–நயோமி கிளேன்
செயற்கை நுண்ணறிவின் (AI) அபரிமிதமான வளர்ச்சி மற்றும் பயன்பாடு குறித்த விவாதங்களில், ‘பிம்பத்தோற்றம் (Hallucinate)’ என்ற சொல்லாடலின் பிரயோகத்தைக் கண்டுகொள்ள முடியும். பொதுவாக செயற்கை நுண்ணறிவு அமைப்பொன்று தவறான அல்லது புனையப்பட்ட தகவல்களை வழங்கும் போது இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. சிலர் இதனை பயனுள்ளதொரு சொல்லாட்சியாக கருதிய போதிலும் செயற்கை நுண்ணறிவின் மீது அதீதமான மனிதத்தன்மையை சுமத்தி விடுவதால் ஏற்படும் பாதகத்தினைச் சுட்டும் சொல்லாட்சியாகவும் கருதிகின்றனர்.
ஆக்கத்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் (generative AI) ஆதரவாளர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் உரையாடல் தானியங்கிச் செயலிகள் (AI chatbots) வழங்குகின்ற புனையப்பட்ட அல்லது போலியான விபரிப்புக்களையும் பதில்களையும் குறிப்பதற்காக ‘பிம்பத்தோற்றம் (Hallucinate)’ என்ற சொல்லாட்சியைப் பயன்படுத்துகின்றனர். உதாரணத்திற்கு, யதார்த்தத்தில் இல்லாத ஒன்று தொடர்பாக செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தானியங்கிச் செயலி (AI chatbots) ஒன்றிடம் வினவும் போது, அது மிக உறுதியான பதில்களை வழங்குவதுடன் அதனை ஆதாரப்படுத்துவதற்கான போலியான ஆதாரங்களையும் அடிக்குறிப்புகளையும் கூட அதனால் வழங்கிவிட முடியும். கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியான சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் இந்தப் பிரச்சினையை முழுமையாகத் தீர்ப்பதற்கான வழியை இதுவரை யாருமே கண்டுபிடிக்கவில்லை என்று சமீபத்தில் கூறியிருந்தது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் இதுபோன்ற குறைபாடுகளை செயல்திறன் பிழைகள், செயற்கை நுண்ணறிவின் கோளாறுகள் அல்லது செயற்கை நுண்ணறிவின் போதாமைகள் போன்ற எளிமையான சொற்களால் குறிப்பிடுவதற்குப் பதிலாக “பிம்பத்தோற்றங்கள் (Hallucinate)” என்று ஏன் அழைக்கப்பட வேண்டும் என்ற கேள்வி தன்னளவில் மிக முக்கியமானது. பொதுவாக, பிம்பத் தோற்றம் அல்லது மாயத்தோற்றம் (Hallucination) என்ற சொல்லாட்சியானது உண்மையிலேயே இல்லாத விடயங்களை பார்க்கும், கேட்கும் அல்லது உணரும் மனித அனுபவங்களைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் உளவியல், ஆன்மீக மற்றும் மாயவாதக் கருத்துக்களுடனேயே இது நெருங்கிய தொடர்புகளைக் கொண்டது. இவற்றுக்கு அப்பால், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் செயல்திறன் கோளாறுகளைக் குறிப்பதிற்கு பிம்பத்தோற்றம் அல்லது மாயத்தோற்றம் (Hallucination) என்ற சொல்லைப் பயன்படுத்துவது மிகவும் சிக்கலானது. செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தினை அதனுடைய அசலான பண்பிலிருந்து பெயர்த்தெடுத்து அதனை மனித நுண்ணறிவாற்றலைப் போலவே அதிக புத்திசாலித்தனமானதாகவும் இயலுமைகளைக் கொண்டதாகவும் தோன்றச் செய்யும் பணியையே குறித்த பிரயோகங்கள் செய்கின்றன. செயற்கை நுண்ணறிவின் கோளாறுகளை “மாயத்தோற்றங்கள் (Hallucination)” என்று அழைப்பதன் மூலமாக அதன் ஆதரவாளர்கள், இந்த அமைப்புகளுக்கு மனிதர்களைப் போன்ற மனவமைப்பு அல்லது உணர்திறன்கள் உள்ளன என்ற தோற்றத்தையே அளிக்க முற்படுகின்றனர். பாரியளவிலான கணிணி மொழி மாதிரிகள் இறுதியில் ஒரு புதிய வகை நுண்ணறிவாக உருவாக்கப்பட்டு, அது மனிதகுலத்திற்கான ஒரு பரிணாம மாற்றத்தைக் கொண்டு வரக்கூடும் என்ற செயற்கை நுண்ணறிவுத் துறையில் உள்ள பரவலான நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் ஒன்றாகவும் இதனைப் புரிந்துகொள்ள முடியும்.
சொல்லப்போனால் உண்மையான பிம்பத்தோற்றங்கள் (Hallucinations), செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் நிகழ்வதில்லை. மாறாக அவற்றை உருவாக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் மற்றும் அவற்றை ஆர்வத்துடன் ஆதரிக்கும் பலரின் மனங்களில்தான் நிகழ்கின்றன. இவர்கள் யதார்த்தத்தில் இல்லாத விடயங்களைக் கற்பனை செய்வதுடன் அவற்றைக் காண்பதாகவும் குறிப்பிடுகிறார்கள். ஆழமான உண்மைகளை வெளிப்படுத்தக்கூடிய ஆன்மீக அனுபவங்கள் என்ற பொருளில் பிம்பத்தோற்றம் (Hallucination) என்ற சொல் உண்மையில் இங்கு நான் பயன்படுத்தவில்லை. மாறாக, தங்களுக்குப் முன்னால் உண்மையான சான்றுகள் எதுவும் இல்லாத விடயங்களை மக்கள், தாங்களாகவே நம்பவைக்கப்படுவதைப் விவரிக்கவே இந்தச் சொல்லாட்சி இங்கு பயன்படுத்தப்படுகிறது.
ஆக்கத்திறன் கொண்ட செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் (generative AI), மனிதகுலம் எதிர்கொள்ளும் பாரிய பிரச்சனைகள் பலவற்றிற்கான ஒரு தீர்வாக அடிக்கடி முன்வைக்கப்படுகின்றதை அவதானிக்க முடியும். இன்றைக்குள்ள பெரும் பிரச்சினைகளான வறுமை, நோய் நிலமைகள், பருவநிலை மாற்றங்கள், வேலைவாய்ப்பின்மை போன்றவற்றை அதனால் தீர்க்க முடியும் எனக் கூறி அதனூடாக செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது மனித குலத்தின் மீட்புக்கருவியாக சித்தரிக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி நவீன பொருளாதார மற்றும் தொழிநுட்ப வாழ்வமைப்புகளால் மனிதகுலம் இழந்த அறவாழ்வின் அம்சங்களை மீட்டெடுத்து, மக்களின் சுயசிந்தனைக்கும் அவர்களது தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழிவகைசெய்து சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்கும் ஒன்றாகவும் அது கற்பனை செய்யப்படுகிறது. ஒருபடி மேலே சென்று வினைதிறனான அரசாங்கங்களை உருவாக்குவதற்கான நம்பிக்கைகளையும் அவை ஏற்படுத்தியிருக்கின்றன. ChatGPT தொடங்கப்பட்டதிலிருந்து இதுபோன்ற வாக்குறுதிகளும் எதிர்பார்ப்புகளும் உருவாக்கப்பட்டு மிக நீண்ட கற்பனைகள் கட்டமைக்கப்பட்டு இருக்கின்றன.
