– றபியூஸ் முகமது
இரானுக்கு எதிரான யுத்தத்தை அமெரிக்கா, இஸ்ரேல் முன்னெடுக்கும் இத்தருவாயில் மத்தியகிழக்கு அரேபிய நாடுகள் அமெரிக்க ஏகாதிபத்திய ஆதிக்கத்தின் பக்கம் நின்று தங்களை இணைத்துக்கொள்ளும் நிலைப்பாட்டை எடுத்துள்ளன. அத்துடன் இந்த அரேபிய நாடுகளின் பணத்தால் வளர்க்கப்படும் வஹாபிய சிந்தனை முகாமை சேர்ந்தவர்கள்; அமெரிக்க ஏகாதிபத்திய யுத்தத்தின் பிரச்சாரகர்களாக மாறி இருக்கிறார்கள். லிபரல் சிந்தனை சட்டகம் சவுதிஅரேபிய வஹாபிய கருத்தியலை பழைய அரேபிய நிலமானியத்தின் எச்சமாக முன்னிறுத்துவதுடன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சிந்தனை வடிவமான நவீனத்துவத்துடன் நேரடியாக இணைத்து அதன் பிரதான வடிவமாகவே முன்னிறுத்துகிறார்கள். இது அடிப்படையில் மிக சிக்கலான ஒரு பிரிவினை. நவீனத்துவத்தை பழைய நிலமானிய சமூக அமைப்பிலிருந்து பிரித்து மிக புதுமையாக அமைப்பாக நிறுத்துவது நவீனத்துவம் பற்றிய விமர்சனரீதியான பார்வை அற்ற தன்மையே.
நவீனத்துவத்தின் அடிப்படையாக காலனித்துவமும், இனத்துவ முதலாளித்துவமும் இருந்தாக ‘செட்ரிக் ராபின்சன்’ (Cedric Robinson) குறிப்பிடுகிறார். மதம்/செகுலரிஸம் சார்ந்த மிக முக்கியமான தத்துவவியலாளரான ‘ஏன் யூன்டே’ (An Yountae) குறிப்பிடுவது போன்று இனம் என்ற கருத்தாக்கத்தின் உருவாக்கத்தை மதம் குறித்த நவீன கருத்தாக்கத்தின் எழுச்சியிலிருந்து பிரிக்க முடியாதது. கிறிஸ்தவ ஐரோப்பா ‘உலகம் முழுவதும் மதத்தை உடைய மக்களே வாழ்கிறார்கள்’ என்ற கருத்தியலிலேயே இருந்தது. ஆனால் ஐரோப்பிய நவீனத்துவத்தின் வருகையோடு அது காலனியாக்கத்தை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் போது அங்கு இருந்த பூர்வகுடி மக்களின் மதத்தை அவர்கள் மதமாக ஏற்கவில்லை என்கிறார் ரொக்சான் டன்பார் ஓர்டிஸ் (Roxanne Dunbar-Ortiz). மேலும் அவர், அமெரிக்காவின் பூர்வகுடி மக்கள் மதமற்றவர்கள் எனவே அவர்களுக்கு ஆன்மா கிடையாது என்று ஸ்பானிய காலனிய ஆதிக்கவாதிகள் வரையறுத்தார்கள் என்கிறார். இது மதங்களுக்கு இடையிலான வேறுபாடாக கருதப்பட்டு வந்த அவர்கள் நம்பிக்கை உண்மையானதா அல்லது பொய்யானதா என்பதிலிருந்து இருப்பியல் சார்ந்த ஒன்றாக மாறியது. அமெரிக்காவை காலனியப்படுத்திய பின்னர் அங்கு இருந்த பிரதான மதகுருகளான ‘யுவான் ஜினெஸ் டி செபுல்வேடா’ (Juan Ginés de Sepúlveda) மற்றும் ‘பார்டோலோமே டி லாஸ் காசாஸ்’ (Bartolomé de las Casas) இடையிலான பிரசித்தி பெற்ற விவாதமான “Valladolid Debate – 1550–1551” என்பது ஆன்மா இல்லாத (மதம் இல்லாத) மக்களுக்கு வாழ உரிமை இருக்கிறதா இல்லையா என்பதை பற்றி இருந்தது. அந்த விவாதமானது அமெரிக்காவின் பூர்வகுடி மக்களின் ஒழுக்கநெறி மற்றும் சட்டப்பூர்வ நிலையைப் பற்றிய முதல் அதிகாரப்பூர்வமான விவாதமாக இருந்தாக குறிப்பிடுகிறார் ரொக்சான் டன்பார் ஓர்டிஸ் (Roxanne Dunbar-Ortiz). மேலும் அவர், இந்த விவாதம் அமெரிக்க பூர்வகுடி மக்களின் நிலத்தை பறிப்பதற்கும், அவர்களை சட்டப்பூர்வமாக அடிமையாக்குவதக்கும் அமெரிக்க குடியேற்ற காலனிய அமைப்பை உருவாக்கவும் அடிப்படையாக இருந்தாக குறிப்பிடுகிறார்.
காலனித்துவ ஒழுங்கில் உருவான கிறித்தவ மையவாதக் கோட்பாட்டில் யார் மதம் உடையவர், யார் மதம் அற்றவர், மற்றும் அவர்கள் எந்த வகையான மதத்தைக் கொண்டுள்ளனர் என்பதைத் தீர்மானிப்பது சமூகக் கட்டமைப்பிற்கு மட்டுமல்லாமல், உலகைப் புரிந்து கொள்வதற்கும் மிக முக்கியமான ஒன்றாக மாறியது என்கிறார் நெல்சன் மால்டொனாடோ-டோரஸ் (Nelson Maldonado-Torres). இதிலிருந்து உருவான தேசிய அரசுகள்; உலகம் அதுவரை கண்டிராத மிகப்பெரிய பேரரசுகளாக மாறிய சூழலில் இது ஒரு சாதாரண விஷயமாக இருக்கவில்லை. ஐரோப்பியப் பயணக் குறிப்புகள், விஞ்ஞானம் மற்றும் பொருளாதார-புவிசார் அரசியல் லட்சியங்கள் உலக வரைபடங்கள் மற்றும் இனதத்துவ கதையாடல்களை உருவாக்கப் பயன்பட்டன. இவை உலகின் ஒழுங்கமைப்பையும் அதன் கட்டமைப்புகளையும் உருவாக்கியது.
