பாலஸ்தீனத்தில் இடம்பெறும் இனப்படுகொலைகளும் சர்வதேச சட்டத்தின் காலனீய உள்ளகமும்

-ஜோசே மனுவெல் பர்ரெடோ –

பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலைகள் சர்வதேச சட்ட ஒழுங்கு, காலனித்துவ சட்டகத்தில் ஆழமாகப் பிணைக்கப்பட்டிருப்பதை அம்பலப்படுத்தியுள்ளது. வெஸ்ட்fபாலியன் முறைமை என அழைக்கப்படுவது, ஐ.நா. சாசனத்தில் ‘சமமான’ ‘இறையாண்மை’ ‘அரசுகளில்’ ஒன்றாக திருத்தங்களுக்கு இடமளிக்காத வகையில் கவனமாக விவரிக்கப்பட்டு சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்டுள்ளது. நேர்மறையான சர்வதேச சட்டத்தின் ‘கறுப்பு எழுத்துக்களுக்கு’ எதிராக, பாலஸ்தீனர்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் இனப்படுகொலை, (மாநிலங்களின் இறையாண்மை சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்ட) முன்னாள் தாராளவாதிகள் மற்றும் (ஒவ்வொரு மாநிலத்தினதும் விருப்பத்தின் சமத்துவ மதிப்பைக் கடைப்பிடித்தொழுகும்) ஜனநாயகவாதிகள் ஆகியோரது சர்வதேச சட்ட ஒழுங்கின், பொருள் நலன்சார் நிலைப்பாட்டின் யதார்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது.

இது சமமானவர்களின் ஒழுங்கு அன்று; இறையாண்மை கொண்டோர் மற்றும் அரசுகளின் ஒழுங்கும் அல்ல. மாறாக, தலை துண்டிக்கப்பட்ட சிறுவர்கள் – சிறுமிகளின் மீதமான முண்டங்களது கோர உருவங்களும், குண்டுவீச்சில் சிதைந்துபோன உடல்களின் எச்சங்களும் பன்னிரண்டு மாதங்களாக மொபைல் போன்கள், கணினிகள் மற்றும் தொலைக்காட்சிகளின் திரைகளில் மீண்டும் மீண்டும் தோன்றுவதால், சர்வதேச சட்ட அமைப்பு, அதன் உள்ளகத்தில் உண்மையான  இருந்ததை வெளிப்படுத்தியுள்ளது: நம் கண்களுக்கெதிரே கொடுமையான ஒரு காலனித்துவ கட்டளைமுறை, சமமற்ற குடிமக்களின் வரிசை; இறையாண்மைகொண்டோர் மற்றும் காலனித்துவப்படுத்தப்பட்டவர்கள்; மற்றும் மாநிலங்கள், பேரரசுகள், குடியேறிகள் மற்றும் காலனிகள்… சீர்குலைந்த இந்த ‘ஒழுங்கின்’ இரத்தமும் சதையுமான சாட்சியங்களாக இருக்கின்றனர்.

காசாவில் இனப்படுகொலையை நிறுத்தி அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலுக்கு உத்தரவிடும் ஐ.நா பாதுகாப்பு சபையில் வைக்கப்பட்ட முன்மொழிவுகளைத் தடுப்பதற்கு அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்திய தருணங்கள் மற்றும் அவற்றின் முடிவுகள் தான்… சர்வதேச சட்டம் காலனித்துவத்தின் பிடியில் செய்வதறியாது விழிபிதுங்கி நின்ற யதார்த்தம் வெளிப்பட்ட இடங்கள்! வீட்டோ அதிகாரம் என்பது இரண்டாம் உலகப் போரில் வெற்றி பெற்றவர்களுக்கான சலுகை மாத்திரமல்ல; இது ஒரே நேரத்தில் முன்னாள் மற்றும் புதிய பேரரசுகளான அமெரிக்கா, பிரிட்டிஷ், பிரெஞ்சு மற்றும் சோவியத்/ரஷ்யா ஆகிய அதே வெற்றியாளர்களால் அவர்களாகவே தமக்கென பெற்றுக்கொண்டதோர் அனுகூலமாகும்.

