– பர்ஸானா ஹனீபா

ஆய்வுச் சுருக்கம்

2009 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததற்குப் பிறகு, உள்நாட்டளவில் 2008‌ களுக்கு முன்னர் யுத்தத்தினால் இடம்பெயர்க்கப்பட்டிருந்த வட மாகாண முஸ்லிம்கள் உள்ளிட்ட பொது மக்கள், தமது தாயகம் திரும்புவது தொடர்பாகவும் மீள்குடியேற்ற உதவிகளைப் பெறுவதிலும் குறைந்தளவிலான முன்னுரிமையையே பெற்று வருகின்றனர். ‘முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவர்கள்’ என வரையறுக்கப்பட்டிருந்த தரப்பினருக்கு நிதியைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி தன்னார்வ உதவி நிறுவனங்களும் அரசாங்கமும் தொடர்ந்தும் இப்பிரச்சினையை கிடப்பில் போட்டு அதனை அடிக்கடி நியாயப்படுத்தவும் செய்தன. இதன் விளைவாக, தமது தாயகத்தில் இருந்து நீண்டகாலமாக இடம்பெயர்க்கப்பட்டிருக்கும் பலருக்கு மிகக் குறைந்தளவிலான ஆதரவே கிடைத்தது. அந்தவகையில் ‘முன்னுரிமையளிக்கப்பட வேண்டியவர்கள்’ என்ற கருத்தாக்கத்தை வெறுமனே நிதியுதவி அல்லது ஏனைய தேவைப்பாடுகள் தொடர்பான ஒன்றாகக் கருதுவதை கேள்விக்குட்படுத்தும் இக்கட்டுரை, அதற்கும் அப்பால் போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினரை இனங்காண்பதற்காக அரசாங்கம் மற்றும் ஏனைய சர்வதேச மனிதாபிமான அமைப்புக்கள் ஆகியன பயன்படுத்தி வரும் பாராபட்சமான அளவுகோல்கள் தொடர்பாகவும் வாதிக்கிறது. உள்நாட்டின் அரசியல் யதார்த்தங்களையும் சூழமைவுகளையும் புறக்கணித்த நிலையில் செயற்பட்டு வரும் குறித்த அமைப்புகள், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை தொடர்ந்தும் தாமதப்படுத்தி வருவதுடன் முஸ்லிம்களை தொடர்ந்தும் விளிம்பு நிலைக்குத் தள்ளிவிடும் செயற்பாடுகளையே அவை முன்னெடுத்து வருகின்றன. தொடர்ந்தும் இக்கட்டுரை, தேர்தல்களின் போது அரசியல்வாதிகளாலும், இடம்பெயர்ந்தோர் பற்றிய கரிசனைகளைக் கொண்ட ஆர்வலர்களாலும் தமது நோக்கங்களை அடைந்து கொள்வதற்காக , பாதிக்கப்பட்டவர் (Victimhood) என்ற கதையாடல்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை ஆராய்வதோடு போருக்குப் பிந்தைய இலங்கையில் அரசியல் மற்றும் சமூக மாற்றத்தை அடைந்து கொள்வதற்காக பாதிக்கப்பட்டவர் என்ற அடையாளம் எந்தளவு தூரம் வினைதிறனானது என்பது குறித்தும் இது விவாதிக்கிறது.

அறிமுகம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, 1990 ஒக்டோபரில் வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் வசித்து வந்த முஸ்லிம்களை அவர்களது சொந்த நிலங்களில் இருந்து வெளியேற்றியிருந்தது. சுமார் 75,000 முஸ்லிம்கள் இவ்வாறு பலவந்தமாக வெளியேற்றப்பட்டதுடன் அவர்களது சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன. உள்நாட்டு யுத்தம் நிறைவுக்கு வந்து மூன்று ஆண்டுகள் கழித்து 2012 ஜனவரியில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதி ஒருவர் என்னிடம் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்துப் பேசும் போது, வடமாகாண முஸ்லிம்களின் (IDPs) மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து இப்போதைக்கு ஆணைக்குழு கவனம் செலுத்தப்போவதில்லை எனத் தெரிவித்திருந்தார். அப்படியானதொரு வாதத்தை நான் முதன்முதலில் கேட்ட சந்தர்ப்பம் அதுவாகவே இருந்தது. வடமாகாண முஸ்லிம்கள் தமது நிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்தாலும் கடந்த 20 வருடங்களாக அவர்கள் பெற்றுவரும் நலத்திட்டங்களால் அவர்கள் தொடர்பில் வேறு திட்டங்களை சிந்திக்க வேண்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார். உள்ளூர் மனித உரிமை ஆர்வலர்களின் கருத்துக்களுக்கும், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் – குறிப்பாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைக்குழுவின் (UNHCR) கருத்துக்களுக்கும் இடையே வடமாகாண முஸ்லிம்கள் குறித்த வேறுபட்ட கண்ணோட்டங்கள் இருப்பதை அவரது கருத்தில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக முற்றிலும் புதியதொரு நிலச் சூழமைவில் வாழ நிர்பந்திக்கப்பட்டிருந்த வடமாகாண முஸ்லிம்கள், தாங்கள் வாழும் நிலச் சூழமைவுடன் இன்னமும் முழுமையாக இணங்கிச் செல்லவில்லை என்பதற்கான வலுவான சான்றுகள் இருந்தன. தாம் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டிருந்த சக முஸ்லிம் சமூகங்களுடன் அவர்களின் உறவுகள் பெரும்பாலும் கடினமானதாகவும் சிக்கலானதாகவும் இருந்தன. இருப்பினும், அவர்கள் பல ஆண்டுகளாக பெற்றுவந்த நலத்திட்ட உதவிகளும் ஆதரவுகளும், அவர்களது மனத் தயக்கத்தையும் ஏக்கத்தையும் போக்கி விட்டதாக ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைக்குழு (UNHCR) நம்பியது.

மே 2009ல் போர் முடிவடைந்தவுடன், 2008 க்கு முன்னர் இடம்பெயர்ந்த அனைவரும் குறைந்தளவு முன்னுரிமைப் பட்டியலில் சேர்க்கப்பட்டதோடு போரின் இறுதிக் காலகட்டங்களில் இடம்பெயர்ந்த ஆயிரக்கணக்கானோரே உதவித் திட்டங்களை வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட்டனர். இதனை ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைக்குழுவின் (UNHCR) அறிக்கை தெளிவாகவே வெளிப்படுத்தியது. 20 வருடங்களாக இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண முஸ்லிம்களுக்கு அத்தகைய உதவி நலத்திட்டங்கள் கிடைக்கப்பெறாமை குறித்து அரசாங்கமும் அகதிகள் ஆணையமும் வெவ்வேறான வியாக்கியானங்களை முன்வைத்து வந்தது.

வடமாகண முஸ்லிம்கள் குறித்த ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR) நிலைப்பாட்டை, மனிதாபிமான உதவிகளுக்கான பொறிமுறைகளில் நிலவும் சிக்கலின் ஒரு பகுதியாகப் புரிந்துகொள்ள முடியும். இந்தப் பொறிமுறைகள், பாதிக்கப்பட்ட தரப்பினரான பொதுமக்களை ஒருவர் மற்றவரை விட நலத்திட்ட உதவிகளுக்கு அதிக தகுதியுடையவர்களாகக் கட்டமைத்து விடுகின்றன. யார் பாதிக்கப்பட்டவர் என்பதைத் தீர்மானிக்கும் ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறையானது, இலங்கையின் உண்மையான சூழ்நிலையை அடிப்படையாகக் கொண்டிராமல், சர்வதேச மனிதாபிமான அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டதன் விளைவாக குறித்த அமைப்பினால் உள்ளூர் யதார்த்தங்களைச் சரியாகப் பிரதிபலிக்க முடியவில்லை. இலங்கைச் சூழமைவில் ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையத்தின் (UNHCR), இத்தகைய அணுகுமுறைகள் சிக்கலானதாகவே  இருந்தன. ஏற்கனவே இருந்த இன முறுகலையும், பிரிவினைவாதக் கருத்துக்களையும் அவை வலுப்படுத்தியதுடன் பாதிக்கப்பட்ட சமூகங்களிடையே விரக்தியை ஏற்படுத்தி போருக்குப் பிந்தைய நல்லிணக்க மற்றும் சகவாழ்வு முயற்சிகளை மேலும் கடினமாக்கியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் துன்பங்களையும் இன்னல்களையும் ஆவணப்படுத்தும் பணி பல்வேறு வழிகளில் நடைபெற்று வந்த நிலையிலும், ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையப் (UNHCR) பிரதிநிதியின் மேற்குறித்த கருத்து உண்மையிலேயே வியப்பளிப்பதாக இருந்தது. இலங்கையின் உள்நாட்டுப் போர் குறித்த விவாதங்களில் மிகக் குறைவான கவனயீர்ப்பைப் பெற்றிருந்த வடக்கு முஸ்லிம்களின் வாழ்வனுபவங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்காக வேண்டி, இந்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டம் பல சிரமங்களையும் தடங்கல்களையும் சந்தித்தபோதிலும் அதற்கான மக்கள் ஆதரவில் குறைவு ஏற்படவில்லை. இலங்கைவாழ் மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் இடம்பெயர்ந்த வட மாகாண முஸ்லிம்களின் மனங்களைப் புரிந்துகொண்டு ஆதரவளித்தனர்.

பலமுறை ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைக்குழுவைச் சந்திக்க குறித்த மனித உரிமை ஆர்வலர்களின் அமைப்பால் கோரப்பட்ட போதிலும், ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் (UNHCR) அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. மக்கள் தங்கள் அனுபவங்களைப் பற்றிய உண்மைகளைக் கூறவும் அதன்வழியே நீதியை நாடவும் வழிவகுக்கும் ஒரு சமூக அடிப்படையிலான திட்டமாகவே குறித்த மனித உரிமை ஆர்வலர்களின் அமைப்பு உருவாக்கப்பட்டது. ‘மீட்புக்கான தேடல்: வட மாகாண முஸ்லிம்களின் கதை’ (Quest for Redemption: The Story of the Northern Muslims) என்ற அறிக்கையில், தங்கள் வீடுகளிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து, பின்னர் மீள்குடியேற முயன்றபோது சவால்களை எதிர்கொண்ட வடக்கு முஸ்லிம்களின் அனுபவங்களை குறித்த அமைப்பு பதிவுசெய்திருந்தது.

மீட்புக்கான தேடல் அறிக்கையில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘பாதிக்கப்பட்டோர்’ என்ற கருத்தும், ஐ.நா. அகதிகள் ஆணையத்தால் (UNHCR) பயன்படுத்தப்பட்ட ‘பாதிக்கப்பட்டோர்’ என்ற கருத்தும் அவற்றின் உள்ளடக்க மட்டத்தில் மிகவும் வேறுபட்டிருந்ததை அவதானிக்க முடியும். அதுபோலவே, ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையமும் வடமாகாண முஸ்லிம்களும் ‘இடம்பெயர்வு’ என்ற சொல்லை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொண்டிருந்தனர். அகதிகள் ஆணையத்தைப் பொறுத்தவரை, இடம்பெயர்வு என்பது மனிதாபிமான உதவி தேவைப்படும் மக்களை அடையாளம் காணப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடலாக மாத்திரமே இருந்தது. ஆனால் வட மாகாண முஸ்லிம்களுக்கு இடம்பெயர்வு என்பது 20 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்களின் வாழ்க்கையை பாதிக்கும் ஒரு அரசியல் மற்றும் சமூக அடையாளமாக இருந்தது. ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் கொண்டிருந்த இந்த சிக்கலான பார்வை குறித்த மக்களை இன்னமும் துன்பத்துக்கு ஆளாக்கியதுடன் உள்நாட்டு அகதிகளான வடமாகாண முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளையும் துன்பங்களையும் உள்ளூர் ஆர்வலர்களினதும் சமூகத் தலைவர்களினதும் கவனத்திற்குக் கொண்டுவருவதை மேலும் கடினமாக்கின.

வடமாகாண முஸ்லிம் உள்நாட்டு அகதிகளும் இலங்கைச் சூழமைவும்

1990களில் விடுதலைப் புலிகளால் வட மாகாணத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களில் பெருமளவிலானோர் வடமேற்கு இலங்கையின் புத்தளம் மாவட்டத்தின் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பல பகுதிகளில் குடியேறினர். வடமாகாண முஸ்லிம்கள், போர்க் காலங்களிலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதிக் காலங்களிலும் “மீண்டுமொரு முறை தாம் பலவந்தமாக வெளியேற நிர்பந்திக்கப்படலாம்” என்ற அச்சத்தின் காரணமாக  தங்கள் வீடுகளுக்குப் பாதுகாப்பாகத் திரும்பிச் செல்ல முடியும் என்பதில் ஒருபோதும் உறுதியாக இருந்ததில்லை (Hasbullah 2001). ஏனெனில் 2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பிறகு அவர்களில் பலருக்குத் தாயகம் திரும்புவதற்கான வாய்ப்பு உருவாகிய போதிலும் இலங்கை அரசாங்கமும் சர்வதேச மனிதாபிமான அமைப்புகளும் அது தொடர்பிலான போதுமான ஆதரவையோ ஆர்வத்தையோ காட்டியிருக்கவில்லை. போர் முடிவடைந்து ஐந்து ஆண்டுகளாக வடக்கிலும் கிழக்கிலும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளும் அபிவிருத்தித் திட்டங்களும்  இடம்பெற்றுக் கொண்டிருந்தபோதிலும், வட மாகாண முஸ்லிம்கள் தமது தாயகம் திரும்பி, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதில் பல சிரமங்களையும் சவால்களையும் எதிர்கொண்டனர்.

போர் முடிவடைந்து முதலிரண்டு ஆண்டுகளில் 2008க்கு அண்மித்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதில் அரசாங்கம்  அதிக கவனம் செலுத்தியது. இருப்பினும், அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதில் அரசாங்கத்தின் கவனம் குறைவாகவே இருந்தது. இவ்வாறு மீள்குடியேறியவர்கள் தமது பாதுகாப்பு, நிலையான வேலைவாய்ப்பு, போதுமான வருமானமின்மை மற்றும் மீள்குடியேற்றச் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை இல்லாமை உள்ளிட்ட பல பிரச்சனைகளை எதிர்கொண்டனர். அதுபோலவே யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் இராணுவப் பிரசன்னம் அதிகமாக இருந்தது. சிவில் நிர்வாகம் உள்ளிட்ட பல பகுதிகளில் இராணுவத்தின் தலையீடு அதிகமாக இருந்ததுடன் பொதுச் சமூகத்தின் நடவடிக்கைகள் அனைத்தும் சந்தேகக்கண் கொண்டு பார்க்கப்பட்டன. போருக்குப் பிந்தைய சூழமைவில் மீள் புனரமைப்பு நடவடிக்கைகளுக்கான சான்றாக வட பிரதேசங்களில் பல உள்கட்டமைப்புத் திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்ட போதிலும், இந்தத் திட்டங்கள், உள்ளூர் மக்களுக்குக் குறைந்த அளவிலான நன்மைகளையே அளித்தன என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் (Thahir  et al. 2014).

