– மஹ்மூத் மம்தானி

19ம் நூற்றாண்டின் இறுதி அரைப் பகுதியில் அதாவது 1857களில் இந்தியாவில் நிகழ்ந்த சிப்பாய்க் கலகத்தைத் தொடர்ந்து, காலனிய ஆட்சியின் புதியதொரு வடிவம் சூல் கொள்ளத் துவங்குகிறது. இந்தத் துவக்கம், பிரபல சட்டத்துறைசார் வரலாற்று அறிஞரும் ஊடகவியலாளரும் காலனிய ஆட்சி அரச அலுவலருமான ஹென்றி மெயின் என்பவரின் ஊடாகவே இந்தியாவில் நிகழ்ந்தது. காலனிகளில் வாழ்ந்த சுதேசிகளுக்கு அவர்களுக்கேயுரிய வரலாறு, நாகரீகம், கலாசாரப் பண்பாட்டசைவுகள் போன்றன உள்ளன எனவும் அவற்றை மதிக்க வேண்டும் எனவும் ஹென்றி மெயின் குறிப்பிட்ட போதிலும்கூட, மேற்குலகம் மற்றும் கீழைத்தேயம் என்ற பிரிவினையை கூர்மைப்படுத்தி, காலனித்துவ ஆட்சியை வலுவாகவும் நிலையானதாகவும் மாற்றுவதே அவரது உண்மையான குறிக்கோளாக இருந்தது. மேற்குலகம், உலகின் அனைத்துப் பாகங்களுக்கும் பொருந்தக்கூடியதும் பொதுவானதுமானதொரு  நாகரீகத்தைக் கொண்டுள்ளது எனக் குறிப்பிட்ட ஹென்றி மெயின், கீழைத்தேயமானது தங்களுக்குள் ஏராளமானதும் வேறுபட்டதும் பல்வகைத் தன்மை கொண்டதுமான பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது எனவும் வலியுறுத்தியதன் வழியே மேற்கத்தியப் பண்பாடு குறித்த மேட்டிமை உணர்வை வலியுறுத்தி வந்தார். சொல்லப்போனால் இதனூடாக சுதேசிகளுக்கும் குடியேற்றவாசிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை மேலும் கூர்மைப்படுத்த இந்தக் கருத்துக்கள் அவருக்கு உதவின. அவரைப் பொறுத்தவரை, குடியேற்றவாசிகள் நவீனமானவர்கள் என்பதோடு எப்போதும் முற்போக்காகச் செயல்படும் இயல்பை அவர்களது கடந்தகால வரலாற்று அனுபவங்களினுடாகப் பெற்றுக் கொள்கிறார்கள் எனக் குறிப்பிடும் அதேவேளை சுதேசிகள் அவர்களது புவியியல்சார் மற்றும் அவர்களது சொந்த மரபுகளால் தங்களை முன்னிறுத்தி வருவதால் அவர்களால் குடியேற்றவாசிகள் போன்று முற்போக்குத் தன்மையுடன் செயல்பட முடியாதுள்ளது எனவும் குறிப்பிடுகிறார்.

1857 கலகம் நடந்த சில வருடங்களுக்குள் ஹென்றி மெயின் காலனிய அரசின் நிர்வாகக் குழுச் சட்டப்பூர்வ உறுப்பினராகப் பதவியேற்றார். இந்திய அரச சேவைக்காக அதாவது காலனிய நாடுகளின் சேவைக்காகப் பயிற்சி பெறுபவர்கள் அவரது படைப்புகளைப் படிக்க வேண்டியிருந்தது. குறிப்பாக இந்தியா, மலேயா, ஆப்பிரிக்கா மற்றும் எகிப்து போன்ற பல பிராந்தியங்களில் இருந்த பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகிகள், ஹென்றி மெயினின் கருத்துக்களாலும் அவரது ancient law (1861) என்ற புத்தகத்தாலும் வலுவாக பாதிக்கப்பட்டனர். காலனித்துவக் கொள்கைகளை வடிவமைத்துக்கொள்ள, அவர்கள் மெயினின் கோட்பாடுகளைப் பயன்படுத்தியதன் விளைவாக, காலனித்துவ ஆட்சி “பூர்வீகமான சுதேச” மக்களை முழுமையானதும் சுயாதீனமானதுமான முகமை கொண்ட தனிநபர்களாகக் கருதாமல் காலனிய ஆட்சி தலையீடு செய்து ஒழுங்குபடுத்தப்பட வேண்டியவர்களாக மீள்வரையறை செய்தது. இதனூடாக காலனித்துவப் புலமையாளர்கள் மற்றும் அதிகாரிகள் ‘கோத்திரம்’ என்ற அடையாளத்தை நிலையானதாகவும் இயற்கையாகவும் கருதியதுடன் ‘கோத்திர அமைப்பு’ என்பதற்கான அர்த்தத்தை காலனித்துவச் செயன்முறைகள் தொடர்ந்தும் தமக்கேற்ற வகையில் உற்பத்தி செய்து கொள்ளவும் துவங்கின. இச்செயற்பாடுகள் இனம் என்ற அடையாளம் தொடர்பாக மிகவும் இறுக்கமான அர்த்தங்களை உருவாக்கி அதனை அரசியல் ரீதியாக நெகிழ்வுத்தன்மையற்ற ஒன்றாகவும் மாற்றியிருந்தது.

மட்டுமன்றி 1857 கலகம், ஒரு புதிய பாணியிலான அரசாங்கம் ஒன்றுக்கான வாயில்களையும் திறந்து விட்டிருந்தது. இது முதன்முதலில் 1857 கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியாவில் உருவாக்கப்பட்டு பின்னர் பெர்லின் மாநாட்டிற்குப் பிறகான காலப்பகுதியில் ஆப்பிரிக்க பிரதேசங்களில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது. காலனித்துவ ஆட்சியாளர்கள் இந்த முறையை “மறைமுக ஆட்சி” (Indirect rule) என்று அழைத்தனர். காலனியச் சக்திகளிடம் போதியளவு பணமும் மனிதவளமும் இல்லாததால் உருவானதொரு நடைமுறை என்றும், பொதுவாழ்வில் அரசின் தலையீடுகள் குறைந்ததாகவும் இருக்கும் என்றும் அவர்கள் இது தொடர்பாகக் கூறிய போதிலும் உண்மையில் மறைமுக ஆட்சி என்ற அந்த அரசாங்க முறைமை காலனிய அரசு எதிர்கொள்ளும் கடுமையான நெருக்கடிகளின் ஒரு பிரதிபலிப்பாகவே அமைந்திருந்தது. 1857 இந்தியக் கலகத்தின் விளைவாக உருவான இந்த ஆட்சிமுறைமை 1865 இல் ஜமைக்காவில் இடம்பெற்ற மோரன்ட் விரிகுடா கிளர்ச்சியுடன் முடிவுக்கு வந்தது.

இந்த நிகழ்வுகள் அனைத்தும் சேர்ந்து காலனிய அரசுக்கு கடுமையான நெருக்கடிகளை உருவாக்கியது. காலனித்துவ ஆட்சியாளர்கள் தங்கள் நோக்கம் தொடர்பிலும் தமது ஆட்சி பற்றிய தார்மீக நியாயங்கள் தொடர்பிலும் சந்தேகிக்கத் தொடங்கினர். ரோமானியப் பேரரசால் ஈர்க்கப்பட்ட ‘உள்ளூர் சுதேசிகளை உள்ளீர்த்து தன்மயமாக்கும் திட்டம்’ கண்முன்னே தோல்வியடைந்து வருவதை கண்ட அவர்களின் காலனித்துவ சிந்தனையில் மாற்றங்கள் நிகழ்ந்தன. விளைவாக தாம் எதிர்கொள்ளும் சமூகங்களை நாகரிகப்படுத்தி அவர்களை தமக்குள் உள்ளீர்த்துக் கொள்வதற்குப் பதிலாக அவற்றினுள் நிலவிவரும்  குறித்த சமூகங்களின் கட்டமைப்புகளைப் பாதுகாப்பதிலும் அவற்றின் ஒழுங்கைப் பராமரிப்பதிலும் கவனம் செலுத்தத் துவங்கினர்.

