– இர்ஃபான் அஹ்மத்
அரசியல் மானுடவியலாளர் இர்ஃபான் அஹ்மத், துருக்கியின் இப்னு கல்தூன் பல்கலைக்கழகத்தில் மானுடவியல் மற்றும் சமூகவியல் பேராசிரியராக கடமையாற்றி வருகின்றார். இந்தியா உள்ளிட்ட மேற்கத்தேயப் பிராந்தியங்களில் நிலவும் இஸ்லாம் மற்றும் இஸ்லாமிய வெறுப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்த தனது பணிக்காக அறியப்படும் இர்ஃபான் அஹ்மத், நெதர்லாந்து மற்றும் அவுஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களிலும் கற்பித்திருந்தார். சினிக்னேந்து பச்சார்யாவுடன் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றே இங்கு மொழிபெயர்ப்பபுச் செய்யப்பட்டுள்ளது
பச்சார்யா : அரபுலகிற்கு வெளியே, உலகின் பெருமளவான நாடுகளில் குறிப்பாக இந்தியச் சூழலில் நிலைகொண்டுள்ள இஸ்லாமோபோபியா குறித்த உங்களது நிலைப்பாட்டை எம்மோடு பகிர்ந்து கொள்ள முடியுமா?
இர்ஃபான் அஹ்மத் : உலகளாவிய ரீதியில் குறிப்பாக இந்தியச் சூழமைவில் முஸ்லிம்களைப் பொறுத்தவரை தங்களுக்கென எந்தவொரு தேர்வுகளையும் மேற்கொள்ள முடியாத படுபயங்கரமான ஒரு நிலையிலேயே வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். பொது வாழ்வில் இருந்து அந்நியப்படுத்தப்படுவதும், குறைந்தபட்ச மனிதாயப் பண்புகளோடு அணுகப்படக் கூடாதவர்களாகவுமே அவர்கள் நடாத்தப்படுகிறார்கள். அவர்களது கலாச்சார அடையாளங்களான ஹிஜாப், பள்ளிவாயல்கள், உருது மொழி போன்றன வேண்டுமென்றே குறிவைக்கப்படுகின்றன. ஊடகங்களில் முஸ்லிம்கள் அடித்துக் கொல்லப்படும் செய்திகள் வாடிக்கையாகி விட்டதோடு அவை இலகுவாகக் கடந்து செல்லப்பட முடியுமான விடயங்களாகவும் மாறிவிட்டன. பொறுப்புக்கூற வேண்டியவர்கள் வேண்டுமென்றே மௌனமாக இருக்கிறார்கள். முஸ்லிம்கள் எதனைச் செய்ய வேண்டும்? அவர்கள் எதனை உண்ண வேண்டும்? எதனைப் பார்க்க வேண்டும்? பொதுவெளியில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவர்களது எல்லா விவகாரங்களும் இந்து ராஜ்ஜியத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துத்துவக் கருத்தியல் உள்ளீடுகளே வடிவமைத்து வருகின்றன.
தனது குடிமக்கள், அவர்களுக்கான சொந்தத் தேர்வுகளையும் விருப்பங்களையும் கொண்டிருக்க முடியுமான சூழலுக்கு அச்சுறுத்தலாக அமையும் ஒரு நாட்டில் ஜனநாயகத்தை எதிர்பார்க்க முடியாது. மட்டுமன்றி முஸ்லிம்களை இழிவுபடுத்துகின்ற அவர்களை நாட்டின் மைய நீரோட்டத்தில் இருந்து விலக்கி நிறுத்துகின்ற வகையில் அமைந்த வாசகங்கள் பொதுவெளியில் இயல்பாக்கமடைந்து இருக்கின்றன. லல் ஜிஹாத், கொரோனா ஜிஹாத் என்பன போன்ற வாசகங்கள் அன்றாடம் எவ்வித அரசியல் பிரக்ஞைகளுமின்றி பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. வீதியோரங்களில் தினசரி வேலை பார்க்கும் முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையிலான ‘பஞ்சர்வாலா’ போன்ற பிரயோகங்களும் இப்போது அன்றாட புழக்கத்திற்கு வந்தடைந்திருக்கிறது.