எவ்வாறாயினும் போருக்குப் பிறகான வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது அவ்வளவு கவனயீர்ப்பைப் பெற்ற ஒன்றாக இருக்கவில்லை. வடபகுதியை தொடர்ந்தும் இராணுவம் உன்னிப்பாகக் கண்காணித்து வந்ததுடன் அங்கு வாழ்ந்த தமிழ் மக்கள் போரினால் சோர்வடைந்து விரக்தியடைந்திருந்தனர். சுமார் 20 ஆண்டுகளாக கிட்டத்தட்ட முழுவதுமாக ஒரேயொரு இனக்குழுவின் வசிப்பிடமாக வட பகுதி இருந்ததுடன் ஒரு காலத்தில் அங்கு பெருமளவிலான முஸ்லிம் சனத்தொகை வாழ்ந்திருந்தது என்பதைப் பலரும் ஏறக்குறைய மறந்திருந்தனர். வடக்கின் அரசியல் தலைவர்களும் சிவில் சமூகக் குழுக்களும், போருக்குப் பிந்தைய ஏனைய சவால்களைச் சமாளிக்க வேண்டியிருந்ததால் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பற்றிய பிரக்ஞையில் மெதுமெதுவாக நம்பிக்கை இழக்கத் துவங்கினர். 

இடம்பெயர்ந்து 20 ஆண்டுகாலமாகி விட்டதால் முஸ்லிம் கிராமங்கள் கடுமையாகச் சேதமடைந்திருந்ததுடன் பல வீடுகள் அழிக்கப்பட்டிருந்தன. அதே நேரத்தில், குடும்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. விளைவாக, திரும்பி வந்த முஸ்லிம்களுக்குத் தங்கள் வாழ்வாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப நிலம், வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியன தேவைப்பட்டன. அதேநேரம் தாயகம் திரும்பி வரும் முஸ்லிம் சமூகங்களுக்கும் தமிழ் சமூகங்களுக்கும் இடையே நிலத்தின் உரிமை மற்றும் பயன்பாடு, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் பிற வாழ்வாதாரங்கள் மீதுள்ள உரிமை ஆகியவை தொடர்பாக மோதல்களும் கருத்து வேறுபாடுகளும் நிலவுவதுடன், பதட்டங்களும் சர்ச்சைகளும் உருவாகியுள்ளன.

வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, பல முஸ்லிம்களில் சிலருக்கு புத்தளத்தில் குடியேறி அங்கு ஓரளவு நிலையானதும் வெற்றிகரமானதுமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடிந்தது. அப்பகுதியில் பொருளாதார வாய்ப்புகள் குறைவாக இருந்ததாலும், சில குடும்பங்களுக்கு வீட்டு வசதி உள்ளிட்ட ஏனைய உதவிகள் கிடைக்காததாலும், மற்றவர்கள் பிழைப்புக்காகப் போராட வேண்டியிருந்தது. இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்களுக்கு பொதுக் கல்வி, போக்குவரத்து மற்றும் அடிப்படை சுகாதாரப் பாதுகாப்பு போன்ற அடிப்படை சேவைகளைப் பெற முடிந்த போதிலும் தமது தாயகமான வடக்கிற்குத் திரும்பி, அங்கு தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப விரும்பும் குடும்பங்களுக்குக் கூட அது நிச்சயமற்றதாகவே உள்ளது.

வடமாகாண முஸ்லிம்கள் அவர்கள் வெளியேற்றப்படுவதற்கு முன்பு, (குறிப்பாக நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்) வலுவான சமூக வலைப்பின்னல்களையும், ஓரளவு அரசியல் செல்வாக்கு மற்றும் கணிசமான பொருளாதார வலிமை கொண்ட ஒரு சமூகமாகவும் இருந்தனர் (QFR 2011; Thiranagama 2011; Mohideen  in Thiranagama). அதுமட்டுமின்றி அவர்களில் பலர் பரந்த நிலப்பரப்புகளுக்குச் சொந்தக்காரர்களாக இருந்ததுடன் பிரபலமான பாடசாலைகள், பள்ளிவாயல்கள் உள்ளிட்ட இதர சமூக நிறுவனங்களையும் பெற்றிருந்தனர். ஆனால், திடீரென இடம்பெற்ற பலவந்தமான வெளியேற்றம் ஏறக்குறைய அனைத்து வடக்குவாழ் முஸ்லிம்களையும் வறுமையிலும் துன்பத்திலும் தள்ளியது. திரங்கம (2011) குறிப்பிடுவது போல மட்டுமன்றி அதுவரைக்கும் இல்லாத சமூக அடையாளமான “வடமாகாண முஸ்லிம்கள்” என்ற புதியதொரு அடையாளத்தையும் அவர்களுக்கு அது வழங்கியது. மீள்குடியேற்றம் குறித்த வடமாகாண முஸ்லிம்களின் எதிர்பார்ப்பு வெறுமனே நிலம் சார்ந்த ஒன்றாக மாத்திரம் இருக்கவில்லை. விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட போது அவர்கள் இழந்த அனைத்தினதும் பற்றிய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் அவர்கள் எதிர்பார்க்கின்றனர். தங்களுக்கு நேர்ந்த இழப்புக்கள் மற்றும் தாயகம் மீதான நேசம் காரணமாக வடமாகாண முஸ்லிம்கள் பலர் தமது தாயகம் செல்லவும் தமது வாழ்க்கையை அங்கு மீண்டும் கொண்டுசெல்லவும் ஆர்வமாக இருந்தனர். அங்கு திரும்பிச் செல்லவும், தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், தாங்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் இலங்கை அரசாங்கம் உதவும் என்று அவர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். இருப்பினும், ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான  ஆணைய அதிகாரிக்கு (UNHCR), வடமாகாண முஸ்லிம்களின் குறிப்பிட்ட நிலைமை குறித்த மிகக் குறைந்த புரிதலோ ஆர்வமோ இருப்பதாகத் தோன்றவில்லை. அவர்களது வரலாறு,  பலவந்தமான வெளியேற்றம் , சவால்கள் மற்றும் தேவைகள் குறித்த ஏராளமான தரவுகள் அவர்களுக்கு கிடைத்திருந்த போதிலும் இப்படியான ஒரு நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

வடமாகாண முஸ்லிம்கள் குறித்த இத்தகைய கோளாறான புரிதல் எனும் இந்தப் பிரச்சனையை இக்கட்டுரை இரண்டு விதங்களில் விளக்க முனைகிறது. அதில் முதலாவதாக, ஜார்ஜியோ அகம்பென் (Giorgio Agamben) முன்வைத்த கருத்தாக்கமான  “வெற்று வாழ்க்கை” (Bare life) என்ற கருத்தினடியாக இதனைப் புரிந்து கொள்ள முனைகிறது. இக்கருத்தின்படி, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையர் (UNHCR), இடப்பெயர்வினால் மக்கள் துன்பப்படும் அளவைப் பொறுத்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக மக்களை தரவரிசைப்படுத்துவதாகப் புரிந்து கொள்ள முடியும். இக்கருத்தின் பிரகாரம், ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணைக்குழுவின் உதவிகளைப் பெற மிகவும் தகுதியானவர்களாகக் கருதப்பட்ட பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கான சொந்த அரசியல் கருத்துக்களையோ, கோரிக்கைகளோ, அல்லது தங்களுக்காகப் பேசும் திறனையோ கொண்டவர்களாகக் கருதப்படவில்லை. மாறாக அவர்கள், காப்பாற்றப்படவோ அல்லது உதவியின்றி கைவிடப்படவோ மட்டுமே தகுதியான, மக்களாகவே பார்க்கப்பட்டனர். இதன் காரணமாகவே வடமாகாண முஸ்லிம்களின் அரசியல் கோரிக்கைகளான, தங்களது பலவந்தமான வெளியேற்றத்தை அங்கீகரித்தல் மற்றும் அதற்கான இழப்பீடுகளைக் கோருதல் உள்ளிட்ட கோரிக்கைகள் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) கட்டமைப்பிற்குள் பொருந்தவில்லை. விளைவாக, ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR), வடமாகாண முஸ்லிம்களின் நியாயமான பிரச்சினைகளையும் அரசியல் கோரிக்கைகளையும் அங்கீகரிப்பதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் சொந்த நிலைமையை மிகைப்படுத்துகிறார்கள் அல்லது வேண்டுமென்றே தவறாகச் சித்தரிக்கிறார்கள் என்பது போலவே அவர்களைக் கருதியது.

அதுபோலவே இப்பிரச்சினையைப் புரிந்து கொள்வதற்கான இரண்டாவது கண்ணோட்டமாக ஃபூக்கோ முன்வைத்த ‘அரசாளுமை’ (Governmentality) என்ற கருத்தாக்கத்தை இக்கட்டுரை முன்வைக்கிறது. இதன் பிரகாரம், ஐக்கிய நாடுகளின் அகதிகள் ஆணையம் (UNHCR) வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பாகக் கொண்டிருந்த சிந்திப்பானது, கட்டுப்படுத்தலையும் நிர்வகித்தலையும் கொண்டமைந்த அரசமைப்பு மற்றும் மனிதாபிமான உதவித் திட்டங்களின் பின்னால் இயங்கிய அதிகாரங்களினால் வடிவமைக்கப்பட்டிருந்தது எனலாம். ‘அரசாளுமை’ (Governmentality) என்பது, ஃபூக்கோ பயன்படுத்திய அதே அர்த்தத்திலேயே இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஃபூக்கோவைப் பொறுத்தவரை, ‘அரசாளுமை’ (Governmentality) என்பது அரசாங்கங்களும் நிறுவனங்களும் மக்களைச் சட்டங்கள் மற்றும் விதிகள் மூலம் மட்டுமல்லாமல், அவர்களது உள்ளார்ந்த விழுமியங்கள், நடத்தைகள் மற்றும் சிந்தனை முறைகளை வடிவமைப்பதன் மூலமாகவும் கட்டுப்படுத்தி நிர்வகிக்கின்றன என்பதாக அமைகிறது.

ஐ.நா அகதிகள் ஆணையமும் இடம்பெயர்ந்தோரும்

உள்நாட்டு அகதிகளான வடமாகாண முஸ்லிம்கள் குறித்த ஐ.நா. அகதிகள் ஆணையப் பிரதிநிதியின் மேற்குறித்த கருத்து, கொழும்பில் நடைபெற்ற தூதரகத் தலைவருடனான பிற்காலக் கலந்துரையாடலில் உறுதி செய்யப்பட்டது. புதிதாக இடம்பெயர்ந்த மக்களுக்கு முன்னுரிமை அளிப்பது அரசாங்கத்தின் முடிவே தவிர, ஐ.நா. அகதிகள் ஆணையத்தினுடையதல்ல (UNHCR) என்று சுட்டிக்காட்டிய அவர், ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) எதிர்கொண்டு வரும் நிதிப் பற்றாக்குறை தொடர்பாகவும் விளக்கியிருந்தார். தொடர்ந்தும் இடம்பெற்ற கலந்துரையாடலில் ஐ.நா. அகதிகள் ஆணையத்திற்கும் (UNHCR) அரசாங்கத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் மட்டுமன்றி நீண்ட காலமாக இடம்பெயர்ந்திருந்த அனைத்து மக்களும் மீள்குடியேற்றம் தொடர்பாக முன்னுரிமைப்படுத்தப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. இருந்தபோதிலும், ஒரு பிரபல முஸ்லிம் அரசியல்வாதியான அப்போதைய தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர், தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து வந்த முஸ்லிம்களுக்கு உதவி வழங்குமாறு ஐ.நா. அகதிகள் ஆணையத்திற்கு (UNHCR) அழுத்தம் கொடுத்து வருவதாகவும் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் தூதுக்குழுத் தலைவர் கூறினார்.

மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குத் திரும்பும் வடமாகாண முஸ்லிம்களுக்கு அவர்களது மீள்குடியேற்றம் தொடர்பாக உதவுமாறு ரிஷாத் பதியுதீனிடமிருந்து தனக்குக் கிடைத்த அழுத்தம் குறித்து ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) அதிருப்தி அடைந்திருந்தது. வடபகுதியைச் சேர்ந்த முஸ்லிமான ரிஷார்ட் பதியுதீன், 2009ல் போர் முடிவடைந்தபோது மீள்குடியேற்ற அமைச்சராகப் பணியாற்றியிருந்தார். அக்காலத்திய அரசியல் சூழ்நிலை காரணமாக, தமிழரின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை காத்திருக்குமாறு தனது ஆதரவாளர்களான வடமாகாண முஸ்லிம்களை அவர் கேட்டுக்கொள்ள வேண்டியிருந்தது.

பின்னர், 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுக்காலப்பகுதிகளில் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு உதவி வழங்குமாறு UNHCR மற்றும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு (NGO)  ரிஷார்ட் பதியுதீன் அழுத்தம் கொடுக்கத் தொடங்கினார். UNHCR அதிகாரிகளின் கூற்றுப்படி அவர் அடிக்கடி UNHCR அலுவலகங்களைத் தொடர்புகொண்டு, முஸ்லிம் குடும்பங்களுக்கு வீட்டுப் பொருட்கள் மற்றும் அடிப்படைத் தேவைகள் போன்ற உணவு நிவாரணப் பொருட்களை (NFIs) வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். UNHCR மற்றும் பிற மனிதாபிமான அமைப்புகள் இந்த அரசியல் அழுத்தத்தை விரும்பவில்லை. அரசியல் கோரிக்கைகளின்படி அல்லாமல், தங்களின் சொந்த அளவுகோல்களின்படி நிவாரண உதவிகள் விநியோகிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கருதினர். இந்தக் கருத்து வேறுபாடுகள் மிகவும் தீவிரமடைந்ததால் வடமாகாண முஸ்லிம்களுக்கு ஆதரவளிக்கத் தவறியதாகக் குற்றம் சாட்டி, UNHCR மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக பதியுதீனின் அரசியல் கட்சி அச்சுறுத்தியது.

மட்டுமன்றி மன்னார் உள்ளிட்ட பிற பகுதிகளில் தமிழ் மக்களுக்கு ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) வழங்கி வந்த உதவிகளில் ரிஷாத் பதியுதீன் தலையிட்டு வந்ததாக குற்றம் சாட்டிய ஆணையம், சில நிலங்கள் மீதான உரிமையை முஸ்லிம்களுக்காக அவர் கோரியதாகவும், இது நிவாரண மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தியதாகவும் கூறினர். 2012 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சன்னார் பகுதியைச் சேர்ந்த விடத்தல்தீவு பகுதி தொடர்பான நிலத்தகராறை இதற்கு உதாரணமாக குறிப்பிட முடியும். ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் கள அதிகாரி ஒருவர், 2012 ஜனவரியில் இந்தத் தகராறு குறித்து உரையாடியிருந்தார். ஆங்காங்கே மீள்குடியேறி வந்த முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே நில உரிமை மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் தொடர்பாக உருவாகி வந்த பல மோதல்களில் சன்னார் நிலத்தகராறும் ஒன்றாகும். இதுபோன்ற தகராறுகள் தொடர்ந்து நிலவி வந்ததுடன் அவற்றுக்கு அவசரமான தீர்வுகளும் தேவைப்பட்டன. உண்மையில் சன்னார் பிரதேச நிலத்தகராறு விடயத்தில், அதில் நேரடியாகவே சம்பந்தப்பட்டுள்ள இனப் பிரச்சினைகள் தொடர்பான போதுமான புரிதலை ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) கொண்டிருக்கவில்லை. ரஹீம் மற்றும் தங்கராஜா ஆகியோர் (2013) ஆவணப்படுத்தியதன் பிரகாரம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் பகுப்பாய்வுகளும் அவதானங்களும் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்களுக்கு இடையேயான நீண்டகால வரலாறு மற்றும் இனப் பிரச்சினைகளை போதுமான அளவு கருத்தில் கொள்ளவில்லை.

