– சில்வியா பெடர்ஸி

உலகளவில் பெண்ணிய இயக்கங்களின் வருகையுடனேயே, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மிக முக்கியமான பேசுபொருளாக மாறின. 1976 களில் பிரஸ்ஸல்ஸில் (Brussels) வைத்து பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பிலான சர்வதேசத் தீர்ப்பாயமொன்றை உருவாக்கிக் கொள்வதற்கும் அது வழிவகுத்திருந்தது. அத்தோடு பல ஆண்டுகளாக, பெண்ணியக் குழுக்கள் பலவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்கப் பாடுபட்டு வருவதோடு பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்த ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்குப் பிறகு பல நாடுகளின் அரசாங்கங்கள் பல பிரத்யேகமான சட்டங்களையும் இயற்றியுள்ளன.

இவ்வாறான ஏற்பாடுகள் இடம்பெற்று வருகின்ற போதிலும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறைவதற்குப் பதிலாக, உலகம் முழுவதும் பெருமளவில் அதிகரித்தே வருகிறது. பெண்களை அவர்கள் பெண்களாக இருப்பதாலேயே அவர்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து அவர்களை படுகொலை செய்யும் அளவிற்கு இது உச்சகட்டத்தை அடைந்திருக்கின்றது. பல பெண்ணியவாதிகள் இந்த நிலையை இன அழிப்புச் செயன்முறைக்கு நிகரான வகையிலமைந்த பெண்ணினப் படுகொலை (Femicide) என்று அழைத்து வருகின்றனர். இவ்வாறு பெண்களுக்கு எதிரான இந்த வன்முறைகள் வெளிப்படையாகவும் கொடூரமாகவும் அரங்கேறி வருவதுடன் போர்க்காலங்களில் நிகழ்வதை விடவும் உக்கிரமான வகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெறும் அளவிற்கு இயல்பாக்கம் அடைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறு அதிகரித்துவரும் வன்முறைகளுக்கான காரணங்கள் தொடர்பிலும் இது உலகப் பொருளாதாரக் கட்டமைப்பிலும் பொதுச் சமூகத்தில் பெண்களின் வகிபாகங்களில் ஏற்படுத்தி வரும் மாற்றங்களைப் பற்றியும் நமது கவனம் அவசரமாக திரும்ப வேண்டியிருக்கிறது. இது தொடர்பான அவதானங்களில் பல்வகைத்தன்மையைக் காண முடிகின்ற போதிலும் பெண்கள் மீது பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள் எல்லாவற்றையும் வழிநடாத்தும் ஒரு பின்னணிக் காரணமாக உலகமயமாக்கலும் பெண்களின் வாழ்வையும் அவர்களின் உழைப்பையும் மதிப்பிழக்கச் செய்யும் அரச முதலாளியக் கட்டுமானங்களும் அமைகின்றன என்பது எனது அவதானமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெண்களுக்கு எதிரான இந்த வன்முறை அலைகள் அனைத்துமே ஆழமானதும் மிக நீண்டகாலமாக நிலவி வரும் வன்முறை மிக்க அமைப்புகளிலிருந்தே வெளிப்படுகிறது. முதலாளித்துவமும் அதனைத் தமது பிரதான தர்க்க அடிப்படைகளாகக் கொண்ட அரசுகள் போன்ற இந்த அமைப்புகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண்களின் வாழ்வையும் அவர்களது உழைப்பையும் எப்போதும் குறைந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாகவே கருதி வந்துள்ளன.

உண்மையில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுடனேயே முதலாளித்துவத்தின் பிறப்பு நிகழ்ந்தது. 16ம் 17ம் நூற்றாண்டுகளில் புதியதோரு உலகம் என்ற கற்பனையுடன் சூனியக்காரிகள் மீதான வேட்டை (Witch haunt) என்ற பெயரில் பாரியளவிலான வன்முறைகளை ஐரோப்பா பெண்கள் மீது கட்டவிழ்த்து இருந்தது. 2004 இல் வெளியாகிய எனது நூலான Caliban and the Witch என்ற நூல் இதனை வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் இடம்பெற்ற ஒன்றாக முன்வைக்கிறது. கார்ள் மார்க்ஸ் முன்வைக்கும் ஆதி மூலதனக் குவிப்பு (Primitive Accumulation) கதவுகளை திறந்து விடுவதற்கான வாய்ப்புக்களைச் சாத்தியப்படுத்தியதில் இது வெற்றி கண்டது. தனது நிலவுகைக்குப் பெருமளவிலான ஊழியர் படையையும் அபரிமிதமான கட்டுப்பாட்டையும் வேண்டி நின்ற முதலாளித்துவ அமைப்புக்கள் அதற்குத் தடையாகக் கருதிய பெண்களை கடுமையாக வேட்டையாடியது. பெண்களை சூனியக்காரர்கள் என்று கட்டமைத்து விடுவதன் வழியே அவர்களை ஊதியமில்லாத வகையில் வீட்டு வேலைகளில் அமர்த்துவதும், கிடைக்கும் வழிகளில் எல்லாம் அவர்களை சுரண்டுவதற்கும் ஐரோப்பாவிற்கு முடியுமாக இருந்தது. மட்டுமன்றி குடும்ப மட்டத்திலும் பொதுவெளியிலும் பெண்களை ஆண்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதையும் அவர்களைச் சுரண்டுவதையும் இயல்பாக்கம் செய்வதிலும் அது பங்களித்தது. அதேநேரம் சந்ததிகளைப் பெருக்கமடையச் செய்வது தொடர்பாக அரசமைப்பானது பெண்களின் உடல் மீது நெருக்கடிகளைத் தோற்றுவித்தது. அரசமைப்புக்குத் தேவையான ஊழியர்படையை உற்பத்தி செய்வது முதலாளித்துவ அமைப்புகளுக்கு அவசியமாக இருந்ததால் இந்த நெருக்கடிகளை பெண் உடல் மீது திணிக்க வேண்டியது முதலாளிய அமைப்புக்களுக்கு அவசியமாக இருந்தது. இவ்வாறாக, சூனியக்காரிகள் மீதான வேட்டைகள் என்ற பெயரில் இடம்பெற்ற பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒரு முதலாளித்துவ மற்றும் ஆணாதிக்க சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கே உதவின.

