-மரீஸா ஏன்ஜல்
அறிமுகம்
நாஜி ஜெர்மனியோடும் ஹிட்லரோடும் இணைத்துப் புரிந்துகொள்ளப்படும் ஆரியக் கோட்பாடானது இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லராலும் மூன்றாம் ரீச்சாலும் உருவாக்கப்பட்ட யூத எதிர்ப்பு இனவாதச் சித்தாந்தத்துடனேயே தனது வேர்களைக் கொண்டுள்ளது. ஆனால் ஆரியக் கோட்பாட்டிற்கு பலம்வாய்ந்ததொரு அறிவாய்வியல்சார் பின்புலம் ஒன்று இருந்து வந்துள்ளமை கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். மொழியியல், மானுடவியல் மற்றும் அரசியல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியவாறு சுமார் இருநூறு ஆண்டுகளாக வளர்ந்துவரும் ஒரு மிகப் பெரிய ஆய்வுத் துறையின் ஒரு பகுதியாக ஆரியக் கோட்பாடு இருந்து வருகிறது. “மனிதகுலத்தை நாம் மூன்று குழுக்களாகப் பிரித்தால் அதில் பண்பாட்டை உருவாக்குபவர்கள், அதனைப் பாதுகாப்பவர்கள், மற்றும் அதனை அழிப்பவர்கள் என்ற மூன்று பிரிவுகளுக்குள் ஆரியர்கள் மட்டுமே முதல் குழுவைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற ஹிட்லரின் கூற்று ஆரியக் கோட்பாட்டின் தத்துவார்த்தப் பின்புலத்தை எடுத்துக்காட்டப் போதுமானதாகும். வரலாற்று ரீதியாக ஆவணப்படுத்தப்பட்டு நன்கு அறியப்பட்டவையாக உள்ள ஆரிய மேன்மைக் கோட்பாடுகளின் விளைவுகள், இருபதாம் நூற்றாண்டு நாஜி ஆட்சியின் கீழ் அதன் உச்சகட்டத்தைத் தொட்டது எனலாம். மிகக் கடுமையாகவும் கொடூரமாகவும் வெளிப்படுத்தப்பட்ட ஆரிய மேன்மையுணர்வு, 1940களில் ஆஷ்விட்ஸ் வதை முகாமில் சிறை வைக்கப்பட்டிருந்த எல்லி வீசல் (Elie Wiesel) போன்ற சிறுபிள்ளைகளைக் கூட கடுமையாகப் பாதித்ததுடன் கடவுளின் மீதான அவநம்பிக்கையை ஏற்படுத்தி கடவுளின் இறப்பை அவர்கள் அறிவிக்கும் அளவிற்கு துன்புறுத்தப்பட்டனர்.
நவீன கால வரலாற்றினையும், மொழியில் ரீதியாக மிக நீண்ட ஆய்வை வேண்டி நிற்கும் கருத்தாக்கமொன்று எவ்வாறு ஒரு பலமான அரசியல் சித்தாந்தமாக மாற்றப்பட்டது என்பதையும் புரிந்துகொள்ள ஆரியக் கோட்பாடு பற்றிய புரிதல் நமக்கு அவசியமாகிறது. ஆரியக் கோட்பாட்டின் வரலாறானது மொழிகளின் தோற்றம் பற்றிய கோட்பாடாகத் தோன்றி பின்னர் அது ஒரு இனவாதக் கோட்பாடாக வளர்ந்தது வரை கல்விப்புலமும் அரசியலும் எவ்வாறு பரஸ்பரம் ஒத்துழைத்துக் கொண்டன என்பதைப் புரிந்து கொள்வதற்கும் ஆரியக் கோட்பாடு பற்றிய புரிதல் நமக்கு உதவக்கூடும். ஆரியக் கோட்பாடு பற்றிய பல விளக்கங்கள், அதனை இரண்டு விதங்களில் விவரித்துச் செல்வதனைப் பொதுவாக அவதானிக்க முடியும். அதில் முதலாவது விபரிப்பாக, அனைத்து மனிதர்களுக்குமான பொதுவான இயல்பைக் கண்டடைய முயற்சித்த பதினெட்டாம் நூற்றாண்டின் உலகளாவியவாதத்தின் (Universalism) விளைபொருளாக ஆரியக் கோட்பாட்டை முன்வைக்கும் போக்கினைக் காண முடியும். மற்றொரு விபரிப்பாக மனிதர்களின் தோற்றம் தொடர்பான புதியதொரு வரலாற்றை உருவாக்க முயன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் இனவாத மற்றும் யூத எதிர்ப்பின் விளைபொருளாக ஆரியக் கோட்பாட்டை விபரிக்கும் போக்கினையும் கண்டுகொள்ள முடியும். இந்த விளக்கங்கள் இரண்டினையும் அவதானிக்கும் போது பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் கோட்பாட்டளவில் காணப்பட்ட இனவாதக் கருத்தாக்கங்கள், இருபதாம் நூற்றாண்டில் ஹிட்லர் நேரடியாக மனித குலத்தின் மீது பிரயோகம் செய்தலை நோக்கி நேரடியாக நகர்வதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
எவ்வாறாயினும், ஆரியக் கோட்பாடு பற்றிய ஆய்வுப்பரப்பில் அதிகம் கவனம் செலுத்தப்படாத பகுதியாகவுள்ள காலனித்துவக் கட்டுமானங்களைக் கட்டிக்காப்பதிலும் காலனித்துவ ஆட்சியை நியாயப்படுத்தி அதனை மென்மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் எவ்வாறு உதவியது என்ற மிகமுக்கியமான ஆய்வு இடைவெளியை இவ்வாய்வுக் கட்டுரை கவனத்தில் கொள்கிறது. அந்தவகையில் இந்தக் கட்டுரை, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கீழிருந்த இலங்கையில் ஆழப்பதிக்கப்பட்டிருந்த ஆரியக் கோட்பாட்டின் வேர்களை ஆய்வு செய்வதோடு, பத்தொன்பதாம் நூற்றாண்டளவில் அக்கோட்பாடு பெற்றிருந்த அரசியல் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்ட முனைகிறது.
அதன்தொடச்சியாக, இப்பகுதியானது 1780 முதல் 1880 வரையிலான ஆரியக் கோட்பாட்டினது வரலாற்றை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய கீழைத்தேயவாத அறிஞர்களின் ஆய்வுகளில் இக்கோட்பாட்டின் தோற்றம் பற்றியும், பிற்காலங்களில் காலனித்துவ இலங்கையில் இது எவ்வாறு ஒரு முக்கியமான விவாதப் பொருளாக மாறியது என்பதையும் விளக்குகிறது. மட்டுமன்றி இரண்டு வெவ்வேறு கோட்பாடுகளுக்கு இடையிலான முக்கியத்துவம் வாய்ந்த வேறுபாடொன்றையும் இப்பகுதி கவனத்தில் கொள்கிறது. முதலாவது ஆரிய மொழிக் கோட்பாடு. இது இன்று புழக்கத்தில் உள்ள பல ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளைப் பொறுத்தவரை அவை இந்தோ-ஐரோப்பிய அல்லது ஆரிய மொழி எனப்படும் ஒரு பொதுவான மூல மொழியிலிருந்து தோன்றின என்று வாதிடுகிது. இரண்டாவது, ஆரிய இனக் கோட்பாடு. இது, ஐரோப்பியர்களும் இந்தியர்களும் ஒரு பொதுவான மொழி மூலத்தைப் பகிர்ந்துகொள்வது மட்டுமன்றி, ஆரியர் எனும் ஒரு பொதுவான இன அடிப்படையையும் கொண்டவர்கள் என்று வாதிடுகிறது. காலனிய இலங்கைச் சூழலின் அனுபவத்தைப் பொறுத்தவரை மேற்கூறப்பட்டவற்றில் முதல் கோட்பாடு சிங்கள மொழியை பண்டைய ஆரிய மொழியிலிருந்து தோன்றியதாக வாதிடும் அதேவேளை இரண்டாவது கோட்பாடு, சிங்களவர்கள் பண்டைய ஆரிய இனத்திலிருந்து தோன்றிய ஒரு தனித்துவமான இனம் என்றும் வாதிடுகிறது.
ஆரியக் கோட்பாட்டின் இனவாத உள்ளீடுகள் கீழைத்தேய அறிஞர்களிடையே தீவிரமான மற்றும் உணர்ச்சிப்பூர்வமான விவாதங்களுக்கு தொடர்தேச்சையாக உள்ளாகி வந்ததனால் 1880 களில் ஆரியம் தொடர்பிலான கருத்தாடல்கள் கவனம்பெறத் துவங்கின. அதினடியாக இந்தக் கட்டுரையின் மூன்றாவது பகுதி, அக்காலப்பகுதியில் மிக நீண்ட காலமாக வெளிவந்த கீழைத்தேய ஆய்விதழான, அரச ஆசியச் சங்கக் கிளையின் சஞ்சிகையின் (RASCB) பக்கங்களில் ஆரிய இனம் தொடர்பிலான விவாதத்தின் போக்குகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதை விரிவாக ஆராய்கிறது. சொல்லப்போனால் குறித்த சஞ்சிகையும், அதனை வெளியிடட்டு வந்த சங்கமும், ஆரிய மொழிக் கோட்பாடு மற்றும் ஆரிய இனக் கோட்பாடு ஆகிய இரண்டையும் தெளிவாகவே ஆதரித்து வந்தன. ஆரியக் கோட்பாட்டின் பிரகாரம் ஆரிய மொழியியல் அல்லது ஆரிய இன மேன்மைவாதக் கருதத்துத்களுடன் முரண்பட்ட கருத்துக்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டன. உதாரணமாக, சிங்கள மொழி திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது என்று வாதிடும் ஒரு கட்டுரையைக்கூட அந்தச் சஞ்சிகை வெளியிட்டிருக்கவில்லை. 1880 களின் நடுப்பகுதியில் பெரும்பாலும் ஆங்கிலேயர்களாகவும் கிறிஸ்தவர்களாகவும் இருந்த குறித்த சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள், சிங்களவர்களை ஆரிய இனவம்சத்தின் அங்கத்தினர்களாகவே கருதினர். அதன் விளைவாக, அவர்கள் சிங்கள இனத்தை நேர்மறையாகவும் புகழ்ச்சியாகவும் சித்தரிக்கும் கட்டுரைகளையும் வாதங்களையுமே தமது ஆய்வு சஞ்சிகையில் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தனர்.
எட்வர்ட் சயீத் தனது ‘கலாசாரமும் ஏகாதிபத்தியமும் (Culture and Imperialism)’ என்ற நூலில், பத்தொன்பதாம் நூற்றாண்டுக் கால ஐரோப்பிய இலக்கியங்கள் ஐரோப்பியப் பேரரசுகளை ஆதரிக்க எவ்வாறெல்லாம் உதவின என்று எழுதிச் செல்கிறார். பிரிட்டிஷாரை தாம் கைப்பற்றிக் கொண்ட காலனிகளின் சாகசக்காரர்களாகவும் புதையல் தேடுபவர்களாகவும் முன்னிறுத்தியதன் வழியே ஏகாதிபத்திய ஆட்சியை நியாயப்படுத்தவும் வலுப்படுத்தவும் பல்வேறு வழிகளில் குறித்த இலக்கியங்கள் உதவின. இதேபோலவே, ஆரியக் கோட்பாடு வெறுமனே ஏகாதிபத்தியக் கருத்தியல் உற்பத்தி என்பதாக மட்டுமன்றி அது ஏகாதிபத்திய பேரரசுக் கட்டமைப்புக்களுடன் வலுவாக இணைக்கப்பட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காலனித்துவ இலங்கையில் பிரிட்டிஷ் அரசியல் இலக்குகளை பெருமளவில் ஆதரிக்க உதவியன. கட்டுரையின் இறுதிப் பகுதியானது மானுடவியல், வரலாற்றெழுத்தியல், மற்றும் தொல்லியல் ஆகிய கீழைத்தேய ஆய்வுத்துறையின் மூன்று பிரதான பிரிவுகளும் ஆரிய இனமேன்மைக் கோட்பாடு மற்றும் காலனித்துவ அமைப்பு ஆகிய இரண்டுடனும் எவ்வாறு இணைக்கப்பட்டிருந்தன என்பதை ஆராய்கிறது. இதன் மூலம் அறிவுருவாக்கம், அரசியல் அதிகாரம், மற்றும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கான சட்டபூர்வ அங்கீகாரத்தை வழங்குதல் போன்ற தளங்களில் ஆரியக் கோட்பாடு எவ்வாறு பிரதான தர்க்க அடிப்படையாகச் செயல்பட்டது என்பதைக் காட்டுவதையே இக்கட்டுரை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மொழி தொடர்பான ஆரிய வியாக்கியானத்திலிருந்து இனம் தொடர்பிலான ஆரிய வியாக்கியானம் வரை – 1780 தொடக்கம் 1880 வரை.
1780 களில் கல்கத்தாவில் சிவில் நீதிபதியாக பதவியிலிருந்த சேர் வில்லியம் ஜோன்ஸ் (Sir William Jones), ஆரிய மொழிக் கோட்பாட்டின் நிறுவனராகக் கருதப்படுகிறார். 1784ல் வங்காளப் பிரதேசத்தில் இடம்பெற்ற அரச ஆசியச் சங்கத்தின் கூட்டத்தில் அவர், இந்திய, சீன, தாத்தாரிய, அரபு மற்றும் பாரசீக மக்களுக்கு இடையேயான தொடர்புகளைச் சுட்டிக்காட்டி, அவர்கள் அனைவரினதும் பொதுவான ஒரு இன மூலம் தொடபிலான ஒரு முக்கியமான கேள்விக்கு பதிலளிக்க விரும்புவதாகக் குறிப்பிட்டிருந்தார். பல்வேறு இன மக்களின் தோற்ற மூலம் குறித்த இந்த ஆர்வம் பதினெட்டாம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் பொதுவானதாக இருந்தது. அக்காலத்தில் அனைத்து மனிதர்களினதும் மூலம் ஆதாம் என்ற ஒரே மூதாதையரிடமிருந்து தான் துவங்குகிறதா என்பது குறித்த வாதங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்தன. ஒற்றைத் தோற்ற மூலக் கோட்பாட்டை (Monogenesis) ஆதரித்தவர்கள், அனைத்து மனிதர்களுக்கும் ஒரு பொதுவான மூலம் இருப்பதாகவும், சூழமைவு மற்றும் கலாசாரக் காரணிகளாலேயே மக்களிடையே பல்வேறு வேறுபாடுகள் உருவானதாகவும் நம்பினர். பல்வகைத் தோற்ற மூலக்கோட்பாட்டை (Polygenesis) ஆதரித்தவர்கள், வெவ்வேறு மனிதக் குழுக்கள் தனித்தனியாகவே தோன்றி வளர்ந்ததாக நம்பினர். இந்தக் கண்ணோட்டத்தின்படி, வெவ்வேறு நாகரிகங்கள் தனித்தனி தோற்ற மூலங்களைக் கொண்டிருந்ததுடன் அவை விலங்கினங்களைப் போலவே ஒன்றிலிருந்து ஒன்று வேறுபாடுகளையும் கொண்டிருந்தன.
இது தொடர்பான ஆய்வுகளிலிருந்து சேர் வில்லியம் ஜோன்ஸின் ஆய்வுகளை வேறுபடுத்திய அம்சம் யாதெனில், வெவ்வேறு கலாசாரங்கள் ஒரு பொதுவான மூலத்தைப் பகிர்ந்து கொள்கின்றனவா இல்லையா என்பதை ஆராய்வதற்காக அவர் மொழியை ஆய்வு செய்ததுதான். வில்லியம் ஜோன்ஸுக்கு முன்பே பல அறிஞர்கள் ஐரோப்பிய மற்றும் ஆசிய மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை ஆய்வு செய்திருந்தனர். உதாரணமாக, இத்தாலியப் நாடுகாண் பயணியான பிலிப்போ சசெட்டி (Filippo Sassetti) 1587ல் ஐரோப்பிய மற்றும் இந்தியாவைச் சேர்ந்த சில மொழிச் சொற்களுக்கு இடையிலான ஒற்றுமைகளை அவரது ஆய்வுக் குறிப்பில் எழுதியிருந்தார். பின்னர் 1767ல் அறிஞர் பெரே கோர்டூக்ஸ் (Père Coeurdoux), சமஸ்கிருதத்திற்கும் கிரேக்கம் மற்றும் இலத்தீன் போன்ற மொழிகளுக்கும் இடையிலான ஒற்றுமைகளைப் பற்றி எழுதியிருந்தார். இவ்வாறு தனக்கு முன்னர் இடம்பெற்றிருந்த ஆய்வுகள் தொடர்பில் வில்லியம் ஜோன்ஸ் அறிந்திருந்த போதிலும் 1788 ஆம் ஆண்டு அவர் ஆற்றிய உரை மேற்குறித்த ஆய்வுகளை விட்டு வெகுதூரம் சென்லவதாக அமைந்திருந்தது. ஒற்றுமை வேற்றுமைகளைச் சுட்டிக்காட்டி பொதுவான கருத்துக்களைக் கூறுவதற்குப் பதிலாக, ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகளுக்கு இடையேயான ஒரு பொதுவான மூலம் உள்ளது என்பதை நிறுவும் பொருட்டு மொழியியல் கட்டமைப்பு சார் ஒற்றுமைகள் குறித்த ஒரு விரிவானதொரு பகுப்பாய்வை அவர் முன்வைத்ததுடன் மேற்குறித்த மொழிகள் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்றும், அவை அனைத்துமே பொதுவானதொரு மூல மொழியிலிருந்து தோன்றியவை என்றும் அவர் வாதிட்டார். “சமஸ்கிருத மொழியைப் பொறுத்தவரை அது எவ்வளவு பழமையான மொழியாக இருந்த போதிலும் அதன் மொழியியல் கட்டமைப்பைப் பொறுத்தவரை கிரேக்க மொழியை விடச் செம்மையானதாகவும், இலத்தீன் மொழியை விட வளமானதாகவும் உள்ளது. அதே நேரத்தில் சமஸ்கிருத மொழியின் இலக்கண அமைப்பும் வினைச் சொல் கட்டமைப்பும் கிரேக்க மற்றும் லத்தீன் மொழிகளுடன் மிகவும் ஒத்திருப்பதால் இந்த ஒற்றுமைகளைத் தற்செயலாகக் கருத முடியாது. உண்மையில் இந்த மூன்று மொழிகளையும் ஆய்வு செய்யும் எந்தவொரு அறிஞரும் குறித்த மூன்று மொழிகளும் தமக்கான ஒரு பொதுவான மூல மொழியிலிருந்தே வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கே வருவார்” என்றவாறே சேர் வில்லியம் ஜோன்ஸின் ஆய்வு அமைந்திருந்தது.
ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகள் தமக்கான ஒரு பொதுவான மூலத்தைக் கொண்டிருந்தன என்ற கருத்து இப்படியாக இலங்கை அறிஞர்களை வந்தடைந்து படிப்படியாக பொதுக் கருத்தாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. 1821 ஆம் ஆண்டில் முதல் சிங்கள-ஆங்கில அகராதியைத் தொகுத்த பி. சி. கிளாஃப் (B. C. Clough), சிங்கள மொழி சமஸ்கிருதத்திலிருந்து தோன்றியது என்று வாதிட்டதுடன் சிங்கள மொழியானது இந்தோ-ஐரோப்பிய அல்லது ஆரிய மொழி என்று அறியப்பட்ட மூல மொழியின் நேரடி வழித்தோன்றல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ஜேம்ஸ் டி அல்விஸ் (James de Alwis) தனது சிங்கள இலக்கண நூலின் முன்னுரையில் சிங்களத்தை பாளி, சமஸ்கிருதம் மற்றும் ஆரியக் கூறுகளைக் கொண்ட ஒரு மொழி என்று விவரித்திருந்தார். கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில், சேர் எம்மர்சன் டென்னன்ட் (Emmerson Tennent), பாளி மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை சிங்கள மொழியானது கடன் வாங்கியிருந்தாலும், அதன் இலக்கண அமைப்பைப் பொறுத்தவரை தமிழுடன் குறிப்பிட்டளவிலான சில ஒற்றுமைகளைக் காட்டுவதாக வாதிட்டார். இவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து நடுப்பகுதி வரையிலான இந்தக் காலகட்டத்தில், மொழியியல் சார் அறிஞர்கள் ஆரிய மொழிக் கோட்பாட்டைப் படிப்படியாக உருவாக்கிச் செம்மைப்படுத்தி வந்தனர். 1856ஆம் ஆண்டில் அறிஞர் ரொபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell) தனது தென்னிந்திய மொழிகள் குறித்த ஆய்வில் “திராவிட” என்ற சொல்லை முதன்முதலில் பயன்படுத்தி இருந்தார். சிங்களமும் தமிழும் தமக்கிடையே தொடர்புகளைக் கொண்ட மொழிகளல்ல என்று கால்ட்வெல் வாதிட்டார். அவரது கோட்பாட்டினைப் பொறுத்தவரை அது ஒரேநேரத்தில் ஆரியக் கோட்பாட்டிற்கு சவாலாகவும் ஆதரவாகவும் அமைந்திருந்தது. அதாவது கால்ட்வெல்லின் ஆய்வுகள் சிங்களமும் தமிழும் ஒரே மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்துக்குச் சவால் விடுத்த அதேநேரத்தில் சிங்களமானது ஆரிய (இந்தோ-ஐரோப்பிய) மொழி மரபுடன் மிகவும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டுள்ளது என்ற கருத்தையும் வலுப்படுத்தியது.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை, சிங்கள மொழியின் தோற்றத்தைக் கண்டறிவதில் ஒப்பீட்டளவில் பெருமளவிலான விவாதமோ பொது ஆர்வமோ இலங்கைச் சூழமைவில் தோன்றியிருக்கவில்லை. பிற்காலங்களில் அரச ஆசிய சங்கக் கிளைக்கு (RASCB) ஒரு முக்கியமான ஆய்வுத் துறையாக மொழியியல் சார் ஆய்வுகள் மாறியபோதிலும், அச்சங்கம் நிறுவப்பட்டபோது அத கவனம் மொழியியல் பகுதி தொடர்பில் அவ்வளவாக இருக்கவில்லை. 1845 ல் இடம்பெற்ற அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தின் தொடக்க உரையில், இலங்கையின் கடந்தகால மற்றும் தற்காலக் குடிகளின் வரலாறு, மதம், இலக்கியம், கலைகள் மற்றும் சமூக நிலைமைகள் ஆகியவற்றிலும் புவியியல், கனிமவியல், காலநிலை, வானிலையியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் போன்ற பாடங்களிலுமே தாம் கவனம் செலுத்தப்போவதாகவவே கூறியது. அரச ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளைச் சஞ்சிகையின் ஆரம்பகால இதழ்களை அவதானிக்கும்போது மொழிசார் ஆய்வுகளில் அதன் ஆர்வம் அத்துறையில் குறைவாகவே இருந்ததைப் புரிந்து கொள்ள முடியும். மொழியியல் தொடர்பில் அச்சஞ்சிகையில் முதன்முதலாக வெளியாக வணக்கத்திற்குரிய ராபர்ட் ஸ்பென்ஸ் ஹார்டி (Robert Spence Hardy) எழுதிய மொழி பற்றிய கட்டுரை கூட அதன் உள்ளடக்கத்திலும் முடிவுரையிலும் தெளிவற்றதாகவும் குழப்பகரமானதாகவுமே இருந்தது. அவரது கட்டுரையில் “சிங்களம் அதன் ஒட்டுமொத்த சொற்களஞ்சியத்தில் சுமார் பத்தில் ஒன்பது பங்கை சமஸ்கிருத மொழியிலிருந்து பெற்றதாகப் பரவலாக நம்பப்படுவதாக ஹார்டி குறிப்பிட்டார். இருப்பினும், விஜயனும் அவரது ஆதரவாளர்களும் சமஸ்கிருதத்தின் ஒரு வடிவத்தையே இலங்கைக்குக் கொண்டு வந்து வழங்கினர் என்று உறுதியாகச் சொல்லிவிட முடியாது எனவும் அவர் எழுதியிருந்தார். இதனால், சிங்கள மொழியின் தோற்றம் குறித்து அவரே உறுதியற்றவராக இருந்தார் என்றே புரிந்துகொள்ள முடியும்.
சமஸ்கிருதத்திற்கும் சிங்களத்திற்கும் இடையே உள்ள ஒற்றுமைகள் பற்றி நேரடியாக விவாதிக்காமல், சிங்களம் அநேகமாக இலங்கையின் பூர்வக்குடி மொழியிலிருந்து தோன்றியிருக்கலாம் என்று ராபர்ட் ஸ்பென்ஸ் ஹார்டி (Robert Spence Hardy) ஒரு மாறுபட்ட கருத்தை முன்மொழிந்தார். அதே இதழில் பிற்காலங்களில் எழுதியவர்களைப் போலல்லாமல் ஹார்டி, சிங்கள மொழியின் தோற்றம் குறித்து விவாதிப்பதில் முக்கியமாக அக்கறை காட்டவில்லை. மாறாக, அவர் தனது கிறிஸ்தவ சமயப் பிரச்சாரப் பணியிலேயே அதிக கவனத்தைச் செலுத்தினார். சிங்கள மொழி ஒருநாள் கிறிஸ்தவத்தின் மத போதனைகளைப் பரப்புவதற்கான உன்னத நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை அவர் வெளிப்படுத்தினார். ஹார்டியின் கட்டுரையை, அதே இதழில் வெளியான மற்றொரு கட்டுரையுடன் இணைத்து வாசிக்கும்போது அவரது நோக்கம் மேலும் தெளிவாகிறது.
இதுபோலவே சிங்கள மொழி மூலமான கிறிஸ்தவ மதப் பிரச்சார சிந்தனைக்கான தெளிவான உதாரணமாக, ஜே. ஜி. மெக்விகார் (J. G. MacVicar) போன்றோர் சிங்கள மொழியானது ரோமானிய எழுத்துக்களைத் தழுவிக் கொள்ள வேண்டும் என்று தொடர்ச்சியாக எழுதி வந்தமையைக் குறிப்பிட முடியும். ரோமானிய எழுத்துக்களை “கிறிஸ்தவ நாகரிகத்தினதும் அதன் மகத்தான கண்டுபிடிப்புகளினதும் எழுத்துக்கள்” என்று விவரித்த மெக்விகார், கிறிஸ்தவ நாகரிகமும் அறிவும் முன்னேறும்போது ரோமானிய எழுத்துமுறை இயல்பாகவே பரவலடையும் என்று அவர் நம்பினார். தொடர்ந்தும் அவர் பாரம்பரிய சிங்கள எழுத்துமுறைக்குப் பதிலாக ரோமானிய எழுத்துமுறையைப் பயன்படுத்துவதற்கான தனது ஆதரவைக் காட்டும் விதமாக இன்னுமொரு படி மேலே சென்று, கர்த்தரின் ஜெபத்தை ரோமானியமயமாக்கப்பட்ட சிங்கள எழுத்துமுறையில் மெக்விகார் எழுதியிருந்தார்.
மேற்குறித்த இருவரினதும் கருத்துக்களை நோக்கும்போது இச்சஞ்சிகையின் துவக்கக் காலப்பகுதியில், இலங்கையில் உள்ள அறிஞர்களிடையே ஆரிய மொழிக் கோட்பாடு பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை என்பதையே காட்டுகின்றன. சொல்லப்போனால் அதுபற்றி மிகக் குறைந்தளவிலேயே விவாதங்கள் நடைபெற்றன. அதனோடு இணைந்த வகையில் இலங்கையில் பிரித்தானியர் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலிருந்தே, மொழி ஓர் அதிகாரக் கருவியாகக் கருதப்பட்டது என்பதையும் மேற்குறிப்பிட்ட இருவரது கருத்துக்களும் வெளிப்படுத்துகின்றன. பிரித்தானிய ஆட்சியாளர்களும் சமயப் பரப்புரையாளர்களும், தங்கள் செல்வாக்கை அதிகரிக்கவும் அதிகாரத்தை வலுப்படுத்தவும் மொழியைத் தமது பிரதான ஊடகமாக வடிவமைத்துப் பயன்படுத்தி வந்தனர்.
சிங்கள மொழியின் மூலம் தொடர்பான விவாதங்களில் ஒரு முக்கியத் திருப்புமுனை 1861 களில் மெக்ஸ் முல்லர் (Max Müller) ஆரியக் கோட்பாட்டை வலுவாக ஆதரித்து எழுதியபோது ஏற்பட்டது எனலாம். தனது ‘மொழியின் அறிவியல் (Science of Language)’ என்ற நூலில், ஐஸ்லாந்து மற்றும் சிலோன் (இலங்கை) போன்ற தொலைதூர இடங்களில் பேசப்படும் மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த தொடர்புடைய வட்டார மொழிகள் என்று அவர் குறிப்பிட்டார். 1866 களில் ஜேம்ஸ் டி அல்விஸ் சிங்கள மொழி குறித்த தனது முந்தைய கருத்துக்களை மாற்றிக்கொண்டதை அவதானிக்க முடியும். குணவர்தனவின் கூற்றுப்படி, அக்காலத்தில் மாறிவந்த புதிய அறிவுசார் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெளிவந்த ஒரு கட்டுரையில் டி அல்விஸ், ரொபர்ட் கால்ட்வெல் (Robert Caldwell) மற்றும் மாக்ஸ் முல்லர் (Max Müller) ஆகிய இருவரின் கருத்துக்களையும் பயன்படுத்தி, சிங்களம் தெளிவாகவே ஆரிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றும், தமிழ் திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது என்றும் வாதிட்டார். 1870 மற்றும் 1880 களில், சிங்களத்திற்கும் தமிழுக்கும் இடையிலான இந்த வேறுபாடு மிகுந்த முக்கியத்துவம் பெறத் துவங்கியதுடன் மொழிப் பிரிவினை படிப்படியாக இனப் பிரிவினைக் பற்றிய கருத்துக்களுடன் இணைக்கப்பட்டது.
1808 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் ஐரோப்பிய மற்றும் இந்திய மொழிகள் ஆகியன தமக்கானவொரு பொதுவான மூலத்தைக் கொண்டுள்ளன என்று சேர் வில்லியம் ஜோன்ஸ் முன்மொழிந்து கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு ஜெர்மனிய தத்துவஞானியான ஃபிரெட்ரிக் ஷ்லேகல் (Friedrich Schlegel) , ஆரியக் கோட்பாட்டில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்தினார். மொழிகள் தமக்கிடையே ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனின் நிச்சயம் அந்த மொழிகளைப் பேசும் மக்களிடையேயும் ஒரு தொடர்பு இருந்தாக வேண்டும் என்று ஷ்லேகல் வாதிட்டார். வேறு வார்த்தைகளில் கூறுவதாயின் ஆரியக் கோட்பாட்டை மொழிகளுக்கு இடையிலான ஒன்று என்ற தளத்தில் இருந்து இனங்களுக்கு இடையிலான ஒன்று என்ற தளத்திற்கு விருத்தி செய்தார் எனலாம். இந்தியர்களின் மொழி மற்றும் அறிவியல் தொடர்பான தனது நூலில் ஃபிரெட்ரிக் ஷ்லேகல் (Friedrich Schlegel), இந்தியா ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளுக்கு நாகரிகத்தைக் கற்பித்த மாபெரும் நாகரிகங்களையும் பேரரசுகளையும் நிறுவியதாக ஷ்லேகல் குறிப்பிட்டார். இந்த வாதத்தை முன்வைத்ததன் வழியே வில்லியம் ஜோன்ஸின் மொழியியல் கோட்பாட்டை பரந்தளவிலான கலாசார மற்றும் இன மேன்மைக்கான கோட்பாடாக மாற்றியமைத்த ஷ்லேகல், ஐரோப்பியர்களும் இந்தியர்களும் ஒரு பொதுவான மொழிப் பாரம்பரியத்தை மட்டுமன்றி ஒரு பொதுவான கலாசார மற்றும் இனத் தொடர்பினையும் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஃபிரெட்ரிக் ஷ்லெகல் (Friedrich Schlegel), ஆரிய இனம் என்ற கருத்தை முன்மொழிந்தபோதிலும், மெக்ஸ் முல்லர் (Max mullar) மொழியையும் இனத்தையும் இணைத்து எழுதத் தொடங்கும் வரை அது இலங்கை அறிஞர்களிடையே பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை. 1870 களில் தனது எழுத்துக்களில் மெக்ஸ் முல்லர் “ஆரிய இனம்” என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தியதுடன் நமது இனத்தின் தாயகத்தைத் தேடுவது குறித்தும் எழுதினார். முல்லரைப் பொறுத்தவரை மொழியும் இனமும் ஒரே தோற்ற மூலத்தைக் கொண்ட விடயமாகவே இருந்தது. முல்லரின் மேற்குறித்த ஆய்வானது ஆரியக் கோட்பாட்டை, மொழிகளின் தோற்றம் பற்றிய ஒரு கோட்பாட்டிலிருந்து இனங்களின் தோற்றம் பற்றிய ஒரு கோட்பாடாக மாற்றுவற்கு பெருமளவில் உதவியது. மட்டுமன்றி முல்லரின் மேற்குறித்த முன்வைப்புக்கள், இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இனவியல் சார் அடிப்படைகளை ஏற்படுத்திக் கொள்வதற்கான அடித்தளத்தையும் வழங்கின. விளைவாக, மொழியியல்சார் உறவுகள் பற்றிய சேர் வில்லியம் ஜோன்ஸின் கருத்துக்கள் முல்லர் மற்றும் ஏனைய பிற பிரிட்டிஷ் மற்றும் ஜெர்மானிய அறிஞர்களின் செல்வாக்கின் மூலம் இனரீதியான பிரிவினைகளை உள்ளீடுகளாகக் கொண்ட பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டதொரு கோட்பாடாக படிப்படியாக மாற்றப்பட்டது. இத்தகையக் கருத்துக்களைப் பரப்புவதில் அவர் ஆற்றிய பங்கின் காரணமாக வரலாற்றாசிரியர் ஆர். ஏ. எல். எச். குணவர்தன, மெக்ஸ் முல்லரை ஆரிய இனக் கோட்பாட்டின் “மிகத் திறமையான பிரச்சாரகர்” என்று வர்ணித்தார். முல்லர் கீழைநாட்டு மொழிகளில் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு அறிஞராக இருந்ததுடன் அவர் பெற்றிருந்த புகழ் அவரது கருத்துக்களுக்கு பெருமளவிலான அதிகாரத்தையும் அளித்தது. 1872 களில் தனது இனவாதக் கூற்றுகளில் சிலவற்றைத் திரும்பப் பெறவோ அல்லது மாற்றியமைக்கவோ முல்லர் முயன்றபோதிலும், அவரது முயற்சிகள் பெருமளவில் பலனளிக்கவில்லை. அதற்குள், அந்தக் கோட்பாடு தனக்கென ஒரு செல்வாக்கைப் பெற்றிருந்தது. மட்டுமன்றி மெக்ஸ் முல்லரே தனது பிற்கால எழுத்துக்கள் பலவற்றில் “ஆரிய இனம்” என்ற சொல்லைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தார். இது அந்தக் கருத்தை தொடர்ந்தும் உயிர்ப்புடன் வைத்திருக்கவே உதவியது.
