– றபியூஸ் முகமது

மனித உரிமைகளை மீறுபவர்கள் தங்களுக்கு எந்தவொரு மனித உரிமையையும் கோர முடியாது என்பதே லிபரலிசம் உருவாக்கிய உலக ஒழுங்கின் அடிப்படையாக இருப்பதாக பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) குறிப்பிடுகிறார். இது தற்போதைய ஈரான் மீதான யுத்தத்தின் மூலம் மீண்டும் நிரூபணமாகியுள்ளது. இந்தக் கூற்றை வாசிக்கும் போது அனைவருக்கும் எழும் முக்கியமான கேள்வி என்னவெனில்: அப்படியானால் அமெரிக்கா, ஐரோப்பா, இஸ்ரேல் போன்ற சக்திகள் உலகில் மிகப் பெரிய அளவில் மனித உரிமைகளை மீறுகின்றனவே; அப்படியிருக்க அவர்களுடைய மனித உரிமைகள் ஏன் மிக முக்கியமானதாகக் கருதப்படுகின்றன?

இதற்குப் பின்னால் ஒரு நீண்ட வரலாறு உள்ளது. அந்த வரலாற்றை ஆராய்வதன் மூலம் இதை நமக்கு தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். மனித உரிமைகள் மீறப்படுவதே அரசியல் நடவடிக்கைகளின் ஒரு கட்டாயக் கடமைப்பாடாக மாற்றப்பட்டது. அமெரிக்காவை ஸ்பெயின் கைப்பற்றியதற்குக் கூறப்பட்ட காரணம் அங்கிருந்த உள்ளூர் கலாச்சாரங்களில் ‘மனிதப் பலி’ வழங்கும் நடைமுறை இருந்தது என்பதாகும். அதேபோல் வட அமெரிக்காவைக் கைப்பற்றியது, அங்கிருந்த பழங்குடியின மக்களின் கலாச்சாரம் ‘காட்டுமிராண்டித்தனமானது’ என்பதைக் காரணமாகக் கொண்டு நியாயப்படுத்தப்பட்டது. அதேபோல் ஸ்பெயினில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் மற்றும் யூதர்கள் மீது இனச் சுத்திகரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதற்காக, அவர்கள் ‘சைத்தானிய மதங்களை பின்பற்றுகின்றனர்’ என்றும் ‘காட்டுமிராண்டித்தனமான கலாச்சார அம்சங்களை கொண்டுள்ளனர்’ என்றும் கூறப்பட்டது. அதேபோல் ஆப்பிரிக்காவைக் கைப்பற்றியதும், ‘நரமாமிசம் உண்பதற்கு எதிரான’ ஒரு போராட்டமாகச் சித்தரிக்கப்பட்டது. சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று கூறிக்கொண்டே ‘அபின் போர்கள்’ (Opium Wars) மூலம் சீனா அடிபணிய வைக்கப்பட்டது. மேற்குலகம் ஒட்டுமொத்த உலகையும் கைப்பற்றி, காலனியாக்கி, அடிமைப்படுத்தி, சீரழித்து, அவமானப்படுத்தியதுடன் பல கலாச்சாரங்களையும் நாகரிகங்களையும் அழித்துள்ளது. பெரும் அளவிலான இனப்படுகொலைகளையும் அது நிகழ்த்தியுள்ளது. ஆனால் இத்தகைய செயல்கள் அனைத்தும் ‘மனித உரிமைகள்’ என்ற பெயரிலேயே நியாயப்படுத்தப்பட்டதாக பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) குறிப்பிடுகிறார். மேலும் அவர் ‘இந்த காலனித்துவ படுத்தப்பட்ட நாடுகளின் ரத்தம்தான்’ மேற்குலகைக் கழுவித் தூய்மையாக்கி, அதற்கு ‘மனித உரிமைகளின் பாதுகாவலன்’ என்ற வேடத்தைக் கொடுக்கிறது என்கிறார்.