சூனியக்காரிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு பெண்கள் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவதை அவதானித்த ஏனைய பெண்கள் அனைவருமே, தாங்கள் ஆண்களுக்கும் அவர்களால் திணிக்கப்படும் அமைப்புகளுக்கும் கீழ்ப்படிதலுடனும் மௌனமாகவும் இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டதுடன் பொதுச் சமூகம் தங்களை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால், கடின உழைப்பையும், ஆண்களின் இந்தக் கொடுமைகளையும் கூட ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் வேறுவழியின்றி உணரத்துவங்கினார்கள். இவற்றை தாண்டி,18ம் நூற்றாண்டுகளில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் குரல் எழுப்பிய பெண்களையும் ஒடுக்கத் துவங்கினார்கள். அடிமைகளுக்கு என்று உருவாக்கப்பட்ட கடிவாளம் போன்ற இரும்பினாலும் கடினமான தோலினாலுமான, முகத்தை மூடும் ஒருவகைக் கருவியின் மூலம் தமக்கு இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக கருத்துக்களை தெரிவிக்கும் பெண்கள் தண்டிக்கப்பட்டார்கள். அதுபோலவே 18ம் நூற்றாண்டுகளில் அமெரிக்கத் தோட்டப் பகுதிகளிலும், பண்ணைகளிலும் பணியில் அமர்த்தப்பட்ட பெண்களும் வன்முறைகளுக்கு ஆளாகினர். தமது எஜமானர்கள் மூலம் திட்டமிட்ட வகையில் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களுக்கு அவர்கள் உள்ளாகினர். ஆபிரிக்கப் பிரதேசங்களில் இருந்து அடிமைகளைக் கொண்டுவருவதற்குப் பகரமாக உள்ளூர்களிலேயே தமக்குத் தேவையானளவு அடிமைகளை உருவாக்கிக் கொள்ளும் நோக்கிலேயே இவ்வாறான பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டன. குறிப்பாக வர்ஜினியா போன்ற பகுதிகளில் இது இயல்பான ஒன்றாகவே மாறியிருந்தது.

ஐரோப்பா கூறுவது போல சூனியக்காரிகளின் மீதான வேட்டைகளுக்குப் பிறகோ அல்லது அடிமைத்தனத்தின் முடிவுக்குப் பிறகோ பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முடிந்துவிடவில்லை. மாறாக, மக்கள் அதை பொதுவாழ்வின் இயல்பான ஒரு அம்சமாக கருதத் தொடங்கினர். உதாரணமாக, பெண்களின் அனுமதியின்றி அவர்களுக்குக் கருத்தடை செய்யும் நடைமுறை 1960ம் ஆண்டுக் காலப்பகுதி வரை தொடர்ந்தது. பெரும்பாலும் கருப்பினப் பெண்கள், வறுமை நிலையில் உள்ள பெண்கள் மற்றும் திருமணத்திற்கு வெளியே உறவுகளில் இருந்த பெண்களை இந்த நடைமுறை குறிவைத்தது. அதுபோலவே, குடும்ப அமைப்பிற்குள் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் பற்றி அரசுக் கட்டமைப்புக்கள் மிகநீண்ட காலமாக மௌனமாகவே இருந்து வந்தன. பெண்ணியவாதிகள் அதனை ஒரு பிரச்சனையாகவும் பேசுபொருளாகவும் மாற்றும் வரை அரசுக் கட்டமைப்புக்கள் அனைத்துமே அது தொடர்பாக திருட்டு மௌனம் சாதித்து வந்தன.  Franca Dalla தனது The Work of Love (1978) நூலில் குறிப்பிடுவது போல வன்முறையும் அடக்குமுறையும் தனிக் குடும்பக்கட்டமைப்பு (Nuclear family) ஒன்றின் ஒரு உள்ளார்ந்த அங்கமாகவே இருந்து வருகிறது. குடும்ப அமைப்பினுள் தமக்குக் கிடைக்கும் ஊதியத்தின் ஊடாக பணத்தைக் கட்டுப்படுத்தும் ஆண்கள், ஊதியம் பெறாத நிலையில் வீட்டு வேலைகளில் ஈடுபடும் பெண்களின் மீது அதிகாரத்தைத் திணித்தனர். இது சொந்த வீட்டுப் பெண்களை வேலைக்காரிகளைப் போல நடத்தவும், அவர்கள் அந்த வேலையைச் செய்ய மறுப்புத் தெரிவிக்கும் போது அவர்களைத் தண்டிக்கவும் அனுமதித்தது. இதன் காரணமாகவே, மிகச்சமீப காலம் வரை ஆண்களால் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைகளை பொதுச்சமூகம் ஒரு குற்றமாகக் கருதியிருக்கவில்லை. தமது பிள்ளைகளை அரசுக்கும் முதலாளித்துவ அமைப்புகளுக்கும் கீழ்ப்படியும் பணியாளர்களாகப் பயிற்றுவிப்பதற்காக அவர்களைத் தண்டிக்கும் பெற்றோரின் உரிமையை அரசு சட்டப்பூர்வமாக்கியதனைப் போல, பெண்கள் தங்கள் வீட்டுக் கடமைகளைச் செய்ய மறுப்பதை ஆண்கள் தண்டிப்பதனை ஒரு நியாயமான நடவடிக்கையாகக் கருதி, பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறையை நீதிமன்றங்களும் காவல்துறையும் பொறுத்துக்கொண்டன.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குடும்ப மற்றும் பாலின உறவுகளின் ஒரு இயல்பான பகுதியாகவே நீண்ட காலமாக கருதப்பட்டு வந்துள்ளது. ஆனால் சமீபத்திய பத்தாண்டுகளில், அது முன்பை விட இன்னும் மோசமாகியுள்ளதனையே அவதானிக்க முடிகின்றது. இதற்குக் காரணமாக அமைவதெல்லாம் சக்திவாய்ந்த முதலாளித்துவ வர்க்கங்கள்,தங்கள் கட்டுப்பாட்டை வலுப்படுத்த விரும்புவதாகவே அமைகிறது. காலனிய ஆதிக்கத்திற்கு எதிராகத் திரண்ட எதிர்ப்பியக்கங்கள், பெண்ணியப் போராட்டங் அமைப்புகள், மற்றும் குடியுரிமை இயக்கங்கள் (குறிப்பாக கறுப்பின சக்தி இயக்கம்) ஆகியவற்றின் காரணமாக 1960கள் மற்றும் 1970களில் அவற்றின் சக்தி பலவீனமடைந்தது. அவ்வாறு இழந்த கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்காக, இந்த முதலாளிய சக்திகள், மக்களின் வாழ்வாதார அம்சங்களையும் பெண்களின் அடிப்படை வாழ்வியல் உரிமைகளையும் தாக்குவதற்கு முயற்சிப்பதுடன் மோதலும் வன்முறையும் எப்போதுமே நிலையாகக் தொடர்கின்ற ஒரு உலக ஒழுங்கையும் அவை பேணி வருகின்றன. 

