‘கட்டமைப்பு சீர்திருத்தங்கள்’ என்ற பெயரில் அவை மூன்றாம் உலகம் மீது சுமத்துபவைகளில் இருந்து எவ்வாறு தப்பிக்க முடியும்? உண்மையில், அவை தீவிரமாக தீங்கு விளைவித்துக் கொண்டிருந்தால், அவற்றின் நடவடிக்கைகளை யாராலும் ஏன் தடுக்க முடியவில்லை?
ஜேசன் ஹிக்கல்
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகியன சிறப்பு ‘சட்ட விலக்கு மற்றும் விசேட தடுப்பாற்றல்’ அந்தஸ்தை அனுபவிப்பது ஸ்திரமற்ற இந்நிலைமை உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். ராஜதந்திரிகள், செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகள் மீது அவற்றின் அங்கத்துவ நாடுகளில் இருந்து தொடரப்படும் வழக்குகளில் இருந்து தப்பிப்பதை நோக்கமாகக் கொண்டு, அமெரிக்காவில் 1945ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட்ட சர்வதேச நிறுவனங்கள் ‘விசேட தடுப்பாற்றல்’ சட்டத்தின் கீழ் இந்த அந்தஸ்தை கோருகின்றனர். இதனால் அவர்கள் ‘குறுக்கீடுகள் இன்றி தமது பணிகளைத்’ தொடர முடியும். உலகின் பெரும்பாலான நாடுகள் இதையொத்த சட்டங்களைக் கொண்டுள்ளன. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை ஏனைய சர்வதேச அமைப்புகளைப் போலன்றி, இந்த சட்டங்கள் உருவாக்கும் வியூகங்களைக் கொண்டு பாதுகாக்கப்படுகின்றன. அனைத்துக்கும் மேலாக, அவை உலக உருண்டையின் தென்னரைக் கோளம் எனப்படும் வளர்முக நாடுகளின் பொருளாதாரத்தைத் தீர்மானிப்பதில் தீவிரம் காட்டுகின்றன. இத்தகைய பலம் வாய்ந்த ஏற்பாடுகளின் வழியாக, அவர்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தியபோதிலும் கூட, அவற்றை நிரூபித்து, யாரும் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியாது. இவற்றின் விளைவாக, ஏனைய நாடுகளின் (macro) விரி நிலைப் பொருளாதாரக் கொள்கையை தம்மிஷ்டத்துக்கு கையாளும் போது கவனத்தோடு இருக்க வேண்டிய எந்த நிர்ப்பந்தமும் அவர்களுக்குக் கிடையாது. ஏனெனில் அவர்கள் தவறு செய்தால், அதன் பின்விளைவுகளுக்கான வகைகூறல்கள் பற்றிய கடப்பாடுகள் ஏதும் அவர்களுக்கு இல்லை. பின்விளைவுகள் மற்றும் ஆபத்துகள் அனைத்து அவர்களின் நிபந்தனைகளுக்கு தலையாட்டி கடன் பெறும் கடனாளி நாட்டுக்கு மாத்திரமே சொந்தமானவை ஆகின்றன. அமுலாக்கல் மட்டத்தில் இடம்பெறப்போகும் பேரழிவுகள் எதற்கும் எந்த உதவியும் அல்லது இழப்பீடும் கிடைக்கப் பெறப் போவதில்லை. மாறாக அவை மறுக்கப்படுகின்றன. பலரும் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் மீது இவ்வாறு ஏற்பட்ட சேதங்களுக்காக வழக்குத் தொடர முயன்றனர். அவை அனைத்தும் தோல்வியடைந்தன.