மிகப்பெரிய அளவில் இரத்தத்தை உறிஞ்சி கைப்பற்றப்பட்ட இந்த நிலங்களில் உருவாக்கப்பட்ட ஒழுங்கமைப்பை ஆராயும் போது, அது கட்டாய உழைப்பு (அடிமைத்தனம்), வரிகள், பட்டினி சாவுகள், இன அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட தேசிய அரசுகள், ராணுவம், போலீஸ், சிறைச்சாலை, குற்றவியல் மற்றும் நீதிசார் சட்ட அமைப்புகளாக இருந்தது என்பதை அவதானிக்கலாம். இவை அனைத்தும் தத்துவ ரீதியிலும் நியாயப்படுத்தப்பட்டன. ஜான் லாக் (John Locke) எழுதிய ‘Second Treatise of Government’ 1690 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் வெளியிடப்பட்டது. இந்தப் புத்தகம் மனித உரிமைகள், சொத்துரிமை மற்றும் ஜனநாயகம் போன்ற தலைப்புகளை விவாதிக்கிறது. இது அன்று இங்கிலாந்திலும், இன்று அமெரிக்காவிலும் நிலவும் ஏகாதிபத்திய அரசியலை இன்றுவரை வரையறுக்கிறது. அதே சமயம், அனைத்து மேற்கத்திய அரசியலமைப்புகளிலும் உள்ள சொத்துரிமை குறித்த விதிகளுக்கு இதுவே அடிப்படையாகும் என்று பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) குறிப்பிடுகிறார்.

அந்நேரத்தில் பிரித்தானியா ஒரு ஏகாதிபத்திய அமைப்பாக உருவெடுத்துக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், தங்களது பேரரசை விரிவாக்கும் நோக்கில், ஸ்பெயின், பிரான்ஸ், நெதர்லாந்து போன்ற நாடுகளுடன் மோத வேண்டிய தேவையும் இருந்தது. அதே நேரத்தில், 17 ஆம் 18 ஆம் நூற்றாண்டுகளில் மிகவும் இலாபகரமான வர்த்தகமாக இருந்த ‘அடிமை வர்த்தகம்’ (slave trade) முற்றுரிமையை பெற இங்கிலாந்து பாடுபட்டது; அதுவரை அது ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் இருந்தது.

ஜான் லாக் (John Locke) தனது தனிப்பட்ட சொத்துக்களை அடிமை வர்த்தகத்தில் முதலீடு செய்திருந்தார். அவருக்குப் பின் வந்த வால்டேர் (Voltaire) இதேபோல் செயல்பட்டார். எனவே, சமத்துவம் என்ற சொல்லாடலை முன்வைத்து, அதே நேரத்தில் அடிமைமுறையை நடைமுறைப்படுத்துவது ஏகாதிபத்திய நாடுகளுக்கும், அந்த நாட்டில் வாழ்ந்த பூர்ஷுவா வர்க்கத்திற்கும் பிரச்சனையாக இருந்தது. இதனை தீர்க்கும் நோக்கில், ஜான் லாக் மற்றும் வால்டேர் போன்றவர்கள் தமது கோட்பாட்டை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். Second Treatise of Government என்ற புத்தகத்தில், ஜான் லாக் (John Locke) “இயற்கையிலேயே மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள்” என்று கூறுகிறார். மேலும், “ஒவ்வொரு மனிதனுக்கும் மற்ற எந்தவொரு மனிதனின் விருப்பத்திற்கோ அல்லது அதிகாரத்திற்கோ கட்டுப்படாமல், தனது இயற்கை சுதந்திரத்தைப் பெறுவதற்கான சம உரிமை உள்ளது” எனக் குறிப்பிடுகிறார். எனவே அடிமைத்தனம் என்பது சட்டபூர்வமானது. என்கிறார். மேலும் அவர் “வட அமெரிக்காவின் பழங்குடியின மக்களின் சொத்துக்களை நிபந்தனையின்றி பறிமுதல் செய்யலாம். அதேபோல், இந்தியாவையும் வலிமையைப் பயன்படுத்தி காலனியாக்கலாம்” என்கிறார். பிரான்ஸ் ஹிங்கெலெம்மர்ட் (Franz Hinkelammert) இதனை ஒரு பைத்தியக்காரத்தனமான முரண்பாடாகக் குறிப்பிடுகிறார்.

