– நாமினி விஜேதாச

கற்பிட்டி மற்றும் புத்தளம் பெண்களை ஆய்வு மாதிரியாகக் கொண்ட, உலகளாவிய ரீதியில் நடாத்தப்பட்ட ஆய்வொன்றில் பங்கேற்ற பெரும்பாலானோரின் தலைமுடியில்*1 பாதரசத்தின் அளவு அதிர்ச்சியூட்டும் வகையில் உயர்ந்த மட்டத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்துக்கும் புத்தளம் கடல் நீரேரிக்கும் இடையில் அமைந்துள்ள கற்பிட்டித் தீபகற்பத்திலேயே சீனர்களால் நிர்மாணிக்கப்பட்ட ‘லக்விஜய’ நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையமும் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்பிரதேசத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 80% வீதமானவர்கள் (குழந்தை பெறும் இயலுமை கொண்ட வயதிலுள்ள 18 முதல் 44 வயதுக்குட்பட்ட அனைத்துப் பெண்களும்) 1ppm*2 என்ற பாதரச அளவைத் தாண்டி இருந்தனர். 97% வீதமானோர் proposed reference level or range இயல்பு குறிப்பு அளவான 0.58 ppm எனும் சாதாரண அளவைத் தாண்டி இருப்பது ஆபத்தானதோர் குறிகாட்டியாக நோக்கப்படுகிறது. பாதரசம் உடலில் கலப்பதற்கு பிரதான காரணம் மாசடைவுக்கு உட்பட்ட மீன்களை உண்பதாகும்.

நுரைச்சோலை நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மற்றும் புத்தளம் சீமெந்துத் தொழிற்சாலை ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுகள் அருகிலுள்ள புத்தளம் கடல் நீரேரி போன்ற நீர் ஆதாரங்களில் கலந்து இப்படியான பாதரச மாசடைதலுக்கு பங்களிக்கின்றன; இந்த நீர் ஆதாரங்களை சார்ந்து வசிக்கும் பெண்களில் பாதரசத்தின் அளவு அபரிமிதமாக உயர்வதற்கு இதுவே காரணம் என்று ஆய்வு கூறுகிறது. அதே வேளை குறைந்த அளவு மீன்களை உண்போர், சிறிய மீன் வகைகள் அல்லது மீன்களை அரிதாகவே உணவில் சேர்த்துக் கொள்ளும் பெண்களில் மிகக் குறைந்த அளவில் பாதரசம் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

“இந்தப் பிரதேசத்தில் உள்ள பெண்கள் தமது புரதத் தேவைக்காக கடல் உணவுகளையே பெரிதும் நம்பியிருக்கின்றனர். பெரும்பாலான பங்கேற்பாளர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேளைகளில் மீன்கள் மற்றும் ஏனைய கடலுணவுகளை உட்கொள்வதாகக் கூறி இருக்கின்றனர். புத்தளம் கடல் நீரேரியில் இருந்து பிடித்துக் கொண்டுவரப்படும் நூற்றுக்கும் அதிகமான மீன் இனங்களோடு வெளி ஓடுடைய இறால், நண்டு போன்ற கணுக்காலிகளை உள்ளடக்கிய பல்வகைப்பட்ட கடல்வாழ் இனங்கள் இவற்றில் உள்ளடங்குகின்றன. ஆய்வுக்கான மாதிரியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதேசங்கள் அனைத்திலும் இனங்காணப்பட்ட உயர்ந்தபட்ச கடல் உணவு நுகர்வு இதுவாகும்” என ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் ‘உணவு வெளிப்பாடு’ – dietary exposure*3 தொடர்பாக இந்த அறிக்கை மேலும் விவரிக்கிறது.