அந்தவகையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறிப்பாக கருப்பினப் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிதமும் அதிகரித்து வருகின்றன. இதற்கான வாயில்களை “உலகமயமாக்கல்” எனும் நவ காலனியப் பொறிமுறைகளே திறந்து விட்டிருக்கின்றன என்பதே எனது அவதானமாகும். உலகின் இயற்கை வளங்கள் மற்றும் அனைத்து மனித உழைப்பின் மீதும் சக்திவாய்ந்த பொருளாதாரக் குழுக்களுக்கு முழுமையான கட்டுப்பாட்டை வழங்கியதில் உலகமயமாக்கலுக்கு மிக முக்கியமான பங்குண்டு. முதலாளிய வர்க்கங்கள் இதனைச் செய்துகொள்வதற்கு சமூக அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழும் பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விட வேண்டியிருக்கிறது. அதனாலேயே ஆபிரிக்காவின் சஹாரா பகுதி, லத்தீன் அமெரிக்க மற்றும் தென்கிழக்காசியப் பிராந்தியங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதனை அவதானிக்க முடியும். ஏனெனில் இந்தப் பிராந்தியங்களிலேயே பெரும் பன்னாட்டு நிறுவனங்கள் இலாபம் ஈட்டுவதற்காக வேண்டி நிலம், இயற்கை வளங்கள் மற்றும் ஏனைய வளங்களை ஆக்ரோஷமாகக் சுரண்டி வருகின்றன. அத்தோடு இப்பிராந்தியங்கள் காலனியாதிக்கத்தை வலுவாக எதிர்த்த இடங்களாக இருப்பதால் தமது அதிகார வலுப்படுத்தலுக்காக வேண்டி மேலே கூறியவாறு முதலாளித்துவ வர்க்கங்கள் பெண்களின் மீது அத்துமீறிய வன்முறைகளை ஏவி விடுகின்றன. பெண்களைத் துன்புறுத்துவதும் அவர்கள் மீது கட்டுப்பாடுகளை விதிப்பதும், சமூகங்களை இலகுவாகப் பலவீனப்படுத்தும் அம்சங்களாக உள்ளதால் நிலங்களையும் இயற்கை வளங்களையும் பறிக்கும் நில அபகரிப்பு செயல்முறைகளை இது இலகுபடுத்தி விடுகிறது. இதனூடாக முதலாளித்துவ வர்க்கங்கள் நிலங்களைக் கையகப்படுத்தி அதிலுள்ள வளங்களைத் தனியார்மயமாக்கி பெரும் இலாபத்தை அடைகின்றன.

இலத்தீன் அமெரிக்காவில் இராணுவக் குழுக்களால் பெண்கள் சித்திரவதை செய்யப்படுவது குறித்துப் பேசும், ரீட்டா லாரா செகாடோ (Rita Laura Segato) அதை “வெளிப்பாட்டு வன்முறை” என்றும் “வன்கொடுமைகளின் கூடம்” எனவும் அழைக்கிறார். பெண்களை அச்சுறுத்துவதும் அதனூடாக ஒரு செய்தியை உலகிற்கு வெளிப்படுத்துவதுமே இதன் முக்கிய நோக்கம் என்று அவர் கூறிச் செல்கிறார். முதலில், இந்த வன்முறைகள் பெண்களை அச்சுறுத்தி அதனூடாக முழு சமூகத்தினையும் அச்சுறுத்துவதற்கான வாய்ப்பை முதலாளித்துவ வர்க்கங்கள் பெற்றுக் கொள்கின்றன. அதுமட்டுமின்றி பெண்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடுவதன் ஊடாக பரந்த நிலங்களில் வாழும் மக்களை இடம்பெயரச் செய்வது இலகுவானதாகி விடுவதால் பெரும் கம்பனிகள் இதில் நாட்டம் கொள்கின்றன. நில அபகரிப்பு, வளச் சுரண்டல் போன்றவற்றை ஆரம்பிப்பதற்கான துவக்கப் புள்ளிகளாக பெண்களின் மீது அத்துமீறிய வகையில் மேற்கொள்ளப்படும் வன்முறைகளே அமைகின்றன. சுரங்க அகழாய்வு மற்றும் எண்ணெய் நிறுவனங்கள்  பலவும் தங்களது சொந்த நிலங்களிலிருந்து பொதுமக்களை விரட்டியடிக்க இந்தச் செயல்முறையையே பயன்படுத்துகின்றன. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் இந்த வன்முறைகள், உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை போன்ற சர்வதேச அமைப்புகளின் கொள்கைகளுக்கு எதிரான ஒன்றாக யாரும் கருதுவதில்லை. ஏனெனில் இந்த அமைப்புகளே உலகளாவிய பொருளாதாரக் கொள்கைகளையும் நில அகழ்வுச்சுரங்கச் சட்டங்களையும் வடிவமைத்து வருவதோடு பன்னாட்டுப் பெருநிறுவனங்களின் வழியே புதியதொரு நவகாலனிய அமைப்பை உருவாக்கவும் துணை புரிகின்றன. கொங்கோ, குவாத்தமாலா போன்ற இடங்களில் இராணுவம் பெண்களின் உறுப்பை சிதைத்தும் கர்ப்பிணிகளின் வயிற்றைக் கிழித்துக் ஏன் தீவிர வன்முறைகளில் ஈடுபட்டனர் என்பதைப் புரிந்துகொள்ள இந்த சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களின் திட்டங்களின் பக்கம் நாம் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. ரீட்டா லாரா செகாடோ கூறுவது போல இந்த வகையான தீவிரமான வன்முறைகள் சமூக வாழ்விலிருந்து இயல்பாகவே உருவாவதில்லை. மாறாக அதிகார வர்க்கங்கள் இதனைக் கவனமாகத் திட்டமிடுவதோடு இதனைச் செய்பவர்கள் தங்களுக்கு ஒருபோதும் தண்டனைகள் எதுவும் கிடைக்கப் போவதில்லை என்பதையும் அறிந்தே செயல்படுகிறார்கள். அதேபோல, சுரங்க அகழ்வு நிறுவனங்கள் எந்த விதமான மனச்சாட்சியுமின்றி நிலங்களையும், ஆறுகளையும், நீரையும் அபாயகரமான இரசாயனங்களால் மாசுபடுத்தி வருகின்றன. உள்ளூர் மக்கள் இச் செயற்பாடுகளை எதிர்க்கும்போது பாதுகாப்புப் படையினர் அவர்களைக் கைது செய்து அச்சுறுத்துகிறார்கள். இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைச் சக்திவாய்ந்த அரசுகளும் நிறுவனங்களுமே நீதியை எதிர்கொள்வதையிட்டும் பாதுகாத்து வருகின்றன.