ஆனால் ஃபிரெட்ரிக் ஷ்லெகலின் (Friedrich Schlegel) கருத்துக்களை ஏற்றுக்கொண்ட ஒரேயோருவராக மாக்ஸ் முல்லர் (Max Mullar) மாத்திரம் இருக்கவில்லை. 1860ஆம் ஆண்டளவில், ஆரியர்களுக்கும் செமித்தியர்களுக்கும் இடையில் பல்வேறு வேறுபாடுகள் காணப்படுவதாக ஐரோப்பிய புலமைத்துவ வட்டாரங்களில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தது. சொல்லப்போனால் அது படித்த ஐரோப்பியர்களின் பொதுவான சிந்தனையின் ஒரு பகுதியாகவே மாறியிருந்தது எனலாம். பரவலாகக் காணப்பட்ட இத்தகையப் புரிதலின் காரணமாக சார்லஸ் டார்வின், ‘The Descent of Man’ (1871) என்ற தனது நூலில், ஆரியர்களையும் செமித்தியர்களையும் தனித்தனி இனங்களாகக் குறிப்பிட்டதோடு லண்டன் மானுடவியல் சங்கமும் அந்த வேறுபாட்டை ஏற்றுக்கொண்டது. இதன் நீட்சியாக ஆரிய மொழிக்குடும்பம் படிப்படியாக ஆரிய இனக் குடும்பம் என்ற கருத்தாக நிலைமாற்றம் கண்டது. மொழி தொடர்பானதொரு கோட்பாடாகத் தோற்றம் பெற்ற ஒன்று, இனத்தைப் பற்றிய ஒரு கோட்பாடாக மாறியதுடன் ஆரியர்கள், பலம்வாய்ந்த உடல் பண்புகளைக் கொண்ட ஒரு தனித்துவமான இனமாக விவரிக்கப்படத் துவங்கினர்.
ரோயல் ஆசியச் சங்கக் கிளை: ஆரிய இனக் கோட்பாட்டின் குரல்.
பல்வேறு காரணங்களுக்காக, நான் எனது கவனத்தின் பெரும்பகுதியை ரோயல் ஆசியச் சங்கக் கிளை மற்றும் அக்காலகட்டத்தில் அதனால் வெளியிடப்பட்ட சஞ்சிகையின் மீது குவிக்கத் தேர்ந்தெடுத்துள்ளேன். முதலாவதாக, தங்களை ஓரியண்டலிஸ்ட் என்று கூறிக்கொண்ட ஏனைய சஞ்சிகைகள் எப்போதாவது மட்டுமே வெளிவந்த நிலையில், 1845 முதல் இன்று வரை கிட்டத்தட்ட தடையின்றித் தொடர்ந்த ஒரேயொரு அறிவார்ந்த வெளியீடு இந்த சஞ்சிகை மட்டுமே. மற்ற சஞ்சிகைகளை விட இதற்கு மிகப் பெரிய வாசகர் வட்டம் இருந்ததால், அறிஞர்கள் இந்த சஞ்சிகையில் தமது ஆக்கங்களை வெளியிடத் தேர்ந்தெடுத்தனர். இரண்டாவதாக, ரோயல் ஆசியச் சங்கக் கிளை வெறுமனே ஒரு சஞ்சிகையை வெளியிடுவதையும் தாண்டி பல அறிவார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தது. அது 1884 ல் ஒரு தொல்பொருள் ஆய்வு நிதியத்தை நிறுவியதுடன் அதனை பின்னர் 1890ல் தொல்பொருள் திணைக்களமாக மாற்றியது. அத்தோடு 1877ல் ஒரு அருங்காட்சியகத்தைத் திறக்கவும் உதவியதுடன் அது இன்றும் கொழும்பு அருங்காட்சியகமாக உள்ளது. இத்தகைய காரணங்களினால் பிரிட்டிஷ் அறிஞர்கள் இலங்கையை எவ்வாறு புரிந்துகொண்டனர் என்பதைப் பற்றி ஆய்வுகளை நிகழ்த்த ரோயல் ஆசியச் சங்கக் கிளை மிகப் பொருத்தமான தேர்வாகும். மூன்றாவதாக, ரோயல் ஆசியச் சங்கக் கிளையானது பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கால இலங்கையின் அறிவுசார் மற்றும் அறிவார்ந்த செயல்பாடுகளின் முன்னணி மையமாக அது விளங்கியதால் “அறிவாளிகளின் மன்றம்” எனறழைக்கப்பட்டது. பாரம்பரியமாக ஆளுனர் குறித்த சங்கத்தின் புரவலராகப் பணியாற்றி வந்தமையமானது என்ற அதன் முக்கியத்துவத்தை மேலும் பிரதிபலித்தது. உண்மையில், இது அரசாங்க மட்டத்திலான ஆய்வு நடவடிக்கைகளுக்கும் சுதந்திரமான புலமைத்துவ ஈடுபாட்டிற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்திருக்கலாம் என்றாலும் (இத்தகைய தலைப்பு பின்னர் நான்காம் பிரிவில் விவாதிக்கப்படும்), இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கால புலமைத்துவ மரபை புரிந்துகொள்ள முயலும் எவருக்கும் அது ஒரு இன்றியமையாத ஆதாரமாகத் திகழ்கிறது.
எவ்வாறாயினும் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளையும், அவை விவாதிக்கப்பட்ட கூட்டத் தொடர் பதிவுகளையும் வாசித்துப் பார்க்கும்போது மொழி அல்லது இனம் தொடர்பான ஆரியக் கோட்பாடு குறித்த உரையாடல்கள் தொடர்பில் ரோயல் ஆசியச் சங்கத்தின் இலங்கைக் கிளை (RASCB) நடுநிலை வகித்திருக்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த இதழின் தொகுதிகளில் ஒன்றில் (தொகுதி IX, 1885–1886), இலங்கையின் மொழி, இனம் மற்றும் கலாசாரம் தொடர்பாக வெளியான அனைத்துக் கட்டுரைகளுமே சிங்களர்கள் மொழிரீதியாகவும் இனரீதியாகவும் ஆரியர்கள் எனவும் தமிழர்கள் திராவிடர்கள் என்றும் சிங்கள/ஆரிய இனம், தமிழ்/திராவிட இனத்தை விட இனரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் உயர்ந்தவர்கள் என்றும் தொடர்ச்சியாக வாதிட்டு வந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கால ஐரோப்பியச் சூழமைவில் நிலவிய இன மற்றும் மானுடவியல் தொடர்பான பொதுமையான கருத்துக்களாக அவை இருந்தாலும் அவற்றை வெறுமனே அக்காலத்தின் விளைவுகள் என்று ஒதுக்கிவிட முடியாது. இத்தகையக் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அவற்றுக்கு எதிரான விமர்சனங்களை விட்டும் அவை பாதுகாக்கப்பட்டு வந்த விதங்களை அவதானிக்கும் போது குறித்த எழுத்தாளர்கள் பலரும் ஆரியக் கோட்பாட்டுருவாக்கம் தொடர்பாக தனிப்பட்ட முறையில் அக்கறை கொண்டிருந்ததையே அது எடுத்துக்காட்டுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு இலங்கையில் பிரிட்டிஷ் புலமை மரபு தொடர்பில் ஆய்வு செய்த நிரா விக்ரமசிங்க (Nira Wickramasinghe), வளர்ந்து வரும் மானுடவியல் துறையானது இனரீதியான சிந்திப்பு முறைகளை ஊக்குவிப்பதிலும் அவற்றை வலுவாக ஆதரிப்பதிலும் முக்கிய பங்காற்றி வருவதாகச் சுட்டிக்காட்டியிருந்தார். வேறுவார்த்தைகளில் கூறினால், மானுடவியல் துறையானது வெறுமனே ஒரு கல்வித் துறை என்பதற்கும் அப்பால் காலனித்துவக் காலப்பகுதியில் இன வேறுபாடுகள் மற்றும் இனப் படிநிலைகள் குறித்த கருத்துக்களை உருவாக்கி நியாயப்படுத்தவும், அவற்றை இயல்பாக்கம் செய்வதற்குமான கோட்பாட்டு அடிப்படைகளை இட்டது எனலாம். இதனையே நிரா விக்ரமசிங்க (Nira Wickramasinghe), “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், மானுடவியல் மற்றும் மொழியியலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், தமிழர்கள் மற்றும் சிங்களவர்களை அவர்களின் மொழிகளால் மட்டுமல்லாமல், ஒவ்வொரு குழுவிற்கும் தனித்துவமானவை என்று நம்பப்பட்ட உடற்கூறுகளின் அடிப்படையிலும் வகைப்படுத்த அறிஞர்களை வழிநடத்தின” எனக் குறிப்பிடுகிறார்.
சஞ்சிகையில் 1885–1886ம் ஆண்டுக் காலப்பகுதியில் வெளியிடப்பட்ட இரண்டு கட்டுரைகள் இந்தக் கருத்தை வலுவாக ஆதரிப்பதனைக் கண்டுகொள்ள முடியும். புதிதாக வளர்ந்து வந்த மானுடவியல் துறையின் முக்கியத்துவத்தையும், அந்தப் புதிய “அறிவியல்” நடுநிலையாக இருப்பதற்குப் பதிலாக, குறிப்பிட்ட அரசியல் மற்றும் இனவாதக் கருத்தாக்கங்களையும் ஆதரிக்கப் பயன்படுத்தப்பட்ட விதங்களையும் குறித்த இரு கட்டுரைகளும் தெளிவாகவே எடுத்துக்காட்டுகின்றன.
வைததியர்களான சி. எஃப். மற்றும் பி. பி. சரசின் (C. F. and P. B. Sarasin) ஆகியோரால் எழுதப்பட்ட முதல் கட்டுரை, சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் வேடர்களுக்கு இடையேயான உடற்கூற்றியல் வேறுபாடுகளை வைத்து அவர்களைத் தனித்தனி இனங்களாக வகைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தது. அக்காலத்தைய அறிவியல் அளவீட்டு முறைமைகளைப் பயன்படுத்தி அம்மக்களுக்கு இடையேயான உடற்கூற்றியல் வேறுபாடுகளைக் கண்டறிவதற்கான சிறந்த வழியாக அதிக எண்ணிக்கையிலான மண்டையோடுகளைச் சேகரித்து, ஒவ்வொரு குழுவிலிருந்தும் பல தனிநபர்களிடமிருந்து அளவீடுகளை எடுத்து, சராசரிகளைக் கணக்கிடுவதே என்று அவர்கள் வாதிட்டனர். அதன்படி, சிங்களவர்கள் மிகப்பெரிய மண்டையோடுகளைக் கொண்டிருந்ததாகவும் அது தமிழர்களை விடவும் உயர்ந்த அறிவுத்திறனை சிங்களவர்கள் கொண்டிருப்பதற்கான சான்றாகவும் உள்ளதாக அவர்கள் தொடர்ந்தும் எழுதிச் சென்றனர். தொடர்ந்தும் முகத்தின் நீளத்தை (மூக்கிலிருந்து தாடை வரை) அளந்த அவர்களின் ஆய்வு முடிவுகளாக வேடர்கள் 105 மி.மீ, தமிழர்கள்111 மி.மீ, சிங்களவர்கள் 115 மி.மீ என்பவை பெறப்பட்டன. இந்த வேறுபாடுகளைக் கொண்டு ஒவ்வொரு இனக்குழுவிற்கும் ஒரு தனித்துவமான முகத் தோற்றவமைப்பு இருப்பதாக அவர்கள் வாதிட்டனர். அதுமட்டுமன்றி தமது முடிவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக மூக்கின் நீள அளவீடுகளையும் அவர்கள் பயன்படுத்தினர். வேடர் ஒருவரின் மூக்கு 40 மி.மீ ஆகவும் சிங்களவரின் மூக்கு 39 மி.மீ நீளமுடையதாகவும் தமிழரின் மூக்கு 38 மி.மீ ஆகவுமுள்ளதாக கண்டடைந்த அவர்கள், இந்த அளவீடுகளின் பிரகாரம் சிங்களவர்கள் மிகவும் விரும்பத்தக்க இங்கிதமான பண்புகளைக் கொண்டிருப்பதாக நிறுவினர். பத்தொன்பதாம் நூற்றாண்டின் மானுடவியலைப் பொறுத்தவரை அது இன வேறுபாடுகள் மற்றும் இனமேன்மைவாத கருத்தாக்கங்களை முன்வைப்பதற்காக உடல் அளவீடுகளை எவ்வாறு பயன்படுத்தியது என்பதை இந்தப் பத்தி விளக்குகிறது. ஆனால் உண்மையில் இத்தகைய கூற்றுகள் நவீன அறிவியலால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கவில்லை.
இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறைமைகள் இன்றைய தரநிலைகளின்படி அறிவியல் பூர்வமானவையல்ல என்றாலும், சி. எஃப். மற்றும் பி. பி. சரசின் (C. F. and P. B. Sarasin) ஆகியோரால் எழுதப்பட்ட மேற்குறித்த கட்டுரையின் முக்கியத்துவம் அதன் ஒருதலைப்பட்சமான தன்மையிலேயே அதிகம் அடங்கியுள்ளது எனலாம். உதாரணமாக, இனக்குழுக்களுக்கு இடையேயான மூக்கு அளவீடுகளைப் பொறுத்தவரை அவர்களது மூக்கு ஓரளவு பெரியதாக உள்ளதாக தரவுகள் காட்டியபோதிலும் அவர்கள் இருவரும் சிங்கள மூக்கை “வெறும்” 39 மி.மீ. என்று விவரித்து அதனைச் சிறியது போலச் சித்தரித்தனர். அதுமட்டுமன்றி சிங்களவர்களின் மூக்குகளின் நீளம் பெரியதாக இருந்தபோதிலும் அவற்றை மிகவும் கவர்ச்சிகரமானவையாகக் காட்டுவதற்காக, அவை “நன்கு வடிவமைக்கப்பட்ட கழுகுகளின் மூக்குகளை ஒத்த வடிவமுடையவை” என்று கூறி நேர்மறையான வர்ணனைகளையும் சேர்த்தனர். இந்த இதழில் வெளியிடப்பட்ட பல மானுடவியல் சார்ந்த ஆய்வுகளைப் போலவே, இந்தக் கட்டுரையும் சிங்களவர்களுக்குச் சாதகமான வழிகளில் தனது தரவுகளை விவரித்துச் சென்றது. பெறப்பட்ட சான்றுகள் கூட நடுநிலையாகக் கையாளப்படாமல் சிங்கள இனத்தின் நேர்மறையான பிம்பத்தை கட்டமைக்கவே அவை பெரிதும் பயன்படுத்தப்பட்டன.
