நிலைக்கும் இட்டுச் செல்கிறது (Agozino, 2003). பொதுவாக காலனித்துவப்படுத்தப்பட்ட மக்கள் தமது காலனிய அனுபவங்களை இன்னமும் சுமந்து கொண்டே வாழ்வதோடு அவர்கள் இன்றும் அதன் விளைவுகளை அனுபவித்தே வருகிறார்கள். ஆனால் காலனியத்தை ஆதரித்தோரும் அதனால் பயனடைந்தோரும் அத்தகைய அனுபவம் தொடர்பாக பெரிதாக ஒன்றும் அலட்டிக் கொள்வதில்லை. காலனியத்தையும் அதன் நீண்டகால விளைவுகளையும் பொருட்படுத்தாமல் கடந்து செல்ல முனையும் இந்தப் போக்கானது வேண்டுமென்றே காலனிய சமூகங்களினுள் திணிக்கப்படுகிறது. இன்றைய அரசியல் சூழமைவுகள், ஊடகங்கள், கல்வியமைப்புக்கள் போன்றவற்றின் ஊடாகக் காலனித்துவத்தை நீண்ட காலத்திற்கு முன்பே முடிவடைந்த ஒன்றாகக் காட்டி, நிகழ்காலத்தில் அதன் இருப்பை இல்லாதது போல் தோன்றச் செய்வதோடு இனவாதம், அடக்குமுறைகள், சமூக அசமத்துவம் போன்றவற்றை தோற்றுவித்ததில் காலனித்துவம் ஆற்றிய பங்கிலிருந்து அதனை விடுவித்துவிடும் செயலையே அவை செய்து வருகின்றன. இதூனூடாக காலனித்துவம் என்பது மக்களின் கடந்த கால நினைவாகவே மீண்டும் மீண்டும் கட்டமைக்கப்பட்டு வருகிறது (Vimalassery et al.,2016, p.1).

உதாரணத்திற்கு அவுஸ்திரேலியாவின் குற்றவியல் துறைசார் அறிஞரான வெதர்பேர்ன் (Weatherburn), அவுஸ்திரேலிய பழங்குடிகளில் அதிகமானோர் சிறைச்சாலைகளில் இருப்பதற்கு காரணமாக அவர்கள் இயல்பாகவே கொண்டிருக்கும் குற்றமிழைக்கும் இயல்பைச் சுட்டிக் காட்டுகிறார் (Weatherburn, 2014). மட்டுமன்றி காலனியம் மற்றும் அதனால் விளைவாக நிகழ்ந்த நில அபகரிப்புக்கள் உள்ளிட்ட பொலிஸ் வன்முறைகள் ஆகியன கடந்த காலத்தின் நினைவுகளே தவிர நடைமுறையில் உள்ள குற்றவியல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் காலனியாதிக்கத்திற்கும் எவ்விதமான தொடர்பும் இல்லை எனவும் குறிப்பிடுகிறார் (2014, p. 150.) அதேநேரம் சமகால அரசமைப்பின் நிறுவன ஒழுங்குகள் இனவாதத்தை தமது பிரதான கூறுகளில் ஒன்றாகக் கொண்டுள்ளன என்ற குற்றச்சாட்டையும் அவர் மறுதலிக்கிறார். இவ்வாறு காலனியம் மற்றும் கோரமான விளைவுகள் அனைத்துமே சாதாரண உள்ளூர் மக்களின் மேல் திணிக்கப்பட்டு காலனியம் நியாயப்படுத்தப்படுவதை பரவலாக அவதானிக்க முடிகிறது. மட்டுமன்றி காலனியாதிக்க வன்முறைகளுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களின் பெறுமானங்களை மங்கச் செய்யும் பணியையும் இதுபோன்ற கதையாடல்கள் மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறு காலனியத்தை அதன் வன்முறைத் தன்மைகளில் இருந்தும் அதன் சமகால நீட்சியின் யதார்த்த நிலையில் இருந்தும் விடுவிக்க முயற்சிப்பது ஒருவகையில் காலனியாதிக்கத்திலிருந்து பயன்பெற முனைவதாகவே அமைகிறது. காலனியம், குற்றவியல் மற்றும் அதன் இனவாத அமைப்புகளை நோக்கி ஒரேவிதமானதும் இலகுவானதுமான கேள்விகளை எழுப்புவதன் வழியே சவால் மிக்க பதில்களிடம் இருந்து பாதுகாப்பு பெறவும் தமக்கான சலுகைகள், அந்தஸ்துக்கள் போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ளவுமே இவர்கள் முயற்சிக்கிறார்கள். இதனைக் கருத்தில் கொண்டுதான் காலனிய நீக்கச் சிந்தனையாளர்கள் மற்றும் ஒழிப்புவாதச் சிந்தனையாளர்கள் போன்றோர் இனவாதம், நில அபகரிப்பு,  காலனித்துவம் பற்றிய மிகை எளிமையான புரிதல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கான பிரதான காரணமாக சட்ட அமைப்புக்கள், நீதிமன்றக் கட்டமைப்புக்கள் மற்றும் பொலிஸ் நிறுவனங்கள் ஆகியவற்றினைச் சுட்டிக் காட்டுகின்றனர்(Delgado and Stefancic, 2007). இந்நிறுவன அமைப்புக்கள் சமூக அசமத்துவத்தையும் இன வன்முறைகளையும் பாதுகாத்து வருவதுடன் நடைமுறையில் அதற்கான பொது ஏற்பையும் கவனமாக உற்பத்தி செய்து விடுகின்றன.

அதுபோலவே, யதார்த்தத்தில் வித்தியாசமான சூழமைவுகளில் வைத்துப் புரிந்து கொள்ள முடியுமான ஒன்றாகவுள்ள இனம் என்ற காலனியக் கட்டுமானம் குறித்தும் அதன் வழியே இடம்பெற்று வரும் வன்முறைகள் குறித்தும் எளிமையான புரிதல்களைக் காண முடிகிறது. ஒருவகையில் இனம் குறித்த இத்தகைய பொருள்கோடல்களை உற்பத்தி செய்வதில் இன்றுள்ள குற்றவியல் மற்றும் நீதிமன்ற அமைப்புக்களுக்கு முக்கியமான பங்கிருக்கிறது. குறிப்பிட்ட ஒருசாராரை விட மற்றையவர்களை குற்றங்களுக்கு மிக நெருக்கமானவர்களாகவும் எந்நேரமும் கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்களாகவும் கட்டமைப்பதற்கு இனம் என்ற கட்டுமானத்தை இன்றுள்ள பொலிஸ் அமைப்புகள், நீதிமன்றங்கள் உள்ளிட்ட குற்றவியல் சார்ந்த பகுதிகள் பயன்படுத்தி வருகின்றன. இதனையே ஃபிரான்ஸ் ஃபனான், காலனிய அமைப்புகள் தமது இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கு காலனிகளில் வாழும் மக்களை தீயவர்களாகவும், நாசகாரர்களாகவும் கட்டமைத்து வந்தது என்கின்றார் (Fanon, 1967, pp. 31–32).

