– இலான் பப்பே

மேற்கத்திய நாடுகளில் வாழும், அரசியல் தஞ்சமடைந்த ஈரானியர்கள், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கக் கொடிகளை அசைத்தபடியும், நெடன்யாகு மற்றும் ட்ரம்பிற்கு நன்றி கூறி முழக்கமிட்டபடியும், ஈரானின் உச்சத் தலைவரின் மரணத்தைக் கொண்டாடும்போது, நீதிக்கான போராட்டங்களில் உணர்ச்சியையும் அரசியல் விவேகத்தையும் பிரித்தறிவதென்பது எப்போதுமே ஒரு மிகப்பெரிய சவால் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கொல்லப்பட்ட அந்தத் தலைவரின் மேற்பார்வையிலேயே, கடந்த ஓராண்டு காலத்தில் பல ஈரானியர்களின் உயிரைப் பறித்த, ஒடுக்குமுறை மிக்க மற்றும் இரக்கமற்ற கட்டமைப்பு (system) இருந்தது. துரதிர்ஷ்டவசமாக, இத்தகைய கட்டமைப்புகள் —அவை மதச்சார்பானதாக இருந்தாலும் சரி அல்லது மதச்சார்பற்றதாக இருந்தாலும் சரி— உலகின் பல பகுதிகளில் இன்னும் நிலவுகின்றன. குறைந்தபட்ச மனிதாபிமானம் கொண்ட எவரும், இந்த அமைப்புகளின் கீழ் நீதியையும் சுதந்திரத்தையும் கோருபவர்களுக்குத் தங்கள் ஆதரவையும் ஒருமைப்பாட்டையும் (solidarity) காட்டுவார்கள்.

ஜனநாயகம், பொருளாதார மற்றும் சமூக நீதிக்கான போராட்டம் என்ற போர்வையில் தற்போது நடைபெறும் இந்தப் பிரச்சாரம், அந்தக் கொள்கைகளைத் தினசரி மீறும் அமெரிக்க நிர்வாகத்தாலும் இஸ்ரேலிய அரசாங்கத்தாலுமே முன்னெடுக்கப்படுகிறது. மேலும், சர்வதேசச் சட்டத்திற்கும், இறையாண்மை மற்றும் உலகின் பிற மக்களின் சுயநிர்ணய உரிமை ஆகிய கொள்கைகளுக்கும் தாங்கள் அளிக்கும் அவமரியாதையையும் வெளிப்படையான விரோதத்தையும் அவர்கள் அப்பட்டமாகக் காட்டியுள்ளனர்.

ஈரானில் சுதந்திரத்திற்காகப் போராடும்போது, இஸ்ரேலியக் கொடியை அணிந்துகொள்வது என்பது ஒரு கேலிக்கூத்தாகும்: இந்தக் கொடி இன்று போர்க்குற்றவாளிகளால் வழிநடாத்தப்படும் ஒரு இனப்படுகொலை அரசைப் (genocidal state) பிரதிபலிக்கிறது. அதேபோல, அமெரிக்கக் கொடியை அசைப்பதென்பது பொருளாதாரப் பேராசை, இஸ்லாமிய வெறுப்பு, இனவாதம் மற்றும் வெளிப்படையான ஏகாதிபத்தியம் ஆகியவற்றின் அடிப்படையில் வன்முறைக் கொள்கைகளைச் செயற்படுத்தும் ஒரு நிர்வாகத்துடன் தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதைக் காட்டுகிறது.

