– சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ்.
சமகாலத் தீவிரப் பெண்ணியவாதிகள் (Radical Feminists), மனிதகுலத்தின் தொடக்கத்திலிருந்தே ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான உறவு முறைகள் நிலவி வருவதனைப் பின்னணியாகக் கொண்டு பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மானுட வரலாற்றின் மிகப் பழமையான ஒடுக்குமுறைகளாகும் என்று கூறுவார்கள். இருப்பினும் இன ரீதியான பாகுபாட்டு முறைமைகள் நவீனத்துவத்தின் நீட்சியாக உருவானவை என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. ஐரோப்பியர் மற்றும் ஐரோப்பியர் அல்லாதவர் அல்லது வெள்ளையர் மற்றும் வெள்ளையர் அல்லாதவர் என்ற வேறுபாட்டு முறைகள் மானுட வரலாற்றின் மிக அண்மைய காலத்தைச் சேர்ந்தவை. பண்டைய காலங்களில் இனவாதம் நிலவியதா மற்றும் அது எவ்வளவு வலுவாக நிலவியது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஃபிராங்க் ஸ்னோடன் (Frank Snowdon ) போன்ற எழுத்தாளர்கள், தற்போது நிலவும் இன ரீதியான பாகுபாடுகளுக்கு முன்பாக கறுப்பின மக்கள் சமமாக நடத்தப்பட்ட ஒரு காலம் இருந்ததாக வாதிடுகின்றனர். மற்றும் சில அறிஞர்கள், பண்டைய கிரேக்கர்களும் ரோமானியர்களும் கறுப்பின மக்கள் மீது பாரபட்சமான மனப்பான்மையை வரலாற்று ரீதியாகவே கொண்டிருந்தனர் என்றும் வாதிடுகின்றனர். என்ற போதிலும் இத்தகைய கருத்து வேறுபாடுகளுக்கும் அப்பால், பண்டைய அல்லது இடைக்காலங்களில் நிலவிய இனவாத ஒழுங்குகளை விடவும் ஐரோப்பிய காலனித்துவ விரிவாக்கத்துடன் பரவலடைந்த நவீன இனவாத ஒழுங்குகள் மிகவும் வளர்ச்சியடைந்ததாகவும், அமைப்பு ரீதியாக வலுப்பெற்ற ஒன்றாகவும் உள்ளன என்பதில் பெரும்பாலான அறிஞர்கள் உடன்படுகின்றனர்.
இத்தகைய அவதானங்களைத் தொகுத்து நோக்கும் பட்சத்தில் இனவியல் ஒப்பந்தம் (Racial contract), பற்றிய வித்தியாசமான புரிதல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். குறிப்பாக, இனத்துவ ஒப்பந்தம் (Racial contract) என்பவை வெறுமனே இன ரீதியான சுரண்டல்களுக்கான வாயில்களை திறந்து விடுவதோடு மாத்திரம் நின்று விடாமல் அவையே இனம் மற்றும் அதற்கான அடையாளக் கட்டமைப்புக்களை உற்பத்தியும் செய்கின்றன என்பது அவற்றில் மிக முக்கியமானதொரு அவதானமாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் வெள்ளையர்கள் என்ற இனம் இயற்கையாகவே உருவான ஒரு இனமல்ல; மாறாக இனத்துவ ஒப்பந்தம் (Racial contract) என்ற ஒழுங்கமைப்பின் வழியாகவே வெள்ளையர்கள் என்ற இனமும் அதற்கான அடையாளங்களும் உற்பத்தி செய்யப்படுகின்றன. மட்டுமன்றி அதிகார அமைப்புக்கள், சட்ட ஒழுங்குகளின் வழியே வெள்ளையர்கள் என்ற இனத்தின் இருப்பானது தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டும் வருகிறது.
ஐரோப்பாவில் முதலாளித்துவத்தின் வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்த அதே காலகட்டத்தில் (1650–1800) சமூக ஒப்பந்தக் கோட்பாட்டிற்கும் பிரபல்யம் கிடைத்தது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகாண் பயணங்களின் விரிவாக்கங்கள் இனரீதியான அடையாளங்களை நிர்மாணித்துக் கொள்வதற்கு அதிகளவில் பயன்பட்டன. அறிவொளிக் கால தாராளவாதக் கோட்பாடுகளால் செல்வாக்கு பெற்ற சமூக ஒப்பந்தக் கோட்பாடானது, அனைத்து மனிதர்களுக்கும் சம உரிமைகள், சுதந்திரம் மற்றும் தன்னாட்சி போன்ற கருத்துக்களினடியாக எழுந்த போதிலும், அதே சமகாலத்தில் மனிதர்களாகக் கருதப்படாமல் பலர் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு கொல்லப்பட்டும் அவர்களது சொத்துக்கள் பறிக்கப்பட்டும் அடிமைகளாக நடாத்தப்பட்டனர். தெளிவாகவே புலப்படும் இத்தகைய முரண்பட்ட தன்மையை சமரசம் செய்துகொள்வதற்காகவே இனப் பாகுபாட்டை அடிப்படைத் தர்க்கமாகக் கொண்ட இனவாத ஒழுங்குமுறைகள் நடைமுறைக்கு வந்தன. வெள்ளையரல்லாத மக்களின் மனிதத்தன்மையை முழுமையாகவே மறுத்து, சமூக ஒப்பந்தத்தின் ஊடாக வாக்களிக்கப்பட்ட உரிமைகளையும் பாதுகாப்புகளையும் வெள்ளையர்களுக்கு மட்டுமே வழங்கும் வகையில் குறித்த ஒழுங்கு முறைகள் அமைந்திருந்தன. ஜென்னிங்ஸ் (Jennings) குறிப்பிடுவது போல, முன்னேற்றகரமானதும் நாகரிகமானதுமான ஒரு நாட்டின் மீது படையெடுத்து அதன் நிலத்தைக் கைப்பற்றுவது சர்வதேச சட்டத்திற்கு எதிரானதாக கருதப்பட்ட போதிலும் “காட்டுமிராண்டிகள்” என்று கருதப்பட்ட மக்களும் அவர்களது நிலங்களும் இத்தகைய சர்வதேச சட்ட வரையறைகளில் இருந்து விதிவிலக்காகவே நடத்தப்பட்டனர். எனவேதான் இனவாத தர்க்க அடிப்படைகளே சமூக ஒப்பந்தத்திற்குப் பின்னால் உள்ள யதார்த்தமாக முன்வைக்கப்படுகிறது.
செவ்வியல் கால ஐரோப்பிய சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களின் எழுத்துக்களில் மேற்குறிப்பிடப்பட்டவை போன்ற இன ஒதுக்கல் கருத்துக்களுக்கான நேரடிச் சான்றுகளைக் கண்டுகொள்ள முடியும். “மனிதர்கள்” என்று அவர்கள் குறிப்பிட்டவை அனைவருமே, “வெள்ளையர்களாகவே” சந்தேகத்திற்கிடமின்றி கருதப்பட்டனர். ஏற்கனவே, பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இயற்கைச் சட்டம் (Natural Law) குறித்த தனது படைப்பால் பிற்கால ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களை வலுவாகப் பாதித்த ஹியூகோ க்ரோடியஸ் (Hugo Grotius), “காட்டுமிராண்டிகள்” மனிதர்களைப் போலன்றி காட்டு விலங்குகளைப் போன்றவர்கள் என்ற கூற்றை முன்வைத்ததுடன் காட்டு விலங்குகளுக்கு எதிராகப் போரிடுவதைப் போலவே, அத்தகைய மக்களுக்கு எதிராகவும் போர்களை நடாத்த முடியும் என்றும் அவர் வாதிட்டார். இவரது கூற்றினை அடிப்படையாகக் கொண்டே பிற்காலத்தில் உருவாகிய மிக முக்கியமான நான்கு சமூக ஒப்பந்தக் கோட்பாட்டாளர்களான தோமஸ் ஹொப்ஸ், ஜோன் லொக், ரூசோ மற்றும் இம்மானுவேல் கான்ட் ஆகியோர் தமது சட்டகத்தை வடிவமைத்துக் கொண்டனர்.
தோமஸ் ஹொப்சினுடைய மனிதனின் இயற்கை நிலை தொடர்பிலான விளக்கங்கள், மனித வாழ்வை மோசமானதாகவும், மிருகத்தனமானதாகவும், குறுகியதாகவும் உள்ளவாறான எந்நேரமும் ஒரு போர்ச் சூழலை ஒத்த நிலமைகளை உடையதாகவே முன்வைத்தன. மேலோட்டமாகப் பார்க்கும்போது தோமஸ் ஹொப்சினுடைய இந்த விளக்கம் இனப் பாகுபாடின்றி எல்லா மக்களுக்கும் பொருத்தமானதாகத் தோன்றலாம். எனினும் அத்தகையதொரு பதட்டம் நிறைந்த அல்லது போர்ச் சூழல் மிகுந்த நிலையில் உண்மையில் மனித வரலாறு ஒருபோதும் இருந்ததில்லை என்ற ஆட்சேபனைக்கு தோமஸ் ஹொப்ஸ் பதிலளிக்கும்போது, எல்லா இடங்களிலும் நான் கூறுவது போல இருந்திருக்காது என்றாலும், மக்கள் அத்தகையதொரு வழியில் வாழும் இடங்கள் இன்னமும் உள்ளன என்று கூறி, அமெரிக்காவின் பல இடங்களில் உள்ள மக்களைச் சுட்டிக் காட்டி அவர்கள் அத்தகையதொரு காட்டுமிராண்டித்தனமான வாழ்வையே வாழ்கின்றனர் என்று குறிப்பிட்டிருந்தார். அந்தவகையில் ஹொப்ஸை பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனமான வாழ்வைக் கொண்டு செல்லும் இயற்கை நிலை என்ற கருத்தாக்கத்தை ஐரோப்பாவுக்கு வெளியேயுள்ள மக்களின் வாழ்வொழுங்கை கருத்தில் கொண்டே அபிவிருத்தி செய்தார் எனலாம். பிற்காலங்களில் ஹொப்சினுடைய கருத்துக்களைத் தழுவி பல எழுத்தாளர்கள், அமெரிக்காவினையும் அங்கு வாழ் மக்களையும் தமது எழுத்துக்களின் பிரதான உள்ளடக்கமாகக் கொண்டிருந்ததுடன் ஹொப்ஸ் விவரித்த இயற்கை நிலையில் உள்ள மக்களை சமயம், கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு அம்சங்கள் போன்றவை தொடர்பான உள்ளடக்கங்கள் எதனையும் கொண்டிராதவர்களாகவே தொடர்ந்தும் முன்னிறுத்தி வந்தனர்.