பெரும் வல்லரசுகள் இரண்டு ஆளுமைகளைக் கொண்டுள்ளன அல்லது இரண்டு வித்தியாசமான ஆற்றல்களோடு செயல்படுகின்றன: அவை சட்டபூர்வமாக அரசுகளாகவும், பொருள்வள ரீதியாக பேரரசுகளாகவும் இருக்கின்றன. பாதுகாப்பு கவுன்சிலின் ஒரு நிரந்தர உறுப்பினரின் வீட்டோ என்பது முதலில் மற்ற அனைத்து நிரந்தர மற்றும் இடைக்கால உறுப்பினர்களின் வாக்குகளை மிஞ்சி மேலோங்கும் ‘உரிமை’ என்றாகிறது; பெரும்பான்மை என்ற ஜனநாயக நெறிமுறையின் ‘முடக்கத்தை இயல்பாக்குவது’ என்பது தான் அதன் விளக்கம். இந்த சிறப்புரிமை, ஒருவரின் வாக்கு ஏனைய அனைத்து இறையாண்மைகளின் வாக்குகளை விட அதிகமான மதிப்பை பெறுவதற்கு அனுமதிக்கிறது. இதன் விளைவாக, அவர்கள் பாதுகாப்பு கவுன்சில் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மற்ற உறுப்பினர்களுக்கு சரி நிகர் சமானமான இறையாண்மை கொண்டவர்கள் அல்ல. ஓர்வெல்லியன் பாணியில், இந்த ஐந்து நாடுகள் – அமெரிக்கா உட்பட, ஐ. நா சபையின் ஏனைய இறையாண்மைகள் அனைத்தையும் விட அதிக இறையாண்மை கொண்டவை. ஆகையால், 1648ல் வெஸ்ட்fபாலியாவிலும் 1945 இல் சென் பிரான்சிஸ்கோவிலும் சர்வதேச சட்டத்தின்படி அனைத்து இறையாண்மை கொண்ட குடிமக்களினது முறையான நாடுகளாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும் கூட இவை உண்மையான பேரரசுகள்.

வீட்டோ அதிகாரம், சர்வதேச சட்டங்களை மீறி செயற்படுவதற்கான இரண்டாவது பண்புசார் முன்வாய்ப்பை இந்த ஐவருக்கும் வழங்குகிறது. ஐ.நா. மற்றும் சர்வதேச சமூகத்தை ஒவ்வொரு இறையாண்மை கொண்ட மனித உரிமைகள் நிலைமைகளை ஆய்வுக்கு உட்படுத்தவும், உரிமை மீறல்களுக்கு உரியவர் பொறுப்பேற்கவும் அனுமதிக்கிறது; இவ்வாறு நாடுகளின் இறையாண்மைக் கொள்கை மனித உரிமை முறைமைகளின் தொடரான இடையீடுகளால் நேர்நிலை மாற்றங்களுக்கு உட்பட்டது. இவ்வகையான இறையாண்மையின் நேர்நிலை ‘உட்புகவிடும் தன்மை’, ஒவ்வொரு தடவையும் இனப்படுகொலையை நிறுத்துமாறு உலக நாடுகளால் இஸ்ரேலுக்கு விடுக்கப்பட்டு வந்த அறிவுறுத்தல்களை தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து அமெரிக்கா தடுத்து நிறுத்தும் போது கேலிக்கிடமாகிறது. ஒரு வந்தேறுகுடி காலனித்துவ நாடாகிய இஸ்ரேலின் கொலைபாதகத்துக்கான இறையாண்மை, அமெரிக்க எனும் சாம்ராஜ்யத்தின் விருப்பத் தேர்வினால் பாதுகாக்கப்படுகிறது. இது பொதுவாகவும் கடுமையாகவும் தொடர்ந்தேர்ச்சையாக மனித உரிமைகளை மீறுவதையும் அதன் உச்சகட்ட அவலத்தையும் கொண்டு நடத்துவதற்கான உரிமத்தை இஸ்ரேலுக்கு வழங்குகிறது. அதுதான் இனப்படுகொலை!

இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவதற்கான சர்வதேச சட்ட சீர்திருத்தம்

பாலஸ்தீன இனப்படுகொலையானது, ஐக்கிய நாடுகள் சபை அமைப்பினதும், சர்வதேச சட்டங்களினதும் சீர்திருத்தத்தை இனியும் காலந்தாழ்த்தாமல் மேற்கொள்வதற்கான உந்துதலை அதிகப்படுத்தியுள்ளது. தற்போது இடம்பெற்றபடி இருக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்தும் விடயத்தில் அதன் விளைவுகளை ஏற்படுத்தாது என்றபோதிலும், அது எதிர்கால நிகழ்வுகளில் எதிர்பார்க்கப்படும் விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். வீட்டோ அதிகாரத்தை நீக்குதல் என்ற இலட்சியத்தைத் தாண்டி நடைமுறைப்படுதக்கூடிய பல சீர்திருத்தங்கள் தேவையாக இருக்கின்றன. ஐ. நா. நிரந்தர உறுப்பினர்களின் ஏகாதிபத்திய அதிகாரங்களையும் பாதுகாப்பு சபையின் காலனித்துவ தன்மையையும் குறைப்பதற்கும், இனப்படுகொலையின் போது பாதுகாப்பு சபை முடங்கிச் செயலிழந்து போவதை தடுப்பதற்கும் ஏற்பாடுகள் தேவை. ஐ.நா. முழுவதுமே ஒன்றுக்கும் உதவாத ஒரு நிறுவனம் என்னும் இன்றைய உலகில் பலருக்கு இருக்கும் அபிப்பிராயத்தின் காரணமாக அது மதிப்பிழப்பதை தவிர்க்க வேண்டுமாயின் வீட்டோ அதிகாரங்களில் ஒரு முக்கிய சீர்திருத்தம் அத்தியாவசியமானதாகும். உலகம் முழுவதும் அல்லலுறும் முழு மக்களின் துன்பத்தையும் ஏகாதிபத்தியத்தின் செயலாற்றல் மற்றும் கொள்திறனுக்கு முன்னிலைப்படுத்தினால்; இனப்படுகொலை விஷயத்தில் வீட்டோவின் பயன்பாடு இல்லாதொழியும்.

சர்வதேச நீதிமன்றத்தை தவிர்த்து, இனப்படுகொலையின் இருப்பு பற்றிய முந்தைய முடிவை ஒரு அரசியல் அமைப்பின் பொறுப்பில் கொடுத்து விட முடியாது. ஏனெனில் 1948 தொடக்கம் இனப்படுகொலை தொடர்பான பேராண்மைப் பேரவையின் காப்பு நிலைப் பொறுப்பை அந்நிறுவனமே தன்வசம் வைத்திருக்கிறது. பெண்கள் சிறுவர்கள், குழந்தைகள் உட்பட இலட்சக்கணக்கான மனித உயிர்கள் படுகொலை செய்யப்பட்டு, ஊனமாக்கப்பட்டு, அவர்களது உடல்கள் குரூரமாக சிதைக்கப்பட்டு; இப்படி திட்டமிட்ட முழுமையானதோர் கொலைக்களத்தின் தொடர் நிகழ்வு அரங்கேறிக்கொண்டிருக்கிறது. இந்தத் தறுவாயில், இதன் துயரார்ந்த கடுமை மற்றும் விரைவுக்கு ஏற்ப விசேடமான மற்றும் விரைவானதொரு நடைமுறையைக் கைக்கொண்டு இந்த இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக சர்வதேச நீதிமன்றம் வேகமாக செயல்பட வேண்டும். வழமை போல் எல்லாம் நடந்து முடிந்து பல வருடங்கள் ஆனதன் பின்னால் அரசின் பொறுப்புக் கூறலை நிலை நாட்டுவதற்கு ‘துரத்திப் பிடிக்கும்’ செயன்முறை பயனளிக்காது. தென்னாப்பிரிக்காவின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு மாதத்திற்குப் பிறகு தற்காலிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு உத்தரவிட்ட நீதிமன்றம், இனப்படுகொலைக்கான ‘உடனடி ஆபத்து’ அல்லது இனப்படுகொலை நடைபெற்றுக் கொண்டிருப்பதற்கான தென்னாப்பிரிக்காவின் கூற்றுக்கு ‘நம்பத்தகுந்த’, சாத்தியமான ‘உடனடி ஆபத்து’ இருப்பதற்கான சாட்சியங்களை கண்டறிந்தது.