நடைமுறை சார்ந்த கூட்டணிகளை (Pragmatic alliances) என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அநீதிக்கு எதிராக ஒரு கூட்டணியை உருவாக்கும்போது, ஒருவரால் எப்போதும் தூய்மைவாதியாக (Purist) இருக்க முடியாது என்பது உண்மையே; ஆனால், ஒரு பேரிடர் ஏற்படும் சூழ்நிலையிலும் கூட தாண்டக்கூடாத சில சிவப்புக் கோடுகள் (Red lines) இருக்க வேண்டும். நீதிக்கான போராட்டத்தில் மோசமான விடயம் என்பது, விரும்பத்தகாத கூட்டணிகளைத் தேர்ந்தெடுப்பதாகும்; அந்தச் செயற்பாட்டில் அவர்களைக் கொண்டாடுவதும், புகழ்வதும் அறவே புரிந்துகொள்ள முடியாதது.

இந்தக் கூட்டணியின் முக்கிய ஆதரவாளர் முன்னாள் ஷாஹ்வின் (Shah) மகன் என்பதை அறியும்போது, இந்தக் கூட்டணியின் நம்பகத்தன்மை மேலும் கடுமையாகக் கேள்விக்குற்படுத்தப்பட வேண்டும்.

அவர் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டார்? இது ஒரு வரலாற்று மறதி (Historical amnesia) பிரச்சினையாக இருக்கலாம். ரேசா ஷாஹ் பஹ்லவியின் (Reza Shah Pahlavi) ஆட்சி சர்வாதிகாரமானதாகவும் ஒடுக்குமுறை நிறைந்ததாகவும் இருந்தது. அது எதிர்ப்பாளர்களை அச்சுறுத்திய, சித்திரவதை செய்த மற்றும் தூக்கிலிட்ட கொடூரமான இரகசிய போலீஸ் படையால் (Secret police) நிலைநிறுத்தப்பட்டது. அந்த ஆட்சி ஊழல் மற்றும் பொருளாதார, சமூகப் பாகுபாட்டுக் கொள்கைகளால் பீடிக்கப்பட்டிருந்தது. அதன் மிகச்சிறந்த கூட்டணிகளாக அமெரிக்காவும் இஸ்ரேலும் இருந்தன. இது நிச்சயமாகப் பெருமைப்படக்கூடிய ஒரு பாரம்பரியம் அல்ல.

ஷாஹ்வின் மகனைத் தேர்ந்தெடுப்பதென்பது, ஒருங்கிணைந்த எதிர்க்கட்சியொன்று இல்லாததையும் சுட்டிக்காட்டலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆயத்துல்லாஹ் கொமெய்னி போன்ற தீவிர நிலைப்பாட்டாளர்களுடன், இடதுசாரி சிந்தனையாளர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் சீர்திருத்தவாத இஸ்லாமிய அறிஞர்கள் இணைந்து உருவாக்கிய ஒரு ஒருங்கிணைந்த கூட்டணியின் உதவி இல்லாமல், இந்த இஸ்லாமியக் குடியரசானது, உருவாகியிருக்க முடியாது. ஈரான் என்பது சித்தாந்த ரீதியாகவும், சமூகப் பொருளாதார ரீதியாகவும், இன ரீதியாகவும் பன்முகத்தன்மை கொண்ட ஒரு சமூகமாகும். அது மீண்டும் முடியாட்சியைக் கொண்டுவரவோ அல்லது எதிர்காலம் குறித்த அதே பார்வைகளைப் பகிர்ந்து கொள்ளவோ விரும்புவதாகச் சொல்ல முடியாது. உலக எண்ணெய் இருப்புக்களில் ஈரானின் பங்கிலிருந்து அதிக இலாபங்களைப் பிரித்தெடுக்கும் ட்ரம்ப்பின் பேராசையாலும், சரிந்து வரும் தனது அரசியல் செல்வாக்கிலிருந்து தப்பிக்க அவர் விரும்பியதாலும், தூண்டப்பட்ட அமெரிக்கத் தலையீட்டை (American intervention) நம்பியிருப்பதை விட, நாட்டிற்குள்ளிருந்தே மீண்டும் ஒரு கூட்டணியை உருவாக்கவே ஈரான் முனையும். அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் நிலவும் தொடர்ச்சியான குழப்பநிலையிலிருந்தும், தான் சந்தித்து வரும் நீதிமன்ற வழக்குகளின் அசௌகரியத்திலிருந்தும் மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப முயலும் நெடன்யாகுவின் மூலம் ட்ரம்பிற்குச் சரியான கூட்டாளி கிடைத்துள்ளார்.