இது தொடர்பாக தொடர்ந்தும் எழுதிச் செல்லும் தோமஸ் ஹொப்ஸ், தனிப்பட்ட ரீதியில் எந்நேரமும் ஒருவருக்கொருவர் பகையுணர்வு மிக்க இயற்கை நிலையில் வாழாவிட்டாலும், குறித்த மக்களின் மன்னர்களும் ஆட்சியாளர்களும் எப்போதுமே அடுத்தவர் மீதான தொடர்ச்சியான சந்தேகங்களையும் போட்டி மனப்பான்மையையும் கொண்ட ஒரு சூழலிலேயே தான் வாழ்ந்து வருகிறார்கள் என்று வாதிடுகிறார். ஐரோப்பாவைப் போன்று ஒன்றுதிரட்டப்பட்ட ஆட்சி ஒழுங்கொன்றை பின்பற்றாது விட்டால் நேரக்கூடிய ஒழுங்கீனங்களைச் சுட்டிக்காட்ட ஹோப்ஸ் இந்த வாதத்தை முன்வைத்த போதிலும் ஹொப்ஸினுடைய இந்த முன்வைப்புக்களில் ஒரு பிரதான முரணைக் கண்டு கொள்ள முடிகிறது. இயற்கை நிலையில் மனிதர்கள் வரலாற்று ரீதியாக பகையுணர்வுடனும் போர்வெறியுடனும் இருப்பதாக ஆரம்பத்தில் கூறிய ஹொப்ஸ், அடுத்த பந்தியிலேயே அது சர்வதேச ரீதியான ஒரு பொதுவான அனுபவம் அல்ல என்று கூறுவதனூடாக தனக்குத் தானே முரண்பட்டுக் கொள்வதைக் கண்டு கொள்ள முடியும். இந்த முரண்பட்ட நிலையை அவதானித்த சில அறிஞர்கள், ஹொப்ஸினுடைய முன்வைப்புக்களை வெறுமனே ஒரு யூக நிலை அல்லது கருதுகோள் என்ற நிலையிலேயே வைத்திருக்கின்றனர். ஆனால் ஹொப்ஸின் முன்வைப்பில் உள்ள இந்த முரண்பாட்டை அவர் கையாண்டிருக்கும் இனவாதத் தரக்கத்தை புரிந்துகொள்ளும் பட்சத்தில் இலகுவாகத் தீர்து்து விட முடியும். ஹொப்ஸ், பகையுணர்வு மிக்க இயற்கை நிலையில் வாழும் காட்டுமிராண்டிகளாக வெள்ளையரல்லாத மக்களை குறிக்கும் அதேவேளை வெள்ளையர்களை இயற்கை நிலை என்ற கருத்தாக்கத்திற்கு அப்பாற்பட்ட நிலையில் உள்ள தரப்பினராகவே கருதினார். அதேநேரம் வெள்ளையர்கள் மத்தியில் நிகழும் மோதல்களைப் பொறுத்தவரை அவை அரச ஒழுங்கமைப்பொன்றினுள் நிகழும் தனிப்பட்டதும் விதிவிலக்கானதுமான ஒரு நிகழ்வாக ஹொப்ஸினால் முன்வைக்கப்பட்டதோடு இயற்கை நிலையில் வாழும் வெள்ளையர் அல்லாத மக்களிடையே நிலவும் மோதல்கள் போன்று ஹொப்ஸினால் முன்வைக்கவில்லை. சுருக்கமாகக் கூறுவதாயின் இயற்கை நிலையை வெள்ளையரல்லாத மக்களுடன் தொடர்புடைய ஒரு நிலையாக முன்வைக்கும் ஹொப்ஸ், வெள்ளையர்கள் அவர்களுக்கான அரச ஒழுங்கமைப்புகளை உருவாக்கி அரசியல் ஒழுங்கைப் பேணும் அளவுக்குப் பகுத்தறிவுள்ளவர்களாகவும், அதன் மூலமாக இயற்கை நிலை எனும் காட்டுமிராண்டித்தனமான வாழ்வு நிலைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் சித்தரிக்கப்படுகிறார்கள்.
சமூக அரசியல் மற்றும் பொருளாதார ரீதியில் ஐரோப்பாவில் நிகழ்ந்த மாற்றங்களின் காலப்பகுதியில் வாழ்ந்த சிந்தனையாளரான தோமஸ் ஹொப்ஸ், பழைமையான பிரபுத்துவ ஆட்சி முறைக்கும் வளர்ந்து வந்த பாராளுமன்ற ஆட்சி முறைமைக்கும் இடையிலான சூழமைவிலேயே வாழ்ந்தார். சமூக ஒப்பந்தம் பற்றிய ஹொப்ஸினுடைய கருதுகோள்கள், பிற்காலங்களில் தாராளவாதம் மற்றும் தனிநபர் சுதந்திரத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டபோதிலும், ஹொப்ஸ் அதனை ஒரு முழுமையான இறையாண்மை கொண்ட ஆட்சியாளரின் ஆட்சியை ஆதரிக்கப் பயன்படுத்திக் கொண்டார் . அதுமட்டுமின்றி பிரிட்டிஷ் ஒரு ஏகாதிபத்திய பேரரசாக வளர்ந்து கொண்டிருந்த பதினேழாம் நூற்றாண்டின் மத்தியில் ஹொப்ஸினுடைய சமூக ஒப்பந்தவாதக் கருத்துக்கள், இன ரீதியான மேலாதிக்கத்தினையும் வெள்ளையர்கள் அல்லாத மக்களை விளிம்புநிலைக்குத் தள்ளுவதற்கும் கணிசமான முறையில் பயன்படுத்தப்பட்டது.
இயற்கை நிலையில் வாழும் மக்களுக்கு பூர்வக்குடி அமெரிக்கர்களை ஒரு நிஜ வாழ்க்கை உதாரணமாக அவர் பயன்படுத்திய போதிலும், ஒரு இறையாண்மை அதிகாரம் இல்லாத பட்சத்தில் ஐரோப்பியர்களும் அதே நிலைக்குத் தள்ளப்படலாம் என்று வாதிட்ட ஹொப்ஸ், வெள்ளையரல்லாத மக்களுக்குப் பொருத்தமானது என்று அவர் கருதிய முழுமையான அரசாங்க முறையானது, வெள்ளையர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கக்கூடும் எனவும் கருதினார். இத்தகைய கருத்துக்களாலேயே ஐரோப்பியர் கலக்கமடையத் துவங்கினர் எனலாம். வன்முறைகளும் குழப்பங்களும் நிறைந்த இயற்கை நிலையில் வாழந்து வருகின்ற வெள்ளையரல்லாத மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் காலனித்துவத்தின் வளர்ச்சியை இவ்வாறே ஐரோப்பா நியாயப்படுத்தியது. ஒருபுறம் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் போன்ற விழுமியங்கள் மற்றும் பாராளுமன்ற ஆட்சிமுறைகளை வெள்ளையர்களான ஐரோப்பியர்களுக்கு மாத்திரம் வரையறுத்த அதேநேரம் வெள்ளையரல்லாத மக்கள் மீது இயற்கை நிலை என்ற காட்டுமிராண்டித்தனத்தை கட்டமைத்து அவர்கள் மீது வன்முறைகளையும் ஒடுக்குமுறைகளையும் கட்டவிழ்த்து இருந்தது. ஹொப்ஸின் சமூக ஒப்பந்தவாதமானது இன மேலாதிக்க வாதத்தினை அறிவாய்வியல் ரீதியில் பலப்படுத்தியது எனவும் இதனைக் குறிப்பிட முடியும்.
ஜோன் லொக்கின் அரசியல் கோட்பாட்டினை ஆராய்வதன் வழியே இதனை இன்னும் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். ஹொப்ஸைப் போன்றல்லாமல் ஜோன் லொக், இயற்கை நிலையானது அவற்றுக்கேயுரிய சுதேச அறநெறி விதிகளால் (Morals) ஆளப்படுவதாக விவரிக்கிறார். வன்முறைகளும் குழப்பங்களாலும் சூழப்பட்ட ஒரு நிலையாக அல்லாமல் தனியார் சொத்தும் பணமும் ஏற்கனவே நிலவும் ஒரு நிலையாக ஜோன் லொக் இயற்கை நிலையை குறிப்பிடுகிறார். பல வழிகளில், இது சிவில் சமூகம் பற்றிய கருத்தாக்கத்துடன் ஒத்துப்போவதை காண முடியும். இதனாலேயே, வெள்ளையர்களுக்கு தங்கள் குணநலன்களிலோ அல்லது திறன்களிலோ எந்தக் குறைபாடும் இல்லாமல், தற்காலிகமாக இயற்கை நிலையில் வாழ முடிகிறது என லொக் விளக்கினார். “கடின உழைப்பாளிகளாகவும் பகுத்தறிவுள்ளவர்களாகவும்” இருப்பவர்களுக்காகவே கடவுள் உலகைப் படைத்தார் என்றும், இந்தக் குணங்கள் ஆக்கப்பூர்வமான உழைப்பின் மூலமே வெளிப்படுகின்றன என்றும் வாதிட்ட ஜோன் லொக், கடின உழைப்பாளிகளும் பகுத்தறிவுள்ளவர்களுமான வெள்ளையர்கள் நிலத்தை மேம்படுத்தி வளப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளையில், பூர்வீக அமெரிக்கர்கள் அந்த நிலங்களை வெள்ளையர்களைப் போன்று பயன்படுத்தாததால், அமெரிக்காவின் நிலங்கள் பெரும்பாலும் பயிரிடப்படாமலேயே இருந்து வருகின்றன என்றும் ஜோன் லொக் வாதிட்டார். இதன் நீட்சியாக, வெள்ளையர்கள் மற்றும் வெள்ளையரல்லாதவர்கள் ஆகிய இரு தரப்பினரும் ஆரம்பத்தில் இயற்கை நிலையிலேயே வாழ்வதாகக் ஜோன் லொக் குறிப்பிட்ட போதிலும், வெள்ளையர்கள் அந்த நிலையிலிருந்து மிக விரைவாக வெளியேறி விட முடியுமானவர்களாக முன்னிறுத்துகிறார். நிலத்தின் மீது உரிமை கோரி, அதில் பயிரிடுவதன் ஊடாக அதன் மதிப்பை அதிகரிப்பதன் மூலம் வெள்ளையர்கள் உயர் மட்ட பகுத்தறிவை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிடுகிறார். வெள்ளையர்கள் மிகவும் முன்னேறியவர்கள் என்றும், எனவே ஐரோப்பியரல்லாத மக்களை விட சொத்துரிமைக்கும் அரசியல் அதிகாரத்திற்கும் அதிக உரிமையுடையவர்கள் எனும் கருத்தை நியாயப்படுத்த ஜோன் லொக்கின் இந்தக கருத்து வழியமைத்து விடுகிறது. ஜோன் லொக் முன்வைத்த இக்கோட்பாட்டின் பிரகாரம், பூர்வீக அமெரிக்கர்களின் நில உரிமை மற்றும் அவர்கள் தமது நிலங்களைப் பயன்படுத்துவதற்குள்ள உரிமை ஆகியன முறையானதும் சட்டபூர்வமானதுமான உரிமைகளாகக் கருதப்படவில்லை. விளைவாக, அவர்கள் கொண்டிருந்த எந்தவொரு சொத்துரிமைகளும் எளிதில் புறக்கணிக்கப்படவோ மறுக்கப்படவோ முடியுமானவகையாக மாறின. இயற்கை நிலையை விட்டும் விலகி ஏற்கனவே முன்னேறிவிட்டதாகவும் நாகரீகமடைந்து விட்டதாகவும் நம்பப்பட்ட வெள்ளையர்கள், இந்த நிலங்களுக்கு வந்தபோது, பூர்வீக அமெரிக்கர்களின் நிலப் பிரதேசங்களை தம்வசம் கைப்பற்றுவதற்கான அங்கீகாரத்தையும் உரிமையையும் ஜோன் லொக்கின் கருத்துக்கள் ஏற்படுத்தின. சுருக்கமாகக் கூறுவதாயின் பல்வேறு வகையான பூர்வீகக் குடிகளின் நிலங்களைப் பறிமுதல் செய்வதற்கு ஜோன் லொக்கின் கோட்பாடு ஒரு முக்கியமான தர்க்க நியாயப்பாட்டை வழங்கியது எனலாம். அமெரிக்காவில் ஐரோப்பியர்களின் படையெடுப்பையும் குடியேற்றத்தையும் ஆதரிக்கப் பயன்படுத்தப்பட்ட தத்துவார்த்த வாதங்களில் ஒன்றாக விளங்கிய ஜோன் லொக்கின் இக்கோட்பாடானது, பிற்காலங்களில் ஆபிரிக்கா மற்றும் பசுபிக் பகுதிகளில் மேலும் பரந்தளவிலான ஐரோப்பிய வெள்ளைக் குடியேற்றங்களை நிறுவுவதற்கும் பயன்படுத்தப்பட்டது. பூர்வக்குடி மக்கள் காலாகாலமாக மேற்கொண்டு வந்த நிலப் பயன்பாட்டு முறைமைகள், ஐரோப்பிய வேளாண்மை மற்றும் நில மேம்பாட்டுத் தரங்களின்படி மதிப்பிடப்பட்டதால், அவர்களின் நிலப் பொருளாதார முயற்சிகள் மற்றும் உழைப்பு போன்றன எவ்வித பெறுமதியும் அற்றவையாகவே கருதப்பட்டன. ஐரோப்பிய மதிப்பீடுகளின் பிரகாரம், அவர்கள் தமது உழைப்பினால் நிலத்தை போதுமானளவு மேம்படுத்தவில்லை எனக் கருதப்பட்டதால், நிலத்தின் மீதான அவர்களின் உரிமைக்கோரல்கள் பலவீனப்படுத்தப்பட்டதோடு இதனூடாக அவர்களின் நிலங்களை அபகரித்துக் கொள்ளும் நடைமுறைகள் மிகவுமே எளிதாக்கப்பட்டது.
