இலங்கையின் இனப்பிரச்சனை வரலாற்றில் 1990ஆம் ஆண்டு ஒரு முக்கியமான கால கட்டமாகும். நீண்ட உள்நாட்டு யுத்தத்திற்கு பின்பு 1989ம் ஆண்டு ஆரம்பத்தில் அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் குறுங்கால யுத்த நிறுத்தமொன்று அமுலில் இருந்தது. துரதிஷ்டவசமாக இவ்யுத்த நிறுத்தம் மீறப்பட்டு மீண்டும் யுத்த நடவடிக்கைகள் இவ்விரு சாராருக்கும் இடையில் ஜூன் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகின. திடீரென வெடித்த இவ் உள்நாட்டு யுத்தம் வடகிழக்கு பிரதேசம் முழுவதும் பரவலாக நடை பெற்றது. பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இவ் யுத்ததினால் உயிரை இழந்தனர். மேலும் பல லட்சக்கணக்கானவர்கள் பல்வேறு வகையான பாதிப்புக்குள்ளாயினர். உதாரணமாக இவ் யுத்தம் ஆரம்பித்த 1990 ஜூன் மாதத்திலிருந்து டிசம்பர் வரையான 7 மாதங்களுக்குக்கிடையில் வடக்கு-கிழக்குப் பிரதேசத்தைச் சேர்ந்த ஏறக்குறைய பத்து இலட்சம் அப்பாவி மக்கள் இவ்யுத்தால் பாதிக்கப்பட்டு அகதிகளாயினர். இவ்வினப்பிரச்சனையால் உருவான இவ்வகதி வெள்ளத்தை அகதிகளுக்கான ஐக்கிய அமெரிக்காவின் குழு இலங்கையை ‘அகதிகளின் தீவு’ என்று தனது விசேட அறிக்கையொன்றில் குறிப்பிட்டு இலங்கையின் அக்கால அகதிப் பிரச்சனையின் தாற்பரியத்தை சுட்டிக் காட்டியது (US committee for refugees 1991). இப்பிரதேசத்தின் பொருற்களுக்கும் உடமைகளுக்கும் ஏற்பட்ட அழிவுகள் மதிப்பிடப்பட முடியாதவை. சுருக்கமாக இவ்யுத்தம் வடக்கு-கிழக்கில் வாழ்ந்த குறிப்பாக தமிழ் மக்களையும் அதே நேரத்தில் முஸ்லீம், சிங்கள மக்களையும் நிலைகுழையச் செய்த்தது.
இவ்யுத்தம் மேலே குறிப்பிட்ட அழிவுகளோடு இலங்கையின் இன உறவில் மேலும் பிளவினை ஏற்படுத்தியது. குறிப்பாக தமிழ்-முஸ்லீம் உறவுகள் இக்கால கட்டத்தில் வெகுவாகப் பாதிக்கப்பட்டன. அதாவது 1990 ஒக்டோபரில் உள்நாட்டு யுத்தத்திற்கு கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லீம் மக்களும் பலியாகினர். இப்பிரச்சனை உக்கிரமடைய ஆரம்பித்த 1983ஆம் ஆண்டிலிருந்து 1990ஆம் ஆண்டுவரை முஸ்லீம் தமிழ் மக்கள் நல்லுறவோடு வாழ்ந்து வந்தனர். ஆனால், 1990ஆம் ஆண்டு ஜூன் மாத உள்நாட்டு யுத்தத்தோடு இவ்விரு இன மக்கள் மத்தியிலும் சந்தேகமும் நம்பிக்கையீனமும் எழ ஆரம்பித்தது. அதுவரையில் இனப்பிரச்சனையால் ஏற்பட்ட பாதிப்புகளை பரஸ்பரம் பங்கிட்டு நன்மையிலும் தீமையிலும் சகபடிகளாக வாழ்ந்த இவ்விரு இனமக்களும் அரசியல் ஆயுத சக்திகளின் ஊடுருவலால் ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இக்காலத்தில் தமிழ்-முஸ்லீம் முரண்பாடு குறிப்பாக கிழக்கு மாகாணத்திலேயே அதிகமாக காணப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இக்கால கட்டத்தில் நிகழ்ந்த தொடர்புடைய பல நிகழ்வுகள் பற்றி இங்கு குறிப்பிட வேண்டியது அவசியமாகும். ஜூன் மாத யுத்த நிறுத்த மீறலோடு, கிழக்கு மாகாணத்தில் இலங்கை ராணுவம் மேற்கொண்ட