பாலஸ்தீன இனப்படுகொலை விடயத்தில் தனிப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய விசாரணையைப் பொறுத்தவரை, AIPACஎனப்படும் அமெரிக்க இஸ்ரேலிய பொது விவகாரக் குழுவினால் போஷிக்கப்படும் இரு பிரதான கட்சிகளையும் சேர்ந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் மொசாட் போன்ற புலனாய்வு நிறுவனங்கள் விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆளாகின்றது என்ற விடயம் மிக வெளிப்படையானது. இத்தகைய அச்சுறுத்தல்களின் விளைவாக, இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் கலண்ட் ஆகியோரைக் கைது செய்வதற்கான பிடியாணையை முன்னெடுக்கும் குற்றவியல் வழக்குத்தொடுனர் நடவடிக்கை குறித்து ஒரு முடிவை எடுப்பதை நீதிமன்றம் தவிர்த்துவிட்டது. இத்தகைய நடவடிக்கைகள் பொதுவாக நீதிமன்ற அவமதிப்பு குற்றமாக தேசிய அரசு அதிகார வரம்புகளில் வகைப்படுத்தப்படுகின்றன. சர்வதேச நீதித்துறை நடவடிக்கைகளில் ஏகாதிபத்திய அல்லது காலனித்துவ தலையீடுகள் மற்றும் அதற்குப் பொறுப்பானவர்களைத் தண்டிப்பதற்கு ரோம சட்டத்தில் ஒரு புதிய சர்வதேச குற்றவியல் ஒழுங்கு இனித்தான் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.

பாலஸ்தீன இனப்படுகொலை மற்றும் காலனித்துவத்தின் இனப்படுகொலை வரலாறு

கடந்துபோன ஐநூறு வருடகாலமாக காலனித்துவத்துவம் நடத்தி இருக்கும் இனப்படுகொலைகளின் வரலாறு மற்றும் அதன் பின்னால் இருந்து இயக்கும் கருத்தமைவையும் பாலஸ்தீனில் இடம்பெறும் இனப்படுகொலை வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இனப்படுகொலை பற்றிய பொதுவான கருத்து; அது ஐரோப்பியமையமானது என்பதாகும். நாஸி அட்டூழியங்களின் பின்னணியில் ரபேல் லெம்கின் உருவாக்கிய ‘இனப்படுகொலை’ எனும் இந்த சொல் பின்னர் 1948ம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலை மாநாட்டில் ஹோலோகாஸ்ட் பேரழிவை ஒரு மேற்கோளாகக் காட்டியது. இதுவே மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேசக் குற்றம் ஆகியவற்றை இனப்படுகொலை என்ற பெயரில் வகைப்படுத்துவதற்கான முதலாவதும் உலகம் தழுவியதுமான சட்ட வரைவிலக்கணமாக ஆனது. இந்த வார்த்தையின் உருவாக்கம் மற்றும் அதற்கான சட்ட அங்கீகாரம் ஆகியவை ஐரோப்பாவின் புவியியலுக்குள் நடாத்தப்பட்ட ஹொலோகாஸ்ட் எனும் ஒரு பயங்கரமான குற்றத்திற்கு பதிலாய் அமைந்தது. இந்தப் பெருங்களப்பலி இன்னும் ஐரோப்பா மற்றும் உலக வரலாற்றில் ஒரு மைய இடத்தைப் பிடித்துள்ளது. பெரும்பாலான நேர்வுகளில், விமர்சன ரீதியாக, இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பியர்கள், ஐரோப்பிய யூதர்கள்ஆவர். இனப்படுகொலை மாநாடு ஒரு நாட்டின் ஒரு பிரதேசத்தை இனப்படுகொலையை நிறைவேற்றக்கூடிய இடமாக குறிப்பிடுகிறது. ஹோலோகாஸ்ட் எனப்படும் கொடூரமான குற்றத்தின் பின்னணியில் உள்ள மரண இயந்திரமாக நாஜி சர்வாதிகார அரசு இருந்து செயற்பட்டது. மேலும், இதனால் பாதிக்கப்பட்டோர் ஒரு இனம், மதம் மற்றும் சிறுபான்மையினர் என வகைப்படுத்தப்பட்டனர்: அவர்கள் யூதர்கள். ஹோலோகாஸ்ட் என்பது இனப்படுகொலைக்கான சட்டபூர்வ முன்னுதாரணமாக மாறிவிட்டது என்றும், ஒரு நிகழ்வு ‘இனப்படுகொலையாக இருக்க வேண்டுமென்றால் அது ஹோலோகாஸ்டை ஒத்திருக்க வேண்டும்’ என்றும் டிர்க் மோசஸ் எழுதியுள்ளார். இந்தக் கலாச்சாரப் பரப்பில், இனப்படுகொலையின் ஐரோப்பிய மைய வரலாறு ஒரே ஒரு நிகழ்வால் மாத்திரம் ஆனது; அதே நேரத்தில் அதுவே முதலாவதும் கடைசியுமானது. அதுவே ஹோலோகாஸ்ட்.

