– லரீfப் சுபைர்
கடந்த ஆண்டு மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில், நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் புகைபோக்கியின் வழியாக காற்றில் பரவும் மிக நுண்ணிய சாம்பல் துகள்கள் நாவலப்பிட்டிய மற்றும் கொழும்பு மலைப்பகுதிகளை அடைந்ததாக எங்கள் ஆய்வுக் கருவிகள் சுட்டிக்காட்டின. ஒருவரின் நுரையீரலுக்குள் இலகுவாகத் தங்கிவிடக்கூடிய அளவுக்கு மிக நுண்ணிய துகள்களைக் கொண்டது என எமது அளவீட்டில் தெரியவந்தது. (pm 2.5 என்பது 2.5 மைக்ரோமீட்டர் என்பதன் சுருக்கமாகும்) இந்தத் துகள்கள் மழையை சுமந்து வரும் மேகங்களின் ஆற்றலைக் குறைக்கும். விலங்குகளில் நச்சுத்தன்மையை ஏற்படுத்தும்; தாவரங்கள் மற்றும் ஏனைய பயிர்களின் மேற்பரப்பை மூடிவிடும். அதுமாத்திரமன்றி, fப்ளை ஏஷ் எனப்படும் இந்த சாம்பலின் நச்சுத்தன்மை பாதிக்கப்படுபவர்களின் ஆயுட்காலத்தை பல ஆண்டுகளுக்கு குறைத்துவிடும்.
எதிர்பாராத இந்த கண்டறிதல்கள், ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு ஆய்வுகளின் வழியாகப் பெறப்பட்டவை – ஒன்று, மேகங்களின் மீது காற்று மாசுபாட்டின் பாதிப்பு பற்றியது; மற்றொன்று, நிலக்கரி மின் நிலையம் அதன் சுற்றுப்புறத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு பற்றியது.
பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக, நாங்கள் கொழும்பு மற்றும் நாவலப்பிட்டியில் அதற்கான கருவிகளை நிறுவினோம். கொழும்பில் இக்கருவிகள் கறுவாத் தோட்டத்தில் – Cinnamon Garden (அமெரிக்கத் தூதரகத்தால் பராமரிக்கப்படும் ஒரு சான்றளிக்கப்பட்ட கருவிக்கு அருகில்) வைக்கப்பட்டன. இங்கு காற்றின் தரத்தைப் பாதிக்கும் முதன்மைக் காரணி வாகனப் போக்குவரத்தாகும். நாவலப்பிட்டியில், இக்கருவி ஒரு தொலைதூர மலைஉச்சியில் – Dilma பாதுகாப்பு காலநிலை மாற்ற ஆய்வகத்தில் வைக்கப்பட்டது.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், கொழும்பு மற்றும் நாவலப்பிட்டியில் ஒரு கன மீட்டருக்கு சராசரியாக முறையே 30 மற்றும் 15 மைக்ரோகிராம் pm 2.5 அளவுகள் பதிவாகின. ஒப்பீட்டளவில், வருடத்தின் சராசரிக்கான பறக்கும் சாம்பல் துகள்களுக்கான (National mandated limits)தேசிய ஆணை வரம்பு 25 ஆகும். இது அமெரிக்காவின் 15 மற்றும் அவுஸ்திரேலியாவின் 8 என்ற வரம்புகளுடன் ஒப்பிடும்போது மிகவும் தளர்வானதாகும்.
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தினால் சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள்
எங்கள் கருவி, நுரைச்சோலையில் நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு வெளியே அமைக்கப்பட்டிருந்தது. இந்த மின் நிலையம் 2011ல் 300 மெகாவாட் மின் உற்பத்திக்கான ஒரு அலகோடு திறந்து வைக்கப்பட்டு, அதிகரித்து வரும் நுகர்வோரின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக பின்னர் மேலும் இரண்டு 300 மெகாவாட் அலகுகளுடன் மொத்தம் 900 மெகாவாட் வெளியிடும் திறன் கொண்டதாக விரிவாக்கப்பட்டது. இந்த மின்நிலையம் நாட்டின் 50 சதவீதம் வரையிலான மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்கிறது. நிலையத்தின் பராமரிப்புத் தரம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை; அதுமாத்திரமன்றி, நிலையப் பொறுப்பாளர்களது சுற்றுச்சூழல் சம்பந்தமான கண்காணிப்பும் போதுமான அளவில் இல்லை.