இடம்பெயர்ந்து வாழும் வடமாகாண முஸ்லிம்கள், மன்னார் போன்ற இடங்களில் நிரந்தரமாகக் குடியேறும் உண்மையான நோக்கத்தை விடவும், அப்பகுதிகளில் வழங்கப்படும் நிவாரண உதவிப் பொதிகளையும் ஆறு மாதங்களுக்கான உலர் உணவுப் பொருட்களையும் பெறும் நோக்குடனேயே இருப்பதாக அகதிகள் ஆணையம் (UNHCR) வாதிட்டது. UNHCR பிரதிநிதிகளின் கூற்றுப்படி, உணவு அல்லாத நிவாரணப் பொருட்களை (NFIs) விநியோகிக்க உதவிப் பணியாளர்கள் முன்னறிவிப்பின்றி வந்தபோது, திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்பட்டவர்களில் சுமார் 80% பேர் வராத பல சந்தர்ப்பங்கள் இருந்ததனை ஆதாரம் காட்டியே ஐநாவின் அகதிகள் ஆணையம் மேற்குறிப்பிட்டவாறு சுட்டிக்காட்டியது. வேறுவிதமாகக் கூறினால், இடம்பெயர்ந்து வாழும் முஸ்லிம்கள் பலர், தங்கள் சொந்தத் தாயகப்பகுதிகளில் உண்மையில் மீள்குடியேறுவதற்குப் பதிலாக, மீள்குடியேறுபவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்காக மட்டுமே தங்கள் பூர்வீகக் கிராமங்களுக்கு வருகை தருவதோடு , பின்னர் அந்த நிவாரணப் பொருட்களைத் தாங்கள் தற்போது வசிக்கும் இடங்களுக்குத் திரும்ப எடுத்துச் செல்வதாக UNHCR விளக்கியது.

உண்மையில் மீராக் ரஹீம் கூறுவது போல இடம்பெயர்ந்து நீண்டகாலமாகிய மக்களின் (IDPs) மீள்குடியேற்ற நடவடிக்கைகள், மனிதாபிமான அமைப்புகளும் அரசாங்கங்களும் கருதுவதை விட மிகவும் சிக்கலானதாகும். அரசாங்கம் உள்ளிட்ட ஏனைய சர்வதேச தன்னார்வ அமைப்புக்கள் மீளத் திரும்புதல், மீள்குடியேறுதல் மற்றும் உள்ளூர் ஒருங்கிணைவு (return, relocation, and local integration) போன்றவற்றை தனித்தனியான கூறுகளாகக் கருதும் அதேவேளை பெரும்பாலான இடம்பெயர்ந்த மக்கள் அவை மூன்றயும் ஒன்றாகவே கருதுகின்றனர். இடம்பெயர்ந்து வாழும் மக்களைப் பொறுத்தவரை அவர்கள் மிகவும் நெகிழ்வு தன்மையான வழிமுறைகளிலேயே நாட்டம் கொண்டுள்ளைமையை இதிலிருந்து புரிந்து கொள்ள முடியும். தங்களின் கடந்தகால அனுபவங்கள் மற்றும் பொருளாதாரத் தேவைகளின் காரணமாக, வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பல முஸ்லிம்கள், வடக்கில் உள்ள தங்களின் பூர்வீக நிலங்களுடனும், இடம்பெயர்ந்த பிறகு தாங்கள் வாழ்ந்த புத்தளம் போன்ற இடங்களுடனும் தொடர்புகளைத் தொடர்ந்தும் தக்க வைத்துக் கொள்ள விரும்பினர். அதுமட்டுமின்றி பலவந்தமான வெளியேற்றத்தின் பிறகு அவர்களது வீடுகள் அழிக்கப்பட்டு தண்ணீர், சுகாதாரம், சாலைகள், போக்குவரத்து, பாடசாலைகள் மற்றும் மருத்துவ வசதிகள் போன்றன நிர்மூலமாக்கப்பட்டிருந்ததால் அடிப்படை வசதிகள் இல்லாததால், பலர் உடனடியாகத் தாயகம் திரும்புவதில் தயக்கம் காட்டினர். இதன் விளைவாக, அவர்கள் உடனடியாகவும் அவசரமாகவும் திரும்பிச் செல்வதை விட, படிப்படியாகவும் கவனமாகவும் மீள்குடியேறுவதையே விரும்பினர். இடம்பெயர்ந்தவர்களில் ஒருவர் விளக்கியது போல, அவர்கள் மோசமான சூழ்நிலைகளில் வாழவோ அல்லது மீண்டும் இடம்பெயரும் ஒரு அபாயத்தை எதிர்கொள்ளவோ விரும்பவில்லை.

அதுபோலவே மற்றுமொரு இடம்பெயர்ந்த நபர் “நாங்கள் மரத்தடியில் வாழ்வதையோ நிச்சயமற்ற மீள்குடியேற்றத்தையோ விரும்பவில்லை.” என்று என்னிடம் குறிப்பிட்டிருந்தார். இத்தகையதொரு நிச்சயமற்ற நிலையில் பல குடும்பங்கள் தமது தாயகம் திரும்பிச் செல்லத் தயங்கிய போதிலும், புத்தளத்தில் தங்களின் இடம்பெயர்ந்தோர் அடையாளத்தைத் தக்கவைத்துக் கொள்ள முடியாததாலும், நலத்திட்ட உதவிகளைப் பெறுவது மீள்குடியேறிகளாகப் பதிவு செய்வதைப் பொறுத்தே இருந்ததாலும், அவர்கள் தங்களை மீள்குடியேறிகளாகவே பதிவு செய்துகொண்டனர். இச்சிக்கலைக் கருத்தில் கொண்டு, சில குடும்பங்கள் ஒரு கலப்பு உத்தியைக் கையாண்டன. அவர்கள் புத்தளத்தில் ஒரு குடும்பத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்க, குடும்பத்தின் சில ஆண் உறுப்பினர்கள் வடக்கு நோக்கித் திரும்பிச் சென்று, தற்காலிக முகாம்களில் வசித்து விவசாய நடவடிக்கைகளைத் தொடங்கினர். இதுபோலவே மன்னார் பகுதியில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்களின் குடும்பங்களிலும் நடந்தது. கல்பிட்டி பிரதேசத்தின் பள்ளிவாயலொன்றை அண்ணி வசித்த குடும்பமொன்றின் ஒரு பகுதியினர் வடக்கு நோக்கி மீள்குடியேறவும் ஏனையோர் அதே பிரதேசத்தில் வசிக்கவே முடிவு செய்தனர்.எதிர்காலத்தில் மீண்டுமொருமுறை வன்முறைகளோ அல்லது இடம்பெயர்வுகளோ இடம்பெற்றால், அது நமக்கு ஏற்படுத்தும் ஆபத்துக்களை குறைக்கும் என்று அவர்கள் நம்பினர்.

2009 ஆம் ஆண்டு, போரின் இறுதிக் கட்டங்களில் வன்னிப் பிராந்தியம் கடுமையான அழிவுகளை சந்தித்ததால், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விட இறுதிக்கட்ட யுத்தத்தின் போது வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்களுக்கு அதிகமான அவசர உதவிகள் தேவை என்ற ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) பார்வை புரிந்துகொள்ளக்கூடியதே. இருப்பினும், வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீது மாத்திரமே கவனம் குவிக்கப்பட்டதன் மூலம், வடக்கு முஸ்லிம்கள் உள்ளிட்ட நீண்ட காலமாக இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் எதிர்கொண்ட பிரச்சனைகளை ஐ.நா. அகதிகள் ஆணையம் புறக்கணித்தது என்றே குறிப்பிட முடியும். இந்தப் புறக்கணிப்புக்களை நியாயப்படுத்துவதற்காக வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் ஏற்கனவே தங்களுக்கு வாழ நேர்ந்த புதிய சமூகங்களோடு நன்றாக ஒருங்கிணைந்துவிட்டதாகவும், பல ஆண்டுகளாக அதற்கான நலத்திட்ட உதவிகளைப் பெற்று வருவதாகவும் ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) ஒரு விளக்கத்தை அளித்திருந்தது.

மனிதாபிமான உதவிகளின் நெறிமுறைகள் மற்றும் தர்க்கங்கள் குறித்த பரந்தளவிலான விவாதங்களை அவதானிப்பதன் வழியே இந்த நிலைமையைப் புரிந்துகொள்ள முடியும்.

ஜோர்ஜியோ அகம்பெனின் “வெற்று வாழ்க்கை” (Bare life) என்ற கருத்தைப் பயன்படுத்தும் டிடியர் ஃபாசினின் (Didier Fassin, 2012) கூற்றுப்படி, மனிதாபிமான உதவியைப் பெறுகின்றவர்கள் பெரும்பாலும் குரலற்றவர்களாகவும் அடையாளங்கள் இல்லாதவர்களாகவுமே பார்க்கப்படுகிறார்கள். தங்கள் துன்பங்களைச் சொல்ல முடியாதவர்களாகவும், சுயமாகச் செயல்பட இயலாதவர்களாகவும் தமக்கான அரசியலில் இருந்து விலக்கப்பட்டவர்களாகவுமே அவர்கள் வரையறுக்கப்படுகிறார்கள். மட்டுமன்றி அவர்களின் தனிப்பட்ட வரலாறுகள், அரசியல் பிரக்ஞைகள் மற்றும் சமூக அடையாளங்கள் ஆகியன குறைவான கவனத்தையே பெறுகின்றன (Fassin 2012:145). பாஸின் தொடர்ந்தும் குறிப்பிடுவது போல சமகாலத்திய அரசாங்கங்கள் பொதுசனத்தை நிர்வகிக்கும் ஒரு உத்தியாக இதனைப் பயன்படுத்தி வருகின்றன. இதனை உயிரியல் சார்ந்த சட்டபூர்வத்தன்மை (Biolegitimacy) என அழைக்கும் அவர், உயிரியல் சார் நிலவுவதை மற்றும் பௌதீக இருப்பினைக் கருத்தில் கொண்டே மனித உயிர்கள் மதிக்கப்படுவதோடு பௌதீக ரீதியாக அதிகமாக பாதிக்கப்படும் தரப்பினரே அதிக ஆதரவுக்கு உரியவர்களாகவும் கருதப்படுவர் (Fassin 2009).

வடமாகாண முஸ்லிம்களைப் பாதிக்கப்பட்டவர்களாகவும் அவசர உதவூ தேவைப்படுபவர்களாகவும் அங்கீகரிக்க UNHCR காட்டிய தயக்கத்திற்கு, குறைந்த நிதி ஒதுக்கீடு மற்றும் மிகவும் தேவையுள்ளவர்களாகக் கருதப்படுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய அவசியம் உள்ளிட்ட பல காரணிகள் செல்வாக்கு செலுத்தின என்பனவே காரணங்களாக முன்வைக்கப்பட்டன. இருப்பினும், UNHCR “தேவை” என்பதை வரையறுத்த விதமானது பௌதீக ரீதியான உயிர்வாழ்வு மற்றும் வெளிப்படையாகத் தெரியும் துன்பம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ‘வெறும் உயிர்’ என்ற கருத்தையே அடிப்படையாகக் கொண்டிருந்தது. டிடியர் ஃபாசின் (Didier Fassin) விளக்குவது போல மனிதாபிமான அமைப்புகள் யாவும் உயிருக்கு உடனடியான ஆபத்து இருப்பதாகத் தோன்றும் நபர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு மாத்திரமே உதவ முனைகின்றன. விளைவாக, நீண்டகால இடப்பெயர்வு, இழப்பு உள்ளிட்ட இன்னல்களை அனுபவித்திருந்தாலும் கூட, இடர் குறைவாக வெளிப்படும் அல்லது உடல்ரீதியான உயிர்வாழ்வுடன் நேரடியாகத் தொடர்பில்லாத துன்பங்களை அனுபவிக்கும் மக்கள் குறைவான கவனத்தையே பெறக்கூடும் (Fassin 2012: 23). ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) களப்பணியாளர் ஒருவர் வன்னி இடம்பெயர்ந்த மக்களைப் பற்றி விவரிக்கும் போது அவர்களிடம் எதுவும் இல்லை என்று விவரித்திருந்தார். இது, அவர்கள் எதிர்கொள்ளும் மிகக்கடுமையான வளப்பற்றாக்குறை மற்றும் உடனடித் தேவைகள் மீது கவனம் செலுத்தப்பட்டதையே எடுத்துக்காட்டுகிறது. டிடியர் ஃபாசின் (Didier Fassin) கூறுவது போல, மனிதாபிமான உதவித்திட்ட  உரையாடல்களில், மக்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நேரும் துன்பங்கள் மற்றும் உடனடித் தேவைகளின் வழியாகவே முன்னுரிமை வழங்கப்படுகிறார்கள். அவர்களின் சொந்தக் குரல்கள், கருத்துகள், அரசியல் அபிலாஷைகள் மற்றும் தனிப்பட்ட அனுபவங்கள் போன்றன அங்கு  புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன (Fassin 2012: 145).

பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காணும் இந்தப் பொறிமுறை, மக்களின் தனிப்பட்ட அரசியல் அடையாளங்களையும் தனிப்பட்ட அரசியல் அனுபவங்களையும் நீக்கிவிடுகிறது என்பது மட்டுமல்ல பிரச்சனை. அதனோடு இணைந்த வகையில் மிகவும் சிக்கலான அரசியல் அடையாளங்களைக் கொண்டவர்களை பாதிக்கப்பட்டவர்களாகக் கருதாமல் போகலாம் என்பதும், அதனால் அவர்கள் நலத்திட்ட உதவிகளுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படலாம் என்பதும் பிரச்சினைகளாகி விடுகின்றன.

வடமாகாண முஸ்லிம்கள் வெறுமனே இடம்பெயர்ந்தவர்களாக இருப்பதையும் தாண்டி, சமூக, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியாக தங்களை வலுப்படுத்திக் கொண்டிருந்ததுடன் பல ஆண்டுகால இடம்பெயர்வுக்குப் பிறகு, அவர்கள் தங்களுக்குள் வெவ்வேறு சமூகக் குழுக்களையும், வாழ்வாதார ஒழுங்குகளையும், புதிய அடையாங்களையும் கட்டமைத்திருந்தனர். ஆனால், இந்தச் சிக்கலான சமூக ஒழுங்கின் தன்மையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு சட்டகம் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) பிரதிநிதிகளிடம் இருக்கவில்லை. வடமாகாண முஸ்லிம்கள், தொடர்ந்தும் நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திருக்கும் ஆதரவற்ற நிலையிலுள்ள பாதிக்கப்பட்டவர்கள் என்ற அவர்களது சட்டகத்தினுள் பொருந்தாததால், மனிதாபிமான அமைப்புகள் அவர்களது தேவைகளையும் அனுபவங்களையும் அறிந்துகொள்வதில் தயக்கம் காட்டின.