இங்கே சாத்தியமான ஒரு காட்சி (Scenario) உள்ளது: ஈரானியர்களின் “மீட்பு” நடவடிக்கையை நடத்துவதிலும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் மேற்குலகிற்கு இருப்பதாகக் கூறப்படும் இருத்தலியல் அச்சுறுத்தலை (Existential threat) எதிர்கொள்வதிலும் ட்ரம்ப், நெடன்யாகு மற்றும் ரேசா பஹ்லவி ஆகிய தனிநபர்களே சம்பந்தப்பட்டிருப்பதால், தற்போது அப்பகுதி முழுவதும் பரவி வரும் பரஸ்பர குண்டுவீச்சுகள் தணிந்த பிறகும், இத்தாக்குதல் தொடங்குவதற்கு முன்பு இருந்த அதே சவால்களையே மீண்டும் சந்திக்க நேரிடும் என்பது மிகவும் சாத்தியமானது.

இஸ்ரேலும், பிராந்தியத்திலும் உலகிலும் உள்ள அதன் நட்பு நாடுகளும் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினையாக பலஸ்தீனமும் பலஸ்தீனியர்களும் தொடர்ந்து இருப்பார்கள். அமெரிக்கர்கள் தங்கள் பொருளாதாரம், சர்வதேச அந்தஸ்து மற்றும் சமூக நல்லிணக்கத்தை அழிக்கும் ஒரு ஜனாதிபதியுடன் விடப்படுவார்கள். மேலும், ஈரான் தொடர்ந்தும் அதே ஆட்சியாளர்களால் ஆளப்படவே அதிக வாய்ப்புள்ளது; ஒருவேளை அந்த ஆட்சி பலவீனமடைந்ததாகவோ அல்லது அதிக சவால்களை எதிர்கொண்டதாகவோ இருக்கலாம். இந்தப் பிராந்தியத்தின் அரசியல் வரைபடம் பெரிதாக மாறப்போவதில்லை, அதன் சமூக அல்லது பொருளாதாரச் சிக்கல்களும் மாறப்போவதில்லை.

இந்தச் சாத்தியப்பாடு, ஷாஹ் ஆதரவு  ஊடகங்களால் பின்னப்பட்ட அதிகாரப்பூர்வ கதையாடல்களாலோ (Official narratives) அல்லது  நெடன்யாகு மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இருவரையும் புகழ் பாடுபவர்களாலோ முன்வைக்கப்படுவதில்லை. இந்த தூய்மையற்ற கூட்டணி (Unholy alliance) வெற்றி பெறும் என்று அவர்கள் நம்புவதாகவே தெரிகிறது.

பிரிட்டனின் பிரதான ஊடகங்களில் தோன்றும் சில அரசியல் வல்லுநர்களின் நிலைப்பாடும் கவலையளிப்பதாகவே உள்ளது. சர்வதேசச் சட்டத்தை இவ்வாறு மீறுவது குறித்து அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரும், பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய (EU) அரசாங்கங்களும் கொண்டிருக்கும் ஒட்டுமொத்தமான அசௌகரியத்தை அவர்களும் பகிர்ந்துகொள்கிறார்கள். இருந்தபோதிலும், அதே மூச்சில் அவர்களும், பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் உள்ள பல வலதுசாரி ஆதரவாளர்களும், இஸ்ரேல் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தால் முன்வைக்கப்படும் இரண்டு பொய்யான உரிமைகோரல்களை (Claims) எவ்வித விமர்சனமுமின்றி ஆதரிக்கின்றனர்.