இதுபோலவே ஜோன் லொக்கின் கருத்துக்கள் அடிமைத்துவத்திற்கான கருத்தியல்சார் அடிப்படைகளையும் வழங்கின எனப் புரிந்து கொள்ள முடியும். தனது அரசாங்கம் தொடர்பிலான இரு கட்டுரைகள் (Second Treatise) எனும் நூலில் அடிமைகளை பிடிப்பதும் வைத்திருப்பதும் ஆக்கிரமிப்பாளருக்கு எதிரான தற்காப்பு யுத்தமொன்றின் போது அனுமதிக்கப்பட முடியும் என ஜோன் லொக் குறிப்பிடுகிறார். இருப்பினும் இந்த வாதம், ஆப்பிரிக்கர்களைப் பிடித்து அடிமைகளாக்கிக் கொண்டு சென்ற ஐரோப்பிய அடிமை வியாபாரிகளின் யதார்த்தத்துடன் பொருந்தியிருக்கவில்லை. உண்மையில் ரோயல் ஆபிரிக்க நிறுவனத்தில் (Royal Africa Company) செய்த முதலீடுகள் மூலம் அடிமை வர்த்தகத்தில் லொக்கிற்கு சிறிதளவு நிதிசார் நலன்கள் இருந்தன. அத்தோடு, கரோலினா மாகாணத்தின் அடிமைகளுக்கான சட்ட ஏற்பாடுகளை வரைவதற்கும் அவர் உதவியிருந்தார். இது அவரது இயற்கை நிலை பற்றிய அரசியல் கோட்பாட்டிற்கும் அடிமைத்தனத்தில் அவரது நடைமுறை ஈடுபாட்டிற்கும் இடையே ஒரு குறிப்பிடத்தக்க முரண்பாட்டை உருவாக்கி விடுகிறது. இந்த முரண்பாட்டை, ஐரோப்பியர்களைப் போன்ற அதே தார்மீக மற்றும் அரசியல் உரிமைகளுக்கு கறுப்பின மக்கள் முழுமையாகத் தகுதியானவர்கள் என்று லொக் கருதியதிலிருந்தும் எனவே அவர்களுக்கு வெள்ளையர்களுக்கு உரித்தல்லாத வெவ்வேறு விதிகளும் சட்டங்களும் பொருந்தும் என்று அவர் கருதியதிலிருந்தும் புரிந்து கொள்ள முடியும். அதாவது பூர்வீக அமெரிக்கர்களைப் பற்றி அவர் பயன்படுத்திய அதே தர்க்கத்தையே ஆபிரிக்கர்களுக்கும் அவர் பயன்படுத்தினார். ஆப்பிரிக்கர்கள் ஐரோப்பிய தரநிலைகளின்படி தங்கள் நிலத்தை முறையாக மேம்படுத்தவோ அல்லது உரிமையாக்கிக்கொள்ளவோ இல்லை என்றும், அவர்கள் பகுத்தறிவற்றவர்கள் என்றும் சித்தரிக்கப்பட்டதால், லொக்கின் கோட்பாடு ஐரோப்பியர்களுக்கு வழங்கிய உரிமைகளிலிருந்து அவர்கள் விலக்கப்பட்டு, அடிமைப்படுத்தப்படுவதற்கு ஏற்றவர்களாக நடத்தப்பட்டனர்.
மேலோட்டமாகப் பார்க்கையில், ரூசோவின் எழுத்துக்கள் தோமஸ் ஹொப்ஸ் மற்றும் ஜோன் லொக் போன்றோரிலிருந்து ஒரு விதிவிலக்காகத் தோன்றினாலும் ரூசோவும் காட்டுமிராண்டி என்ற கருத்துடன் தொடர்புபடுத்தப்படுவதுண்டு. தனது ‘அசமத்துவம் பற்றிய உரையாடல்’ (Discourse on Inequality) என்ற நூலில், சமூக அமைப்பொன்று உருவாவதற்கு முன்பு அனைத்து மனிதர்களும் ஒரு காலத்தில் இயற்கையின் நிலையில் வாழ்ந்ததாகவும், அதில் அவர்கள் “காட்டுமிராண்டிகளாக” வாழ்ந்ததாகவும் ரூசோ குறிப்பிடுகிறார். இருப்பினும், குறித்த நூலின் உள்ளடக்கத்தை இன்னும் விரிவாக ஆராய்ந்தால், இன வேறுபாடுகள் மற்றும் இனமேலாதிக்கக் கருத்தாக்கங்கள் இடம்பெற்றிருப்பதை அறிந்து கொள்ள முடியும். ரூசோ அனைத்துத் தரப்பினரையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பதாகத் தோன்றினாலும், அவரது வாதங்கள், இறுதியில் ஐரோப்பியர்களுக்கும் ஐரோப்பியர் அல்லாதவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளைக் காட்டும் வகையிலேயே நிறைவடைந்துள்ளன.
ரூசோ, தான் குறிப்பிடும் காட்டுமிராண்டிகளுக்கான ஒரே எடுத்துக்காட்டாக வெள்ளையரல்லாத மக்களையே கொண்டுவருகிறார். ஐரோப்பியர்களுக்குள் நிகழ முடியுமான காட்டுமிராண்டித்தனத்தின் எடுத்துக்காட்டுகளாக ஓநாய்கள் அல்லது கரடிகளால் வளர்க்கப்படும் குழந்தைகள் போன்ற அசாதாரண நிகழ்வுகளை மட்டுமே ரூசோ குறிப்பிடுகிறார். வேறு வார்த்தைகளில் கூறினால், ஐரோப்பியர்கள் இயல்பாகவே நாகரிகமானவர்களாகச் சித்தரிக்கப்படுவதோடு ஏதேனும் விலங்குகளால் அவர்களது குழந்தைகள் வளர்க்கப்படுவது மட்டுமே அவர்களைக் காட்டுமிராண்டிகளாக மாற்ற முடியும் என்றே ரூசோ கருதுகிறார். ஐரோப்பியர்களைப் பொறுத்தவரை காட்டுமிராண்டித்தனம் என்பது வெகு காலத்திற்கு முந்தைய ஒரு விடயமாகக் கருதும் ரூசோ, உலோகப் பயன்பாடு மற்றும் விவசாயத்தின் வளர்ச்சியே வெள்ளையர்களின் நாகரிகத்திற்கு வழிவகுத்தது என்றும் வாதிடுகிறார். அத்தோடு ஐரோப்பாவின் நிலங்கள் ஏனைய பகுதிகளை விடவும் வளமாகவும் போசாக்காகவும் இருந்ததாலேயே, அது மற்ற பகுதிகளை விடத் தொடர்ச்சியாகவும் வெற்றிகரமாகவும் நாகரிகமடைந்தது என்றும் ரூசோ விளக்குகிறார். உண்மையில் ரூசோவின் இந்தக் கூற்று வரலாற்று ரீதியாக சிக்கலானது. ஏனெனில் தமது நிலங்களில் விவசாயம் செய்து உலோகவியல் அறிவைச் சிறந்த முறையில் பெற்றிருந்த அஸ்டெக்குகள் மற்றும் இன்காக்களின் மேம்பட்ட நாகரீகங்களை ஐரோப்பியர்கள் சந்தித்த மிக நீண்ட காலத்திற்குப் பிறகே ரூசோ மேற்குறித்த குறிப்புக்களை எழுதினார். ஆயினும்கூட, அமெரிக்காவின் பழங்குடிகள், உலோகவியல் மற்றும் விவசாயம் ஆகிய இரண்டிலும் பரிச்சயம் இல்லாதவர்களாக இருந்ததாகவும், அதனால் அவர்கள் காட்டுமிராண்டிகளாகவே இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார். விளைவாக, ஆரம்பத்தில் மனித இனத்தின் வளர்ச்சி தொடர்பானதாகத் தோன்றும் விளக்கங்கள், இறுதியில் வரலாற்றின் மிக முக்கியமான உண்மைகளைப் புறக்கணிக்கின்ற அல்லது தவறாகச் சித்தரிக்கின்ற ஒரு திரிபுபடுத்தப்பட்ட விடயங்களாக மாறிவிடுகிறது. வேண்டுமென்றே நிகழும் இந்த விடுபடல்களும் தவறுகளும், நாகரிகம் மற்றும் மானிட வரலாறு குறித்த விளக்கங்களில் ஐரோப்பியர்களை ஐரோப்பியரல்லாதவர்களுக்கு மேலாகத் தொடர்ந்தும் நிலைநிறுத்தும் இன மேலாதிக்கவாத அடிப்படைக் கூறுகளையே கொண்டுள்ளன.
சமூக ஒப்பந்தம்’ என்ற நூலில், மனிதர்கள் நீதியைப் புரிந்துகொண்டு நடைமுறைப்படுத்தக்கூடிய முழுமையான தார்மீக முகவர்களாக மாறுவதற்கு, இயற்கை நிலையைக் கைவிட்டு நாகரிகமடைந்த சமூகத்தில் நுழைவது அவசியம் என்று ரூசோ வாதிடுகிறார். எனவே, அவர் சில சமயங்களில் வெள்ளையரல்லாத மக்கள் மீது கரிசனை கொண்டிருந்தாலும், அது வரம்புக்குட்பட்டதாகவே அமைந்துவிடுவதோடு. அது பல்வேறு மனிதர்களின் மனித அந்தஸ்த்தை முழுமையாக அங்கீகரிப்பதிலிருந்தும் தவிர்ந்து விடுகிறது. ஆகவேதான், வெள்ளையரல்லாத மக்களைப் பற்றிய ரூசோவின் நேர்மறையான வாதங்களை வைத்து, அவர்கள் ஐரோப்பியர்களுக்குச் சமமானவர்கள் என்றோ அல்லது அவர்களை விட உயர்ந்தவர்கள் என்றோ புரிந்துகொள்ள முனையக் கூடாது. மாறாக, முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நாகரிகமான சமூகத்தில் வாழும் ஐரோப்பியர்களே மனித வளர்ச்சியின் மிக உயர்ந்த கட்டமாகத் திகழ்கிறார்கள் என்பதே அவரது வாதங்களின் ஒட்டுமொத்த சாரமாக அமைந்திருக்கின்றது. “நாகரிகமடைந்தவர்கள்” மற்றும் “காட்டுமிராண்டிகள்” ஆகியோருக்கு இடையேயான அடிப்படை இனப் பிரிவினையும், முன்னவர்களைப் பின்னவர்களுக்கு மேலாக வைக்கும் படிநிலை அமைப்பும், தெளிவாக அப்படியே ரூசோவின் கருத்துக்களிலும் தொடர்கின்றன.
இறுதியாக, ஐரோப்பிய சிந்தனையில் இன மேலாதிக்கவாதச் செல்நெறிகளின் செல்வாக்கிற்கு மிகத் தெளிவான எடுத்துக்காட்டுகளில் ஒன்றாக இம்மானுவேல் கான்ட்டின் அரசியல் கோட்பாட்டைப் புரிந்து கொள்ள முடியும். கான்ட்டின் காலப்பகுதியில், சமூக ஒப்பந்தவாதம் ஒரு வரலாற்றுப் பதிவாக அன்றி ஒரு சுருக்கமானதும் அருவமானதுமான தத்துவக் கருத்தாக மாறியிருந்தது. கான்ட்டின் கோட்பாடு, பகுத்தறிவு மற்றும் ஏனைய ஏனைய தார்மீகக் கொள்கைகளில் அதிக கவனம் செலுத்தியதால், அதில் இனம் மற்றும் இன மேலாதிக்கம் போன்ற கருத்துக்களுக்கு எந்த முக்கியத்துவமும் இருக்காது என்று ஒருவர் கருத முடியும். ஆனால், கான்டின் சிந்தனைகளை பகுத்தாராயும் போது இதற்கு மாறான விடய்ங்களைத் தெரிந்து கொள்ள முடியும். இம்மானுவேல் காண்ட், நவீன காலத்தின் மிக முக்கியமான தத்துவஞானிகளில் ஒருவராகவும், சமகால அரசியல் தத்துவத்தில் பெரும் செல்வாக்கு செலுத்தியவராகவும் கருதப்பட்ட போதிலும், நவீன இனமேலாதிக்கவாத கருத்துக்களின் வளர்ச்சியிலும் அவர் ஒரு குறிப்பிடத்தக்க பங்கை ஆற்றியுள்ளார். 1775ம் ஆண்டுக் காலப்பகுதியில் மனிதகுலத்தின் வெவ்வேறு இனங்கள் குறித்து வெளியான தனது கட்டுரையில், ஒரு இனத்தின் பண்புகள் அதன் சுற்றுச்சூழல் நிலைமைகளால் வடிவமைக்கப்படுவதை விட, அவை மரபுவழியாகவே தீர்மானிக்கப்படுகின்றன எனவும் அவை நிரந்தரமானவை என்பதோடு அவற்றை புறச் சூழல் காரணிகளால் மாற்றிவிடவும் முடியாது என்று காண்ட் வாதிட்டார். காண்டினைப் பொறுத்தவரை, இனம் என்பது அறிவாற்றல் உள்ளிட்ட மனிதகுல வளர்ச்சியில் செல்வாக்குச் செலுத்தும் ஒரு நிலையான உயிரியல் யதார்த்தமாகவே அமைகிறது. இதன் நீட்சியாக, பகுத்தறிவு மற்றும் ஏனைய தார்மீக விழுமியங்களை அடிப்படையாகக் கொண்ட கான்ட்டின் சமூக – அரசியல் கோட்பாடானது, வெவ்வேறு மக்கள் குழுக்களைப் படிநிலைப் பிரிவுகளாக கருதியதுடன் அதில் இனவாதக் கருத்துக்களையும் உள்ளடக்கியிருந்தது. இவ்வாறு மனித மாண்பு மற்றும் மானுட அறிவாற்றல் குறித்த ஒரு கோட்பாட்டை முன்வைத்ததற்காகப் போற்றப்படும் கோட்பாட்டாளரான காண்ட், சில இனக் குழுக்களுக்கு முழுமையான சமத்துவத்தை தர மறுத்த கோட்பாடுகளுடனும் தொடர்புபடுத்தப் படுகிறார்.