1990 களில் லிசா மால்கி (Lisa Maalki) இது தொடர்பான விமர்சனக் கண்ணோட்டமொன்றை முன்வைத்திருந்தார். பின்காலனியக் கண்ணோட்டத்தினடியாக தன்சானியாவில் உள்ள ஹூட்டு (Hutu) அகதிகள் தொடர்பான ஆய்வுகளைச் செய்த அவர், மனிதாபிமான அமைப்புகளின் உதவிக்குத் தகுதியானவர்களாக இருக்க வேண்டுமாயின் அகதிகள் பலவீனமானவர்களாகவும், உதவியற்றவர்களாகவும் ஏனையோரைச் சார்ந்திருப்பவர்களாகவும் தோற்றமளிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கின்றன என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

லிசா மால்கியின் (Lisa Maalki) பிரகாரம், மனிதாபிமான அமைப்புகள் பெரும்பாலும் ஒரு நபரின் சொந்த அனுபவங்களை விடவும் அவரது உடலியல் சார்ந்த அல்லது பௌதீக ரீதியான பாதிப்புக்களையே நலத்திட்டங்களை அனுபவிப்பதற்காகவுள்ள நம்பகமான சான்றுகளாகக் கொள்கின்றன. இதனால் “அகதி” என்பவர், தனக்கு நேர்ந்த பாதிப்புக்களினதும் துன்பங்களினதும் விளைவாக தெளிவாகச் சிந்திக்கவும் முடிவெடுக்கவும் முடியாதவராகவே மனிதாபிமான அமைப்புக்களால் கற்பனை செய்யப்படுவதோடு அத்தகைய நபரே மனிதாபிமான நிபுணர்களால் உதவிகளைப் பெற வேண்டிய ஒருவராகக் கருதப்படுகிறார். அகதிகளின் சொந்தக் குரல்கள் மற்றும் அவர்களின் சொந்த அனுபவங்களை விட அவர்களில்  வெளிப்படையாகத் தென்படும் பாதிப்புக்களையே அவை முன்னுரிமைப்படுத்துவதால் குறித்த மனிதாபிமான அமைப்புகளின் அணுகுமுறைகள் சிக்கலுக்குரியன என அவர் மேலும் விளக்கிச் செல்கிறார்.

ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) போன்ற மனிதாபிமான அமைப்புகள் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை வெறுமனே உயிருள்ள சடமாகக் கருதுகின்ற போது மக்களை உயிருடன் வைத்திருப்பதிலும் அவர்களின் உடனடியான தேவைகளைப் பூர்த்தி செய்வதிலும் மட்டுமே அதிக கவனத்தைச் செலுத்துகின்றன. இதனூடாக குறித்த மக்களின் நீண்டகால வரலாறு, அவர்களது அடையாளங்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியன புறக்கணிக்கப்பட்டு விடுகின்றன. அதுமட்டுமின்றி இத்தகைய அணுகுமுறை இடம்பெயர்ந்த மக்களை அவர்களின் இந்நிலையை வடிவமைத்த நீண்டகால அரசியல், சமூக மற்றும் வரலாற்றுச் சூழமைவுகளிலிருந்து பிரித்தும் விடுகிறது. சூழமைவு குறித்த தெளிவின்மை காரணமாக இலங்கையில் உள்ள வடமாகாண முஸ்லிம்கள் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்த ஏனையோரை கடுமையாகப் பாதித்தது. அவர்களை தனித்துவமான அரசியல் உரிமைகள், வரலாறுகள் மற்றும் சமூக அடையாளங்களைக் கொண்ட மக்களாகக் கருதாமல், வெறுமனே பாதிக்கப்பட்ட உடல்களாக மாத்திரமே அங்கீகரிக்கப்பட்டனர்.

மீள்குடியேற்றத்திற்காக பதிவுசெய்யப்பட்ட நபர்கள், உண்மையில் தமது சொந்தப் பகுதிகளில் வசிக்கிறார்களா என்பதைச் சரிபார்க்க முன்னறிவிப்பின்றி நேரில் சென்று ஆய்வு செய்த ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR), அங்கு மீள்குடியேறிய மக்கள் வசிக்காததைக் கண்டு அதனை பொய்யான மீள்குடியேற்றங்களுக்கான சான்றாகக் கருதியதுடன், இதனை ஒரு தார்மீகப் பிரச்சினையாகவும் கையாண்டது. மனிதாபிமான அமைப்புகள் மக்களின் நடத்தையைக் கண்காணிக்கவும் ஒழுங்குபடுத்தவும் தமது நலத்திட்ட உதவிகளைப் பயன்படுத்துவதற்கான ஒரு நல்ல உதாரணமாக இதனைக் குறிப்பிட முடியும். உண்மையில் பல வடமாகாண முஸ்லிம்களுக்கு, புத்தளத்தில் வசித்துக்கொண்டே வடக்கிலுள்ள தங்கள் பூர்வீக நிலங்களுடனான தொடர்புகளைப் பேணுவது கடினமாகவும் செலவு மிக்கதாகவும் இருந்தது. நலத்திட்டங்களைப் பெறுவதற்காகவும் , உள்ளூர் அரசாங்க அலுவலகங்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்புகொள்வதற்காகவும் அவர்கள் வடக்கிற்கு அடிக்கடி பயணிக்க வேண்டியிருந்ததுடன் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் கணிசமான செலவுகளையும் கொண்டிருந்தன. அவ்வாறிருந்த போதிலும் அரசினதும் சர்வதேச மனிதாபிமான அமைப்புக்களினதும் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்காக வேண்டி குறித்த சிரமங்களை தாங்க வேண்டியிருந்தது. அரசினதும் மனிதாபிமான அமைப்புகளினதும் அங்கீகாரத்தை பெறுவதற்காக இவ்வாறான நிர்ப்பந்தங்களையும் கட்டுப்பாடுகளையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்தது (Fassin 2007).

இருபது ஆண்டுகளுக்கும் மேலாக புத்தளத்தில் இடம்பெயர்ந்தோராக பதிவு செய்திருந்த பல வடமாகாண முஸ்லிம்கள், மீண்டும் வடக்கில் தமது மீள்குடியேற்றத்தைப் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இதனூடாக அவர்களால் அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், மீள்குடியேறுவோருக்குக் கிடைக்கும் நலத்திட்ட உதவிகளைப் பெறவும் முடியுமாகவிருந்தது. இருப்பினும், மனிதாபிமான நிறுவனங்களின் பிரகாரம், மீள்குடியேறும் மக்கள், தாங்கள் அதிகாரப்பூர்வமாக மீள்குடியேறிய இடங்களில் அவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிகத் தங்குமிடங்களையும் உதவிகளையும் பயன்படுத்தி மட்டுமே வாழ வேண்டும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. வடமாகாண முஸ்லிம்கள் சர்வதேச நிறுவனங்களின் இந்த எதிர்பார்ப்புகளை மீறுகின்ற போது அவர்கள் பெரும்பாலும் எதிர்மறையாகவே பார்க்கப்பட்டனர். அவர்களின் செயல்கள் உதவி அமைப்புக்களின் விதிகளை மீறுவதாகப் பொருள் கொள்ளப்பட்டு, மனிதாபிமான நிறுவனங்களிடமிருந்து விமர்சனங்களையும் எதிர்கொண்டனர்.

சுமார் 20 ஆண்டுகாலமாக இடம்பெயர்ந்த நிலையில் வாழும், அனைத்து வடமாகாண முஸ்லிம்களையும் உள்நாட்டு அகதிகளாகத் தொடர்ந்து கருதுவது நடைமுறைக்கு ஒவ்வாதது என்று ஐ.நா. அகதிகள் ஆணைய (UNHCR) அதிகாரிகள் தொடர்ந்தும் வாதிட்டனர். அவர்களில் பலர் ஏற்கனவே புத்தளத்தில் உள்ள முஸ்லிம் சமூகத்துடன் ஒருங்கிணைந்துவிட்டதாகவும் அவர்கள் நம்பினர். மட்டுமன்றி வடமாகாண முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக நலத்திட்ட உதவிகளைப் பெற்று வந்ததால், வன்னி அகதிகளிடம் இல்லாத மாற்று வளங்கள், வலையமைப்புகள் மற்றும் வாழ்வொழுங்குகள் அடங்கிய ஒரு “மாற்றுத் திட்டத்தை” (plan B) அவர்கள் உருவாக்கியிருந்ததாகவும் அவர்கள் வாதிட்டனர் (Thiranagama 2011). இதனாலேயே வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களைப் பதிவுசெய்து, வகைப்படுத்தி, அவர்களுக்கு உதவிய அதே நிறுவனங்களும் அதிகாரத்துவ அமைப்புகளும்தான், இடம்பெயர்ந்த மக்கள் என்ற அவர்களின் தனித்துவமான அடையாளத்தைப் தொடர்தேச்சையாகப் பேணவும் உதவின என்று கேத்ரின் புரூன் வாதிடுகிறார் (Brun  2008; 2003).

இநந்நிறுவன அமைப்புகள் குறித்த மக்களை உள்ளூர் சமூகத்தின் நிரந்தர உறுப்பினர்களாகக் கருதாமல், இறுதியில் வட பகுதிக்குத் திரும்பிச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட புத்தளத்தின் தற்காலிகக் குடியிருப்பாளர்களாகவே கருதின. புத்தளத்தின் சில பகுதிகளில் போரினால் இடம்பெயர்ந்தோருக்கும் புத்தளம் போன்ற பகுதிகளின் உள்ளூர் மக்களுக்கும் இடையே நிலவிய பதட்டங்களை குடிசன மதிப்பீடு திணைக்களத்தின் அறிக்கை (2011) பதிவு செய்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது‌. அத்தோடு பல உள்ளூர் முஸ்லிம் குழுக்கள் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோரின் நீண்டகால இருப்பானது தமது நிலங்கள், வளங்கள், வேலைவாய்ப்புகள் மற்றும் அரசாங்க உதவிகள் ஆகியவற்றின் மீது தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உணர்ந்ததுடன் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்தோர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வட பகுதிக்குத் திரும்ப வேண்டும் என்றும் உள்ளூர் மக்கள் விரும்பினர் (Thiranagama 2011; QFR 2011; Haniffa  2008). வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்கள் குடியேறுவதற்காக நிர்பந்திக்கப்பட்ட புத்தளம் பகுதி, ஏற்கனவே கடுமையாகப் பொருளாதாரச் சிக்கல்களை சந்தித்து வரும் இலங்கையின் மிகவும் ஏழ்மையான பிராந்தியங்களில் ஒன்றாக இருந்தது. அங்கிருந்த வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் காரணமாக, அங்கு இடம்பெயர்ந்து வந்த பெருமளவிலான மக்களை ஆதரிக்கும் அளவிற்கு புத்தளம் பிரதேசம் தயாராக இருக்கவில்லை. விளைவாக, இடம்பெயர்ந்த சமூகமும் உள்ளூர் மக்களும் வீட்டுவசதி, நிலம், வேலைவாய்ப்பு, பொதுச் சேவைகள் மற்றும் வளங்களைப் பெறுதல் தொடர்பான பல்வேறு சவால்களை எதிர்கொண்டனர் (Brun 2008;  Shanmugaratnam 2000; Hasbullah 2001).

எம். எச். எம். அஷ்ரஃப் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வருகையுடன் வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்த வாதங்கள் ஒரு அரசியல் பிரச்சினையாக மாறின. வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களில் முஸ்லிம்களது நலன்களைப் பாதுகாக்கும் ஒரு பரந்த அரசியல் தீர்வு எட்டப்பட்ட பின்னரே, அவர்களது மீள்குடியேற்றம் இடம்பெற வேண்டும் என்று அஷ்ரஃப் வாதிட்டார்.

அதாவது எம். எச். எம். அஷ்ரஃப் வடமாகாண முஸ்லிம்களின் உடனடியான மீள்குடியேற்றம் பற்றி பிரச்சாரம் செய்யவில்லை. மாறாக, எதிர்காலத்தில் அவர்கள் மீண்டுமொருமுறை பலவந்தமாக வெளியேற்றப்பட மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதங்கள் கிடைக்கும் வரை அவர்களை மீள்குடியேற்றக் கூடாது என்று அவர் வாதிட்டார். அதே நேரத்தில், அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் சாத்தியமாவதற்கு பல ஆண்டுகள் நீடிக்கக்கூடும் என்பதை புரிந்துகொண்ட அஷ்ரஃப், இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கான வீட்டு வசதி உதவிகளை வழங்கி வந்தார். 1994 களில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக, புத்தளத்தில் வசித்து வந்த இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு நிலங்களை வாங்கவும் நிரந்தர வீடுகளைக் கட்டவும் உதவுவதற்காக ஒருங்கிணைந்த ஒரு உதவித் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். என்றபோதிலும் கூட இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) அரசியல் சிந்தனையும் வடமாகாண முஸ்லிம்களை புத்தளத்தின் நிரந்தரக் குடியேறிகளாகக் கருதாமல், தற்காலிகக் குடியிருப்பாளர்களாகவே கட்டமைத்தது. ஒரு சாதகமான அரசியல் தீர்வு ஏற்படும் வரை மட்டுமே அவர்கள் புத்தளத்தில் தங்கியிருப்பார்கள் என்றும், அதன் பிறகு வடக்கில் உள்ள தங்கள் பூர்வீக நிலங்களுக்கு திரும்பிவிடுவார்கள் என்றுமோ முஸ்லிம் காங்கிரஸின் சிந்தனை அமைந்திருந்தது (Thiranagama 2011; QFR 2011; Brun 2008).

வடமாகாண முஸ்லிம்களுக்கு 20 ஆண்டுகளாகத் தொடர்ச்சியான மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட்டன என்ற கூற்றுக்கு மாறாக, அவர்கள் வெளியேற்றப்பட்ட 10 ஆண்டுகளுக்குள்ளேயே சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் அவர்களை பாதிக்கப்பட்ட ஒரு குழுவாகக் கருதுவதை நிறுத்திவிட்டன. வடமாகாண முஸ்லிம்கள் குறிப்பிடத்தக்க பொருளாதார அடைவை அடைந்துவிட்டதாகவும், அவர்களுக்கான மனிதாபிமான உதவிகள் இனி அவசியமில்லை எனவும் குறித்த அமைப்புகள் முடிவு செய்திருந்தன. இதனால் அவர்களில் பலர் பல்வேறு சிரமங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டு வந்தனர் (Brun 2003: 390). உதாரணத்திற்கு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களுக்கு உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்படும் உலர் உணவுப் பொருட்கள் அனைத்தும் 1999 ஆம் ஆண்டு முதல் குறைக்கப்பட்டன. 2002 ஆம் ஆண்டளவில் புத்தளத்தில் வசித்துவரும் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் உள்ளூர் சமூகத்துடன் முழுமையாக ஒருங்கிணைந்துவிட்டதாகவும் கலந்துவிட்டதாகவும் டேனிஷ் அகதிகள் மன்றம் கருதியது. ஆனால் கேத்ரின் ப்ரூன் சுட்டிக்காட்டுவது போல வடக்கிலிருந்து வந்த முஸ்லிம்கள் புத்தளத்தில் வசித்து வந்தபோதிலும், வடக்கிலுள்ள தங்களின் பூர்வீக மாவட்டங்களிலேயே அதிகாரப்பூர்வமாக வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இதன் காரணமாக புத்தளம் பிரதேசத்தில் அரசு வேலைகளை பெறுவதில் துவங்கி, உள்ளூர் மீன்பிடிச் சங்கங்களில் உறுப்பினர்களாக இணைவது வரை பல்வேறு நடைமுறை ரீதியான சிக்கல்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சர்வதேச உதவி நிறுவனங்கள் அவர்களை புத்தளம் பிரதேச உள்ளூர் மக்களுடன் “ஒருங்கிணைந்தவர்கள்” என்று கருதியபோதிலும், அதற்குத் தடையாக சட்ட, அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புக்கள் அமைந்திருந்தன (Brun 2003: 392).