அதே சஞ்சிகையில் வெளியிடப்பட்ட இரண்டாவது கட்டுரையும் அதன் உள்ளடக்கக் காரணத்திற்காக வேண்டி கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும். அக்கட்டுரையில் ஜெர்மானிய மானுடவியலாளரான பேராசிரியர் ருடால்ஃப் விர்ச்சோ (Professor Rudolf Virchow), கொழும்பு அருங்காட்சியகத்தால் அவரது ஆய்வு நடவடிக்கைகளுக்காக வேண்டி வழங்கப்பட்ட ஆறு மண்டையோடுகளை ஆய்வு செய்த போது, சிங்களவர்களின் முக வடிவமைப்பு இந்தியத் துணைக்கண்டத்தின் ஆரியர்கள் வாழ்ந்த பகுதிகளில் இருந்து பெறப்பட்ட மண்டையோடுகளோடு அவை பொருந்திப் போவதாகக் குறிப்பிட்டார். இந்த வாதமோ அதற்காக அவர் பயன்படுத்திய ஆய்வு முறைகளோ புதியதொன்று இல்லை என்றாலும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால் ரோயல் ஆசியச் சங்கத்தின் இலங்கைக் கிளை (Royal Asiatic Society of Ceylon), அந்தக் கட்டுரையை ஜெர்மானிய மொழியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் அளவுக்கு முக்கியமானதாகக் கருதியது. பேராசிரியர் ருடால்ஃப் விர்ச்சோவினுடையை (Professor Rudolf Virchow) குறித்த ஆய்வுக் கட்டுரை, பெர்லினில் உள்ள அரசறிவியல் கழகத்திலேயே முதன்முதலில் சமர்ப்பித்ததாக நம்பப்படுகிறது. உண்மையில் சிங்கள மக்களை ஆரிய இனத்தவர் என்ற கருத்தை ஆதரிக்கும் ஆய்வுகளை ஊக்குவிப்பதில் ரோயல் ஆசியச் சங்கத்திற்கு இருந்த ஆர்வத்தையே இது காட்டுகிறது. குறிப்பாக ரோயல் ஆசியச் சங்கத்தின் இலங்கைக் கிளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடத் தேர்வுசெய்த பேராசிரியர் விர்ச்சோவின் இரண்டாவது கட்டுரை இதுவாகும். அவருடைய முந்தைய கட்டுரையும் இலங்கையில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோலவே, சிங்களம் ஒரு திராவிட மொழி என்று வாதிடும் கட்டுரைகளை ரோயல் ஆசியச் சங்கம் ஒருபோதும் மொழிபெயர்க்கவோ அல்லது வெளியிடவோ இல்லை என்பது கவனத்தைப் பெற வேண்டிய அம்சமாகும். ராஸ்மஸ் ராஸ்க் (Rask, 1821), லாசென் (Lassen) மற்றும் முல்லர் (F. Muller,1879) போன்ற அறிஞர்களால் முன்வைக்கப்பட்ட திராவிடக் கோட்பாடுகளை பேராசிரியர் விர்ச்சோவே பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட போதிலும் சிங்களத்தை திராவிட மொழிக்குடும்பம் என விளக்கும் எதனையும் ரோயல் ஆசியச் சங்கம் வேண்டுமென்றே தவிர்த்து வந்தது. சிங்களத்தை திராவிட மொழிக்குடும்பம் என்பதை ஆதரிக்கும் ஆய்வுகளைப் புறக்கணித்தும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டும் சிங்களவர்களின் ஆரியத் தோற்றத்தை ஆதரிக்கும் ஆய்வுகளை சங்கம் தேர்ந்தெடுத்து ஊக்குவித்ததாகவே இதிலிருந்து தெரிகிறது.
இந்த இரண்டு கட்டுரைகளும் 1885 களில் ரோயல் ஆசியச் சங்கம் ஏன் சிங்கள இனத்தை வெளிப்படையாகவே ஆதரிக்கும் கட்டுரைகளை வெளியிட்டது என்ற ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகின்றன. டாக்டர்களான சி. எஃப். மற்றும் பி. பி. சரசின் (C. F. and P. B. Sarasin) பேராசிரியர் விர்ச்சோவும் (Professor Rudolf Virchow) ஆகியோர் ஏன் இந்த வாதங்களை முன்வைத்தார்கள் என்ற கேள்வியை விடவும் திராவிட மொழிக் குடும்பம் பற்றிய ஏனைய கட்டுரைகளை வெளியிடாமல், ரோயல் ஆசியச் சங்கம் ஏன் இந்தக் கட்டுரைகளை மாத்திரம் வெளியிடத் தேர்ந்தெடுத்தது என்பதே மிக முக்கியமான கேள்வியாகும். இதற்கான பதிலாக பிஷப் கோப்லஸ்டனாக (Bishop Copleston) இருக்க முடியும். 1884 முதல் 1892 வரை ரோயல் ஆசியச் சங்கத்தின் தலைவராக இருந்த அவர், குறித்த இதழில் வெளியிடப்பட்ட ஆக்கங்கள் பலவற்றில் செல்வாக்கு செலுத்தியிருக்கக் கூடும். அவர் 1876 முதல் 1902 வரை கொழும்பின் பிஷப்பாகவும் இருந்த வேளை பௌத்த மதத்திற்கு எதிரான தனது வலுவான எதிர்ப்பிற்காக நன்கறியப்பட்ட ஒருவராக இருந்தார். கிறிஸ்தவர்கள் பௌத்த மதத்தைப் புகழவோ அல்லது பௌத்தத்தினை கிறிஸ்தவ மதத்திற்கு ஒத்ததாகக் கருதவோ கூடாது என்று கோப்லஸ்டன் தொடர்ந்தும் எச்சரித்து வந்தார். பௌத்த மதம் கிறிஸ்தவ மதத்திலிருந்து அடிப்படைகளில் இருந்த வேறுபட்டது எனவும் இரு மதங்களையும் ஒரே மாதிரியாகக் காட்ட முயன்ற போலியான தாராளவாத முயற்சிகளை கடுமையாக எதிர்த்தார். இதன் காரணமாக, கோப்லஸ்டனால் பௌத்த மதத்தை கிறிஸ்தவக் கட்டமைப்பிற்கு வெளியேயுள்ள தனக்கென சுதந்திரமான மதிப்பீடுகளைக் கொண்ட ஒரு சுயாதீன மதமாகப் பார்க்க முடியவில்லை.
பிஷப் கோப்லஸ்டனின் பௌத்தம் குறித்த கடுமையான கருத்துக்கள், அவர் ரோயல் ஆசியச் சங்கத்தின் தலைவராக இருந்த காலப்பகுதியில் ஏன் சிங்களவர்களை ஆதரிப்பது போல் சங்கம் செயற்பட்டது என்பதை முழுமையாக விளக்க போதுமானதாக இல்லையென்றாலும், தனது சொந்த ஐரோப்பிய மற்றும் கிறிஸ்தவப் பின்னணிக்கு வெளியேயுள்ள ஒரு கலாசாரத்தைப் பாராட்டுவதும் ஏற்றுக்கொள்வதும் அவருக்குக் கடினமாக இருந்தது என்பதையே அவை காட்டுகின்றன. இந்த முரண்பாட்டைப் புரிந்துகொள்ள அக்காலத்தில் பல அறிஞர்கள் சிங்களவர்களும் ஆரியர்களும் ஒரே இனக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று நம்பினர் என்பதை மனதில் கொள்வது அவசியம். பிஷப் கோப்லஸ்டனும் சங்கத்தில் இருந்த மற்றவர்களும் சிங்களவர்களை ஆரிய இனத்தவர்களின் நீட்சியாகக் கருதினர். இதனாலேயே அவர்கள் சிங்களக் கலாச்சாரத்தை புகழ்ந்த போதெல்லாம் தங்களின் சொந்த ஆரியப் பாரம்பரியத்துடன் தொடர்புடைய ஒரு கலாச்சாரத்தைப் புகழ்வதாக உணர்ந்தனர். 1885 ஆம் ஆண்டின் சங்கத்தின் கூட்டப் பதிவுகளை ஆராயும் போது அதன் சில உறுப்பினர்கள் சிங்களவர்களுடன் எவ்வளவு வலுவாகத் தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு, அவர்களை ஒரு பரந்த ஆரியக் குடும்பத்தின் பகுதியாகக் கருதினர் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
1885 செப்டம்பர் 22 அன்று, ரோயல் ஆசியச் சங்க இலங்கைக் கிளையின் (RASCB) பொதுக் கூட்டத்தில் கண்டியின் அப்போதைய உதவி அரசாங்க முகவரா இருந்த எஸ். எம். பர்ரோஸ் (S. M. Burrows) , “ஒரு வன நாட்குறிப்பின் சில பக்கங்கள்” என்ற பெயரில் ஒரு அநாமதேய கையெழுத்துப் பிரதியைச் சமர்ப்பித்திருந்தார். அனுராதபுரத்தில் உள்ள தொல்பொருள் எச்சங்கள், தமிழ்க் கலைஞர்களால் உருவாக்கப்பட்டவை என்று அந்தக் கையெழுத்துப் பிரதிவாதிட்டது. சங்கத்தின் தலைவர் பிஷப் கோப்லஸ்டன் இந்தக் கருத்துடன் உடன்படமாட்டார் என்பது தனக்குத் தெரியும் என்றும் பர்ரோஸ் குறிப்பிட்டிருந்தார். பர்ரோஸின் கூற்றுப்படி, அனுராதபுரத்தின் இடிபாடுகளுக்கும் மெட்ராஸில் (தென்னிந்தியா) காணப்படும் இடிபாடுகளுக்கும் இடையே உள்ள வலுவான ஒற்றுமைகளை அவதானிக்கும் போது அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவ போன்ற பண்டைய நகரங்கள் பெரும்பாலும் தென்னிந்தியக் கோயில்கள் மற்றும் நினைவுச்சின்னங்களை முன்மாதிரியாகக் கொண்டே உருவாக்கப்பட்டன என்பதைக் காட்டுவதாக அந்தக் கையெழுத்துப் பிரதியை ஆதாரமாகக் காட்டி குறிப்பிட்டிருந்தார். ஒரு அநாமதேய எழுத்தாளரின் எழுத்துக்களாக அவை இருந்தமையினால் இந்த வாதங்களை வலுவாக எதிர்க்கப்பட்டன. அந்த வாதத்தைத் தொடங்கிய பர்ரோஸ் “நிச்சயமாக இந்த அழகான மற்றும் நுட்பமான கலைப்படைப்புகள் படைப்பாற்றல் மிக்க ஆரிய இனத்தால் உருவாக்கப்பட்டவை என்றும், அவை இலங்கையின் ஆரிய வம்சக் குடிகளான சிங்களவர்களின் நகரங்களிலிருந்தே தென்னிந்தியாவின் திராவிடப் பகுதிகளுக்குப் பரவின என்றும் நம்பவே மக்கள் விரும்புவார்கள். அனுராதபுரத்தின் கலைச் சாதனைகள் தமிழ் அல்லது தென்னிந்திய மூலங்களிலிருந்து வந்திருக்கலாம் என்ற கருத்தை விடவும், அவை ஆரிய இனமான சிங்களவர்களிடமிருந்து தோன்றியதன் பின்னரே தென்னிந்தியாவை அடைந்தன என்று நம்பவே பலர் விரும்புவார்கள்” என பர்ரோஸ் குறிப்பிட்டார். பர்ரோஸின் இந்தக் கூற்று, அக்காலத்தில் அறிஞர்களிடையே இயல்பாக்கமடைந்திருந்த ஆரிய – திராவிட மனப்பதிவுகளையே பிரதிபலிக்கிறது.
அதனைத் தொடர்ந்து நடந்த விவாதத்தின் போது, சில உறுப்பினர்கள் பர்ரோஸை விடவும் வலுவான கருத்துக்களைக் கொண்டிருந்ததனை அவதானிக்க முடிகிறது. கல் (Cull) என்பவர் பர்ரோஸின் அந்த வாதத்தைக் கேள்விக்குள்ளாக்கிய வேளையில் பிஷப் கோப்லஸ்டன், யாரோ ஒருவர் பர்ரோஸின் கருத்திற்கு ஆட்சேபனை தெரிவித்ததில் தனக்கு மகிழ்ச்சி என்று கூறியதுடன் சங்கத்தின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அத்தகைய ஒரு மாபெரும் சாதனைக்கான பெருமை அவர்களிடமிருந்து பறிக்கப்படக் கூடாது எனவும் அவர் கூறியிருந்தார். பின்னர் கோப்லஸ்டன், தென்னிந்திய மற்றும் இலங்கை கட்டிடக்கலைக்கு இடையிலான ஒற்றுமைகளுக்கு மற்றொரு புதிய விளக்கத்தை சபையில் அளிக்க முன்வந்தார். தென்னிந்திய மற்றும் இலங்கைக் கட்டிடக்கலை மரபுகள் இரண்டுமே வட இந்திய அதாவது ஆரிய கட்டிடக்கலை மரபிலிருந்துதான் வந்தன என்று அவர் வாதிட்டார். எவ்வாறாயினும் இறுதியில், ‘ஒரு வன நாட்குறிப்பின் சில பக்கங்கள்’ எனும் கையெழுத்துப் பிரதியில் உள்ள வாதங்கள் சிலவேளை சரியாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்ட போதிலும், இலங்கையின் கட்டிடக்கலை அம்சங்கள் அனைத்தும் அடிப்படையில் ஆரிய வம்சாவளியைச் சேர்ந்தவை என்பதை அவர் தொடர்ந்தும் வலியுறுத்தியிருந்தார்.
ஆனால் சர்ச்சை அத்துடன் முடிந்துவிடவில்லை. மூன்று மாதங்களுக்குப் பிறகு சங்கத்தின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில், ‘ ஒரு வன நாட்குறிப்பின் சில பக்கங்கள்’ தொடர்பாக மீண்டும் விவாதிக்கப்பட்டது. இலங்கையின் கலை மற்றும் நாகரிகத்தின் தோற்றம் குறித்த கருத்துக்களை முன்வைத்து, பர்ரோஸ் ஏற்கனவே பொதுவாக ஏற்கப்பட்டிருந்த பார்வைகளுக்கு சவால் விடுத்ததாக கூட்ட அறிக்கை குறிப்பிட்டது. அதுமட்டுமன்றி இலங்கையிலுள்ள இந்தச் சாதனைகள் உண்மையில் திராவிடத் தோற்ற மூலத்தைக் கொண்டவையாக இருக்கலாம் என்று அவர் சுட்டிக்காட்டியதன் மூலம், சில உறுப்பினர்களின் “ஆரிய உணர்வுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார்” என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையின் பண்டைய நகரங்கள் தமிழ் கலைஞர்களாலேயே கட்டப்பட்டன என்று கூறும் ஒரு கட்டுரையைப் படித்ததன் மூலமாக பர்ரோஸ் மிகவும் உணர்ச்சிபூர்வமான ஒரு பிரச்சினையைத் ஏற்படுத்தினார். இதைத் தொடர்ந்து ஏற்பட்ட வலுவான எதிர்வினைகளைப் பார்க்கும் போது இலங்கையின் மாபெரும் பண்பாட்டுச் சாதனைகள், ஆரிய வம்சாவளி நீட்சியைக் கொண்ட சிங்களத் தோற்ற மூலம் கொண்டவை என்பதில் சங்கத்தின் பல உறுப்பினர்கள் எவ்வளவு தூரம் உறுதியாக இருந்தனர் என்பதைக் காட்டுவதற்கு போதுமான ஆதாரமாகும். 1880 களில் ரோயல் ஆசியச் சங்கத்தால் வெளியிடப்பட்ட பல கட்டுரைகள் ஏன் சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் ஆரியக் கோட்பாடுகளை ஆதரிக்கும் வகையிலும் அமைந்திருந்தன என்பதை இந்த எதிர்வினைகளைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்.
அதனோடு இணைந்த வகையில் 1892 ல் ரோயல் ஆசியச் சங்கம் வெளியிட்ட மற்றுமொரு சஞ்சிகையில் வெளியான ஒரு கட்டுரை, இனப் பிரச்சினை குறித்த வலுவான கருத்துக்கள் எந்தளவு தூரம் வலுவாக நிலவின என்பதைக் காட்டப் போதுமானதாகும். “சிலோனின் இனவியல் (The Ethnology of Ceylon)” என்ற நூலில், இலங்கையில் இனப் பூர்வீகம் தொடர்பான ஆய்வுகளில் முதன்மையான எடுகோளாக ‘மொழி’ பயன்படுத்தப்பட்ட விதத்தை ஆய்வாளர் நெல் (Nell) கடுமையாக விமர்சித்தார். ஒரு பிராந்தியத்தில் பேசப்படும் மொழி, அங்கு வாழும் மக்களின் இனத்தை வெளிப்படுத்த வேண்டிய எந்தவொரு அவசியமும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், வேண்டுமானால் அது முந்தைய குடியேறிகளின் செல்வாக்கைப் பிரதிபலிக்க முடியும் எனவும் குறிப்பிட்டு இருந்தார். ஆய்வாளர் நெல்லின் கூற்றுப்படி இலங்கையில் சிங்களம் பேசப்பட்டது என்பது, சிங்களவர்கள் ஒரு குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபித்து விடாது. இந்தக் கருத்தை விளக்குவதற்காக அவர் ஸ்கொட்லாந்து, அயர்லாந்து, வேல்ஸ் மற்றும் கார்னிஷ் செல்ட் (Cornish Celts) இனக்குழுக்களின் உதாரணத்தைப் பயன்படுத்தினார். இந்தக் குழுக்கள் ஆங்கிலத்தைப் பேசினாலும் அவர்கள் ஆங்கில மொழியைப் பயன்படுத்திய ஒரே காரணத்திற்காக, தங்களை ஆங்கிலோ-சாக்சன்களின் வழித்தோன்றல்களாக உரிமை கோருவதில்லை என்பதை அவர் விளக்கினார். அதேபோலவே மொழியையும் இனத்தையும் தமக்கிடையே உட்கிடையான தொடர்புகளைக் கொண்ட ஒன்றாகக் கருதக்கூடாது என்றும் நெல் வாதிட்டார்.