இலாப நோக்கற்ற உலகளாவிய சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழுக்களின் கூட்டமைப்பான, Non-profit Biodiversity Research Institute (BRI) பல்லுயிர் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் International Pollutants Elimination Network (IPEN) சூழல் மாசுபாடுகளை இல்லாதொழிப்பதற்கான சர்வதேச வலையமைப்பு ஆகிய இரண்டும் இணைந்து இந்த அறிக்கையை கடந்த மாதம் வெளியிட்டன.

சர்வதேச மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மொத்த பாதரச அளவின் குறிப்பு நிலை அளவு 1ppm ஆகும். அதனை விட அதிகமாக தமது உடலில் பாதரசத்தை கொண்டிருக்கும் கர்ப்பிணிப் பெண்களில் வளரும் கருவின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். அதேவேளை, 0.58 ppm பாதரச அளவு என்பது மிகவும் சமீபத்திய, அறிவியல் அடிப்படையிலானதோர் வரம்பாகும். இது குறைந்த அளவிலான வெளிப்பாட்டிலும் தீங்கு பயக்கும் விளைவுகளைக் குறிக்கும் தரவுகளை அடியாகக் கொண்டது.

“இந்தப் பிரதேசத்தில் மிதமிஞ்சிய பாதரசக் கழிவுகள் விடயத்தில் அதற்கான குறிப்பிடத்தக்க உடன் நிகழ் தோற்றுவாயாக இருப்பது நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையம் ஆகும்” என ‘Mercury Threat to Women & Children across 3 Oceans: Elevated Mercury in Women in Small Island States & Countries’ ‘உலகின் மூன்று சமுத்திரப் பிராந்தியங்களில் வசிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாதரச அச்சுறுத்தல் – சிறிய தீவுத் தேசங்கள் மற்றும் நாடுகளில் வாழும் பெண்களில் உயர்ந்து வரும் பாதரசக் கலப்பு வெளிப்பாடு’ என்ற தலைப்பிலான ஆய்வு தெரிவிக்கிறது.

உள்ளூர் ஆய்வில் பாதரச வெளிப்பாட்டின் மீதான லக்விஜய மின் நிலையத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்காக கற்பிட்டியில் இருக்கும் குறிப்பிட்ட இடம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஆய்வு குறிப்பிடும் ஏனைய உலக நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களும் நிலக்கரி அனல் மின் நிலையங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளன; மேலும் கடல்வாழ் உயிரின மாசுபாட்டுக்கு பெரும்பாலும் தொலைதூர தொழில்துறை ஆதாரங்கள், நடுத்தர தொழிலகங்கள் மற்றும் சிறிய அளவிலான தங்கச் சுரங்கங்களே காரணம்.

“இந்தப் பிரதேசத்தில் பெண்களிடையே பாதரச மாசுபாட்டின் அளவுகள் அச்சமூட்டும் விதத்தில் உயர்ந்து வருவதால், மீன்கள் மற்றும் உணவாக உட்கொள்ளப்படும் ஏனைய கடல் வாழ் உயிரிகளில் காணப்படும் மாசுபாட்டின் அளவுகள்,  தொழில்துறை கழிவு வெளியேற்றங்களை கட்டுப்படுத்துதல் மற்றும் இல்லாதொழித்தல் ஆகிய இலக்குகளை மையப்படுத்தியதும் சாத்தியமான சுற்றுச்சூழல் மேம்பாடுகள் குறித்ததுமான ஆழமான மதிப்பீட்டின் அவசியத்தை ஆய்வு எடுத்துரைக்கிறது” என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