ஆயினும்கூட, நவீன காலனித்துவ வரலாற்றில் இனப்படுகொலையை நாம் இடஞ்சொற்பொருள் வகையில் மீள்வரைவு செய்தால், இனப்படுகொலை என்பது சாராம்சத்தில் 20 ஆம் நூற்றாண்டு மற்றும் ஐரோப்பிய நிகழ்வு மாத்திரமல்ல; 15 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளில் இருந்து காலனித்துவ இனப்படுகொலையின் நவீன வரலாறு தொடராக இருப்பதைக் கண்டுகொள்ளலாம். இந்த வரலாறு அமெரிக்காவைக் கைப்பற்றியதன் மூலமும், நூற்றுக்கணக்கான அமெரிக்க பழங்குடி மக்கள் மற்றும் மில்லியன் கணக்கான ஏனைய கண்டங்களைச் சேர்ந்த மனிதர்களை வகை தொகையின்றி அழிப்பதாலும் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேலும், நவீன காலனித்துவத்தின் வரலாறு முழுவதும் இந்த செயன்முறை இன்று வரை நீடித்தபடியே உள்ளது. அவற்றிடையே கொங்கோ மற்றும் நமீபிய இனப்படுகொலைகளையும் நாம் குறிப்பிடலாம்.

கொங்கோ இனப்படுகொலை பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பெல்ஜியத்தைச் சேர்ந்த  ஒரு தனியார் தொழிலதிபரால் மேற்கொள்ளப்பட்டது. கொங்கோ சர்வதேச சங்கம் என்னும் காலனித்துவ கம்பனியின் ஒரே பங்குதாரர் மற்றும் ஒற்றை உரிமையாளரான கிங் லியோபோல்ட் II தான் அவர். பிரமாண்டமான இந்த ஆப்பிரிக்கப் பிராந்தியத்தின் ரப்பர் மற்றும் யானைத் தந்தங்களைக் கொள்ளையடிப்பதற்காக, அந்த நிறுவனத்தின் ஊடாக கிங் லியோபோல்ட்II எனும் இந்தத் தனிமனிதன் பெரும்பாலான நிலங்களைக் கையகப்படுத்தினார். அங்கு வாழ்ந்த குழந்தைகள் உட்பட மக்கள்தொகையில் ஒரு பகுதியை அடிமைப்படுத்தி, அவர்களது வாழ்வியலை சிதைத்து, சுமார் 1 கோடி முதல் 2 கோடி மக்களின் இனப்படுகொலைக்கு அவரது காலனித்துவ பின்புலம் காரணமாக அமைந்தது.

ஐரோப்பிய யூதர்களின் இனப்படுகொலைக்கு வழங்கப்பட்ட அதே தார்மீக, சட்ட, மற்றும் அரசியல் அங்கீகாரத்தின் விளைவாக உருவான கண்டனங்கள், சில ஆண்டுகளுக்கு முன்னர், அதே குற்றவாளி நாடான ஜெர்மனியால் செய்யப்பட்ட மற்றொரு இனப்படுகொலைக்கு எதிராகப் பயன்படுத்தப்படவில்லை. இருப்பினும், இந்த இனப் படுகொலையின் சூத்திரதாரிகள் SS என்ற சுருக்கப் பெயர்கொண்ட, ஷுட்ஸ்டfப்fபிள் எனப்படும் ஹிட்லரின் பிரத்தியேக கொலைபாதக துருப்புக்கள் அல்ல. மாறாக, அவை மேற்கு ஆப்பிரிக்காவின் ஜேர்மனியக் காலனியை ஆக்கிரமித்த ஜெர்மன் பேரரசின் துருப்புக்கள். அவர்களை வழி நடாத்தியது ஹிட்லர் அல்ல. ஜெனரல் லோதர் வான் ட்ரோதாவால் கட்டளையிடப்பட்டு அவர்கள் இயக்கப்பட்டனர். இந்த இனப்படுகொலை ஐரோப்பாவிற்கு வெளியே, ஆப்பிரிக்காவில், இன்றைய நமீபியாவில் நடந்தது. இதில் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பியர்கள் அல்ல; ஆனால், ஐரோப்பாவினால் காலனித்துவப்படுத்தப்பட்ட நாமா மற்றும் ஹெரேரோ பழங்குடி மக்கள்.

