–சவுமாயா கன்னூஷி–

ரியாத்திலிருந்து அபுதாபி வரை, ஒரு பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது – அது காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அல்ல; மாறாக அமெரிக்காவுக்கு ஆதரவளிப்பதில் ஒருவரையொருவர் மிஞ்சுவதற்காக

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ரியாத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கான சுற்றுப்பயணம் ஒன்றும் அரசியல் செயல் நலம் சார்ந்ததல்ல. அது பேராசையால் தூண்டப்பட்டு, துரோகத்தால் எழுதப்பட்டு தங்கத்தில் அரங்கேற்றப்பட்டதொரு முழு நீள நாடகம். ஒரு இனப்படுகொலைக்கு வெளிப்படையாக ஆயுதம் வழங்கிய ஒரு அமெரிக்க ஜனாதிபதிக்கு, வெற்று காசோலைகளுக்கு நிகரான ஆதாயங்கள் கருதி, கைகுலுக்கல்களோடு செங்கம்பள வரவேற்பு வழங்கப்படுகிறது.

டிரில்லியன் டாலர்கள் பெறுமதிவாய்ந்த டீல்களுக்கான உறுதிமொழிகள் வழங்கப்படுகின்றன; தனிப்பட்ட பரிசுகள் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. காசா தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கிறது. வளைகுடா ஆட்சிகளிடம் அதிகாரமும் செல்வமும் உள்ளன. அவர்களிடம்தான் டிரம்பின் காதும் உள்ளது. ஆனாலும் அவர்கள் அவற்றில் எதனையும் படுகொலையை நிறுத்தவோ, முற்றுகையை எளிதாக்கவோ அல்லது அங்கு செத்து மடியும் ஏதிலிகளின் கண்ணியத்தை மீளப்பெறுவதற்கோ பயன்படுத்துவதில்லை.

அவர்களின் செல்வச் செருக்கிற்கும் அவர்கள் காட்டும் பணிவிணக்கத்துக்கும் ஈடுசெய்யும் வகையில், டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு குண்டுகளை மேலும் வழங்கி, அந்தப் பிராந்தியத்தின் மீது அவற்றை ஏவுகிறார். இதுதான் உண்மையான கதை. இதற்கு முன்னர் அவர் ஜனாதிபதியாக இருந்தபோது தொடங்கிய ஒரு திட்டம் அவரது அடிமனதில் உள்ளது. பாலஸ்தீனத்தை அழித்தல், எதேச்சதிகாரத்தின் எழுச்சி மற்றும் மத்திய கிழக்கின் வரைபடத்தை மறுவரைவு செய்து இஸ்ரேலின் பிம்பத்தை பெரிதாக்குதல். இவைதான்! 

“இந்த பேனாவைப் பாருங்கள்? என் மேசையில் உள்ள இந்த அற்புதமான பேனாதான் மத்திய கிழக்கு; பேனாவின் சிறிய மேற்பகுதி – அதுதான் இஸ்ரேல். அது நல்லதல்ல,” என்று அவர் ஒருமுறை செய்தியாளர்களிடம் கூறினார், அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இஸ்ரேலின் அளவைப் பற்றி புலம்பினார்.

ட்ரம்பைப் பொறுத்தவரை, மத்திய கிழக்கு என்பது வரலாறு அல்லது மனிதநேயத்தின் ஒரு பகுதி அல்ல. அது சந்தை வாய்ப்புகள் கொண்டதொரு பிரதேசம், ஒரு ஆயுதக் கிடங்கு, தனது புவியரசியல் திருக்கடிகளை தனக்கே உரித்தான கழுதைப்புலி இராஜதந்திரத்தோடு நிறைவேற்றிக் கொள்வதற்குத் தேவையான பணத்தைப் பெற்றுக்கொள்ளும் ஏ.டீ.எம். இயந்திரம்! 