தமிழ் மக்களுக்கு எதிரான படையெடுப்பின் போது முஸ்லிம்களின் உதவி இராணுவத்தால் பெறப்பட்டது என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் பரப்பப்பட்டது. அதே நேரத்தில் இக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லீம் மக்களுக்கெதிரான ஆயுத ரீதியான நடவடிக்கைகளும் படுகொலைகளுக்கும் விடுதலை புலிகள் இயக்கம்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்நிகழ்வுகள் இப்பிரதேச அப்பாவி தமிழ்-முஸ்லீம் மக்களை ஒருவரை ஒருவர் மேலும் சந்தேகக் கண்கொண்டு பார்க்கும் சூழ்நிலைக்கு உள்ளாகியது. முஸ்லிம்களை கிழக்கிலிருந்து வேரறுக்க மேற்குறித்த தமிழ் ஆயுத சக்திகள் முனைகின்றன என்ற குற்றச்சாட்டும் முஸ்லிம்களால் முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கெதிரான இராணுவத்தின் அடாவடித்தனமான அத்துமீறிய நடவடிக்கைகளுக்கு கிழக்கு மாகாண முஸ்லீம் ஊர்காவல்ற்படையினர் உடந்தையாக இருந்தார்கள் என்று தமிழ் மக்களால் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சிகள் முடிவாக, ஆயுதப் படையினதும், ஆயுதக் குழுக்களினதும் ஆயுதப் பலப் பரீட்சைக்கு கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லீம் உறவு பலியாகியது. கிழக்கில் புதிதாக உருவான தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளால் எந்த அளவு தூரம் பிற சக்திகள் பயனடைந்தார்களோ தெரியவில்லை. ஆனால் பல நூற்றாண்டு காலம் ஒன்றாக ஒரு பிரதேசத்தில் அந்நியோன்யமாக வாழ்ந்த தமிழ்-முஸ்லீம் மக்களுக்கிடையில் இனமுரண்பாட்டை வலுப்படுத்த இக்காலகட்ட நிகழ்வுகள் வெகுவாக உதவின என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
கிழக்கு மாகாண இன முரண்பாடுகள் மேற்குறித்த நிலையில் காணப்பட்ட போதும், முஸ்லீம்-தமிழ் இன விரிசல்களின் எதிரொலிகள் வடக்கில் அப்போது பிரதிபலிக்கவில்லை. இவ்வாறான ஒரு தமிழ்-முஸ்லீம் இனப்பிரச்சனை சூழல் இக்காலத்தில் வடக்கில் காணப்படவில்லை என்பதை அக்கால பத்திரிகைச் செய்திகள், வாய்மூல ஆதாரங்கள் மிகத் தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன. வட மாகாண முஸ்லிம்களைப் பொறுத்தவரை கிழக்கில் ஏற்பட்ட தமிழ்-முஸ்லீம் உறவு மாற்றங்கள் வடக்கில் உடனடியாக தாக்கத்தை ஏற்படுத்தாமைக்கு பல காரணங்களை குறிப்பிடலாம். முதலில் வடக்கு-கிழக்கில் முஸ்லீம் மக்களின் பரம்பல் வேறுபாடுகளைக் குறிப்பிடலாம். இவ்விரு பிரதேச முஸ்லிம்களின் பரம்பல்களின் புவியியல் ரீதியில் தொடர்ச்சியற்ற தன்மை காணப்பட்டது. அதாவது, கிழக்கு மாகாண தமிழ்-முஸ்லீம் இனமுரண்பாடுகள் வடக்கில் உடனடியாக பிரதிபலிப்புகளை ஏற்படுத்தக் கூடியவாறான புவியில் தொடர்ச்சித் தன்மை இவ்விரு பிரதேச முஸ்லீம் மக்களின் பரம்பல் முறையில் காணப்படவில்லை. இவ்விரு பிரதேச முஸ்லிம்களும் தனித்துவமான புவியில் பரம்பலைக் கொண்டிருந்தனர். இப்பரம்பல் வேறுபாடு தமிழ்-முஸ்லீம் இன உறவு வேறுபாட்டிலும் அவதானிக்க கூடியதாக இருக்கினறது.