உலகளாவிய புவியியல் பரிமாணம் கொண்ட காலனித்துவத்தின் ஆள் பரப்புகளில் காலனித்துவம் மேற்கொண்ட இனப்படுகொலைகள் அரங்கேறியபடி இருந்தன. காலனித்துவ இனப்படுகொலைகள் சிறுபான்மையினருக்கு எதிராக அரசுகள் மேற்கொண்டவை மாத்திரமல்ல. இதற்கு மாறாக, பேரரசுகள், காலனித்துவ நிறுவனங்கள் மற்றும் ஆக்கிரமிப்பு நாடுகள் அல்லது வந்தேறுகுடி காலனித்துவ அரசுகள் சுதேச மக்களுக்கு எதிராக காலனித்துவ இனப்படுகொலைகளை செய்துள்ளன. அவற்றில் பாலஸ்தீனத்தில் இடம்பெற்றுவரும் காலனித்துவ இனப்படுகொலையையும் நாம் உள்ளடக்கலாம்.

கடந்த ஐந்து நூற்றாண்டுகளாக நடந்ததைப் போலவே, பாலஸ்தீன இனப்படுகொலையும், ஐரோப்பிய குடியேற்ற காலனித்துவம் அதன் வரலாற்றுப் பணிகளில் ஒன்றைத் தொடராக செய்து வருவதைக் காட்டுகிறது: அதுதான் அங்கு இடம்பெறும் இனப்படுகொலை. அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் போன்ற பேரரசுகள் மற்றும், முன்னாள் பேரரசுகளும் ஒரு மக்கள் திரளின் மீது ஆக்கிரமிப்பை செயல்படுத்துவதன் ஊடாக, இனப்படுகொலைக்கு உடந்தையாகவும், அதனை மேற்கொள்வோரின் கூட்டாளிகளாகவும் தொடர்ந்து இருந்து வருகின்றன.பாலஸ்தீனைப் பொறுத்தவரை, அங்கு குடியேறியவர்கள் முக்கியமாக ஐரோப்பிய மற்றும் அமெரிக்க குடிமக்கள். அவர்கள் ஹோலோகாஸ்ட் எனும் ‘பெருங்களப்பலி’யில் இருந்து தப்பியவர்கள், அல்லது அதன் நேரடி சாட்சிகளின் மற்றும் பாதிக்கப்பட்டோரின் சந்ததியினர். அவர்கள் உலகம் முழுவதும் சிதறடிக்கப்பட்ட யூதர்களின் ஒரு பகுதியாகும்; இது 2000 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களது கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு நிலத்திற்கு திரும்பச் செல்வதைக் குறிக்கிறது. (யூதர்கள் பலர் மற்றும் யூத பாரம்பரிய அறிஞர்களால் மறுக்கப்பட்டபோதிலும்) இது அவர்களது புனித நூல்களில் எழுதப்பட்டுள்ளது. அதேவேளை, வந்தேறுகுடி அரசு அல்லது இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசு, நிலத்தை ஆக்கிரமித்து கையகப்படுத்துவதற்கான காலனித்துவ இயக்கவியலின் கருவியாகவும் அதன் விளைபொருளாகவும் உள்ளது. காசாவை குண்டுவீசி அழிப்பதற்கு விமானங்களையும் கார்ப்பட் குண்டுகளையும் வழங்குவது அமெரிக்காவும் ஏனைய பழைய ஐரோப்பிய பேரரசுகளும்தான்.  அவற்றில் ஜெர்மனியும் அடங்கும். தான் ஒரு இனப்படுகொலைக்கான பொறுப்பிலிருந்து விடுபட்டதாக ஜெர்மனி கருதுகிறது; அதேவேளை மற்றொரு இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கிறது. இஸ்ரேல் என்பது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பேரரசுகளது காலனித்துவ நலன்களை மூன்றாம் உலகில் ஸ்தாபிப்பதற்கான, வன்முறை பயன்பாட்டினதும் அந்த வன்முறைக் கலாச்சாரத்தினதும் நீட்சியான ஒரு தொங்கு சதையாகும்.