அவரது உலகக் கண்ணோட்டம் சுவிசேஷத்தின் அடியாக உருவான வைராக்கியம் மற்றும் வணிகப் பரிவர்த்தனைக்கான உள்ளுணர்வு கொண்டு காய்ச்சியடித்து உருவேற்றப்பட்டதோர் கலவை. அவரது சொல்லாட்சியில், அரேபியர்கள் ஒழுங்கற்ற குழப்பவாதிகளான அவதாரங்களாய் இருக்கிறார்கள்: பகுத்தறிவற்ற, வன்முறை நாட்டம் மிக்க, கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட வேண்டிய தேவை உள்ள ஜென்மங்கள். இஸ்ரேல் மாத்திரமே நாகரிகமான, ஜனநாயக விழுமியங்கள் கொண்ட, தெய்வீகமாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. அவரது இந்த ‘இருமைக் குறியீடு’ தற்செயலானது அல்ல. அதுதான் அவரது சித்தாந்தப் பின்புலம்.

அரபுகளின் பிழைப்புவாத கீழ்ப்படிதல்

டிரம்ப் இப்பிராந்தியத்தை ‘கரடுமுரடானதோர் சூழ்வட்டாரம்’ என்று அழைக்கிறார் – அது மத்திய கிழக்கு மக்களை பாதுகாக்க வேண்டிய உயிர்களாகக் கருதியதனால் அல்ல, மாறாக கட்டுப்படுத்த வேண்டிய அச்சுறுத்தல்களாக அவர்களை சித்தரிக்கும் முடிவற்ற இராணுவ வாதத்திற்கான குறியீடுதான் இது. 2017ல் சவூதி அரேபியாவோடு செய்துகொண்ட 110 பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத பேரம், ‘செழுமையின் ஊடாக சமாதானம்’ என்ற பெயரில் அரங்கேறியது. இம்முறை வளைகுடாவின் செல்வ வளத்தில் மேலதிகமாக பல ட்ரில்லியன் டாலர்களை கேட்டபடி ஒரு தண்டல்காரனாக அவர் வந்திருக்கிறார்.

சவூதி அரேபியாவின் மொத்த தேசிய உற்பத்தியான ஒரு ட்ரில்லியன் டாலரை அமெரிக்கப் பொருளாதாரத்தில் முதலீட்டில் கரைக்குமாறு கோரி ட்ரம்ப் அங்கு சென்றிருப்பதாக நியூயோர்க் டைம்ஸ் தெரிவிக்கிறது. ரியாத் ஏற்கெனவே 600 பில்லியனை வழங்கி இருக்கிறது. அவை அனைத்தும் வேண்டும் என ட்ரம்ப் கேட்கிறார். பொருளியலாளர்கள் இதனை ஓர் அபத்தமான முடிவு என்கின்றனர்; ட்ரம்ப் இதனை ஒரு ‘டீல்’ என்கிறார். இது பேச்சுவார்த்தை அன்று. திரிசங்கு நிலையில் இருக்கும் அரபிகள் செலுத்தும் திறை. இந்த டீலின் விளைவாக மத்திய கிழக்கில் இடம்பெறும் கொலைபாதக அரசியலின் வேகம் துரிதப்படுத்தப்படுகிறது. ட்ரம்புடனான பேச்சுவார்த்தையின் பின்னர், 10 வருடத்தில் 1.4 ட்ரில்லியன் டாலரை அமெரிக்கப் பொருளாதாரத்தில் முதலீட்டாகக் கரைப்பதற்கான வரைசட்டகத்தை தயாரிப்பதாக அமீரகம் அறிவித்துள்ளது. வளைகுடா முழுவதும், ஒரு ஓட்டப் பந்தயம் நடந்து கொண்டிருக்கிறது; அது காசாவில் இடம்பெறும் இனப்படுகொலையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கானதல்ல, மாறாக, ட்ரம்பிற்கு ஆதரவாக ஒருவரை ஒருவர் விஞ்சி, ட்ரம்பை நிறுத்தி வைத்து அவர் மீது வளைகுடாவின் செல்வத்தை வகை தொகையின்றி அமெரிக்க நலன்கள் மீது பொழிவது; எதற்காக…? அது அவர்களே அறியாதது! 