இங்கு சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான மனிதனாக வெள்ளையின மனிதன் கட்டமைப்பைப் படுகிறான். பெண்ணிய சிந்தனையாளரான சில்வியா வின்டர் (Sylvia Wynter) ஐரோப்பிய மையவாத, புரட்சிகர ஆண்களால் மட்டுமே “மனிதன்” மற்றும் “ஆண்” என்ற பிரத்தியேக அடையாளங்கள் உருவாக்கப்பட்டன என்று குறிப்பிடுகிறார். மேலும் அவர் இந்த கண்டுபிடிப்பு ஐரோப்பியர்களுக்கு தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்டு, கிறிஸ்தவ மையமான கட்டமைப்புகளிலிருந்து ஓரளவிற்கு தன்னாட்சியைப் பெறவும் உதவியது என்று அவர் கூறுகிறார். இதன் அடிப்படையில் உருவான மேற்கத்திய உலகில், ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிய ‘மனிதன்’ என்ற கருத்தாக்கம் ஒரு காலனியச் சிந்தனை முறையையும், நிறம் சார்ந்த பிரிவினையையும் உருவாக்கியதாகவும் சில்வியா வின்டர் குறிப்பிடுகிறார். மேலும், இந்த நிறக்கோடு மனிதர்களை மனிதரல்லாதவர்களிடமிருந்து (non-humans) பிரித்தறியவும், மனிதத்தன்மையை அதன் தகுதிகளின் அடிப்படையில் (degrees of humanity) வகைப்படுத்தவும் வழிவகை செய்கிறது. அதாவது, ஒருவர் மற்றவரை விட மேலான அல்லது குறைவாகவோ மனிதனாக இருக்க முடியும் என்ற எண்ணத்தை இது உருவாக்குகிறது. இந்த தர்க்கத்தின் அடிப்படையிலேயே மதசார்பற்ற (secular) மனித உரிமை கட்டமைக்கப்பட்டது என்கிறார் சில்வியா வின்டர். அதேபோல், காலனித்துவம் இனப்படுத்தலையும் (racialization), பாலினப்படுத்தலையும் (gendering) ஒரே நேரத்தில் உற்பத்தி செய்ததாகக் ‘மரியா லுகோன்ஸ்-சும்’ (Maria Lugones) சுட்டிக் காட்டுகிறார். அதாவது, ஐரோப்பிய ஆட்சி “ஆண்” மற்றும் “பெண்” என்ற இரு இயற்கை வகைகளைக் கண்டறிந்ததல்ல; மாறாக அவற்றைத் தன் தேவைக்கேற்ப இயற்கை” எனத் தோற்றமளிக்கும் வகையில் உருவாக்கியது. இதே கோணத்தில் Sylvia Wynter மனிதனைப் பற்றிய ஐரோப்பிய வரையறையே “Man” என்ற கிறிஸ்தவ, வெள்ளை, ஆண், சொத்து உடையவர் உலகளாவிய மனிதர் என அறிவிக்கப்பட்டபோது, அதன் புறம்பான எல்லா உயிர்களும் “முழுமையற்ற மனிதர்கள்” என வகைப்படுத்தப்பட்டனர். இங்கு பாலினம், இனம், அதிகாரம் அனைத்தும் ஒன்றாக இணைகின்றன. வெள்ளை கிறிஸ்தவ ஆண் மாதிரி- மனிதனின் அளவுகோலாக இருந்த அந்த ஆணும், அந்த ஆணின் கீழ் வடிவமைக்கப்பட்ட வெள்ளை பெண்ணும் “நாகரிகமானவர்” அதற்கு வெளியில் இருப்பவர், மற்றும் கருப்பு ஆணும் பெண்ணும் “மிருகத்தன்மை” அல்லது “பண்பில்லாத தன்மை” எனக் குறிக்கப்பட்டனர். இதுவே இனவாத ஒழுங்கின் மனித உரிமை அரசியல்.