இந்த செயல்முறை குறித்த ஒரு எடுத்துக்காட்டாக குற்றவியல் நீதி அமைப்புக்களில் குற்றங்களை மதிப்பீடு செய்வதற்கான நவீன அளவீட்டுக் கருவிகளின் பயன்பாட்டைக் குறிப்பிட முடியும். நடுநிலையானவையாகவும் அறிவியல் பூர்வமானவையாகவும் அவை கருதப்பட்டாலும் காலனியத்தின் வரலாற்றுத் தொடர்ச்சியாகவுள்ள இன ஒடுக்குமுறைகள், சமூக அசமத்துவம் போன்ற நிறுவன ரீதியான ஒடுக்குமுறைகளையும் வன்முறைகளையும் தனிநபர் சார்ந்தவைகளாகவும் எண்கணித மற்றும் அறிவியல் தர்க்கங்களுக்குள் நின்று தீர்த்து விட முடியுமானவைகளுமாக அவை எளிதில் முன்னிறுத்தி விடுகின்றன. விளைவாக விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகள் தனிநபர் சார்ந்த பிரச்சினைகளாகப் பார்க்கப்படும் நிலை ஏற்பட்டு விடுகிறது (Ugwudike, 2020). அதே நேரத்தில் குற்றங்களை மதிப்பீடு செய்வதற்காகப் பயன்படுத்தப்படும் குறித்த மதிப்பீட்டுக் கருவிகள், ஒரு “சாதாரண” அல்லது “நல்ல” குடிமகன் எப்படி இருப்பார் என்பது பற்றிய அனுமானங்களை வெள்ளையர், நடுத்தர வர்க்கத்தினர் என்ற ரீதியில் உற்பத்தி செய்து விடுகிறது. இவர்கள் அவர்களுக்கே உரிய குறிப்பிடத்தக்க வாழ்வியல் முறைகள், விதிமுறைகள், பொருளாதார நிலைமைகள், நிரந்தரமான தொழில் போன்றவற்றைக் கொண்டிருப்பவர்கள் (Cunneen, 2020). இவர்களின் வாழ்வியல் சட்டகங்களுக்குள் பொருந்தாத நிலையில் உள்ள ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மக்கள் எப்போதும் பொதுச் சமூகத்திற்கு அச்சுறுத்தலானவர்களாகவே பார்க்கப்படுகிறார்கள். இதனை தற்போதுள்ள குற்றவியல் அமைப்புகள் உள்ளிட்ட மேற்சொன்ன அமைப்புகள் இயல்பாக்கம் செய்து வருவதோடு வெள்ளையின, மேட்டுக்குடி வர்க்க அப்பாவித்தனத்தை பாதுகாப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. அதேநேரம் குற்றவியல் மற்றும் பொலிஸ் நிறுவனங்கள் தங்களை நவீன அறிவியலின் முகமைகளாகவும் மேற்கத்தைய அறிவாய்வு முறைமைகளின் பிரதிநிதிகளாகவும் முன்வைப்பதன் ஊடாக விளிம்புநிலை மக்களின் நீண்ட கால அரச வன்முறைகள் தொடர்பிலான அனுபவங்கள் புறக்கணிக்கப்படுவதோடு அவர்களது சொந்தப் பிரச்சினைகள் தொடர்பிலான விசாரணைகளின் போது குரலற்ற நிலைக்கும் அவர்கள் தள்ளப்பட்டு விடுகிறார்கள். அதுபோலவே குற்றவியல் பகுதியானது பக்கச்சார்பற்ற, மதச்சார்பற்ற தன்மைகளைப் பெற்றிருப்பதாக பொது உளவியலில் கட்டமைக்கப்பட்டுள்ளதால் ஒடுக்குமுறையாளர்கள் தமது பொறுப்புக்கூறல் செயல்முறையில் இருந்து மிக இலகுவாக நீங்கி விடவும் முடியுமாக இருக்கிறது.

இவ்வாறு நடைமுறையில் உள்ள குற்றவியல் பகுதியானது தனது காலனிய வேர்களை வேண்டுமென்றே தவிர்க்க முனையும் போது வன்முறைகள் மற்றும் அடக்குமுறைகள் தொடர்பான அதன் கண்டறிதல்கள் அனைத்துமே தனிநபர்களை கைது செய்வதிலும் அவர்களைத் தண்டிப்பதிலுமே சென்று முடிவதாயிருக்கும். அதுமட்டுமன்றி விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளாகவுள்ள போதைப்பொருள் பாவனை, பட்டினி வாழ்வு, உளவியல் சார்ந்த பிரச்சினைகள் போன்றன அவர்களது கைகளால் அவர்கள் தேடிக்கொண்ட பிரச்சினைகளாகக் கட்டமைத்துவிட்டுக் கடந்து செல்வதற்கும் அது வழிசமைத்து விடுகிறது. விளைவாக சிறைச்சாலைகள், பொலிஸ் மற்றும் நீதி அமைப்புகள், இந்த விளிம்புநிலை மக்களை சீர்படுத்த வேண்டும் என்ற தர்க்கத்தினையே மீண்டும் வந்தடைகின்றன. இது காலனித்துவத்தின் அடிநாதமான காலனிய மக்களை நாகரீகப்படுத்தும் திட்டத்தின் அதே அசலான பிரதியாக அமைந்து விடுகிறது. மறுவாழ்வு மையங்கள், சீர்திருத்த நிலையங்கள் போன்றன சமகால உலகில் மக்களை நாகரீகப்படுத்தும் காலனியத் தர்க்கத்தினையே மீளுருவாக்கம் செய்து வருகின்றன. பெரும் சமூகத் தீமைகளையும் அநீதிகளையும் தனிநபர் சார்ந்த சிக்கலாக முன்வைத்து அவர்களைத் திருத்தி விடுவதால் பிரச்சினைகள் ஒழிந்து விடும் என்பதே குறித்த அமைப்புகளின் எண்ணமாக அமைகிறது. நில அபகரிப்பு, சமூக அசமத்துவம், கட்டாய உழைப்பு போன்ற சமூகப் பிரச்சினைகளுக்கும் குற்றச் செயல்களுக்கும் தொடர்பு இருப்பதாகப் புலமைத்துவ வட்டாரங்கள் கருதினாலும்  கூட அதற்கு பின்னால் உள்ள காலனிய அமைப்பின் தர்க்க நீட்சியை அவர்கள் புறந்தள்ளி விடுகிறார்கள். இதனால் காலனிய அமைப்புகள் நிர்மாணித்த நிறுவன அமைப்புகள் தமது இனவாத மற்றும் வன்முறைத் தன்மைகளை தொடர்ந்தும் பேணி வர வாய்ப்பாக அமைந்து விடுவதுடன் சமூகளவிலான அசமத்துவம், ஒடுக்குமுறைகள் போன்றவற்றின் இருப்பும் துரதிர்ஷ்டவசமாக தக்க வைக்கப்படுகிறது.

அறிவாய்வின் மீதான காலனிய நீக்கம்

மேற்சொன்ன வகையில் குற்றவியல், நீதி அமைப்புகள் போன்றன தமது காலனியத் தொடர்ச்சியை இன்று வரை பேணியும் பாதுகாத்தும் வருவதனால் குற்றவியல் மற்றும் தண்டனை‌ முறைமைகள் பற்றிய ஐரோப்பியமையவாத கருத்து நிலைகளில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் உள்ளது. இத்தகைய ஆதிக்கக் கருத்தாடல்கள் விளிம்புநிலை மக்களின் குரல்களையும் போராட்டங்களையும் தொடர்ந்தும் மறுதலித்தும் அடக்கியும் வருவதோடு அவர்களின் மீது வன்முறைகளையும் பிரயோகித்து வருகின்றன. இவ்வாறு விளிம்புநிலை மக்களின் மீது மௌனத்தை திணித்து அவர்களை ஒடுக்கும் செயல்முறையினை காயத்ரி சக்ரவர்த்தி போன்றோர்அறிவாதாரவியல் வன்முறை (Epistemic violence) என்று அழைக்கின்றனர். அதாவது அரச வன்முறைகளால் தொடர்தேச்சையாக ஒடுக்கப்பட்டு வரும் மக்கள்,  தமது பிரச்சினைகள் தொடர்பிலான சொந்த அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதையே அறிவாதாரவியல் வன்முறை (Epistemic Violence) என்று இவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அந்தவகையில் காலனித்துவமானது வெறுமனே நிலங்களின் மீதான ஆக்கிரமிப்பாக மாத்திரம் அமைந்து விடாமல் யாருடைய அனுபவங்களும் அறிவு முறைமைகளும் ஏற்றுக் கொள்ள முடியுமென்று தீர்மானம் எடுப்பதால், குறிப்பாக குற்றவியல் பகுதியில் யாருடைய சாட்சியங்கள், ஆதாரங்களை போன்றவற்றை எடுத்துக் கொள்வது போன்றன தொடர்பாக நிர்ணயம் செய்வதால் அறிவாய்வியல் (Epistemology) மீதான ஆக்கிரமிப்பாகவும் ஒரேநேரத்தில் அமைந்து விடுகிறது (Vimalassery et al., 2016, p. 2).