வளைகுடா இனிமேல் உலகின் ஒரு பிராந்தியமாகக் கருதப்படப் போவதில்லை. அது ஒரு பெட்டகம். அங்கு வாழும் மக்களது இறையாண்மையை வைத்து சேர்த்த வகைதொகையற்ற செல்வங்கள் குவிந்திருக்கும் பெட்டகங்கள் புதிய வாக்குப் பெட்டிகளாக பரிணாமம் பெற்றிருக்கின்றன. அங்கெல்லாம் இறையாண்மை என்பது வணிகப் பரிவர்த்தனைக்கு உட்படுத்தப்பட வேண்டிய மற்றொரு சொத்து மாத்திரமே. டிரம்ப் வழங்கும் ‘சலுகை’ மிக வெளிப்படையானது: ‘உயிர்வாழ்வதற்கான கீழ்ப்படிதல்’ என்பது தான் அது. அரபு வசந்தத்தால் இன்னும் வேட்டையாடப்படும் பொம்மை ஆட்சிகளுக்கு, மேற்கத்தேயம் வழங்கும் இந்த ஆசீர்வாதமே ஆட்சியாளர்களிடம் எஞ்சி இருக்கும் கடைசிக் கேடயமாகும்.

இதற்கான விலையாக எதையும் வழங்குவதற்கு அந்த வளைகுடா ஷேய்க்குகள் இப்போது தயாராகிவிட்டனர்: செல்வங்கள், சுதந்திரம், ஏன் தமது கண்ணியத்தையே இழப்பதற்கும்… அவர்களைப் பொறுத்தவரை அவர்களை கனவில்கூட பயமுறுத்துவது இஸ்ரேல் அல்ல. ஏன் ஈரான் கூட அல்ல! சுதந்திரத்துக்கான தாபத்தில் கிடந்து உழலும், அமைதியற்ற, கட்டுக்கடங்காத அவர்களது சொந்த மக்கள் தான்! அரபு மக்களுக்கான ஜனநாயகம் ஒரு பேராபத்து. சுய நிர்ணயம் என்பது டிக்… டிக்… என்ற சப்தத்துடன் வெடிக்கக் காத்திருக்கும் ஒரு குண்டு. எனவே, அடுத்த தேர்வு… வேறு வழி?  ‘பேயுடனான ஒரு ஒப்பந்தம்!’ 

தடுப்பாற்றல் கோட்பாடு

அந்தப் பேய்; கொடிகள், கட்டமைப்பு சட்டகங்கள், புகைப்படத் தேர்வுகள் மற்றும் ஒப்பந்தங்களைக் கையோடு கொண்டுவருகிறது. இஸ்ரேலுடன் இயல்புநிலையை ஏற்படுத்துமாறு புதிய உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. அதன் மேலாதிக்கத்துக்கு அடிபணிந்தொழுகுமாறும், பாலஸ்தீனத்தின் விடயத்தில் அமைதியாக இருக்குமாறும் கேட்கிறது. ஒரு காலத்தில் இடம்பிடித்திருந்த எதிர்ப்புக் கோஷங்களை நிதி தொழில்நுட்ப கண்காட்சிகள் மாற்றீடு செய்வதோடு இஸ்ரேலிய அமைச்சர்களுடன் மந்தகாசப் புன்னகை சகிதம் கைகுலுக்குவதனால் இவை அனைத்தும் சூட்சுமமாக அரங்கேற்றப்படுகின்றன. அனைத்தினதும் மொத்த விலையாக பேரரசர் ட்ரம்ப் அனைத்தும் தழுவிய ‘அரசியல் கவசம்’ மற்றும் போதுமான ஆயுதங்கள் சகிதம் தண்டனை விலக்கை பிரகடனம் செய்கிறார்.