முதலாவது உரிமைகோரல் என்னவென்றால், அமெரிக்காவும் இஸ்ரேலும் மக்களின் நலனுக்காகவும் அவர்களின் சுதந்திரத்திற்காகவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு (Regime change) உதவ முன்வருகின்றன என்பதாகும். இரண்டாவதாக, யூத தேசத்தை அழிக்கும் ஈரானியக் குடியரசின் விருப்பத்தின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் மீது ஈரான் நடத்தவிருந்த உடனடித் தாக்குதலைத் தடுப்பதற்காக இஸ்ரேல் ஒரு முன்கூட்டிய தாக்குதலை (Pre-emptive attack) தொடங்கியுள்ளது என்பதாகும்.

எனவே, முதலாவதாக, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலின் நேரமானது (timing), ஈரானியப் போராட்டக்காரர்களிடமிருந்து வந்த அவசர உதவிக் கோரிக்கைக்கு அளிக்கப்பட்ட பதிலடி என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1999, 2009 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் போராடியவர்களிடமிருந்து வந்த முந்தைய கோரிக்கைகள் கண்டுகொள்ளப்படவில்லை; ஆனால் இப்போது போராடியவர்கள் மட்டுமே இஸ்ரேலிய-அமெரிக்கத் தலையீட்டிற்குத் தகுதியானவர்கள் என்று நம்பச் சொல்கிறார்கள்.

ட்ரம்ப் மற்றும் நெடன்யாகு ஆகிய இருவரும் தத்தமது சொந்த நாடுகளில் எதிர்கொள்ளும் உள்நாட்டுப் பிரச்சினைகளுடன்தான் இந்தத் தாக்குதலின் நேரத்திற்குத் (timing) தொடர்புள்ளது என்று வாதிடுவதே மிகவும் நியாயமானதாகத் தெரிகிறது. எப்ஸ்டீன் ஆவணங்களில் (Epstein files) வெளியான தகவல்களால் ட்ரம்ப் அரசியல் ரீதியாகப் பேரழிவைச் சந்தித்திருக்கக்கூடிய அதே நாளில் இந்தத் தாக்குதலை அவர் திட்டமிட்டார். மேலும், தனது குற்றப் பதிவுகள் மற்றும் 2023-ல் நடந்த அதிர்ச்சியூட்டும் ஹமாஸ் தாக்குதலுக்குத் தனது சமூகத்தின் பார்வையில் தானே பொறுப்பு என்பதாலும் தனது செல்வாக்கை வெகுவாக இழந்து வந்த நெடன்யாகுவுக்கு எந்த வகையான போராக இருந்தாலும் அது தேவைப்பட்டது.

ட்ரம்ப் மற்றும் நெடன்யாகுவின் குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்த்தாலும், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய இரண்டும் (சில சமயங்களில் பிரிட்டனும் கூட) ஒரு நட்பு நாட்டின் மனித உரிமைப் பதிவுகளை விட, அந்த நாட்டின் விசுவாசத்திற்கே (loyalty) அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றன. ஈராக்கை ஆக்கிரமித்து அழிப்பது ஏன் அவசியமானது என்பதை அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் அரசியல்வாதிகள் நமக்கு விளக்கியபோது நாம் ஏற்கனவே இதைக் கடந்து வந்திருக்கிறோம். இருப்பினும், இந்த அருவருப்பான அத்தியாயத்தின் மத்தியில், கட்சி பேதமற்ற (Bi-partisan) அமெரிக்க மக்களின் பொதுக்கருத்து இந்த சாகச நடவடிக்கையை ஆதரிக்கவில்லை என்ற உண்மையிலிருந்து நாம் குறைந்தபட்சம் சில நம்பிக்கைகளைப் பெற முடியும். அதே நேரத்தில், பெயரளவில் உள்ள எதிர்க்கட்சி உட்பட இஸ்ரேலிய சமூகம் முழுமையாக நெடன்யாகுவின் பின்னால் நிற்கிறது என்பதை உணரும்போது நமது நம்பிக்கை குறைகிறது. யார் வெற்றி பெற்றாலும், இது 2026-ல் இஸ்ரேலில் நடக்கவுள்ள தேர்தலுக்கு நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை.

