– ஜேஸன் ஹைகல்
அமெரிக்கா, மேற்கு ஐரோப்பா, ஜப்பான், கனடா மற்றும் அவுஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளுக்கும் கீழைத்தேயத்திலுள்ள ஏழ்மை நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இடைவெளியானது காலப்போக்கில் குறைந்து வருகிறது என்றே நம்மில் பலர் நினைக்கின்றனர். காலனித்துவத்தின் முடிவுக்குப் பிறகு, வறுமை நிலையிலுள்ள நாடுகள் பலவும் மெதுமெதுவாக பணக்கார நாடுகளைப் போலவே மாறி வருகின்றன என்றளவில் தற்போது பேசப்பட்டு வருகிறது. ஆனால் புள்ளிவிவரங்களின் பிரகாரம் நிலமை இதற்கு நேர்மாறாக உள்ளதையே அவதானிக்க முடிகிறது. 1960ம் ஆண்டு முதல், பணக்கார மற்றும் வறுமை நிலையிலுள்ள நாடுகளுக்கு இடையிலான தனிநபர் வருமான வேறுபாடானது நான்கு மடங்களவில் அதிகரித்துள்ளது. வறிய நாடுகள் முன்னேறுவதற்குப் பதிலாக அவற்றுக்கும் பணக்கார நாடுகளுக்கும் இடையிலான இடைவெளியானது மென்மேலும் அதிகரித்து வருவதையே புள்ளிவிவரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
உலகப் பொருளாதாரக் கட்டமைப்பில் நிலவும் அசமத்துவப் போக்கே இத்தகைய நிலைமைகளுக்கு காரணமாக அமைகிறது எனலாம். வறுமை நிலையிலுள்ள நாடுகளை விடவும் செல்வந்த நாடுகள் உலகப் பொருளாதார வலையமைப்பில் அதிகளவிலான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றன. சர்வதேச வர்த்தகம் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகளுக்கான விதிகளைத் தீர்மானிப்பதில் அவற்றுக்குப் பெருமளவிலான பங்குண்டு என்பதுடன் வறிய நாடுகள் தொடர்பான எந்தவொரு கரிசனமும் இன்றி, பொருளாதார ரீதியாக தமக்கு மாத்திரம் நன்மைகளை அடைந்து கொள்ள முடியுமான வகையிலேயே குறித்த விதிகள் அனைத்தும் உருவாக்கப்பட்டு நடைமுறையாகின்றன.
உலகப் பொருளாதாரக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தும் இரண்டு முக்கிய அமைப்புகளான உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய நிறுவனங்களை ஆராயும் போது இப்பிரச்சினைகளை மிகத் தெளிவாகக் புரிந்து கொள்ள முடியும். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையைப் போல, இவ்விரு நிறுவனங்களும் எல்லா நாடுகளுக்கும் சமமான பிரதிநிதித்துவத்தை வழங்கும் என்றோ அல்லது குறைந்தபட்சம் அந்தந்த நாடுகளின் மக்கட்தொகையின் அடிப்படையிலாவது தீர்மானங்கள் தொடர்பிலான அதிகாரங்களை வழங்கும் என்றோ மக்கள் எதிர்பார்க்கலாம். ஆனால் உண்மையில் குறித்த இரு நிறுவனங்களும் தம்மளவில் எந்தவிதமான ஜனநாயகத் தன்மையையும் கொண்டிருப்பதில்லை. ஏழை நாடுகளைக் காட்டிலும் பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடுகளின் முடிவுகளே குறித்த இரு நிறுவனங்கள் மீதிலும் அதிக கட்டுப்பாட்டையும் செல்வாக்கையும் கொண்டுள்ளன.