எதிர்வு கூறல்கள், பரந்தளவிலான ஆராய்ச்சிகள், பணிகளை இலகுபடுத்தும் தன்மை போன்றனவற்றின் மூலம் மனிதகுலத்திற்கும் பூவுலகின் ஏனைய அம்சங்களுக்கும் நன்மை பயக்கும் ஆற்றலை செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் கொண்டுள்ள போதிலும் மேற்கூறப்பட்டவற்றைச் சாத்தியப்படுத்துவதற்கு தற்போதுள்ள பொருளாதார மற்றும் சமூக அமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு அமைப்பொழுங்கை தேடவேண்டி இருக்கிறது. வணிக இலாபம், போட்டி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் தனது முழுக் கவனத்தையும் செலுத்தும் அமைப்புகளுக்கு மாற்றாக மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்து, ஏனைய உயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு அமைப்பினாலாயே அத்தகைய நன்மைகளை நோக்கி பயணிக்க முடியும். அத்தகையதொரு அமைப்பு மாற்றத்தை ஏற்படுத்தாமல், செயற்கை நுண்ணறிவை குறுகிய வணிக நலன்கள், சுரண்டல்களில் இருந்து விடுவித்து நன்மைபயக்கும் ஒன்றாக கருதிவிட முடியாது.
நம்மிடையே காலூன்றியிருக்கும் தற்போதைய பொருளாதார அமைப்புக்கள், மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கோ அல்லது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கோ எவ்விதத்திலும் முன்னுரிமை அளிப்பதில்லை. பொதுமக்களையும் இயற்கையையும் ஆக்கிரமித்து அவற்றைச் சுரண்டுவதையும் அதனூடாக கொள்ளை இலாபத்தை அடைவதையுமே மையமாகக் கொண்டு அவை கட்டமைக்கப்பட்டுள்ளன. இக்கட்டமைப்புகள், அதிகாரத்தையும் செல்வத்தையும் ஒரு சிலரின் கைகளில் குவித்ததோடு, ஆழமான சமூக மற்றும் சூழலியல் சார்ந்த நெருக்கடிகளுக்கும் வழிவகுத்துள்ளன. இத்தகையதொரு நிலையில், செயற்கை நுண்ணறிவின் ஊடாக நிறுவப்படும் பிம்பக் கட்டுமானங்களின் சாத்தியங்கள் பூச்சியமாகி விடுகின்றன . மனித குலத்தை மீட்டு அதனை விடுதலையைடையச் செய்வதற்கான ஒரு கருவியாக அது தொழிற்படுவதற்குப் பதிலாக, ஏற்கனவே நிலவிவரும் ஏற்றத்தாழ்வுகளை வலுப்படுத்தவும், அதிகாரக் குவிப்பை ஊக்குவித்து, மக்களையும் இயற்கையையும் மேலும் சுரண்டுவதற்குமான வாய்ப்புகளை திறந்துவிடுவதற்குமே அது நிச்சயம் வழிவகுக்கும்.
செயற்கை நுண்ணறிவு பற்றிய இந்தக் கற்பனைகள் என்ன நோக்கத்திற்காகக் கட்டமைக்கப்படுகின்றன என்பதைக் கருத்தில் கொள்வது இங்கு அவசியமாகிறது. குறித்த வாக்குறுதிகள் அனைத்துமே அவற்றின் நீண்டகால விளைவுகள் எதுதொடர்பிலும் பிரக்ஞையின்றி மக்களை ஏற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் கவர்ச்சிகரமான கதைகளாகவே செயல்படகின்றன. மைக்ரோசாப்ட், ஆப்பிள், கூகிள், மெட்டா மற்றும் அமேசான் போன்ற உலகின் சில பெரும் நிறுவனங்கள், டிஜிட்டல் வடிவில் கிடைக்கும் மனித அறிவின் பெரும்பகுதியைச் சேகரித்து, அதைத் தங்களின் தனியுரிம செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் இணைத்துள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் எண்ணற்ற மக்களால் உருவாக்கப்பட்ட எழுத்துக்கள், படங்கள், சிந்தனைகள் மற்றும் படைப்புக்களையே பெரிதும் சார்ந்துள்ளதுடன் அவர்களின் அனுமதியோ ஒப்புதலோ எதுவும் இல்லாமலேயே இது செய்யப்படுகிறது. சிலவேளைகளில் இந்தச் செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகள் பல, தங்களைப் பயிற்றுவித்த கலைஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் படைப்பாளிகளுடன் நேரடியாகப் போட்டியிடவும் முடியுமான வாய்ப்புக்கள் உள்ளன.
இந்த நடைமுறை ஏற்றுக்கொள்ளத்தக்கதாகக் கருதப்படக்கூடாது. புத்தகங்கள், கட்டுரைகள், புகைப்படங்கள், ஓவியங்கள் மற்றும் பிற படைப்புகள் உட்பட, பெருமளவிலான பதிப்புரிமை பெற்ற பொருட்களைக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால், இவற்றின் சட்டப்பூர்வத் தன்மையைக் கேள்வி எழுப்பும் பல சவால்கள் எழுந்துள்ளன. இலாபத்தை நோக்கமாகக் கொண்ட நிறுவனங்கள், படைப்பாளர்களின் படைப்புக்களை அவர்களின் அனுமதியின்றி Stable Diffusion மற்றும் Dall-E 2 போன்ற நிரல்களுக்குள் உள்ளீடு செய்து, அந்தக் கலைஞர்களின் பாணியை மிகவும் ஒத்த புதிய படங்களை உருவாக்க முடியுமாகவுள்ள செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்க ஏன் அனுமதிக்க வேண்டும் என்பதே இங்குள்ள சிக்கலாகும். இதனால் குறித்த பெருநிறுவனங்களும் அதன் பயனர்களும் பயனடையலாமே தவிர அவற்றின் அசல் படைப்பாளிகள், தங்கள் படைப்புகள் இவ்வாறு பயன்படுத்தப்படுவது தொடர்பிலான எவ்விதமான இழப்பீட்டையோ பெறுவதில்லை.
பிரபல ஓவியரும் சித்திரக்கலைஞருமான மோலி கிராபில் (Molly Crabapple), செயற்கை நுண்ணறிவுத் தரவுத்தள நிறுவனர்கள், படைப்பாளிகளுக்குத் தெரிவிக்காமலும் அவர்களின் ஒப்புதல்களைப் பெறாமலும், பதிப்புரிமை பெற்ற பல படைப்புக்களை செயற்கை நுண்ணறிவுத் தளங்களில் பயன்படுத்துவதை கடுமையாக எதிர்த்து வருகிறார். மில்லியன் கணக்கான கலைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் அவர்களது உழைப்பைச் சார்ந்துள்ள நுண்ணறிவுத் தளங்கள், இதனைச் சாத்தியமாக்குவதற்குக் காரணமானவர்களைக் கவனத்தில் கொள்ளத் தவறிவிடுகின்றன. மோலி கிராபிலினால் (Molly Crabapple), எழுதப்பட்ட ஒரு திறந்த மடலில், சக்திவாய்ந்த பெருநிறுவனங்களால் வெளிப்படையாக மேற்கொள்ளப்படும் இந்தச் செயல்முறையை, வரலாற்றின் மிகப்பெரிய கலைத் திருட்டு என்று அவர் விவரித்துச் செல்கிறார்.
சட்டங்களும் விதிமுறைகளும் தெளிவாக வரையறை செய்யப்படாத பகுதிகளில் தொழில்நுட்ப நிறுவனங்கள் விரைவாக நுழைந்து விடுகின்றன. தற்போதுள்ள விதிகளும் சட்ட ஒழுங்குகளும் புதிய தொழில்நுட்பங்களுக்குப் பொருந்தாது என்று அவை வாதிடுவதுடன் மேலும், நிலவும் சட்ட ஒழுங்குமுறைகள் புத்தாக்கத்தைத் தடுக்கும் வகையில் அமைந்திருப்பதாகவும் அல்லது சீனா போன்ற போட்டியாளர்களுக்கான சாதகச் சூழலையே அது அது வழங்கும் எனவும் எச்சரித்து தமக்கான பொது ஏற்பைப் பெற்று அன்றாட வாழ்வில் ஆழமாக வேரூன்றிவிடுகின்றன. சமூகம் அதன் பரந்த சமூக, அரசியல் மற்றும் பொருளாதார விளைவுகளை மதிப்பிடத் தொடங்கும் நேரத்தில், அந்தத் தொழில்நுட்பம் சமூகத்தின் எல்லா மட்டங்களிலும் ஏற்கனவே பரவலாகிவிட்டதால், நீதிமன்றங்களும் கொள்கை வகுப்பாளர்களும் அதன் செல்வாக்கைத் கட்டுப்படுத்துவது கடினமாகதாகி விடுகிறது.
