– நெல்சன் மால்டொனாடோ-டோரஸ்

கொடூரமான போர்களைத் துவக்கி வைத்தும் பன்மடங்காக மக்களை கொன்றும், கொல்லப்பட்ட உடல்களை சிதைத்தும் இரத்தத்தை ஓடவிடும் வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களினுள்ளே சமாதானம், அமைதி போன்ற சொல்லாடல்கள் அனைத்துமே குறித்த வன்முறைகளை இலகுவாகக் கடந்து சென்று விடுவதற்காகவே சமகாலத்தில் பயன்படுத்தப்படுகின்றன. இதனை மனதில் நிறுத்தும் போது மேற்சொன்ன சொல்லாடல்கள், ஒடுக்குமுறைகளுக்கு ஆளான தரப்பினரை அடிபணிய வைத்து, அதே வன்முறை மிக்கக் கட்டமைப்புக்களின் இனவாத, காலனியாதிக்க இயல்புகளை தொடர்ந்தும் காத்துக்கொள்வதற்கே துணைபோகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

பகுத்தறிவு, நாகரீகம், முன்னேற்றகரமான உலகம் போன்ற காரணங்களைக் கூறியே போர்கள் துவங்கப்படுகின்றன. காலனியாதிக்கவாதிகளின் நலன்களுக்குச் சேவை செய்வதற்கான ஒரு “புதிய உலகம்” உருவாக்கப்படும் வரை உண்மையான அமைதியும் சமாதானமும் தூக்கி எறியப்பட்டு போர்கள், உலகின் இயல்பானதும் நிரந்தரமானதுமான ஒரு நிகழ்போக்காக முன்னிறுத்தப்படுகின்றன.

போர்களை உலகின் மாறாத விதியாக நிலைநிறுத்தும் இந்தப் போக்கை மாற்ற வேண்டுமாயின் பொதுமக்கள், காலனியாதிக்கவாதிகளுக்கு எதிராக அணிதிரளும் சகல வாய்ப்புகளும் இல்லாமல் ஆக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களது போலியான நாகரீகத் திட்டங்களைத் தோலுரிக்கும் எல்லா நடவடிக்கைகளும் நிறுத்தப்படும் போது தான் உண்மையான சமாதானமும் அமைதியும் பிறக்கும் என்று காலனியாதிக்கவாதிகள் கருதுகிறார்கள். இவ்வாறு அவர்களின் அடக்குமுறைக்கு எதிராக உருவாகும் எதிர்பு்புக்களை அடிபணியச் செய்வதற்காகவே சட்டங்களும் ஒழுங்குகளும் (Law and Order) என்ற மற்றுமொரு சொல்லாடல் உற்பத்தி செய்யப்பட்டது. சட்டமும் ஒழுங்கும் (Law and Order) என்ற இந்த சொல்லாடலும் சமாதானம் (Peace) என்பதைப் போல அதே இனவாத, காலனியாதிக்க பின்புலத்துடனேயே முன்வைக்கப்படுகிறது.

பொதுமக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களில் அதிகார வர்க்கங்கள் தொடர்ந்தும் நிலைகொண்டுள்ள போது அல்லது குறிப்பிட்ட ஒரு சாராரை நோக்கியே வன்முறைகள் நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ள போது சட்ட ஒழுங்கு மற்றும் சமாதானம் ஆகியவற்றிற்கு எந்தவிதமான பெறுமானமும் இருக்கப்போவதில்லை. இவ்வாறு இனவாத, காலனிய இயல்புகளைப் பாதுகாக்கும் “சட்ட ஒழுங்குகள்” பற்றி மக்களிடம் பேசப்படும் போது, அதே வன்முறை வேறொரு புதிய பெயரில் தொடரவே போகிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