மேலே கூறியவாறு முற்றிலுமாக ஐரோப்பியமைய வாத கருத்தியல் வெளிக்குள் சிக்குண்டுள்ள குற்றவியல் உள்ளிட்ட பகுதிகளை நோக்கி கேள்விகளை எழுப்பும் போதுதான் குற்றம் என்றால் என்ன என்பது தொடர்பானதும் குற்றவாளி என்றால் யார் என்பது தொடர்பானதுமான மாற்றுப் புரிதல்களை நோக்கி எம்மால் நகர முடியும். உண்மையில் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத்  தீர்மானிப்பதில் ஒவ்வொருடைய வாழும் சூழமைவின் செல்வாக்கு தவிர்க்க முடியாதது. அதனால் குற்றம் தொடர்பான வரைவிலக்கணம் மற்றும் அதன் ஏனைய விவரணங்கள் ஒவ்வொரு சூழமைவுக்கும் வேறுபட்டு அமையக்கூடியவை. உதாரணத்திற்கு இனப்படுகொலை, நிலத் திருட்டு மற்றும் அடிமைத்தனத்தை அனுபவித்த சமூகங்களுக்கு குற்றம் என்பதும் தண்டனை என்பதும் அரசால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மக்களின் செயல்களை நிச்சயமாகக் குறிக்காது. அவர்களின் பார்வையில், குற்றங்கள் என்பது காலனித்துவ சக்திகள் மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் ஆகியவற்றினால் இழைக்கப்படும் அநீதிகளும் கொடூரங்களும் சுரண்டல்களுமே அடங்கும். இதனாலேயே காலனிய நீக்கச் சிந்தனையமைப்பானது காலனிகளின் வாழ்ந்து வரும் மக்களின் அன்றாட அனுபவங்களில் கவனம் செலுத்துவதன் மூலம் யார் குற்றவாளி? எது குற்றம்? என்பது பற்றிய ஆதிக்கக் கருத்துக்களை சவால் செய்ய முற்படுகிறது. குற்றவியல் ஆய்வுப் பகுதிகளில் குற்றவியல் தொடர்பான ஆய்வு முறைமைகளை‌ காலனிய நீக்கம் செய்ய முற்படுவதும் காலனிய நீக்க பெற்ற ஆய்வுகளுக்காக உழைப்பதும் இதனாலேயே இடம்பெற்று வருகின்றது. மட்டுமன்றி குற்றங்கள், அது தொடர்பான ஆதாரங்களின் செல்லுபடித்தன்மை, சமூகத்தினை‌ விவரிக்கப் பயன்படுத்தப்படும் கருத்தாக்கங்கள், குற்றவியல் ஆய்வு நெறிமுறைகள் போன்றன தொடர்பாக கவனம் செலுத்தி நிலவும் ஆதிக்கக் கருத்தியல்களை சவால் செய்ய முற்படுகின்றன. குறிப்பாக குற்றவியல் சார்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள், உண்மையில் யாருக்கானவை என்பது போன்ற கேள்விகளை எழுப்புவதன் வழியே சமூகங்களினை விட ஆதிக்க சக்திகளைத் திருப்தி செய்யும் வகையில் குற்றவியல் ஆய்வுப் புலங்களை இயக்கி வரும் காலனியாதிக்கத் தொடர்ச்சியை இல்லாமல் செய்வதே இதன் நோக்கமாக அமைகிறது. அதுபோலவே குற்றவியல் ஆய்வுகளை மேற்கொள்பவர்களை நடுநிலையானவர்களாகவும் பக்கச்சார்பற்றவர்களாகவும் கருதுவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பாகவும் கரிசனைகளை காலனிய நீக்கச் சிந்தனைகள் முன்வைப்பதுடன் அரச வன்முறைகள் குறித்து எவ்விதமான பொறுப்புக்கூறல்களுமின்றி சாதாரண மக்களை இன வகைப்பாட்டில் வைத்து அவர்களை குற்றப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்தும் ஆராய்கிறது. குற்றவியல் பகுதியில் அடிக்கடி முன்வைக்கப்படும் பக்கச்சார்பற்ற தன்மை குறித்து விளக்கும் போது ஃபிரான்ஸ் ஃபனான் , காலனிய சமூகங்களுக்குச் காலனிய அமைப்புக்களால் சொல்லப்படும் நடுநிலை என்பது முற்றிலும் காலனிய தர்க்கங்களுக்குள் தொழிற்படும் ஒரு தரக்கமே தவிர அது உண்மையில் விளிம்புநிலை மக்களின்பால் கரிசனைகளைக் கொண்டிருப்பதில்லை என விளக்குகிறார் (1967, p. 61).

நடைமுறையில் குற்றவியல் பகுதியானது அறிவு, அறிவுருவாக்கம் குறித்த ஐரோப்பிய மதிப்பீடுகளையே பின்பற்றி வருகின்றது. இது தொடர்பான தொடர்பான ஆய்வுப் பகுதிகளில் ஒரே நேரத்தில் கறுப்பின மக்கள் உள்ளிட்ட ஏனைய விளிம்புநிலை மக்கள் ஆகியோரால் ஒரே நேரத்தில் குற்றவாளிகளாகவும் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்களாகவும் இருப்பது தொடர்பான நகைமுரண் குறித்த எந்தவிதமான அவதானங்களும் இருப்பதில்லை. இதனாலேயே காலனிய நீக்கச் சிந்தனை அமைப்புகள் விளிம்புநிலை மக்களின் அனுபவங்களைத் தொகுத்துக் கொண்டு குற்றவியல் மற்றும் நீதி தொடர்பான பகுதிகளில் இடையீடு செய்து வருகின்றது. சமகாலத்தில் பழங்குடியினர், கறுப்பினத்தவர்கள் மற்றும் பிற சமூகப் பெண்களைப் பாதுகாப்பதாகக் கூறும் சில கொள்கைகள் மற்றும் கருத்தியல்கள்,  விளிம்புநிலை மக்களுக்கு உதவுவதற்குப் பதிலாக பல்லாயிரக்கணக்கில் ஆண்களையும் பெண்களையும் சிறையில் அடைக்க வழிவகுத்ததன் மூலம் நடைமுறையில் தோல்வியடைந்துள்ளன. இதனாலேயே பொலிஸ் நிலையங்கள், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகளை விரிவுபடுத்துவது பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தீர்த்துவிடும் என்ற கருத்தினை வலியுறுத்தும் பெண்ணியக் கோட்பாடுகள் குறித்து காலனிய நீக்கச் சிந்தனையாளர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். ஏஞ்சலா டேவிஸ் போன்ற அறிஞர்கள் “காலனிய நீட்சியைக் கொண்டுள்ள குற்றவியல் நீதி அமைப்புக்களை நம்பியிருப்பதானது பெரும்பாலும் விளிம்புநிலைச் சமூகங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக தீங்கினையே விளைவிப்பதாக வாதிடுகின்றனர் (Davis et al., 2022). அந்தவகையில் ஐரோப்பிய மையவாதக் கருத்துக்களிலிருந்து விலகிச் செல்வதென்பது அறிவுற்பத்தி மற்றும் அதன் நடைமுறையாக்கங்களில் உள்ள மேலாதிக்க வழிமுறைகளை சவால் செய்வதாகவே அமைகிறது. சட்டப் பகுதிகள், குற்றவியல் ஆய்வு மற்றும் புள்ளிவிவரணங்கள் ஆகியன பெரும்பாலும் இனவாத கருத்துக்களை உற்பத்தி செய்து அதனை ஆதரித்து வருவதோடு பொதுச்சமூகத்தில் விளிம்புநிலை மக்கள் தொடர்பான ஆபத்தான கருத்தாக்கங்களையும் அவை வடிவமைக்கின்றன.