இஸ்ரேலையும் மேற்குலகையும் ஈரான் அழிக்கவிருந்த கடைசித் தருணத்தில் இந்தத் தாக்குதல் நடந்தது என்ற இரண்டாவது உரிமைகோரலைப் பொறுத்தவரை, உண்மைகளைக் (facts) கண்டு குழப்பமடையாமல் இருப்பது நல்லது. ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான அனைத்துத் தாக்குதல்களும் இஸ்ரேலாலேயே தொடங்கப்பட்டன.  ஈரானிடம் இருப்பதாகக் கருதப்படும் அணு ஆயுதங்கள், குறிப்பாக, இஸ்ரேலை அழிக்க வேண்டும் என்ற சொல்லாடல்களுடன் முன்வைக்கப்படும்போது, இஸ்ரேலியர்களிடையே அது ஏற்படுத்தக்கூடிய இருத்தலியல் அச்சத்தின் (Existential fear) தீவிரத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை.

அதேபோல, ஈரானைப் போலல்லாமல் ஏற்கனவே ஏராளமான அணு ஆயுதங்களை வைத்திருக்கும் இஸ்ரேலால் ஈரானுக்கும் அந்தப் பிராந்தியத்திற்கும் ஏற்படும் ஆபத்தையும் குறைத்து மதிப்பிட முடியாது. தற்போதைய இஸ்ரேல், வரலாற்றுச் சிறப்புமிக்க பலஸ்தீனத்தின் மீதும், அதன் எல்லைகளுக்கு வெகு தூரத்திலும் ஒரு கற்பனையான விவிலிய இராச்சியத்தை (Biblical kingdom) உயிர்த்தெழச் செய்யும் முயற்சியில், தார்மீக எல்லைகள் எதையும் அறியாத ஒரு சித்தாந்த ரீதியான மேசியானிய மேட்டுக்குடியினரால் (Ideological messianic elite) ஆளப்படுகிறது. இந்தச் செயற்பாட்டில், காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்களை இனப்படுகொலை (Genocide) செய்யவும், மேற்குக் கரையில் வாழ்பவர்களை இனச்சுத்திகரிப்பு (Ethnically cleanse) செய்யவும், இஸ்ரேலியக் குடிமக்களாக இருப்பவர்களை அச்சுறுத்தவும் அவர்கள் தயாராக உள்ளனர். இதற்காகத் தெற்கு லெபனானில் உள்ள மக்களின் உயிர்களையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத ஆயுதங்களை  முழுமையாகத் தாங்கியுள்ள இந்த இஸ்ரேல், ‘அணு ஆயுதம் கொண்ட ஈரானை’ ஒரு இருத்தலியல் அச்சுறுத்தலாகக் கருதி உண்மையிலேயே கவலைப்படவில்லை – அதன் ஆயுதப்படைகள், தன் ஆட்சியின் கீழ் உள்ள மில்லியன் கணக்கான பலஸ்தீனியர்களைக் கண்காணிக்கவும் ஒடுக்கவுமே உள்ளன. அண்டைய அரபு நாடுகள் 1948-ல் பலஸ்தீனத்திற்காகப் போருக்குச் சென்றன; ஆனால் அதன் பிறகு ஒருபோதும் செல்லவில்லை. டமஸ்கஸில் உள்ள ஈரானியத் தூதரகம் மீதான தூண்டுதலற்ற தாக்குதல்கள், ஈரானில் தலைவர்கள் மற்றும் விஞ்ஞானிகள் படுகொலை செய்யப்பட்டமை ஆகியவற்றுக்கு ஈரான் பெரிய அளவில் பதிலடி கொடுக்கவே இல்லை எனலாம். ஈரான் பதிலடி கொடுத்தபோது கூட, அது இந்தக் கொள்கைகள் தொடர்வதைத் தடுக்கும் ஒரு எச்சரிக்கையாகவும் தடுப்பு நடவடிக்கையாகவுமே (Deterrence) அடையாளபூர்வமான முறையில் செய்யப்பட்டது. ஈரான் போலிப் போர்களுடனேயே (Phony wars) திருப்தியடைந்தது; ஆனால் இஸ்ரேல் உண்மையான போருக்காக ஏங்குகிறது.