சமகால புதிய உலக ஒழுங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளின் அதிகரிப்புக்கு பல்வேறு சமூக அமைப்புக்களில் பெண்கள் வகித்து வரும் வகிபாகம் மிக முக்கியமான காரணம் என்பது எனது அவதானமாகும். சமூக அமைப்புக்களை  ஒற்றுமையாக வைத்திருக்கவும், பணம் மற்றும் வணிகத்தை மட்டுமே சார்ந்திராத வாழ்க்கை முறைகளைக் கொண்டு நடாத்தவும் பெண்களின் வகிபாகம் முக்கியத்துவம் பெறுகிறது. உதாரணமாக, ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் சமீப காலம் வரையான காலப்பகுதியில் பல பெண்களுக்கு நிலத்தை பொதுவானதொரு உடைமையாக பயன்படுத்த முடிந்திருந்ததுடன் நாளின் பெரும்பகுதியை,  தங்கள் குடும்பங்களுக்கும் ஏனைய‌ சமூக அங்கத்தினர்களுக்கும் தன்னிறைவு விவசாயத்தின் மூலம் உணவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் முடிந்திருந்தது. ஆனால் நிலத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த கூட்டுச் சமூக உரிமை மற்றும்  தன்னிறைவு விவசாயம் ஆகியன பிற்காலங்களில் சக்திவாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களினால் அழித்தொழிக்கப்பட்டன. உலக வங்கி ஒருபடி மேலே சென்று அத்தகைய பொருளாதார மற்றும் சமூக ஒழுங்குகளை பன்னாட்டு நிறுவனங்களோடு இணைந்து விமர்சனம் செய்ததோடு, அவையே உலகளாவிய வறுமை நிலைக்கு காரணம் என்றும் கூறியது. இதனூடாக மக்கள் நிலத்தை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யாவிட்டாலோ அல்லது வணிக நடவடிக்கைகளுக்காகவோ வங்கிக் கடன்களை பெற்றுக்கொள்வதற்காக அதைப் பயன்படுத்தாவிட்டாலோ, அது ஒரு “பயனற்ற சொத்தாக” மாறிவிடும் நிலையை அடைந்தது.

உலக வங்கியால் ஊக்குவிக்கப்படும் மேற்குறித்த கருத்துக்கள் ஆபிரிக்கா மற்றும் இந்தியா போன்ற பிரதேசங்களில் வலுவான செல்வாக்கைக் கொண்டுள்ளன. விளைவாக, பல பெண்கள் தங்கள் குடும்பங்களுக்கென தாங்கள் மேற்கொண்டு வந்த ஜீவனோபாய நடவடிக்கைகளைக் கைவிட நேர்ந்ததுடன் அதற்குப் பதிலாக தங்கள் கணவர்மார்களின் பண்ட உற்பத்தியில் உதவியாளர்களாக மட்டுமே வேலை செய்யவும் நிர்பந்திக்கப்பட்டனர். இவ்வாறு தங்கள் கணவர்மார்களின் பண்ட உற்பத்தியில் மாத்திரம் தங்கியிருக்கும் நிலையை கிராமப்புற பெண்களின் முன்னேற்றகரமான பண்பாக பிற்காலங்களில் கட்டமைக்கப்பட்டமை தொடர்பாக மரியா மயிஸ் (Maria Mies) எழுதும் போது அதனை வன்முறையின் ஒரு வடிவமாகவே குறிப்பிடுகிறார். அத்தோடு ஏற்கனவே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவுகளில் ஆணாதிக்கம் நிறைந்திருந்த நிலையில் அதனை மேலும் அதிகரிக்கும் பணியையே இத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுத்ததாக தொடர்ந்தும் எழுதிச் செல்கிறார்.

நில உரிமை மற்றும் அதன் மதிப்பு குறித்த சட்டங்களில் 1990-களிலிருந்து ஏற்பட்டு வரும் மாற்றங்கள், எப்படி ஐரோப்பாவில் சூனியக்காரிகளின் மீதான வேட்டை என்றளவில் பெண் ஒடுக்குமுறைகள் நிகழ்ந்தனவோ அதேபோன்ற பாரியளவிலான சிக்கல்களைப் பெண்களுக்கு ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் ஏற்படுத்தின. வறுமை நிலை, எயிட்ஸ் போன்ற கொள்ளை நோய்களின் பரவல் சமூகளவில் அதிகரிக்கத் துவங்கியதுடன் அதற்கான காரணங்களாக அமைப்பியல் சார்ந்த பகுதிகளை விடுத்து தனிநபர் சார்ந்த சிக்கல்களே முன்னிலைப்படுத்தப்பட்டன. அதுபோலவே வயதான பெண்களை சமூகளவில் குறைத்து மதிப்பீடு செய்யும் நிலை உருவாகியது. சுரண்டுவதற்கும் கொள்ளையடித்துக் கொள்வதற்கும் இலகுவான தரப்பினராக அவர்கள் தெரிந்தார்கள். இந்தியாவில் நில அபகரிப்பு நடவடிக்கைகள் பெரும் வணிகத்திற்கும் தனியாருக்கும் நிலங்கள் தேவைப்படும் போது அங்கிருந்த பெண்கள் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதன் வழியே இடம்பெற்றது. ஆபி்பிரிக்கப் பிரதேசங்களில் பெரும்பாலும் ஒரு சிறிய நிலப்பரப்பில் தனியாக வசித்து வரும் வயதான பெண்களே இலக்காகக் கொள்ளப்பட்டனர். பெரும் வணிக முதலாளிகளும் தனியார் கம்பெனிகளுமே இத்தகைய வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டன.