இந்தப் போக்கு பல முக்கிய தொழில்நுட்பத் திட்டங்களிலும் நிறுவனங்களிலும் காணப்படுகிறது. சட்டபூர்வ உரிமை மற்றும் சட்டபூர்வ அனுமதி குறித்த விவாதங்கள் தொடர்ந்துகொண்டிருந்தபோதே கூகிள் நிறுவனம், பெருமளவிலான புத்தகங்களையும் கலைப்படைப்புகளையும் ஸ்கேன் செய்யத் துவங்கியிருந்தது. பரந்தளவிலான சமூக மற்றும் ஒழுங்குமுறைகள் சார்ந்த கேள்விகள் தீர்க்கப்படுவதற்கு முன்பே எலான் மஸ்க்கின் விண்வெளித் திட்டங்கள் நடைமுறையாகின. இவ்வாறு ஒரு துறையிலும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆக்ரோஷமாக முன்னேறத் துவங்கின. தங்களது தொழிநுட்ப அடைவுகளைப் பரவலாக நிலைநாட்டிய பின்னரே சட்டம், அரசியல் சார்ந்த ஆட்சேபனைகளுக்கு அவை பதிலளிக்கத் துவங்கின. அரசியல் செல்வாக்கும் தேர்தல் பிரச்சாரங்களிற்கும் குறித்த தொழில்நுட்ப நிறுவனங்கள் அளித்த நன்கொடைகளும் அவை சட்ட அங்கீகாரத்தைப் பெறவும், கடுமையான ஒழுங்குமுறைகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ளவும் உதவியதாக விமர்சகர்கள் வாதிடுகின்றனர்.
The Age of Surveillance Capitalism என்ற நூலில், சொஷானா ஜுபாஃப் (Shoshana Zuboff) பொது வீதிகளையும் மக்களின் தங்குமிட வெளிகளையும் புகைப்படம் எடுப்பதற்காக கேமரா பொருத்தப்பட்ட கார்களை அனுப்பி, கூகுள் தனது ‘ஸ்ட்ரீட் வியூ (Street View)’ சேவையை எவ்வாறு அறிமுகப்படுத்தியது என்பதை விளக்கிச் செல்கிறார். அதனூடாக தனியுரிமை குறித்த வரையறைகளைத் தாண்டி, சமூகம் அவற்றின் தாக்கங்களைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொண்டு விவாதங்களைத் துவங்குவதற்கு முன்பே கூகுள் தனது நடவடிக்கைகளை முடித்திருந்தது. சட்டரீதியான சவால்களும் தனியுரிமை சார்ந்த வழக்குகளும் நடைமுறைக்கு வந்த நேரத்தில், ‘ஸ்ட்ரீட் வியூ (Street View)’ புதுமையானதாகவும், அன்றாட வாழ்வில் ஆழமாக ஒருங்கிணைக்கப்பட்டதாகவும் இருந்ததால் ஏற்கனவே பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் அத்தியாவசியச் சேவையாக அது மாறியிருந்தது. இந்த விவகாரத்தில் ஜெர்மனி ஒரு விதிவிலக்காக இருந்தபோதிலும் பெரும்பாலான நீதிமன்றங்கள் இந்தத் தொழில்நுட்ப விவகாரங்களில் தலையிட்டு அதனைக் கட்டுப்படுத்துவதில் தயக்கம் காட்டின. சக்திவாய்ந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் எவ்வாறு முதலில் புதிய யதார்த்தங்களை நிறுவிவிட்டு, பின்னர் சட்ட அமைப்புகளைத் திணறடிக்கின்றன என்பதையே இது விளக்குகிறது.
தற்போது மனித அறிவு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் ஆகியவற்றிலும் இதே போன்ற ஒரு செயல்முறை நடைபெற்று வருவதை அவதானிக்க முடியும். சொற்கள், படங்கள், இசை மற்றும் இணையவழிப் பதிவேற்றங்களின் பல்வேறு வடிவங்கள் சேகரிக்கப்பட்டு, மனித சிந்தனையையும் படைப்பாற்றலையும் ஒத்த செயற்கை நுண்ணறிவு அமைப்புகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. காப்பீட்டு உரிமை, ஒப்புதல் மற்றும் இழப்பீடு தொடர்பான கடுமையான சட்ட மற்றும் நெறிமுறைகள் நடைமுறையில் இருந்தபோதிலும், இந்தத் தொழில்நுட்பங்களை தன்னகத்தே கொண்டுள்ள நிறுவனங்கள் ஆக்ரோஷமாக முன்னேறி வருகின்றன. அவர்களது தொழில்நுட்ப மாதிரிகள், மிகவும் பரவலாகவும் செல்வாக்கு மிக்கதாகவும் மாறும் என்றும், அதன் விளைவாக சட்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் அவற்றை ஒரு தவிர்க்க முடியாத யதார்த்தமாக ஏற்றுக்கொள்வார்கள் என்றுமே அவர்கள் கருதுகின்றனர். சுருக்கமாகச் சொல்வதானால் செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியின் பிரம்மாண்டமான வேகம், அதன் சட்டப்பூர்வத்தன்மை குறித்த விவாதங்களை நீர்த்துப் போகச் செய்து விடும் என்றே குறித்த நிறுவனங்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவைச் சுற்றி வடிவமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் (Hallucinations) , இந்தச் செயல்பாட்டில் ஒரு முக்கியப் பங்கினை வகிக்கின்றன. செயற்கை நுண்ணறிவு சமூகத்தை நல்வழியில் மாற்றியமைக்கும், உலகளாவிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் முக்கிய பங்காற்றும், மற்றும் மனித வாழ்வை இலகுபடுத்தும் என்பன போன்ற கூற்றுகள், மனித அறிவையும் படைப்பாற்றலையும் பெருமளவில் சேகரித்துப் பயன்படுத்துவதை ஒரு அபகரிப்புச் செயலாகவும் தார்மீக மீறலாகவும் சுரண்டலாகவும் கருதாமல், ஒரு பொது நன்மையாக முன்வைக்க உதவுகின்றன. அதுமட்டுமன்றி அத்தகைய விவரிப்புகள், மனிதர்களின் கூட்டு உழைப்பைச் சுரண்டுவதாகக் கருதப்படக்கூடிய ஒன்றை நன்மை பயக்கும் ஒன்றாக முன்னிறுத்தும் அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவுடன் தொடர்புடைய அபாயங்களையும் தீங்குகளையும் நியாயப்படுத்தவும் அவற்றைக் குறைத்து மதிப்பிடவும் உதவுகின்றன. விளைவாக, செயற்கை நுண்ணறிவு தொடர்பான விமர்சனங்கள் இருந்தபோதிலும், அதன் விரிவாக்கமும் பரவலும் விரும்பத்தக்கதாகவும் அவசியமானதாகவும் ஆகிவிடுகிறது.
மேம்பட்ட செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் மனித இனத்தின் அழிவை ஏற்படுத்துவதற்கோ அல்லது மனிதகுலத்தின் சக்தியையும் கட்டுப்பாட்டையும் நிரந்தரமாகக் குறைப்பதற்கோ எவ்வளவு வாய்ப்புள்ளது என்று செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்களிடமும் கேட்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பைப் பற்றிபலரும் கேள்விப்பட்டிருப்பார்கள். அதன் சராசரி பதிலாக, மிகவுமே கவலையளிக்கும் வகையில் 10% வாய்ப்பு என்பதாக மாத்திரமே அமைந்திருந்தது.
இத்தகைய கடுமையான அபாயங்களைக் கொண்டிருக்கக்கூடிய தொழில்நுட்பங்களை உருவாக்கி வெளியிடுவதை மக்களால் எவ்வாறு நியாயப்படுத்த முடிகிறது என்ற நியாயமான கேள்வியில் இந்த அமைப்புகள் மகத்தான நன்மைகளையும் வழங்குகின்றன என்ற பிம்பக்கட்டமைப்பின் செல்வாக்கு இல்லாமலில்லை. கூறப்படும் இந்த நன்மைகளில் பலவும் ஊகங்களாகவும் சான்றுகள் அற்றவையாக இருந்தபோதிலும் கூட அவற்றின் செல்வாக்கினை கடந்து செல்ல முடியவில்லை. எனவே, செயற்கை நுண்ணறிவின் நேர்மறையான தாக்கங்கள் குறித்து முன்வைக்கப்படும் சில கூற்றுகளை ஆராய்தறிவது அந்தவகையில் அவசியமாகிறது.
