– றொமான் கிராஸ்போகுல்
இனவாதம் என்பது மனிதகுலத்தில் யார் மேன்மையானவர் மற்றும் மேன்மையற்றவர் என்பதனை நிர்ணயிக்கும் சர்வதேச ரீதியான படிநிலையாக்க நடைமுறை அமைப்பாகும். இப்படிநிலையாக்க முறைமையானது பல நூற்றாண்டுகளாக முதலாளித்துவ, ஆணாதிக்க, மேற்கத்தியவாத,கிறிஸ்தவ மையவாத, நவீன மற்றும் காலனிய நிறுவனங்களால் அரசியல், கலாசார மற்றும் பொருளாதார ரீதியாக உருவாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டும் வருகிறது (Grosfoguel, 2011). இதில் மேன்மையானவர்களாக வகைப்படுத்தப்பட்டவர்களின் மனிதத் தன்மை முழுமையாக அங்கீகரிக்கப்பட்டு அதற்கான சமூக அந்தஸ்த்தும் வழங்கப்பட்டது என்பதுடன் மனித உரிமைகள், குடிமை உரிமைகள், பெண்கள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் மற்றும் அவர்களின் அடையாளங்கள், அறிவாய்வியல் முறைமைகள் போன்றவற்றை அனுபவிக்கவும் அவற்றை உரித்தாக்கவும் முடியுமானவர்களாகவும் கருதப்படுகின்றனர். அதேநேரம் மேன்மையற்றவர்களாக கருதப்பட்டவர்கள், மனிதர்களுக்கும் கீழானவர்களாகவும் மனிதரல்லாதவர்களாகவும் கருதப்படுகிறார்கள். அவர்களின் மனிதத்தன்மையின் சாராம்ச இயல்புகள் கேள்விக்குள்ளாக்கப்பட்டு அதன் காரணமாக அவர்களது மனிதத் தன்மை மறுக்கப்படுகிறது (Fanon,1967). விளைவாக அவர்களுக்கான மனித உரிமைகள், அவர்களின் அகநிலைகள், அடையாளங்கள், ஆன்மீகக் கண்ணோட்டங்கள் மற்றும் அவர்களது அறிவாய்வியல் முறைமைகள் ஆகியன மறுக்கப்படுகின்றன.
இனவாதம் பற்றிய மேற்குறித்த வரையறையானது தோலின் நிறத்துடன் தொடர்புடையாதாக மட்டுமன்றி, அது வெளிப்படக்கூடிய பல்வேறு வடிவங்களைப் புரிந்துகொள்ள உதவுகிறது. வெவ்வேறு சமூகங்களுக்கு வெவ்வேறான காலனித்துவ வரலாற்றனுபவங்கள் உள்ளதால் தோலின் நிறம், இனம், மொழி, கலாசாரம் அல்லது மதம் ஆகியவை போன்ற பல்வேறு அளவீடுகளைக் கொண்டதாக இனவாதம் தொழிற்பட முடியும்.
காலனித்துவ காலத்திலிருந்து இனவாதம் செயல்படுவதற்கான பொதுவானதும் பிரபலமானதுமான ஒரு வழிமுறையாக தோலின் நிறம் (Skin Colour) இருந்து வருகின்ற போதிலும், இனவாதமென்பது என்பது தோல் நிறத்தைப் பற்றியதாக மட்டுமே இருப்பதில்லை. பெரும்பாலும் தங்கள் சொந்த நாடுகளில் நேரடியாகக் கண்டுகொள்ளும் இனவாத வடிவங்களை மட்டுமே எல்லா இடங்களிலும் உள்ள ஒரே இனவாத வடிவமாகக் கருத முற்படுவதனால் கோட்பாட்டு மற்றும் நடைமுறை ரீதியான பல சிக்கல்களை இது உருவாக்கி விடுகிறது. உதாரணத்திற்கு இனவாதம் என்பதனை தோல் நிறத்தின் அடிப்படையிலான பாகுபாடு மட்டுமே என்று ஒருவர் கருதுவிடுவதால் பிற சமூகங்களில் இனம், மொழி, கலாசாரம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தொழிற்படும் இனவாத அமைப்புகளை புரிந்து கொள்ள முடியாமல் போகலாம். விளைவாக தங்களுக்குப் பரிச்சயமாகவுள்ள நிற அடிப்படையிலான இனவாதத் தொழிற்பாடுகளைப் போல் அது இல்லை என்ற ஒரே காரணத்திற்காக சில நாடுகளில் இனவாத நடைமுறைகள் இல்லை என்று தவறாக முடிவு செய்துவிட முடியும். காலனித்துவ அனுபவங்களைப் பொறுத்து இனவாதமானது வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு வடிவங்களை எடுக்கக்கூடும் என்பதுடன் இனவாத நடைமுறைகளையும் அதன் வடிவங்களையும் சரியாகப் புரிந்துகொள்ள அதனை ஒரு தேசத்தின் அல்லது சமூகத்தின் அனுபவத்தின் வழியே மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலான ஒரு அனுபவமாகவும் பார்க்க வேண்டியிருக்கிறது.