அதுமட்டுமின்றி இலங்கை அரசாங்கம் வடமாகாண முஸ்லிம்களை ஒரு தனிப்பட்ட மக்கள் பிரிவாகவே தொடர்ந்தும் நடாத்தி வந்ததுடன் அவர்கள் தஞ்சம் புகுந்த பகுதிகளில் அவர்களுக்கு வரையறுக்கப்பட்ட உரிமைகளை மட்டுமே வழங்கி வந்தது. உலக உணவுத் திட்டம் படிப்படியாக உணவு விநியோக நடவடிக்கைகளை நிறுத்தியதன் பிறகு, அரசாங்கம் அதன் விநியோகத்தைப் பொறுப்பேற்றது. இருப்பினும், அந்த ஆதரவு சீரற்றதாகவும் சிக்கலானதாகவும் இருந்ததுடன் 2010 ஆம் ஆண்டளவில் குறித்த விநியோக நடவடிக்கைகள் வீழ்ச்சியும் காணத் துவங்கின. மனிதாபிமான அமைப்புக்களின் தர்க்கத்தின் பிரகாரம், வடமாகாண முஸ்லிம்களின் ஒரேயொரு தேவையான உணவுத் தேவையாகவே இருந்தது. அவர்களது அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்தவுடன் அவர்களது பலவந்த இடப்பெயர்வும் அதனால் விளைந்த பாதிப்புக்களும் நீங்கி விட்டதாகவே அவை கருதின. விளைவாக அரசியல் ரீதியான ஓரங்கட்டப்படுதல், நிலையான வாழ்வாதாரமின்மை பற்றிய பிரச்சினைகள், அமைதிப் பேச்சுவார்த்தைச் செயல்முறைகளிலிருந்து விலக்கப்படுதல், மற்றும் பலவந்தமான வெளியேற்றத்தை அங்கீகரிக்கவும், அதற்கான நிரந்தரமான தீர்வைக் காணவும் தவறுதல் போன்ற பல முக்கியப் பிரச்சினைகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.

மேற்குறித்தவாறான மனிதாபிமான நிறுவனங்களின் போக்குகளையும் நடவடிக்கைகளும் ஜோர்ஜியோ அகம்பன் (Giorgio Agamben) மற்றும் டிடியர் ஃபாசின் (Didier Fassin) ஆகியோரின் கருத்துக்களினடியாகப் புரிந்து கொள்ள முடியும். ஈராக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களை மனிதாபிமான அமைப்புகள் குறிப்பாக Médicin Sans  Frontiers போன்ற மருத்துவ நலன் அமைப்புகள் எவ்வாறு புரிந்துகொண்டன என்பதை ஆராயும் ஃபாசின் (Didier Fassin), மனிதாபிமான மருத்துவ‌ உதவித் திட்டங்கள் எவ்வாறு துன்பப்படும் மக்களை அடையாளம் காண்கின்றன, யாருக்கு மருத்துவ உதவி தேவை என்பதை எவ்வாறு தீர்மானிக்கின்றன மற்றும் உதவிப் பணியாளர்களுக்கும் உதவி பெறுபவர்களுக்கும் இடையிலான உறவை எவ்வாறு அவை வடிவமைத்துக் கொள்கின்றன என்பவற்றை விரிவாக ஆராய்கிறார். பொதுவாக மனிதாபிமானத் தலையீடுகள் அனைத்துமே உயிர்களைக் காப்பாற்றுவதற்கும் உடல்ரீதியான பாதிப்புகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்கும் முன்னுரிமை அளித்து, மக்களின் அரசியல், சமூக மற்றும் வரலாற்றுச் சூழமைவுகள் தொடர்பூல் அவை கவனம் செலுத்துவதில்லை என்பதாகவே அவரது ஆய்வு முடிவு அமைகிறது. ஃபாசின் இது தொடர்பாக விளக்குகையில், “வெளிப்பார்வைக்கு உதவிப் பணியாளர்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இடையிலான வேறுபாடுகள் ஏதுமில்லை என்றாலும் தத்துவார்த்த ரீதியாக அவர்கள் இரு தரப்பினரும் வெவ்வேறான தளங்களிலேயே சஞ்சரிக்கிறார்கள். ஜோர்ஜியோ அகம்பன் கூறுவது போல, போரினால் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஒருவிதமான வெற்று வாழ்வை வாழ்பவர்களாகவும் எந்நேரமும் உதவிகளை நாடுபவர்களாகவும் கருதப்படும் அதேவேளை நலத்திட்ட உதவி வழங்குனர்கள் தங்களைப் பிறருக்காக அர்ப்பணித்துக் கொள்பவர்களாகவும் சுயேச்சையாக இயங்கும் அதிகாரத்தினைக் கொண்டவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இது இரு தரப்பினருக்கும் இடையிலான சமாந்தரமற்ற உறவைக் காட்டுவதுடன் உதவி வழங்குனர்களுக்கு உள்ள தேர்வுச் சுதந்திரம் போன்ற உரிமைகள் உதவிகளைப் பெறுபவர்களுக்கு இருப்பதில்லை”  என விளக்கிச் செல்கிறார்.

தொடர்ந்தும் இது தொடர்பாக எழுதிச் செல்லும் டிடியர் ஃபாசின் (Didier Fassin), மனிதாபிமான உதவித் திட்டப் பொறிமுறைகள்  உலகை அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்கவும் அதுதொடர்பான முடிவுகளை எடுக்கவும் அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் அனுமதிக்கப்படாதவர்கள் என்றவாறு இரு குழுக்களாகப் பிரித்து விடுகின்றன. சர்வதேச உதவிப் பணியாளர்கள் போன்ற நுண்மையான அதிகாரம் படைத்தவர்கள் “உலகின் குடிமக்களாக” பார்க்கப்படுவதோடு அரசியல் தேர்வுகளைச் செய்யத் தகுதியுடையவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இதற்கு மாறாக, மோதல்களால் பாதிக்கப்பட்ட உள்ளூர் மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே பார்க்கப்படுகிறார்கள். அவர்களின் அரசியல் பார்வைகள், அனுபவங்கள் மற்றும் கருத்துக்கள் முக்கியமற்றவையாகவும் தவறானவையாகவும் தவறாக வழிநடத்துபவையாகவும் தீங்கு விளைவிப்பவையாகவுமே கருதப்படுகின்றன. இந்தச் சிந்தப்பு முறைமையின் காரணமாகவே இலங்கை அரசு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வடமாகாண முஸ்லிம்களை இடம்பெயர்ந்தவர்கள் என அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்து பதிவு செய்திருந்த போதிலும், அவர்கள் தங்களைத் தொடர்ந்தும் இடம்பெயர்ந்தவர்களாகக் கருதுவது அர்த்தமற்றது என்று ஐ.நா. அகதிகள் ஆணையத்தால் (UNHCR) வாதிட முடிந்தது. உண்மையில், கொழும்பில் உள்ள ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) மூத்த அதிகாரிகள், வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த பெரும்பாலான முஸ்லிம்கள், தாங்கள் வடக்கிலேயே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்தனர் என்பதை அறிந்திருக்கவில்லை, அல்லது அறிந்திருந்தும் ஏற்றுக்கொள்ளவில்லை. இது நன்கு அறியப்பட்டு பரவலாக ஆவணப்படுத்தப்பட்ட ஒரு உண்மையாகும். ஐ.நா. அகதிகள் ஆணைய அதிகாரிகளைக் குற்றம் சாட்டுவதல்ல எமது நோக்கம். மிக முக்கியமான அரசியல் மற்றும் வரலாற்று உண்மைகளைப் புறக்கணிக்கும் சிந்தனை முறைகளை மனிதாபிமான அமைப்புக்களே ஊக்குவித்து, அத்தகைய தவறுகளை இயல்பானவை போலத் தோன்றச் செய்கின்றமையே இங்குள்ள ஆழமான பிரச்சினையாகும்.

இங்குள்ள மற்றொரு பிரச்சனை யாதெனில் மனிதாபிமான அமைப்புகள், தங்களை நடுநிலையானவர்களாகவும் அரசியல் சார்பற்றவர்களாகவுமே அடிக்கடி முன்னிறுத்தி வருகின்றன. இவ்வாறான அடையாளப்படுத்தல்கள், மக்களின் பிரச்சனைகளை மனிதாபிமான அமைப்புகள் புரிந்துகொள்ளும் விதத்தையும், யாருக்கு உதவி வழங்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் விதத்தையும் பாதிக்கிறது. மனிதாபிமானப் பணியாளர்களுக்கும் சர்வதேசளவிலான இடைக்கால நீதி செயற்பாட்டாளர்கள் (Transitional justice  practitioners) இடையிலான ஓர் ஒப்பீட்டைச் செய்வதன் வழியே இதனை மேலும் புரிந்து கொள்ள முடியும். மனிதாபிமானச் செயல்பாட்டாளர்கள் பொதுவாக உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவப் பராமரிப்பு போன்ற உடனடித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் அதே நேரத்தில் அரசியல் மற்றும் கட்டமைப்பு சார்ந்த கேள்விகளைத் தவிர்க்க முயல்கிறார்கள். இதற்கு மாறாக, இடைக்கால நீதி செயற்பாட்டாளர்கள் (Transitional justice  practitioners) மனித உரிமைகள், நீதி, பொறுப்புக்கூறல், வரலாற்றுத் தவறுகள் மற்றும் அதற்கான அரசியல் காரணங்கள் போன்ற அடித்தளப் பிரச்சினைகளில் கவனம் செலுத்துகிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் பிரச்சினைகளும் வரலாற்று அனுபவங்களும் முக்கியமானவையாக இருந்தபோதிலும், மனிதாபிமான அமைப்புகள் ஏன் அவற்றுக்குக் குறைந்த கவனம் செலுத்துகின்றன என்பதைப் புரிந்துகொள்ள இந்த ஒப்பீடு அவசியமாகிறது.

இவ்வாறு மனிதாபிமான அமைப்புகள் நீண்ட காலமாகத் தங்களை நடுநிலையானவர்களாகவும் அரசியல் சார்பற்றவர்களாகவும் கூறி வருகின்ற போதிலும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கங்கள் மற்றும் இராணுவ அமைப்புகளுக்கு இடையே இவை உறவுகளை அவை பேணி வருகின்றன. குறித்த உறவின் உண்மைத் தன்மையை இலகுவாக மறைத்துக் கொள்ள மேற்குறித்த நடுநிலைத் தன்மையும் அரசியல் சார்பற்ற தன்மையும் மனிதாபிமான அமைப்புகளுக்கு உதவியாக அமைந்து விடுகின்றன.

மோதல்கள் நடைபெறும் பகுதிகளுக்குள் நுழைவதற்கும், உதவிகளை வழங்குவதற்கும் மனிதாபிமான அமைப்புகள் அடிக்கடி அரசாங்கங்கள் மற்றும் இராணுவங்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டியுள்ள அதேவேளை அரசாங்கங்களும் இராணுவத் தரப்பினரும் சில சமயங்களில் தங்களின் சொந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்காக வேண்டி மனிதாபிமான அமைப்புகளின் மொழி மற்றும் கருத்துக்களைப் பயன்படுத்துகின்றன. 1999 ஆம் ஆண்டின் கொசோவோ மோதல் மற்றும் 2009ஆம் ஆண்டில் இலங்கையின் முள்ளிவாய்க்கால் போரின் இறுதிக் கட்டங்கள் போன்றவற்றை “மனிதாபிமான” தலையீடுகளாக முன்வைக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகளான எடுத்துக்காட்டுகளாக குறிப்பிட முடியும். மனிதாபிமான அமைப்புகள் கூறுவது போல தீவிரமான அரசியல் பிரச்சினைகளில் நடுநிலைத் தன்மையையோ அரசியல் சார்பற்ற நிலையையோ எடுப்பதென்பது மிகவும் சிக்கலானது என்பதை மேற்குறித்தவாறு புரிந்து கொள்ள முடிகிறது.

மனிதாபிமான அமைப்புகள் தங்களை நடுநிலையானவர்களாகவும் அரசியல் சார்பற்றவர்களாகவும் கூறிக்கொள்வதனால் அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்கள் தொடர்பான மௌனங்களை கடைப்பிடப்பதை இலகுவாக்கி விடுகின்றன. வேறுவார்த்தைகளில் கூறுவதாயின் மனிதாபிமான அமைப்புகள் அவசியமான நலத்திட்ட உதவிகளை வழங்கும் அதே வேளையில், அவற்றின் இருப்பு சில சமயங்களில் நெருக்கடிக்குக் காரணமாக இருந்த அதே அரச கட்டமைப்புக்களை மறைமுகமாக ஆதரிக்கவோ அல்லது இயல்பாக்கவோ முடியும். உதாரணமாக வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு மனிதாபிமான அமைப்புகள் உதவும்போது முக்கியமாக மீள்குடியேற்றம் மற்றும் அடிப்படை உதவிகளிலேயே தமது முழுக் கவனத்தையும் செலுத்தின. ஆனால் மனித உரிமைகள் தொடர்பாகவோ அல்லது அதில் நிகழ்ந்த மீறல்கள் தொடர்பாகவோ அவை கவனம் செலுத்த தவறியிருந்தன. உண்மையிலேயே மனிதாபிமான அமைப்புகள் மக்களின் இடர்பாடுகளை குறைக்கும் அக்கறையோடு செயற்பட்டனவா அல்லது தமது அமைப்புகளின் செல்வாக்கை நிலைநாட்டும் வகையில் செயற்பட்டனவா என்ற சந்தேகம் இதனைத் தொகுத்து நோக்கும் போது எழாமல் இல்லை.

மனிதாபிமான அமைப்புகள் பெரும்பாலும் நடுநிலையானவையாகக் கூறிக்கொண்ட போதிலும் அவை மேற்கொள்ளும் பல தீர்மானங்கள் அரசியல் ரீதியான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவையாகவே உள்ளன. வடமாகாண முஸ்லிம்கள் ஏற்கனவே புத்தளத்தில் நிரந்தரமான வகையில் குடியேறிவிட்டதாகவும், அதனால் அவர்களை மீள்குடியேற்றுவதற்கான உதவிகள் எதுவும் தேவையில்லை என்றும் ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) கருதியது. பல முஸ்லிம்கள் இன்னமும் புத்தளம் போன்ற பகுதிகளில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதற்கான சான்றுகள் இருந்தபோதிலும், ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) இந்தக் கருத்தின் அடிப்படையிலேயே தொடர்ந்து செயல்பட்டு வந்தது. மட்டுமன்றி வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மீதான சில உள்நாட்டு தமிழ் அதிகாரிகளின் எதிர்மறை வாதங்களுக்கு இது பக்கபலமாகவும் இருந்தது (QFR 2011).