தமது சொந்த நாட்டில் இத்தனை வன்முறைகளுக்கும் அத்துமீறல்களுக்கும் முஸ்லிம்கள் உட்பட்டு வரும் நிலையில் சமூகவலைதளங்களில் ஆறு லட்சத்துக்கும் அதிகமான பின்பற்றாளர்களைக் கொண்டிருக்கும் ‘சுரேந்திர பூனியா’ போன்றவர்கள் இந்து இனப்படுகொலை தொடர்பான கதையாடல்களை முன்வைப்பதன் வழியே தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்தும் பணியை முன்னெடுத்து வருகின்றனர். 1984 களில் சீக்கியர்களுக்கு எதிரான கலகத்தின் போதும் அடக்குமுறையாளர்கள் தங்களை பாதிக்கப்பட்டவர்களாக முன்னிறுத்தி அனுதாபம் தேடும் படலம் இடம்பெற்றதாக மானிடவியலாளரான வீனா தாஸ் சுட்டிக்காட்டுகிறார்.
இதேபோல் மேற்கத்திய நாடுகளில் இந்தியாவுக்கு சமாந்தரமான ஒரு போக்கை கொண்ட நாடாக பிரான்ஸைக் குறிப்பிட முடியும். வேறு எந்த நாடுகளைப் போன்றின்றி இந்திய மற்றும் பிரான்ஸியச் சூழலில் அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் போன்றோர் நேரடியாகவே இஸ்லாமோபோபியாவினை சந்தைப்படுத்தும் பாத்திரத்தை வகித்து வருகின்றமை கவனத்திற்குரியது.
இத்தகைய நிலைமையை அவதானிக்கும் போது ஒவ்வொரு நாளும் அதற்கு முந்தைய நாளை விட மோசமாகி வருவதை உணர முடிகின்றது. நம்பிக்கையுடனும் நல்வாழ்வு குறித்த பிரக்ஞையுடனும் அனைவருக்குமான எதிர்காலம் ஒன்றிற்காக கடினமாக உழைக்க வேண்டியுள்ளது. ஒக்சிசன் எவ்வாறு உயிர் வாழ்தலின் ஆதார அடிப்படையாக உள்ளதோ அதுபோலவே நம்பிக்கையும் அற வாழ்வு குறித்த உணர்வும் நல்லதோர் எதிர்காலத்திற்கான வாயில்களை திறந்து விடும்.
பச்சார்யா : இந்தியச் சூழலில் அதிகரித்து வரும் இஸ்லாமிய வெறுப்பு நடைமுறைகளில் பங்களிப்புச் செலுத்தும் காரணிகளாக நீங்கள் எவற்றை குறிப்பிடுவீர்கள் ?
இர்ஃபான் அஹ்மத் : இஸ்லாமோபோபியா குறித்த உரையாடல்கள் பெரும்பாலும் 9/11 இனைச் சுற்றியே பெருமளவில் பேசப்படுகின்றன. ஆனால் உண்மையில் இஸ்லாமோபோபிக் நடைமுறைகளும் கருத்தியல் அடிப்படைகளும் செப்டம்பர் 11 தாக்குதலுக்கு முன்னதாகவே இந்தியாவிலும் மேற்குலக நாடுகளிலும் நிலைகொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணத்திற்கு 1994 ஆம் ஆண்டில் P.N. ஜோக் என்ற பத்திரிகையாளர் “Threat of Islam: The Indian Dimensions” என்ற தலைப்பில் வெளியிட்ட புத்தகத்தில் “ஸ்பெயின் மற்றும் பால்கன் நாடுளில் வாழ்ந்துவந்த சமூகங்களினை முஸ்லிம்களும் அவர்களது இஸ்லாமும் ஈவிரக்கமின்றி அழித்துவிட்டதாக மேற்கோள் காட்டியதோடு இதனால் இஸ்லாத்தின் ஆக்கிரமிப்புத் தன்மை குறித்து இந்தியாவில் வாழும் இந்துக்களை எச்சரிக்க விரும்புவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இவ்வாறு 9/11 க்கு முன்பே முஸ்லிம்கள் பற்றிய பயத்தையும் சந்தேகத்தையும் உலகளாவிய ரீதியில் பரப்புவதில் செல்வாக்குச் செலுத்திய இக்கருத்துக்கள், முன்னாள் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகனால் ஊக்குவிக்கப்பட்ட “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்ற பிரகடனத்திற்கும் வழிவகுத்தன எனலாம்.