இனவாதம் என்பது மனிதர்களை மேன்மையானவர் மற்றும் மேன்மையற்றவர் என வகைப்படுத்தும் ஒரு படிநிலையமைப்பு என்ற ரீதியில் அது பல்வேறு வழிகளில் கட்டமைக்கப்பட்டு முன்னிறுத்தப்பட முடியும். ஆபிரிக்க, ஆசிய அல்லது லத்தீன் அமெரிக்கா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் வசிக்கும் மேற்குலக ஆதரவு மேட்டுக்குடியினர், இனக்குழுக்களுக்கு எதிராக இனவாத நடைமுறைகளை தொடர்ந்தும் ஆதரித்து வருவதோடு அதன் காலனிய நீட்சியை தொடர்ந்தும் பின்பற்றி வருகின்றனர். இதில் உள்ளூர் காலனித்துவ வரலாற்றனுபவங்களைப் பொறுத்து மதம், இனம், கலாச்சாரம் அல்லது நிறத்தின் அடிப்படையில் மேன்மையற்ற மக்களாக குறிப்பிட்ட ஒரு சாராரை அடையாளப்படுத்த முடியும்.
அயர்லாந்தின் காலனிய அனுபவத்தைப் பொறுத்தவரை, இனவாதமானது தோலில் நிறத்தினைக் கொண்டு தொழிற்படாமல் மதத்தினை அடிப்படையாகக் கொண்டே பிரிட்டிஷ் காலனித்துவத்தால் கட்டமைக்கப்பட்டிருந்தது (Ignatiev 2008). காலனிய நாடுகளும் காலனித்துவத்திற்கு ஆட்படும் மக்களும் ஒரேவிதமான தோல் நிறத்தைப் பகிர்ந்து கொள்ளும் போது அங்கு இனவாதமானது வேறொரு வடிவத்தில் தொழிற்படத் துவங்குகிறது. அந்தவகையில் புரட்டஸ்தாந்தியருக்கும் கத்தோலிக்கருக்குமிடையே இடம்பெற்ற மோதல்களை சாதாரண மதச் சண்டைகள் என்பதை விடவும் உண்மையில் அவை இனவாதம் தொழிற்பட்ட வேறோரு வடிவமாகவே அமைந்திருந்தது.
அதுபோலவே ஐரோப்பா மற்றும் ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரவலடைந்துள்ள இஸ்லாமோபோபிய நடைமுறைகளையும் இனவாத வடிவங்களின் சமகாலத்திய வடிவமாக புரிந்து கொள்ள முடியும் (Sayyid and Vakil 2011). முஸ்லிம்களின் மத அடையாளம் என்பது மானுட குலத்தில் மேன்மையானவர்களையும் மேன்மையற்றவர்களையும் நிர்ணயிக்கும் ஒரு அளவீட்டுக் காரணியாக இன்றைக்கு கருதப்படுகிறது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்கச் சூழமைவுகளில் முஸ்லிம்கள் அனைவரும், காட்டுமிராண்டிகள், தீவிரவாதிகள், சகிப்புத்தன்மையற்றவர்கள், பிற்போக்கானவர்கள், பெண் ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் ஐரோப்பிய அற மதிப்பீட்டுச் சட்டகங்களுக்குள் பொருந்தி வராதவர்கள் என்றே முன்னிறுத்தப்படுகிறார்கள். இதனாலேயே இனவாதமானது எப்போதும் தோலின் நிறத்தைச் சார்ந்ததாக இருப்பதில்லை எனக் கூறப்படுகிறது. உலகின் வெவ்வேறு பகுதிகளில் மக்கள், தங்களது இனம், மொழி, மதம் அல்லது கலாசாரத்தின் காரணமாக உயர்ந்தவர்களாகவோ அல்லது தாழ்ந்தவர்களாகவோ நடத்தப்பட முடியும்.
மக்கள் தமது உடல் தோற்றங்கள் அல்லது அடையாளங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டு மதிப்பிடப்படும்போது அங்கு இனமயமாக்கல் (Racialization) நிகழ்கிறது. சிலர் உயர்ந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் முத்திரை குத்தப்படுகிறார்கள். இதில் முக்கியமான விடயம் யாதெனில், உயர்ந்தவர்களாகவும் முழுமையான மனிதர்களாகவும் கருதப்படும் மக்கள், ஃபிரான்ஸ் பனான் உள்ளிட்ட ஆபிரிக்க-கரீபியன் பகுதிகளைச் சேர்ந்த கோட்பாட்டாளர்கள் ‘அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலம்’ (zone of being) என்றழைக்கும் இடத்தில் வாழ்வதோடு தாழ்ந்தவர்களாகவும், மனிதத்தன்மை அற்றவர்களாகவும் கருதப்படுபவர்கள் ‘மனிதமற்ற நிலை மண்டலம்’ (zone of non-being) வாழ்வதாகவும் குறிப்பிடுகிறார்கள் (Fanon, 1967, Gordon 2006, Wynter 2003 and Maldonado-Torres 2008).
அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் மனிதமற்ற நிலை மண்டலமும் (Zone of being and zone of non being)
ஏகாதிபத்திய, முதலாளித்துவ, காலனிய உலக அமைப்புக்களில் இனம் என்பது உலகளாவிய மட்டத்தில் வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலை போன்ற பல அதிகார உறவுகளைக் ஊடறுத்துச் செல்லும் ஒரு குறுக்குவெட்டுக் கோடாகவே அமைகிறது எனலாம். ஒடுக்குமுறையின் வெவ்வேறு வடிவங்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதை விளக்க, கறுப்பினப் பெண்ணிய அறிஞர்கள் ”பல்வேறுபட்ட அடையாளங்ளின் இணைச் சார்புத் தன்மை’ (intersectionality) என்ற கருத்தை உருவாக்கினர் (Davis 1983, Crenshaw, 1991). இதேபோன்றதொரு அமைப்பிலேயே ஃபனானின் ‘அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலம்’ (zone of being) மற்றும் ‘மனிதமற்ற நிலை மண்டலம்’ (zone of non-being) ஆகிய இரண்டிலும் ஒடுக்குமுறைகள் நிலவுவதை அவதானிக்க முடியும். தாங்கள் வாழும் மண்டலத்தைப் பொறுத்து அங்கு வாழும் மக்கள் வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் வெவ்வேறு விதங்களில் எதிர்கொள்கிறார்கள். இனம், வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலை ஆகியவை வழியே நிகழும் ஒடுக்குமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலதில் (Zone of being) நிலவும் அதே அமைப்பினைப் போல மனிதமற்ற நிலை மண்டலதில் (Zone of non being) நிலவுவதில்லை. ஏனெனில் இனவாதம் என்பது தனிப்பட்ட ரீதியான தப்பெண்ணங்கள், எதிர்மறை மனப்பான்மைகள் அல்லது கற்பிதங்கள் பற்றியதாக மட்டுமே இருப்பதில்லை. மாறாக இனவாதம் என்பது சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தும் பல்வேறு அமைப்புகளின் வழியே தொழிற்பட முடியுமான கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான ஓர் ஆதிக்க முறைமையாகும்.
அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலதில் (Zone of being)வாழும் இனரீதியாக உயர்ந்தவர்களாக வகைப்படுத்தப்பட்டவர்கள் வறுமை, பாலினப் பாகுபாடு, பால்நிலைப் பாகுபாடு அல்லது காலனித்துவ ஆதிக்கம் போன்ற பிற ஒடுக்குமுறைகளால் அவர்கள் பாதிக்கப்பட்டாலுமே, இனரீதியான ஒடுக்குமுறைகளை அனுபவிப்பவர்களாக அவர்கள் இருப்பதில்லை. பொதுச்சமூகம் அவர்களை ஒரு உயர்ந்த இனக்குழுவின் பகுதியாகக் கருதுவதனால் இனரீதியான சிறப்புரிமைகளை அவர்கள் கொண்டிருப்பதுடன் அதன் வழியே பல்வேறு பயன்களையும் அடைந்து கொள்கிறார்கள். அதனால் அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலதில் Zone of being) உள்ள மக்கள் வர்க்கம், பாலினம், பால்நிலை அல்லது காலனித்துவ அமைப்புக்களின் வழியே ஒடுக்குமுறைகளை அனுபவிக்க நேர்ந்தாலும் இனரீதியான சிறப்புரிமைகளை அனுபவிக்கும் தரப்பினராக அவர்கள் இருப்பதனால் அவர்கள் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகள் அவ்வளவு வீரியம் கொண்டதாக இருப்பதில்லை என்பதுடன் அவற்றை அவர்களால் இலகுவில் கடந்து செல்லவும் முடியும். ஆனால் மனிதமற்ற நிலை மண்டலதில் (Zone of non being) உள்ள மக்கள் இனரீதியாகத் தாழ்ந்தவர்களாகக் கட்டமைக்கப்பட்டு இனரீதியான சிறப்புரிமைகளை அனுபவிக்க முடியாதவர்களாக இருப்பதால் ஒரே நேரத்தில் இனரீதியான ஒடுக்குமுறைகளையும் வர்க்கம், பாலினம், பால்நிலை மற்றும் காலனித்துவ அமைப்புக்களின் ஒடுக்குமுறைகளையும் சந்திக்க நேரிடுகிறது. அதாவது, மனிதமற்ற நிலை மண்டலதில் (Zone of non being) பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள் ஒரேநேரத்தில் கூட்டாக நிகழ்த்தப்படுவதால், இருப்பு மண்டலத்தில் (Zone of being) நிலவும் ஒடுக்குமுறைகள் தொடர்பான அனுபவங்களில் இருந்து முற்றிலும் வேறுபட்ட அமைப்பிலேயே அவற்றை அணுக வேண்டியதாக உள்ளது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இருப்பின்மை மண்டலத்தில் (Zone of non being) வாழும் மக்கள், அவர்கள் ஏற்கெனவே அனுபவிக்கும் ஒடுக்குமுறைகளை மேலும் உக்கிரப்படுத்துவதில் இனவாத நடைமுறைகள் மிக முக்கியமான பாத்திரத்தை வகிக்கின்றன எனக் குறிப்பிட முடியும் (Grosfoguel 2011). முதலாளித்துவம், ஆணாதிக்கம், மேற்குலக ஆதிக்கம், கிறிஸ்தவ மற்றும் காலனியம் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டுள்ள நவீன உலக அமைப்பிற்குள் இனம், வர்க்கம், பாலினம், பால்நிலை மற்றும் காலனியாதிக்க நீட்சி போன்ற பல்வேறு வகையான ஒடுக்குமுறைகள், அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்துடன் (Zone of being) ஒப்பிடும்போது மனிதமற்ற நிலை மண்டலதில் (Zone of non being) இன்னும் தீவிரமாக அனுபவிக்கப்படுவது இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமாகும் (Grosfoguel 2011).
அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) இருப்பின்மை மண்டலமும் (Zone of non being) ஒரேவிதமான அமைப்பில் இருப்பதில்லை. இரு பகுதிகளும் வெவ்வேறான அமைப்புக்களிலேயே தொழிற்படுகின்றன. ஃபனானின் (1967) வார்த்தைகளில் கூறுவதானால், ஹெகலிய பரிபாஷையில் இரு மண்டலங்களிலும் நிலவும் முரண்பாடுகள் ‘நான்’ எதிர் ‘மற்றவர்’ என்றவாறு மற்றைமைகளுக்கு எதிரான மனப்பான்மைகளாகவே தொழிற்படுகின்றன எனலாம். ‘நான்’ எதிர் ‘மற்றவர்’ என்பவற்றுக்கு இடையிலான உறவைப் பொறுத்தவரை அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலங்களில் (Zone of being) குறிப்பிட்ட இரு தரப்பினரும் ஒருவர் மற்றவரின் மனிதத் தன்மையை ஏற்றுக்கொண்டு செய்யப்படுவதால் அங்கு இடம்பெறும் ஒடுக்குமுறைகள் இனமயப்படுத்தப்பட்ட ஒன்றாக இருப்பதில்லை. இன்றைய நவீன ஏகாதிபத்திய, முதலாளித்துவ, ஆணாதிக்க உலக ஒழுங்கில், ஆதிக்கம் செலுத்தும் தரப்பாகவுள்ள ‘நான்’ என்பது பொதுவாக மேற்கத்தியமயமாக்கப்பட்ட, எதிர்பாலின ஈர்ப்புடைய, ஆண் மேட்டுக்குடி வர்க்கதினராலேயே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.
ஃபனானைப் பொறுத்தவரை, ஹெகலிய பரிபாஷையில் “மற்றவர் (Other)” எனப்படுவது, மேற்கத்திய நாடுகளில் உள்ள மக்களையோ அல்லது ஏழ்மை நாடுகளில் வசிக்கும் மேற்குமயப்பட்ட மக்களையோ குறிப்பதோடு அவர்களின் மனிதத்தன்மை என்பது பொதுவாக அங்கீகரிக்கப்பட்டதாகவும் உள்ளது. என்றபோதிலும், அவர்களும் கூட “நான்” என்ற அதிகாரத்தின் கீழ் உள்ள தேசிய, காலனியாதிக்க அடிப்படையில் வர்க்கம், பாலியல் மற்றும் பால்நிலை ரீதியாக பல்வேறு ஒடுக்குமுறைகளை அனுபவிக்க முடியும். இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் யாதெனில் அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) மனிதமற்ற நிலை மண்டலமும் (Zone of non being) உண்மையில் பௌதீகத் தோற்றம் கொண்ட நிலைத்த புவியியல் எல்லைகள் அல்ல. அவை உலகளாவிய இனவாத அமைப்புகளை விளக்குவதற்காகப் பயன்படும் இரு எண்ணக்கருக்களாகும். குறிப்பிட்ட இத்தகைய இனவாதக் கட்டமைப்புக்கள், செல்வந்த மற்றும் ஏழ்மை நாடுகளுக்கு இடையே மட்டுமன்றி நாடுகளுக்கு உள்ளதாகவும் செயல்பட்டு பல்வேறு குழுக்களை விளிம்பு நிலைக்குத்தள்ளி ஓரங்கட்டி விடுகின்றன.
அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) மனிதமற்ற நிலை மண்டலமும் (Zone of non being) மேற்குமயப்பட்ட மற்றும் மேற்குமயப்படாத மையங்கள் ஆகிய இரண்டிலும் நிலவுவதால் அது உலகளாவிய காலனித்துவம் என்று அழைக்கப்படுகிறது. என்றபோதிலும் இத்தகைய மண்டலங்கள் நாடுகளுக்குள்ளும் நிலவுகின்றன. உதாரணமாக பல சக்திவாய்ந்த மேற்கத்திய நாடுகளில் விளிம்புநிலைச் சமூகங்கள், உள்நாட்டு இனவாத ஒடுக்குமுறைகள் மற்றும் காலனியாதிக்கத்தின் எச்சங்களின் நீட்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) வாழ்கின்றன. எனவேதான் மனிதமற்ற நிலை (Zone of non being) என்பது நாடுகளுக்கு இடையில் மட்டும் காணப்படுவதில்லை எனக் கூறப்படுகிறது. சில குழுக்கள் தாழ்வாக நடத்தப்பட்டு, ஒதுக்கி வைக்கப்படும் நிலை நாடுகளுக்குள்ளாகவும் நிலவுவதைக் கண்டுகொள்ள முடியும். இவற்றினைப் புரிந்து கொள்வதன் வழியே அடக்குமுறைகளின் பௌதீக யதார்த்தத்துடன் தொடர்புடைய வகையில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகள் மூலம் மக்களின் வாழ்வில் அதிகாரமும் சமத்துவமின்மையும் உண்மையில் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை இதனூடாகப் புரிந்து கொள்ள முடியும் (Boaventura de Sousa Santos, 2010). சில குழுக்கள் சிறப்புரிமையையும் அங்கீகாரத்தையும் அனுபவிக்கின்ற அதேவேளை மற்றவர்கள் புறக்கணிப்பையும் ஆதிக்கத்தையும் எதிர்கொள்ளும் வகையில் நிறுவப்பட்டுள்ள குறித்த அமைப்புக்கள் வெறும் கருத்துருவாக்கமாக மாத்திரம் இருப்பதில்லை. அவை மக்களின் அன்றாட வாழ்வியல் நிலைமைகளையும் அவர்களுக்கான வாய்ப்புகளையும் வெகுவாக பாதிக்கின்றன.
ஃபனானும், போவென்ச்சுரா டி சௌஸா சான்டோஸூம்
போவென்ச்சுரா டி சூசா சாண்டோஸின் பிரகாரம், நவீனத்துவமானது உலகை ஒரு ஆழமான குறுக்குப் பாதாளக் கோட்டினால் (abyssal) பிரித்தது எனவும் அது, கோட்டிற்கு மேலே வாழும் மக்களையும் கோட்டிற்குக் கீழே வாழும் மக்களையும் வெவ்வேறு விதங்களில் அணுகுகிறது எனவும் விளக்குகிறார். மிக ஆழமாக வரையப்பட்ட இப்பாதாளக் கோடானது, சட்டங்களால் ஆளப்பட முடியும் என அங்கீகரிக்கப்பட்ட பகுதிகள் எனவும், வன்முறையும் பலவந்தமான ஆதிக்கமும் செலுத்தப்பட அனுமதிக்கப்படும் பகுதிகள் எனவும் உலகை இரண்டாகப் பிரிப்பதாக அவர் மேலும் வாதிடுகிறார். இதில் சட்டத்தால் ஆளப்பட முடியுமான பகுதிகளாக ஐரோப்பியப் பேரரசுகள் உள்ளிட்ட இன ரீதியாக உயர் அந்தஸ்த்தினை வகிப்பவர்களாகக் கருதப்பட்ட மக்கள் வாழ்ந்த பகுதிகள் கருதப்பட்ட அதேவேளை, கோட்டிற்குக் கீழே இருந்த பகுதிகள் காலனித்துவப் பிரதேசங்களாக இருந்ததுடன் அங்கு வன்முறைகளே பிரயோகிக்கப்பட்டன. இந்தக் கருத்தை விளக்குவதற்காக, டி சூசா சாண்டோஸ் (Boaventura de Sousa Santos), போர்த்துக்கேய மற்றும் ஸ்பானியப் பேரரசுகளுக்கு இடையே 1494 களில் ஏற்பட்ட டோர்டெசில்லாஸ் (Tordesillas) உடன்படிக்கையைக் கவனத்தில் கொள்கிறார். அமெரிக்காவில் தாங்கள் உரிமை கோரிய புதிய நிலங்கள் தொடர்பாக ஸ்பெயினுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையே இருந்த கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. புதிய காலனியப் பிரதேசங்களை இரு பேரரசுகளுக்கும் இடையே பிரித்து, எந்தெந்த நிலங்கள் அவற்றுள் ஒவ்வொன்றிற்கும் சொந்தமானவை என்பதையும் தீர்மானிக்கும் பணியை குறித்த ஒப்பந்தம் நிறைவேற்றியது.