காலனித்துவம், அதிகாரம், குற்றவியல், நீதி முறைமைகள் மற்றும் அறிவாய்வியல் குறித்த பாரம்பரிய அணுகுமுறைகளுக்கும் காலனிய நீக்கம் அணுகுமுறைகளுக்கும் இடையே பல்வேறு வித்தியாசங்களைக் காண முடியும். பாரம்பரிய அணுகுமுறைகள் குற்றத்தினை இழைத்தவரின் தனிப்பட்ட நடத்தைகளை மாற்றுவதிலேயே அதிக கவனம் செலுத்துவதுடன் குறித்த குற்றத்திற்கான  சமூக, வரலாற்று அல்லது காலனியப் பின்புலங்களில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக குறித்த குற்றங்கள் குற்றவாளியின் தனிப்பட்ட செயலாகவே பார்க்கப்படுகின்றன (Ward and Maruna, 2007). கோளாறுகள் நிறைந்த இத்தகைய பாரம்பரிய அணுகுமுறையானது தனிநபர்களை அவர்களின் குறைகளைக் கூறித் தண்டிப்பதில் முனைப்புக் காட்டும் அதேநேரத்தில் “குற்றம்” என்பதைச் சமகாலத்தில் வடிவமைக்கும் காரணிகளான இனவாதம், வர்க்க வேறுபாடு மற்றும் பாலினப் பாகுபாடு போன்ற அமைப்பு ரீதியான கோளாறுகளை கவனமாகப் புறக்கணித்து விடுகின்றன. அதெல்லாமல் காலனிய நீக்கச் செயன்முறைகள், குறித்த அமைப்பு ரீதியான வேறுபாடுகள் குறித்து கரிசனை செலுத்தி நீதி, சமத்துவம் போன்ற விழுமியங்களை கருத்தில் கொண்டு செயற்படுவதுடன் சமூக யதார்த்தத்தைக் கருத்தில் கொண்டு நிலைமாற்ற யோசனைகளையும் முன்வைக்கின்றன. இதனை ஆற்றுப்படுத்துதல், உபுண்டு எனும் பிறர் மீதான கரிசனை, கோளாறுகளைச் சீர் செய்தல், மீளக் கண்டடையக் கூடியதும் நிலைமாற்றம் பெற்றதுமான நீதி (healing, Ubuntu, reparation, and restorative and transformative justice) என்கின்ற பிரதான ஐந்து கருத்தாக்கங்களாக காலனிய நீக்கச் சிந்தனை முன்வைக்கிறது (Kaba, 2021).. குறிப்பிடப்பட்ட ஐந்து கருத்தாக்கங்களும் மேலோட்டமான பார்வையில் ஒரே அர்த்தத்தினைக் கொடுத்தாலும் உண்மையில் அவை ஒவ்வொன்றையும் வெவ்வேறான அணுகுமுறைகளாக அல்லது கூறுகளாகவே காலனிய நீக்கச் சிந்தனை முன்வைக்கிறது. சில அறிஞர்கள் மீளக் கண்டடையக் கூடிய மற்றும் நிலைமாற்றம் பெற்றதுமான நீதி என்ற கூறு தொடர்பான வேறுபாடுகளைச் சுட்டிக் காட்ட முயன்ற போதும் மொத்தமாக அவை அனைத்துமே குற்றவியல் பகுதியிலும் காலனியாதிக்கத்தின் வேர்கள் பதிந்துள்ள ஏனைய துறைகளிலும் முழுமையானதோர் கட்டமைப்பு மாற்றத்தையே வேண்டி நிற்கின்றன எனக் கூற முடியும். அத்தோடு இந்த ஐந்து கருத்தாக்கங்களும் குற்றச் செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகள் மற்றும் பரந்த சமூகத்தின் ஏனைய அங்கத்தினர்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டும் தனிப்பட்ட, சமூக மற்றும் வரலாற்றுப் பின்புலங்களைக் கருத்தில் கொள்வதன் மூலமும் பல்வேறு சமூகங்கள் தங்களுக்கு நேரும் தீங்குகளுக்கு முழுமையான முறையில் பதிலளிக்கவும் அவற்றுக்கு எதிராக முறையாகச் செயல்படவும் உதவுகிறது. அதுபோலவே இந்த அணுகுமுறையானது ஒருவரைக் “குற்றவாளி” என்று முத்திரை குத்தி தண்டனைகளை வழங்கிப் பெருமிதம் அடையும் வழக்கமான கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை சவாலுக்குட்படுத்துவதோடு வெறுமனே ஒருவரை தண்டித்து விடுவதென்பது உண்மையில் நிகழ்ந்த தீங்கை அல்லது குற்றத்தைச் சரிசெய்து விடாது என்பதையும் இவ்வணுகுமுறைகள் சுட்டிக் காட்டுகின்றன. மட்டுமன்றி மக்களைத் தண்டித்துக் கொண்டிருப்பதை விடவும் குற்றங்கள் நிகழ்வதற்கான நிலைமைகளை மாற்றிவிட காலனிய நீக்க அணுகுமுறைகள் முயற்சிக்கின்றன எனலாம். இனவாதம், நிறுவனமயமான வன்முறை அல்லது நில அபகரிப்பு மற்றும் உழைப்புச் சுரண்டல் போன்ற பாரிய சமூகப் பிரச்சினைகளின் ஒரு பகுதியாகவே தனிநபர் சார்ந்த குற்றங்களும் பிரச்சினைகளும் இங்கு பார்க்கப்படுகின்றன. தனி நபர் சார்ந்த அனுபவங்களை ஒரு ஒருங்கிணைந்த சூழமைவில் வைத்துப் புரிந்துகொள்வதன் வழியே வரலாறு, சமூகம் மற்றும் பொருளாதார நிலைமைகள் எவ்வாறு தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் சிக்கல் தன்மைகளையும் ஒடுக்குமுறைகளையும் தோற்றுவிக்கின்றன என்பதிலே இவ்வணுகுமுறை தமது கவனத்தைச் செலுத்துகின்றன.

ஐரோப்பிய மையவாதக் கருத்துக்களிலிருந்து விலகி காலனிய நீக்கப் புரிதலை நோக்கிச் செல்லும் போது, பொது மக்களின் கூட்டுப்பிரக்ஞை, அன்றாட நடைமுறைகள் மற்றும் வழக்காறுகள் ஆகியவற்றைப் பயில்வது முக்கியமாகிறது. உதாரணமாக பழங்குடியினர், கறுப்பினத்தவர்கள் மற்றும் ஏனைய விளிம்புநிலைச் சமூகங்கள் காலனித்துவத்தையும் அது அவர்களை எவ்வாறு வேட்டையாடுகிறது என்பதையும் வெளிப்படுத்துவதில் கலை மற்றும் ஏனைய காட்சி ஊடகங்களைப் பயன்படுத்துவதில் மிக நீண்டகால வரலாற்றைக் கொண்டுள்ளன. இந்தக் “காலனிய எதிர்ப்புக் கலைகள்” காலனிய நீக்கச் செயன்முறைகளுக்கான வாயில்களை அகலத் திறந்து விடுகின்றன (Cunneen, 2017). அதுமட்டுமன்றி காலனியாதிக்கத்தால் பாதிக்கப்பட்டு ஒடுக்குமுறைகளுக்கு ஆளான சமூக அமைப்புக்களில் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை விதைக்கும் பணியையும் அதுபோன்ற கலைகளும் படைப்புகளும் ஆற்றி வருகின்றன.

அதற்கான மூலோபாயச் செயற்பாடுகளும்.

காவல்துறை மற்றும் சிறைச்சாலை ஒழுங்குகளில் காலனிய நீக்க அணுகுமுறைகளின் அவசியம் தொடர்பில் இந்த அத்தியாயம் பரிசீலிக்க முனைவதோடு காலனித்துவம் மற்றும் அதன் விளைபொருளான இனம்சார் பிரச்சினைகளை முழுமையாகவும் வினைதிறனாகவும் கையாளத் தவறிய குற்றவியல் பகுதியின் சிக்கல்களையும் அதன் வன்முறை இயல்புகளையும் இது சுட்டிக்காட்ட முனைகிறது. உண்மையில் பழங்குடியினர், கருப்பினத்தவர்கள் மற்றும் பிற விளிம்புநிலை சமூகத்தினர் ஆகியோர், அவர்களின் நீண்ட கால காலனிய வரலாற்று அனுபவங்கள் காரணமாக குற்றம் என்றால் என்ன, தண்டிப்பதற்கான அதிகாரமும் உரிமையும் யாருக்கு உள்ளது? அரசின் அதிகாரங்களும் அதன் வரம்புகளும் யாவை என்று தொடர்ச்சியாக கேள்விகளை எழுப்பி வருவதில் ஆச்சரியமேதுமில்லை. சிறைச்சாலைகளும் குற்றவியல் நீதி அமைப்புக்களும் உண்மையில் தங்களது பாதுகாப்புக்காக உருவாக்கப்படவில்லை என்பதை அவர்கள் வெகுவாக அறிந்து இருப்பதாலேயே அத்தகைய கேள்விகளை அவர்களால் எழுப்ப முடியுமாகவிருக்கிறது. அரசு மைய நிறுவன ஏற்பாடுகளாகவுள்ள பொலிஸ், இராணுவம், சிறைச்சாலைகள் மற்றும் நீதி அமைப்புகள் போன்றன அரசமைப்புக்களால் ஒடுக்குமுறைகளுக்கு ஆளான மக்களை பாதுகாப்பதற்குப் பதிலாக அவர்களைக் கண்காணித்து மேலும் ஒடுக்குமுறைகளுக்கு உட்படுத்தும் பணியையே அவை செய்து வருகின்றன (Cunneen, 2021). இத்தகைய அமைப்புகளில் இயல்பாகவே ஊறிப்போன வன்முறைக் குணங்களைக் கருத்தில் கொண்டுதான் ஒழிப்புவாதக் கருத்தியலாளர்களும் காலனிய நீக்கச் சிந்தனையாளர்களும் திடமான எதிர்காலம் ஒன்றிற்கான முன் நிபந்தனையாக பொலிஸ் உள்ளிட்ட அரசமைப்புகளை தொடர்ச்சியாக நிராகரித்து வருகின்றனர். காலனிகளில் வாழும் மக்கள் பெரும்பாலும் நீதியமைப்புகள், நியாயமானதாகவோ அல்லது பொறுப்புக்கூறலை வலியுறுத்தும் வகையிலோ அமைந்திருக்கும் என்று நம்பிக்கை கொள்வதில்லை. ஏனெனில், பல தலைமுறைகளாக அச்சமூகங்களினுள் இயங்கிவரும் காவல்துறை, நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பிற அரசமைப்புகள் வன்முறைகளையும் அடக்குமுறைகளையுமே அவர்கள் மீது திணித்து வந்திருக்கின்றன.