அதுமட்டுமின்றி மூலதனத் திரட்சியை சாத்தியப்படுத்த முடியுமான புதிய வழிகள் அனைத்துமே பெண்களின் மீதான வன்முறையை தமது பிரதான உள்ளீடுகளாகக் கொண்டிருந்தன. வேலைவாய்ப்பின்மை, நிலையற்ற தொழில்வாய்ப்புக்கள் மற்றும் குடும்ப வருமானத்தின் இழப்பு போன்றவற்றை குறித்த வன்முறைகளை நிர்ணயிக்கும் காரணிகளாகக் கொள்ள முடியும். ஆண்கள் குறிப்பாக தமது வருமானத்தை அல்லது வேலைவாய்ப்ப்பை இழக்கும்போது பெரும்பாலும் விரக்தியும் கோபமும் அடைகிறார்கள். பல சமயங்களில், அவர்களது இந்தக் கோபத்தையும் விரக்தியையும் தங்கள் குடும்பப் பெண்கள் மீது காட்டி விடுகிறார்கள். அதுமட்டுமின்றி வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெண்களையும் அவர்களது உடல் மற்றும் உழைப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமோ அல்லது சுரண்டுவதன் மூலமோ பணத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் பெற்றுக்கொள்வதற்கு ஆண்கள் முயற்சிக்கிறார்கள். இந்தியாவில் நிகழும் வரதட்சணைக் கொலைகளை இந்தப் பின்னணியில் வைத்துப் புரிந்து கொள்ள முடியும்.  ஒருசில நடுத்தர வர்க்க ஆண்கள், தங்கள் மனைவிமார்கள் அவர்களது குடும்பத்தினரிடம் இருந்து போதுமான பணத்தையோ அல்லது சொத்தையோ கொண்டு வராத பட்சத்தில் அவர்களை அந்த ஆண்கள் கொன்றுவிடுகிறார்கள். இதுபோன்ற நிலைமைகள் பாலியல் கடத்தல் நடவடிக்கைகளிலேயே சென்று முடிகின்றன. தங்கள் மனைவிமார்களையோ, தங்கைகளையோ அல்லது பெண் நண்பர்களையோ வற்புறுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுமாறு ஆண்கள் கட்டாயப்படுத்தும் நிலை இதனால் உருவாகிறது. விளைவாக ஆண்களால் மிகக் கொடூரமாக நடாத்தப்படும் பாலியல் தொழிலில் நிரந்தரமாகவே மாட்டிக் கொள்ளும் நிலைக்கு பெண்கள் தள்ளப்படுகிறார்கள். மரியா மயிஸ் (Maria Mies) கூறுவது போல இது வக்கிரம் நிறைந்த பெண் அடிமைத்தனத்திற்கு ஒப்பான ஒரு நிலைக்கே இட்டுச் செல்லும்.

கிட்டத்தட்ட இதே திசையிலேயே அரச கட்டமைப்பின் பெருமளவிலான பொருளாதாரக் கொள்கைகள் இயங்கிச் செல்கின்றன. முதலாளித்துவம் ஏற்படுத்தும் பாதுகாப்பற்றதும் ஸ்திரமற்றதுமான பொருளாதார நிலைமைகளின் கீழ் குறைந்தளவிலான ஊதியத்திற்கு பணிபுரிவதைக் கொண்டே பெண்களின் உழைப்பு சமகாலத்தில் மதிப்பீடு செய்யப்படுகிறது. கடந்த காலங்களில் ஆண்கள் பெற்று வந்த நிலையான வருமானத்தின் காரணமாக ஊதியம் பெறாத நிலையில் பெண்களால் செய்யப்பட்ட வீட்டு வேலைகள் பொதுவாக ஆதரிக்கப்பட்டு வந்தன. ஆனால் முதலாளித்துவம், ஒரு குறிப்பிட்ட தொழிலாளர் குழுவைத் தவிர, நிலையான ஊதிய முறையைக் கையாள மறுப்பதால் குடும்ப மட்டங்களில் சிக்கல்களையும் முரண்பாடுகளையும் அது ஏற்படுத்தி விடுகிறது. இப்போதும் வீடுகளில் ஊதியம் வழங்கப்படாத நிலையில் பெண்கள் வேலைகளைச் செய்த போதிலும் அதனை நவீன முதலாளியச் சமூக அமைப்புக்கள் போதுமானவையாகக் கருதுவதில்லை. பெண்களும் பணத்தை திரட்ட வேண்டுமென எதிர்பார்ப்புகள் ஏற்படுவதால் பெண்கள் வேலைத்தளத்திற்கும் குடும்ப அமைப்பிற்கும் இடையில் சமநிலையை பேண நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். அவ்வாறு சமநிலையைப் பேண தவறும் பட்சத்தில் அவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகின்றனர்.