அமெரிக்க குடியேற்ற காலனிய ஒழுங்கின் அடிப்படையிலேயே உலகம் முழுவதுமான தேசிய அரசுகளும் புதிய அடையாளங்களும் உருவாக்கப்பட்டது. அந்த அடையாளங்கள் படிநிலை அமைப்பில் நிறுத்தப்பட்டிருந்தாக ‘ஏன் யூன்டே’ (An Yountae) குறிப்பிடுகிறார். மேலும் அவர், மேற்கத்தையர்கள் தங்களை மற்ற மேற்கத்தியரல்லாத மக்களிலிருந்து வேறுபடுத்திக் காட்டவும், தங்களது மேலாதிக்க உணர்வைத் தக்கவைத்துக் கொள்ளவும் புதிய அடையாளங்ளை உருவாக்கி மக்களை அதன் அடியில் திரட்டினார்கள் என்கிறார். இந்தப் புள்ளியில் மேற்கத்திய தத்துவமும், அறிவியலும் உண்மையான உலகளாவிய அறிவு என்று செயல்படுவதுடன் அந்த அறிவை உற்பத்தி செய்யும் நபர் ஐரோப்பியனின் நிலம், பாலினம், வர்க்கம் என்ற அனைத்தையும் மறைத்து உலகிற்கு பொதுவான அறிவை வழங்கும் நபராக நிலை நிறுத்தப்படுகிறார். இதேநேரம் மூன்றாம் உலகத்தை சேர்ந்த நபர்களின் அறிவு உற்பத்தியை குறிப்பிட்ட நிலம், இனம், மதம் என்ற கட்டமைப்பில் வரையறை செய்யப்பட்டு குறிப்பிட்ட ஒரு சூழலமைவுக்கான அறிவாக மட்டுப்படுத்தப்படுகிறது. இப்படி நவீனத்துவ அறிவுக் கட்டமைப்பு உலகத்தை ஒரு குறிப்பிட்ட அதிகார ஒழுங்குக்குள் கொண்டு வரும் ஒரு அரசியல் கருவியாக (tool) செயல்படுகிறது.
ஹமீத் தபாஷி (Hamid Dabash) “The End of Two Illusions: Islam after the West” என்ற புத்தகத்தில் மிகவும் தெளிவாக விமர்சிக்கிறார். மேற்கத்திய அறிவியல் மற்றும் மனிதவியல் கட்டமைப்புகள் “மற்றவர்களை” புரிந்து கொள்ளவில்லை; மாறாக, அவர்களை ஒரு கட்டுப்படுத்தக்கூடிய, நிர்வகிக்கக்கூடிய பொருளாக உருவாக்கின. இதன் மூலம் கிழக்கு சமூகங்கள் தங்களைப் பற்றிய அறிவை தாங்களே உருவாக்கும் இடத்திலிருந்து நீக்கப்பட்டு, வெளிப்புற அதிகாரத்தின் பார்வையில் மறுபரிமாணம் செய்யப்பட்டது. இந்த நவீனத்துவ கட்டமைப்பு வெறும் பொருளாதார அல்லது இராணுவ ஆதிக்கம் மட்டுமல்ல; அது “அறிவியல் ஆதிக்கம்” (epistemic domination) ஆகும். அதாவது, யார் உண்மை பேசுகிறார்கள், யார் வரலாறு எழுதுகிறார்கள், யார் நாகரிகம் என்று வரையறுக்கிறார்கள் என்பதையும் இது தீர்மானிக்கிறது. இந்த நிலைமையில், கிழக்கு உலகின் சமூகங்கள் தங்களைப் பற்றிய உண்மையைப் புரிந்துகொள்ள கூட மேற்கத்திய பிரிவுகளின் வழியே செல்ல வேண்டிய கட்டாயத்தில் சிக்கிக் கொள்கின்றன. இந்த அறிவியல்-அரசியல் கட்டமைப்பில் மதங்கள் ஒரு “பிரிவினை கருவி” ஆக மாற்றப்பட்டது. பல்வேறு உள்ளூர் மத மரபுகள், சுஃபி பாரம்பரியங்கள், கலாச்சார நடைமுறைகள்— இவை அனைத்தும் ஒரே மாதிரியான “தூய்மை / அசுத்தம்” என்ற (பைனரி) இரட்டை அமைப்பு அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டது. மதச்சார்பின்மை (Secularism), மத சீர்திருத்தவாதம் போன்றவைகளாக உருவெடுத்தன.
காலனிய உலக ஒழுங்கினுள் நவீனத்துவத்தை கொண்டு செல்லுவதில் கிறிஸ்தவ மிஸனரிகளின் பங்கு மிக முக்கியமானது. அந்த அமைப்புகள் மூடநம்பிக்கைகளை நீக்கி மதத்தை அறிவியல் தன்மை உடையதாகவும் நவீனத்துடன் பொருந்தக் கூடியதாகவும் மாற்றும் வேலையை செய்து வந்தது. இதன் தாக்கமாகவே உலகம் முழுவதும் மதசீர்திருத்த அமைப்புகள் 19ஆம் 20 ஆம் நூற்றாண்டில் தோன்றியது. (இலங்கையில்) அனாகாரிக தர்மபால, (இந்தியாவில்) விநாயக் தாமோதர் சாவர்கர் மற்றும் சியோனிச அமைப்புகள் போன்று சவுதியில் உருவான அரபு தேசியத்துடன் பின்னிப் பினைந்த ஒரு அமைப்பே வஹாபிஸம்.