1757 மற்றும் 1857 களுக்கிடையில், கிழக்கிந்திய கம்பெனி தெற்காசியாவின் மூன்றில் இரண்டு பங்கை நேரடியாகவோ அல்லது பிரிட்டிஷ் மேற்பார்வையின் கீழுள்ள உள்ளூர் ஆட்சியாளர்கள் மூலமாகவோ கட்டுப்படுத்தி வந்தது. 1850 ஆண்டுக் காலப்பகுதியில், பிரிட்டிஷ் ஆட்சியின் முக்கிய இரு குறிக்கோள்களாக முகலாயப் பேரரசை முடிவுக்குக் கொண்டுவருவதும் பிரிட்டிஷ் சட்டங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி இந்தியா முழுவதும் கிறிஸ்தவத்தைப் பரப்புவதுமாகவுமே இருந்தன. என்ற போதிலும் 1857 இல் வங்காளப் பகுதி இராணுவ வீரர்கள் மேற்கொண்ட கலகத்தின் விளைவாக பிரிட்டிஷின் குறித்த குறிக்கோள்கள் ஆட்டம் கண்டன. சுமார் 139,000 சிப்பாய்களில், 7,796 பேர் மட்டுமே பிரிட்டிஷ் அரசுக்கு விசுவாசமாக இருந்ததுடன் இக் கிளர்ச்சி பிரிட்டிஷ் தாராளவாதக் கருத்துக்களின் தோல்வியையும் எடுத்துக் காட்டியது. கிறிஸ்தவத்தைப் பரப்புவதில் முனைப்புக் காட்டிய மிஷனரிகளும் தமது நம்பிக்கையை இழந்து பின்வாங்கத் துவங்கினார்கள். இது தொடர்பாக கவனம் செலுத்திய ஹென்றி மெயின், ஆங்கிலேயர்கள் இந்திய மத நம்பிக்கைகள் மற்றும் சமூக பழக்கவழக்கங்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாததாலேயே இத்தகைய வீழ்சி்சி இடம்பெற்றதாக வாதித்தார். ஆங்கிலேயர்கள் இந்தியர்களின் பழைமையான சமய மற்றும்  விதிமுறைசார் நூல்களைப் படிப்பதில் அதிக கவனம் செலுத்துவதற்குப் பதிலாக, சாதாரண மக்களின் அன்றாட சமூக நடைமுறைகள், மரபுகள் மற்றும் நம்பிக்கைகள் உட்பட அவர்கள் தமது வாழ்வை உண்மையில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைக் கண்டடைவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று மெயின் வாதிட்டார். இது தொடர்பாக 1875 இல் இடம்பெற்ற விரிவுரையொன்றில் அவர் மேலும் குறிப்பிடுகின்ற போது,

 “பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ், இந்தியாவின் சில பகுதிகளில் நமது கல்வித்திட்டங்கள் தொடர்பான மக்களின் ஆர்வம் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. அங்குள்ள மக்கள் இந்தியாவில் இதற்கு முன்பு இல்லாத புதிய சிந்தனைகள், கருத்துகள் மற்றும் ரசனைகளை வளர்த்துக் கொள்ளத் தொடங்கியுள்ளனர். மத்தியகால ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களைப் போலவே இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்களும் கூட்டம் நிறைந்த இடங்களாக மாறி வருகின்றன. மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பியர்கள் செய்ததைப் போலவே, பல இந்தியர்களும் மேற்கத்திய புத்தகங்கள், அறிவியல் மற்றும் இலக்கியங்களைப் படிப்பதில் மிகுந்த உற்சாகத்தைக் காட்டி வருகின்றனர். இருப்பினும், இந்த படித்த இந்தியர்கள் பெரும்பாலும் கரையோரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் அனைத்து இந்தியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள் என்று நினைப்பது ஒரு பெரிய தவறாகும். இந்தியாவின் உள்ளூர்ப் பகுதிகளில் வாழும் சாதாரண மக்கள் இவர்களைப் போன்று ஒரே மாதிரியான கல்வி, கருத்துக்கள் அல்லது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு “உண்மையான இந்தியாவை” புரிந்து கொள்ளாத காலனியப் பணியாளர்களை எச்சரிக்கும் ஹென்றி மெயின், இந்தியர்களுக்கு பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் போன்றன வழங்கப்பட்டு விட்டால், அவர்கள் எளிதாக ஆங்கிலேயர்களைப் போல ஆகிவிடுவார்கள் என்ற மரபார்ந்த காலனிய சிந்தனையாளர்கள் நம்பியிருந்ததையும் அரசியல் அமைப்புகளை இயந்திரங்களைப் போல இங்கிலாந்திலிருந்து இந்தியாவிற்கு கொண்டு வர முடியும் என்றும், எல்லா இடங்களிலும் நன்றாக வேலை செய்யும் என்றும் அவர்கள் நினைத்திருந்ததையும் ஹென்றி மெயின் விமர்சனம் செய்திருந்தார். இதனூடாக இந்தியா மிகவும் வித்தியாசமானது என்றும் அதை அவ்வளவு எளிதில் மாற்றிவிட முடியாது என்றும் அவர் வாதிடுவதோடு இந்த வேறுபாடுகள் காரணமாக, பிரிட்டிஷ் காலனிய நிறுவன அமைப்புகளை வெறுமனே நகலெடுப்பதன் மூலமாக எமது நோக்கங்களை நாம் அடைந்து கொள்ள முடியாது எனவும் இந்தியாவை அதற்கேயுரிய வழிமுறையில் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி வந்தார்.

அதனோடு இணைந்த வகையில் மறைமுக ஆட்சி (Indirect rule) ஏன் நியாயப்படுத்தப்படுகிறது என்பதை மெயின் விளக்குகையில், இந்தியா ஒரு புதிய வகையான அறிவியலை உருவாக்க உதவ முடியும் என்றும் ஒரு தடவை குறிப்பிட்டு இருந்தார். தனது சொற்பொழிவொன்றில் ஒப்பீட்டு மொழி ஆய்வுகள் (comparative language studies) மற்றும் ஒப்பீட்டுத் தொன்மவியல் (Comparative Mythology) போன்ற துறைகளை வளர்க்க ஏற்கனவே இந்தியச் சூழல் உதவியுள்ளதாக அவர் உரையாற்றி இருந்தார். இந்தியா உலகிற்கு மற்றொரு முக்கியமான அறிவியலை வழங்கக்கூடும் என்றும், அது இவற்றை விட முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் எனவும் அவர் நம்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனாலேயே மதம், சாதி மற்றும் அன்றாட நடைமுறைகள் உட்பட உள்ளூர் இந்திய நடைமுறைகளை பிரிட்டிஷ் அறிஞர்கள் விரிவாகப் படிக்க வேண்டும் என்று மெயின் தொடர்ந்தும் வாதிட்டார். ஓரியண்டலிஸ்ட் அறிஞர்கள் ஆய்வு செய்த மிகச்சுருக்கமான மதக் கோட்பாடுகளுக்கும் (பிராமணம்) அப்பால் இருக்கும் “உண்மையான இந்தியா” பற்றிய தனது கருத்தை அவர் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்தார்.