சமகால உலக ஒழுங்கை வழிநடாத்திச் செல்லும் ஒரு கதையாடலாக உள்ள இஸ்லாமோபோபியா, உலகளவில் எதிரிகளாக தங்களை முன்னிறுத்திக் கொள்ளும் நாடுகள் பலவற்றையும் மிக இலகுவாக ஒரே கோட்டில் இணைத்து விடுகின்றன எனக் கூற முடியும். பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் நிகழ்த்தப்பட்டு வரும் இஸ்லாமிய வெறுப்பு நடவடிக்கைகளில் தங்களை எதிரி நாடுகளாகக் காட்டிவரும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகியன மும்முரமாக ஈடுபட்டு வருவது இதனையே எடுத்துக் காட்டுகிறது. P. N. ஜோக் இஸ்லாமிய வெறுப்பு தொடர்பான தனது நூலை எழுதி வெளியிட்ட அதே ஆண்டின் ஜனவரி 26 அன்று தனது கல்லூரிக்குச் சென்றுகொண்டிருந்த வழியில் தாதியியல் மாணவரான நிசாருதீன் அஹ்மத் பொலீசாரினால் கைது செய்யப்பட்டார். ரயிலில் குண்டுத்தாக்குதல் மேற்கொண்டதாகக் கூறி கைதுசெய்யப்பட்ட நிசாருதீன் சிறையில் மிக மோசமான வன்முறைகளை எதிர்கொண்டார். சுமார் இருபத்தி மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் 2016 ஆம் ஆண்டில் விடுதலையான அவர் ” எனது விடுதலை எனக்கு எவ்வித ஆறுதலையும் அளிப்பதாகத் தெரியவில்லை; எவ்வித உணர்வுகளுமற்ற நிலையிலேயே நான் எனது விடுதலையை சந்தித்து இருக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
பச்சார்யா : இந்தியாவில் தற்போதைய நிலையில் உச்சத்தை எட்டியுள்ள இஸ்லாமிய வெறுப்பின் வரலாறு தொடர்பில் என்ன கூறுவீர்கள்? இப்போது உள்ளதை விடவும் மோசமான காலங்கள் வரலாற்றில் இருந்திருக்கின்றனவா?
இர்ஃபான் அஹ்மத் : ஆம். இது தொடர்பாக கூறுவதாயின் செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகுதான் இஸ்லாமிய வெறுப்பு துளிர் விடத் துவங்கியது என்று வாதிடுவது எப்படியான குறைபுரிதலோ அதேபோன்று தான் நேருவின் ஆட்சியை முஸ்லிம்களின் பொற்கால ஆட்சியாக கருதுவதும் குறைபுரிதலாகவே அமையும் என்று நினைக்கிறேன். சொல்லப்போனால் இந்தியாவில் இன்று நிலவும் இஸ்லாமிய வெறுப்பு நடைமுறைகள் இந்திய/ இந்து நவீனத்துவத்தின் தோற்றத்துடனேயே உருவாகின எனக் கூறலாம். இந்திய மறுமலர்ச்சியின் தந்தையாகக் கருதப்படும் ராம் மோகன் ராய் (1772-1833), ஆங்கிலேயரின் காலனித்துவ ஆட்சியை முஹம்மதியர்களிடம் இருந்து பெற்ற விடுதலை என்ற ரீதியிலேயே வரவேற்றார். இந்தியாவின் சுதேசிகளாக இந்துக்களை கருதிய ராய், வந்தேறிகளாக முஸ்லிம்களை குறிப்பிட்டதோடு பிரிட்டிஷாரின் வருகையை முஹம்மதி்யர்களிடம் இருந்து இந்துக்களை விடுவிக்க வந்த மீட்பர்களின் வருகையாகவே குறிப்பிட்டார். அந்தவகையில் இஸ்லாமிய வெறுப்பிற்கான விதைகள், வலதுசாரி தேசியவாதியான மோகன் ராயினால் தீவிரமாகவே இந்தியச் சூழலில் விதைக்கப்பட்டது.