சையத் பரீத் அலத்தாஸ் (Syed Farid Alatas) குறிப்பிடுவது போல “வஹாபிஸம்” என்பது புராட்டஸ்டண்டு கிறிஸ்தவத்தின் முஸ்லீம் அமைப்பு. அது ஒரு பக்கம் முஸ்லீம் சமூகத்தில் இருக்கும் மூட நம்பிக்கைகளை ஒழித்து நவீன முஸ்லீமை உருவாக்க முனைந்த அதே நேரம் அரேபிய கலாச்சார அமைப்பை; உலக முஸ்லீம்களின் அடிப்படையான அமைப்பாக மாற்ற முனைந்தது. இலங்கையில் அனாகாரிக தர்மபால கிறிஸ்தவ பெயர் நீக்கம், பெளத்த பிக்குகள் அரசியலில் கலந்தமை, நவீன பௌத்த சிங்கள கலாச்சாரம், ஏகாதிபத்தியத்துடன் தங்களை பிணைத்துக்கொள்ள ஆரிய சிங்கள அடையாளத்தை உருவாக்கியாமை போன்றவைகள் சிங்கள பெளத்த நவீன அமைப்புகளின் அடிப்படையாக இருந்தது. இலங்கையில் சிங்கள–பௌத்த நவீன தேசியவாத அமைப்புகள் உருவான போது, சிங்கள மொழியும்–பௌத்த மதமும் இணைக்கப்பட்டு ஒரு ஒருங்கிணைந்த தேசிய அடையாளம் கட்டமைக்கப்பட்டது. இதன் மூலம் மதமும் மொழியும் அரசியல் தேசியவாதத்தின் அடித்தளமாக மாற்றப்பட்டன. இதேபோல, அரேபியாவின் நஜ்த் பகுதியில் முஹம்மது இப்ன் அப்த் அல்-வஹ்ஹாப் என்பவர் (Muhammad ibn Abd al-Wahhab) தலைமையில் உருவான சீர்திருத்த இயக்கமும், இஸ்லாமிய சமூகத்தில் இருந்த சில பண்பாட்டு மற்றும் மத நடைமுறைகளை “தூய்மைப்படுத்தல்” என்ற நோக்கில் விமர்சித்தது. குறிப்பாக உஸ்மானியர்கள் மூடநம்பிக்கை உடையவர்கள் என்று கூறி சியாரங்களை நோக்கி செல்லுவதை மனிதனை மனிதன் வணங்குவதாக வரையறை செய்து அவர்கள் ‘ஓர்இறை’ நம்பிக்கை கொள்கைக்கு முரணானதாகக் கருதினர். அல்-வஹ்ஹாப் மற்றும் அவரது இயக்கம், இத்தகைய நடைமுறைகள் இஸ்லாமின் ஆரம்ப தூய வடிவத்திலிருந்து விலகியவை என்று வாதிட்டனர். இதன் மூலம் மதப் பழக்கவழக்கங்களை மறுவடிவமைத்து, ஒரு சீர்திருத்த அரசியல்–மத கட்டமைப்பை உருவாக்கினர்.
வஹாபிஸத்தின் இந்த சீர்திருத்தவாதம் அன்றைய பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் மிகத் தேவையான ஒன்றாக இருந்தது. உஸ்மானிய சுல்தானியத்தினுள் இருந்து வரும் இந்த வஹாபிய நவீன மத சிந்தனைகள்; அதனை உடைப்பதற்கு மிகப்பெரிய அளவில் உதவும் என்பதையும் புரிந்து கொண்டார்கள். வஹாபிய கருத்தியலை அரேபிய தேசியவாதத்துடன் இணைத்து உஸ்மானிய சுல்தானியத்தில் இருந்து விடுதலையை கோரும் ஒரு அமைப்பாக மாற்றினார்கள். இதற்கு முழு உதவியையும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் செய்தது. வஹாபியத் தூய்மைவாதம் நவீனத்துவத்துடன் பொருந்திப் போக ஆரம்பித்தது.