இம்மானுவேல் ஈஸ் (Emmanuel Eze) சுட்டிக்காட்டுவது போல, காண்ட் சுமார் நாற்பது ஆண்டுகள் மானுடவியல் மற்றும் பௌதீகப் புவியியல் கற்பித்த ஒரு கோட்பாட்டாளர். எனவே, மனித இயல்பு குறித்த அவரது பார்வைகளை முழுமையாகப் புரிந்துகொள்ள, அவரது தத்துவ நூல்களை இந்த விரிவுரைகளுடன் சேர்த்தே படிக்க வேண்டும். ஏனெனில், தார்மீக நெறியியல் குறித்த அவரது கருத்துக்கள் இனரீதியான முன் அனுமானங்களால் எந்த அளவிற்குப் பாதிக்கப்பட்டிருந்தன என்பதை இந்த விரிவுரைகள் தெளிவாகவே வெளிப்படுத்துகின்றன. அந்தவகையில் கான்ட்டின் மிகவும் சர்ச்சைக்குரிய கூற்றுகளில் ஒன்றை அவரது Observations on the Feeling of the Beautiful and Sublime ‘ என்ற நூலில் கண்டு கொள்ள முடியும். அதில், கறுப்பின மற்றும் வெள்ளையின மக்களிடையே உடலியல் ரீதியான வெளித் தோற்றத்தில் மட்டுமன்றிஇ, உள ரீதியாகவும் பல வேறுபாடுகள் உள்ளன என்று அவர் வாதிடுகிறார். இம்மானுவேல் காண்டின் இக்கருத்தானது, இனமேலாதிக்கவாதக் கருத்துக்களுக்கான அடிப்படைச் சான்றாகக் கறுப்பின அறிஞர்களால் அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் ஒன்றாகும். ஈஸே (Emmanuel Eze ) சுட்டிக்காட்டுவதன் பிரகாரம் காண்ட்டின் இந்தக் கூற்றை, கான்ட்டின் பரந்த தத்துவத்துடன் சிறிதும் தொடர்பில்லாத ஒரு உதிரிக் கருத்தாகவோ அல்லது அவரது தனிப்பட்ட அபிப்ராயமாகவோ புறக்கணித்து விடக்கூடாது. மாறாக, இனம் என்பதை அறிவாற்றல் மற்றும் தார்மீகக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள ஒன்று என்ற கருத்தின் பின்னணியிலேயே பார்க்கப்பட வேண்டும். இம்மானுவேல் கான்ட்டின் இதுபோன்ற இன மேலாதிக்கவாதக் கருத்துக்கள் பிரதான கல்விசார் புலத்தில் புறக்கணிக்கப்பட்டதாலேயே இது போன்ற கருத்துக்கள் உண்மையில் புதிதாகத் தோன்றுகின்றன. பாராம்பரியமாக கல்விசார் புலமைவாதிகள், இனம் குறித்த காண்டின் எழுத்துக்களைக் காட்டிலும் அவரது பகுத்தறிவு பற்றிய கோட்பாடுகளுக்குப் அதிக கவனம் செலுத்தியதன் விளைவாக, அவரது சிந்தனையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கிய இன மேலாதிக்கக் கருத்தாக்கங்கள் பெரும்பாலும் மறைக்கப்பட்டோ அல்லது போதிய அளவு ஆராயப்படாமலோ இருந்துள்ளன.
சொல்லப்போனால் இம்மானுவேல் காண்ட், தோலின் நிறத்தை அடிப்படையாகக் கொண்டு ஒரு இனப் படிநிலை அமைப்பை உருவாக்கினார். ஐரோப்பியர்கள், ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் பூர்வீக அமெரிக்கர்களை, அவர்களின் இயல்பான திறன்கள் எனத் தாம் நம்பியவற்றின்படி தரவரிசைப்படுத்தினார். வெவ்வேறு இனங்கள் வெவ்வேறு அளவிலான உள்ளார்ந்த திறமையையும் அறிவாற்றலையும் கொண்டிருப்பதாக அவர் நம்பினார்.
ஈஸ் (Emmanuel Eze) விளக்குவது போல, வெள்ளையின ஐரோப்பியர்களை இந்தப் படிநிலையின் உச்சியில் இம்மானுவேல் கான்ட் வைத்தார். ஏனெனில் அவர்களிடம் பெருமளவில் இயல்பாகவே அமைந்த திறமையும், பகுத்தறிவு மற்றும் தார்மீக வளர்ச்சிக்கான ஆற்றலும் இருப்பதாக அவர் நம்பினார். ஆசியர்கள் ஐரோப்பியர்களுக்குக் கீழாகவும், ஆபிரிக்கர்கள் ஆசியர்களுக்குக் கீழாகவும், பூர்வீக அமெரிக்கர்கள் அடிமட்டத்திலும் வைக்கப்பட்டனர். இதன் பிரகாரம், ஒரு நபரின் தோல் நிறம் அவரது அறிவாற்றல் மற்றும் ஆளுமைக்கான சான்றாகக் கருதப்பட வேண்டும். கான்ட்டைப் பொறுத்தவரை, தோல் நிறம் என்பது வெறும் ஒரு உடல் சார்ந்த பண்பு என்பதையும் தாண்டி அது ஒருவரின் பகுத்தறிவை வளர்த்துக்கொள்வதற்கும், ஒழுக்க மேம்பாட்டை அடைவதற்குமான திறன்களின் ஒரு மிக முக்கியமான அளவீடாகக் கொள்ளப்பட்டது.
அதுமட்டுமின்றி, தோலின் நிறத்தை நிரந்தரமானதும் மாற்ற முடியாததுமான பண்பின் சான்றாக இம்மானுவேல் காண்ட் கருதினார். பகுத்தறிவு, தார்மீக வளர்ச்சி மற்றும் சுய முன்னேற்றத்திற்குத் தேவையான அனைத்து திறமைகளையும் இயல்பாகவே ஐரோப்பிய வெள்ளையர்கள் பெற்றிருப்பதாக நம்பப்பட்டது. ஆசியர்கள் ஓரளவிற்கு வளர்ச்சி அடையக்கூடியவர்களாகக் கருதப்பட்டாலும், அருவக் கருத்துக்களை (Abstract concepts) உருவாக்கும் திறனில் அவர்கள் வரம்புக்குட்பட்டவர்கள் என்று கருதப்பட்டது. ஆப்பிரிக்கர்கள் இயல்பாகவே சோம்பேறிகளாகச் சித்தரிக்கப்பட்டதுடன் கான்ட்டின் பார்வையில், அவர்கள் பணிவிடைகளுக்கும் அடிமைத்தனத்திற்கும் மட்டுமே பொருத்தமானவர்களாகக் கருதப்பட்டார்கள். அதே சமயம், பூர்வீக அமெரிக்கர்கள் அறிவாற்றல் உள்ளிட்ட சுயமுன்னேற்றச் செயற்பாடுகளுக்குத் திறனற்றவர்களாகக் கருதப்பட்டனர்.
உலகளாவிய ரீதியில் மனித மாண்பையும் தார்மீக சமத்துவத்தையும் பாதுகாத்த ஒரு தத்துவஞானியாகக் கருதப்படும் கான்ட் பற்றிய பொதுவான பிம்பத்திற்கு முற்றிலும் முரணாக, பகுத்தறிவு மற்றும் தார்மீக ரீதியாக யாரால் முழுமையாக முன்னேற முடியும் என்பது குறித்த கருத்துடன் இனம் என்ற கருத்தாக்கம் நெருக்கமாக இணைக்கப்பட்ட கான்ட்டின் வாதம் அமைந்துள்ளது. முழுமையான ஆளுமை என்பது உண்மையில் எல்லா மனிதர்களுக்கும் கிடைக்கக்கூடியதல்ல. மாறாக, அது இனத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. இதில் வெள்ளையின ஐரோப்பியர்கள் மிக உயர்ந்த இடத்தைப் பிடித்திருந்தனர். ஈஸ் (Emmanuel Eze) கூறுவது போல, கான்ட்டின் இனவாதக் கட்டமைப்பிற்குள், முழுமையான மனித ஆளுமையானது வெள்ளையின ஐரோப்பியர்களுக்கு மட்டுமே சொந்தமாகக் கருதப்பட்டதால், கறுப்பின மக்களுக்கு முழுமையான மனிதம் மறுக்கப்பட முடியுமான வாய்ப்புக்களும் உள்ளன.
இவர்களைப் போலவே நாசிசத்துடனான தொடர்புகள் காரணமாக போல் டி மேன் (Paul de Man) மற்றும் மார்ட்டின் ஹைடெக்கர் (Martin Heidegger) போன்றவர்களையும் ஒரு பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டியிருக்கிறது. இம்மானுவேல் காண்டின் செல்வாக்கை விடவும் இவர்களது தத்துவ உலகின் செல்வாக்கின் வீச்சு குறைவாக இருந்த போதிலும் அரசியல் கோட்பாடுகள் மற்றும் அரசியல் செயற்பாடுகள் ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைக் கருத்தில் கொண்டு இதனை ஆராய வேண்டியுள்ளது. கான்ட்டின் கருத்துக்களும் கோட்பாடுகளும் மேற்கூறிய இருவரைப் போன்று நேரடியாக ஒரு இனவழிப்பை நியாயப்படுத்தும் அளவிற்குச் சென்றிருக்கவில்லை என்றாலும், நவீன காலத்தின் மாபெரும் தார்மீகக் கோட்பாட்டாளராகக் கருதப்படும் கான்ட், மனிதர்களை உயர்ந்த மற்றும் தாழ்ந்த இனக் குழுக்களாகப் பிரிக்கும் கருத்துக்களுக்கு கோட்பாட்டு அடித்தளத்தை வரைந்தமையானது உண்மையிலேயே சிக்கலான விடயமாகும். நாசி ஜேர்மனியின் இனப்படுகொலை மற்றும் இனச் சுத்திகரிப்புக்கான தத்துவார்த்த அடித்தளமாக இருந்த, Herrenvolk எனும் அதி மனிதர்கள் மற்றும் Untermenschen எனும் மனித நிலைக்குக் குறைவானவர்கள் என்ற படிநிலைகளுக்கான ஆதார அடிப்படைகளை இட்டதில் இம்மானுவேல் காண்டின் தத்துவச் செல்வாக்கு பெரும் பங்கை ஆற்றியது. இவ்வாறு, நவீன அறவியல் தத்துவத்தையும் (Moral philosophy) மனித மாண்பு குறித்த கோட்பாடுகளையும் வடிவமைக்க உதவிய அதே சிந்தனையாளர், நவீன இனக் கோட்பாட்டின் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளார் என்பதை ஆராயும் போது, நவீன அறவியல் கோட்பாடும் (Moral philosophy) நவீன இனக் கோட்பாடும் கான்ட்டின் படைப்பில் ஒரு பொதுவான அறிவுசார் மூலத்தைக் கொண்டிருப்பதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
மேற்குறித்தவாறு சமூக ஒப்பந்தவாதத்தின் கீழ் இனமேலாதிக்க வாதமானது எவ்வாறு செயல்படுகிறது மற்றும் அதன் விதிகள் எவ்வாறு வடிவமைக்கப்படுகின்றன என்பதை ஆராய வேண்டியது அவசியமாகிறது. சில சமயங்களில் வெளிப்படையாகவும், சில சமயங்களில் மறைவாகவும் காணப்படும் இன மேலாதிக்கக் கூறுகள், சமூகங்களும் அவற்றின் வரலாற்றுச் சூழமைவுகளும் வேறுபட்டமைவதால் காலப்போக்கில் வெவ்வேறு வடிவங்களை எடுத்துக் கொள்கின்றன. அவ்வாறு மாற்றங்களுக்கு உட்படும் போது, நடைமுறையில் சமூக ஒப்பந்தம் செயல்படும் விதங்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. அத்தோடு சமூக ஒப்பந்தம் என்பது, சமூகமொன்றை வடிவமைக்கும் வகையில் ஒரேயொரு முறை நிகழும் உடன்படிக்கையாகக் கருதப்பட்டு பிற்கால சந்ததியினர் அதனையே தொடர்ந்து ஏற்றும் வருகிறார்கள். ஆனால் காலப்போக்கில் மாற்றத்திற்கு உட்பட்டு வரும் சமூக ஒப்பந்த வாதத்தின் கீழால் இயங்கும் இனமேலாதிக்கக் கூறுகள் அனைத்துமே, இனத்தின் அடிப்படையில் மக்களை வித்தியாசமாக நடத்தும் புதிய வழிகளை உருவாக்கி, இன சமத்துவமின்மை தொடர்ந்து பேணி வருவதற்கு உதவுகிறது.