நவீன தேசிய அரசுகளின் உருவாக்கமானது இஸ்லாமிய வெறுப்பின் கருத்தியல் உள்ளீடுகள் அதன் பிரச்சார உத்திகள் ஆகியவற்றில் மாற்றங்களை உண்டுபண்ணின. அதாவது சமகால தேசிய அரசுக் கட்டமைப்பின் கீழ் தேசிய பாதுகாப்பிற்கான அச்சுறுத்தலாக முஸ்லிம்களையும் இஸ்லாத்தினையும் கட்டமைப்பதில் இருந்தே இஸ்லாமிய வெறுப்பு வேர் கொள்கிறது எனலாம்.
பச்சார்யா : உலகளாவிய ரீதியிலும் இந்தியச் சூழலிலும் முஸ்லிம் அடிப்படைவாதம் மற்றும் இஸ்லாமோபோபியா ஆகியன பரஸ்பரம் எவ்வாறு ஒன்றையொன்று தங்களைத் திசைப்படுத்திக் கொள்கின்றன என்பது தொடர்பான உங்கள் கருத்துக்கள் என்ன?
இர்ஃபான் அஹ்மத் : “அடிப்படைவாதம்” என்பது ஒரு மதத்தின் அடிப்படையான போதனைகளைப் பின்பற்றுதல் என்பதைக் குறிக்கிறது என்றால் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களையும் அடிப்படைவாதிகள் என்று அழைத்துவிட முடியும். ஆனால் அந்த வார்த்தை பொதுவாக அப்படிப் பயன்படுத்தப்படுவதில்லை. உலக அரசியலில் “பயங்கரவாதம்” ஒரு முக்கிய மையமாக மாறுவதற்கு முன்பு குறிப்பாக ஈரானியப் புரட்சிக்குப் பிறகான காலப்பகுதியிலேயே பெரும்பாலும் “இஸ்லாமிய அடிப்படைவாதம்” என்ற வார்த்தை அதிகம் பிரயோகம் செய்யப்படத் துவங்கியது. எனவே அந்தவகையில் “அடிப்படைவாதம்” என்ற வார்த்தை நடுநிலையானது அல்ல. “நாம்” (நல்லவர்கள்) மற்றும் “அவர்கள்” (கெட்டவர்கள்) இடையே ஒரு நிரந்தரமான பிரிவினையை உருவாக்கவே இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.
அதாவது முஸ்லிம்களிடையே பிற்போக்காளர்கள் யாருமே இல்லை என்று நான் கூற வரவில்லை. நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புவது என்னவென்றால் ‘பிற்போக்குத்தன்மை’ என்பது முஸ்லிம் சமூகத்திற்கு மாத்திரமே உரிய பண்பாக எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைத் தான்.
அரசியல் ரீதியாக “அடிப்படைவாதம்” எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பார்க்க, சீதாராம் எச்சூரி எழுதிய “What Is This Hindu Rashtra?” (1993) என்ற கட்டுரையில் கலந்துகொள்ள முடியும். “இந்து வகுப்புவாதமும் முஸ்லிம் அடிப்படைவாதமும் பரஸ்பரம் ஒன்றையொன்று கொண்டும் கொடுத்துமே வளர்கின்றன எனக் குறிப்பிடும் எச்சூரி, இந்துக்களின் “வகுப்புவாதம்” அவர்களது சமூக ஒழுங்கமைப்பின் விளைவு என்றும் முஸ்லிம்களின் “அடிப்படைவாதம்” அவர்களது சமயத்தின் உள்ளார்ந்த பண்புகளின் வெளிப்பாடு எனவும் விளக்குவதன் ஊடாக இந்து வகுப்புவாதம் மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதம் ஆகியவற்றை வெவ்வேறு விதங்களில் நோக்குவதை அவதானிக்க முடியும். இதனூடாக தெரிந்தோ தெரியாமலோ எச்சூரியின் வியாக்கியானமானது ‘இஸ்லாம் இயல்பிலேயே அச்சுறுத்தல்கள் மிக்க சமயம்’ என்ற காலனித்துவ தர்க்கத்தினை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது எனலாம்.