மதத்தை தூய்மைப்படுத்தும் வேலையில் இறங்கிய வஹாபியம்; பிரித்தானிய ஏகாதிபத்திய பொருளாதார உற்பத்தியிலும் பின்னிப்பிணைய ஆரம்பித்தது. இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பு முறையின் அடிப்படையாக இருந்தது ‘குடும்ப அமைப்பை ஒழுங்குபடுத்துவதாக இருந்தது’ என்கிறார் சில்வியா ஃபெடெரிசி’ (Silvia Federici). இந்த சூழலில், மாயாஜாலம் (magic), மூடநம்பிக்கை மற்றும் பாரம்பரிய மக்கள் நடைமுறைகள்; புதிய முதலாளித்துவ ஒழுங்குக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்டன. குறிப்பாக வேலை நேரம், உற்பத்தி ஒழுங்கு மற்றும் உடலின் கட்டுப்பாடு ஆகியவற்றை மையமாகக் கொண்ட புதிய பொருளாதார அமைப்புக்கு இவை தடையாக இருப்பதாகப் பார்க்கப்பட்டது. இந்தப் பின்னணியில், பல பகுத்தறிவுவாத சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவவாதிகள்— ஜீன் போடின் (Jean Bodin), மார்ஸென் (Mersenne), ரிச்சர்ட் போயில் (Richard Boyle), ஐசக் நியூட்டனின் ஆசிரியரான ஐசக் பாரோ (Isaac Barrow), மற்றும் தாமஸ் ஹோப்ஸ் (Thomas Hobbes) போன்றோர்— மாயாஜாலம், மூடநம்பிக்கை மற்றும் சூனியம் போன்றவற்றை சமூக ஒழுங்குக்கு எதிரான அபாயகரமான செயல்களாக வரையறுத்தனர். இதன் விளைவாக, அந்தக் காலத்தில் நடந்த சூனியக்காரிகள் வேட்டையாடல் (witch hunts) மற்றும் தண்டனைகள் ஆகியவற்றுக்கு தத்துவ மற்றும் அறிவியல் நியாயப்படுத்தல்கள் உருவாக்கப்பட்டன. இந்த வரலாற்று நிலையை சில்வியா ஃபெடெரிசி’ (Silvia Federici) தனது “Caliban and the Witch” என்ற நூலில் விரிவாக ஆய்வு செய்கிறார். அதில், முதலாளித்துவத்தின் தோற்றம் என்பது வெறும் பொருளாதார மாற்றம் மட்டுமல்ல; அது பெண்களின் உடல், உழைப்பு, மற்றும் பாரம்பரிய அறிவு முறைகள் மீது நடந்த கட்டுப்பாடு மற்றும் வன்முறையின் வழியாக உருவானது என்றும் அவர் வாதிடுகிறார். இந்த வகையான “தூய்மைப்படுத்தும்” அரசியல், நவீனத்துவத்தின் உள்நிலை வன்முறையின் பிரதிபலிப்பே ஆகும். அது உழைப்பை முழுமையாக உறிஞ்ச முற்படும் அதே தருணம் அதற்கு ஊறு விளைவிப்பவர்களை அழிக்க முயட்சிக்கிறது. அத்துடன் அது பல்வகை தன்மையை அழித்து, ஒரே மாதிரியான ஒழுங்கை திணிக்க முயற்சிக்கிறது.
இதேபோன்று, வஹாபிஸம் முன்னெடுத்த “நகரிக்கப்படுத்தும்” அரசியல்; மூடநம்பிக்கைகளை ஒழிக்கும் முயற்சி, உஸ்மானிய காலத்துக்குரிய கலாசார மரபுகளை விமர்சித்தல், மற்றும் உள்ளூர் சமூக ஒழுக்க–பண்பாட்டு நடைமுறைகளை மாற்றுதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருந்தது. இந்த செயல்முறை, பாரம்பரிய நடைமுறைகளை பின்பற்றும் மக்களை ஒதுக்கும் அல்லது கட்டுப்படுத்தும் அரசியல் வடிவமாகவும் செயல்பட்டது. இவ்வாறு, வஹாபிசம் “தூய்மை வாதத்தை” மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை; அது ஒரு சமூக-அரசியல் பொறியியல் முறையாக செயல்படுகிறது. இந்த நிலையைப் புரிந்துகொள்ள சுன்னி–சியா பிரிவின் வரலாற்றை அணுக வேண்டும்.
முகம்மது நபியின் மறைவுக்குப் பிறகு, சமூகத்தை யார் வழிநடத்த வேண்டும் என்ற கேள்வி அரசியல் முரண்பாட்டை உருவாக்கியது. அபூபக்கர் மற்றும் அலி ஆகியோருக்கிடையேயான ஆதரவு வேறுபாடு பின்னர் சுன்னி மற்றும் சியா அடையாளங்களாக வளர்ந்தது. ஆனால் இந்தப் பிரிவு உடனடியாக வன்முறை மோதலாக மாறவில்லை; பல நூற்றாண்டுகளாக இந்த இரண்டு சமூகங்களும் ஒரே சமூக அமைப்புகளுக்குள் இணைந்து வாழ்ந்தன. உமய்யா மற்றும் அப்பாசிய காலங்களில், சுன்னி மற்றும் சியா மக்கள் ஒரே சமூகங்களில் வாழ்ந்தனர், அவர்கள் ஒரே சந்தைகளில் வணிகம் செய்தனர், ஒரே கல்வி மையங்களில் கற்றனர், அவர்கள் ஒருவருக்குள் ஒருவர் திருமணம் முடித்தானர் மற்றும் பல சமயங்களில் ஒரே அரசியல் அமைப்புகளுக்குள் இருந்தனர். ஆனால் அது இன்றையதுபோல் வன்முறை அரசியல் கருவியாக இல்லை. ஒட்டோமன் (Ottoman Empire) பேரரசின் காலத்தை எடுத்துக் கொண்டால், அந்தப் பேரரசு சுன்னி ஆதிக்கம் கொண்டதாக இருந்தாலும், சியா மக்கள் முழுமையாக ஒதுக்கப்பட்டதாக இல்லை. அதேபோல சபாவித் பேரரசில் (Safavid Empire) சியா ஆதிக்கம் இருந்தாலும், சுன்னி மக்கள் ஒதுக்கப்பட்டதாக இல்லை. பல இடங்களில் அவர்கள் பொருளாதார, கலாசார பண்பாட்டு மற்றும் சமூக வாழ்வில் இணைந்தே இருந்தனர். இந்த இரு அடையாளங்களும் பழமையான மத வெறுப்பின் அடிப்படையில் உருவானவை அல்ல. அவை அரசியல் சூழ்நிலைகளில் உருவாகி, சமூகத்தில் இணைந்து வாழ்ந்த அடையாளங்கள். இதையே பல அறிஞர்கள் வரலாற்று ரீதியாக எடுத்துக் காட்டுகிறார்கள்.