மனிதனை வெள்ளியின மனிதன், அதற்கு வெளியில் இருக்கும் மனிதன் என்று இரண்டாக பிரிக்கப்பட்டது. இந்த இனத்துவ அடிப்படையிலேயே Descartesடின் Meditations on First Philosophy and Descartes, Discourse on Method, Rousseauவின் Discourse on the Origin of Inequality and Discourse on the Arts and Sciences, John Lockeகின் An Essay Concerning Human Understanding, Treatises on Government, David Humeசின் Treatise on Human Nature என்ற தத்துவ அடிப்படைகள் உருவாக்கப்பட்டதாக ‘ரேமன் கிறிஸ்போகர்’ குறிப்பிடுகிறார்.

இந்த இனத்துவ பிரிக்கோட்டை ‘zone of being’ மற்றும் ‘zone of non-being’ என்று ஃபானான் வரையறை செய்கிறார். Zone of being இல் வாழும் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பது அடிப்படையாக மாறியது. அதே நேரத்தில், zone of non-being இல் வாழும் மக்களின் உழைப்பை சுரண்டுதல், நிலத்தை ஆக்கிரமித்தல் மற்றும் அடிமைத்தனம் ஆகியவையும் சட்டபூர்வமாக்கப்பட்டது என்று அவர் கூறுகிறார். எனவே, ஏகாதிபத்தியத்தின் பார்வையில் மூன்றாம் உலகில் வாழும் மக்கள், ஜான் லாக் போன்ற தத்துவவாதிகளால் கட்டமைக்கப்பட்ட “மனிதகுலத்திற்கு ஆபத்தானவர்கள்”, “சீரழிந்தவர்கள்”, “தீய உயிரிகள்”, “காட்டுமிராண்டி விலங்குகளைப் போன்றவர்கள்” என்ற விவரிப்புகள் இன்றளவும் பெரிதாக மாறவில்லை. “ஐரோப்பாவின் அறம் சார்ந்த கற்பனை வட்டத்திற்கு வெளியே இருக்கும் எம்மை போன்றவர்கள் அவர்களின் தத்துவார்த்த உலகினுள் அடங்காதவர்களாகவே இருக்கிறோம். அரேபியர்கள், ஈரானியர்கள் மற்றும் முஸ்லிம்கள்; அல்லது ஆசியா, ஆப்பிரிக்காமற்றும் லத்தீன் அமெரிக்காவை சேர்ந்த மக்களாகிய எமக்கு ஐரோப்பிய தத்துவவாதிகளின் பார்வையில் எந்தவொரு இருப்பியல்பு சார் யதார்த்தமும் (ontological reality) கிடையாது. மாறாக ஆக்கிரமித்து அடக்கப்பட வேண்டிய ஒரு மீவியற்பியல் ஆபத்தாகவே (metaphysical menace) அடையாளப்படுத்தப்படுகிறோம்” என்கிறார் ஹமீத் தபஷி.

இந்த அமைப்பை கட்டமைப்புரீதியாக பாதுகாக்கும் அமைப்பாகவே கல்வி நிறுவனங்கள் போன்ற பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கலை இலக்கியங்கள், ஊடகங்கள் என்பவை தொழிற்படுகின்றன. இதன் மிக நெருங்கிய அசாதாரணமான உதாரணம்தான் பலஸ்தீன மக்களை இனச்சுத்திகரிப்பு செய்து உருவாக்கப்பட்ட இஸ்ரேலிய பாசிசத்தை எதிர்த்து கையில் கல்லலுடன் நிற்கும் சிறுவனை பயங்கரவாதியாக காட்டி; அந்த சிறுவனை சுடும் இஸ்ரேலிய பாசிச அரச படையை சேர்ந்த ராணுவ சிப்பாயை அல்லது ஒரு குடியேறியை ஆபத்திற்கு எதிரான போராளியாக, மக்களை தீங்கிலிருந்து பாதுகாப்பவனாக நிறுத்துகிறது. இதற்கான தயார்படுத்தக்ல்கள் இஸ்லாமோபோபியா, மற்றும் அரபு இனவாதத்தை விதைப்பதன் ஊடக தகர்க்க முடியாத ஒரு அமைப்பாக நிறுவப்பட்டு இருக்கிறது.