குறித்த இரு நிறுவனங்களினதும் தலைமை நிர்வாகக் கட்டமைப்பிலிருந்தே இந்தப் பிரச்சினை துவங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தினதும் உலக வங்கியினதும் தலைவர்கள் எவருமே வாக்களிப்பின் ஊடாக தேர்வு செய்யப்படுவதில்லை. அமெரிக்கா அல்லது பலம் வாய்ந்த ஐரோப்பிய நாடுகளின் பிரதிநிதிகளில் இருந்தே தலைமைப் பதவிக்கு ஒருவர் பரிந்துரைக்கப்படுவார். உத்தியோகபூர்வமற்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் உலக வங்கித் தலைவர் அமெரிக்கப் பிரஜையாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் ஐரோப்பியராகவும் இருக்க வேண்டும் என்ற விதியே பொதுவாக இந்நிறுவன அமைப்புக்களில் பேணப்பட்டு வருகிறது.
மேலும், இந்த நிறுவனங்களில் உள்ள வாக்களிப்பு முறையானது பணக்கார நாடுகளுக்கே பல்வேறு சந்தர்ப்பங்களில் சாதகமாக அமைந்து வருகிறது. முக்கிய முடிவுகளைத் திறம்படத் தானே தடுக்கும் அளவுக்கு அமெரிக்காவிற்குப் போதுமான சக்தி இவ்விரு நிறுவனங்கள் தொடர்பாக உள்ளது. G7 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அனைத்தும் இணைந்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியம் ஆகிய இரு நிறுவனங்களிலும் கிட்டத்தட்ட சுமார் அரைவாசிக்கும் மேற்பட்ட வாக்குகளைக் கட்டுப்படுத்தும் நிலைமையே காணப்படுகின்றது. இதற்கிடையில், நடுத்தர மற்றும் குறைந்த வருமானம் கொண்ட நாடுகள், உலகின் மக்கள்தொகையில் சுமார் 85% ஆக இருந்த போதிலும் குறைந்தளவான வாக்களிப்பு அதிகாரத்தையே கொண்டுள்ளதுடன் தீர்மானம் எடுக்கும் சந்தர்ப்பங்களின் போது மிகக் குறைந்தளவிலான செல்வாக்கையே கொண்டுள்ளன.
மக்கட்தொகையின் அடிப்படையில் வாக்குரிமையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும்போது இதிலுள்ள அசமத்துவமின்மையை மிகவும் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். ஐரோப்பா அல்லாத அல்லது வறிய நாடுகளில் வாழும் ஒருவரைக் காட்டிலும், ஐரோப்பா அல்லது பணக்கார நாடுகளில் வாழும் ஒரு சராசரி மனிதர் இந்த நிறுவனங்களினுள் அதிக செல்வாக்கைக் கொண்டவராகக் கருதப்படுகிறார். அந்தவகையில் செல்வந்த நாடொன்றில் வாழும் ஒரு சராசரி மனிதருக்கு – அவரது வாக்குரிமையினூடாக இருக்கும் அதிகாரத்தை விட, வறுமை நிலையிலுள்ள நாடொன்றில் வாழும் ஒருவருக்கு அதன் எட்டில் ஒரு பங்கு அதிகாரமே உரித்தாகிறது. தெற்காசியாவில் உள்ள ஒரு சராசரி மனிதருக்கு இருபதில் ஒரு பங்கு அதிகாரத்தையே அவரது வாக்குரிமை ஊடாக அனுபவிக்க முடியும்.
இதன் அர்த்தம் யாதெனில், உலகளாவிய ரீதியில் ஒட்டுமொத்த பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பாகவும் முடிவெடுக்கும் செயல்முறையானது, ஒரு சில சக்திவாய்ந்த நாடுகளின் குழுவால் மட்டுமே கட்டுப்படுத்தப்படுவதுடன் மிக வலுவான இனரீதியான ஏற்றத்தாழ்வும் குறித்த செயல்முறைகளினுள் உள்ளது என்பதுவுமாகும். சராசரியாக, பணக்கார அல்லது மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களின் வாக்குரிமையுடன் ஒப்பிடும்போது இன ஒதுக்கலுக்கு ஆளான தென்னாசிய மற்றும் ஆபிரிக்க மக்களின் வாக்குரிமை அதிகாரம் குறித்த இரு நிறுவனங்களினுள்ளும் மிகவும் குறைவாகவே உள்ளது. இத்தகைய ஒரு நியாயமற்ற அமைப்பு ஒரு நாட்டிற்குள் இருந்திருந்தால் மக்கள் அதை வன்மையாகக் கண்டித்து, ஒரு குழு மற்றொரு குழுவின் மீது அதிகாரத்தைக் கொண்டிருக்கும் அமைப்பான இன ஒதுக்கல் அமைப்பு என்று அழைத்திருப்பார்கள். ஆனால் இன்று மிகப் பெரும் உலகளாவிய பொருளாதார நிறுவனங்களில் நிலவுகின்ற இதே போன்ற ஒரு சமத்துவமற்ற அமைப்பை இயல்பான ஒன்றாகவே கடந்து செல்கின்றனர்.