மேற்குறிப்பிட்ட வகையில் நின்று நோக்கும் போது 20 ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற இனவியலாளர்களுக்கான ஒரு முன்னோடியாக ஹென்றி மெயினைக் கருத முடியும். குடும்ப உறவுகள் (உறவு) சமூகத்தை எவ்வாறு ஒழுங்கமைக்கின்றன, மக்களைக் கட்டுப்படுத்துவதிலும் ஒழுங்குபடுத்துவதிலும் கோத்திர அமைப்புகளின் செல்வாக்கு என்பன தொடர்பில் அவர் கவனம் செலுத்தி வந்தார். பிற்கால இனவியலாளர்களைப் போலவே, ஆரம்பகால அல்லது “பழமையான” சமூகங்களின் மிக முக்கியமான அம்சமாக கோத்திர அமைப்புக்களே உள்ளன என்றும் அவர் எழுதினார். இருப்பினும் உள்ளூர் மரபுகள் மற்றும் பண்பாட்டமைப்புகளில் ஹென்றி மெயின், அதிக கவனம் செலுத்தியதால், அவர் பூர்வீக சமூகங்களை ஒரு தனியான வகைக்குள் வைக்கத் தொடங்கினார். “நிலையான” சமூகங்களுக்கும் (இந்தியா போன்றவை) “முற்போக்கான” சமூகங்களுக்கும் (மேற்கத்திய நாடுகள் போன்றவை) இடையே ஒரு அடிப்படை வேறுபாடு இருப்பதாக வாதிட்ட அவர், மேற்கத்தேயம் அல்லாத கலாச்சாரங்கள் மூடியவை, நிலையானவை மற்றும் மாறாதவையாக இருக்கும் அதே நேரத்தில் மேற்கத்திய கலாச்சாரம் மாறும் மற்றும் எப்போதும் வளரும் தன்மை கொண்டதாகவும் வியாக்கியானம் செய்தார். இதன் காரணமாக, பூர்வீக மரபுகள் வரலாற்றை விடவும் நில அமைப்புகளோடு இறுக்கமாகப் பிணைக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. இந்தக் கண்ணோட்டத்தில், இந்தியா, பழக்கவழக்கங்களின் உயிருள்ள அருங்காட்சியகம் போலத் தோன்றியது.  அங்குள்ள மரபுகள் காலப்போக்கில் எவ்விதமான மாற்றங்களுக்கும் உட்படாமல் அப்படியே இருப்பதாகவும் இந்தியாவைப் போன்றதொரு நிலையான பண்பாட்டமைப்பும் மரபுகளும் வேறு எந்த நாட்டிலும் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் மெயின் குறிப்பிட்டார். உண்மையில் இச்சிந்தனையினூடாக, மேற்கத்திய சட்டத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டமைந்த வகையிலான தனியானதொரு சட்ட அமைப்புகளும் ஒழுங்குமுறைகளும் இந்தியாவிற்கு இருக்க வேண்டும் என்று வாதிடுவது எளிதாக இருந்ததுடன் மேற்கத்திய நாடுகளுக்குத் தேவைப்படும் நடுநிலையானதும் சுயாதீனமானதுமான சட்ட ஒழுங்கு மற்றும் உள்ளூர் கலாச்சார மரபுகளால் ஆழமாக வடிவமைக்கப்பட்ட மேற்கத்தியம் சாரா சமூகங்களுக்கான சட்ட அமைப்பு என்ற இரு வகையான சட்ட ஒழுங்குகள் உலகிற்கு அவசியம் என்ற கருத்தையும் இது பலப்படுத்தியது. 

காலனித்துவ ஆட்சியை நியாயப்படுத்தப்படுத்துவதில் ஹென்றி மெயினின் கருத்துக்கள் எவ்வாறு பங்களித்தன என்பதை கருணா மன்டேனா, தனது Alibis of Empire என்ற புத்தகத்தில் விளக்கும் போது “ஒரு நாகரிகப்படுத்தும் பணியாக காலனியாதிக்கத்தை வெளிப்படையாகப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவரது சிந்தனை காலனியாதிக்கத்தைத் தொடர்வதற்கான ஒரு தார்மீக மற்றும் அறிவுசார் அடித்தளத்தை வழங்கியது என்கிறார். அதுபோலவே காலனித்துவத்திற்கு உட்பட்ட மக்கள், காலனித்துவ ஆட்சிக்கு எவ்வாறு எதிர்வினையாற்றினார்கள் என்பதையும் மெயினின் கருத்துக்கள் பிரதிபலித்தன. வழக்கமான நேரடி ஆட்சியின் கீழ், காலனித்துவ சக்திகள் உள்ளூர் பழக்கவழக்கங்களை பின்தங்கியவை அல்லது காட்டுமிராண்டித்தனமானவை என்று கூறி அவற்றை அழிக்க முயன்றன. ஆனால் மெயினின் கண்டுபிடிப்பால் உருவான மறைமுக ஆட்சி இதிலிருந்து வித்தியாசமாக வேலை செய்தது. உள்ளூர்ப் பண்பாடுகளையும் கலாச்சாரங்களையும் அழிப்பதை விட அவற்றை அவற்றைப் பரிபாலனம் செய்து ஒழுங்குபடுத்துவதாகவும்‌ அவற்றை மீட்டுருவாக்கம் செய்வதாகவும் மறைமுக ஆட்சி அமைந்திருந்தது. அந்தவகையில் காலனித்துவ ஆட்சி பூர்வீக மரபுகளை அழித்து விடும் படலத்திலிருந்து விடுபட்டு அவற்றை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம் தொடர்ந்ததும் தன் இருப்பைத் தக்கவைத்துக் கொண்டது எனலாம்.

மறைமுக ஆட்சி ( indirect rule) எனும் இப்புதிய நிர்வாக முறைமை, காலனித்துவ ஆட்சியாளர்கள் காலனித்துவ மக்களைப் நோக்கிப் பேசும் விதத்தை மாற்றியிருந்தது. “நாகரிகம்” எதிர் “நாகரிகம் இல்லாதவர்கள்” போன்ற விலக்கு மொழியைப் பயன்படுத்தி வந்த காலனியாதிக்க அமைப்புகள், அதற்குப் பதிலாக கலாச்சார வேறுபாட்டை கருத்தில் கொண்டமைந்த ஒருவகையான உள்ளீர்ப்பு அணுகுமுறையால் அமைந்த ஒரு மொழியைப் பயன்படுத்தியது. இந்தப் புதிய மொழி பன்முகத்தன்மை மற்றும் வேறுபாடுகள் குறித்துப் பேசிய போதிலும் அதனால் காலனித்துவ தர்க்கங்களுக்குள் இருந்து வெளியேற முடியவில்லை. இந்த வேறுபாடுகளை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும் சட்டம் (Law) ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தது எனலாம். காலனித்துவ சமூகங்கள் கொண்டுள்ள பல்வகைத்தன்மையான அடையாளங்கள் மக்களிடையே பாரம்பரியமாக நிலவிய போதிலும் காலனித்துவ அமைப்புகள் அவற்றைத் தமது சட்ட ஏற்பாடுகள் மூலம் மேலிருந்து கீழாக திணிக்கவும் செய்தன. அந்தவகையில் சட்டம் (Law) என்பது தனியே சமூகத்தினைப் பாதுகாப்பதாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக மக்களையும் அவர்களது சிந்தனைகளையும் தமக்கேற்றவாறு வடிவமைக்கவும் கட்டுப்படுத்தவும் பயன்படும் ஒரு கருவியாகவும் அமைந்துவிடுகிறது. அந்தவகையில் ஹென்றி மெயின் உருவாக்க விரும்பிய அரசாங்கமானது, சட்டத்திற்கும் குறித்த சட்டத்தினுள் ஆட்படுகின்றவர்களுக்குமான உறவு குறித்து ஃபூக்கோ குறிப்பிடுவது போல அது (சட்டம்) நடத்தையை மட்டும் ஒழுங்குபடுத்துவதோடு நின்று விடாமல் காலனிய நிலங்களில் உள்ள மக்கள் தங்களையும் தமது சமூக அடையாளங்களையும் எவ்வாறு புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் வடிவமைப்பதாகவே அமைந்திருந்தது.