இது தங்கத்தை விலையாகக் கொடுத்து வாங்கப்பட்டு, அரேபிய இரத்தத்தில் ஊறவைக்கப்பட்டதோர் தடுப்பாற்றலுக்கான கோட்பாடு. அவர்கள் வளைந்து கொடுக்கிறார்கள். அவர்கள் அவருக்கு ஒப்பந்தங்கள், கௌரவங்கள் மற்றும் டாலர்களை ட்ரில்லியன் கணக்காக வழங்குகிறார்கள். அடிபணிதல் கெளரவத்தை ஈட்டித்தரும் என அவர்கள் நம்புகிறார்கள். ஆனால், ட்ரம்ப் எங்கும் எவரிடமும் அதிகார பலத்தை மாத்திரமே நம்புவதோடு அந்த விடயத்தில் அவர் தெளிவாக இருக்கிறார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினை அவர் புகழ்கிறார் “புட்டின் சாமர்த்தியமானவர்தானா” என்கிறார். ஆம்… அது பேரம் பேசுவதற்கான ஒரு அருமையான வழி. “நான் விரும்பும் [மற்றும்] மதிக்கும் ஒரு ஆளுமை” என துருக்கி பிரதமர் ரசிப் தய்யிப் எர்துகானை சிலாகிக்கிறார். அவர் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவரவர் தேசங்களை அவர்கள் பாதுகாக்கின்றனர். எப்போதும் வணிகப் பரிவர்த்தனை மனப்பான்மை கொண்ட டிரம்ப், அதிகாரத்தை மாத்திரமே மதிக்கிறார்.

அரபுத் தலைவர்கள் அவ்வகையான வலிமையை அமெரிக்காவிடம் காட்டுவதில்லை. அவர்கள் பணிவிணக்கத்தையே காட்டுகின்றனர், ஈனஸ்வரத்திலேனும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் தமது அழுத்தத்தை பிரயோகிப்பதில்லை; மாறாக பணத்தை வாரியிறைக்கின்றனர். அதன் விளைவாகவே ட்ரம்ப் அவர்களை நேரடியாகவே ஏகத்தாளத்துடன் ‘வைத்து செய்கிறார்’.  “அமெரிக்காவின் தயவு இன்றி கிங் சல்மான் இரு வாரங்கள் கூட தாக்குப் பிடிக்க முடியாது” என வெளிப்படையான இகழ்ச்சியோடு பேசுகிறார். அவர்கள் டாலர்களை பில்லியன்களில் வழங்குகின்றனர். ட்ரம்ப் அவற்றை ட்ரில்லியன்களில் தருமாறு கேட்டு நிலைகொண்டு நிற்கிறார்.  

கேவலமான இந்த டீல்களில் விளைவாக அமெரிக்க கருவூலம் மட்டும் லாபம் ஈட்டுவதில்லை. வளைகுடா வாரிக் கொட்டும் பில்லியன்கள் அமெரிக்கக் கொள்கையை மட்டும் தூண்டுவதில்லை; அவர்கள் ஒரு குடும்ப சாம்ராஜ்யத்தையே வளப்படுத்துகிறார்கள். இரண்டாவது தடவை ஜனாதிபதி ஆனதிலிருந்து, ட்ரம்பும் அவரது மகன்களும் வளைகுடா முழுவதும் ஒப்பந்தங்களைத் துரத்திப் பிடித்துக் கைப்பற்றுவதற்கு, ட்ரம்ப் அன் கம்பனி இந்த வாலாட்டிகளின் விசுவாசத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் தாம் பயிரிட்ட ‘எஜமான விசுவாசத்தை’ பணமாகவே அறுவடை செய்கின்றனர்.

இனச் சுத்திகரிப்புக்கான வெகுமதி  

இப்போது இடம்பெறும் நிகழ்வுகளின் முற்கோள் ஏற்கனவே அரங்கேறிவிட்டது. முன்னாள் ஜனாதிபதி ஆலோசகரும், ட்ரம்பின் மருமகனுமான ஜாரெட் குஷ்னர், உள் நாட்டில் பலத்த ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், பதவியை விட்டு வெளியேறிய சிறிது நேரத்திலேயே சவுதி அரேபியாவின் தனியுரிமை செல்வ நிதியிலிருந்து 2 பில்லியன் டாலர்களைப் பெற்றார். அதன் மூலம் சொல்லப்பட்ட சேதி தெளிவானது: ‘ட்ரம்ப் வகையறாக்களை அணுகுவதற்கு ஒரு விலை உண்டு. அதனை செலுத்துவதற்கு வளைகுடா ஆட்சியாளர்கள் ஆர்வமாக உள்ளனர்’ என்பது தானது. இப்போது, ​​கத்தாரின் ஆளும் குடும்பம்பத்திடம் இருந்து ஒரு போயிங் 747 தனியார் ஜெட் விமானத்தை ட்ரம்ப் பெறுகிறார் – 400 மில்லியன் டாலர் மதிப்புள்ள வானத்தில் பரக்கும் ஓர் அரண்மனை அது. இது ராஜதந்திரம் அல்ல. இது பகல் கொள்ளை – தெளிவானதோர் சூறையாடல்.