நெல்லின் (Nell) ஆய்வுகட்டுரைக்குப் பிறகு ரோயல் ஆசியச் சங்கத்தில் நடந்த விவாதம், பர்ரோஸ் ஏற்படுத்திய முந்தைய சர்ச்சையைப் போலவே இருந்தது. பல உறுப்பினர்கள் நெல்லின் வாதத்தைக் கடுமையாக விமர்சித்ததோடு, சிங்களவர்கள் பண்டைய ஆரியர்களின் வழித்தோன்றல்கள் என்று கடுமையாக வலியுறுத்தினர். விவாதம் மிகவும் சூடுபிடிக்கத் துவங்கியதால் அதனை ஒத்திவைக்க வேண்டியிருந்தது. விவாதத்தைத் தொடர சங்கம் மீண்டும் கூடியபோது, தலைவர் கோப்லஸ்டன் வழக்கமான விதிகளில் இருந்து ஒரு சிறப்பு விதிவிலக்கை அளித்திருந்தார். பொதுவாக விவாதங்களில் புதிய கட்டுரைகளைச் சமர்ப்பிப்பது இடம்பெறாது. ஆனால் உறுப்பினர்கள் தாங்கள் முன்கூட்டியே தயாரித்திருந்த எழுத்துப்பூர்வ பதில்களைப் படிக்க அவர் அன்று அனுமதியளித்தார். இந்தப் பதில்களில் பெரும்பாலானவை, விஜயன் ஒரு ஆரியர் என்பதை நிரூபிக்க முயன்றதுடன் மிக ஆய்வாளர் நெல்லின் வாதத்திற்கான எதிர்வினை மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் இருந்தது. இதற்கு முன்பு ஒருபோதும் சங்கத்தின் இத்தனை உறுப்பினர்கள், மற்றொரு உறுப்பினரின் கோட்பாட்டை எதிர்த்து மறுப்பதற்காகவே பிரத்யேகமாகக் கட்டுரைகளை எழுதியதில்லை என்பதிலிருந்து ஆரிய இனப்பிரச்சினை எவ்வளவு உணர்வுப்பூர்வமானதாகவும் சர்ச்சைக்குரியதாகவும் மாறியிருந்தது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
ஆய்வாளர்களான பர்ரோஸ் மற்றும் நெல் ஆகியோர் தொடர்பாக மேலே விபரிக்கப்பட்ட சம்பவங்களிலிருந்து சங்கத்தின் பல உறுப்பினர்கள் தங்களை இனரீதியாக சிங்களவர்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ள கடும் பிரயத்தனங்களை எடுத்தமையை தெளிவாகக் காட்டுகின்றன. இது பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் மொழியையும் இனத்தையும் ஒன்றாகக் கருதும் போக்கினால் ஏற்பட்ட விளைவாகவே கருத வேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி சிங்களவர்களின் ஆரிய வம்சாவளியைக் கேள்விக்குட்படுத்திய கருத்துக்களும் ஆய்வுகளும் பெரும்பாலும் ஆதாரமற்ற ஊகங்களாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இதன் விளைவாக, இலங்கையின் கலாசாரம் குறித்த வெளிப்படையானதும் புறநிலையானதுமான ஆராய்ச்சிகளை ஊக்குவிக்கும் தனது முதன்மையான இலக்கை ரோயல் ஆசியச் சங்கம் முழுமையாக அடைந்து கொள்ளவில்லை எனலாம். சி. எஃப். மற்றும் பி. பி. சரசின் (C. F. and P. B. Sarasin) போன்றோரால் எழுதப்பட்ட மானுடவியல் கட்டுரைகள், ஆரிய – சிங்கள இன மேன்மை என்ற கருத்தை ஆதரிக்கும் வகையில் சான்றுகளை முன்வைத்த அதே நேரத்தில், பரோஸ் மற்றும் நெல் போன்றோரால் முன்வைக்கப்பட்ட மாற்றுப் பார்வைகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டு நிராகரிக்கப்பட்டன. இந்தக் காலகட்டத்தில், ஆரியக் கோட்பாடு மொழியைப் பற்றியதாக மட்டுமே இருந்த காலத்தை விட மிகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் அரசியல் ரீதியாகச் சூடுபிடித்த ஒன்றாகவும் மாறியிருந்தது.
ஆரியக் கோட்பாட்டைப் புரிந்து கொள்தல்; காலனிய அறிவுருவாக்கமும் அரசியல் அதிகார முனைப்பும்.
ஆரியக் கோட்பாடினைப் பொறுத்தவரை அது பெரும்பாலும் இரண்டு வழிமுறைகளில் புரிந்துகொள்ளப்படுகிறது. சிலர் அதனை, அனைத்து மனிதர்களும் ஒரு பொதுவான மூலத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டடைய முயன்ற பதினெட்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்த ஒரு சிந்தனையாக கருதும் அதேவேளை மேலும் சிலர் அதனை பத்தொன்பதாம் நூற்றாண்டினது இனவாத சிந்தனை மற்றும் யூத எதிர்ப்புக் கருத்துக்களின் சிந்தனையாகப் பார்க்கின்றனர். இந்த இரண்டு விளக்கங்களிலும் ஓரளவு உண்மை இருந்தாலும், ஆரியக் கோட்பாடு தொடர்பில் மற்றுமொரு முக்கியமான அம்சத்தையும் நாம் கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும். ஆரியக் கோட்பாட்டினைப் பொறுத்தவரையில் அது முதன்முதலில் ஒரு காலனித்துவச் சூழலில் மொழிகளின் தோற்றம் பற்றிய ஒரு கோட்பாடாகவே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர், ஏகாதிபத்தியம் தனது உச்சத்தை அடைந்திருந்த காலகட்டத்தில் அது ஒரு இனவாதக் கோட்பாடாக வளர்ந்தது.
கட்டுரையின் இந்தப்பகுதியில், காலனித்துவ ஆட்சியுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடைய கீழைத்தேய ஆய்வுப் புலத்தின் ஒரு பிரிவான மானுடவியல் மீது கவனம் செலுத்தப்படுகிறது. ஆரியக் கோட்பாட்டுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்த மானுடவியல் துறை, இலங்கையில் தங்கள் அரசியல் செல்வாக்கை வலுப்படுத்த பிரிட்டிஷாரால் கவனமாகப் பயன்படுத்தப்பட்டது. அதுபோல அக்காலகட்டத்தில் வரலாறு எழுதப்பட்ட ஒழுங்குமுறையில் ஆரிய இனக் கோட்பாடு எவ்வாறு செல்வாக்கு செலுத்தியது என்பதைப் புரிந்துகொள்வதற்காக, பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கால இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் வரலாற்றெழுத்தியல் முறைமைகள் குறித்தும் இந்தப் பகுதி ஆராய்கிறது. இறுதியாக, கீழைத்தேய ஆய்வுப் புலத்திற்கும் காலனித்துவத்திற்கும் இடையிலான நெருங்கிய தொடர்பைக் கண்டடைந்த பிறகு தொல்லியல் துறைக்கும், ஆரியக் கோட்பாடு மற்றும் அரசியல் அதிகாரத்தன்மை ஆகியவற்றுக்கு இடையிலான உறவு குறித்தும் இந்தப் பகுதி ஆராய்கிறது. இவை அனைத்தும் ஒன்றிணைந்த வகையிலேயே இலங்கையில் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆட்சியை ஆதரிக்கவும் வலுப்படுத்தவும் உதவின எனலாம்.
மானிடவியலும் ஆரியக் கோட்பாடும்
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் கீழைத்தேயவியலாளர்கள் ஆய்வு செய்த அனைத்துத் துறைகளிலும் பார்க்க மானுடவியலும் அதனுடன் தொடர்புடைய மொழியியல் துறையுமே, இலங்கையில் தனது அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்தவும் அதனைத் தொடர்ந்தும் பாதுகாக்கவும் காலனித்துவ அரசுகளுக்கு பெரிதும் உதவின. சொல்லப்போனால் இது இலங்கைக்கே உரிய தனித்துவமான ஒரு அனுபவமாக இருக்கவில்லை. அக்காலப்பகுதியில் ஐரோப்பிய ஆட்சியின் கீழ் இருந்த பல காலனிகளிலும் இதே போன்ற போக்குகளையே காண முடிந்தது. எட்வர்ட் செய்த் சுட்டிக்காட்டுவது போல, மானுடவியல் வரலாற்று ரீதியாக காலனித்துவத்துடன் ஒரு நெருங்கிய உறவைக் கொண்டிருந்தது. காலனித்துவ அரசுகள், தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த மக்களை நன்கு புரிந்துகொள்ளவும், நிர்வகிக்கவும், உள்ளூர் மக்களின் கலாசாரங்கள், மொழிகள் மற்றும் சமூகக் குழுக்கள் பற்றிய மானுடவியல் அறிவை அடிக்கடி பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனை எட்வர்ட் செய்த் “நவீன சமூக அறிவியல் துறைகள் அனைத்திலும் பார்க்க மானுடவியல் துறையே வரலாற்று ரீதியாக காலனித்துவத்துடன் மிகவும் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. இதற்குக் காரணம், மானுடவியலாளர்களும் இனவியலாளர்களும் தாங்கள் ஆட்சி செய்த உள்ளூர் மக்களின் பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், நடத்தைகள் மற்றும் வாழ்க்கை முறைகள் குறித்து காலனித்துவ ஆட்சியாளர்களுக்கு அடிக்கடி ஆலோசனை வழங்குவதற்கு சமூக அறிவியலின் இந்தத் துறைகள் பெரிதும் உதவின” எனக் குறிப்பிட்டுகிறார்.
இதனாலேயே மானுடவியலை “காலனித்துவத்தின் அடிமை” என்று கிளாட் லெவி-ஸ்ட்ராஸ் (Claude Lévi-Strauss) போன்றவர்கள் விளக்குகின்றனர். மானுடவியல் பெரும்பாலும் காலனித்துவ ஆட்சிக்கு சேவகம் செய்வதையே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். வங்காளத்தில் சேர் வில்லியம் ஜோன்ஸால் (William Johns) நிறுவப்பட்ட ரோயல் ஆசியச் சங்கத்தின் ஐம்பதாவது ஆண்டு விழாவின் போது, கல்விப்புலத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையிலான நெருங்கிய உறவு வெளிப்படையாகவே பேசப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட டபிள்யூ. சி. டெய்லர் (W. C. Taylor), இந்தியாவின் கலாச்சாரத்தைக் கண்டறிந்து ஆய்வு செய்வதற்கான பிரிட்டிஷாரின் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டினார். சங்கத்தின் ஆராய்ச்சிக்கு கூடுதல் நிதி கோரியபோது அவர் அறிவுக்கும் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பை “அறிவே அதிகாரம்” (Knowledge is power)” என்ற வார்த்தைகளின் வழியே வெளிப்படுத்தி இருந்தார். வேறுவார்த்தைகளில் கூறுவதானால் சங்கத்தின் ஆராய்ச்சிகளுக்கு நிதியளிப்பது பிரிட்டிஷார் தாங்கள் ஆளும் மக்களைப் பற்றிய அறிவை மேலும் பெற உதவுவதுடன் அந்த அறிவினைக் கொண்டு பிரிட்டிஷார் தங்களது அரசியல் கட்டுப்பாட்டை தங்கள் காலனிகளில் மேலும் வலுப்படுத்தப் முடியும் என்பதே அவரது அபிப்ராயமாக இருந்தது. கல்விப்புலத்திற்கும் அரசியல் அதிகாரத்திற்கும் இடையிலான தொடர்பை மெக்ஸ் முல்லரும் (Max Mullar) உபநிடதங்கள் தொடர்பாக அவர் எழுதிய நூலின் முன்னுரையில் விளக்கியிருந்தார்.
எவ்வாறாயினும் தாங்கள் ஆட்சி செய்யும் மக்களைப் பற்றிய அறிவைப் பெறுவதன் முக்கியத்துவத்தை உணர்ந்தவர்களாக மெக்ஸ் முல்லரும் ஏனைய ரோயல் ஆசிய சங்கத்தைச் சேர்ந்த அவரது சகாக்களும் மட்டும் இருக்கவில்லை. 1880 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இலங்கையின் ஆளுநரான ஜேம்ஸ் லொங்டன் (James Longden), காலனிகளுக்கான வெளியுறவுச் செயலாளருக்கு இரண்டு ஆவணங்களை அனுப்பினார். இந்த ஆவணங்கள் இலங்கை மக்கள், அவர்களது இனம், பணபாடுகள், மொழி மற்றும் இலங்கையின் வரலாறு ஆகியவற்றைப் பற்றியதாகவே இருந்தன. அந்த ஆவணங்கள் இரகசிய ஆவணங்களாக குறியிடப்பட்டு, அவசரகால போர் அலுவலகத்தின் புலனாய்வுத் துறைக்கு நேரடியாக அனுப்பப்பட்டன. இது, இலங்கையின் மக்கட் தொகை, அவர்களது கலாசாரம், மொழி மற்றும் வரலாறு பற்றிய தகவல்கள் கல்வி நோக்கங்களுக்காக மட்டும் சேகரிக்கப்படவில்லை என்பதைக் காட்டுவதுடன் அது காலனித்துவ நிர்வாகத்திற்கும் அரசியல் கட்டுப்பாட்டிற்கும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் கருதப்பட்டது.
1871 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் புள்ளிவிவரங்களை முன்வைத்துத் துவங்கும் துணைக் காலனியச் செயலாளரால் எழுதப்பட்ட ஆவணங்களில் ஒன்று, அதன் மூன்றாவது பக்கத்தில் இலங்கையின் வெவ்வேறு இனச் சமூகங்களை ஒரு இராணுவக் கண்ணோட்டத்தில் மதிப்பீடு செய்வது தொடர்பாக கவனம் செலுத்துகிறது. அந்த அறிக்கை, சிங்களவர்களைப் போர்க் குணம் அற்ற இனமாகக் குறிப்பிடுவதுடன் அவர்களை பெரும்பெரும் நிலங்களுக்கான உரிமையாளர்களாகவும் விவரிக்கிறது. அதுமட்டுமன்றி சிங்களவர்கள் போர்க்குணம் அற்றவர்கள் என்பதனால் அவர்களில் பெரும் எண்ணிக்கையிலானோரை படைவீரர்களாகவோ அல்லது ஏனைய இராணுவ நடவடிக்கைகளிலோ பங்கேற்கச் சம்மதிக்க வைப்பது கடினமான செயல் எனவும் வாதிடுகிறது. அதுபோல தமிழர்களும் “போர்க் குணம் அற்றவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். ஆனால் அவர்கள், சிங்களவர்களை விடக் குறைந்த செல்வம் உடையவர்களாக கருதப்பட்டு அதன் நீட்சியாக இராணுவப் படைகளுக்குத் தேவையான பொருட்களைக் குறைந்த கூலிக்குக் கொண்டு செல்வதற்கு அதிக விருப்பம் காட்டுவார்கள் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், மூர்களும் மலாய்களும் “இலங்கையில் உள்ள ஆசிய மக்களில் போர்க் குணம் அதிகம் கொண்டவர்கள்” என்று விவரிக்கப்படுகிறார்கள். ஜூன் 1882 இல் ஆளுநருக்கு அனுப்பப்பட்ட ஒரு இரகசியப் பதில் கடிதத்தில் ஆளுநரால் ஏற்கனவே அனுப்பப்பட்ட குடித்தொகை அறிக்கை “போர் திணைக்களத்திற்கு பயனுள்ளதாக அமைந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது. காலனித்துவ அதிகாரிகள் பல்வேறு சமூகங்களைப் பற்றிய தகவல்களைக் கல்விசார் ஆய்வுக்காக மட்டுமல்லாமல், இராணுவ மற்றும் நிர்வாக நோக்கங்களுக்காகவும் சேகரித்து வந்தனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது.
