– சுஸன் அபுல்ஹவா

நாஸி ஜேர்மனி ‘நியூரம்பெர்க் இனச் சட்டங்களை’ (Nuremberg Race Laws) இயற்றி 80 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில், இஸ்ரேலியச் சட்டமன்ற உறுப்பினர்கள் “தேசிய-அரசுச் சட்டம்” (Nation-State Law) என அழைக்கப்படும் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். இதன் மூலம், அவர்கள் அடிப்படையில் “யூத மேலாதிக்கத்தை” (Jewish supremacy) சட்டபூர்வமாக்கியுள்ளனர். இது, ஜெர்மானியக் குடிமக்களை இன-மத அடிப்படையில் பிளவுபடுத்திய  (Ethnoreligious stratification) நாஸி காலத்துச் சட்டங்களை அப்பட்டமாகப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இஸ்ரேலின் “தேசிய-அரசுச் சட்டத்தின்” முதல் உறுப்புரை, “இஸ்ரேல் தேசத்தில், தேசிய சுயநிர்ணய உரிமையை (Right of national self-determination) நடைமுறைப்படுத்துவது யூத மக்களுக்கு மட்டுமே உரித்தானதாகும்” எனத் திட்டவட்டமாகக் குறிப்பிடுகிறது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், 1948-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூதர்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பலஸ்தீனின் பகுதிகளைக் கைப்பற்றியபோது, எப்படியோ தங்களது வீடுகளிலேயே  தங்கிவிட்ட பூர்வீகக் குடிகளான 1.7 மில்லியன் பலஸ்தீன இஸ்ரேலியக் குடிமக்கள், எந்தவிதமான இறையாண்மையோ அல்லது சுய அதிகாரமோ இன்றி, எப்போதும் இஸ்ரேலிய யூதர்களின் தயவிலேயே வாழ வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுவார்கள்.

இதேபோன்று, நியூரம்பெர்க் சட்டங்களில் முதலாவதான ‘ரெய்க் குடியுரிமைச் சட்டம்’ (Reich Citizenship Law), குடியுரிமை என்பதை “ஜெர்மனிய அல்லது அதன் இரத்தத் தொடர்பு கொண்ட” மக்களுக்கு மட்டுமே உரித்தான ஒரு தனிச்சலுகையாக அறிவித்தது. எஞ்சியவர்கள் எவ்விதக் குடியுரிமையுமின்றி, வெறும் அரசின் ஆளுகைக்கு உட்பட்டவர்களாக வகைப்படுத்தப்பட்டனர்.

ஜெர்மனியச் சமூகத்தின் பிற பிரிவினரிடமிருந்து யூத ஜெர்மனியர்களை வேறுபடுத்தி அறிய அறிவியல் பூர்வமான உறுதியான வழிகள் எதுவும் இல்லாததால், ஒருவரின் யூத அடையாளத்தைத் தீர்மானிக்கச் சட்டமியற்றுபவர்கள் மக்களின் மூதாதையர் வரலாற்றை  அடிப்படையாகக் கொண்டனர். ஒரு நபர் தன்னை யூதராக அடையாளப்படுத்திக் கொண்டாரா? அல்லது அவர் யூத மதச் சமூகத்தைச் சேர்ந்தவரா? என்பதைப் பொருட்படுத்தாமல், மூன்று அல்லது நான்கு யூத மூதாதையர்களைக்  கொண்ட யாதொருவரும் யூதராகவே வரையறுக்கப்பட்டனர்

இஸ்ரேலின் பூர்வீகப் பாலஸ்தீனக் குடிமக்களின் மூதாதையரை அவ்வாறு தேட வேண்டிய அவசியம் ஏற்படாது. ஏனெனில், 1948-ல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்தே, யூதரல்லாதவர்கள் பிரதான யூதச் சமூகத்துடன் இரண்டறக் கலந்துவிடக் கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாகப் பல நெறிமுறைகளை அது நடைமுறைப்படுத்தியுள்ளது

இது இரண்டாவது நியூரம்பெர்க் சட்டத்திற்கு நம்மைக் கொண்டு செல்கிறது: ‘ஜெர்மானிய இரத்தம் மற்றும் ஜெர்மானியக் கௌரவத்தைப் பாதுகாப்பதற்கான சட்டம்’. இது ஆரிய இரத்தம் மற்றவர்களுடன் கலக்கப்படுவதைத் தடுக்க முற்பட்டதுடன், அவ்வாறு கலப்பது “இனத் தீட்டு” (Race defilement) எனவும் முத்திரை குத்தப்பட்டது.
புதிய “தேசிய-அரசுச் சட்டத்தில்” இந்த “இனத் தீட்டு” என்பதைப் பற்றி நேரடியாகக் குறிப்பிடப்படாமல் இருக்கலாம். ஆனால், இஸ்ரேலில், பாரம்பரிய விழுமியங்களைப் பாதுகாக்கும் சட்டங்கள் என்ற போர்வையில், ‘இனக்கலப்புத் தடைச் சட்டங்கள்’ (Anti-miscegenation laws) ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. அங்குத் திருமணங்களை மத அதிகாரிகளால் மட்டுமே நடத்தி வைக்க முடியும்; மேலும், யூதத் திருமணங்கள் மீது (Orthodox rabbinate – பழைமைவாத யூத மதகுருமார்கள் அமைப்பு) மட்டுமே பிரத்தியேக அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இஸ்ரேலுக்குள் வெவ்வேறு மதத்தினருக்கு இடையிலான திருமணங்கள், சட்டத்தால் கடுமையாகத் தடைசெய்யப்பட்டுள்ளன.