இதனை ட்ரம்ப் எப்படிப் பார்க்கிறார்? அவரது அரசியல் வியாக்கியானம் என்ன..? ஏளனத்தோடும் தனக்கே உரித்தான இதழ்க்கடையில் நெளியும் ஏகடியப் பாவனையோடும் “இது ஒரு சிறந்த சைகை,” என்று அவர் தனக்கு வழங்கப்பட்ட ஜெட் விமானத்தைப் பற்றிக் கூறுகிறார். அவர் மேலும் கூறும்போது “நாங்கள் அவற்றைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறோம். அது எங்களுக்கென  இல்லையென்றால், அவை இப்போது இங்கே இருந்திருக்க வாய்ப்பில்லை.” என்றார்.

சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் தலைவர்கள் பவ்வியமாக பேரரசர் ட்ரம்ப் அவர்களது காலடியில் சமர்ப்பித்தவற்றுக்கு அவர் செலுத்திய ‘நன்றி’ அதுதான். அவர்களுக்கு இழிவையே அவர் பிரபலத்தோடு திருப்பியளித்தார்.

வளைகுடா ஷெய்க்குகள் அவருக்கு எதற்காக வெகுமதி அளிக்கிறார்கள்? ஒரு இனப்படுகொலைக்காக. காசாவில் வீசப்பட்ட 100,000 டன் குண்டுகளுக்காக. இன அழிப்புக்கு ஆதரவளித்ததற்காக. நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் மற்றும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்ட தீவிர வலதுசாரி இஸ்ரேலிய அரசியல்வாதிகள், காசாவின் மக்கள்தொகையை பட்டினிபோட்டும் குண்டு வீசியும் அழிப்பதற்கு அழைப்பு விடுக்கையில், அவர்களுக்கு அதிகாரம் அளித்ததற்காக. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் வெறித்தனமான சியோனிச, அடிப்படை அரசியல் சீலமற்ற இஸ்லாமியபோபியா நிர்வாகத்திற்கு தலைமை தாங்கியதற்காக; நிபந்தனைகள் ஏதுமின்றி சரணாகதி அடைந்த இழி நிலையில் இத்தனை பரிசில்கள் வாரி வழங்கப்பட்டன. அவர்கள் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தியிருக்கலாம். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அவர்களால் செயல்பட முடியும் என்பதை நிரூபிக்கும் விதத்தில் ஏமன் முன்னுதாரணமாக செயற்பட்டிருக்கிறது. நெதன்யாகுவின் வெளிப்படையான ஏமாற்றத்திற்குக் காரணமாய் அமைந்தபோதிலும், சவுதியின் அழுத்தத்தின் கீழ், ட்ரம்ப் குண்டுவீச்சை நிறுத்தினார். அவர்கள் ஓர் ஒப்பந்தத்தை விரும்பியபோது, ​​ஹவுத்திகளுடன் ஒன்றை ஏற்படுத்திக் கொண்டனர்.

அவர்கள் சிரியாவை ‘மீட்டெடுக்க’ முயன்றபோது, ​​ட்ரம்ப் அதற்கு இணங்கினார். முன்னாள் கிளர்ச்சித் தலைவரும் இந்நாள் ஜனாதிபதியுமான அகமது அல்-ஷாராவைச் சந்திக்க அவர் ஒப்புக்கொண்டார் – இது அவரது ரியாத் பயண அட்டவணையில் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட்டது. மேலும் சவுதி அரேபியாவின் வேண்டுகோளின் பேரில், ‘அவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குவதற்கு’ மீண்டும் ஒருமுறை தடைகளை நீக்குவது குறித்தும் அவர் பேசினார். எந்த ஒரு அமெரிக்க ஜனாதிபதியும் அழுத்தத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. ஆனால் காசாவுக்கு…? அமைதி!