எட்வர்ட் சைட் (Edward Said) குறிப்பிடுவது போன்று, ஐரோப்பாவின் “வெளிப்புற அந்நியர்களாக” முஸ்லிம்களும், இஸ்லாமும் ‘ஓரியண்டலிஸ்ட்’ சிந்தனையாளர்களால் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வந்துள்ளன. இதன் விளைவாக, முஸ்லிம்களை தங்களுடைய அதிகாரத்தின் கீழ் வைத்திருப்பது ஐரோப்பாவிற்கு ஒரு அடிப்படையான அரசியல் தேவையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே அமெரிக்க மற்றும் ஐரோப்பிய தாராளவாத பிரச்சாரகர்கள் (missionaries of liberalism)— எதிர்கால உலகளாவிய சமூகம் ஒரு மதச்சார்பற்ற மதகுருவால் (secular cleric) வழிநடத்தப்பட வேண்டும் என்று கற்பனை செய்பவர்கள். எனவே தங்களின் நெறி அமைப்பையும், சமூக மற்றும் அரசியல் ஒழுங்கு மாதிரியையும் அனைத்து முஸ்லிம்களிடமும் திணிக்க முயல்கிறார்கள். அவர்கள் முஸ்லிம்களை அவர்களின் ‘கொடுங்கோல் ஆட்சி முறையிலிருந்து’ (despotic system) மீட்க விரும்புவதாகக் கூறுகிறார்கள். அது இயலாத பட்சத்தில், குறைந்தபட்சம் ‘முஸ்லிம் பெண்களையாவது மீற்க’ முயல்கிறார். இந்த அனைத்து விடயங்களும் முடியாதபட்சத்தில் ஏகாதிபத்தியங்களின் யுத்தங்களை அவர்கள் ஆதரிக்கிறார்கள் என்கிறார் ஜோசெப் மஸ்சாத்.

டிரம்பின் பதவிக்காலத்தின் முதல் 100 நாட்களை அமெரிக்காவின் முதன்மை ஊடகங்களால் (Shock and Awe) என்று அழைக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியும் திகைப்பும் 2003-இல் ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பையும் ஆக்கிரமிப்பையும் குறிக்கும் ஒன்றாகும். இந்தப் பதம் இவ்வளவு சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவது நம்மைச் சற்று யோசிக்க வைக்க வேண்டும் என்கிறார் ஈராக்கிய பெண்ணிய சிந்தனையாளர் சஹ்ரா அலி. இந்தப் பதம் இவ்வளவு சாதாரணமாகப் பயன்படுத்தப்படுவது நம்மைச் சற்று யோசிக்க வைக்க வேண்டும். மேலும் அவர் “அதிர்ச்சியும் திகைப்பும்” என்பது பல மில்லியன் மக்களுக்கு இழைக்கப்பட்ட பேரழிவு, மரணங்கள் மற்றும் பயங்கரவாதத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இது சமீபத்திய வரலாற்றில் மிகவும் குற்றவியல் ரீதியான, பேரழிவைத் தந்த, நிலத்தையும், மக்களையும் சிதைக்கக்கூடிய மற்றும் நிலைத்தன்மையற்ற ஒரு இராணுவ நடவடிக்கையாகும் என்கிறார். “அதிர்ச்சியும் திகைப்பும்” என்ற வாக்கியம் டிரம்பின் முதல் 100 நாட்களில் பாவித்து போன்று பலஸ்தீன இனப்படுகொலை நிகழும் போது பாவிக்கப்படாததும் தற்செயலானது அல்ல. மாறாக ஃபானான் வரையறுக்கப்பட்ட zone of being and zone of nonbeing என்ற மனிதனை இனத்துவதால் பிரிக்கும் சிந்தனைமுறையிலிருந்து தோன்றுவது.
அதிகாரத்துவ பாத் (Baath) ஆட்சிக்கும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கும் இடையே சோடிக்கப்பட்ட ஒரு தொடர்பைக் காட்டியும், பேரழிவு ஆயுதங்கள் (WMD) வைத்திருப்பதாகக் கூறப்பட்ட பொய்களைக் கொண்டும் இந்தப் படையெடுப்பு நியாயப்படுத்தப்பட்டது. இது “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பெயரில் நடத்தப்பட்ட தவறான தகவல் பரப்புரை பிரச்சாரம் ஆப்கானியர்கள், ஈராக்கியர்கள், அரேபியர்கள் மற்றும் முஸ்லிம்களை மனிதத்தன்மையற்றவர்களாகச் சித்தரித்தது. இது ஆப்கானிஸ்தான், ஈராக், ஏமன் மற்றும் அண்டை நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மனித உயிர்களைப் பலிவாங்கியதுடன், 38 மில்லியன் மக்கள் இடம்பெயரவும் காரணமானது. அமெரிக்கப் படையெடுப்பால் உருவான அரசு நிறுவனங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளின் வீழ்ச்சியால் கொல்லப்பட்டவர்கள் மற்றும் இராணுவமயமாக்களால் கொல்லப்பட்டவர்களையும் சேர்த்தால், பலியானவர்களின் எண்ணிக்கை 4.5 மில்லியனுக்கும் அதிகம் என்கிறார் சஹ்ரா அலி.