இந்தப் பின்னணியைக் கருத்தில் கொண்டே அரச ஆசிய சங்கத்தின் இலங்கைக் கிளையினரால் வெளியிடப்பட்ட (RASCB) சஞ்சிகையில் பிரசுரமாகிய மானுடவியல் கட்டுரைகளை கவனமாகவும் விமர்சன ரீதியாகவும் பயில வேண்டியுள்ளது. இந்தச் சங்கம் காலனித்துவ அரசுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்ததுடன் அதன் தலைவராக எப்போதும் பிரிட்டிஷ் ஆளுநரே இருந்தார். இச்சங்கம் ஏற்கனவே மேலே சுட்டிக்காட்டியது போல் 1877 ல் கொழும்பு அருங்காட்சியகத்தை நிறுவவும், 1890 ல் அரசாங்கத் தொல்பொருள் திணைக்களம் உருவாக்கப்படவும் காரணமாக இருந்தது. அக்காலத்தில் வாழ்ந்த பல்வேறு அறிஞர்களும் காலனிய அரச அதிகாரிகளும் அறிவு என்பது அதிகாரத்தின் ஒரு வடிவம் என்று வெளிப்படையாக நம்பி வந்தனர். இதனால் இச்சஞ்சிகையில் வெளியிடப்பட்ட மானுடவியல் ஆய்வுகள், இலங்கையில் தனது அரசியல் ஆதிக்கத்தை வலுப்படுத்திக் கொள்வதற்காக காலனித்துவ அரசாங்கத்திற்கு எவ்வாறெல்லாம் உதவியது என்பது மிக முக்கியமான கேள்வியாகும். நிர்வாக மற்றும் இராணுவ நோக்கங்களுக்காக இலங்கைத் தீவின் மக்கள், கலாச்சாரம், மொழி மற்றும் சமூகப் பண்புகள் பற்றிய விரிவான தகவல்களைச் சேகரித்து, 1880 களில் ஆளுநர் அலுவலகத்திற்கும் போர் திணைக்களத்திற்கும் இடையில் பரிமாறப்பட்ட இரகசிய அறிக்கைகளுடன் சேர்த்துப் பார்க்கும்போது இந்தக் கேள்வி இன்னும் முக்கியத்துவம் பெறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கால இந்தியாவில் காலனிய அறிவுருவாக்கம் குறித்த தனது ஆய்வில், பெர்னார்ட் கோன் (Bernard Cohn) , இந்திய மொழிகளைக் கற்று அதன் இலக்கணங்களை எழுதும் பிரிட்டிஷாரின் முயற்சி, காலனித்துவ ஆட்சியை பலப்படுத்துவதில் ஒரு மிக முக்கியமான மைல்கல்லாக இருந்தது என்று குற்ப்பிடுகிறார். மானுடவியலுடன் நெருங்கிய தொடர்புடைய மொழியியல்சார் ஆய்வானது, உள்ளூர் சமூகங்களைப் புரிந்துகொள்வதற்கும் அவர்களுக்குள் செல்வாக்குடன் திகழும் குழுக்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வதற்கும் தேவையான அறிவை காலனித்துவ அதிகாரிகளுக்கு அது வழங்கியதால் பிரிட்டிஷ் பேரரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இந்திய மொழிகள் தொடர்பான ஆய்வுகள் இருந்தது, அதுபோலவே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரிப்பது தங்களின் சொந்த நலன்களுக்கு உகந்தது என்று நம்பவைக்கக்கூடிய உள்ளூர் உயரடுக்கினரை இந்திய சமூகத்திற்குள் அடையாளம் காண குறித்த மொழியியல்சார் ஆய்வுகள் உதவக் கூடும் என்று பிரிட்டிஷார் நம்பினர். இதற்காக, உள்ளூர் ஆட்சியாளர்களையும் உள்ளூரில் செல்வாக்கு மிக்க குழுக்களையும் பிரிட்டனுடன் ஒத்துழைக்க வைப்பதற்காக வேண்டி பல்வேறு அரசியல் உத்திகளையும் இராஜதந்திர முறைகளையும் அவர்கள் உருவாக்கினர்.
இந்த வாதங்களை இன்னும் ஒரு படி மேலே கொண்டு செல்லும் போது, உள்ளூர் மேட்டுக்குடியினரின் விசுவாசத்தைப் பெறுவதற்கான மிகவும் பயனுள்ள வழியாக அவர்களின் மொழியைக் கற்றுக்கொள்வது மட்டுமன்றி அவர்களுடன் ஒரு பொதுவான வம்சாவளியைக் கொண்டிருக்கும் கதையாடல்களை உற்பத்தி செய்து விடுவதாலும் முடியும் என்ற முடிவுக்கு வந்துவிட முடியும். தாங்கள் ஆட்சி செய்த மக்களின் மொழியையும் கலாச்சாரத்தையும் புரிந்துகொள்வதோடு மட்டும் நின்றுவிடாமல், பிரிட்டிஷாரும் சில உள்ளூர் குழுக்களும் பொதுவான இனப் பின்னணியைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்ற கருத்தை காலனித்துவ அறிஞர்கள் வலியுறுத்தியது இதனாலேயே பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனை உவமையின் மூலம் விளக்கலாம். ஒருவரின் மொழியைக் கற்றுக்கொள்வது மட்டுமே, அவர்கள் உங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்பதை உறுதி செய்து விடாது. ஆனால் ஏதேனும் ஒரு குடும்ப உறவையோ அல்லது பொதுவான வம்சாவளியையோ உரிமை கோருவது, மிகவும் வலுவான ஒரு பிணைப்பையும் நம்பிக்கையையும் உருவாக்கும். அதுபோலவே, பிரிட்டிஷாரும் சிங்களவர்களும் ஒரே ஆரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்ற கதையாடலை ஆள்பவர்களுக்கும் ஆளப்படுபவர்களுக்கும் இடையேயான ஒரு உறவுமுறை உணர்வை உருவாக்க பிரிட்டிஷ் அரசாங்கம் பயன்படுத்தியது. அரசியல் அதிகாரத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு உறவை விட, இத்தகைய பிரக்ஞைபூர்வ உரிமை கோரல், பிரிட்டிஷ் ஆட்சியை உள்ளூர் மேட்டுக்குடியினருக்கு இயல்பானதாகவும், ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும், சட்டபூர்வமானதாகவும் தோன்றச் செய்யும் படியாக அமைந்திருந்தது எனலாம்.
இந்தியாவில் ஆரிய இனக் கோட்பாடு உயர் சாதியினருக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தையும் கௌரவத்தையும் வழங்குவதற்காகப் பயன்படுத்தப்பட்டது என்று நிரா விக்ரமசிங்க (Nira Wickramasinghe) தனது எழுத்துக்களில் சுட்டிக்காட்டுகிறார். எம். பான்டனின் (M. Banton) படைப்புகள் குறித்த அவரது வாதத்தின்படி, ஆரிய இனக் கோட்பாடு பிரிட்டிஷாருக்கும் சில இந்தியக் குழுக்களுக்கும் இடையே ஒரு பொதுவான தொடர்பைச் சுட்டிக்காட்டிய போதிலும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியை நியாயப்படுத்த அதை வெளிப்படையாகவே பயன்படுத்தினார்கள் என்று கூற முடியாது என நிரா விக்ரமசிங்க மேலும் குறிப்பிடுகிறார். அதேபோலவே காலனித்துவ இலங்கையில் இருந்த பிரிட்டிஷ் அதிகாரிகள், தமது அதிகாரத்தைப் பெறுவதற்கான ஒரு அரசியல் கருவியாக ஆரியக் கோட்பாட்டை வெளிப்படையாக ஊக்குவித்தார்கள் என்று வாதிடுவது பொருத்தமாக இல்லையென்ற போதிலும் ரோயல் ஆசியச் சங்கத்தின் இலங்கைக் கிளையினால் வெளியிடப்பட்ட சஞ்சிகையில் பிரசுரமாகிய ஆரியக் கோட்பாடு குறித்த கட்டுரைகளை 1880 களில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளுடன் சேர்த்து ஆராயும்போது, ஒரு வலுவான தொடர்பினைக் கண்டு கொள்ள முடியுமாயிருக்கிறது. கீழைத்தேய ஆய்வுப் புலத்தினைப் பொறுத்தவரை சிங்களவர்களும் பிரிட்டிஷாரும் ஆரியக் வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக அதிகளவில் சித்தரிக்கப்பட்டதுடன் அரசியல் மட்டத்தில், பிரிட்டிஷ் காலனித்துவ நிர்வாகத்திற்கும் கண்டியின் சிங்கள மேட்டுக்குடியினரின் சில பிரிவுகளுக்கும் இடையே நெருங்கிய உறவுகளை வளர்ந்துக் கொள்வதற்கும் இது உதவியது என்ற அவதானத்தை நாம் பெற முடியும். ஆர். ஏ. எல். எச். குணவர்தன குறிப்பிடுவது போல, ஆரியக் கோட்பாடு பிரிட்டிஷ் கீழைத்தேய அறிஞர்களால் மட்டுமல்லாமல், பல சிங்களவர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தக் கோட்பாடு, காலனித்துவப்படுத்தப்பட்ட மக்களில் சிலருக்கு ஒரு பெருமிதமான வம்சாவளித் தொடர்பை ஏற்படுத்தி இருந்தது.
இதனையே 1880 கள் முதல் இருபதாம் நூற்றாண்டின் முன்னரைப்பகுதியில் இலங்கை சுதந்திரம் அடையும் வரை, பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியாளர்களுக்கும் சிங்கள மேட்டுக்குடியினரின் சில பிரிவினருக்கும், குறிப்பாக கண்டி மேட்டுக்குடியினருக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு இருந்து வந்ததாக கே. எம். டி சில்வா (K. M. de Silva) குறிப்பிடுகிறார். கே. எம். டி சில்வாவின் கூற்றின் பிரகாரம் பல கண்டிப் பிரதேச மேட்டுக்குடிகள், பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் தங்களுக்குக் கிடைத்த புதிய இன் வம்சாவளி தொடர்பில் திருப்தி அடைந்திருந்தனர். அவர்கள் தங்களை பிரிட்டிஷாரின் நண்பர்களாகவும், இலங்கையின் கடலோர (கடல்சார்) பகுதிகளில் உயரடுக்கினரால் வழிநடத்தப்பட்டு உருவாகி வந்த சீர்திருத்த மற்றும் தேசியவாத இயக்கங்களுக்குள் அகப்படாதவர்களாகவும் தங்களைக் கருதினர். இதன் விளைவாகவே, கண்டித் தலைவர்கள் பொதுவாக இந்த அரசியல் இயக்கங்களுக்கு அவ்வளவு தூரம் தமது ஆதரவைக் காட்டியிருக்கவில்லை. அவர்கள் வெளிப்படையாக அவற்றை எதிர்க்காதபோதிலும், அவற்றின் இலக்குகள் குறித்து எச்சரிக்கையாகவும், சந்தேகத்துடனுமே இருந்தனர்.
ஆரியக் கோட்பாடும் வரலாற்றெழுத்தியலும்
காலனித்துவ அமைப்புடன் நெருக்கமாக இணைந்திருந்த துறையாக மானுடவியலுடன் இணைந்து வரலாற்றெழுத்தியலும் ஏகாதிபத்திய நலன்களுக்குச் சேவை செய்தமை இங்கு குறிப்பிடத்தக்க அம்சமாகும்.1886 ஆம் ஆண்டில் மகாவம்சத்தின் மொழிபெயர்ப்பு குறித்த ரோயல் ஆசியச் சங்கத்தின் அறிக்கையில், இலங்கையை தமிழ் படையெடுப்பாளர்களே கொள்ளையடித்துப் பாழாக்கினார்கள் என்பதற்கு மகாவம்சத்தை ஒரு வரலாற்றுச் சான்றாகக் முன்னிறுத்தியது. இதனூடாக தமிழர்களை அழிவுகரமான வெளியாட்களாகவும், சிங்களவர்களைத் தீவின் உண்மையான பாதுகாவலர்களாகவும் சித்தரிக்கும் காலனியக் கதையாடலை அது மேலும் வலுப்படுத்தியது. மட்டுமன்றி அந்த அறிக்கையானது பர்ரோஸின் (Burrows) வாதத்தை விமர்சிப்பதற்கும் இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக்கொண்டது. சிங்கள மற்றும் தமிழ் கலைஞர்களால் ஒரு பெரிய ஸ்தூபி கட்டப்பட்டதை விவரிக்கும் மகாவம்சத்தின் ஒரு பகுதியை அந்த அறிக்கையானது தமிழ் தொழிலாளர்களின் குறித்த ஈடுபாடானது விதிவிலக்கான ஒரு செயற்பாடாகவே உள்ளது என்பதாக வாதிட்டது. அதுமட்டுமன்றி சிங்களவர்களின் புனிதத் தளங்களைத் தீட்டுப்படுத்தி, மத வழிபாட்டுத் தலங்களை அழித்ததாகக் கூறப்படும் தமிழ் படையெடுப்பாளர்களுக்கு எதிராக பண்டைய வரலாறு ஒரு வலுவான பகைமையைக் கொண்டிருந்ததாக அந்த அறிக்கை வலியுறுத்திக் கூறியது. இதன் பிரகாரம், தமிழர்கள் இலங்கையில் ஒரு நாகரிகத்தைக் கட்டியெழுப்புவதற்குப் பதிலாக மற்றவர்கள் (சிங்களவர்கள்) கட்டியவற்றை அழிப்பதிலேயே முன்னின்றனர் . எனவே, தீவின் பழங்கால நினைவுச்சின்னங்களை உருவாக்குவதில் தமிழ் கலைஞர்களும் முக்கியப் பங்கு வகித்தனர் என்ற பர்ரோஸின் கூற்றுக்கு எதிரான சான்றாக அந்த அறிக்கை மகாவம்ச மொழிபெயர்ப்பைக் கருதியது.
இலங்கை வரலாறு குறித்த மேற்குறித்த விளக்கத்தில், தமிழர்கள் கொள்ளையடிப்பதற்கும் அழிப்பதற்கும் இலங்கைக்கு வந்த படையெடுப்பாளர்கள் என்ற கருத்தே அதன் மையக் கருப்பொருளாக இருந்தது. இதில் நகைமுரண் என்னவென்றால், ஆங்கிலேயர்களும் இலங்கையின் படையெடுப்பாளர்களாகவே இருந்தனர். இந்தியாவில் பிரிட்டிஷ் பேரரசைப் பாதுகாப்பதற்கான மூலோபாய முக்கியத்துவத்தின் காரணமாகவே அவர்கள் டச்சுக்காரர்களிடமிருந்து இலங்கை மீதான கட்டுப்பாட்டைக் கைப்பற்றினர். பின்னர், 1805 இல் இலங்கை ஒரு பூரண காலனியாக மாறிய பிறகு, அது படிப்படியாகப் பொருளாதார ரீதியாகச் சுரண்டப்படக்கூடிய ஒரு காலனித்துவ உடைமையாகவே இருந்தது.1880 களுக்குள், இலங்கையின் பொருளாதாரம், பெரும்பாலும் மூன்று முக்கிய ஏற்றுமதிப் பயிர்களை மையமாகக் கொண்ட ஒரு தோட்டப் பொருளாதாரமாக மாறியிருந்தது. தமிழ் படையெடுப்புகள் வெளிநாட்டு ஊடுருவல்களாக சித்தரிக்கப்பட்ட அதே வேளை, தீவின் மீதான பிரிட்டிஷாரின் கட்டுப்பாடானது தமிழர்கள் விவரிக்கப்பட்ட அதே மொழியில் விவரிக்கப்படாமை இதிலுள்ள மாபெரும் முரணாகும்.
ஆனால் தமிழ் படையெடுப்பாளர்களையும் பிரிட்டிஷ் படையெடுப்பாளர்களையும் ஒப்பிடுவதற்குப் ஏராளமான சான்றுகள் இருந்தன. தமிழர்கள் கொள்ளையர்களாகவும் அழிப்பவர்களாகவும் விவரிக்கப்பட்டிருந்தால், பிரிட்டிஷாரும் அதுபோலவே கருதப்பட வேண்டும் என்பதே தர்க்க ரீதியாக சரியான ஒப்பீடாகும். இருப்பினும், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரிட்டிஷ் வரலாற்றாசிரியர்கள் இந்த ஒப்பீட்டைச் செய்யவில்லை. மாறாக, காலனித்துவ இலங்கை பற்றிய அவர்களின் வரலாற்றெழுத்தியல் பொதுவாக “பிரிட்டிஷார் இலங்கைக்கு முன்னேற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டு வந்தனர்” என்ற ஒரு கருப்பொருளைச் சுற்றியே இருந்தன. யஸ்மின் குணரத்ன (Yasmine Gooneratne) சுட்டிக்காட்டியுள்ளபடி இந்த வரலாற்று எழுத்துக்கள் பலவும் பிரிட்டிஷாரை வெற்றியாளர்களாகக் “விடுவிப்பாளர்களாகவும் மீட்பர்களாகவுமே” சித்தரித்தன. உதாரணத்திற்கு, 1887ல் வெளியிடப்பட்ட இலங்கையின் வரலாறு குறித்த பிரிட்டிஷாரின் இதழொன்றில், பிரிட்டிஷ் ஆளுநர்களின் கீழ் ஏற்பட்ட சட்ட மற்றும் பொது மேம்பாடுகள், இலங்கையின் அபிவிருத்தியில் தோட்டத் தொழில்துறையின் பங்களிப்பு என்றவாறே அத்தியாயத் தலைப்புகள் இடம்பெற்றிருந்தன. இந்தத் தலைப்புகள், பிரிட்டிஷ் ஆட்சியின் நன்மைகளை விதந்தோதி, காலனித்துவத்தை முன்னேற்றம் மற்றும் நவீனமயமாக்கலுக்கான ஒரு பாதை என்ற கருத்தாடலையே சார்ந்து நின்றன.