எட்வர்ட் சைட் (Edward Said) தனது “Orientalism” சிந்தனையில், மேற்கு உலகம் கிழக்கை எப்போதும் “பிரச்சினை நிறைந்த, வன்முறை நிறைந்த இடம்” என்று உருவாக்குகிறது என்று கூறுகிறார். இதன் மூலம், சுன்னி–சியா பிரிவு ஒரு “நிலையான மதப்போர்” போல காட்டப்படுகிறது. ஆனால் உண்மையில், இந்தப் பிரிவு நவீனத்துவ காலத்தால் மாற்றமடைந்து; அந்த சமூக, பொருளாதார, மற்றும் அரசியல் சூழல்களால் வடிவமைக்கப்பட்டது. உசாமா மக்க்டிஸி (Usama Makdisi) என்ற வரலாற்றாசிரியர் இப்படிக் கூறுகிறார்: “Sectarianism is not ancient hatred; it is modern political construction” (பிரிவினைவாதம் என்பது புராதன வெறுப்பு அல்ல; அது ஒரு நவீனதுவ அரசியல் உருவாக்கம்) இந்த அடிப்படையில் சுன்னி–சியா முரண்பாடு என்பது “பழமையான மத வெறுப்பு” அல்ல; அது புதிய நவீனத்துவ அரசியல் கட்டமைப்பால் உருவாக்கப்பட்ட ஒன்று. இந்தப் புரிதல் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அது ஒரு பெரிய மித்யையை உடைக்கிறது: “முஸ்லிம்கள் எப்போதும் சுன்னி–சியா என்று சண்டையிட்டுக் கொண்டே இருந்தார்கள்” என்ற கருத்து தவறானது. இது ஒரு கட்டமைக்கப்பட்ட கதை. இந்தக் கதை எப்போது உருவானது? இந்த நிலைமையை உருவாக்கிய முக்கிய திருப்புமுனை காலனித்துவக் காலம்.
19ஆம் நூற்றாண்டு மற்றும் 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில், ஐரோப்பிய சக்திகள் மத்திய கிழக்கை கைப்பற்றத் தொடங்கின. அரபு நிலங்களை கைப்பற்றுவதிலும், தங்களுடைய கடல் போக்குவரத்துக்களை முன்னெடுப்பதிலும் ஐரோப்பிய காலனிய சக்திகளுக்கு உஸ்மானிய சுல்தானியம் மிகப்பெரிய ஒரு சிக்கலாக இருந்தது. அதை முறியடிப்பதற்கான யுத்தங்களையும், ராஜதந்திர நடவடிக்கைகளையும் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் செய்தது. குறிப்பாக இன்றைய துருக்கியில் 1880களில் உருவாக்கப்பட்ட “Young Truk” என்ற அமைப்பு (1908-ல்) சுல்தான் இரண்டாம் அப்துல் ஹமீதை வெற்றி கொண்டு துருக்கியை கைபற்றினார்கள். இவர்களுக்கு ஆட்சியை பிடிக்க பிரித்தானியா மிகப்பெரிய அளவில் உதவியிருந்தாலும் அவர்கள் ஜெர்மனியுடன் கூட்டனியில் இணைதார்கள். இது பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை வழங்கியது என்கிறார் ஸஃபர் பங்காஸ் (Safar Bangas). இதன் காரணத்தால் அவர்களுடைய அரேபிய சகாக்களை துருக்கியர்களுக்கு எதிராக ஏவ வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன் விளைவாக முதலாம் உலகப் போரில் ‘இப்னு சவூத்’ மன்னனின் படை பிர்தானிய ஏகாதிபத்தியதுடன் இணைந்து யுத்தத்தில் பங்குபற்றியது. என்றாலும் “இப்னு ரஷீத்தின்” துருக்கிய ஆதரவு படை சவுத் மன்னருக்கு உதவியளித்த பிரிட்டிஷ் ஆதரவாளர்களை கொன்றதால் இப்னு சவுதின் படை தோல்வி அடைந்தது.
முதலாவது உலகப் போரில் பிரித்தானிய பேரரசால் ஒட்டோமன் பேரரசு தோற்கடிக்கப்பட்டதின் பின்னர், அரேபிய தீபகற்பத்தில் மூன்று தனித்துவமான அதிகாரங்கள் உருவாகின: மேற்கில் ஹிஜாஸ் பகுதியின் ‘ஷெரீப் ஹுசைன் பின் அலி’, வடக்கில் ஹா’யில் பகுதியின் ‘இப்ன் ரஷீத்’, மற்றும் கிழக்கில் நஜ்த் பகுதியின் ‘அமீர் இப்ன் சவூத்’. என்றாலும்1916 ஜூன் மாதம் நிகழ்ந்த ‘அரபுப் புரட்சிக்கு’ (Arab Revolt) தலைமை தாங்கி, தனது விசுவாசத்தை மாற்றிக்கொண்டதன் மூலம், உஸ்மானிய சுல்தானியத்தின் வீழ்ச்சிக்கு “ஷெரீப் ஹுசைன்” முக்கியப் பங்காற்றினார். இது அரேபியாவிலிருந்து துருக்கியர்களின் ஆதிக்கத்தை அகற்றியது.
துருக்கியர்கள் தோற்கடிக்கப்பட்டால், காசா முதல் பாரசீக வளைகுடா வரை ஒரு ‘ஒருங்கிணைந்த அரபு நாடு உருவாக்கப்படும்’ என்று எகிப்திற்கான பிரிட்டிஷ் உயர் ஆணையர் ஹென்றி மெக்மஹோனுடனான (Henry McMahon) கடிதப் பரிமாற்றங்கள் மூலம் பிரிட்டிஷார் ஷெரீப் ஹுசைனை நம்ப வைத்தனர். இதன் காரணமாகவே அவர் தனது நிலைப்பாட்டை முழுமையாக மாற்றிக்கொண்டார் என்கிறார் ‘நூஹ்மான் அப்துல் வாஹித்’.