டி சூசா சாண்டோஸின் (De Sousa Santos) பாதாளக் கோட்டுக் கோட்பாட்டினை ஃபனானின் இரு வலயக் கோட்பாட்டுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அந்தப் பாதாளக் கோட்டிற்கு மேலே வாழ்பவர்களை அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தில் (Zone of being) வாழ்வதாகவும், கோட்டிற்குக் கீழே வாழ்பவர்களை மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) வாழ்வதாகவும் கருதலாம். இந்த ஒப்பீட்டின் வழியே டி சூசா சாண்டோஸ் மற்றும் ஃபனானின் கருத்துக்களை இணைத்துப் புரிந்து கொள்ள முடியும். மட்டுமன்றி நாம் எதிர்கொண்டுள்ள முதலாளித்துவ, ஏகாதிபத்திய, ஆணாதிக்க, இனவாத மற்றும் காலனிய உலக அமைப்பு பற்றிய மிக ஆழமான புரிதலையும் அதனூடாகப் பெற்றுக்கொள்ள முடியும். உண்மையில் இந்த இரண்டு மண்டலங்களுக்கு இடையிலான வேறுபாடு, இனப் படிநிலைகளுக்குள் அதிகாரமும் ஆதிக்கமும் செயல்படும் வழிமுறைகளுடன் நெருக்கமான தொடர்புடையது. டி சூசா சாண்டோஸின் (2006) பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தில் (Zone of being) அதாவது பாதாளக் கோட்டிற்கு மேலே) ஏற்படும் மோதல்களும் முரண்பாடுகளும் பொதுவாக சட்ட ஒழுங்குமுறைகள் மூலம் கையாளப்படுகின்றன. மோதல்களையும் சச்சரவுகளலயும் தீர்க்க உதவும் சட்டங்கள், உரிமை சார்ந்த ஏற்பாடுகள், நிறுவனங்கள், சீர்திருத்தங்கள் மற்றும் அரசியல் போராட்டங்களை மக்களால் அங்கு மேற்கொள்ள முடியும்.
இதையே கொஞ்சம் விரிவாகச் சொல்வதெனில் குடிமை உரிமைகள், மனித உரிமைகள், பெண்கள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சட்டப் பாதுகாப்பு ஏற்பாடுள், அரசியல் பங்கேற்பு மற்றும் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புகள் போன்றவற்றைக் குறிப்பிட முடியும். அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்திற்குள் (Zone of being) ஆதிக்கம் செலுத்தும் தரப்பாகவுள்ள ‘நான் (I) ‘ க்கு எதிரான போராட்டங்களில் ஒடுக்கப்பட்ட ‘மற்றவர்களுக்கு (others)’ மேற்குறிப்பிட்ட அம்சங்கள் கிடைத்து விடுகின்றன. அத்தோடு சுதந்திரம், தன்னாட்சி மற்றும் சமத்துவம் போன்ற கருத்துக்கள், நிறுவனமயப்பட்டு சட்ட ஏற்பாடுகளுடன் இணைந்த வகையில் அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தில் (Zone of being) நிலவும் மோதல்களையும் முரண்பாடுகளையும் நிர்வகிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தில் (Zone of being) ஆதிக்கம் செலுத்தும் ‘நான் (I)’, ஒடுக்கப்பட்ட ‘மற்றவர்களின் (Others)’ மனிதத்தன்மையை அங்கீகரிப்பதனால் வர்க்கம், பாலினம், பால்நிலை ரீதியாகவோ அல்லது தேசிய மற்றும் காலனிய நீட்சியின் அடிப்படையாகவோ ஒடுக்குமுறைகளை அனுபவிக்கும் மக்கள் இனரீதியான சிறப்புரிமையிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு பயனடைந்து விடுகிறார்கள். இதன் விளைவாக, அவர்களின் போராட்டங்கள் தீவிர வன்முறையின் மூலம் அல்லாமல் சட்ட ஒழுங்குகளின் வழியே தீர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. அதுமட்டுமின்றி பொதுவாக அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தினுள் (Zone of being) ஏற்படும் மோதல்கள் யாவும் சட்டங்கள், பேச்சுவார்த்தைகள், சீர்திருத்தங்கள், நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் நடவடிக்கைகள் போன்ற வன்முறையற்ற முறைகள் மூலம் இலகுவாக நிர்வகிக்கப்படுகின்றன. குறித்த மண்டலத்தில் ஏற்படும் மோதல்களை தீர்ப்பதற்கான வழிமுறையாக வன்முறைகள் நிகழ்ந்தாலுமே அது ஒரு விதிவிலக்கான அம்சமாகவே கருதப்படுவதோடு மோதல்களைக் கையாள்வதற்காக எப்போதுமுள்ள ஒரு வழிமுறையாக அது கருதப்படுவதில்லை.