“சீமெந்துத் தொழிற்சாலையொன்றும் புத்தளம் கடல்நீரேரியின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது; சீமெந்து தயாரிக்கும் மூலப் பொருட்களோடு கலப்பதற்காக நுரைச்சோலை லக்விஜய அனல்  மின்நிலையத்திலிருந்து வெளிவரும் நிலக்கரி எரிந்து மீதமான சாம்பலில் சுமார் 30% பயன்படுத்தப்படுகிறது” என்று அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர். “இப்பிரதேசத்தில் தொடர்ச்சியாக வீசும் பலத்த காற்று, கையிருப்பில் உள்ள சாம்பலை பெரும் அளவில் வாரிக் கொண்டு வந்து, புத்தளம் கடல்நீரேரியில் கலப்பதற்கு அது காரணமாய் அமைகிறது.” “சீமெந்து தொழிற்சாலையும் குறிப்பிட்டுக் கூறும் வகையிலான கழிவு வெளியேற்றங்களைக் கொண்டுள்ளது; இதுவும்  உள்ளூர் மீன்களில் பாதரச அளவை அதிகரிப்பதில் பங்களிக்கக் கூடும்” என்பதுவும் அவர்களது அவதானங்களில் ஒன்றாகும். “புத்தளம் கடல்நீரேரியானது தொழிற்சாலைக் கழிவுகள், விவசாயக் கழிவுகள் மற்றும் சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் இருந்து வரும் கழிவுகளால் தொடர்ச்சியாக மாசடைவது மாத்திரமல்லாது அதிகப்படியான – முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளாலும் ஏற்கனவே பல்வேறு சீரழிவுகளுக்கு முகம்கொடுத்து வருகிறது. உயிரினப் பல்வகைமை கொண்ட பெரும் மீன் வளத்தையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது”

மிக அருகாமையில் இருக்கும் இரண்டு பிரதான தொழிற்துறை மூலகங்களான புத்தளம் சீமெந்து தொழிற்சாலை மற்றும் நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் தொழிற்சாலைக் கழிவு வெளியேற்றங்கள் –  பிரதேச மக்களின் பிரதான புரதத் தேவையை நிறைவு செய்யும் வகையில் அமைந்திருக்கும் புத்தளம் கடல் நீரேரியின் வழியாக இடம்பெறும் அதிக அளவிலான மீன் நுகர்வு ஆகியவை உள்ளூர்மயமாக்கப்பட்ட பாதரச மாசுபாட்டுக்கான காரணங்கள் என ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

“எந்த வகை மீன்கள் மாசுபாட்டுக்கு உட்பட்டுள்ளன; எந்த அளவுக்கு அவை மாசுபட்டுள்ளன என்பதை மதிப்பிடுவதற்கு நீர்வளத்துக்கு பொறுப்பான சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேலும் விரிவான  விசாரணைகளை மேற்கொள்ளல் வேண்டும். அதுமாத்திரமன்றி, உள்ளூர் மக்கள் தமது புரதத் தேவைக்காக தங்கியிருக்கும் புத்தளம் கடல் நீரேரியின் மீன்பிடியினால் பெறப்படும் கடல் உணவின் தரம்* (dietary exposure)  என்ன என்பது தொடர்பான ஆலோசனைகள் வழங்கப்படுதல் வேண்டும்.”

“மேலும், தொழில்துறை ஆலைகளின் சுற்றுச்சூழல் நடைமுறைகள் உன்னிப்பாக மதிப்பாய்வு செய்யப்பட வேண்டும்; மேலும் சிறந்த சுற்றுச்சூழல் நடைமுறைகள் Best Environmental Practices (BAP) படி சிறந்த கிடைக்கக்கூடிய நுட்பங்களைப் Best Available Techniques (BAT) பயன்படுத்தி அவை செயல்படுவதை உறுதிசெய்ய அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட வேண்டும்” என்று அவர்கள் வலுவாகப் பரிந்துரை செய்திருக்கின்றனர்.