காலனித்துவ அமைப்பினுள் நேரடி ஆட்சி மற்றும் மறைமுக ஆட்சி ஆகிய இரண்டுமே ஒரே நேரத்தில் நிலவின. ஐரோப்பியர்களைப் போலவே காலனிகளில் உள்ள மக்களை மாற்ற முயற்சிக்கும் முயற்சிகள் ஒருபுறமும் காலனியில் நிலவும் கலாச்சார வேறுபாடுகளை நிர்வகித்து பாதுகாக்கும் முயற்சிகள் மறுபுறமும் தொடர்ந்தது. சொல்லப்போனால் நாகரிகப்படுத்தும் திட்டத்தின் மொழியில் மாற்றங்கள் ஏற்பட்டன எனலாம்.  முன்னதாக மத மாற்றத்தில் கவனம் செலுத்திய காலனியாதிக்கம், பின்னர் மதச்சார்பற்ற திட்டங்களாக மாற்றம் கண்டதுடன் கிறிஸ்த்தவத்திற்குப் பதிலாக சட்டவாட்சியின் பரவலை வலியுறுத்தியது. அதுபோலவே ஐரோப்பியர்கள் காலனியில் நடைமுறைப்படுத்திக் கொண்டிருந்த சட்ட ஒழுங்குகள், நாகரிக உலகின் தூலமான அடையாளமாக முன்வைக்கப்பட்ட போதிலும், காலனித்துவ ஆட்சியாளர்கள் காலனித்துவ சமூகங்களுக்குள் வெவ்வேறு வழக்காறுகளின் அடிப்படையில் அமைந்த சட்ட ஒழுங்குளின் இருப்பையும் ஏற்றுக்கொண்டனர். இந்தக் கலவையானது கலப்பின சட்ட அமைப்புகளையும் சட்ட பன்மைத்துவத்தையும் உருவாக்கியதுடன் அங்கு ஒன்றுக்கு மேற்பட்ட சட்டங்களும் ஒரே நேரத்தில் இயங்கின. இது அறிஞர்கள் மற்றும் காலனிய நிர்வாகிகளை சட்டமாகக் கணக்கிடப்படுவது எது? வழக்கம் என்றால் என்ன? வழக்கச் சட்டத்தை நாம் எவ்வாறு புரிந்து கொள்ள வேண்டும்? என்பன போன்ற ஒருசில அடிப்படையான கேள்விகளின் பக்கம் திருப்பி விட்டது எனலாம்.

ஐரோப்பியர்களின் நேரடி ஆட்சி முறைமையானது சுதேசிகளில் படித்தவர்களை அல்லது பூர்வீக மக்களை ஐரோப்பிய ஆட்சியையும் அதன் வழிமுறைகளையும் ஏற்றுக்கொள்ளச் செய்ததுடன் மறைமுக ஆட்சி அதிலிருந்து வேறுபட்ட வகையிலமைந்த மிகவும் பரந்த இலக்கினைக் கொண்டிருந்தது. முழுப் பூர்வீக மக்களும் தமது காலனியம் தொடர்பிலான அனுபவங்களை எவ்வாறு புரிந்துகொள்கிறார்கள் என்பதைக் கண்டடைவதிலும் அதனை மீளுருவாக்கம் செய்வதையும் நோக்கமாகக் கொண்டிருந்தது.

அதுபோலவே மறைமுக ஆட்சி (Indirect Rule) காலனித்துவத்திற்கு ஆட்பட்ட மக்களின் நிகழ்காலம், கடந்த காலம் மற்றும் எதிர்காலத்தை வெகுவாகக் கட்டுப்படுத்துவதில் ஆர்வம் செலுத்தியது . மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்ற கருவிகளினூடாக அடையாளங்களை உருவாக்கி நிகழ்காலமும் நிலவும் பூர்வீக மரபுகளின் நீட்சியாக அதனைப் பேசிக்கொண்டே ஒரு புதுவகையான வரலாற்றைக் உருவாக்குவதன் மூலம் கடந்த காலமும் மறுவடிவமைக்கப்பட்டதுடன் எதிர்காலமானது ஒரு பரந்த சட்ட மற்றும் நிர்வாக அமைப்புகள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டன.

இந்த மூன்று பகுதி செயல்முறைகளின் ஊடாக உள்ளக ரீதியான ஒடுக்குமுறைகளை உருவாக்கும் வகையிலான பாகுபாட்டமைப்பு ஒன்று வெற்றிகரமாக உருவாக்கப்பட்டது. பண்டைய பாரம்பரியங்களை அக்கறையோடு பாதுகாக்கும் படலம் போல் மறைமுக ஆட்சி தென்பட்ட போதிலும் காலனித்துவ அரசால் தமது காலனிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கான மாற்று வழிமுறையாகவே அதுவும் செயல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக, காலனிகளில் வாழ்ந்துவந்த மக்கட்தொகையானது  அரசியல் ரீதியாக பெரும்பான்மை மற்றும் சிறுபான்மையினராகப் பிரிக்கப்பட்டு நிர்வகிக்கப்படத் துவங்கினர். ஆப்பிரிக்காவில், இந்த அரசியல் சிறுபான்மையினர் “கோத்திர சமூகங்கள்” என்று முத்திரை குத்தப்பட்டனர்.

‘கோத்திரம்’ எனும் சமூக அமைப்பு இன்று நமது மனப்பதிவுகளில் உள்ளது போன்று இயற்கையாகவே இருந்து வரும் ஏற்பாடு ஒன்றல்ல. காலனித்துவச் சட்ட ஏற்பாடுகளாலும் அதன் நிர்வாக முறைமைகளாலும் நிகழ்த்தப்பட்ட முற்றிலும் புதியதொரு கண்டுபிடிப்பு அது. காலனித்துவ அரசு மக்களை சுயாதீனமான தனிநபர்களாகப் பார்ப்பதற்குப் பதிலாக என்றுமே மாறாத நிலையான குழு அடையாளங்களுக்குள் பொருந்துமாறும் அதற்கேற்ப இசைவாக்கம் அடையுமாறும் கட்டாயப்படுத்தியது. இவ்வாறு நிரந்தரமான அடையாளங்களை கட்டமைக்கும் காலனிய திட்டங்களுக்கு மக்கட்தொகை கணக்கெடுப்பு (Census) ஒரு நல்ல உதாரணம். 1857 க்குப் பிறகு இந்தியாவில் காலனியச் சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் இடம்பெற்ற மக்கட்தொகைக் கணக்கெடுப்பானது சாதி, மதம் மற்றும் கோத்திர சமூகங்கள் ஆகிய மூன்று முக்கிய அரசியல் அடையாளங்களை மக்களின் மீது திணித்தது. 1884-85 ஆம் ஆண்டுகளில் பெர்லின் மாநாட்டிற்குப் பிறகு பெரும்பாலான ஆப்பிரிக்க காலனிகளில் மக்கட்தொகை கணக்கெடுப்பினூடாக மக்களை இன ரீதியாக பாகுபடுத்தி கோத்திரச் சமூக அமைப்புகள் மற்றும் கோத்திரம் அல்லாத சமூகத்தவர்கள் என்ற இருமையையும் உண்டுபண்ணியது. காலனித்துவ அரசுகள் காலனிகளை எவ்வாறு ஆட்சி செய்தன என்பதைப் புரிந்து கொள்ள இந்தப்பிரிவினைகளினதும் அதன் பின்னணிகளையும் புரிந்து கொள்வது மிகவும் முக்கியமானது. காலனிய நிர்வாக அதிகாரிகள் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஒரு நபரின் பெயரைப் பதிவு செய்யும் போது, அந்த நபர் உள்ளூரில் வசிக்கும் ஏதேனும் ஒரு இனத்தைச் சேர்ந்தவரா அல்லது கோத்திர சமூகத்தினைச் சார்ந்தவரா என்பதை அவர்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தது.