அதன் மூன்று புகைபோக்கிகளிலிருந்து வெளியேறும் புகையிலிருந்தும், மின் நிலையத்தின் வளாகத்தில் சேமித்து வைக்கப்பட்டுள்ள சாம்பல் குவியல்களிலிருந்தும் சாம்பலும் மற்றும் ஏனைய பொடிகளும் பரவக்கூடும். இந்தச் சாம்பலில் ஆர்சனிக் மற்றும் பல்வேறு உலோகக் கலப்பு கொண்ட நச்சுப் பொருட்கள் இருக்கலாம். மின் நிலைய இயக்குநர்கள் புகைபோக்கிகளில் இருந்து வெளியேறும் புகையை நன்கு கண்காணிக்கின்றனர். இருந்தபோதிலும், ஆலைக்கு வெளியே உள்ள காற்றின் தரம் அரிதாகவே கண்காணிக்கப்படுகிறது; இது சுற்றுச்சூழல் வகைகூறல் கட்டுப்பாடுகளை திருப்தி செய்தல் மற்றும் பிரதேச மக்களுக்கு காட்டுவதற்காகவும் இருக்கலாம்.
சராசரியாக, ஒவ்வொரு நாளும் 850,000 கிலோ கிராம் (fly ash) ‘பறக்கும் சாம்பல்’, புகைபோக்கிகளில் உள்ள (scrubbers) சுரண்டி சேர்க்கும் காற்று சுத்திகரிப்பான்கள் வழியாகச் செலுத்தப்படுகிறது. இந்த சுத்திகரிப்பான்கள் சரியாகச் செயல்பட்டால், 90 தொடக்கம் 99% சதவீதம் வரை அதில் இருந்து அகற்றப்படலாம். அதில் பழுதுகள் ஏற்படும்போது வெளியேறும் அளவு அதிகரிக்கிறது – இருபதுக்கும் மேற்பட்ட ‘திட்டமிடப்படாத உற்பத்தி உலை நிறுத்தங்கள்’ (unplanned shutdowns) இதுவரை நிகழ்ந்திருக்கின்றன. இவ்வாறு புகைபோக்கியின் வழியாக வெளியேறும் சாம்பல் (மற்றும் பிற இரசாயனங்களின்) ஒரு சிறு பகுதி காற்று மண்டலத்தில் ஒரு குறிப்பிட்ட திசையில் கொண்டு செல்லப்பட்டாலும், அது சுற்றுச்சூழல் கட்டமைப்பு, வனவிலங்குகள், தாவரங்கள், மேகங்கள் மற்றும் மனிதர்கள் மீது அசாதாரணமான – இயல்பை மீறிய பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம், நுரைச்சோலையில் வைக்கப்பட்டிருந்த எங்களது கருவி, கொழும்பை (30) விட சராசரி மாதாந்த மாசுபாடு (35) அதிகமாக இருப்பதாகக் காட்டியது. பாதுகாப்பு கருதி அந்தக் கருவி ஒரு சிறிய கட்டிடத்திற்குள் வைக்கப்பட்டிருந்ததால், அங்கு வசிக்கும் கிராம மக்கள் எதிர்கொள்ளும் சூழல் மாசுபாட்டை விட நுரைச்சோலைக் கருவியில் இருந்து வெளிவரும் அளவீடுகள் குறைவாகவே இருந்தன எனலாம்.
பழுதடைந்த அலகு இல்லாத நிலையில் காற்றின் தரம் எவ்வாறு இருக்கும்?