வட மாகாணத்தை மட்டும் குறிப்பாக நோக்கினால் இங்கு முஸ்லிம்களின் பரவலாகவும், மிக அதிகமான பிரதேசங்களில் இவர்கள் எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையினராகவும் காணப்பட்டார்கள். தமிழ்-முஸ்லீம் இன ஐக்கிய கூட்டு வாழ்க்கை இரு சாராருக்கும் சாதகமாகக் காணப்பட்டது. குறிப்பாக முஸ்லீம் சிறுபான்மையினருக்கு தமிழ் பெரும்பான்மையினரின் பொருளாதார, சமூக ஒத்துழைப்பும், ஒத்தாசையும் என்றும் தேவைப்படும் சூழ்நிலை வட மாகாணத்தில் காணப்பட்டது. தமிழ் பெரும்பான்மையினரின் கண்ணோட்டத்தில் வட மாகாண முஸ்லீம் சிறுபான்மையினரின் எண்ணிக்கை ரீதியாக, பிரதேச ரீதியாக, அரசியல் ரீதியாக ஒரு சவாலாகக் காணப்படவில்லை. அதனால் நீண்ட கால தமிழ்-முஸ்லீம் இந ஐக்கியம் ஒரு பாரம்பரியமாக வடக்கில் வளர்ச்சி பெற்றிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் 1989ஆம் ஆண்டு இனப்பிரச்சினையின் மிக இக்கட்டான காலக்கட்டத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தல் தமிழ்-முஸ்லீம் உறவில் ஏதும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாமா என்ற அம்சமும் மிகக் கவனமாகப் பரீட்சிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 1989ஆம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முற்றாக முடிவுறாத சூழ்நிலையில் பொதுத்தேர்தல் ஒன்று நடத்தப்பட்டது. விடுதலைப்புலிகள் இத்தேர்தலை பகிஷ்கரித்தது. ஆனால் அது தமிழ் மக்களை தேர்தலை பகிஷ்கரிக்கும் படி கேட்கவில்லை. முன்னாள் ஆயுதக் குழுக்கள் உற்பட பல தமிழ் கட்சிகள் வட மாகாண தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்டன. இத்தேர்தல் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் வடமாகாணத்தின் வன்னித் தேர்தல் தொகுதியில் போட்டியிட்டது. வன்னித் தேர்தல் தொகுதி வட மாகாணத்தின் மன்னார், வவுனியா முல்லைத்தீவு ஆகிய மூன்று நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருந்தது. இம்முன்று நிர்வாக மாவட்டங்களும் முஸ்லீம் மக்கள் குறிப்பிட்ட அளவு எண்ணிக்கையில் வாழ்ந்த மாவட்டங்களாகும். சிறி லங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி இலங்கையின் கட்சி அரசியலுக்கு புதிதாகும். வடக்குக் கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் அபிலாசைகளை பாராளுமன்றத்தில் தனித்துவமாகப் பிரதிபலிப்பதற்காக இக்கட்சி இத்தேர்தலில் போட்டியிடுவதாக கூரியது. வன்னித் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்களின் பரவலான ஆதரவையும் இக்கட்சி பெற்று இத் தேர்தலில் ஒரு பாராளுமன்ற அங்கத்தவரையும் பெற்றுக் கொண்டது.
வன்னித் தேர்தல் தொகுதியில் சிறி லங்கா முஸ்லீம் காங்கிரசின் வெற்றி ஒரு தற்செயலான நிகழ்வு அல்ல. இத் தேர்தல் தொகுதியில் முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க விகிதாசாரத்தினராகக் காணப்பட்டார்கள். இத்தேர்தல் தொகுதியில் மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் செறிவு அதிகமாகக் காணப்பட்டது. அதாவது அம்மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் ஏற்க்குறைய 30 சதவீதமாகவும், இன்மாவட்டத்தின் முசலி உதவி அரசாங்க அதிபர் பிரிவின் மொத்த சனத் தொகையின் 66 சதவீதமாகவும் மன்னார் தீவு உதவி அரசாங்க அதிபர் பிரிவின் 40 சதவீதமாகவும் காணப்பட்டனர்.
மன்னார் மாவட்டத்தின் மேற்குறித்த இரு உதவி அரசாங்க அதிபர் பிரிவுகளிலும் முஸ்லிம்களின் விகிதாசார ரீதியான செறிவு இக்காலகட்ட இலங்கையின் இன அரசியலிலும் பிரதிபலித்து இருப்பதை இங்கு சுட்டிக் காட்ட வேண்டும். அதாவது வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்களின் அரசியல் தனித்துவத்தை உறுதிப்படுத்த இன சுயாட்சி முறையிலான அரசியல் சீர்திருத்தங்கள் முன் வைக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முஸ்லீம் அரசியல் கட்சிகள் பல அக்காலத்தில் முன்வைத்திருந்தன. முஸ்லிம்களின் மேற்குறித்த இன சுயாட்சி கோரிக்கை முன்வைக்கப்பட்ட காலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் மூலமாக வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி முறையிலான ஒரு மாகாண சபை அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்தது வந்தது.