 முஸ்லிம்களை வடமாகாணத்திலிருந்து வெளியேற்றியது உண்மையில் ஒரு “நல்ல விடயம்/ ஆசிர்வாதம்” என்றளவில் வாதிட்ட சில தமிழ் தலைவர்களின் கருத்துக்களுடன் ஐ.நா. அகதிகள் ஆணையத்தின் (UNHCR) நிலைப்பாடு பல சந்தர்ப்பங்களில் ஒத்துப்போனது. பிற்காலத்தில் சில தமிழ் தலைவர்கள், விடுதலைப் புலிகளால் பலவந்தமாக முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை தவறு என்பதை ஏற்றுக்கொண்டபோதிலும், பல தமிழ் தேசியவாதிகள் அதை ஒரு தார்மீகக் குற்றமாக கருதவில்லை. வடமாகாண முஸ்லிம்கள் ஏற்கனவே புத்தளத்தில் வாழப் பழகிவிட்டனர் என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதன் மூலம், முஸ்லிம்களுக்கு தமது தாயகம் திரும்புவதற்கு முறையான காரணங்கள் ஏதும் இல்லை என்ற தமிழ் தேசிய வாதிகளின் கருத்தை ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) மறைமுகமாக வலுப்படுத்தியது. இது முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் குறித்த எதிர்மறையான மனப்பான்மையை ஏற்படுத்தியதுடன், அவர்களது மீள்குடியேற்ற நடவடிக்கைகள் தொடர்பான கோரிக்கைகளின் செல்லுபடித்தன்மையையும் குறைத்தது.

UNHCR இந்த நிலைப்பாடு, விடுதலைப் புலிகள் மீது அனுதாபம் கொண்டிருந்த, முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை ஒரு பெரிய தவறாகக் கருதாத சிலருக்கு மட்டுமல்லாமல், இலங்கை அரசாங்கத்திற்கும் பயனுள்ளதாக இருந்தது எனலாம். ஏனெனில், யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரான காலப்பகுதியிலும் முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை இலங்கை அரசாங்கம் அடிக்கடி புறக்கணித்தே வந்திருந்தது. வடமாகாண முஸ்லிம்கள் ஏற்கனவே வாழப்பழகி விட்டவர்களாகவும், அவர்களுக்குச் சிறப்பு உதவிகள் எதுவும் இனிமேல் தேவையில்லை என்றும் கருதியதால், மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசும் கருதியதால் அவர்களின் பிரச்சினைகளுக்குக் குறைந்தளவான கவனமே கிடைக்கப்பெற்றது. அரசியல் மற்றும் சமூகக் களங்களில் இந்த அனுமானங்கள் மேலதிகமான பல சிக்கல்களுக்கு வழிவகுத்தன. உதாரணமாக மன்னார் பிரதேசத்தின் சன்னார் பகுதியில் உள்ள நிலத்திற்கு முஸ்லிம் மற்றும் தமிழ் மீள்குடியேறிகள் உரிமை கோரியபோது ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) தமிழ் மீள்குடியேறிகளுக்கே ஆதரவளித்திருந்தது. அதேபோல் உப்புக்குளம் மீன்பிடித் துறைமுகம் தொடர்பான மற்றொரு சர்ச்சையில் வாழ்வாதார வளங்களுக்காகப் போட்டியிட்ட முஸ்லிம் மற்றும் தமிழ் மீள்குடியேறிகளுக்கு இடையேயான பதற்றத்தைக் குறைக்க ஐ.நா. அகதிகள் ஆணையம் (UNHCR) பெரிதாக எதுவும் செய்யவில்லை. மனிதாபிமான அமைப்புகளுக்கு உள்ளூர் அரசியல் மற்றும் சமூகச் சூழல்கள் குறித்த புரிதல் குறைவாக இருந்ததாலும், இந்தப் பிரச்சினைகளைத் தங்கள் பொறுப்புக்கு அப்பாற்பட்டவையாக அவை அடிக்கடி கருதியதாலும், பல வடமாகாண முஸ்லிம்கள் தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும் உணர்ந்தனர். இதன் விளைவாக, ஐ.நா. அகதிகள் ஆணையம் தமது மீள்குடியேற்றத்தை சாத்தியப்படுத்துவதற்குப் பதிலாக தாம் தாயகம் திரும்புவதைத் தடுக்கிறது என்று சிலர் நம்பத் தொடங்கினர். கல்பிட்டியவைச் சேர்ந்த இடம்பெயர்ந்த ஒருவர், ஐ.நா. அகதிகள் ஆணையம் தங்களைத் மீள்குடியேற வேண்டாம் என்று கூறுவது போலவும், அதற்கான ஆதரவை அவர்கள் வழங்கத் தயாராக இல்லை என்பது போலவும் உணர்வதாகக் கூறியிருந்தார்.

பாதிக்கப்பட்ட வடமாகாண  முஸ்லிம்கள் மீதான அரசியல்

டிடியர் ஃபாசின் (Fassin 2012) விளக்குவது போல, பிறரால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்படும் மக்கள், தங்களை அவ்வாறே பார்க்கத் தொடங்கி விடுகிறார்கள். குறிப்பாக பாதிக்கப்பட்டவர் என்ற அடையாளம் அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் உள்ளூர் மற்றும் சர்வதேச ஆதரவுகளையும் பெற்றுக்கொடுக்க உதவக்கூடும் என்பதாலேயே இது நிகழ்கிறது. வடமாகாண முஸ்லிம்களின் மீது கட்டமைக்கப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடையாளம் மனிதாபிமான அமைப்புகளால் மட்டுமன்றி பொது மக்களாலும் பல்வேறு வழிகளில் வடிவமைக்கப்பட்டிருந்தது. உள்நாட்டு மோதல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் துன்ப அனுபவங்களை வெவ்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்த முடியும். தமது நினைவுகளைப் பாதுகாக்கவும், நலத்திட்ட உதவிகளைப் பெற்றுக்கொள்ளவும், கடந்தகால வன்முறைகளுக்கு நீதி கோரவும், அல்லது அது தொடர்பான அரசியல் கோரிக்கைகளுக்கு ஆதரவளிக்கவும் அவர்கள் தங்கள் கதைகளைப் பயன்படுத்த முடியும். உண்மையில் மக்கள் தங்களின் பாதிக்கப்பட்ட நிலைகளை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் மற்றும் புரிந்துகொள்கிறார்கள் என்பது அவர்களைச் சுற்றியுள்ள அரசாங்கம் மற்றும் ஏனைய அரசியல் அமைப்புகளைச் சார்ந்துள்ளது எனவும் குறிப்பிட முடியும்.  அந்தவகையில் பாதிக்கப்பட்டோர் நிலை குறித்த ஆய்வுகள் மற்றும் கோட்பாடுகளிலிருந்து பெறப்பட்ட கருத்தாக்கங்களைப் பயன்படுத்தி, இலங்கையில் போர், இடம்பெயர்வு மற்றும் சிறுபான்மையினர் ஓரங்கட்டப்படுதல் ஆகிய சூழமைவுகளில் வடமாகாண முஸ்லிம்களின் நிலை எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது மற்றும் சித்தரிக்கப்பட்டது என்பது தொடர்பாகவும் அதில் செல்வாக்கு செலுத்திய பிற காரணிகள் தொடர்பாகவும் இந்தப் பகுதி கவனம் செலுத்துகிறது.

பொதுவாக பாதிக்கப்பட்டவர்கள் முற்றிலும் அதிகாரங்கள் எதுவும் அற்ற தரப்பினராக இருப்பதில்லை. அவர்களால் தொடர்ந்தும் செயல்படவும், தீர்மானங்களை மேற்கொள்ளவும், தங்கள் கடந்தகால அனுபவங்களைப் பயன்படுத்தி குறிப்பிட்ட சில இலக்குகளை அடையவும் முடியும். இன்று, அரசியல் மோதல்களும் அதன் விளைவுகளும் எவ்வாறு புரிந்துகொள்ளப்படுகின்றன என்பதை வடிவமைப்பதில் பாதிக்கப்பட்டவர்களின் நிலை (Victimhood) ஒரு முக்கியப் பங்கினை வகிக்கிறது. உதாரணமாக இலங்கையில் உள்ள தமிழர்கள், சர்வதேச சமூகத்திடமிருந்து ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காக, வன்முறைகள் மற்றும் அதனால் நிகழ்ந்த பாதிப்புகள் குறித்த தங்கள் அனுபவங்களைப் பயன்படுத்தியுள்ளனர். 1983 ஜூலை கலவரங்கள் உட்பட தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் உள்நாட்டுப் போரின் போதும் அதற்குப் பின்னரும் தாங்கள் அனுபவித்த பிரச்சினைகள் தொடர்பான சர்வதேசளவிலான கவனத்தை அவர்கள் ஈர்த்துள்ளனர். அங்கீகாரம், ஆதரவு மற்றும் அரசியல் தீர்வுகளுக்காக வேண்டி தமது பாதிக்கப்பட்ட நிலையை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைகிறது.

அதுபோலவே  QFR உள்ளிட்ட ஆணைக்குழுக்கள் அதிக கவனத்தையும் வெளிச்சத்தையும் பெறுவதற்காக பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களையே பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக்காட்டின. இவற்றின் அறிக்கைகள் பெரும்பாலும் மனித உரிமைகள் சார்ந்த கருத்துக்களைப் பயன்படுத்தியதுடன் இலங்கையில் இந்தக் கருத்துக்கள் இன வேறுபாட்டுக் கருத்தாடல்களால் வடிவமைக்கப்பட்டிருந்தன. சார்லஸ் டெய்லரின் (Charles Taylor) கருத்தைப் பயன்படுத்தி, இலங்கையின் பிரதான இனக் குழுக்கள் பெரும்பாலும் தனிமைப்படுத்தப்பட்ட முறைகளிலேயே சிந்திக்கின்றன என்று ஜயதேவ உயன்கொட (Uyangoda 2006) சுட்டிக்காட்டுவதோடு அவர் இதனை”தனித்தனி உலகங்கள் (worlds of solitude)” எனவும் அழைக்கிறார்.  விடயம் என்னவென்றால், பாதிக்கப்பட்ட நிலை (Victimhood) என்பது உயன்கொட முன்வைக்கும் தனித்தனி உலகங்களுக்கும் அப்பால் நிலவும் மற்றொரு பகுதியாகும். நீதி மற்றும் எது சரி எது தவறு என்பது பற்றிய வெவ்வேறு கருத்துக்களை ஒவ்வொரு தரப்பினரும் கொண்டிருப்பதால், வெவ்வேறு குழுக்கள் பாதிக்கப்பட்ட நிலையை வெவ்வேறு வழிகளில் புரிந்துகொள்கின்றன.

உலகம் முழுவதும், பல்வேறு காரணங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது துயர அனுபவங்களைப் பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கொள்கைகளில் செல்வாக்கு செலுத்தவும் தங்கள் பிரச்சினைகள் மீதான கவனத்தை ஈர்க்கவும் முயற்சி செய்து வருகின்றன. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களில் சில குழுக்கள் தமது பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பாற்பட்ட ஒன்றாக முன்வைக்கின்றன. அரசியல் விவாதங்கள் அல்லது கருத்தாடல்களுடன் தொடர்புபடுத்தாமல், தங்கள் வலியும் துன்பமும் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிடுகின்றனர் (Jeffery  and Candea 2006; Jeffery 2006).

உதாரணமாக டியோகோ கார்சியாவிலிருந்து இடம்பெயர்ந்த சாகோசிய மக்களைப் பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்ட லாரா ஜெஃப்ரி (Laura Jeffery), சில சகோசியப் பிரதிநிதிகள் தமக்கென்று வலுவான அரசியல் நிலைப்பாடுகளை எடுப்பதைத் தவிர்த்து வருவதை கண்டறிந்தார். அதற்குப் பதிலாக பிரிட்டிஷ் அரசாங்கம், சீஷெல்ஸில் உள்ள சகோசிய சமூகங்கள் மற்றும் மொரிஷியஸில் உள்ள ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு குழுக்களுடன் நல்லுறவைப் பேணுவதற்காக வேண்டி தங்களை இடப்பெயர்வினால் பாதிக்கப்பட்ட தரப்பினர்களாக மட்டுமே காட்டிக்கொண்டனர். இவ்வாறு நடுநிலையாக இருப்பதன் மூலம், எல்லாப் பக்கங்களிலிருந்தும் நல்லாதரவைப் பெறுவதற்கான வாய்ப்பை அவர்கள் திறந்து வைத்திருக்கவே விரும்பினர். அதுபோலவே ஐரோப்பாவில் வசிக்கும் துருக்கியைச் சேர்ந்த அலேவி சமூகத்தினரைக் குறிப்பிட முடியும். ‌ அவர்கள் தங்களின் கூட்டு அடையாளத்தை வலுப்படுத்தவும், மற்ற சிறுபான்மைக் குழுக்களுடன் ஒற்றுமையைக் கட்டியெழுப்பவும் அடக்குமுறைகள் குறித்த தங்களின் அனுபவங்களைப் பயன்படுத்துகின்றனர் (Yildiz and Verkuyten 2011).

பாதிக்கப்பட்டவர்களின் வெவ்வேறு அனுபவங்களை இணைத்து எவ்வாறு அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தலாம் என்பதை  விளக்கும் ஜூலியானா ஓக்ஸ் (Julianna Ochs 2006), வெவ்வேறு காலப்பிரிவுகளிலும் சூழ்நிலைகளிலும் பிரச்சினைகள் நடந்திருந்தாலும் சிலர், இன்திஃபாதாவினால் (இஸ்ரேல் நிகழ்த்திய இனச் சுத்திகரிப்பு) பாதிக்கப்பட்ட அரபுகளையும் ஹோலோகாஸ்டினால் பாதிக்கப்பட்ட யூதர்களையும் ஒப்பிடுகிறார்கள் என்பதை எடுத்துக் காட்டுகிறார். இந்த ஒப்பீட்டைச் செய்வதன் மூலம், இஸ்ரேலிய அரசினதும் சியோனிச இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு நியாயமான ஆதரவு திரட்டப்படுகிறது. ஆனால், இஸ்ரேலில் உள்ள அனைவரும் இந்த ஒப்பீட்டை ஏற்றுக்கொள்வதில்லை. இரு தரப்பினரதும்  அனுபவங்களை ஒரேமாதிரியான நியமத்தில் ஒப்பிடுவதற்கு கடினமானவை என்றும் சிலர் வாதிடுகின்றனர். ஒரு நாட்டிற்குள்ளேயே கூட பாதிக்கப்பட்ட மனோநிலை, வரலாறு மற்றும் நீதி குறித்த பல்வேறுபட்ட பார்வைகளும் வாதங்களும் இருக்கக்கூடும் என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது.

அதுமட்டுமின்றி கடந்தகால வன்முறைகளையும் பாதிப்புக்களையும் நினைவுகூரும்போது, பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்திற்காக வெவ்வேறு குழுக்கள் எவ்வாறெல்லாம் போட்டியிட முடியும் என்பதை பமீலா பாலிங்கர் (Ballinger 2004) விவாதிக்கிறார். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, இத்தாலியின் ட்ரைஸ்ட் (Trieste) பகுதியில், பெரும்பான்மை இத்தாலியர்களும் சிறுபான்மை ஸ்லோவேனியர்களும் போரின் போது தாங்கள்தான் அதிகம் பாதிக்கப்பட்டதாக ஒருவருக்கொருவர் கூறிக்கொண்டனர். ஸ்லோவேனிய பாசிச எதிர்ப்பு ஆர்வலர்கள் கொல்லப்பட்டதையும் யூகோஸ்லாவியப் படைகளால் பல இத்தாலியக் குடிமக்கள் இனப்படுகொலை செய்யப்பட்டு இடம்பெயர்க்கப்படதையும் வைத்தே இரு தரப்பினரும் பாதிக்கப்பட்டவர் ( Victimhood) என்ற அடையாளத்திற்காக இவ்வாறு விவாதித்து வந்தனர். பாசிசத்தின் தோல்வி பரவலாகக் கொண்டாடப்பட்டாலுமே கம்யூனிசப் படைகளால் நடத்தப்பட்ட பழிவாங்கும் எண்ணத்திலான கொடூரக் கொலைகளை புறக்கணித்துவிட‌ முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். ஒரே வரலாற்று நிகழ்வுகளை வெவ்வேறு குழுக்கள் வெவ்வேறு வழிகளில் நினைவுகூரக்கூடும் என்பதையும், தங்கள் துயருக்கான அங்கீகாரத்திற்காகப் வெவ்வேறான வழிகளில் போட்டியிடக்கூடும் என்பதையுமே இது எடுத்துக் காட்டுகிறது.