நவீன சமூகச் சூழமைவில் பெண்கள் தங்கள் குடும்பங்களுக்காக வேண்டி பெரும்பாலும் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களுக்குச் செல்லவோ, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடவோ அல்லது வேறு பிரதேசங்களுக்குக் குடிபெயர்ந்து செல்லவோ வேண்டியுள்ளது. இந்த நிலைமை அவர்களைப் புதிய வகையான வன்முறைகளுக்கு ஆளாக்கி விடுகிறது. இவ்வாறு பெண்கள் உலகளாவியப் பொருளாதார அமைப்பின் ஓர் அங்கமாக மாறும்போது வன்முறையை எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பல உதாரணங்கள் எடுத்துக் காட்டுகின்றன. உதாரணமாக, லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த சில புலம்பெயர்ந்த பெண்கள், அதிகமாக இராணுவம் குவிக்கப்பட்டு இராணுவமயமாக்கப்பட்ட எல்லைக் காவலர்களிடமிருந்து தீவிரமான பாலியல் வன்முறைகளை எதிர்கொள்வதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு எல்லைகளைக் கடந்து செல்ல முன்னர் குறித்த பெண்களில் அநேகர் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்வதாகவும் அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி தினமும் தெருவோரங்களில் பொருட்களை விற்று பிழைப்பு நடாத்தும் தெருவோர பெண் வியாபாரிகள், தங்கள் பொருட்களைப் பறிமுதல் செய்ய முயற்சிக்கும் காவல்துறையினருடன் அடிக்கடி மோதல்களை எதிர்கொண்டு வருகின்றனர். ஜூல்ஸ் ஃபால்கெட் (Jules Falquet) விளக்குவது போல நவீன சமூக அமைப்பினுள் பெண்கள், ஒரு ஆணைச் சார்ந்திருப்பதற்குப் பதிலாக பல்வேறு நபர்களுடன் பணியாற்ற வேண்டியிருக்கிறது. வெவ்வேறு நபர்களுக்காக வேண்டி சமைக்கவோ, சுத்தம் செய்யவோ அல்லது பாலியல் சேவைகளை வழங்கவோ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். விளைவாக பாரம்பரிய சமூக அமைப்பினுள் நிலவிய சமூகப் பாதுகாப்பு அல்லது கட்டுப்பாட்டு வடிவங்களில் உடைவுகள் தோன்றி பெண்கள் மீதான துஷ்பிரயோகங்களும் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன. சில பெண்கள் அதிக சுதந்திரம், தன்னாட்சி மற்றும் பொருளாதாரத் தனியுரிமைகளைக் கோரி வருவதால் அதற்கெதிரான ஆண்களின் வன்முறைகளும் அதிகரித்து வருகிறது. சில ஆண்கள் பெண்ணியத்திற்கும் பெண்கள் கோரும் தன்னாட்சிக்கும் சுதந்திரத்திற்கும் எதிராக மூர்க்கத்தனமாக எதிர்வினையாற்றுகிறார்கள். டிசம்பர் 6, 1989 அன்று மெண்ட்ரியல் பல்கலைக்கழகத்தில் நடந்த தாக்குதல் இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. ஒரு நபர் வகுப்பறைக்குள் நுழைந்து, ஆண்களைப் பெண்களிடமிருந்து பிரித்து, அவர்கள் பெண்ணியவாதிகள் என்று கத்திக்கொண்டே சுமார் பதினான்கு பெண்களைச் சுட்டுக் கொன்றார். அதுமட்டுமின்றி பெண்கள் மீதான வெறுப்பும் வன்முறை உணர்வும் பெரும்பாலும் இனவாத உணர்வுடனேயே நிலவுகிறது. அமெரிக்காவில், வெள்ளைப் பெண்களின் கொலைகளுடன் ஒப்பிடுகையில் கறுப்பினப் பெண்களின் கொலைகள் பெரும்பாலும் மிகக் குறைந்தளவிலான  ஊடகக் கவனத்தைப் பெறுவதோடு குறித்த கொலைகள் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன. உதாரணமாக, லொஸ் ஏஞ்சல்ஸில் நடந்த “க்ரிம் ஸ்லீப்பர் (Grim Sleeper)” தொடர் கொலைகள் மீதான காவல்துறை விசாரணைகள் மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. குறித்த கொலைகாரன், குறைந்த வருமானம் கொண்ட ஆபிரிக்க் கறுப்பின அமெரிக்கப் பெண்களையே குறிவைத்திருந்தான். இதனால் அமெரிக்க ஊடகங்கள் இது தொடர்பான விசாரணைகளின் ப்க்கம் தமது கவனத்தைத் திருப்புவதற்கு மிக நீண்ட காலத்தை எடுத்துக்கொண்டன. அதுமட்டுமின்றி திருநங்கைகளுக்கு எதிரான வெறுப்பும் பாகுபாடும், பெண்கள் மற்றும் பாலின சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரித்திருக்கின்றன. 2010 மற்றும் 2016 களுக்கு இடையில் அமெரிக்காவில் குறைந்தது 111 திருநங்கைகள் மற்றும் பாலின அடையாளத்திற்கு உட்படாதவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் கறுப்பின திருநங்கைகள் ஆவர். NCAVP யின் அறிக்கையின் பிரகாரம், இந்தக் கொலைகளில் இருபத்து மூன்று கொலைகள் 2016 ஆம் ஆண்டில் நிகழ்ந்தவை.  அதுவரை காலமும் அமெரிக்க ஊடகங்கள் பதிவுசெய்திருந்த அதிகபட்ச எண்ணிக்கை இதுவேயாகும். இந்த வகையான வன்முறைகள் அனைத்துமே இராணுவக் குழுக்கள், போதைப்பொருள் கும்பல்கள், கூலிப்படைகள் அல்லது காவல்துறையினரால் நடத்தப்படும் வன்முறைகளிலிருந்து வேறுபட்டவையாக இருந்தாலும் அவை இரண்டும் ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவையாகவே உள்ளன.

ஷீலா மெய்ன்ட்ஜஸ் (Sheila Meintjes), அனு பிள்ளை Anu Pillay) மற்றும் மெரிடெத் டர்ஷன் (Meredeth Turshen) ஆகியோர் ‘The Aftermath: Women in Post Conflict Transformation’ (2001) என்ற நூலில் விளக்குவது போல, போர்க்காலங்களில் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளும் சாதாரண காலங்களில் நிகழ்த்தப்படும் வன்முறைகளும் பெண்களுக்கு தன்னாட்சிச் சுதந்திரத்தையும், தங்கள் சொந்த வாழ்வின் மீதான கட்டுப்பாட்டையும் மிகக் கடுமையாக மறுப்பதில் ஒன்றிணைகின்றன எனலாம். இந்த மறுப்பானது பெண்களின் பாலுணர்வையும் அவர்கள் அனுபவிக்க வேண்டிய வளங்களையும் மற்றும் அதிகாரத்திற்காக அவர்களுக்குள்ள உரிமையையும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு தொடர்புடையது. வன்முறையையும் பலவந்தத்தையும் அடிப்படையாகக் கொண்ட அமைப்புகளில், பல்வேறு கூறுகள் ஒன்றிணைந்தே செயல்படுகின்றன என்று மரியா மெயிஸ் (Maria Mies) கூறுகிறார். தந்தையர்கள், சகோதரர்கள், கணவர்கள், மற்றும் மகன்கள் போன்ற குடும்பக் கட்டமைப்பின் ஆண்கள், ஆணாதிக்கக் குடும்ப அமைப்பு, அரசு மற்றும் முதலாளித்துவக் கட்டமைப்புகள் என அனைத்தும்  இதில் அடங்குவதாக அவர் சுட்டிக்காட்டுகிறார். வீட்டு வன்முறையும் பொதுவெளியில் நிகழும் வன்முறையும் ஒன்றையொன்று பூரணம் படுத்தி வலுப்படுத்துகின்றன. அமைப்பு ரீதியாக வீட்டு அல்லது குடும்ப வன்முறையைப் பொறுத்துக்கொள்ளும்போது பெண்களுக்கு எதிரான வன்முறையைச் சமூகம் இயல்பானதாகக் கருதத் தொடங்குகிறது. இது தண்டனைக்கு அஞ்சாமல் மக்கள் பெண்கள் மீதான வன்முறையில் ஈடுபடும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குகிறதுடன்  பெண்களுக்கு எதிரான பரந்தளவிலான வன்முறைகளுக்கான பொது ஏற்பையும் வழங்கி விடுகிறது.