சஹ்ரா அலி குறிப்பிடுவது போல புஷ், செனி, ரம்ஸ்பீல்ட், கொண்டலிசா ரைஸ், போல்டன், பிரேமர், பைடன் உள்ளிட்ட இன்னும் பலர் தண்டனையிலிருந்து தப்பித்து சுதந்திரமாக இருப்பது வியப்பளிக்கிறது. இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாகியும், இன்னும் எவ்விதப் பொறுப்புக்கூறலோ, இழப்பீடு பற்றிய பேச்சோ அல்லது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதோ ஒரு வடிவிலான நீதியை வழங்குவதற்கான முயற்சியோ எடுக்கப்படவில்லை. மாறாக, அமெரிக்கா காசாவில் தனது “பயங்கரவாதத்திற்கு எதிரான போரைத்” தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு ஆயுதங்கள் வழங்கியும், நிதி அளித்தும், அதற்குத் துணையாகவும் நிற்கிறது. ‘necropolitical narcissism’ என்பது அமெரிக்கப் பொதுப்புத்தியில் நீடிக்கிறது என்று குறிப்பிடும் சஹ்ரா அலி, அதற்கு உதாரணமாக சொல்வது; ‘பல்லூஜா’ (Fallujah) என்பது ஒரு மிகவும் பிரபலமான காணொளி விளையாட்டின் (video game) பெயராகும். அதில் மக்கள் ஈராக்கியர்களைச் சுட்டுத் தள்ளலாம். ஹாலிவுட் திரைப்படங்களில் அமெரிக்க வீரனின் அகநிலை உணர்வுகளே மையமாக வைக்கப்படுகின்றன. அங்கு உடல் உறுப்புகள் சிதைக்கப்பட்ட, சுடப்பட்ட மற்றும் பெருமளவில் கொல்லப்பட்ட ஈராக்கியர்கள் வெறும் பின்னணிச் சித்திரங்களாக மட்டுமே இருக்கிறார்கள். இங்கு கொலை செய்யப்பட்ட மக்களின் உடல்கள் இனத்துவ முதலாளித்துவத்தின் செல்வக் குவிப்புக்கே பயன்படுத்தப்படுகிறது.