அதனாலேயே காலனிய நீக்கச் சிந்தனைகள் குற்றவியல் என்றால் என்ன, அதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார், வன்முறை என்றால் என்ன, மறுவாழ்வு என்ற கருத்தாக்கம் எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது போன்ற குற்றவியல் பகுதியிலுள்ள பல அடிப்படைக் கருத்துக்களை கேள்விக்குள்ளாக்குகிறது. அதற்கு மேலதிகமாக காவல்துறை, நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் போன்ற நிறுவனங்களின் ஊடாகவும், குழந்தை நலன் மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகள் போன்ற அமைப்புகளின் மூலமாகவும் நீதி என்ற கருத்தாக்கம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதையும் காலனிய நீக்கச் சிந்தனைகள் சவால் செய்வதுடன் சமூகத்தின் மீதான அரசின் பிரத்தியேக இறைமை அதிகாரத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறது. விளிம்புநிலைச் சமூகங்களின் அறிஞர்கள் மற்றும் அச்சமூகங்களின் ஏனைய அங்கத்தினர்களின் குரல்களை கடுமையாக ஒடுக்குமுறைகளுக்கு ஆளாக்கி வருவதன் விளைவாக அண்மைக்காலங்களில் காலனிய நீக்கச் சிந்தனையமைப்புகள், குற்றவியல் பகுதியை கடுமையாக விமர்சிக்கத் துவங்கியிருப்பதுடன் பல குற்றவியல் துறைசார் வல்லுநர்கள், குற்றவியல் பகுதியானது  கொண்டுள்ள காலனித்துவத் தொடர்ச்சி தொடர்பாகவும் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக, குற்றவியல் துறையில் காலனிய நீக்க மற்றும் ஒழிப்புவாதக் தர்க்கங்களை உள்ளீடுகளாகக் கொண்ட ஆய்வு எழுத்துக்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன.

காலனிய நீக்கச் சிந்தனைகள், குற்றவியல் பகுதிகள் பற்றிய மறுபரிசீலனைக்கு வழிவகுத்துள்ளதுடன்  குற்றவியல் பகுதியின் பெரும்பாலான கருத்துக்கள் மேற்கத்திய உலகில் உருவாக்கப்பட்டவை என்பதோடு என்றும் அவை உலகளாவிய நடைமுறைக்கு பொருத்தமானதலனல்ல என்றும் விவாதித்து வருகின்றது. அத்தோடு 19 ஆம் நூற்றாண்டில் குற்றவியல் மற்றும் தண்டனைகள் குறித்த பகுதியானது காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்துடன் இணைந்தே வளர்ச்சி கண்டது என்பதையும், காவல் மற்றும் தண்டனை முறைமைகள் ஆகியன காலனித்துவ ஆட்சியின் மையக் கருவிகளாக இருந்தன என்பதையும் காலனிய நீக்க அணுகுமுறைகள் எடுத்துக் காட்டுகின்றன.

புலமைத்துவ வட்டாரங்களுக்கு வெளியிலும் காலனிய நீக்கம் தொடர்பானதும் ஒழிப்புவாதக் கருத்தாக்கம் தொடர்பானதுமான உரையாடல்களை பொதுவெளியில் காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக 2020ம்  ஆண்டுகளுக்கு பிறகு பொலிஸ் உள்ளிட்ட நீதியமைப்புகளுக்கு எதிராக எழுச்சி பெற்றுவரும் போராட்டங்கள் இதனை எடுத்துக் காட்டுகின்றன. உதாரணத்திற்கு அமெரிக்காவின் பல நகரங்கள் தமது வருடாந்த வரவுசெலவுத் திட்டங்களில் காவல்துறைக்கான நிதி ஒதுக்கீட்டை குறைக்கத் துவங்கியுள்ளதோடு ஒழிப்புவாதக் கருத்துக்களின் ஒரு பகுதியாக பொலிஸ் மற்றும் இராணுவ அமைப்புகளுக்கும் அப்பாற்பட்ட சமூகக் கட்டுப்பாடு மற்றும் சமூகங்களை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பான பகுதிகளில் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளன. காவல்தாறை மற்றும் சிறைச்சாலை அமைப்புக்களின் அதிகாரத்திற்கு எதிராக 2020 இல் இடம்பெற்ற போராட்டங்களின் எதிரொலியாக இடம்பெற்று வரும் இத்தகைய நடவடிக்கைகள், சமகால உலக ஒழுங்கினுள் செயற்பட்டு வரும் நீதியமைப்புகளுக்கான புதியதும் சிறந்ததுமான மாற்றுகளை உருவாக்க முயற்சித்து வருகின்றன. காலனிய நீக்கச் செயன்முறை குறித்து விளக்கும் வால்டர் மிங்கலோ, அரசமைப்பைத் தாண்டிய வகையில் செயற்பட முடியுமாகவுள்ள சமூகத்தை நிர்வகிக்கும் வழிகளைக் கண்டடைவதே அதன் முதல் படியாக அமையும் என்று வாதிடுகிறார். அதிகாரத்தையும் நிர்வாகத்தையும் ஒழுங்கமைக்கவும் அனுபவிக்கவும் அரசு மட்டுமே ஏக வழி என்று நாம் நினைக்கக்கூடாது என வலியுறுத்தும் அவர், அதற்கு பதிலாக பல்வேறு சமூகங்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான நிர்வாக அமைப்புக்களை நாம் கண்டடைய வேண்டியுள்ளது எனவும் விளக்குகிறார்(2017, p. 15).

மிங்கலோ கூறுவது போல மாற்று அதிகாரக் கட்டமைப்புக்களை நோக்கமாகக் கொண்டு சமூக அமைப்பின் ஒட்டுமொத்த இருப்பை நிலைநாட்டுவதற்கான முயற்சிகளும் சமூக அமைப்பின் மீது பொலிஸ், இராணுவ அமைப்புகளால் நிகழ்த்தப்படும் வன்முறைகளுக்கு எதிரான போராட்டங்களும் தொடர்ச்சியாக இடம்பெற்றுக் கொண்டே வருகின்றன. 1960களின் பிற்பகுதியிலும் 1970களின் முற்பகுதியிலும் ப்ளெக் பெந்தர் கட்சி (Black panther) மற்றும் அமெரிக்கன் இந்திய இயக்கம் (American Indian movement) போன்ற குழுக்கள் தங்கள் சமூகங்களை பொலிஸ் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பதற்காக வேண்டி பல்வேறு திட்டங்களை உருவாக்கின. இந்த இயக்கங்கள் தங்கள் போராட்டத்தை காலனித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரானவையாக பிரகடனம் செய்ததுடன் நாடளாவிய ரீதியில் பரந்தளவிலான செயற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தன. அதுமட்டுமன்றி இந்த இயக்கங்கள் தங்கள் சமூகங்களைப் பாதுகாப்பதிலும் ஆதரிப்பதிலும் தொடர்ச்சியாக கவனம் செலுத்தி வந்ததுடன் கறுப்பின, பழங்குடி மற்றும் ஏனைய ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்காக வேண்டி பல்வேறு திட்டங்களையும் வகுத்தன. கல்வி, இருப்பிட ஆதரவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் சட்ட ஆலோசனை போன்ற அத்தியாவசியமான பணிகளை அவர்கள் மேற்கொண்டு வந்தார்கள். இன்று, அமெரிக்காவில் உள்ள கறுப்பின விடுதலை அமைப்புக்கள் (Black lives matter) மற்றும் இன்னபிற அதிகார ஒழிப்புவாத குழுக்கள் போன்றன காவல் மற்றும் சிறைச்சாலை அமைப்புகள் குறித்து மாற்று சிந்தனைகளை விவாதிப்பதன் வழியே அந்தப் அமைப்புக்களின்  பணியைத் தொடர்ச்சியாக செய்து வருகின்றன எனலாம். குறிப்பிட்டுச் சொல்வதாயின் வீட்டு வன்முறைகள், துப்பாக்கிமுனை வன்முறைகள், வீடற்றவர்களை சமூக அச்சுறுத்தலாக பார்த்தல், உள்ளூர் தகராறுகள் மற்றும் உளவியல்சார் நெருக்கடிகள் போன்ற பிரச்சினைகளை காவல்துறையின் மீது தங்கியிருக்காமல் கையாள முடியுமான வகையில் பல்வேறு சமூகத் திட்டங்களை  இந்த அமைப்புக்கள் முன்வைத்து வருகின்றன (Agbebiyi et al., 2021; Kim et al., 2021; Human Rights Watch, 2020; Vitale, 2017). இங்கே குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில் இந்தத் தீர்வுகளும் முன்வைப்புகளும் அமெரிக்கச் சூழமைவில் இருந்து உரையாடப்படுவதால் ஏனைய நாடுகளின் சூழமைவுக்கு இதே தீர்வுகள் பொருந்திச் செல்வது முழுமையான வகையில் சாத்தியமான ஒன்றல்ல. ஏனெனில் ஒவ்வொரு நிலத்திற்கும் அதற்கேயுரிய சொந்த வரலாற்று அனுபவங்களும் வெவ்வேறுபட்ட காலனியப் போராட்ட அனுபவங்களும் உள்ளதால் பிரச்சனைகளுக்கான தீர்வுகளின் சர்வதேசத் தன்மை குறித்து ஒரு நிச்சயமான கருத்தைக் குறிப்பிட முடியாது  (e.g. Agozino, 2020).