இதற்கு மாறாக, மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) அதாவது பாதாளக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் மனித்தன்மையற்றவர்களாகக் கருதப்பட்டு அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய எந்தவிதமான சிறப்புரிமைகளும் வழங்கப்படாமல் விளிம்பில் வைக்கப்படுகின்றனர். அவர்களது மனிதத் தன்மை அங்கீகரிக்கப்படாததால், ஆதிக்க சக்திகளும் நிறுவனங்களும் அங்கு இடம்பெறும் மோதல்களை வன்முறை, கட்டுப்பாடு மற்றும் அபகரிப்பு (மக்களின் நிலம், வளங்கள், உரிமைகள் அல்லது வாய்ப்புகளைப் பறித்தல்) நடவடிக்கைகளின் ஊடாகவே மூலம் கையாளுகின்றன. மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) ஏற்படும் மோதல்கள் தொடர்ச்சியான வன்முறை மற்றும் வற்புறுத்தல்கள் மூலம் கையாளப்படுவது அங்கு இயல்பாக்கம் செய்யப்பட்டுள்ளது. மிக அரிதான அல்லது விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே உரிமைகள், சட்டப் பாதுகாப்புகள், பேச்சுவார்த்தைகள் போன்ற முறைமைகள் அங்கு பயன்படுத்தப்படுகின்றன. இது அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தில் (Zone of being) நடப்பதற்கு நேர்மாறானதாகும். அங்கு மோதல்கள் பொதுவாக சட்டங்கள், உரிமைகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் கையாளப்படுகின்ற அதேவேளை வன்முறைதளின் பிரயோகம் என்பது அங்கு எப்போதும் விதிவிலக்கான அம்சமாகவே கருதப்படுகிறது. இவ்வாறு மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) நிகழ்த்தப்படும் இனவாத வன்முறைகளும் உடைமைப் பறிப்புக்களும் மக்களின் வர்க்க, பாலின மற்றும் பால்நிலை சார்ந்த ஒடுக்குமுறை அனுபவங்களை மேலும் கடுமையாக்கி விடுகின்றன. ஏற்கனவே நிலவி வரும் ஒடுக்குமுறைகளுடன் இனவாதமும் சேர்ந்து விடுவலால் பிரச்சினை மேலும் கூர்மையடைந்து தீவிரமடைந்தும் விடுகிறது.
மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) உள்ள மக்களின் மனிதத் தன்மை அங்கீகரிக்கப்படாததால், அவர்கள் மனிதரல்லாதவர்களாகவும் மனிதத்தன்மையற்றவர்களாகவுமே நடத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக, அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய மனித உரிமைகள், மரியாதை மற்றும் சட்டப் பாதுகாப்பு ஆகியன தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருகின்றன. இதனால் அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தினுள் (Zone of being) என்றுமே ஏற்றுக்கொள்ளப்படாததும் அமுலாகாததுமான வழிமுறைகளாகவுள்ள வன்முறைகள், பாலியல் வன்கொடுமைகள், மற்றும் நில வளங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்களை அபகரித்தல் போன்ற செயல்கள் அவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படலாம் என்பதோடு அவை இயல்பாக்கமும் செய்யப்படலாம். இது தொடர்பாக மேலும் எழுதிச் செல்லும் டி சூசா சாண்டோஸின் (De Sousa Santos) கூற்றுப்படி, அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) மனிதமற்ற நிலை மண்டலமும் (Zone of non being) ஒன்றையொன்று சார்ந்துள்ளதுடன் அவை இரண்டும் நவீனத்துவ, காலனிய அமைப்புக்களின் ஒரு பகுதியாகவும் உள்ளன எனக் குறிப்பிட்டுச் செல்கிறார். ஃபனானின் பிரகாரம், அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) “நான் (I)” மற்றும் “மற்றவர் (Others)” ஆகியோருக்கு இடையேயான பரஸ்பர அங்கீகார உறவு நிலவுவலுடன் இது இரு தரப்பினரும் மனிதர்களாக அங்கீகரிக்கப்படுவதன் விளைவாகவே நிகழ்கிறது எனவும் விளக்குகிறார். ஆனால் மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) “மற்றவரின் (others)” மனிதத் தன்மையானது அங்கீகரிக்கப்படாததால் அத்தகைய எந்தவொரு உறவையும் அங்கு கண்டு கொள்ள முடிவதில்லை. டி சூசா சாண்டோஸா (De Sousa Santos) குறிப்பிடுவது போல இத்தகைய நிலையானது வன்முறைகள், புறக்கணிப்பு மற்றும் ஆதிக்கம் போன்ற விளைவுகளை மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) அது ஏற்படுத்தி விடுகிறது.
சுருக்கமாகக் கூறினால் அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலத்தைப் (Zone of being) பொறுத்தவரை அங்கு மோதல்கள் பொதுவாக சட்டங்கள் மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலமே கையாளப்படுவதுடன் மிகவும் அரிதஙசூழ்நிலைகளில் மட்டுமே வன்முறைகள் பிரயோகிக்கப்படுகின்றன. ஆனால் மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being), இதற்கு நேர்மாறான விதத்தில் மோதல்களும் முரண்பாடுகளும் வன்முறை நடவடிக்கைகள் ஊடாகவே கையாளப்படுகின்றன. அதே சமயம் சட்ட ஒழுங்கு நடைமுறைகள் மூலம் மோதல் மற்றும் முரண்பாடுகளைக் கட்டுப்படுத்தல் என்பது அரிதானதாகவும் விதிவிலக்கானதாகவுமே இருக்கிறது. எனவே, வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலை சார்ந்த ஒடுக்குமுறைகள் போன்றன இந்த இரண்டு மண்டலங்களிலும் ஒரே மாதிரியாக அனுபவிக்கப்படுவதில்லை. அதாவது அங்கீகரிக்கப்பட்ட மனித நிலை மண்டலமும் (Zone of being) வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலையுடன் தொடர்பான மோதல்கள் இன ரீதியான மோதல்களாக தொழிற்படுவதில்லை. ஏனெனில் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகும் “மற்றவர் (Others)” இன்னமும் மனிதத் தன்மை உள்ளவராக அங்கீகரிக்கப்படுவதால், அவர்களுக்கான சட்ட உரிமைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், சுதந்திரம் மற்றும் சமத்துவம் பற்றிய கருத்துக்கள் போன்றன மோதல்களைத் தீர்ப்பதற்கான வழிமுறைகளாகக் கையாளப்படுகின்றன.