கருப்பு, சிவப்பு மற்றும் வெள்ளை ஆகியவற்றை ஜெர்மனியின் தேசிய நிறங்களாகவும், ஸ்வஸ்திகா கொடியைப் புதிய தேசியக் கொடியாகவும் பிரகடனப்படுத்திய ‘ரெய்க் கொடிச் சட்டம்’ (Reich Flag Law), நியூரம்பெர்க் சட்டங்களின் ஒரு பகுதியாகவே இருந்தது.

தேசியச் சின்னங்கள் குறித்த இஸ்ரேலின் “தேசிய-அரசுச் சட்டத்தின்” இரண்டாவது பிரிவு, “அரசின் கொடியானது வெள்ளை நிறப் பின்னணியையும், விளிம்புகளுக்கு அருகே இரண்டு நீல நிறக் கோடுகளையும், மையத்தில் நீல நிறத்திலான ‘டேவிட் நட்சத்திரத்தையும்’ (Star of David) கொண்டிருக்கும்” என இதேபோன்று குறிப்பிடுகிறது. இச்சட்டம் நிறைவேற்றப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஆக்கிரமிக்கப்பட்ட ஜெருஸலமில்  உள்ள அல் அக்சா  பாலஸ்தீனக் கொடியை ஏந்தியிருந்ததற்காக, ஒரு பாலஸ்தீனச் சிறுவனை இஸ்ரேலியக் காவல்துறையினரும் ராணுவ வீரர்களும் கைது செய்தனர்.

புதிய தேசிய-அரசுச் சட்டத்தின் மூன்றாவது பிரிவு, ஒட்டுமொத்த ஜெருசலமையும் தனது தலைநகரம் என்ற இஸ்ரேலின் முறைகேடான உரிமை கோரலை (Illegitimate claim) மீண்டும் வலியுறுத்துகிறது. சட்டவிரோதமானதும் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்படாததுமான இந்த உரிமை கோரலானது, அமெரிக்கத் தூதரகத்தை டெல் அவிவிலிருந்து ஜெருசலமுக்கு மாற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் சர்ச்சைக்குரிய முடிவால் மேலும் ஊக்கமடைந்துள்ளது.
இருப்பினும், சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், இந்தப் புதிய சட்டம் நாட்டின் எல்லைகளை வரையறுக்கவில்லை; அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட எல்லைகள் (Declared borders) இல்லாத உலகின் ஒரே நாடாக இஸ்ரேல் இன்றும் தொடர்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஏனெனில், 1948-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேல் இணைத்துக்கொள்ளப்பட்டதானது, 1948 போர் நிறுத்தக் கோட்டிற்குள் (1948 Armistice line) உள்ள பகுதிகளின் மீதான அவர்களின் உரிமை கோரலின் அடிப்படையில் மட்டுமே அமைந்திருந்தது (இதில் ஜெருசலமோ அல்லது மேற்குக் கரையின் வேறு எந்தப் பகுதியோ அடங்காது) என்றபோதிலும், இஸ்ரேல் தொடர்ந்து விரிவடைந்து வரும் ஒரு ‘குடியேற்ற-காலனித்துவ அரசாகவே’ (Settler-colonial state) செயல்பட்டு வருகிறது.

இந்தப் புதிய சட்டம், அந்த நிலப்பரப்பிலிருந்து அரபு மொழியைத் துடைத்தெறிவதற்கான தொடக்கமாகவும் அமைகிறது. ஏனெனில், அரபு மொழிக்கு வெறும் “சிறப்பு அந்தஸ்து” (Special status) மட்டுமே வழங்கிவிட்டு, அரசின் ஒரே அதிகாரப்பூர்வ மொழியாக ஹீப்ரு மொழியை இச்சட்டம் பிரகடனப்படுத்துகிறது. அரசு நிறுவனங்களில் “அரபு மொழியின்” பயன்பாடானது சட்டத்தின் மூலம் இயற்றப்படும் என இதன் நான்காவது பிரிவு மேலும் விளக்குகிறது.