அந்தவகையில் இலங்கைச் சூழலில் ஏனைய மக்கள் குழுக்களுடன் ஒப்பிடும்போது குறிப்பாக 2009 க்கு முன்பு போர் இடம்பெற்ற பகுதிகளில் வாழ்ந்த தமிழர்கள் மற்றும் 2008, 2009 களில் வன்னியில் நடந்த போரில் உயிர் பிழைத்தவர்களுடன் ஒப்பிடும்போது, வடமாகாண முஸ்லிம்கள் பெரும்பாலும் “உண்மையான” பாதிக்கப்பட்ட தரப்பினராகக் அரசு மற்றும் மனிதாபிமான அமைப்புகளால் கருதப்படவில்லை. இதன் காரணமாக வடமாகாண முஸ்லிம்கள் தங்கள் துன்பங்களை அரசாங்கம், மனிதாபிமான அமைப்புகள் மற்றும் பிற நிறுவனங்களின் கவனத்திற்குக் கொண்டுவர பலவாறு போராடினர். அவர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு சொத்துக்களை இழந்திருந்து ஏழைகளாக மாறியிருந்தாலும், பல ஆண்டுகளாகத் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத நிலையில் இருந்தபோதிலும், மற்றைய இடம்பெயர்ந்த குழுக்களை விட அவர்கள் பெரும்பாலும் “சிறந்த நிலையில்” இருப்பதாகவே கருதப்பட்டனர். இதற்குக் காரணம் உக்கிரமான போர்ப் பகுதிக்கு வெளியே வாழ்ந்ததுதான் (Brun 2008). போர் இடம்பெற்ற பகுதிகளுகு வெளியே வாழ்ந்ததனால் வெவ்வேறு மக்கட்குழுக்களின் துன்பங்களுடன் ஒப்பிடப்பட்டபோது  வடமாகாண முஸ்லிம்களுக்குப் பெரும்பாலும் குறைந்தளவிலான முன்னுரிமையே வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாணத்தில் 2002 களில் தொடங்கிய சமாதானப் பேச்சுவார்த்தையில் முஸ்லிம்களும் அங்கம் வகிக்க வேண்டும் என்று இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வாதிட்டபோது (SLMC) ஆர். சம்பந்தன் அந்த யோசனையை கடுமையாக எதிர்த்தார். முஸ்லிம்கள் ஆயுதப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும், எனவே அரசியல் தீர்மானத்தில் அவர்களுக்கு எந்தவிதமான பங்கும் இருக்கக்கூடாது என்றும் அவர் வாதிட்டார். பின்னர் 2009 ல், குடிசன ஆணைக்குழு நடத்திய விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை ஒரு “ஆசீர்வாதம்/ எதிர்பாராத விதமாக நடந்த நல்ல விடயம்” என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் குறிப்பிட்டிருந்தார். அவர்கள் வெளியேற்றப்பட்டதால் போரின் போது வடக்கில் பலர் அனுபவித்த தொடர்ச்சியான இடப்பெயர்வு, காயங்கள், இறப்புகள் மற்றும் காணாமல் போதல்களை முஸ்லிம்களுக்கு அனுபவிக்க நேரவில்லை என்பதே அவரது வாதமாக இருந்தது. ஆயர் ராயப்பு ஜோசப்பின் கூற்றுப்படி, போரின் போது வடமாகாண முஸ்லிம்களை விட வடக்கில் வாழ்ந்த தமிழர்களே மிகவும் அதிகமாகப் பாதிக்கப்பட்டனர். மற்றுமொரு சந்தர்ப்பத்தில் மன்னாரில் உள்ள ஒரு மீன்பிடித் துறைமுகம் தொடர்பாக மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினரிடையே ஏற்பட்ட ஒரு தகராறின் போது மீள்குடியேறிய முஸ்லிம்களுக்கு அந்தத் துறைமுகத்தைப் பயன்படுத்த எந்தவொரு உரிமையும் இல்லை என்று வாதிட்ட அவர், மீள்குடியேறிய முஸ்லிம்கள் அசலில் மீனவக் குடும்பங்களே அல்ல என்றும், புத்தளத்திலிருந்து வந்த நன்கு நிலைபெற்ற வணிகர்களே என்றும் கூறியிருந்தார். இதே போன்ற கருத்துக்களையே சில தமிழ் அரசு சாரா நிறுவனப் பணியாளர்களும் அமைதி ஆர்வலர்களும் வடமாகாண முஸ்லிம்கள் தொடர்பில் வெளிப்படுத்தி வந்தனர்.

QFR அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, இரு முக்கியப் பிரச்சினைகள் வடமாகாண முஸ்லிம்களின் பாதிக்கப்பட்ட நிலையைப் புரிந்துகொள்வதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. முதலாவதாக, இலங்கை அரசு அவர்களின் பிரச்சினைகளை போதுமான அளவு அங்கீகரிக்கவில்லை. இரண்டாவதாக, சில தமிழ் தேசியவாதக் குழுக்கள் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை தொடர்ச்சியாக நியாயப்படுத்தி வந்தன. மேற்குறித்த இரு காரணங்களால் வடமாகாண முஸ்லிம்கள் தமது பாதிக்கப்பட்ட நிலையை உறுதியாக முன்வைப்பதில் சிக்கல்கள் எழுந்தன. இதன் காரணமாக, வடமாகாண முஸ்லிம்கள் தங்கள் அனுபவங்களை அங்கீகரிக்கச் செய்வதற்காக குறிப்பிட்ட சில உத்திகளை வகுக்க முற்பட்டனர். மனித உரிமை மீறல்கள் குறித்த அரசாங்க ஆணைக்குழுக்கள் மற்றும் அது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டிருந்த ஏனைய சிவில் சமூக ஆர்வலர்களைப் போலல்லாமல் தங்களுக்கு நேர்ந்ததை அரசு அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்று வடமாகாண முஸ்லிம்கள் விரும்பினர். ஒருமுறை சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கம், வடமாகாண முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துச் செல்ல  ஒரு ஜனாதிபதி ஆணைக்குழுவை அமைப்பது குறித்து பரிசீலித்ததாகவும், ஆனால் அந்த முன்மொழிவு இறுதியில் நிராகரிக்கப்பட்டு, முன்னெடுக்கப்படவில்லை என்றும் ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் என்ற அடையாளத்தைப் பெறும் விடயத்தில் மற்றுமொரு போட்டி இடம்பெற்றதாலேயே இது நிகழ்ந்தது. இடம்பெயர்வு குறித்த எந்தவொரு ஆணையமும் வடமாகாண முஸ்லிம்களை மட்டுமன்றி, 1983 ஜூலை கலவரங்களுக்குப் பிறகு விடுதலைப் புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள மக்களின் துன்பங்களையும் உள்ளடக்க வேண்டும் என்று சில அரசாங்கப் பிரதிநிதிகள் விரும்பினர். ஆனால், வடமாகாண முஸ்லிம் பிரதிநிதிகள் சிங்கள மக்களின் அனுபவங்களை வடமாகாண முஸ்லிம்களின் அனுபவங்களுக்குச் சமமாகவோ அல்லது நேரடியாக ஒப்பிடக்கூடியதாகவோ கருதுவதற்குத் தயக்கம் காட்டினர். இந்தக் கருத்து வேறுபாட்டின் காரணமாகவே குறித்த ஆணைக்குழு தொடர்பான அந்த முன்மொழிவு நிராகரிக்கப்பட்டது. அதாவது சில சமயங்களில் தங்கள் சொந்த பாதிப்பு அனுபவத்தை மற்றைய குழுக்களின் பாதிப்பு நிலையிலிருந்து தனித்துவமானதாகவும் வேறுபட்டதாகவுமே முஸ்லிம்கள் முன்வைக்க விரும்பினர்.

பிற்காலங்களில் அரசினால் உருவாக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் (LLRC) பல பலவீனங்களைக் கொண்டிருந்தாலும், பல வடமாகாண முஸ்லிம்கள் LLRC ஐ மதித்தனர். ஏனெனில் அது அவர்களின் அனுபவங்களையும் துன்பங்களையும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்த முதல் அரசமைப்புகளில் ஒன்றாக இருந்தது. LLRC அறிக்கையானது வடமாகாண முஸ்லிம்களின் சாட்சியங்களை – அவை முன்வைக்கப்பட்டபடியே எவ்வித மாற்றங்களும் இல்லாமல் சேர்த்திருந்ததுடன் வடமாகாண முஸ்லிம்களின் வாழ்பனுபவங்களுக்குக் குறிப்பிடத்தக்க கவனத்தையும் செலுத்தியது. அவர்களின் வெளியேற்றம் மற்றும் இடம்பெயர்வினால் ஏற்பட்ட துயரங்களை அந்த அறிக்கை அங்கீகரித்ததுடன், அதனால் ஏற்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் பரிகாரங்களை வழங்குவதற்கும் குறிப்பிட்ட சில பரிந்துரைகளை அது வழங்கியது.

2012 களில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்  அவையின் அழுத்தத்தின் கீழ் இலங்கை அரசாங்கம், LLRC யின் பரிந்துரைகளைச் செயல்படுத்த ஒப்புக்கொண்டது. இதில் வடமாகாண முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் கொள்கைகளை உருவாக்குவது தொடர்பான பரிந்துரைகளும் அடங்கும். ஒருவழியாக LLRC  வடமாகாண முஸ்லிம்களின் பிரச்சினைகளை அங்கீகரித்திருந்த போதிலும், அதன் அணுகுமுறையில் சிக்கல்கள் இல்லாமல் இல்லை. அதாவது இலங்கையில் இருக்கும் அனைத்து உள்நாட்டு இடம்பெயர்ந்தோரின் (IDPs) உரிமைகளைப் பாதுகாக்கவென ஒரு குறிப்பிட்ட சட்ட ஒழுங்கமைப்பொன்று இல்லாத ஒரு சூழ்நிலையில், வடமாகாண முஸ்லிம்களை மட்டும் மையமாகக் கொண்ட கொள்கைகளை உருவாக்குவதில் சிக்கல்கள் உருவாகலாம். இறுதியாக, இந்தப் இடம்பெயர்ந்தோரின் பிரச்சினைகளை ஒரு குறிப்பிட்ட இனக்குழுவை மட்டும் பாதிக்கும் பிரச்சினையாகக் கருதாமல், இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் பாதிக்கும் ஒரு பரந்த பிரச்சினையாகக் கருதி அணுக வேண்டும் என்பதே இங்கு முன்வைக்கப்படும் பிரதான வாதமாகும். இது போன்ற பிரச்சனைகளில் இன அடையாளத்தை மட்டும் மையமாகக் கொள்வது, பிரச்சினைகளை இன அடையாளங்களின் வழியாகப் புரிந்துகொண்டு நிர்வகிக்கும் அரசின் போக்கையே பிரதிபலிக்கிறது.

முடிவுரை.

வடக்கு முஸ்லிம்களின் அடையாளம் என்பது வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டு நீண்டகால இடம்பெயர்வில் வாழ்ந்த அவர்களின் வாழ்பனுபவத்தால் மிக வலுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அங்கீகாரத்தையும் பல்தரப்புக்களினதும் ஆதரவையும் பெறுவதற்கான வடக்கு முஸ்லிம்களின் அரசியல் முயற்சிகள் அனைத்தும் வடக்கிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டதனையும், இடம்பெயர்வின் போது அவர்கள் கழித்த ஆண்டுகளின் எண்ணிக்கையையும் வைத்தே பெரும்பாலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அப்பால் அவை அதற்கப்பால் பெரிதாக விரிவடையவில்லை. அதுமட்டுமன்றி வடமாகாண முஸ்லிம்களைப் பற்றிய பெரும்பாலான ஊடக அறிக்கைகள் “அவர்கள் 1990 களில் பலவந்தமாக இடம்பெயர்க்கப்பட்டு, புத்தளத்தில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து வருகின்றனர் என்ற ஒரே ஒரு கதையை மட்டுமே மையமாகக் கொண்டுள்ளன.  ரிஷாத் பதியுதீன் போன்ற வடமாகாண முஸ்லிம்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் தலைவர்கள் கூட, வடமாகாண முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும், அவர்கள் தாயகம் திரும்பியதன் பிறகு அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மட்டுமே பேசி வருகின்றனர். திட்டமிட்ட ஒரு இனச் சுத்திகரிப்பால் ஏற்பட்ட அநீதிக்கு நீதியை நிலைநாட்டும் ஒரு நடவடிக்கையாக யாரும் இந்தப் பிரச்சினையை வலுவாக முன்வைத்ததாகத் தெரியவில்லை.

இதனால், வடமாகாண முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் என்பது நீதி, உரிமைகள், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான ஒரு ஆழமான விடயமாகக் கருதப்படாமல் அவர்களுக்கான வீடுகள், நிலங்கள் மற்றும் ஏனைய வாழ்வாதாரங்களை வழங்கும் ஒரு சாதாரண மீள்குடியேற்றம் பற்றிய ஒரு சாதாரண விடயமாக மட்டுமே பார்க்கப்படுகிறது. விளைவாக வடமாகாண முஸ்லிம்கள் பெரும்பாலும் வறுமை மற்றும் அடிப்படைத் தேவைகளைக் கருத்தில் கொண்டே தமது மீள்குடியேற்றம் தொடர்பில் கவனம் செலுத்த நிர்பந்திக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு பாரதூரமான வரலாற்றுத் தவறுக்கு நீதியைத் தேடும் பாதிக்கப்பட்ட மக்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதற்குப் பதிலாக, உயிர்வாழ்வதற்கான அடிப்படைகள் (“வெற்று வாழ்க்கை – Bare life”) தேவைப்படும் மக்களாக அவர்கள் தங்களைக் காட்டிக்கொள்ள வேண்டும் என்பதையே மனிதாபிமான அமைப்புகளும் இலங்கை அரசும் விரும்புகின்றன.

வடமாகாண முஸ்லிம்கள் தங்கள் சொந்தத் துன்பங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்வதற்காக நீண்ட காலமாகப் போராடி வருவதால், அவர்களில் சிலர் மற்றவர்கள் (வடக்கிலிருந்து போரினால் இடம்பெயர்ந்த ஏனைய தமிழ் சிங்கள மக்கள்) அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி குறைவாகவே மதிப்பீடு செய்கிறார்கள்.  பல முஸ்லிம்கள், வடக்கிலிருந்து தாம் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதால் தமிழர்களே அதிக பயனடைந்ததாக கருதுகின்றனர். மீள்குடியேறிய சில முஸ்லிம்கள், தமிழர்களின் வீடுகளில் தங்கள் பழைய மரச்சாமான்களையோ அல்லது தமிழ் அண்டை வீட்டாருக்குச் சொந்தமான கால்நடைகளுக்கு நடுவே தங்கதளது கால்நடைகளையோ அடையாளம் கண்டதாகக் கூறிய சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.