1) கூற்று 01 : செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது பருவகால மாற்றங்கள் குறித்த சவால்களுக்கு தீர்வாக அமையும்.
செயற்கை நுண்ணறிவானது (AI) காலநிலை நெருக்கடியைத் தீர்க்க உதவும் என்பது அது குறித்து முன்வைக்கப்படும் கூற்றுக்களில் ஒன்றாகும். உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum), வெளியுறவுத் துறைக்கான கவுன்சில் (Council on Foreign Relations) மற்றும் பொஸ்டன் கன்சல்டிங் குரூப் (Boston Consulting Group) போன்ற அமைப்புகள், தரவு சார்ந்த முடிவுகளைப் பயன்படுத்தி கார்பன் உமிழ்வைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு சமூகத்தை உருவாக்குவதற்கும் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பங்கள் உதவும் என்று வாதிட்டு வருகின்றன. அதுமட்டுமன்றி, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிராந்தியங்களை நோக்கி தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே செயல்படுத்துவதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் உதவும் என்றும் அவை குறிப்பிடுகின்றன. கூகுளின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி எரிக் ஷ்மிட் (Eric Schmidt) இதேபோன்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தி இருந்தார். காலநிலை மாற்றம் உள்ளிட்ட மனிதகுலத்தின் மிகப்பெரிய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பபத்தினை அதன் அபாயங்களைக் கடந்து ஏற்றுக்கொள்வது அத்தியாவசியமாகிறது என்று அவர் வாதிட்டிருந்தார்.
எரிக் ஷ்மிட்டின் (Eric Schmidt) பிரகாரம், காலநிலை மாற்றம் போன்ற பெரும் பிரச்சனைகள், அவற்றைத் தீர்ப்பதற்கு மனிதகுலத்திடம் போதுமான அறிவு இல்லாததாலேயே ஏற்படுகின்றன. ஆனாலும் அது தொடர்பாக என்ன செய்ய வேண்டும் என்பதை துறைசார் வல்லுநர்களும், விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் பல தசாப்தங்களாக விளக்கி வருகின்றனர். பசுமை இல்ல (Green House) வாயு வெளியேற்றத்தைக் குறைக்கவும், சுவட்டு எரிபொருட்களின் அபரிமிதமான நுகர்வை குறைக்கவும் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். எனவே உண்மையில் பிரச்சனை என்பது, பிரச்சனையைப் பற்றிய அறிவின் பற்றாக்குறை அல்ல; மாறாக, இந்தத் தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிரமமே ஆகும்.
விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்களின் மேற்குறித்த அறிவுரைகளும் ஆலோசனைகளும் மக்களுக்குப் புரியவில்லை என்பதாலோ அல்லது சமூகத்தில் அதனைப் புரிந்து கொள்வதற்கான இயந்திரப் பொறிமுறைகளோ இல்லை என்பதாலோ புறக்கணிக்கப்படவில்லை. இங்கு உண்மையான பிரச்சினை என்னவென்றால், இந்த ஆலோசனைகளின் பிரகாரம் செயல்படுவது சக்திவாய்ந்த பொருளாதார நலன்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்து விடும். அது சுவட்டு எரிபொருள் சந்தையின் மதிப்பைக் குறைத்து, தொடர்ச்சியான உயர் நுகர்வு நிலைகளைச் சார்ந்திருக்கும் ஒரு பொருளாதார அமைப்புக்குச் சவாலாக அமையும். காலநிலை மாற்றம் என்பது, தரவுகள் அல்லது போதுமான நுண்ணறிவுப் பொறிமுறைகள் எதுவும் இல்லாததால் தீர்க்கப்படாமல் இருக்கும் ஒரு மர்மம் அல்ல. தேவையான தீர்வுகள் ஏற்கெனவே நன்கு அறியப்பட்டவைதான். ஆனால் அவற்றுக்கு ஆழமான கட்டமைப்பு மற்றும் பொருளாதார மாற்றங்கள் தேவைப்படுகின்றன. மிக எளிதான அல்லது அதிக இலாபகரமான ஒரு தீர்வை செயற்கை நுண்ணறிவினால் உருவாக்க முடியும் என்று கருதுவது நெருக்கடிக்குத் தீர்வு காணாது. மாறாக நெருக்கடி கோருகின்ற கடினமான மாற்றங்களை எதிர்கொள்வதைக் கவனமாகத் தவிர்த்து விடுகிறது; அவ்வளவுதான்.
செயற்கை நுண்ணறிவு (AI) பற்றிய நம்பிக்கையூட்டும் வகையிலான கூற்றுகளை தவிர்த்து விட்டுப்பார்த்தால், அதன் தற்போதைய வளர்ச்சி காலநிலை நெருக்கடியை மேலும் மோசமாக்கக்கூடும் என்ற முடிவுக்கே வர முடியும். செயற்கை நுண்ணறிவு (AI) அமைப்புகளுக்கு ஆற்றலளிக்கும் பாரிய தரவு மையங்களும் சேவையகங்களும் பெருமளவு சக்தியைப் பயன்படுத்துவதோடு, அதிகரித்து வரும் கார்பன் வெளியேற்றத்திற்கும் பெருமளவில் பங்களிக்கின்றன. மேலும், கோகா-கோலா (Coca-Cola) பல நிறுவனங்கள் சந்தைப்படுத்தலை மேம்படுத்தவும் விற்பனையை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவில் (generative AI) அதிகளவு தொகையை முதலீடு செய்கின்றன. இது, முந்தைய டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் போலவே, செயற்கை நுண்ணறிவும் அதிக நுகர்வை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்படலாம் என்பதைக் காட்டுகிறது. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுவதற்குப் பதிலாக, மக்களை அதிகப் பொருட்களை வாங்கத் தூண்டி, வளப் பயன்பாடு, கழிவுகள் மற்றும் கார்பன் வெளியேற்றத்தை அதிகரிக்கச் செய்வதையே யதார்த்தத்தில் சாத்தியப்படுத்தும்.
இது தொடர்பாக மற்றொரு மிக முக்கியமான அவதானமொன்றும் உள்ளது. அதாவது ஊடகங்களும் இணையத் தளங்களும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் மற்றும் டிஜிட்டல் போலிகளால் பெருகி வருவதால், உண்மையைப் பொய்யிலிருந்து வேறுபடுத்துவது கடினமாகி விடுகிறது. இது தகவல்களின் நம்பகத்தன்மை குறித்த குழப்பத்தையும் நிச்சயமற்ற தன்மையையும் உருவாக்கி விடுகிறது. நுண் வலைப்பின்னல்கள் (Neural Net) குறித்த தனது பணிகளுக்காக “செயற்கை நுண்ணறிவின் தந்தை” என்று அழைக்கப்படும் ஜெஃப்ரி ஹிண்டன் (Geoffrey Hinton), இந்த ஆபத்து குறித்து வெளிப்படையாகவே எச்சரித்துள்ளார். கூகுள் நிறுவனத்தில் தனது பதவியை விட்டு விலகிய பிறகு, செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்து அவர் பேசியிருந்த வேளை எது நிஜம், எது போலி என்பதை அறிந்துகொள்வதில் மக்கள் சிரமப்படக்கூடிய எதிர்காலம் பற்றிய கவலையை அவர் வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
காலநிலை நெருக்கடியைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு உதவும் என்ற கூற்றுடன் இந்தப் பிரச்சினை நேரடியாகத் தொடர்புடையது. மக்கள் தாங்கள் படிப்பதையோ, கேட்பதையோ, பார்ப்பதையோ நம்பாதபோது, தாம் எதிர்கொள்ளும் பாரிய சவால்களை எதிர்கொள்வது மிகவும் கடினமாகி விடுகிறது. சமூக மட்டத்தில் முடிவுகளை எடுக்கவும், அதற்காக ஒன்றாக இணைந்து செயல்படவும் யதார்த்தத்தைப் பற்றிய ஒரு புரிதல் அவசியமாகிறது. ChatGPT க்கு முன்பே தகவல்களின் மீதான நம்பிக்கை சார்ந்த நெருக்கடிகள் இருந்தபோதிலும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களின் பரவல் அதனைத் தீவிரப்படுத்தி விடுவதுடன், சதி கோட்பாடுகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கவும் கூடும். செயற்கை நுண்ணறிவானது குறிப்பிட்ட சில அறிவியல் அல்லது தொழில்நுட்ப முன்னேற்றங்களை உருவாக்கினாலும், மக்களால் அடிப்படையான உண்மைகளில் உடன்பட முடியாவிட்டாலோ அல்லது தாங்கள் பெறும் தகவல்களை நம்ப முடியாவிட்டாலோ, அந்தச் சாதனைகளின் தாக்கம் மிகக் குறைவாகவே இருக்கும்.