அத்தோடு 1885 களில் ரோயல் ஆசியச் சங்க இலங்கைக் கிளை மேற்கொண்ட ஆராய்ச்சி குறித்த பிஷப் கோப்லஸ்டனின் (Bishop Copleston) அறிக்கையில், தமிழர்கள் நாட்டின் பல பொக்கிஷங்களை ஏற்கனவே ‘சூறையாடிவிட்டதால்’, இன்னும் அகழ்வாராய்ச்சி செய்யப்படாத பண்டைய புனிதத் தளங்களில் புதிதாக எதையும் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புக்கள் குறைவு என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த வரலாற்றுப் புனைவில், தமிழர்கள் அழிப்பவர்களாகவும், ஆங்கிலேயர்கள் உருவாக்குபவர்களாகவும், பாதுகாவலர்களாகவும், முன்னேற்றத்தைக் கொண்டு வருபவர்களாகவும் மீண்டும் மீண்டும் சித்தரிக்கப்பட்டனர். இவர்களில் இரு தரப்பினரும் தீவிற்கு வெளியிலிருந்து வந்திருந்தபோதிலும் அவர்கள் இருவரையும் வெவ்வேறு தரப்பினராகவே முன்னிறுத்தினர். இதன்படி, தமிழர்கள் பண்டைய நினைவுச்சின்னங்களைச் சேதப்படுத்தியதாகவும் கொள்ளையடித்ததாகவும் கூறப்பட்டதுடன் ஆங்கிலேயர்கள் அவற்றைப் பாதுகாத்து, மேம்படுத்தி, ஆய்வு செய்தவர்களாகவும் சித்தரிக்கப்பட்டனர். வரலாறு குறித்த பண்டைய மற்றும் நவீன வியாக்கியானக்கள் இரண்டினது விளக்கங்களும் தெளிவாகவே தமிழ் படையெடுப்பாளர்களுக்கும் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை எடுத்துக்காட்டுவதாக அமைந்தது. அதே நேரத்தில், அது பிரித்தானியர்களுக்கும் சிங்கள மேட்டுக்குடியினருக்கும் இடையே ஒரு பொதுவான தொடர்பு உண்டு என்ற கருத்தை வலுப்படுத்தி, இரு குழுக்களையும் இணைத்த ஆரிய வம்சாவளிக் கதையாடலையும் உற்பத்தி செய்தது.
அரசியல் அதிகாரம் குறித்த தேடல்: தொல்பொருளியல் தேடலும் ஆரியக் கோட்பாடும்.
எரிக் ஹொப்ஸ்வாம் (Eric Hobsbawm), தனது தேசியவாதம் குறித்த ஆய்வுகளில் ஐரோப்பாவில் 1830 முதல் 1880 வரையிலான காலகட்டத்தை ‘புரட்சிகளின் காலம்’ என்று விவரிக்க முடியும் என்பதாகக் கூறுகிறார். இந்தக் காலகட்டத்தில், தேர்தல்கள் மூலம் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதித்துவத்தை அடிப்படையாகக் கொண்ட அரசாங்க அமைப்புகள் ஐரோப்பாவில் பெருகி வந்த அதே நேரத்தில், வலுவான மதக் கட்டுப்பாடு அல்லது மன்னர்கள் மற்றும் பேரரசர்களிடம் காட்டிய தனிப்பட்ட விசுவாசம் போன்ற பழைய அதிகாரத் தன்மைகளை அரசுகள் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருந்தன. இதன் விளைவாக, அரசாங்கங்கள் நிச்சயமற்ற மற்றும் பலவீனமான ஒரு நிலையில் தங்களை உணர்ந்தன. தங்களின் சட்டப்பூர்வத் தன்மையை வலுப்படுத்தவும், பொதுமக்களின் ஆதரவைத் தக்கவைக்கவும் தேசியவாதக் கருத்தியல்களை அவை அதிகளவில் ஊக்குவித்தன. தேசியவாதம் மக்களுக்கு ஒரு புதிய கூட்டு அடையாளம் மற்றும் விசுவாச உணர்வை அளித்து, அவர்களை அரசுடன் இறுக்கமாகப் பிணைத்து வைத்திருக்க உதவியது.
அரசாங்கங்கள் வெறுமனே நாடுகளை புதிதாக உருவாக்கிக் கொண்டன அல்லது மக்களைப் பற்றிய கருத்துக்களை ஒன்றுமில்லாததிலிருந்து புதிதாக ஒன்றை உருவாக்கின என்பது இதன் அர்த்தமல்ல. மக்களிடையே ஏற்கனவே இருந்த உணர்வுகள், அடையாளங்களை அரசாங்கங்கள் தமது நிலைத்திருப்பிற்காகக் கட்டியெழுப்பியபோதுதான் அவை தேசியவாதம் என்ற கட்டத்தை அடைந்தன என்று ஹொப்ஸ்வாம் குறிப்பிடுகிறார். முற்றிலும் புதிய உணர்வுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே இருந்த உணர்வுகளை ஊக்குவிப்பதன் மூலமும் வளர்ப்பதன் மூலமும் அரசுகள் தங்கள் நிலையை வலுப்படுத்திக் கொண்டன. இந்தக் காலகட்டத்தில் ஐரோப்பாவின் பெரும்பகுதியைப் பாதித்த இதுபோன்ற பிரச்சினைகளை பிரிட்டன் நேரடியாக அனுபவிக்கவில்லை என்றாலும் தனது காலனிகளில் இதேபோன்ற ஒரு சிக்கல்கள் பலவற்றை அது எதிர்கொண்டது. ஒரு புதிய அரசியல் அமைப்பை எவ்வாறு நியாயப்படுத்தி அதனை சட்டப்பூர்வமாக்குவது என்பது அதற்கு பெரும் தலையிடியாக அமைந்தது. ரூட்யார்ட் கிப்ளிங்கின்(Rudyard Kipling) பிரபலம் பெற்ற வாசகமான “வெள்ளை மனிதனின் சுமை (white man’s burden)” என்ற கருத்து, உலகின் பிற பகுதிகளுக்கு நாகரிகத்தையும் முன்னேற்றத்தையும் கொண்டு வருவது பிரிட்டனின் கடமை என்று குறிப்பிட்டது. இந்தக் கருத்து பிரிட்டனில் வசிக்கும் மக்களுக்கு தமது பேரரசை நியாயப்படுத்த உதவியது எனலாம். ஆனால் காலனிகளில் நேரடியாகப் பணியாற்றிய காலனிய நிர்வாகிகளுக்கு இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. தாங்கள் ஆட்சி செய்யும் மக்களிடையே பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டப்பூர்வத்தன்மையை நிலைநாட்ட, அவர்களுக்கு நடைமுறைக்குப் பொருத்தமான வழிமுறைகள் தேவைப்பட்டன.
ஐரோப்பிய காலனித்துவ சக்திகள், தாங்கள் மற்றவர்களை ஆளும் வெளியாட்கள் என்பதை அறிந்திருந்தே இருந்தன என்று பெனடிக்ட் ஆண்டர்சன் (Benedict Anderson) சுட்டிக்காட்டுகிறார். இதன் காரணமாக தமது காலனிகளில் அவர்கள் தமது ஆட்சியின் சட்டபூர்வத்தன்மை குறித்த சிக்கலை தொடர்தேச்சையாக எதிர்கொண்டனர். ஆண்டர்சனின் பிரகாரம் காலனித்துவ ஆட்சியாளர்கள் பெரும்பாலும் அரைகுறையான சட்டபூர்வ உரிமை கோரல்கள் மூலமாகவே தங்கள் அதிகாரத்தை நியாயப்படுத்தவும் சட்டபூர்வமாக்கவும் முயன்றனர். கைப்பற்றப்பட்டு, காலனித்துவக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட முன்னாள் உள்ளூர் ஆட்சியாளர்கள் அல்லது அவர்களது முறையான வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் என்று தங்களைக் காட்டிக்கொள்வது சட்டபூர்வ உரிமை கோரலுக்கான ஒரு பொதுவான வழிமுறையாக இருந்தது. இருப்பினும், சட்டபூர்வத்தன்மை என்பது அரசியல் கோரிக்கைகள் மூலம் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருக்கவில்லை என்று ஆண்டர்சன் வாதிடுகிறார். இதனாலேயே தொல்லியல் ஆய்வுக்கும் காலனித்துவத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் விளக்குகிறார். தொல்லியல் ஆராய்ச்சியை ஊக்குவிப்பதன் மூலமும் பண்டைய நினைவுச்சின்னங்களைப் பாதுகாப்பதன் மூலமும் ஒரு நாட்டின் வரலாற்றுப் பாரம்பரியத்தின் பாதுகாவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதன் மூலமும், காலனித்துவ அரசாங்கங்கள் தங்கள் ஆட்சியை நன்மை பயக்கின்ற மற்றும் சட்டபூர்வமான ஆட்சியாக முன்னிறுத்த முடிந்தது. எனவே அந்தவகையில், தொல்லியல் என்பது வெறுமனே ஒரு கல்விசார் ஆய்வுப்புலம் என்பதை விட காலனித்துவ அரசின் அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கான பரப்பாகவும் இருந்தது. பெனடிக்ட் ஆண்டர்சன் (Benedict Anderson) இது தொடர்பில் விளக்கும் போது “பிரமிக்க வைக்கும் பழங்கால நினைவுச்சின்னங்களை மீட்டெடுப்பதில் தொல்பொருள் ஆய்வுகள் பெருமளவில் கவனம் செலுத்தியமையானது, அக்காலத்திய கீழைத்தேய அறிஞர்களின் ஆர்வங்களையும் போக்குகளையும் ஓரளவிற்குப் பிரதிபலித்திருக்கலாம். இருப்பினும், இந்தத் திட்டங்களில் முதலீடு செய்யப்பட்ட பெரும் தொகையானது, காலனித்துவ அரசுக்கு அதன் சொந்த அரசியல் காரணங்களும் இருந்தன என்பதையே எடுத்துக்காட்டுகிறது” என விளக்கிச் செல்கிறார்.
தொல்லியல் குறித்த காலனித்துவ அரசின் ஆர்வம் தொடர்பாக தொல்லியல் படைப்புகளை மீட்டெடுத்து உள்ளூர் பண்பாட்டை பாதுகாத்தல், நினைவுச் சின்னங்களை உருவாக்குதல், பண்டைய நாகரீகங்களுக்கு அரசியல் அங்கீகாரம் வழங்குதல் என்ற மூன்று முக்கியக் காரணங்களை ஆண்டர்சன் குறிப்பிடுகிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட தொல்பொருள் ஆய்வுகளிலும் இதே மாதிரியான போக்கையே காண முடிகிறது. 1895 ல் சிகிரியா குறித்த எச். சி. பி. பெல்லின் (C. P. Bell) அறிக்கை விவாதிக்கப்பட்ட பிறகு, பர்ரோஸ் மற்றும் முர்ரே ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று வந்ததன் பின்னர், தங்கள் வருகையின் நினைவாக ஒரு நினைவுச் சின்னத்தை அங்கு விட்டுச் செல்ல விரும்புவதாக குறிப்பிட்டிருந்தனர். அவர்கள் ஒரு போத்தலைக் கண்டுபிடித்து,அதற்குள் அக்காலத்திய சில செய்தித்தாள்களையும் நாணயங்களையும் வைத்தனர். புறப்படுவதற்கு முன்பு ஒரு பௌத்த மதகுருவும் ஒரு சைவ மதகுருவும் வந்து, அந்தப் போத்தலைப் பாதுகாப்பதற்காகத் தாங்கள் தமது பிரார்த்தனைகளைச் செய்யலாமா என்று கேட்டனர். கூட்டத்தின் குறிப்புகளின்படி, இந்தக் கோரிக்கை சங்கத்தின் உறுப்பினர்களிடையே சிரிப்பை ஏற்படுத்தியது. அவர்கள் கேட்டவாறே அனுமதியும் வழங்கப்பட்டது. அந்த நிகழ்வைச் சிறப்பிப்பது எவ்வாறு என யோசித்துக்கொண்டிருந்தபோது, தானும் பர்ரோஸும் “கடவுள் அரசியைக் காக்கட்டும்” (God Save the Queen) என்ற பாடலைப் பாடியதாக முர்ரே பிற்காலங்களில் நினைவு கூர்ந்தார். அதே கூட்டத்தில், சிகிரியாவில் நடந்த நாசவேலைகள் குறித்து பெல் புகாரளித்ததுடன், ஆர். டபிள்யூ. லீவர்ஸ் (R. W. Levers), அந்த இடத்தின் சுவரில் தனது பெயரை எழுதியதை ஒப்புக்கொண்டு, தன்னை ஒரு நாசகாரன் என்று நகைச்சுவையாக விவரித்தார். காலனித்துவ இலங்கையில் தொல்பொருள் ஆய்வு என்பது வெறுமனே ஒரு நடுநிலையான கல்விசார் செயல்பாடாக மாத்திரம் இருக்கவில்லை என்பதையே இந்தச் சம்பவம் சுட்டிக்காட்டுகிறது. தொல்பொருள் ஆய்வு என்பது காலனித்துவ அதிகாரம் மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மையுடன் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்தது என்ற பெனடிக்ட் ஆண்டர்சனின் வாதத்தை இது வன்மையாக ஆதரிக்கிறது. அனைத்துத் தொல்பொருள் ஆய்வுப் பணிகளும் சிக்கலானவை என்பதாக இதனைப் புரிந்துகொள்ளக் கூடாது. மாறாக, முற்றிலும் கல்விசார்ந்ததாக இருக்க வேண்டிய துறைகளில்கூட அரசியல் அதிகாரம் மற்றும் ஆட்சியுரிமை குறித்த கேள்விகள் இருந்தன என்பதே இங்குள்ள பிரச்சினையாகும். ஒரு பழங்கால நினைவுச்சின்னத்தில் ஒருவரின் பெயரை எழுதுவதும், அந்த இடத்தில் பிரிட்டிஷ் தேசிய கீதத்தைப் பாடுவதும் உடைமை மற்றும் அதிகார உணர்வை அப்பட்டமாக பிரதிபலிக்கின்றன. பிரிட்டிஷார் அந்த இடத்தை ஆய்வு செய்து, வரைபடமாக்கி, புனரமைத்து, ஆவணப்படுத்தியதால், அதன் மீது ஒரு சிறப்பு உரிமையைப் பெற்றுவிட்டார்கள் என்பதே இதில் உள்ள மனப்பான்மையாக இருந்தது. இதனாலேயே தொல்பொருள் ஆய்வு என்பது அறிவுசார் பகுதியாக மட்டுமல்லாமல், காலனித்துவ உரிமை, அதிகாரம் மற்றும் ஆட்சிக்கான சட்டபூர்வத்தன்மை பற்றிய கருத்துக்களுடனும் பிணைக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்படுகிறது.
ஒருவகையில் இலங்கையின் பண்டைய தொல்பொருள் தளங்களுடனான தங்கள் தொடர்பை நியாயப்படுத்திக் கொள்வதற்கு ஆரிய இனக் கோட்பாடு பிரிட்டிஷாருக்கு ஒரு கூடுதல் வாய்ப்பையும் வழங்கியது எனலாம். ஆரியக் கோட்பாட்டைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரைகள், காலனித்துவ தொல்பொருள் ஆய்வு, காலனித்துவ ஆட்சிக்கு சட்டபூர்வமான அங்கீகாரத்தை உருவாக்க உதவியது என்ற பெனடிக்ட் ஆண்டர்சனின் கருத்துடன் இவை நெருக்கமாகப் பொருந்துகின்றன. பண்டைய தளங்களை ஆய்வு செய்து, வரைபடமாக்கி, புனரமைத்த காலனித்துவ அதிகாரிகளுடன் தொடர்புபடுத்தக்கூடிய கௌரவத்தைக் கொண்ட வரலாற்று நினைவுச்சின்னங்களாக அவை மாற்றப்பட்டன. அனுராதபுரமும் பொலன்னறுவவும் தமிழ் கலைஞர்களால் கட்டப்பட்டன என்ற பர்ரோஸின் வாதத்திற்கு எதிராக எழுந்த வலுவான எதிர்வினையில் இதற்கான சான்றைக் காணலாம். பண்டைய நகரங்களின் கலைச் சாதனைகள், தாங்கள் தொடர்பு கொண்டிருப்பதாக நம்பிய ஆரியக் குடும்பத்திற்குச் சேர வேண்டும் என்று அவர்கள் விரும்பியதனாலேயே சங்கத்தின் பல உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பர்ரோஸின் வாதத்தால் தங்கள் “ஆரிய உணர்வுகள்” புண்பட்டதாக அந்த உறுப்பினர்கள் பின்னர் கூறினர். அந்த நினைவுச்சின்னங்கள் ஆரியர் அல்லாதவர்களாகக் கருதப்படும் மக்களின் படைப்பாக ஏற்றுக்கொள்ளப்படும் போது அந்தத் தளங்களுடன் பிரிட்டிஷார் உரிமை கோருவதற்கான குறியீட்டுத் தொடர்பு பலவீனமடைந்து போயிருக்கும். அந்த நினைவுச்சின்னங்களை ஆரியப் படைப்பாளிகளுக்கு உரியதாக்குவதன் மூலம், பிரிட்டிஷார் தங்களையும் அதே வரலாற்றுப் பாரம்பரியத்துடன் தொடர்புடையவர்களாக எளிதாகக் கருதிக்கொள்ள முடிந்தது. இதன் மூலம், இந்தத் தளங்களின் மீதான அவர்களின் கட்டுப்பாடும், நிர்வாகமும் சட்டபூர்வமானதாகத் தோன்றின. இலங்கையில் நீண்டகாலமாக இருந்துவரும் ஆரியர்களின் இருப்பின் சமீபத்திய பிரதிநிதிகளாகத் தங்களை அவர்களால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது.