சில உதாரணங்கள் வழியே இந்த ஏற்றத்தாழ்வை எம்மால் புரிந்து கொள்ள முடியும். உதாரணமாக வங்கதேசம் மற்றும் நைஜீரியா ஆகிய இரு நாடுகளும் ஒரு காலத்தில் பிரிட்டிஷின் காலனிகளாக இருந்தன. ஆனால் இன்று, சர்வதேச நாணய நிதியத்தில், ஒரு சராசரி பிரிட்டிஷ் நபரின் வாக்குரிமையானது இந்த இரு நாடுகளைச் சேர்ந்த மக்களின் வாக்குரிமையை விட இன்னும் மிக அதிகமான பெறுமதி கொண்டதாகவே உள்ளது. ஒரு பிரிட்டிஷ் நபரின் வாக்கானது ஒரு வங்கதேச நபரின் வாக்கை விட 41 மடங்கு அதிகமாகவும், ஒரு நைஜீரிய நபரின் வாக்கை விட 23 மடங்கு அதிகமாகவும் மதிப்புடையதாகக் காணப்படுகிறது. காலனித்துவம் அதிகாரப்பூர்வமாக முடிந்து நீண்ட காலத்திற்குப் பிறகும் கூட அதிகார ஏற்றத்தாழ்வுகள் புதிய வடிவங்களில் இன்னமும் தொடர்வதையே இது உணர்த்துகிறது.
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் உள்ள சமமற்ற வாக்குரிமையானது தனது வேர்களை காலனித்துவக் காலப்பகுதியோடு கொண்டுள்ளது. இந்தியா போன்ற உலகளவில் சில நாடுகள் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்த நிலையிலேயே 1944ஆம் ஆண்டுகளில் இந்த நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. அதனால் அவை நியாயமற்ற நிபந்தனைகளின் கீழாகவும் தமது காலனித்துவ ஆட்சியாளர்களுக்குக் கீழான நிலையிலுமே குறித்த நாடுகள் இந்நிறுவனங்களினுள் உள்வாங்கப்பட்டன. ஏனைய காலனிகள் சுதந்திரம் அடையும் வரை அல்லது 1970, 1980கள் வரை இதில் அங்கத்துவம் பெறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. இவ்விரு நிறுவனங்களும் காலனித்துவ காலத்தில் உருவாக்கப்பட்டதோடு இன்றும் அதே காலனித்துவ அதிகாரக் கட்டமைப்புகளைப் பிரதிபலிக்கும் விதங்களிலேயே தொடர்ந்தும் செயல்பட்டு வருகின்றன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.