பல சமூக அமைப்புகள், பொலிஸ் அமைப்புகளுக்கான மாற்று அமைப்புக்கள் குறித்து சிந்தித்து தங்களுக்குள் சுயாதீனமான குழுக்களையும் , சமூக நேயமான ஒழுங்கமைப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்றன. உதாரணத்திற்கு அரச வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் பொலிஸ் ஏற்பாடுகளை சவாலுக்கு உட்படுத்தும் ரோந்து அமைப்புக்களை அவுஸ்திரேலிய சமூகங்களில் கொண்டுகொள்ள முடியும். தாம் சார்ந்த சமூக அமைப்பின் சுயாதீனத்தன்மையை பேணும் வகையில் குறித்த ரோந்து ஒழுங்கமைப்புக்களீ இயங்கி வருகின்றன. குறித்த ரோந்து அமைப்புகள் இன்றுள்ள பொலிஸ் அமைப்புகள் போன்றல்லாமல் சமூக அமைப்பைக் கையாள்வதில் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டுள்ளதனை அவதானிக்க முடியும். குறிப்பாக கடுமையான அதிகாரத்துவ மொழியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக மக்களுக்கு உதவுவதிலும் அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதிலுமே அவை கூடிய கவனம் செலுத்துகின்றன. உதாரணமாக, தென்னாப்பிரிக்காவின் ‘ஸ்வெலெதெம்பா (Zwelethemba)’ மாதிரியானது, உள்ளூர் சமாதானக் குழுக்கள் மூலம் சமூகங்களுக்கு இடையிலான பிரச்சினைகளைத் தீர்க்க அனுமதிப்பதுடன் அங்கு மக்கள் காவல்துறைக்குச் செல்வதற்குப் பதிலாக தங்களுக்குள் இடம்பெறும் தகராறுகள் பற்றி தங்களுக்குள்ளேயே பேசி, விவாதித்து தீர்த்துக் கொள்கிறார்கள் (SaferSpaces,  2022). லிப்பி போர்ட்டர் கூறுவது போல பொலிஸ் அமைப்புகள் குறித்த மாற்று முன்மாதிரிகளை அளிப்பதில் தென்னாபிரிக்காவின் ‘ஸ்வெலெதெம்பா (Zwelethemba)’ மாதிரிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை.

அரச வன்முறை மற்றும் சிறைச்சாலைகள் ஆகியவற்றை தமது பிரதான தர்க்க அடிப்படைகளாகக் கொண்ட வழக்கமான பொலிஸ் மற்றும் இராணுவ மாதிரிகள் போன்றல்லாமல் இது போன்ற அமைப்புகள் பராமரிப்பு, பரஸ்பர புரிதல் மற்றும் சமூகத் தேவைகளில் அதிக கவனம் செலுத்துவதனால் வன்முறைகளை இழிவளவாக்கி, சமூகக் கட்டுக்கோப்பையும் உறுதியையும் ஆதரிக்கும் காலனிய நீக்க மற்றும் ஒழிப்புவாதக் கருத்துக்களுடன் பெரும்பாலும் உடன்பட்டு வருவதை காண முடிகிறது. இவ்வாறு உலகெங்கிலும் பல்வேறு இயக்கங்கள் குற்றவியல் மற்றும் நீதி அமைப்புக்களை காலனிய நீக்கம் செய்யவும், காவல்துறை மற்றும் சிறைச்சாலை அமைப்புகள் குறித்த மாற்றுக்களை தேடவும் முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும் காலனியத்தோடு இறுக்கமான வேர்களைப் பதித்துள்ள இதுபோன்ற நிறுவனங்களை உண்மையிலேயே முழுமையாக சீர்திருத்தி விட முடியுமா என்பது குறித்து கடினமான கேள்விகளும் எழாமல் இல்லை. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற குடியேற்றக் காலனிய நாடுகளில் குற்றவியல் நீதிமன்றங்களை மாற்றுவதற்கென மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பூர்வீக நீதிமன்றங்களின் (Indigenous courts) உருவாக்கத்திற்கு வழிவகுத்தன. இந்நீதிமன்றங்கள் காலப்போக்கில் பூர்வீக மக்களின் போராட்டங்களாலும் அரசின் ஒருசில தலையீடுகளுடனும் வளர்ச்சி பெற்றன. அமெரிக்கா போன்ற நாடுகளில் பூர்வீக நீதிமன்றங்கள் ஓரளவு சுதந்திரத்தைக் கொண்டுள்ளன எனக் கூற முடியும். ஆனால் ஏனைய நாடுகளில் பூர்வீக நீதிமன்றங்கள் பெரும்பாலும் பல மாற்றங்களுடன் வழக்கமான அரச நீதிமன்றங்களாகவே தொழிற்பட்டு வருவதோடு பூர்வீக மக்கள், குறித்த நீதிமன்றங்களில் வெறும் பார்வையாளர்களாக மாத்திரமே அனுமதிக்கப்படுகின்றனர். இந்தப் பூர்வீக நீதிமன்ற ஏற்பாடுகளைச் சுற்றி பல்வேறு அரசியல் விவாதங்களும் நிகழ்ந்து வருகின்றன. சிலர் இவை காலனிய நீக்கத்தை நோக்கிய நீண்ட செயன்முறைமின் ஒரு படி எனக் கருதுவதுடன் மற்றும் பலர் அவை காலனிய நீக்கம் தொடர்பான ஒரு குறியீட்டு ரீதியான மாற்றங்கள் என்று கருதுவதுடன் பூர்வீக சமூகங்களுக்கான உண்மையான சுயநிர்ணய உரிமையையோ அல்லது உண்மையான சுயாதீனத் தன்மையையோ அவற்றில் காண முடியவில்லை என்றும் அபிப்பிராயப்படுகின்றனர் (Tauri, 1998). மேற்குறித்த இந்த உரையாடல்களை அவதானிக்கும் போது காலனியத் தொடர்ச்சியைக் கொண்டுள்ள குற்றவியல் பகுதியின் மீதான சீர்திருத்தம் என்பது உண்மையில் எதைக் குறிக்கிறது? உண்மையான மாற்றம் என்பது சாத்தியமா? என்பன போன்ற காலனிய நீக்க மற்றும் ஒழிப்புவாத இயக்கங்கள் பின்பற்ற வேண்டிய அணுகுமுறைகள் தொடர்பான பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