சர்வதேச சட்டத்தை மீள்வரையறை செய்தல்

நவீன காலனித்துவத்தின் ஐந்து நூற்றாண்டுகளில், சர்வதேச சட்டத்தின் வரையறைகளின்படி, காலனித்துவ இனப்படுகொலை என்ற விடயம் மீண்டெழும் ஒன்றாக மாறி இருப்பதன் பின்விளைவுகள் எவை? வெஸ்ட்பாலியன் மற்றும் ஐரோப்பிய மைய பாரம்பரியத்தில் சர்வதேச சட்டம் என்பது அமைதி மற்றும் சர்வதேச ஒத்துழைப்புக்கான பாதையாகத்தான் வகைப்படுத்தப்படுகிறது. இது முக்கியமாக ஐரோப்பிய சமாதான மாநாடுகள் மற்றும் ஒப்பந்தங்களால் உருவான ஐரோப்பிய மேலாதிக்கத்துக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. அவை வெஸ்ட்பாலியா, உட்ரெக்ட், வியன்னா, தி ஹேக், வெர்சாய்ஸ் மற்றும் சான் பிரான்சிஸ்கோ என தொடர்கின்றன. இது பொதுவாக ஐரோப்பிய இறையாண்மை நாடுகள்: அவர்களுக்கு இடையிலான போர்களை முடித்து வைப்பதற்குப் பயன்பட்டது. இறையாண்மை கொண்ட அரசுகளால் உருவாக்கப்பட்ட விதிமுறைகளின் தொகுப்பாக நவீன சர்வதேச சட்டத்தின் அரசியல் மற்றும் சட்ட அடையாளங்கள் பற்றிய ஐரோப்பிய நாடுகளுக்கான விவரணை மாத்திரம்தான் இது. இது அவற்றுக்கிடையேயான உறவுகளை ஒழுங்குபடுத்துவதோடு, அமைதியைப் பாதுகாத்து மனிதகுலத்தையும் அதன் சுதந்திரத்தையும் பாதுகாக்கிறது என வழங்கப்படுகிறது.        

இதற்கு நேர்மாறாக, நவீன காலனித்துவ வரலாற்றின் சூழலில், சர்வதேச சட்டம் என்பது தீவிர வன்முறையைப் பொறுத்தவரையில் ஒரு ஆண்டையின் பாத்திரத்தை வகிப்பதோடு, பல நூற்றாண்டுகால காலனித்துவ ஆதிக்கத்தின், இனப்படுகொலையின் சட்டபூர்வத் தோற்றுவாயாகவும் இருப்பதோடு, பூகோளயமயப்பட்டிருக்கும் இன்றைய உலகின் எல்லாக் கண்டங்களிலும் அதன் தகுதி நிலை அப்படியே இருக்கிறது. வில்ஹெம் கிரேவின் கூற்றுப்படி, சர்வதேச சட்டத்தின் சகாப்தங்களில், போர்த்துக்கேய, ஸ்பானிய, டச்சு, பிரெஞ்சு, பிரிட்டிஷ், பெல்ஜியம், ஜெர்மன், அமெரிக்க மற்றும் சோவியத் பேரரசுகளின் வாயிலாக காலனித்துவப்படுத்தப்பட்ட மக்கள் மற்றும் அவர்களது வாழ்விடங்கள் மற்றும் எண்ணற்ற உயிர்கள் மீது இடம்பெற்றிருக்கும் காலனித்துவ மேலாதிக்க நடவடிக்கைகளில் ‘ஜுஸ் ஜென்டியம்’ எனப்படும் தேசங்களின் சட்டங்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன.  