தற்காலத்தில் பொலிஸ், நீதிமன்றங்கள் உள்ளிட்ட ஏனைய அமைப்புக்களின் ஊடாக நடைமுறையாகும் சட்ட ஒழுங்குகளுக்கு மனிதர்களை உடலியல் ரீதியாக கட்டுப்படுத்தி சிறைகளில் அடைக்கும் ஒரு பௌதீகத் தோற்றம் ஒன்றைக் கொண்டுள்ள போதிலும் அதையும் தாண்டிய வகையில் மக்களின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி அதனூடாக ஒரு போலியான நம்பிக்கையை ஏற்படுத்தும் ஒரு வடிவமும் அவற்றிற்கு உள்ளது. எனவேதான் காலனியக் கட்டமைப்புக்களின் நிறுவன அமைப்புகளாகத் தொழிற்படும் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் ஏனைய கலை நிறுவனங்கள் ஆகியன காலனித்துவத்தையும் இனப் பிரிவினையையும் தொடர அனுமதித்துக் கொண்டே “பன்முகத்தன்மை மற்றும் சகவாழ்வு” திட்டங்களில் ஈடுபடுவதன் பயன் என்னவென்பது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும் என்கிறோம். நிலவும் காலனிய மற்றும் இனவாதப் பின்புலங்களில் வேர் கொண்டுள்ள  மேற்சொன்ன அமைப்புக்கள்  மற்றும் நடைமுறைகளை இவ்வாறான கேள்விகளுக்குட்படுத்தாமல் இருப்பதானது குறிப்பிட்ட வன்முறைகள் நிறைந்த கட்டமைப்புக்களை பாதுகாப்பதாகவே அமைந்து விடுகிறது.

மக்களின் நிலங்களை பறிமுதல் செய்து அதனை சட்டபூர்வ ரீதியில் அரசுடமையாக்கிக் கொள்கின்ற முயற்சிகளின் போதும் நீண்ட காலமாக நிலவி வந்த உள்ளூர் மரபுகள் மற்றும் அறிவுருவாக்கங்கள் அனைத்தும் நாகரீகம் மற்றும் முன்னேற்றம் என்ற பெயரில் திட்டமிட்டு அழிக்கப்படும் போது அதனை நியாயப்படுத்துகின்ற போதும் சட்டம் மற்றும் ஒழுங்கு (law and order) என்ற சொல்லாட்சியின் பின்னால் உள்ள காலனிய நிழல் தெளிவாகப் புலப்படத் தொடங்குகிறது. இவ்வாறானதோர் பின்புலத்தைக் கொண்டுள்ள ‘சட்ட ஒழுங்குகள்’ என்ற சொல்லாட்சியானது தேசிய அரசுக் கட்டமைப்புக்கள் ஊடாகவும் அதன் நிறுவனங்களான பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், நீதிமன்றங்கள், சிறைச்சாலைகள் மற்றும் பொலிஸ் அமைப்புக்கள் ஆகிய  ஊடாகவுமே அமுல்படுத்தப்படுகின்றன.  கொஞ்சம் கூர்ந்து கவனித்தால் சட்ட ஒழுங்குகள் என்பதைப் போலவே மற்றொரு சொல்லாட்சியான சமாதானம் என்பதும் இதே காலனியத் தர்க்கங்களையே உள்ளீடுகளாகக் கொண்டுள்ளதைப் புரிந்து கொள்ள முடியும்.

ஜார்ஜ் ப்லொய்ட், அஹ்மத் ஆர்பெரி மற்றும் பிரியோனா டெய்லர் ஆகியோரின் மீது நிகழ்த்தப்பட்ட பொலிஸ் அடாவடித்தனக் கொலைகளுக்கு எதிராக இடம்பெற்ற கலகத்தன்மைகளைக் கொண்ட போராட்டங்களில் பலர் அமைதியைப் பற்றிப் பேசினார்கள். இதில் உள்ள இரட்டை நிலை என்னவென்றால் மற்ற நாடுகளில் அதாவது அமெரிக்க நிலத்திற்கு வெளியே உள்ள மக்கள் இது போன்ற பொலிஸ் வன்முறைகளுக்கு எதிராகக் கலகம் செய்யும்போது அல்லது எதிர்ப்பு தெரிவிக்கும்போது, அது பெரும்பாலும் முன்னேற்றமாகக் கருதி வரவேற்கப்பட்டு புகழப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில் அது போன்று இடம்பெறும் போது, மக்கள் திடீரென்று “அமைதி”க்கு அழைப்பு விடுத்து அதனைத் தவறு என்றும் சட்டத்திற்குப் புறம்பானது என்றும் கூறி விடுகின்றார்கள். அரசியல்வாதிகளும் செய்தி சேனல்களும் அமைதியையும் ஒழுங்கையும் பேணுவது பற்றிப் பேசத் தொடங்குகிறார்கள். நிறுவனமயமான ஒடுக்குமுறைகள் அரங்கேறும் இது போன்ற சூழ்நிலைகளில், மக்கள் “அமைதி” பற்றிப் பேசும்போது, அவர்கள் உண்மையில் அடக்குமுறைகளையும் அநீதியையும் உயிருடன் வைத்திருக்கும் சட்ட ஒழுங்கு முறைகளைப் பாதுகாக்கும் செயலையே செய்கிறார்கள். மட்டுமன்றி வன்முறைகளில் ஊறிய இந்த அமைப்புக்களை இயல்பானதாகவும், நல்லதாகவும், பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகவும் தோன்றச் செய்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் அமைதி என்பது மீண்டும் மீண்டும் வன்முறை மற்றும் ஒடுக்குமுறைகளை திரைமறைவில் ஒழித்து வைக்கின்ற சட்ட ஒழுங்குகளையே பாதுகாக்கிறது. அமைதி, சமாதானம் ஆகியன காலனிய அதிகார வலைப்பின்னலில்  எவ்வளவு தூரம் இணைக்கப்பட்டுள்ளன என்பதை இவ்வாறு புரிந்து கொள்ள முடியும்.