இதற்கு மாறாக, மனிதமற்ற நிலை மண்டலத்தில் (Zone of non being) வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலை சார்ந்த ஒடுக்குமுறைகள் இனவாதத்துடன் மிக நெருக்கமாகப் பிணைக்கப்பினைக் கொண்டுள்ளன. ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகுபவர்களின் மனிதத்தன்மை முழுமையாக அங்கீகரிக்கப்படாததால் அங்கு இடம்பெறும் மோதல்கள் அனைத்தும் பெரும்பாலும் வன்முறை, பலவந்தம், நிலவளங்கள் மற்றும் ஏனைய வாய்ப்புகளைப் பறித்தல் ஆகியவற்றின் மூலமே கையாளப்படுகின்றன. இதன் விளைவாக, வர்க்கம், பாலினம் மற்றும் பால்நிலை சார்ந்த ஒடுக்குமுறைகள் இன ஒடுக்குமுறையுடன் இணைக்கப்பட்டு அவை மேலும் தீவிரப்படுத்தப்படுகின்றன.
உசாத்துணைகள்:
Crenshaw, K., 1991. Mapping the margins: Intersectionality, identity politics, and violence against women of color. Stanford Law Review, 43 (6), 1241-1279.
Davis, A., 1983. Women, Race and Class. New York: Vintage.
De Sousa Santos, B., 2006. Renovar la teoría crítica y reinventar la emancipación social (encuentros en Buenos Aires). Buenos Aires: CLACSO.
__. Beyond abyssal thinking: From global lines to ecologies of knowledges. Review, 30 (1), 45-89.
__. 2010. Epistemologias del Sur. Mexico: Siglo XXI.
Fanon, F., 1967. Black skin, white masks. New York: Grove Press.
Gordon, L.R., 2006. African-American philosophy, race, and the geography of reason. In: L.R. Gordon and J.A. Gordon, eds. Not only the master’s tools: African-American studies in theory and practice. Boulder and London: Paradigm, 3-50.
Grosfoguel, R., 2011. Decolonizing post-colonial studies and paradigms of political-economy: Transmodernity, decolonial thinking and global coloniality. Transmodernity: Journal of Peripheral Cultural Production of the Luso-Hispanic World. 1 (1), 1-38.
Maldonado-Torres, N., 2008. Against War. Durham: Duke University Press.
Wynter, S., 2003. Unsettling the coloniality of being/power/truth/freedom: Towards the human, after man, its overrepresentation–an argument. CR: The New Centennial Review, 3 (3), 257-337.
றொமான் கிராஸ்போகுல் (Ramón Grosfoguel) போர்ட்டோ ரிகோவை (Puerto Rico) பிறப்பிடமாகக் கொண்ட சமூகக் கோட்பாட்டாளரும், காலனிய நீக்கச் சிந்தனை (decolonial thought) மரபின் முன்னணி அறிஞர்களில் ஒருவரும் ஆவார். லத்தின் அமெரிக்காவில் உருவாகிய காலனித்துவம்–நவீனத்துவம் (coloniality–modernity) தொடர்பான அறிவுசார் உரையாடல்களில் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். அவரது ஆய்வுகள் காலனித்துவத்தின் தொடர்ச்சியான தாக்கங்கள், நவீனத்துவம் உருவாக்கிய அறிவியல் மற்றும் அறிவு உருவாக்க முறைகள், அதிகாரக் கட்டமைப்புகள், இனமயமாக்கல் (racialization), முதலாளித்துவ உலக அமைப்பு ஆகியவற்றின் பரஸ்பரத் தொடர்புகளை மையமாகக் கொண்டுள்ளன.
கிராஸ்போகுலின் ஆய்வுகள், காலனித்துவம் அரசியல் ஆட்சியின் முடிவோடு நிறைவடைவதில்லை; மாறாக, அது அறிவு, அதிகாரம், பொருளாதாரம் மற்றும் சமூக உறவுகளின் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து செயல்படுகிறது என்ற வாதத்தை வலியுறுத்துகின்றன. அவரது முக்கியமான படைப்புகளான Colonial Subjects, Decolonizing Post-Colonial Studies, மற்றும் The Modern/Colonial/Capitalist World-System in the Twentieth Century: Global Processes, Antisystemic Movements, and the Geopolitics of Knowledge ஆகியவை முதலில் ஸ்பானிய மொழியில் எழுதப்பட்டு பின்னர் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டன. இந்நூல்கள் காலனிய நீக்கக் கோட்பாடு, உலக அமைப்பு ஆய்வுகள், மற்றும் அறிவின் புவிசார் அரசியல் (geopolitics of knowledge) தொடர்பான சமகால விவாதங்களில் முக்கியமான பங்களிப்புகளாகக் கருதப்படுகின்றன.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்