சமூக ஒப்பந்தவாதம் மற்றும் அதன் உள்ளடக்கக் கூறாகவுள்ள இனமேலாதிக்க அடிப்படைகளை உலகளாவிய ரீதியில் எழுச்சியுற்ற வெள்ளையின மேலாதிக்கத்திற்கு முற்பட்ட காலம் மற்றும் பிற்பட்ட காலம் எனப் பிரித்து நோக்க முடியும். இதில் வெள்ளையின மேலாதிக்கத்திற்கு முந்தைய காலம் என்பது, ஐரோப்பிய ஆதிக்கமானது அமைப்பு ரீதியாக உருவாகிப் பரவலடைந்து கொண்டிருந்த காலத்தைக் குறிக்கிறது. அதற்குப் பிந்தைய காலகட்டத்தை இரண்டு கட்டங்களாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது, முறையாகவும் அமைப்பாக்க ரீதியிலும் பலமடைந்த வெள்ளையின மேலாதிக்கக் காலகட்டமாகும். இதில் ஐரோப்பியப் படையெடுப்பு, ஆப்பிரிக்க அடிமைத்தனம், காலனித்துவம், வெள்ளையின இனமேன்மைவாத மற்றும் இனவாதக் கோட்பாடுகளின் பரவலான ஏற்பு ஆகியவை அடங்கும். இந்தக் காலகட்டத்தில், இனப் பாகுபாடுச் சட்டங்கள் அனைத்துமே நிறுவன ரீதியாகவும் அதிகாரப்பூர்வமாகவும் ஆதரிக்கப்பட்டு வந்தது. இரண்டாவது காலகட்டமாக நடைமுறையில் நிலவும் வெள்ளையின மேலாதிக்கத்தின் தற்போதைய சகாப்தத்தினைக் குறிக்க முடியும். இந்தக் காலகட்டத்தில், வெள்ளையின ஆதிக்கம் பொதுவாக சட்டங்களிலோ அல்லது அரசியலமைப்புகளிலோ எழுதப்பட்டிருப்பதில்லை என்றாலும் மேலாதிக்கம், அடிமைத்தனம் மற்றும் காலனித்துவம் ஆகியவற்றின் வரலாற்று நீட்சியாகப் பெறப்பட்ட சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பொருளாதார அம்சங்கள் மூலம் அது இன்றும் தொடர்கிறது.
முதல் காலகட்டத்தில், வெள்ளையின மேலாதிக்கம் அதிகாரப்பூர்வமாகவும் வெளிப்படையாகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. நில அபகரிப்பு, அடிமைத்தனம் மற்றும் காலனித்துவம் போன்றன, வெள்ளையின மக்களுக்குச் சிறப்புரிமைகள் இருந்தன என்பதையும், சமூக ஒப்பந்தத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட உரிமைகள் அவர்களுக்கு மட்டுமே உரியன என்பதையும் தெளிவாகவே எடுத்துக் காட்டின. இன சமத்துவமின்மையும் இன மேலாதிக்கமும் வெளிப்படையாகக் முன்வைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டதால், நிழல் அர்த்தங்களைத் தேடிக் கண்டறிய வேண்டிய அவசியம் இருக்கவில்லை. ஆனால் இரண்டாம் காலகட்டத்தில் அதாவது சமகாலத்தில், இன மேலாதிக்க அம்சங்கள் அதிகாரப்பூர்வமாகச் சட்டங்களிலோ அரசியலமைப்புகளிலோ எழுதப்படவில்லை என்பதோடு சமூக ஒப்பந்தத்தின் உரிமைகள், இன வேறுபாடின்றி அனைத்து மக்களுக்கும் முறையாக கோட்பாட்டு ரீதியில் வாக்களிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் சட்டப்படி அனைவரும் சமமாக இருந்தாலுமே, ஒப்பீட்டளவில் வெள்ளையின மக்களே இன்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அனுகூலங்களை அனுபவித்து வருகின்றனர். இது சம உரிமைகள் என்ற இலட்சியத்திற்கும், தொடரும் இனரீதியான சிறப்புரிமைகளின் யதார்த்தத்திற்கும் இடையேயுள்ள இடைவெளிகளை எடுத்துக் காட்டுகின்றன. அந்த அடிப்படையில் நோக்கும் போது இன மேலாதிக்கம் என்பது அதிகாரப்பூர்வமாக சட்ட ஏற்பாடுகளில் எழுதப்படாவிட்டாலும் அது இன்றும் பலமாக நிலவுவதை அவதானிக்க முடியும். முறைகேடான நிலப்பகிர்வு, நியாயமற்ற வேலைவாய்ப்பு, மற்றும் வளப்பகிர்வில் பாகுபாடு போன்றன குறித்த அரசியல் நடைமுறைகளில் அது தெளிவாகவே வெளிப்படுகிறது. இவ்வாறு பல்வேறு வாய்ப்புகளில் நிலவும் சமத்துவமின்மைகளை மக்கள் கேள்விக்குட்படுத்தாதபோது அது தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்கிறது. அனைவருக்கும் சமமான சட்ட உரிமைகளை வழங்கிவிடுவதால் பல நூற்றாண்டுகளாக நிலவிவரும் இனப்பாகுபாடுகளை சரிசெய்து விட முடியும் என்று பலர் கருதுகின்றனர். விளைவாக அமைப்பு ரீதியாக இடம்பெற்று வரும் இத்தகைய இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளுக்கு எதிரான குரல்கள் எழுப்பப்படும் வேளைகளில் அவை பொது அமைதிக்கான குந்தகம் என முத்திரை குத்தப்பட்டு அதன் பெறுமதி இல்லாமல் ஆக்கப்பட்டு விடுகின்றன.
சமூக ஒப்பந்தம் என்பதன் கீழாக இயங்கும் இனவாத அடிப்படைகள், உலகை வெவ்வேறு இனங்களின் பகுதிகளாகப் பிரித்து, சில பிராந்தியங்களை மற்றவற்றை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் கட்டமைக்கிறது. ஐரோப்பாவையும் ஐரோப்பிய சமூகங்களையும் நாகரிகம் மற்றும் நாகரீக முன்னேற்றத்தின் மையமாக முன்வைப்பதுடன் ஏனைய ஐரோப்பா அல்லாத பிராந்தியங்கள் அந்த வளர்ச்சிப் பாதைக்கு வெளியே அல்லது அதிலிருந்து தனித்துக் காணப்படுபவையாக முன்னிறுத்தப்படுகின்றன. விளைவாக, ஐரோப்பியரல்லாத சமூகங்களின் வரலாறுகள், சாதனைகள் மற்றும் பங்களிப்புகள் உலக வரலாற்றுப் பதிவுகளில் இருந்து புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. பிரட்ரிக் ஜேம்ஸன் கூறவது போல தங்கள் நாடுகள் உண்மையில் எவ்வாறு செல்வம் மிக்கவையாகவும் சக்திவாய்ந்தவையாகவும் மாறின என்பதை ஐரோப்பியர்கள் புரிந்துகொள்வதை காலனித்துவம் கடினமாக்கி இருந்தது. ஆபிரிக்கா, ஆசியா மற்றும் அமெரிக்காவில் இருந்து ஐரோப்பாவை வந்தடைந்த பல்வேறுபட்ட வளங்களும், செல்வங்களும், உழைப்பும் ஐரோப்பியர்களின் அன்றாட வாழ்விலிருந்து மறைக்கப்பட்டிருந்தன. சமூக ஒப்பந்தக் கோட்பாடானது ஐரோப்பிய நாடுகளையும் வெள்ளையர்களையும் மட்டுமே மையமாகக் கொண்டிருந்ததால் இத்தகைய யதார்த்தங்களை புரிந்து கொள்வதை விட்டும் ஐரோப்பியர்கள் விலக்கி வைக்கப்பட்டிருந்தனர். விளைவாக ஐரோப்பிய வெள்ளையர்கள் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்திற்கு முழுமுதல் காரணமான காலனிய நிலங்களில் வாழ்ந்த மக்களின் உழைப்பும், அர்ப்பணிப்பும் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பியர்கள் பெற்றிருக்கும் கடின உழைப்பாலும், அவர்கள் பெற்றிருக்கும் பகுத்தறிவினாலுமே அவர்களது முன்னேற்றம் சாத்தியமானது என்ற கற்பிதம் உருவானது. அதுபோலவே ஐரோப்பா உலகின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வகையில் தானாகவே சக்திவாய்ந்ததாகவும் செல்வம் படைத்ததாகவும் மாறியது போலவும் ஐரோப்பா ஏதோ அதிசயமொன்றை நிகழ்த்தியதாகவுமே இன்று பொது உளவியலில் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இச்சிந்திப்பு முறைமையானது ஐரோப்பாவின் வளர்ச்சிக்கு உண்மையிலேயே பங்காற்றிய ஐரோப்பா அல்லாத பிரதேசங்களின் பங்களிப்புக்களை சூனியமாக்கி விடுகிறது. உண்மையில், ஐரோப்பாவின் செல்வமும் வெற்றியும் ஐரோப்பாவுக்கு வெளியே உள்ள ஏனைய நிலங்களையும் அதன் மக்களையும் சுரண்டுவதன் மூலமே கட்டமைக்கப்பட்டன. இருப்பினும் சமூக ஒப்பந்தக் கோட்பாடானது ஐரோப்பாவை மட்டுமே கருத்தில் கொள்வதால், அது சுதந்திரமாகத் தன்னைத்தானே சுயமாக உருவாக்கிக் கொண்டதாகச் சித்தரிக்கப்படுகிறது. விளைவாக, வரலாற்றின் பக்கங்களில் உள்ள உலகின் ஏனைய பகுதிகள் புறக்கணிக்கப்பட்டு, வெறுமனே “மூன்றாம் உலகம்” என்று ஒன்றாகக் குழுமப்படுத்தப்படுகின்றன. காலனித்துவம் மற்றும் அதன் சுரண்டல்கள் ஆகிய காரணிகள் புறக்கணிக்கப்பட்டு ஐரோப்பா அல்லாத நாடுகளின் ஏற்பட்டிருக்கும் வறுமையும், அபிவிருத்தி இல்லாத நிலையும் அவர்களின் சொந்தத் தவறுகளாக விளக்கப்படுகின்றன.