அதுமட்டுமன்றி காலனியில் வசிக்கும் ஒருவருக்கு ஏதேனும் ஒரு அடையாளத்தை வழங்குவதற்கும் அதே காலனியில் வசிக்கும் மற்றொருவரை கோத்திரத்தவராக பிரகடனம் செய்வதற்கும் இடையில் காலனியச் சட்ட ஏற்பாடுகள் தமது பெரும் பங்கைக் கொண்டிருந்தன. அதாவது ஒரு நபர் எவ்வாறு வகைப்படுத்தப்படுகிறார் என்பதில் இருந்து அவருக்கு எந்தச் சட்டம் பொருத்தமானது என்பது தீர்மானிக்கப்பட்டது. ஏதேனும் ஒரு உத்தியோகபூர்வ இனமாக வகைப்படுத்தப்பட்ட மக்கள் சிவில் சட்டம் எனப்படும் ஒரு பொதுவான சட்டத்த்தினாலும் கோத்திர அபைப்பினர் என வகைப்படுத்தப்பட்ட மக்கள் அவர்களது வழக்கமான மரபியல்சார் சட்டங்களாலும் (customery law) ஆளப்பட்டனர். ஒவ்வொரு பழங்குடியினருக்கும் அவர்களுக்கேயுரிய தனித்தனியான  சட்டங்கள் (customery law) இருப்பதாகக் கூறப்பட்டது. பூர்வீகமான கோத்திரத்தைச் சார்ந்த மக்களை முதலில் வெவ்வேறு கோத்திரங்களின் உறுப்பினர்களாகக் காண வேண்டுமெனவும் அவர்கள் அனைவரும் அவர்களுக்கேயுரிய தனித்துவமான  சொந்த மரபுகளால் ஆளப்பட வேண்டும் எனவும் காலனித்துவ சிந்தனை கருதியது. இருப்பினும், இனங்களுக்கு இடையிலான கலாச்சார வேறுபாடுகள் (எடுத்துக்காட்டாக, ஐரோப்பியர்கள் மற்றும் ஆசியர்கள்) உண்மையில் கோத்திரத்தினருக்கு இடையிலான வேறுபாடுகளை விடவும் மிகையானது என்பதை காலனிய நிர்வாகம் உணர்ந்து கொண்டனர். வெவ்வேறு இனங்கள் பெரும்பாலும் முற்றிலும் மாறுபட்ட மொழிகளைப் பேசி வெவ்வேறு மதங்களையும் பின்பற்றியதோடு தனித்தனியான வரலாறுகளைக் கொண்ட வெவ்வேறு பகுதிகளையும் பிரதிநிதித்துவம் செய்தன. இதற்கு நேர்மாறாக, கோத்திர அமைப்பினர் பொதுவாக ஒருவருக்கொருவர் அருகில் வாழ்பவராகவும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடிய மொழிகளைப் பேசியதோடு பெரும்பாலும் தங்களுக்குள் பொதுவான வரலாறுகளையும் பகிர்ந்து கொண்டனர்.

உத்தியோகபூர்வமாக்கப்பட்ட வெவ்வேறு இனங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டிருந்தாலும், அவை அனைத்தும் ஐரோப்பிய சட்ட அமைப்பினைத் தழுவிய வகையிலான சட்ட அமைப்பாலேயே ஆளப்பட்டன. பழங்குடியினரின் நிலைமை இதிலிருந்து வேறுபட்டமைந்தது. அவர்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு வேறுபாடுகள் மிகையாக முன்னிலைப்படுத்தப்பட்டு ஒவ்வொரு கோத்திரத்தினருக்கும் அதன் சொந்த நிர்வாக மற்றும் அரசியல் அதிகாரத்துடன் இணைந்த தனித்துவமான சட்ட அமைப்பு ஒன்று வழங்கப்பட்டிருந்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் காலனித்துவ ஆட்சியானது அங்கீகாரமளிக்கப்பட்டஇனங்கள் அனைத்தும் நாகரிகச் செயன்முறையின் வெவ்வேறு கட்டங்களில் (Civilizing stage) இருந்த போதிலும் அவற்றினால் தமக்குரிய பொதுவான எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்ள முடியும் என்று கருதிய அதேவேளை கோத்திரத்தினரால் அவ்வாறான பொதுவானதொரு எதிர்காலத்தைப் பகிர்ந்து கொள்வதற்கான ஆற்றல் இல்லாதவர்களாகவும் கருதியது. இதன் நீட்சியாகவே அவர்கள் சட்ட ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் தனித்தனியாக காலனிய நிர்வாக முறைமை கையாண்டு வந்தது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட இனங்கள் மற்றும் கோத்திரத்தினர்களுக்கு என்று நடைமுறையாக இரண்டு சட்ட அமைப்புகளும் அவற்றின் செயற்பாட்டு அமைப்பில் வேறுபட்டமைந்தன. ஐரோப்பிய ஆங்கில பொதுச் சட்டங்கள், சமூக அமைப்புகள் மாற்றங்களுக்கு உட்படும் போது ஆங்கில பொதுச் சட்டங்கள் காலப்போக்கில் நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை கொண்டது எனக் கருதப்பட்டது. ஆனால் கோத்திர சமூகத்தினருக்கான காலனித்துவ வழக்காற்றுச் சட்டங்கள் அவ்வாறான நெகிழ்ச்சித் தன்மைக்கு உரித்துடையவை அல்ல என்றே காலனிய நிர்வாகம் கருதியது. பூர்வீகச் சமூகங்கள் காலத்தால் அழியாதவையாகவும் தமது நீண்டகால மரபுகளுக்குள் கட்டுண்டவையாகவும் காணப்பட்டதால் அவை நிலையானவையாகவும் மாறாத் தன்மை கொண்டதாகவும் கருதப்பட்டது. வழக்காற்றுச் சட்டங்களில் (Costumery law) ஏற்படும் எந்தவொரு மாற்றமும் சந்தேகத்துடனேயே பார்க்கப்பட்டது.