இலங்கையின் புத்தளம் கடல் நீரேரியில் இருந்து பெறப்பட்ட முடிவுகளின் பிரகாரம் பாதரசத்தின் அளவுகள் கணிசமான மட்டத்துக்கு உயர்ந்தவையாக இருந்துள்ளன. சராசரியாக 2.74ppm ± 2.8ppm இருக்க வேண்டிய பாதரசத்தின் அளவு; “மாதிரியில் பங்கேற்ற அனைவரினதும் உடற்சுமையில், 77% வீதமான பெண்களுக்கு 1ppm குறிப்பு அளவை விட மேலதிகமாக பாதரசத்தின் அளவு இருந்துள்ளது” என்று கண்டறியப்பட்டுள்ளது. “மேலதிகமாக, 97% வீதமான பெண்களின் இரத்தத்தில் 0.58 ppm என்ற முன்மொழியப்பட்ட அளவை விட அபரிமிதமான அளவில் பாதரசம் இருந்தது,” என அறிக்கை கூறுகிறது. “50% வீதமான பெண்களின் இரத்தத்தில் 2ppm  Hg  அளவையும் 13% வீதமானோர் 4 ppm Hg அளவையும் தாண்டி இருப்பது மிகவும் கவலைக்குரியது.” Hg என்பது பாதரசத்திற்கான இரசாயனக் குறியீடாகும். 21 நாடுகளில் உள்ள 24 பிரதேசங்களைச் சேர்ந்த 757 மகப்பேற்று இயலுமைக்கான வயதுடைய பெண்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.

பாதரசம் என்பது பெண்களினதும் அவர்களில் வளரும் கருவினதும் ஆரோக்கியத்துக்கு எதிரானதோர் ஆற்றல் மிக்க அச்சுறுத்தலாகும். இது ஒரு சக்திவாய்ந்த Neurotoxin (நரம்பு வழி நச்சு) ஆகும். குறிப்பாக பாதரசத்தின் தீங்குபயக்கும் செயற்பாடு, கருவுற்ற தாய் மற்றும் குறிப்பாக குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு அதன் விளைவுகள் கருவுற்ற பின்னர் சில மாதங்களில் வெளிப்படும்.

கருவுற்ற தாயிடமிருந்து குழந்தைக்கு கடத்தப்படும் தீங்கு பயக்கும் விளைவுகளில் நரம்புத்தொகுதி வலுவிழத்தல், அறிவுத்திறன் (IQ) இழப்பு, சிறுநீரகங்கள் மற்றும் இருதய குருதிச் சுற்றோட்ட  அமைப்புக்கு ஏற்படும் சேதம் ஆகியவை உள்ளடங்கும். அபரிமிதமான பாதரசம் உடலில் சேரும் போது ​​இது மூளைப் பாதிப்பு, மனநலக் குறைபாடு, குருட்டுத்தன்மை, வலிப்புத் தாக்கங்கள் மற்றும் குழந்தை பேச இயலாமல் ஆகுதல் ஆகியவற்றுக்கு வழிவகுக்கும்.

ஆராய்ச்சியாளர்கள் உலகின் குறிப்பிட்ட சில  பகுதிகளில் பாதரசம் உடலில் கலப்பது பற்றி  ஆய்வு செய்திருந்தாலும், வளர்ந்துவரும் மற்றும் நிலைமாறு கட்டத்தில் இருக்கும் நாடுகள் குறித்த தகவல்கள் போதுமான அளவு இல்லை. நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையமொன்றிலிருந்து வெளிவரும் கழிவு வெளியேற்றங்கள் நீண்ட தூரத்துக்கு மாசுபாட்டுத் தாக்கங்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது. அதுபோலவே இந்த மின் நிலையங்களிலிருந்து வெளிவரும் உள்ளூர் மற்றும் உடனடி தாக்க விளைவுகளும் தொடர்புடையவை எனவும் அந்த ஆய்வு மேலும் குறிப்பிடுகிறது. நிலக்கரி அனல்மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை மூலங்களிலிருந்து பாதரச வெளியேற்றத்தை நிறுத்தி புதுப்பிக்கத்தக்க சக்தி வளங்களை செயற்படுத்துமாறு இந்த ஆய்வு வலியுறுத்துகிறது.