இலங்கையும் ஆரியக் கோட்பாட்டின் பிற்காலமும்
இந்தக் கட்டுரையின் முந்தைய பகுதிகள், இலங்கையில் ஆரியக் கோட்பாட்டின் வரலாற்றை, மொழிக் கோட்பாடு என்ற ரீதியிலும் இனக் கோட்பாடு என்ற ரீதியிலும் ஆராய்ந்தன. மட்டுமன்றி, ரோயல் ஆசியச் சங்கக் கிளையினரின் சஞ்சிகைகள் (RASCB) இக்கோட்பாட்டை எவ்வாறு வலுவாக ஊக்குவித்து ஆதரித்து வந்தன என்பதும் மேலே எடுத்துக்காட்டப்பட்டது. அதுபோலவே ஆரியக் கோட்பாட்டை அது உருவான அரசியல் சூழலிலிருந்து பிரிக்க முடியாது என்பதை இக்கட்டுரை மேலும் விளக்கியதுடன் அதனை இலங்கையின் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியுடனும் பரந்த காலனித்துவத் திட்டத்துடனும் நெருக்கமாகப் பிணைக்கப்பட்டிருந்ததையும் இக்கட்டுரை எடுத்துக்காட்டியது. ஆர். ஏ. எல். எச். குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளபடி, இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆரியக் கோட்பாடு இலங்கையின் பொதுவான அறிவுசார் கண்ணோட்டத்தின் ஒரு பகுதியாக மாறியிருந்தது போலவே பொதுப் பண்பாட்டிலும் மக்கள் சிந்தனையிலும் வெகுவாக ஊடுருவியும் இருந்தது. இந்தத் தாக்கத்தைக் காட்ட பல எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட முடியும். 1897 ல், ‘தி புத்திஸ்ட்’ செய்தித்தாள் “ஆரியச் சிங்களவர்கள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வெளியிட்டமை, 1899 களில், ஆரிய சிங்களவர்களின் பெயர்களைக் கொண்ட ஒரு சிறுநூல் வெளியிடப்பட்டமை, 1910 ல், ‘தி ஆரியன்’ என்ற பெயரில் ஒரு இதழ் நிறுவப்பட்டமை மற்றும் 1931 ல், ஏ. ஈ. பிளேஸின் பாடசாலைளுக்கான இலங்கை வரலாறு என்ற நூல் விஜயனை சிங்களப் பேரரசின் நிறுவனர் என்று மட்டும் குறிப்பிடாமல் ஆரிய இனத்தின் நிறுவனர் எனத் திருத்தப்பட்டமை போன்றன அதற்கான உதாரணங்களாகும். பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஆரியக் கோட்பாடு தோன்றியிருந்தாலும், அது நீண்ட காலமாக இலங்கைச் சமூகத்தில் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வருவதனையே இந்த உதாரணங்கள் எடுத்துக்காட்டுகின்றன. பல்வேறு சந்தரப்பங்களில் இன அடையாளம், வரலாறு, பண்பாட்டு போன்றவை தொடர்பான பொது விவாதங்களின் ஒரு பகுதியாகவும் அது மாறியது.
எவ்வாறாயினும் இலங்கையில் தொடக்ககால இந்தோ-ஆரியக் குடியேறிகளின் வருகையை நிரூபிக்கும் தொல்பொருள் சான்றுகள் தற்போது இல்லை என்று கே. எம். டி சில்வா (K. M. de Silva) சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக வட இந்தியாவின் மேற்கு அல்லது கிழக்குக் கடற்கரைகளிலிருந்து ஏதேனுமொரு இடம்பெயர்வைத் தெளிவாகக் காட்ட முடியுமான தொல்பொருள் கண்டுபிடிப்புகள் எதுவும் இதுவரையில் இல்லை என்றே அவரது வாதம் அமைகிறது. அந்தவகையில் இலங்கைச் சூழமைவைப் பொறுத்தவரையில், ஆரியக் கோட்பாடானது பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அது முதன்முதலில் தோன்றியபோது இருந்ததைப் போலவே இன்றும் உள்ளதாகக் கூற முடியும். அதாவது மொழிகளுக்கு இடையிலான ஒற்றுமைகளை, குறிப்பாக சேர் வில்லியம் ஜோன்ஸால் அடையாளம் காணப்பட்ட மொழியியல் சார்ந்த தொடர்புகளை விளக்கப் பயன்படுத்தப்படும் ஒரு கோட்பாடாக மாத்திரமே அதைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. வேறுவிதமாகக் கூறினால், சமஸ்கிருதம் மற்றும் சிங்களம் போன்ற மொழிகளுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக மொழியியல் சான்றுகள் சுட்டிக்காட்டினாலும், ஆரிய இனக் கோட்பாட்டுடன் இணைக்கப்பட்ட முடியுமான இடம்பெயர்வு நிகழ்வுகளை நிரூபிக்கும் உறுதியான தொல்பொருள் சான்றுகள் இன்னமும் இல்லை. அந்தவகையில் இனத்தைப் பற்றிய அனுமானங்களை விடவும், மொழிகளுக்கு இடையேயான உட்கிடையான ஒற்றுமை, வேற்றுமைகள் குறித்த விளக்கங்களே ஆரியக் கோட்பாட்டின் அடித்தளமாக உள்ளதாகப் புரிந்து கொள்ள முடியும்.
உசாத்துணைகள்:
- Hitler, Mein Kampf quoted in Leon Poliakov. The Aryan Myth. p.2.
2. Edward Said, Culture and Imperialism, (New York: Vintage Books, 1993) p.14.
3. William Jones quoted in Garland Cannon, The Life and Mind of Oriental Jones (Cambridge: Cambridge University Press, 1990). p.242.
4. See Richard H.Popkin, Isaac la Peyrere, His Life, Work and Influence (Leiden, New York, Kobenhavn and Koln: E.J.Brill, 1987).
5. Cannon, p.242.
6. Cannon, p.245.
7. R.A.L.H. Gunawardana, ‘The People of the Lion’,Sri Lanka Journal of the Humanities, vol.V., nos.1 and 2, 1979, p.28.
8. In 1852 de Alwis claimed that Pali had lent Sinhalese terms connected with the ‘national religion’ of the Sinhalese, while Sanskrit had provided terms associated with the arts and sciences, and Aryan was responsible for ‘native terms expressive of the common wants of mankind before the refined organization of society.’ (James de Alwis, Introduction to The Sidath Sangarawa [Colombo: William Skeen, Government Printer of Ceylon, 1965], p.xlviii.]In 1859 Tennet agreed with de Alwis in regard to Pali and Sanskrit influences, but wrote of no Aryan influence (Gunawardana, p.29).
9. R. A. L. H. Gunawardana, p.29
10. As I discuss in the next section, many of the outlets for scholarly debate in areas such as philology � for example, the Royal Asiatic Society, Ceylon Branch � concentrated their attention on Sinhalelse, rather than Tamil. The founding of The Taprobanian journal in 1885 attempted to redress this imbalance, but publication was stopped shortly after the first issues came out.
11. Address by Justice Stark at the first general meeting, Journal of the Royal Asiatic Society, vol.I, 1845, pp.1-5.
12. Vijaya is commonly believed to have founded the Sinhalese race
when he came from India with five hundred of his followers.
13. Reverend Robert Spence Hardy, ‘On the Language and Literature of the Singhalese.’ Journal of the Royal Asiatic Society (Ceylon Branch), vol.I, 1845, pp.99, 101.
14. Hardy, p.104.
15. Reverend J.G.MacVicar, ‘On the Elements of the Voice, Viewed in Reference to the Roman and Singhalese Alphabets, Commending the Writing of Singhalese in Roman Letters’. Journal of the Royal Asiatic Society, vol.I, 1845, pp.38-58.16
16. Muller, quoted in Gunawardana, p.29.
17. Gunawardana, p.29.
18. Leon Poliakov, The Aryan Myth, p.190.19
19. Muller, quoted in Gunawardene, p.27.
20. Gunawardana, p27.
21. Poliakov, p.214. At the University for Strasbourg inaugural lecture in May 1872, Muller stated, ‘How many misunderstandings and how many controversies are due to what is deducted by arguing from language to blood-relationship or from blood-relationship to language. Aryan and Semitic languages exist but it is antiscientific, unless one realizes the degree of license one is employing, to speak of an Aryan race, Aryan blood, or Aryan skulls.’
22. Poliakov, p.255.
23. I have divided my discussion of the history of the Aryan theories in Ceylon into sections demarcated by dates. The writings that I encountered after 1880 display a familiarity with the terms of debate, a result of the gradual process of refinement of the theory’s central ideas that took place during the end of the eighteenth and the beginning of the nineteenth centuries. In addition, the writings after 1880 betray a high degree of emotional involvement in the debate, which earlier had been comparatively dry and academic. A possible explanation is that the period of 1874 to 1914 represents ‘the great imperial phase of British history’,when the ‘scramble for Africa’ took place. It was in the middle of this period, during the years 1884 to 1890, that the British Empire gained 37 million square miles and acquired 57 million more people. While the relationship of these external events to contemporary orientalist scholarship in Ceylon is by no means evident, the political legitimacy that I argue the British attempted to gain through the Aryan racial theory may explain the curiously exact overlap in the dates of these two phenomena.
24. Ceylon in Our Times, 1894 to 1969 (The Colombo Apothecaries Co., Ltd., 1969, p.14. In addition, Yasmine Gooneratne writes that the RASCB `is an important part of the literary history of the period, for it gathered the outstanding talent of colonial society into its fold, and provided a forum for the exchange of ideas and a Journal for the publication of original research.’ (Yasmine Gooneratne, English Literature in Ceylon, 1815-1878 [Colombo: Tisara Prakasakayo, 1968], pp.59-60).
25. Nira Wickremasinghe, Ethnic Politics in Colonial Sri Lanka, New Delhi, Vikas Publishers, 1995. p.9. R.A.L.H. Gunawardana makes the same point in ‘People’, p.31
26. Drs C.F. and S.B.Sarasin, ‘Outline of Two Years’ Scientific Researches in Ceylon’,Journal, vol.IX, 1885-86, p.292.
27. Ibid., p.292. Besides the fact that their research methods show that they had made their conclusions prior to comparing the skulls (they already refer to the specimens as representative of each `race’), the method used also speaks of liberties taken in Ceylon that may not have been used in Europe � the Sarasins write that they dug up the skulls themselves, and therefore were ‘sure that no confusion has arisen’ (Ibid., p.292).
28. Ibid., p.293.
29. Ibid., p.293
30. Ibid., p.294.
31. Professor R.Virchow, ‘The Veddas of Ceylon, and their Relation to the Neighbouring Tribes’, p.490.
32. See ‘Professor Virchow’s Ethnological Studies of the Sinhalese Race.’ Translated by W.R.Kynsey and J.D.MacDonald, pp. 267-88.
33. Virchow, ‘The Veddas’, p.380. The only outlet for opinions that went against the RASCB grain was a journal titled The Taprobanian, which touted itself as ‘a Dravidian Journal of Oriental Studies in and around Ceylon in Natural History, Archaeology, Philology, History, &c.’ Unlike the Journal of the RASCB, The Taprobanian had an extremely short life, as it was only published between October 1885 and June 1888. Although it did accept articles, for the most part it acted as a mouthpiece for its editor, Hugh Nevill, a member of the Ceylon Civil Service for more than twenty years, the bulk of this time spent as the Assistant Government Agent in Trincomalee. The argument to which Nevill returned again and again in The Taprobarian was that the Sinhalese language was ‘of Dravidian structure and an Aryan glossary’. While this theory would be picked up later and expanded upon by Ceylonese scholars, such as W.F. Gunawardhana in the 1920, Nevill’s journal stood alone in the mid- to late- 1880s. (See Hugh Nevill, ‘Notes and Queries’. The Taprobanian, April 1886, p.103.)
34. Copleston quoted in Elizabeth Harris, Crisis, Competition and Conversion: The British Encounter with Buddhism in Nineteenth Century Sri Lanka, Ph.D.Dissertation, Post-Graduate Institute of Pali and Buddhist Studies, University of Kelaniya, p.277.
35. Harris, p.317.
36. Proceedings of 1885, Journal of the RASCBB vol.IX, 1885-86, p.cxxxiii.
37. Ibid., p.cxxxiv.
38. Ibid., p.cxxxiii.
39. Ibid., p.cxxxv.
40. Ibid., p.cxxxvi
41. Ibid., p.xcviii.
42. Louis Nell, ‘The Ethnology of Ceylon’ ,Journal of the RASCB, vol.XII, no.42, 1892, pp.242-50.
43. Strikingly, it is Hannah Arendt, in The Origins of Totalitarianism, who most unequivocally makes the case that the Aryan theory should be understood within the context of the universalizing instincts of the eighteenth century. In a long footnote, written into a chapter in which she discusses the origins of ‘race-thinking’, Arendt vehemently takes the blame for ‘race-thinking’ away from the shoulders of the philologists responsible for the Aryan theory: ‘As for the philologists of the early nineteenth century, whose concept of “Aryanism” has seduced almost every student of racism to count them among the propagandists or even inventors of race-thinking, they are as innocent as innocent can be. When they overstepped the limits of pure research it was because they wanted to include in the same cultural brotherhood as many nations as possible. In the words of Ernest Seilliere… “There was a kind of intoxication: modern civilization believed it had recovered its pedigree…and an organism was born which embraced in one and the same fraternity all nations whose language showed some affinity with Sanskrit.” In other words, these men were still in the humanistic tradition of the eighteenth century and shared its enthusiasm about strange people and exotic cultures.’ (Hannah Arendt, Imperialism. Part II of The Origins of Totalitarianism; San Diego, New York and London:Harcourt Brace and Co., 1968. p.40.) For an opposing interpretation of the Aryan theory which stresses its anti-Semitism, see Leon Poliakov, The Aryan Myth, in which it is argued that the Romantics’ obsession with India was due to ‘a desire to discover in the ancient Orient a rival society to that of the Hebrew’ (p.185). Poliakov points to late nineteenth-century philosophers, such as Ernest Renan, as responsible for the anti-Semitic slant that was given the theory once it came to include race. For example, he quotes Renan as having written, that the Aryans were the newly chosen people: ‘Once this mission [monotheism] was accomplished, the Semitic race rapidly declined and left it to the Aryan race alone to lead the march of human destiny.’ (Ernest Renan, L’Avenir religieux des societes modernes, 1860, quoted in Poliakov, p.207.) In addition, see Martin Bernal’s Black Athena for the further argument that ancient Greek civilization was refashioined as ‘Aryan’ by nineteenth-century philologists in order to create a ‘pure privileged genealogically useful past’ free of Egyptian, Semitic and Other cultural influences (Edward Said, Culture and Imperialism, p.15).
44. Said, Culture and Imperialism, p.152.
45. Ibid., p.152.
46. Cohn, p.45
47. Max Muller, Preface to The Upanishads, p.xl. Italics mine.
48. C9: Lot 5/21 – 25 July 1880.
49. Ibid., p.4.50
50. Ibid., p.5.
51. Cohn, p.21.
52. Cohn, p.21.
53. Wickramasinghe, pp.9-10. M.Banton, The Idea of Race (1982).
54. Gunawardana, p.30.
55. De Silva, p.317.
56. Proceedings of 1885 in Journal, p.cxxxiv
57. Ibid., p.cxxxiv.
58. Ibid., p.cxxxiii.
59. De Silva, p.292.
60. Edinburgh Review (1851) quoted in Eldridge, p.31
61. Gooneratne, p.75.
62. John Ferguson, Ceylon in the Jubilee Year (London: John Haddon and Co., 1887)
63. Proceedings, 1885, Journal, vol.IX, p.ixxxiv,
64. Eric Hobsbawm, Nations and Nationalism since 1780 (Cambridge: Cambridge University Press, 1990), p.80.
65. Ibid., p.84.
66. Ibid., p.92.
67. Joseph Chamberlain, Colonial Secretary between 1895 and 1903,
summed up the attitude of the ‘white man’s burden’ well: ‘In carrying
out this work of civilization we are fulfilling what I believe to be our
national mission.’ (Eldridge, p.194)
68. Ibid., p.174
69. Benedict Anderson, Imagined Communities, p.180.
70. Ibid., pp.180-2.
71. Ibid., p.182.
72. H.C.P.Bell, ‘Report on Sigiriya’ in Journal, vol.XIV, 1895, p.57.
73. Ibid., p.57.
74. Ibid., p.58
75. Journal, 1885, p.cxxxiii.
76. Gunawardana, p.31.
77. K.M.de Silva, A History of Sri Lanka (Delhi: Oxford University Press
1891), p.9.
மரீஸா ஏன்ஜல் (Marisa Angell) இனத்துவம், வரலாறு, கட்டிடக்கலை எனவற்றில் பல்வேறு ஆய்வுகளை செய்துவருவதுடன், பல கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இக்கட்டுரை, Dattathreya C. S. மற்றும் Mithran Tiruchelvam ஆகியோரால் இணைந்து தொகுக்கப்பட்ட Culture and Politics of Identity in Sri Lanka என்னும் கட்டுரைத் தொகுப்பில் மூன்றாவது கட்டுரையாக இடம்பெற்றுள்ளது. Understanding the Aryan Theory என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை 1997ஆம் ஆண்டு எழுதப்பட்டது.