நுரைச்சோலையின் பிரதான மூன்று மின் பிறப்பாக்கிகள் உள்ளன. அவற்றில் ஒன்றில், வெளியேற்றப்படும் காற்றைச் சுத்திகரிக்கும் பல அலகுகள் பழுதடைந்திருந்தன; இந்த நிலையம் கடந்த ஆண்டு (2018) ஏப்ரல் 11 முதல் 21 வரை பழுதுபார்ப்பதற்காக மூடப்பட்டது. சராசரி மாசுபாடு நுரைச்சோலையில் சுமார் 10 ஆகவும், கொழும்பில் 20 ஆகவும், நாவலப்பிட்டியில் 5 ஆகவும் குறைந்தது. அலகு 1 ன் பழுதுபார்ப்புப் பணிகள் முடிவடைந்த பின்னரும் இந்த மாசுபாடு குறைந்தது.
நுரைச்சோலையின் காற்று மாசுபாடு நாவலப்பிட்டி மற்றும் கொழும்பை அடைகிறதா?
நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையம் மூடப்பட்டதால் நாவலப்பிட்டியின் அளவீடுகள் திடீரெனக் குறைந்தன என்ற விடயத்தை தற்செயலாகக் கண்டறிந்த பிறகு, மின் நிலையம் மூடப்படுவதற்கு முன்பு இந்த இடங்களின் அளவீடுகளை ஒப்பிட்டுப் பார்த்தோம் – அவற்றின் ஏற்ற இறக்கங்கள் ஒன்றையொன்று நெருக்கமாகப் பின்தொடரும் வகையில் அமைந்திருந்தன என்பதைக் கண்டறிந்தோம்.
2018 நவம்பர் 16 தொடக்கம் 2019 பெப்ரவரி 25 வரை இடம்பெற்ற எங்களின் சமீபத்திய ஆய்வு, நுரைச்சோலை மற்றும் கொழும்பில் உள்ள அளவீடுகளுக்கு இடையிலான தொடர்பு கண்கூடாகத் தெரிகிறது என்பதைக் காட்டுகிறது. இது ஒரு தற்செயலான தொடர்பாக இருப்பதற்கான வாய்ப்பு 0.1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
அனல் மின் நிலையம் அமைக்கப்பட்டபோது இத்தகைய நீண்ட தூர மாசுக் கடத்தல் இடம்பெறலாம் என ஏன் எதிர்பார்க்கப்படவில்லை?
புத்தளம் பிரதேசத்தில் வருடம் முழுவதும் தாக்கம் செலுத்தும் பிரதான பருவக் காற்றுகளின் வகிபாகம் குறித்த அறிவு இங்கு மழுங்கடிக்கப்பட்டிருக்கிறது. அதன் இன்றியமையாத் தன்மையை அவர்கள் எதிர்பார்த்திருக்கவேண்டும். (EIA–Environmental Impact Assessments) சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கைகளின் வழியாக ஆழமாக நம்பவைக்கப்பட்டிருந்த கட்டுக்கதைகளின் விளைவாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றிருக்கிறது.
இலங்கைத் தீவின் மலை நாட்டுக்கும் மேற்குக் கடற்கரைக்கும் நுரைச்சோலையின் மாசு கடத்தப்படும் என்று இதனை ஸ்தாபிப்பதில் மும்முரம் காட்டிய தரப்புகள் எதிர்பார்க்கவில்லை. புத்தளத்தில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்று வீசும் டிசம்பர் முதல் பெப்ரவரி வரை காற்று மாசுபாடு பெரும்பாலும் கடலுக்குக் கொண்டு செல்லப்படும் என்றும், ஏனைய மாதங்களில் அது புத்தளம் வடக்கு மற்றும் அதற்கப்பால் கொண்டு செல்லப்படும் என்றும் கருதப்பட்டது.