முஸ்லீம் அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்பட்ட சுயாட்சிக் கோரிக்கையானது, வடக்கு கிழக்கு மாகாணங்களில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பிரதேசங்களை இணைத்த அடிப்படையில் ஒரு பிரதேச சுயாட்சிமுறை ஒன்று அரசியல் யாப்பு சீர்திருத்தத்தில் முஸ்லிம்களுக்கு ஒழுங்கு செய்யப்பட வேண்டும் என்பதாகும். இவ்வாறு முஸ்லிம்களின் பிரதேச சுயாட்சிக்காக கிழக்கு மாகாணத்தில் தெற்கே பொத்துவிலில் இருந்து வடக்கே திருகோணமலை வரை 6 நிலத் தொடர்ச்சியற்ற முஸ்லீம் பிரதேசங்களும் அத்துடன் வாடா மாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் முசலி, எருகலம்பிட்டி என்ற முஸ்லீம் செறிந்து வாழ்ந்த பிரதேசங்களும் அடையாளப்படுத்தப்பட்டிருந்தன. மேற்குறித்த முஸ்லிம்களின் சுயாட்சிக் கருத்துக்களை முன் வைத்த அரசியல் கட்சிகள் கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்கள் செறிவாக வாழ்ந்த அம்பாறை மாவட்டத்தின் அரசியல் பலத்தை அடிப்படையாகக் கொண்டவைகள் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். உண்மையில் பிரதேச சுயாட்சிக்கான கோரிக்கை மன்னார் மாவட்ட முஸ்லிம்களால் அக்காலத்தில் முன்வைக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் இல்லை.
கிழக்கு தமிழ் முஸ்லீம் முரண்பாடுகளோடு முன்வைக்கப்பட்ட முஸ்லிம்களுக்கான பிரதேச சுயாட்சியும், அதில் வடமாகாண முஸ்லீம் செறிவுகள் உள்ளடக்கப்பட்ட அம்சமும், வட மாகாண முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்தோடு தொடர்புபட்டவையா? என்ற அம்சங்களும் மிகவும் கவனமாக பரிசீலிக்க படவேண்டியவையாகும்.
1989ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னரும் வடக்கில் முஸ்லீம்-தமிழ் உறவு வழமைபோலவே காணப்பட்டது. தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய மனோபாவத்தில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய குறிப்பான நிகழ்ச்சிகள் எதுவும் இக் காலத்தில் வடக்கில் ஏற்படவில்லை. மாறாக 1990ஆம் ஆண்டு யுத்த காலத்தில் வடமாகாணத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் பல தமிழ்-முஸ்லீம் உறவை மேலும் வலுப்படுத்த உதவியது. உதாரணமாக அக்கால கட்டத்தில் அரசங்கப் படைகளின் செல் தாக்குதல்களாலும், படையெடுப்பாலும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் கிராமம் கிராமமாக இடம்பெயர்ந்து தமது சுழலிலுள்ள முஸ்லீம் கிராமங்களில் தஞ்சமடைந்தனர். அப்போது முஸ்லீம் மக்களால் தமிழ் மக்கள் ஆதரிக்கப்பட்டு உணவளித்து, உறையுள் அளித்து பாதுகாக்கப்பட்டனர். அக்காலத்தில் தமிழ் மக்களின் கேடயமாக முஸ்லீம் மக்கள் இருந்தனர். முஸ்லீம்-தமிழ் இன ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் இது போன்று வேறு பல நிகழ்ச்சிகளும் மன்னார, வவுனியா, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய ஏனைய வட மாகாண மாவட்டங்களிலும் இக்கால கட்டத்தில் நிகழ்ந்தன. இம்முஸ்லிம் கிராமங்களில் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற தற்காலிகப் பாதுகாப்பை வடக்கின் சில பிரதேசங்களில் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும் அனுபவித்தனர் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றம் நிகழும் வரை முஸ்லீம் கிராமங்கள் தமிழ் மக்களினது சரணாலயங்களாக காணப்பட்டன.
இது இலங்கையின் இனப்பிரச்சனையும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட வடமாகாண முஸ்லிம்களும் என்ற புத்தகத்தில் இருந்து ஒரு பகுதி
இது 1997ஆம் ஆண்டு எழுதப்பட்டது.