ஆனால், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் அவை பற்றிய மோசமான பதிவுகள் இருந்தபோதிலும், ‘கட்டமைப்பு சீர்திருத்த’த் திட்டங்களை பரவலாக செயல்படுத்த முடிந்ததற்கு மற்றொரு காரணமும் உள்ளது; அது இவ்விரண்டு நிறுவனங்களும் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதோடு தொடர்புடையது. வணிகப் பெருநிறுவனங்களைப் போலவே, இரண்டிலும் வாக்களிக்கும் அதிகாரம், ஒவ்வொரு உறுப்பு நாட்டின் நிதி உரிமையின் அது கொண்டிருக்கும் பங்கின் படியே பகிரப்படுகிறது. முக்கிய முடிவுகளுக்கு 85% சதவீத வாக்குகள் தேவை. அமெரிக்கா இரண்டு நிறுவனங்களிலும் சுமார் 16% சதவீத பங்குகளை வைத்திருக்கிறது. எனவே நடைமுறையில் தன்னிடமுள்ள வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்துகிறது. இவ்விடயம் தற்செயலானது அல்ல. அதனை அடுத்த பெரிய பங்குதாரர்கள் பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் இங்கிலாந்து – இவை அனைத்தும் G7 மன்ற உறுப்பினர்களாகும். உலக மக்கள்தொகையில் சுமார் 85% சதவீதத்தை உள்ளடக்கிய நடுத்தர மற்றும் குறைந்த வருமான மட்டத்தைக் கொண்ட நாடுகள், சுமார் 40% சதவீத வாக்குகளை மட்டுமே கொண்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தென்னரைக் கோளத்தில் உள்ள, ஆசிய – ஆபிரிக்க – லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த ஒவ்வொரு நாடும் ஐ.எம்.எஃப் மற்றும் உலக வங்கி தம் மீது திணிக்கும் கொள்கைகளுக்கு எதிராக கருத்து ரீதியாக ஒன்றுபட்ட போதிலும், அவர்களால் அவ்விரு நிறுவனங்கள் அமுல்படுத்தும் நடவடிக்கைகளைத் தடுக்க முடியாது என்பதே நிதரிசனம் ஆகும். இந்த நிறுவனங்களின் தலைவர்கள் உறுப்பு நாடுகளால் தேர்ந்தெடுக்கப்படாமல், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவால் நியமிக்கப்படுவது அனைவரும் பார்த்திருக்க நடைபெறும் ஒரு பெரும் அத்துமீறலாகும். ஒரு பேசப்படாத ‘உள்வீட்டு ஊமை ஒப்பந்தத்தின்’படி, உலக வங்கியின் தலைவர் எப்போதும் ஒரு அமெரிக்கராகவே இருப்பார்; அதே சமயம் IMFன் தலைவர் எப்போதும் ஐரோப்பியராகவே இருப்பார்.
முழு உலகின் சனத்தொகைப் பகுப்பில் அறுதிச் சிறுபான்மையாக இருக்கும் வெள்ளை இனத்தவர்கள் இதுஒரு ‘உலகளாவிய இனஒதுக்கல்’ என அழைப்பதற்குத் தகுதிவாய்ந்த விதத்தில், விவகாரங்களை தீர்மானிக்கும் பலமான சக்தியாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் மாத்திரமன்றி ஐ.நா. பாதுகாப்பு சபையைக் கூட தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இவ்வாறிருக்கும்போது, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தை ஜனநாயக மயப்படுத்த வேண்டும் என தென்னரைக்கோள நாடுகளிடமிருந்து நீண்ட காலமாக அழைப்புகள் விடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல தசாப்தங்களாக, இப்படியான அழைப்புகள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இறுதியாக 2010ல் ஒரு ‘சீர்திருத்தங்களின் தொகுப்பு’ அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் அது வெறும் அலங்காரமாகவே மாறி இறுதியில் நீர்த்துப்போனது. அதன் விளைவாக வாக்களிக்கும் அதிகாரத்தில் 3% சதவீதம் மட்டுமே பணக்கார நாடுகளிலிருந்து ஏழை நாடுகளுக்கு மாற்றப்பட்டது (அதில் பாதி சீனாவுக்குச் சென்றது), இறுதியில் அமெரிக்கா தனது வீட்டோவைத் தக்க வைத்துக் கொண்டது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் பணியாற்றிய பலர் இந்த அமைப்புகளிலிருந்து விலகி, அவர்களது உடந்தையோடு நடைபெற்ற, தவறான செயல்களாக அவர்கள் கருதுவதை அம்பலப்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
1997 முதல் 2000 வரை உலக வங்கியின் தலைமைப் பொருளாதார நிபுணராகப் பதவி வகித்த ஜோசப் ஸ்டிக்லிட்ஸ், தமது நிறுவனத்தை கடுமையாக விமர்சித்து புத்தகங்களை எழுதியுள்ளார். வில்லியம் ஈஸ்டர்லி, தான் ராஜினாமா செய்வதற்கு முன்பு வங்கியின் மேக்ரோ (விரி நிலைப்) பொருளாதாரம் மற்றும் வளர்ச்சிப் பிரிவின் மூத்த ஆலோசகராகப் பணியாற்றி இருந்தார். அதன் பின்னர் நாடுகளின் பொருளாதாரக் ‘கட்டமைப்பு சீர்திருத்தம்’ குறித்து கூரிய விமர்சனங்களை முன்வைக்கும் ஒருவராக அவர் மாறிவிட்டார். ஆனால் 1980களில் லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆபிரிக்காவில் கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டங்களை செயல்படுத்துவதையே தனது பணியாகக் கொண்டிருந்த IMF இன் மூத்த பொருளாதார நிபுணரான டேவிட்சன் புத்தூவைப் போல வேறு யாரும் இவ்விடயத்தில் உலகின் கவனத்தை ஈர்த்திருக்க வாய்ப்பில்லை. 1988ம் ஆண்டில், கிரெனடாவைச் சேர்ந்த புத்தூ, தனது முன்னாள் தொழில் தருனரான IMF நிர்வாக இயக்குனர் மைக்கேல் கேம்டெஸஸுக்கு ஒரு நீண்ட ராஜினாமா கடிதத்தை அனுப்பி வைக்கிறார். அதில்:
“பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் அதிகமாக சர்வதேச நாணய நிதியத்தின் உத்தியோகபூர்வ பணி மற்றும் 1,000 நாட்கள் களப்பணியில் ஈடுபட்டு, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் மற்றும் ஆப்பிரிக்காவிலுள்ள ஏராளமான மக்களின் வாழ்வைத் தீர்மானிக்கும் உங்கள் ‘பொருளாதார மருந்துகள் மற்றும் மூலோபாய மோடிமஸ்தான் தந்திரங்களை’ அவர்களது அரசாங்கங்களுக்கு ‘விற்பனை செய்பவனாகப் பணியாற்றிவிட்டு’ இன்று நான் அந்தப் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். என்னைப் பொறுத்தவரை, இந்த இராஜினாமா என்பது ஒரு விலைமதிப்பற்ற விடுதலையாகும்; ஏனென்றால், அதன் மூலம் என் கைகளில் மற்றும் என் மனசாட்சியில் இறுகிப் படிந்திருக்கும் மில்லியன் கணக்கான ஏழை மற்றும் பட்டினியால் வாடும் மக்களின் இரத்தத்தை, அந்த மாபெரும் பாவக் கறையை இனிமேல் நான் கழுவி அகற்றிவிட முடியும் என்று நம்பக்கூடிய இடத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்திருக்கிறேன். திரு. காம்டேஸஸ் அவர்களே, மேலே நான் விவரித்த அந்த இரத்தம் அளவில் மிக அதிகமாகத்தான் இருக்கிறது; அது ஆறுகளில் கலந்து ஓடுகிறது. சமயங்களில் அது வரண்டும் போகிறது; அது என் மேனி முழுவதும் கொதித்தபடி பரவுகிறது; சில சமயங்களில் உங்கள் பெயரிலும், உங்கள் முன்னோர்களின் பெயரிலும், உங்கள் அதிகாரப்பூர்வ முத்திரையிலும் தான் அது பொதிந்திருக்கிறது! சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரபூர்வ உத்தோகத்தர்களின் ஒருவனாக நான் செய்த காரியங்களின் விளைவுகளில் இருந்து என்னைத் தூய்மைப்படுத்துவதற்கு, முழு உலகிலும் போதுமான அளவு சவர்க்காரங்கள் கிடைக்காது என்று எனக்குத் தோன்றுகிறது.”
கட்டமைப்பு சீர்திருத்தத் திட்டங்களின் தோல்வி, இனிமேல் புறக்கணிக்க முடியாத அளவுக்குத் தெளிவாகத் தெரிந்தபோதும், சமூக இயக்கங்களின் அழுத்தம் அவற்றுக்கு எதிராக அதிகரித்தபோதும், சர்வதேச நாணய நிதியமும் உலக வங்கியும் வெளிப்படையாகவே அவற்றிலிருந்து பின்வாங்கின. 1990களின் இறுதியில், கட்டமைப்பு சீர்திருத்த திட்டங்களை ‘வறுமை ஒழிப்பு உத்திக்கான ஆவணங்கள்’ மூலம் ‘மாற்றுவது’ போல் காட்டிக் கொண்டனர். புதிய PRSP எனப்படும் ‘வறுமை ஒழிப்பு மூலோபாய அறிக்கைகள்’ கட்டமைப்பு சீர்திருத்தங்களில் அதிக உள்ளூர் உரிமையைக் கொண்டுவர வேண்டும் என்றும், கடன்களைப் பெறுவதற்கான நிபந்தனையாக வறுமைக் குறைப்பில் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது. ஆனால் இது ஒரு தனிப்பட்ட செயன்முறையைத் தவிர அவற்றில் வேறொன்றுமில்லை. ஏனெனில் அடிப்படைக் கொள்கைகள் கிட்டத்தட்ட அப்படியேதான் உள்ளன. ஒரே ஒரு குறிப்பிடத்தக்க வேறுபாடு என்னவென்றால், அவை சமூக செலவினங்களுக்கு சற்று அதிக இடத்தை வழங்க அனுமதிக்கின்றன.
ஜேசன் ஹிக்கல் (Jason Hickel) ஒரு பொருளாதார மானுடவியலாளர். தற்போது The Autonomous University of Barcelona-வில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுப் புலங்கள் முதலாளித்துவம், நவகாலனித்துவம் மற்றும் அபிவிருத்தி கைதையாடல் என்பனவாகும். இவர் பல முக்கியமான மாத இதழ்களிலும் இணையத்தளங்களிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவருடைய முக்கியமான புத்தகங்களில் The Divide: A Brief Guide to Global Inequality and Its Solutions, Less is More: How Degrowth Will Save the World ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக கருதப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் அவருடைய The Divide: A Brief Guide to Global Inequality and Its Solutions புத்தகத்தில் இருக்கும் ஒரு பகுதி