உலக வங்கியில், வாக்களிக்கும் அதிகாரம் என்பது ஒவ்வொரு நாடும் எவ்வளவு பணத்தைத் தமது பங்களிப்பாக உலக வங்கிக்குச் செலுத்துகிறது என்பதைப் பொறுத்தே அமைகிறது. அதேபோல சர்வதேச நாணய நிதியத்தில், வாக்களிக்கும் அதிகாரம் பெரும்பாலும் ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் அதன் சந்தைகள் உலகளாவிய வர்த்தகத்திற்கு திறந்து விடும் அளவு ஆகியவற்றையே சார்ந்துள்ளது. இதன் காரணமாக, காலனித்துவ காலப்பகுதியில் காலனிகளைச் சுரண்டி செல்வந்தர்களாக மாறிய ஐரோப்பிய நாடுகள் பலவும் இவ்விரு நிறுவனங்களினுள்ளும் உலகப் பொருளாதார விதிகளை வகுப்பதில் மிகப் பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ளன. இவ்வாறு கடந்தகாலங்களில் நிலவிய சமத்துவமற்ற நிலையின் நீட்சிய, சமகாலத்திலும் இவ்வாறான நிறுவனங்களின் ஊடாகவே பாதுகாக்கப்பட்டு வருகின்றன. செல்வந்த மற்றும் சக்திவாய்ந்த நாடுகள் தொடர்ந்து அதிகாரத்தை அனுபவித்து வரும் அதே நேரத்தில் ஏனைய நாடுகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றன.
பெரிய பொருளாதாரக் கட்டமைப்புக்களைக் கொண்ட நாடுகள், உலகப் பொருளாதாரத்தை நிர்வகிக்கும் இதுபோன்ற நிறுவனங்களில் இயல்பாகவே அதிக செல்வாக்கையும் முடிவெடுக்கும் அதிகாரத்தையும் கொண்டிருக்கும் என்று இந்த அசமத்துவம் நிறைந்த அமைப்புகளை நியாயம் காண்பவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
ஆனால் இந்த நியாயப்படுத்தல்கள் அனைத்துமே தம்மளவில் அநேக தர்க்கம் பிழைகளைக் கொண்டவை. உதாரணமாக எந்தவொரு நாட்டின் அரசியல் அமைப்பிலும், ஏழைகளை விடப் பணக்காரர்களுக்கு வாக்குரிமையில் முன்னுரிமையும், பொருளாதாரக் கொள்கை சார் முடிவுகளில் அதிகக் அதிகாரமும் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தால் நிச்சயமாக குறித்த கருத்தை மக்கள் நிராகரிப்பார்கள். அத்தகைய அமைப்பை மக்கள் ஊழல் நிறைந்ததாகவும், தார்மீக அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவே கருதுவார்கள். ஆனால் உலக வங்கியிலும் சர்வதேச நாணய நிதியத்திலும் வசதிபடைத்த நாடுகளிடம் உள்ள அதிகாரக் கட்டமைப்புக்கள் இயல்பான ஒன்றாகவும் தவிர்க்க முடியாத ஒன்றாகவுமே கருதப்படுகிறது.
கடந்த 40 ஆண்டுகளாக உலக வங்கியும் சர்வதேச நாணய நிதியமும் உலகின் பல்வேறு ஏழ்மை நாடுகளில் நவதாராளவாதக் கட்டமைப்பு சார்ந்த மறுசீரமைப்புத் திட்டங்களை வெற்றிகரமாக திணிக்க முடிந்ததற்கான பின்னணியை இந்த அசமத்துவம் நிறைந்த முறைமைகளை பயில்வதன் வழியே புரிந்து கொள்ள முடியும். உலக வங்கியாலும் சர்வதேச நாணய நிதியத்தினாலும் ஊக்குவிக்கப்பட்ட இந்தத் திட்டங்கள் தனியார்மயமாக்கல், அரசாங்கச் செலவினக் குறைப்பு (சிக்கன நடவடிக்கை), மற்றும் உள்நாட்டுச் சந்தைகளை சர்வதேசச் சந்தைப் போட்டிக்குத் திறந்துவிடுதல் போன்ற கொள்கைகளை உள்ளடக்கியிருந்தன. இந்தக் கொள்கைகள் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பெரும் இலாபங்களை ஈட்டித் தந்தபோதிலும், அவை அந்தந்த நாடுகளில் மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தின. 1980கள் மற்றும் 1990களில் வருமானம் குறைந்து வறுமை அதிகரித்ததுடன் பல நாடுகள் நீண்ட காலப் பொருளாதார வீழ்ச்சியையும் தேக்கநிலையையும் சந்தித்தன. பொருளாதார ரீதியாக மாத்திரமின்றி பொதுச் சுகாதாரம் போன்ற துறைகளிலும் குறிப்பாக தாய் – சேய் நலன் சுட்டி, சிசு மரண வீதம் போன்றவற்றில் பல எதிர்மறை விளைவுகளை அவை ஏற்படுத்தின. இப்படியான நச்சுக் கொள்கைகள் ஒரு போதும் ஜனநாயகத்தையும் அதன் அடித்தளங்களையும் நிச்சயம் பாதுகாக்கப் போவதில்லை.