ஈரான் மீதான போர் என்பது பிராந்திய மேலாதிக்கத்துக்கான இஸ்ரேலின் ஒரு போராகும்; நூற்றுக்கணக்கான அணுகுண்டுகளை உற்பத்தி செய்யும் இஸ்ரேலின் அணு ஆயுதத் திட்டமும் அதைப் போன்றதே. இஸ்ரேலைப் போலல்லாமல், இப்பிராந்தியத்தில் அணு ஆயுதப் பெருக்கத்தின் ஆபத்தைக் குறைக்கும் (Deescalate) முயற்சிகளில் பங்கேற்க ஈரான் தயாராகவே இருந்தது; 2015 ஆம் ஆண்டில் ஒபாமாவால் முன்னெடுக்கப்பட்ட இந்த முயற்சி, பின்னர் நெடன்யாகு மற்றும் ட்ரம்ப் ஆகியோரால் முறியடிக்கப்பட்டது.

ஹிஸ்புல்லாஹ் மற்றும் ஹமாஸ் போன்ற ஏவல் குழுக்களின் (Proxy groups) மூலம் ஈரான் தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. வரலாற்று ரீதியாக, இந்த இரண்டு இயக்கங்களும் ஈரானிய வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இஸ்ரேலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடவில்லை. லெபனான் மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு பிரச்சாரமாகவே ஹிஸ்புல்லாஹ் தனது பயணத்தைத் தொடங்கியது. மேலும், இஸ்ரேலியக் காலனித்துவம் மற்றும் ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருவதில் மதச்சார்பற்ற பாலஸ்தீன விடுதலை இயக்கம் அடைந்த தோல்விக்கு ஒரு மாற்றுச் சக்தியாகவே ஹமாஸ் உருவானது.

அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளிடமிருந்து இஸ்ரேல் அனுபவிக்கும் அதே சர்வதேச ஆதரவு இந்த இயக்கங்களுக்கு கிடைப்பதில்லை; மேலும், இவை மிகவும் வளர்ச்சியடைந்த இராணுவத் தொழிற்சாலையையும் கொண்டிருக்கவில்லை. எனவே, அவர்கள் தங்களால் முடிந்தவர்களைச் சார்ந்திருந்தனர்; முதலில் சிரியா, சில நேரங்களில் துருக்கி, ஆனால் பெரும்பாலும் ஈரானையே சார்ந்திருந்தனர். ஷீஆ பிரிவைச் சேர்ந்த ஹிஸ்புல்லாஹ்வுக்கு ஈரானுடன் ஒரு மத ரீதியான பிணைப்பு உள்ளது; ஆனால் ஹமாஸ் ஒரு ஸுன்னி இஸ்லாமிய அமைப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். எனவே, இது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் கைப்பற்றுவதற்கான ஒரு ஷீஆ திட்டம் என்ற எண்ணம் நம்புவதற்கு கடினமானதாகும்.

இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் அமைதிக்கும் இஸ்ரேல் மட்டுமே ஒரே அச்சுறுத்தல் என்பது எந்த வகையிலும் உண்மையல்ல. ஒரு வெறித்தனமான இஸ்ரேலுடன், மற்ற சீர்குலைப்பாளர்களும் உள்ளனர். அடிப்படைவாத ஈரான், நியாயமான விடுதலை இயக்கங்களின் ஆயுதக் குழுக்கள், அதிகார வெறிகொண்ட அமெரிக்க ஜனாதிபதி, சுயநலமிக்க பல்தேசிய நிறுவனங்கள், இராணுவ மற்றும் பாதுகாப்புத் தொழிற்துறைகள், வெள்ளை நிற இஸ்லாமிய வெறுப்பு மற்றும் மேலாதிக்கத் தலைவர்கள் மற்றும் அவர்களின் இயக்கங்கள் ஆகியவை மத்திய கிழக்கில் காலனித்துவ நீக்கம் (Decolonisation) இன்னும் முழுமையாக நடைபெறவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றன.

இன்னமும் இந்தப் பிரச்சினையின் மையமாக பலஸ்தீனமே உள்ளது. 120 ஆண்டுகால பலஸ்தீனக் காலனித்துவம் மற்றும் அதன் மக்களின் படிப்படியான நில அபகரிப்பு (Incremental dispossession) மற்றும் ஒடுக்குமுறைக்கு ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வு கிடைத்துவிட்டால் பின்வரும் மூன்று விடயங்கள் பெருமளவு குறைந்துவிடும், ஈரான் பாலஸ்தீனத்தை ஒடுக்குமுறை அல்லது ஆக்கிரமிப்பிற்கான ஒரு சாக்குப்போக்காகப் (Pretext) பயன்படுத்துவதையும், அமெரிக்கர்கள் ஆட்சியின் விவகாரங்களில் அழிவுகரமான முறையில் தலையிடுவதையும், மற்றும் சர்வாதிகார ஆட்சிகள் (Authoritarian regimes) தங்களின் தன்னிச்சையான அதிகாரத்தை நியாயப்படுத்துவதையும் கணிசமாகக் குறைக்கும்.

அத்தகைய ஒரு திருப்புமுனை, முதலாம் உலக மகா யுத்தத்துக்குப் பிறகு காலனித்துவ சக்திகளால் உருவாக்கப்பட்ட ஆட்டம் காணும் அரசியல் அமைப்பை மாற்றிவிட்டு, பொருளாதார மற்றும் சமூக நீதியின் அடிப்படையில் ஒரு புதிய அரசியல் அமைப்பை உருவாக்க ‘மஷ்ரெக்’ (கிழக்கு மத்திய தரைக்கடல்) பகுதிக்கு அனுமதிக்கும்.

அந்தத் தீர்வின் தன்மையானது, முழுப் பிராந்தியத்திலும் செல்வாக்கு செலுத்துவதற்கான அதன் வாய்ப்புகளைத் தீர்மானிக்கும். பலஸ்தீன தேசிய இயக்கத்தால் (Palestinian national movement) வலியுறுத்தப்பட்டு உருவாக்கப்படும், மற்றும் மஷ்ரெக் பகுதியுடன் இயல்பாக மீண்டும் இணைக்கப்படும் ஒரு ஜனநாயக, காலனித்துவ நீக்க (Decolonised) மற்றும் சியோனிச நீக்க (De-Zionised) பலஸ்தீனம் மட்டுமே இதைச் சாதிக்கும். இந்தத் தொலைநோக்குப் பார்வைக்கான கூட்டணிகள், இப்போது மத்திய கிழக்கைக் காப்பாற்றுவதாகக் கூறிக்கொள்பவர்களின் அறமற்ற மற்றும் சுயநலப் போக்கால் கறைபட்டிருக்க மாட்டார்கள்.

இலான் பப்பே, எக்ஸிடர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார். அவர் The Ethnic Cleansing of Palestine, The Modern Middle East, A History of Modern Palestine: One Land, Two Peoples, and Ten Myths about Israel உள்ளிட்ட நூல்களை எழுதியுள்ளார்.

மொழிபெயர்ப்பு – ஜாவித் ஹக்