இஸ்ரேலியக் குடியுரிமை இல்லாத, காஸா மற்றும் மேற்குக் கரையில் வாழும் 4.5 மில்லியன் பூர்வீகப் பாலஸ்தீனர்களின் தலைவிதியை, இத்தேசிய-அரசுச் சட்டத்தின் ஏழாவது பிரிவு இவ்வாறு கோடிட்டுக் காட்டுகிறது: “யூதக் குடியேற்றங்களை (Jewish settlement) ஒரு தேசிய விழுமியமாக அரசு கருதுகிறது; மேலும், அவற்றை உருவாக்குவதையும் மேம்படுத்துவதையும் ஊக்குவிக்க அரசு பாடுபடும்.”

சுருக்கமாகச் சொல்வதானால், ஒஸ்லோ ஒப்பந்தங்களின் படி (Oslo Accords) எங்கு ஒரு பலஸ்தீன அரசு அமையவிருந்ததோ, அதே அபகரிக்கப்பட்ட பலஸ்தீன நிலங்களில் ‘யூதர்களுக்கு மட்டுமேயான குடியிருப்புகளை’ அமைக்கும் பணிகளை இஸ்ரேல் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளும். இந்த அதிகரித்த குடியேற்ற நடவடிக்கைகளானது, பலஸ்தீனர்களை வெளியேற்றிவிட்டு அவர்களுக்குப் பதிலாக வெளியிலிருந்து கொண்டுவரப்படும் யூதர்களைக் குடியேற்றும் இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகளை மேலும் துரிதப்படுத்தும் என்றே நாம் எதிர்பார்க்கலாம். பூர்வீகப் பலஸ்தீனக் குடிகளைத் திட்டமிட்டு நிலங்களை விட்டு விரட்டுதல் (Dispossession), விளிம்புநிலைக்குத் தள்ளுதல் (Marginalisation), குறுகிய பகுதிகளுக்குள் முடக்குதல் (Ghettoisation) மற்றும் அவர்களின் வளங்களைச் சூறையாடுதல் ஆகியவற்றின் மூலமாகவே இந்தச் செயல்முறை நிறைவேற்றப்படுகிறது என்பதைக் கடந்த பல தசாப்த காலக் குடியேற்றக் கட்டுமான வரலாற்றிலிருந்து நாம் அறிவோம். இந்தச் செயல்முறையானது, வட அமெரிக்காவில் ‘மேனிஃபெஸ்ட் டெஸ்டினி’ (Manifest Destiny) என்ற கொள்கையின் பெயரால் அங்குள்ள பூர்வகுடிகள் நிலங்களை விட்டு வெளியேற்றப்பட்டதையும், விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டதையும் பெருமளவு ஒத்திருக்கிறது.

நாஸி ஜெர்மனி, ஜிம் க்ரோ (Jim Crow) சட்டங்கள், அமெரிக்காவின் செவ்விந்தியர்கள் வெளியேற்றம் மற்றும் மனித வரலாற்றின் பிற அருவருக்கத்தக்கத் தருணங்களில் ஊக்குவிக்கப்பட்டதைப் போல, மனித குலத்தின் மிக மோசமான உணர்ச்சிகளை இஸ்ரேல் சட்டமாக இயற்றிக் கொண்டிருக்கும்போது, இந்தத் தேசிய-அரசுச் சட்டத்தை வெறும் “சர்ச்சைக்குரியது” (Controversial) என்று கூறி மேற்கத்திய ஊடகங்கள் வார்த்தைகளை வைத்து மழுப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

சூசன் அபுல்ஹவா (Susan Abulhawa) ஒரு பாலஸ்தீன எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளரும் ஆவார். பாலஸ்தீன மக்களின் உரிமைகளுக்காக வாதிடும் Boycott, Divestment and Sanctions (BDS) இயக்கத்தின் ஆதரவாளராகவும், பாலஸ்தீன அகதிகளின் தாயகத்திற்குத் திரும்பும் உரிமையை வலியுறுத்தும் அல் அவ்தா (Al-Awda: The Palestine Right to Return Coalition) அமைப்பின் பேச்சாளராகவும் செயல்பட்டு வருகிறார். அவரது Mornings in Jenin நாவல் உலகளாவிய வாசகர்களின் கவனத்தை ஈர்த்து, பாலஸ்தீன இலக்கியத்தின் முக்கியமான படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 2026ஆம் ஆண்டு வெளியான அவரது Every Moment Is a Life: Gaza in the Time of Genocide என்ற நூல், காசா மீதான இஸ்ரேலின் போரின் பின்னணியில் பாலஸ்தீனியர்களின் வாழ்வனுபவங்களையும் மனிதாபிமான நெருக்கடியையும் பதிவு செய்யும் சமகாலச் சான்று நூலாக அமைந்துள்ளது.

மொழிபெயர்ப்பு: MJM. ஜாவிட் ஹக்

இந்த ஆக்கம்  Al Jazeera இணையதளத்தில் Israel’s ‘nation-state law’ parallels the Nazi Nuremberg Laws என்ற தலைப்பில், 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.