அதுமட்டுமின்றி பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை விடவும் தமிழர்களே அதிக நலத்திட்ட உதவிகளையும் சர்வதேச அளவிலான கவனத்தையும் பெறுகிறார்கள் என்றும் சில முஸ்லிம்கள் உணர்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழர்கள் ஏற்கனவே வெளிநாடுகளில் உள்ள தமது உறவினர்களிடமிருந்து நிதியுதவிகளைப் பெற்று வருவதாகவும், ஆனால் பல முஸ்லிம்களுக்கு அத்தகைய ஆதரவு எதுவும் கிடைப்பதில்லை என்றும் ஒரு முஸ்லிம் தன்னார்வ தொண்டு நிறுவனப் பணியாளர் தெரிவித்திருந்தார். உண்மையில் தமிழர்களும் போரினாலும் அதனால் இடம்பெற்ற நீண்டகால இடப்பெயர்வாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற யதார்த்தத்தை சில முஸ்லிம்கள் கவனிக்கத் தவறி விடுகிறார்கள். யாழ்ப்பாணப் பகுதியின் உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இடம்பெயர்ந்த சுமார் அறுபதாயிரம் தமிழர்கள் பல ஆண்டுகளாக இன்னமும் இடம்பெயர்ந்த நிலையிலேயே வாழ்ந்து வருவதுடன் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலேயே இன்றும் வாழ்ந்து  வருகின்றனர்.

இலங்கையில் போருக்குப் பிந்தைய சூழலில் ஒரு நீதியானதும் நியாயமானதுமான பொறிமுறையை உருவாக்குவதில் இலங்கை அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் பிழைகளை விட்டிருக்கின்றன. இன அழிப்பு, நல்லிணக்கம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குதல், நினைவு தினங்களை அனுசரித்தல், இராணுவமயமாக்கலைக் குறைத்தல் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் பல்துறை மேம்பாடு போன்ற அடிப்படையான பிரச்சினைகளைத் தீர்க்க அவர்கள் போதுமானளவு ஆர்வத்துடன் செயல்படவில்லை. இதனால் வடமாகாண முஸ்லிம்கள் உள்நாட்டு மற்றும் சர்வதேச உதவிகளைப் பெறுவதற்காகத் தங்களது நிலமைகளை அடிக்கடி வலியுறுத்த வேண்டியிருந்தது. பல ஆண்டுகளாக நிச்சயமற்ற வகையிலும் ஒழுங்கற்ற முறைகளிலும் மனிதாபிமான உதவிகள் கிடைக்கப்பெற்றதால் அதனால் பழக்கப்பட்ட பலருக்கும் எது எப்போது கிடைத்தாலும் அதனை ஏற்றுக்கொள்ளும் மனநிலை உருவானது.

சுமார் 200,000 க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்டுள்ள வடமாகாண முஸ்லிம் சமூகத்தில் பலருக்கு உண்மையாகவே நலத்திட்ட உதவி தேவைப்படுவதால் அந்த சமூகத்திற்குள்ள கட்டமைப்பு சார்ந்த பிரச்சினைகளைப் பேசுவதற்கான இடைவெளி மிகக் குறைவாகவே உள்ளது. அங்கீகாரமும் சர்வதேச மற்றும் உள்நாட்டு ஆதரவும் பெரும்பாலும் தாங்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதை நிரூபிப்பதையே சார்ந்திருப்பதால், வடமாகாண முஸ்லிம்கள் தமது துன்பியல் கதைகளிலேயே அதிக கவனம் செலுத்தத் தள்ளப்பட்டுள்ளனர். விளைவாக பேசப்பட வேண்டிய எத்தனையோ அவசரமான பிரச்சினைகளின் பக்கம் கவனம் செலுத்துவது கடினமாகவே உள்ளது. பாதிக்கப்பட்டவர் என்ற மனோநிலை வெளி உலகத்துடன் தொடர்புகொள்வதற்கான முக்கிய வழியாகிவிட்டதால் பல்வேறுபட்ட தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் வெவ்வேறுபட்ட அனுபவங்களைப் பற்றிய விரிவான புரிதலுக்கு மிகக் குறைந்தளவிலான இடமே கிடைக்கப்பெறுகிறது.

ஒருவகையில் போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கை அரசாங்கம் கையாண்ட பொறிமுறைகளின் பலவீனம் காரணமாக போருக்குப் பிந்தைய சூழலில் இடம்பெர்ந்து வாழும் முஸ்லிம்களால் ஆற்றக்கூடிய பங்களிப்புக்களை தடுத்து நிறுத்தியது எனவும் குறிப்பிட முடியும். வடமாகாண முஸ்லிம்கள் பல ஆண்டுகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்து, கடினமான சூழ்நிலைகளைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டதுடன் அவர்களில் பலர் புத்தளத்தில் கல்வி கற்று பயனுள்ள திறன்களையும் அறிவையும் பெற்றுக் கொண்டனர். அதேபோல வடமாகாண தமிழர்களும் இராணுவக் கட்டுப்பாட்டை எவ்வாறு கையாள்வது மற்றும் அரசாங்கத்துடன் எவ்வாறு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது போன்ற விடயங்களை கற்றுக்கொண்டனர். இந்த இருவேறுபட்ட அனுபவங்களின் காரணமாக இரு சமூகத்தினரும் பயனுள்ள திறன்களையும் பலங்களையும் கொண்டுள்ளனர். வடமாகாண முஸ்லிம்களும் வடக்கின் தமிழர்களும் இணைந்து செயல்பட்டால், அவர்கள் வடக்கை மீண்டும் கட்டியெழுப்பவும் அப்பகுதி மக்களின் வாழ்க்கையை முழுதாக மேம்படுத்தவும் உதவ முடியும். ஆனால் சமகாலத்தில் வடக்கில் இடம்பெற்று வரும் வளர்ச்சியானது உள்ளூர் மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதில் முக்கியமாக கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. மாறாக, அது நெடுஞ்சாலைகள், கட்டிடங்கள் மற்றும் பிற பாரியளவிலான கட்டுமானங்கள் போன்ற பெருமளவிலான உட்கட்டமைப்புத் திட்டங்களிலேயே கவனத்தை செலுத்தி வருகிறது. இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களுக்குக் குறைந்த அளவிலான நன்மைகளை மட்டுமே வழங்குவதாக ஆய்வு முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இதன் விளைவாக மக்களின் வாழ்வாதாரம், வருமானம் மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரம் ஆகியன தொடர்பாக போதியளவு கவனம் செலுத்தப்படாமலேயே உள்ளது (Thahir et al. 2013).

முஸ்லிம்களின் பலவந்தமான வெளியேற்றம் குறித்த பல வடமாகாண முஸ்லிம்களிடையே வெளியேற்றம் நடைபெறுவதற்கு முன்பாக முஸ்லிம்களுக்கும் அண்டை வீட்டாரான தமிழர்களுக்கும் இடையே சுமுகமான ஒரு நல்லுறவு இருந்தது என்ற பொதுவான கருத்து காணப்படுகிறது. இக்கருத்துக்களின் அடிப்படையில் வெளியேற்றத்திற்குக் காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்படுபவர்கள், சாதாரண தமிழ் குடிமக்களாகக் கருதப்படாமல்  தமிழீழ விடுதலைப் புலிகளாகவே பார்க்கப்படுகிறார்கள். சில சமயங்களில் இவர்கள் உள்ளூர் தமிழ் சமூகத்திற்கு வெளியிலிருந்து கொண்டுவரப்பட்டவர்கள் என்றளவிலும் விவரிக்கப்படுகிறார்கள். இதே பாணியிலான கதைகள் இன்று அவ்வளவு வலுவாக வெளிப்படுத்தப்படுவதில்லை என்றாலும் அது உண்மையில் மிகவும் பயனுள்ளதாகும். முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும், அன்றாட வாழ்வில் பிரச்சனைகளை அமைதியான முறையில் தீர்க்கவும் பல வழிகளைக் கண்டறிய இவை உதவக்கூடும்.

போருக்குப் பிறகான இலங்கைச் சூழமைவு என்பது பல்வேறு பிரச்சனைகளால் ஆனது.  தொழிலாளர் வேலைநிறுத்தங்கள், மாணவர் போராட்டங்கள், பலவீனமான சட்டம் ஒழுங்கு, ஊழல் மற்றும் அரசியலில் அதிகரித்து வரும் இனப் பதட்டங்கள் ஆகியன அவற்றில் அடங்கும் தீவிரமான பிரச்சினைகள். அதே நேரத்தில், முஸ்லிம்களைக் குறிவைத்த சில பௌத்த தேசியவாதக் குழுக்கள் உட்பட, முன்னர் செயலற்றிருந்த சில தீவிரவாதக் குழுக்கள் அதிகளவில் வெளிப்படத் தொடங்கியுள்ளன. இது அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் பல சவால்களை உருவாக்கியுள்ளது. சமீபத்தில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட்டு ஒரு புதிய ஜனாதிபதியும் பிரதமரும் ஆட்சிக்கு வந்துள்ளனர். இந்த அரசியல் மாற்றம் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஜனநாயகம், நீதி, நேர்மை மற்றும் சமத்துவத்தைக் கொண்டுவரும் என்ற நம்பிக்கை எல்லோருக்கும் உள்ளது.

உசாத்துணைகள்:

Abeywickrema, M I (2012). Legal action against UNHCR The Sunday Times, January 8 2012 Available at http://www.thesundayleader.lk/2012/01/08/legal-action-against-unhcr/.

Ballinger, P (2004). Exhumed Histories: Trieste and the Politics of (Exclusive) Victimhood Journal of Southern Europe and the Balkans 6(2): 145–59, DOI: https://doi.org/10.1080/1461319042000242038 

Brun, C (2003). Local Citizens or Internally Displaced Persons? Dilemmas of Long Term Displacement in Sri Lanka Journal of Refugee Studies 16(4): 376–397, DOI: https://doi.org/10.1093/jrs/16.4.376 

Brun, C (2008). Finding a Place. Local Integration and Protracted Displacement in Sri Lanka. Colombo: Social Scientists’ Association.

Campbell, B (2012). Addressing Concerns about Transitional Justice in Displacement Contexts: A Humanitarian Perspective In: Duthie, R ed.  Transitional Justice and Displacement. New York: Social Science Research Council, pp. 65–84.

de Mel, N (2013). The Promise of the LLRC: Women’s Testimony and Justice in post-war Sri Lanka Colombo: International Centre for Ethnic Studies.

Facilitating Local Initiatives for Conflict Transformation (2009). Puttalam District Profile August 11 200927 Available at http://www.statistics.gov.lk/poverty/small%20area%20reportNEW.pdf

Fassin, D (2007). Humanitarianism: a Nongovernmental Government In: Feher, M, Kirkorian, G and McKee, Y eds.  Nongovernmental Politics. New York: Zone Books.

Fassin, D (2009). Another Politics of Life is Possible Theory Culture and Society 26(5): 44–60, DOI: https://doi.org/10.1177/0263276409106349 

Fassin, D (2012). Humanitarian Reason: A Moral History of the Present. Berkeley: University of California Press. 

Haniffa, F (2008). Twice Removed: Northern Muslim Refugee Women in Puttalam LST Review 19(250): 1–22. 

Haniffa, F (2011). Three Attempts at Peace in Sri Lanka: a Critical Muslim Perspective Journal of Peacebuilding and Development 6(1): 49–62, DOI: https://doi.org/10.1080/15423166.2011.345429184075 

Haniffa, F and Raheem, M (2006). Post-Tsunami Reconstruction and the Eastern Muslim Question. Colombo: Centre for Policy Alternatives.

Hasbullah, S H (2001). Muslim Refugees: Forgotten People of Sri Lanka’s Ethnic Conflict. Nuraichcholai: Research and Action Forum for Social Development. 

Island (2012). An appeal to the Tamil community and its civil and political representatives January 5 2012 Available at http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=42559. 

Jeffery, L (2006). Victims and Patrons: Strategic Alliances and the Anti-Politics of Victimhood among Displaced Chagossians and their Supporters History and Anthropology 17(4): 297–312, DOI: https://doi.org/10.1080/02757200600914060

Jeffery, L and Candea, M (2006). The Politics of Victimhood History and Anthropology 17(4): 287–96, DOI: https://doi.org/10.1080/02757200600914037 

Maalki, L (1995). Refugees and Exile: From ‘Refugee Studies’ to the National Order of Things Annual Review of Anthropology 24: 495–523, DOI: https://doi.org/10.1146/annurev.an.24.100195.002431

Maalki, L (1996). Speechless Emissaries: Refugees, Humanitarianism, and Dehistoricization Cultural Anthropology 11(3): 377–404, DOI: https://doi.org/10.1525/can.1996.11.3.02a00050 

McGilvray, D and Raheem, M (2007). Muslim Perspectives on the Sri Lankan Conflict. Washington, DC: East-West Center. 

Ochs, J (2006). The Politics of Victimhood and Its Internal Exegetes: Terror Victims in Israel History and Anthropology 17(4): 355–68, DOI: https://doi.org/10.1080/02757200600914102 

Raheem, M and Thangarajah, P (2013). Tamil Muslim Tensions and Coexistence in Mannar: Land Disputes in Sannar and Uppukulam. Colombo: Center for Policy Alternatives.

Sarvananthan, M (2014). Illusory economy versus the real economy of Sri Lanka Colombo Telegraph, April 15 2014 Available at https://www.colombotelegraph.com/index.php/illusory-economy-versus-the-real-economy-of-sri-lanka/

Shanmugaratnam, N (2000). Forced Migration and Changing Local Political Economies: A Study from Northwestern Sri Lanka. Colombo: Social Scientists’ Association. 

Thaheer, M, Peiris, P and Pathiraja, K (2013). Reconciliation in Sri Lanka: Voices from the War Zone. Colombo: International Centre for Ethnic Studies.

The Quest for Redemption: The Story of the Northern Muslims (2011). Final report of the Citizens’ Commission on the Expulsion of Muslims from the Northern Province by the LTTE in October 1990

Thiranagama, S (2011). In My Mother’s House: Civil War in Sri Lanka. Philadelphia: University of California Press, DOI: https://doi.org/10.9783/9780812205114 

Uyangoda, J (2006). Raghavan, V R and Bauer, V eds.  Reconciling Many Solitudes Federalism and Conflict Resolution in Sri Lanka

Yildiz, A A and Verkuyten, M (2011). Inclusive Victimhood: Social Identity and the Politicization of Collective Trauma among Turkey’s Alevis in Western Europe Peace and Conflict 17: 243–69, DOI: https://doi.org/10.1080/10781919.2011.587175 

பர்ஸானா ஹனீஃபா (Farzana Haniffa), கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். இலங்கையின் உள்நாட்டு ஆயுத மோதல், முஸ்லிம் சமூகங்களின் சமூக-அரசியல் நிலைமைகள், பெண்ணிய அரசியல் உள்ளிட்ட துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ள அவர், பல்வேறு ஆய்வுக் கட்டுரைகள் மற்றும் நூல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், பர்ஸானா ஹனீஃபா, இலங்கையின் Social Scientists’ Association (SSA) அமைப்பின் உறுப்பினராகவும், Law and Society Trust (LST) அமைப்புடன் இணைந்து ஆராய்ச்சி மற்றும் சமூக நீதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்

இந்த ஆக்கம் stability journal இணையதளத்தில் Competing for Victim Status: Northern Muslims and the Ironies of Sri Lanka’s Post-war Transition என்ற தலைப்பில், 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.