சர்வதேச சட்டத்தின் பகுதியளவு, அமைதி மற்றும் மனிதநேயத்தினை இலக்காகக் கொண்டு தொலைநோக்கினால் வழிநடத்தப்படும் விதிமுறைகளாக, சித்தாந்த ரீதியான மற்றும் வெறும் நேர்மறைவாத வரையறைகளை நாடுகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருப்பதாக நாம் கருத வேண்டும். அதுமாத்திரமன்றி, வல்லரசுகளின் மெய்நிகர் காலனிகளில் வசிக்கும் மில்லியன் கணக்கான மனிதர்களின் உயிர்களையும் உடல்களையும் அழிப்பதற்கான ஒரு கருவியாக சர்வதேச சட்டத்தை அது சித்தரிக்கிறது. பேரரசுகள் மற்றும் காலனித்துவ நிறுவனங்களால் இயக்கப்பட்டு வருகின்ற இனப்படுகொலைகளை நியாயப்படுத்துதல் பற்றிய ஒரு உரையாடலை அது மேற்கொள்கிறது. இதனை எதிர்கொள்வதற்கான கருத்துருவாக்கம் சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்தும் விதத்திலும் காலனீய நீக்க முறைமைகளின் அடியாகவும் முன்வைக்கப்பட வேண்டும்.

முடிவாக, சமகால உலகின் கட்டமைப்பைத் தீர்மானிக்கும் இராணுவ, அரசியல் மற்றும் பொருளாதார வளங்கள் மீதான காலனித்துவத்தின் அழுங்குப்பிடியின் விளைவாக,  பாலஸ்தீனில் இடம்பெற்றுவரும் இனப்படுகொலை, வரலாற்றில் ‘மீண்டெழும் தன்மையான’ – மீளவும் நிகழக்கூடிய ஒன்று என்பதற்கு ஸ்தூலமான ஆதாரமாகவும் அந்தக் கூற்றை மெய்ப்பிக்கின்ற சான்றாகவும் உள்ளது. கடந்த ஐநூறு ஆண்டுகளாக, 21 ஆம் நூற்றாண்டின் முதல் காலாண்டில்கூட, ​ஏன் இன்றும், ​முன்னாள் பேரரசுகள் (அல்லது பேரரசுநாடுகள், நாடுகளாக மாறுவேடமிட்டுள்ள சாம்ராஜ்யங்கள்), மற்றும் காலனித்துவ எச்சங்களான, நாடு கடந்த பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட ஏகாதிபத்திய சக்திகளின் கட்டமைப்பைச் சுற்றிப் படரும் விதமாகவே சர்வதேச சட்ட அமைப்பு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், காலனித்துவப்படுத்தப்பட்ட மக்கள், முன்னாள் காலனிகள், நவ-காலனிகள் அல்லது மூன்றாம் உலக மக்கள். நவ-காலனித்துவ சமகால உலக அதிகார அமைப்புகளின் வழியாக மூன்றாம் உலகின் நிலத்தை கையகப்படுத்துதல் மற்றும் காலனித்துவ மூலதனக் குவிப்பு ஆகியவற்றின் உள்ளார்ந்த புறநிலை மற்றும் நீண்ட வரலாற்று தர்க்கத்தைப் பின்பற்றி தமது இனவழிப்பு நடவடிக்கைகளைத் தங்குதடை இன்றித் தொடர்கின்றன. சந்தேகத்துக்கிடமின்றி அவற்றில் பாலஸ்தீன இனப்படுகொலையும் ஒன்றாகும்.

ஜோசே மனுவெல் பர்ரெடோ (José Manuel Barreto) மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை காலனித்துவ நீக்கம் செய்யும் தளத்தில் பணியாற்றுகிறார்.  TWAIL (Third World Approaches to International Law)  எனப்படும் சர்வதேச சட்டத்தை அணுகுவதற்கான மூன்றாம் உலக வழிமுறை நிறுவனத்தின் ஊடாக காலனீயநீக்க புலமைத்துவ அரசியல் பணிகளை மேற்கொள்பவர். பொகோடா, ஜவெரியானா பல்கலைக்கழகத்தில் சட்டத்துறை பேராசிரியராக பணியாற்றும் இவர் எழுதிய ‘காலனீய நீக்கம் மற்றும் மனித உரிமைகளின் வரலாறு’ என்ற தலைப்பிலான நூல் வெளிவரவுள்ளது.    

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி

இந்த ஆக்கம் ‘Opinio Juris’, in association with the International Commission of Jurists தளத்தில் 08.10.2024 அன்று வெளிவந்தது.