அதனோடு இணைந்த வகையில் காலனித்துவ சட்ட அமைப்புக்கள் காலனிகளில் வாழும் மக்களிடையே இரு வகையான பிரிவினைகளை உருவாக்கி குறித்த பாகுபாடுகளை சமூகத்தின் இயல்பான ஒரு பகுதியாகவும் கட்டமைத்தது. ஒருபுறம் சிவில் சட்டங்கள் இனப் பிரிவினைகளை உருவாக்கியதுடன் மறுபுறம் வழக்காற்றுச் சட்டங்கள் கோத்திரங்கள் மத்தியில் பிரிவினைகளை உருவாக்கியது. காலனியில் நடைமுறையான சிவில் சட்டங்கள் உத்தியோகபூர்வ இனங்களுக்கான உரிமைகளை “நாகரிகம்” என்ற கருத்துக்களுடன் இணைத்ததுடன் இனங்கள் மத்தியில் செயற்கையானதொரு படிநிலைக் கட்டமைப்பையும் உருவாக்கியது. அதுபோலவே வழக்காற்றுச் சட்டங்கள், பூர்வீக மற்றும் பூர்வீகமற்ற கோத்திரங்கள் என்று இரு பிரிவினைகளையேம் உருவாக்கி இருந்தது. காலனித்துவ ஆட்சியில் ‘உரிமைகள்’ தொடர்பான கருத்தாக்கமானது உண்மையிலேயே அவர்கள் எங்கிருந்து அல்லது எவ்வகையான தோற்றப் பின்புலத்தைக் கொண்டவர்கள் என்ற தர்க்கத்தின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட்டன. காலனியில் வாழும் மக்கள் வித்தியாசமாக நடாத்தப்படுவதற்கான காரணங்களை குறித்த தர்க்கங்களுக்குள் நின்றே காலனிய நிர்வாகம் தேடியது. இவ்வணுகுமுறையே பூர்வீகவாதம் (Nativism) என அழைக்கப்படுகிறது. நாகரீகம், முன்னேற்றம் போன்ற இன அடிப்படையிலான அளவீடுகள் போலன்றி பூர்வீகவாதமானது மக்களின் கலாச்சார மற்றும் பண்பாட்டு வேறுபாடுகளை பிரித்தறிவதற்காக காலனிய நிர்வாகத்தினால் பயன்படுத்தப்பட்டது. பூர்வீகவாசிகள் அனைவரும் கோத்திர சமூகத்தினராகப் பிரகடனம் செய்யப்பட்டு அவர்களுக்கான தனியான நிர்வாக முறைகளையும் இடம்பெற்றன. இந்த நிர்வாக முறைமையானது பூர்வீகப் மற்றும் பூர்வீகமல்லாத கோத்திரங்கள் (native and non-native tribes) என்ற பிரிவினையை ஏற்படுத்தியதுடன் பூர்வீகமல்லாத கோத்திரங்கள் பரம்பரை பரம்பரையாக காலனிகளில் வாழ்ந்திருந்த போதிலும் குறித்த நிலத்திற்கு அந்நியமானவர்களாக கருதப்பட்டனர். காலனியில் உள்ள ஒவ்வொரு நிர்வாக அலகுகளும் ஒவ்வொரு கோத்திரத்தின் தாயகமாக பிரிக்கப்பட்டதுடன் ஒவ்வொரு தாயகமும், “பூர்வீக” கோத்திரம் என அரசியல் ரீதியில் குறியிடப்பட்ட ஒரே ஒரு கோத்திரத்துடன் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. பிற பழங்குடிகளைச் சேர்ந்தவர்கள் அந்த நிலத்தில் அந்நியர்களாக மட்டுமே நிலம் பெற முடிந்தது. அதற்காக அவர்கள் உள்ளூர் தலைவர்களுக்கு வரி அல்லது காணிக்கை செலுத்தவும் வேண்டியிருந்தது. காலனித்துவ வழக்காற்றுச் சட்டங்களின் பிரகாரம் நிலம் தனிநபர்களின் உரிமையாக அங்கீகரிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்பட்ட ஒரே உரிமையாக ஒருவரது கோத்திரத் தாயகத்தின் எல்லைக்குள் நிலத்தை பயன்படுத்துவதற்கு உள்ள உரிமை மட்டுமே கருதப்பட்டது.

பூர்வீகக் கோத்திர அடையாளத்தின் மூலம் பூர்வீகமல்லாதவர்களுக்கு கிடைக்காத நிலத்திற்கான அணுகல் உரிமை, பூர்வீக அதிகார நிர்வாகத்தில் பங்கேற்கும் உரிமை மற்றும் ஏற்படும் முரண்பாடுகளைத் தீர்ப்பதுடன் தொடர்பான உரிமை என்ற மூன்று தனித்துவமான சலுகைகளை பூர்வீகக் கோத்திரங்களைச் சேர்ந்தவர்கள் அனுபவித்தனர். பூர்வீக அதிகார நிர்வாகத்தைப் பொறுத்தவரை அதன் தலைவர் (Chiefs) பதவிக்கு அக்கோத்திரத் தாயகத்தின் பூர்வீகராக அடையாளப்படுத்தப்பட்டவரே நியமனம் பெற்றார். நிர்வாகத்தின் மிகக் கீழ் நிலையில் மட்டுமே அங்கு வசித்த பூர்வீகமல்லாதக் கோத்திரத்தினைச் சேர்ந்த கிராமத் தலைவர்களை காண முடிந்தது. மட்டுமன்றி ஒவ்வொரு பூர்வீக அதிகார அமைப்பும் பூர்வீகமல்லாதவர்களை விட பூர்வீகர்களுக்கு சாதகமாக இருக்கும் வழக்காற்றுச் சட்டங்களின் அடிப்படையிலேயே தகராறுகளைத் தீர்த்தது.

இவ்வாறு திட்டமிட்டு காலனிய நிர்வாகத்தினால் திணிக்கப்பட்ட பிரிவினைகளைக் கூர்மைப்படுத்தும் அசமத்துவ ஆட்சியானது பல கோத்திரங்கள் வாழ்ந்த சமூகங்களின் மீது ஒரே கோத்திரத்தினைச் சேர்ந்த நிர்வாகம் ஆட்சி செய்வதற்கு வழிவகுத்தது. அனைத்து வகையான உரிமைகளும் பூர்வீகக் கோத்திரத்திற்கே ஒதுக்கப்பட்டதால், பூர்வீகர்கள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கும் பூர்வீகமல்லாதவர்கள் என வரையறுக்கப்பட்டவர்களுக்கும் மோதல் உருவாகுவது தவிர்க்க முடியாததாக இருந்தது. இது பிற்காலத்தில் கோத்திரங்கள் மீதான வன்முறைகளை நிறுவனமயப்படுத்துவதில் சென்று முடிந்தது.

காலனிய நிர்வாகப் பொறிமுறையின் தொழிநுட்பமான ‘கோத்திர அடையாளம்’ மொழி மற்றும் கலாச்சார அடிப்படையிலான இன (ethnic) அடையாளத்திற்குச் சமாந்தரமான ஒன்றாக உள்ளதென மானிடவியலாளர்கள் கருதுகின்றனர். ஆனபோதிலும் பல சந்தர்ப்பங்களில், ஒரே இன அடையாளம் பல நிர்வாகக் கோத்திரங்களாக பிரிக்கப்பட்டிருந்ததுடன் சில வேளைகளில் எரிக் ஹொப்ஸ்வோம் (Eric Hobsbawm) மற்றும் டெரன்ஸ் ரேன்ஜர் (Terence Ranger)  1983ல் எழுதிய The Invention of Tradition என்ற புத்தகத்தில் குறிப்பிடுவது போல ஒரு சீரற்ற அமைப்பிலும்  வகைப்படுத்தப்பட்டிருந்தது. இதில் பொதுவாகக் கவனிக்கத்தக்க அம்சம் என்னவென்றால் காலனித்துவக் காலப்பகுதியில் கோத்திரம் என்ற அடையாளம் எல்லா இடங்களிலும் ஒரு நிர்வாக அலகாகவும், நிர்வாக அடையாளமாகவும் (Administrative unit and administrative identity) இருந்தது என்பதுதான்.

1899 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், சூடானில் மஹ்திய்யா இயக்கத்தை தோற்கடித்தபோது, தார்ஃபூர் சுல்தானகம் நடைமுறையில் பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசமாக மாறியது. 1916ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தனது நேரடி ஆட்சியை அங்கு நிறுவியபோது சூடானின் தார்ஃபூரை தங்களின் காலனியத் திட்டங்களுக்கான மூலோபாய வகுப்பின் மையத்தளமாக மாற்றினர். தார்ஃபூரை மையமாகக் கொண்ட பிரிட்டிஷ் காலனியக் கொள்கையின் பிரதான தர்க்கமாக கோத்திரமயமாக்கம் (tribalisation) அமைந்திருந்தது. பூர்வீக நிர்வாகத்திற்கும் மறைமுக ஆட்சிக்குமான அடித்தளமாக இருந்த இச்செயன்முறையானது மஹ்திய்யா இயக்கத்திற்கு எதிரான முறிமருந்தாகவும் கருதப்பட்டது.