கூற்று 02) செயற்கை நுண்ணறிவும் தொழிநுட்பங்கள் வினைதிறனான அரசாங்க முறைமைகளை உருவாக்கும்.
அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும், செயற்கை நுண்ணறிவு அமைப்புகளால் சேகரிக்கப்படும் பெருமளவிலான தகவல்களைப் பயன்படுத்தி, மக்களின் தேவைகளைக் கண்டறிந்து, சிறந்த கொள்கைகளை உருவாக்கும் ஒரு எதிர்காலத்தை இந்தக் கூற்று முன்வைக்கிறது. பொஸ்டன் கன்சல்டிங் குழுமத்தின் அறக்கட்டளை (Boston Consulting Group’s foundation) இதனை ஓர் ஆய்வுக் கட்டுரையொன்றில் முன்வைத்துள்ளது. பொஸ்டன் கன்சல்டிங் குழுமத்தினைப் போலவே மேலும் பல சிந்தனைக் குழுக்களும் ஆலோசனை நிறுவனங்களும் இதே போன்ற கருத்துக்களை ஊக்குவித்து வருகின்றன. உண்மையில் இதுபோன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவின் வலுவான ஆதரவாளர்களில் ஒன்றாக இருப்பது சுவாரஸ்யமானது. இந்த நிறுவனங்களில் பெரும்பாலானவை அரசாங்கங்களாலும் வணிக அமைப்புக்களாலும் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதன் மூலம் செலவினங்களைக் குறைப்பதற்காக வேண்டி பணி செய்கின்றன. PwC நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் 1 பில்லியன் டொலர் முதலீட்டை அறிவித்துள்ளது, அதே நேரத்தில் பெயின் & கம்பெனி (Bain & Company) மற்றும் டெலாய்ட் (Deloitte) ஆகிய நிறுவனங்களும் தங்கள் வாடிக்கையாளர்களை மேலும் “வினைதிறன் மிக்கவர்களாக” மாற்றுவதற்கு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதில் ஆர்வமாக உள்ளன.
காலநிலை நெருக்கடியைப் போலவே, அரசியல்வாதிகள் போதுமான தகவல்கள் இல்லாததாலோ அல்லது அவர்களால் சமூக அமைப்பின் அண்மைய போக்குகளையோ காண முடியாததால் மட்டுமே பயனற்ற கொள்கைகளை உருவாக்குகிறார்களா என்று நாம் கேட்க வேண்டியுள்ளது. பெருந்தொற்றுகளின் போது பொது சுகாதார சேவைகளை வேண்டுமென்றே குறைப்பதாலோ, வீடற்றோர் எண்ணிக்கை அதிகரிக்கும்போது மலிவு விலையில் வீடுகளை வழங்காததாலோ, அல்லது வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து கொண்டிருக்கும்போது புதிய சுவட்டு எரிபொருள் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதாலோ ஏற்படும் மனித இழப்புகளை அவர்களால் உண்மையிலேயே புரிந்துகொள்ள முடியவில்லையா? அரசியல்வாதிகள் தங்களை ‘புத்திசாலிகளாக’ மாற்றிக்கொள்ள உண்மையிலேயே செயற்கை நுண்ணறிவு (AI) தேவையா? அல்லது, அவர்கள் ஏற்கனவே விளைவுகளைப் புரிந்துகொண்டிருந்தும், தங்களின் அடுத்த தேர்தல் பிரச்சாரத்திற்கு எந்த சக்திவாய்ந்த நிறுவனங்கள் நிதியளிக்கும் என்பதையும், தாங்கள் ஒத்துழைக்க மறுத்தால் அதே நிறுவனங்கள் தங்களது அரசியல் எதிரிகளை ஆதரிக்கும் முடிவை எடுக்கும் என்பதையும் அறிந்திருப்பதால் இந்த முடிவுகளை எடுக்கிறார்களா? என்பது போன்ற கேள்விகளை நாம் கேட்க வேண்டியிருக்கிறது.
பெருநிறுவனங்களின் செல்வாக்கிற்கும் மக்களுக்கு நலன் பயக்காத கொள்கைகளின் உருவாக்கத்திற்கும் இடையிலான தொடர்பை செயற்கை நுண்ணறிவு துண்டித்துவிடும் என்று நம்புவது இலகுவானதாகவும் கவர்ச்சியானதாகவும் தோன்றலாம். ஆனால் கூகுள் மற்றும் மைக்ரோசாஃப்ட் போன்ற பெருநிறுவனங்கள், அவற்றின் அபாயங்களை அறிந்திருந்த போதிலும், எவ்வாறு செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை இவ்வளவு பரந்தளவில் வெளியிட முடிந்தது என்பதை விளக்க அதே உறவு முறையினூடாகவே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. உள்நாட்டில் விதிக்கப்படும் கடுமையான சட்ட ஒழுங்குமுறைகள் சீனா போன்ற நாடுகளுக்கு செயற்கை நுண்ணறிவு வளர்ச்சியில் ஒரு சாதகமான இடத்தைப் பிடிக்க பெற வழிவகுக்கும் என்று தொழில்நுட்பத் துறையின் முன்னணிப் பிரமுகர்கள் தொடர்ச்சியாக வாதிட்டு, கொள்கை வகுப்பாளர்களிடம் பல ஆண்டுகளாகப் பரப்புரை செய்து வருகின்றனர். தொழில்நுட்ப நிறுவனங்கள், நேரடிப் பரப்புரை முயற்சிகள் மூலமாக மட்டுமல்லாமல், பொது விவாதத்தையும் அரசாங்கக் கொள்கைகளையும் வடிவமைக்கும் வர்த்தக சங்கங்கள், சிந்தனைக் குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற அமைப்புகள் மூலமாகவும், பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளன. Bloomberg இன் பிரகாரம் சுமார் எழுபது மில்லியன் அமெரிக்க டாலர்கள் இவ்வாறு முதலீடு செய்யப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு குறித்த அரசியல் முடிவுகளில் தொழில்நுட்ப பெருநிறுவனங்களின் செல்வாக்கையே இது உணர்த்துகிறது.
பணமும் பெருநிறுவன அதிகாரமும் நடைமுறை அரசியலில் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகின்றன என்பதை அறிந்திருந்தபோதிலும், சில செயற்கை நுண்ணறிவுத் தலைவர்கள், அரசாங்கங்களும் வணிகங்களும் செயற்கை நுண்ணறிவுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு முடிவுகளை எடுக்கும் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தையே யதார்த்தமாக முன்வைக்கின்றனர். Open AI நிறுவனரான சாம் ஆல்ட்மேன் (Sam Altman) போன்றோர் மேலும் ஒருபடி மேலே சென்று இலாப நோக்கற்றதும் மற்றும் புவிசார் அரசியல் நலன்கள் ஏதுமில்லாததுமான ஒரு உலகத்தை செயற்கை நுண்ணறிவால் கண்டடைய முடியும் எனக் கூறிவருவதால், நிகழ்கால உலகின் நடைமுறை யதார்த்தங்களிலிருந்து தொடர்பற்ற மற்றுமொரு செயற்கை நுண்ணறிவு பிம்ப மாயைக்கே அது வழிவகுக்கிறது.