ஆனால் யுத்தம் முடிவடைந்தும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தாங்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு மாறாக பிரித்தானியா; ஷெரீப்பை புதிய சாம்ராஜ்யத்தின் யதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு பணித்தனர். இது அரபு உலகத்தை பிரிதானியர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையில் பிரிப்பதையும், சைக்ஸ்-பிகோ ஒப்பந்தம் (Sykes-Picot agreement), ஐரோப்பிய யூதர்களைக் குடியேற்றுவதன் மூலம் பாலஸ்தீனத்தில் ‘யூத மக்களுக்கான ஒரு தேசிய-அரசை உருவாக்குவதையும் அடிப்படையாகக் கொண்ட ‘பால்ஃபோர்’ (Balfour) பிரகடனத்தை நடைமுறைப்படுத்துவதையும் உள்ளடக்கியிருந்தது. இந்த புதிய அமைப்பு பிரிட்டிஷாரால் எழுதப்பட்ட “ஆங்கிலோ-ஹிஜாஸ்” ஒப்பந்தத்தில் (Anglo-Hijaz Treaty) இடம் பெற்றிருந்தது, ஆனால் ஷெரீப் அதனை கையெழுத்திடுவதில் மிகுந்த தயக்கம் காட்டினார்.
ஷெரீப் ஹுசைன் பால்ஃபோர் பிரகடனத்திதை ஏற்றுக் கொண்டு பாலஸ்தீனத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கவில்லை. அவர் சியோனிச அமைப்பையும், பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியவாதிகளால் அரேபியா முழுவதும் வரையப்பட்ட புதிய தன்னிச்சையான எல்லைகளையும் அங்கீகரிக்க மறுத்துவிட்டார். இதனால் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஏகாதிபத்தியங்கள் ஷெரீப் ஹுசைனை தங்களுடைய ஏகாதிபத்திய கனவுகளுக்கு முட்டுக்கட்டையாக நோக்கத் தொடங்கினர். ஏகாதிபத்திய நாடுகள் வழமையாக செய்யும் மிரட்டல்களையும், லஞ்சங்களையும் கொடுக்க முன் வந்தனர். மார்ச் 1921-ல் நடைபெற்ற கெய்ரோ மாநாட்டிற்குப் பிறகு அங்கு புதிய காலனித்துவச் செயலாளர் ‘வின்ஸ்டன் சர்ச்சில்’ (Winston Churchill) மத்திய கிழக்கில் இருந்த அனைத்து பிரிட்டிஷ் அதிகாரிகளையும் சந்தித்தார்; பாலஸ்தீனத்தில் பிரிட்டனின் சீயோனிச காலனித்துவத் திட்டத்தை ஏற்குமாறு ஷெரீப்பை லஞ்சம் கொடுத்தும், மிரட்டியும் சம்மதிக்க வைக்க T. E. லாரன்ஸ் (T. E. Lawrence – ‘Lawrence of Arabia’) என அறியப்படும் பிரித்தானிய இராணுவ அதிகாரி மற்றும் தூதர்) அரேபியாவிற்கு அனுப்பப்பட்டார். ஆரம்பத்தில் பிரித்தானிய ஏகாதிபத்தியமும், லாரன்ஸும் £80,000 ஆயிரம் பவுண்டுகளை வழங்க முன்வந்தனர். அதனை ஷெரீப் உடனடியாக ஏற்க மறுத்து விட்டார். பின்னர் லாரன்ஸ் அவருக்கு ஆண்டுக்கு £100,000 ஆயிரம் பவுண்டுகள் வழங்குவதாகக் கூறினார். ஆனால் அவர் பலஸ்தீனத்தை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமும், சியோனிசத்திடமும் விற்று சமரசம் செய்து கொள்ள ஷெரீப் முன்வரவில்லை. பிரித்தானியா வழங்கிய எந்த லஞ்சத்தையும் ஏற்று பலஸ்தீனத்தை சியோனிசத்திற்கு விற்க தயாராக இல்லாத நிலையில்; அரசியல் ரீதியாகவும், ராணுவ ரீதியாகவும் ஹிஜாஸ் ஒரு சுதந்திரமான ஹாஷிமிட் இராச்சியமாக தொடர்தேர்சியாக இருப்பது முழுக்க பிரிட்டனின் அரசியல் விருப்பத்தைச் சார்ந்தது; பிரிட்டனிடம் மட்டுமே அந்தப் பிராந்தியத்தில் அவரது ஆட்சியைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் தேவையான வழிகள் உள்ளன” என்று லாரன்ஸ் மிரட்டினார். ஷெரீப்புடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு இருக்கும் சந்தர்ப்பத்திலேயே அரேபிய தீபகற்பத்திலுள்ள மற்ற தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அவர் அந்த தலைவர்களை பிரிட்டிஷ் உருவாக்க முனையும் புதிய அரேபிய தீபகற்பத்தை ஏற்காவிட்டாலோ அல்லது ஷெரீப்புடன் கூட்டணி வைத்தாலோ பிரிட்டனின் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் இப்னு சவுத்தையும் அவரது வஹாபிகளையும் அவர்கள் மீது ஏவிவிடப் போவதாக லாரன்ஸ் எச்சரித்தார்.
சர்ச்சில் ஜெருசலத்திற்கு பயணம் செய்து, புதிதாக உருவாக்கப்பட்ட “திரான்ஸ்ஜார்டன்” (Transjordan) என்ற நாட்டின் ஆட்சியாளராக நியமிகப்பட்டிருந்த ஷெரீப்பின் மகன் அப்துல்லாஹ்வை சந்தித்தார். அவரிடம் “பாலஸ்தீன தன்னாட்சி அதிகாரத்தை (Palestine mandate) ஏற்றுக்கொள்ளவும், அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவும் தனது தந்தை சம்மதிக்க வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் இப்னு சவுதை அவர்களுக்கு எதிராகத் தூண்டிவிடுவோம் என்று சர்ச்சில் எச்சரித்தார். அதே சமயம், ஹயீல் (Ha’il) பகுதியின் ஆட்சியாளரான இப்னு ரஷீதிற்கு எதிராக இப்னு சவுதைத் தூண்டிவிடவும் பிரித்தானியா திட்டமிட்டிருந்தது.