மட்டுமன்றி தார்ஃபூர் மாகாணம் பல பகுதிகளாகப் (dars) பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதியும் நிர்வாக ரீதியாக “பூர்வீகமானவர்கள்” எனக் குறியிடப்பட்ட ஒரு கோத்திரங்களுடன் இணைக்கப்பட்டதோடு குறித்த பகுதியானது அந்தப் பூர்வீகக் கோத்திரத்தின் தாயகமாகவும் கருதப்பட்டது. தார்ஃபூரின் எந்தப்பகுதியாக இருந்தாலும் எத்தனை தலைமுறைகளாகப் ‘பூர்வீகமல்லாதவர்கள்’ வாழ்ந்திருந்தாலும், அவர்கள் குறித்த பகுதிகளுக்கான அந்நியர்கள் (outsiders) என்றே வகைப்படுத்தப்பட்டனர். “அந்நியர்கள்” என்ற அடையாளத்தின் கீழ் மட்டுமே அவர்களால் நிலத்தைப் பெற முடிந்ததாக இருந்ததுடன் அதற்காக அவர்கள், பூர்வீக அதிகார அமைப்பிற்கு வரிகளையும் செலுத்த வேண்டியிருந்ததனால் ஆபிரிக்காவின் நில உரிமை முழுவதும் கோத்திர அடிப்படையிலானதாக அடையாளப்படுத்தப்பட்டன. இன்றைய தார்ஃபூரில் காணப்படும் ஹகூரா (hakura) நில அமைப்பு சுல்தானக காலத்தில் இருந்த நில அமைப்பின் தொடர்ச்சி அல்லாமல் அது பிரிட்டிஷ் ஆட்சியால் கோத்திரமயமாக்கம் (tribalisation) அறிமுகப்படுத்தப்பட்ட காலத்திலிருந்து தோன்றியதாகவே மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. ‘தார்’ அல்லது ‘வீடு/தாயகம்’ என்ற சொல் வழக்காற்றுச்சொல் போலத் தோன்றினாலும், அதன் அர்த்தம் காலனியாதிக்க நிர்வாக மொழியினால் வெகுவாக மாற்றப்பட்டது. காலனியாதிக்கத்திற்கு  முன்பு அந்தச் சொல் ஒருவரின் வசிப்பிடத்திலிருந்து தொடங்கி விரிவடைந்து செல்லும் நிலப்பகுதியைக் குறித்த போதிலும் காலனித்துவ நிர்வாக அலகாக மாறியபின், தார் என்பது ஒருவரது பூர்வீகமானதாகக் கருதப்படும் நிலப்பரப்பை அதாவது கோத்திரத் தாயகத்தை குறிக்கும் சொல்லாக மாற்றப்பட்டது. ஒருவரின் உரிமைகளையும் சமூக நிலையையும் இந்தப் பூர்வீக அடையாளம் வரையறுத்ததால் நடைமுறையில் அந்தப் பூர்வீக அடையாளமே சகலதையும் தீர்மானிக்கும் அளவீடாக மாறியது.

தார்ஃபூரினைப் போலவே நான் சந்தித்த அனைத்து ஆப்பிரிக்கச் சூழல்களிலும், குறிப்பாக கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து நைஜீரியா வரையும், சூடானிலிருந்து தென் ஆப்பிரிக்கா வரையும் இதே நிர்வாக முறைமை காணப்பட்டது. ஒரே ஒரு விதிவிலக்காக ருவாண்டா மாத்திரமே திகழ்ந்தது. சூடானில் பிரிட்டிஷ் ஆட்சி இன அடிப்படையிலான வரலாற்று நிரூபணவாதமானது (racialised historiography) கோத்திர அடிப்படையிலான நிர்வாக முறைமையுடனேயே இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் ருவாண்டாவில் இன அடிப்படையிலேயே நிர்வாகப் பொறிமுறை அமைந்திருந்தது. அங்கு நிலவிய காலனிய நிர்வாக நடைமுறை ஹூட்டு இன (Hutu) மக்களை விட டுட்சி இன (Tutsi) மக்களுக்கே முன்னுரிமை வழங்கியது.

தார்ஃபூரின் காலனித்துவ அனுபவங்களின் ஒரு தனித்துவமான அம்சமாக, அங்கு நிலைநிறுத்தப்பட்ட பூர்வீக அதிகார (native authority) அமைப்பானது விவசாயக் குடியிருப்பாளர்களான கோத்திரங்களுக்கும் கால்நடை மேய்ப்பவர்களான கோத்திரங்களுக்கும் இடையிலான அசமத்துவத்தை மேலும் விரிவாக்கியமையைக் குறிப்பிட முடியும். இதன் விளைவாக, விவசாயிகள், பகுதியளவு இடம்பெயரும் மக்கள் (semi-nomads), மற்றும் முழுமையாக இடம்பெயரும் மக்கள் (nomads) என மூன்று அடுக்குகளைக் கொண்ட சமூக அமைப்பை காலனிய நிர்வாக முறைமை உருவாக்கி விட்டிருந்தது. இந்த அசமத்துவம் நிறைந்த அமைப்பின் விளைவுகளே 2003ஆம் ஆண்டில் போராக வெளிப்பட்டது. நீண்ட காலமாக  கொதித்துக் கொண்டிருந்த தார்ஃபூரின் கோத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகள், நீண்டதும் பயங்கரமானதுமான போராக மாறியது. உண்மையில் நிலைத்த குடியிருப்பாளர்களை, (sedentary peoples) கால்நடை மேய்ப்பவர்களை விட எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்ற உணர்வே தார்ஃபூரின் காலனிய நடைமுறைகளை வழிநடாத்தின.

காலனித்துவத்திற்கு முன்னர் கோத்திரங்கள் என்ற ஒரு சமூக அமைப்பு நிலவியதா ? என்ற கேள்வியை எடுத்துக் கொண்டால் அவை இருந்தன என்றே பதில் கூற முடியும். ஆனால் பூர்வீகர்களுக்குச் சிறப்புரிமை அளித்து பூர்வீகமல்லாதவர்களை விளிம்பு நிலைக்குத் தள்ளும் நிர்வாகப் பொறிமுறையொன்று காலனித்துவத்திற்கு முன்பு இருந்ததில்லை. அதுபோலவே இனம் (race) தொடர்பில் சிந்திக்கும்போது தோல் நிறம் அல்லது உடல் வடிவம் போன்ற உடல் வேறுபாடுகள் பொதுவாக காணப்பட்ட போதிலும் அவை இன அடிப்படையிலான குழுப் பாகுபாட்டிற்கான அடித்தளமாக பயன்படுத்தப்படவில்லை. அதே போல கோத்திரம் என்ற அடையாளமானது ஒரு தனிப்பட்ட நிர்வாகத்திற்கான அடையாளமாக காலனித்துவத்தின் போதே கட்டமைக்கப்பட்டது. இதனாலேயே அது இனத்தின் ஒரு உபவகையாகக் கருதப்படுகிறது.