இதனாலேயே நீண்ட காலமாக உலக நாடுகளைச் சேர்ந்த பல தலைவர்கள், சிவில் சமூகக் குழுக்கள், அரசியல் ஆர்வலர்கள் எனப் பலர் உலக வங்கியையும் சர்வதேச நாணய நிதியத்தையும் ஜனநாயகமயமாக்குவதற்கான சீர்திருத்தங்களைக் கோரி வருகின்றனர். குறைந்தபட்சம், இந்த நிறுவனங்களின் தலைவர்கள் ஒரு வெளிப்படையானதும் ஒளிவுமறைவற்றதுமான தேர்தல் செயல்முறையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளுக்கு அதிக நிதிப் பங்கீடுகளைக் கொண்ட செல்வந்த நாடுகளிடமிருந்து மட்டுமல்லாமல், பெரும்பாலான உறுப்பு நாடுகளிடமிருந்தும் ஒப்புதல் தேவைப்படும் வகையிலமைந்த ஒரு “இரட்டைப் பெரும்பான்மை” (Double Majority) முறையையும் இதற்காக வேண்டி அவர்கள் முன்மொழிந்துள்ளனர். தங்களைப் பாதிக்கும் முடிவுகளில் வறுமையில் உழலும் நாடுகளுக்கு ஒரு நியாயமான குரலை வழங்குவதற்கும், தங்களுக்குப் பாதகமான கொள்கைகளைத் தடுத்துக் கொள்ளவும் இது ஒரு சிறந்த ஏற்பாடாக அமையும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
பல தசாப்தங்களாக இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் கவனிப்பாரற்று இருந்த போதிலும், இந்த ஆண்டு (2020), நெல்சன் மண்டேலா அறக்கட்டளைக்காக ஆற்றிய சொற்பொழிவின் போது, உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தில் வாக்களிக்கும் அதிகாரத்தில் ஜனநாயக சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுத்த ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரஸிடமிருந்து குறித்த சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கான ஒரு புதிய உத்வேகம் கிடைத்தது. உண்மையில் சர்வதேச ஆர்வலர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தொடக்கமாகவே நாம் புரிந்து கொள்ள வேண்டும். உண்மையில் நாம் ஒரு நியாயமானதும் சமத்துவமானதுமான உலகப் பொருளாதாரக் கட்டமைப்பை அடைய விரும்பினால், உலகப் பொருளாதார ஆளுகையின் நிறுவனங்களைக் காலனிய நீக்கம் செய்வதிலிருந்தே அதனைத் தொடங்க வேண்டும்.
ஜேசன் ஹைகல் (Jason Hickel) ஒரு பொருளாதார மானுடவியலாளர். தற்போது The Autonomous University of Barcelona-வில் பேராசிரியராக கடமையாற்றி வருகிறார். இவருடைய முக்கியமான ஆய்வுப் புலங்கள் முதலாளித்துவம், நவகாலனித்துவம் மற்றும் அபிவிருத்தி கைதையாடல் என்பனவாகும். இவர் பல முக்கியமான மாத இதழ்களிலும் இணையத்தளங்களிலும் கட்டுரைகளை எழுதி வருகிறார். இவருடைய முக்கியமான புத்தகங்களில் The Divide: A Brief Guide to Global Inequality and Its Solutions, Less is More: How Degrowth Will Save the World ஆகியவை குறிப்பிடத்தக்கவையாக கருதப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இந்த ஆக்கம் Al Jazeera இணையதளத்தில் Apartheid in the World Bank and the IMF என்ற தலைப்பில், 2020 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.