பிரித்தானிய ஏகாதிபத்தியம் இப்னு சவுத் மூலமாக இப்னு ரஷீதிற்கு விடுத்த அனைத்து அழைப்புகளையும் அவர் நிராகரித்தார். இப்னு ரஷீத் ஏகாதிபத்தியதின் இன்னுமொரு கைப்பாவையாக இருக்க விரும்பவில்லை. அதற்கு மாறாக அவர் 1920-ஆம் ஆண்டின் தனது எல்லையை வடக்கே புதிய பாலஸ்தீன எல்லை வரையிலும், ஈராக் எல்லை வரையிலும் விரிவாக்கினார். தீபகற்பத்தின் வட பகுதியைத் தன் வசம் வைத்திருந்த ரஷீத்திற்கும், மேற்குப் பகுதியைத் தன் வசம் வைத்திருந்த ஷெரீப்பிற்கும் இடையே ஒரு கூட்டணி உருவாகக்கூடும் என்று பிரித்தானியர்கள் அச்சப்பட்டார்கள். அதைவிட முக்கியமாக, மத்திய தரைக்கடலில் உள்ள பாலஸ்தீனத் துறைமுகங்களுக்கும் பாரசீக வளைகுடாவிற்கும் இடையிலான நிலப் போக்குவரத்து வழிகள் தங்களுக்கு நட்பான ஒரு தரப்பின் ஆட்சியின் கீழ் இருக்க வேண்டும் என்று பிரித்தானிய ஏகாதிபத்தியம் விரும்பியது. கெய்ரோ மாநாட்டில் (மார்ச் 12 – மார்ச் 30, 1921) சர் பெர்சி சகரி காக்ஸ் (Sir Percy (Zachariah Cox) என்ற ஏகாதிபத்திய அதிகாரியுடன் சர்ச்சில் உடன்பட்டார்: “இப்னு சவுத்திற்கு ‘ஹெயில் (Hail) நகரை ஆக்கிரமிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்'” என்பதே அது.
1920-ஆம் ஆண்டின் இறுதியில், பிரித்தானியர்கள் இப்னு சவுத்திற்கு அவரது மாதாந்த மானியத்துடன் கூடுதலாக 10,000 பவுண்டுகள் தங்கத்தை நன்கொடையாக வாரி வழங்கினர். அதோடு, 10,000-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள், முக்கியமான போர்க் கருவிகள் மற்றும் நான்கு பீரங்கிகள் என ஏராளமான ஆயுத்தையும், பிரிட்டன்- இந்தியா பயிற்றுவிப்பாளர்ளையும் இப்னு சவுத் மன்னருக்கு வழங்கினர். இறுதியாக, செப்டம்பர் 1921-இல், பிரித்தானியர்கள் இப்னு சவுத்தை ஹெயில் நகரின் மீது ஏவிவிட்டனர். அந்த நகரம் நவம்பர் 1921-இல் அதிகாரப்பூர்வமாக சரணடைந்தது. இந்த வெற்றிக்குப் பிறகுதான் பிரித்தானியர்கள் இப்னு சவுத்திற்கு ஒரு புதிய பட்டத்தை வழங்கினர். இனி அவர் “நஜ்த் அமீர் மற்றும் அதன் பழங்குடியினரின் தலைவர்” அல்ல, மாறாக “Sultan of Najd and its Dependencies” என்று அழைக்கப்பட்டார். இதன் மூலம் ஹெயில் நகரம், நஜ்த் சுல்தானைச் சார்ந்த ஒரு பகுதியாக மாறியது. இந்த மாற்றம் மத்திய கிழக்கில் பிரித்தானிய ஏகாதிபத்தியம் உருவாக்கிய புதிய அரசியல் வரைபடத்தின் ஒரு பகுதியாக இருந்தது. பழைய ஒட்டோமன் நிர்வாக அமைப்புகள் முற்றிலும் சிதைக்கப்பட்டு, அவற்றின் இடத்தில் பிரித்தானிய நலன்களுக்கு ஏற்றவாறு புதிய துணை அரசியல் அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
பால்ஃபர் பிரகடனம் (Balfour Declaration) மிகவும் கவனிக்கப்படாமல் போன அம்சங்களில் ஒன்றாக இருப்பது; சவுதி அரேபிய உருவாக்கத்திற்கும் இஸ்ரேல் உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பு. பிரித்தானிய ஏகாதிபத்தியம் நவீன தேசிய அரச கட்டமைப்புகளை உடைய “யூதர்களுக்கான ஒரு தேசிய இல்லம் உருவாக்கியது போன்றே முஸ்லீம்களுக்கான தேசிய இல்லத்தையும் உருவாக்கியது. மேலும் சவுதி அரேபியாவின் எல்லைகளை தனித்துவமாக்குவது என்னவெனில், அதன் வடக்கு மற்றும் வடகிழக்கு எல்லைகள், இஸ்ரேல் உருவாக்கத்தை எளிதாக்குவதில் பேரரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் விளைவாக அமைந்துள்ளன என்கிறார் ‘நூஹ்மான் அப்துல் வாஹித்’. மேலும் அவர், ஹாயில் (Ha’il) மற்றும் ஹிஜாஸ் (Hijaz) என்ற இரண்டு அரபு ஷெய்க்டொமையும் (Sheikhdom) இப்னு சவுத் தலைமையிலான வஹாபிகள் உடைத்தது அவற்றின் தலைவர்கள் பாலஸ்தீனில் பிரிட்டிஷ் பேரரசின் சியோனிச திட்டத்திற்கு ஆதரவு வழங்க மறுத்ததையே அடிப்படையாகக் கொண்டதாகும். எனவே, பாலஸ்தீனில் சியோனிசத்தை திணிக்க பிரிட்டிஷ் பேரரசு மேற்கொண்ட முயற்சி; இன்றைய சவுதி அரேபியாவின் புவியியல் அமைப்பின் அடிப்படையிலேயே பதியப்பட்டுள்ளது என்பது மிகவும் தெளிவாகிறது.