ஹென்றி மெயின் ரோமப் பேரரசின் பெரும் ஆதரவாளராகவே இருந்தார். ஆறு நூற்றாண்டுகளுக்கு நிலைத்திருந்த ரோமப் பேரரசினை போன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அதிக காலம் நீடிக்கவில்லை. அதேபோல பிரிட்டிஷ் மற்றும் பிற ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், ரோமப் பேரரசிலிருந்து பல்வேறு வழிகளில் வேறுபட்டும் அமைந்திருந்தன. அதாவது ரோமப் பேரரசினை போன்று பிரிட்டிஷ் மற்றும் ஏனைய ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள், தமது காலனிகளோடு பௌதீக ரீதியான தொடர்புகள் எதனையும் கொண்டிருக்க முடியாமல் போனதோடு அனேகமான சுதேச, உள்ளூர் மக்கள் தமது நிலங்களிலேயே வாழ அனுமதிக்கப்பட்டனர். மறுபுறம் ரோம் அண்டை நிலங்களைக் கைப்பற்றுவதன் மூலம் விரிவடைந்து சென்றதோடு இந்தப் புதிய நிலங்களில் உள்ள மக்கள், தமது தலைவர்கள் ரோமானிய குடிகளாக மாறியதனால் பெரும்பாலும் தங்களின் அசலான அடையாளங்களை இழந்தனர். உள்ளூர்த் தலைவர்கள் அரசியல் உரிமைகளை ரோமானியப் பேரரசிடம் கேட்டால் ரோமம் பெரும்பாலும் அவற்றை ஏற்றுக்கொண்டது. இருப்பினும் நவீன ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் காலனித்துவ ஆட்சிக்குட்பட்ட மக்கள் அரசியலைப் பற்றி அறிந்தவர்களாகவும், பெரும்பாலும் அது ஏகாதிபத்திய ‌அரசமைப்புடன் அதிருப்தி அடைந்தவர்களாகவுமே இருந்தனர்.

Roman Imperial Themes (1990) என்ற நூலில்,  கௌவ்ல் (Gaul) பிரதேசத்தில் ரோம பேரரசின் ஆட்சி முடிவுக்கு வந்த போது அப்பிரதேசக் கவிஞர் ஒருவர், ரோமம் உலகை ஒன்றிணைத்து மக்களுக்கான உரிமைகளை வழங்கியது எனப் புகழ்ந்ததாக பீட்டர் பிரண்ட் சுட்டிக்காட்டுகிறார். ஆனால், ஏகாதிபத்தியங்களின் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை கிடைத்ததற்காகவே காலனிகள் சந்தோசம் கொண்டாடின என்ற ரீதியில் ரோம அனுபவத்தில் இருந்து ஏகாதிபத்திய அனுபவம் வேறுபடுவதாக இது தொடர்பில் மேலும் எழுதிச் செல்லும் பீட்டர் பிரண்ட் குறிப்பிடுகிறார். மட்டுமன்றி குறைந்தபட்சம் ரோமப் பேரரசு வீழ்ச்சியைச் சந்திக்கும் போது அங்கே ஐரோப்பியர்களின் ஒற்றுமைக்கான ஏக்கத்தை விட்டுச் சென்றிருந்ததுடன் கிறிஸ்தவம் பிற்காலங்களில் இதனை நிறைவேற்றவும் செய்ததாகவும் விளக்குகிறார்.

ரோம் பேரரசு வளர்ந்தபோது தான் எதிர்கொண்ட புதிய மக்களை உள்ளீர்த்துக் கொண்டு அதன் தலைநகரை ஒரு பன்முக கலாச்சார மையமாக மாற்றிய விதத்தை  ஒட்டோமன் பேரரசுடன் மாத்திரமே எம்மால் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். 1857 ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில், ஆங்கிலேயச் செல்வாக்கு பெற்ற இந்திய உயரடுக்கினர் கல்வியை பெறுவதன் மூலம் ஐரோப்பிய ஆங்கிலேயர்களோடு ஒருங்கிணைக்கப்படலாம் என்ற கருத்தின் அடிப்படையில் பிரிட்டன் தனது நேரடி ஆட்சியைப் பயன்படுத்திய தருணமே பிரிட்டன் ரோமப் பேரரசின் ஆட்சிப்பொறிமுறைக்கு மிக அருகில் வந்த நேரமாகும். 1857 கலகத்திற்குப் பிறகான அடுத்த 100 ஆண்டுகளில், பிரிட்டன் உயரடுக்குகளில் கவனம் செலுத்துவதையும் உயரடுக்குகளை நாகரிகப்படுத்துவதையும் விட்டுவிட்டு காலனிகளில் வாழ்ந்த மில்லியன் கணக்கான குடிமக்களின் அடையாளத்தை வடிவமைப்பதில் கவனம் செலுத்தியது. மறைமுக ஆட்சி என்று அழைக்கப்படும் இந்த நிர்வாகப் பொறிமுறையானது ரோமானியர்கள் முயற்சித்த எதனையும் விட இலட்சியத்தன்மை கொண்டதாகவே அமைந்திருந்தது.

மஹ்மூத் மம்தானி (Mahmood Mamdani) 1946-ஆம் ஆண்டு உகாண்டாவின் கம்பாலாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார். உகாண்டா சுதந்திரத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய சவால்களை எதிர்கொண்ட ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் அவரது இளமைக் காலத்தை கழித்தார். அமெரிக்காவில் தனது கலாநிதி படிப்பை முடித்த மம்தானி, 1970-களில் கிழக்கு ஆப்பிரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றான மேக்கரேரே பல்கலைக்கழகத்தில் (Makerere University) விரிவுரையாளராகப் பணியாற்றுவதற்காக உகாண்டா திரும்பினார். இருப்பினும், அங்கு நிலவிய அரசியல் அமைதியின்மை மற்றும் இடி அமினின் ஆட்சியில் இந்திய மக்களுக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நிரலில் அவரும் வெளியேற்றப்பட்டார். இந்த தனிப்பட்ட அனுபவம் அவரது ஆராய்ச்சி ஆர்வங்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதுடன், பிந்தைய காலனித்துவ சூழல்களில் அதிகாரம் மற்றும் அரசியல் வன்முறையின் தன்மையை பகுப்பாய்வு செய்ய அவரைத் தூண்டியது.

மம்தானி தனது வாழ்நாள் முழுவதையும் ஆப்பிரிக்காவில் அதிகாரம், வன்முறை மற்றும் நிர்வாகத்தின் சிக்கல்களை ஆராய்வதற்கும், அந்தக் கண்டத்தின் வரலாற்றை அடிக்கடி எளிமைப்படுத்தும் அல்லது சிதைத்துக் காட்டும் மேலாதிக்கக் கதையாடல்களுக்கு (dominant narratives) சவால் விடுவதற்கும் அர்ப்பணித்துள்ளார். நிறுவனங்கள் மற்றும் சிந்தனை முறைகளில் காலனித்துவத்தின் நீட்சியை அகற்றுவது, ஆப்பிரிக்காவில் நடக்கும் மோதல்களின் தன்மையை பகுப்பாய்வு செய்வது மற்றும் சித்தாந்த ரீதியான விமர்சனக் கண்ணோட்டத்தை வழங்குவது ஆகியவற்றிலும் அவர் ஈடுபட்டு வருகிறார்.

அவர் Politics and Class Formation in Uganda, Imperialism and Fascism in Uganda, Saviours and Survivors, Citizen and Subject: Contemporary Africa and the Legacy of Late Colonialism, When Victims Become Killers: Colonialism, Nativism, and the Genocide in Rwanda, Define and Rule: Native as Political Identity, Good Muslim, Bad Muslim: America, the Cold War, and the Roots of Terror, Neither Settler nor Native: The Making and Unmaking of Permanent Minorities மற்றும் அண்மையில் வெளியான Slow Poison: Idi Amin, Yoweri Museveni, and the Making of the Ugandan State போன்ற பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்