உண்மையில், முன்மொழியப்பட்ட சம்பூர் நிலக்கரி அனல் மின் நிலையத்துக்கான இதுபோன்ற சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு, கவலைக்கிடமான முறையில் காற்றின் ஆற்றல் மற்றும் அதன் வகிபாகம் குறித்த அறியாமையை வெளிப்படுத்தி இருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. Financial Time, 20 July 2016
இந்தப் பிரதேசத்தில் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட காற்றின் அளவீடுகள், கணிசமான காலத்துக்கு புத்தளத்திலிருந்து மத்திய மலை நாடு மற்றும் மேற்கு கடற்கரையை நோக்கி தொடர்ச்சியாக காற்று வீசுவதைக் காட்டுகின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், ஒரு நாளின் 8வீத நேரத்திற்கு மத்திய மலைநாட்டை நோக்கி காற்று வீசியது.
சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டின்போது, பிரதேசத்தில் வருடம் முழுவதும் வீசும் பருவக் காற்றுகளின் இன்றியமையாத வகிபாகம், அதனை அடிப்படையாகக் கொண்ட மாசுகளின் காவுகை – அதற்கான கண்காணிப்பு ஏற்பாடுகள் பற்றிய நேர்மையான மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டிருக்குமாயின் இலங்கையின் சூழல் பாதுகாப்புக்கான ஒழுங்குமுறை ஆணையங்கள் மின்சார சபை ஆகியன நீண்ட காலத்திற்கு முன்பே இதைப் பற்றி அறிந்திருப்பார்கள் என்பதை நாம் கண்டுகொள்ளலாம். துயரார்ந்த வகையில் மேலே சொன்ன அமைப்புகளால் சுற்றுச்சூழல் மீது நிகழ்த்தப்பட்ட ‘வாய்ப்பான அறிவிலித்தனம்’ இந்த வரலாற்றுத் தவறுக்கு கால்கோளாய் அமைந்து விட்டது.
இந்தியா மற்றும் சீனாவின் நகர்ப்புறங்களில் உள்ள பேரழிவு நிலைகளை விட இலங்கையில் மாசுபாடு குறைவாகவே உள்ளது. ஆயினும்கூட, மத்திய சுற்றுச்சூழல் ஆணையமும் (CEA Central Environmental Authority) தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனமும் (NBRO National Building Research Organization) ஏற்கனவே சுகாதார அபாயமாக உள்ள நகர்ப்புற மையங்களில் காற்று மாசுபாடு தவிர்க்க முடியாதபடி அதிகரித்து வருவதை சுட்டிக் காட்டியுள்ளன. எடுத்துக்காட்டாக, கண்டி நகரத்தின் சூழல் மாசுகள் பற்றி NBRO மற்றும் CEA யோடு இணைந்து பேராதெனிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஒலிவர் இளையப்பெரும மற்றும் பிறரால் நடாத்தப்பட்ட ஆய்வைக் குறிப்பிட முடியும்.
கற்றுக்கொண்ட பாடங்கள்
- காற்று மாசுபாட்டைக் கண்காணிப்பது ஒப்பீட்டளவில் குறைந்த செலவில் சாத்தியமான ஒன்றாகும். ஆனால், இந்த திட்டத்துக்கு பொறுப்பாக இருந்தவர்கள், பொருத்தமான இடத்தைத் தேர்ந்தெடுப்பதில் விளைவுகளை கவனத்தில் கொள்ளமலும் கண்மூடித்தனமாகவும் இந்த நிலையத்தின் நிர்மாணம் மற்றும் செயல்பாட்டைத் தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதையும் நாம் நிறுவியுள்ளோம்.
- இந்த அனல் மின் நிலையம் விளம்பரப்படுத்தப்பட்டபடி இயங்கும்போது, நச்சுப் பதார்த்தங்கள் அடங்கிய 8,500 கிலோ சாம்பல் தினமும் நமது வளிமண்டலத்தில் வெளியேறுகிறது என்ற விடயம் நம் அனைவரினதும் கவனத்துக்குரியது.
- மின் நிலையத்தினால் ஏற்படும் காற்று மாசுபாட்டின் விளைவாக ஒரு நீண்டகாலத் தீங்கு இருக்கிறது என்பதை நாம் நிறுவியுள்ளோம்.
- கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் (2018) மற்றும் அநேகமாக அதற்கு முன்பும் நிகழ்ந்தது போல, பழுதடைந்த அலகுகளுடன் தொடர்ந்து மின் நிலையம் இயக்கப்படும்போது, அதனை இயக்குபவர்கள், ஒழுங்குபடுத்துபவர்கள் மற்றும் அவர்களின் மேற்பார்வையாளர்கள் தமது பணியில் தவறிழைக்கின்றனர்.
- அருகிலுள்ள கிராமவாசிகள் தொடராக அபாய எச்சரிக்கை விடுத்தபடி இருக்கின்றனர். ஆனால் அவர்களின் அபயக் குரல்கள் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. நமது வசதிக்காக, கிராமவாசிகளின் மீது ஏற்படும் வெளிப்படையான சுகாதார மற்றும் பொருளாதாரத் தாக்கங்களின் மீது நாம் சமரசம் செய்துகொள்ளும்போது, அது ஒட்டுமொத்தமான மற்றும் பாரிய தார்மீகத் தோல்வியாகும்.
- இந்தப் பணியின் மூலம், அவர்களின் தொடரான எச்சரிக்கை, ஆரோக்கியம் மற்றும் எதிர்காலத்தை நாம் புறக்கணிப்பது, நமது அபாயத்திற்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைத்து உயிரினங்களின் கூட்டான அபாயத்திற்கும் வழிவகுக்கும் என்பதை இப்போது நாம் அறிந்து கொண்டிருக்கிறோம்.
‘சுற்றுச் சூழலுக்கான கால நிலை மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்’ Foundation for Environment, Climate and Technology) என்ற அமைப்பைச் சேர்ந்த லரீfப் சுபைர், ருச்சிர லொக்குஹெட்டி, ஜெனன் விஷ்வநாதன், துவான் ஹாஜி, பியூஷனி எல்லகல, பனுக்க விஜேரத்ன மற்றும் சயன குணதிலக்க ஆகியோரினால் நிகழ்த்தப்பட்ட இந்த ஆய்வு, 2018 டிசம்பரில் நடைபெற்ற அமெரிக்க புவி இயற்பியல் ஒன்றியத்தின் (American Geophysical Union) கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்பட்டது. (Dilmah Conservation நிறுவனம் மற்றும் அமெரிக்க தூதுவராலம் ஆகிய அமைப்புகள் அத்துடன் இந்த ஆய்வுக்கு ஒத்தாசை வழங்கிய நுரைச்சோலையில் வாழும் மக்களுக்கும் எமது நன்றிகள் உரித்தாகட்டும்.
டாக்டர் லரீfப் சுபைர் (Lareef Zubair), FECT (Foundation for Environment, Climate and Technology) நிறுவனம் தொடங்கப்பட்டது முதல் அதன் முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு, அவர் யேல் பல்கலைக்கழகத்தில் (Yale University) கணிதம் மற்றும் பொறியியல் துறையிலும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய இணை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். அத்துடன் வளிமண்டல ஆராய்ச்சிக்கான பல்கலைக்கழக கூட்டமைப்பில் (University Consortium for Atmospheric Research) காலநிலை கண்காணிப்பு மற்றும் பயன்பாடுகள் ஆய்வாளராக பணியாற்றினார். மேலும், அவர் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகவும், இலங்கையின் அடிப்படை கற்கைகளுக்கான நிறுவனத்தில் (IFS) ஆராய்ச்சி உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். சர்வதேச காலநிலை மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் (IRI) விஞ்ஞானியாகப் பணியாற்றிய அவர், தற்போது கொலம்பியா பல்கலைக்கழக நீர் நிலையத்துடன் (Columbia University Water Center) இணைந்து செயல்பட்டு வருகிறார்.
மொழிபெயர்ப்பு : இசட்.ஏ. முஹம்மத் ரஸ்மி
இந்த ஆக்கம் The Sunday Times இணையதளத்தில் Norochcholai ash contaminates Lanka’s western atmosphere என்ற தலைப்பில் வெளியானது