இவ்வாறு உருவாக்கப்பட்ட அரசியல் அலகுகள், நேரடி காலனித்துவ ஆட்சி இல்லாவிட்டாலும், கட்டுப்படுத்தக்கூடிய “அரசர் மையப்பட்ட” (monarchical proxy) அமைப்புகளாக செயல்பட்டன. இந்த சூழலில், இப்னு சவுத் தலைமையிலான நஜ்த் அதிகார அமைப்பு, பிரித்தானிய ஆதரவு, ஆயுத இராணுவ உதவி மற்றும் இராஜதந்திர அங்கீகாரம் ஆகியவற்றின் மூலம் வலுப்பெற்றது. இதன் விளைவாக அரேபிய தீபகற்பத்தில் மையப்படுத்தப்பட்ட ஒரு புதிய தேசிய–மத அரசியல் கட்டமைப்பு உருவாகும் பாதை திறக்கப்பட்டது. வஹாபிய கருத்தியல் இந்த அரசியல் கட்டமைப்புக்கு மத நியாயத்தை வழங்கும் ஒரு (ideational) கருத்தியல் அடித்தளமாக செயல்பட்டது. இதன் தொடர்ச்சியாக, பின்னர் உருவான சவுதி அரேபிய அரசியல் அமைப்பு, மத சீர்திருத்தம், ஏகாதிபத்திய நாடுகளுக்கு முகவர்களாக தொழிற்படுவது மற்றும் காலனிய மறைமுக ஆட்சி ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவாகக் காணப்படுகிறது. இவ்வாறு, ஒரு புறம் மத “தூய்மை” என்ற பெயரில் உருவான சிந்தனை, மறுபுறம் ஏகாதிபத்திய புவியியல் அரசியலுடன் இணைந்து ஒரு புதிய பிராந்திய ஒழுங்கை நிறுவியது.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, பிரித்தானியாவின் ஏகாதிபத்திய ஆதிக்கத்தை கட்டுப்படுத்தி அந்த இடத்தை அமெரிக்க ஏகாதிபத்தியம் நிரப்பும் புதிய உலக சக்தியாக உருவெடுத்தது. இந்த மாற்றத்தில் சவுதி அரேபியா ஒரு முக்கியமான மூலோபாய கூட்டாளியாக மாற்றப்பட்டது. எண்ணெய் வளங்களின் கட்டுப்பாடு, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இராணுவ ஆதரவு ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா–சவுதி உறவு ஒரு பரஸ்பர சார்பு அமைப்பாக வளர்ந்தது. இதில் சவுதி அரசியல் அமைப்பு, அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பின் உள்ளக அங்கமாக செயல்படும் வகையில் நிலைநிறுத்தப்பட்டது. இந்த உறவின் ஊடாக, வஹாபிய கருத்தியல் பிராந்தியத்தில் ஒரு மத–அரசியல் தாக்கம் கொண்ட அமைப்பாக மேலும் விரிவடைந்தது. அமெரிக்காவின் புவியியல் அரசியல் நலன்கள் மற்றும் சவுதி அரசின் உள்நாட்டு நிலைத்தன்மை தேவைகள் இணைந்து, ஒரு புதிய வகை ஏகாதிபத்திய–கூட்டணி அமைப்பை உருவாக்கின. இதன் விளைவாக, மத்திய கிழக்கின் அரசியல் ஒழுங்கு பிரித்தானிய காலனிய அமைப்பிலிருந்து அமெரிக்க ஏகாதிபத்திய தலைமையிலான பாதுகாப்பு–எண்ணெய் மையப்பட்ட உலக ஒழுங்காக மாறியது.
இந்த வரலாற்று தொடர்ச்சியை விரிவாக வாசித்தால், மத்திய கிழக்கு அரசியல் ஒழுங்கு என்பது தனித்தனி மத மோதல்கள் அல்லது பழமையான வெறுப்புகளின் விளைவாக அல்ல என்பது தெளிவாகிறது. மாறாக, அது காலனியத்துவம், நவீனத்துவம் மற்றும் ஏகாதிபத்திய புவியியல் அரசியல் ஆகியவற்றின் இணைந்த விளைவாக உருவான ஒரு கட்டமைப்பாகும்.
இன்றைய உலக அரசியல் சூழலில் ஈரான் மீது அமெரிக்காவின் அழுத்தங்கள், போர் அதனுடன் இணைந்த; இஸ்ரேல்–சியோனிச அரசியல் திட்டங்கள், இன அழிப்புக்கள் மற்றும் வஹாபிய சிந்தனை வலையமைப்புகள் ஆகியவை தனித்தனியான நிகழ்வுகளாக அல்லாமல், ஒரே வரலாற்று தொடர்ச்சியின் ஒரே முகங்களாகவே புரிந்துகொள்ளப்பட வேண்டும்.
றபியூஸ் முகமது – ஒரு கவிஞர், காலனித்துவ நீக்கம், பின்காலனிய உலக ஒழுங்கு பற்றிய விமர்சன சிந்தனைகளை முன்வைத்து வருபவர்.