3) கூற்று 03: தொழில்நுட்ப ஜாம்பவான்கள் உலகை ஏமாற்ற மாட்டார்கள்.
ChatGPT யின் வெற்றிக்குப் பிறகு, செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கி வெளியிடுவதில் ஏற்பட்டுள்ள போட்டிநிலமைகள் குறித்து கவலைப்படுகிறீர்களா என்று கேட்டபோது, சாம் ஆல்ட்மேன் (Sam Altman) அது தொடர்பில் போட்டித் தன்மைகள் உள்ளபோதிலும் இறுதியில் எல்லாம் நல்லபடியாகவே முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்தும் தங்களின் சொந்த செயற்கை நுண்ணறிவுத் தயாரிப்புகளை அறிமுகப்படுத்த சந்தையில் போட்டியிடும் ஏனைய தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் குறித்துப் பேசிய அவர், யாராக இருந்தாலும் சிறந்த உள்ளுணர்வுகளும் நோக்கங்களுமே இறுதியில் மேலோங்கும் என்று நம்புவதாகவும் கூறியிருந்தார்.
இனவாதம் அல்லது பணியிடப் பிரச்சினைகள் குறித்துக் கேள்விகளை எழுப்பிய பல ஊழியர்களை பணிநீக்கம் செய்து அல்லது நிறுவனத்தை விட்டு வெளியேற்றியிருக்கும் நிலையில், செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப நிறுவனங்களின் “நல்லெண்ணங்களே” அவற்றின் மேம்பாட்டிற்கு உதவும் என்ற கருத்து முரண்பாடானது. செயற்கை நுண்ணறிவின் அபாயங்கள் குறித்துக் கவலை தெரிவித்தவாறே வெளியேறிய ஹிண்டன் (Hinton) இது தொடர்பிலான ஒரு சமீபத்திய உதாரணம். கூகுள் போன்ற பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள், ஒட்டுமொத்த சமூகத்திற்கும் எது சிறந்தது என்பதை கருத்தில் கொண்டு செயல்படுவதில்லை. அவை பங்குதாரர்களின் நலன்கள், இலாபங்கள் மற்றும் போட்டிக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு பெருநிறுவன சூழமைவுக்குள்ளாலேயே இயங்குகின்றன. அத்தகையதொரு சூழலில், தார்மீக நெறிமுறைகள் சார்ந்த கவலைகள் காரணமாகத் தங்கள் வேகத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, செயற்கை நுண்ணறிவில் மேலும் முழு வீச்சுடன் முதலீடு செய்யவும், மைக்ரோசாஃப்ட், மெட்டா மற்றும் ஆப்பிள் போன்ற போட்டியாளர்களுடன் ஈடுகொடுக்கவுமே நிறுவனங்கள் முயற்சிக்கும்.
கூற்று 04: செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது பணிச் சுமையிலிருந்து மனித குலத்தை மீட்கும்.
செயற்கை நுண்ணறிவைச் சுற்றிக் கட்டமைக்கப்பட்டிருக்கும் பிம்பங்கள் நம்பத்தகுந்தவையாகத் தோன்றுவதற்கான பிரதான காரணம், அவை இன்னமும் ஆரம்பக் கட்டத்தில் இருப்பதுதான். செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தின் ஆரம்பக் கட்டத்தில் பல சேவைகள் இலவசமாகவோ அல்லது மிகக் குறைந்த கட்டணத்திலோ வழங்கப்படுகின்றன. பொதுவாக நிறுவனங்கள், கவர்ச்சிகரமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி அவற்றை மக்கள் இலவசமாகப் பயன்படுத்த ஊக்குவிப்பதுடன் வெளிப்படைத்தன்மை, பொது நலன் போன்ற கொள்கைகளையும் அதற்காக முன்னிறுத்துகின்றன. பயனர்கள் இந்தச் சேவைகளைச் சார்ந்து வாழப் பழகும்போதும், சந்தையில் போட்டியாளர்கள் மறைந்து போகும்போதும், அதே நிறுவனங்கள் படிப்படியாக விளம்பரம், கண்காணிப்பு, தரவு சேகரிப்பு, கட்டணங்கள் மற்றும் பிற இலாபம் ஈட்டும் உத்திகளை அறிமுகப்படுத்துகின்றன. ஆரம்பத்தில் நன்மை பயக்கும் ஒரு கருவியாகத் தொடங்கப்பட்டு பிற்காலத்தில் வருவாயை ஈட்டுவதற்கும் பெருநிறுவன அதிகாரத்தை விரிவுபடுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட அமைப்பாக அது மாறிவிடுகிறது.
தமது பரிணாம வளர்ச்சியின் மிக ஆரம்ப கட்டத்தில் உள்ள செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் ஆரம்ப அலைகள், ஏற்கனவே பல தொழில்வாய்ப்புக்களுக்கும் வாழ்வாதாரங்களுக்கும் பெரும் இடையூறுகளை ஏற்படுத்தி பல்வேறு சமூகக் குழுக்களையும் பாதித்து வருகின்றன. உண்மையில் எதிர்காலங்களில் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் இதைவிட மிகப் பெரியதாக இருக்கலாம். இந்நிறுவனங்கள் மனித உழைப்பிற்குப் பதிலாக செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்தும்போது, ஆசிரியர்கள், நிரலாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், இசைக்கலைஞர்கள், பராமரிப்புப் பணியாளர்கள் மற்றும் பலரும் வருமான இழப்பு அபாயத்தை எதிர்கொள்ள நேரிடலாம்.
செயற்கை நுண்ணறிவு தொழிநுட்ப ஆர்வலர்கள் ஏற்பட்டு வரும் இத்தகைய மாற்றங்களுக்கு அஞ்சத் தேவையில்லை என்று கூறிவருகின்றனர். செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது திரும்பத் திரும்ப ஒரேமாதிரியான ஒழுங்கமைப்பில் செய்யப்படும் பணிகளை (Repetitive Works) மட்டுமே எடுத்துக்கொள்ளும் எனவும், மனித ஆற்றல் தேவைப்படும் பகுதிகளில் செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பம் எவ்விதமான தலையீடுகளையும் மேற்கொள்ளாது எனவும் வலியுறுத்தி வருகின்றனர். இதனடியாகப் பார்க்கும்போது செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உரையாடல் தானியங்கிச் செயலிகள் (AI Chatbots) மற்றும் ஏனைய செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஆகியன குறிப்பிட்ட சில வழக்கமான பணிகளைக் கையாண்டு வரும் அதேவேளை பொதுமக்கள் அவற்றை மேற்பார்வையிட்டு பயன்படுத்தியும் வருகிறார்கள். சாம் ஆல்ட்மேனின் (Sam Altman) பிரகாரம், வேலை (Job) என்பது இனிமேல் மக்கள் வெறுமனே தமது வாழ்வாதாரப் பிழைப்புக்காக க் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாக இருக்கும் நிலை மாற்றப்பட்டு அதற்குப் பதிலாக படைப்பாற்றல், மனநிறைவு மற்றும் மகிழ்ச்சி ஆகியவற்றைக் கொண்டதாக இனிவரும் காலங்களில் இருக்கும் என்பதாக அமைகிறது.
குறைவான வேலைப்பளுவும் அதிக ஓய்வையும் கொண்டதோர் எதிர்காலம் பற்றிய இத்தகையதொரு கண்ணோட்டம் உண்மையில் கவர்ச்சிகரமானது தான். உலகளாவிய ரீதியில் உள்ள பல இடதுசாரியச் சிந்தனையாளர்கள் இது போன்ற கருத்துக்களை ஆதரித்து வருகின்றனர். கார்ல் மார்க்சின் மருமகனான பால் லஃபர்கு (Paul Lafargue) , ‘Right to Be Lazy’ என்ற பெயரில் ஒரு பத்தியைக்கூட எழுதியிருக்கிறார். ஆனால், மக்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக இனிமேல் பணிச்சுமைகளைச் சுமக்கத் தேவையில்லை என்றால் வீட்டுவசதி, உணவு மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையிலான மாற்று வழிகளை கண்டடைந்திருக்க வேண்டும். வேலைப்பளுவும் பணிச்சுமைகளும் இல்லாத ஒரு உலகிற்கு, அனைவருக்கும் ஏற்ற வகையிலான வலுவான பொருளாதார உத்தரவாதங்களும் சமூக உரிமைகளும் அவசியமாகின்றன. அத்தகையதொரு நிலையை உண்மையிலேயே நாடுவோமாக இருந்தால் நமது உரையாடல்கள் செயற்கை நுண்ணறிவைப் பற்றியதாக இல்லாமல் சோசலிசம் பற்றிய உரையாடல்களாக மாறிவிடும்.
தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தானாகவே அனைவருக்கும் பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதிசெய்யும் ஒரு உலக ஒழுங்கில் நிச்சயமாக நாம் இல்லை. நாம் வாழும் முதலாளித்துவ அமைப்பில், மக்கள் தங்களது அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்துகொள்ள ஊதியம் பெறும் வேலையைச் சார்ந்திருக்க வேண்டியுள்ளது. அத்தகையதொரு அமைப்பில், தொழிலாளர்களின் பணிகளைச் செய்யக்கூடிய அதிகளவான செயற்கை நுண்ணறிவும் தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவது நிச்சயமாக விடுதலையாக இருக்க முடியாது. அத்தகையதொரு நிலைமை நம்மில் பலருக்கு வேலையின்மை, பொருளாதாரப் பாதுகாப்பின்மை மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தி விடும். மனிதர்களால் செய்யப்பட்ட பணிகளை செயற்கை நுண்ணறிவு ஆக்கிரமிக்கும் போது அதனால் பாதிக்கப்படப்போகும் முதல் தரப்பினரால் கலைஞர்கள் மற்றும் ஏனைய பிற தொழிலாளர்களே இருப்பார்கள்.
இதனாலேயே, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட படங்களை நிராகரிப்பதன் மூலமும் இயந்திரங்களுக்குப் பதிலாக மனிதர்களால் உருவாக்கப்பட்ட படைப்புகளை ஆதரிப்பதன் மூலமும் மனித படைப்பாற்றலைப் பாதுகாக்க எல்லோரும் அணிதிரள வேண்டும் என கிராப்பப்பிள் (Crabapple) எழுதி வெளியிட்ட திறந்த மடல் கலைஞர்கள், பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஊடக நிறுவனங்களை வலியுறுத்துகிறது. நூற்றுக்கணக்கான கலைஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களால் கையொப்பமிடப்பட்டு எழுதப்பட்ட இந்தக் கடிதம், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஆற்றல்மிக்க தொழிலாளர்கள் பலரின் பணிகளை அப்படியே நகலெடுத்து அதிகளவில் சுரண்டுவதால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்கின்றனர் என்று எச்சரிக்கிறது.
கிராபப்பில் (Crabapple) மற்றும் அவரது இணை நண்பர்கள், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பமானது (generative AI) ஒரேநேரத்தில் கடந்த கால மற்றும் தற்காலக் கலைஞர்களின் படைப்புக்களைச் சார்ந்திருக்கும் அதேவேளை அதே படைப்பாளிகளின் வாழ்வாதாரத்தையும் பாதித்து வருவதாகக் குறிப்பிடுகின்றனர். எனவே இதுபோன்ற செயற்கை நுண்ணறிவு அமைப்புகளைப் பயன்படுத்த மறுப்பதன் மூலமும், அவற்றை நிராகரிக்குமாறு பயனர்களையும் அரசாங்கங்களையும் வற்புறுத்துவதன் மூலமும் பொதுமக்கள் இதனை எதிர்க்க முன்வரவேண்டும் என்று அவர்கள் விளக்குகின்றனர். அதனோடு இணைந்த வகையில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் தார்மீக நெறிமுறைகள் குறித்து கவனம் செலுத்தும் அறிஞர்கள் பலரும், செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகள் குறித்து பெருநிறுவனங்கள் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு ஒழுங்குமுறை நடவடிக்கைகளை முன்மொழிந்துள்ளனர். அதுமட்டுமன்றி, செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்துடன் பொதுமக்கள் ஊடாடும்போது, மக்கள் அதனை இலகுவாக அடையாளம் கண்டுகொள்ளும் வகையில் அது அமைந்திருக்க இருக்க வேண்டும் என்பதாகவும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை உருவாக்கும் பெருநிறுவனங்கள், தங்கள் மாதிரிகளுக்குப் பயிற்சி அளிக்கப் பயன்படுத்தப்படும் தரவுகளை வெளிப்படையாக பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதாகவும் வலியுறுத்தி வருகின்றனர். இதுபோன்ற அறிவுறுத்தல்களின் ஊடாக இயந்திரங்களின் தேவைகள் மற்றும் வரம்புகளுக்கு ஏற்ப சமூகத்தை மாற்றி அமைப்பதற்குப் பதிலாக, தொழில்நுட்பத்தை மனிதத் தேவைகளுக்கு ஏற்ப சேவை செய்ய வைப்பதேயே அவர்கள் இலக்காகக் கொள்கின்றனர்.
தொழில்நுட்ப நிறுவனங்கள் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவை ஒரு தடுத்து நிறுத்த முடியாத வளர்ச்சியாக முன்வைத்தாலும், அதனை எதிர்ப்பதற்குப் பயன்படுத்தக்கூடிய அல்லது அதனை ஒழுங்குபடுத்த முடியுமான சட்ட ஏற்பாடுகள் உண்மையில் இல்லாமலில்லை. அமெரிக்காவின் பெடரல் வர்த்தக ஆணையம் (FTC), முறையற்ற ரீதியில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளைப் பயன்படுத்திப் பயிற்சி அளிக்கப்பட்ட அல்காரிதம்களை நீக்குமாறு கேம்பிரிட்ஜ் அனலிட்டிகா (Cambridge Analytica) மற்றும் எவரல்பம் (Everalbum) போன்ற நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதை இதற்கான உதாரணமாகக் கொள்ள முடியும். முறையான அனுமதியின்றி சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை உருவாக்கும்போது அரசாங்கங்கள் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதை இந்த வழக்குகள் காட்டுகின்றன. பைடன் நிர்வாகம், பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வலுவான ஒழுங்குமுறைகளையும், தனிப்பட்ட தரவுகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து அதிக பாதுகாப்பையும் வழங்குவதாக உறுதியளித்தது. உண்மையில் இத்தகைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் செயற்கை நுண்ணறிவினால் விளையக் கூடிய பெரும் பிரச்சினைகளை ஓரளவு குறைத்துக்கொள்ள முடியும்.
பெருகிய போலிகளும் சமத்துவமின்மையும் நிறைந்த ஒரு எதிர்காலம் எந்தவகைமிலும் தவிர்க்க முடியாததல்ல. உலகளாவிய ரீதியில் உள்ள பல்வேறு அரசாங்கங்களும், பெருநிறுவனங்களும் மேற்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகளின் விளைவாக அதனை எதிர்கொண்டே ஆகவேண்டிய நிலையில் உள்ளோம். ஆனால் முற்றிலுமாகச் சுரண்டுவதையே நம்பியிருக்கும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை ஒழுங்குபடுத்திக் கட்டுப்படுத்துவதன் மூலம், இந்தத் தொழில்நுட்பங்களின் எதிர்கால வளர்ச்சியைப் பொதுச்சமூகத்தினால் நிச்சயம் வடிவமைக்க முடியும். வெறுமனே பிம்பங்களைக் கட்டமைத்திருக்கும் போலிகளாக இல்லாமல், செயற்கை நுண்ணறிவுத் தொழிநுட்பத்தினால் உண்மையாகவே விளைய முடியுமான பொது இலக்குகளை அடையக்கூடிய நிலைமைகளை அதனால் உருவாக்க முடியும்.