மேலுள்ள அனைத்தும் பௌதீக ரீதியாக  இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான எடுத்துக்காட்டுகளாக உள்ள போதிலும் பெண்களுக்கு எதிரான வன்முறைக்கள் பொருளாதார, சமூக அமைப்பின் கொள்கை நலத்திட்டங்கள் மூலமாகவும் அரங்கேறுகின்றன. அசமத்துவம் நிறைந்த முதலாளிய அமைப்பின் நிலவுகையால் ஏற்படும் வேலைவாய்ப்பின்மை,  வறுமை நிலை போன்றவையும் ஒரு வகையான வன்முறையே ஆகும். அத்துடன் புதிய அடிமைப் பண்ணைகளுடன் ஒப்பிட முடியுமான மெக்ஸிகோவில் உள்ள மக்விலடோராக்களில் (maquiladoras) உள்ளதைப் போன்ற கடுமையானதும் மனிதாபிமானமற்றதுமான பணிச் சூழல்களும் வன்முறையாகளாகவே கருதப்பட வேண்டும்

சுகாதார வசதிகள் பற்றாக்குறை, கருக்கலைப்புக்கான உரிமையை மறுத்தல், பெண் சிசுக்களைக் கலைத்தல், மற்றும் ஏழை மக்களைக் கடனில் சிக்க வைக்கும் குறுங்கடன்கள் ஆகியவையும் வன்முறையின் வடிவங்களாக மாறி வருகின்றன. இவற்றோடு அனுதின வாழ்வு தொடர்ந்தும் இராணுவமயமாக்கப்படுவதையும் வன்முறையின் மற்றுமொரு வடிவமாக புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஆணாதிக்கமும் பெண் வெறுப்புணர்வுகளுக்கும் வலுவான ஆதரவை திரட்டிக் கொள்வதில் இராணுவ அமைப்புகளுக்கு தீர்க்கமான வகிபங்கு உள்ளது.  ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஒரு புதுவகை வேலைப் பங்கீட்டு முறைமை  தொடர்பாகவும், குறிப்பாக அதிக ஆயுதம் தரித்த நிலையில் ஆண்கள் மாத்திரம் உள்வாங்கப்படும் இராணுவக் கட்டமைப்பு தொடர்பாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் எழுதும் போது நிச்சயம் கவனத்தில் கொள்ள வேண்டும் என ஜூல்ஸ் ஃபால்கெட் (Jules Falquet) வாதிடுகிறார். பாதுகாப்புக் காவலர்கள், சிறைக் காவலர்கள், இராணுவ வீரர்கள், கூலிப்படையினர் போன்ற ஆண்களுக்கு மாத்திரமே திறந்து விடப்பட்டிருக்கும் வேலைவாய்ப்புகள் கூட அதிகமாக பெண்களின் மீதான வன்முறைகளை அதிகம் பயன்படுத்துவதையே சார்ந்துள்ளன. ஆணாதிக்கத்தின் பல ஆக்ரோஷமான வன்முறை வடிவங்களை உருவாக்கிக் கொள்வதற்காகவே உண்மையில் இவை உருவாக்கப்பட்டிருக்கின்றன. பெண்களை மூர்க்கத்தனமாக கொலை செய்பவர்களில் பெரும்பாலானோர் ஆயுதப் பாவனையில் அனுபவம் வாய்ந்தவர்களாகவும்  வன்முறைகளால் பிரச்சனைகளைத் தீர்க்கப் பழகிய ஆண்களுமாகவே இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. அமெரிக்காவைப் பொறுத்தவரை பெரும்பாலான சந்தர்ப்பங்களில், காவல்துறை அதிகாரிகள் அல்லது ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் (2001–2021) பங்கேற்ற போர் வீரர்களே குறிப்பிட்ட அறிக்கையின் பிரகாரம் பெண்களுக்கு எதிரான வன்முறைகளோடு தொடர்புபட்டவர்களாக உள்ளனர். சொல்லப்போனால் அமெரிக்க இராணுவ அமைப்பினுள் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் என்பது அதன் பிரதான உள்ளீடாகவே அமைந்திருக்கிறது எனலாம். வன்முறைகளைப் பணியிடம் மற்றும் தனிப்பட்ட வாழ்வு என வேறு பிரிக்க முடியாது என்று கூறுவார் ஃபிரான்ஸ் ஃபனான். ஒருவர் வன்முறைகளை நிகழ்த்துவதையே அல்லது அதற்கான நாட்டத்தையே தனது பணியாக கொண்டிருக்கும் போது, அதே வன்முறையையே தனது வீட்டிற்குள்ளும் தனிப்பட்ட உறவுகளுக்கும் நடைமுறைப்படுத்துவார். பெண்களை பாலியல் ரீதியாக மிக மோசமாகச் சித்தரிக்கும் ஊடக நடைமுறைகளும் நிலைமையை மேலும் மோசமாக்குகின்றன. இது பெண்கள் மரியாதை குறைவாக நடுத்தப்படுவதற்கும், அவர்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கான நாட்டம்,  ஒரு சாதாரண மனித உரிமையாகக் கருதப்படாமல் பாலியல் ரீதியானதாகவோ அல்லது ஆத்திரமூட்டும் ஒன்றாகவோ பார்க்கப்படும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்கவே இது பெரிதும் உதவுகிறது.