நாடளாவிய ரீதியில், சமூக ஒப்பந்தத்தால் வாக்குறுதியளிக்கப்பட்ட உரிமைகளை, வெள்ளையரல்லாத மக்களுக்கு வழங்குவது தொடர்பில் வெள்ளையர்கள் காட்டும் எதிர்ப்பிலிருந்து இன மேலாதிக்க உணர்வுகள் வெளிப்படுகின்றன. கடந்த காலங்களில், வெள்ளையரல்லாத மக்களுக்கு சமத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் வெளிப்படையாகவே மறுக்கப்பட்டு வந்தன. சமூக, பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில் அமைப்பு ரீதியாக நிறுவப்பட்டுள்ள இன மேலாதிக்கவாதம் மற்றும் இனப்பாகுபாடுகளை பேணிக் கொண்டே வெள்ளையரல்லாத விளிம்பு நிலை மக்களுக்கு அவர்களது உரிமைகள் தொடர்பாக வெறுமனே சட்ட ரீதியான ஏற்பாடுகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களை சமமான குடிமக்களாக மாற்றிவிட முடியும் என்று கூறப்பட்டு வருகிறது.
சில நேரங்களில், சமூக ஒப்பந்தத்தினுடைய இனவாதப் பரிமாணங்களின் பல புதிய கூறுகள் வெளிப்படையாகவே நியாயமற்றவையாக இருக்கின்றன. உதாரணமாக, ஜிம் க்ரோ (Jim Crow) சட்டமுறைமையானது, கறுப்பினத்தவரும் வெள்ளையினத்தவரும் வேறுபட்ட முறைகளில் நடாத்தப்பட்டாலும் அவர்கள் சமமாகவே நடத்தப்படுவார்கள் என்று விளக்கியது. உண்மையில், இந்தச் சட்ட முறைமையின் ஊடாக கறுப்பினத்தவர்கள் மிகக் குறைவான உரிமைகளையே பெற்றதோடு அவர்களைச் சுரண்டுவதற்கான வாய்பு்புகளைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கும் பணியையும் இந்தச் சட்ட முறைமை செய்தது. அதுபோலவே நிகழ்த்தப்படும் எல்லா வகையான இனப்பாகுபாட்டு நடவடிக்கைகளையும் நிரூபணம் செய்ய முடிவதில்லை. வேலைவாய்ப்புக்களின் போது நியாயமற்ற முறையில் நடந்துகொள்வது உள்ளிட்ட இருப்பிடங்களை வாடகைக்கு எடுத்துக் கொள்வதில் பாராபட்சம் போன்ற பல்வகைப்பட்ட பாகுபாடுகளை நிரூபிப்பது கடினமாக உள்ளது. உதாரணமாக, சில வேலைவாய்ப்பு முகவரமைப்புகள், கறுப்பின விண்ணப்பதாரர்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டும் முனைப்புடன் இரகசிய வழிகளைப் பயன்படுத்தின. 1990களில், நியூயோர்க்கில் உள்ள ஒரு பெரிய முகவரமைப்பின் முன்னாள் ஊழியர்கள் பலரின் கருத்தின் பிரகாரம், கறுப்பினத்தவர்களை வேலைக்கு அமர்த்த விரும்பாத முதலாளிகள் பலர் “All American” போன்ற குறியீட்டுச் சொற்களைப் பயன்படுத்தினர். அதுமட்டுமின்றி வேலைவாய்ப்பை வழங்கும் முகவரமைப்புக்கள் பலவும், விண்ணப்பித்திருந்த கருப்பினத்தவர்களின் முதலெழுத்துக்களை மாற்றி அமைப்பதன் மூலம் அவர்களை கறுப்பின விண்ணப்பதாரர்களாக இரகசியமாக அடையாளம் காட்டின. சமத்துவம் தொடர்பான சட்டங்கள் கோட்பாட்டளவில் இருந்தாலும் இனப் பாகுபாட்டுச் செயற்பாடுகள் தொடர்ந்தும் இது போன்ற வழிகளில் நிகழ்ந்து கொண்டே வருகின்றன.
இதுபோலவே, “அமெரிக்க இன ஒதுக்கல் (American apartheid)” பற்றிய ஒரு ஆய்வானது அமெரிக்காவில் தொடரும் இனப் பாகுபாடுகள் பற்றியும் அவை எவ்வாறு பொதுமன்ற உரையாடல்களில் இருந்து மறைக்கப்படுகிறது என்றும் ஆராய்கிறது. கடந்தகாலங்களில், அநேகமான காணி முகவரமைப்புகள் (Real estate), கறுப்பின மக்களுக்கு வீடுகளையோ காணிகளையோ விற்பதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தன. அன்றாட வேளைகளில் அவர்கள் நட்பாக நடந்துகொண்டாலும், வெள்ளையர்கள் வசிக்கும் பகுதிகளில் கறுப்பின மக்கள் வீடுகளை வாங்குவதையோ அல்லது வாடகைக்கு எடுப்பதையோ கடினமாக்குவதற்காக பல்வேறு தந்திரங்களையும், சாக்குப்போக்குகளையும் அவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதுபோன்ற பாகுபாடுகள் வெளியில் பெரிதாகத் தெரிவதில்லை என்பதால் அதனை நிரூபிப்பது பெரும்பாலும் கடினமாகவே உள்ளது. சொல்லப்போனால் இனப் பாகுபாட்டுக்கு உள்ளாகும் கறுப்பின மக்கள்கூட, தமக்கு பாகுபாடு காட்டப்படுகிறது என்பதில் பிரக்ஞையற்று இருக்கலாம். இது போன்ற விடயங்களை கவனத்தில் கொண்டு தான் பல்வேறு அறிஞர்கள் “இனம் என்பது எல்லா இடங்களிலும் இருக்கிறது; அதேசமயம் இல்லாமலும் இருக்கிறது” என்று எழுதுகிறார்கள். உண்மையில் வெள்ளையர் அல்லாத மக்களின் அன்றாட வாழ்க்கையை வலுவாகப் பாதிக்கும் இனப்பாகுபாட்டு நடவடிக்கைகள், அரசியல் மற்றும் தார்மீகக் கோட்பாடுகளில் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டே வருகிறது. தொடர்ந்தும் இனச் சலுகைகளால் பயனடைபவர்களால் மட்டுமே இன அடையாளம் முக்கியமற்றது என்றும் இனப்பாகுபாடுகள் இப்போது காட்டப்படுவதில்லை என்றும் எளிதாகக் கூறி விட முடியும். வெள்ளையர்களைப் பொறுத்தவரை, பெரும்பாலும் அவர்களின் அனுபவங்களையும் ஆர்வங்களையும் மையமாகக் கொண்டு உலகம் கட்டமைக்கப்பட்டுள்ளதால் இன அடையாளங்கள் கண்ணுக்கத் தெரியாமல் இருக்கலாம். ஒரு மீன் தான் நீந்தும் தண்ணீரைக் கவனிக்காதது போலவே, வெள்ளையர்களும் தங்களுக்குச் சலுகை அளிக்கும் அமைப்பொழுங்குகளின் இனவாத இயல்பைக் கவனிக்காமல் இருக்கலாம். ஏனெனில் அவர்களைப் பொறுத்தவரை இயல்பு வாழ்க்கை என்பது இனப்பாகுபாட்டால் சூழப்பட்ட உலகில் சலுகைகளை அனுபவிக்கும் உலகம் தான். இதனையே டொனி மொரிசன் (Toni Morrison) இனவாதமற்ற உலகு என்பது கட்டமைக்கப்பட்ட புனைவே தவிர அது நிஜமல்ல என்று கூறுகிறார்.
இனம் முக்கியமா இல்லையா என்பது குறித்து வெள்ளையரல்லாதவர்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடக்கும் தற்கால விவாதங்களை, சமூக ஒப்பந்தத்திற்கு அடியில் புதைந்துள்ள இனமேலாதிக்கக் கருத்துக்களை மறுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ செய்யப்படும் முயற்சிகளாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும். வெள்ளையரல்லாதவர்கள் பொதுவாக கருத்தியல் அரசியல் கோட்பாடுகளை எதிர்ப்பதில்லை. அவர்களின் விமர்சனம் என்னவென்றால், மைய நீரோட்டத்தில் உள்ள பிரதான சமூக மற்றும் அரசியல் கோட்பாடுகள் யாவுமே பெரும்பாலும் இனம் மற்றும் இன மேலாதிக்கவாதத்தின் உண்மையான நடைமுறை யதார்த்தத்தை புறக்கணித்து, யதார்த்தத்துடன் பொருந்தாத ஒரு புனைவை உருவாக்குகின்றன என்பதாகவே அமைகின்றன. உண்மையில் சமூக ஒப்பந்தக் கருத்தியலமைப்பானது சமூகத்தில் நிலவும் அசலான பிரச்சினைகளையும் சமத்துவமின்மைகளையும் தொடர்ச்சியாக புறக்கணித்து வருகிறது. இதனால் இன மேலாதிக்கவாதத்தின் விளைவுகளை தினமும் அனுபவித்து வருகின்ற வெள்ளையரல்லாத மக்களின் வாழ்வை, இனம் பற்றிய கருத்தாக்கம் எவ்வாறு பாதிக்கிறது என்பதை விளக்குவதற்கு அது ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.
கறுப்பின சட்டப் பேராசிரியரான பட்ரீஷியா வில்லியம்ஸ் (Patricia Williams) , “இனமேலாதிக்கவாத முகமூடிக்குப் பின்னால் மறைந்திருக்கும் அமைப்புக்களே நடுநிலையாகவும் மற்றும் நியாயமான அமைப்பாகவும் நடைமுறையில் தோன்றுகின்றன” எனக் குறிப்பிடாவதுடன் “பொதுச் சமூக அசைவியக்கத்தின் ஒரு அன்றாட இயல்பாக இனவாத நடைமுறைகள் அமைந்து விட்டதால் அது அவ்வளவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை” என்று அவர் மேலும் கூறிச் செல்கிறார். பாரம்பரிய தாராளவாத அரசியல் கோட்பாட்டில் ஒரு பலவீனம் இருப்பதாக வாதிடும் மற்றுமொரு கறுப்பின தத்துவப் பேராசிரியரான பில் லாசன் (Bill Lawson), கறுப்பின மக்கள் சட்ட ரீதியான குடியுரிமையைப் பெற்றிருந்தும், வழங்கப்பட வேண்டிய பல உரிமைகளும் வாய்ப்புகளும் பெரும்பாலும் மறுக்கப்பட்டு வருகின்ற ஒரு சூழமைவை கையாளுவதற்கும் அதற்கு பதிலளிப்பதற்கும் தாராளவாதத்தால் இன்றுவரை முடியவில்லை என அவர் வாதிடுகிறார். அதுபோலவே கறுப்பின சட்டத் தத்துவஞானி அனிதா ஆலன் (Anita Allen) ஒரு முக்கியமான அமெரிக்க நடைமுறை முரண்பாட்டைச் சுட்டிக்காட்டும் போது “பல அமெரிக்க சட்டப் பாடப்புத்தகங்கள், எல்லா மக்களுக்கும் சம உரிமைகள் இருப்பது போலப் பேசினாலும் அமெரிக்காவின் வரலாறு உண்மையில் அவ்வாறு அமையவில்லை” என்கிறார். இன மேலாதிக்கத்தையும் இனவாதத்தையும் நடைமுறை உலகின் ஒரு பிரச்சினையாக முன்வைக்காத அரசியல் கோட்பாடுகளாலும் நிலைப்பாடுகளாலும் எந்தப் பிரயோசனமும் இருக்கப்போவதில்லை என்றும் அனிதா ஆலன் (Anita Allen) இது தொடர்பாக மேலும் கூறிச் செல்கிறார். அத்தகைய கோட்பாடுகளுக்கும் கருத்துருவாக்கங்களுக்கும் ஏராளமான உதாரணங்களைக் குறிப்பிட முடியும். உதாரணமாக நீதி தொடர்பாக எழுதப்பட்ட பிரசித்தி பெற்ற நூலை எழுதிய ஜோன் ரோல்ஸினால் அமெரிக்காவில் நீண்ட காலமாக நிலவி வந்த அடிமைத்துவ முறை குறித்து எந்தவிதமான கவனத்தையும் செலுத்த முடிந்திருக்கவில்லை. அதுபோலவே சொத்துக்களை வைத்திருத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற விடயதானங்களை உள்ளடக்கிய வகையில் நீதி தொடர்பான கோட்பாட்டு அடிப்படைகளைப் முன்வைத்த ரொபர்ட் நொசிக் (Robert Nozick), அமெரிக்காவின் அடிமை வியாபாரம் குறித்தோ, அங்கு இடம்பெற்ற ஒடுக்குமுறைகள் மற்றும் அநீதமான முறையில் பிடுங்கப்பட்ட நிலங்கள் மற்றும் சொத்துக்கள் குறித்தோ எந்தவிதமான கவனத்தையும் செலுத்தியிருக்கவில்லை. இதில் கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில் மேற்சொன்ன கோட்பாடுகள் யாவுமே நீதி பற்றிய இலட்சியக் கொள்கைகளை முன்வைக்கின்றனவே தவிர நவீன உலகின் வரலாற்றை வரலாற்றை வடிவமைத்திருக்கும் இனவாதம் பற்றியும் அதன் அமைப்பாக்கம் பற்றியும் பேசுவதில் இருந்து அந்நியமாகவே இருக்கின்றன.