தற்போது, ​​உலகளவில் இருக்கும் நிலக்கரி அனல் மின் நிலையங்களின் மதிப்பிடப்பட்ட எண்ணிக்கை சுமார் 3,700 ஆகும்; இருப்பினும், கூடுதலாக 1600 நிலையங்களுக்கான திட்டங்கள் அல்லது கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.  இது உலகளாவிய நிலக்கரி அனல் மின் உற்பத்தித் திறனை 43% வீதத்தால் அதிகரிக்கிறது.

குறிப்புகள்

*1 கடல் உணவு நுகர்வு காரணமாக ஏற்படும் நீடித்த பாதரசக் கலப்பின் நீண்டகால வெளிப்பாட்டை அளவிடுவதற்கு தலைமுடி பகுப்பாய்வு முதன்மையாகப் பயன்படுகிறது. ஏனெனில், தலைமுடி வளர்ச்சியின் போது உடலில் கலக்கும் பாதரசம் மயிர்க்கால்களுடன் பிணைக்கப்பட்டு நிலையாக இருக்கும். நீளமான தலைமுடிப் பகுதிகளின் வழியாக கால – நேரம் சார்ந்த பாதரசக் கலப்பின் வெளிப்பாட்டை துல்லியமாக அளவிட முடியும். மேலும் இது நம்பகமான மற்றும் வசதியானதொரு உயிரியல் குறிகாட்டியாக அமைந்திருக்கிறது.

*2 ஒரு பிரதேசத்தில் காற்று மற்றும் நீரில் உள்ள மாசுபடுத்திகள் பெரும்பாலும் ஒரு மில்லியனுக்கு ஒரு பாகம் (ppm – parts per million) என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன.

*3 உணவு மற்றும் பானங்கள் மூலம் உட்கொள்ளப்படும் இரசாயனங்கள், போஷணைப் பதார்த்தங்கள், அல்லது மாசுபடுத்திகளின் மொத்த அளவு dietary exposure ‘உணவு வெளிப்பாடு’ ஆகும். இது உணவு நுகர்வின் அளவைப் பொருட்களின் செறிவுகளால் பெருக்கி கணக்கிடப்படுகிறது. குறிப்பாக பூச்சிக்கொல்லிகள், சேர்க்கைகள் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுத்திகள் ஆகியவற்றிற்கான பாதுகாப்பை மதிப்பிடுவதற்கு, இந்த உட்கொள்ளலை சுகாதார அடிப்படையிலான வழிகாட்டுதல் மதிப்பீடுகளோடு ஒப்பிட்டு அளக்கப்படுகின்றன.

https://ejustice.lk/wp-content/uploads/2019/02/Mercury-in-hair-samples-in-Puttalam.pdf

https://ipen.org/sites/default/files/documents/final_mercury-sri_lanka_cej_1.pdf

https://www.sundaytimes.lk/181223/news/coal-plant-kalpitiya-women-have-dangerously-high-mercury-level-326359.html?fbclid=IwY2xjawPtE4dleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZBAyMjIwMzkxNzg4MjAwODkyAAEevxJ5xHyTmZSPu3eCHHnE_OoZt4Db04kFfxGyWokpTRB7_vrnJa3WlR-UzSI_aem_nObG9zX7C9WIQAfi362gag

நமினி விஜயதாச (Namini Wijedasa), இலங்கை, சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் ஆவார். இவர் தனது பத்திரிகை வாழ்க்கையை 1994 இல் தொடங்கினார். தி ஐலேண்ட் மற்றும் லக்ஸ்மிபமா நியூஸ் உள்ளிட்ட பல முக்கிய பத்திரிகைகளில் பணியாற்றினார். அசோசியேட்டட் பிரஸ்ஸின் நிருபராகவும், தி எகனாமிஸ்ட் மற்றும் NHK ஜப்பான் ஒலிபரப்பு நிறுவனத்தின் பகுதி நேர நிருபராகவும் உள்ளார்.

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி

இந்த ஆக்கம் The Sunday Times  இணையதளத்தில் Coal plant: Kalpitiya women have dangerously high mercury level என்ற தலைப்பில் வெளியானது