கலவரங்களையும், கலகங்களையும் பாராட்டவோ அல்லது அவற்றை ஊக்குவிக்கவோ வேண்டும் என்று குறிப்பிடுவது எனது நோக்கமல்ல. தமது சொந்த நிலங்கள் திருடப்பட்டவர்கள் மற்றும் குற்றவாளிகளாகவும் அந்நியர்களாகவும் நடாத்தப்படுபவர்களின் நீண்ட போராட்டங்களைப் பற்றி எந்தவிதமான கரிசனைகளுமின்றி செயற்படுபவர்கள் மற்றும் அவர்களது கருத்துநிலைகள் தொடர்பாகவே இங்கே குறிப்பிடுகின்றேன். இவர்கள் சமாதானம், சட்ட ஒழுங்கு என்பவற்றை முன்னிலைப்படுத்துவதன் ஊடாக உண்மையில் நடைமுறையில் உள்ள அநீதி மிக்க கட்டமைப்புக்களை தமது அதிகார நலன்களுக்காக பாதுகாக்கவே  முற்படுகிறார்கள். இவர்கள் வலியுறுத்தும் சமாதானம் என்பது போர்களினதும் நீண்ட கால வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளினதும் நீட்சியாகவே தோற்றம் பெற்றுள்ளதோடு சமகால சட்ட ஒழுங்குகள் மற்றும் நீதிக் கட்டமைப்புக்கள் ஊடாக நிலைபெற்றும் உள்ளது. மட்டுமன்றி இவர்கள் குறிப்பிடும் சமாதானம் என்பது விளிம்புநிலை மக்களின் உடல்களிலும் அவர்களது அறிவுருவாக்கங்கள் மற்றும் ஏனைய நடைமுறைகளிலும் ஆதிக்கம் செலுத்தும் நிறுவன அமைப்புகளை தொடர்ந்தும் பாதுகாத்து வரும் ஒரு உத்தியாகவே அமைகிறது. இதனாலேயே மஹ்தீஷ் அஸர்மண்டி ‘நிலையான சமாதானம் என்பது காலனியச் சிந்தனைகள் மற்றும் நடைமுறைகளுக்கு எதிராகப் போராடுவதன் ஊடாகவே அடையப் பெற முடியும்” என்கிறார்.