லாரா ஷீஹி குறிப்பிடுவது போல நாம் ஏகாதிபத்தியத்தினடியாக பாசிசம் சமூகமயப்பட்ட ஒரு அமைப்பிலேயே வாழ்கிறோம். 21ஆம் நூற்றாண்டு என்பது மக்களை மிக மோசமான necropolitical narcissism-த் தன்மையில் நிலைத்திருக்க வைத்திருக்கிறது. 4.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொலைசெய்யப்பட்டத்தையும், 38 மில்லியன் மக்களுக்கு மேலானவர்களை இடம்பெயர்ந்த, பாரிய சொத்தழிப்பு, சுழலமாசடைவை உருவாக்கிய இந்த ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை இனதத்துவ முதலாளித்துவம், வெள்ளை இனப் பெண்ணியம் (white feminism) நியாயப்படுத்துகிறது. இவர்களைப் பொறுத்தவரையில் ஈராக் படையெடுப்பின் போதும் சரி, இன்றைய பாலஸ்தீனத்திலும், குறிப்பாகக் காசாவிலும் சரி, ஆண்கள் பாதிக்கப்பட்டவர்களாகக் கருதப்படுவதில்லை. ஆண்கள் மற்றும் சிறுவர்கள் இயல்பாகவே “பயங்கரவாத ஆதரவாளர்களாகவும்” பார்க்கப்படுகிறார்கள்; ஆகவே, அவர்கள் அழிக்கப்பட வேண்டியவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்களின் மரணம் ஒரு செய்தியாகக் கூடக் குறிப்பிடப்படுவதில்லை என்கிறார் சஹ்ரா அலி.

‘ஹிஜாப்’ அணியும் பெண்கள், அவர்களின் ஆடைத் தேர்வின் அடிப்படையில் அடிப்படைவாதிகளாக சித்தரிக்கப்படுவதன் மூலம், மனித உரிமைகளை கோருவதற்கான தகுதி இல்லாதவர்களாக கட்டமைக்கப்படுகின்றனர் என லாரா ஸீஹி மேலும் குறிப்பிடுகிறார். அதேபோல், அண்மையில் ‘லிண்டா சர்சூர்’ தாம் ஒரு பலஸ்தீன வம்சாவளியைச் சேர்ந்த ஹிஜாப் அணியும் பெண் என்பதன் காரணமாக, சியோனிச பெண்ணிய அமைப்புகளால் தம்மை எளிதில் பயங்கரவாதியாகவும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினராகவும் முத்திரை குத்தப்படுவதாகக் குறிப்பிடுகிறார். இதன் அடியாக வெள்ளை இனப் பெண்ணியம் (white feminism) எனபது இனத்துவ, இஸ்லாமோபோபியாவை அடிப்படையாக கொண்டு இருப்பதாகா அவர் மேலும் கூறுகிறார்.

இந்த இனத்துவ மற்றும் ஏகாதிபத்திய கட்டமைப்புகளிலிருந்து பேசும் வலதுசாரிகள், மனித உரிமை ஆதரவாளர்கள், வெள்ளையின பெண்ணியவாதிகள், தன்னார்வ அமைப்புகளில் (NGO) பணியாற்றுபவர்கள் மற்றும் பிற அமைப்புகளுடன் தொடர்புடையவர்கள் அடிக்கடி “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா, அல்லது ஈரானிய அரசை எதிர்ப்பதா?” என்ற கேள்வியை முன்னிறுத்துகின்றனர்.
அண்மையில் லாரா ஸீஹி நிகழ்த்திய ஒரு உரையில், “ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதா அல்லது ஈரானிய அரசை எதிர்ப்பதா?” என்ற இந்த விவாதம், ஏகாதிபத்திய அமைப்புகளை ஒரு பெண்ணியத் திட்டமாக சித்தரிக்க வெள்ளையின பெண்ணியவாதிகள் முயற்சிக்கும் ஒரு அரசியல் நடைமுறையாக செயல்படுகிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
மேலும், ஏகாதிபத்திய அமைப்புகள் ஆப்கானிஸ்தான், ஈராக், லெபனான், பலஸ்தீனம் போன்ற பகுதிகளில் மிகப் பெரிய அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை நிகழ்த்தி அவர்களுடைய வாழ்க்கையை சிதைத்ததுடன், பெண்களை சிறையில் அடைத்தல் முதல் கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் வரை பல்வேறு வகையான கொடுமைகளையும் ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