இவ்வாறு பிரதான தார்மீக மற்றும் அரசியல் தத்துவங்களில் ‘இனம்’ குறித்த விவாதங்கள் இல்லாமல் போயிருப்பது சமூக ஒப்பந்தம் என்ற ஒழுங்கினுள் உறைந்துள்ள இனமேலாதிக்கவாதத்தின் செல்வாக்கையே எடுத்துக் காட்டுகிறது. அதுபோலவே சமூகங்கள் இப்போது “நிறப் பாகுபாடற்றது” என்று கூறுவதெல்லாம் நீடித்து வரும் வெள்ளையின மேலாதிக்கத்தை அகற்றுவதற்குப் பதிலாக, அவற்றை மறைப்பதற்கே உதவும். அவ்வாறு கூறுபவர்கள், இன மேலாதிக்கவாதத்தை உடைத்தெறிவதில் உண்மையாவே அக்கறை கொண்டிருப்பார்கள் எனில், இன மேலாதிக்கவாதத்தின் இன்று வரையுள்ள அமைப்பு ரீதியான இருப்பை அங்கீகரிக்க வேண்டும் என்பதோடு இனச் சலுகைகளால் பயனடைந்தவர்கள் மற்றும் அதனால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகிய இருவர் மீதும் இனமேலாதிக்கவாதம் நிகழ்த்திய சமூக, அரசியல், பொருளாதார, உளவியல் மற்றும் தார்மீக விளைவுகளைப் புரிந்துகொள்வதும் அவசியமாகும். ஆனால் தற்போது அதற்கு மாறாக, சொத்து, சமூக அந்தஸ்து மற்றும் வேலைவாய்ப்புகளில் உள்ள இன வேறுபாடுகளை இயல்பானவையாக ஏற்றுக்கொள்வதன் வழியே சமூக ஒப்பந்தக் கோட்பாடின் இனவாதக் கூறுகளை பாதுகாப்பதே இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக, வரலாற்றிலிருந்து பிரிக்கப்பட முடியாத இலட்சக்கணக்கான வெள்ளையரல்லாத மக்கள் அனுபவிக்கும் வறுமை, அடக்குமுறைகள் மற்றும் ஏனைய துன்பங்களின் பெரும்பகுதி மறக்கடிக்கப்படுவதுடன் செல்வந்த நாடுகளுக்கும் ஏழ்மையான மூன்றாம் உலகத்திற்கும் இடையிலான பெரிய இடைவெளியானது நீண்டகால இனச் சுரண்டல் மற்றும் சமத்துவமின்மையின் வரலாற்றோடு தொடர்புடைய ஒன்றாகக் கருதப்படாமல், பெரும்பாலும் பண உதவிகள் வழியே நிவர்த்தி செய்யப்பட வேண்டிய ஒரு பிரச்சனையாகவே பார்க்கப்படுகிறது.
இறுதியாக, இனவாதக் கூறுகளைக் கொண்டுள்ள சமூக ஒப்பந்தமானது காலப்போக்கில், வெள்ளையர்களுக்கும் வெள்ளையரல்லாதவர்களுக்கும் இடையிலான உறவின் பண்புகளை வரையறுப்பதாக மாத்திரமின்றி, யார் வெள்ளையர் என்றும் யார் வெள்ளையரல்லாதவர் என்றும் கருதப்பட முடியும் என்பதையும் நிர்ணயிக்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அதுபோலவே இன்றைக்கு இனம் என்பது வெறும் உயிரியல் யதார்த்தம் என்பதை விடவும் அது ஒரு அரசியல் மற்றும் சமூக வகைப்பாடாகவும் இருக்கிறது. சலுகைகளை அனுபவிக்கும் உயர் இனக் குழுவின் உறுப்பினர்கள் யார், யார் உறுப்பினராக வர முடியாது என்பதையெல்லாம் வரையறுக்க இனவாதம் பெருமளவில் உதவுகிறது.
இனமேன்மை பெற்ற இனக் குழுவில் யாரால் இடம்பெற முடியும் என்பதை வரையறுக்கும் முயற்சிக்கான ஒரு பிரத்யேக வடிவமாக ஜேர்மனியின் நாசி (Nazi) திட்டத்தை புரிந்துகொள்ள முடியும். எழுத்தாளர் ஒருவர் குறிப்பிடுவது போல, அது ஜெர்மானியர்கள் தங்களைத் தாங்களே “மேன்மையான இனமாக” ஆக்கிக்கொள்ள மேற்கொண்ட ஒரு முயற்சியாகும். வெள்ளையர் × வெள்ளையரல்லாதவர் மற்றும் மனிதர்கள் × காட்டுமிராண்டிகள் ஆகியன இனவாதக் கட்டமைப்புக்களை விளக்குவதற்குப் பயன்படும் அளவீடுகளாக உள்ள போதும் ஐரோப்பாவினுள்ளேயே வாழும் சில மக்கள் குழுவினரை வெள்ளையர்களாக ஏற்க மறுக்கும் பிரச்சினையை விளக்குவதற்கு மேற்குறித்த அளவீடுகள் போதுமானவையல்ல. ஏனெனில் ஐரோப்பிய சூழமைவில் ஐரிஷ், ஸ்லோவியர்கள், மத்திய தரைக்கடல்வாசிகள் மற்றும் யூதர்கள் போன்ற சில ஐரோப்பா வாழ் மக்கள், ஒரு காலத்தில் இனரீதியாகத் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்டதோடு வெள்ளையர்கள் அனுபவிக்கும் இனச் சலுகைகளை அனுபவிக்கும் உரிமைகளும் வழங்கப்படவில்லை. உதாரணமாக, ஆங்கிலேயர்கள் ஐரிஷ் மக்களை காட்டுமிராண்டிகள் என இழிவுபடுத்தும் பல கருத்துக்களைக் கொண்டிருந்ததனைக் குறிப்பிட முடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலப்பகுதியில் அயர்லாந்து மக்களின் அமெரிக்கா நோக்கிய குடியேற்றம், அவர்களுக்கு எதிரான இனப் பாரபட்சத்திற்கு வழிவகுத்தது எனலாம். நாளாந்த செய்தித்தாள்களில் அயர்லாந்து மக்கள் பெரும்பாலும் குரங்கு போன்ற தாவும் விலங்குகளாகவும் தாழ்ந்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். வெள்ளையரல்லாத மக்களுக்கு எதிரான இனவாதத்திற்கும் மேலதிகமாக, சில ஐரோப்பியர்கள் மற்றைய ஐரோப்பியர்களை விட உயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையும் அதன் வழியேயான இனப்பாகுபாடுகளும் பல்வேறு ஐரோப்பிய குழுக்களுக்கு இடையே நிலவின. டியூட்டோனிசம் (Teutonism), ஆங்கிலோ-செக்சனிசம் (Anglo-Saxonism) மற்றும் நார்டிசிசம் (Nordicism) போன்ற கருத்துக்களின் செல்வாக்கு அதிகமாக இருந்ததால், 1920களில் அமெரிக்கக் குடிவரவுச் சட்டங்கள் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களை விட வடக்கு ஐரோப்பாவைச் சேர்ந்தவர்களுக்கே சாதகமாக அமைந்திருந்தன. அதேபோல கிறிஸ்தவ ஐரோப்பாவில் யூதர்களும் நீண்ட கால பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டதுடன் நாசி (Nazi) ஜெர்மனியின் கீழ் அதன் உச்சகட்ட வடிவத்தை அது அடைந்திருந்தது. ஆனாலும்கூட சில மக்கள் குழுக்கள் இவ்விரு பிரிவுகளிலும் கச்சிதமாகப் பொருந்திப் போகாத போதிலும் வெள்ளையர்/வெள்ளையர் அல்லாதவர் என்ற பிரிவினை தொடர்ந்தும் தக்கவைக்கப்பட்டுள்ளதன் காரணம் யாதெனில் உலகளாவிய இன அமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பை தக்கவைத்துக் கொள்ளவும் சிறந்த முறையில் விளக்கவும் உதவுவதாலேயே ஆகும். இவ்வாறு, ஐரோப்பாவில் வாழ்ந்த அனைத்து வெள்ளையர்களும் சமமாகக் கருதப்பட்ட போதிலும் சிலர் “சில வெள்ளையர்களை விடவும் மேன்மையானவர்களாக” பார்க்கப்பட்டதால், மற்றவர்களை விட அதிக அந்தஸ்தையும் சலுகைகளையும் அனுபவித்தனர். இதுபோலவே அனைத்து வெள்ளையரல்லாதவர்களும் சமமற்றவர்களாக நடத்தப்பட்ட அதேவேளை சில குழுக்கள் மற்றவர்களை விட அந்தஸ்தில் தாழ்ந்தவர்களாகவும் கருதப்பட்டனர். எது எவ்வாறாயினும் வெள்ளையர்களுக்கும் வெள்ளையரல்லாதவர்களுக்கும் இடையேயான பிரிவே தொடர்ந்தும் பிரதான இனப்பிரிவினையாக நீடித்தது. ஐரிஷ் வெள்ளையர்கள் போன்ற மக்கள் குழுவினர் தாழ்ந்தவர்களாகக் கருதப்பட்ட போதிலும் அவர்கள் வெள்ளையரல்லாதவர்கள் பிரிவில் சேர்க்கப்படவில்லை என்பதுடன் வெள்ளையரல்லாதவர்களை விடவும் உயர்ந்த நிலையிலேயே வைக்கப்பட்டனர். உதாரணத்திற்கு, ஆங்கிலேயர்கள் பெரும்பாலும் ஐரிஷ் மக்களைத் தாழ்வாகப் பார்த்த போதிலும் வெள்ளையரல்லாதவர்களாகக் கருதவில்லை. நாஜி ஜெர்மனியைத் தவிர ஏனைய ஐரோப்பிய பிரதேசங்களில் ஐரிஷ், ஸ்லோவேனியர்கள் உள்ளிட்ட ஐரோப்பியக் குழுக்கள் பொதுவாக வெள்ளையரல்லாத மக்களை விட உயர்ந்தவர்களாகக் கருதப்பட்டனர். பிற்காலங்களில் இவர்களை முழுமையான ‘வெள்ளையர்களாக’ அமெரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் பலவும் அங்கீகரித்துக் கொண்டன.
வெள்ளையர் என்பது ஒரு உயிரியல் அடிப்படைசார் வகைப்பாடாக மட்டுமன்றி அது ஒரு சமூக மற்றும் அரசியல் வகைப்பாடாகவும் தொழிற்படுகிறது என்பதையே மேற்குறித்த உதாரணங்கள் சுட்டிக் காட்டுகின்றன. ஐரிஷ் மக்கள் போன்று ஒரு காலத்தில் வெள்ளையர் என்ற வகைப்பாட்டிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்த மக்கள் குழுக்கள், பிற்காலங்களில் வெள்ளையர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்ட அதே சமயம், சில வெள்ளையரல்லாத குழுக்களும் குறிப்பிட்ட சில சூழ்நிலைகளின் கீழ் வெள்ளையர்களாக நடத்தப்பட்டுள்ளனர். உதாரணமாக அரசியல் சூழ்நிலைகளைப் பொறுத்து ஜப்பானியர்களும் வித்தியாசமாகவே நடாத்தப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின்போது அச்சு நாடுகளின் கூட்டணியில் இருந்தமைக்காக நாஜி ஜெர்மனியால் அவர்களுக்கு “கௌரவ வெள்ளையர்கள்” என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் இன ஒதுக்கல் கொள்கையின் கீழும் அவர்கள் அவ்வாறே நடத்தப்பட்டனர். இருப்பினும், மேற்கத்திய நேச நாடுகள் அவர்களை வெள்ளையர் அல்லாதவர்களாகவும், இனரீதியாகத் தாழ்ந்தவர்களாகவுமே கருதின. அதுபோலவே, சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக சீன மக்கள் ஐரோப்பியர்களால் ஒரு தாழ்ந்த இனமாக நடத்தப்பட்டனர். சீனாவில் வெளிநாட்டு ஆதிக்கம் நிலைபெற்ற காலப்பகுதி மற்றும் பொக்சர் கிளர்ச்சிக் காலப்பகுதி ஆகியவற்றின் போது சீன மக்கள் இனப்பாகுபாட்டையும் புறக்கணிப்பையும் எதிர்கொண்டனர். “நாய்களுக்கோ சீனர்களுக்கோ அனுமதி இல்லை” என்று கூறும் அளவிற்கு இனவெறி மனப்பான்மை உச்சத்தை அடைந்திருந்தது. இதற்கு மேலதிகமாக சீன புலம்பெயர்ந்தோர் அமெரிக்காவில் கடுமையான குடியேற்றக் கட்டுப்பாடுகளையும் பாகுபாட்டையும் எதிர்கொண்டனர்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் அமெரிக்கப் பொதுப் பண்பாடு, சீனர்களை ஆபத்தானவர்களாகவும் அச்சுறுத்தலானவர்களாகவுமே அடிக்கடி சித்தரித்து வந்தது. நாவல்களில் வரும் வில்லன் ஃபூ மான்சு (Fu Manchu) மற்றும் ஃபிளாஷ் கார்டன் (Flash Gordon) கதைகளில் வரும் மிங் (Ming the Merciless) போன்றன இதற்கான உதாரணங்கள். இந்தச் சித்தரிப்புகள் ஹூவாங்கோ நதியின் “மஞ்சள் துயரம்” (Yellow Peril) என்றளவில் அறியப்பட்டு அச்சத்தை சந்தைப்படுத்தின. ஆனால் சமகாலத்தில், அமெரிக்காவில் வாழும் ஆசியர்கள் பெரும்பாலும் “மாதிரிச் சிறுபான்மையினர்” (Model minority) என்றும் சில சமயங்களில் வெள்ளையின மக்களின் சமூக அந்தஸ்துக்கு நெருக்கமானவர்களாகவும் விவரிக்கப்படுகிறார்கள். விளைவாக, ஆசியர்கள் வெள்ளையினத்தவராகக் கருதப்படுகிறார்களா அல்லது வெள்ளையினத்தவர் அல்லாதவராகக் கருதப்படுகிறார்களா என்பது குறித்த உரையாடல்கள் அவ்வளவாக கவனயீர்ப்புப் பெறுவதில்லை. இதன் சாராம்சம் யாதெனில், வெள்ளையர் என்பதன் வரையறைகளும் நியமங்களும் நிலையானதாக இருப்பதில்லை. சமூக ஒப்பந்தத்தின் உள்ளீடாகவுள்ள இன மேலாதிக்கத் தர்க்கங்களால் வடிவமைக்கப்பட்ட சமூக மற்றும் அரசியல் நிலைமைகளுக்கு ஏற்பவே யார் வெள்ளையராக ஏற்றுக் கொள்ளப்படுகிறார்கள் என்பது குறித்த விதிகள் காலப்போக்கில் மாறுதலுக்கு உட்படுகின்றன.
உசாத்துணைகள்:
Frank M. Snowden Jr., Blacks in Antiquity: Ethiopians in the Greco-Roman Experience (Cambridge: Harvard University Press, 1970); Frank M. Snowden Jr., Before Color Prejudice: The Ancient View of Blacks (Cambridge: Harvard University Press, 1983)
Theodore W. Allen, Racial Oppression and Social Control, vol.1 of The Invention of the White Race (New York: Verso, 1994); Ian F. Haney Lopez, White by Law: The Legal Construction of Race (New York: New York University Press, 1996).
Jennings, Invasion of America, p. 60.
Hugo Grotius, The Law of War and Peace, trans. Francis W. Kelsey (Indianapolis: Bobbs-Merrill, 1925), chap. 20, “On Punishments,” of bk. 2, p. 506, quoted in Williams, “Algebra,” p. 250.
For the following, compare James Tully, Strange Multiplicity: Constitutionalism in an Age of Diversity (Cambridge: Cambridge University Press, 1995), esp. chap. 3, “The Historical Formation of Modern Constitutionalism: The Empire of Uniformity,” pp. 58–98. I thank Anthony Laden for bringing this book to my attention, which I only learned about when my own manuscript was on the verge of completion.
Hobbes, Leviathan, p. 89.
Richard Ashcraft, “Leviathan Triumphant: Thomas Hobbes and the Politics of Wild Men,” in Dudley and Novak, Wild Man, pp. 146–47.
Hobbes, Leviathan, pp. 89–90.
Two hundred years later, by contrast, the British colonial enterprise, with the accompanying ontological dichotomization, was so well entrenched that John Stuart Mill experienced not the slightest qualm in asserting (in an essay now seen as a classic humanist defense of individualism and freedom) that the liberal harm principle “is meant to apply only to human beings in the maturity of their faculties,” not to those “backward states of society in which the race itself may be considered as in its nonage”: “Despotism is a legitimate mode of government in dealing with barbarians, provided the end be their improvement.” John Stuart Mill, On Liberty and Other Writings, ed. Stefan Collini (Cambridge: Cambridge University Press,
1989), p. 13.
Locke, Second Treatise, chap. 5, “Of Property.”
Robert A. Williams Jr., “Documents of Barbarism: The Contemporary Legacy of European Racism and Colonialism in the Narrative Traditions of Federal Indian Law,” Arizona Law Review 237 (1989), excerpted in Critical Race Theory: The Cutting Edge, ed. Richard Delgado (Philadelphia: Temple University Press,
1995), p. 103.
Locke, Second Treatise, chap. 16, “On Conquest.”
See, for example, Jennifer Welchman, “Locke on Slavery and Inalienable Rights,” Canadian Journal of Philosophy 25 (1995) 67–81.
Rousseau, Discourse on Inequality, pp. 83, 87, 90, 1 36, 140, 145
(nonwhite savages), 140 (European savages).
Ibid., p. 116.
Rousseau, Social Contract, bk. 1, chap. 8.
Emmanuel Eze, “The Color of Reason: The Idea of ‘Race’ in Kant’s Anthropology,” in Anthropology and the German Enlightenment, ed. Katherine Faull (Lewisburg, Pa.: Bucknell University Press, 1995), pp. 196–237.
Eze cites the 1950 judgment of Earl Count that scholars often forget that “Immanuel Kant produced the most profound raciological thought of the eighteenth century.” Earl W. Count, ed., This Is Race: An Anthology Selected from the International Literature on the Races of Man (New York: Henry Schuman, 1950), p. 704 , quoted in Eze, “Color of Reason,” p. 196. Compare the 1967 verdict of the German anthropologist Wilhelm Mühlmann that Kant is “the founder of the modern concept of race,” quoted in Leon Poliakov, “Racism from the Enlightenment to the Age of Imperialism,” in Racism and Colonialism, ed. Robert Ross (The Hague: Leiden University Press, 1982), p. 59.
Mosse, Final Solution, pp. 30–31.
Immanuel Kant, Observations on the Feeling of the Beautiful and Sublime, trans. John T. Goldthwait (Berkeley: University of California Press, 1960), pp. 111–13.
Eze, “Color of Reason,” pp. 214–15, 209–15, 217.
See David Lehman, Signs of the Times: Deconstruction and the Fall of Paul de Man (New York: Poseidon Press, 1991).
Janet L. Abu-Lughod, Before European Hegemony: The World System, A.D. 1250–1350 (New York: Oxford University Press, 1989).
Fredric Jameson, “Modernism and Imperialism,” in Nationalism, Colonialism, and Literature, ed. Seamus Deane (Minneapolis: University of Minnesota Press, 1990), pp. 50–51.
Steinberg, Turning Back, p. 152
Massey and Denton, American Apartheid, pp. 84, 97–98.
Morrison, Playing, p. 46.
See the discussion of “idealizing” abstractions in Onora O’Neill, “Justice, Gender, and International Boundaries,” in The Quality of Life, ed. Martha Nussbaum and Amartya Sen (Oxford: Clarendon Press, 1993), pp. 303–23.
Patricia J. Williams, The Alchemy of Race and Rights (Cambridge: Harvard University Press, 1991), pp. 116, 49.
Bill E. Lawson, “Moral Discourse and Slavery,” in Howard McGary and Bill E. Lawson, Between Slavery and Freedom: Philosophy and American Slavery (Bloomington: Indiana University Press, 1992), pp. 71–89.
Anita L. Allen, “Legal Rights for Poor Blacks,” in The Underclass Question, ed. Bill E. Lawson (Philadelphia: Temple University Press, 1992), pp. 1 17–39.
Rawls, Theory of Justice; Robert Nozick, Anarchy, State, and Utopia (New York: Basic Books, 1974).
Isaacs, “Color,” p. 235.
Earl Miner, “The Wild Man through the Looking Glass,” in Dudley and Novak, Wild Man, pp. 89–90.
Jordan, White over Black, p. 254.
Drinnon, Facing West, p. xvii. But see Allen, Invention of the White Race, for the contrasting position that the Irish were indeed made nonwhite.
Noel Ignatiev, How the Irish Became White (New York: Routledge, 1995).
See John W. Dower, War without Mercy: Race and Power in the Pacific War (New York: Pantheon Books, 1986).
Gary Y. Okihiro, “Is Yellow Black or White?” in Margins and Mainstreams: Asians in American History and Culture (Seattle: University of Washington Press, 1994), pp. 31–63.
சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ் (Charles W. Mills) கரீபியன்-அமெரிக்க அரசியல் தத்துவஞானி. அவரது ஆய்வுகள் முதன்மையாக அரசியல் தத்துவம், இன அரசியல் (racial politics), லிபரலிசம் (liberalism), மற்றும் சமூக நீதி (social justice) ஆகிய துறைகளை மையமாகக் கொண்டிருந்தன. குறிப்பாக, நவீன அரசியல் சிந்தனைகளிலும் லிபரல் மரபிலும் ‘இனம்’ (race) எவ்வாறு கட்டமைக்கப்பட்டு அரசியல், சமூக மற்றும் அறவியல் உறவுகளை வடிவமைக்கிறது என்பதை அவர் விமர்சன ரீதியாக ஆராய்ந்தார்.
மில்ஸ், ஐரோப்பிய அரசியல் தத்துவத்தில் முக்கிய இடம் பெறும் ‘சமூக ஒப்பந்தக் கோட்பாடு’ (Social Contract Theory) பற்றிய மரபார்ந்த விளக்கங்களை விமர்சித்து, அதற்கு மாற்றாக ‘இன ஒப்பந்தம்’ (Racial Contract) என்ற கோட்பாட்டை முன்வைத்தார். இந்தக் கோட்பாட்டின் மூலம், சமூக ஒப்பந்தம் எனப் பொதுவாகக் கருதப்படும் அரசியல் ஒழுங்குகள் உண்மையில் இன அடிப்படையிலான ஆதிக்க உறவுகளையும் அதிகார அமைப்புகளையும் அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது என்பதை விளக்கினார்.
மேலும், அரசியல் அமைப்புமுறைகள், Critical Race Theory, வெள்ளை ஆதிக்கத்தின் (white supremacy) அரசியல் பரிமாணங்கள், மற்றும் சமூக நீதியின் கோட்பாட்டியல் அடித்தளங்கள் தொடர்பான பல்வேறு அறிவார்ந்த விவாதங்களிலும் அவர் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவரது முக்கியமான புத்தகங்களில் The Racial Contract (1997), Contract and Domination (2007), From Class to Race: Essays in White Marxism and Black Radicalism (2003), Theorizing Racial Justice (2017), Radical Theory, Caribbean Reality: Race, Class and Social Domination (2010) ஆகியவை அடங்கும்.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இந்த ஆக்கம், சார்ல்ஸ் டபிள்யூ. மில்ஸ் எழுதிய The Racial Contract என்ற நூலின் ஒரு பகுதியின் தமிழாக்கமாகும்..