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பரவலாக அதிகரித்து வருவதால், அதற்கெதிரான எதிர்ப்புக்களும் பல்வேறு வழிகளிலும் இடங்களிலும் நிகழ வேண்டியிருக்கிறது. ஏற்கனவே பல இயக்கங்கள் தீவிரமாகக் களத்தில் செயல்பட்டு வருகின்றன. கடுமையான தண்டனைச் சட்டங்களை அமுல்படுத்தல் போன்ற மேம்போக்கான தீர்வுகளை அவை முற்றாக நிராகரித்து வருகின்றன. ஏனெனில் அத்தகைய தீர்வுகள் இப்பிரச்சனைகள் உருவாவதற்கும் அவற்றின் நீடிப்புக்கும் காரணமான அதே அதிகார அமைப்புகளையே மென்மேலும் வலுப்படுத்துகின்றன. எடுக்கக்கூடிய சிறந்த நடவடிக்கைகளாக பெண்கள் அனைவரும் தாங்களாகவே ஒழுங்கமைந்து தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் உத்திகளே மிகவும் பயனுள்ளவையாக அமையும். அரசு அல்லது ஏனைய அதிகார அமைப்புகளுக்கு பதிலாகப், பெண்களாலேயே நடாத்தப்படும் பாதுகாப்புத் தங்குமிடங்களை உருவாக்குவது அவசியமாகிறது. தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொள்வதும், தற்காப்பு வகுப்புகளை நடத்துவதும் இதில் நிச்சயம் இடம்பெற வேண்டும். மற்றொரு முக்கியமான வழிமுறையாக 1970 களில் நடைபெற்ற “இரவை மீட்டெடுப்போம் (Take back the Night)”  என்ற பெயரில் நடாத்தப்பட்ட பேரணிகள் போன்ற பொதுப் போராட்டங்களை நடாத்துவதைக் குறிப்பிடலாம். இந்தியாவில் உள்ள பெண்கள் பாலியல் வன்புணர்வு மற்றும் வரதட்சணைக் கொலைகளுக்கு எதிராக பல்வேறு பேரணிகளை ஏற்பாடு செய்துள்ளனர். இந்தப் போராட்டங்களில் பல குற்றங்களோடு நேரடியாகச் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு அருகாமையிலோ அல்லது காவல் நிலையங்களுக்கு வெளியிலோ அமர்ந்து உடனடியான தீர்வுகளைக் கோரி நடாத்தப்பட்டன. சமீபத்திய ஆண்டுகளில், ஆப்பிரிக்காவிலும் இந்தியாவிலும் சூனியக்காரிகள் மீதான வேட்டைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பிரச்சாரங்களில், பெண்களும் ஆண்களும் கிராமம் கிராமமாகப் பயணம் செய்து நோய்களுக்கான உண்மையான காரணங்களை விளக்குவதோடு, சில ஆண் பாரம்பரிய வைத்தியர்கள் உள்ளூர் தலைவர்கள் மற்றும் ஏனையோரால் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள உள்நோக்கங்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.குவாத்தமாலாவின் சில பகுதிகளில், பெண்களைக் கொடுமைப்படுத்தும் இராணுவ வீரர்களின் பெயர்களைச் சேகரித்து அவர்களைப் பற்றி அவர்களது சொந்த ஊர்களிலேயே அம்பலப்படுத்தும் வேலையைச் செய்து வருகின்றனர். இந்த எல்லா நிகழ்வுகளிலும், எதிர்த்துப் போராடுவதல், பயந்துபோய் ஒளிந்திருக்காமல் தைரியமாக முன்னோக்கி நகர்தல் மற்றும் பாதிக்கப்பட்ட பிற பெண்களுடன் ஒன்றிணைதல் போன்ற ஆக்கபூ்பூர்வமான விடயங்கள் நடந்தேறி வருகின்றன.  இவையனைத்தும் பெண்களின் மீது நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுத்து நிறுத்தும் முயற்சிகளின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவையாக இருக்கக்கூடியவை. ஆனால், இந்த உத்திகள் மட்டுமே நீடித்த மாற்றத்தைக் கொண்டுவராது. சமூகம் பெண்களையும், அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் செய்யும் சந்ததிகளை உருவாக்கும் பணிகளையும் மதிக்கப் பழகும் விதத்தில் ஒரு பாரிய மாற்றம் ஏற்பட வேண்டும். அவ்வாறானதொரு மாற்றத்திற்கு பெண்கள் தங்களுக்கென சொந்தமான வளங்களையும் வருமானத்தையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாவதுடன் பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக எப்போதும் ஆண்களைச் சார்ந்திருக்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க முடியுமான சுதந்திரமும் அவசியமாகிறது. வெறுமனே உயிருடன் இருப்பதற்காக மாத்திரம் ஆபத்தானதும் சுரண்டல்கள் நிறைந்ததுமான வேலைகளில் ஈடுபட நிர்பந்திக்கப்படாமல் இருப்பதற்கு இந்தச் சுதந்திரம் பெண்களுக்கு மிக முக்கியமானது.

சில்வியா பெடர்ஸி (Silvia Federici) ஒரு இத்தாலிய-அமெரிக்க சிந்தனையாளர். மார்க்சிய பெண்ணியக் கோட்பாடு, பெண்களின் வரலாறு, அரசியல் தத்துவம் மற்றும் பொது வளங்கள் பற்றிய வரலாறு மற்றும் கோட்பாடு ரீதியான ஆய்வுகளை முன்னெடுத்து வருகிறார். இவருடைய மிகவும் பிரபலமான புத்தகமான Caliban and the Witch: Women, the Body and Primitive Accumulation பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அத்துடன் Beyond the Periphery of the Skin, Patriarchy of the Wage, Wages against housework, போன்ற பல புத்தகங்களை எழுதி இருக்கிறார்.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்

இந்த ஆக்கம் artforum இணையதளத்தில் UNDECLARED WAR: VIOLENCE AGAINST WOMEN என்ற தலைப்பில், 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.