அண்மையில் Women’s International League for Peace and Freedom என்ற அமைப்பு “பலஸ்தீனர்கள்மீது நிகழும் பாலியல் வன்முறை என்பது ஒரு சமூகத்தின் மீதான ஒடுக்கு முறையின் விளைவாக உருவாகிய துயரச் சம்பவம் என்பதைத் தாண்டி அது ஒரு காலனிய ஆயுதம். அது திட்டமிட்ட, அமைப்புசார், மற்றும் இஸ்ரேல் குடியேற்றக் காலனியத்தின் கட்டமைப்பு முழுவதிலும் நுழைந்திருக்கும் கட்டுப்பாடு மற்றும் ஆட்சிக்கான இயந்திரத்தின் ஒரு அங்கமாகும். அது உடலை மட்டும் அல்ல உடலின் உணர்வு நிலைகளை அதை மீறி ஆக்கிரமிக்கும் அரசியல் கருவியாக பயன்படுகிறது” என்பதை தெளிவுபடுத்துகிறது. இது வெறுமனே இஸ்ரேலிய குடியேற்ற காலனியத்தின் பண்பு மட்டுமல்ல இது அனைத்து ஏகாதிபத்திய அமைப்புகளினதும் அடிப்படை ஆயுதமாக இருக்கிறது.

குடியேற்றக் காலனியத்தின் கீழ், பாலியல் வன்முறை “போர்” அல்லது “அவசரநிலை” நேரங்களிலேயே நடைபெறும் ஒரு விஷயம் அல்ல.
இது பலஸ்தீனர்களின் வாழ்வில் நுழைந்திருக்கும் அவர்கள் தினசரி வாழ்வியலில் சாதாரண அங்கமாகும். இந்தச் சாதாரணமாதல் காரணமாக, இது மேல் எழாமல் மறைக்கப்படுகிறது. பலஸ்தீனர்களுக்கான தினசரி வாழ்வு இதற்குள் கட்டுப்பட்டுள்ள நிலையில்; சோதனைச்சாவடிகளில், சிறைச்சாலைளில் , நீதிமன்றஅறைகளில், தெருக்களில், வீட்டு சோதனைகள், டிஜிட்டல் கண்காணிப்பு மிரட்டல்களாக, எல்லாவற்றின் மூலமாகவும் பாலியல் வன்முறை ஆட்சி தினசரி சாதாரண நிலைமையாக இஸ்ரவேல் அரசால் பராமரிக்கப்படுகிறது.

85 பாடசாலை மாணவிகளை படுகொலை செய்து ஆரம்பித்த ஏகாதிபத்திய அமெரிக்க, இஸ்ரேலிய பாசிச அமைப்பு தொடங்கும் இந்த யுத்தத்தை; ஈராணிய மக்களை விடுவிக்க தொடங்கும் யுத்தம் என ஆதரிப்பது என்பது, இதே வகையான பெண்களை பாலியல் வன்முறைகளை ஆதரிப்பதாகும். ஏகாதிபத்தியபத்தியம் வழமையான வழங்களை சூறையாடுவதற்காக; ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என்று எந்த வித்தியாசமுமின்றி படுகொலை செய்ய, நிலங்களை ஆக்கிரமிக்க, இடம்பெயரச் செய்ய, சொத்துக்களை அழிக்க மற்றும் பெண்களை பாலியல் வன்முறைகளின் இலக்காக மாற்றும் நடவடிக்கைகளை ஆதரிப்பதாகும். அடிப்படையில் ஈரானை ஆக்கிரமிக்க; இவர்களின் ஈரானியர்கள் பற்றிய வரையறுப்பும், ஜான் லாக்கின் வரையறுப்பை ஒத்த அநாகரிகர்கள், மனிதநேயமற்றவர்கள் கொடூரமானவர்கள், நாகரிகமற்றவர்கள் மனிதத் தன்மையற்றவர்கள், காட்டுமிராண்டித்தனமானவர்கள் என்ற கற்பனை அவதூறுகளாகவே இருக்கிறது. எனவே ஏகாதிபத்திய சகதிகளுக்கு ஆக்கிரமிக்க உரிமை இருக்கிறது என்ற ஜான் லாக்கின் தத்துவநிலையிலிருந்தே இவர்கள். வாதிடுகிறார்கள்.

றபியூஸ் முகமதுஒரு கவிஞர், காலனித்துவ நீக்கம், பின்காலனிய உலக ஒழுங்கு பற்றிய விமர்சன சிந்தனைகளை முன்வைத்து வருபவர்.