தலைமுறை தலைமுறையாக மக்கள் தங்களிடையே உருவாக்கியும் பகிரந்தும்கொண்ட அறிவுமாதிரிகள், படைப்பாற்றல்கள், எண்ணங்கள், எழுத்துக்கள் மற்றும் அனுபவங்கள் ஆகியவற்றின் மூலமே செயற்கை நுண்ணறிவு இயந்திரங்களுக்கு அன்றாடம் பயிற்சியளிக்கப்படுகின்றன. ஆனால் யாருமே தங்களது சொந்தப் படைப்புகளையும் தரவுகளையும் இந்த வழியில் பயன்படுத்துவதற்கு ஒருபோதும் வெளிப்படையான அனுமதியை வழங்கவில்லை. செயற்கை நுண்ணறிவு மாதிரிகள், மனிதர்களின் ஆற்றல்களையும், திறன்களையும் பெருநிறுவனங்களால் கட்டுப்படுத்தப்பட முடியுமானதும் தனியாருக்குச் சொந்தமானதுமான தயாரிப்புகளாக மாற்றுகின்றன. காலநிலை மாற்றத்தைத் தீர்ப்பதற்காகவோ, அரசாங்கத்தின் பொறுப்புடைமையை மேம்படுத்துவதற்காகவோ, அல்லது மேம்பட்டதொரு சமூகத்தை உருவாக்குவதற்காகவோ உண்மையில் இந்த அமைப்புகள் இயங்கவில்லை. கொள்ளை இலாபத்தால் இயக்கப்பட்டு சம்பாதிக்கும் ஒரு சுரண்டல் பொருளாதார அமைப்புக்குள் இயங்கும் அத்தகைய நிறுவனங்களாலும் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளாலும் பொருளாதாரப் பாதுகாப்பின்மையையும் சமத்துவமின்மையையும் அதிகரிக்கவுமே வாய்ப்புள்ளது.
இது போன்ற விமர்சனங்களை எதிர்கொள்வோர், அவற்றை மிகைப்படுத்தப்பட்டதாகவும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு எதிரான ஒரு எதிர்ப்பாகவுமே கருதுகின்றனர். அதுமட்டுமன்றி ஏன் எல்லாவற்றையும் எதிர்மறையாக ஊகிக்கிறீர்கள் எனவும் எதிர்விமர்சனங்களை முன்வைக்கிறார்கள். இது போன்ற நமது விமர்சனங்களுக்கு “மனிதகுலத்திற்கு யாருமே தீங்குகளை விரும்புவதில்லை” என்றே பதில்களை அளிக்கிறார்கள். சாம் ஆல்ட்மேன் (Sam Altman) போன்றோர் கூட , “உலகை அழிக்க யாரும் விரும்புவதில்லை” என்று கூறிவருகின்றனர். சமீபத்திய உலகளாவிய நெருக்கடிகள், குறிப்பாக காலநிலை மாற்றம் மற்றும் உயிர்ப்பல்வகைமைகளின் அழிவு போன்றவை, சக்திவாய்ந்த தனிநபர்களும் பெருநிறுவனங்களும் சமூகத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலேயே செயற்படுகின்றன என்பதையே தொடர்ந்தும் நிரூபித்து வருகின்றன. ஏனெனில் குறித்த பெருநிறுவனங்களுக்கும் தனிநபர்களுக்கும் அபரிமிதமான இலாபத்தை அடைவதையே தமது கவனத்தில் கொள்கின்றன. ஏற்பட்டு வருகின்ற நெருக்கடிகளின் மிகக் கடுமையான விளைவுகளிலிருந்து தங்களின் செல்வங்களும், வளங்கள் மற்றும் செல்வாக்கும் தங்களைக் பாதுகாக்கும் என்ற அடிப்படையிலேயே அவர்கள் செயல்படுகிறார்கள். தொழிநுட்பத்துறை சார்ந்த உயர்குடியினரிடையே இயல்பாகவே காணப்படும் ஒரு மேட்டுக்குடி மனநிலையை ஒருதடவை சாம் ஆல்ட்மேன் (Sam Altman) திடீரென ஏற்படப்போகும் அவசரகால நிலையைச் சமாளிப்பது தொடர்பில் பிரதிபலித்திருந்தமை அதனைப் புரிந்துகொள்வதற்கான ஒரு உதாரணமாகும். அவசரகால நெருக்கடி ஒன்றின் போது பயன்படக்கூடியவாறான துப்பாக்கிகள், தங்கம், மருத்துவ உபகரணங்கள், மின்கலங்கள், தண்ணீர் மற்றும் இஸ்ரேலிய வான்படையினர் பயன்படுத்தும் முகமூடிகள் போன்றவற்றைப் தான் பாதுகாத்து வைதத்திருப்பது பற்றி 2016களில் அவர் பேசியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
சாம் ஆல்ட்மேன் (Sam Altman) நேர்காணல்களில் அவர் குறிப்பிடுகின்ற நம்பிக்கையூட்டும் கூற்றுகளை விட, எதிர்காலம் தொடர்பாக அவர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகள் அதிக ஆபத்தாகத் தோன்றுகின்றன. செயற்கை நுண்ணறிவின் பலாபலன்கள் தொடர்பாக அவர் தொடர்ச்சியாக குறிப்பிட்டு வந்தபோதிலும் நேர்காணல்களில் அவர் சுட்டிக்காட்டும் எதிர்கால நெருக்கடிகள் பற்றிய அவரது முன்கூட்டிய தயார்படுத்தல்கள், எதிர்காலத்தில் காத்துநிற்கும் ஆபத்துக்களை மதிப்பீடு செய்யப் போதுமானவை.
நயோமி கிளேன் (Naomi Klein) கனடிய எழுத்தாளர், காலநிலை மாற்றம் சார்ந்த செயற்பாட்டாளரும் சிந்தனையாளருமாவார். இவர் சூழலியல், பெண்ணியம், முதலாளித்துவம், நவதாராளவாதம், பாசிசம் ஆகியவற்றின் மீதான காத்திரமான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இஸ்ரேலிய அரசை பாசிசமாக முன்னிறுத்தும் அவர் இஸ்ரேலிய பொருட்களை பகிஷ்கரிக்க கோரும் Boycott, Divestment and Sanctions (BDS Movement) முழுமையான ஆதரவையும் வழங்கி வருகிறார்.
2004ஆம் ஆண்டு, அவரது கணவருடன் இணைந்து The Take என்ற ஆவணப்படத்தை இயக்கினார். அர்ஜென்டினாவில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து தொழிலாளர்களால் மீளக் கைப்பற்றப்பட்டு சுயமாக நிர்வகிக்கப்பட்ட தொழிற்சாலைகளின் அனுபவங்களை இவ்வாவணப்படம் பதிவு செய்கிறது. இதன் மூலம் தொழிலாளர் சுயநிர்வாகம், பொருளாதார ஜனநாயகம் மற்றும் முதலாளித்துவத்திற்கு மாற்றான உற்பத்தி முறைகள் குறித்த விவாதங்களுக்குப் பங்களிப்பு செய்தார்.
நயோமி கிளேன் No Logo, The Shock Doctrine, This Changes Everything: Capitalism vs. the Climate, No Is Not Enough: Resisting Trump’s Shock Politics and Winning the World We Need, On Fire மற்றும் Doppelganger: A Trip into the Mirror World போன்ற மிக முக்கியமான புத்தகங்களை எழுதி இருக்கிறார்.. இந்நூல்கள் உலகமயமாக்கல், பெருநிறுவன அதிகாரம், நவதாராளவாத அரசியல், காலநிலை மாற்றம், சமகால அரசியல் கலாச்சாரம் மற்றும் சமூகப் போராட்டங்கள் போன்ற பல்வேறு பரிமாணங்களை விமர்சன ரீதியாக ஆராய்கின்றன.
மேலும், End Times Fascism: And the Fight for the Living World என்ற அவரது புதிய நூல், பாசிச அரசியல், சமகால உலகளாவிய நெருக்கடிகள் மற்றும் சூழலியல் அழிவு ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்புகளை மையமாகக் கொண்டு வெளிவரவுள்ளது. கிளேனின் புத்தகங்கள் உலகளவில் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளதுடன், அவரது நூல்கள் 35 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
மொழிபெயர்ப்பு – இபாதுர் ரஹ்மான்
இந்த ஆக்கம் https://www.theguardian.com/ இணையதளத்தில் AI machines aren’t ‘hallucinating’. But their makers are என்ற தலைப்பில், 2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.