சமாதானம் அல்லது அமைதி பற்றிய காலனிய நீக்கச் சிந்தனை என்பது நவதாராளவாத, பொருளாதார அமைப்புக்கள், நவீன தேசிய அரசுகள் மற்றும் அதன் நிறுவன அமைப்புக்கள் ஆகியவற்றுடன் சமரசம் செய்வதாக ஒருபோதும் அமைய முடியாது. மாறாக சட்டம் மற்றும் ஒழுங்குகள் என்ற போர்வையில் நிகழும் நில அபகரிப்புக்கள் உள்ளிட்ட ஏனைய ஒடுக்குமுறைகளையும் அநீதிகளையும் பகிரங்கமாக அம்பலப்படுத்தி அதற்கெதிராக மக்களை அணிதிரட்டிக்கொள்ளும் போது  ஏற்படும் பரஸ்பர அன்பு மற்றும் கோபம் ஆகியவற்றாலேயே அது சாத்தியமாகிறது. அத்தோடு அமைதிக்கான வாழ்வு என்பதும் நவீன காலனிய அமைப்புக்களின் சட்ட ஒழுங்குகள், அறிவாதார அடிப்படைகள் மற்றும் நியமங்கள் உள்ளிட்ட அநீதியான பக்கங்களை இனங்கண்டு சக மக்களோடு இணைந்து அதற்கெதிராக போராடுவதாகவே அமைய முடியும். அதுமட்டுமன்றி தற்காலத்தில் காலனிய தர்க்கங்களின் அடியாகச் செயற்படும் தேசிய அரசுகள் குறிப்பிடும் நற்பிரஜைத்துவம் உள்ளிட்ட அசமத்துவமான சமூக ஒழுங்குகள் மற்றும் ஏனைய பாசிச நிறுவன அமைப்புகள், கருத்துருவாக்கங்கள், சிந்தனைகள் ஆகியவற்றுக்கு எதிராக இயங்குவதாலேயே சமாதானம் குறித்த உண்மையான அர்த்தத்தை வந்தடைய முடியும். இதனாலேயே எமது அன்றாட வாழ்வொழுங்குகள் யுத்தங்கள் மற்றும் வன்முறைகளை இயல்பாக கருதுவதாக அமையும் அதேவேளை சமாதானம் என்ற போலியான நம்பிக்கையைச் சுமந்தாகவே அமைந்துவிடுகிறது.

சமாதானம் என்பது அதனளவில் அமைதியான வாழ்வமைப்பையோ அல்லது அரச அடக்குமுறைகளை சகிப்புத்தன்மையுடன் எதிர்கொள்ளும் ஒரு வழிமுறையையோ அல்ல. அது வன்முறைகள் மற்றும் ஒடுக்குமுறைகள் ஆகியவற்றுக்கு எதிராக எவ்விதமான சமரசங்களுமின்றிப் போராடும் ஒரு காலனிய நீக்கம் பெற்ற புரிதலாகவும் (Decolonial Maturity), நீதியானதும் நியாயமானதுமான சமூக அமைப்புக்களுக்காக வேண்டி சக மக்களுடன் புதுவகையான உறவுகளை உருவாக்குவதாகவுமே சமாதானம் என்பது அமைகிறது. இத்தகைய ஒரு புரிதலை நாம் பெறுகின்ற போது நம்முடனும் நம்மோடு வாழும் ஏனையோருடனும் போர்கள் மற்றும் வன்முறைகள் எதுவுமற்ற நிலையான சமாதானம் பற்றிய கருத்தாக்கத்தை வந்தடைந்து விடுகின்றோம். இதனையே ஃபிரான்ஸ் ஃபனான் ” உங்களுக்காக நீங்கள் உருவாக்கும் உலகம் என்பது பரஸ்பர புரிதல், பிறர் மீதான கரிசனை மற்றும் சமத்துவமான உலகாகவே அமைய வேண்டும். அங்கேதான் உங்களால் உயிர்பு்பு மிக்க சமாதானத்தை சுவாசிக்க முடியும்” என்கிறார். 

உசாத்துணைகள்

Mahdis Azarmandi,  “The Racial Silence within Peace Studies, » Peace Studies: A Journal of Social Justice 30 (2018): 69-77.

Frantz Fanon, Black Skin, White Masks, trans. Richard Wilcox (New York: Grove Press, 2008): 206.

நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் (Nelson Maldonado-Torres) University of Connecticutடீல் தத்துவ பேராசிரியராக இருக்கிறார். இவருடைய ஆய்வுப் பரப்பாக இருப்பது நவீனத்துவம்/காலனித்துவம் மற்றும் காலனித்துவ நீக்கம், ஆப்பிரிக்கானா தத்துவம், கரீபியன், லத்தீன் அமெரிக்க தத்துவம், மேலும் தத்துவரீதியாக இனம், மதம் சார்ந்த கருத்தியல்களையும் ஆய்வுக்கு உற்படுத்தி வருவதுடன் விடுதலை நெறிகள் பற்றிய ஆய்வுகளையும் மேற்கொண்டு வருகிறார். அவர் Against War: Views from the Underside of Modernity என்ற புத்தகத்தையும் பலவேறு ஆய்வு கட்டுரைகளையும் எழுதி இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்

இந்த ஆக்கம் The Frantz Fanon Foundation இணையதளத்தில் Notes on the Coloniality of Peace என்ற தலைப்பில் ஜூன் 4, 2020 வெளியானது.