அமைதியின் விலை

ரியாதில் இடம்பெற்ற வரவேற்பில் அதி உச்ச செழுமையை ட்ரம்ப் சுகித்துக்கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட குண்டுகளை, எஞ்சி இருந்த இரண்டு வைத்தியசாலைகள் மீது இஸ்ரேல் மழைபோலப் பொழிந்து கொண்டிருந்தது. கான் யூனிஸில் ஒன்பது ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகள் வீசப்பட்டதன் விளைவாக ‘தி யுவரோப்பியன் ஹொஸ்பிட்டல்’இல் பல டசின் மக்கள் கொல்லப்பட்டதோடு அது கடுமையாக சேதமடைந்திருக்கிறது. பல நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். அன்று காலை நாஸெர் வைத்தியசாலையை இலக்குவைத்து நடாத்தப்பட்ட விமானத் தாக்குதலில் அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த ஊடகவியலாளர் ஹஸ்ஸான் இஸ்லாயெஹ் படுகொலை செய்யப்பட்டார். வளைகுடாவில் ட்ரம்ப் வரவேற்பு ஆரவாரத்தில் திளைத்திருந்த வேளை ஜபாலியாவில் குழந்தைகள் மற்றும் சிறார்கள் உட்பட 50 க்கும் அதிகமானோரை சில மணித்தியாலங்களில் இஸ்ரேல் படுகொலை செய்து முடித்திருந்தது. அரபுக்கள் கடைபிடிக்கும் ‘அமைதிக்கான’ விலை தான் இது; அவர்கள் ட்ரம்புக்கு காட்டி ரசிக்கும் படாடோபத்தின் பளபளப்பு மற்றும், சிறுமைப்பட்டு செலுத்தும் ட்ரில்லியன் கணக்கிலான திறை, இவை அனைத்திலிருந்தும் கிளம்பும் இரைச்சலுக்குக் கீழ் இந்த ‘விலை’ புதைந்து கிடக்கிறது.

இந்த வாரம் ‘நக்பா’வின் மற்றுமொரு ஆண்டு நிறைவைக் குறிக்கிறது – இங்கே அது மீண்டும், முன்னரை விட உக்கிரமாக நடந்தபடி உள்ளது. அவை இஸ்ரேலிய டாங்கிகள் வழியாக மாத்திரம் அல்ல. ஆனால் அரபு ஆட்சியாளர்களின் உடந்தையோடும் அப்படியான் ‘நக்பா’ அவலங்கள் மீட்டுருவாக்கப்படுகின்றன என்பதை அழுத்தி உரைத்தல் வேண்டும். குண்டுகள் விழுந்தபடி இருக்கின்றன. காஸாவில் எஞ்சி இருக்கப்போவது வெறும் கற்குவியல்கள்தான். இரண்டு மில்லியன் மக்கள் தமது உயிரை கையில் பிடித்துக்கொண்டு பட்டினியை சகித்துக் கொள்கிறார்கள். ஐ. நாவின் உணவுக்கான ஏற்பாடு அங்கிருந்து போய்விட்டது. எலும்பும் தோலுமான விகாரக் குழந்தைகளுடன் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. தாய்மார்கள் பசியியோடிருந்து களைத்து சரிந்து விடுகிறார்கள். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடுமையாக ஊட்டச்சத்து குறைபாடுடையவர்கள், மரணத்தின் விளிம்பில் அல்லாடுகின்றனர். அவர்களது தொகை சுமார் 3,500 க்கும் மேற்பட்டவர்கள் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், காசாவின் மக்களுக்கு ‘மூன்றாம் நாடுகளைப் பற்றி’ ஸ்மோட்ரிச் வகுப்பெடுக்கிறார். அவர்கள் ‘அகற்றப்படுவதற்கான’ வழிமுறை இடம்பெறுவதாக நெதன்யாகு ஊடகங்களுக்கு உறுதியளிக்கிறார்.