முடிவுரை

காலனிய நீக்கம் மற்றும் ஒழிப்புவாத கருத்தாக்கங்கள் போன்றன ஆழமான அரசியல் செல்நெறிகளையும், சாத்தியமான பல்வேறு அர்த்தங்கள் மற்றும் அணுகுமுறைகளைக் கொண்டமைந்த பகுதிகளாகும். உலக சந்தையமைப்புகள், ஊழியர் படை மற்றும் வளப்பகிர்வு போன்ற சர்வதேசக் காரணிகளின் இடையீடுகளும் உள்ளூர் கலாச்சார மரபுகள் மற்றும் பண்பாட்டு வெளிகளின் தலையீட்டாலும் செல்வாக்குப் பெறும் அவை, நிகழ்கால உலகின் அதிகார வலைப்பின்னலை சவாலுக்குட்படுத்தும் பணியை ஆற்றி வருகின்றன. அந்தவகையில் தற்கால நடைமுறையில் பொதுமக்களின் நலன் காக்கும் கருவியாக முன்னிறுத்தப்படும் பொலிஸ், இராணுவம் உள்ளிட்ட ஏனைய நீதிமன்ற அமைப்புக்களை அவற்றின் காலனியத் தொடர்ச்சியில் இருந்தும் வன்முறை இயல்பில் இருந்தும் முற்றிலுமாக விடுவிக்க முடியுமா என்ற கேள்வி மிக முக்கியமான ஒன்றாகும். ஒழிப்புவாதக் கருத்தியலாளர்கள் பொலிஸ் அமைப்புகளை அடி முதல் நுனி வரை முழுமையாக தகர்ப்பது பற்றிய நம்பிக்கையைக் கொண்டுள்ளனர். ரூத் வில்சன் கூறுவது போல,  “நிகழ்கால நடைமுறை அனுபவங்களில் இருந்து த்திலிருந்து எதிர்காலம் பற்றி கற்பனை செய்வது” சிக்கலானதும் பிரச்சினைக்குரியதுமாகும். அதாவது சீர்திருத்தங்கள் குறித்தான தேர்வுகளைக் கவனமாக மேற்கொள்வது இன்றைக்கு முக்கியமானது. அந்தவகையில் எத்தகைய மாற்றங்கள் உண்மையில் பொலிஸ், இராணுவம் மற்றும் சிறைச்சாலை அமைப்புகளை முடிவுக்குக் கொண்டுவரும் என்பது தொடர்பாக கவனமாக ஆராய வேண்டியுள்ளது. குறித்த அரச அனுசரணை உள்ள அமைப்புக்களை தகர்ப்பதற்கு உதவும் சீர்திருத்தங்களுக்கும் அதே அமைப்புக்களை தொடர்ந்தும் தக்க வைத்துப் பராமரிக்கும் சீர்திருத்தங்களுக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். ஒழிப்புவாதம் அல்லது காலனிய நீக்கச் சிந்தனைகளுக்கும் சீர்திருத்தவாத சிந்தனைகளுக்கும் இடையே ஒரு முக்கிய வேறுபாடொன்று உள்ளது. சீர்திருத்தவாதக் கருத்தியலமைப்பு குற்றவியல் நீதி அமைப்பின் அமைப்புசார் மாற்றங்களுக்கு தயாராக இருப்பதில்லை. அதே நேரத்தில் காலனிய நீக்க அணுகுமுறைகள் குறித்த அமைப்புகளின் அமைப்பு ரீதியான மாற்றங்களையே வலியுறுத்தி நிற்கின்றன. மேலோட்டமான சீர்திருத்தங்கள்,  இறுதியில் குறித்த அமைப்புகளை பாதுகாப்பதிலேயே சென்று முடியும். உண்மையில் ஒழிப்புவாத கருத்தாக்கங்களும் காலனிய நீக்கச் சிந்தனைகளும் குற்றவியல் மற்றும் நீதிசார் அமைப்புக்களை சிறியதாக மாற்ற அல்லது வெகுமக்களிடம் இருந்து வெகுதூரமாக்கி வைக்கவே முயற்சிக்கின்றன. உதாரணமாக காவல்துறையினரின் கவன்த்தைச் சிதறடித்தல், காவல்துறையை நம்பியிருக்காத சமூக பாதுகாப்பு திட்டங்களை உருவாக்குதல், காவல்துறையை நிராயுதபாணியாக்குதல், சிறைச்சாலைகளில் மக்கட்தொகையைக் குறைத்தல் மற்றும் காவல்துறை, சிறைச்சாலைகள் உள்ளிட்ட அமைப்புகளுக்கு வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகளைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளைக் கூற முடியும். அந்தவகையில் காலனிய நீக்கக் கருத்தாக்கங்கள், காவல்துறை உள்ளிட்ட சிறைச்சாலை அமைப்புக்களை காலனிய நீக்கம் செய்வதற்கு வழிகாட்டுகின்றன என்ற அடிப்படையில் குறித்த நிறுவனங்களைக் முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பான  குறிக்கோள்கள் ஒன்றாக இருந்த போதிலும், அதனை அடைந்து கொள்வதற்கான வழிமுறைகளில் வேறுபாடு ஏற்படலாம் என்பது பற்றிய புரிதல் அவசியமாகும். வால்டர் மிங்கலோ போன்றவர்கள் அரசு என்ற காலனியக் கட்டுமானத்தை முற்றிலுமாக நிர்மூலமாக்கி விடுவது தொடர்பாக ஐயங்களைக் கொண்டுள்ள நிலையில் பொதுமக்கள், பொலிஸ் உள்ளிட்ட சிறைச்சாலை அமைப்புக்களை முழுமையாக அதிலிருந்து விடுதலை செய்வது தொடர்பாக எத்தகைய அபிப்ராயத்தைக் கொண்டுள்ளனர் என்பதனையும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும் (Mignolo, 2017, p. 16). எவ்வாறாயினும் மேற்குறித்த அதிகார அமைப்புகளை கலைப்பது தொடர்பான ஆர்வத்தைக் கவனத்தில் கொண்டு அதற்கான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

உசாத்துணைகள்:

Agbebiyi, K., Shepherd, K., and Sered, D. (2021) Solutions to Violence: How to Create Safety Without Policing or Prisons. New York: Common Justice.

Agozino, B. (2003) Counter-Colonial Criminology: A Critique of Imperialist Reason. London: Pluto Press.

Agozino, B. (ed.) (2020) The Routledge Handbook of Africana Criminologies.
Abingdon: Routledge.

Anti-Security Collective (2021) ‘Introduction to the Special Issue: A critical theory of police power in the twenty- first century’, Social Justice, 47(3– 4), pp. 1– 7.

Carvalho, S. de, Goyes, D. R., and Vegh Weis, V. (2021) ‘Politics and indigenous victimization: The case of Brazil’, British Journal of Criminology, 61(1), pp. 251– 271.

Centro de Investigación y Docencia Económicas (2019) Monitor del uso de la fuerza letalen América Latina: Un estudio comparativo de Brasil, Colombia, El Salvador,México y Venezuela, 2019. Aguascalientes, Mexico: Centro de Investigación y Docencia Económicas.

Cesaire, A. (1972) Discourse on Colonialism. New York: Monthly Review Press.

CopsAreFlops (n.d.) ‘Reimagining Justice in South Africa Beyond Policing’. Available
at: www.drive.goo gle.com/ file/ d/ 1krNcg saP FABq juFk QvtV KUpI jivd 8Es/ view (accessed 12 May 2022).

Coulthard, G. (2014) Red Skin White Masks. Minneapolis: University of Minnesota Press.

Cunneen, C. (2017) ‘Visual Power and Sovereignty: Indigenous Art and Colonialism’, in Brown, M. and Carrabine, E. (eds) The Routledge International Handbook of Visual Criminology. Abingdon: Routledge, pp. 376– 388.

Cunneen, C. (2020) ‘Youth justice and racialization: Comparative reflections’, Theoretical Criminology, 24(3), pp. 521– 539.

Cunneen, C. (2021) ‘A Disbelief in Colonial Penality: Settler Colonialism and Abolitionism’, in Coyle, M. and Scott, D. (eds) The Routledge International Handbook of Penal Abolitionism. London: Routledge, pp. 269– 279.

Cunneen, C. (forthcoming) Defunding the Police. Bristol: Bristol University Press.

Cunneen, C., Baldry, E., Brown, D., Brown, M. et al. (2013) Penal Culture and
Hyperincarceration: The Revival of the Prison. Aldershot: Ashgate.

Davis, A. Y. (1998) ‘Racialised Punishment and Prison Abolition’, in J. James (ed.) The Angela Y. Davis Reader. Oxford: Blackwell, pp. 96– 107.

Davis, A. Y. (2005) Abolition Democracy. New York: Seven Stories Press.

Davis, A. Y., Dent, G., Meiners, E., and Richie, B. (2022) Abolition. Feminism. Now.
Dublin: Penguin Random House.

Delgado, R. and Stefancic, J. (2007) ‘Critical race theory and criminal justice’, Humanity & Society, 31(2– 3), pp. 133– 145.

Deslandes, A., Longbottom, M., McKinnon, C., and Porter, A. (2022) ‘Women’s police stations down under: A proposal without evidence?’ Decolonization of Criminology and Justice, 4(2)

Dhillon, A. (2021) ‘India’s police stations are human rights threat, says chief justice’, The Guardian, 10 August. Available at: www.theguardian.com/world/ 2021/ aug/ 10/ india-policestations-human-rights-threat-chief-justice (accessed 11 May 2022).

Dunbar-Ortiz, R. (2014) An Indigenous Peoples’ History of the United States. Boston, MA: Beacon Press.

Emerge (2020) ‘The Abolitionist Horizon. Building a World without Police or Prisons’, 24 June. Available at: www.dsaeme rge.org/ the-abolitionist-horizon-building- a- world- without-police-or-prisons/ (accessed 11 May 2022).

Estes, N., Gilmore, R. W., and Loperena, C. (2021) ‘United in struggle’, NACLA Report on the Americas, 53(3), pp. 255– 267.

Fanon, F. (1967) The Wretched of the Earth. Harmondsworth: Penguin.

Human Rights Watch (2020) ‘A Roadmap for Re- Imagining Public Safety in the United States’, 12 August. Available at: www.hrw.org/ news/ 2020/ 08/ 12/ road map- re-imagining-public- safety- united- states (accessed 11 May 2022).

International Criminal Court (ICC) (2021) Decision on the Prosecutor’s request for authorisation of an investigation pursuant to Article 15(3) of the Statute, Situation in the Republic of the Philippines, Pre- Trial Chamber 1, 15 September 2021, No. ICC- 01/ 21.

Kaba, M. (2021) We Do this Till We Free Us. Chicago, IL: Haymarket Books.

Kakati, B. (2021) ‘Conflict and development in Northeast India. Stories from Assam’,
Transnational Institute, 16 May. Available at: www.tni.org/en/article/conflict- and-development-in-northeast-india (accessed 11 May 2022).

Killingray, D. (1991) ‘Guarding the Extended Frontier: policing the Gold Coast, 1865– 1913’, in Anderson, D. M. and Killingray, D. (eds) Policing the Empire: Government, Authority and Control— 1830– 1940. Manchester: Manchester University Press, pp. 106– 125.

Kim, M. E., Chung, M., Hassan, S., and Ritchie, A. J. (2021) ‘Defund the Police— Invest in Community Care: A Guide to Alternative Mental Health Response Crisis Responses’, Interrupting Criminalization. Available at: www.interruptingcriminalization.com/s/Crisis-Response-Guide.pdf (accessed 11 May 2022).

Maher, G. (2021) A World Without Police. New York: Verso.

McMichael, C. (2016) ‘Police wars and state repression in South Africa’, Journal of Asian and African Studies, 51(1), pp. 3– 16.

Memmi, A. (2003 [1965]) The Colonizer and the Colonized. London: Earthscan.

Mignolo, W. (2011) The Darker Side of Western Modernity. Durham, NC: Duke University Press.

Mignolo, W. (2017) ‘Interview with Walter Mignolo’, in Woons, M. and Weier, S. (eds) Critical Epistemologies of Global Politics. Bristol: E- International Relations Publishing, pp. 11– 25.

Mills, C. W. (1963 [1943]) ‘The Professional Ideology of the Social Pathologist’, in Mills, C. W. (ed.) Power, Politics and People. New York: Oxford University Press.

Moreton- Robinson, A. (2015) The White Possessive. Property, Power and Indigenous Sovereignty. Minneapolis, MN: University of Minnesota Press.

Morrison, W. (2006) Criminology, Civilisation and the New World Order.
Abingdon: Routledge- Cavendish

Murji, K. and Solomos, J. (2005) ‘Racialization in Theory and Practice’, in Murji, K. and Solomos, J. (eds) Racialization: Studies in Theory and Practice. Oxford: Oxford University Press.

Neocleous, M. (2021) ‘“Original, absolute, indefeasible”: Or, what we talk about when we talk about police power’, Social Justice, 47(3– 4), pp. 9– 32.

Neuman, S. (2021) ‘U.N. Calls For Investigation As Police in Brazil Kill At Least 24 in Rio Drug Raid’, National Public Radio, 7 May, Available at: www.npr.org/ 2021/ 05/ 07/ 994588 467/ un-calls-for-investigation-as-police-in-brazil-kill-at-least-24- in-rio-drug-rai (accessed 11May 2022).

Phillips, C., Earle, R., Parmar, A., and Smith, D. (2020), ‘Dear British criminology: Where has all the race and racism gone?’, Theoretical Criminology, 24(3), pp. 427– 446.

Porter, A. (2016) ‘Decolonizing policing: Indigenous patrols, counter- policing and safety’, Theoretical Criminology, 20(4), pp. 548– 565.

Porter, A. (2019) ‘Aboriginal sovereignty, “crime” and criminology’, Current Issues in Criminal Justice, 31(1), pp. 122– 142.

Proloux, C. (2005) ‘Blending justice: Interlegality and the incorporation of Aboriginal justice into the formal Canadian justice system’, Journal of Legal Pluralism, 37(51), pp. 79– 109.

Quijano, A. (2000) ‘Coloniality of power, Eurocentrism, and Latin America’, Nepantla: Views from South, 1(3), pp. 533– 580.

Rodriguez, D. (2019) ‘Abolition as praxis of human being: A foreword’, Harvard Law Review, 132(6), pp. 1575– 1612.

Russell- Brown, K. (2021) ‘Black lives matter in criminology? Let’s prove it’, Race and Justice, 11(3), pp. 328– 337.

Sadiki, L. and Steyn, F. (2022) ‘Decolonising the criminology curriculum in South Africa: Views and experiences of lecturers and postgraduate students’, Transformation in Higher Education, 7, pp. 1– 9. Available at: https:// doi.org/ 10.4102/ the.v7i0.150 (accessed 11 May 2022).

SaferSpaces (2022) ‘Peace Committee Model’. Available at: www.safe rspa ces.org.za/ be- inspi red/entry/ peace- commit tee- model (accessed 11 May 2022).

Saleh- Hanna, V. (2008) ‘Penal Coloniality’ in Saleh- Hanna, V. (ed.) Colonial Systems of Control: Criminal Justice in Nigeria. Ottawa: University of Ottawa Press, pp. 17– 54

Santos, B. de S. (2007) ‘Beyond abyssal thinking: From global lines to ecologies of knowledges’, Research Foundation of State University of New York, 30(1), pp. 45– 89.

Schrader, S. (2019) Badges Without Borders: How Global Counterinsurgency Transformed American Policing. Berkeley, CA: University of California Press.

Spivak, G. C. (1988) ‘Can the Subaltern Speak?’ in Nelson, C. and Grossberg, L. (eds) Marxism and the Interpretation of Culture. London: Macmillan.

Tankebe, J. (2008) ‘Colonialism, legitimation and policing in Ghana’, International Journal of Law, Crime and Justice, 36(1), pp. 67– 84.

Tauri, J. (1998) ‘Family group conferencing: A case- study of the indigenisation of New Zealand’s justice system’, Current Issues in Criminal Justice, 10(2), pp. 168– 182.

Tauri, J. (2014) ‘Settler colonialism, criminal justice and Indigenous peoples’, African Journal of Criminology and Justice Studies, 8(1), pp. 20– 37.

Tauri, J. (2017) ‘Imagining an Indigenous Criminological Future’ in Deckert, A. and Sarre, R. (eds) The Palgrave Handbook of Australian and New Zealand Criminology, Crime and Justice. London: Palgrave Macmillan, pp. 769– 783.

Ugwudike, P. (2020) ‘Digital prediction technologies in the justice system: The implications of a “race- neutral” agenda’, Theoretical Criminology, 24(3), pp. 482– 501.

Vimalassery, M., Hu Pegues, J., and Goldstein, A. (2016) ‘On colonial unknowing’, Theory andEvent, 19(4). Available at: https://muse.jhu.edu/ article/633283 (accessed 12 May 2022).

Vitale, A. (2017) The End of Policing. London: Verso

Ward, T. and Maruna, S. (2007) Rehabilitation. London: Routledge.

Weatherburn, D. (2014) Arresting Incarceration: Pathways out of Indigenous Imprisonment. Canberra: Aboriginal Studies Press.

Wolfe, P. (2006) ‘Settler colonialism and the elimination of the native’, Journal of Genocide Research, 8(4), pp. 387– 409.

பேராசிரியர் கிறிஸ் கனீன் (Professor Chris Cunneen) ஆஸ்திரேலியாவில் பழங்குடியின மக்களுக்கு எதிரான அரச வன்முறை, சட்டரீதியான புறக்கணிப்பு, காவல்துறை அமைப்பு, சிறையியல் (penology) மற்றும் சிறை நிர்வாகம், மனித உரிமைகள் போன்ற துறைகளில் முக்கியமான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். தற்போது அவர் James Cook University-யின் சட்டவியல் பீடத்தில் பேராசிரியராக பணியாற்றுகிறார்.

அவரது ஆய்வுகள் குறிப்பாக பழங்குடியின மக்களின் நீதியியல் அனுபவங்கள், குற்றவியல் நீதிமுறை அமைப்பின் கட்டமைப்பு பிரச்சினைகள், மற்றும் சமூக நீதியுடன் தொடர்புடைய அரசியல்-சட்ட பரிமாணங்களை விமர்சன ரீதியில் ஆராய்வதில் கவனம் செலுத்துகின்றன.

பேராசிரியர் கனீன் பல முக்கியமான கல்வியியல் நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் Defund the Police: An International Insurrection, Conflict Politics and Crime, Gender ‘Race’ and International Relations, மற்றும் Indigenous Criminology போன்றவை குறிப்பிடத்தக்கவை. இந்நூல்கள் குற்றவியல், அரசியல், இனவியல், மற்றும் மனித உரிமைகள் தொடர்பான உலகளாவிய விவாதங்களில் முக்கிய பங்களிப்பை வழங்குகின்றன.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்

இந்த ஆக்கம் Oxford Academic இணையதளத்தில் Decoloniality, Abolitionism, and the Disruption of Penal Power என்ற தலைப்பில், 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.