பச்சார்யா : இறுதியாக இன்றைய நிலையில் இந்திய முஸ்லிம்கள் எவ்வாறு செயற்பட வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? அவர்கள் மீதான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வர அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
இர்ஃபான் அஹ்மத் : இதில் முஸ்லிம்கள் செய்ய வேண்டிய விடயம் என்று பெரிதாக ஒன்றும் இல்லை. பாதிக்கப்படும் அல்லது ஒடுக்கப்படும் தரப்பு என்ற ரீதியில் அவர்களால் எதனையும் செய்துவிட முடியாது. அமெரிக்காவின் எதிர்காலம் குறித்து ஜேம்ஸ் போல்ட்வினிடம் கேட்கப்பட்ட போது அவர் “அது முதலில் அமெரிக்க வெள்ளையின மக்களின் கவலையும் கரிசனையுமாகவே இருக்க வேண்டும்” என்று பதிலளித்து இருந்தார். அதேபோலவே இந்தியா உள்ளிட்ட ஏனைய நாடுகளில் உள்ள இஸ்லாமிய வெறுப்பாளர்கள், முஸ்லிம்களைப் பற்றிய பயத்தை உற்பத்தி செய்ய வேண்டிய அவசியம் திடீரென ஏன் ஏற்பட்டது என்று தங்களைத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். உண்மையில் அவர்கள் கூறுவது போல முஸ்லிம்கள் இயல்பிலேயே வன்முறையாளர்களாகவோ காட்டுமிராண்டிகளாகவோ இருப்பவர்கள் அல்ல. அதுபோல அல்குர்ஆன் வெறுப்பின் புத்தகமும் அல்ல. மாறாக அது ஒரு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் மூல ஊற்றாகவும் இருக்கிறது.
இன்றைய உலக அரசியலின் மையக்கருவாக உள்ள இஸ்லாமோபோபியாவானது தங்களிடையே ஒன்றையொன்று மோதிக்கொள்ளும் நாடுகளைக் கூட (சீனா மற்றும் அமெரிக்கா, அல்லது இந்தியா மற்றும் சீனா போன்றவை) “பயங்கரவாதம்” என்று அவர்கள் அழைக்கும் ஒன்றை எதிர்த்துப் போராடுவதற்காக வேண்டி ஒன்றிணைந்து செயல்படத் தூண்டும் காரணியாக அமைந்திருக்கிறது. பெரும்பாலும் இஸ்லாத்தை மட்டுமே குறிவைக்கும் இந்தப் பிரச்சினையை எதிர்த்துப் போராட உலக அரசியல் கட்டமைக்கப்பட்டிருக்கும் விதத்தை நாம் மாற்ற வேண்டியிருக்கிறது.
பெண்கள் தலைமையில் நடைபெற்ற ‘ஷஹீன் பாக்’ போராட்டம் போன்ற அமைதிவழிப் போராட்டங்கள் மூலமாக முஸ்லிம்கள் நல்லதொரு முன்மாதிரியைக் காட்டியிருக்கிறார்கள். அதுபோலவே பொறுமையாகவும் நீதி மற்றும் சமத்துவத்திற்காக பிற சமயங்கள் மற்றும் சமூகங்களைச் சேர்ந்தவர்களுடன் தொடர்ந்தும் முஸ்லிம்கள் பணியாற்ற வேண்டும். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் அதிகாரத்தில் இருப்பவர்களால் இஸ்லாமிய வெறுப்பு ஆதரிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படும்போது இவர்களால் இத்தகைய போராட்டங்களில் வெற்றி பெற முடியுமா என்பது தான்.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இந்த நேர்காணல் outlookindia இணையதளத்தில் ‘In India, As Also Globally, Islamophobia Predates 9/11’: Political Anthropologist Irfan Ahmad என்ற தலைப்பில் வெளியானது.