டிரம்ப்… இந்த நிர்மூலமாக்கலை இயக்கும் மனிதர் அவர்தானா? அவர் கண்டிக்கப்படவில்லை; ஆனால் அரபுலக ஆட்சியாளர்களால் மகிழ்ந்து கொண்டாடப்படுகிறார். வெடிகுண்டுகளை அனுப்பும் அவரது கையை அவர்கள் ஆவலுடன் முத்தமிடுகிறார்கள், அவர்களை கல்லாய்ச் சமைந்த பொம்மைகள் போல மாற்றி விட்ட அந்த அற்புதக் கலைஞரான ட்ரம்ப் என்பவரை நேர்த்தி மற்றும் மகிமை கொண்டு போர்த்துகிறார்கள்.

உலகின் பெரும்பகுதியைச் சேர்ந்த சீனா, ஐரோப்பா, கனடா, மெக்சிகோ, ஏன் கிரீன்லாந்து கூட; இந்த ட்ரம்பின் மிரட்டலுக்கு அடிபணிய மறுத்து, தமது தேசத்துக்கான நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கும் அதே வேளையில், அரபு ஆட்சியாளர்கள் மண்டியிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு அவர்கள் தமது பணப்பைகளைத்தான் திறக்கிறார்கள். முதுகெலும்புகளை வளைக்கிறார்கள். அங்கெல்லாம் சீவிக்கும் மக்கள் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல.  வெற்றுக் கைகளை வெட்கமின்றி வைத்திருக்கிறார்கள். தேசிய அவமானத்தை ராஜதந்திரம் என தவறாகப் புரிந்து வைத்திருக்கிறார்கள். போதுமான அளவு தாழ்ந்து போனால், டிரம்ப் அவர்களுக்கு மற்றொரு எலும்புத் துண்டையேனும் கொடுக்கக்கூடும் என்று இன்னும் நம்புகிறார்கள். அதற்கு பதிலாக, தனது ‘தொழிற்குறியான’தோர் நமுட்டுச் சிரிப்போடு அவர் அவர்களுக்கு ஒரு மசோதாவைத் தூக்கி எறிகிறார்.

இது தேச நலன் சார் கோன்மை அரசியல் அல்ல. இது வீழ்ச்சி மற்றும் சீரழிவின் களேபரமானதோர் கலவை. வெட்கக்கேடு மற்றும் அபகீர்த்தியின் ஒரு கோரமான காணக்கூடாத காட்சி. கையொப்பமிடப்பட்ட ஒவ்வொரு காசோலையிலும், வழங்கப்படும் ஒவ்வொரு ஜெட் விமானத்திலும்; மக்களைக் கொன்றொழிக்கும் கசாப்புக் கடைக்காரரைப் போன்றோரைத் தவிர, வேறு யாரிடமும் அரபுலக ஆட்சியாளர்கள் வரலாற்றின் மரியாதையைப் பெறப் போவதில்லை. அவர்கள் வரலாற்றின் வெட்கக் கேடுகளுக்கான பக்கங்களின் மோசமான அடிக்குறிப்புகளில் தங்களுக்கான இடத்தைக் கண்டுகொள்வார்கள்.

சவுமாயா கன்னூஷி (Soumaya Ghannoushi)பிரித்தானிய – தூனிஷிய எழுத்தாளர்; மத்தியகிழக்கு அரசியலில் தேர்ச்சி பெற்றவர்.  The Guardian, The Independent, Corriere della Sera, aljazeera.net மற்றும் Al Quds ஆகிய ஊடகங்களில் அவரது அரசியல் ஆக்கங்கள் வெளிவருகின்றன. ட்விட்டரில் tweets@SMGhannoushi என்ற முகவரியில் இருப்பதோடு அவரது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆக்கங்களை  soumayaghannoushi.comல் காணலாம்.

மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி